​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 22 March 2018

சித்தன் அருள் - ஒரு இடைவேளை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தவிர்க்க முடியாத, தனிப்பட்ட வாழ்க்கையின் காரணத்தால் இரு வாரங்களாக தொகுப்பை தர முடியவில்லை. ஒரு சிறிய இடை வேளைக்குப்பின் உங்களை தொகுப்புடன் சந்திக்கிறேன். அந்த நேரம் வரும் வரை, இதுவரை அளித்த தொகுப்புகளை மறுபடியும் வாசித்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அக்னிலிங்கம்!

Thursday, 8 March 2018

சித்தன் அருள் - 751 - அந்தநாள் >> இந்த வருடம் [2018]


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2017ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

22/07/2018 - ஆடி மாதம் - ஞாயிற்று கிழமை  - சுக்லபக்ஷ தசமி திதி மாலை 06.53 வரை, விசாகம்/அனுஷம் நக்ஷத்திரம்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

23/07/2018 - ஆடி மாதம் - திங்கள்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி இரவு 07.41 வரை, அனுஷம் நக்ஷத்திரம் மாலை 04.36 வரை.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

24/07/2018 - ஆடி மாதம் - செவ்வாய் கிழமை - சுக்லபக்ஷ த்வாதசி திதி இரவு 08.56 வரை, மூலம் நட்சத்திரம் மாலை 6.28 முதல்.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

07/09/2018 -ஆவணி மாதம் - வெள்ளிக்கிழமை - திரயோதசி திதி மறுநாள் காலை 4.33 வரை, பூசம் நட்சத்திரம் அன்று பகல் 11.40 வரை .

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

22/10/2018 - திங்கட்கிழமை  - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி அன்று இரவு 10.14 வரை, உத்திரட்டாதி நட்சத்திரம் மறுநாள் பகல் 09.32 வரை. 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2018 முதல் 14/01/2019க்குள் வருகிறது. 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

Thursday, 1 March 2018

சித்தன் அருள் - 750 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 11 - சம்பூர்ணம்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! "அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவ" தொடரின் நிறைவு தொகுப்புக்கு வந்துவிட்டோம். இனி பெரியவரின் வார்த்தைகளுக்குள் நுழைவோம்.

எத்தனையோ விஷயங்களை, ஒரு மனிதன் மிக எளிதாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டும், என மிகத் தெளிவாக இதுவரை சுந்தரகாண்டத்தின் சர்கங்களில் தொடர்பு படுத்திய அகத்தியப் பெருமான், இன்னும் ஏதேனும் ஒன்றை கூற மாட்டாரா, என்கிற எதிர்பார்ப்புடன், அந்த வியாழக்கிழமை காலை ராமர் சன்னதியில் அமர்ந்த எனக்கு, அகத்தியப் பெருமான் வந்து உரைக்கலானார்.

"ஒரு மனிதன், தான் என்ன வேண்டுமானாலும், தன் தேவைக்கேற்ப திட்டமிடலாம். ஆயினும் இறை அருள் இருந்தால் மட்டும் தான் அவன் திட்டம் வெற்றி பெறும். பெரும்பாலும் அனைவருக்கும், அவர்கள் திட்டமிட்டதற்கு, நேர் எதிராக நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது, அல்லது பலன் உருவாகிற பொழுது, ஏன் இப்படி நடக்கிறது? நாம் சரியாகத்தானே திட்டமிட்டு செயல்பட்டோம்? என்றெல்லாம் நினைத்து குழம்பிப்போவார்கள். உண்மையில், அப்படி வழிமாற்றி விட்டதே இறைவன்தான், அதுவும், நடந்த முறைதான் இவனுக்கு நல்லது, என இறை தீர்மானிப்பதால்தான். ஆனால் இவனோ,  பெருந்தன்மையுடன் அந்த பலனை ஏற்றுக்கொள்ளாமல், கூட  இருந்து வழிகாட்டிய சித்தர்களையும், ரிஷிகளையும், ஏன், அந்த இறையையும் தூற்றுவான். இதனால்தான், எத்தனையோ விஷயங்களை, இறைவன் "தெய்வ ரகசியம்" எனக்கூறி மறைத்துவிட உத்தரவிடுகிறார். இழப்பு இறைக்கு அல்ல. மேலும், மேலும் உயர வேண்டிய மனிதனுக்கே" எனக்கூறி .நிறுத்தினார்.

எனக்கு, இந்த வார்த்தைகள் ஒரு  அறிவிப்பாக தோன்றவில்லை. என்னவோ நடந்திருக்கிறது. இறை, அகத்தியருக்கு ராம காவியம் புனைய கொடுத்த உத்தரவை, திருப்பி வாங்கிக்கொண்டு விட்டதோ?" எனத்தான் தோன்றியது. அது ஓரளவுக்கு உண்மை என அடுத்து அகத்தியப் பெருமான் கூறியதிலிருந்து புரிந்தது.

"தொடங்கியது ராம காதையாயினும், சுந்தர காண்டத்துடன் நிறுத்திக் கொள்ள இறையின் உத்தரவு. இவ்வுலக மனிதர்களுக்கு என்ன போய் சேரவேண்டுமோ, அது சேர்ந்ததும், இறையே "போதும் நிறுத்திக் கொள்! அகத்தியா" என உத்தரவிட்டுவிட்டது."

