​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 31 August 2014

ஒதிமலை முருகர் - பிறந்த நாள் 2014 - 1

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஒதிமலையில், ஓதியப்பர் பிறந்தநாள் (23/08/2014) அன்று அங்கிருந்து, அவரின் ஆசியை பெற்றுக் கொண்டவர்களில், என் ஒரு நண்பர், தன் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தொகுப்பு மிக இயல்பான வடிவில் வந்துள்ளது. அதில் உள்ள முக்கியமான கருத்துக்களை எடுத்துக் கொண்டு, அடியவர்கள் அனைவரும் ஓதியப்பர் அருள் பெற விரும்புகிறேன்.

ஓம் அகத்தீசாய நமஹ!

ஓதியப்பர் என்கிற முருகரின் பிறந்த நாள் இந்த வருடம் 23/08/2014 அன்று வருகிறது என்று அறிந்து, போன வருடம் சென்று அனுபவித்த இறை அருளை அந்த நாளில், இந்த வருடமும் பெற்றிட விரும்பி, நண்பர்கள் சிலரை தெரிவு செய்து பயணத்துக்கு வந்து சேரும்படி வேண்டிக்கொண்டேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் வேலை, பலரும் பல இடத்தில் இருந்ததால், 22/08/2014 அன்று கோயம்பத்தூரில் காந்திபுரத்தில் சந்தித்து அங்கிருந்து செல்லலாம் என்று எண்ணம். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மலை ஏறினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. போன முறை தெரிவித்தும் வர முடியாமல் போனவர்களுக்கும் தகவல் கொடுத்து, எப்படியாவது 18 பேரை கொண்ட குழுவுடன் போய் ஒதியப்பரை சந்திக்க வேண்டும் என்று ஒரு அவா.

எண்ணிப்பார்த்த பொழுது குழுவில் 10 பேர்கள் தான் தேறினார்கள். ஓதியப்பா! உன் பிறந்தநாளுக்கு நாங்கள் வர விரும்புகிறோம். ஆசிர்வாதம் பண்ணு என்று வேண்டிக் கொண்டு, புறப்படுவதற்கான ஆயுத்தங்களை தயார் செய்தேன். ஓதியப்பருக்கு அவர் பிறந்த நாள் அன்று, காவி வேஷ்டிதான் உடுத்த கொடுக்க வேண்டும் என்று தீர்மானம்.

என் ஊரில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஓதியப்பர் உருவத்துக்கு 8 முழ வேஷ்டி தான் நிறைவாக இருக்கும். எல்லா இடத்திலும் 4 முழ வேஷ்டி தான் இருந்தது. எனக்கு அதை வாங்க விருப்பம் இல்லை. எப்படியாவது 8 முழம் வேஷ்டி வாங்கியே தீர வேண்டும் என்கிற எண்ணம்.

எதேச்சையாக, திருநெல்வேலியில் இருக்கும் ஒரு நண்பரின் நினைவு வர, அவரை கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னேன். அவர் சென்ற கடையில் இருந்தது. நல்ல வேஷ்டியாக பார்த்து வாங்கிவிடச் சொன்னேன். வாங்கிவிட்டார். அவரும் என்னுடன் வெள்ளிக்கிழமை அன்றே மலை ஏறுவதாக எண்ணம்.

புறப்படுவதற்கு இரண்டு நாள் முன் அவரால் வெள்ளிக்கிழமை வர முடியாது என்றும், சனிக்கிழமை தான் மலை ஏறி வர முடியும் என்று கூறினார். சரிதான் போ! ஓதியப்பர் விளையாட தொடங்கிவிட்டார் என்று புரிந்தது. செம கடுப்பாகிவிட்ட நான்,

"அபிஷேகம் காலையிலேயே முடிந்து விடுமே, உடனே பூசாரி வேஷ்டியைய் கேட்பாரே, நீங்கள் வருவதற்கு தாமதித்தால், வேறு ஏதேனும் வேஷ்டியை உடுத்திவிடுவாரே, நான் எப்படி அபிஷேகத்தை நீங்கள் வரும் வரை தடுத்து நிறுத்தி வைக்க முடியும்?" என்றேன்.

"எப்படியாவது விடியற்காலையில் வந்து சேர்ந்து விடுகிறேன். நீங்கள் டென்ஷன் ஆகாதீங்க" என்றார்.

அப்பொழுது தான் என்னுள் ஒரு எண்ணம் உதித்தது. ஓதியப்பர், "நீ முயற்சி செய்து, உன் கையால் வாங்கிக் கொடு" என்று எதிர்பார்ப்பது போல் தோன்றியது.

அமைதியாக, "இனி நான் பார்த்துக் கொள்கிறேன், பத்திரமாக வந்து சேர்கிற வழியை பாருங்கள்" என்றேன்.

அமைதியாக அமர்ந்து என்னென்ன தேவை என்பதை பட்டியலிட்டு, ஒவ்வொன்றாக வாங்கத் தொடங்கினோம். என்னுடன், இங்கிருந்து கிளம்புபவர்கள் 5 பேர் என்று முடிவாயிற்று.  அதில் ஒருவரிடம் ஓதியப்பருக்கு அபிஷேகத்துக்கு "வெட்டி வேர் எண்ணை" வாங்குகிற பொறுப்பை கொடுத்தேன். சென்னையிலிருந்து வரும் ஒரு அன்பர், நானும் அதை கொண்டு வருகிறேன் என்றார். இந்த எண்ணை அபிஷேகத்துக்கு மிகச் சிறப்பானது. உடனடியாக அவரை குளிர வைத்துவிடலாம் என்பதை போன வருடம் இதே நாளில் சென்ற பொழுது, அனுபவத்தினால் உணர்ந்ததே காரணம்.

போன வருடம் ஒரு நாள் முன்னரே மலை ஏறி அமர்ந்து விட்டோம். மறுநாள் தான் பூசாரி வந்து கோவிலை திறப்பார். த்யானத்திலும், ஜெபத்திலும் நேரத்தை ஒட்டி காத்திருக்கும் பொழுது பார்த்தால், ஒதிமலையை தவிர மற்ற எல்லா இடங்களிலும் மழை பெய்கிறது. ஒதிமலையில் ஒரு சொட்டுகூட விழவில்லை. இதென்ன ஆச்சரியம் என்று மனதில் குறித்துக் கொண்டேன். இரவு அடித்த காற்றில், கோவிலில் இருக்கும் ஒரு பெரிய மரம் உலுக்கி எடுக்கப்பட்டது. அப்படி சுழலும் காற்று. அந்த மரம் பட்ட பாட்டை 10 அடி தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு துளி (அல்லது பங்கு) காற்றின் ஸ்பரிசம் கூட என்னை தழுவவில்லை.

"சரி! நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். என்ன பயமுறுத்தினாலும் இங்கிருந்து செல்வதாக இல்லை. நாளை ஓதியப்பரின் பிறந்தநாளை கொண்டாடி, அவர் ஆசிர்வாதம் வாங்கிவிட்டுத்தான் செல்வோம்" என்று வாய் திறந்து சொல்லிவிட்டு, "மரத்திடம்" மானசீகமாக மனிப்புக் கேட்டேன்.

"இதுக்கெல்லாம் நாங்கள் பொறுப்பல்ல. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் உபயோகித்துக் கொள்ள இருக்கிறோம். இருந்தாலும், உனக்கு மிகப் பெரிய சேதம் வராமல் இருக்க ஓதியப்பரை வேண்டிக் கொள்கிறேன்" என்று ஒரு வேண்டுதலை ஓதியப்பரிடம் வைத்துவிட்டு நான் உள்ளே மண்டபத்தில் உறங்க சென்று விட்டேன். மறுநாள் காலையில் எழுந்த உடன், அந்த மரம் அங்கே இருக்கிறதா என்று பார்த்து, கண்டு சமாதானமடைந்து, குளித்து தயாரானோம்.

