​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 26 July 2012

சித்தன் அருள் - 82

வணக்கம்!

ஸ்ரீ அகத்தியர் சித்தர் அருளால் நடக்கிற விஷயங்களில், அவர் மனித குலத்தின் மேன்மைக்காக,  ஒரு தபஸ்வி என்பதையும் விட்டுவிட்டு, இறைவனிடம் நம் தவறுகளை மன்னிக்க எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.  ஒரு சில நிகழ்ச்சிகளில் சில விஷயங்கள் மறைக்கபடலாம், சூட்ச்சுமமாக சில உரைக்க படலாம்.  இப்படி அவர் செய்வதுகூட மனித குலத்தில் பிறந்த எவருமே ச்ரமங்களை அனுபவிக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் தான். ஏன் என்றால் அவரவர் கர்மா, ச்ரமங்களை கொடுத்துதான் தவறுகளை செய்யவைக்கும்.

மலை கோயில் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட பின், பலரும் அந்த கோயில் எங்கு இருக்கிறது?  எப்படி போக வேண்டும் என்று விசாரிக்க தொடங்கினர்.  எனக்கோ, இவர்கள் விசாரிப்பில் எங்கோ ஒரு தவறு உள்ளதே என்று தோன்ற, அந்த கோவில் இருக்கும் கிராமத்தின் பெயரை சொல்லாமல் மறைத்தேன்.  ஏதோ ஒரு உந்துதலில், யாராவது வீரமாக அங்கே போய் இரவு தங்கி, ஏதாவது ஏடா கூடமாக நடந்து விட கூடாதே!  அந்த பயம் என்னை சூழ்ந்தது.  பிறகு யாரிடமாவது அந்த நிகழ்ச்சியை பற்றி பகிர்ந்து கொண்டால் கூட, "ஈரோட்டையும்" விட்டு விட்டேன். இப்படி சொல்லப்போக, கேட்பவர் மிக ஆனந்தமான மன நிலையை அடைவதை பல முறை பார்த்திருக்கிறேன்.

நான் சந்தித்த மனிதர்கள், பல விதம்.  ஒரு விஷயத்தை சொல்லும் போது அவர்கள் எடுத்துக் கொள்கிற விதம் பல கோணங்களில் இருந்தது.  இந்த உலகத்தில் தான் வித்யாசமானதை தேடுபவர்களும் இருக்கிறார்களே.  ஆகவே நான் சந்திக்கிறவர்களை பல நிலைகளில் அடுக்க தொடங்கினேன்.

ஆன்மீக வழியில் அதை எடுத்துக்கொண்டவர்கள்.  அத்துடன் திருப்தி அடைந்தவர்கள்.

சித்தர் விளையாட்டுக்களை அனுபவிக்க நினைக்கிறவர்கள்.

அப்படிப்பட்ட கோயிலை பார்க்க நினைக்கிறவர்கள் ஆனால் போதிய தகவல் இல்லாததால் மனதுக்குள் நிகழ்ச்சியை ஒதுக்கி வைத்து என்றேனும் ஒருநாள் இறை அருள் இருந்தால் பார்க்கலாம் என்று அமைதியானவர்கள்.

அப்படிப்பட்ட கோயிலை பார்க்க நினைக்கிறவர்கள்.  இருப்பினும் போதிய தகவல் இல்லாததால் நாமே கண்டுபிடிப்போமே என்று இறங்குபவர்கள்.  இப்படிப்பட்டவர்கள் ஒன்று போதிய தகவலை கொடுக்காததால், அவர்கள் அகந்தையை கிளறிவிட்ட வகை, இரண்டு, முயற்சி செய்வோமே.  நமக்கு இறை அருள் இருக்கிறதா? என்று தன்னையே சோதித்து கொள்பவர்கள்.

இந்த   நான்காவது வகையினர் (ஒன்றாம் வகையில் பட்டவர்கள்) மிக ஆபத்தானவர்கள் என்று புரிந்து கொண்டேன்.  சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது தேடி போய் ஆபத்தை விலைக்கு வாங்கி வந்து ச்ரமங்களை அனுபவிப்பார்கள்.  நான்கு (இரண்டாம்) வகையினர், தன்னையே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதால், இறைவன் நிறைய சோதனைகளை தருவார் ஆனால் முடிவு சுபமாக இருக்கும்.  இந்த வகையினரின் நிகழ்ச்சிகளில் இறை அருள், சித்தர் விளையாட்டு, பாதுகாப்பு எல்லாமே உறுதி செய்யப்படும்.  அதற்காக தவறு செய்தால், கூட நிற்பார்கள் என்று நினைக்க கூடாது.  என்ன செய்தாலும், இது உங்கள் உத்தரவு, நான் வெறும் ஒரு கருவி.  இதன் பலன்கள் உங்களையே வந்து சேரும்.  நான் எதுவும் செய்யவில்லை, என்கிற எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தால் சித்தர்கள் அருள் சின்ன சின்ன விஷயங்களில் கூட,  நினைத்ததும் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பதை உணரலாம்.

இப்படித்தான், ஒரு முறை ஒரு நபரை குடும்ப நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது.  மலைகோயிலை பற்றி நிறைய விஷயங்களை சொன்னேன்.  முன்னரே இடம், வழி இவைகளை யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்திருந்ததினால், அதை வெளியிடவில்லை. 

பொறுமையாக எதுவும் பேசாமல் அத்தனையும் கேட்டுகொண்டிருந்த "அவன்" அனைத்தையும் உள்ளுக்குள் க்ரகித்துக்கொள்கிறான் என்று எனக்கு புரியவில்லை.  எல்லோரையும் போல், சொல்லி முடித்ததும், 

"அந்த கோவில் எங்கு இருக்கிறது?" என்றான்.

"அதை சொல்லுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்" என்றேன்.

"சரி! இதுவரை சொன்னதுக்கு நன்றி!" என்று உடனே கூறி விடை பெற்றான்.

சற்று ஆச்சரியமாக இருந்தது.  பொதுவாகவே இப்படிப்பட்ட விஷயங்களை பேசினால் மற்றவர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். இன்னும் ஏதாவது விஷயங்கள் வெளியே வருமா என்று ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.அல்லது நிறைய கேள்விகளை கேட்பார்கள்.  இவன் முக பாவத்தில் ஒரு மாற்றமும் இல்லை.  ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டான். சொல்ல முடியாது என்று சொன்ன உடன் "சரி" என்று சென்று விட்டான்.

"சரி" இவனும் மற்றவர்களை போல் நிகழ்ச்சிகளை கேட்பதில் மட்டும் விருப்பம் உள்ளவன் போல் என்று தீர்மானித்தேன்.  பிறகு அவனை ஒருபோதும் நேரில் சந்திக்கவில்லை.  சில வருடங்கள் சென்றது.

ஒரு நாள் காலையில் வந்திருந்த சிலருக்கு நாடி வாசித்துக் கொண்டிருக்கையில், இரண்டு நண்பர்கள் வந்து, "அவன்" சொல்லி அனுப்பியிருக்கிறான், அவனால் வர முடியவில்லை.  அகத்தியரிடம் ஒரு சில விஷயங்களை நாடி மூலம் கேட்டு பதிலை பெற்று தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

"சரி! அமருங்கள்! உங்களுக்கு முன்னரே வந்திருக்கும் அத்தனை பேருக்கும் நாடி வாசித்த பின் அவனுக்கு வாசிக்கிறேன்" என்று கூறி அமர சொன்னேன்.

அவன் நேரம் ..........  அன்று காலையில் வந்து அமர்ந்த அவர்களை அன்று இரவு ஒன்பது மணிக்கு தான் அழைக்க முடிந்தது.

