​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 24 April 2014

சித்தன் அருள் - 171

அகத்தியப் பெருமானின் உத்தரவும் அருளோடும், மீதம் இருந்த எட்டு திருப்பதியையும் தரிசனம் செய்யப் புறப்பட்டோம்.  ஆனந்தமான அமைதியான யாத்திரை. இப்படி ஒரு போதும் அமைந்ததில்லை. சென்று கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லார் மனதிலும். யாருக்கும் பேசவேண்டும் என்று கூட தோன்றவில்லை. மனம் அத்தனை அமைதியாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும், பெருமாள் ஒரே போல இருந்தாலும், அகத்தியர் சொன்னபடி ஏதோ ஒரு சூட்ச்சும வித்யாசம் இருந்ததை அனைவரும் உணர்ந்தோம். அது என்ன என்பது புரியவில்லை, ஆனால் அனைவருள்ளும் புகுந்து நல்லதை செய்தது என்பது மட்டும் உண்மை. கடைசியாக, ஆழ்வார் திருநகரியில் தரிசனம் செய்துவிட்டு, ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்தோம்.

அகத்தியப் பெருமான் என்ன சொல்கிறார் என்று பாப்போமே என்று நாடியை பிரித்தவுடன் மிகப் பெரிய காற்று பலமாக வீசியது. சற்று நேரம் அமைதியாக இருந்து த்யானம் செய்துவிட்டு, காற்றின் வேகம் குறைந்ததும் நாடியை பிரித்து படிக்கத் தொடங்கினேன்.

"காற்று பலமாக வீசி தடுக்கிறதே என்று நீ நினைத்தது சரிதான். சில செய்வினை தொடர்புகள் இருக்கத்தான் செய்யும். அந்த செய்வினைகள் அத்தனைக்கும், பேயாட்டம், பிசாசாட்டம் என்று சொல்வார்கள். அதை காத்து பிடித்தது என்று கூறுகிற வழக்கம் உண்டு. ஆக காற்று என்பது இவ்வுலக காற்றல்ல, செய்வினை காற்று என்று சொல்லுவார்கள். ராகு, கேதுவின் அம்சம். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மன நிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்த மாதிரி வம்ச பூமியடா இது. அந்த பூமியில் தான் அகத்தியன் உட்கார்ந்து பேசும்போது, ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஆக! பொதுவாக அனைவருக்கும் சொல்லுகிறேன். அமைதியான இடத்தில் உட்கார்ந்து, அகத்தியன் அருள் வாக்கு தருவதால்தான், இதை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது. அருமையான அம்மன் பின்னாடி அமர்ந்துகொண்டு ஆனந்தப்பட்டு அகத்தியனை வாழ்த்திக் கொண்டிருக்கிற நேரமடா இது. அகத்தியனை வாழ்த்துவதால், உங்களையும் வாழ்த்திவிட்டதாக அர்த்தம். ஆக! இன்றைக்கு நிறைய புண்ணியங்களை சம்பாதித்துக் கொண்டிருகிறீர்கள். கோயிலுக்கு செல்லச் சொன்னேன், அர்ச்சனை பண்ண வேண்டாம் என்று சொன்னேன். கால் வைத்தால் போதும் என்றேன். எல்லோரும் அந்த ஒன்பது திருப்பதியையும் அற்புதமாக தரிசனம் பண்ணினாலும், யாருமே இல்லாமல் இருக்கும் போதுதான் நமக்கு மனம் விட்டு பேச முடியும். யாருமே இல்லாத நேரத்தில் தான் நிறைய சிந்திக்க முடியும். யாருமே இல்லாத நேரத்தில் தான் நல்ல காரியங்களை பற்றி நினைக்க முடியும். பரபரப்பான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள் நீங்கள். அமைதியை தேடி வந்திருக்கிறீர்கள். அமைதி தரவேண்டும் அல்லவா. ஆகவே, நீங்கள் சென்ற இடங்கள் எல்லாம் அமைதியான இடங்கள். அமைதியில் எந்த தெய்வத்தை நோக்கி, தனிமையில் பிரார்த்தனை செய்யவேண்டுமோ, அத்தனை பிரார்த்தனையும் செய்திருக்கிறீர்கள். அந்த பிரார்த்தனைகள் உடனடியாக பரிசீலனைக்கு வந்து, பச்சைக்கொடி காட்டிவிடுவான் அந்த ஒன்பது தெய்வங்களும். ஏன் என்றால், நீங்கள் கேட்ட பொழுது, யாருமே இல்லை, கூட்டமே இல்லை, பரபரப்பு இல்லை, கோபம் இல்லை, தாபம் இல்லை. உங்களுக்கும் இறைவனுக்கும் நேரடி தொடர்பு எற்பட்டதினால் தான், அகத்தியன் இதை சொல்லுகிறேன்.  நீங்கள் செய்த பிரார்த்தனைகள் எல்லாம் அவன் பொற்பாதங்களில் விழுந்துவிட்டது என்று அகத்தியன் யான் சொல்லுகிறேன். ஆக இன்று காலையில் கிளம்பியது முதல், அருமையான காரியங்களை செய்திருக்கிறீர்கள், மருத்துவத்துக்கு தேவையான மருந்துகளையும் கொடுத்தாயிற்று. இனி அகத்தியன், என் பொறுப்பிலிருந்து சற்று விலகிக் கொள்கிறேன், காரணம், எதெல்லாம் தரவேண்டும் என்று சொன்னேனோ, அதை எல்லாம் வழி காட்டியாயிற்று. இனி நடக்கின்ற காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கவும், எந்த வித குறைபாடுகள் இன்றி இருக்கவும், குடும்பங்களில் மன நிம்மதி கிடைக்கவும், குழந்தைகள் நல்லபடியாக வாழவும், எந்த வித நோய் நொடி இன்றி இந்த ஐந்து பேர்களும், ஆனந்தமாக, அமோகமாக இருக்கவும், அகத்தியன் மனப் பூர்வமான வாழ்த்துக்களை, இப்பொழுது இந்த அருள்மிகு கோயில் முன்னாலே வாழ்த்துகிறேன்.

