​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 30 January 2020

சித்தன் அருள் - 841 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


தசவாயுக்களும் உடலுக்குள் பரவி நின்றாலும், அவற்றின் இயக்கத்தை சரியானபடி முடுக்கிவிட்டு தேவையான அளவுக்கு அசைவு பெற வைக்க சப்தம் மிகத்தேவை என்றுணர்ந்ததினால்தான், த்யானத்தில், பூஜையில், ஜபத்தில் இத்தனை மந்திரங்களை பெரியவர்கள் புகுத்தினர்.

அனைத்து தெய்வங்களின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை உருவாக்கப்பட்டதே, அவற்றின் சப்த அதிர்வலைகள் உடலுள் என்ன மாறுதலை உருவாக்கும், எப்படி ஒரு சூழ்நிலைக்கு எதிர் சக்தியை உருவாக்கி அவ்வுடலை காக்கும் என்று சோதித்து பார்த்த பின் தான் பெரியவர்கள் இவ்வுலகுக்கு அதை வாய் வழி செய்தியாக விட்டு சென்றனர்.

இந்த தச வாயுக்கள் உடலுக்குள் என்ன வேலை செய்கிறதென பார்க்கலாம்.
  1. பிராணன்:- மூலாதரத்தில் ஆரம்பித்து இதயத்தில் நின்று மூக்கு வழியாக மூச்சு விடல். இது மேல் நோக்கி இயங்கும். மற்ற ஒன்பது வகை வாயுவிற்கும் இதுவே மூலாதாரம்.
  2. அபானன்:- சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலம், சிறுநீறு போன்றவைகளை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். இது கீழ் நோக்கி இயங்கும்.
  3. வியானன்"- இது தொழில் காற்று மூளையின் கட்டளைகளை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும். தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உறுப்புக்களை நீட்ட, மடக்க உணர்ச்சிகளை அறியவும், உணவின் சாரத்தை கொடுத்து உடலைக் காக்கும். 
  4. உதானன்:- உணவின் சாரத்தை கொண்டு செல்லும். உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு. தொண்டையில் குரல் நரம்புகளை அதிரச் செய்து ஒலியை எழுப்புகிறது.
  5. சமானன்:- நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இந்த வாயு. நாபியிலிருந்து கால் வரை பரவும். வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் ரத்தத்திற்கும் எல்லா உறுப்புகளுக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை செய்கிறது.
  6. நாகன்:- உடம்பில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றுவது நாகன். இது அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், இமைகள் மூட வேலை செய்யும். வாந்தி குமட்டல் போன்ற உணர்வுகளுக்கு காரணமாகிறது.
  7. கூர்மன்:- கண்ணில் நிற்கும் வாயு. கொட்டாவி, வாய் மூட, கண் இமைக்க, கண்ணீர் வரவழைக்கும்.
  8. கிருகரன்:- இது தும்மலுக்கு காரணமான காற்று. நம் உடம்பில் எந்த தூசியும் மாசுவும் நுழைய விடாது. தும்மல், இருமலை உண்டு பண்ண உதவும் வாயு இது. நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசியை கிளப்பி விடும்.
  9. தேவதத்தன்:- கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்பட காரணமே இந்த வாயுதான். மூளைக்கு போகும் வாயுவை குறைத்தல், ரத்தத்தில் பிராண வாயுவின் அளவு குறைவது, உடலை ஓய்வு நிலைக்கு தள்ளுவது, சோம்பல், தூங்கி எழும்போது ஒரு வித சோர்வை தருவது இந்த வாயுதான்.
  10. தனஞ்செயன்:- ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுது, தோலுக்கு கீழே தனஞ்சயன் இருந்து உடலுக்கு ஏற்படும் எந்த வித பாதிப்பையும் தாங்க வைக்கும், காப்பாற்றும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது மேற்சொன்ன ஒன்பது வாயுக்களும் நன்றாக வேலை செய்யும். உயிர் பிரிந்த பின்னர் ஒன்பது வாயுக்களும் செயல்பாட்டை நிறுத்திய பின்னர் இந்த தனஞ்செயன் வாயு செயல்படத் தொடங்கும். இதனை வீங்கல் காற்று என்றும் சொல்வார்கள். மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கத்தை ஏற்படுத்தும். நுண்ணியிரிகள் மூலம் உடலை அழுகச் செய்யும்.
மேலும் 'தனஞ்செயனை" வாயுக்களுக்கு தலைவன் என்றிடலாம். ஏன் என்றால், உயிர் பிரியும் முன்பாக நமது அனைத்து உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். உயிரானது சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சி மண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், சிறுநீர் பாதை வழியாகவும், காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் வெளியேறும். தசவாயுக்களில் ஒன்பது வாயுக்களும் நிறுத்தப்பட்டு, அது செயல்படுத்தும் உறுப்புக்களும் முழு நிறுத்தம் கண்டு, எந்த வழியாக உடலைவிட்டு உயிர் வெளியேற வேண்டுமோ, அந்த வழியாக தனஞ்செயன் என்ற அந்த வாயு மற்ற வாயுக்களையும் வெளியே அழைத்து செல்லும். அதன் பின்னரே உயிர் பிரியும். மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் மற்ற வாயுக்களை சேர்ப்பிக்கும்.