நாடியை வாசிக்க தொடங்கினேன்.  அவர் சொன்ன விஷயங்கள் அத்தனையும் அதிர்ச்சி தருவதாக இருந்தது!

சித்தனருள்.........  தொடரும்!

Thursday, 19 July 2012

சித்தன் அருள் - 81

முன்பு -

அந்த மலைகோயிலில் மூன்று இரவுகள் நான் தங்கியபோழுது - "பாம்பு" எதுவும் என் கண்ணில் பட்டதில்லை.  இப்பொழுதுதான் சுமார் எட்டடி நீளமுள்ள அந்தக் கருநாகத்தைப் பார்த்தேன்.

இது இரை தேடி வந்த பாம்பா அல்லது இரை எடுத்து உண்ட பாம்பா - என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஏனெனில் இரைதேடி வந்த பாம்பென்றால் யார் குறுக்கே வந்தாலும் அல்லது நின்றாலும் அது பயங்கரமாகச் சீரும்.  பின்னர் பயந்து கொண்டே வெகு வேகமாக மறைவிடத்தை நோக்கி ஓடும்.

ஒரு வேளை நன்றாக இரையை உண்டு விட்டால் அது நிதானமாக ஊர்ந்து புதர், குழி அல்லது குளிர்ச்சியான இடத்தை நோக்கி நகரும்.  பெரும்பாலும் ஒன்றும் செய்யாது என்று கேள்வி.

ஒரு வேளை அந்தப் பாம்பு என்னை நோக்கி வந்தால் நான் வேகமாக ஓடியோ அல்லது அங்குள்ள கோயில் திண்ணையின் மீது ஏறியோ அல்லது கம்போ - குச்சியோ கொண்டு அதை விரட்டியடித்துத் தப்பித்துக் கொள்ள முடியும்.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக - அந்தக் கருநாகம் இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கும் திக்கு வாய்க்காரனுக்கு கால் பக்கத்தில் வந்து கொண்டிருப்பதால் அது என்ன செய்யுமோ எது செய்யுமோ என்ற பயம் ஏற்பட்டது.  நல்ல வேளை அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.  ஒரு வேளை அவன் சட்டென்று புரண்டு அந்தப் பாம்பின் மீது சாய்ந்து விட்டால் அவன் கதி அதோ கதி தான்.  பாம்பும் அவனைத் தீண்டிவிடும். பின் எப்படி ஜமீனுக்குச் சொந்தமாவது? என்ற கற்பனையும் எனக்கு ஏற்பட்டது.

முன்பொரு சமயம், பாம்புக்கடியை மந்திரம் மூலம் குணப்படுத்த முடியுமா? என்று அகஸ்தியரிடம் நாடி மூலம் கேட்டபொழுது "முடியும்" என்று சொன்ன அகஸ்தியர் எனக்கு அந்த மூலமந்திரத்தை உபதேசித்தார்.  அது மட்டுமல்ல, தேள்கடி, நட்டுவாக்கள்ளி கடி, விஷ வண்டுகள் கடி தாக்கினால் அதிலிருந்து தப்பிக்க என்ன என்ன மந்திரம் உண்டு என்பதையும் சொன்னார்.

இந்த விஷக்கடியைப் போக்கும் மந்திரங்கள் நிலைத்துப் பலம் தர வேண்டுமானால் சில விதிகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.  அப்படிச் செய்ய முடியாது போனால், மந்திரங்களுக்குப் பலன் இருக்காது.  பின்னர் அகஸ்தியரைப் பழிப்பதில் அர்த்தமில்லை என்றும் அறிவுரை சொன்னதால் முதலில் அவர் சொன்னபடி சில விதிமுறைகளைக் கையாண்டேன்.

அவற்றில் ஒன்று தான் கிரகணத்தன்று முட்டியளவு நீரில் நின்று சில குறிப்பிட்ட மந்திரங்களை விடாமல் ஜபிப்பது.  இதனைப் பின்னர் நான் தொடர்ந்து செய்ய முடியாது போயிற்று!

இப்பொழுது அந்த கருநாகம், திக்கு வாய்க்காரனை ஒரு வேளைத் தீண்டினால் அகஸ்தியர் அருளிய அந்தப் பாம்புக்கடி மந்திரம் பலிக்குமா? என்பது சந்தேகம் தான்.  இது வரையிலும் "பாம்புக்கடி" கடித்தவர்களுக்கு நான் மந்திரம் சொல்லக் கூடய சந்தர்ப்பமும் பாக்கியமும் ஏற்பட்டதில்லை.

இன்றைக்கு அப்படிப்பட்ட சம்பவம் இங்கு நடக்கப் போகிறதா? அதற்காகத்தான் அகஸ்தியப் பெருமான் என்னை இங்கு வரவழைத்து விட்டாரா? என்று கூடத் தோன்றியது.  இதற்கிடையில்......

அந்தக் கருநாகம் திக்கு வாய்க்காரன் கால் பக்கத்திலிருந்து மெதுவாக ஊர்ந்து அவன் இடுப்பு வழியாக மேலேறியது.  சுற்று முற்றும் ஒரு தடவை நன்றாகப் பார்த்து.  பின் அவனது வயிற்று பக்கமாக விறுவிறு என்று இறங்கி - நேர் எதிரில் தெரிந்த கோயிற் கதவின் இடுக்கு வழியே கருவறைக்குள் புகுந்து விட்டது.

"அப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாலும், அந்தப் பாம்பு நேரிடையாகக் கோயில் கர்பக்ரகத்துக்குள் போயிருக்கலாம் - எதற்காக இவன் மீது ஏறி அவனை ஒன்றும் செய்யாமல் பின் இறங்கிச் சென்றது? - என்ற கேள்வி மட்டும் என் உள்மனதை உறுத்திக் கொண்டிருந்தது.

இத்தனை நடந்தும் கூட, அவன் ஆடாமல் - அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.  அவனை எழுப்பினேன்.

என்னைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவனுக்கு - ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்க முடியவில்லை.  அவனை ஆச்வாசப்படுத்தி "கருநாகம்" வந்து போன செய்தியைப் பற்றிச் சொன்னேன்.

பரவசப்பட்டுப் போனான்.  அதோடு தொடர்ந்து கோயிலில் விளகேற்றுவதாகவும் கூறினான்.

இனியும் அங்கு நேரத்தைக் கழிப்பதில் பயனில்லை என்றெண்ணி கிராம கர்ணத்திடம் உத்திரவு பெற்றுக் கிளம்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு கார் அங்கு வந்து நின்றது.

வந்திருப்பவர்களில் ஒருவர் மலயாளத்துக்காரர்.  மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள், ஆனால் கிராமத்து தோற்றம்.

"இங்கே கிராம அதிகாரியின் வீடு எதுங்க?"  என்று கேட்டார் ஒருவர்.

"அதோ அந்த வீடுதான்.  ஆனா அவரு ஊர்ல இல்லீங்களே".

"எப்போ வருவாங்க?"

"சொல்ல முடியாது.  இரண்டு, மூன்று நாள் ஆகலாம்.  நீங்க யாருங்க?  நான் இந்தக் கிராமத்து கர்ணம், ஏதாவது வேணும்னா என்னைக் கேட்கலாம்".

"உங்க கிட்டே கொஞ்சம் தனியா பேசணும்".

"வாங்க திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம்" என்ற கர்ணம், அவர்களை அழைத்தார்.  என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்தத் திக்கு வாய்க்காரனைக் கடைக்கு அனுப்பி "சோடா கலர் வாங்கி வா" என அனுப்பினார்.

