​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 30 July 2020

சித்தன் அருள் - 886- தாவர விதி!


தாவர விதி என்கிற தொகுப்பில், இந்த வாரம், ஒற்றை மூலி என்கிற வில்வத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வில்வம் மருத்துவ ரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.

இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். கோவில் தோரும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.

வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்து நோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும் காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜை செய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு.

இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.  

மருத்துவப் பயன்கள்:  

 1. இதன் வேர் நோயை நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். 
 2. குருதிக் கசிவை நிறுத்தும். 
 3. பழம்  மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். 
 4. பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். 
 5. பிஞ்சு விந்து வெண்ணீர்க்  குறைகளையும் நீக்கும். 
 6. பூ மந்தத்தைப் போக்கும். 
 7. வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். 
 8. இதன்  இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். 
 9. இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். 
 10. பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். 
 11. பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு  வலியைப் போக்கும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது, காசநோயை குணமாக்கும். 
 12. சளி, தடிமன், மூக்கடைப்பு, கண்  எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம். 
 13. வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.  
 14. வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும்  நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும். 
 15. வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால்  பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம். 
 16. ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு  நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும். ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத  வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும். 
 17. வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும்  அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும். 
 18. வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
 19. வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். 
 20. பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு  அருமருந்தாகும். 
 21. கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், 
 22. இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும்.
 23. அல்சர் அணுகவே அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், 
 24. தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும். வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.  
 25. வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும். 
 26. நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். 
 27. வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர்  வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல்  வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.
 28. வில்வ இலைச் சாறை எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு மண்டலம்காலையும், மாலையும் பத்திய முறைப்படி இறைவனை வணங்கி அருந்தி வந்தால் காமாலை மற்றும் இரத்த சோகையால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
 29. வில்வ இலைச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சுரம், இருமல், தொண்டைக்கரகரப்பு, வாய் குளறல், மயக்கம் தீரும். தொடர்ந்து 40 நாட்கள் கற்பமுறைப்படி அருந்தி வந்தால் மேற்கண்ட பிணிகளிலிருந்து முழு விடுதலை பெறலாம்.
 30. வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.
 31. வில்வ இளம் பிஞ்சை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்துஅருந்தினால் வயிற்றுப்புண், குடல்புண், தொண்டைப் புண் ஆறும். சிறுபிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் நீங்கும்.
 32. வில்வ காயை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும். (அகத்தியர் குணபாடம்).
 33. வில்வ இலை, இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீராக்கி ஒரு மண்டலம் கற்பமுறைப்படி பத்தியம் கடைப்பிடித்து அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.
 34. வில்வ வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு இம்மூன்றையும் சேர்த்துக் காய்ச்சி எட்டில் ஒன்றாய் ஆன பதத்தில் வடித்து தேன் கலந்து அருந்தினால் கொடியமுப்பிணியும் தீரும்.
 35. வில்வத்தின் கனி, காய், இலை, வேர் முதலானவற்றை மணப் பாகு, ஊறுகாய்,குடிநீர், தைலம் இதில் எதாவது ஒன்று தயாரித்து ஒரு மண்டலம் உட்கொண்டால் உடலுக்கு அழகையும், ஆண்மையையும் கொடுக்கும். வாய் குழறிப் பேசும் தன்மை நீங்கும். (தேரையர் நளவெண்பா)  
வில்வத்தின் ஒரு வகையே மகா வில்வம். இது குளுமைத் தன்மை கொண்டது. வில்வ இலைகளைவிட சற்று சிறியதாய், வட்ட வடிவில் காணப்படும். சுவையில் வில்வத்தின் இலையை ஒத்திருக்கும். கொடியைவிட சற்றுப் பெரியதாய் இதன் கிளைகள் இருக்கும். இலைகள் கூட்டிலைகளாய் காணப்பட்டு கடைசியில் மூன்று இலைகளாய் முடியும்.

அந்த மூன்று இலைகளும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மூவரும் நானே எனக் காட்டுவதாய் அமையும். அந்த மகா வில்வத்தை மருந்தாக்கும் முறையை இனி காண்போம்...

சர்க்கரை நோயுக்கு அற்புத மருந்து...

சர்க்கரை நோயுள்ளவர்கள் மகா வில்வத்தை மருந்தாக்கினால் மிகச் சிறந்த பலனைக் காணலாம். மகா வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட் டுக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் சர்க்கரையின் அளவு சராசரி நிலைக்கு வரும். சர்க்கரை வியாதியால் உண்டாகும் பிற விளைவுகளும் படிப்படியாய் மறையும்.

குடற்புண்ணை குணப்படுத்த...

குடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் மகேசன் அருளிய மகா வில்வமே மருந்தென்றால் மிகையல்ல. குடற்புண்ணால் அவதி யுறுவோர் கீழ்க்காணும் மருந்தைத் தயாரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள். மகா வில்வத்தினுள் சிவனே உறைந்து, உங்களை செவ்வனே குணப் படுத்துவதை உணர்வீர்கள். உலர்ந்த மகா வில்வ இலை 50 கிராம், நெல்லிமுள்ளி, கடுக்காய், தான்றிக்காய், ஓமம், மாம்பருப்பு, வெந்தயம், சீரகம், மஞ்சள் ஆகியவை வகைக்கு 25 கிராம்- இவையனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். பின்னர் இதனைச் சலித்துப் பத்திரப்படுத்தவும் .

இதனை காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு முதல் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வர, 48 நாட்களில் குடற்புண்கள் முழுமையாய் குணமாகும். இது சித்தர்கள் அருளிய சிறப் பான மருந்து. திட சித்தமாய் உண்டு வருபவர்கள் சீக்கிரமே குணமடைவார்கள்.

உடல் வலிவு பெற...

மகா வில்வ வேர் 50 கிராம் அளவில் எடுத்து ஒன்றிரண்டாய் சிதைத்து, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிது மஞ்சள் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, தினசரி அதிகாலை யில் தொடர்ந்து இரு மாதங்கள் சாப்பிட்டு வர, மேனி அழகு பெறும்; முகம் காந்தமாய் ஜொலிக்கும்; ஆண்மை விருத்தியாகும்; குரலில் ஓர் காந்த சக்தி, ஈர்ப்பு சக்தி உண்டாகும்.

இளைப்பு நோய் குணமாக...

மகா வில்வ வேர், தூதுவளை வேர், கண்டங்கத்தரி வேர், முசுமுசுக்கை வேர், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.

மஞ்சள் காமாலை குணமாக...

