​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 24 September 2015

சித்தன் அருள் -240 - "பெருமாளும் அடியேனும்" - 22 - அகஸ்தியப் பெருமானுக்கு வந்த சோதனை!


க்தர்களுக்கு அருளவே பகவான் நவீன கல்கி அவதாரம் போல் திருமலையில் குடிவந்தாலும், பகவானுக்கே நிறையச் சோதனைகளை அள்ளித் தந்தவன் "கலி" புருஷன்தான்.

இறைத்தன்மையை பூலோக மக்களிடமிருந்து பிரித்து, அவர்கள் அனைவரையும் அசுரகுணம் பெறவைத்து, அட்டகாசம் செய்யவே, கலிபுருஷன் துடித்தான். எனினும் அவனது முயற்சிகள் அத்தனையும் தரைமட்டமாயின.

ஒரு சிறந்த ரிஷியை எவ்வளவுக் கெவ்வளவு கொடுமைப் படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு கொடுமைபடுத்தினான். ஆனால் அதுவே ரிஷிக்கு பெரும் ஆதாயமாயிற்று. அந்த பக்தனான விருஷாசல முனிவருக்கு மிக உயர்ந்த அங்கீகாரத்தை, தன் முதல் மலைக்கு அவரது பெயரையே வைத்து, இறைவன் மகிழ்ந்தார்.

நாரதருக்கு ஒரு நப்பாசை!

ஏழுமலையில், முதல் மலைக்கு பெயர் சூட்டிய வேங்கடவன், மற்ற ஆறு மலைகளுக்கும் என்னென்ன பெயரை வைக்கப் போகிறார்? அதையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

எப்படியும் இதற்கு சிலகாலம் ஆகும். அதுவரை இப்படி பூலோக சஞ்சாரம் சென்று வரலாமே என்று நினைத்தார். துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லவேண்டும் என்று தோன்றிற்று.

யார் இதற்கு முற்றிலும் தகுதி உடையவர்? என்று எண்ணிப் பார்க்கும் பொழுது நாரதர் கண்ணில் தென்பட்டவர், அகத்தியப் பெருமான்தான்.

அகஸ்தியரை அணுகினார்.

"தாங்களோ மூவுலகும் சுற்றுகின்ற சஞ்சாரி. திருமாலுக்கு வேண்டியவர். எங்கு சென்றாலும் நாசூக்காகத் தப்பிவிட்டு வருகிறவர். என்னால் அது முடியாது. பொதிகை மலைக்குச் சென்று சிறிது காலம் தங்கி, தவமிருந்துவிட்டு வரலாம் என எண்ணுகிறேன், என்னை விட்டுவிடுங்கள்" என்றார் அகஸ்தியர்.

"நன்றாக சொன்னீர்கள். உங்களுக்கு இன்னும் விஷயம் தெரியாதா? இந்த வேங்கடமலைக்குப் பக்கத்தில் ஸ்ரீசைலம் என்னும் புண்ணிய ஸ்தலம் இருக்கிறதே, அங்கு சிவபெருமான், பார்வதி தேவியோடு சிறிதுகாலம் தங்கப் போகிறாராம்" என்றார் நாரதர்.

"அப்படியா? மிகவும் மகிழ்ச்சி!" என்றார் அகஸ்தியர்.

"கயிலாய மலைக்குச் சென்று கண்டு தரிசனம் பெற்று வருவதைவிட அருகிலிருக்கும் ஸ்ரீசைலத்திற்குச் சென்று விட்டால், சிவதரிசனம் அற்புதமாக கிட்டும். அவரைத் தரிசிக்கலாம் என்று எண்ணுகிறேன். நீங்களும் என்னுடன் வந்தால் மகிழ்ச்சி"என்றார் நாரதர்.

"சிவதரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!" என்றார் அகஸ்தியர்.

"அப்படியானால் இப்பொழுதே என்னுடன் வாருங்கள். நாமிருவரும் சென்று சிவதரிசனம் கண்டுவிட்டு, பின்பு அவரவர் பாதையில் சென்றுவிடலாம்" என்றார் நாரதர்.

"நியாயம்தான். எனினும், என் உள்மனது இன்னும் சிறிதுகாலம் இந்த திருமலையில் தங்கி, திருமாலின் விளையாடல்களைக் காணவேண்டும் என்று துடிக்கிறது. அதே சமயம் வசந்த காலம் வந்து விட்டதால், பொதிகை மலைக்குச் சென்று இயற்கையின் ஆனந்தத்தைக் காணவும் விரும்புகிறது" என்றார் அகத்தியர்.

"போதாகுறைக்கு, நான் ஸ்ரீசைலத்திருக்கு வேறு கூப்பிடுகிறேன். எனவே தாங்கள் மூன்று தலைக் கொள்ளி எறும்பு போல் துடிக்கிறீர்கள் என்று சொல்லும்" என நாரதர் கிண்டலடித்தார்.

"என்னது, மூன்று தலைக் கொள்ளி எறும்பா? புதியதாக இருக்கிறதே, சற்று விவரமாக சொல்லூம் நாரதரே!" என்றார் அகஸ்தியர்.

"சொல்கிறேன்! முதலாவது இந்தத் திருமலைக்கு தெய்வ தரிசனம் பார்க்க வந்தீர்கள். இரண்டாவது பொதிகை மலைக்குச் சென்று. இயற்கையை ரசிக்க விரும்புகிறீர்கள். மூன்றாவது உங்களால் சிவதரிசனத்தைக் காணாமலும் இருக்க முடியவில்லை. இப்படி தங்கள் மனமே அலைபாயும் பொழுது, மற்றவர்களுக்குக் கேட்பானேன்" என்று நாரதர் நிதானமாகச் சொன்னார்.

சில வினாடிகள், அகஸ்தியர் யோசித்தார்.