"நாங்க, ராமையன்பட்டி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவங்க.  எங்க குடும்ப வாரிசுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தையை பணத்துக்கு ஆசைப்பட்டுத் தூரத்துச் சொந்தக்காரங்க சிலர் பல வருஷங்களுக்கு முன்பு கடத்திட்டுப் போனாங்க.  அப்புறம் அந்தப் பையனைப் பத்தி விவரம் கிடைக்கலீங்க.  நாங்களும் தேடித் பார்த்து விட்டுட்டோம்.  ஒன்னரை மாசத்துக்கு முன்பு அந்தத் தூரத்துச் சொந்தக்காரங்கள்ல ஒருவன் ஒரு கடிதாசி போட்டிருந்தான்.  அதில் அந்தக் குழந்தையை ஈரோட்டிலே பிளாட் பாரத்திலே போட்டுட்டு ஓடிப் போயிட்டதாகவும், அது உயிரோடு தான் இந்தப் பக்கம் இருக்குன்னு எழுதி, தாங்கள் செய்த தவறுக்குத் தெய்வம் இப்போ வேறு விதமாகத் தண்டனை கொடுத்துட்டதாகவும் ஆயிரம் மன்னிப்புக் கேட்டு எழுதியிருந்தான்.  இப்போ அந்த ஜாமீனுக்கு வாரிசு இல்லை.  அந்த ஜமீந்தார் தனது உயில்லே காணாம போன என் பையனைக் கண்டு பிடிச்சு அவங்ககிட்டே இந்த ஜமீனை ஒப்படைக்கவும், அப்படி அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லைனா திருப்பதி கோயிலுக்கோ அல்லது அரசாங்கத்திர்க்கோ சொத்தைக் கொடுத்து விடலாம்னு எழுதிட்டுச் செத்துப் போயிட்டாருங்க."

"எங்களுக்கு அந்த ஜமிந்தார் செத்துப் போன பத்து நாளுகளுக்குப் பிறகுதான் அவர் உயில் சமாச்சாரம் இதோ இருக்காரே இந்த வக்கீல் மூலம் தெரிய வந்தது.  அதே நாள்லதான் அந்தத் தூரத்துச் சொந்தக்காரங்க கிட்டேயிருந்து பையனைப் பத்தி விவரம் கிடைச்சுது.

இதை தெய்வ பலமா நெனச்சு சந்தோஷப்பட்டோம்.  பத்து நாளைக்கு முன்னால இந்த ஈரோடு, சேலம், திருப்பூர் பக்கம் விசாரிச்சோம்.  அநாதை ஆஸ்ரமத்திலே போய்க் கேட்டோம்.  கிறிஸ்துவ பாதிரியார் கிட்டே, ஹோட்டல் நடத்தரவங்ககிட்டே, போலீஸ் காரங்கிட்டே எல்லாம் போய் கேட்டோம்.

அங்க அடையாளம் இல்லாம பையனைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க" என்று சுவாரஸ்யமாக நடந்த கதையைச் சொல்லி நிறுத்தினார், வந்தவர்களில் ஒருவர்.  ஆஜானுபாகுவாக இருந்த அவர், ஜமீந்தாருக்கு வேண்டியவர்னு தெரிந்தது.  சென்னைக்குக் கிளம்புவதர்காகத் தயாராக இருந்த எனக்கு இந்தத் தகவல் மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது.  ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.  இதற்குள் கிராம கர்ணம், "அய்யா.... வாங்க இப்படி உட்கார்ந்து நீங்களும் இவங்க சொல்றதைக் கேளுங்க" என்று உற்சாகமாக அழைத்ததால் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்தேன்.

மீண்டும் அவரே தொடர்ந்தார்.

"இதோ இருக்கிறாரே இவர் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மிகப் பெரிய ஜோஸ்யர்.  மகாப்ரச்னம் போட்டுப் பார்ப்பதில் வல்லவர்.  இவரை ஊருக்கு அழைத்து, எங்க ஊர் அங்காள பரமேஸ்வரி கோயில் சந்நிதியில் ஜாமீன் பையனைப் பற்றி பிரச்னம் கேட்டோம்.

இவர் சொன்னால், அந்த ஜாமீன் வாரிசு பையனை கண்டுபிடிச்சு ஜமீனை அவனிடம் கொடுப்பது, ஒரு வேளை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் "பூ" கட்டி போட்டுப் பார்த்து இந்த ஜாமீன் சொத்தை திருப்பதி கோயிலுக்கோ அல்லது அரசாங்கத்திர்க்கோ கொடுத்துவிடலாம் என்று எல்லோர் முன்னிலையில் முடிவு கட்டினோம்.

இவர் வந்தார்.  பிரச்னம் போட்டுப் பார்த்தார்.  ஜாமீன் வாரிசு உயிரோடு ஈரோட்டிற்கு ஐம்பது மைல் தொலைவில் இருப்பதாகவும், அவன் திக்கி திக்கி பேசுவான் என்றும், ஒரு சாதாரண குடிசையில் ஊரார் ஜனங்களின் தயவால் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த ஜோதிடர் சொன்னது எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது.  இருந்தாலும் அவரையும் அழைத்துக் கொண்டு இந்த இடங்களில் குக்க்ராமங்களில் தேடினோம்.  இப்பொழுதுதான் அப்படிப்பட்ட ஒருவன் உங்க கிராமத்துலே இருப்பதாகத் தகவல் கிடைச்சது.  நாங்க சொன்ன தகவல் உண்மையாக இருந்தால் நீங்க அனுமதி கொடுத்தால், அந்தப் பையனை எங்களுக்கு அடையாளம் காட்டுங்கள்.  நாங்கள் முறைப்படி எல்லா வகையான அத்தாட்சியையும் கொடுக்கிறோம்" என்றார்.

நான் பதிலே பேசாமல் கிராம கரணத்தின் முகத்தையே பார்த்தேன்.

"நீங்கள் சொல்றது எல்லாம் சரிதான்.  அந்தப் பையன் இங்கே தான் இருக்கான்.  ஆனா - நீங்கள் ஜாமீனுக்கு வேண்டப்பட்டவங்களா - இல்லையா - எந்த உத்திரவாதத்தோடு நான் அனுப்புவதுன்னு குழப்பமா இருக்கு.  அதோடு இந்த விஷயத்திலே நான் மட்டும் முடிவு செய்ய முடியாது.  கிராம அதிகாரி, போலீஸ் அதிகாரிங்க முன்னால் தான் முடிவு செய்யணும்.  ஏன்னா நாளைக்கு ஏதாவது வில்லங்கம் வரப்படாது பாருங்கோ" என்று தன் முடிவைச் சொன்னார்.  அவர்களோ கிராம அதிகாரி எங்கிருந்தாலும் தாங்கள் அழைத்து வருவதாகவும் ஈரோட்டிர்க்குச் சென்று போலீஸ், வக்கீல் ஆகியோரையும் அழைத்து வருவதாகவும், உடனே அந்தப் பையனை தங்களோடு அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்றும் துடியாய்த் துடித்தனர்.  அந்த அவசரம் எதற்கு என்பது எனக்குத் தெரியவில்லை.  கர்ணம் என்னைப் பார்த்தார்.

"இதில் நான் நேரடியாகத் தலையிட முடியாது.  உங்க சட்டப்படி பார்த்து அமைதியாகச் செயல்படும்படி சொல்லிவிட்டு, எனக்கு நேரம் ஆகிறது விடை கொடுங்கள், பின்பு எப்படியாவது தொடர்பு கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டேன்.  ஆனாலும் கர்ணம், விடுவதாக இல்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் கிராமத்துப் பையன் ஒருவன் ஓடிவந்து "அய்யா, நம்ம கிராமத்து காளை, அதான் அந்தத் திக்குவாயன் ஈரோட்டிர்க்குப் போற பாதையிலே, துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு வேகமாகத் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறான்.  என்ன விஷயம்னு தெரியல்லை" என்று சொன்னான்.  கிராம கர்ணம் இதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.  எனக்கோ ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவது போல் தோன்றிற்று.  சில மணி நேரம் பொறுத்துப் பார்த்து அங்கிருந்து நானும் கிளம்பினேன்.

