​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 26 October 2018

சித்தன் அருள் - 775 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 1


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நேற்றைய பதிவில், அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறிவிட்டு வந்து கோடகநல்லூர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன், என கூறிவிட்டு சென்றது நினைவிருக்கும். உண்மையாகவே அகத்தியப்பெருமானுக்கு நன்றி சொல்வதுடன், கோடகநல்லூர் பூசை விஷயமாக, அவரது அருள் வாக்கு, என்ன என்று தெரியவேண்டும் என்பதே அடியேனின் விருப்பமாக இருந்தது. கோவிலில் சென்றடைந்ததும், பலமுறை அகத்தியர் அடியவர்கள் சார்பாக, பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தந்தமைக்கு,  "நன்றியை" அகத்தியப் பெருமானுக்கு தெரிவித்தேன். பூசாரி வந்து "பூஜை முடிந்து நடை சார்த்தும் பொழுதுதானே செல்வீர்கள்! அப்பொழுது பிரசாதம் தருகிறேன் என்றார்".

"நீங்கள் எங்களுக்காக எதையும் விட்டு வைக்கக்கூடாது. எது எப்படியோ அப்படியே நடக்கட்டும். அவரிடமிருந்து ஏதேனும் தகவல் உண்டா? என விசாரித்து சொல்லுங்கள்"  என பொதுப்படையாக கூறிவிட்டு பூஜை நிறைவு பெற காத்திருந்தேன். "நிவேதனம்" நேரத்தில் எல்லோரும் ரொம்ப விலகி இருக்க வேண்டும் என்பது இந்த கோவிலின் கட்டுப்பாடு. ஆதலால், ஒரு கயிறை கட்டியிருந்தார்கள். அகத்தியப்பெருமானுக்கு எதிரில், குறுகலாக கட்டிய கயிருக்கு பின்னால், தரையில் பத்மாசனத்தில் அமர்ந்து, பூசை முடியும் வரை "அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்லோகத்தை கூறி, சித்த மார்க்க முறையில் அவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தேன்.

பூசை முடித்து வெளியே வந்த பூசாரி, தீபாராதனை தட்டை வைத்துவிட்டு, எல்லார் மீதும் தீர்த்தம் தெளித்தார். மனம் அமைதியாக இருந்தது. என்ன தகவல் வரப்போகிறதோ, என்ற எண்ணத்துடன் காத்திருந்தேன். உள்ளே சென்று அகத்தியர் முன் சற்று நேரம் கண் மூடி நின்ற பூசாரி, பிரசாதத்தை, ஒரு முழம் பூவை, ஒரு இலையில் வைத்து, அடியேனை அழைத்தார்.  அருகில் சென்ற அடியேனிடம், பிரசாத இலையை தந்துவிட்டு, "பெருமாளும், அடியேனும், மிக சந்தோஷமாக, திருப்தியாக இருக்கிறோம். அனைத்து சேய்களுக்கும் எங்களது ஆசியை வழங்கியுள்ளோம். மிக சிறப்பு, என்று கூறினார்", என மலையாள மொழியில் தெரிவித்தார்.

நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றும் பூசாரிக்கு தெரியாததினால், அவர் வினவிய பொழுது, "கோடகநல்லூர்" பற்றி சுருக்கமாக தெரிவிக்க வேண்டி வந்தது. அவருக்கு ஒரே ஆச்சரியம். நிறைய தெரிந்து கொள்ள விரும்பினார். கோடகநல்லூர் பிரசாதத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, பிறகு பேசுவோம், அடியேன் உடனேயே இல்லம் சென்று சேர வேண்டியுள்ளது" என கூறிவிட்டு, மீண்டும் ஒரு முறை நம் குருநாதருக்கு நன்றியை தெரிவித்து உத்தரவு வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த நிகழ்ச்சியை இங்கு கூற காரணம், இத்தனை வருடம் இல்லாத ஒரு ஆசை, இந்த முறை வந்தது. பெருமாளும், அகத்தியரும், அடியவர்களின் பூசையை ஏற்றுக் கொண்டார்களா, ஏதேனும் குறை அடியவர்கள் செயலில் இருந்ததா என தெரிந்துகொள்ளும், ஆவல் உந்தியது. அது கேள்வியாகியது.

