​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 29 January 2015

சித்தன் அருள் - 209 - நவக்ரகங்கள் - செவ்வாய் (அங்காரகன்)


கோயில்களில் காணப்படும் வீரபத்திரரே அங்காகரன் என்று சொல்வதுண்டு. வீரபத்திரரின் பிறந்தநாள், செவ்வாய்க்கிழமை ஆகும்.

பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர், செவ்வாய். அவந்தி நாட்டிற்கு அதிபதி. வேல், கதை, சூலம், கட்கம் வைத்துள்ள நான்கு கைகளை உடையவர்.

அக்னி நிறத்தோடு காணப்படும் சிவந்த ஆடை, செந்நிறப்பூவையும், பவளத்தையும் அணிந்தவர்.

எட்டு சிவப்பு ஆடுகள் பூட்டிய ரதத்தில் ஏறி, மேருமலையை வலம் வருபவர். இவருடைய மகிழ்ச்சி நமக்கு கிடைக்க வேண்டுமானால், பூமாதேவியையும், முருகப் பெருமானையும் தினம் வலம் வந்து த்யானிக்க வேண்டும்.

இவருடைய இருப்பிடம் சூரியனுக்குத் தெற்கில், திரிகோண மண்டலத்தில் தெற்கு முகமாக வீற்றிருப்பவர், என்று வரலாறுகள் கூறுகின்றது.

சிவபெருமான் யோகத்திலிருந்த பொழுது, அவருடைய நெற்றிக் கண்ணில் வியர்வை உண்டாகி அது பூமியின் மீது விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் ஆண் குழந்தையாக மாறியது. பூமாதேவி அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தாள். முருகப்பெருமானின் சகோதரர் இவர் என்பதால் "செவ்வாய்" என்ற, அங்காரகனை முருகப் பெருமானின் அம்சமாக வளர்த்து வந்தார் என்பதும் ஒரு புராணக் கதை.

மற்றொரு கதையும், செவ்வாயை பற்றி கூறப்படுவதுண்டு.

பாரத்வாஜ மகரிஷி நதி தீரத்தில் மிக அழகான ஒரு பெண்ணைக் கண்டார். அவளது அழகும், சொந்தர்யமும், பரத்வாஜ மகரிஷிக்கு மனத்தைக் கலக்கியது.

எவ்வளவோ முறை தன் மனத்தைக் கட்டுப்படுத்திப் பார்த்தும் அவரால் அவள் மீது கொண்ட ஆசையை மாற்ற முடியவில்லை.

அவரது உடலில் இருந்து "ரேதஸ்" பூமியில் விழுந்தது. பின்னர் அந்த "ரேதஸ்" ஒரு ஆண்குழந்தையாக உருமாறிற்று. பூமாதேவி அந்த ஆண் குழந்தையை எடுத்து வளர்த்தாள். அந்த குழந்தைக்கு பௌமன் என்ற திருநாமம் வழங்கப்பட்டது. பௌமன் இறைவனை நோக்கி நீண்டகாலம் கடும்தவம் இயற்றினான். அவனுடைய தவவலிமையைக் கண்டு, நவக்ரகத்தில் ஒரு கிரகமாக மாற்றி, அவனுக்கு "அங்காரகன்" என்ற மற்றொரு பெயரும் வழங்கப்பட்டது.

லிங்கபுராணம் அங்காரகனின் பிறப்பை வேறுவிதமாக கூறுகிறது.

அக்னிக்கும், விகேசிக்கும் அன்யோன்ம் உண்டு. இந்த அன்யோன்யத்தால் விகேசி ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த ஆண்குழந்தை அக்னியின் குணத்தைப் பெற்றிருந்தமையால், அதற்கு "அங்காரகன்" என்று பெயரிட்டனர்.

"தக்கன்" என்ற புண்ணியர் ஒரு யாகம் நடத்தினார். அதை விட தன்னால் செய்து காட்ட முடியும் என்று வீரபத்திரர் தன் புண்ணிய பராக்ரமங்களைக் கொண்டு "மகாயாகம்" செய்தான்.

