​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 29 January 2015

சித்தன் அருள் - 209 - நவக்ரகங்கள் - செவ்வாய் (அங்காரகன்)


கோயில்களில் காணப்படும் வீரபத்திரரே அங்காகரன் என்று சொல்வதுண்டு. வீரபத்திரரின் பிறந்தநாள், செவ்வாய்க்கிழமை ஆகும்.

பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர், செவ்வாய். அவந்தி நாட்டிற்கு அதிபதி. வேல், கதை, சூலம், கட்கம் வைத்துள்ள நான்கு கைகளை உடையவர்.

அக்னி நிறத்தோடு காணப்படும் சிவந்த ஆடை, செந்நிறப்பூவையும், பவளத்தையும் அணிந்தவர்.

எட்டு சிவப்பு ஆடுகள் பூட்டிய ரதத்தில் ஏறி, மேருமலையை வலம் வருபவர். இவருடைய மகிழ்ச்சி நமக்கு கிடைக்க வேண்டுமானால், பூமாதேவியையும், முருகப் பெருமானையும் தினம் வலம் வந்து த்யானிக்க வேண்டும்.

இவருடைய இருப்பிடம் சூரியனுக்குத் தெற்கில், திரிகோண மண்டலத்தில் தெற்கு முகமாக வீற்றிருப்பவர், என்று வரலாறுகள் கூறுகின்றது.

சிவபெருமான் யோகத்திலிருந்த பொழுது, அவருடைய நெற்றிக் கண்ணில் வியர்வை உண்டாகி அது பூமியின் மீது விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் ஆண் குழந்தையாக மாறியது. பூமாதேவி அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தாள். முருகப்பெருமானின் சகோதரர் இவர் என்பதால் "செவ்வாய்" என்ற, அங்காரகனை முருகப் பெருமானின் அம்சமாக வளர்த்து வந்தார் என்பதும் ஒரு புராணக் கதை.

மற்றொரு கதையும், செவ்வாயை பற்றி கூறப்படுவதுண்டு.

பாரத்வாஜ மகரிஷி நதி தீரத்தில் மிக அழகான ஒரு பெண்ணைக் கண்டார். அவளது அழகும், சொந்தர்யமும், பரத்வாஜ மகரிஷிக்கு மனத்தைக் கலக்கியது.

எவ்வளவோ முறை தன் மனத்தைக் கட்டுப்படுத்திப் பார்த்தும் அவரால் அவள் மீது கொண்ட ஆசையை மாற்ற முடியவில்லை.

அவரது உடலில் இருந்து "ரேதஸ்" பூமியில் விழுந்தது. பின்னர் அந்த "ரேதஸ்" ஒரு ஆண்குழந்தையாக உருமாறிற்று. பூமாதேவி அந்த ஆண் குழந்தையை எடுத்து வளர்த்தாள். அந்த குழந்தைக்கு பௌமன் என்ற திருநாமம் வழங்கப்பட்டது. பௌமன் இறைவனை நோக்கி நீண்டகாலம் கடும்தவம் இயற்றினான். அவனுடைய தவவலிமையைக் கண்டு, நவக்ரகத்தில் ஒரு கிரகமாக மாற்றி, அவனுக்கு "அங்காரகன்" என்ற மற்றொரு பெயரும் வழங்கப்பட்டது.

லிங்கபுராணம் அங்காரகனின் பிறப்பை வேறுவிதமாக கூறுகிறது.

அக்னிக்கும், விகேசிக்கும் அன்யோன்ம் உண்டு. இந்த அன்யோன்யத்தால் விகேசி ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த ஆண்குழந்தை அக்னியின் குணத்தைப் பெற்றிருந்தமையால், அதற்கு "அங்காரகன்" என்று பெயரிட்டனர்.

"தக்கன்" என்ற புண்ணியர் ஒரு யாகம் நடத்தினார். அதை விட தன்னால் செய்து காட்ட முடியும் என்று வீரபத்திரர் தன் புண்ணிய பராக்ரமங்களைக் கொண்டு "மகாயாகம்" செய்தான்.

அந்த யாகம் கண்டு உலகெங்கும் நடுநடுங்கின. என்ன ஆகுமோ, ஏது நடக்குமோ என்று பயந்து, வீரபத்திரனிடம் வந்து, "இந்த பயங்கர யாகம் வேண்டாம்" என்று கெஞ்சி கேட்டனர்.

வீரபத்திரன், தன் அதிபயங்கரமான ரூபத்தை மாற்றி, அழகான திரு உருவத்தோடு தோன்றினார். "தக்கனை விட அதிபுண்ணியசாலி" என்ற பெயரும் பெற்றார். இதுதான் அங்காரகன் தோன்றிய வரலாறு என்று மச்ச புராணம் கூறுகிறது.

பொதுவாக;

உஷ்ணம், அஸ்ருமுகம், வாளம், ருதிரான்னம், நிச்த்ரிம்சம் என்னும் ஐந்து முகங்கள் செவ்வாய்க்கு உண்டு.

அங்காரகனுக்கு மேஷ வாகனம் என்று பல நூல்களும், சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்று சில நூல்களும் சொல்கின்றது.

அவருக்கு சிவப்பு குடை உண்டு. கொடியில் மேஷத்தின் உருவம். திருமுடி தரித்திருப்பான். தன் பத்னி இல்லாமல் அங்காரகன் எந்த காரியத்தையும் செய்வதில்லை. முக்கோண மண்டலத்தில் வீற்றிருப்பவன். அவந்தி நாட்டிற்கு அதிபதி. பாரத்வாஜ கோத்திரம் அவனுக்கு சொந்தம். 

அங்காரகனுக்கு அதிதேவதை ப்ரித்வி. ப்ரத்யாதி தேவதை ஷேத்திர பாலகன். இவர்கள் முறையே அவனுக்கு வலப்புறமும் இடப்புறமும் இருப்பார்கள்.

லோகிதாங்கன், ரக்தாய தேஷணன், ரக்த வர்ணன் என்ற பெயர்களும் அங்காரகனுக்கு உண்டு.

வேலேந்துவதால் சக்திதரன், திருஉருவம் அழகாக இருப்பதால் "குமாரன்", எப்பொழுதும் மங்களத்தையே செய்வதால் "மங்களன்", நிறைய செல்வத்தை தருவதால் தனப்ரதன், பொற்குண்டலத்தை அணிந்து கொண்டிருப்பதால் ஹேமகுண்டலி என்று அழைக்கப்படுகிறான்.

குணஹர்த்தா, ரோகக்ருத், ரோகநாசனன், வித்யுத்பரபனி, வ்ரணகரன், காமதன், தானஹ்ருதி, சாமகானப் பிரியன், ரக்த வஸ்த்ரன், கிரக நாயகன், சர்வ தர்மாவா போதகன் போன்ற சூசகப் பெயர்களாலும் "செவ்வாய்" வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரோமாபுரி நாட்டினர் கூட செவ்வாயை தங்களது போர் கடவுளாக கொண்டாடினர். பல கோயில்கள் அங்காரகனுக்கு இன்றும் ரோம் நகரில் உள்ளது.

தமிழ்நாட்டில் அங்காரகனுக்கு மூன்று பிரசித்திப் பெற்ற கோவில்கள் உண்டு.

திருச்சிறுகுடி - இது மாயாவரத்திர்க்கு பக்கத்தில் பேராளம் ரயில் நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

வைத்தீஸ்வரன் கோவில் - மாயவரத்திலிருந்து சிதம்பரம் போகும் பாதையில் இருக்கிறது.

ஆறு படை வீடுகளில் முக்கியமானதாக கருதப்படும் பழனி மலைக்கு அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி கூட முருகப்பெருமனுக்குரிய (செவ்வாய்) பரிகாரத் தலமாகும்.

ஒரே ஊரில், செவ்வாய்க்கும், புதனுக்கும் பரிகாரத்தலமாகவும், ராகு கேது தோஷங்களை அறுக்கிற புண்ணியத்தலமாகவும் இருக்குமிடம், கோடகநல்லூர்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் "9" என்கிற எண்ணை அங்காரகனுக்கு கொடுத்துள்ளார்கள். அந்த எண்ணை  நோக்கினால் அது ஒரு முழுமை பெற்ற எண் என புரியும். அது மஹா சக்தியையும் குறிக்கும் ஒரு நிலை.

செவ்வாயை பற்றி வேதங்களில், பூமாதேவியின் கர்பத்தில் உதித்தவன், மின்னலை போல ஒளியைக் கொண்டவன், அழகானவன், சக்தி ஆயுதம் தரிப்பவன் என்று கூறப்பட்டுள்ளது.

உடல் உறுதிக்கும், மன உறுதிக்கும் செவ்வாய் தான் காரகன்.

அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், நாட்டுத் தளபதிகள், நீதிபதிகள், பொறியியல் வல்லுனர்கள் ஆகியோருக்கு அங்காரகன் அருள் கண்டிப்பாக இருக்கும்.