"இதில் என்ன யோசனை வேண்டிக் கிடக்கிறது? முதலில் என்னுடன் வந்து காணக் கிடைக்காத சிவபார்வதி தரிசனம் பார்ப்போம். பிறகு உங்கள் இஷ்டம். திருமலையில் இருந்தாலும் சரி, பொதிகைமலைக்குச் சென்றாலும் சரி" என்று மெல்ல ஆசையைத் தூண்டிவிட்டார் நாரதர்.

"சரி! நாரதர் சொன்னால் அது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும்" என்று எண்ணி, அகஸ்தியர் நாரத முனியோடு புறப்பட்டார்.

சில காத தூரம் மலையில் நடந்து சென்ற உடன்,

"யாரது அங்கே! நில் அப்படியே!" என்ற கர்ண கடூரமான வார்த்தையைக் கேட்டதும் நாரதருக்கும் அகஸ்தியருக்கும் வியப்பேற்பட்டது.

"யாரப்பா நீ? எங்கிருந்து பேசுகிறாய்?" என்று உரத்த குரல் எடுத்து கூப்பிட்டனர், இருவரும். ஆனால் அந்த மாயவனோ, வேறு எந்த வார்த்தைகளையும் பேசாமல் அவர்கள் இருவரின் மீதும் தன் முரட்டுக் கையை வைத்தான்.

அவனது கோரப் பிடியில் சிக்கிய நாரதரும், அகஸ்திய முனிவரும் தங்களது தவவலிமையால் சட்டென்று விடுவித்துக் கொண்டாலும் இந்த ஸ்ரீசைலக் காட்டில் தங்களைத் தடுத்து நிறுத்திய அந்த மலையொத்த ராக்ஷசனைக் கண்டு அதிரிச்சியுற்றார்கள்.

அடடா! இவன் அதிபயங்கரக் கொடுமைக்காரன் அல்லவா? எவருக்கும் பயப்படாத தன்மையுடையவன். இவன் எப்படி இந்த வனப்பகுதிக்கு வந்தான்? இவன் இருக்குமிடத்தில் யாரும் குடியிருக்க முடியாதே! இவனோடு சண்டை போட்டு மீளவும் முடியாதே! என்று ஒரு வினாடி கதிகலங்கிப் போனார்கள்.

அடுத்த வினாடி அவர்கள் முன்பு தோன்றிய "விருஷபாசலம்" என்னும் அரக்கன் கோரமாகச் சிரித்தான். அந்த சிரிப்பு ஸ்ரீசைலம் முழுவதும் மிகவும் பயங்கரமாக எதிரொலித்தது.

அகஸ்தியருக்கு நாரதர் மீது கடுங்கோபம்!

சிவதரிசனம் செய்யலாம் என்று அழைத்து வந்து பூலோகத்தின் மிகக் கொடியவனான "விருஷபாசலம்" முன்பு வந்து நிற்க வைத்தால்? - அவர் நாரதரைப் பார்த்தார்!

நாரதரும் அகஸ்தியரைப் பார்த்தார்!

"இது என்னுடைய தவறு அல்ல" என்று சொல்லும்படி இருந்தது! தன்னைத் தடுத்து நிறுத்திய விருஷபாசுரனைத் தன் கமண்டலத்திலிருந்த தண்ணீராலேயே அவன் மீது தெளித்து பஸ்பமாக்கியிருக்க முடியும். அகஸ்தியரால். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.

"யாரிவன் குள்ள முனி?" என்றான் அந்த அசுரன்.

"குள்ள முனியல்ல! கும்ப முனிவர் என்று மரியாதையோடு பேசு, விருஷபாசுரா" என்றார் நாரதர்.

"அப்படி மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம்?"

"சிவமைந்தன் இவர். சித்தர்களுக்கெல்லாம் தலையாயச் சித்தர். மூன்று தெய்வங்களைத்தான் நீ கேள்விப் பட்டிருப்பாய். இவர் நான்காவது தெய்வம். எனவே அடக்கிவாசி. மரியாதையோடு பேசு!" என்றார் நாரதர்.

"என்ன நாரதரே! நீங்கள் யாரோடு வாதாடுகிறீர்கள் என்பது தெரியுமா?" என்றான் அசுரன்.

"நன்றாகத் தெரியும். எல்லா உலகத்துக் கொடுமைகளையும் ஒன்று சேர்த்துப் பிறந்த விருஷபாசுரனிடம் தான் பேசுகிறேன்" என்றார் நாரதர்.

"நாரதரே! அது போதும் எனக்கு! என் இருப்பிடத்தில் என்னைக் கேட்காமல் எந்த ஒரு புழு, பூச்சியும் நுழைய முடியாது. இதையும் மீறி தாங்களும் இந்தக் குள்ள முனியும் நுழைந்து விட்டீர்கள்! தங்கள் நாரதராக இருப்பதால் உயிர் தப்பினீர்கள்" என்றான் அசுரன்.

"ஏன் இந்த இடத்தில் நுழையக் கூடாது? உனக்கென்ன இந்த இடம் ஈஸ்வரனால் உனக்கென்றே ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறதா? இது பூலோகம், நாங்கள் எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிப்போம். இதைத் தடுக்க உனக்கு உரிமை இல்லை" என்று அகஸ்தியர் சினம் கொண்டு பேசினார்.

"என்ன குள்ள முனியே! அளவுக்கு மீறி ஏதேதோ பேசுகிறீர்கள். இப்படி பேசிய நூற்றுக்கணக்கான முனிவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பாரும்" என்று சுட்டுவிரலை ஓரிடத்தில் சுட்டிக் காட்டி அட்டகாசமாய் சிரித்தான்.

நாரதரும் அகஸ்தியப் பெருமானும் அந்த "ராக்ஷசன்" சுட்டிக்காட்டிய இடத்தை எட்டிப் பார்த்தார்கள்.

அங்கே...............

சித்தன் அருள் .............. தொடரும்! 

Thursday, 17 September 2015

சித்தன் அருள் -239 - "பெருமாளும் அடியேனும்" - 21 - முதல் மலை விருஷாசலமானது!