ஆக, இந்த அருமையான கோயில் முன்பு, தாமிர பரணி நதிக்கரை ஓரம், முதன் முதலில் இந்திரன் இந்த கோயில் ஓரம், முதலில் தங்கி, நவக்ரகங்களுக்காக, காத்துக் கிடந்த இடமடா இது! இந்த இடத்துக்கு வலதுபக்கம் மூன்று காத தூரம் சென்றால், அற்புதமான கோயில் ஒன்று உண்டு. மண்புற்று ஒன்று உண்டு. மண்புற்றுக்கு அடியிலே மிகப் பெரிய சுரங்கப் பாதை ஒன்று இருக்கிறது. அந்த சுரங்கப்பாதையானது, இங்கிருந்து செந்தூர் முருகன் கோயில் வரையில் செல்லும். இங்கிருந்து இடதுபக்கம் செல்லும் ஒரு சுரங்கப்பாதை ஒன்றும் இருக்கிறது. அது நேரே, திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி சன்னதிக்குள் போய் முடியும். ஆனால் கண்டுபிடிப்பது கஷ்டம், அதனால் தான் தைரியமாக சொல்லிவிட்டேன். அந்த சுரங்கப்பாதையில், எத்தனையோ, ஸ்வர்ணங்கள், முத்துக்கள், நவரத்னங்கள், மாணிக்கங்கள் அங்கங்கே இருக்கலாம், மரப்பெட்டியில், அது வேறு. அதற்காக சொல்லவில்லை. இந்த இடம் எப்படிப்பட்டது என்றால், முன்னொரு சமயத்தில், குலோத்துங்க சோழனால் படையெடுக்கப்பட்டு, மனம் நொந்து போன பாண்டிய மன்னன் ஒருவன், தன்னை காப்பாற்றிக் கொள்ள, சுப்பிரமணிய சுவாமி கருவறையில் கீழே இறங்கி, தீவட்டி துணையுடன், இதுவரை நடந்து வந்து, அவனுக்கு ஒரு வாரிசு பிறந்து, அந்த வாரிசு பிற்காலத்தில், நெல்லை சீமையை ஆண்டது, பெரும் கதையடா! அதற்கெல்லாம் அஸ்திவாரம் இட்ட இடம் தான் இந்த இடம். 

எந்த இடத்துக்கு சென்றாலும், ஒரு சிறப்பு தகுதி உண்டு. இந்த இடம் அப்படிப்பட்ட இடம். அந்த சுரங்கப் பாதை வழியே தான், மன்னன் வெளியே வந்து எல்லோரையும் காப்பாற்றினான்.

இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். எட்டயப்பன் காலத்தில் எல்லாம், வெள்ளை துரைக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த இடமே இந்த இடம் தான். ஏன் என்றால், மிலேச்சனால் விரட்டி அடிக்கப்பட்டு அத்தனை பேரும் ஓடி வந்த போதெல்லாம், இங்கு வந்து காப்பாற்றி இருக்கிறான், அப்பொழுது ஆதித்தன் என்கிற மன்னன். ஆதித்தன் தான் இன்றைக்கு சிவந்தி ஆதித்தன் என்று பத்திரிகையிலே பரபரப்பாக பேசுகின்ற, அந்த சிவந்தி ஆதித்தன் பரம்பரைக்கு, பரம்பரைக்கு முன்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எல்லாம் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்கள் தான் இங்கு வெள்ளைதுரையை கூட்டி வந்து, ஆழ்வார் திருநகரி பக்கத்திலே, ஒரு அற்புதமான இடத்திலே, மிலேச்சனை உட்காரவைத்து சமரசம் பண்ணின இடம் இது. அதற்கு மூல காரணம் இது. செந்தூர் முருகர் கோயிலுக்கும் இங்கிருந்து வழி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். அதில் உள்ள சில தெய்வ ரகசியங்களை, அகத்தியன் இப்பொழுது உரைக்க முடியாது. ஏதேனும் விபத்து எற்பட்டாலோ, ஏதேனும் பாதிப்பு எற்பட்டாலோ, தப்பித்து வருவதற்கு, இது வரைக்கும், அமைதியான பூமிக்குள்ளேயே, பிரளயமே ஏற்பட்டாலும், இங்கு வரை தப்பித்து ஓடி வந்து விடலாம். அந்த இடத்தில் அமர்ந்த்துகொண்டு தான் அகத்தியன் பேசுகிறேன். ஆகவே, செய்திகள், மிக அற்புதமானவை, மிக ஆனந்தமாக இருக்கும்.

இங்கிருந்து வலது பக்கம் சென்றால், பூமிக்குள்ளேயே, ஏறத்தாழ, 27 கோயில்கள் மூழ்கிக் கிடக்கிறது. அதற்கு பக்கத்திலே, ஐந்து காத தூரம் சென்றால், முன் காலத்திலேயே வெட்டி எடுக்கப்பட்ட முதுவெண்ணை தாழி, ஆதிச்சநல்லூர் என்கிற ஊரில் இருக்கிறது. ஆக, இந்த இடத்துக்குள்ளேயே, சுடலை மாடன் கோயில், பேச்சி அம்மன், இசக்கி அம்மன் கோயில், பிடரி அம்மன் கோயில், உச்சி மாகாளி அம்மன் கோயில், பெருமாள் கோயில், முருகப் பெருமானுடைய ஒன்பது வகையான அலங்காரம் உடைய கோவில், அதற்கு பிறகு, ஐயப்பன் கோவில் ஒன்று உண்டு, ஐயப்பன் தான் மாறி சாஸ்தா கோவில் என்று பெயர். பதினெட்டாம் படி சாஸ்தா என்று அதற்கு பெயர். ஆக அந்த கோயிலும் மூழ்கி கிடக்கிறது. அதை என்றைக்காவது, யாராவது ஒருவர், வெளியே கொண்டு வரலாம். அதற்கு வழியும் தரமுடியும்.

சித்தன் அருள்............ தொடரும்!

Thursday, 17 April 2014

சித்தன் அருள் - 170 - அகத்தியரை பணியுங்கள் நட்சத்திரமாக்கி விடுவார்!

(கல்லார் மலைமேல் உறையும் அகத்தியப் பெருமான்)

இன்னவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் அந்த புலி தங்கி இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ, எட்டி எட்டிப் பார்த்தும் வரவில்லை. இரையை தேடித்தான் வந்திருக்கிறது, உங்களை தேடி அல்ல. ஆனால் ஏதோ ஒரு சூட்ச்சுமம் மனதுக்குள் புகுந்ததினால் தான் எல்லோருக்குள்ளும் பயம் இருந்தது, யாருமே தூங்க வில்லை. எல்லார் மனதிலும் இருந்தது, யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. பயம் என்றால் உயிர் பயம் அல்ல, ஏதேனும் வந்தால் தக்க பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோமே என்கிற நம்பிக்கை.  ஆனாலும் சித்தர்களை வந்து உங்களை காப்பாற்றச் சொன்ன காரணம், அந்த புலிக்கு எந்த மனுஷ வாசனை உணராமல் இருக்கவும், எந்தவித இரை வாசனையும் அதன் முகத்தில் படக்கூடாது என்பதற்காகத்தான் காற்று வேகமாக அடித்து, அந்த வாசனைகளை திசை மாற்றி, அந்த புலியை விரட்டிவிட்டது. வயதான புலி என்றாலும் கூட, புலி என்றால் கிலிதானே!