பூசாரி வந்து சன்னதியை திறந்த பொழுது, உள்ளிருந்து ஒரு அக்னி நிறைந்த காற்று, பக்தர்களை தாக்கியது. உள்ளே நின்றவர்கள் அனைவரும், ஒரே நிமிடத்தில் வியர்வையில் நனைந்தனர். ஓதியப்பரின் கழுத்தில் போட்டிருந்த மாலைகள் அனைத்தும் இரண்டே நாளில் அழுகி போய் இருந்தது. அத்தனை சூடு சன்னதியில். பூசாரியே மலைத்துப் போய் விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

"என்ன ஓதியப்பா! இப்படி சூடாக இருக்கிறது உன் சன்னதி? உன்னால் எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது? நேற்றிலிருந்து பார்க்கிறேன், மலையை சுற்றி எல்லா இடத்திலும் மழை பெய்கிறது. உன் மலையில் மட்டும் மழையே இல்லையே. சரி! "வெட்டி வேர் எண்ணை" வாங்கி வந்திருக்கிறேன். உனக்கு எண்ணை காப்பு போட்டு குளிர வைக்க வேண்டும். அதை ஏற்று, நீ குளிர்ந்து, உன் மலையும் குளிரவேண்டும். மழைக்கு ஏற்பாடு பண்ணு" என்று பிரார்த்தித்துவிட்டு அந்த எண்ணையை கொடுத்தேன்.

சும்மா சொல்லக் கூடாது! அவர், அவர் தான்! எண்ணை காப்பு தலையில் போடத்தொடங்கும் பொழுது மதியம் மணி 2.30. அப்பொழுது தொடங்கிய மழை இரவு 7.30 வரை தொடர்ந்து பெய்தது. சுற்று வட்டத்தில் இருக்கும் மற்ற சன்னதிகளுக்கு போய் அபிஷேகம் செய்து அலங்காரம் பண்ணக் கூட போக முடியவில்லை, பூசாரியால். நொந்து பொய், பூசாரியே ஒதியப்பரை திட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். (பூசாரி ஓதியப்பருக்கு ரொம்ப நண்பர்ங்க. அதனால் அவருக்கு திட்டுகிற உரிமை உண்டு).  இரவு 7.30 மணிக்கு மழை நின்றது. அதன் பின்னர் தான் மற்ற சாமிகளுக்கு பூசை செய்ய முடிந்தது.

அப்படிப்பட்ட அனுபவத்தை தந்த "வெட்டி வேர் எண்ணையை" இந்த முறையும் அவருக்கு காப்பு போட கொடுத்து, முடிந்தால் அபிஷேகம் செய்த எண்ணையை கொஞ்சம் பிரசாதமாக வாங்கி கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதையும் ஓதியப்பரிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டு, புறப்படுகிற நாளை நோக்கி காத்திருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன் நான்கு நண்பர்கள் தங்களால் சனிக்கிழமை தான் வர முடியும் என்று கூறினார்கள். சரி! 6 பேர் கொண்ட குழுவுக்குத்தான் வெள்ளிக்கிழமை அன்று விதித்திருக்கிறார் ஓதியப்பார் என்று தீர்மானித்து, பயணமானோம்.

கோயம்பத்தூரில், ஒரு நண்பர் வீட்டில் குளித்து பசியாறி, அண்ணூர் வந்து பூசைக்கான மாலை, பூக்களுக்கு ஏற்ப்பாடு செய்துவிட்டு, போகிற வழியில் அகத்தியர் லிங்கத்துக்கு அபிஷேக சாமான்களை வாங்கிக் கொண்டுடோம். எதிர்பார்த்தது போல், அண்ணூரில் 8 முழ காவி வேஷ்டியும், அங்க வஸ்திரமும் கிடைத்தது. "இது கிடைத்துவிட்டது, இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்ற எண்ணம் ஊக்கத்தை தர, மலை அடிவாரத்தை சென்றடைந்தோம்.
மலை அடிவாரத்தில் இருக்கும் பிள்ளையாருக்கு பூசை செய்து, பிரார்த்தித்துக் கொண்டு, மலை ஏறத் தொடங்க, வெயில் சுட்டு எரித்தது. ஒரு வருடத்துக்குப் பின் மலை ஏறுவதால், "எப்படி 1800 படிகளை ஏறப் போகிறோம்?" என்ற மலைப்பு வந்தாலும், வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாகவே தாக்கியது.

வெள்ளிக்கிழமை, பிரதோஷ தினம். எல்லா பிரதோஷத்துக்கும், ஓதியப்பருக்கு ஸ்பெஷல் அபிஷேகம், பூசை உண்டு. ஆகவே அன்று பூசாரி கோவிலில் இருப்பார் என்று எதிர்பார்த்து நடந்தோம். வழியில் ஒருவரை கண்ட பொழுது தான் புரிந்தது, பூசாரி இனி மேல் தான் மலை ஏறி வரவேண்டும் என்று.

"அடடா! ஓதியப்பருக்குத் தான் என்னே கருணை! வரும் பக்தர்கள் (6 பேர்களும்)என் நிர்மால்ய தரிசனத்தை பெற்றுக் கொள்ளட்டும் என்று, அவரே ஏற்பாடு செய்திருக்கிறார் போலும்" என்று தீர்மானித்து நடக்கத் தொடங்கினோம். ஆனால் ஓதியப்பர் வேறு விதமாக தீர்மானித்திருக்கிறார் என்று பிறகு தான் புரிந்தது.

முருகன் அருள் ....................... தொடரும்!


Saturday, 30 August 2014

அகத்தியர் அருள்வாக்கு - ஒரே தொகுப்பு!!


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

பெங்களூருவில் திரு கணேசன் அவர்கள் பொது நாடி வாசித்தது அனைவரும் அறிந்ததே! அதில் கூறப்பட்ட விஷயங்களை, எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தில் "அகத்தியர் அருள்வாக்கு" என்கிற தலைப்பில் தட்டச்சு செய்து உங்கள் அனைவருக்கும் தந்திருந்தேன்.

தற்போது, அந்த நாடி வாசிப்பு, ஒரு pdf file ஆக தொகுத்து வந்துள்ளது. அது புத்தக வடிவில் வந்த பின் அதை தட்டச்சு செய்வதை விட, வேறு ஏதேனும் ஒரு தொகுப்பை உங்களுக்கு தரலாம் என்று தோன்றியது.

எனவே, என்னிடம் வந்து சேர்ந்த அந்த தொகுப்பை கூகிள் டிரைவில் சேமித்து வைத்து, அதன் தொடர்பை கீழே தருகிறேன். அனைவரும், சென்று எடுத்துக் கொண்டு, அகத்தியர் அருள் பெற வேண்டுகிறேன்.


கார்த்திகேயன்!


Thursday, 28 August 2014

5,00,000 பக்கப் பார்வைகள் > அகத்தியரின் ஆசிர்வாதம்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியரின் அருளால் "சித்தன் அருள்" தொகுப்பு இன்று 5,00,000 பக்கப் பார்வைகளை பெற்றது. இந்த நிலையை அடைய காரணமாக இருந்த ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பெருமானுக்கும், தமிழை தந்து எழுத வைத்த ஓதியப்பருக்கும், நிகழ்ச்சிகளை கனிவோடு என்னிடம் பகிர்ந்து கொண்ட என் "நாடி வாசித்த நண்பருக்கும்", வலை தொகுப்புக்கு படம் வரைந்து தந்த திரு சரவணனுக்கும், திரு பாலச்சந்திரனுக்கும், புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட முகமறிந்த, அறியாத அடியவர்களுக்கும், தங்கள் கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்ட அடியவர்களுக்கும், தொகுப்பை வாசித்த அனைத்து வலைத்தள வாசகர்களுக்கும்,  சமர்ப்பிக்கிறேன்.