மகா வில்வ வேர், கீழாநெல்லி வேர், நெல்லிமுள்ளி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் ஏழு தினங்கள் தொடர்ந்து குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பலப்படும்; கல்லீரல் சார்ந்த பிற நோய்களும் தணியும்.

கண் நோய்கள் குணமாக...

மகா வில்வத் தளிர் இலைகளை நெருப்பில் வாட்டி, அதைத் துணியில் முடிந்து வெது வெதுப்பாய் கண்களில் ஒற்றிவர, கண்சிவப்பு, கண்ணெரிச்சல் போன்றவை மாறும்.

மகா வில்வத்தால் ரத்த சுத்தி உண்டாகும்; நன்கு செரிமானம் உண்டாகும்; பசியைத் தூண்டும்; மலத்தை நன்கு இளக்கும். மொத்தத் தில் சிவனை நாட சுத்த தேகத்தை உண்டாக்கும்

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க  வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை  செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது. 

சித்தன் அருள்................. தொடரும்!

Monday, 27 July 2020

சித்தன் அருள் - 885 - ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்!
வணக்கம்!

ஒரு நண்பர் அடியேனிடம் பகிர்ந்துகொண்ட, ஒரு சித்தரை பற்றிய தொகுப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

திண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம்.  அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது.  தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர்  இது.  

ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார், பெற்றோர் யார்.  எப்படி ஒட்டன் சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள்  தெரியவில்லை.  தான் ஒட்டன்சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார்.   இதற்கு அருகில் உள்ள  ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும், பிரியாணி பொட்டலமும் வந்துவிடும்.  சித்தர்கள் பிரியாணி சாப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. தன்னை  நாடி வரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு. வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி, அதை சாப்பிடுவது போல்  செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள்.  அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.

ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின், எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ, அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத்  துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர். ஆக, ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா? இனி, ராமசாமி சித்திரைப் பற்றி பார்ப்போம்.  

இவரது பெயர் ராமசாமி என்பது, ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது.  அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர்.  சாமீ,  சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார். ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம்.

ஒட்டன்சத்திரத்தில்  வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள்.  உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர்  தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது.  காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது. விடிகாலை மூன்று  மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர்.  புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை  அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 

"போங்கடா... போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீஙக...." என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி  அனுப்பினார்.

ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள், சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது.  

"ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன்லாம் இங்க வாங்கடா" என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல். ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள். 

பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் - ஒற்றைக் காலில்  நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார்.  

"வாங்கடா ஒட்டன்சத்திரத்து ஆளுங்களா..... உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்....  ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல? என்றார்" (அதுவரை சித்தர், பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பிறகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்). 

"யார் சாமீ.... நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே?" என்றனர் ஊர்க்காரர்கள். 

"அடேய்....  பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே... அவன்தான் ராமசாமி சித்தர்.  அவனுக்கு வயசு என்ன தெரியுமா?  ஐந்நூத்தி ஐம்பது.  சரி,  ஊருக்குப் போனதும்.  அவன்கிட்ட போய், ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்றார்.  தொடர்ந்து தவத்தில் இறங்கி  விட்டார்.

ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள்.  தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடையாளம் கண்டுகொண்டு.  நம்மூர் சித்திரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள்.  அங்கிருந்து அகன்றார்கள். 

ஒரு வழியாக ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள்.  தாங்கள் புறப்பட்ட   இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள்.  மெள்ளக் கலையை முற்படும்போது......

"ரிஷிகேஷ் போனவன்லாம் இங்க வாங்கடா" என்று பாத்திரக்கடை  வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார்.  அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது - ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம்.  

அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர்.  ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த  ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.

"ஏண்டா.... அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல..... ஏண்டா, என்கிட்ட சொல்லாம போறீங்க?" என்று ராமசாமி  சித்தர் கோபமாகக் கேட்கவும், 

சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.  

"சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும்.  அவசரத்தல மறந்துட்டோம்  என்று சொல்ல".... சிரித்தார் சித்தர். 

"போங்கடா.  எல்லாரும் நல்லா இருப்பீங்க" என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். 

பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன்.  மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம். பூஜை, புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும். மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர்.  மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார். பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது  மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால், அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார்.  இப்படித்தான் ஒரு முறை ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.

பழநியில் இருந்து புறப்பட்டு, சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார்.  அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார். ராஜம்மாள்  அங்கு வந்ததுமே, 

"வாம்மா..... உன்னைத்தான் தேடுகிறேன், வா" என்றார் சித்தர்.  மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார்  ராஜம்மாள்.  

பிறகு, "பக்கத்துல ஒட்டல் இருக்கு.  அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா" என்றார். அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார்.  பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது.  

தயங்கியவாறே நின்றிருந்தார்.   

"என்னம்மா... பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்.... அப்படியே நிக்கறே..... பொறப்படு" என்றார் சித்தர்.  

பிறகு, "நான் வேணா காசு தர்றேன்,  யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா?" என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள்.

"அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா.  நீயே  கடைக்குப் போய் வாங்கிட்டு வா.  சீக்கிரம்" என்று அவசரப்படுத்தினார் சித்தர். 

ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள்.  

இவரைப்  பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர். "என்னமா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா? யோகக்காரப் பொம்பளைம்மா நீ.... உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ" என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை  பார்சல் செய்யச் சொன்னார். 

காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள்,ரொம்பவும் கூசிப் போனார்.  ஐயா வீட்டுப்  பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு  வந்தார். பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு, அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.

"பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி? நீயே பிரி" என்று சித்தர் சொன்னதும், அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு.  சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்ததால்.  இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி, பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி.  பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெள்ளப் பிரித்தார்.  

பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல்  ஏற்படும் என்பதால்.  வேளையில் சுவாசிக்கவும் மறந்தார்.  பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. 

"இந்தாங்க சாமீ...." என்று  கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார். 

"நீயே கண்ணைத் திறந்து பாரம்மா - உன்  கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு.  அதன் பிறகு என்னிடம் கொடு" என்றார் சித்தர். 

மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு  கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம்.  

காரணம்-பொட்டலத்தில் இப்போது  இருப்பது பிரியாணி அல்ல.... நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்.  

சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள்.  முந்திரியும்  திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம், ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது.  தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை -  கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை-நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள்.  