நம் உடலின் பல இயக்கங்களை சரிவர கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிறப்பான வாழ்வை மனிதர்கள் பெறவே, பெரியவர்கள், த்யானம், தவம், உச்சாடனம், மந்திரம், யோகமுறைகள், பிராணாயாமம் என பல வழி முறைகள் வழி, சப்தத்தை உடலுள் நுழைத்து வாயுக்களின் இயக்கத்தை தூண்டிவிட்டனர்.

வழுக்கைக்கும், பேராசைக்கும் மருந்தே கிடையாது என நம்மிடையே ஒரு கூற்று உண்டு. அது தவறு. சரியான முறையில் பிராணாயாமத்தை தொடர்ந்து வந்தால், ஆசையே அறுந்துவிடும், தலையில் முடி முளைக்கும்.

சித்தன் அருள்....................... தொடரும்!

Sunday, 26 January 2020

சித்தன் அருள் - 840 - அகத்தியர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கல்யாணதீர்த்தத்தில் அகத்தியர் பூஜை :-

கல்யாண தீர்த்தத்தில் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு சிறப்பான பூசை நடை பெற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு அகத்தியர் அடியவர் சித்தனருளுக்காக பகிர்நது கொண்டார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 


அகத்தியர் அறிவுரை :-

அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் வந்து தனிப்பட்ட முறையில் வாக்குரைக்கும் பொழுது, சில விஷயங்களை பொதுவாக பகிர்ந்து கொள்ளச் சொல்வார். அடியேனுடைய நண்பர், ஒரு அகத்தியர் அடியவர், சமீபத்தில் நாடி கேட்கச் சென்ற பொழுது வந்த அருள் வாக்கை அடியேனிடம் பகிர்ந்து கொண்டு, சித்தன் அருள் வழி, அனைத்து அடியவர்களுக்கும் தெரிவிக்கும்படி, வேண்டிக்கொண்டார். அவர் தெரிவித்ததிலிருந்து பொதுவாக நம் எல்லோருக்கும் ஆன அருள்வாக்கை இங்கு தெரிவிக்கிறேன். அனைத்து அகத்தியர் அடியவர்களும், அவர் உத்தரவை சிரம் மேற்கொண்டு நடை முறைப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1.ஒரு சில மாதங்களுக்கு முன் மழை வளம் வேண்டி அகத்தியர் அடியவர்கள் அனைவரையும் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளச் சொன்னது நினைவிருக்கலாம். அத்தனை வேண்டுதலையும் இந்திரன் மனம் நிறைவாய் ஏற்றுக்கொண்டு, நிறைய மழை பெய்வித்து அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிய உத்தரவிட்டது, பயனை தந்துள்ளது. அனைத்து அடியவர்களுக்கும் அகத்தியப் பெருமானின் ஆசிகள்.