​மறுநாள் விடியற்காலையில், யாரும் எதிர் பாராதவிதமாக வேத பண்டிதர்கள் மந்திரம் சொல்ல அரண்மனையில் சட்டென்று நடந்தது, விருஷாச்சலத்திற்கு பட்டாபிஷேகம்!

""இதெல்லாம் எனக்கு எதற்கப்பா! நீங்களே இந்தச் சிற்றூரின் குறுநில மன்னராக ஆட்சி செய்யுங்கள். நான் வடபகுதிக்குச் சென்று கயிலாயம், ரிஷிகேஷ், பத்ரிநாத் சென்று இறைவழிபாடு செய்துவிட்டு வருகிறேன். என்னை விட்டுவிடுங்கள்" என்று விருஷாசலம் மறுத்தான்.

ஆனால் பெற்றோர் பேச்சை மீற முடியவில்லை.

இளவரசனாக இருந்த விருஷாச்சலம் அன்று அந்த மாநிலத்தின் குறுநில மன்னராக மாறிவிட்டான் என்ற செய்தி பொதுமக்களுக்கு ஆனந்தத்தைத் தந்தாலும், எதற்காக மன்னர் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்தார் என்று விளங்கவில்லை.

"தூமகேது" தோன்றி மறைந்தால் மன்னர் உயிருக்கு ஆபத்து வரும் என்றுதான் மன்னர், அவசர அவசரமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

அருமையாக, ஆனந்தமாக, பொதுமக்கள் முன்னிலையில் நடக்கவேண்டிய இந்த பட்டாபிஷேக விழா, அரண்மனையில் சட்டென்று ஏன் ரகசியமாக நடக்க வேண்டும் என்ற சந்தேகமும் எல்லார் மனத்திலேயும் இருந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

விருஷாசலம் மன்னராக ஆனதால், தன் எதிர்காலக் கனவு நனவாயிற்று, என்று அவனது பெற்றோர் அகமகிழ்ந்து நள்ளிரவில் மன மகிழ்ச்சியாக இருந்த போது.............

மன்னர் பதவி கிடைக்காததால் வெறுப்புற்ற மன்னரின் மைத்துனரும், ராஜாங்க மந்திரியாக இருந்தவன், தன் அடியாட்களை விட்டு, அவர்கள் இருவரையும் படுக்கை அறையிலேயே வாளால் வெட்டி கொலை செய்துவிட்டான்.

மறுநாள்...........

அந்த சிற்றூர் எங்கும் பரபரப்பு. மன்னரின் அகாலமரணம், மகாராணியும் சேர்ந்து கொல்லப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவிற்று. இந்த படுபாதகமான செயலைச் செய்தவன் அந்த மந்திரிதான் என்பதும் தெரிந்துவிட்டது.

பொதுமக்களும், மன்னரின் விசுவாசிகளும், மந்திரியின் வீட்டை முற்றுகை இட்டனர்.  தான் செய்த குற்றம் மக்களுக்குத் தெரிந்து விட்டது, என்பதைக் கண்டு, இனியும் தான் தப்புவது முடியாது என்று உணர்ந்த அந்த மந்திரி, அவர்களிடமிருந்து தப்பிவிட அருகிலுள்ள மலை மீது ஏறி ஓடினான்.

பின்னால் திரும்பிப் பார்த்த பொழுது, பொதுமக்கள் தன்னைத் துரத்திக் கொண்டு வருவதைக் கண்டு பயந்து, மலையிலிருந்து கீழே குதித்தவன், பின்பு உயிரோடு எழுந்திருக்கவே இல்லை.

இதை எல்லாம் கண்டு வெறுப்படைந்த விருஷாசலம், இப்படிப்பட்ட அவலம் தனக்கு ஒரு போதும் வேண்டாம், என்றைக்கும் நிம்மதியாக இருக்க வேண்டுமானால், தான் சிம்மாசனப் பதவியை விட்டு, ஆன்மீக வாழ்க்கையை இப்போது முதலே மேற்கொள்வது, ஒன்றைத்தவிர வேறு வழியே இல்லை, என்று முடிவெடுத்தான்.

ஐந்து மந்திரிகளை நியமித்து அவர்களிடம் ராஜ்யத்தை பரிபாலனம் செய்ய சாசனம் எழுதி, நிறைய சட்ட திட்டங்களையும் பொதுமக்களுக்குச் சாதகமாக எழுதி வைத்தான்.

அரசன் என்ற பெயரை மட்டும் விருஷாசலம் பெற்றாலும், சின்ன வயதிலிருந்தே திருமால் பக்தியோடு பாரததேசம் எங்கும் நடந்தான். பல புண்ணிய நதிகளில் நீராடினான். திருமாலின் உள்ளத்திலும் புகுந்தான்.

தன் கடைசி காலத்தில் கோனேரிக் கரைக்கு வந்த விருஷாசலம், அங்கு பர்ணசாலை கட்டி, முனிவருடன் முனிவராக மாறி, சதாசர்வ காலமும் திருமாலின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே காலத்தை கழிக்கும் போது, கலிபுருஷன் கண்ணில் பட்டான், விருஷாசலம்.

முனிவர்க்கு முனிவராய், தவசீலனாய் விளங்கும் இந்த விருஷாச்சலத்தைத்தான் பல்வேறு வகையில் கலிபுருஷன் இம்சை செய்தான்.  தண்ணீரில் அமுக்கியும், பாறையை உருட்டியும் அவரைக் கொல்ல முயன்றான். எத்தனை இம்சைகள் செய்தாலும் விடாப்பிடியாக, திருமாலையே நினைத்து தவம் செய்த அந்த முனிவரைத்தான்.......

கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றிய திருமால், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தன் ஏழுமலையின் முதல் மலைக்கு "விருஷாசலம்" என்ற பெயரை மங்களமாக திருவாய் மலர்ந்தருளினார்.