"ஆகவே, ஒரு  செய்தியை கூறிவிட்டு, பின்னர் இறை உத்தரவு மனிதர்களை சென்று சேர சிறப்பாக செயல் புரிந்த உனக்கும் ஒரு மகிழ்வான செய்தியை கடைசியில் கூறுகிறேன்."

"ஜாதக ரீதியாக குடும்ப ஸ்தானம், சுகஸ்தானம், களத்திர ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றில் கேது, சனி, இராகு செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களால் பாதிக்கப் பட்டுக்கொண்டிருப்பவர்கள், திருமணமாகாமல் நொந்து கொண்டிருப்பவர்கள், திருமணமாகியும்  தாம்பத்திய வாழ்க்கையைப் பரிபூரணமாக அனுபவிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தம்பதியருக்கு இடையே கருத்து வேற்றுமைக்கொண்டு நிம்மதி இல்லாமல் துடித்துக் கொண்டிருப்பவர்கள், செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் பரம்பரை பரம்பரையாக வந்த குடும்ப தோஷம் கொண்டவர்கள், அஷ்டமச்சனி, அஷ்டம குருவால் அவதிப்படுபவர்கள், காதல் வெற்றி பெறவில்லையே என்று ஏங்குபவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், எதிராளியின் வஞ்சகத்தில் மாட்டிக்கொண்டு துடி துடிப்பவர்கள், அத்தனை பேர்களும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற, ஒரே வழி, இந்த சுந்தரகாண்டத்திலுள்ள அறுபத்தெட்டு சர்கங்களையும் விடா முயற்சியோடு தினமும் படிப்பதுதான், மிகச் சிறந்த பரிகாரம்" எனக் கூறி, ராம காவியத்தை, சுந்தர காண்டத்துடன் நிறுத்திக் கொண்டார்.

அகத்தியப் பெருமானே, இனி ஏதேனும் சொல்லட்டும் என்று நான் அமைதி காத்தேன். மனதில் உதித்த அத்தனை கேள்விகளையும், அப்படியே கழுவி தூக்கி எறிந்தேன்.

சற்று நேரத்தில் அவரே அமைதியை கலைத்தார்.

"ராம காவியத்தை பின்னொரு நாளில், எதிர்காலத்தில், நிறைவு செய்யலாம். அதுவரை அமைதி காக்க. இதுவரை அகத்தியன் புனைந்த காவியம் மிக சிறப்பாக உள்ளது. எமது ஆசிகள்!" என அந்த ஸ்ரீராமனே, சீதாதேவி, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர் சமேதராக இங்கு வந்திருந்து, வாழ்த்தினார். சற்று முன் நீ பதிவெடுக்கும் பொழுது குளிர்ந்த காற்றை, மெல்லிய துளசி, சம்பங்கி வாசனையை உணர்ந்து தலையை உயர்த்தி பார்த்தாயே, அப்பொழுதுதான் அவர்கள், இங்கிருந்து சென்றார்கள். ஒவ்வொரு குருவாரமும், ராம காவியத்தை யாம் உரைத்த பொழுது, உன் முன் இருக்கும் ராமர் விக்கிரகத்தில் அவர் அமர்ந்து, மற்றவர்கள் அருகே அமர்ந்திருக்க, எம் புனைவை ஆசீர்வதித்து சென்றனர். ஆதலால், இந்த தகவல்கள் நூலாக வெளிவரும் பொழுது, இதை யார் யார் வாங்கி உடன் வைத்திருந்து, அல்லது அந்த சர்கங்களை பாராயணம் செய்கிறார்களோ, அவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு கவசம் இருக்கும். அவர்கள் வீட்டில் வைத்திருந்தால், அந்த வீடே, சுபிட்சமாக இருக்கும். எப்படிப்பட்ட கெடுதலும், அண்டாது. நிறைய ஆச்சரியப் படுகிற விஷயங்கள் நடக்கும்" எனக்கூறி ஆசிர்வதித்தார், நிறைவு செய்தார்.

நான் என்ன நடந்தது, நடக்கிறது என்று உணராமலேயே, ராமரின் அருகாமையில் அமர்ந்து அகத்தியர் மொழியை இத்தனை நாட்களாக நகலெடுத்திருக்கிறேன், என அப்போது உணர்ந்தேன். படிப்பதென்றால், இப்படிப்பட்ட குருவின் வகுப்பில் பயிலவேண்டும். அத்தனை தெய்வங்களும், சித்தர்களும் வருவார்கள். உணர்வது நம் கர்ம விதி.

சுந்தரகாண்டம் சர்கங்கள் அனைத்தும் (தட்டச்சு தமிழிலும், ஒலி தேவநாகரியிலும்) படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள தொடுப்பில் சென்று, "சுந்தரகாண்டம்" தெரிவு செய்து, கேட்டு, படித்துக்கொள்ளவும். மிக எளிமையாக உள்ளது.

https://www.valmiki.iitk.ac.in/sloka?field_kanda_tid=5&language=ta&field_sarga_value=1

இத்துடன், "அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட" அனுபவம் நிறைவு பெற்றது.

இதை "சித்தன் அருள்" வலைப்பூவில் எழுதி, வெளியிட வாய்ப்பளித்த "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமான்" பாதங்களில் சமர்ப்பித்து, லோகம், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ்ந்திட வேண்டிக்கொண்டு, நிறைவு செய்கிறேன்.

சித்தன் அருள்............ தொடரும்!