புரட்ச்சி செய்கின்ற அனைவரும் அங்காரகன் அருளை பெற்றவர்கள். கண்டிப்பு, தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை பந்தாடும் பராக்கிரமம் இவற்றையும் அருளுபவன் செவ்வாய்.

ரத்தத்திற்கு காரணன்.  ரத்த தொடர்பில் உள்ள சகோதரர்களுக்கும் காரகன். நமது உடலில், எலும்பினுள் ஊன். பூமிக்கு காரகன். உஷ்ணம், கோபம், ராஜ தந்திரி, எரிபொருள்,  தங்கம்,  தாமிரம், நாகன், நாகசுப்பிரமணியன், அங்காரகன்தான்.  ஆயுதம் தரிப்போன், அரச இனத்தோன், செந்நிறத்தோன், கடும் பார்வை உடையவன், தற்பெருமை பிரியன், பொறுமை இல்லாதவன், வேட்டைப் பிரியன், துணிச்சல்காரனும் அங்காரகன்தான். பவழம் இவனது ரத்தினம். நெருப்புக்கு சொந்தக்காரன். ஆண்மகன். தென்திசைக்கு அதிபதி.

வியாழன், சூரியன், சந்திரன் இவனது நண்பர்கள். புதன் பகைவன்.

ஜோதிடத்தில், மேஷம், விருச்சிகம் இரண்டும்  சொந்த வீடுகள். கடகம் நீசவீடு. மகரம் உச்சவீடு. மிதுனம், கன்னி இவை இரண்டும் பகை வீடுகள். சிம்மம், தனுசு, மீனம்; இந்த வீடுகள் நட்பு வீடுகள்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களுக்கு  நாயகன்.

சித்திரை மாதம்  முதல் செவ்வாய் கிழமையில் வீரபத்திர சுவாமியை வழிபட்டால், அங்காரகனது அருளும் சேர்ந்து கிடைக்கும்.

வியாதிகள் குணமாவதற்கும்,  நிலம்,பூமி, மனை வாங்குவதற்கும் செவ்வாயின் அருள் வேண்டும்.

வியாதி குணமாக மருந்து சாப்பிடுவதை செவ்வாய் அன்று தொடங்கினால், விரைவில் குணமடையலாம்.

"வீரத் த்வஜாய வித்மஹே  விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரசோதயாத்" 

என்கிற அங்காரகனுடைய காயத்ரி மந்திரத்தை தினமும் 27 தடவை காலையிலும், மாலையிலும் சொல்லிக் கொண்டே வந்தால் அவர்களுக்கு வியாதியே வராது என்பது, தத்ரூபமான உண்மை.

சித்தன் அருள்............... தொடரும்! 

Thursday, 22 January 2015

அகத்தியரும் அருணாச்சல கிரிவலமும்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

திருவண்ணாமலையில் அகத்தியர் அருளால், ஒரு கிரிவல நேரத்தில் நடந்த இனிய நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு அவா.

அது ஒரு மஹா சிவராத்திரி மாதம். எல்லா வருடமும், மஹா சிவராத்திரியின் பொழுது, நண்பர்களுடன் மூன்று நாட்கள் கிரிவலம் செய்கிற பழக்கம் உண்டு. பிரதோஷ நாள், சிவராத்திரி நாள், அமாவாசை நாள் என்று மூன்று நாட்கள் தெரிவு செய்வேன். நண்பர்களுக்கு தெரிவிக்க, குறைந்தது 7 முதல் 8 பேர் வரை ஒன்று கூடி கிரிவலம் செல்வோம். ஆனால் அந்த முறை இரண்டு நண்பர்கள் தான் இருந்தார்கள். ஒருவர் சென்னையிலிருந்து, இன்னொருவர் பெங்களூரிலிருந்து.

இரவில் தான் கிரிவலம். ஏனென்றால், இரவின் தனிமை, அமைதி, காலியான, ஆள் அரவம் இல்லாத கிரிவலப்பாதை எனக்கு மிகவும் பிடிக்கும். மொத்த கிரிவலப் பாதையும் நம்முடையது என்று உணர்ந்து அமைதியாக அருணாசலேஸ்வரரின் "மூல மந்திரத்தை" ஜெபித்தபடி, அடிக்கடி மலையை திரும்பி பார்த்து தரிசனம் செய்து செல்வது ஒரு அலாதியான இன்பம்.

சிவராத்திரி அன்று மட்டும் தனிமை கிடைக்காது, பக்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சி நடந்தது, அமாவாசை கிரிவலத்தின் பொழுது.

சிவராத்திரி கிரிவலம் முடிந்து ஒரு நண்பர் விடை பெற, மற்றவரிடம் நான் கேட்டேன்.

"உங்க பிளான் என்ன? ஊருக்கு திரும்பி செல்வதானால், இன்றே கிளம்புங்கள். நான் நாளை ஒருநாளும் இருந்து அமாவாசை அன்று கிரிவலம் செய்துவிட்டுத்தான் கிளம்புவேன். என்னுடன், தங்கி இருந்து செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லை" என்றேன். ஏனோ தெரியவில்லை, அப்பொழுது மனம் நிறைய தனிமையை விரும்பியது.

நண்பரோ, "நான் தங்குகிறேன். இன்னும் ஒரு நாள் கூட இருந்து கிரிவலம் பண்ணிட்டு, நீங்கள் கிளம்புகிற பொழுதே நானும் ஊருக்கு கிளம்பி செல்கிறேன்" என்றார்.

சரி! நம் மனம் தனிமையை விரும்பினாலும், விதி வேறு ஏதோ ஒன்றை நடத்த விரும்புகிறது. அதன் படியே சென்று என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்வோம் என்று தீர்மானித்தேன்.

கிளம்பிய மற்ற நண்பரை நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, நாங்கள் தங்கிய அறையில் கால் மடக்கி, வெற்றிலை போட்டு, வடக்கு நோக்கி அமர்ந்து கண் மூடி த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

"எங்கு நோக்கினும் நின் அருளன்றோ" என்று ஏதோ ஒரு கவி பாடிய பாட்டைப் போல், கிரிவலப் பாதையில் உள்ள சிவலிங்கங்கள் கண் முன் விரிந்தது. எங்கும் ஒரே அமைதி. சட்டென்று சூழ்நிலை மாறியது. எதிரே ஒரே புழுதி படர்ந்த பாதை. வாகனங்கள் புழுதியை கிளப்பி செல்ல, மனிதர்கள் குறுக்கும் நெடுக்கும்மாக நடந்து சென்றனர். ஒரே சத்தம்.

"ச்சே! இது என்ன காட்சி! அமைதியை கெடுத்துவிட்டதே!" என்று என் மீதே எரிச்சல்பட்டு த்யானத்தை விட்டு வெளியே வந்து, "இப்பொழுது வருகிறேன்" என்று கூட இருந்த நண்பரிடம் கூறிவிட்டு, மொட்டைமாடிக்கு வந்து, அருணாசலேஸ்வரரின் கோபுரத்தையும், அதன் பின்னர் பரந்து விரிந்து, ஆழ்ந்த அமைதியில் இருக்கும் மலையையும் உற்று நோக்கியபடி நின்றேன். மெல்ல மனதுள் பிரார்த்தனை உதித்தது.

"அய்யனே! இன்று செய்ய ஆசைபடுவது மூன்றாவது நாள் கிரிவலம். உடலும், காலும் இரண்டு நாள் கிரிவலத்திலேயே மிகவும் தளர்ந்து உள்ளது. நீங்கள் தான் உடலுக்கும், காலுக்கும் சக்தியை தந்து, இன்றைய கிரிவலத்தையும் நல்லபடியாக நிறைவு செய்து தரவேண்டும்" என்றேன்.

காற்று நன்றாக வீசிக் கொண்டிருக்க, அண்ணாமலையார் பதில் ஏதும் தராமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

சற்று நேரம் நின்று இருந்த பொழுதிலேயே, உடல் ஒன்று சேர்ந்து அமைவது மெலிதாக புரிந்தது. வீசிய காற்று ஒரு புத்துணர்வை உள்ளுக்குள் விதைத்தது. மானசீகமாக அண்ணாமலையாருக்கு நமஸ்காரங்களை தெரிவித்துவிட்டு, அறைக்கு திரும்ப படிகளில் இறங்கினேன்.

யாரோ தூரத்திலிருந்து "அஷ்டலிங்கத்துக்கும் விளக்கு போட்டால் ரொம்ப நல்லது" என்று சன்னமாக கூறினார்கள். திரும்பி பார்த்தேன், யாரையும் காணவில்லை.

இது என்ன? நமக்கு அருளிய உத்தரவோ? இருகட்டுமே! அது ஒருவேளை புதிய அனுபவத்தை தரலாம். சரி! நல்லது என்று உணர்ந்துவிட்டால், உடனே அதை செய்துவிடவேண்டும், என்று தீர்மானித்து, அறைக்கு சென்று நண்பரிடம் என் பிளானை சொன்னேன்.

