​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 31 August 2020

சித்தன் அருள் - 898 - ஆலயங்களும் விநோதமும் - காசி விஸ்வநாதர், காசி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று ஆவணி திருவோணம். நம் குருநாதர் திருவோண நட்சத்திரத்தன்று செய்யச் சொன்ன பிரார்த்தனையை செய்துவிட்டீர்களா.

"ஆலயங்களும் விநோதமும்" என்கிற தலைப்பில், நம் பாரத தேசத்தில் உள்ள கோவில்களில் தொடர்ந்து பின்பற்றக்கூடிய வித்யாசமான பூசை முறை, வழிபாடு போன்றவற்றை ஒரு தொகுப்பாக தரலாம் எனத்தோன்றியது. இதை, தினமும், ஒரு கோவிலின் தகவல் என்று தர வேண்டும் என்று விருப்பம். ஆயினும் நம் குருநாதர் என்ன தீர்மானித்திருக்கிறாரோ அதன் படி நடக்கும், என்ற நம்பிக்கை அடியேனுக்கு உண்டு.

இந்த தலைப்பில் வரும் விஷயங்களை பொக்கிஷமாக கருதி, அந்த கோவில்களுக்கு செல்ல நேர்ந்தால், அந்த அருளை மறக்காமல் பெற்றுக்கொள்ளும்படி, வேண்டுகிறேன்.

முதல் கோவிலாக, காசி விஸ்வநாதர் கோவில், காசி!

தினமும், மாலை வேளை பூஜையின் பொழுது, இறைவன் காசி விஸ்வநாதர் ஸ்வாமிக்கு, 108 வில்வ தளங்களால், அர்ச்சனை செய்யப்படும். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்படும். இதில் விசேஷம் என்னவென்றால், அந்த "108" வில்வதளங்களில் மட்டும், சந்தனத்தினால் "ராமா" என்று எழுதப்பட்டு இருக்கும்.

எல்லோரும் காசி விஸ்வநாதரை தரிசித்து அருள் பெரும்பொழுது, இறைவி அவரிடம், "அடியாள் எப்படி பூசை செய்தால் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்?" என வினவ, சிவபெருமான், "மாலை வேளையில்", நித்ய பிரதோஷம் முடிந்தபின் 108 வில்வ தளங்களில் சந்தனத்தால் ராமா என்று எழுதி, பூசை செய்தால், அதை யாம் ஏற்றுக்கொள்வோம்" என உத்தரவு கொடுக்க, அம்மையும் அவ்வாறே பூஜை செய்ததாக காசி புராணம் கூறுகிறது.

அதுவே, இன்றும் தொடர்ந்து வருகிறது.

சரி! இங்கு நம் ஞாபகத்தில் இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காசிக்கு சென்று எதை விட்டோம் என்பதல்ல, இறைவன் ஏற்றுக்கொண்டு அருள் பாலிக்கும் அந்த வில்வதளம் ஒன்றை பிரசாதமாக பெற்று வந்து வீட்டில் வைத்தால், இறைவனே நம்முடன் என்றும் உறைவார். காசியின் கங்கை தீர்த்தத்திற்கும், 108 வில்வதளங்களில் ஒன்று பிரசாதமாக கிடைக்கவும், பிரார்த்தனை செய்யுங்கள்.

இவைகளை விஞ்சியது இவ்வுலகில் இல்லை!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

Friday, 28 August 2020

சித்தன் அருள் - 897 - ஆலயங்களும் விநோதமும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் பாரத தேசம், அளவிட முடியாத சக்தி/ஆச்சரியங்கள் நிறைந்த பூமி. அதனால் தான் உலகில் எங்கு தோன்றி வாழ்ந்ததை விட, இங்கு தோன்றி, நம்மிடை மனிதனாக வாழ்ந்த சித்தர்களும்/ஞானிகளும் ஏராளம். ஆம்! தேனிருக்கும் பூவென, இறைவனே இங்கு குடி கொண்டுள்ளதால், தேனீயாக சித்தர்களும்/மகான்களும் இங்கு தோன்றி வருகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்னால், நம் பாரத தேசத்தில் உள்ள கோவில்களில், தொடர்ந்து பின்பற்றப் படும், வித்யாசமான பூஜை, நேர்த்திக்கடன், வழிபாடுகள் பற்றி ஒரு ஆராய்ச்சி அடியேன் செய்ததுண்டு. வினோத முறைகளின் பின்புலம் பற்றி அதிகம் விரிவாக தெரியவில்லை எனினும், இன்றும் தொடர்ந்து பின்பற்றக் கூடிய முறைகளை பற்றியும், அந்த கோவில்கள் பற்றியும் அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில், தினமும் ஒரு கோவில் என உங்களுக்கு தெரிவிக்கலாமா என்று ஒரு யோசனை வந்தது.

இதில் உங்கள் எண்ணத்தையும் தெரிவியுங்களேன்!

எல்லாம் குருநாதர் செயல்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்..................... தொடரும்!

Thursday, 27 August 2020

சித்தன் அருள் -896 - தாவர விதி!


இன்று தாவர விதி என்கிற தொகுப்பில், மாவிலையின் மருத்துவ குணங்களை சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் கூறுவதை பார்ப்போம்.

மாவிலையை, மங்கலத்தின் சின்னமாக சித்தர்கள் கூறுகின்றனர். அனைத்து தெய்வீக விஷயங்களிலும், பூசையிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. வேப்பிலை போல இதுவும் தான் இருக்கும் சூழ்நிலையை எல்லா விதத்திலும் சுத்தம் செய்கிறது. கோவில்களில், வீடுகளில், கலச பூசைக்கு மிக முக்கியமாக உபயோகிக்கப்படுகிற ஒரு இலையாகவும் உள்ளது.  மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
 1. கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 
 2. தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.  
 3. மாமரத்தின் இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
 4. கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
 5. இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
 6. மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
 7. பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.
 8. மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்  
சர்க்கரை நோய்:-

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு மா இலை ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். மா இலையின் கொழுந்து இலைகளில் டானின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது ஆரம்பகால சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த இலைகளை காயவைத்து பொடியாக்கி தேநீர் தயாரித்து குடிக்கலாம், அல்லது இரவு முழுவதும் இலைகளை நீரில் ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும். மேலும் இது ஹைபர்கிளேசிமியாவை குணப்படுத்துவதிலும் பயன்படுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:-

மா இலையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் உள்ளது. இவை இரத்த நாளங்களை வலிமைப்படுத்தி வெரிகோஸ் நோயை குணப்படுத்துகிறது. கொழுந்து இலைகளை உங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தாலே போதும் உங்கள் உயர் இரத்த அழுத்தம் தானாக குறையும். மா இலையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் உள்ளது.இவை இரத்த நாளங்களை வலிமைப்படுத்தி வெரிகோஸ் நோயை குணப்படுத்துகிறது.