"சாப்பிடும்மா.... எடுத்துச் சாப்பிடு.   ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா" என்ற சித்தர், தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன்சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது.  அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு  செய்யப்பட்டிருந்தது.  அப்போது ராமசாமி சித்தர், பாத்திரைக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.  இவரது இடத்தைக் கடக்கும்போது  அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது. ஜீவகாருண்யத்தை (அசைவம் சாப்பிடாதவர்கள்) எப்போதும் கடைபி டித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார். சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் தூண்டுகளைப்  பார்த்து முகம் சுளித்தார். ஓரமாக நடந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார். 

"டேய் இங்கே வாடா" என்று அவரை  அழைத்தார்.  

யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர், என்ன சாமீ?  என்று கேட்டார். 

"கிழே விழுந்து கிடக்கிற கருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா" என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்!  

முகம் கொதித்துப் போனார் அன்பர்.  இத்தனை  ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து என்னைப் பார்த்தா, கருவாடு சாப்பிட்டுச் சொல்கிறீர்? நான் செத்தாலும் சாவேனே தவிர, கருவாடு  சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப் போயே விட்டார்.

சித்தர் மெதுவாகச் சொன்னார்: "ஆமாடா....இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே.... உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்.....  விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா.... போய்ச் சேரு."

ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர்  மாரடைப்பு வந்து இறந்து போனார்.  ஒருவேளை, சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால், பிரியாணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி, இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும்.  இதை உண்ட பலனால், அவரது  ஆயுள் பலம் கூடி இருக்கலாம். விதி ஜெயித்து விட்டது போலும்! 

பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர், சித்தர்கள்  தரிசனத்தில் நெகிழ்பவர்  பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து, ஆன்ம ஞானம் பெற்றவர். ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது, அப்போது அவருடன் இருந்தவர் இவர்.

இனி, கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.

ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை.  அவ்வப்போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர்.  யார் என்பது தெரியாது. பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர். வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார். சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார். 1977-ஆம்  வருடம் என்று நினைக்கிறேன்.  நான், என் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம்.  சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார்.  பிறகு, நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார்.  உடனே  பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன்.  எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார்.  பிறகு, ஒரு பீடிக்  கட்டு, மூன்று சிகரெட், ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து, பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார்.  ரொம்ப காலம் பாதுகாத்து வந்தேன்.  ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன், சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு சனிக்கிழமை....சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன். சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார்.  வாங்கி வந்து  கொடுத்தேன்.  குடித்தார்.  பிறகு, அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது.  பாதையை மறைக்காதடா.... குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத்  திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.  பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச்  சொன்னேன்.  வேறொன்னுமில்லை.  அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார்.  அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார்  என்றார் அவர். 

அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகி விட்டார். தகவல் கேள்விப்பட்டதும்.  சித்தரின் பக்தர்கள்  ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர்.  சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார்.   சித்தர் அடக்கம் ஆவதற்கு பிரமுகரான பழநியப்பா, நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார் (இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது) பெரிய குழி வெட்டி, அதற்குள் நான் இறங்கினேன்.  அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமை அன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.  விபூதி, உப்பு, வில்வம், புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி, சித்திரை அடக்கம் செய்தோம்.  நான்  கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன். மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று  கிடைத்தது அவரது அருள்தான்.எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன். ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும்.  அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால்,  அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும். அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.  அப்போது யதேச்சையாக சாலையின் இடப் பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன்.   அங்கே, ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத்  துண்டு இருந்தது.  சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன். பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.  இதற்குள் பேருந்தும் வேகம் எடுத்து விட்டது.  மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர்.  எப்படி விருபாட்சிமேடு அருகே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது,  எனவே, பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு  முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.  சுவாமிகளே வந்து கதவைத் திறந்து  என்னப்பா... இந்த வேளைல? என்றார்.  

எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன்.  நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண  இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.

இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை. விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.  தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த  சமாதியை நோட்டமிட்டேன்.  அவரது சமாதியில் - தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது. உடனே  பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன்.  ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு, சரீரத்தை  எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா.  அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார்.  அவர் போன ஊர்  புண்ணியம் பெறும் என்றார். அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான்.  அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார்கள். ராமசாமி சித்தரும் அப்படித்தான்.  சுமார் இரண்டு மாதங்கள் கழித்து.  கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார். கண்ணன். 

ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார்.   முஸ்லிம் பக்தர் ஒருவர்.  ஆசையுடன் கொடுத்ததாம் இது.  சித்தரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரமாண்டமான ஆலமரம் இருக்கிறது.  இதன்  அருகே ஒரு லிங்கம். சமாதி ஆன இடத்தில் சில செங்கற்களின் மேலே வேங்கடாசலபதி, ஸ்ரீசரஸ்வதிதேவி, முருகப் பெருமான் ஆகியோரது திரு வுருவப் படங்கள் இருக்கின்றன.  உள்ளே ஒரு நந்தி விக்கிரமும் உண்டு.  மற்றபடி சமாதி ஆன இடத்தில் சிறப்பாக எதுவும் இல்லை.  பள்ளிக்குச்  செல்லும் சில மாணவர்கள் அவ்வப்போது இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

சித்தன் அருள்......... தொடரும்!

Friday, 24 July 2020

சித்தன் அருள் - 884 - தியானத்திற்கு உதவிடும் மணியோசை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், தியானத்தில், பல நிலைகளை கடந்த ஒரு நண்பர், அடியேனுடன் ஒரு மணியோசை ஒலிநாடாவை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பொழுது, உண்மையிலேயே, உள்ளுக்குள்ளே மிகுந்த ஆழத்துக்கு அழைத்துச் சென்றதை உணர்ந்தேன். மேலும், தலைவலி, நரம்புமண்டல பாதிப்பு உள்ளவர்களுக்கும், இது நல்ல தீர்வை அளிக்கிறது என்பது நண்பரின் கருத்து. அடியேனும் அதை உணர்ந்தேன்.

யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக என்கிற எண்ணத்தில், அந்த ஒலி நாடாவை, நம் குருநாதரும், அவரின் குருநாதரும் அமர்ந்திருக்கும் ஒரு படத்தில் சேர்த்து ஐந்து நிமிட ஒளிரூபமாக மாற்றியுள்ளேன்.

குறிப்பு:-

கண்மூடி மணியோசையை கவனிக்கவும், அது முற்றிலும் மறையும் வரை.