அந்த புலியை பார்த்து, அகத்தியன், வந்தது புலிப்பாணி சித்தன் என்று சொல்லமாட்டேன். அது மிருகம் தான். அது உங்களுக்கு பின்னால் 47 அடிகளுக்குப் பின்னால், அமர்ந்திருந்தது. அதை நேற்றே சொல்லியிருந்தால் பதறிப் போயிருப்பீர்கள். மன நிம்மதி இருக்காது. சிலருக்கு, மாரடைப்பு நோய் கூட வந்திருக்கும். ஏன் என்றால், மனிதர்களுக்கு உயிர் என்றால் வெல்லக் கட்டியடா. வாழ்க்கை போகலாம், இருக்கலாம், ஆனால் எப்படிப் போகப்போகிறது என்பதுதான் கேள்வி. இந்த இடத்தில் வந்து, தனிக்காட்டில் வந்து தனியாக, யாரோ ஒரு அகத்தியன் என்ற பெயரின் பின்னால் சென்று முட்டாள்தனமாக ஏதோ விபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாதல்லவா.  என் பெயரைசொல்லிவிட்டு, என் அழைப்புக்கு இணங்கி வந்திருக்கும் உங்களுக்கெல்லாம், நல்லபடியாக வாழ்க்கையை காப்பாற்றி கரை ஏற்ற வேண்டும். உங்களுக்கு நன்றி கடன் செய்யவேண்டும், உங்களுக்கு பல்லக்கு தூக்கியாக இருக்கவேண்டும் என்று சொன்னதெல்லாம் உங்களை தட்டிக் கொடுத்திருக்கிறேன். ஏன் என்றால், அந்த அருமையான காலம், இந்தக் கட்டிலே, புலி போன்ற மிருகங்களுக்கு நடுவிலே, 277 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஐந்து பேருமே காட்டிலே தவம் செய்தார்கள். காட்டிலே தவம் செய்த போதெல்லாம், இப்படிப்பட்ட வன விலங்குகளுக்கு நடுவிலே அமர்ந்து தவம் செய்ததெல்லாம் உண்டு. அந்த தவத்தின் போது பயத்தால் கூட பிரார்த்தனை பண்ணியிருக்கலாம். ஒரு மைந்தனோ, அன்னவனும் மஹா மிருத்யுஞ்ச மந்திரத்தை செப்பினானம். தன உயிருக்கு பயந்து செப்பியிருக்கிறான் போல். மற்றவர்களோ, ப்ர்ராத்தனை பண்ணினாலும் கூட, சுற்றுப்புற சூழ்நிலைகளும் காற்றும், உண்மையான ஒரு காட்டுவாசி போலவே உங்களை வாழ வைத்தது. ஏதேனும் தக்கதொரு பாதுகாப்பை எடுத்துக் கொண்டு வந்திருந்தாலும், அந்த கட்டு வாசியாக இருந்திருக்க முடியாது. 277ஆண்டுகளுக்கு முன்பு, காட்டிலே சமையல் செய்து, சித்தர்களை தேடி அலைந்ததெல்லாம் உண்டு. இவர்கள் அலைந்ததெல்லாம் 17 நாட்கள் தான். 17 நாட்கள் அந்த காட்டிலே உலாவிவிட்டு, இறங்கி விட்டார்கள். அதற்க்கு தான் சொன்னேன், விட்ட குறை தொட்ட குறை என்பது போல, இவர்கள் சித்தர்களோடு நெருங்கி பழகின  நேரம் உண்டு.அது ஒரு பெரும் கதை. அந்த நாளும் நேற்றைய நன்னாள் என்று சொல்லி, இந்த புலிக்கதையும் சொல்லவேண்டும், இவர்கள் சித்தர்களை தேடி வந்த விஷயத்தையும் சொல்லவேண்டும். இந்த ரெண்டும் விட்டுப் போனதற்கு, பின்னால் ஒருநாள், அலைகள் ஓரத்திலே, என் அப்பன் முருகன் சன்னதிக்கு பக்கத்தில் அமர்ந்து சொல்லவேண்டும் என்று ஆசை பட்டு தான் சொல்லியிருக்கிறேன்.

