​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 31 December 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!2014ம் ஆண்டில் அனைவரும் நலம்பெற்று வாழ, அகத்தியப் பெருமான் அனைவரையும் வழிநடத்தி அருள்புரிய வேண்டுகிறேன். எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Thursday, 26 December 2013

சித்தன் அருள் - 156 - நம்பிமலை!

[நம்பிமலை - மலை பாதை]
"பதிமூணு நாள்னு சொல்லிட்டாரு." என்ற படியே நாடியை புரட்டினேன்.

"இரவு காலத்திலும், அந்திம பொழுதிலும். சுப காரியங்களை பேசுவது அகத்தியன் வழக்கமல்ல" என்றார்.

"ராத்திரி நேரத்தில் வேண்டாம். சுப காரியங்களை விலக்குவோம். இது ராகு, கேது மிக பலம் பொருந்தி இருக்கிற இடம், நேரம்." என்றேன்.

மேலும் ஒருவர் கேட்டார்.

"எனக்கு உடம்பில் ஒரு சில கட்டிகள் இருக்கு. அதற்கு மருந்து, முன்னரே சொன்ன மருத்துவ வழிகளில் கிடைக்குமா?" என்றார்.

"அதை எல்லாம் குணப்படுத்தத்தாண்டா, அகத்தியனே, போகனுடன் இங்கு வந்திருக்கிறேன்.  அந்த கட்டிகள் வந்ததற்கு, காரணம் பல உண்டு. குடும்பத்தில் உனக்கு மட்டுமல்ல, உன் முன்னோர்கள் ஒரு சிலருக்கும், இந்த குறை உண்டு." என்றார் அகத்தியர்.

"அப்படியா? உங்க குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது இப்படி கட்டி உண்டா?" என்றேன்.

"இருப்பினும், அதற்கு ஒரு காலம் உண்டு என்று சொல்லி உன்னை அகத்தியன் கை கழுவ மாட்டேன். உன் நோய் மிக விரைவில் குணமடையும். இது ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக உடம்பிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது."

"உண்மை தானா?" என்றேன்.

"ஆமாம்!" என்றார் அவர்.

"ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் 2012ம் ஆண்டு முடிவில் உலகம் அழியும் என்று காட்டினார்கள். அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா?" என்றார் ஒருவர்.

"அகத்தியன் வாயை ஏண்டா கிளறுகிறாய். சில விஷயங்களை சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்துக் கொண்டிருந்தேன். ஒரு சூட்சுமம் மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவர்களுக்கு உலகத்தை கணக்கிட அதிகாரம் கிடையாது. மனிதர்கள் கிரகங்களை வற்புறுத்த முடியாது. கிரகங்கள் ஒன்று பட்டால் தான், வெகுண்டு எழுந்தால் தான் உலகம் அழியும். என்றைக்கு ஒருநாள் மங்கோலிய தேசத்து நாட்டரசன் ஆங்கொரு விண்கலத்தை காரியை நோக்கி செலுத்த நினைக்கிறானோ, அன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள், பசிபிக் மகா சமுத்திரத்திலே, ஆங்கோர் சுனாமி வெடிக்கும், அது உலகத்தின் பெரும் பகுதியை அழிக்கும். அதுதான் உண்மை. இவர்கள் சொல்கிற கூற்றை அகத்தியன் ஏற்பதற்கில்லை."

"சீனாவிலிருந்து ராக்கட் விடுவதையா கூறுகிறார்?"

"சைனாவிலிருந்து காரி என்று சொல்லக்கூடிய, சனி கிரகத்துக்கு 5 ஆண்டுகளில் ஒரு ராக்கட் விடுவான். அப்படி விட்ட 5 ஆண்டுகளில் பசபிக் மஹா சமுத்திரத்திலிருந்து ஒரு சுனாமி கிளம்பும். அது பாதி உலகத்தை அழிக்கும். அது தான் உண்மை. மேற்கொண்டு என் வாயை கிளறாதே என்று சொல்லிவிட்டார்" என்றேன்.

"உண்மையாகவே, உலகத்துக்காக, இந்த கேள்வியை நாளை கேட்கலாம் என்று இருந்தேன். இருந்தாலும் கேட்டுவிடலாமே என்று கேட்டேன்" என்றார் அவர்.

"நாளைக்கு கேள்வி, நாளைக்கு. இது அந்திம பொழுது. ராகு, கேதுவின் பலம் வாய்ந்த நேரம். எதுவும் கேட்க்காதே என்கிறார்." என்றேன்.

"கெட்ட எண்ணங்கள், துஷ்ட சக்திகள் போன்றவை இந்த நேரத்தில் வேண்டாம். ஏன் நல்ல விஷயங்கள் ஆன திருமணம் போன்ற விஷயங்களும் இந்த அந்திம நேரத்தில் பேச வேண்டாம் என்கிறார்" என்றேன்.