இந்த இசை நீங்கள் தினமும் கேட்க விரும்பினால் ஒலிநாடாவாக மாற்றிக்கொள்ளுங்கள். அல்லது அடியேனுக்கு ஈமெயில் செய்யவும். அனுப்பித்தருகிறேன்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday, 23 July 2020

சித்தன் அருள் - 883 - தாவர விதி!


தாவர விதி என்கிற தொகுப்பில், தும்பை என்னென்ன விதங்களில் அரிய மருந்தாக உபயோகப்படுத்தப் படுகிறது என்று பார்ப்போம்.

தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 2-3 அடி வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் .

கழுதைத் தும்பை எனும்   கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு  அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.முக்கிய வேதியப் பொருட்கள் -: இரண்டு ஸ்டீரால்கள், இரண்டு ஆல்கலாய்டுகள், காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், உர்காலிக் அமிலம் மற்றும் பீட்டா சிட்டோஸ்டீரால்.

தாவரப்பெயர்  :  LEUCAS ASPERA.
குடும்பம்          :  LABIATACEAE

தும்பைச் செடி வகைகள்

தும்பையில் 

1.பெருந்தும்பை, 
2.சிறுதும்பை, 
3.கருந்தும்பை, 
4.மலைத்தும்பை, 
5.கவிழ்தும்பை,
6.காசித் தும்பை

என்று பல வகைகளுண்டு.

மருத்துவ பயன்கள்:- 

தும்பையை ஆயுர்வேதத்தில் துரோண புஷ்பி என்று கூறுவார்கள். 

குணமாக்கும் நோய்களில்-

1.விஷ ஜ்வரம். 
2.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு,
3.காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு
4.பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு,
5.ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு,
6.விஷ ரோகங்களுக்கு,
7.மூல நோய்க்கும் நல்ல பலனை தரும். 
8.காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும்.
9. மஞ்சள் காமாலைக்கு இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும்.
10.தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
11.தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
12.தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். 
13.பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.
14.தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.
15.தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி. நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.
16.தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
17.தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். 
18.தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும்.
19.தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். 
20.அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்கத் தர விக்கல் நீங்கும்.
21.தும்பை இலையையும், மிளகையும் அரைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விடம் இறங்கும்.
22.தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.
23.தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க வசம் இறங்கும்.
24.தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.
25.தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும்சு தீரும்.
26.தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.
27.தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
28.ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும். தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும். 
29.தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.
30.காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ உணவுகள் சேர்க்கக் கூடாது.
31.டைஃபாய்டு காய்ச்சல் வரும்போது கண்வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் பின்தொடர்ந்து வரும். அப்போது 10 தும்பைப்பூக்களை தாய்ப்பாலில் ஊறவைத்து, அதை மெல்லிய துணியால் நனைத்து நெற்றி மற்றும் கன்னப்பொட்டில் பற்று போடவும். கூடவே கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்வலி, தலைவலி சரியாவதுடன் கண்களுக்கு ஒளி கிடைக்கும்.
32.தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, வேலிப்பருத்தி (உத்தாமணி) சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி எல்லாம் சரியாகும்.
33.விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப்பூவையும், அதேஅளவு தும்பை இலையையும் எடுத்து நசுக்கிச்சாறு எடுத்து, அதில் கால் அவுன்ஸ் அளவு சாப்பிட வேண்டும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும்.
34.சொறி, சிரங்கு உள்ளவர்கள் தும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து சுட்ட சீகைக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்து வந்தால் பிரச்னை தீரும்.
35.கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.  

இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது.

சித்தன் அருள்................... தொடரும்!

Tuesday, 21 July 2020

சித்தன் அருள் - 882 - அகத்தியர் அறிவுரை!


மோட்சமது பெறுவதற்கு சூட்சஞ் சொன்னேன்
மோகமுடன், பொய் களவு கொலை செய்யாதே
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு; காசினியிற்
புண்ணியத்தைக் கருத்திக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே; பாழ்போகாதே - பலவேத சாஸ்திரமும் பாருபாரு
ஏச்சலில்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம் 
என் மக்கா ளெண்ணி யெண்ணிப்பாரீர் நீரே!
பொருள்:-
 
மோட்சம் என்கிற விடுதலை பெறக்கூடிய வழியை சொல்கிறேன். ஆசை, களவு, கொலை செய்யாதீர்கள். கோபத்தை தள்ளி விடுங்கள். உலகத்தில் புண்ணியத்தை, நல்வினையை எண்ணி செயல்படுங்கள். பாபங்கள் - தீய செயல்களை செய்யாதே, என்று பல சாஸ்திரங்கள் கூறுவதைப் பாருங்கள். பழிச்சொல் இல்லாதவர்கள் வழியை எண்ணிப்பாருங்கள். நல்லோர் வழியில் செல்லுங்கள்.

அகத்தியரின் அருள் வாக்கு:-

மனிதனாக பிறந்தவன், இறைவனே இறங்கி வந்து தவறு செய்யச் சொல்லினும், திடமான மனதுடன் மறுத்து, அதர்ம வழியில் நான் செல்ல மாட்டேன் என்ற எண்ணத்தில், அவ்விடத்தை விட்டு விலகி விடவேண்டும், அதர்மத்துக்கு துணை போகக்கூடாது, செய்யக்கூடாது. குறிப்பாக எம் சேய்களுக்கு ஆன அறிவுரை இது என்று உரைத்துள்ளார், முன்னரே.
  
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஏன் குருநாதரின் இந்த பாடலும், விளக்கமும், அருள் வாக்கும் இப்போது இங்கு தொகுக்கப்படுகிறது என பலரும் நினைக்கலாம். கூர்ந்து கவனியுங்கள்.

நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு, காரியமும் உண்டு. இது முன் செய்த வினை. யாரோ ஒருவர் இறையை பழிப்பதால், இறைக்கு அவதூறு சேர்வதில்லை. அந்த பழிப்பை மனதுள் இருத்தி, இறையை குருநாதரை வணங்க வேண்டிய நல்லநேரத்தை, நாம் அவர்களுக்காக விரயம் செய்யக்கூடாது/செலவிடக்கூடாது. இதை விட்டு விலகி மனதளவில் விருப்பு வெறுப்பு இன்றி, வெகு தூரம் சென்று விடவேண்டும். அதுவே நம் உயர்விற்கு, வழிவகுக்கும்.

இன்று இருக்கும் நிலை ஏன் என்று நந்தீசர் நாடியில் உரைத்தார். இறை சுத்தம் செய்ய இறங்கி வரும் பொழுது, அவருக்கு வேலை மிகவே எளிதாகும். சரியான காரணமும் அமைந்துவிடும்.