நவ கிரகங்கள் தம்பதியரோடு, அமர்ந்திருந்து வாழ்த்தியதேல்லாம் உண்மையடா.  சிறிது நேரம் அன்னவன், அங்கு தங்கியிருந்தாலும், இப்போதைக்கு எப்போது விளகேற்றிவிட்டானோ, நவ கிரகங்கள் முகம் பளிச்சென தெரிந்து, யாரவன் விளகேற்றுகிறான் என்று எட்டிப் பார்த்து, நவ கிரகங்களும் தத்தம் தம்பதியரோடு, அகத்தியனை நோக்கி வந்தது போல, உங்களை நோக்கி வந்தது. உங்களுக்கு நவ கிரகங்களின் பாக்கியம் கிடைத்தது. அதாவது, இந்திரனுக்கு கிடைத்த நவக்ரக பாக்கியம் என்பது வேறு. பொல்லாத நோயால அவதிப்பட்டு, ரத்தம் சொட்டி ஒழுக, புனுகு தடவக் கூட முடியாமல், புண்ணாகி, வெந்து, அழுகி, புழுக்கள் நெளிந்து துடித்த காலம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்திரனை காப்பாற்றியது நவ கிரகங்களே. ஆனால், உங்களுக்கோ, அகத்தியன் சொல்படி, அந்த அற்புதமான நவ கிரகங்கள் ஒன்பதும் தத்தம் தம்பதியரோடு, ஆனந்தமாக வாழ்த்தியிருக்கிறார்கள். இந்த பாக்கியம் மிகப் பெரிய பாக்கியம். என் குழந்தைகளை அகத்தியன் ஒரு போதும் விடமாட்டேன். அதற்கு, இது ஆரம்பம் தான் சொல்லியிருக்கிறேன். எத்தனையோ, இன்னும் அதிசயங்களை காட்ட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அளவுக்கு மீறி காட்டிவிட்டால், இவர்கள் திசை மாறி போய் விடக்கூடாதே என்கிற பயமும் எனக்கு உண்டு. மனதுக்குள்ளே இன்றைக்கு பேசலாம், நான் அகத்தியன் மைந்தன் என்று. சூழ்நிலை சந்தர்பத்தின் காரணமாக, சற்று விலகிக் கூட போகலாம். தவறில்லை. சில விஷயங்கள் சற்று தாமதமாக நடந்தால் கோபப்பட்டோ, சில விஷயங்களில் சற்று அகலக் கால் வைக்காமல், சற்று அரை குறை, போலியான சிரிப்போடு, அகத்தியனை நம்பி தொழ முடியும்.  அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான், இவர்களுக்கெல்லாம், பக்கம் பக்கமாக, பொழுது பொழுதாக, அணு அணுவாக, இவர்களுக்கெல்லாம் பக்தியையும், ஞானத்தையும், சித்தத்தன்மையையும் ஊட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இன்றைய தினம் நல்ல நாள், மிக அருமையான நாள். காலையிலே அந்த மலை, சாயங்காலம் அலை. அதிசயமான சம்பவம் நடக்கிறது. இயற்கையோடு இவர்கள் வாழ்க்கை ஒற்றுப் போயிருக்கிறது என்று தெரிகிறதா? என் மைந்தர்கள் இயற்கையோடு ஒற்றுப் போகுபவர்கள். இனியும் இயற்கையையே சிந்தனை செய்வார்கள். "இப்படியே வாழ்ந்துவிட்டால், எவ்வளவு சந்தோசம் என்று கேட்டான் ஒருவன்". ஆகா! இப்படிப்பட்ட பாக்கியத்தை இத்தனை நாள் விட்டுவிட்டோமே, இப்பொழுதாவது கிடைக்கிறதே என்று ஆச்சரியப் பட்டான் ஒருவன். ஆகவே, எதுவமே எங்கும் இல்லை? அவன் தான் நடத்துகிறான்என்று சித்த வேதத்தை நோக்கிச் சென்றான் ஒருவன். என் கடன் பணி செய்து கிடப்பதே, யார் எப்படிப் போனால் என்ன? உலகமே இருண்டால் என்ன, வெளிச்சமானால் என்ன, யார் எப்படி பேசினால் என்ன, இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன, என்ன குறை கூறினால் என்ன, புன்னகை பூத்து கை நீட்டி அழைத்தால் என்ன? என்கடன் என் தனிக்கடன் என்று ஒருவன் பேசினான். ஆகவே, எல்லோருமே ஒரு பக்குவமான நிலைக்கு வந்து விட்டீர்கள். அகத்தியனுக்கு இதில் மிக மகிழ்ச்சி. சித்தத்தன்மை தான் வேண்டும் என்று, முறைப்படி மந்திர உபதேசம் பண்ணித்தான் சித்ததன்மை அடைய வேண்டும் என்பதில்லை. அதற்குத்தான் சூட்சுமமாகச் சொன்னேன். காலையிலே தாமிரபரணி நதிக்கரையிலே, சித்தத்தன்மை என்பது படித்து அல்ல, மானசீகமாக ஒரு புஷ்பத்தை போட்டாலே சித்தத்தன்மை கிடைத்துவிடும். இது குறுக்கு வழியல்ல. நேரான வழி. அகத்தியனே இறைவனிடம் பரிந்துரை செய்து, இறைவனே ஆனந்தப்பட்டு பலரையும் சித்த நிலைமைக்கு தள்ளப் படுகின்ற காட்சி. இப்படி பலரையும் மாற்றியிருக்கிறேன். 