எத்தனையோ சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டு, தவித்த உள்ளங்களுக்கு, ஆறுதலாய் இந்த தொகுப்பு இருந்தது என்பது தான் உண்மை. இன்று வரை உள்ளன்போடு அகத்தியர் அடியவராக என்னையும் ஏற்றுக் கொண்டு, கரை ஏற வைத்த உங்கள் அனைவருக்கும், ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியரின் அருள் உரித்தாகுக என்று வேண்டிக்கொண்டு, அடியேனின், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையிலேயே, இந்த வலை பூவை தொகுக்க தொடங்கும் பொழுது, இது எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது.

நடந்ததெல்லாம் அவர் செயல்.

ஓம் அகத்தீசாய நமஹ!

கார்த்திகேயன்!

(குறிப்பு:- என்னுள் ஏற்பட்ட சந்தோஷத்தை/நன்றியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மட்டும் தான் இந்த தொகுப்பை வழங்குகிறேன். மற்றபடி தற்பெருமை என்கிற நிலை ஒரு பொழுதும் இல்லை.)  


சித்தன் அருள் - 191 - அகத்தியர் அருள்வாக்கு - 5


எட்டாவது கேள்வி:- ஓம் அகதீசாய நமஹ! முருகர் மீது எனக்கு ரொம்ப அன்பு ஜாஸ்தி. அவரும் என்னை எப்பொழுதும் பார்த்துக்கிட்டு இருகாரு. ஒவ்வொரு செகண்டும் நான் கேட்டதெல்லாம் கொடுத்துகிட்ட்ருக்காறு. இப்ப ஒரு ஆறு மாசமா வந்து அகத்தியப் பெருமானை நான் வணங்கிட்டிருக்கேன். அவரும் எனக்கு, கேட்ட உடனே, சில விஷயங்களை பண்ணிகிட்டிருகாரு. அவங்க ரெண்டு பேரோட அன்பும் எனக்கு குறையாம, என்னை கீழே வெச்சுக்கணும்.  அது தான் என்னுடைய ஆசை.

அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையாலே, இன்னவன் யாது கூறினான். முருகப்பெருமானிடம் அன்பு அதிகம் என்று. இதற்காக கவலைப் படவேண்டியது அன்னையர்கள் தான். நாங்கள் அல்ல. வள்ளியும், தெய்வயானையும் தான் இதை குறித்து கவலை பட வேண்டுமே தவிர, நாங்கள் அல்ல. ஆயினும், இவன் பக்தி தொடர, தொடர்ந்து இறைவனை வணங்கி வர, இவன் நலமும் பெற, தொடர்ந்து இறை வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.

ஒன்பதாவது கேள்வி:- அகத்தீஸ்வர பெருமானுக்கு வணக்கம். ஆப்பூர் நித்ய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், சுதர்சன ஹோமம் தாங்கள் முன் நின்று நடத்திக் கொடுக்கவேண்டும். அங்க ஆப்பூர் கோவில் அடிவாரத்தில் இருக்கிற பெருமாள் யார்? அவரை அங்கிருந்து எடுத்து, மேல் கொண்டு வந்து பிரதிஷ்டை பண்ணலாமா? 

அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு, முன்னரெ முன்னரோ, இத்தேடி வந்த பொழுதிலேயே யாம் அருளானையிட, சில செயல்கள், மூன்று தினங்கள் அங்கு அமர்ந்து சகலவிதமான யாகங்களையும் செய்து பூர்த்தி கண்டார்கள். மீண்டும் ஒரவன் வந்து யாகம் செய்திருக்கிறான். ஆகவே, தக்க காலத்தில், அங்கு மீண்டும், இறைவன் அருளால், யாகம் நடை பெறும் . இறைவன் கருணையாலே, அகுதப்ப, அந்த பரம் பொருள், மகா விஷ்ணுவாக, வெங்கடேச பெருமாளாக அருளுகின்ற மலையிலே, இன்றும் 60க்கும் குறையாத சித்த பெருமான்கள், தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  முழுமதி, நிறை மதி காலங்களிலே, ஏற்ப்பாடு செய்ய, இதனை தக்க அன்பர்கள் உணரலாம். 

பத்தாவது கேள்வி:- வணக்கம்! பிறவியை பற்றி மீண்டும் இந்த கேள்வியை எழுப்புவதற்கு, மீண்டும் மன்னிக்கணும். சுக பிரம்மத்தை பற்றி இவர்கள் சொன்ன விளக்கத்தையும், என் ஆசான் கொடுத்த விளக்கத்தையும், சந்தேகத்தோடுதான் சொல்கிறார்களா அல்லது இறந்த மனிதன் மறுபடியும் பிறவி எடுக்கணும் என்று சொல்கிறார்களா என்று இந்த கேள்விக்கு பதில் தெரிவிக்கணும்.

அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு, இயம்புவது யாதென்றால், ரவியை வணங்கு, பிறவியின் ரகசியம் புரியுமப்ப. இகுதப்ப இயம்பும் கால், பலரும் பலவிதமாக கூறலாம். யாங்கள், இத்தருணம் கூறுவதை புரிந்து கொள்ள முயற்சி செய். இந்த தேகத்தோடு இருப்பது ஒரு பிறவி. இந்த தேகம் பூர்த்தி அடைந்து, இந்த தேகத்தை விட்டுவிட்ட ஆத்மா, அவன் கர்ம பாவங்களின் அடிப்படையிலும், இறைவன் இடும் அருளாணையின் படியும் இன்னொரு தேகத்துக்குள் புகுந்து, அதாவது, இன்னொரு அன்ன தேகத்துக்குள் புகுந்து பிறவி எடுப்பதாவது, பிறவி என்று நாங்கள் கூறுகிறோம். ஏனைய எந்தவித கருத்துக்களையும் குறித்து, எமக்கு எந்த விதமான உடன்பாடும் இல்லை, அது அவரவர் மனோபாவத்தை பொறுத்தது. எனவே, இதை நன்றாக புரிந்துகொள்ள முயற்சி செய்.

பதினோராவது கேள்வி:- இறையை அடைவதற்கு, ஸ்தூல வடிவில் உள்ள குரு அவசியமா? அல்லது குரு இல்லாமலேயே அடைய முடியுமா? நம்முடைய தனிப்பட்ட முயற்ச்சியினால்?

அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையாலே, குரு என்றால் யார் என்று நீ எண்ணுகிறாய்? 

பதினோராவது கேள்வி தொடர்கிறது:- குரு என்றால்....... அகத்தியர் இதை முன்பே அறிந்திருக்கிறார், இருப்பினும் மற்றவர்களுக்காக நான் சொல்லுகிறேன். ஒரு சிறு குழந்தை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, அதன் விளையாட்டு ஆர்வத்தில், வீட்டையே மறந்து விட்டது.  உண்மையான தாய் தந்தையை மறந்துவிட்டு, இங்கு தாய் தந்தையாக வேடம் போட்டுக் கொண்டு இருப்பவர்களை, தாய் தந்தையாக, நினைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அது திரும்ப தன் தாய் தந்தையரை ஞாபகப்படுத்தி, திரும்பி சென்ற அடைய வேண்டும், அதற்க்கு ஏற்கனவே சென்று அடைந்த ஒருவர் வழிகாட்ட வேண்டும். அவர் தான் குரு என்று நான் நினைக்கிறேன்.

அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையாலே, யார் இருளை நீக்குகிராரோ, அவர் குரு. யார் பிறவி பயனை நீக்குவதற்கு வழி கட்டுகிறாரோ, அவர் குரு. இது ஒருபுறம் இருக்க, ஒன்றை உணர்ந்து கொள்ள, ஒன்றை கற்றுக்கொள்ள, எது காரணமாக இருக்கிறதோ, அது அனுபவமோ, நிகழ்வோ, சக உறவோ, நட்போ, இதன் மூலம் தக்க பாடம் கற்றுக் கொண்டோம் இனி விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்று உணர்வு, எத்தருணம், யார் மூலம், அல்லது எதன் மூலம் ஒரு மனிதனுக்கு வருகிறதோ,  அனைத்தும் குருதான். எனவே, புறத்தோற்றத்தில் குருவை தேடுவதை விட, மானசீகமாக இறைவனை வணங்கி, குறிப்பாக, இறைவனை குரு தட்சிணா மூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால், இந்த குரு தொடர்பான ஐயங்கள் நீங்கும், மனதில் உள்ள இருள் நீங்கும். மனித உருவில் குருவை தேடவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எத்தனைதான், உயர்ந்த புண்ணியங்களை செய்து, பலருக்கு ஆன்மீக வழிகாட்டுகிறேன் என்று ஒரு ஆத்மா பிறந்தாலும், இங்கு வந்த பிறகு, சிறிது செப்பை பூசிக்கொள்ளத்தான் செய்கிறது. எனவே, அவன் 90 நல்ல விஷயங்களை போதித்து, சில தவறான விஷயங்களை போதித்துவிட்டால், கேட்கின்ற மனிதனுக்கும், அந்த தவறு பாடமாக பதிந்துவிடும். எனவே, மனித வடிவில் பலரை சென்று பார்ப்பது தவறு என்று கூறவில்லை. எல்லாம் கேட்டுவிட்டு, பிறகு, இறைவனை மானசீகமாக வணங்கி, "எது நல்லது, எது அல்லது என்பதை, இறைவா நீ உணர்த்து என்று" இறைவனிடம் சரணாகதி அடைவதே, மெய்யான குருவிற்கும், குருவின் சோதனைக்கும், ஏற்ற வழியாகும்.

சித்தன் அருள்................. தொடரும்!

Monday, 25 August 2014

ஓதியப்பர் பிறந்த நாள் படங்கள் 23/08/2014

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பர், ஒதிமலை கோவிலில், 23/08/2014 அன்று, ஓதியங்கிரி குமார சுப்ரமண்யரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்த சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

விரிவான தொகுப்பு, விரைவில் வரலாம்!

கார்த்திகேயன்!


[ஒதிமலை ஓதியப்பர் கோவில்]


[ ஒதிமலையில்  நடு மலையில் இருக்கும் அகத்தியர் லிங்கம்]


[ சூரிய உதயத்தில், ஒதிமலையின் நிழல் எதிர் மலையில் இருந்து ஓடி வரும் காட்சி]


[ஓதியப்பரின் பிறந்தநாள் அலங்காரம்]


Thursday, 21 August 2014

சித்தன் அருள் - 190 - அகத்தியர் அருள் வாக்கு - 4


ஆறாவது கேள்வி:- இறைக்கு வணக்கம்! அகத்தீசாய நமஹ! அஷ்டவக்ர மகரிஷியை பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. சிறிது விளக்கமாக அவரைப் பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவரின் உபதேசப்படி, "சாட்சி பாவனை" கை வரப்பெற்றால், பல பிறவிகளாக பிராணாயாமம், யோகா பயிற்சி, புனிதப்படுத்தல் ஆகிய செய்து, மோக்ஷம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. இக்கணமே மோக்ஷம் அடையலாம் என்று கூறுவதை விளக்கவும். அஷ்டவக்ரரின் உபதேசப்படி அனைவரும் அல்லது அதை கடை பிடிப்பவர், நிச்சயமாக சித்தியை அடையலாமா என்று கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அகத்தியரின் பதில்:-  இறைவனின் கருணையால், உடல், அதாவது தேகம் எட்டு விதமாக பிரிந்து பார்ப்பதற்கு, அவலட்சணத் தோற்றத்தோடு, தன்னை இருக்குமாறு, இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப் பெரிய ரிஷி. அகுதப்ப, அஷ்டவக்ர ரிஷியாகும். இகுதப்ப, பலரும் அவரை பார்த்து பரிகாசம் செய்த பொழுது அவர் மௌனமாக அதனை எதிர் கொண்டார். இகுதப்ப, அகுதப்ப அந்த மகான் மட்டுமல்ல, ஒவ்வொரு நாழிகையும் தான் உணர்ந்ததை, தான் அடைந்ததை, தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ  அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வரவேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், சிக்கல் எங்கே இருக்கிறது. மாயையும், அறியாமையும் விடாதவரை, ஒரே கணத்தில் உயர்ந்த நிலை எந்த ஒரு ஆத்மாவுக்கும் சித்திக்காது.  இன்னவன் கூறியது போல எழுத்தும் தேவை இல்லை, அகுதப்ப, அஷ்டவக்ரரின் முறையை கடை பிடித்தால் முன்னேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால், அதை கண்டு, உணர்ந்து, கேட்டு, புரிந்து கொள்வதற்கு, ஒரு ஆத்மாவிற்கு, கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே, எனவே, அப்படி ஒரு நிலையில் இருப்பவனுக்குத்தான், இகுதப்ப உபதேசம் உண்மையாக, மெய்யாக புரியுமப்பா. இல்லை என்றால், வெறும் செவி வாயிலாக எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறான் அல்லாவா, என்ன வாசித்தாலும், அதை எல்லாம் வெறும், ஏட்டோடு, செவியோடு என்று வைத்துவிட்டு, தனக்கென்று வரும் பொழுது, மிக மிக மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே அதை விடாதவரை, எந்த ஒரு ஆத்மாவும், மேலேறுவது கடினம். எனவே உன்னதமான உயர்ந்த அஷ்டவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து, குறிப்பாக குருவாரம் விரதமிருந்து  அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால், கனவிலோ, நேரில் வேறு வடிவில் வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய இறைவன் அருளால் காத்திருக்கிறார். 

ஏழாவது கேள்வி:- ஐய வினாவாக ஒரு கேள்வியை நான் கேட்கின்றேன். பரணி, கிருத்திகை நட்சத்திரத்திலும், அஷ்டமி, நவமி திதியிலும் அனுமந்த தாசன் அவர்கள் ஓலைச்சுவடியில் கூறுவது போல், அவர் கூறுகின்ற மாத்திரத்திலே அவர் சொல்லியிருக்கின்றார் அஷ்டமியோ நவமியோ சேர்ந்தாலோ, பரணியோ, கிருத்திகையோ வந்தாலோ நான் வாக்கை அளிப்பதில்லை, அப்படி அளித்தாலும், சிறிதுகாலம் ஏற்ப்படும், தடை ஏற்ப்படும் என்று சொல்லுகின்றார். நான் குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும் என்று புத ஹோரையிலே புறப்பட்டேன். சந்திர ஹோரை, சனி ஹோரை தவிர்த்து, குரு ஹோரை வரும் பொழுது, குரு கூடிவிட்டால் எல்லாம் ஏற்பட்டு விடும் என்று நிலை கூறுவதற்காக, இது எற்ப்பட்டதோ என்று ஒரு ஐயப்பாடு என்னுள் இருக்கிறது. குரு ஹோரையை தேர்ந்தெடுத்தால், அனைத்தும் ஆகிவிடும் என்ற 
நிலை எற்ப்பட்டதோ என்ற ஐயப்பாடு என்னுள் இருக்கின்றது. ஆகையினால், தாங்கள் இந்த ஐயத்தை நீக்கவேண்டும் என்று கூறி, அனுமந்த தாசன் கூறியது போல், பரணி கிருத்திகை வந்தாலோ, அஷ்டமி நவமி வந்தாலோ, நான் வரமாட்டேன் என்பது, வாக்கை அளிக்கமாட்டேன் என்பது இல்லை. குருவிடம் சேர்ந்தால் அனைத்தும் கிடைக்கும் என்பது உண்மையா? என்பதை நான் ஐயப்பாட்டுடன் கேட்கிறேன்.

அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால், பரணியோ, அஷ்டமியோ, நவமியோ, கிருத்திகையோ, சந்திராஷ்டமமோ, எமக்கு எதுவும் இல்லையப்பா. என்னை பொருத்தவரை, பொறுமையுள்ள மனிதன் வந்து அமர்ந்தால் போதும், நாங்கள் அல்லும், பகலும் 60 நாழிகையும் வாக்குரைக்கத் தயார், இறைவன் அனுமதித்தால். ஆயினும், சுருக்கமாக, வெளிப்படையாக கூறவேண்டும் என்றால், வருகின்ற மனிதனின் பூர்வீக பாபங்கள் கடுமையாக இருக்க, அவன் வினவுவதும் லோகாய விஷயமாக இருக்க, ஏற்கனவே பாபங்கள் அவனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டு இருக்க, வேதனையுடன் வந்து அமரும் அவனுக்கு, ஏதாவது ஒரு வழியை காட்ட வேண்டும் என்றால், விதி வழி விட வேண்டும். ஆனால், அதற்க்கு, லோகாதாய விஷயமாக அவன் கேட்கின்ற வினாவிற்கு நாம் இறைவன் கருணையால் விடையை கூறி அவன் துன்பத்தில் இருந்து மேலேறி வருவதற்காகத்தான் நாங்கள் காலத்தை பார்க்கிறோமே தவிர, பொதுவாக ஞானத்தை அறிந்து கொள்வதற்கு எக்காலமும் தடை அல்ல.

சித்தன் அருள்.................. தொடரும்!

Wednesday, 20 August 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பரின் நட்சத்திரம் (ஆவணி-பூசம்) இந்த வருடம் 23/08/2014 (சனிக்கிழமை) அன்று வருகிறது. அன்றைய தினம் ஒதிமலயில், ஓதியப்பருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து இந்த தொகுப்பு.

 • அன்று மதியம் ஒரு மணிவரை கோவில் திறந்திருக்க வாய்ப்பு உள்ளது.
 • சித்தர்களும் ஒதியப்பரை பூசை செய்து வழிபாடு செய்வார்கள் என்று கேள்வி.
 • மேலும் அன்று முதல் 90 நாட்களுக்கு எல்லா சித்தர்களும் அங்கு கூடி இருப்பார்கள் என்றும் ஒரு தகவல்.

விருப்பம் உள்ளவர்கள், அங்கு சென்று அவர் அருள் பெற்று வாருங்கள். எல்லாம் நல்ல படியாக நடக்க ஓதியப்பரை வேண்டிக் கொள்கிறேன்.

செல்லும் வழி : கோயம்பத்தூர் > அண்ணூர் > ஒதிமலை > 1800 படிகள் ஏறவேண்டும்!

கார்த்திகேயன்!

Friday, 15 August 2014

சித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை!


ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், திரு கணேசன், அகத்தியர் அருட்குடில், தஞ்சாவூர் அவர்கள் நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.

தேவையானவை:-

 1. வாழை இலை 
 2. பச்சை கற்பூரம் 
 3. சீரகம் 
 4. பருத்திக் கொட்டை 
 5. கல் உப்பு 
 6. மிளகு 
 7. நவ தான்யங்கள் 
 8. கோதுமை 
 9. நெல் (அவிக்காதது)
 10. முழு துவரை 
 11. முழு பச்சை பயிறு 
 12. கொண்ட கடலை 
 13. மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
 14. முழு வெள்ளை மொச்சை 
 15. கருப்பு எள் 
 16. முழு கொள்ளு 
 17. முழு கருப்பு உளுந்து 
 18. விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42
 19. தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21

செய்யும் முறை:-

எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.

துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும்.  தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கோட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.

ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும், ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும்.  பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).

இறுதியாக இறைவனிடம் "இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம். மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே.  நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். வேண்டுமானால், உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.

மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை  நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும். இது கட்டாயம்.

ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார். அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும். கோவிலில் முன் அனுமதி பெறுவது மிக முக்கியம்.

நன்றி:திரு.கணேசன், அகத்தியர் அருட்குடில், தஞ்சாவூர். 

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday, 14 August 2014

சித்தன் அருள் - 189 - அகத்தியர் அருள்வாக்கு - 3


மூன்றாவது கேள்வி: ஓம் அகதீஸ்வராய நமஹ! எல்லா பெரியவங்களுக்கும் வணக்கன். எப்படி கேட்பது என்று தெரியவில்லை, எங்க தொடங்குவது என்பது புரியல. முன்னர் அய்யா சொன்னாங்க, இனி பிறப்பெடுத்தாலும் உன்னையே நாடி வரும் மனம் வேண்டும் என்று. அப்படி ஒரு பெரியவர் மதுரையில் பழங்காநத்தம் அருகில் காசி விஸ்வநாதன், விசாலாட்ச்சி அம்மையார் ஆலயத்தை பராமரிச்சிட்டு வராங்க. அவங்க பெயர் கிருஷ்ணையா. அவங்க வந்து பதஞ்சலி மகா முனிவர வந்து, குருவா ஏத்துக்கிட்டு, அவரை நாடி வரக்கூடிய நல்ல ஆத்மாக்களுக்கு யோகத்தை பயிற்றுவிக்கிறாங்க. அப்படி பயின்று வரக்கூடிய ஒரு சீடரின் பெயர் சிவஞானம். அவருக்கு வந்து, ஒரு பெரியவர் அழைத்துச் சென்று, "இந்த இடத்தில் கோவில் கட்டு" என்று சொல்லிட்டுப் போயிட்டாங்க. அந்த இடம் வந்து மதுரைக்கு அருகில், வேலூர் அருகில் அரிட்டாப்பட்டி. அங்க வந்து ஈஸ்வர ஆலயம். அந்த இடத்தைப் பற்றி வரலாறு என்ன சொல்லறாங்கன்ன, ஒரு மகரிஷிக்கு அம்மை அப்பனே காட்சி கொடுத்து, நானே உன்னுடைய தாய் தந்தை என்று அருளாசி கொடுத்ததாகச் சொல்லறாங்க. அந்த கோவில் கட்டக் கூடிய பணிக்குத் தேவையான செல்வம் கிடைப்பது என்பது மிகக் கடினமாக இருக்கிறது. அத எப்ப, எப்படி கட்டி முடிப்பாங்க? எப்படி நடக்கும். அது க்ரிஷ்ணய்யவினுடைய தலைமையில் தான் நடக்கும் என்று விஸ்வாமித்ரா நாடில வந்ததாகச் சொன்னாங்க. தற்போது பதஞ்சலி மகா முனிவருடைய நாடில வேறு விஷயங்கள் வருகிறது. அந்த கிருஷ்ணையாவினுடைய தலைமையில யோகம் பயிலும் மாணவர்களுக்கு ஆசி கிடைக்கவும், கோவில் கட்டுகிற பணி நல்லபடியாக நடக்கணும். அது கிருஷ்ணையா தலைமையில் நடந்தால் மிகச் சிறப்பு. இன்று சுயநலமில்லாம, மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, நல வழி செல்வதற்கான நல்ல விஷயங்களை போதிக்கிறாங்க. நல்லோர்கள் நல்ல படியாக வாழ்ந்தால், அவர் வழி செல்லும் மாணவர்களும் நல்ல வழியில் செல்வார்கள். இப்படிக்கு, அந்த காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மையார் கோவில், நல்ல படியாக கட்டி முடிக்கவும், அவர் கீழ் பயிலும் மாணவர்கள் நல்ல படியாக முன்னேறவும், அய்யா நல அருளாசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அகத்தியர் பதில்:-   இறைவனின் கருணையை கொண்டு, இயம்புவது யாதென்றால், இகுதப்ப, ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயமாகும். மனிதன், மனதிற்குள், ஒவ்வொரு மனிதனும் தத்தம் மனதிற்குள் ஆலயத்தை எழுப்புவதும், மனமாகிய கருவறையிலே, தூய இறையை அமர்த்தி, அன்றாடம் அன்பால் பூசை செய்வதையுமே, இறைவன் விரும்புவது. இருப்பினும், எடுத்த எடுப்பிலேயே, இது போன்ற தத்துவார்த்த விஷயங்களை கூறினால், அது பலனை தராது என்பதால் தான், புற வழிபாடுகளும், புற பூசைகளும், முன்னோர்களான மகான்களால் தான் வைக்கப் பட்டு வருகின்றன. இகுதப்ப, பல் வேறு ஆலயங்களிலே, பல் வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டு, அது காலம் கடந்து நிற்கிறது, சில சிதிலம் அடைந்து விடுகிறது. இவை அனைத்திற்குமே, பல்வேறு விதமான சூட்ச்சுமா காரணங்கள் இருக்கிறது. இகுதப்ப, இம்மகன் எழுப்பிய வினாவின் அடிப்படையிலே, இகுதப்ப ஆலயம் சிறப்புடன் வளர, யாம் இறைவன் அருளால், நல்லாசிகள் கூறுகிறோம். எந்த ஒரு ஆலயமும், மெய்யாக மெய்யாக வளர, மெய் அன்பர்கள் ஒன்று பட்டால் போதும். அங்கே அருள் இணைப்பு இருந்தால் போதும். பொருள் இணைப்பு மிகப் பெரிய விஷயம் அல்ல. இறைவன கருணையால், இனிதே நடக்கும். இந்த தமிழ் மண்ணில் உள்ள மூத்தோனுக்கு தலை சிறந்த ஆலயங்கள். அங்கெல்லாம் தொடர்புடைய மனிதர்கள் சென்று, இயன்ற வழிபாடுகள் செய்து, பணியை துவக்க, நலம் நடக்கும். நல்லாசிகள்.