2. இனி வரும் காலத்தில் ஆயுதப்பிரயோகம், துஷ்டத்தன்மை, அறிவிழந்து மோகத்தால், மனிதர் மாள்வார். இவ்வையகத்தில் நடக்கப்போகும் தீங்கு விலகிட எங்கள் தலைநாதன் முருகனே துணையாய் நின்று, நலம் பல ஆற்றிடும் காலமப்பா. இந்த காலமதில் நலம் விளைய அனைவரும் முருகப்பெருமானை ஆராதிக்க வேண்டும். அப்படிச் செய்யின் உயர்வான புவன நலம் விளையும். நாம் செய்கிற விஷயங்களில் நிறைவான தலைமை பண்பு முருகனருளால் வந்து சேரும். தன் கடமையை குறைவற செய்ய வல்லவனாகிய முருகன், இணை ஒன்றும் இல்லாத சித்தர் தலைவன், வேண்டுதலுக்கிணங்கி இறங்கி வருவான். புவனம் முழுவதும் சுத்தியாகும். எத்தலம் ஏகி வேண்டினாலும், அழகனாம் முருகனே சூட்ச்சுமமாய் நின்று பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான். முருகனுக்கு ப்ரீதி செய்யின் பூரணமாகும். இந்த காலமதில் புவனத்தில் நலமே உண்டாகும். புவன நலம் காக்க, அன்னை வாலையின் உத்தரவின் படி, விரைவில் சித்தர்கள் விஜயம் எங்கும் உண்டாகும்.ஆசிகள்.

3. ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது. அடியேன் இரண்டு மாதங்களாக செய்து உணர்ந்துவிட்டேன். திருவோண நட்சத்திரம் என்று வருகிறது என பார்த்து செய்ய வேண்டியது ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் கடமையாகும்.

4. மதுரையில் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் பசுமலை என்கிற இடத்தில் உள்ள "சக்தி மாரியம்மன் கோவிலில்" நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் 07/02/2020 அன்று காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் நடைபெற உள்ளது. அந்த அழைப்பிதழை கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன். அனைவரும் சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அவர்கள் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.


சித்தன் அருள்................ தொடரும்!

Wednesday, 15 January 2020

சித்தன் அருள் - 839 - அகத்தியரின் அனந்தசயனத்தில் லக்ஷதீபம்!

 வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் அனந்தசயனத்தில் ஆறு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் "லக்ஷ தீபப்பெருவிழா" இன்றைய தினம் மாலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று முதல் நாள். மூன்று நாட்களுக்கு இந்த வைபவம் இங்கு நடைபெறும்.

இன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களையும், வீடியோவையும், அனைத்து அகத்தியர் அடியவர்களின் தரிசனத்துக்காக கீழே தருகிறேன்.

அகத்தியரின் உத்தரவின் பேரில், இந்த நாளுக்காகத்தான் [15-01-2020] ஒருவருடமாக, பொறுமையாக அடியேன் காத்திருந்தேன். இன்றைய முதல் தினம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இனி, இறை அடியார்கள், அகத்தியர், சித்தர் அடியவர்களுக்கு, அவர்கள் அருளி, கைபிடித்து அழைத்து செல்கிற காலம் தொடங்குகிறது. அனைவரும் தயாராக இருப்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்! 
சித்தன் அருள்............... தொடரும்!

Monday, 13 January 2020

சித்தன் அருள் - 838 - அகத்தியப் பெருமானின் திருநட்சத்திர பூஜை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த வருட அகத்தியர் திருநட்சத்திர பூஜை பல இடங்களிலும் ஜனவரி 12 / 13 ஆகிய தியதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல அகத்தியர் அடியவர்களும் சித்தன் அருள் வலைப்பூவுக்காகவும், அடியேனுக்காகவும் அனுப்பித்தந்த புகைப்படங்களை, வீடியோவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அடியேன் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக என வேண்டிக் கொண்டு, பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

[பாலராமபுரம், திருவனந்தபுரம்] 


[பஞ்சேஷ்டி, சென்னை]
[அகத்தியர் இல்லம், பாண்டிச்சேரி]


[ கல்லார் ]
[ பனப்பாக்கம் ]
[ பொதிகை மூலஸ்தானம் ]

[வழுக்குப் பாறை, பொதிகை ]


[கூடுவாஞ்சேரி, சென்னை ]


[ பொதிகை ]
[ நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி ]

சித்தன் அருள்................... தொடரும்!