நாரதப் பெருமான் இதை ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், ஏழு மலைக்கும், ஏழு பெயர் வைக்கவேண்டும். என்ன பெயர் வைக்கலாம், என்று யோசித்து இதனை திருமாலிடமே கேட்டுவிட, திருமால், தன் பரமபக்தனும், முன்னாள் குறுநில அரசனுமான விருஷாச்சலத்தின் பெயரை தன் முதல் மலைக்குச் சூட்டினார் என்ற வரலாறு இன்றுவரை நீடிக்கிறது.

சித்தன் அருள்.............. தொடரும்!

Friday, 11 September 2015

ஓதியப்பர் பிறந்தநாள் 09/09/2015 - ஒதிமலை அடியவர்கள் பார்வையில்!

[ ஓதியப்பர் கோவில், ஒதிமலை ]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அந்தநாள் - இந்த வருடம்" என்கிற தலைப்பில் ஓதியப்பர் என்கிற ஒதியங்கிரி குமார சுப்ரமண்யரின் பிறந்தநாள் 09/09/2015 புதன்கிழமை வருவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அன்று ஒதிமலையில் மிகச் சிறப்பாக "அகத்தியர் அடியவர்களால்" ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்கிற தகவல் கிடைத்தது. பல  அடியவர்களும் தொகுத்து அனுப்பிய மடலை உங்கள் முன் சந்தோஷமாக சமர்ப்பிக்கிறேன்.
 1. செவ்வாய் கிழமை 08/09/2015 அன்று ஓதியப்பருக்கு யாகம் நடத்தி 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது. வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அபிஷேக ஆராதனைகளை கண்டு அவர் அருள் பெற்றனர். பின்னர் கலச அபிஷேக தீர்த்தம் எல்லோருக்கும் வழங்கப் பட்டது.
 2. மறுநாள் புதன்கிழமை அன்று பிறந்த நாளை கொண்டாடவேண்டி இரவு அங்கு தங்கிய அன்பர்கள் "சித்தர்களின்" அருகாமையை, ஆட்டத்தை உணர்ந்ததாக கூறுகிறார்கள்.
 3. நாடு ஜாமத்தில் படி ஏறி வந்தவர்களுக்கு, பைரவர் துணை சென்றாராம். அவர்கள் நின்றால் நின்று, நடந்தால் நடந்து, மிகப் பொறுப்பாக, பத்திரமாக அவர்கள் மலை ஏறி உச்சி சென்றடைய உதவியாக இருந்தது, மிக ஆச்சரியமாக இருந்ததாம்.
 4. ஒரு நண்பரின் ஆணைப்படி, மூடி இருந்த கோவில் வாசல் படியில் ஒரு பாட்டில் தண்ணீரை ஒரு அன்பர் வைத்திருந்து புதன் கிழமை அன்று அதை குடித்துப் பார்க்க, அதில் பன்னீர், வெட்டிவேர் போன்ற அம்சங்களின் மணம் இருந்ததாக, மிக சுவையாக இருந்ததாக, தகவல். (நன்றி! அகத்தியப் பெருமானுக்கு உரியது!)
 5. ஒரு குழவில் வந்த ஒரு அகத்தியர் அடியவர் மூன்று நாட்களாக வாய்புண், தொண்டை புண்ணால் எதுவுமே சாப்பிட முடியாமல் தவித்திருக்க, அவருக்கு, அந்த தண்ணீரை குடிக்க கொடுத்திருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அரை மணி நேரத்தில், அவர் பூரண குணமடைய, அன்றைய தினம் நடந்த அன்னதானத்தில், காரமான உணவை, எந்த ஸ்ரமமும் இன்றி வயிறு நிரம்புகிற அளவுக்கு சாப்பிட்டாராம். (நன்றி! ஓதியப்பர், சித்தர்கள்).
 6. மெதுவாக ஒவ்வொரு குழுவாக சேர்ந்து வர, விடுமுறை நாள் ஆல்லாவிடினும், 200 முதல் 250 அகத்தியர் அடியவர்கள்/அன்பர்கள் அன்று ஓதியப்பர் பிறந்தநாளை கொண்டாட வந்திருந்தனர். அதில் வந்த அனைவரும் "அகத்தியரின் - சித்தன் அருளை" படித்தே வந்திருக்கிறார்கள், என்பது அவரது வலைப்பூவின் தாக்கத்தை உணர்த்துகிறது. (நன்றி! அகத்தியரே!).
 7. ஒரு குழுவில் வந்தவர்களுக்கு திடீரென "உழவாரப் பணி" செய்ய வேண்டும் என்ற அவா வர, நான்கு பேர்களாக சேர்ந்து கோவில் சுற்றுபுறம் முதல் கோவில் வெளி படி வரை பெருக்கி சுத்தம் செய்து, ஸ்ரமத்துடன் ஏறி வரும் பக்தர்களுக்கு, பாதையை சீர்படுத்தி கொடுத்தனர்.
 8. பின்னர் ஓரிருவர் கோவில் பிரகாரத்தில் "அங்க பிரதட்சிணம்" செய்ய, வந்து காத்திருந்த அகத்தியர் அடியவர்களும் அதில் கலந்துகொண்டு, ஓதியப்பர் அருள் பெற்றனர்.
 9. காலை 11 மணிக்கு பூசாரி வந்து, கோவில் நடை திறந்ததும் ஓதியப்பரின் திவ்ய தரிசனம்!
 10. தரிசனம் முடிந்ததும், அனைவரையும் அமரச் சொல்லி, நான்கு மணிநேரம் பூசை சடங்குகள் நடந்ததாம்.
 11. இடையில், அனைவரையும் சென்று, அன்னம் அருந்திவிட்டு வரச் சொல்ல, அன்று அங்கு வந்திருந்த அன்பர்களுக்கு பிறந்த நாள் அன்று அன்னதானத்தில் பங்கு கொண்டு, அவர் பிரசாதத்தை சாப்பிடுகிற பாக்கியம் கிட்டியது.
 12. "எண்ணை காப்பு" போட்டபின், அபிஷேகம் தொடங்கி, அரிசிமாவு, மஞ்சள் பொடி, மூலிகைப் பொடி, பஞ்சாமிர்தம், நெய், தேன், தயிர், பால், சந்தானம், பழச்சாறு,, பன்னீர், கடைசியாக விபூதியுடன் அபிஷேகம் நிறைவு பெற்று, அழகனே அதியழகனாக பிரதிபலிக்கும் அளவுக்கு அலங்காரம் பண்ணி, ஓதியப்பரை குளிரவைத்தனர். முழு அலங்காரத்துடன் ஓதியப்பர் ஜொலித்து நின்றதை காண, ஆயிரம் கண் போதா, கோடி கண்கள் வேண்டும் என்று ஒரு அடியவர் உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். (உண்மை! அழகுக்கு, அழகு செய்ததை காண அருள் பெற்றவர்கள் அன்றைய தினம் அங்கு கூடிய அகத்தியர் அடியவர்கள்!).
 13. கடந்த மூன்று வருடங்களாக, அவர் பிறந்த நாள் அன்று, எண்ணை காப்பு போடும் பொழுது தொடங்குகிற மழை இந்தவருடம் இல்லையாம்! ஓதியப்பரிடம் இதை பற்றி உத்தரவு கேட்க, அன்றைய தினம் நடந்த பூசை வழிபாடுகளை தான் திருப்தியாக ஏற்றுக் கொண்டதாக பதில் கொடுத்தாராம். (அட! அந்த பதிலை பெற்ற அந்த புண்ணியவான் யாரோ!)
 14. அதிலும், ஒரு வீட்டில் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டால் என்ன சூழ்நிலை இருக்குமோ, அந்த அளவுக்கு, ஓதியப்பரின் கோவிலில், ஒரு குடும்ப சூழ்நிலை இருந்ததை பலரும் உணர்ந்துள்ளனர்.
 15. தாமதமாகிவிட்டதே! எனக்கு ஓதியப்பரின் தரிசனம் கிடைக்குமா! என்ற கேள்வியுடன் மலை ஏறி வந்த ஒரு அன்பருக்கு, அவர் வந்த பின் நடை திறந்து, ஓதியப்பர் அபிஷேகத்தை காண முடிந்ததுடன், போதாதென்று, ஓதியப்பருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது, திடீரென்று, அகத்தியப்பெருமான், அருணகிரி நாதர் சிலைகளை அவர் (ஓதியப்பர்) முன் வைத்து அபிஷேகம் செய்தது, பார்க்கவைத்தது, நாங்களும் இருக்கிறோம் என்பதை உணர்த்தியதாக ஒரு அன்பர் கூறியுள்ளார். (அகத்தியர் குழந்தைகளுக்கு, இது அவருடைய ஆசிர்வாதம் தான்!).
 16. இறையருள் அன்று பரிபூரணம் என்று உணர்ந்தாலும், அபிஷேக பூசை முடிந்ததும் பல அன்பர்கள், கருடர் வந்து தரிசனம் செய்ததை கண்டிருகின்றனர். (உண்மை! பல நாட்கள் அபிஷேக நேரத்தில் கருடர் வந்து மூன்று முறை கோவிலை சுற்றி விட்டு செல்வதை பல ஓதியப்பர் அடியவர்களும் கூறியதை, கேட்டிருக்கிறேன்!).
 17. ஓதியப்பர் உத்தரவின் பேரில், முதல் முறையாக, அன்னதானத்துடன், இந்த வருட பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி. இது மேன் மேலும் தொடரவேண்டும்!
 18. தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தின் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் அவர் அருள் பெற்றதுடன், திருப்தி, அமைதி அருளப் பெற்று சென்றனர் என்பது மிகக் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு விஷயம்.
​மிக்க மகிழ்ச்சி! மன நிறைவு! எப்போதும் இது நிலைக்க ஓதியப்பரை வேண்டிக் கொள்கிறேன்!