"எனக்கு, மூலிகைகள் சம்பந்தப்பட்ட, தோட்டம் போன்றவை வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அது நிறைவேறுமா?" என்றார் ஒருவர்.

"அது மட்டுமா இவனுக்கு ஆசை? உலகத்தைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், பல காலமாகவே சிந்திக்க தொடங்கி இருக்கிறானே. அவ்வப்போது, அது வேண்டும், இதுவேண்டும் என்று தன்னலம் கருதாமல், உலகத்துக்காக, ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என்று அகத்தியன் மைந்தனிடம் சொல்வானே. புதியதல்லவே! இது சின்ன ஆசை அல்ல, நியாயமான ஆசை. அதற்கான, வாய்ப்பை தர மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் வருவான். சில தோட்டங்களை பயிரிட வேண்டும் என்று இவனிடமே கேட்பான். இவன் மூலமாக கூட அந்த மூலிகை பண்ணை தயாராகும். பொறுத்திரு. அந்த நபரை அனுப்பி வைக்கிறேன். அவன் மூலம் இவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்."

"யாரோ ஒரு பெரிய பணக்காரன் ஒருத்தன் வருவான் போலிருக்கு. அவன் மூலமாக இந்த விஷயம் நடக்கும்" என்றேன்.

"அக்கு பங்க்சர் சம்பந்தமாக ஒரு புத்தகம் வெளியிடலாம் என்று இருக்கிறேன். அதற்கு அருளாசி வேண்டும்" என்றார் ஒருவர்.

"தாராளமாக வெளியிடலாம். பத்திரிகையில் வருவது நல்லது தானே.அது வழி பலருக்கும் பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே. தாராளமாக செய்யலாம்" என்றார் அகத்தியர்.

"எனக்கு செவ்வாய் தசை முடிந்து, ராகு மகா தசை தொடங்கி இருக்கிறது. அந்த தசை நல்ல படியாக இருக்கவேண்டும், அதற்கு ஆசி வேண்டும்" என்றார் ஒருவர்.

"ராகுவின் காலம் என்று சொன்னதால் இப்படி கேட்கிறாயா? ராகுவே பக்கத்தில் இருக்கிறான். ஆதிசேஷன் தான் ராகு. ஆதிசேஷனை வணங்கி, தடவி கொடுத்துவிட்டு, அவன் ஆசி பெற்றுவிட்டு செல்கின்ற நேரம். அகோபிலத்துக்கு அவன் சென்றுவிட்டான். முக்கண்ணனும், படைப்புக் கடவுளும் போய் 15 வினாடிகள் ஆகிவிட்டது. மிச்சம் இருப்பது ஆதி சேஷன் ஒருவனே. ஆதி சேஷன் தான் ராகு கேது என்பது. அவனிடமே சொல்லி அவனது நல்லதொரு வார்த்தையை வாங்கித் தருகிறேன். ஒரு வினாடி கண்ணை மூடி ஆதிசேஷனை பிரார்த்தனை செய்" என்றார் அகத்தியர்.

ஒரு சில வினாடிகள் மௌனமாக ஆதிசேஷனை பிரார்த்தித்தார் அவர்.

"மங்களம் உண்டாகட்டும். ததாஸ்த்து" இது ஆதிசேஷன் சொன்ன வார்த்தை. 

நினைத்தது நல்லபடியாக நடக்கும். ததாஸ்த்து அப்படின்னா "ஆசிர்வாதம்" என்றேன் நான்.

"ஆகவே, ஆதிசேஷனிடமிருந்து ஆசிர்வாதம் பெற்ற புண்ணியம் உனக்கு உண்டடா" என்றார் அகத்தியர்.

"அதற்குள் ஏன் இந்த சோகம்? இவனுக்கு மட்டுமா ஆதிசேஷன் ஆசிர்வாதம். எங்களுக்கு இல்லையா, என்று ஏனடா எண்ணுகிறீர்கள்? எல்லோருக்குமே வாங்கித் தருகிறேனடா. அகத்தியன் என்றேனும் பாகு பட்டு பேசியிருக்கிறேனா? இல்லை என்றால் உங்கள் எல்லோரையும் இங்கு வரச்சொல்லியிருப்பேனா? எல்லா புண்ணியங்களும், எல்லாருக்குமே போய் சேரும். அவன் கேட்டான், நான் வாங்கிக் கொடுத்தேன். அவ்வளவுதான். உனக்கு ராகுவின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை என்றால் மனம் ஒடிந்து போகக் கூடாதே. அன்னவன் ஆசிர்வாதம் அத்தனை பேருக்கும் உண்டு. ஏன் மனதிற்குள் அடுத்த கேள்வியை கேட்கிறாய்?" என்றார் அகத்தியப் பெருமான்.

"யாரோ மனசுல நினைச்சுண்டு இருந்திருக்கப் போல" என்றேன் நான்.

"ஆமாம்! நான்தான். ஆசிர்வாதம் நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்" என்றார் ஒருவர்.