Thursday, 9 January 2020

சித்தன் அருள் - 837 - அதிர்வலைகளும் தச வாயுக்களும்!


ஆக்சிஜென் என்று மனிதர்களால் அழைக்கப்படுகிற வாயுவை பிராண வாயு என்று கூறலாம். அதை உள்வாங்கித்தான் அத்தனை ஜீவன்களும் இவ்வுலகில் உயிர் வாழ்கின்றது. மனித உடலை ஒரு விந்தையான உலகமாக சித்தர்கள் கூறுவர். அப்படிப்பட்ட அரிய உலகத்தை கவனிக்காமல், மனிதன் உலகாயாத விஷயங்களில் கவனம் செலுத்துவதே, அவன் எதிர்கொள்கிற அனைத்து பிரச்சினைக்கும்,காரணமாக அமைகிறது.

ஒரு மனிதன் சுவாசிக்கும் காற்றை அவன் உடல் பத்துவிதமாக உள்ளே பிரித்து எடுத்துக்கொள்கிறது. ஆகவே, ஒரு மனிதனுள் இருக்கின்ற வாயுவை, "தசவாயுக்கள்" (தசம் - பத்து) என்று சித்தர்கள் அழைத்தனர். இந்த தசவாயுக்களும் உடலில் கால் முதல், தலைவரை பரவி நின்று, உடலியக்கத்தை நடத்துகின்றது. உடலில் இருக்கவேண்டிய. ஏதேனும் ஒரு வாயுவின் அளவில் குறைவு ஏற்படுகிற பொழுது, பித்தம், வாதம், கபம் போன்ற மூன்று உள் நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டு, உடல் நோய் வாய்ப்படுகிறது. இந்த தச வாயுக்கள் உடலுக்குள் பரவி நிற்பது மட்டுமல்லாமல், ஒரு தேர் ஊர்வதுபோல் அசைந்து நடக்கிறது. இவற்றை பிராணாயாமத்தினால் கட்டுப் படுத்த முடியும். அப்படி கட்டுப்படுத்த தெரிந்த ஒருவனை சித்தர்கள் "தசரதன்" என்றழைத்தனர்.

அந்த பத்து வாயுக்கள் எவை என்று பார்ப்போம்.

1. பிராணன்‌
2. அபானன்‌
3. வியானன்‌
4. உதானன்‌
5. சமானன்‌
6. நாகன்‌
7. கூர்மன்‌ 
8. கிருகரன்‌
9. தேவதத்தன்‌
10.தனஞ்ஜயன்‌

என்பவை தசவாயுக்களாம்‌. தசம் என்றால் பத்து என்று பொருள்படும். மனித உடம்பின் இயக்கத்திற்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உறுதுணையாய் இருப்பது இந்த தச வாயுக்களே ஆகும். இந்த வாயுக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தி, உடல் பழுதை நீக்கி, விதிக்கப்பட்ட நாள் வரை நோய், நொடி இன்றி ஒரு மனிதன் வாழ்ந்திட வேண்டியே, மூச்சின் முறையை உணர்ந்து, "பிராணாயாமத்திற்கு" சித்தர்கள் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர். தினசரி மூச்சு பயிற்சி, எந்த நோயையும் உடலை விட்டு விரட்டும். எந்த விதமான மருந்தும் பின்னர் அந்த உடலுக்கு தேவைப்படாது. பிராணாயாமப் பயிற்சி செய்பவர்கள் உடல் ஒருவித தேஜஸ்ஸை அடையக்காரணமே, இந்த தசவாயுக்களின் அமைப்புதான்.