[ ஓதியப்பர் ]

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!​

​கார்த்திகேயன்!​

Thursday, 10 September 2015

சித்தன் அருள் -238 - "பெருமாளும் அடியேனும் - 20 - விருஷாசலம்!"


திருமலையில் எத்தனை எத்தனையோ விசித்திரமான அதிசயங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கலிபுருஷன் தன் அசுரத்தனமான சக்தியால் பூமியிலுள்ள மனிதர்களது புத்தியை கெடுத்துக் கொண்டிருந்தான். நிறைய பேர் இன்றும் விவரம் தெரியாமல், கலிபுருஷனால் தாங்கள் யார்? என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் நல்லது என்று நினைத்து தினமும் பல்வேறு தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஒரு வினாடி வேங்கடவனை பற்றி நினைத்து சரணாகதி அடைந்து விட்டால் அவர்கள் புனிதமான நல்வாழ்வைப் பெற்று விடுவார்கள். இதில் சந்தேகமில்லை! ஆனால் கலிபுருஷன் சும்மா விடுவானா?

திருமலை தோன்றுவதற்கு முன்பு, அதன் அருகில் ஒரு சிற்றூர்  இருந்தது. சகலவிதமான இயற்கைச் செழிப்புகளுடன் சிறந்து விளங்கிய அந்தச் சிற்றுரையும் அதன் சுற்றுப் புறங்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு ஒரு அரசன் அரசாட்சி செய்து வந்தான்.

அந்த அரசனுடைய பெயர் விருஷாசலம்.

அதிகம் கல்வி கற்கவில்லை என்றாலும் இயற்கையிலேயே அவனுக்கு இறைஞானமும் புத்திசாலித்தனமும் அளவுக்கு மிஞ்சி இருந்தது. அதோடு மட்டுமின்றி அவனுக்கு இரக்க குணமும் குறைவில்லாமல் இருந்தது.