"அகத்தியப் பெருமானிடம் அது நடக்குமா? மனசுக்குள் நினைத்தாலும் அவர் படித்துவிடுவார்" என்றேன்.

"அப்ப, சந்திரனுடைய அஷ்டம பலன் நமக்கு இல்லை என்பதால், மனக் குழப்பங்கள் நமக்கு வராது இல்லையா?" என்றார் ஒருவர்.

"ஆமாம், எதுவுமே உங்களை பாதிக்காது" என்றேன்.

"எதுவுமே நம்மை பாதிக்காது. தவறான எண்ணங்கள், செயல்கள் எதுவுமே, நாம் செய்ய மாட்டோம்." என்றார் ஒருவர்.

"அரசியலை பற்றி கேட்கலாமா?" என்றார் ஒருவர்.

"அரசியலை பற்றி அகத்தியன் வாக்குரைக்க மாட்டோம்" என்றார் பெருமான்.

"அரசியலுக்கும், அகத்தியனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குறுக்கு வழியில் நீ பணம் சேர்ப்பதற்கா விரும்புகிறாய்? சற்று முன் சொன்னதை எல்லாம், அத்தனையும் மறந்து விட்டாயே. என்ன? புனிதத்தை நோக்கி வந்திருக்கிற புண்ணியவான் என்று சொன்னவுடன், அரசியலில் நுழையலாமா என்று கேட்கலாமா? அரசியலில், உன்னால், எதையும் தாங்குகிற வலிமை இருக்கிறதா? நான்கு பேரை கொலை செய்து, நீ உள்ளே போகத் தயாரா? தடியடிக்கு தயாரா? காவல் துறையில் சென்று "ஜாமீன்" எடுக்க முடியுமா? பொல்லாத பொய்களைச் சொல்லி, மேடை போட்டு கை தட்ட முடியுமா? இருக்கிற செல்வத்தை எல்லாம் இழந்துவிட்டு, ரோட்டிலே, சுவரொட்டியால் விளம்பரத்தை தேடிக் கொள்ள விரும்புகிறாயா? அரசியல் எவ்வளவு பெரிய சூதாட்டம்? இவ்வளவு தூரம் அகத்தியன் உன்னை புண்ணியவான் என்று சொன்னது, அடுத்த நிமிடம் உன் புத்தி எங்கோ நோக்கி செல்கிறதே. உன்னை எப்படி திருத்துவது என்று தெரியவில்லையே." என்றார் அகத்தியப் பெருமான்.

"சரிதான், இது தேவையா? ஏன் சார் இந்த அரசியலுக்கு ஆசை படறீங்க? பாருங்க அவர் கோபப்பட்டுடார்!" என்றேன் நான்.

சித்தன் அருள்........... தொடரும்!

Wednesday, 25 December 2013

22/12/2013 - கல்லாரில் அகத்திய பெருமான் திருநாளில் நடந்த யாகம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கல்லார் தவமுருகர் ஸ்ரீ அகத்தியர் ஞான பீடத்தில் 22/12/2013 அன்று அகத்தியப் பெருமானின் பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல பெரியவர்களும் வந்திருந்து, அன்றைய தினம் கலந்து கொண்ட அடியவர்களை ஆசிர்வதித்து, யாகத்தையும் சிறப்பாக நடத்தினர் என்று தெரிய வந்தது. ஒரு நண்பர் அன்று அங்கு சென்று கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அகத்தியர் அடியவர் அனைவருக்கும் அன்று அங்கு செல்ல வேண்டும் என்ற அவா இருந்திருக்கும். இருப்பினும் ஒரு சில காரணங்களால் பங்கு பெற முடியாமல் போயிருக்கலாம். அவர்களும் கண்டு மகிழட்டும் என்று அந்த புகை படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். கண்டு மகிழ்ந்து ஆனந்தம் பெறுக!

Tuesday, 24 December 2013

22/12/2013 - ஒரு அகத்தியர் அடியவரின் அனுபவம்!


[ஒரு அகத்தியர் அடியவர், 22/12/2013 அகத்தியர் பிறந்த நாள் அன்று தனக்கு கிடைத்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். வாருங்கள்! எல்லோரும் அவரை வாழ்த்துவோம்.....]

வணக்கம்!

மஹா முனிவர் அகத்தியப் பெருமான், அவரது தொகுப்பான "சித்தன் அருளில்" சொல்கின்ற விஷயங்களை படித்து மனம் மகிழுகின்ற எனக்கு நிறைய அனுபவங்களை தந்துள்ளார். அவற்றை ஒவ்வொன்றாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைகிறேன்.