நான்காவது கேள்வி:- சூலகிரில வரதராஜ சுவாமி கோயில் இருக்கு. அர்ஜுனன் பிரதிஷ்டை பண்ணின சுவாமி அது. அபயஹச்தம் அது. (ஆனால் கோவில் அதிகமாக வளர்ச்சி அடையவில்லை.)

அகத்தியரின் பதில்:- இறைவன் கருணையாலே, அனைத்து பிராண சம்பவங்கள் நடந்தது உண்மை. தக்க காலத்தில், வலிவும், பொலிவும், அகுதப்ப சூழல் உருவாகும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆலயம் வளர்ச்சி பெறுவது என்பது மனிதர் நோக்கிலே இருப்பது அல்ல. பெருவாரியான ஆட்கள் ஒரு ஆலயத்தை நோக்கி படை எடுத்தால் என்ன ஆகும்? அங்கு வெறும் வியாபாரம் தான் இருக்கும். இறை அம்சம் இருக்குமா? எனவே, ஒரு ஆலயம் அத்தனை எளிதாக பலரின் பார்வைக்கு வரவில்லை, பலரும் அவரை எண்ணிக் கூட பார்க்கவில்லை என்றால், சிலர் மட்டும் செல்கிறார்கள் என்றால், அதனால் அந்த ஆலயத்திற்கு குறை ஒன்றும் அல்ல. தொடர்ந்து, அந்தந்த காலத்தில், எந்தெந்த ஆத்மாக்கள், அந்த ஆலயத்தோடு தொடர்புடையவர்களோ, அவர்கள் வந்து தொண்டினை தொடர்வார்கள். சிறப்பாக அனைத்தும் நடக்கும். நல்லாசிகள்.

ஐந்தாவது கேள்வி:- மீண்டும் மீண்டும் கேட்கிறேனே என்று அவை என்னை மன்னித்தருள வேண்டும். சுயநலமற்று, மனித நேயத்தோடு, தமிழ் சார்ந்த, தமிழ் மக்களுக்காக, தமிழை வளர்த்த, அதற்காக சங்கம் ஏற்ப்படுத்திய, தமிழ் மொழிக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற, தமிழ் இறையனார் எம்பெருமானும், முருகவேளும், தமிழ் என்று எப்பொழுதும் ஒலித்து, அதற்கே ஆட்சி என்று கொடுத்த இந்த தருணத்திலே நாம் கேட்பது, காவிரியை கொடுத்த அகத்தியர், கர்நாடகத்திலே கொடுத்தாலும், தமிழ் மக்களுக்கு சென்று பலன் அளிக்கிறது என்று ஒருவாறாக கூறாமல், என்று இந்த காவிரி பிரச்சினை, பொதுவாக தீர்க்கப்படும் என்று வேண்டி உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் பிறந்தவனோ, கர்நாடகத்திலே பிறந்தவனோ, உலகத்தில் இருக்கின்ற அனைவருமே அருந்தக்கூடிய, அந்த கங்கை நதியே இங்கு காவிரியாக வந்து அனைவரும் பெறுவதற்கு தகுதி இருக்கும் பொழுது, ஒருவருக்கொருவர், சமாதானமின்றி, சண்டையிட்டுக் கொள்வது என்று முடியும் என்று வேண்டி பொதுநலக் கருத்தோடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

அகத்தியர் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு இயம்புகிறோம் அப்பா. மனிதர்கள் இருக்கும் வரையிலும், மனிதர்க்குள்ளே, பிரச்சினைகளும், அமைப்புகளும், எக்குதப்ப சிக்கல்களும் இருந்து கொண்டுதான் இருக்கும். காரணம் காலம் தோறும் மாறலாம். ஆனால், மனிதர்களிடையே பகைமையும், கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே. மனிதருக்குள், தனிமனித ஒழுக்கம், தனி மனித பண்பாடு, வளராதவரை, இதை எதனாலும், யாராலும் ஏற்க முடியாது. இது மனித ரீதியான பார்வை. விதியும், கர்மாவும் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அப்படித்தான் மனித மனம் செல்லும். இருந்தும், நாங்கள் இறையிடம் பிரார்த்தனை வைத்து, என்றும் சமாதான லோகம் இருக்க வேண்டும் என்று அன்றாடம் தவம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இகுதப்ப, இங்குள்ள மனிதர்களும், அங்குள்ள மனிதர்களும், எல்லா மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இந்த உலகம் மட்டுமல்லாது, அனைத்தும் இறைவனால், படைக்கப்பட்டது. எனவே, இதில் யாரும் ஆண்டானும் இல்லை, யாரும் அடிமையும் இல்லை. எல்லோருக்கும், எல்லாம் பொது என்கிற ஒரு உணர்வு, ஒவ்வொரு தனிமனித மனதிலும் வரவேண்டும். அப்படி வருவது கடினம் என்றாலும், வர வேண்டும், வர வேண்டும் என்று எப்பொழுதுமே இறையிடம் வரம் வேண்ட, அகுதப்ப வரம் வரவேண்டும் என்று யாமும் நல்லாசி கூறுகிறோம்.

சித்தன் அருள் ................. தொடரும்!