அன்று மாலை ஒரு மூன்று மணி இருக்கும். இருவரும் இறங்கி கீழே போய் ஒரு காப்பி குடித்துவிட்டு, கிரிவலம் போகிற வழியில் இருக்கும் 8 லிங்கங்களுக்கும் விளக்கு போடுகிற சாமான்களை வாங்கினோம். என்ன தோன்றியது என்று தெரியவில்லை, 8 என்கிற எண் 9 ஆக மாறி, 9 விளக்குகளை வாங்கினோம்.

"எட்டு தானே சொன்னீங்க! இப்ப எதுக்கு 9வது விளக்கு வாங்கறீங்க?" என்றார் நண்பர்.

"8 விளக்கு அஷ்டலிங்கத்துக்கு, 9வது விளக்கு கோவில் பெரிய கோபுரத்தின் முன் அண்ணாமலையாருக்கு" என்றேன் சட்டென்று.

"சிறப்பான செய்தி ஏதேனும் உண்டா?" என்றார் என் நண்பர்.

"பொறுத்திருந்து பார்ப்போமே! எதிர்பார்ப்பின்றி இருப்போம். நடக்கும் பொழுது உணர்ந்திருந்து, ஆனந்தத்தை அனுபவிப்போமே" என்றேன்.

நான் கூறியது அவருக்கு புரியவில்லை, என்று எனக்கு தெளிவாகியது.

9 மண்விளக்கு, நூல் திரி, நெய், தீப்பெட்டி, ஊதுபத்தி என எளிய பூசைக்கான சாமான்களை வாங்கிக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்து, இரவு 9 மணிக்கு கிரிவலம் தொடங்கலாம் என்று தீர்மானம் செய்தோம்.

9 மணிக்கு அண்ணாமலையார் கோபுரத்தின் முன் நின்று, கற்பூரம் ஏற்றி வைத்து வேண்டிக் கொண்டோம்.

"அய்யனே, இன்றைய கிரிவலத்தை நல்லபடியாக நடத்திக் கொடுத்து, ஏற்று வாங்கிக் கொள்ளுங்கள்" - இது மட்டும் தான் என் வேண்டுதல்.

அஷ்டலிங்கத்துக்கும விளக்கு போட்டுவிட்டு, கடைசியில் அண்ணாமலையாருக்கு விளக்கு போடலாம் என்று தீர்மானம். கூட வந்த நண்பர் அத்தனை சாமான்களையும் தன் கையில் வைத்துக்கொண்டார். சற்று கனமாகத்தான் இருந்தது போலும். சற்று நேரத்தில் அவர் தோளில் தொங்கிய ஜோல்னா பைக்குள் இவை அனைத்தும் அடைக்கலாமாகியது. ஏதோ, அவற்றின் கனம் தாங்க முடியாமல் அவர் பைக்குள் வைத்துக் கொள்கிறார் என்று நினைத்து, நான் கிரிவலம் பாதையில் நடக்கத் தொடங்கினேன்.

என் மனம் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தது. கவனம் ஒன்று பட்டிருக்க, கண்கள் இந்திர லிங்கம் செல்லும் பாதையில் சென்றது. கூட வந்த நண்பரை காணவில்லை, அங்கு நிலவும் கூட்டத்தில் தடுத்து நிருத்தப்பட்டிருப்பார், வரட்டும் என்று நினைத்து, நான் முதல் லிங்கத்தை நோக்கி நடந்தேன். அங்கு சென்று அடைந்து 2 நிமிடங்களுக்குப் பின் நண்பர் வந்து சேர்ந்தார்.

9 மணி கழிந்துவிட்டதால் அந்த கோவிலின் சன்னதி மூடியிருந்தது. வெளியில் நின்று தரிசனம் செய்யலாம். ஆதலால், அவர் வாசலிலேயே விளக்கேற்றி வழிபட தீர்மானித்தோம். நண்பர் தன் பையிலிருந்து விளக்கை எடுக்கும் பொழுது சற்று ஸ்ரமப்பட்டார்.

"என்ன பிரச்சினை?" என்றேன்.

"ஒன்றும் இல்லை" என்றார்.

"சீக்கிரம் விளகேற்றுங்க!" என்று கூறிவிட்டு அவர் விளகேற்றியதும் "இறைவா! இன்று என்ன நடக்கிறது என்று புரியவில்லை. உங்களுக்கு விளகேற்ற வேண்டும் என்று தோன்றியது. போட்டுவிட்டோம். இதை ஏற்றுக் கொண்டு, பாரத கண்டத்தை எட்டு திக்கிலிருந்தும் கட்டிப்போட்டு காப்பாற்று" என்று வேண்டிக் கொண்டேன். எனக்கே அந்த வேண்டுதல் என்னுள் எப்படி வந்தது என்று ஒரு ஆச்சரியம். விளகேற்றும் வரை எந்த எண்ணமும் இல்லாமல் இருந்து திடீரென்று அப்படி ஒரு எண்ணம் வர காரணம் என்ன என்று கடைசிவரை எனக்கு புரியவே இல்லை.

விளக்கேற்றி விட்டு அக்னிலிங்கத்தை நோக்கி நடந்தோம். போகும் வழியில், பிள்ளையார், காமாட்சி தேவி என இரு சன்னதிகளில் நின்று சுற்று வழியாக கிரிவலப் பாதையை அடைய, ஒரே இரைச்சல், ஒரே புழுதி மயம். குறுக்கே நடந்து செல்லும் மனிதர்கள், ஹார்ன் அடித்தபடி அலறிச்செல்லும் வண்டிகள். நிதானமாக யோசித்தேன். இது போன்ற இடம் தானே இன்று த்யானத்தின் பொழுது கண்டேன். என்ன நடக்கப் போகிறது? ஒன்றுமே புரியவில்லையே என்று நண்பரை பார்க்க, அவர் "ஹோ!" என்கிற வேதனையுடன் அவரது வலது கையை மணிக்கட்டில் பிடித்தபடி உதறிக் கொண்டிருந்தார்.

நடக்கும் பாதையில், புழுதியை காற்றில் வாரி இறைத்து, எதிர் வரும் வண்டி என்னவென்று தெரியாமல், பாதை இருந்தது. இங்கோ இவர் கையை உதறிக் கொண்டிருந்தார்.

"என்ன ஏதேனும் அடி பட்டுவிட்டதா?" என்றேன்.

"இல்லை! திடீரென்று மிகுந்த வலி மணிக்கட்டில். ஏன் என்று தெரியவில்லை. அது தான் உதறிப்பார்க்கிறேன்" என்றார்.

"ஏதேனும் மருந்து வாங்க வேண்டும் என்றால் சொல்லுங்கள். இங்கே தான் வாங்க வேண்டும்" என்றேன்.

"வேண்டாம். பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல், இதென்ன நமக்கு வந்த சோதனை என்று, சற்று நேரம் ஆகாயத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். பின்னர் மெதுவாக நடக்கத் தொடங்கினேன்.

நடக்கும் பொழுதே மனதுக்குள் வேண்டுதல் தானாக உருவாகியது.

"அகத்தியப் பெருமானே! இது என்ன சோதனை. எட்டு லிங்கத்துக்கும் விளக்குப் போட்டு இன்றைய கிரிவலத்தை வித்யாசமாக முடிக்க வேண்டும் என்றுதானே நினைத்தேன். தயை கூர்ந்து ஏதேனும் ஒரு உருவில் அல்லது வழியில் வந்து இவர் வலியை மாற்றித்தாருங்கள். என்னவோ, உங்களைத்தான் அழைக்கத் தோன்றியது. உங்களிடம் சமர்ப்பித்துவிட்டேன். இனி நீங்களாக பார்த்து ஏதேனும் ஒரு உதவியை செய்தால்தான் உண்டு." என்றேன்.

பிறகு நண்பரிடம் "வாருங்கள் போகலாம்" என்றேன். இருவரும் நடக்கத் தொடங்கினோம். நண்பர் மணிக்கட்டை பிடித்தபடி நடந்து வந்தார்.

இரண்டு நிமிட தூரம் நடந்திருப்போம். இன்னொரு எண்ணம் தோன்றியது. ஏதேனும் ஒரு சாதுவை கண்டால், காசு தானம் பண்ணி மறுபடியும் வேண்டிக் கொள்வோம் என்று.

பாதையின் இடது புறமாக நடந்து கொண்டிருந்தோம். மெதுவாக தூரத்தில் பார்க்க, சற்று குள்ளமான ஒருவர், முதுகில் ஒரு குப்பை தாள்களை நிரப்பி, ஒரு கோணிப்பையை தன் முதுகில் வைத்து, பாதையின் வலது பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். நான் கவனித்துவிட்டு அமைதியாக இருந்தேன்.