அந்த யாகம் கண்டு உலகெங்கும் நடுநடுங்கின. என்ன ஆகுமோ, ஏது நடக்குமோ என்று பயந்து, வீரபத்திரனிடம் வந்து, "இந்த பயங்கர யாகம் வேண்டாம்" என்று கெஞ்சி கேட்டனர்.

வீரபத்திரன், தன் அதிபயங்கரமான ரூபத்தை மாற்றி, அழகான திரு உருவத்தோடு தோன்றினார். "தக்கனை விட அதிபுண்ணியசாலி" என்ற பெயரும் பெற்றார். இதுதான் அங்காரகன் தோன்றிய வரலாறு என்று மச்ச புராணம் கூறுகிறது.

பொதுவாக;

உஷ்ணம், அஸ்ருமுகம், வாளம், ருதிரான்னம், நிச்த்ரிம்சம் என்னும் ஐந்து முகங்கள் செவ்வாய்க்கு உண்டு.

அங்காரகனுக்கு மேஷ வாகனம் என்று பல நூல்களும், சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்று சில நூல்களும் சொல்கின்றது.

அவருக்கு சிவப்பு குடை உண்டு. கொடியில் மேஷத்தின் உருவம். திருமுடி தரித்திருப்பான். தன் பத்னி இல்லாமல் அங்காரகன் எந்த காரியத்தையும் செய்வதில்லை. முக்கோண மண்டலத்தில் வீற்றிருப்பவன். அவந்தி நாட்டிற்கு அதிபதி. பாரத்வாஜ கோத்திரம் அவனுக்கு சொந்தம். 

அங்காரகனுக்கு அதிதேவதை ப்ரித்வி. ப்ரத்யாதி தேவதை ஷேத்திர பாலகன். இவர்கள் முறையே அவனுக்கு வலப்புறமும் இடப்புறமும் இருப்பார்கள்.

லோகிதாங்கன், ரக்தாய தேஷணன், ரக்த வர்ணன் என்ற பெயர்களும் அங்காரகனுக்கு உண்டு.

வேலேந்துவதால் சக்திதரன், திருஉருவம் அழகாக இருப்பதால் "குமாரன்", எப்பொழுதும் மங்களத்தையே செய்வதால் "மங்களன்", நிறைய செல்வத்தை தருவதால் தனப்ரதன், பொற்குண்டலத்தை அணிந்து கொண்டிருப்பதால் ஹேமகுண்டலி என்று அழைக்கப்படுகிறான்.

குணஹர்த்தா, ரோகக்ருத், ரோகநாசனன், வித்யுத்பரபனி, வ்ரணகரன், காமதன், தானஹ்ருதி, சாமகானப் பிரியன், ரக்த வஸ்த்ரன், கிரக நாயகன், சர்வ தர்மாவா போதகன் போன்ற சூசகப் பெயர்களாலும் "செவ்வாய்" வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரோமாபுரி நாட்டினர் கூட செவ்வாயை தங்களது போர் கடவுளாக கொண்டாடினர். பல கோயில்கள் அங்காரகனுக்கு இன்றும் ரோம் நகரில் உள்ளது.

தமிழ்நாட்டில் அங்காரகனுக்கு மூன்று பிரசித்திப் பெற்ற கோவில்கள் உண்டு.

திருச்சிறுகுடி - இது மாயாவரத்திர்க்கு பக்கத்தில் பேராளம் ரயில் நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

வைத்தீஸ்வரன் கோவில் - மாயவரத்திலிருந்து சிதம்பரம் போகும் பாதையில் இருக்கிறது.

ஆறு படை வீடுகளில் முக்கியமானதாக கருதப்படும் பழனி மலைக்கு அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி கூட முருகப்பெருமனுக்குரிய (செவ்வாய்) பரிகாரத் தலமாகும்.

ஒரே ஊரில், செவ்வாய்க்கும், புதனுக்கும் பரிகாரத்தலமாகவும், ராகு கேது தோஷங்களை அறுக்கிற புண்ணியத்தலமாகவும் இருக்குமிடம், கோடகநல்லூர்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் "9" என்கிற எண்ணை அங்காரகனுக்கு கொடுத்துள்ளார்கள். அந்த எண்ணை  நோக்கினால் அது ஒரு முழுமை பெற்ற எண் என புரியும். அது மஹா சக்தியையும் குறிக்கும் ஒரு நிலை.