நாம் காரணமாகவோ, எதிர்காரணமாகவோ இருக்க வேண்டாம் என்பதே, சித்தன் வாக்கு!

சித்த மார்கத்தின் எளிய அறிவுரை:-

இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும். நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?

வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும். தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.

சித்தன் அருள்................... தொடரும்!

Saturday, 18 July 2020

சித்தன் அருள் - 881 - நந்தீசர் நாடியில் வந்து உரைத்தது!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒரு அகத்தியர் அடியவர், நந்தீசர் ஜீவ நாடியில் வந்து உரைத்ததை ஒலி நாடாவாக அடியேனுக்கு அனுப்பித்தந்தார். எங்கு வாசிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த நிகழ்காலத்தை பற்றியும், இந்த இக்கட்டில் அனைவரையும் காப்பாற்ற, இறைவன் மனம் கனிந்ததையும் நம் பக்கத்திலிருந்து நாம் என்ன செய்யவேண்டும் எனவும் நந்தியெம்பெருமான் விளக்கியுள்ளார். கீழ் காணும் லிங்கில் சென்று கேட்கவோ/டவுன்லோட் செய்யவோ உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்! 

Thursday, 16 July 2020

சித்தன் அருள் - 880 - அகத்தியர் உத்தரவுடன் >> ஆனந்த சாகரஸ்தவம் சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் - 872 வது பதிவில் அகத்தியப்பெருமானின் உத்தரவும், ஸ்ரீ மதுரை மீனாக்ஷி அம்மையின் மீது ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் சமர்ப்பித்த "ஆனந்த சாகரஸ்தவம்" சுலோகம் பற்றியும் கூறப்பட்டிருந்தது. அந்த பதிவில், சுலோகம் pdf பதிவாக டவுன்லோட் செய்துகொள்ள லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. வலைப்பூவில் எங்கு தேடியும், ஒலிநாடாவாக கிடைக்காததால், அடியேனுக்கு தெரிந்த திருமதி.ஜோதி ஸ்தாணுகிருஷ்ணன், திருவனந்தபுரம், என்பவரின் குரலில் mp3 வடிவில் பதிவு செய்து இங்கே தருகிறேன்.

விருப்பமுள்ளவர் இதை டவுன்லோட் செய்து, தினமும் வீட்டில் ஒலிக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மந்திரத்தை படிக்க விரும்புகிறவர்களுக்கும் இது எளிதாக இருக்கும் என்று கூறிக்கொள்கிறேன்.

இந்த ஸ்லோகத்தை பதிவு செய்து தந்த திருமதி.ஜோதி ஸ்தாணுகிருஷ்ணனுக்கு, சித்தன் அருள்/அகத்தியர் அடியவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

சித்தன் அருள் - 879 - பக்தி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குரு-சிஷ்யன், இறைவன்- அடியவர், மாதா/பிதா-குழந்தைகள் இப்படிப்பட்ட பல நிலைகளிலும், எளிதாக கூறுவதென்றால், கண்ணுக்கு தெரியாத ஒரு தொடர்பை உருவாக்குவது, பக்தி நிலைதான்.

ஸ்ரீராமபிரான், அனுமனையும், குகனையும் சிறந்த சிஷ்யர்களாக, பக்தி மார்க்கம் வழி சுட்டி காட்டினார்.

அகத்தியப்பெருமான் கூட, சிறந்த சிஷ்யர் யார்? என்ற கேள்விக்கு, போகர் பெருமானை மிஞ்சிய சிஷ்யர் இவ்வுலகில் இல்லை என்று உரைத்துள்ளார்.

இதிலிருந்து, நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அனைத்திலும், பக்தி இருந்தாலும், அங்கு "சரணாகதி" இருந்தது. அன்பு வளர்ந்து, பக்தியாய், பின்னர் சரணாகதி என்கிற நிலைக்கு கொண்டு சென்றது.

அகத்தியரை தொடர்கிற, சித்தர்களை தொடர்ந்து செல்கிற, அடியவர்கள் என்னிடம் கேட்பது, எப்படி சித்தர்களை வழிபடுவது? என்றுதான்.

அதற்கு ஓர் பதில், உங்களுக்கு மனதில் தங்கும் என்கிற உருவத்தில், சித்தத்தில் அவர் உருவத்தையோ, அல்லது அவர் பாதத்தையோ இருத்தி உள்பூசை செய்தலே போதும்!

சரி! உள்பூசை செய்வதெப்படி? அனைத்திலும் உள்புரண்டோடி இருக்கும் பக்தி, சரணாகதியை பிடித்துக்கொள்ளுங்கள்.

அந்த பக்தி/சரணாகதி நிலை எப்படி இருக்கவேண்டும்? அதை விவரிக்க ஒரு சிறு நிகழ்ச்சியை கீழே தருகிறேன்.

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம பதறியது.  அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது.

 யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை.......?

நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால்,  கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம்.

எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது....! யாரிடம் போய்ச் சொல்வது இதை..! பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே...! யார் உள்ளே வந்து இப்படி செய்கிறார்கள்...?

அர்ச்சகர் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தவாறே,
  
""கண்ணா! என் பக்தியில் ஏதும் கோளாறா...? கோயில் பூட்டுக்கு வேறு சாவி கூடக் கிடையாதே.....! அதையும் வீட்டில் என தலைமாட்டில் வைத்து தான் தூங்குகிறேன். அப்படியிருக்க, எப்படி இவ்வாறு நடக்கிறது......? உனக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துகிறேன். காலையில் வந்து பார்த்தால் , உன் காதோரத்தில் கொஞ்சம் பசுஞ்சாணம்.....! ஏன் இப்படி?'' என்று அரற்றினார்...!!

இரவு கோயிலைப் பூட்டும் போதுதான் பார்த்தார். 

நாள்தோறும் வரும் ஒரு மூதாட்டி அன்றும் வந்திருந்தாள். தளர்ந்த தேகம். கிருஷ்ண விக்ரகத்தைப் பார்த்தவாறே கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள்.  அவள் முகத்தில் அப்படியொரு பரவசம். 

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு. பல ஆண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள். 

அர்ச்சகர் பிரியத்தோடு கேட்டார்: ""பாட்டி! இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?''

""நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான். அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டேன்.

அர்ச்சகர் சிரித்தார். 

"அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?''

"எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது....? போகப் போகிற கட்டை.  என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா!  ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனது வலது கை வலிக்காதோ! இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்கேட்பதில்லை.  நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்? அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம் கொண்டாடிக் கேட்கிறது. நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன். எனக்கு வலக்கரம்உயர்த்தி ஆசிகூறி, அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!''

அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார். கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள் இவள். படிப்பறிவில்லாத ஏழைக் கிழவி. ஆனால் எத்தனை பக்தி! நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன், எப்படி பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும். 

அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.

மூதாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு, 

தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச்சென்றாள்.

அன்றிரவு, அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல், புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

பின் எப்போது தூங்கினார் என்ற தெரியவில்லை. கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.

""அர்ச்சகரே! உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை. என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம், நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது.  அதன் மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள். மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்று நடப்பதைப் பாருங்கள். பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!" என்றார்.

மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க, அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது. 

மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.

அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.

பாட்டி இரவு தாமதமாக உறங்கப் போனாள். அதற்கு முன் தோத்திரங்களைச் சொன்னபடி, அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள். மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது. 

"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!' என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள், சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.

என்ன ஆச்சரியம்!

அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

சாணம் பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து, கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.

நன்கு உறங்கிய அவள், அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள்.

"கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா? நேற்று குளிர் அதிகம். போர்வை போர்த்திக் கொண்டு தானே தூங்கினாய்?'' 
   
என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.

வாய் கொப்பளித்து, முகத்தைத் தூய்மை செய்து கொண்டு வந்தாள்.

"தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா. உடம்புக்கு ஆகாது. நீ வெது வெதுப்பான நீரில் முகம் கழுவிக்கொள். இன்று உனக்காக புள்ளிவைத்துக் கோலம் போடப் போகிறேன்,''  என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள். 

ஒவ்வொரு புள்ளி வைக்கும் போதும்

"கிருஷ்ணா! முகுந்தா! முராரே!' என்று கண்ணன் திரு நாமங்களைச் சொல்லிக் கொண்டே புள்ளிவைத்தாள். பின் கண்ணனைப் பற்றிய தோத்திரங்களைச் சொல்லியவாறே,

இழையிழுத்துக் கோலம் போட்டாள். 

தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி, அடுப்பு மூட்டிச் சமைக்கலானாள்.

உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர். 

நடந்ததெல்லாம் கனவா , நனவா...?

அன்றும் கோயிலுக்குப் போனார்.

கண்ணன் சிலையின் காதுகளில் ஒட்டியிருந்த சாணத்தைப் பார்த்ததும், அவரது மனம் பக்தியில் தழதழத்தது.

அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி, வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக் கொண்டார்.

அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.

ஆனால் அவள் வரவில்லை.

அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:

""அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம். ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.  இனி அது கிடைக்காது''.

ஏன்? வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.

""நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது. இன்று அவளுக்கு உடல் நலமில்லை.  அதனால் தான் அவள் கோயிலுக்கு வரவில்லை. நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக, நீங்கள் அவள் இல்லம் செல்லுங்கள். அங்கே மக்கள் கூடியிருப்பார்கள். மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும். சுயநலமின்றி, தாய்ப்பாசத்தோடு என்னை நேசித்த அவள்,  பக்தியின் பெருமையை நாளை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்!''

அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.

அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை. 

மறுநாள் காலை மூதாட்டியின் இல்லத்திற்கு விரைந்தார்.

கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.

பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.

அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல, விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.

கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.

"இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு? என் பிள்ளை கண்ணனை,  எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அது போதும் எனக்கு!'' என்றாள்!

மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன், 

மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான். 

""என் தாய் அல்லவா நீ!....!!! எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?'' என்ற கண்ணன்,

அந்த ஆன்மாவை, "இரு குண்டலங்களாக்கி" தன் செவிகளில் அணிந்து கொண்டான்.

குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.

அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு, 

அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்றார்.

கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.

எந்த இடத்தில் சாணித் துணுக்கு நாள்தோறும் இருக்குமோ, அந்த இடத்தில் இப்போது, " இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன"....!!

சுயநலமற்ற ஏழைக் கிழவியின் பக்தியை அங்கீகரித்த, கண்ணனை வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது....!!

சில நாட்களுக்கு முன் பக்தி/பூசை/சரணாகதி இவைகளை பற்றி விவரிக்க பல அகத்தியர் அடியவர்களும் கேட்டிருந்தனர். உண்மையிலேயே, எப்படி இதை விவரிக்கப்போகிறோம் என்று திணறி, அகத்தியரிடம் விண்ணப்பித்தேன்.

அவரே, தன் அடியவர் வழி தெரிவித்ததை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பக்தியோ, பூசையோ, சரணாகதியில் சென்றுவிட்டால், நம் ஒவ்வொரு செயலும், அவர் செயலாக மாறிவிடும்! பின்னர், நான் என்பதே இல்லாமல் ஆகிவிடும். "நான்" என்பதை மறந்துவிடுங்கள். அதுவும் எளிய வழி.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

Monday, 13 July 2020

சித்தன் அருள் - 878 - அனந்தபத்மநாபர், இனி அமைதியாய் பள்ளி கொள்வார்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!! 

பத்மநாபஸ்வாமி கோவில் பிரச்சினை தொடங்கி போன வாரம் வரை என்னிடம் அறிமுகமுள்ளவர். நண்பர்கள், அடியவர்கள் எல்லோரும் கேட்ட கேள்வி ஒன்று தான்.

"என்ன! இப்படியாகிவிட்டது! இனிமேல் நிம்மதியே போய்விடுமே!" என்றனர்.

உண்மைதான், தொடக்கூடாததை தொட்டால் நிம்மதி போய்விடும் என்பது உண்மை. இதை, பலரின் வாழ்க்கையில் இந்த காலங்களில் அவர் நிரூபித்து காட்டினார். 

இதன் தொடர்பாக, அடியேன் அனைவருக்கும் தெரிவித்த ஏக பதில் இது ஒன்றுதான்.

"வைத்தவனுக்கு தெரியும், அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று. நம் மனம் ஒரு பொழுதும் நிதியில் செல்ல வேண்டாம்!"

இன்று, தீர்ப்பு வந்த பொழுது, அதைத்தான் அடியேன் உணர்ந்தேன். வைத்தவன் அதை காப்பாற்றிக் கொண்டான்.

இனி. சித்தனருளில் விளக்கப்பட்ட "அகத்தியரும், அனந்தசயனமும் என்கிற தொகுப்பை ஒரு முறை படித்தால், நிறைய விஷயங்கள் புரியும்.