அஷ்டமி, நவமி கழிந்த பின்னர் பிரம்ம முஹுர்த்தத்தில் அகஸ்தியரிடம் அந்தத் திக்குவாய்ப் பையனை பற்றிக் கேட்டேன்.

அகஸ்தியர் சொன்ன செய்தி இதுதான்.

ஜாமீன் சொத்தை அடைய வண்டிக்காரன் முயர்ச்சித்திருக்கிறான்.  அந்தத் திக்குவாயனை மலையிலிருந்து உருட்டி கீழே தள்ள - ஒரு நாள் திக்குவாயனோடு மலையில் ஏறும்பொழுது மலையுச்சியில் திடீரென்று தோன்றிய கருநாகம், அந்த வண்டிக்காரனை விரட்டியிருக்கிறது.  பாம்புக்கு பயந்து மலையிலிருந்து கீழே குதித்தவன் எலும்பு நொறுங்கி குற்றுயிரும் கொலை உயிருமாக வீழ்ந்து கிடக்க - கிராமத்து மக்கள் அவனைத் தூக்கி புத்தூருக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர்.

அந்தக் கருநாகத்தை ஏவியவர் சிவபெருமான்.  திக்குவாயனை, தன் பக்தனைக் காக்கவே இப்படியொரு திருவிளையாடல் செய்திருக்கிறார்.  அது மட்டுமல்ல - அன்று முதல் திக்குவாயனுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் அந்தக் கரு நாகமும் அவனுக்குப் பாதுகாப்பாக மலையிலேயே வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.  அந்தக் கரு நாகத்தை தான் நானும் பார்த்தேன்" என்றவர், அந்த திக்குவாயனுக்குத் தன்னை யாராவது கடத்திக் கொண்டு செல்வார்களோ என்ற பயம் தோன்றியது.  அதற்கு ஏற்றார் போல் அந்தக் கிராமத்திற்கு காரில் வந்த ஆஜானுபாவர்களுக்கு கலர் சோடா வாங்கி வந்தவன் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.

அவர்கள் பேச்சில் போலீஸ் - வக்கீல் - தன் பெயரும் அடிபட்டவுடன் அவர்கள் தன்னைக் கடத்திக் கொண்டு போகப்போவதாக எண்ணி, வாங்கின கலர் சோடாவை அப்படியே ஓரத்தில் சாய்ந்துவிட்டு ஓடி - ஈரோட்டிருக்கு வந்தவன் அப்படியே ரயிலும் ஏறி இருக்கிறான்.

அதே ரயிலில் பயணம் செய்த ஒரு சந்நியாசி அவனைக் கண்டு விஷயத்தைக் கேட்டு தன்னுடைய உதவியாளனாக அவனை நியமித்து உதவி செய்திருக்கிறார்.  விரைவில் அவன் ராமய்யன் பட்டி ஜமீன்தாரராக ஆகும் நாள் தொலைவில் இல்லை.  இதற்கு அந்த சந்நியாசியே உதவுவார்" என்று திவ்யமாகத் திக்குவாயனது கடந்தகால நிகழ்கால, எதிர்கால சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.

இதைப் படித்து முடித்ததும் "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டேன்.

மூன்று மாதம் வேறு பல அலுவல்கள் விஷயமாக இங்குமங்கும் அலைந்ததினால் அந்தத் திக்குவாயனைப் பற்றி நினைக்கவே இல்லை.  பின்னர் ஒரு நாள் சேலம் கந்தாஸ்ரமத்தில் அந்த கிராம கர்ணம், கிராம நிர்வாக அதிகாரியை யதேச்சையாகச் சந்தித்த போது, ராமய்யன்பட்டி ஜமீன்தாராக அவன் மாறிவிட்டதாகவும், சில கோடிகளுக்கு அதிபதியாக இருப்பதாகவும் இப்போது அவனது நிலையே வேறு என்று சொன்னார்கள்.

அகஸ்தியருக்கு நான் நன்றி சொன்னேன்.  இதுபோல் பல நூறு சம்பவங்கள் நடந்திருக்கிறது.  அதில் பலவற்றை அகஸ்தியர் அனுமதியோடு தொடர்ந்து எழுதலாமென எண்ணுகிறேன்.  அகஸ்தியருக்கு குஷி வந்து விட்டால் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காண்பிப்பார்.  இல்லையென்றால் நாடி பார்க்க வருகிறவர்களை வேண்டுமென்றே சோதனையும் செய்வார்.  ஆனால் முடிவு மிக அருமையாக இருக்கும்.

Thursday, 12 July 2012

சித்தன் அருள் - 80

கிடைத்த அனுபவம் போதுமென்று சந்தோஷப்பட்டு அந்த மலைக் கோயிலுக்கு நன்றி சொல்லி விட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று பேசாமல் வாயை மூடிக் கொண்டு சென்னைக்கு கிளம்பியிருக்கலாம்.  விதி விட்டால் தானே.

நாடிக் கட்டை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் எனக்கு உதவியாகக் குடைபிடித்து வந்த அவனுக்கு நாடி பார்க்கப் போய் தேவையில்லாத வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்று தான் நினைக்கத் தோன்றியது! போதாக்குறைக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவன் அடித்த கமன்ட் என்னை வாய் பேச முடியாமல் தடுத்துவிட்டது.

ரயில்வே ஸ்டேஷனை அடைந்ததும் என் கை செலவுக்கு இருந்த பணத்தில் கொஞ்சம் எடுத்தேன். அந்த "அப்பாவி" ஏழை கோடீஸ்வரனுக்கு கொடுத்து "இந்தப்பா! இதை வைத்து முதலில் மஞ்சள், பூ, பழம், வெற்றிலை, பக்கு, ஊதுபத்தி, சூடன் சாம்பிராணி, குங்குமம் கொஞ்சம் வாங்கிக் கொள். அப்புறமாக விளகேற்ற எண்ணை, திரி வாங்கிக் கொண்டு கோவில் குருக்களிடம் கொடுத்து அர்ச்சனை செய்துவிட்டு பின்பு கருவறையில் விளகேற்ற ஆரம்பி. எப்படியாவது நாற்பது நாட்களுக்கு விடாமல் ஏற்றி வா. நல்லதே நடக்கும்" என்றேன். காலில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டான்.

"சாமி! என்னை உள்ளே நுழைய விடமாட்டாங்களே சாமி!"

"வேண்டாம். அந்தக் கோயில் குருக்களிடம் கொடுத்துவிடு.  உன் சார்பாக அவர் கருவறையில் விளகேற்றட்டும்."

இதுவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த வண்டிக்காரன், "அய்யா, இதெல்லாம் நடக்கிற காரியமா எனக்கு தோணலை. ஒரு நாள் ரெண்டு நாள்ன்ன விளகேற்றலாம்.நாற்பது நாள்களுக்கு எப்படிங்க இவனால விளகேற்ற முடியும்?" என்றான்.

இதைக் கேட்டதும் எனக்கு பகீர் என்றது. இவன் வண்டிக்காரனா? இல்லை அந்த ஏழை கோடீஸ்வரனுக்கு வில்லனா? ஏன் எதற்கெடுத்தாலும் எதிர் மறையாகவே பேசுகிறான்? இவனுக்கு என்ன வந்தது? விளக்குதானே ஏற்றிவிட்டுப் போகட்டுமே என்று ஏன் நினைக்கவில்லை என்பதை எண்ணி அந்த வண்டிக்காரன் மீது எரிச்சல் பட்டேன்.