​இன்னும் ஒன்று பாக்கியுண்டு. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மனிதனை நட்சத்திரங்களாக மாற்றி காட்ட முடியும், அகத்தியன் மாற்றிக் காட்டியிருக்கிறேன் என்று. இன்றைய தினம் சதுரகிரியில் அதுதான் நடந்திருக்கிறது. எத்தனை மனிதர்களை, சித்தர்களை எல்லாம், இன்றைக்கு நட்சத்திரமாக மாற்றி சதுரகிரியின் மேலே உட்கார வைத்திருக்கிறேன். ஆகவேதான், அன்றாடம் பலரும் கண்டு ஆனந்தப் பட்டு வந்ததுண்டு. அந்த வரிசையில் இந்த ஐந்து பேரும் வந்தாலும் வரலாம் என்பதை மட்டும் சூசகமாக சொல்லி; ஏன் என்றால், அனுமன் இப்போது கிளம்பிக்கொண்டிருக்கிறான். அவனோடு அகத்தியனும் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, நல்லநாளில் ஆரம்பித்து, இவர்கள் போகின்ற வழியில் எல்லாம் பல புண்ணிய ஷேத்ரங்கள் பல உண்டு. நவ திருப்பதியில், ஒரு திருப்பதியை தான் கண்டான் இவன். அங்கு எல்லாமே கோயில் தான். எல்லாமே ஒரு கல்வெட்டுத்தான். எல்லாமே ஒரே உருவச்சிலை தான். எல்லாமே மூன்று திருமண் போட்ட நாமம் தான். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு சூட்ச்சுமம் இருக்கிறது. ஆகவே இந்தக் கால் அங்கு படவேண்டும். ஆகவே, உங்களால் முடிந்தால், எத்தனை நவ திருப்பதியை, பாக்கி இருப்பது எட்டு திருப்பதிகளே, இவர்கள் ஒன்றும் செய்யவேண்டாம், பிரார்த்தனை செய்யவேண்டாம், பணம் குடுக்க வேண்டாம், அர்ச்சனை செய்யவேண்டாம்,  மானசீகமாக உட்கார்ந்து வணங்கக் கூட வேண்டாம், உங்கள் பாதங்கள், அந்த புனிதத் தலத்தில் பட்டுவிட்டு வந்தாலே போதும்.  அதன் விளைவு என்ன என்பதை, இன்னும் நான்கு நாட்களில் உரைப்பேன் என அருளாசி!

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday, 3 April 2014

சித்தன் அருள் - 169 - அறிவுரை!


இனிமேல் ஏதேனும் ஒட்டிக்கொண்டால், வேறு விதமாக ஒட்டிக் கொள்ளுமே தவிர, மூன்று ஜென்ம கர்மாக்களில், பாப கர்மா கழிந்திருக்கிறது. இருந்தாலும் இவர்கள் செய்த புண்ணிய கர்மாக்கள் நிறைய இருக்கிறது. அதை பற்றி யாருமே, அகத்தியனிடம் விவாதிக்கவில்லை. கர்மா என்றால் எல்லோருமே, பாபம் என்று எண்ணியே பேசுகிறார்கள்.  அகத்தியனிடம், யாராவது ஒருவர், என்றைக்காவது, கர்மா என்றால் என்ன என்று கேட்பதைவிட, கர்மா என்றால் பாபம் என்று இவர்களே முத்திரை குத்தி விடுகிறார்கள். முத்திரை குத்திவிடுவதில் தவறில்லை. அவர்களுக்கு தெரிந்த வரை முத்திரை குத்திவிடுகிறார்கள். தப்பான வாக்குகளை அவர்கள் சொல்லவில்லை. ஆனால் புண்ணிய கர்மாக்களை அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். இன்றைக்கு காலையிலே, மலையில் உட்கார்ந்துகொண்டு, ஆனந்தமாக நீராடிய போதெல்லாம், புண்ணிய கர்மா சேர்ந்தது. பகலிலே, 12 மணி பொழுதிலே, பையப்பைய ஆங்கொரு பாறையிலே அமர்ந்து கொண்டு, முங்கிக் குளித்த பொழுதுதான், வேறு சில புண்ணியங்கள் கிடைத்தது. அந்தப் புண்ணியங்களிலே  33.1/3 விழுக்காடு அவர்கள் குடும்பத்துக்கு அகத்தியன் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அகத்தியன் எப்பொழுதடா பாகப்பிரிவினை செய்தான் என்று எண்ணாதே. சில சமயம் எல்லோருக்குமே, சுயநலம் உண்டு. புண்ணியங்கள் உங்களுக்கு அதிகமாக ஒட்டிக் கொள்ளக் கூடாது. பகிர்ந்து உங்கள் குடும்பத்துக்கு கொடுத்து, அவர்கள் நல்லபடியாக இருக்கட்டுமே. ஆக, எல்லா ஏழைகளுக்கும், இந்த புண்ணியம் வர வேண்டும் என்றுதான், இந்த பாபநாசத்தில், முக்கண்ணனிடம் போராடி, நீராடச் சொல்லியிருக்கிறேன். ​இருக்கட்டும்.