ஓய்வின்மை:-

பதட்டத்தால் அமைதியற்று சிரமப்படுபவர்களுக்கு மா இலை ஒரு மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும்.

நீங்கள் குளிக்கும் நீரில் சில மா இலைகளை போட்டு ஊறவைத்து பின்னர் குளியுங்கள். இது உங்கள் பதட்டத்தை போக்கி உங்களை புத்துணர்ச்சியாக உணர செய்யும். அதனால்தான் கோவில்களில் தீர்த்தங்கள் மா இலை மூலம் வழங்கப்படுகிறது.

சிறுநீரக கற்கள்:-

மா இலைகள் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்க கூடியது. தினமும் மா இலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

சுவாச பிரச்சினைகள்:-

அனைத்து விதமான சுவாச பிரச்சினைகளுக்கும் மா இலைகள் சிறந்த தீர்வாக இருக்கிறது. குறிப்பாக சளி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்களுக்கு இது மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும். மா இலையை கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து கசாயமாக குடித்தால் சில நிமிடங்களில் இருமல் குணமாகும். மேலும் இது குரல் இழப்பையும் சரி செய்யும்.

வயிற்றுப்போக்கு:-

வயிற்றுப்போக்கை உடனடியாக குணப்படுத்த மா இலையை பயன்படுத்தலாம். மா இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி அதனை நீரில் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடித்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக குணமடையும்.
   
காது வலி:-

காது வலி என்பது அதிக வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்த கூடிய ஒரு வலியாகும். வீட்டு மருத்துவமான மா இலை இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். மா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு சிறந்த காது மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் வேலை செய்யும். இந்த சாறை பயன்படுத்துவதற்கு முன் சிறிது சூடுபடுத்தவும்.

காயங்களை குணப்படுத்தும்:-

காயம் ஏற்பட்டு அந்த இடம் எரிந்தால் அதற்கு மா இலை எளிய நிவாரணத்தை வழங்கும். மா இலையை எரித்து அந்த சாம்பலை காயம் பட்ட இடங்களிலும், எரியும் இடங்களிலும் பூசினால் போதும். இது எரிச்சலை உடனடியாக கட்டுப்படுத்தி காயத்தை குணப்படுத்த தொடங்கும்.

விக்கல்:-

உங்களுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்தாலோ அல்லது வேறு ஏதேனும் தொண்டை பிரச்சினை ஏற்பட்டாலோ அதனை குணப்படுத்த மா இலை சரியான வீட்டு மருந்தாகும். சில மா இலைகளை கொளுத்தி அந்த புகையை சுவாசிக்கவும். இது உடனடியாக உங்கள் விக்கலை நிறுத்துவதோடு தொண்டை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

குடலுக்கு நல்லது:-

சூடான நீரில் சில மா இலைகளை போடவும், பின்னர் இதனை மூடி வைத்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். அடுத்தநாள் காலை இதனை வடிகட்டி இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை தொடர்ச்சியாக செய்து வரும்போது உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உங்கள் வயிறு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்

சித்தன் அருள்............... தொடரும்!

Saturday, 22 August 2020

சித்தன் அருள் - 895 - 120 வருடங்களுக்கு ஒருமுறை சித்தர்கள் பூசை செய்யும் அக்னீஸ்வரர், அரசண்ணாமலை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்" வலைப்பூவில் ஐந்து தொகுப்புகளில், அகத்தியர் மைந்தன், 120 வருடங்களுக்கு ஒரு முறை சித்தர்கள் பூசிக்கும் சிவலிங்கத்தை, ஈரோட்டுக்கு அருகில் ஒரு ஊரில் அமைந்துள்ள மலை மேல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அர்த்தஜாம பூசையையும் பற்றி விவரித்திருந்தார். அந்த நிகழ்சிகள் விவரிக்கப்பட்ட தொகுப்புக்களின் தொடர்பை கீழே தருகிறேன். ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் பாருங்கள்.

"இந்தக் கோவிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒருமுறை தலையாயச் சித்தர் என் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள், நள்ளிரவு நேரத்தில் இந்த சிவபெருமானுக்கு ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்வது உண்டு.  எனது மைந்தன் என்பதால் உனக்கும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காட்ட இக்கோவிலுக்கு வரவழைத்தேன்,  எங்களைக் காண முடியாது என்றாலும் சூட்சுமமாக இந்த உணர்வினைத் தெரிய வைத்தேன்.  இது இன்று மாத்திரமல்ல, இன்னும் இரண்டு நாளைக்குத் தொடரும்.  உனக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும். எனினும் இதை இப்போது யாரிடமும் சொல்வதில் பயனில்லை.  பொறுத்திரு" என்றார் அகஸ்தியர்.

சித்தன் அருள் தொகுப்பு - 74 - 75 - 76 - 77 - 78 - 79

சமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர், சித்தன் அருள் வாசகர் திரு தீபன், சூரத், குஜராத் அவர்கள், அந்த கோவிலை பற்றிய தகவலை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அனுமதியுடன், தகவல்கள் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

"சட்டென்று ஏகுக" எனத் தொடங்கிய அவரின் அனுபவம், வாசிப்பவரை மூச்சு விடக்கூட விடாமல் அடுத்தது என்ன அனுபவத்தை அகத்திய பெருமான் அவருக்கு கொடுத்திருக்கிறாரோ என வாசிப்பவரை திகைக்க வைத்த நிகழ்ச்சிகளை படித்துவிட்டு, பலரும், இன்றும், அது எந்தமலை? எங்கிருக்கிறது? எப்படி செல்வது? அந்த மலையில் இரவில் ஆபத்தான சூழ்நிலை விலகிவிட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர். அனைத்திற்குமான பதிலை கீழே தருகிறேன்.