பின்னர் வண்டிக்காரன் பக்கம் திரும்பி "என்ன சொல்கிறாய்?  விவரமாகச் சொல்லேன்" என்றேன், சற்று பொறுமையை இழந்து.

"அய்யா, இவன் எங்க கிராமத்துகுன்னு நேர்ந்து விட்டவன். கல்யாணம் காட்ச்சின்னு எதுவும் இவனுக்கு கிடையாதுங்க. எங்க கிராமத்திலே எந்த வீட்டிலே துக்கம் நடந்தாலும், அங்கே இவன் போகணும்.பங்காளி தலைக்கட்டு முடிகிற வரைக்கும் அங்கு தான் இருக்கணும். அதே போல் கல்யாணம் வச்சிருந்தாலும் அங்கே கடைசிவரை இருந்து எடுபிடி வேலை செய்யணும். ஏன் அவ்வளவு தூரத்துக்குப் போவானேன்? இப்போ எங்க வீட்டுல என்னைப் பெத்தவ இன்னிக்கோ, நாளைக்கோன்னு படுத்த படுக்கையா கிடக்கா.உசிரு இன்னும் போக மாட்டேங்குது. அது சட்டுன்னு போயிடிச்சுன்னு வச்சுக்கொங்கோ, பதினாறு நாள் காரியம் முடியற வரைக்கும் இவன் இந்தண்ட அந்தண்ட போகமுடியாது. என் வூட்டுல முடங்கிக் கிடைக்கணும். இப்படி ரெண்டு மூணு உசிரு போராடிட்டு கிடக்குது. அதெல்லாம் கரை சேர்க்க இவன் வேணுங்க. அதை மனசிலே வச்சுட்டுத்தான் சொன்னேங்க" என்றான் மிகவும் தீர்க்கமாக!

"ஏம்பா அப்படியொரு வழக்கம், கட்டுப்பாடு இருக்கா" என்றேன்.

அந்த ஏழை "ஆமாங்க" என்றான் திக்கி திக்கி.எனக்கு இது மிகவும் தர்மசங்கடத்தை தந்தது.

"ஏம்பா வண்டிக்காரரே! இவன் அந்தக் கோயில்ல விளக்கேற்றி முடிக்கிற வரை உங்க கிராமத்திலே யாருக்கும் எதுவும் ஆகாது. பயப்படாதே! இவனுக்கு நீயும் ஒத்தாசையாக இரேன்" என்று அவனைச் சமாதானப்படுத்தினேன்.

"ஏங்க! இவன் கொடீஸ்வரனாகப் போறான்னு சொன்னீங்க. அது எப்போ நடக்கிறதோ அப்படி நடக்கட்டும். எனக்கொண்ணும் இவன் மேல பொறாமை இல்லை. எனக்குக் கிராமத்துலே பத்து ஏக்கர் நன்செய், புன்செய் இருக்கு. மாமியார் வூட்டு நிலமும் காடாகக் கிடக்குது. இவனுக்கு விளகேற்ற நானே வேண்டிய ஏற்பாட்டைச் செய்கிறேன்.ஆனாலும் ஊர்ல உள்ள நடைமுறையைப் பற்றி உங்க கிட்ட சொல்லணமே. அதான் ஒங்க காதிலே இப்படிப் போட்டு வைத்தேன்" என்றான் கொஞ்சம் கூட அசையாமல்.

"அகஸ்தியர் தான் இதேல்லாம் தடுத்து நிறுத்தணும்.நம் கையில் ஒன்றுமில்லை" என்று ஸ்டேஷனுக்குள் நடக்க ஆரம்பித்தேன்.

"ஏனுங்க, ஏனுங்க" என்ற குரல் கேட்டது.

திரும்பி பார்த்தேன்.

அந்த வண்டிக்காரர் என்னை நோக்கி வந்தார்.

"ஒரு சின்ன சந்தேகம்.  அவனுக்குப் பதிலா நான் தினம் கோயிலுக்கு விளக்கேத்தலாமாங்க!"

"கூடாது.......... அவனைத்தான் அகஸ்தியர் ஏற்றச் சொல்லியிருக்கார். அவன் தான் ஜாமீனின் வாரிசுன்னு சொல்றாரு."

"ஏங்க.... என்ன நீங்க........ ஜாமீன் வாரிசுன்ன அதுக்கு ஒரு தகுதி அடையாளம் வேண்டாங்களா. அது இந்தத் திக்குவாய்ப் பயலுக்கு எதுங்க?"

"இப்போ என்ன செய்யணும்னு சொல்றே?"

"இல்லைங்க..... அவனுக்குப் பதிலா நான் விளகேத்தினா எனக்கு அந்த ஜாமீன் சொத்து கிடைக்குங்களா.எனக்கும் அவனுக்கும் ஏறத்தாழ ஒரே வயசுதானுங்க.அதனால கேட்டேன்" என்றான், கொஞ்சம் கூட பதற்றப்படாமல். நான் திகைத்துப் போனேன்! கிராமத்தில் கூட இப்படி ஒரு மனிதனா? இது எங்கே கொண்டு போய் முடியுமோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டது. அவனிடம் பதில் சொல்லாமல் பிளாட்பாரம் கவுண்டரை நோக்கி நகர்ந்தேன்.

சென்னைக்குத் திரும்பினாலும் என் மனம் அந்தத் திக்குவாய் நபரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

அந்த வண்டிக்காரர் சொன்னபடியே "அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லை.  பெற்றவர்களே நேரில் வந்தாலும் இவன்தான் என் பிள்ளை என்று சொல்ல முடியாது. அவனை வளர்த்தவர்களோ இன்று உயிரோடு இல்லை. சிறு வயதில் இவனைக் கடத்தியவர்கள் யார் என்ற விவரமும் இல்லை. அப்படியிருக்க இவன்தான் ஜாமீன் வாரிசு என்கிறாரே.  அது எப்படி? எந்த ஊர் ஜாமீன் என்ற விவரத்தையும் அகஸ்தியர் சொல்லவில்லை என்பதால் அவன் ஜாமீன் வாரிசாகத் வருவானா?" என்ற சந்தேகம், எனக்கும் ஏற்பட்டது.

அகஸ்தியர் ஜீவநாடியைப் படிக்க ஆரம்பித்ததிலேயிருந்து எனக்கும் சில சமயம் இப்படிப்பட்ட சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு. ஒரு பகுத்தறிவு வாதியை மிகவும் சுலபமாகச் சமாளித்து விடலாம்.ஆனால் ஆன்மீக வாதியைச் சமாளிப்பது என்பது மிக மிகக் கடினம் என்பதை அனுபவரீதியாகவே உணர்ந்திருக்கிறேன்.

நான் ஆன்மீக வாதியா, இல்லை பகுத்தறிவு வாதியா? இல்லை ரெண்டும் கெட்டானா? என்று என்னை நானே பரிசோதித்துக் கொள்வேன். கையில் அகத்தியர் ஜீவ நாடியை வைத்துக் கொண்டு பகுத்தறிவு வாதம் பேச முடியாது. ஆனால் எதுவும் சட்டென்று நடந்து விடவேண்டும் என்று ஆசைப்படுபவன். ஆனால், நாடி பார்த்த பலருக்கு அப்படி நடப்பதில்லை."பொறுத்திரு பொறுத்திரு" என்று தள்ளிக் கொண்டே போகும் பொழுது நாடி பார்ப்பவர்கள் மட்டுமல்ல நாடி படிக்கும் எனக்கும் கூட எரிச்சலும் சிலசமயம் எதற்காக நாடியைப் படிக்க வேண்டும் என்று வெறுப்பும் கூட ஏற்ப்படும்.