அகத்தியரின் சேய்கள், அன்று அங்கு வந்து, ஆத்மார்த்தமாக செய்த செயல்கள் அனைத்தும், பெருமாளாலும், அகத்தியராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, என்பதை இதனால் தெரிவித்துக் கொண்டு, இருவரின் ஆசியும், உங்கள் வசம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

இனி கோடகநல்லூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம்.

எல்லையில்லா அருளை வழங்கும் பெருமாளும், கனிவான தகப்பனும், போன வருடம் போலவே, இந்த முறையும், அடியேனை தனியாக ஓடவிட்டு, ஒரு வழி பண்ணிவிடுவார்களோ என்கிற எண்ணத்தில், ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பின் தான் கோடகநல்லூரை பற்றி நினைப்பது, விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டேன். அதன்படி, கோடகநல்லூர் "அந்த நாளுக்கு" மூன்று வாரங்களுக்கு முன், அங்கே சென்று விளக்கு போட்டுவிட்டு பெருமாளிடம் "இந்த முறையும் தங்களுக்கான அகத்திய பெருமானின் பூசை மிகச்சிறப்பாக நடக்கவேண்டும். வருகிறவர்களுக்கும், வர முடியாமல் போனவர்களுக்கும் எந்த பாரபட்சமும் இன்றி தாங்கள் அருளவேண்டும். அகத்திய பெருமான் வந்திருந்து அந்த நாள் பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தரவேண்டும்!" என பிரார்த்தித்து விண்ணப்பித்தேன்.

அன்றிரவு, பள்ளியறை பால் பிரசாதம் கொடுக்க வந்த அர்ச்சகர், மெதுவாக, அடியேனிடம் வினவினார்.

"ஏதாவது விண்ணப்பம், பெருமாளிடம் போட்டீர்களா?" என்றார்.

அடியேன் சிரித்துக்கொண்டே, "என்ன பதில் சொன்னார்" என வினவினேன்.

"இந்த முறை தாமிரபரணி புஷ்கரமும் இந்த பூசையினூடே வருவதால், மிகச்சிறப்பாக அகத்தியரின் பூசை அமையும். எதற்கும் கவலை வேண்டாம் என வாக்குரைத்தார்" என்றார்.

"இது போதும். இனி முழு வேகத்தில் ஏற்பாடுகளை கவனிக்கலாம்!" என்றேன்.

"இன்னொரு தகவலும் கூட. அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், உங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை, விட்டுக்கொடுக்கச் சொன்னார்" என்றார்.

"என்ன! பெருமாள் இப்படிச் சொல்லிவிட்டார்! என்று அடியேன் நான் மட்டும் என்று நினைத்திருக்கிறேன். போன வருடம் "நீ மட்டும்தான் எனக்காக ஓடுவாய்" என முன்னரே பெருமாள் உரைத்தது போலவே நடந்ததால், அனைத்தும் கவனிக்க வேண்டி வந்தது. சரி! எனக்கு எதுவும் வேண்டாம். ஏற்பாடுகளை பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்." என அவர் சன்னதி முன் நின்று சத்தியம் செய்துவிட்டு, வந்துவிட்டேன்.

அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளுக்கு தேவையான விஷயங்களை, பட்டியலிட்டு, பலருக்கும் பிரித்து கொடுத்து, விவரித்த பின், ஒரு சில விஷயங்களை அடியேன் ஏற்றுக்கொண்டேன்.

உள்மனதுள் என்னவோ ஒருசிந்தனை. சரியான நேரத்துக்கு, பிரச்சனையை கிளப்பிவிட்டு, பெருமாள் எங்கேனும் தடங்கல் ஏற்படுத்துவாரோ என்ற எண்ணம், மெல்லிய நூலிழையாக உள்ளே அசைந்து கொண்டிருந்தது.