22/12/2013, ஞாயிற்றுக் கிழமை அன்று அவரது பிறந்தநாள் என்று அறிந்தது முதல் எப்படியேனும் அவரது அருளை அன்று பெற வேண்டும் என்ற அவா என்னுள் உருவெடுத்தது. ஆனால் வருட முடிவானதால், வேலை பளு காரணமாக அன்று கல்லார் செல்வது இயலாது என்று அறிந்து, என்ன செய்யலாம் என்று யோசித்தோம். வீட்டில் 18 சித்தர்கள் படம் பூசை அறையில் இருக்கிறது. நடுவில் அகத்தியப் பெருமான் நிற்க, அவரை சுற்றி சித்தர்கள். அந்த படம் துறையூர் ஆஸ்ரமத்திலிருந்து வாங்கி வந்து எங்கள் வீட்டு பூசை அறையில் வைத்து வழிபட்டு வருகிறோம். சரி! வீட்டிலேயே விமரிசையாக பூசை செய்து கொண்டாடிவிடுவோம், என்று தீர்மானித்தேன்.

பின்னர் வந்த நாட்களில், சென்னை செல்ல வேண்டி வரும் என அறிந்து, சென்னை த்யாகராஜ நகரில் இருக்கும் அகத்தியர் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்மானித்தோம்.  ஆனால், 22/12/2013 அன்று நாங்கள் பாண்டிச்சேரி செல்ல வேண்டி வந்தது. அங்கு சென்ற போது, அங்கேயே தங்க வேண்டிய நிலைமையில், பிடித்துப் போடப்பட்டோம். 
 
​சரி! இங்கு வந்துவிட்டோம், சித்தானந்த சுவாமி சமாதி கோவிலுக்கு செல்வோம். அவரும் குரு ஸ்தானத்துக்கு உடையவர் தானே. அங்கு கண்டிப்பாக அகத்தியப் பெருமான் தன் அருளை வழங்கி உணர வைப்பார் என்று நினைத்து, அங்கு செல்ல தீர்மானித்தேன்.  ஆனால் என் மனைவியோ, அங்கேயே இருக்கும் அக்கா சுவாமிகள் சமாதிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினாள்.

நாங்கள் சென்ற தினத்தில் சமாதி கோவில் நன்றாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஆருத்ரா தரிசன பூசை மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது என்று வெளியே இருந்த ஒரு அறிவிப்பு பலகை உணர்த்தியது. 21/12/2013 அன்றே குரு பூசையும் செய்து விட்டார்கள் என்று அறிந்தோம். 

அந்த அறிவிப்பு பலகையை வாசித்த போதே எங்கள் மனம் அளவிட முடியாத அளவுக்கு சந்தோஷப்பட்டது. அதில் அகத்திய முனிவரை பற்றிய பிறந்த நாள் விவரமும், அவருக்கான குரு பூசையை பற்றிய தகவல் இருந்தது. அடடா! எங்கு சென்றாலும் அகத்தியர் அருள் நமக்கு மறைமுகமாக கிட்டிக் கொண்டே இருக்கிறதே என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றோம்.

உள்ளே சென்று, ஒவ்வொரு சன்னதியாக கண்டு வணங்கி செல்ல, ஒரு சன்னதியை அடைந்ததும், திக்கு முக்காடிப் போய்விட்டேன். ஆம், அகத்தியருக்கு என ஒரு தனி சன்னதி. அங்கு அவர் அருள் பொழிந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே குரு பூசை நடந்து முடிந்து விட்டிருந்தது.

"வாடா! இன்று என்னை பார்க்க வேண்டும் என்று தானே ஆசைப்பட்டாய்!" என்று சொல்லாமல் சொல்வதுபோல் அருள் வழங்கி நின்று கொண்டிருந்தார்.

என்ன சொல்ல? இதற்கு மேல் என்ன பாக்கியம் வேண்டும். அந்த சமாதி கோவிலுக்கு முதன் முறையாக செல்கிறோம். அங்கு அகத்திய பெருமானுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்று கூட தெரியாது. இன்றைய தினம் அவரை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்றெல்லாம் கலங்கிய எனக்கு, "என்னை சரணடைந்து விட்டாய் அல்லவா! உன் விருப்பத்தை நிறைவேற்றாமல் விட்டுவிடுவேனா?" என்று சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்.   

எனக்கும், கூட வந்திருந்த என் மனைவிக்கும் கண்கள் குளமாகிவிட்டது. ஆம்! இருக்காதா பின்னே! முன் பின் அறிமுகமில்லாத ஒரு இடத்தில், முதல் முறையாக போகும் போது, நம் மன விருப்பத்தை உணர்ந்து அகத்தியப் பெருமான், சரியாக வழி நடத்தி செல்ல வைத்திருக்கிறார் என்பதை அப்போது உணர்ந்தேன். ஏன் என்றால், அக்கா சுவாமிகள் கோவிலுக்கே முதன் முறையாக செல்கிறோம். அந்த கோவிலை பற்றி ஒரு தகவலும் தெரியாது. இப்படி விஷயங்கள் நடந்தால் நீங்கள் கூடத்தான் கரைந்து போவீர்கள்.

மகா முனி உண்மையாகவே எங்களை ஆசிர்வதித்ததை உணர்ந்தோம். இன்னும் நிறைய ஆசிர்வாதங்களை தருவார் என்று என் மனது திண்ணமாக உணர்ந்தது.