அனந்தபத்மநாபருக்கு, அடியவர்கள், தெற்கு வாசலில், இன்று மாலை விளக்கு போட்டு நன்றி தெரிவித்தனர்.

கிழக்கு வாசலில் போடப்பட்ட தீபம்!

அனந்த பத்மநாபர்!

அகத்தியப்பெருமானுக்கு நன்றி தெரிவித்து அடியேன் வீட்டில் போட்ட விளக்கு!

இதைவிட சிறப்பாக பத்மநாபாருக்கு யார் நன்றி தெரிவிக்க முடியும்?


ஓம் பத்மனாபோ, அமரப்பிரபோ!

ஓம் ஸ்ரீ லோபாசமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்...................தொடரும்!

Thursday, 9 July 2020

சித்தன் அருள் - 877 - தாவர விதி!


தாவர விதி என்கிற தலைப்பில், கொய்யா இலையின் "ஒற்றை மூலி" தத்துவம் விளக்கப்படுகிற்து.

வயிற்றுப்போக்கு நிற்க:-

4 கொய்யா இலைகளை  பறித்து கழுவி,  அம்மியில் வைத்து நீர்விட்டு நன்கு அரைத்து அவ்விழுதை ஒரு தம்ளர் மோரில் கலந்து குடிக்கவும். இவ்வாறு தினம் 3 வேளை குடித்துவர வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும்.

மேற்கூறிய நோய்கள் அனைத்தும் பித்தநோயில் அடங்கும்.

இனி கபம் (சளி) நோய்களை  எவ்வாறு போக்கலாம் என்று பார்ப்போம்.

கொய்யா இலைகள் - 5
இஞ்சி        - 5 கிராம்
ஏலக்காய்  - 2
மிளகு        - 10
நீர்             -    2 தம்ளர்

இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு 2 தம்ளர் நீர் ஒரு தம்ளராக வற்றும் படிக் காய்ச்சி காலையில் உணவிற்கு முன்பு அல்லது உணவிற்கு பின்பு குடிக்கவும்.

இதேபோல் மாலையிலும் குடிக்க வேண்டும். இவ்வாறு தினம் 2 வேளை இக்கசாயத்தைக் குடித்து  வர சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா ஆகியன தீரும்.

செய்முறை:-

பச்சையான கொய்யா இலைகளை 5 பறித்து வந்து அதைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனுடன் உங்கள் கட்டைவிரலுக்கு பாதியளவு   தோல் சீவிய இஞ்சியை தட்டிப் போட்டு, ஏலக்காய் 2 எண்ணிக்கை எடுத்து அதையும் நன்கு இடித்துப் போட்டு,10 எண்ணிக்கை முழு மிளகையும் இட்டு, 400 மி.லி நீர் விட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு  குடிக்கவும். வயிற்றுப்புண் உடையவர்கள் காலை உணவிற்குப் பின்பு குடிக்கவும். 

இவ்வாறு தினம் காலை, மாலை என 2 வேளை குடித்துவர கபம் (சளி) நோய்களும், மூட்டுவலி போன்ற வாத நோய்களும் படிப்படியாக  குணமாகும்.

ஆவி பிடிக்க:-

கொய்யா இலைகளை நீரிலிட்டு  அவித்து வெளிவரும் ஆவியை போர்வையால் போர்த்தி வேது பிடித்து வர தடுமன், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தலைவலி ஆகியன விரைவில் நீங்கும்.

பல்நோய்கள் தீர:-

காலையில் மூலிகைப் பற்பொடியால் பல்தேய்த்த பின்பு வெறும் வயிற்றில் 3 இளம் கொய்யா இலைகளை வாயிலிட்டு நன்கு மென்று சுவைத்து அதன் சாற்றைக் விழுங்கி வர

1. பல்வலி உடனே நீங்கும்.
2. பற்களில் சொத்தை வராமல் தடுக்கும்.
3. வாய்துர்நாற்றம் நீங்கும்.
4. ஈறு வீக்கம் வற்றும்.
5. பல்லீறுகள் பலப்படும்.
6. பல்லீற்றில் இரத்தம் வடிதல் நிற்கும்.
7.வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் ஆறும்.

முகம் பொலிவு பெற:-

கொய்யா இலைகள் 5 பறித்து நீர் விட்டு நன்கு அரைத்து,  இதை 2 தேக்கரண்டி தயிரில் குழைத்து பசைபோல் ஆக்கி பெண்கள் முகத்திற்கு பூசி ஒருமணி நேரம் கழித்து முகம் கழுவி வர

1. முகப்பருக்கள் நீங்கும்.
2. முகத்தில் கறும்புள்ளிகள் மறையும்
3. முகச் சுருக்கம் நீங்கும்.
4. முகம் பொலிவு பெறும்.

வெட்டுக்காயம் ஆற:-

கொய்யா இலைகளை அரைத்து வெட்டுக்காயத்தின் மீது கட்டிவர காயங்கள் விரைவில் ஆறும்.

தலைமுடி உதிர்தல் நிற்க:-

முதலில்  கூறிய கொய்யா இலைக் கசாயத்தை தயார் செய்து அதை ஆறவைத்து பெண்கள் இதை தலையில் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்துவரவும். இவ்வாறு வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர

1. தலைமுடி உதிர்தல் நிற்கும்.
2. பொடுகு நீங்கும்
3. தலை அரிப்பு நீங்கும்.
4. பேன்கள் நீங்கும்
5. தலைமுடி வெடித்தல் சரியாகும்
6. தலைமுடி பலம் பெறும்.
7. முடி அடர்த்தியாக வளரும்.

கொய்யா இலையில் உள்ள சத்துக்கள்:

1. நார்ச்சத்து
2. வைட்டமின் A, B 6, C
3. கால்சியம்
4. இரும்புச்சத்து
5. பாஸ்பரஸ்
6. சோடியம்
7. பொட்டாசியம்
8. துத்தநாகம்
9. மாங்கனீசு
10. தாமிரம்
11. ஃபோலிக் அமிலம்.
12. டானின்கள்
13. கரோட்டினாய்டுகள்
14. ஃபிளேவனாய்டுகள்
15. ஆன்டி-ஆக்ஸிடன்டுகள்
16. புற்று நோயை எதிர்க்கும்மூலப்பொருட்களான லைக்கோபீனே (Lycopene), க்வெர்செடின் (Quercetin) பாலிபினால்கள் ஆகியவை உள்ளன. ஆகவே இவை நுரையீரல் புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்று, பெருங்குடல் புற்று, ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பிப் புற்று, பெண்களின் மார்பகப்புற்று, ஆகியவற்றைத் தடுக்கிறது.
17. வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புடைய கொலைன் என்ற சத்தும் இந்த கொய்யா இலையில் உள்ளது. ஆகவே இது ஆயுளை நீடிக்கும்.