Thursday, 7 August 2014

சித்தன் அருள் - 188 - அகத்தியர் அருள்வாக்கு - 2


முதற்கேள்வி: அகத்தீஸ்வராய நமஹ! இந்த அருட் குடிலை, நாங்கள் தஞ்சாவூரிலே நீண்டகாலமாக நாடி வருகிறோம். இந்த நாடி வருவதினுடைய நோக்கம் என்ன? ஒன்று ஞான வழி அடையவேண்டும். இரண்டாவது குடும்பத்திலே உள்ள சில சச்சரவுகள், துயரங்கள் நீங்க வேண்டும். நோய்கள் நீங்கவேண்டும். இவ்வாறான கார்யங்களுக்காக இந்த ஜீவநாடியை நோக்கி நாடி வருகிறோம், மற்ற இடங்களிலே ஓடி ஓடி களைத்து, உண்மை இல்லை, பொய்யை கண்டோம், துயரம் கண்டோம், துயரம் நீங்கவில்லை என்று, இந்த ஜீவநாடியை நோக்கி வருகின்றோம். இந்த வருகின்ற வேளையிலேயே, அய்யா அநேக வகையான நன்மைகளை, எனக்கும் மற்றவர்களுக்கும் செய்து வந்தாலும், இன்னும் சில சூட்சுமமான விஷயங்களை கற்றுக்கொள்ள, அதை நானும் முயற்சி செய்யவில்லை, அய்யாவும் கொடுத்தபாடில்லை. சில யோகா, வாசி, மூச்சை அடக்கினால், வாசி யோகங்களை, ப்ராணா யோகத்தையோ, அல்லது வாசி யோகத்தையோ, அல்லது லய யோகத்தையோ, ஒரு மனிதன் கற்றுக் கொண்டால், பயிற்சியின் பிரகாரம் எடுத்துக் கொண்டால், நோய்கள் எவ்வளவோ குறைந்து வருகின்றன. இதை சித்தர்களே ஏற்கனவே, பல ஏடுகளில் சொல்லியிருக்கின்றார்கள். "நீ காசிக்கெல்லாம் கால் வலிக்க நடந்து சென்றாலும், வாசிதனை மறந்துவிட்டால் என்ன பயன்" என்று சூட்ச்சுமமாக சொல்லி, இந்த வாசியை கற்றுக்கொள், வாசியை கற்றுக்கொள் என்று சொல்லி, அதற்குரிய ஆசானும் எங்களுக்கு கிடைத்த பாடில்லை, ஏதோ கிடைப்பதை கொண்டு, ஒரு பாதியான முறையிலே செய்யும் பொழுது, ஓரளவுக்கு நோய்கள் கட்டுப்படுகின்றன, சில நன்மையான விஷயங்கள் தெரிகின்றன. ஆகவே, இந்த அருட்குடிலில், இந்த யோகநிலை கற்றவர்கள், யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து, அல்லது ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுத்து, தஞ்சாவூரில் உள்ள அருட்குடிலிலே, யாரோ ஒருவர் பயிற்சி கொடுத்தால், நோய்கள் நீங்கும், இதற்காக ஆசுபத்திரியிலே போய் கோடிக்கணக்காக சிலவு பண்ணறாங்க, கான்சருக்கு செலவு பண்ணறாங்க, எங்களுக்கு இதை நீக்குவதற்காக, இந்த அருட்குடிலிலே எங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுத்து, இந்த யோக பயிற்ச்சியை ஏற்ப்படுத்தி தர முடியுமா என்பது, ஒரு பொதுக் கேள்வி."

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம். இஃதொப்ப இன்னவனின் வினாவிற்கு இஃதொப்ப அவன் கூறியதை, அஃதாவது வாசியை, திருப்பி வாசித்தால் அதுவே பிரணாயாமம் அப்பா. வாசியை திருப்பித் திருப்பி வாசி. அதுவே பிரணாயாமம். இன்னும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமை நோக்கி வருகின்ற மனிதர்கள் பெரும்பாலும் காணபிம்பப் பேழையிலே எங்களை வைத்து கற்பனா கதையையெல்லாம் பிம்பமாக்கிக் காட்டுகிறார்களே ? அதை எண்ணியும், அஃதொப்ப இயம்புங்கால், நல்விதமாய் காதைகளை வாசித்து, வாசித்து, அந்தக் காதைகளில் உள்ளவற்றைப் போலவே தொடர்ந்து இஃதொப்ப எம் வாழ்க்கையிலும் சித்தர்கள் தலையிட்டு அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு வருகிறார்கள். தவறொன்றுமில்லை. இருந்தாலும் எப்படி படிப்படியான ஒரு முன்னேற்றமோ அஃதொப்ப, மழலை, தன் மழலை மாறாத நிலையிலே கல்வி கற்க முனையும்பொழுது அந்த மழலையின் மன நிலைக்கு ஏற்ப வித்தைகள் அங்கே பயிற்றுவிக்கப்படுகின்றனவோ, அதைப்போலதான் எம்மிடம் வருகின்ற மனிதர்களின் மனோநிலையை அறிந்துதான் யாங்களும் வாக்கைக் கூறுகிறோம். இஃதொப்ப நிலையிலே, இங்கு வருகின்ற மாந்தர்களின் பூர்வீக பாவங்கள் குறைந்தால் ஒழிய வாசி யோகமோ அல்லது அது தொடர்பான எந்தவொரு சாகா கலையும் சித்திப்பது என்பது மிக, மிக அரிது. இல்லையென்றால் ஆங்காங்கே மனிதர்கள் பயிற்றுவிப்பதாக கூறப்படுகிறதே, அங்கு சென்று வேண்டுமானால் கடுகளவு அறிந்து கொள்ளலாம். எனவே பாத்திரத்தை சுத்தி செய்யாமல் பாலைக் காய்ச்சினால் பால் திரிந்து விடுமப்பா. எனவேதான் எம்மைப் பொறுத்தவரை எம்மை நாடி வருகின்ற மனிதனுக்கு யாங்கள் இப்படியெல்லாம் கடுமையான யோகப் பயிற்சியையெல்லாம் கூறாமல் இஃதொப்ப மிக எளிதான பக்தி மார்க்கத்தையும் அதோடு சார்ந்த தர்மத்தையும் கூறுகிறோம். இப்பொழுதும் கூறுகிறோம், இனியும் கூறுவோம், முன்பும் கூறினோம். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் மனம், அவரவர் விதிப்படி செயல்பட்டு விட்டுப் போகட்டும். “ ஆனால் விதி மாற வேண்டும். எங்கள் மதியில் நிம்மதி அமர வேண்டும் “ என்று இந்த ஜீவஅருள் ஓலை முன்னே வருகின்ற மனிதன், 100 –க்கு 100 விழுக்காடு யாம் கூறுவதை உளமார ஏற்றுக் கொண்டால், கட்டாயம் படிப்படியான முன்னேற்றம் இறைவனருளால் கிட்டுமப்பா. எனவே யாமே தக்க காலமறிந்து எம்மிடம் வருகின்ற மாந்தர்களுக்கு ‘ இதுகாலம் இவன் லோக வாழ்க்கையிலே நுகர்ந்து வந்த துன்பங்கள் போதும். இனி யோக வாழ்க்கையை நோக்கி செல்லலாம், என்ற ஒரு நிலை வரும் சமயம், யாமே அது குறித்து போதிப்போம். சிலருக்கு போதித்தும் இருக்கிறோம். ஆனால் போதித்தும் பலன் ஏதுமில்லை. மீண்டும், மீண்டும் லோகாயம் நோக்கிதான் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனவே பற்றற்ற தன்மை வராத வரை, பெருந்தன்மையான குணம் வளராத வரை, "என் வீடு, என் மக்கள், என் மனைவி, என் ஆஸ்தி" என்கிற எண்ணம் விட்டுப்போகாத வரை வாசியோகம் எவனுக்கும் சித்திக்காதப்பா.