நாங்கள் இருவரும் அவர் சன்னதி முன் அமர்ந்து மனம் ஒன்றி, 108 முறை "ஓம் அகதீசாய நமஹ!" என்று ஜபம் செய்தோம். திரும்பி வந்து அவரின் "சித்தன் அருள்" தொகுப்பை படித்த போது, அது எங்களுக்கு என்றே எழுதப்பட்டது என்று தோன்றியது. ஆம்! இன்னும் 13 நாட்களில், எங்கள் அலுவலக வியாபார விரிவாக்கும் முயற்சிகள், உலக அளவில் விரிவடையப் போகிறது, என்று அறிந்தேன்.

இதற்கு மேல் என்ன வேண்டும்? வழி நடத்தி செல்ல அகத்தியப் பெருமான் கூட இருக்கும் போது, நடந்து செல்ல வேண்டியது என் கடமை என்று உணர்ந்தேன். அனைத்தையும் அவர் பாதங்களில் சமர்பித்து, எல்லோரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொண்டு,

சாய்ராம்!

Sunday, 22 December 2013

சித்தன் அருள் - 155 - நம்பிமலை!


[வணக்கம்! அகத்தியர் அடியவர்களே! இன்று 22/12/2013, ஞாயிற்றுக்கிழமை நம் அகத்தியப் பெருமானின் ஜென்ம நட்சத்திரம், மார்கழி மாத ஆயில்யம். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவர் பாதத்தில் இந்த சித்தன் அருளை சமர்ப்பிக்கிறேன். அவர் சொன்னபடி நாம் அனைவரும் எளிய வாழ்க்கை வாழ்ந்து, அவர் அருளால், சித்தத் தன்மை அடைந்து கரை ஏறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு ........... சித்தன் அருளை தொடருவோம், வாருங்கள்.]

"உங்கள் அனைவருக்கும் நிச்சயமாக தெய்வ தரிசனத்தை வாங்கித் தருவார். நிச்சயம். ஆனால் எப்போது என்று தெரியாது" என்றேன். 

மேலும் அகத்தியர் தொடர்ந்தார்.

"அது மட்டுமல்ல. இன்னும் நிறைய முனிவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்டித்தருவேன். அவர்கள் ஆசிகளையும் உங்களுக்கு பெற்றுத்தருவேன். இது சத்தியமான வாக்கு, இந்த நம்பிக்கோவிலில். அகத்தியனே இடுகின்ற அற்புதமான உத்தரவாதம் என்று சொல்லிக்கொள்ளலாம்"என்றார்.