"சரி! பிரச்சினையை, அதுவாக வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்" என்ற என் பழைய மனநிலைக்கு, திரும்பினேன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

Thursday, 25 October 2018

சித்தன் அருள் - 774 - 22/10/2018 - அந்தநாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய தினம் (25/10/2018) காலையில் தொகுப்பை பதிவிட முடியவில்லை. கோடகநல்லூரில், இறைவனும், அகத்தியப்பெருமானும், அடியவர்களும், ஒன்று சேர்ந்து நடத்திக் கொடுத்த "அந்த நாளின்" நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு முன், அகத்தியப்பெருமானை பாலராமபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலில் தரிசித்து, விளக்கு போட்டு நன்றி கூறிய பின், எழுதுவதே சரி என்று அடியேன் மனதுக்கு தோன்றியதால், இதோ, இப்பொழுதே புண்ணிய யாத்திரை பயணம் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அங்கு சென்று அவருக்கு நன்றியை, உங்கள் அனைவர் சார்பாகவும் தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன். எல்லாம் அகத்தியர் அய்யன் செயல். நிறைய விஷயங்கள் தெரிவிக்க வேண்டி இருக்கிறது. சற்று, பொறுங்கள். சென்று வந்துவிடுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்........... தொடரும்! 

Tuesday, 23 October 2018

சித்தன் அருள் - 773 - கோடகநல்லூர் - 22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கோடகநல்லூர் - ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவப் பெருமாள் கோவிலில், நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமான் நடத்திய பெருமாளுக்கான ஆராதனைகள் மிகச் சிறப்பாக 22/05/2018 அன்று நடைபெற்றது. அந்த நாளின் நிகழ்ச்சிகளை பின்னர் ஒரு   தருகிறேன். முதலில்,  தினம் எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

[ ஸ்ரீ தாமிரபரணி நதி, கோடகநல்லூர்]

[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், சென்னையிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]
[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், பாண்டிச்சேரியிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு திருநீர் அபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் தாமிரபரணியில் நீராடல்]
[ஸ்ரீ தாமிரபரணி ஸ்நானத்துக்குப் பின் படித்துறையில் எழுந்தருளல்]
[ஸ்ரீ தாமிரபரணி தாய்க்கான தாம்பூலத்திற்கு அகத்திய பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் வேண்டுதல்]
 [பெருமாள் அபிஷேகத்தை/பூசையை காண வந்திருந்த அகத்தியர் அடியவர்கள்]


 [ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன் மாதவர்]
 [அபிஷேகத்துக்கான கலச பூசை]
[பெருமாளுக்கு அபிஷேகம்]

சித்தன் அருள்........... தொடரும்!


Thursday, 18 October 2018

சித்தன் அருள் - 772 - கோடகநல்லூர் - 22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

வருகிற திங்கட்கிழமை, 22/10/2018 அன்று, அந்தநாள்>>இந்த வருடம் - 2018 - கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் பெருமாளுக்கு அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி, வருடத்தில் ஒரே நாளான ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், திரயோதசி திதி அன்று, பெருமாள், அகத்தியர் அருளுடன், செய்கிற அபிஷேக பூசை நடக்கவிருக்கிறது. "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூ வாசகர்களுக்கு, இந்த நிகழ்ச்சி அறிமுகமான ஒன்று.

அந்த நாளை பற்றி சுருகங்கக்கூறின் "எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள். அகத்தியர் அடியவர்களுக்கு, நல்ல அனுபவங்களை நிறைய கொடுக்கிற நாள். எளிமையாக இருந்தாலும், அன்று அங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவரவர் பிரச்சினைக்கு, தீர்வு அருளுகிற நாள்." என இப்படி எத்தனையோ விஷயங்களை கூறலாம்.

இத்தகு பெருமை வாய்ந்த அந்த நல்ல நாள் அன்று, உங்களை அனைவரையும், கோடகநல்லூருக்கு வந்து பெருமாளின், அகத்தியப் பெருமானின் அருளுக்கு பாத்திரமாகி, இனிமையாக வாழ்ந்திட வேண்டிக்கொள்கிறேன்.