ஒரு குறுநில மன்னருக்குரிய தகுதி இல்லையே, பிற்காலத்தில் இவன் எப்படி இந்தச் சிற்றூரை ஆளப் போகிறான், எதிரிகளை எப்படி புறமுதுகிட்டு விரட்டி அடிக்கப் போகிறான் என்ற கவலை விருஷாச்சலத்தின் பெற்றோருக்கு இருந்து வந்தது.

அவனது பெற்றோர், சதாசர்வ காலமும் பெருமாள் த்யானத்திலேயே இருந்து வந்த விருஷாச்சலத்தின் எதிர்காலத்தைப் பற்றி மந்திரியையும், எதிர்காலத்தைப் பற்றி உரைக்கும் சோதிடவித்தகர் ஒருவரையும் அழைத்துக் கேட்டார்கள்.

சோதிடர், விருஷாச்சலத்தின் ஜாதகக் குறிப்பை ஓலைச்சுவடியில் பார்த்து விட்டு "தனுசு ராசியில் சிம்ம லக்னத்தில் பிறந்த இவன் நாடாளுவதை விரும்பான். காடாள்வதைத்தான் அதிகம் விரும்புவான். எனவே, இவனை நம்பி அரசாட்சியை ஒப்படைப்பது நல்லதல்ல" என்று சொன்னார்.

விருஷாச்சலத்தின் பெற்றோர் அதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள்.

"இதற்கு மாற்று வழி என்ன? என்ன பரிகாரம் செய்தால் என் மகன், மனம் திருந்தி இந்த குறுநிலத்தை ஆளமுடியும்?" என்று கேட்டனர்.

"என்ன பரிகாரம் செய்தாலும் விருஷாசலம் நாட்டை ஆள்வது கடினம், விட்டுவிடுங்கள்" என்றார் சோதிடர்.

"எப்படி விடமுடியும்? ஏராளமான சொத்துக்களும், கள்ளம் கபடம் அறியாத ஊர் ஜனங்களும் இந்த விருஷாச்சலத்தை நம்பி இருக்கின்றனர். எங்களுக்கு வேறு எந்த வாரிசும் இல்லையே!" என்று கவலைப் பட்டுக் கேட்டபொழுது மந்திரி சொன்னார்.
​​
"அரசே! இதற்குப் போய் தாங்கள் ஏன் விசனப்படவேண்டும்? இளவரசன் அப்படியே தன் விருப்பப்படியே இறைபணியைச் செய்து வரட்டும். தங்களுக்குப் பிறகு தாங்கள் விரும்பினால் இளவரசர் சார்பில் நானே இந்தச் சிற்றூரை ஆண்டு வருகிறேன்! என்ன சோதிடரே! நான் சொல்வது சரிதானே" என்று மந்திரி தன் கபட எண்ணத்தை மெதுவாக வெளியே சொன்னார்.

"அதெப்படி? இளவரசன் இருக்கும் பொழுது, மந்திரி எப்படி ராஜ்ய பரிபாலனத்தை நடத்த முடியும்? இதற்கு நான் ஒரு போதும் உடன் படமாட்டேன்" என்று விருஷாச்சலத்தின் தந்தை கொதித்தார்.

"சோதிடரே! என் ஜாதகத்தில் அப்படித்தானே எழுதியிருக்கிறது?" என்று அதிகாரத் தோரணையில் அவர் பக்கம் பார்த்து மிரட்ட மந்திரியின் கோபத்திற்குப் பயந்து சோதிடரும் தலையை மேலும் கீழுமாக அசைத்தார். ஆனால் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

"இது முக்கியமான சமாசாரம். எனவே நான் இங்கு பேசுவதைவிட, மற்ற மந்திரிகளோடு கலந்தாய்வு செய்து, அரச சபையையும் கூட்டி, இந்த ராஜாங்கத்தின் மீது விஸ்வாசம் கொண்ட மக்களின் அபிப்பிராயத்தையும் ஒரு முகமாகக் கேட்டறிந்து  பின்பு எதிர்கால ராஜ்ய பரிபாலனத்தைப் பற்றித் தீர்க்கமாக முடிவெடுப்போம்" என்று குறுநில மன்னரான விருஷாச்சலத்தின் தந்தை ஆலோசனை கூறினார்.

"அரசே! எனக்கு அரசு பதவி முக்கியமல்ல. தங்களது வம்சம் விருஷாச்சலத்தொடு முடிந்து விடக் கூடாது, என்ற நன்னோக்குடன் தான் சொன்னேன். அதுமட்டுமில்லை, இனிமேல் விருஷாச்சலத்திற்குத் தம்பியோ, தங்கையோ பிறக்கப் போவதில்லை. மேலும் எனக்கு இந்த அரசுப் பொறுப்பிலும் உரிமை உண்டு" என்றார் மந்திரி.

"எதைவைத்துச் சொல்கிறாய்?" ராணி சீறினாள்.

"தாங்கள் என் தமக்கை அல்லவா? உங்களுடைய தம்பியாகிய எனக்கு, இந்த அரச சபையில் முக்கிய மந்திரி பதவியைக் கொடுத்தீர்கள். அதை ஞாபகப்படுத்தினேன். அதுமட்டுமல்ல, முன்பொரு சமயம் பக்கத்து நட்டு மன்னர் நம்மோடு போர் தொடுத்த போது, தாங்கள் கணவரை, அதாவது, இந்தக் குறுநில மன்னரை, காட்டிற்குள் இழுத்து சென்று காப்பாற்றினேன். அதற்கு பரிசாக எதை வேண்டுமானாலும் தருவதாக அன்றைக்கு வாக்குறுதி அளித்தீர்கள். போதாக்குறைக்கு இளவரசனோ, சதாசர்வகாலமாக "நாராயணா! நாராயணா! என்றே காலத்தை கழிக்கிறான். இவன் எப்பொழுது சிற்றரசனாக மாறப் போகிறான்? ஆகவே............