"ஏற்கனவே, ஒருவன் கேட்டான், என் நிலைமை என்னவென்று! என் நிலைமை என்னவென்று வாய் திறந்து கேட்டால் தானே என்னவென்று கூறலாம். இவன் பூர்வ புண்ணியத்தில் மிகப் பெரிய ஜமீன்தாராக வாழ்ந்தவன் என்று சொன்னால் சந்தோஷப்படலாம். சேர்த்தவற்றை இழந்து விட்டு, உற்றார் உறவினருடன் பகையை முடித்துக் கொண்டு அத்தனையையும் இழந்து விட்டு, சொந்தக்காலில் நின்று கொண்டு வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறான். சித்தர்களின் பலம் இவனுக்கு பக்க பலமாய் இருப்பதினால்தான் கலை துறை சம்பத்தப் பட்ட தொழில் ஒன்றை நடத்திவிட்டு, அதன் மூலம் பெரும் வருவாயை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட, இன்னும் அங்கோர் ஏற்ற நிலை, தாழ்ந்தநிலை இருக்கத்தான் செய்கிறது. முடிந்தால் ஒரு வளர்பிறை சதுர்த்தி அன்று, காலையில் ஆங்கொரு ஐங்கரன் வேள்விதனை, பின்பு தனாகர்ஷண, ஜனாகர்ஷன வேள்வி தனை செய்து அந்த செப்புத்தகட்டை கையில் வைத்துக் கொண்டால் போதும், நல்ல முன்னேற்றம் உண்டு. சுற்றுமுற்றும் உள்ள அத்தனை பேருக்கும் இவன் என்னதான் எளிமையாக காட்சி அளித்தாலும் கூட, இவனை பற்றி, பொறாமை கண்ணுடனேயே, உலா வந்து கொண்டிருக்கிற காலம். சொல்லத்தான் வேண்டும். யாரை எல்லாம் முழுமையாக நம்புகிறாயோ, அவர்களெல்லாம் உன்னை ஏமாற்றி விடக்கூடும். காலத்தின் கட்டாயம் அது. இவனுக்கு அங்கோர் குடும்பத்தில் சில வேண்டாத சம்பவங்கள் பல நடந்திருக்கிறது. பிறகு முன்னோர்களின் காலத்தில் கூட சில தேவை இல்லாத சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதன் காரணமாக ஒரு பற்றற்ற நிலைமைக்கு தன்னை ஆளாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனை நோக்கியே பயணம் கொண்டிருக்கிறான். ஆக, இறை பயணம் ஒன்று தான் இவனுக்கு ஆத்மா திருப்தியை தந்துகொண்டு இருக்கிறது. இல்லையென்றால், வாழ்க்கையை விட்டுவிட்டு எல்லாத்தையும் துறந்துவிட்டு எங்கோ போய்விடுவான். அப்படி பல முறை எண்ணங்களின் உச்சத்துக்குப் போய் அதிலிருந்து விழுந்து, இறை அடிமையாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறான். சித்தர்களுக்கு செய்கின்ற சேவையே தன் சேவை என்று, அதன் மூலம் தனக்கு ஏதேனும் புண்ணியம் கிடைக்குமா என்று தேடலுடன் வந்து கொண்டிருக்கிறான். புண்ணியத்தை தேடி வருகின்ற இவனுக்கு, எத்தனையோ மனப் புண்கள், மனதில் உண்டு, சொல்ல இயலாது. வெளியே சொன்னால், அதை ஏற்க மாட்டார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி, ஒரு விரக்தியின் உச்சத்தில் அல்ல, இறையாமையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் இவனுக்கு இன்னும் 13 நாட்களில் ஒரு விசித்திரமான சம்பவம் நடக்கும். அதற்கு பிறகு மனம் எல்லையற்ற சந்தோஷம் அடையும். எதிர்காலத்தில் இவன் ஒரு சித்தா ஆஸ்ரமம் போல கட்டுவான். ஏகப்பட்ட பேர்களுக்கு, தன்னாலான உதவிகளை செய்வான். அன்னதானம் பல செய்வான். சித்தர்கள் வந்து இவனை வாழ்த்த வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்ல, தன்னால், இந்த உலகத்துக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயம் செய்யவேண்டும் என்று தோன்றி, அதற்கான வாய்ப்புகளும் கிடைத்து, நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வான். ஆகவே, எதிர்காலம் இவனை பொறுத்தவரையில், மிக சிறப்பாக இருக்கும். ஏற்கனவே, யான் சொன்னேன். இங்கு வந்து அகத்தியனை நோக்கி வந்ததற்கும் அகத்தியன் மலையில் காலடி எடுத்து வைத்ததர்க்கெல்லாம், எல்லாம் ஜெயமாகும். என்னுடைய மலை என்பதற்காக தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. சம உரிமை கோரவில்லை. என்னுடையது என்று வழக்கு போட முடியாது. இது என்னுடைய மலையாக இருந்தது. இந்தமலையில் தான், முதன் முதலாக அகத்தியன் யாகம் செய்தேன். யாகம் செய்த இடம் என்பதால், சொல்கிறேன். அப்படிப்பட்ட புண்ணியமான இடம் என்பதால், எல்லா தெய்வங்களும், முனிவர்களும், சித்தர்களும், முனி புங்கவர்களும் அமர்ந்து இருக்கின்ற அந்த புண்ணியமான நேரத்தில் நீ வந்திருக்கிறாய். யாருக்குமே கிடைக்காத பாக்கியம் என்று அகத்தியன் சொன்னால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதில் ஒரு சூட்சுமம் இருக்கும். எதற்காக சொல்லுகின்றேன் என்றால், இத்தனை கர்மங்களையும் தாண்டிவிட்டு, உன் மனம் எங்கு நோக்கி செல்லுகின்றது என்று எனக்கு தெரியும். எத்தனை பாடுபட்டிருப்பாய். எத்தனை தூரம் தூங்காமல் அழுதிருப்பாய். எத்தனை நாள், யார் யாரோ, கெடுதல் பண்ணியதை நினைத்து கலங்கி, மனதை புண்ணாக்கி, சாப்பிடாமல், தூங்காமல் வானத்தை நோக்கி விழித்துப் பார்த்திருப்பாய். அத்தனையும் எனக்கு தெரியுமாடா. அத்தனையும் தாண்டித்தான் உன்னை வரவழைத்த காரணம், உன் ஆத்மா பரிசுத்தமானது. எனவே அழகானது, ஆனந்தமானது. யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேனே நான் என்று செய்து வந்த பணியை கூட இழந்திருக்கிறாய். நன்றி இன்றி நெஞ்சிலே குத்தியிருப்பார்கள். என்பதெல்லாம் கடந்த கால வரலாறு. சொன்னால் நம்புவார்களா. ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அனைத்தையும் தாண்டி பக்குவமாக, அமைதியாக, ஆனந்தமாக ஒரு சாதாரண குடியானவன் போல் நிற்கிறாயே, இதிலிருந்து உன் அடக்கத்தன்மை எனக்கு புரியாதா? நீ இப்பொழுது முதல் புண்ணியவான். உன் எதிர்காலத்தை பற்றி நீ ஏன் கவலை படுகிறாய். அகத்தியனிடம் விட்டுவிடு. உன்னை நான் கரை சேர்க்கிறேன். பயப்படாதே."