இந்தக் கோயில் பெருந்துறை-விஜயமங்கலம் நான்கு வழிச்சாலையில் கொங்கன்பாளையத்தில் "அரசண்ணாமலை" மேல் அமைந்துள்ளது. கிராமத்து மக்கள் வருடந்தோறும் விழா எடுத்து நடத்தி வருகின்றனர். பக்கத்தில் உள்ள விஜய மங்கலத்தில் சமண சமயத்தை அவரின் படுகைகள் குன்றுகள் சிகிலமடைந்த கோயில்கள் இருக்கின்றன. அவை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

கிராமத்து மக்களால், அக்னீஸ்வரர் கோயில் தேவஸ்தான டிரஸ்ட் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.

மாதம் மாதம், கிராமத்து மக்கள் கிரிவலம் செய்து வருகின்றனர். விழாவும் எடுத்து வருகின்றனர். அந்த கோயில் தொடர்பான செய்திகளுக்கு அவர்கள் காணொளியில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டால் மேலும் விவரங்கள் கிட்டும் என்று நினைக்கிறேன்.

கோயிலுக்கு, இன்று வரை, சென்று வர மலைப்பாதைகள் சரியாக இல்லை மிகவும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.

இன்றும் இரவில் யாரையும் மலைமேல் தங்குவதற்கு அனுமதிப்பதில்லை. அந்த காலத்தில் இருந்த ஆபத்துகள் இன்று தொடர்வதாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர். தனியாக யாரும் மலை ஏறி செல்வதில்லை. குழுவாகவே செல்ல வேண்டும். இரவு நேரத்தில் மலை ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.

இந்த மலை சம்பந்தமாக கிடைத்த புகைப்படங்களையும், ஒரு காணொளியையும் கீழே தருகிறேன்.

இந்த தொகுப்பை படித்துவிட்டு, உடனேயே மலை ஏறி சென்று விடாதீர்கள். எந்த ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் கிடைத்த தகவல்களை கீழே தருகிறேன்.
 • அரசண்ணாமலை கோயில் ட்ரஸ்ட் கமிட்டியின் பொருளாளர் திரு.ஆனந்த் குமார். போன் நம்பர் 9965015167. தொடர்புகொள்ளலாம்.
 • கடந்த 22 வருடங்களாக தை மாதம் முதல் தேதி விழா எடுத்து வருகின்றனர், அன்னதானம் நடத்தி வருகின்றனர். பத்து வருடங்களாக மலைமீது அன்னதானம் செய்து வந்தார்கள் ஆனால் சரியான அமைப்பு இல்லாததால் நீர் உணவு போன்றவை மேலே கொண்டு போக கடும் சிரமமாக இருந்ததால் மீதி 10 ஆண்டுகள் ஆக மலை அடிவாரத்தில் நடந்து வருகிறது
 • கோயிலுக்கு என்ற இருந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு விட்டன கோயிலுக்குரிய சொத்துக்கள் ஏதுமில்லை.
 • ஊர் மக்கள் கூடி சீட்டு போட்டு ஒரு சிறிய அளவிலான நிலம் வாங்கி அன்னதான மண்டபம் கட்டி உள்ளனர்.
 • கோயிலுக்கு என்று குருக்கள் அர்ச்சகர் யாரும் தற்போது இல்லை.
 • இன்றும் இரவில் யாரும் தங்குவதில்லை
 • கோயிலுக்கு இன்றும் சரியான மலைப்பாதைகள் இல்லை.
 • மாதா மாதம் பௌர்ணமி கிரிவலம் நடத்திவருகின்றனர் அதில் 1500 பேர் வரை பங்கேற்கின்றனர்.
 • வாரா வாரம் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை பூஜையில் சுமார் 70 லிருந்து 100 பேர்வரை பங்கேற்கின்றனர்
 • அந்த ஊரில் ஒரு டீக்கடை கூட இல்லை டீ குடிப்பது என்றாலும் 7 கிலோ மீட்டர் வரவேண்டும்
 • டிபன் கடை என்று எதுவும் இல்லை
 • மத்திய அரசின் வன பாதுகாப்பில் இந்த மலை உள்ளது. படிக்கட்டுகள் அமைப்பதற்கு வன பாதுகாப்பு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது
 • அக்னீஸ்வரர் கோயிலில் அவரிடம் உத்தரவு கேட்டு தான் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் மலை உச்சியில் ஒரு செடி நடுவது என்றாலும் அவருடைய அனுமதி பெற்றே செய்து வருகின்றனர்
 • இன்றுவரை மலையில், இரவில் யாரும் தங்குவதில்லை. சிவராத்திரி ஒரு நாள் மட்டும் தங்கி பூஜை செய்து வந்து விடுகின்றனர்.
 • கோயிலுக்கு என்று வசதிகள் ஒன்றுமே இல்லை.
 • வரும் அடியார்கள் அவரை தொடர்பு கொண்டால் ஒருங்கிணைந்து செயல்பட அவர் தயாராக இருக்கிறார் என்றும் தெரியப்படுத்தினார்.
 • ஞாயிற்றுக்கிழமை மட்டும் மிகச் சிறப்பான முறையில் அபிஷேகங்கள் ஆராதனைகள் பூஜைகள் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
 • இன்றுவரை அந்த கோயிலில், திருமண தடை, காரிய தடை, குழந்தையின்மை, கால்நடைகள் காணாமல் போனாலும் வம்பு வழக்குகள் பிரச்சினைகள், நில பிரச்சினைகள் வறுமை பிரச்சனைகள் என எந்த பிரச்சனைக்கு கோரிக்கை வைத்தாலும் உடனடியாக அக்னீஸ்வரர் அருள்செய்து அனைத்து துன்பங்களையும் மாற்றி நல்லாசி தருகிறார்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்....................தொடரும்!