வாகனங்கள் வராத இடைவெளியில் சட்டென்று சாலையை கடந்து எங்கள் பக்கமாக வந்து நின்று, முதுகில் இருந்த கோணிப்பையை கீழே வைத்துவிட்டு, கைகூப்பி, என் முன் நின்று, விழிகளை த்யானத்தில் இருப்பவர் போல் மேல் விழித்திரைக்குள் மறைத்து, "ஓம் நம சிவாயா" என்று கூறி நின்றார்.

உடனேயே புரிந்துவிட்டதால், அவர் உயரத்தை கவனித்துவிட்டு, அவர் கண்களை பார்த்தேன். விழிகளை காண்பிப்பதாக இல்லை என்று புரிந்தது. மெதுவாக என் பைக்குள் கையை விட்டு கையில் தட்டுப்பட்ட ரூபாய் தாளை எடுத்து, இரு கைகளையும் சேர்த்து பிடித்து அவரிடம் கொடுத்தேன். அவரும் இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார். மனதுக்குள் "சிவார்ப்பணம்" என்று ஒலித்தது. நான் உள்ளே சிரித்துக் கொண்டேன்.

நான் கொடுத்ததைப் பார்த்த நண்பர் தானும், தன் பைக்குள் கையை விட்டு ரூபாயை எடுத்து வலது கையால் நீட்டினார். நான் என்ன நடக்கிறது என்று நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தேன். விழிகளை தாழ்த்தி அவரை பார்த்தவர், இரு கைகளையும் ஒன்று சேர்த்து அவரது வலது மணிக்கட்டை நோக்கி கொண்டுபோய், அங்கிருந்து தடவி, அவரின் விரல்நுனிவரை வந்து, அவரை பார்த்தபடியே நின்று, அந்த ரூபாயை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டார். மறுபடியும் "ஓம் நமசிவாயா" என்று கூறிவிட்டு, தன் கோணிப்பையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வலது பக்கமாக நடந்து போனார்.

நான் சற்று நேரம் உறைந்து போய் நின்றுவிட்டேன். சுய நினைவுக்கு வந்து "சரி! வாருங்கள் போகலாம்" என்று கூறி நடக்கத் தொடங்கினேன்.

ஒரு பத்து அடி தள்ளிப்போய் திரும்பி பார்க்க, எங்களுக்கு பின் ஓடிய பாதையில் யாரும் தென்படவில்லை. நடந்து சென்ற பெரியவரை காணவில்லை. நண்பரும் திரும்பி பார்த்தார். ஆனால், எதுவும் அவர் உணரவில்லை என்று புரிந்தது.

அந்த தெருவின் முனையில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு.  அங்கு போய் நின்று "நன்றி" கூறிவிட்டு, அக்னிலிங்கம் சன்னதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

இயல்பாக நடந்து வந்த நண்பரிடம்,

"என்ன! கை வலி போயாச்சா?" என்றேன்.

அப்பொழுதுதான் உணர்ந்தவர், தன் மணிக்கட்டை அழுத்திப்பார்த்துவிட்டு, "அட! ஆச்சரியமாக இருக்கிறதே! வலியே இல்லையே! இது எப்படி சாத்தியம்! உங்களுக்கு எப்படி அந்த வலி போய் விட்டது என்று தெரியும்?" என்று வினவத் தொடங்கினார்.

நான் சிரித்தபடியே, "நீங்கள் இயல்பாக நடந்துவருவதை கண்டு கேட்டேன்" என்றேன்.

"இல்லை! நீங்க என்னவோ மறைக்கறீங்க! உங்களுக்கு தெரியும்! சொல்லுங்க! எப்படி என் வலி போயிற்று?" என்றார்.

"அது எப்படி போயிற்று என்று எனக்கு தெரியாது" என்று பல முறை கூறியும், நம்ப மறுத்தார்.

கடைசியில் உண்மையை சொல்ல வேண்டி வந்தது.

"உங்கள மாதிரி ஆளுங்களுக்கு, திருவண்ணாமலையில் கிரிவலம் போகும் பொழுது, ஏன் தெளிவும் உணர்வும் இருக்க மாட்டேன் என்கிறது என்று எனக்கு புரியவில்லை. மிகுந்த கைவலி என்றதும், ஏன் என்று தெரியவில்லை, நான் அகத்தியப் பெருமானைத்தான் மனதுக்குள் வேண்டி அழைத்தேன். வந்தவர் அவர்தான் என்று நான் நம்புகிறேன். ஏன் என்றால், ரூபாய் நோட்டை வாங்குகிற சாக்கில், நைசாக மணிக்கட்டை தடவி, வலியையும் எடுத்துக் கொண்டு போய்விட்டாரே" என்றேன்.

அப்பொழுதுதான் நடந்ததை யோசித்து உணர்ந்தவர், தன் தவறை அறிந்தார், "ஏன் நீங்க இதை அப்பவே சொல்லியிருக்கலாம் இல்லையா! அவர் வந்துட்டு போனப்புறம் சொல்லறீங்க. குறைந்தது நடுரோட்டிலேயே அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ணியிருப்பேன் இல்ல?" என்றார்.

"இப்ப சொல்லுவீங்களே! அவரை  உங்களிடம் காட்டிக் கொடுத்து, நான் அவரிடம் திட்டு வாங்கவா? கூர்மையாக உங்களை ஒருமுறை பார்த்தாரில்லையா? அது போதும் உங்களுக்கு. அவருக்கே தெரியும் நீங்கள் இன்னும் தெளிவு பெறவில்லை என்று. அதனால் அவரும் மௌனமாக போய்விட்டார்." என்றேன்.

"என்ன இருந்தாலும், நீங்கள் செய்தது சரி இல்லை" என்றார்.

"ஹலோ! ஒரு விஷயம் புரிஞ்சுக்குங்க. அவர்கள் பார்வை தான் நம் மீது படவேண்டும். நம் பார்வை ஒன்றும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை உணர்ந்தால், காட்சியளித்த பொழுது உணரவே இல்லையே என்ற வருத்தம் வராது. இது தான் திருவண்ணாமலை. இங்கு இதுபோல், ஒவ்வொரு வினாடியும் ஒரு நிகழ்ச்சி நடக்கும்." என்றேன். மேலும் "அவர் என்னை பார்க்கவே இல்லையே, ஒன்றும் சொல்லவே இல்லையே. ஏதோ கையில் வந்ததை கொடுத்தேன். நமசிவாயா என்று கூறி பெற்றுக் கொண்டார். அது போதும் என்று திருப்தி ஆகிவிட்டேன். அப்படி மனதை வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களை உயர்த்தும்" என்றேன்.

என்ன தான் சொல்லியும் அவர் சமாதானம் அடையவில்லை.

"சரி! இனி மேற்கொண்டு 7 சன்னதியிலும் விளகேற்ற வேண்டாமா? இன்னும் ஒன்பதாவது விளக்கை, அருணாச்சலேஸ்வரர் முன் நம்மில் யார் ஏற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லையே" என்று சொன்னதும்,

"நான் தான் ஏற்றப் போகிறேன்" என்றார். அவருக்கு அப்பொழுதே ஒரு சந்தேகம். 9வது விளக்கை குறிப்பிட்டு சொல்லியதால், அங்கு ஏதேனும் நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று தீர்மானித்துத்தான் அப்படிச் சொன்னார் என்று எனக்கு புரிந்தது.

சிரித்தபடியே, "எல்லாம் அவன் செயல். நாம் யார் அதை இப்பொழுதே தீர்மானிப்பதற்கு. அதை அருணாசலம் முன்பு நிற்கும் பொழுது அவர் தீர்மானிக்கட்டும். வாருங்கள் செல்வோம்" என்று கிரிவலத்தை தொடர்ந்தோம். கிரிவலம் நிறைவு பெறுகிரவரை,  எதிர்பட்ட அனைவரையும் உற்று உற்றுப் பார்த்து நடந்து வந்தார்.  மறுபடியும் அவர் வரமாட்டாரா என்கிற ஏக்கம் இருந்ததை, உணர முடிந்தது.

ஒன்பதாவது விளக்கை அருணாச்சலேஸ்வரர் கோவில் முன்பு ஏற்றுகிற பாக்கியத்தையும் அவருக்கே கொடுத்து, மனநிறைவுடன் அன்றைய கிரிவலத்தை சந்தோஷமாக நிறைவு செய்தோம்.

அகத்தியர் அடியவர்களே! அருணாசலம் போன்ற இடங்களில், கிரிவலம் செல்லும் பொழுது விளகேற்றுகிற பாக்கியம் கிடைத்தால், கைபற்றிக் கொள்ளுங்கள், அகத்தியர் பாதத்தை.

இந்த தொகுப்பு நிறைவு பெற்றது!

சித்தன் அருள் - 208 - நவக்ரகங்கள் - சந்திரன்!


சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, உலகிற்கு ஒளியைத் தருபவர் சந்திரன். இதனால் சந்திரனுக்கு "தண்கதிரேசன்" என்று பெயர்.

இவருடைய சொரூபம் பால்போல் வெளுத்த நிறம்.  வெண்மையான ஆடை. வெண்பூ, முத்துமாலையை அணிந்தவர். பத்து வெண்குதிரை பூட்டிய தேரில் வெண்குடையின் கீழ் அமர்ந்து மேருவை வலம் செய்பவர் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு அதிதேவதை வருணன். ப்ரத்யாதி தேவதை "கௌரி". இதைத்தவிர இன்னும் பல குட்டி தேவதைகளும் உண்டு.

"சந்திரக்காந்த கல்" என்று ஒரு விசேஷமான கல் உண்டு. இந்தக் கல்லில் சந்திரன் ஒளி பட்டவுடன் அதிலிருந்து நீர் வரும்.

பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது அவதரித்தவர் சந்திரன். இவர் தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். ஆனாலும் சந்திரன் பெண்பால் குணத்தோன்.

பசு, பால், ஔஷதம், புஷ்பம், பயிர், மது, கீர்த்தி இவைகளை விருத்தி செய்பவர். இவர் சூரியனுக்கு அருகே செல்லும் பொழுது அமாவாசை ஆகிறார். சூரியனை விட்டு எதிர் பக்கம் போகும் பொழுது பௌர்ணமியாக காட்சி தருகிறார்.

பாற்கடலை கடைந்தபோது லக்ஷ்மியுடன் தோன்றியவர் என்பதால் லக்ஷ்மியின் சகோதரர் என்று வேதங்களால் போற்றப்படுகிறார்.

சிவபெருமான் தலையிலும் அம்பிகையின் சிரசிலேயும் இடம் பெற்ற புண்ணியவான். இவரை வளர்த்தவர் அத்ரி மகரிஷி.

குருபகவானது கருணைக்குப் பாத்திரமானதால், இவருக்கு குருவும் சேர்ந்து ஔஷதிகளுக்கு அரசனாக இருக்கும் பதவியைக் கொடுத்தார்கள்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் "2" என்கிற எண்ணை இவர் ஆளுமைக்கு உட்பட்டதாக கூறப்படுகிறது.

சதபதப் ப்ராம்மணத்தில் சந்திரனைப் பற்றிக் கூறும்பொழுது "வானத்தில் இருந்த சோமனை காயத்திரி தேவியின் அருளினால் தேவர்கள் பூமிக்கு கொண்டு வந்தார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது.

சோமன் என்னும் அரசன் கந்தர்வனிடம் இருந்தான். அவனை கந்தர்வன் நண்பனாகப் பெற்றதால் முனிவருக்கும் தேவர்களுக்கும் பயம் ஏற்ப்பட்டது. எனவே ஒரு பெண்ணை அனுப்பி கந்தர்வனை மயக்கி, சோமனை, கந்தர்வனிடமிருந்து பிரித்து தாங்கள் பத்திரமாக வைத்துக் கொண்டார்கள் என்று ஐதரேயத்தில் கூறப்பட்டுள்ளது.

சந்திரனை சிவபெருமானின் இடது கண் என்று கூறுவார்கள்.

தைதீர்யத்தில், பிரஜாபதிக்கு முப்பத்து மூன்று பெண்கள். இந்த பெண்கள் அனைவரையும் பிரஜாபதி சோமனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவர்களிடம் சோமனுக்கு "ரோகிணியிடம்" மாத்திரம் அன்பு பிறந்தது. மற்றவர்களை புறக்கணித்தான்.

பிரஜாபதியிடம் சென்ற மற்ற பெண்கள், முறையிட்டனர்.  அதனால் சந்திரன் ப்ரஜாபதியின் கோபத்துக்கு ஆளானான். அதன் காரணமாக உடல் குறைந்து தேய்ந்து போனான். பின்னர், சந்திரன் தன் தவறை வருந்தி, சூரியனிடம் உதவி கேட்க, சூரியன், சந்திரனை உடல் வலிமை உடையவனாக மாற்றினான்.

இன்னொரு கதையில், ஔஷதிகளுக்கு அரசனாக சந்திரன் இருந்த பொழுது ராஜ சூய யாகம் செய்தான். அப்பொழுதுதான் தக்ஷப் பிரஜாபதி என்பவர் தனது 27 குமாரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். சந்திரன் ரோகிணியைத் தவிர மற்றவர்களை விரும்பவே இல்லை. மற்ற பெண்களின் கவலையை அறிந்த தக்ஷப் பிரஜாபதி, சந்திரனை அழைத்துச் சாபமிட்டார்.  அதனால்தான் தேய்ந்து போனான் சந்திரன்.

பரமசிவன், சந்திரனுடைய துர்பாக்கிய நிலையை கண்டு, வருந்தி, பதினைந்து நாள் தேய்பிறையாகத் தேய்ந்து போனாலும் அடுத்த பதினைந்து நாட்களில் வளர்பிறையாக மாறுவாய் என்று அனுக்ரஹித்தார்.

அதனால் தான் சந்திரனுக்குப் பதினைந்து நாள் தேய்பிறை, பதினைந்து நாள் வளர்பிறை வருகிறது.

சந்திரனின் மனைவிகளில் ஒருத்தி சுவாதி. நட்சத்திரமாக ஜொலிப்பவள். இந்த நட்சத்திரத்தன்று, சமுத்திரத்திலுள்ள மீன் வர்க உயரினம் ஒன்று வாய் திறந்து மேல் நோக்கி இருக்கும் சமயத்தில் மழைத்துளி விழுமாயின் அந்த மழைத்துளி முத்தாக வளரும் என்பது நடைமுறை செய்தி.

ஏன் சந்திரனுக்கு இத்தனை மனைவிகள்? என்பதற்கு காரணம், முன்பொரு சமயம் பூர்வத்தில் ப்ரஹஸ்பதியான குருவிடம் சிஷ்யனாக இருந்து த்யானயோகத்தில் யாரும் அடைய முடியாத சித்தியை பெற்றவன்.

எனவே, அவன் யாரை நினைத்தாலும் அவளை மணந்து கொள்ளலாம்; அல்லது சந்திரனைப் பார்க்கின்ற அத்தனைப் பெண்களும் அவன் மீது ஆசைப் படுவார்கள். அதனால் தான் சந்திரனுக்கு இத்தனை மனைவிகள் என்று கூறப்படுகிறது.

சந்திரனை பெண் ஸ்வரூபமாக வர்ணிக்கிறார்கள். சூரியன் புருஷனாகவும் சொல்லப்படுவதுண்டு. பூமி மாதாவால் விரும்பப்படுபவன். அதனால், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே காந்த சக்தி உண்டு என்பார்கள்.

செடி, கொடி, தாவர வளர்ச்சிக்கு சந்திரன் வேண்டும்.

எல்லா ஜீவராசிகளின் காதல் உணர்ச்சி, சந்திர கிரணங்களை நம்பித்தான் இருக்கிறது.  சமுத்திரத்திலிருந்து "ஆவி" உண்டாகவும் சந்திர ஒளி தேவை. பிறைசந்திரனை தொழுது வந்தால் நமக்கு ஆயுள் அதிகரிக்கும்.

சந்திரன் தலையைச் சுற்றி ஒளி வட்டமாகிய ப்ரபை திகழும். பல்வகை அணிகள் அணிந்திருப்பான். பன்னீர் மலர் மாலையை அணிந்தவன். வெண்மை ஆடையை அணிந்த அவன், குமுதத்தை ஏந்திய இரண்டு திருக்கரங்களை உடையவன். திருமார்பில் பொன்னூல் இழையும்.

ராமர் சூரிய குலத்தில் தோன்றியவர். அது போல பாண்டவர்கள் சந்திர குலத்தில் தோன்றியவர்கள்.

மனிதர்களின் சரீர பலத்துக்கு காரணமே இவர் தான். கடல் பயணம் நன்றாக அமைய வேண்டும் என்றால், ஒருவருக்கு சந்திரன் நன்றாக் ஜாதகத்தில் இருக்க வேண்டும்.

ராகு, கேது கிரகங்களை தவிர யாரும் பகைவர்கள் கிடையாது. குரு, சுக்கிரன் இவர்களோடு சந்திரன் சேர்ந்தால், அல்லது சுப பார்வை பார்க்கப்பட்டாலும், அவர் மிகப்பெரிய அதிர்ஷடசாலியாக பிற்காலத்தில் மாறுவார்.

ரிஷபம் சந்திரனுக்கு உச்ச வீடு. கடகம் சொந்த வீடு. விருச்சிகத்தில் நீசனாக மாறிவிடுவார்.

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். நவரத்னங்களில் "முத்து", உவர்ப்பு சுவை, இனிமையான குணம், வடமேற்கு திசை இவைகளை கொண்ட சந்திரன் பொதுவாக சுபக்ரகம்.