"உனக்கு ராஜபரிபாலனத்தைத் தந்துவிட்டு இளவரசர் விருஷாலத்தைக் காட்டிற்கு அனுப்பிவிடவேண்டுமாகும்?"

"அது உங்கள் இஷ்டம்!" என்றார் மந்திரி.

"மந்திரியாக உன்னை நியமித்ததே தவறு. சோதிடத்தை நம்பி, இந்த சோதிடரை அழைத்துப் பேசியதும் தவறு."

"அப்படியென்றால்?"

"இந்த வினாடியிலிருந்து உன்னை மந்திரி பதிவியிலிருந்து நீக்குகிறேன். இன்னும் இரண்டு நாள்களுக்குள் இந்த ஊரைவிட்டு வெளியேறவேண்டும்" என்றார் மகாராஜா.

மந்திரியான அந்த ராஜாவின் மைத்துனன், அதைக் கண்டு சிறிதும் பயப்படவில்லை. தன்னுடன் அழைத்து வந்த சோதிடரையும் தன்னோடு அழைத்துச் சென்றான் கோபத்தோடு.

சித்தன் அருள்............. தொடரும்.

Thursday, 3 September 2015

சித்தன் அருள் - 237 - "பெருமாளும் அடியேனும் - 19 - பெருமாளின் திருவிளையாடல்!


தங்களது தலைமை குருவை தங்கள் கண் எதிரேயே கொன்ற கலிபுருஷனை நோக்கி, அங்குள்ள தவசீலர்கள் பெரும்பாலோரே கை எடுத்து கும்பிட்டபடி, பயத்துடன் வந்தனர்.  அவர்களை அலட்சியமாகப் பார்த்தான் கலிபுருஷன்.  அவனது பார்வை "என்ன வேண்டும்?" என்று கேட்பது போல் இருந்தது.

"நாங்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவிட்டு போய்விடுகிறோம். அதுவரை எங்களை ஒன்றும் செய்யாதே என்று" பயந்து கேட்டனர்.

"சாதுர்மாஸ்ய விரதம் எத்தனை நாட்களுக்கு?"

"குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு" என்றனர்.

"எதற்காக விரதம்?"

"பகவானை நோக்கி பிரார்த்தனை செய்ய"

"எந்த பகவானை நோக்கி?" என்று கிண்டலாக கேட்டான் கலிபுருஷன்.

இதற்கு பதில் சொல்ல முடியாத முனிவர்கள், ஒருவருக்கொருவர் மௌனமாக பார்த்துக் கொண்டனர்.

"சாதுர்மாஸ்ய விரதமல்ல, எந்த விரதமும் நீங்கள் இங்கு இருக்கலாம். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன். ஆனால் அத்தனை விரதமும் என் பெயரால் செய்யப் படவேண்டும்! இல்லையென்றால், உங்கள் ஆஸ்ரமத்தில் தீ வைக்கப்படும். இந்த கோனேரி நதியை பிரவாகமேடுக்கச் செய்து இங்கு இருக்கிற பர்ணசாலைகளை அடித்துக் கொண்டு போகவைப்பேன். என்ன சொல்கிறீர்கள்?" என்று கர்ஜித்தான்.

முனிபுங்கவர்களுக்கு, விழி பிதிங்கிற்று இதைக் கேட்டதும். மனதிற்குள், கலியுக தெய்வமாய் எங்களை காப்பாற்ற வந்த வேங்கடவா இவனை அடக்கி ஒடுக்கி எங்களை வாழ வைக்க மாட்டாயா? எங்களை கொடுமை படுத்துகிறானே! இதெல்லாம் எங்களுக்கு தேவையா?" என்று கதறினர்.

முனிபுங்கவர்களின் ஆத்மார்த்தமான சரணாகதி கோஷம் திருமாலுக்கு எட்டியது.

அடுத்த வினாடி, பிரம்மாண்டமான விஸ்வரூபம் எடுத்து, காற்றாக அங்கு வந்தார், வேங்கடவர்.

வருகின்ற வேகம் எவ்வளவு என்று யாராலும் கணக்கிட முடியவில்லை.

அந்த அசுரக் காற்றால், கலிபுருஷன் நிலை குலைந்து போனான்.  இன்னும் சில நாழிகை அங்கு தங்கி இருந்தால், தன்னுடைய உயிர் பறிக்கப் பட்டுவிடுமோ? என்ற பயம் கலிபுருஷனுக்கு ஏற்பட்டது.  இனியும் இங்கிருந்தால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று கலங்கியவன், சட்டென்று அங்கிருந்து காணாமல் போனான்.

விஸ்வரூபமெடுத்து, காற்றாய் வந்த திருமாலை கண்டு, முனிபுங்கவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

கலிபுருஷனுடய தாக்கத்தால் திண்டாடிக் கொண்டிருந்த முனிவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினார்கள்.

தன்னோடு வந்த நாரதப் பெருமானை வைத்துக் கொண்டு, திருமால், அந்தக் கோனேரிக் கரையிலுள்ள முனிவர்களிடம் அசரீரி வாக்கு போல பேசினார்.

"கலிபுருஷன் ராஜ்ஜியம் இது.  யாரை எந்த ரூபத்தில், எப்படிக் கெடுப்பான், நாட்டில் அதர்மத்தை எப்படி பெருக்குவான் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், என்னை நோக்கி கடுமையாக பிரார்த்தனை செய்தால், அவர்களை இந்த கலிபுருஷனிடமிருந்து நிச்சயம் காப்பாற்றுவேன். கலிபுருஷனது ஜென்மம், இப்பொழுதுதான் ஆரம்பம் ஆகியிருக்கிறது. அவனை வளரவிட்டு, அவனை மெல்ல மெல்ல பாபங்களின் மொத்த சொருபமாக மாற்றி, அவனே அறியாமல், உச்சாணிக் கொம்பிற்கு சென்ற பின்தான், அவனை கொல்வேன். இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இது காலத்தின் கட்டளை. நான் எதையும் முறைப்படியாகத்தான் செய்வேன்" என்று வாய் திறந்து பகவான் சொன்னார்.