Thursday, 20 August 2020

சித்தன் அருள் - 894 - தாவர விதி!


வாழையின் நன்மைகள்: பாரம்பரிய உணவுகளில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை மற்றும் வாழை சார்ந்த உணவுகள். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை. மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழையின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழையின் நன்மைகள்

வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள இலை, பழம், பூ, மற்றும் வாழை தண்டு என அதனுடைய அனைத்து பாகங்களும் நமக்கு மருத்துவ குணங்களை தருகின்றன.

வாழையின் பாகங்கள்
 1. வாழை இலை
 2. வாழைத்தண்டு
 3. வாழைப்பழம்
 4. வாழைப்பூ மற்றும்
 5. வாழைக்காய்

வாழை இலை

வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு,  மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை  வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால்  நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை  இலையில் உண்ணுவது சிறந்தது.  

வாழைத்தண்டு

நமது உடலில் இருக்கும் உப்பை வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகரான உணவு எதுவும் இல்லை என்பதே உண்மை. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது வாழைத்தண்டை சாறாகவோ அல்லது பொறியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள்  வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது  வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்  கொள்ளவேண்டும். வாழைத்தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு  அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம். உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து  மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

வாழைப்பழம்

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து  போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான  குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப்  பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு  வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்‌ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு.  வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர  அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.  

வாழைப்பூ

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் மருத்துவ தன்மை உடையது. ஒரு வாரத்திற்கு இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் உணவில் சுவையை கொடுப்பதுடன் உடலுக்கு தேவையான சில மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்கிறது. இதில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்த வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தாது உப்புகள், நார்ச்சத்துக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட  வேண்டும்.  ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.  

வாழைக்காய்

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், சிறிதளவு உணவில் எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய், மூட்டு வலி இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம்  இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து  சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக்  குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.  இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி  இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.  

வாழை கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியச் சத்து அதிகம் தேவையான வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இது தேவைப்படுகிறது. 

 வாழை மரத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கு பயனுள்ளவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும். தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.கட்டை, தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்; சிறுநீரைப் பெருக்கும்.

இலை, பட்டை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வாழை இலையில் உணவு சாப்பிட உடல் ஆரோக்கியம் பெருகும். இரு ஒரு பாரம்பரியப் பழக்கவழக்கமாகும்.

வாழை மரத்தில் நீள்சதுர வடிவிலான பெரிய இலைகள் தண்டில் சுற்று அமைப்பாக வளர்ந்திருக்கும். இலைக்குருத்து, நீண்டு உருண்டவை. இலைக்காம்புப் பகுதி குறுகிய உறை போன்றது.

பூவடிச் செதில்கள், செங்கருநீலம். மலர்கள் ஒருபால் தன்மையானவை, மஞ்சரிக் கொத்தின் கீழே பெண் மலர்களும், மேலே ஆண் மலர்களும் காணப்படும். காய்கள், பெரிய குலையாக வளர்பவை.

கனி, சதைப்பற்றானது. வாழையில் பல வகைகள் காணப்படுகின்றன. அம்பணம், அரம்பை, கதலி போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. தமிழகம் முழுவதும் உணவு உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

எச்சரிக்கை

மூட்டுவலி உள்ளவர்கள் வாழைக்காயை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல நோய்கள் வருவதைத் தடுக்கலாம். 

வாழைத்தண்டு பொரியல், சாம்பார் செய்து வாரம் இருமுறைகள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றாது; சிறுநீர் நன்றாகக் கழியும்.

ஒரு டம்ளர் அளவு வாழைப்பட்டைச் சாற்றைப் பாம்புக்கடி பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாகக் கொடுக்கலாம்.

வாழைப்பழம் இரவில் சாப்பிட்டால் உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும்; மலச்சிக்கல் இருக்காது. நோயாளிகளின் உடல் தேற மிகவும் உகந்த பழமாகும்.

வாழை இலைக் குருத்தைத் தீப்புண்கள் மீது கட்ட வேண்டும். கொப்புளங்கள் இருந்தாலும் அவற்றின் மீது வைத்துக் கட்ட அவை மறையும்.

பிஞ்சு வாழைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் மாறும். வாரம் ஒரு முறை வாழைக்காய் பொரியல், வறுவல் போன்றவை செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்; உடல் உறுதியாகும்.

துவரம் பருப்புடன் வாழைப்பூசேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும்.

சித்தன் அருள்.................தொடரும்!

Monday, 17 August 2020

சித்தன் அருள் - 893 - ஸ்ரீ ஓதியப்பர், ஓதிமலை!


இன்று போகர் பெருமானின் கூற்றின்படி, ஓதியப்பரின் அவதார நட்சத்திரம் (ஆவணி பூசம், திரயோதசி திதி). சித்தன் அருள் 892வது தொகுப்பில் அவரவர் வீட்டில் "கந்த சஷ்டி கவசம்" ஓதி, முருகப்பெருமானுக்கு அர்க்யம் கொடுத்திட வேண்டியிருந்தோம். கிடைத்த தகவலின் படி, ஓதிமலையில், ஆவணி மாதம் இரண்டாவது முறை வருகிற பூசம் நட்சத்திரத்தன்றுதான் அவருக்கு சிறப்பு பூசை செய்யப் போகிறார்களாம்.