ஒலியானது அதிர்வலைகளை ஏற்படுத்தும். உடலுள் புகுகின்ற அதிர்வலைகள், உடலுள் உள்ள தடைகளை நிரவி, சமன்படுத்தி, தச வாயுக்களும் உடலுள் தங்கு தடையின்றி பரவிநிற்க உதவி புரிகின்றது. உடல் இந்த "பிராணாயாமம் + ஒலி" கூட்டு அமைப்பில் மிக மிக சிறந்து விளங்கும் என்று உணர்ந்த சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் போன்றவர்கள், எந்த வாக்குகளின் உச்சரிப்பு என்ன செய்யும் என்று கண்டுபிடித்து, மந்திரங்கள் என்பதை ஜபம் என்கிற முறைக்குள் புகுத்தினர். அதிகாலை "சுப்ரபாத மந்திர" அதிர்வலைகளும், அஸ்தமன கால "ஸஹஸ்ரநாம மந்திர" அதிர்வலைகளும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். காஞ்சி மகான் ஒருவரின் உடல் பிரச்சினைக்கு மாற்று வழியாக, ஒரு மண்டலம் "விஷ்ணு சஹஸ்ரநாம" பாராயணத்தை பரிந்துரைத்தார். ஒரு மண்டல பாராயணத்தில் நோய் உடலைவிட்டு விலகிப்போனது. அப்போது ஒருவரின் கேள்விக்கு விடையாக "நாராயணனின் ஆயிரம் நாமங்களைக்கொண்ட விஷ்ணு சஹஸ்ரநாமமே அனைத்து நோய்க்கும் மருந்தை தன்னுள் கொண்டுள்ளது. அதை நம்பிக்கையுடன் ஒரு மண்டலம் ஜெபித்திட இந்த ஜென்மத்து பாபத்தை/நோயை விரட்டிவிடலாம்" என்றார்.

நம் முன்னோர்கள் பார்த்துப் பார்த்து கோர்த்து வைத்துவிட்டுப் போன மந்திரங்களில் பலவித அதிசயங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

உதாரணமாக, மூச்சடைப்பு, இருதய நோய், உள்ளவர்கள் "விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்" வரும் கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் பலமுறை கூறிவந்தால், அது ஒரு சிறந்த மூச்சு பயிற்சியாக அமைந்து, உடலுள் உள்ள குறைகளை நிவர்த்தி செய்கின்றது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த மந்திரத்தை உச்சரிக்கிற பொழுது, ஆள்காட்டி விரலை மூக்கினருகில் வைத்துப் பார்த்தால், மூச்சு காற்று உள் செல்வதோ, வெளியே வருவதோ இல்லை என்பதை உணரலாம். ஆனால் வாய் வழி மட்டும் காற்று வெளியே செல்வதை உணரலாம்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே!

ஆதலினால், பெரியவர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுவதுமாக சொல்லத் தெரியாவிட்டாலும் இந்த ஸ்லோகத்தை பத்து முறை கூறினால், முழு சஹஸ்ரநாமமும் கூறிய பலன் கிடைக்கும் என்று "சூக்ஷுமமாக" கூறிச் சென்றனர்.

ஒவ்வொரு மூல மந்திரமும் அத்தனை சக்தி படைத்தவையாக இருக்க காரணம், அவற்றை உச்சரிக்கும் பொழுது ஏற்படும் அதிர்வலைகள் உடலுக்குள் தசவாயுக்களை தட்டி உணர்த்தி, சிறந்த கவசத்தை உருவாக்குவதால்தான். மந்திரமாக ஒலி அலைகளை உருவாக்கி இவ்வுலகுக்கு அளித்த பொழுது பெரியவர்கள் இவர்தான் இவற்றை கூறலாம் என்று தீர்மானிக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட அதிர்வலைகளை (அதர்வணம்) யாருமே உருவாக்காதீர்கள் என்றுதான் உரைத்தனர்.

சித்தன் அருள்................... தொடரும்!