நிம்மதியாக தூங்க வேண்டும் என்றாலோ, அரசாங்கத்திடமிருந்து விருது பெறவேண்டும் என்றாலோ, ஒருவருக்கு சந்திரன், ஜாதகத்தில், நல்ல இடத்தில் இருக்க வேண்டும்.

காதல், கவித்துவம், மென்மை, இன்பம், இதயம் என்ற நளினமான பல விஷயங்களுக்கும் காரணமானவன்.

இறைவனது திருவிழிகளில் ஒரு விழியாக விளங்கும் இவனைத்தான் மூலிகைகளுக்கு அதிபதியாக பிரம்மா நியமித்திருக்கிறார்.

ஆலயங்களில் பரிவார தேவதையான சந்திரன், இரண்டு சக்கரங்கள் கொண்ட தேரில் இருப்பவன். சதுரமான் பீடத்தில் அமர்பவன். கார்த்திகை மாதம் சோமவாரத்தில் இவர் அவதரித்ததாக கூறப்படுகிறது.

"பத்மத்வஜாய வித்மஹே ஹேமா ரூபாய தீமஹி 
தன்னோ சோம ப்ரசோதயாத்"

என்ற இவரது காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபித்து வந்தால், எல்லோரும் அதிர்ஷ்டம் அடையலாம்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday, 8 January 2015

சித்தன் அருள் - 207 - நவக்ரகங்கள் - சூரியன்![இன்று அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம். எல்லோரும் அவரை பணிந்து, அருள் பெற்று இன்பமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.]

எல்லோரும் பிரம்மதேவனிடம் சென்று, விஷயத்தைச் சொன்னார்கள். பிரம்மதேவர் யோசித்தார். பின்பு தேவர்களிடம் சொன்னார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம். இப்பொழுது இருள் நேரம். இன்னும் சில நாழிகையில் சூரியன் கோபத்தோடு உதிக்கும் பொழுது அந்த வெப்பத்தை தாங்கிக் கொள்ள பூ போன்ற இளம் குழந்தை ஒருவன் வருவான். அவன் பெயர் அருணன்.  இந்த அருணன், காச்யபருக்கும், வினதை என்ற அதிதிக்கும் பிறந்தவன். மிக்க பலவான். சிவ சொரூபி" என்று சொன்னார்.

மறுநாள் காலையில் சூரியன் உதிக்கும் பொழுது அந்த அக்னி கதிர்களை, "அருணன்" செங்கதிரோன் நேர் முன் அமர்ந்து அவனுடைய ஒளியைத் தான் எடுத்துக் கொண்டு மறைந்தான்.

அன்று முதல், சூரியனின் மறு அவதாரமாக அருணன் தோன்றி இன்று வரை உலகத்தை ரட்ச்சித்து வருகிறான் என்பது ஒரு வரலாறு.

மார்கண்டேய புராணத்தில் சூரியனுடைய வரலாறு என்பது "இருள் மயமான அண்டத்தை பிரம்மன் ஒருநாள் வேடிக்கையாக பிடித்த பொழுது "ஓம்" என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலி பின்னர் செங்கதிர் வீச்சாக மாறி, படிப்படியாக அதிலிருந்து வட்ட வடிவமான உருவத்தில் சூரியன் தோன்றினான் என்று சொல்லப்பட்டுள்ளது.

பிரம்ம புராணத்தில் "சிவபெருமான்தான் சூரிய மண்டலமாக ஒளிர்கிறார்: அவர் தான் "சூரியன்" அவருக்கு சூரியன் வலது கண்ணாக விளங்குகிறார்" என்று சொல்லப்பட்டுள்ளது.

சூரியனுக்கு இங்கு இரண்டு பிரசித்தி பெற்ற கோயில்கள் உண்டு. ஒன்று ஒரிசாவிலுள்ள "கோனார்க்" என்ற இடத்தில் சூரியனுக்கு சிறப்பான கோயில் உண்டு. இரண்டு தமிழ்நாட்டில் சூரியனார் கோவில் - ஆடுதுறையில் உள்ளது. இதை தவிர திருக்கண்டியூர் வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் என்ற இடங்களிலும் சூரியனுக்கு தனித் தனி கோவில்கள் உண்டு.

சூரியனை நேரே நின்று வழிபடலாம். உருவம் அமைத்து வழிபடலாம், யந்திரத்தில் ஆவாகனம் செய்து பூசிக்கலாம். நிலத்தில் படம் வரைந்தும் பிரார்த்தனை செய்யலாம். சிவன் கோவிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாக வைத்து தினப்படி பூஜையும் செய்வது உண்டு.

நவக்ரகங்களில் ஒன்றாக வைத்து வலம் வந்து வணங்கும் வழக்கமும் எங்கும் காணலாம். தமிழ்நாட்டில் தைமாதப் பிறப்பாகிய மகர சங்கராந்தி அன்று சூரியனை வணங்கி, நிலத்தில் எழுதி பூசை செய்யும் வழக்கம் இன்றும் உண்டு

ஜோதிட சாஸ்த்திரத்தில் சூரியனை பற்றி சொல்லும் பொழுது, சூரியன் செம்பருத்திப் பூவை போல் இருப்பான், காச்யபரின் புதல்வன். மிகவும் பிரகாசம் உடையவன். இருட்டின் பகைவன், எல்லாப் பாவங்களையும் அழிப்பவன், பிரம்மன், விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதி. எப்பொழுதும் சஞ்சரிப்பவன், நவக்ரகங்களின் நாயகன், வேத மந்திரங்களில் காயத்ரி, சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், ஆற்றல், வீரம், பராக்கிரமம், சரீர சுகம், நன்னடத்தை, நேத்திரம், உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்கு காரணமானவன். பிதுர்காரகன், சாத்வீக குணம் கொண்டவன், இருண்ட சிவப்பு இவன் நிறம், ஆண் கிரகம்.

சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்சவீடு மேஷம். நீச வீடு துலாம். ரிஷபம், மகரம், கும்பம் மூன்றும் பகை வீடுகள்.

சூரியனுக்குச் சந்திரன், செவ்வாய், குரு மூவரும் நண்பர்கள்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் அதிபதி, நாயகன்.

ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதத்தில் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளைக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.

 • சூரியனுக்குரிய  மலர்  - செந்தாமரை.
 • சூரியனுக்குரிய  சமித்து - எருக்கு
 • சூரியனுக்குரிய தான்யம் - கோதுமை 
 • சூரியனுக்குரிய வாகனம் - தேர்; மயில்
 • சூரியனுக்குரிய அதிதேவதை - சிவன் 
 • சூரியனுக்குரிய ரத்தினம் - மாணிக்கம் 
 • சூரியனுக்குரிய உலோகம் - தம்பாக்கு
 • சூரியனுக்குரிய நிறம் - சிகப்பு 
 • சூரியனுடைய அவதாரம் - ஸ்ரீராமர்


சூரியனிடமிருந்து வல்லமை பெற்று ஸ்ரீராமர் யுத்தத்தில் வெற்றி பெற, அகத்தியப் பெருமான், ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை உருவாக்கி உபதேசம் செய்தார். ஸ்ரீராமரும் யுத்தத்தில் எதிரிகளை வெற்றி கொண்டார். இந்த ஸ்லோகத்தை தினம் காலையில் சூரிய உதயத்தின் பொழுது பாராயணம் செய்து வந்தால் அவர்கள் முகம் தேஜஸ் பொருந்தியதாக இருக்கும், பீடைகள் ஒழியும், தரித்திரம் விலகும், உத்தியோகம் கிடைக்கும். பெற்றோர்கள் நல்லபடியாக இருப்பார்கள், டென்ஷன் இருக்காது, மங்களம் உண்டாகும்.

ஒருமுறை தேடிவந்த ஒருவருக்கு நாடி வாசித்த பொழுது அகத்தியப் பெருமான் அவரிடம் தினமும் ஆதித்ய ஹ்ருதயத்தை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்க அருளினார்.

வந்தவர் "அய்யா! அந்த ஸ்லோகத்தை எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாமா?" என்று வினவினார். ஏன் என்றால் அவர் கேட்டு வளர்ந்த சூழ்நிலையில், எல்லோரும், அந்த ஸ்லோகத்தை சூரிய உதயத்தின் பொழுது மட்டும் தான் சொல்லலாம். அஸ்தமனத்துக்குப் பின் அல்லது மதியத்துக்குப் பின் சொல்லக் கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இதை அறிந்த அகத்தியப் பெருமான் "என்னிடமே இப்படி கேட்கிறாயே. நேரம் காலம் பார்க்காமல், நடக்கும் பொழுதும், பயணிக்கும் பொழுதும், அமர்ந்திருக்கும் பொழுதும் எப்பொழுது வேண்டுமானாலும் இதை கூறலாம்" என்று அருளினார்.