இதற்கெல்லாம் ஒரு காரணம் நிச்சயம் வெளியே வரும். அது பின்னால் தான் தெரியும். அது நிறைய பேர்களுக்கு இன்னமும் தெரியாத தெய்வ ரகசியம்!

வண்டிக்காரனை நினைத்தால் அவன், அந்த திக்கு வாய்க்காரனை மிகச் சுலபமாக எமாற்றிவிடுவான் என்பது ஆணித்தரமான நம்பிக்கை.  இருப்பினும் அகஸ்தியரிடம் பின்பு இது பற்றிக் கேட்கலாம் என்று விட்டு விட்டேன்.

முப்பத்தைந்து நாட்கள் ஓடி விட்டன. அகஸ்தியரிடம் அந்தத் திக்குவாய்க் காரனைப் பற்றிக் கேட்டால் "பொறுத்திரு! அவனை அந்த மலையரசன் (மலை கோவில் சிவபெருமான்) பார்த்துக் கொள்வார் என்று தான் சொன்னாரே தவிர வேறு எந்தத் தகவலும் எனக்குக் கிட்டவில்லை. எனக்கோ அவனைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்று ஓர் ஆசை.துணிந்து அங்கு சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று முப்பதெட்டாவது நாள் சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அந்தக் கிராமத்திற்குள் சென்றதும் இனம் தெரியாத பரபரப்பு ஏற்பட்டது. கிராம கர்ணத்தைச் சந்தித்தேன். உற்சாகமாக வரவேற்றுப் பேசினார்.

"ஊர்லே எல்லோரும் நலமா?"

"எல்லோரும் சௌக்கியம்"

"அன்னிக்கு எனக்கு ஊருக்குப் போறதுக்கு வண்டிக்காரர் ஒருத்தர் வந்தாரே அவர் சௌக்யமா? அவங்க அம்மா சௌக்யமா?"

ஒரு நிமிஷம் என்னை ஏறெடுத்துப் பார்த்தார், கொஞ்சம் மௌனம் காட்டினார்.

"என்ன திடீரென்று அவங்களைப் பத்தி கேட்கறீங்க. அகஸ்தியர் ஏதாவது சொன்னாரா" என்று பீடிகை போட்டார்.

"அகஸ்தியர் ஒண்ணும் சொல்லல்லே, அவருதான் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னார்"

"அதயேன் கேட்கறீங்க. அவன் நல்லத்தான் இருந்தான். கட்சி அரசியல்னு சேர்ந்துகிட்டு துடுக்குத்தனமாகத் தான் பேசுவான். அன்னிக்கு பாருங்க அந்தத் திக்குவாய்ப் பய கோயிலுக்கு விளகேத்தப் போயிருக்கான். இவனும் அவன் கூட மலைக் கோயிலுக்குப் போயிருக்கான். அங்க என்ன நடந்ததுன்னு தெரியல்ல.மலைப்படியிலிருந்து கீழே விழுந்து தோள்பட்டை, விலா, கணுக்காலுக்கு கீழே எலும்பு நொறுங்கி, இப்போது புத்தூர் அஸ்பத்ரியில் கிடக்கான்".

"அப்படியா.  அப்புறம்,"

"அவன் நன்றாகத் தேறிவர ஆறுமாசம் ஆகும்னு புத்தூர் வைத்தியர் சொல்லிட்டாராம்.கோயம்பத்தூர்ல கொண்டு போய் சேர்க்கலாம்னு அவனுக்குச் சொந்தக்காரங்க முடிவு பண்ணி ஊருக்குப் போயிருக்காங்க".

"அவங்க அம்மா?"

"கொஞ்சம் நடமாடறாங்க.  ஒத்தாசைக்கு ஆள் இருக்கு. அவளையும் அந்தத் திக்குவாய் பையன் தான் கவனிச்சிக்கிறான். ஆமா, அவன் ஜாமீன் வாரிசுன்னு நாடியிலே வந்திருக்குன்னு வண்டிக்காரன் சொன்னானுங்க.  அது நிசம்தானாங்க?"  என்று நிதானமாக கேட்டார்.

நான் தலையை ஆட்டினேன்.

"அன்னிக்கு அந்த வண்டிக்காரப் பிள்ளை என்கிட்டே சொன்னப்போ ஆச்சரியபட்டுப் போயிட்டேனுங்க. தமாசுக்குத்தான் சொல்லியிருபீங்கன்னு நெனச்சுட்டு இருந்தோம்.  இப்போதான் நானே நம்பறேன்."

"கர்ணம் அய்யா நம்பினால் சரிதான். ஆமாம், அந்தத் திக்குவாய் பையன் இப்போ எங்கே இருக்கான்?"

"கழுதை கெட்டா குட்டிச்சுவறு.  மலைக் கோயில்ல பிரகாரத்திலே படுத்திருக்கும்.தம்பி இப்போ அது முந்தயமாதிரி இல்லை. எப்போ பார்த்தாலும் கோயில் கோயில்னு கிடக்குது.யாராவது கேட்டா, கோயிலுக்கு விளகேத்தணும், எண்ணை கொடு, திரியை கொடுன்னு உசிரை வாங்குது.  பைத்தியம் தான் பிடிக்கலை" என்றார் அலட்ச்சியமாக.

எனது மௌனம் அவரைக் கிளப்பிவிட்டது.

"ஏன் தம்பி......... திடீரென்று வந்திருக்கிறீங்க.... மறுபடியும் கோயில்ல ராத்திரி தங்கணுமா?.  ஏதாவது உத்திரவு வந்திருக்கா?" என்று இப்போதுதான் விசாரிக்க ஆரம்பித்தார்.

"இல்லை, சும்மா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே உங்க எல்லோரையும் பார்த்துட்டுப் போகலாம்னு தோணிச்சு.  அவ்வளவுதான்".

"கையில ஓலைச்சுவடி கொண்டு வரலீங்களா?"

"இல்லைங்க...... எதுக்கு கேட்டீங்க?"

"எனக்கு ரெண்டு விஷயம் தெரிஞ்சாகணும். ஒன்னு, பயில்வான் கணக்கா இருந்த வண்டிக்காரன் ஏன் எலும்பு உடைஞ்சு பெட்டுல படுத்துக் கிடைக்கணும். இன்னொன்று இப்பவோ அப்பவோன்னு கிடந்த மூணுபேர் இன்னிக்கு வரைக்கும் தப்பிச்சிட்டிருக்காங்க.உண்மையிலே அந்த வண்டிக்காரனின் தாயாரு போயிட்டள்னு நெனச்சு எல்லா எற்ப்பாடுகளையும் செய்திட்டோம். சுடுகாட்டில வைச்சு, கடைசி நிமிஷத்திலே தான் அவங்க உயிரோடு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சுட்டோம். இந்தக் கிராமத்திலே இது போல ஒரு சம்பவம் இதுவரைக்கும் நடந்ததே இல்லை. இதையெல்லாம் நாடியிலே கேட்கலாம்னு நெனச்சேன்" என்று முடித்தார்.

"நம்ப கையிலே என்ன இருக்கு?  எல்லாம் தெய்வச் செயல்" என்றேன். பின்பு அவரிடமிருந்து விடை பெற்று மலையில் உள்ள கோயிலை நோக்கி ஏறினேன். எனக்கு அந்தத் திக்குவாயனைப் பார்க்க வேண்டுமே. ஆனால் யாருமே எதிர்ப்படவில்லை.