இரண்டாவது கேள்வி: ஓம் நமச்சிவாய! ஒன்றே எண்ணில் ஒன்றேயாம், பலவே எண்ணில் பலவேயாம். அன்றே எண்ணில் அன்றேயாம். ஆம் என்னில் ஆமேயாம் என்று இறைவனை எப்படி அறிந்து கொள்வது என்று யுத்த காண்டத்திலே, கம்ப ராமாயணத்திலே கம்பர் கூறுகின்றார். இது வழி சென்றால் இறைவனை அடையலாம். இவ்வழி சென்றால் இறைவனை அடையலாம், அவ்வழி சென்றால் இறைவனை அடையலாம் என்று தடுமாறி, பல நிலைகளிலே நாங்கள் செல்லுகின்றோம். நான் செல்லுகின்றேன் என்று பழியை என்மேல் சுமத்தி நான் இந்த வாசகத்தை துவங்குகின்றேன். ஒருவனா இறைவன், பலவா என்ற கேள்விக்கு, ஒன்றே எனில் ஒன்றேயாம், பலவே எனில் பலவேயாம் என்று சொல்லிவிட்டார். ஒன்று என்றால், நமச்சிவாயம் ஒன்றே, அந்த ஜோதிவடிவான, வடிவமற்ற இறைவன் என்றும் சொல்லலாம். பலவே என்றால், 700 கோடி மக்கள், இன்று உலகத்தில் பறந்து இருக்கின்ற அனைவரும் அந்த இறைவன் என்று சொல்லலாம். குறிப்பாக, என் முன் காட்ச்சியாக காணுகின்ற அகத்தியர், அகத்தியரின் வாக்காக, வாக்கினை சொல்லுகின்ற திரு.கணேசன் அவர்களும் இறைவனாக, நானும் இறைவனாக, இங்கு கூடியிருக்கின்ற அன்பர்கள் அனைவரும் இறைவனாக ஏற்றுக் கொண்டால், இது நீங்களாக இருக்கின்ற உலகத்தில் இருக்கின்ற அனைவரும் இறைவனாகவும் ஏற்றுக் கொண்டால்,  "சர்வ ஜனா சுகினோ பவந்து" என்று சொல்லுகின்றோம். உலகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும், இன்பமாக, இனிதே வாழ வேண்டும் என்கிற எண்ணத்திலே ஒருவன் தலைப்பட்டால், பல நிலைகளை சொல்லி, அம்மே என்று சொல்லி, இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்கிற நிலையை நான் கேட்க விரும்பவில்லை. அம்மே! என்றால், அப்படி இருந்தால், அவர் இருக்கின்றார் என்றால், நீங்கள் சொல்லிவிட்டீர்கள், நான் கேட்பதற்கு முன்னாகவே, என் அகத்தியர் எனக்கு வக்களித்தாற்போல் ஏற்றுக்கொள்ளுங்கள், ஒளியற்றவர் என்று சொல்லி ஒளியே இல்லாமல் இறைவன் இருக்கலாம் என்று சொன்னால், பஞ்ச பூதங்களை தாத்பர்யமாக நாம் நினைக்கின்றோம். வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஒலியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையும் இன்மையுமாய் ........................ தான் நான் என்று சொல்லி, நான் என்பது எனது என் மக்கள் என்று சொல்லி, நான் எப்பொழுது தலைப்பட்டு அதை பற்றியே சிந்திக்கின்றேனோ, அதுகால், எனக்கு இந்த இறை அருள் கிடைக்காது என்று சொல்லுகிறீர்கள். நான் இதை எல்லாம் விட்டு செல்லவேண்டும் என்றால், நான் என்ன செய்ய வேண்டும், நானே என்னை விடவேண்டும் என்றால், அது என்ன முறை? என்று தான் நான் கேட்க விரும்புகின்றேன். மேலும் மகாபாரதத்திலே, கிருஷ்ணர் அன்று அர்ஜுனனுக்கு சொல்ல்லுகின்றார் "நான் இல்லாத நாளும் இல்லை, நீ இல்லாத நாளும் இல்லை, என்றும் நிறைந்திருக்கின்ற ஒரு தத்துவத்தை அவனுக்கு உணர்த்துகின்றார். எக்காலத்திலும் நீங்கள் இருந்தீர்கள், எக்காலத்திலும் நானும் இருந்தேன் ஆனால் அது உனக்கு புரியவில்லை. அர்ஜுனா நீ இல்லாத நாளும் இல்லை, கிருஷ்ணனாகிய நானும் இல்லாத நாளும் இல்லை. ஆகையினால், இந்த 700 கோடி ஜனங்களும், ஆன்மாவாக அலங்கரித்துக்கொண்டு கொண்டு, இந்த உலகில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் என்று ஒத்துக்கொண்டால், நான் இல்லாத நாளும் இல்லை, நீர் இல்லாத நாளும் இல்லை என்றால், பிறப்பு என்பது வந்து கொண்டே இருக்கும், அந்த தளையை நீக்க முடியாது. பிறப்பறுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். பிறந்து கொண்டே இருப்போம், இறைவனை வணங்கிக் கொண்டே இருப்போம் என்ற தத்துவம் உண்மையா, அல்லது இந்த பிறவியை விடுத்து நான் இறைவனாக சென்று விட்டேன் என்று மறு பிறப்பின்றி வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்த இறைவனை போற்றக் கூடிய பலன் இல்லாமல், இறை அருளை பற்றி வகுக்கக்கூடிய நிலை இல்லாமல், உலகம் அனைத்தும், மகா பிரளயம் ஏற்ப்பட்டு அனைத்தும் அவர்களுக்கு ஒன்றாகிவிட்டால், உலகம் என்பது தேவை அற்றதாகும். ஆகையினால் என்னுடைய கேள்வி. மறு பிறப்பு வேண்டுமா? அல்லது பிறவாத வரம் வேண்டும். அப்படி மறுபடியும் பிறந்து விட்டால், உன்னை மறவாத வரம் வேண்டும் என்கிற பல்லோர் கருத்தினை நானும் ஏற்றுக் கொண்டு, பிறவி தொடர்ந்து வரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவேண்டுமா, பிறவாத வரம் வேண்டுமா என்கிற கேள்விக்கு நான் இங்கு உங்கள் முன் கேட்டுக் கொள்கிறேன்.

​​அகத்தியரின் பதில்: இறைவனின் கருணையை கொண்டு, இன்னவனுக்கு, இன்னவன் வினாவிற்கு, இத்தருணம் யாங்கள் இயம்புவது, ஒன்று, மந்திரி ஒருவன் இருக்கிறார், மிகவும் உயர்ந்த பதவி என்று வைத்துக் கொள்வோம். அவனை எனக்குத் தெரியும், என் தோழன், என்னோடு கல்வி பயின்றவன் என்று ஒருவன் கூறுவது உயர்வா, அல்லது அந்த மந்திரி, எல்லாம் எமக்குத்தெரியும், என்னுடன் கல்வி பயின்றவன், உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறுவது சிறப்பா? இறைவனை தெரியும் என்று மனிதன் கூறுவதை விட, இத்தனை கோடி மனிதர்கள், இவனை எமக்குத் தெரியும், அதோ வருகிறாள், யார், எம்பால் என்று காரைக்கால் அம்மையாரை பார்த்து முக்கண்ணன் கூறினாரே, அதோ வருகிறார், யார், நம் தோழன் என்று சுந்தரரை பார்த்துக் கூறினாரே, அதைப் போல இறைவனைத்தேடி நாம் செல்ல வேண்டாம். ஒவ்வொரு மனிதனையும் தேடி இறை வரும் வண்ணம் ஒவ்வொரு மனிதனும் பக்குவம் அடைந்தால் போதும். எப்படி பக்குவம் அடைவது என்பதற்குத்தான் பல்வேறு நீதி மொழிகள் இருக்கின்றன. யாமும் சிலகாலமாக இறைவன் அருளால், வாக்கினை ஓதிக்கொண்டிருக்கிறோம். எனவே, என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது? இது வேண்டுமா, வேண்டாமா? பிறவி தொடர்வதா, தொடராமல் இருப்பதா? இது போன்ற அனைத்தையும் விட்டுவிட்டு, எந்த விதமான எண்ணங்களும் இல்லாத வெற்று பாத்திரமாக மனதை வைத்து இறையிடம் பரிபூரண சரணாகதி என்பதை எண்ணங்களால் வைத்து மனிதன் வாழ்ந்தால், அவன் யார், அவன் எதற்கு, எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை இறையே உணர்த்தும். எனவே, இன்னவனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எல்லோரும் இறையில் நகை கொள்ளார். ஆனால் கனகம் இருக்கிறதே, அது கனகம் என்று தெரியாத நிலையிலே, சேற்றிலே அமிழ்ந்து கிடந்தால், யாரும் மதிக்கமாட்டார்கள். தூய்மை படுத்தினால், கனகம் என்று தெரியும். அதுபோல, பற்று, மாயை, அறியாமை, ஆசை, சுயநலம், தன்முனைப்பு போன்ற அழுத்துதல் போன்றவை, மனித ஆன்மாவை மூடியிருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டால், எல்லோரும் இறை நிலைக்கு உயர வாய்ப்பு உண்டு.

சித்தன் அருள்............... தொடரும்!