சென்ற வருடம் போல், ஏதேனும் உழவாரப் பணி செய்கிற வாய்ப்பு கிடைத்தால், முடிந்தவரை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் வேண்டிக்கொள்கிறேன்.

அனைவரையும், அகத்தியப்பெருமானும், பெருமாளும் காத்து அருளட்டும் என பிரார்த்தித்துக் கொண்டு, "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளை" அடுத்த வாரம் தருகிறேன், என தெரிவித்துக் கொள்கிறேன்.

கோடகநல்லூருக்கான சித்தமார்கம் - திருநெல்வேலி >> சேரன்மாதேவி வழி தடத்தில் "நடுக்கல்லூரில்" இறங்கி, ஒன்றரை கி.மி நடந்து வந்தால், கோவிலை அடைந்து விடலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

சித்தன் அருள்.................. தொடரும்! 

Monday, 15 October 2018

சித்தன் அருள் - 771 - தாமிரபரணி புஷ்கரம் - கோடகநல்லூர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கோடகநல்லூர் நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவ பெருமாள் சார்பாக 12-10-2018 முதல் 14-10-2018 வரை தாமிரபரணி தாய்க்கு, சிறப்பான புஷ்கர பூசை நடை பெற்றது. முதல் இரண்டு நாட்கள் தாமிரபரணி நதிக்கரையில் யாகம் முதலியவை செய்து, தாமிரபரணிக்கு பூஜை நடை பெற்றது. இரண்டாவது நாள், பெருமாளுக்கு கருட சேவையும் நடத்தப்பட்டது.  மூன்றாவது நாள் (14/10/2018) அன்று மதியம் பெருமாள் நதிக்கரையில் அமர்ந்து, தாமிரபரணி பூசை செய்தபின், அவருக்கு நதி தீர்த்தத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த புஷ்கர விழாவை சிறப்பாக அமைத்திட வேண்டி, மூன்றாவது நாள் "தீர்த்தவாரி" என்கிற நிகழ்வும் நடந்தது. அந்த மூன்றாவது நாள் நிகழ்வை கண்டு, பங்கு பெறும் ஒரு வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் புஷ்கர பூசை என்பதால், அதில் கலந்து கொண்டதே, இந்த ஜென்மத்தில் அடியேனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன்.

கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில் சார்பாகவும் 10 நாட்கள் "தாமிரபரணி புஷ்கர" பூசை 21-10-2018 வரை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அங்கு வரும் அடியவர்களுக்கு, அனைத்து வசதிகளும், அந்த கோவில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14-10-2018 அன்று கோடகநல்லூர் வந்து சேர முடியாதவர்கள், 21-10-2018க்குள் ஏதேனும் ஒருநாள் சென்று ஸ்நானம் செய்து, இறைவனை தரிசித்து பேறுபெறலாம்.

14-10-2018 அன்று பெருமாள் தீர்த்தவாரியின் பொழுது எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

[பெருமாள் கருட சேவை]

[ சிவபெருமான் கோவில் படித்துறை]

[புஷ்கர விழாவிற்கு எழுந்தருளும் பெருமாள்]

[ பெருமாள்கோவில் படித்துறை- தீர்த்தவாரி]

[ அடியவர்கள் ]

[அடியவர்கள் - புஷ்கர தீர்த்தாடலுக்காக வந்தவர்கள்]


வருகிற 22/10/2018 அன்று, கோடகநல்லூர் ப்ரஹன் மாதவப் பெருமாள் கோவிலில், அகஸ்தியர் அடியவர்கள் ஒன்று கூடி செய்கிற பெருமாளுக்கான, அகஸ்தியரின் பூஜை நடக்கவுள்ளது. அந்தநாள் > இந்த வருடம், தாமிரபரணி புஷ்கர பூசை நிறைவு பெறும் 24ம் தியதிக்குள்ளேயே வருவதால், இப்பொழுது வர முடியாமல் தவித்த அகத்தியர் அடியவர்கள், அன்றைய தினம், பூசையில் கலந்து கொண்டு, இரண்டு பலன்களையும் பெறலாம்.