Friday, 3 January 2020

சித்தன் அருள் - 836 - பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

13/01/2020, திங்கட்கிழமை அன்று நம் குருநாதரின் திருநட்சத்திரம் வருகிறது. உலகெங்கும் உள்ள அகத்தியர் கோவில்களில்/ சன்னதிகளில்  அன்றைய தினம் மிகச்சிறப்பாக அபிஷேக பூஜைகள்/ஆராதனைகள் நடைபெறும்.

அடியேன் எல்லா வருடமும் அந்த தினத்தில், பாலராமபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில்" நடக்கும்  பூசையில் கலந்து கொள்வேன். அனைத்துமே அவர் அருளால் மிக சிறப்பாக அமையும்.

"சித்தன் அருள்" வலைப்பூவின் அகத்தியர் அடியவர்கள்/வாசகர்கள் அகத்தியர் திரு நட்சத்திர விழா/கோவில் பூசையில் பங்குபெறுகிற கோவில் தொடர்பை கேட்டிருந்தனர். உரிய தகவல்களை கீழே தருகிறேன்.

விருப்பமுள்ளவர், இந்த தகவலை உபயோகித்து தொடர்பு கொண்டு, அகத்தியர் திருநட்சத்திர விழாவில் பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ அகஸ்தியர் ஸ்வாமி திருக்கோவில்,
பாலராமபுரம், திருவனந்தபுரம், கேரளா.
தொடர்புக்கு : திரு. ரதீஷ், பாலராமபுரம் 9020202121
திரு. சுமேஷ், பூஜாரி, அகத்தியர் கோவில் 9497866079

அன்றைய தின அபிஷேக பூஜைகள் தொடர்பான விவரங்கள்.

காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும்.
காலை 5.30 மணிக்கு நிர்மாலய தரிசனம் பின்னர் 
அபிஷேக பூஜைகள்.
காலை 6.30 மணிக்கு பூஜை, தீபாராதனை 
காலை 8.45க்கு நிவேதனம், ஆரத்தி.
காலை 9 மணிக்கு கோவில் நடை சார்த்தப்படும்.
மாலை 5 மணி முதல் 7.30 வரை கோவில் திறந்திருக்கும்.

13/01/2020 அன்று ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமான் கோவிலில், பூஜையில் பங்குபெற்று, உழவாரப்பணி செய்து, அவரின் திருவருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday, 2 January 2020

சித்தன் அருள் - 835 - ஒரு தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அந்த நாள் இந்த வருடம் 2019-20" என்கிற தொகுப்பில் இனி கடைசியாக இரு நிகழ்ச்சிகள் உள்ளன. அவற்றை ஞாபகப்படுத்தம் விதமாக தொகுத்து தருகிறேன்.

பாபநாச ஸ்நானம்:- 

தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாச சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 17/12/2019 முதல் 14/01/2020க்குள் வருகிறது. 

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:- 

13/01/2020 - திங்கட்கிழமை - மார்கழி மாதம், த்ரிதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம். எங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிற நாள். அன்றய தினம் அகத்தியர் கோவிலுக்கு சென்று ஏதேனும் ஒரு விதத்தில் பங்கு பெற்று, முடிந்த அளவுக்கு உழவாரப்பணியேனும் செய்து அவர் அருளை பெற்றுக்கொள்ளுங்கள்.

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

இந்திராக்ஷி சிவகவசம் கீழே தரப்பட்டுள்ளது. வேண்டுபவர்கள் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

INDIRAKSHI SHIVA KAVACHAM DOWNLOAD

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....................... தொடரும்!


Wednesday, 1 January 2020

சித்தன் அருள் - 834 - புத்தாண்டு வாழ்த்துக்கள் !

வணக்கம்அகத்தியர் அடியவர்களே!

2020ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நிறைவை தந்து, நன்மையே செய்யட்டும் என்று "சித்தன் அருள்"வலைப்பூ சார்பாக அனைவரையும் வாழ்த்துகிறோம்.

"சித்தன் அருள்"

சித்தன் அருள் ,.............. தொடரும்!