அடியேனும், வீட்டிலேயே, அவருக்கு அபிஷேக பூசை செய்து, அர்க்யம் கொடுத்து லோக ஷேமத்துக்காக வேண்டிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

இத்தருணத்தில், ஓதிமலை சுப்ரமண்யரை தியானித்து, ஓரிரு தகவல்களை நினைவிலிருந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆன்மீகத்தின் உச்சகட்டமான, சித்த மார்கத்துக்குள் செல்வதற்கு, முதல் படியின் தொடக்கம் இங்குதான், ஓதிமலையில், ஆரம்பிக்கிறது. இங்கே அந்த முதல் விதை கிடைப்பவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள். ஆம், சித்தமார்கத்துக்குள், வித்யார்த்தியாக யாரை சேர்த்துக் கொள்ளவேண்டும், யாரை விலக்கி விடவேண்டும் என மனித, ஆத்ம என்கிற இரு நிலைகளிலும் வருபவர்களை தெரிவு செய்வதே ஓதியப்பர்தான் என்று சித்த மார்கத்துக்குள் புகுந்து செல்பவர்களுக்கு தெரியும். எப்படி அகத்தியர் கண் படாத எந்த ஒரு வேண்டுதலையும் இறைவன் ஏற்றுக் கொள்வதில்லையோ, அதுபோல் தான் ஓதியப்பர் கண் அசைவு இல்லாமல் போகர் பெருமான் எந்த ஒரு மனிதரையோ, அல்லது ஆத்மாவையோ சித்த மார்கத்த்துக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என ஒரு கூற்றும் உண்டு.

அபிஷேக நேரத்துக்கு வெட்டிவேர் எண்ணையும், நம்மிடம் ஆழ்ந்த, உண்மையான சரணாகதியும் இருந்தால், நிச்சயம் ஓதியப்பரை குளிரவைக்கலாம், அவரும் உடன் அருளுவார்.

போகர் தவம் செய்த பாறையில் அமர்ந்தால், அத்தனை மென்மையாக, தாமரை ஆசனம் போல் இருக்கும். த்யானம் செய்தால், கேட்கிற கேள்விக்கு நிகழ்ச்சிகளை த்யானத்தில் காட்டி பதில் அருளுவார். கவனம், அங்கு அமரும் பொழுது இயல்பாக சுவாசிக்கவும். மூச்சை பிடித்து கும்பத்தில் நிறுத்தி விடக்கூடாது. இங்கு ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்தால் சித்த/இறை தரிசனம் எளிதாக கிட்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அதிசயமே, அனுபவமே. ஒருமுறை, அவர் பிறந்த நட்சத்திரத்துக்கு அடுத்தநாள். மலையில் தங்கியிருந்து, பின் மதியம் கீழே இறங்க வேண்டிய தருணம். கோவில் பூட்டியிருந்தது. முன் மண்டபம் யாருமின்றி அமைதியாக இருந்ததால், அவருக்கு நமஸ்காரம் செய்து விட்டு அமர்ந்து, வேண்டுதலை வைத்தேன்.

"ஓதியப்பா! அடியேனுக்கும், ஏதேனும் ரூபத்தில் வந்து, எளிய உபதேசம் கொடு!" என்றுவிட்டு த்யானத்தில் சென்று விட்டேன்.

பத்து நிமிடங்கள் அமைதி. எங்கும் நிசப்தம். அருமையாக இருந்தது.

தூரத்திலிருந்து ஏதோ ஒரு ரீங்காரம், அடியேனை நோக்கி வருவது போல், உணர்ந்தேன்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு வண்டு, அடியேனின் வலது காதில் நின்று ரீங்காரம் செய்தது. அந்த சப்தம் பிரணவ மந்திரமாக ஒலித்தது. அடுத்தவினாடியில், தலையை மூன்று முறை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் "பிரணவ ரீங்காரத்தை" வலது காதில் வைத்துவிட்டு  எங்கோ நோக்கி பறந்து சென்றது. பின்னர் எங்கும் அமைதி.

த்யானம் கலைந்து, மிகுந்த சந்தோஷத்துடன், ஓதியப்பருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இறங்கி வந்தோம்.

"ஓதியப்பர் வந்தாரில்லையா?" என்று வினவிய நண்பருக்கு, ஆம்! என்று தலைகுலுக்கி சொல்கிற அளவுக்கு, மனம் ஒன்றிப்போனது என்னவோ, உண்மை.

யாருக்கும் இந்த உபதேசம் கிடைக்கும், இறைவா! உன்னை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்கிற மனநிலையில் ஒருவர் இருந்துவிட்டால்.

அவர்(ஓதியப்பர்) வீட்டில் மூலவரும், உற்சவரும், நட்சத்திர பூசையை ஏற்றுக்கொண்டு ஆசிர்வதித்த காட்சி, உங்கள் பார்வைக்கு.


ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி சுப்ரமண்யாய நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்............... தொடரும்!

Saturday, 15 August 2020

சித்தன் அருள் - 892 - ஓதியப்பரின் திருநட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வரும் திங்கட்கிழமை, 17/08/2020 அன்று, போகர் சித்தரின் கூற்றின்படி, ஆவணி மாதம், பூசம் நட்சத்திரத்தில், ஓதியப்பர் என்கிற சுப்ரமண்யரின் அவதார நட்சத்திரம் வருகிறது.

யாரும், எங்கும் போகமுடியாத இந்த சூழ்நிலையில், அன்றைய தினம், உங்கள் அனைவருக்கும் நேரம் கிடைக்கும் பொழுது, அவரவர் இல்லத்தில் விளக்கேற்றி, ஒரு முறை, ஸ்வாமியின் முன் அமர்ந்து, கந்த சஷ்டி மந்திரத்தை ஓதி, லோகம் சீக்கிரமே, க்ஷேமமாக மாற வேண்டும் என வேண்டிக் கொண்டு, அவர் பாதத்தில் தீர்த்தத்தால் அர்க்யம் விடும்படி, அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்" சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.

நம்முடைய திட்டமிடல் இங்கு ஒன்றும் இல்லை, இறைவனின் திட்டம் புரிந்து கொள்வது மிக மிக கடினம். அறிந்தோ, அறியாமலோ, நல்லவர்களும், லோக ஷேமத்திற்காக, ஒரு சில கெட்ட கர்மாக்களை சுமந்து நடந்ததால், அனைவரையும் இந்த காலத்தில், இறைவன் அசைய விடாமல் செய்தான்.

இனி மேல்நடப்பது நல்லதாக அமைய வேண்டுமென, ஆட்சி செய்ய வரப்போகிற ஓதியப்பரிடம் வேண்டிக்கொள்வோம்.

ஓம் ஸ்ரீ ஓதியப்பர், லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஓம் நம குமாராயா நமஹ!

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday, 13 August 2020

சித்தன் அருள் - 891 - தாவர விதி!