இன்றைய தினம், எட்டு நதிகளும் ஒன்று சேர்ந்து, உங்களை எல்லாம், வாழ்த்தியிருக்கிறது என்பது மிகப் பெரிய புண்ணியம். இதன் விளைவை பாருங்கள். இன்னும் மூன்று மாதத்திற்குள், யாம் குறிப்பிட்டேனே, அந்த நதிக்கரை, சென்று, நீங்கள் நீராட வேண்டிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கிறது. ஏன் என்றால், நதிகள் உங்களை அழைத்திருக்கிறது. அப்பொழுதே, இங்கு தாமிரபரணியிடம் சொல்லிவிட்டார்கள், "உனக்கு மட்டும், இந்த புண்ணியமா? எங்களுக்கும் கிடைக்க வேண்டாமா? எங்களுக்கும் கிடைக்கட்டும் என்று அகத்தியனே சொல்லிவிட்டான்" என்று உரிமையோடு சண்டை போட்டிருக்கிறார்கள். சற்று முன்தான் எனக்கே இந்த தகவல் கிடைத்ததால், அகத்தியன் யாம் இதை சொன்னேன். உங்கள் ஐந்து பேருக்கும் அந்த புண்ணிய நதிகளில் நீராடுகிற பாக்கியம் உண்டு. அந்த நீராடுகிற நேரத்தில் சில அற்புதமான நிகழ்ச்சிகள் நடக்கும். நிகழ்ச்சிகள் என்று சொன்ன உடனே, நடக்கவில்லை என்று கோபப்படக்கூடாது. சில விஷயங்கள், உங்கள் கண்ணுக்கு தெரியாமலேயே நடக்கும். சில சமயம், உங்கள் முதுகுக்கு பின்னாலேயே நடக்கும். சில சமயம் உங்களுக்கு நேரடியாகவே நடக்கும். நீங்கள் உணர முடியாத சூழ்நிலையில் கூட இருக்கலாம். உங்கள் தப்பல்ல. அகத்தியன் நடத்திக் காட்டுவேன்.