"அடடா! அப்படியே உண்மை சாமி" என்றார் அந்த நண்பர்.

"என்ன?" என்றேன்.

"ஒரு வரி கூட தப்பில்லை." என்றார்.

அகத்தியர் மேலும் தொடர்ந்தார்.  "அன்னவனை பற்றி சொல்ல வந்தால் 64 பக்கத்துக்கு ஏற்கனவே, இன்னொரு ஓலைச் சுவடியை எழுதி வைத்திருக்கிறேன். 64 பக்க ஓலைச்சுவடியில், வாழ்க்கை வரலாறு, முன்னோர்கள் வரலாறு, ஜாதகக் குறிப்பு அத்தனையுமே எழுதி வைத்திருக்கிறேன். ஆனாலும் இவர்களது குடும்பத்தில் மிகப் பெரிய தவறு நடந்திருக்கிறது. முன்னோர்கள் செய்த சில தவறு. அதனால், மொத்தமாக அத்தனையும் இழந்து பள்ளத்தில் விழுந்திருக்கிறான். விழுந்த பள்ளத்திலிருந்து எழுந்திருக்க முயற்சிக்கிறான், இவனால் என்ன செய்ய முடியும்? தனி ஒருவன். இவனுக்கு யாரும் இல்லை. பக்க பலமாய் இருந்து உதவி செய்ய யாரும் இல்லை. யாரையெல்லாம் கையைப் பிடிக்கிறானோ, அத்தனை பேரும் பாம்பாக மாறி கையைக் கொத்தினால் இவனால் என்ன செய்ய முடியும்? ஆகவே, இளமை, தலைமை என்பதை எல்லாம் தாண்டி, இப்பொழுது என்ன செய்யப் போகிறேன் என்ற கொதிப்பான கேள்விக்குறியிலேயே, ஏதேனும் ஒரு நல்வாக்கு அகத்தியனிடமிருந்து வராதா என்று ஆசைப் பட்டு ஓடி வந்தானே, அதையும் அகத்தியன் தெரிந்துதாண்டா சொல்கிறேன். உன் நிலையை அடைவதற்கு மூன்று நிலை அடையவேண்டும். எதிர்ப்பு, ஏளனம், பிறகுதான் ஏற்றுக்கொள்ளப்படுதல். ஆக, ஏளனத்தோடு இருக்கிற நேரம் இது. சொத்திருந்தும், சுகமிருந்தும் அத்தனை பேரும் கண்கொத்திப் பாம்பாக இருந்து, அதை நோக்கித்தானே பயணம் செய்து கொண்டிருக்கிறானே தவிர, இவன் உண்மை நிலையை உணர்ந்து உதவி செய்ய யாரும் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஆங்கொருநாள், ஆஸ்ரமத்தில் அமர்ந்து கொண்டு ஆங்கொரு மனித சித்தனை கண்டானே. அவனுக்கும், இவனுக்கும் அதிக வித்யாசம் இல்லை. 

அவன் மலையிலே வாழ்ந்துவிட்டு பல காலம் சித்தனாக இருந்ததால், அவனுக்கு விநாயகசித்தன் என்று பெயர். யாருக்குமே தெரியாது. விநாயகனை வணங்கி வருவதால் மட்டுமல்ல. பலமுறை அவனுக்கு வினாயகரே காட்சி கொடுத்திருக்கிறார். தெய்வத்தன்மை பொருந்தியவன் என்பதால்தான் அவன் எதுவுமே சொல்லமாட்டான். சித்தர்கள் வழக்கமே அப்படித்தானே. புன்னகை பூக்கும்போதே அகத்தியனுக்கு புரிந்தது. அவன் எப்படிப்பட்டவன், என்ன அழகாக வேஷம் போடுகிறான் என்று. ஆக, தன்னைத்தானே அடக்கிக்கொண்டு அழகாக நாடகம் நடிக்கிறான். அற்புதமான மனிதசித்தன். மலையிலே வாழ்க்கையிலே, அவனுக்கு எத்தனையோ சோகங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த சோகங்கள் இங்கு யாருக்குமே தெரியாது. அகத்தியன் ஒருவனுக்குத்தான் தெரியும். வாழ்க்கையில் எதையெல்லாம் அனுபவித்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டானோ, அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, துறவறத்தின் உச்சகட்டத்தை அடைந்து சித்தத்தன்மை அடைந்திருக்கிறானே. அந்த விநாயக சித்தன் சாதாரண சித்தன் அல்ல. அவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு பச்சை புடவை அணிந்துகொண்டு அமர்ந்திருக்கிறான். பச்சை புடவை சித்தன் என்று ஒரு காலத்தில் பின்னால் வரும். அவனுக்கும், இவனுக்கும் அதிக வித்யாசமில்லை. ஏன் என்றால், அவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். இவன் எல்லாமும் இருந்தும் துறந்திருக்கிறான். அதுதான் உண்மையடா."