சித்தன் அருள்................ தொடரும்!

     

Thursday, 11 October 2018

சித்தன் அருள் - 770 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


"எத்தனையோ நல்ல விஷயங்களை, மிக எளிதாக உலகம் உய்யுற, மனிதன் மேம்பட வேண்டி கூறினீர்கள். இத்தனையையும் அல்லது இவற்றில் நிறைய விஷயங்களை ஒருவன் தன் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால், நிச்சயமாக சித்த மார்கத்தில் உயர்வான நிலையை அடைய முடியும். இல்லையா?" என்றேன்.

"நிச்சயமாக உயர் நிலையை அடைய முடியும். ஆனால், அந்த ஒருவன், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை பொருத்து இருக்கும். மனிதனை ஆட்டிப் படைப்பது, அவன் பௌதீக விஷயங்களில் செலுத்தும் கவனமும், அவற்றின் மீது வைக்கும் பற்றும் தான். சற்று முன் அவன் வசம் இருந்தது, அடுத்த நொடி இல்லாமல் போனால், மிகவே பதற்றமடைகிறான். அதற்கு காரணம், அது இருந்தால்தான், தன்னால் அடுத்த நிமிடம் வாழ்க்கையை நடத்த முடியும் என்கிற, அதை சார்ந்த மன நிலைதான். தெளிவுக்காக, ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்" எனக்கூறி சற்று யோசித்தார், பெரியவர்.

"10 மணிக்கு இருந்த ஒருவரை "அப்பா" அல்லது "அம்மா" என்றழைத்த மனிதன், 10.05க்கு அவர் உயிர் நீத்தால், பின்னர் அந்த உடலை "பிணமாகத்தான்" பார்க்கிறான். இல்லையா?"

"உண்மை! அவன் அப்படி அழைக்காவிடினும், அவனை சுற்றி இருக்கும் சமூகம் "எத்தனை மணிக்கு உடம்பை எடுக்க போறீங்க? என்றுதான் கேள்வி கேட்கும். என்னடா இது, என் தகப்பனை இவர்கள் இப்படி பேசுகிறார்களே, என்று கூட மனம் வருத்தப்படும்" என்றேன்.

"ஹ்ம்ம்! அதுதான் உண்மை. அன்று வரை வாழ்ந்த பொழுது, அந்த ஆத்மா, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தி, தன்னை அண்டியவரை கனிவுடன் அரவணைத்து, சென்றிருந்தால், அதனால் விளையும் புண்ணியத்துடன் மேல் நிலைகளுக்கு செல்லும், என்பதே உண்மை. இதைத்தான், சித்த மார்கத்தில் மனிதனுக்கு புரியட்டும் என்பதற்காக "எல்லோரும் பத்தே கால்" என சுருக்கமாக கூறுவோம்" என நிறுத்தினார்.

அந்த "பத்தேகால்" என்கிற வார்த்தை சுருக்கென என்னுள் புதைந்தது. மேலும் தெளிவாக வேண்டி அவரிடமே கேள்வியை எழுப்பினேன்.

"அதென்ன பத்தேகால்! சற்று விளக்குங்களேன்!" என்றேன்.

"இங்கு உறையும் அனைத்து ஜீவன்களுமே, "பத்தேகால்". உயிர் பிரிந்து வெற்றுடலான பின் மயானத்தில் எரித்தால் மிச்சம் கிடைப்பது, அந்த கால மதிப்பில் பத்து ரூபாய் மண் பானைக்குள் கால் கலமாகத்தான் இருக்கும். இதில் என்ன, உயிருடன் இருக்கும் பொழுது, நான், எனது, என் சொந்தம், சுற்றம், ஜாதி, வர்ணம் போன்றவை. ஒவ்வொருவரும் இதை உணரவேண்டும். அரசனே ஆயினும், ஆண்டியாயினும் "கால் கலம்" தான் மிஞ்சும். வாழும் போதே இதை உணர்ந்தவன், மிக பாக்கியசாலி. ஏன் என்றால், அவனிடம் நிம்மதி குடி கொண்டுவிடும், பற்றறுப்பது எத்தனை எளிது என உணருவான். சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலை அமையும், பதற்றம் போய்விடும், சித்தம் நிலைக்கும். அவனுக்கு, அது முதல் வாழ்க்கையே, ஒரு நல்ல தவமாக மாறிவிடும். தனியான பயிற்சிகள் அவனுக்கு தேவை இல்லை. பத்து மணிக்கு கோடீஸ்வரனாக இருந்தவன், எதை கொண்டுவந்தான்? 10.05க்கு பிணமானபின், எதை கொண்டு போகிறான்?  பௌதீகமாக எதுவுமே இல்லை என்பதே உண்மை. பின்னர் எதற்கு இந்த இரைச்சலான வாழ்க்கை வாழுகிறான், மனிதன்" என்றார்.