சாதாரண மனிதர்களுக்கு இதை மனப் பாடம் செய்வது சற்று ஸ்ரமமாக தோன்றும். உண்மை அதுவல்ல. அகத்தியப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு, இதை கூறி வந்தால், ஒரு சில நாட்களிலேயே மனப்பாடம் ஆகிவிடும். பின்னர் எந்த கோவிலுக்கு சென்றாலும், அந்த கோவிலின் ஈசான மூலையில் வடக்கு, வடகிழக்கு அல்லது  கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறையேனும் ஜெபித்திட, மிக விரைவில் நம் வேண்டுதல்கள் நிறைவேறுவதை காணலாம். மேலும் எங்கு சென்றாலும் நல்ல பாதுகாப்பு இருக்கும்.

ஆதித்ய ஹ்ருதயம் உருவான நிலை:- அகஸ்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போகப்போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாகதான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர்.

நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய ஹருதய“த்திற்கு இருக்கிறது என்று கூறினாள் பராசக்தி. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முதலில் நல்லவர்களிடம் சொன்னால்தான் அது முழுமை அடையும் என்ற எண்ணத்தால் பல வருடம் ஆகியும் மந்திரத்தை வெளியிடாமல் பொறுமையாக இருந்தார், அகஸ்திய முனிவர்.

ஸ்ரீ ராமசந்திரர், இராவணனிடம் போர் செய்து கொண்டு இருந்தார். பல அம்புகளை ஏவியும் இராவணனை கொல்ல முடியாமல் மிகவும் மன வேதனையில் இருந்தார். இராவணனும் முடிவில்லாத போரினால் மயங்கி விழுந்தார். ஆனாலும் இராவணன் போரை நிறுத்துவதாக இல்லை. இன்னும் எத்தனை மணி நேரமோ, எத்தனை நாட்களோ இப்படி போரை தொடர்வது? என்ற விரக்தியின் எல்லைக்கே போனார் ஸ்ரீராமர். இறைவனாக இருந்தாலும் மனித பிறவி எடுத்தால் விதியை அனுபவித்துதான் தீர வேண்டும். ஆனால் விதியை ஒரளவு மாற்றும் சக்தி முனிவர்களுக்கு இருக்கிறது என்பதால் தன் குருவாக நினைக்கும் அகஸ்தியரை மனதால் பிராத்தனை செய்தார். பிராத்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது போல் அகஸ்திய முனிவர் ஸ்ரீராமரின் முன்னே தோன்றி, “ராமா… உலக நன்மைக்காக பராசக்தி ஆதித்ய ஹிருதய மந்திரத்தை எனக்கு உபதேசித்தார். அதை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல நன்மைகளும், விரோதிகளை வீழ்த்தும் சக்தியும் கிடைக்கும்.!“ என்றார் அகஸ்திய முனிவர்.

முனிவர் கூறியது போல் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீ ராமசந்திரர். அதன் பலனாக அதிக சக்தியும், புத்துணர்ச்சியோடும் இராவணனை வீழ்த்தினார். சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தால் வல்லவனுக்கு வல்லவனாகலாம் என்றார் சக்திதேவி

அந்த ஸ்லோகத்தை கீழே தருகிறேன்.

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் 

தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி: 

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு 

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் 

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம் 

ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம் 

சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி: 

ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி: 

பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர : 

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர: 

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் 

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந: 

வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம: 

ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ: 

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே 

நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம: 

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம: 

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: 

பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம: 

தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே 
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: 

தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே 

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: 

ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம் 

வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: 

ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ 

பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு 

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் 

ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான் 

ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான் 

ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத் 

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண: 
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

என்று கூறிய அகஸ்திய மாமுனி இறுதியாக "இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும்.எந்த துன்பமும் ஏற்படுவதில்லை. தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முனைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலிமை  பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவணனை வென்ற இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!

சித்தன் அருள்...................... தொடரும்!

Sunday, 4 January 2015

ஆச்சாள்புரம், கும்பகோணம் - பார்வையினால் நோய் தீர்க்கும் சித்தர் சுவாமி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நேற்று திரு.கார்த்திகேயன் அவர்கள் ஊத்துமலை பற்றிய ஒரு வீடியோவை நம்முடன் பகிர்ந்து கொண்டதை கண்டு உண்மையிலேயே மலைத்துப் போனேன். அடடா! இப்படிப்பட்ட அரிய புனிதத்தலங்கள் நம் தமிழகத்தில் இருக்க ஒவ்வொருவரும் எங்கெல்லாமோ எதற்கோ தேடி அலைகிறார்களே என்ற எண்ணம் என்னுள் வந்தது.

ஒரு சில தினங்களுக்கு முன், தனக்கு பிறந்த ஒரே குழந்தையின் உடல் நிலை சரியில்லை என்று ஒரு அகத்தியர் அடியவர் "சித்தன் அருளில்" எங்கோ கூறியிருந்தது ஞாபகத்தில் இருந்தது. உண்மையிலேயே, அதை படித்தது முதல் அகத்தியப் பெருமானிடம், எல்லோருக்கும் வேண்டிக் கொள்வது உண்டு. உடல் உபாதை, கர்மா படித்தான் வருகிறது என்றாலும், மகான்களின் பார்வை அதை வழி மாற்றிவிட்டு நிறைய அளவுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று நம்புபவன் நான். அதன்படியே, இந்த குழந்தையின் உபாதை என் மனதை வருத்திக் கொண்டிருந்தது. இதற்கு ஏதேனும் ஒரு வழி அகத்தியப் பெருமான் காட்டக் கூடாதா என்று தினமும் அவரிடம் வேண்டிக் கொள்வது உண்டு.

நேற்றும் வேண்டுதலை சமர்ப்பித்துவிட்டு எதேச்சையாக சித்தன் அருளை பார்க்க ஊத்துமலை பற்றிய வீடியோவை பார்க்க நேர்ந்தது. அது முடிவு பெற்றதும், எதேச்சையாக மேலே உள்ள வீடியோவை பார்க்க, ஆச்சரியத்தில் ஆச்சரியம். எத்தனை எளிய சுவாமி அவர் என்கிற எண்ணம் வந்தது. அதனுடன்,

இவரை சென்று கண்டால், நிச்சயமாக உடல் உபாதை உள்ளவர்களுக்கு ஒரு நல்ல விடுதலை கிடைக்கும் என்று என் மனது நம்புகிறது. அந்த குழந்தை என்றல்ல, யாரெல்லாம் உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார்களோ அவர்கள் முழு நம்பிக்கையுடன் செல்லலாம். நிச்சயம் அவர் வழிபடும் "அம்பாள் - நாராயணியின்" அருளால், குணமடைவார்கள் என்று தோன்றுகிறது. வீடியோவை பார்த்து நீங்கள் ஒரு முடிவெடுங்கள். இந்த வீடியோவை பார்க்க வைத்தது கூட அகத்தியப் பெருமானின் கருணை தான் என்று நான் நம்புகிறேன்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமக!

Saturday, 3 January 2015

ஊத்துமலை - அகத்தியப் பெருமான் பிரதிஷ்டை செய்த "ஸ்ரீ சக்ரம்"


அகத்தியப் பெருமானின் பெருமைகளை இன்றும் வெளிபடுத்தும் இடங்கள், மலைகள், கோவில்கள் நம் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. அப்படி பட்ட ஒரு இடத்தை பற்றி "youtube"இல் காண நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஊத்துமலை என்றழைக்கப்படும் இந்த இடம் சேலத்த்த்துக்கு அருகில் உள்ளது. நிறைந்த பெருமைகளை தன்னுள் அடக்கி, அமைதியாக த்யானத்தில் உள்ளது இந்த மலை என்று கூறலாம்.

 1. ஏழு ஊற்றுக்கள் அகத்தியரால் உருவாக்கப் பட்டதினால் "ஊற்று மலை" என்று பெயர் பெற்றது.
 2. அகத்தியரே உருவாக்கி பிரதிஷ்டை செய்த "ஸ்ரீ சக்கரம்" இங்குள்ளது. "ஸ்ரீ சக்கரத்தை" பொதுவாக எல்லா கோவில்களிலும் தரையில் பதித்து மறைத்து வைத்து பூசை செய்வார்கள். ஆனால், இங்கு வரும் அடியவர்களுக்கு அந்த ஸ்ரீசக்கரத்தின் அருள் கிடைக்க வேண்டும் என அகத்தியப் பெருமானே அதை செங்குத்தாக ஸ்தாபிதம் செய்து பூசை செய்ததாக சொல்கிறார்கள்.
 3. இந்த மலையில் இருக்கும் பைரவர் சன்னதி மிக பிரசித்தமானது.
 4. ரூப அரூபமாக சித்தர்கள் தரிசனம் கிடைக்கும் இடம்.
 5. ஊற்று நீரையே தீர்த்தமாக அளிக்கிறார்கள்.
 6. குகைக்குள் அமைந்துள்ள சன்னதியில் ஸ்ரீ சக்கரத்துக்கு அருகில் அகத்தியப் பெருமானின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.
 7. அகத்தியப் பெருமான் கபிலர் போன்ற சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகளுக்கு "ககனமார்கத்தை" உபதேசித்த இடம்.
 8. அகத்தியப் பெருமான் இங்கு மாதா லோபாமுத்திரையுடன் அமர்ந்து தவமியற்றி, பூசை செய்த இடம் என்கிறார்கள்.