குருக்கள் கோயிலைச் சாற்றிவிட்டு இறங்கிப் போனதற்கான அடையாளம் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்டம் காணவில்லை. எந்த இடத்தில் அமர்ந்து தேவர்களையும், சித்தர்களையும் உணர்வு  பூர்வமாக தரிசனம் செய்தேனோ அந்த இடத்தில் அந்தத் திக்கு வாய்க்காரன் படுத்திருந்தான். நான் வந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை.  அப்படியொரு தூக்கம்! கோயில் கதவு துவாரம் வழியாக உள்ளே பார்த்தேன்,. சுவாமியின் கர்ப்பக் கிரகத்தில் இரண்டு விளக்குகள் நிதானமாகச் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்ப மனம் வரவில்லை.

இன்றைக்கு இவன் மேல்சட்டை பனியன் கூட இல்லாமல் நான்கு முழ அழுக்குக் கரை வேட்டியோடு சுருண்டு படுத்திருக்கலாம்.ஆனால், வெகுவிரைவில் இவனுக்கோர் நல்லகாலம் சிவபெருமான் கிருபையால் கிடைக்கப் போகிறது என்று மட்டும் என் மனம் அறிவுறுத்தியது.

அமைதியாக இறைவனைப் பிரார்த்தனைச் செய்துவிட்டுத் திரும்பும் போது சர சரவென்று சிறு சப்தம். திரும்பி பார்த்தேன்.

மிகப்பெரிய நாகப் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து அந்தத் திக்குவாய்க்காரன் பக்கத்தில் சென்று கொண்டிருந்தது.

சித்தன் அருள்................. தொடரும்!

Friday, 6 July 2012

அகத்தியரும் நாடியும்!

சமீபத்தில் ஒருவரிடம் அந்த நாடி வாசித்தவரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தெரிய வந்த ஒரு உண்மை.  உண்மைகளை எடுத்து சொல்லி, மனிதர்களை நல வழிப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தில் அகத்தியர் பல விஷயங்களை உரைத்திருந்தாலும், கடைசியில் அவர் மனம் வருத்தப்படுகிற அளவுக்கு மனிதர்கள் நடந்துள்ளனர்.  இதனால் கோபப்பட்ட அகஸ்தியர் "இனிமேல் இந்த மனிதர்களுக்கு நல்  வழி உறைப்பதில்லை" என்று சபதம் பூண்டு சென்றுள்ளார்.  சில நாட்களிலேயே அந்த நாடி படித்தவர் மறைந்துவிட, இன்று வரை ஒருவரையும் அவர் நாடி படிக்க தெரிவு செய்யவில்லை.  அடியேனும் தினமும் அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.  ஒரு சிலர் தவறால் கோபப்பட்ட முனிவரின் மனம் மாற வேண்டும்.  கஷ்டப்படும் நிறைய பேர் வாழ்க்கையில் ஒளியூட்டவேண்டும்.  மன்னித்து அருள் புரிய வேண்டும் என்று.  இதை படிக்கும் அடியவர்களும், மனித குல மேன்மைக்காக அவரிடம் தினமும் வேண்டிக்கொள்ளுங்கள் "சீக்கிரமே ஒரு நல்ல மனிதரை தெரிவு செய்து நாடி வாசிக்க, மக்கள் நலம் பெறவேண்டும்" என்று.  நம் உண்மையான கூட்டு பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக அகஸ்திய முனிவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவோம்.  எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்.  

Thursday, 5 July 2012

சித்தன் அருள் - 79!


ஆனந்தமான எண்ணத்தோடு அகஸ்தியர் பெருமானையும் மலைமீது குடி கொண்டிருக்கும் சிவபெருமானையும் மனதார வணங்கினேன்.

கையிலிருந்த "நாடிக்கு" மானசீகமான நன்றி சொல்லிவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கிய எனக்கு அந்தக் கிராமத்து மக்களின் வழியனுப்பு விழாவும் கிடைத்தது.

"இங்கேயே உங்களுக்குச் சகலவிதமான வசதிகளையும் செய்து தருகிறோம்.  இந்த மலை கோயிலுக்குச் சித்தர்களும் வருகிறார்கள்.  புனிதமான இந்தக் கிராமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுங்களேன்" என்று சொன்ன அந்தக் கிராமத்து ஜனங்களின் அன்பான வேண்டுகோளுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்பட்டேன்.

கைமுறுக்கு, பணியாரம், அப்பம், பழம் ஆகியவை அவர்களால் எனக்கு அன்போடு கொடுக்கப்பட்டது.  இரட்டைக் காளை வண்டி ஒன்றை தயார் செய்து, அதில் ஏற்றி விட்டாலும், அந்தக் கிராமத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை என் மீது வெயில் படக்கூடாது என்பதற்காக ஒருவர், வண்டியில் ஏறி நின்று கொண்டே குடைபிடித்து வந்தது என் மனதை உருகச் செய்தது.

எப்படியும் இந்தக் கிராமத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாகும்.  பொழுதை எப்படியாவது நல்ல படியாகக் கழிக்க வேண்டும் என்றால் அதற்க்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது எனக்குக் குடைபிடித்துக் கொண்டிருந்தவர் பரிதாபமாக என்னையும் அருகில் இருந்த நாடி வைத்திருந்த பெட்டியையும் மாறி மாறிப் பார்ப்பது தெரிந்தது.  ஆனால் வாய் திறந்து கேட்கவில்லை.

சரி இவனுக்கும் தான் "நாடி" பார்ப்போமே என்று எண்ணி அவனை அழைத்து "உனக்கு நாடி பார்க்க வேண்டுமா?" என்று கேட்டேன்.

"ஆமாம்" என்று வேகமாகத் தலையை ஆட்டினான்.

"சரி.  என் பக்கத்தில் உட்கார் - உனக்கு நாடி படிக்கிறேன்" என்று சொன்னேன்.  பவ்வியமாக உட்கார்ந்தான்.

எனக்கும் பொழுது போக வேண்டுமே - அகஸ்தியர் நாடியை ஓடுகின்ற மாட்டுவண்டியில் படிக்க ஆரம்பித்தேன்.

படிக்க படிக்க எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  அவனைப் பற்றி ஒரு புதிய வரலாறே கிடைத்தது.

"மிகப்பெரிய ஜாமீன் பரம்பரையைச் சேர்ந்த அவனைச் சிறுவயதிலேயே சொத்துக்காகக் கடத்தி வந்திருக்கிறார்கள்.  அவன் பெற்றோர்களுக்குக் கொலை மிரட்டலும் அனுப்பப்பட்டிருக்கிறது.  இதை அவனது பெற்றோர் துளிகூட லட்ச்சியம் செய்யவில்லை.  ஆந்திராவுக்குக் கொண்டு சென்று கொல்ல வேண்டும் என்று எண்ணியவர்கள், அங்கு செல்லவில்லை.  ஈரோட்டிலேயே சில நாட்கள் தங்கிவிட்டார்கள்.  எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படாததால் இந்தக் குழந்தையைக் கொல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று அந்தக் குழந்தையை ஒரு வைகறைப் பொழுதில் ரோட்டில் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

ரோட்டில் தனியாகக் கிடந்த ஆண் குழந்தையை இந்த மலைக் கோயிலைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தினர் ஈரோடு சந்தைக்கு வரும் பொழுது கண்டெடுத்துத் தங்களோடு எடுத்துச் சென்று விட்டனர்.