கீரீன் டீயை விட இது சிறந்தது:

பத்தியம் இல்லாத பக்கவிளைவுகள் அற்ற எளிதில் கிடைக்கும் இந்த கொய்யா இலையின் பயன் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் கிரீன் டீ யை இன்று  கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இனிவரும் காலத்தில் இந்த கொய்யா இலை டீ பிரபலமாகும்.  அதற்கு குரு அகத்திய முனிவரின் இந்த அருள் மிக முக்கிய காரணமாகத் திகழும். ஆகவே இந்த கொய்யா இலைகளை நாம் பறித்து உலர்த்தி இடித்து  கிரீன் டீ வடிவில் உபயோகிக்கலாம். சாதாரண டீ தூள் கூட கலந்தும் உபயோகிக்கலாம். பொதுவாக கொய்யா இலையை பச்சிலையாக பறித்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் 100% பலன் கிடைக்குமென்று வைத்துக் கொண்டால் இதை காயவைத்து டீத் தூள் வடிவில் பயன்படுத்தும் போது 90% அளவு பலன் கிடைக்கிறது. கிரீன் டீயில் உள்ள ஒரு வேதிப்பொருள் இருப்பதால், அதை அளவுக்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்த கொய்யா இலைகளில் அது இல்லை.

கிரீன் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உணவு சாப்பிட்ட  ஒரு மணி நேரம் கழித்தே குடிக்க வேண்டும். ஆனால் இந்த கொய்யா இலை டீயை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.!

புற்றுநோயை எதிர்ப்பதில் கிரீன் டீயைவிட இந்த கொய்யா இலை மிகவும் சிறந்தது. ஆரம்ப நிலை புற்று நோய்களுக்கு இதை தனி மருந்தாக கொடுக்கலாம். நாள்பட்ட புற்று நோய்க்கு மற்ற மருந்துகளுக்கு துணை மருந்தாக கொடுக்கலாம்.

இந்த கொய்யா இலைகளைப் பறித்து 5 நாட்கள் நிழலில் உலர்த்தி 6 வது நாள் 1 மணிநேரம்  மதியம் வெயிலில் காயவைத்து  உடனே உரலில் இட்டு கசாய சூரணம் போல இடிக்க வேண்டும். (இடித்து பொடி செய்ய கூடாது.) கிரீன் டீ வடிவில் இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் வீட்டுத் தோட்டத்திலும் இனி நாட்டுக் கொய்யா மரம் வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமக்குத் தேவையான மருந்தை நாமே தயார் செய்ய வேண்டும். நம் நாட்டில் தற்சார்புக் கொள்கை வளர வேண்டும்.

சித்தன் அருள்................ தொடரும்!

Saturday, 4 July 2020

சித்தன் அருள் - 876 - குருபூர்ணிமா தீபம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், இன்று லோகஷேமத்துக்காகவும், இப்போதய பிரச்சினையிலிருந்து எல்லா ஜீவனும் விடுபடுவதற்காகவும், 16 முக தீபம் ஏற்றச் சொல்லியிருந்தார். இன்று குருபூர்ணிமா தினமாக அமைந்ததால், குருவுக்கு (அகத்தியப் பெருமானுக்குத்தான்), பூசை செய்தபின், அவர் அருளுடன் வீட்டின் முன் 16 முக தீபம் ஏற்றப்பட்டு, வேண்டுகோளும் சமர்பிக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை உங்கள் பார்வைக்கு தருகிறேன். நீங்களும் எடுத்த படத்தை அனுப்பித்தந்தால் இங்கு பிரசுரிக்கிறேன்.

[அடியேன்]
[திரு.ஆனந்த், எர்ணாகுளம்]
[திரு.முகுந்தன், சென்னை]
[திரு.ஸ்ரீனிவாசன் கோபால்]
[திருமதி.மேனகா, கோபிச்செட்டிபாளையம்]
[திரு.மணிகண்டன், சென்னை]
[திரு.சிவகுமார், திருவனந்தபுரம்]
[திரு.சுவாமிநாதன், பாண்டிச்சேரி}
[திரு & திருமதி.அபிராமி ரமேஷ், கோவை]
[திரு.ரவிக்குமார், கோவை]
[திரு.கோபிநாத் மருதை, நாமக்கல்]
[திருமதி.பாமா ருக்மணி, தேனி]
[திருமதி.ஜெயந்தி ரமேஷ்]
[திரு ராகேஷ், கூடுவாஞ்சேரி]
[அகத்தியர் தீபக்குழு, காரைக்குடி, மதுரை]
[திரு.அய்யனார்]

சித்தன் அருள்........... தொடரும்!

Friday, 3 July 2020

சித்தன் அருள் - 875 - அகத்தியப்பெருமானின் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று நம் குருநாதர் ஒரு உத்தரவை தன் சேய்களுக்காக அளித்ததாக கூறி, அடியேனின் நண்பர் ஒருவர், அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்" வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி செய்தி கொடுத்தார். நாம் அனைவரும் இதில் பங்கு பெறுவோம்.

நாளை குருபூர்ணிமா தினம். வந்த பாதையை, சற்று பின்நோக்கினால், போன வருட குருபூர்ணிமாவிலிருந்து (அன்று சந்திர கிரஹணம் இருந்தது) அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக்கொண்டு, இன்று உலகெங்கும் அனைத்து ஜீவன்களும் தவிக்கும் இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அப்படி தவித்த காலத்தில், தன் சேய்களை, எத்தனை தூரம் சென்று காப்பாற்ற வேண்டுமோ, அத்தனையும், நம் குருநாதர் அரணாக நின்று செய்துள்ளார். நாம் உணராத நிறைய தடைகளை உருவாக்கி வைத்திருந்தார்.

இனி அந்த தடைகளை விலக்கி, நம்மை, கூட இருந்து வழி நடத்த, அகத்தியப் பெருமான் தீர்மானித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

நாளைய தினம் குருபூர்ணிமா பூசையை செய்து, முடிவில், அகத்தியர் அருளுடன், 16 முக தீபமேற்றி, மாலை நேரத்தில், சந்திரனுக்குகாக வெளியிடத்தில் வைத்திட வேண்டும். பூஜையில், மதுரை மீனாக்ஷியிடம், குருவிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னார். நம் பிரச்சினைகள் விலக கோரிக்கை (பொதுநல, தனிப்பட்ட) வைத்து, அவர் அருள் பெற்று நலமாக வாழ, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!


சித்தன் அருள்.................... தொடரும்!