தாவர விதி என்கிற தலைப்பில் இந்த வாரம் சீரகம்-பிரண்டை என்ற இரு மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம். இவை இரண்டும் ஒற்றை மூலியாகவும் வேலை பார்க்கும், அதே நேரத்தில் பிற மூலிகைகளுடன் சேர்ந்து, அவற்றின் வீரியத்தை கூட்டி நோயை விரட்ட உதவும் சக்தியை உருவாக்கும் "உதவி மூலிகையாகவும்" பயன்படும்.

1. சீரகம் ஒரு மருத்துவ மூலிகை:-

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை! "சீரகத்தை" இரண்டாக பிரித்தால் "சீர்+அகம்" என ஆகும். உள்சென்ற சீரகம் அனைத்து உடல் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் என்பதால் அந்த பெயர் வந்தது.

இது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. Cumin என்ற வார்த்தையே அரேபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. சித்த மார்கத்தில், ஆன்மீகத்தில் நுழைவோருக்கு, அவர்கள் உடல் சுமக்கும் எதிர்மறை சக்தியை உடலை விட்டு கழுவிவிட, உடல் சுத்தம் பெற சீரகத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடிக்கும் நீரில் கொதிக்க வைத்து பருகி வர குருநாதர்கள் அறிவுறுத்துவார்கள்.
 • சீரகத்திலிருந்து 56% எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் தைமால் என்கிற எண்ணை வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
 • சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
 • திராட்சை சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். 
 • அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
 • மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். 
 • சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். 
 • சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
 • சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.
 • ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 • சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
 • செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
 • உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
 • திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
 • சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
2. பிரண்டை – மருத்துவ பயன்கள்:-

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. 

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.
 • பிரண்டை உடலைத் தேற்றும்; 
 • பசியைத் தூண்டும்; 
 • மாதவிலக்கைத் தூண்டும்; 
 • மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.
 • பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
 • பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.
 • நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.
 • பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
 • பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.
 • மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும்.
 • அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.
சித்தன் அருள்................... தொடரும்!

Saturday, 8 August 2020

சித்தன் அருள் - 890 - ஒரு நாடி அருள்வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒரு அடியவர் நாடியில், அகத்தியரை நாடி, தன் தனிப்பட்ட வாழ்க்கையின் விஷயங்களை கேட்டார். அவருக்கும் பதிலளித்து, விளக்கமாக கூறுகையில், பொதுவாக ஒரு சில விஷயங்களை கூறி அதை அனைவருக்கும் தெரிவிக்குமாறு உரைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் எல்லா திருவோண நட்சத்திரத்தன்றும் மஞ்சள்பொடி+பச்சைக்கற்பூரம்+துளசி நீரிலிட்டு "ஓம் ஸ்ரீ மாயமாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை, பூமியில், மரத்தடியில் எல்லாஉயிர்களின் மோக்ஷத்திற்காகவும் வேண்டிக்கொண்டு விடச்சொன்னது ஞாபகம் இருக்கலாம். (சித்தன் அருள் தொகுப்பு - 840 & 859). "என் சேய்கள் செய்த/செய்கிற திருவோண பூசையை இறைவன் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார். ஆசிர்வாதமும் அளித்துள்ளார். பூசையை எல்லா மாதமும் செய்கிறவர்கள் அனைவரும் க்ஷேமமாக, சிறப்பாக வாழ்வார்கள். இத்தருணத்தில், யாம் முன்னரே உரைத்த நீதிகளை இங்கு உரைக்கின்றோம்" எனக்கூறி கீழ்வரும் மூன்று அகத்தியர் இயற்றிய அறிவுரை பாடல்களையும், அனைவரையும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

அடியவர்களே! இங்கு அடியேனுக்கு ஒன்றுதான் தெரிவிக்க வேண்டியுள்ளது. திருவோண நட்சத்திர உத்தரவை சித்தன் அருளில், தெரிவித்த பொழுது அனைவரும் படித்தார்கள். எனினும், ஒரு சிலரே அந்த உத்தரவை நிறைவேற்றி வருகிறார்கள் என புரிகிறது. இதுவரை செய்யாதவர்களும், வேண்டிக்கொண்டு நிறைவேற்றலாமே! அவர் அருள் கிடைக்குமே.

எனக்கு தாய், தந்தை இருக்கிறார்களே, நான் இதை செய்யலாமா? நான் பெண்ணாயிற்றே, அல்லது மணமாகவில்லையே, இது பிதுர் தர்ப்பணமா, என்கிற கேள்வியெல்லாம் பலர் மனதிலும் ஏழும். இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான். "இல்லை! இது பிதுர் தர்ப்பணம் இல்லை" பொதுவான ஒரு வேண்டுதல். பாருங்கள் துளசி+பச்சை கற்பூரம்+மஞ்சள்பொடி+நீர். இவைதான் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் பிதுர் தர்பணத்திற்கு உபயோகிக்கும், எள்ளு, அரிசி, தர்ப்பை புல் போன்றவை கிடையாது. யார் பெயர் நட்சத்திரமும் கூறுவது கிடையாது. இறைவன் நாமா மட்டும்தான். இதற்குமேல் சொல்வதாகிற்கில்லை.

விருப்பமுள்ளவர்,
சந்தேகம் தெளிந்தவர், 
இறை அருள் பெற விழைபவர்,
அகத்தியர் உத்தரவை சிரம் மேற்கொண்டு நிறைவேற்ற விரும்புபவர்கள்,

எல்லா மாதமும் வரும் "திருவோண" நட்சத்திர தியதியில் (இந்த வருட திருவோண நட்சத்திர நாட்கள் சித்தன் அருள் வலைப்பூவில் மேல்பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) செய்து அருள் பெற்றுக்கொள்ளுங்கள்.
  
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும் 
உத்தமனாய் பூமிதனில் இருக்கவேணும் 
பருவமதிற் சேறு பயிர் செய்ய வேணும் 
பாழிலே மனதை விடான் பரமஞானி 
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி 
வருவார்கள் அப்பனே அநேகங்கோடி 
வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே!