எங்கோ ராஜ போகாமாகப் பிறந்த இந்தக் குழந்தை விதியின் கொடுமையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரு மண் குடிசைக்குள் வாழ்ந்து வந்தது.  நாளாக நாளாக அந்தப் பையன் வளர்ந்தான்.  படிப்பு இல்லை.  மலைக் கோயிலுக்கு அருகேயுள்ள மலைக்குன்றில் ஆடு மாடுகளை மேய்த்தும், சுள்ளி, விறகுகளைப் பொறுக்கியும் காலத்தைத் தள்ளியிருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் ஆடு மாடு மேய்க்கப் போகும் போது, மலைகோயில் சிவபெருமானை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து நூற்றி எட்டு தோப்புக் கரணங்களையும் போடுவான்.  எதற்காகப் பிரார்த்தனைச் செய்கிறான் என்று யாருக்கும் தெரியாது.  ஆனால் தெய்வ நம்பிக்கை மட்டும் அவனுக்கு அதிகம் இருந்தது.

அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்த அவனுக்கு அவ்வளவாகப் பேசவராது.  திக்கித் திக்கித்தான் பேசுவான்.  கோயில் திருவிழா என்றாலும், அந்தக் கிராமத்து வீட்டுத் திருமண விழா என்றாலும் சரி, இவன் தான் முக்கியப் பொருப்பேர்ப்பான்.  வலிய வந்து உதவுவான்.

இதற்கிடையில் இவனை வளர்த்த அந்த விவசாயி காலமாகவே, ஊர் சோற்றில் வளர்ந்து கொண்டிருந்தான்" என்றொரு கதையை அகஸ்தியர் எனக்கு முதலில் சொல்லி - "விதி எவ்வளவு வலிது என்று பார்த்தாயா?" என்று என்னிடம் கேட்டார்.

"விதி வலிது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.  ஆனால், இவன் தன் பெறோரிடம் இனியும் சேர்ந்து வாழ முடியாதா?  அதற்கு அகஸ்தியர் அனுகிரகம் பண்ணக் கூடாதா?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"அப்படியொரு வாய்ப்பு அவனுக்கு இருப்பதனால் தான் அவனுக்கு யாம் உதவ இங்கு வந்தோம்" என்று ஒரு போடு போட்டார் அகஸ்தியர்.

"எப்படி?"

"சொல்கிறேன் கேள்.  இன்றிலிருந்து நாற்பது நாள் வரை இவன் அந்த மலைக் கோயில் சிவபெருமான் கருவறையில் ஒரு விளக்கு ஏற்றி வரட்டும்.  நாற்பத்தி ஒன்றாம் நாள் இவனைத் தென் மேற்குத் திசையிலிருந்து வருகின்ற ஒருவர், வேலைக் காரணமாக நியமித்து அழைத்துச் செல்வார்.

பின்னர்தான் இவன் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசும்.  எந்த ஜமீனிலிருந்து வெளியே வந்தானோ, அதே ஜாமீனுக்குள் நுழைவான் இருபத்தெட்டு ஆண்டுளுக்குப் பிறகு" என்று முடித்தார்.

நான் அவனை ஆச்சரியத்தோடும் பரிதாபத்தோடும் பார்த்தேன்.

அவனுக்குச் சரியாகப் பேசவராது என்று ஒன்றைத்தவிர சொலவதைப் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தது.

மெதுவாக அவனுக்குப் புரியும்படி அகஸ்தியர் நாடியில் வந்த விஷயத்தைச் சொன்னேன்.  முதலில் அவனுக்கு "ஜாமீன்" என்றால் என்னவென்றே புரியவில்லை.  அவன் கேட்ட ஒரு கேள்வி இதுதான்.

"எனக்கு மூணு வேளைக்கு வயிறார கஞ்சி கிடைக்குமா.  நல்ல வேட்டி கிடைக்குமா?" மிகப்பெரிய ஜாமீன் என்று அகஸ்தியர் குறிப்பிட்டதை எண்ணி இவனையும் பார்த்தேன்.  கோடிக்கணக்கான சொத்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவன் இப்பொழுது வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறான்.  காய்ந்த வயிறு வெயில் பட்டுப்பட்டுக் கருத்துப் போன மேனி.  சீவாத தலை, ஷேவ் பண்ணாத முகம், சட்டையோ - பனியனோ போடாத உடம்பு.  ஒரு நான்கு முழ அழுக்கு வேட்டி, அடிக்கடி வெற்றிலை பாக்குப் போடுவான் போலிருக்கிறது.  அதனால் பல்லில் வெற்றிலைக் கறை லேசாகத் தெரிந்தது.

இத்தனையும் கொண்டிருந்தாலும் விகல்பம் இல்லாத மனது.  வெகுளியான பார்வை.  அடிகொரு தடவை மலைக் கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுகின்ற பக்தி.  இது தான் எனக்கு அவன் மீது அளவற்ற அன்பை வர வழைத்தது.  இல்லையெனில் அகத்தியர் நாடியை இவனுக்கு நான் ஏன் பார்க்கப் போகிறேன்?

"நாற்பது நாள் கோயிலுக்கு விளகேத்தனும், முடியுமா உன்னால்?"

"என்னை உள்ளே விடமாட்டாங்களே சாமி.  என்ன செய்யறது?"

நான் சொன்னதாகச் சொல்லு.  கர்ப்ப கிரகத்திலே விளக்கேத்த விடுவாங்க".

"சரி சாமி.  இந்த வண்டிக்காரர் கிட்டேயும் சொல்லுங்க சாமி.  அப்பத்தான் அவங்க நும்புவாங்க".

நான் உடனே எனக்கு வண்டி ஒட்டிக் கொண்டு வந்தவரிடம் "அகஸ்தியர் அருளும், மலைக்கோயில் சிவனது அருளும் இவனுக்குக் கிடைத்திருக்கிறது என்று நடந்ததைச் சொல்லி, நாற்பது நாள் கோயில் கர்பக்ரகத்தில் இவன் விளகேத்தணும்" என்றேன்.

"சரிங்க.  இவன் கையிலே காலணா காசு இல்லை.  எப்படி விளகேத்துவான்" என்று வண்டிக்காரர் கேட்டார்.

"நான் என்னால் ஆனதை தரேன்.  நீயும், மற்ற ஊர் காரங்களும் இவனுக்கு விளகேற்ற உதவி செய்யுங்க.  இவன் இன்னிக்கு ஒன்னும் இல்லாதவனாக உங்களுக்குப் படலாம்.  பலகோடி சொத்துக்கு விரைவில் அதிபதியாவான்.  அப்போ உன்னையும் கவனிச்சுப்பான்" என்று நான் சொன்னதைச் சுத்தமாக அந்த வண்டிக்காரர் நம்பவில்லை.

"சாமி! ஏதோ ஊருக்கு வந்தீங்க, மலை கோயிலுக்குப் போனீங்க.  உயிரோடு திரும்பி வந்தீங்க.  ஊர் சனங்க உங்களைப் பத்தி ஒசத்தியா நெனக்கிறாங்க.  எல்லாம் சரிதான்.  ஆனா போற போக்கிலே இவனைப் பத்தி சொல்லி "ஜாமீன் வாரிசு" கோடி கணக்கான சொத்துக்கு அதிபதின்னு சொல்றீங்களே இதைத்தான் நான் நம்பலே.

ஒரு வேளை சினிமாவிலே வேணா இப்படி நடக்கும்க.  நிஜ வாழ்க்கையிலே இதெல்லாம் நடக்காதுங்க.  இப்படி நான் சொல்றேன்னு என்னைத் தப்ப நெனச்சுக்காதீங்க" என்று பட்டவர்த்தனமாக என்னிடம் நேரிடையாகவே சொல்லிவிட்டார்.  நான் வாய் மூடி மௌனமானேன். மேற்கொண்டு பேசவோ விளக்கவோ முடியவில்லை.  இதற்குள் ஈரோடு ரயில்வே நிலையத்தை வண்டி நெருங்கியது.

சித்தன் அருள் .............. தொடரும்!