"இது முற்றிலும் உண்மை. ஆனால், ஒரு மனிதன் வாழ்வதே, வரும்கால தலைமுறைக்கு வேண்டித்தானே. அவர்களுக்காக சேமித்து வைக்க வேண்டும் என்பது, மனித வாழ்க்கையின் நியாயமான எண்ணம்தானே?" என்று எதிர் கேள்வி போட்டேன்.

"உண்மைதான். அதில் ஒன்றும் தவறில்லை. சேர்வதின் மீது வைக்கும் பற்றுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த பற்று, இறைவன் மீது வைக்க வேண்டிய கோணத்திலிருந்து விலகி, சொத்தின் மீது அடங்காத ஆசையாய் போன பொழுது, அவன் செயல்களில் இருந்த தர்மம், அதர்மமாக மாறிப்போகிறது. பின்னர் அவன் மனநிலையே மாறி, எவன் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. இதிலிருந்து, கலிபுருஷன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து எப்படி ஒருவனை கெடுக்கிறான் என்பது தெளிவாக புரியும்." என்று நிறுத்தினார். 

அடியேன், அமைதியாக அமர்ந்து, அவர் கூறியது உண்மை என்று உணரத்தொடங்கினேன்.

"ஆகவே, மனிதன் மேல் நிலைகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினால், முதலில், தன்னை இழக்க வேண்டும். இழப்பு என்று இங்கு கூறியது உடலை அல்ல. "நான்/எனது" என்கிற நினைப்பை. அது ஒருநிலை. அந்த நிலையை, எத்தனை சிரமங்கள் இருப்பினும், விடாது பிடிவாதமாக தொடர்ந்து சென்று ஒருவன் ஏறிவிட்டால், அந்த முதல் படியில் சோர்ந்து அமர்ந்திருந்தாலும், சித்தபெருமக்கள் வந்து கைநீட்டி, தூக்கிவிட்டு, அடுத்த நிலைக்கு அழைத்து செல்வார்கள். பின்னர் வாழ்க்கை இன்பமயமாகிவிடும், என்பதே உண்மை."

"பிரார்த்தனையை விட மிக உயர்ந்த ஒரு விஷயம் இவ்வுலகில் இல்லை", என சித்தர்களும், உங்களை போன்றவர்களும் உரைத்துள்ளார்கள். எத்தனையோ பேர்கள், எத்தனையோ முறை இறைவனிடம் பிரார்த்தித்து, மன்றாடியும், மனிதனுக்கு பிரச்சினை தீரவில்லையே. ஒன்று விட்டு ஒன்று என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், மேற் சொன்ன கூற்று, இந்த கலியுகத்துக்கு பொருந்தாதா?" என்றேன்.

சற்று நேரம், முகவாயை கையில் தாங்கி பிடித்தபடி இருந்தவர், ஒரு புன்னகையுடன் பேசத்தொடங்கினார்.