இந்த இடத்தைப் பற்றிய விரிவான ஒரு வீடியோவை கீழே தருகிறேன்.கார்த்திகேயன்!

Thursday, 1 January 2015

சித்தன் அருள் - 206 - நவக்ரகங்கள் - சூரியன்


நாடியில் அகத்தியப் பெருமான் வந்து பலருக்கும் பரிகாரங்கள் சொல்கிற பொழுது நவக்ரகங்களை பற்றி நிறைய விஷயங்கள் பெருமையாக சொல்லியுள்ளார். அவற்றில், மிகச் சிறந்த விஷயம் என்பது, எல்லா கிரகங்களும் தாங்களுக்கு இறைவனால் இடப்பட்ட வேலையை மிகச் சரியாக செய்கின்றது என்பதே. ஆம்! மனிதனாக இவ்வுலகில் பிறந்து, ஆறறிவு பெற்றதால் மட்டுமல்லாமல், சரியாக சிந்தித்து, தர்மமே செய்து வந்தால், நவக்ரகங்கள் ஆசிர்வதிக்குமே அன்றி ஒரு பொழுதும் ச்ரமங்களை கொடுக்காது என்றும் கூறுகிறார்.

அப்படிப்பட்ட நவக்ரகங்களின் விரிவான விஷயங்களை பற்றி கூறியதை இன்று சூரியனிலிருந்து பார்ப்போம்.

இந்த அற்புதமான பூமிக்கு அனுதினமும் கண்கண்ட தெய்வமாக காட்சி அளித்து, கஷ்டங்களை நீக்குபவன் சூரியன், வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் சூரியனுடைய புகழையும், வரலாற்றையும் பலவகையில் எடுத்துச் சொல்லுகின்றன. ரிக் வேதத்தில், அக்னிகள் மூன்று என்றும், அவற்றில் தலையாய அக்னியாக சூரியன் விளங்குகிறான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

சூரியனுக்கு ஏழு பெயர்கள் உண்டு.  அந்த ஏழு பெயர்களும், காரணப் பெயர்கள். 
 1. இருளை அழிப்பதால் "சவிதா"
 2. ஒளியை எல்லா உலகங்களுக்கும் விழச் செய்வதால் "பகன்"
 3. ஒளியைக் கொடுத்ததோடு மட்டுமின்றி அந்த ஒளியின் காரணமாக பூமிக்கு உயிரையும் நல்ல உரத்தையும் தருவதால் "பூஷா"
 4. வானம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று லோகங்களையும் தன் ஒளிக்கற்றையைக் கொண்டு அளப்பதால் "விஷ்ணு"
 5. இரவில் தன் ஒளிப்பிழம்பைச் சுருட்டி, மடக்கி அமைதியாக மாறிவிடுவதால் "கேசி"
 6. எல்லா மக்களின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய ஒரே கண்கண்ட தெய்வம் போல் பவனி வருவதால் "வைசுவானரன்"
 7. சிகப்பு நிறக்கதிர்களைத் தன்னிடமிருந்து வெளிபடுத்துவதால் ஒரு துடிப்பு மிக்க காலைக்குரிய வீரியத்தைப் பெற்று வலம் வருவதால் "வ்ருஷாகபி" என்று இப்படி ஏழு பெயர்களை உடையவர் சூரிய பகவான்.

சூரிய உதயத்திற்கு முன்பு "உஷாவை" மனைவியாகக் கொள்கிறான், நண்பகலில் சூர்யாதேவியையும், மாலை நேரத்தில் அல்லது சந்த்யாகாலத்தில் "வ்ருஷாக்"பாயினையும் சூரியன் மனைவியாகக் கொள்கிறான் என்பது ஐதீகம்.

 1. ரிக் வேதத்தில் "நம்மை காப்பாற்றும் கண்கண்ட ஒரே கடவுள் சூரியன்தான். யாரை மறந்தாலும் பரவாயில்லை, தினமும் காலையில் சூரியனை வழிபட மட்டும் மறந்து போனால் அவனுக்குச் சொர்க்கம் கிடையாது" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 2. யஜுர் வேத காலத்தில் சூரியனைப் பற்றி சொல்லும் பொழுது "எல்லா உலகையும் ஒளிமயமாக ஆக்குபவன் நீ; உனக்கு தோல்வி என்பதே கிடையாது. நீ மகான், ஆதித்யன், உனக்கு சமமானவர் யாரும் இல்லை, இந்த உலகில்" என்று கூறப்பட்டுள்ளது.
 3. சாம வேதத்தில் "உன்னிடம் நோய்களை குணப்படுத்தும் மகா சக்தி இருக்கிறது. துன்பத்தை ஒட்டுவாயாகா! பகையை விரட்டுவாயாக! எங்களை காப்பாற்றுவாயாக" என்று பல இடங்களில் சூரியனைப் பற்றி பெரிதும் சொல்லியிருக்கிறது.
எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரம் ஒன்றுண்டு. அந்த மூல மந்திரத்திற்கு "தாயாக" விளங்கக் கூடியவள் "காயத்ரி". அந்த காயத்ரிக்குத் தெய்வம் "சூரிய பகவான்" என்பதை பார்க்கும் பொழுது சூரிய பெருமானின் மகிமை நமக்கு புலனாகும்.

சூரிய பெருமான் காச்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவன். அதிதிக்குப் பிறந்த காரணத்தினாலோ என்னவோ அதிதியின் புத்திரன், ஆதித்தியன் என்று பெயர் விளங்கலாயிற்று.

பாரதத்தில் இன்னொரு கதையும் சொல்வதுண்டு.  காச்யப முனிவருக்கும் அதிதிக்கும் பன்னிரண்டு குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் பன்னிரண்டு பேரும் பன்னிரண்டு விதமாகக் காணப்பட்டனர்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி சொந்தமாயிற்று. அதனால் தான் பன்னிரண்டு ஆதித்தியர்கள் பன்னிரண்டு விதமாக நமக்கு அருள் பாலித்து வருகின்றனர். இவர்களில் தலையாய குமாரர் "சூரியன்".

தேவர்களுக்காக அமுதம் கடைந்த போது, ராகு பகவான் மறைவாக வந்து அந்த அமுதத்தை உண்டான். இதைக் கண்டு வெகுண்டு எழுந்தனர் அனைவரும். சூரியனும், சந்திரனும் "ராகு அமுதத்தை உண்கிறான்" என்று மற்றவர்களுக்கு காட்டினார்கள். மற்றவர்கள் கோபத்தால் ராகுவைத் துண்டித்துவிட்டனர்.

தன்னை காட்டிக் கொடுத்த சூரியனையும் சந்திரனையும் பழி வாங்கத் துடித்தான் ராகு. அதற்கேற்ற சமயத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தகுந்த காலம் வந்ததும் ராகு, சூரியனை கவ்விப்பிடித்துக் கொண்டான். சூரியனது பலம் மறைந்தது. ஒளி மங்கியது. உலகம் இருண்டது.

அப்பொழுது சூரியன் நினைத்தான், "நான் தேவர்களுக்காகத் தானே அன்றைக்கு ராகுவைக் காட்டிக்கொடுத்தேன். இன்றைக்கு ராகுவின் கோபத்திற்கு ஆளாகி, துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு தேவராவது என்னை வந்து விடுவிக்க முயலவில்லையே! மரியாதைக்கு கூட ஏனென்று கேட்கவில்லையே! சே! என்ன நன்றி கெட்ட தேவலோகம்?" என்று வருந்தினான்.

சில மணி நேரம் கழித்து ராகு தன் கோபத்தை விட்டுவிட்ட பின், சூரியன் கடும் கோபம் கொண்டு "இனிமேல் எனது வெப்பம் இந்த அகிலத்தையே அழிக்கும், அதில் தேவர்களும் தப்ப முடியாது" என்று சொல்லிவிட்டு மறைந்து கொண்டான்.

சூரியன் மறைந்த போது உண்டான வெப்பத்தையே மூவுலகமும் தாங்க முடியவில்லை, இன்னும் சூரியன் நேரில் வந்து வெப்பத்தைக் காட்டினால் சர்வமும் சாம்பலாகப் போய் விடுமே" என்று பயந்தனர் தேவர்கள்.

சித்தன் அருள் ............ தொடரும்!