ஆக, எத்தனையோ பேர்கள், எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு வந்திருக்கிறார்கள். எத்தனையோ பணிகளை விட்டுவிட்டு, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு, எதையோ நம்பி ஓடி வந்திருக்கிறார்கள். நேற்று இரவு நள்ளிரவு நேரத்தில் 3.20க்கு அங்குள்ள ஒன்பது சித்தர்களும், இவர்களை வந்து வாழ்த்தியதெல்லாம் அகத்தியன் கண் கொண்டு ரசித்தேன். "ஆஹா! அகத்தியன் சொல்லை கூட, இப்பொழுது அருமை சித்தர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்களே" என்று, எனக்கு நானே முதுகிலே கிள்ளிக் கொண்டேன், ஷொட்டு போட்டுக் கொண்டேன். இதை எதற்காக சொல்லுகின்றேன் என்றால், எல்லாமே, எல்லா இடத்திலும் நடக்கக் கூடியது. அகத்தியன் சொல்படி, இந்த ஐந்து மைந்தர்களுக்கும், எத்தனை பாக்கியங்களை, அகத்தியன் வழங்கி இருக்கிறான் என்று எண்ணும்போதெல்லாம், இதெல்லாம் சற்று அதிகமாகவே தோன்றுகிறது என்று போல் தோன்றும். அத்தனை பாபங்களிலும், பெரும் பாபங்கள் எல்லாம் கழிந்துவிட்ட நாளடா இன்றைக்கு. ஆகவே, இனி, புண்ணிய கர்மாக்கள் நிறைய இருக்கிறது. ஆக, என்றைக்கும், எவரும் ஒரு பொழுதும், தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். தங்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று நொந்து போகக்கூடாது. நினைத்த காரியம் நடக்கவில்லை என்று, சில சமயம் அவதிப் படலாம், மன அவதிப்படலாம், அகத்தியனை திட்டலாம். காரணம் இல்லாமல், அகத்தியன் எதுவுமே செய்ய மாட்டேன். எப்போதைக்கு எப்போது என்னை முழுமையாக புரிந்து கொண்டு விட்டீர்களோ, உங்களுக்கு காரிய தாமதமோ அல்லது காரிய தடங்கலோ, நினைத்து விழுந்து விடக்கூடாது. ஏன், எதற்காக சொல்லுகிறேன் என்றால், எத்தனையோ புண்ணிய கர்மாக்கள் உங்கள் உடம்பை பாபம் செய்யவிடாமல் தடுத்திருக்கிறது. அதனால் தான் சில காரணங்கள். சில சமயம், சில அதிகார பலம் கிடைக்கலாம்.  சில உயிர்கள் உடனே காப்பாற்றப் படலாம். அல்லது உடனே பதவி என்பது தான் இப்போது. பணம் வரலாம். சில சமயம் அந்த பணங்களும், பதவிகளும் பாவப்பட்டதாகிவிடும். தவறாக செய்கையை செய்துவிட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் சற்று அணைபோட்டு தடுத்து, பார்த்துப் பார்த்து உங்களை அனுப்பி வைக்கிறேன். ஏன் என்றால், என் குழந்தைகள், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லாம், எந்த விதத்திலும் துன்பப் படக்கூடாது. நினைப்பது நடக்கவில்லை என்பதில் அகத்தியனிடம் ஒரு சில வருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வருத்தம் இருக்கும் வரை அகத்தியன் உங்களோடு இருப்பேன். அந்த வருத்தம் விலகிவிட்டால், நீ அகத்தியனை நினைக்கமாட்டாய். விட்டுவிடுவாய், அதுவும் தெரியும். காரியம் முடிந்துவிட்டது, இனி அகத்தியனுக்கு என்ன வேலை? எங்கேயாவது பார்த்தால், அகத்தியனை நோக்கி கை காட்டி "அகத்தியா! நன்றாக இருக்கிறாயா?" என்று கை காட்டிவிட்டு சென்று விடுகிற தன்மை வந்துவிடும். சித்தர்களும் பலமுறை பலரிடம் விளையாடி, அகத்தியன் மைந்தனிடம் கூட விளையாடி காணாமல் போயிருக்கிறார்கள். இதை எல்லாம் எதற்குச் சொல்லுகிறேன் என்றால், நீங்களும் மனிதர்கள். உணர்ச்சிக்கு அடிமை பட்டவர்கள். ரத்தம் இருக்கும் வரை, வியர்வை இருக்கும் வரை, இந்த பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். குடும்பம் இருக்கும் வரை இந்த பிரச்சினை வரத்தான் செய்யும். இன்னும் சின்ன சின்ன காரியங்கள், அலுவலகத்திலோ, சுற்றுவட்டாரத்திலோ, அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் வரை, உணர்ச்சி வசப்படலாம், ஏமாந்து போகலாம், மனம் நொந்து போகலாம். ஆனால், மனம் நொந்து போனால், அதற்கும் காரணம் மனம் தான். ஆகவே, உங்கள் மனம் ஒரு போதும் நொந்து போகாமல், அகத்தியன் நான் கலங்கரை விளக்கமாக நின்று காப்பாற்றுவேன். என் இரு கையை கொடுத்து, விளக்கு அணையாமல், வருண பகவானே வந்து வேகமாக வீசினாலும் கூட, அந்த வருண பகவானின் கோபத்தை தாண்டி, அவனை விலக்கி விட்டு, எப்படி கை அணைப்பேனோ, ஒரு புலி தன் குட்டியை அழகாக கவ்விக்கொண்டு, ஆனந்தமாக, பொறுப்பாக, பக்க பலமாக, பாதுகாப்பாக எடுத்து வைக்கிறதோ, அது போல யான் செய்வேன். என்னடா, எல்லாம் பேசிவிட்டு புலியை பற்றி பேசுகிறாயே என்று சொல்கிறாயே, நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா? இன்னவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு 47 அடிகளுக்கு பின்னால், அந்த பொல்லாத புலி தங்கி இருந்தது என்பதே உண்மை.

[அகத்தியர் அடியவர்களே! தவிர்க்க முடியாத ஒரு சில காரணத்தால் அடுத்த வாரம் சித்தன் அருளுக்கு இடைவெளி விட வேண்டி உள்ளது. முயற்சி செய்கிறேன்! அவர் அருள் இருந்தால் அடுத்த வாரம் சித்தன் அருளை தொகுத்து தருகிறேன், இல்லை என்றால் இரு வார இடைவேளைக்குப் பின் தட்டச்சு செய்து தருகிறேன். வணக்கம்!]

சித்தன் அருள்.......... தொடரும்!