செவ்வாயை பற்றி வேதங்களில், பூமாதேவியின் கர்பத்தில் உதித்தவன், மின்னலை போல ஒளியைக் கொண்டவன், அழகானவன், சக்தி ஆயுதம் தரிப்பவன் என்று கூறப்பட்டுள்ளது.

உடல் உறுதிக்கும், மன உறுதிக்கும் செவ்வாய் தான் காரகன்.

அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், நாட்டுத் தளபதிகள், நீதிபதிகள், பொறியியல் வல்லுனர்கள் ஆகியோருக்கு அங்காரகன் அருள் கண்டிப்பாக இருக்கும்.

புரட்ச்சி செய்கின்ற அனைவரும் அங்காரகன் அருளை பெற்றவர்கள். கண்டிப்பு, தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை பந்தாடும் பராக்கிரமம் இவற்றையும் அருளுபவன் செவ்வாய்.

ரத்தத்திற்கு காரணன்.  ரத்த தொடர்பில் உள்ள சகோதரர்களுக்கும் காரகன். நமது உடலில், எலும்பினுள் ஊன். பூமிக்கு காரகன். உஷ்ணம், கோபம், ராஜ தந்திரி, எரிபொருள்,  தங்கம்,  தாமிரம், நாகன், நாகசுப்பிரமணியன், அங்காரகன்தான்.  ஆயுதம் தரிப்போன், அரச இனத்தோன், செந்நிறத்தோன், கடும் பார்வை உடையவன், தற்பெருமை பிரியன், பொறுமை இல்லாதவன், வேட்டைப் பிரியன், துணிச்சல்காரனும் அங்காரகன்தான். பவழம் இவனது ரத்தினம். நெருப்புக்கு சொந்தக்காரன். ஆண்மகன். தென்திசைக்கு அதிபதி.

வியாழன், சூரியன், சந்திரன் இவனது நண்பர்கள். புதன் பகைவன்.

ஜோதிடத்தில், மேஷம், விருச்சிகம் இரண்டும்  சொந்த வீடுகள். கடகம் நீசவீடு. மகரம் உச்சவீடு. மிதுனம், கன்னி இவை இரண்டும் பகை வீடுகள். சிம்மம், தனுசு, மீனம்; இந்த வீடுகள் நட்பு வீடுகள்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களுக்கு  நாயகன்.

சித்திரை மாதம்  முதல் செவ்வாய் கிழமையில் வீரபத்திர சுவாமியை வழிபட்டால், அங்காரகனது அருளும் சேர்ந்து கிடைக்கும்.

வியாதிகள் குணமாவதற்கும்,  நிலம்,பூமி, மனை வாங்குவதற்கும் செவ்வாயின் அருள் வேண்டும்.

வியாதி குணமாக மருந்து சாப்பிடுவதை செவ்வாய் அன்று தொடங்கினால், விரைவில் குணமடையலாம்.

"வீரத் த்வஜாய வித்மஹே  விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரசோதயாத்" 

என்கிற அங்காரகனுடைய காயத்ரி மந்திரத்தை தினமும் 27 தடவை காலையிலும், மாலையிலும் சொல்லிக் கொண்டே வந்தால் அவர்களுக்கு வியாதியே வராது என்பது, தத்ரூபமான உண்மை.

சித்தன் அருள்............... தொடரும்! 

4 comments:

  1. அதிகாலை பதிவை காணாததால், மீண்டும் ஒரு நீண்ட இடைவெளியா என்ற ஏமாற்றம் எட்டு மணிக்கு நீங்கியது. நன்றி.

    ReplyDelete
  2. அகத்தியர் அருள்வாக்கில், செவ்வாயினால் கோசாரத்திலும் தசா புக்தியுலும் நல்ல எண்ணங்கள் எழ, நற்செய்கைகள் செய்ய, நல்விதமாக வாழ்க்கை செல்ல "இரத்த தானம்" மிகச்சிறந்த பரிகாரம் என்று அருளியிருக்கிறார்.

    ReplyDelete
  3. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  4. Different texts give different devatas and adi-devatas for the grahas. It is all somewhat confusing.

    ReplyDelete