"இது எல்லா யுகத்துக்கும் பொருந்தும், வாசகம்தான். பிரார்த்தனை பலிக்காத அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், மனிதனுக்கு வெறுப்புதான் வருகிறது. ஆனால், அவன் செய்த தவறை, சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை. ஒன்று, சில சூழ்நிலைகள், இறைவனால் விதிக்கப்பட்ட கடமைகள் என்று உணராதது. இரண்டு, பிரார்த்தனையை சரியான முறையில் சமர்ப்பிக்காதது. மூன்று, விதி விலகி இடம் கொடுக்காதது. இவை தான் காரணம். விதி விலகாததும், கடமைகள் என்று உணராததும் ஆன சூழ்நிலைகள், சத விகிதத்தில் மிக குறைவு. 5% என வைத்துக் கொள்ளலாம். மீதி 95%மும் பிரார்த்தனையில் உள்ள தவறுதான் காரணம். உதாரணமாக, முன்னரே கூறினேன், "நான்/எனது" போன்ற உறவுமுறைகளை உண்மையாகவே ஆழ் மனதிலிருந்து விலக்கி, எல்லாமே உன்னுடையது, எல்லோருமே உன் குழந்தைகள் என்கிற உண்மையான தாத்பர்யத்துடன் சமர்ப்பித்தால், இறைவன் நிச்சயம் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவான். ஆனால், சிறிதளவு கூட, அந்த பிரார்த்தனையில், ஒரு பழுதும் இருக்கக்கூடாது. சோதனைகள் வரலாம், துவண்டுவிடக்கூடாது. முயற்சி செய்து பார்! உனக்கு விளங்கும்" என்றார். [பின்னர் ஒருமுறை, அவகாசம் கிடைத்தவுடன், இந்த பெரியவர் சொன்ன, இந்த கூற்றை பரிசோதித்து பார்த்தேன்! கிடைத்த அனுபவத்தை கண்டு அசந்து போனேன். அதை இன்னொரு சமயத்தில் தொகுத்து தருகிறேன்.]

"நேரம், காலம், சூழ்நிலை" இவை மூன்றும் அடங்கியதை சித்தர்கள் "நிமித்தம்" என்பார்கள். கேள்விப்பட்டிருக்கிறாயோ?" என்றார்.

"ஆம்! கேள்விப்பட்டிருக்கிறேன்! நிமித்தம், ஒரு சாஸ்த்திரமாயிற்றே! ஜோதிடத்தின் அங்கமாயிற்றே!" என்றேன்.

"சோதிடத்தின் ஒரு அங்கமாகவும் இதைக் கூறலாம்! சோதிடமின்றியும், நிமித்தம், தனித்தும் இயங்கும். இதை புரிந்து கொள்ள, கேள்வியை உள்ளுக்குள்ளே கேட்டுவிட்டு, சித்தம் நிலைத்து, அமைதியாக அமர்ந்து, சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்தாலே போதும், எனத்தெரியுமா?" என்றார்.

"அட! அப்படியா?" என்றேன்.

"ஆம்! ஆனால், கேள்விக்கான பதில் கிடைக்கும் பொழுது, அது சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், ஏற்றுக் கொள்கிற மனநிலை இருந்தால், அதன்படி நடந்து கொள்ள தயாராக இருந்தால், அந்த நிமித்தத்தை உரைக்கிற சக்தியானது, நிரந்தரமாக அந்த ஒருவனிடம் தங்கிவிடும். பின்னர் அவன் பொய் பேசமாட்டான், ஆசைப்பட மாட்டான், கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்ளமாட்டான்" என்றார்.

"ஒரே ஒரு எளிய "நிமித்த" சூழ்நிலையை கூறுங்களேன்" என்றேன்.

சித்தன் அருள்................ தொடரும்!

Sunday, 7 October 2018

சித்தன் அருள் - 769 - தாமிரபரணி புஷ்கரம் - தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தாமிரபரணி மஹா புஷ்கரம், இந்த மாதம் 11 அன்று குருபெயர்ச்சியின் பின் 22/10/2018 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல புண்ணிய ஷேத்ரத்திலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஏதேனும் ஒரு இடத்தில் புஷ்கர பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் அடியவர்களுக்காக, இடம், தூரம் போன்றவை குறிப்பிட்ட ஒரு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சென்று அகத்தியர், தாமிரபரணி தாயின் அருள் பெற்று, நலமுடன் வாழ்க.


சித்தன் அருள்..................தொடரும்!