அப்பொழுது, அங்கிருந்த ஒரு முனிவர் சற்று முன்னர் நடந்த நிகழ்வைச் சொல்லி அநியாயமாக ஒரு தவசீலரை கண் எதிரே துடிக்கக் துடிக்க கொன்றதை சுட்டிக்காட்டி, பகவான் குடியிருக்கும் அடிவாரத்தில் இப்படியொரு துக்க சம்பவம் நடந்துவிட்டதே என்று வருந்தினார்.

இதைக் கேட்டதும், பகவான் சிரித்தபடியே சொன்னார் 

"என்னை சரணடைந்தவரை நான் ஒருபோதும் கை விடுவதில்லை. இதுவரை விட்டதில்லை. நீங்கள் நினைக்கிறபடி அந்த மகா உத்தமர், கலிபுருஷனால் கொல்லப்பட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்தினேன். இதில் கலிபுருஷனுக்கு சந்தோஷம். அவ்வளவுதான்.  ஆனால், அந்த மகா ஞானி பூமாதேவியால் காப்பாற்றப்பட்டு பத்திரமாக இருக்கிறார். அவருக்கு ஏன் இந்த சோதனை என்று எல்லோரும் நினைக்கலாம். கேட்கலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு.

சிறிது காலத்திற்கு முன்பு என்னை நோக்கி அவர் பிரார்த்தனை செய்த பொழுது, தன் பெயரால் இந்த ஏழு மலைகளில் ஒரு மலை, காலம் காலமாக பெருமையுடன் அழைக்கப்படவேண்டும். அதற்காக, தான் எவ்வளவு கொடிய துன்பத்தையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். அவருடைய பக்தியை நான் நன்றாகவே அறிவேன்.  ஆனால் கேட்ட உடனே அவர் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டால் பூலோகத்தில் யாரும், உண்மையாக, பொறுமையாக பக்தியுடன் இருக்க மாட்டார்கள்.

துன்பங்களை தாங்கும் சக்தியை பெற்ற பின்புதான் தூய பக்தி வரும். அந்த முனிவருக்கும் சோதனையை கலிபுருஷன் வழி கொடுக்க நினைத்தேன். கச்சிதமாக கலிபுருஷனும், அந்த முனிவருக்கு சோதனையை கொடுத்தான். அவரும் இதனை பற்றி பயப்படாமல் சதா சர்வகாலமும் அசையாத பக்தி வைத்தார். கலிபுருஷனால் அவர் கொல்லப்படுவார் என்பது எமக்கு முன்பே தெரியும். அதனால்தான் பூமாதேவியிடம் சொல்லி, யாம் அந்த பக்தனை காப்பாற்ற ஏற்பாடு செய்தோம். எனவே யாரும் பயப்படவேண்டாம். அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து காப்பாற்றுவதற்காகத்தான் திருமலையில் வேங்கடவனாக அவதாரம் எடுத்திருக்கிறேன்" என்று எல்லா முனிவர்கள், ரிஷிகள், நாரதர் முன்னிலையில் திருமால் அசரீரியாக கூறினார்.

இதனை கேட்ட கொனேரிக்கரையில் உள்ள அத்தனை பேர்களும் புளங்காகிதம் அடைந்தனர்.

பகவானின் கருணையே கருணை, என்று சந்தோஷப்பட்டனர்.

இருப்பினும் கலிபுருஷனால் துன்புறுத்தப்பட்ட அந்த முனிவரை மறுபடியும் தங்கள் கண்ணால் பார்க்கவேண்டும் என்ற வேட்கையும், கலி புருஷனால் நிர்மூலமாக்கப்பட்ட கோனேரிக்கரையின் முனிவர்களது குடில்கள், பர்ணசாலைகள், நந்தவனம் ஆகியவைகள் புதுப்பிக்கப் படவேண்டும் என்கிற தாகமும் இருந்தது. இதை சூட்சுமத்தால் உணர்ந்த வேங்கடவன், அடுத்த வினாடியே அந்த முனிவரை பூமாதேவி மூலம் பூலோகத்திற்கு கொண்டு வந்து, அனைவருக்கும் காட்டினார்.

அப்போது கூட அந்த முனிவரின் உதடுகள் "கோவிந்தா, கோவிந்தா" என்று ஜெபித்துக் கொண்டிருந்தன.

நாரதர், பெருமாளிடம் மென்மையாக கேட்டார்.

"இந்த தவசீலரை காப்பாற்றினீர்கள். நன்றி. அவர் ஆசைப்பட்டாரே தன் பெயரால் இந்த மலை நிலைக்க வேண்டும் என்று, அவரது விருப்பத்தை நாராயணன் நிறைவேற்றுவாரா?' என்றார்.

"நாரதரே. இந்த குறும்புத்தனத்தை யாம் அறிவோம். கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றிய இந்த தவசீலரின் பெயர் இந்த ஏழுமலையின் முதல் மலையின் பெயராக, இன்னும் சிலகாலத்தில் மங்களாசாசனம் செய்து சூட்டப்படும். அது மட்டுமல்ல, அந்த மலை, ஆதிசேஷனின் முதல் தலையாக இருப்பதினால், யாரெல்லாம் மலை மீது ஏறி, என்னை தரிசிக்க வருகிறார்களோ, அவர்கள் அத்தனை பேரும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த அனைத்து தவறுகளும் மன்னிக்கப்பட்டு, அவர்களை மோட்சத்திற்கும் அனுப்பி வைப்பேன்" என்றார் வேங்கடவன்.

எதற்காக, நாரதர், திருமாலைத் தேடி, திருமலைக்கு வந்தாரோ, அந்த எண்ணம் பூர்த்தியாயிற்று.

சித்தன் அருள்................. தொடரும்!