இறைவன் ஒருவன்தான் உண்டு. அவனை வணங்க வேண்டும். நல்லவனாய் பூமியில் வாழ வேண்டும். தக்ககாலத்தில் விவசாய பயிர் செய்ய வேண்டும். தீய வழிகளில் மனதை விடக்கூடாது. உலகில் திருடர்கள் பலர் திரிவார்கள். இன்னும் பாபபீர் வருவார்கள். இனிய வார்த்தைகளால் பேசுவார்கள்.

சாத்தியமே வேணுமடா மனிதனானால் 
சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே 
நித்திய கர்மம் விடாதே, நேமம் விட்டு 
நிட்டையுன்சமாதி விட்டு நிலைபே ராதே 
புத்தி கெட்டு திரியாதே; பொய் சொல்லாதே
புண்ணியத்தை மறவாதே, பூசல் கொண்டு 
கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே, 
கர்மியென்று  நடவாதே, கதிர்தான் முற்றே.

மனிதன் என்றால் வாக்கில் சத்தியம் வேண்டும். பிறரைக் கெடுக்கும் சண்டாளத்தனம் கூடாது. நித்ய கர்மங்களை விசாதே. நியமங்களை விடாதே. சமாதியினின்று வெளிவராதே. நற் புத்தியில்லாமல் அலையாதே, பொய் சொல்லாதே, புண்ணியத்தை மறவாதே. வாக்குவாதம் யாரிடமும் செய்யாதே.

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா 
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா 
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா 
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மை யாமே!

மனதின் உள்ளே பகைகள் (காம குரோத, மத, மாஸ்ச்சர்யங்கள்) நீங்கி, நன்றாயிருந்தால் மந்திரம் சொல்ல வேண்டாம்.மனம் நன்றாக அமைந்தால் வாயுவை உயர்த்துகிற யோகா செய்ய வேண்டாம். மனம் செம்மையானால், வாசியை நிறுத்துகிற பிராணாயாமப்பயிற்சி செய்ய வேண்டாம். மனம் செம்மையானால், நீங்கள் கூறுகிற வார்த்தைகள், மந்திரங்கள், ஞானியின், சித்தனின் வார்த்தைகள் போல், செம்மையாகிவிடும். வாக்கு பலிதம் உண்டாகும். இதன் உட்பொருள், நமது உட்பகைகள், ஆணவம், நீங்கினால், நாம் இறைவனை எளிதாக அடைந்துவிடலாம். தனியான மந்திரங்கள், அதற்கான செயல்கள் போன்றவை வேண்டாம்.

சர்வம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

Thursday, 6 August 2020

சித்தன் அருள் - 889 - தாவர விதி!


தாவர விதி என்கிற தலைப்பில் இந்த வாரம் "பவிழமல்லி" செடியை பற்றி தெரிந்து கொள்வோம்.

பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவிழ/பவள மல்லியை தேவலோகத்திலிருந்து பூமிக்கு கிருஷ்ணன் கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும் ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும் காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின் தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச் சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில் கூறப்படுகிறது.

இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும் இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன் அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக் கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது. அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும் கருதப்படுகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொரசரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது.

இம்மரம் 3 - 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும். இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் கோடைகாலத்தில் உதிர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வடிகட்டும் தன்மை கொண்டது.    

சிறிய வகை மரமாக வளரும் பவிழமல்லி, விடியற்காலையில் அருமையான நன் மணத்தை வெளியிடும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய தாவர வகை. கிருமி நோய்க்கு அருமருந்து, வாயுவை சுத்தப்படுத்தும், பூசைக்கும் மிக சிறந்தது என கருதப்படுகிறது.
 • இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. 
 • இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். 
 • வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும். 
 • இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம். 
 • இம்மர இலையைச் சுடுநீரில்  போட்டு நன்றாய் ஊறவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை குடித்து வர, முதுகுவலி, காச்சல் போகும். 
 • வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.
 • மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக்  காய்ச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை  கொடுக்கு, குணம் பெறலாம். 
 • நிபா வைரஸ் பாதிப்பைப் பொறுத்தவரை அவற்றின் அறிகுறி குணங்களான சளி, காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் பவளமல்லிக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. 
 • இதன் இளங்கொழுந்தை இஞ்சிச் சாற்றில் அரைத்து, தினமும் இருவேளை கொடுத்தால் காய்ச்சல் தீரும்
 • இதன் இலையை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து தினமும் இருவேளை கொடுத்து வந்தால் காய்ச்சலுடன் முதுகுவலியும் நீங்கும்’ என்றும் சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

பவளமல்லி இலை கஷாயம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: பவள மல்லி இலை - 7, மிளகு - 2, எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன். செய்முறை: தண்ணீரில் பவள மல்லி இலையின் சாறு எடுத்து அதை கொதிக்க வைத்து 100 மி.லி. ஆக காய்ச்சி, அதனுடன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உணவுக்கு முன் மூன்று வேளை பருகி வர நிபா வைரஸ் அழியத் தொடங்கும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.

 • உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.காய்ச்சலை தணிக்க: தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், பனங்கற்கண்டு, இஞ்சி. பவளமல்லி இலைகள் 5 எடுத்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி தட்டி போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் இருவேளை குடிப்பதால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும்
 • சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
 • ஹீமோகுளோபின் அதிகரிக்கும். 
 • பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது. வியர்வையை தூண்டக்கூடியது. 
 • காய்ச்சலை தணிக்க கூடியது. 
 • வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
 • பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். 
 • இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது.
 • பூஞ்சை காளான்களை போக்குகிறது.

சித்தன் அருள்............. தொடரும்!

Sunday, 2 August 2020

சித்தன் அருள் - 888 - பித்ரு தோஷம் நீங்க >>> திதி சம்ரக்ஷண பெருமாள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பித்ரு தோஷங்களால் ஒருவரின் ஜாதகத்தில் பலவிதமான தடங்கல்கள் இருக்கும். அவை, பித்ரு தோஷம், பித்ரு சாபம், இறை அபசாரம், இறை அடியார் அபசாரம், பித்ருக்கள் இறை சொத்தை அபகரித்து அனுபவித்து, பின் தலைமுறைக்கு கொடுப்பது போன்ற பல்வேறு, நாம் அறிந்திராத நிகழ்ச்சிகளால், இப்பிறவியில் அனுபவிக்க நேரிடும். இவர்களுக்கான சரியான பரிகாரங்களை செய்தால் அன்றி, தடங்கல்கள் (திருமணம், சந்ததி இன்மை, வருமானம், தொழில்/வேலை இல்லாமாய், நோயினால் தொடர்ந்து அவதிப்படுவது, நிம்மதி இன்மை, திருப்தி இன்மை ETC .,) விலகி, விதி வழிவிடுவதில்லை.

பாதிக்குமேல் நமக்கிருக்கும் பிரச்சினைகளுக்கு, பித்ரு தோஷமே காரணம் என்கிறார்கள். பித்ரு தோஷத்தை, இறை ஏற்றுக்கொண்டு, அவரே திதி சம்ரக்ஷ்ண பெருமாளாக அமர்ந்து நாம் செய்கின்ற திதியை தான் வாங்கிக்கொண்டு, நம் பித்ருக்களை ஆசிர்வதிக்கும் தலம்தான், நென்மேலியில் அமைந்துள்ள, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்.

இனி, கோவிலுக்குள் செல்வோம்.

பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா? 

பித்ரு கடன்  செலுத்துவது, ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் இல்லாமல் இறப்பவர்களுக்கு யார் தர்ப்பணம், திதி கொடுப்பார்கள்? மேலும், பலருக்கு தங்களின் முன்னோரின் இறந்த திதி தெரியாது. இவர்கள், எப்படி திதி  கொடுப்பது? தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு எப்படி திதி  கொடுப்பது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையாக இருக்கிறார், லட்சுமி நாராயண பெருமாள். 

செங்கல்பட்டு அருகே, நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.

இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.  இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.  காசி மற்றும் கயாவுக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண சர்மா – சரஸ வாணி தம்பதி, இந்தக்  ஆலயத்தின்  பெருமாளின் மீது, அதீத  பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை, இந்த ஆலயத்தின் பணிகளுக்கு  செலவு செய்து விட்டனர்.  இதனால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  அரச தண்டனையை ஏற்க விரும்பாமல், திருவிடந்தை ஆலய  திருக்குளத்தில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனினும், தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன்  இறந்தனர்.  ஆகையினால், அவர்களின் மனவருத்தத்தை தீர்க்கும் வகையில், இந்த  ஆலயத்தின் பெருமாளே, தம்பதிக்கு ஈமகடன்கடன்ளை செய்ததாக, கோவிலின் தலவரலாறு கூறுகிறது. 

பின்னர், திவானின் வேண்டுகோளுக்கு இணங்க, சந்ததிகள் இல்லாதவருக்கும், திதி செய்ய இயலாதவர்களுக்கும், பெருமாளே திதி செய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். 

தினமும், பகல், 12 மணி  முதல், 1 மணி வரை உள்ள காலம், பித்ருக்களின் காலமாக கருதப்படுகிறது

இந்த ஒரு காலம் மட்டும், ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்.

எனவே, இங்கு திதி செய்ய விரும்புபவர்கள், பித்ரு காலத்தில் நடக்கும் பூஜையில், தங்கள் முன்னோர்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு, பெருமாளிடம்  சுவாமியிடம் சமர்ப்பிப்பதே, திதி சம்ரட்சணம்.

பெருமாளுக்கு, வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள்!

அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ, ஆலயத்தில் பித்ரு கால பூஜையில் கலந்து கொண்டால், கயாவில் சென்று திதி கொடுத்த பலனைக் கொடுக்கும். திதிகொடுக்க விரும்புபவர்கள், காலை, 11 மணிக்குள் ஆலயத்துக்கு வர வேண்டும். மஞ்கள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், தாம்பூலம், பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்பித்து, தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து  கொள்ள வேண்டும். 

பின், விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில், திதி செய்பவர், தங்கள் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து, பெருமாளிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிப்பதே, திதி சம்ரட்சணமாகும். 

பித்ரு தோஷம் இருந்தால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்பதாகவே இருக்கும். பித்ரு தோஷம் நீங்க, இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு கால பூஜையில் பங்கேற்க வேண்டும். 

மஹாளய பட்ச காலத்தில்,  இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு பூஜையில் பங்கேற்றால், முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அதனால், நமக்கு பித்ருகளின் முழுமையான அருளும் கிடைக்கும்.
ஒவ்வொருவரின் குடும்பத்தின் நிலையையும் பரிசோதித்து, அவரவர் தீர்மானித்து, இத்திருக்கோவிலில் திதி கொடுத்து, பயனடையலாம்.

சித்தன் அருள் ................. தொடரும்!

Saturday, 1 August 2020

சித்தன் அருள் - 887 - சனிப்பிரதோஷ நாளில் இறைவன் தரிசனம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

1. இன்று பிரதோஷம். அதுவும் சனிக்கிழமை வருகிற பிரதோஷம். இறைவன் ரூபம் ஆகாயத்தில் தெரிகிற ஒரு பழைய வீடியோ கையில் அகப்பட்டது. அதை, உங்கள் தரிசனத்துக்காக சமர்ப்பிக்கிறேன்.


2. ஒரு முப்பது நிமிடங்கள் ஓடுகிற "ஓம்" மூல மந்திரம் வீடியோவும் கீழே தருகிறேன். இன்றைய தினத்தை நல்லபடியாக கடந்து செல்லுங்கள்.


3. ஆகஸ்ட் ஐந்தாம் தியதி, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்றவை நடக்க இருப்பதால், அன்றைய தினம் அகத்தியர் அடியவர்கள், தங்கள் இல்லத்தில் காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரை ஒரு விளக்கேற்றி வைத்து, இறைவனிடம், "எல்லாம் நல்லபடியாக நடத்திக்கொடு" என ஒரு வேண்டுதலையும் சமர்பிக்கும்படியும், சித்தன் அருள் சார்பாக, உங்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!