"அவரை காலங்கி சித்தன் என்று சொல்வார்கள். அவர் ஒண்ணுமே சொல்லமாட்டாரு" என்றார் அந்த நண்பர்.

"ஆமாம்! அவர் ஒண்ணுமே சொல்லமாட்டாரு" என்றேன் நான்.

"இல்ல சாமி! எதிர்பார்க்காம நமக்கு தரிசனம் கிடைக்கிறதே! அது எதனால் சாமி!" என்றார் அவர்.

"அது புண்ணியம். அதான் சார்! ஏதோ ஒரு லிங்க் இல்லாம நீங்க வரமாட்டீங்களே" என்றேன்.

"எத்தனையோ சாமிங்கள பார்த்திருக்கோம். உதாரணமாக இப்ப உங்களையும் பார்த்திருக்கோம்" என்றார்.

"போதுமடா சாமி! என்னையும் அந்த லிஸ்ட்ல சேக்காதீங்க. விட்டுடுங்க. அவர சொல்லுங்க. அது நியாயம். 70 வருடங்களாக தவமிருந்து வாழ்ந்தவர். நான் எல்லாம் மிக மிக, என்ன சொல்ல, சாதாரணமான மனுஷன் நான்" என்றேன். அது தான் உண்மையும் கூட.

"மௌன சாமின்னு ஒருத்தர் ஆஸ்ரமம் வெச்சிருந்தார்" என்றார்.

"அவங்களெல்லாம் அதற்குன்னு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் சார்! இங்கு நான் அப்படி இல்லை. இந்த ஓலைக் கட்டை 50 வருடமாக படிக்கிறேனே தவிர, வருவதை  சொல்லறாரு கேட்டுக்கிறேன். அவரே சில சமயம் குட்டுகிறார், வாங்கிக்கிறேன். நானும் உங்கள மாதிரித்தான். தெரியாத்தனமா அங்க உட்காருவதற்கு பதிலாக இங்கு உட்கார்ந்திருக்கிறேன்" என்றேன்.

"வேறு ஏதாவது கேட்கணமா? என்றேன்.

"13 நாளுனு சொன்னாரே. என்ன விஷயம்?"

"ஏதாவது எதிர்பார்த்து இருந்திருப்பீர்கள். நல்ல செய்தி காதில் விழும்" என்றேன்.

அகத்தியரை பற்றி மகான் புத்தியர் இயற்றிய செய்யுள்!

குருவடி பெற்றாள் சரண் சரணம்
கும்ப முனியே  சரண் சரணம்
திருவடி நாதா சரண் சரணம்
சித்தர்களின் அருளே சரண் சரணம்
அருள் வடிவானாய் சரண் சரணம்
அமரர்களே கோவே சரண் சரணம்
பொருளடி மூலங் காட்டிஇற்று போதித்த குருவே சரண் சரணம்
போதித்த குருவே சரண் சரணம் பொதிகைவளர் அம்பலர் சரண் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் 
மெய்ஞானம் சாதித்த தேவே சரண் சரணம்
சமுசயந் தீர்த்தாய் சரண் சரணம் 
ஓதித்தருள்வாய் சரண் சரணம்
உண்மைப் பொருளே சரண் சரணம்

மகான் புத்தியர்

சித்தன் அருள் ............. தொடரும்!

Thursday, 19 December 2013

சித்தன் அருள் - 154 - நம்பிமலை!


[வணக்கம்! அகத்தியப் பெருமான் அடியவர்களே! வரும் ஞாயிற்று கிழமை அன்று அகத்தியப் பெருமானின், நட்சத்திர நாள். மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றைய தினம் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு தொகுப்பை தரவேண்டும் என்பது அடியேனின் அவா. ஆனால் இன்று வரை அதற்கான வழியை காட்ட மாட்டேன் என்கிறார். எத்தனை முறை கேட்டும், ஒரு அசைவும் இல்லை. ஆகையால், உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். பெரியவரிடம் நீங்களும் கொஞ்சம் வேண்டிக் கொள்ளுங்களேன். நாம் எல்லோரும் சேர்ந்தே, அன்று அவர் நினைவில் திளைத்து சந்தோஷப் படலாமே! ஹ்ம்ம்.. எல்லாம் அவர் செயல், அவர் விருப்பம் என்று மட்டும் தான் இப்போது (ஏன்! எப்போதுமே) சொல்ல முடியும். அவர்தான் சொல்லியிருக்கிறாரே. "உண்மையான பிரார்த்தனையை மிஞ்ச வேறு எதுவும் இல்லை என்று! உங்கள் அனைவரின் பிரார்த்தனையை எதிர் நோக்கி...... சித்தன் அருளை தொடருவோம்.]

சில நொடிகளுக்குப் பின் ஒரு நண்பர் சந்தேகம் கேட்டார்.

"விசிடிங் கார்டில்" தன்வந்தரி சக்கரத்தை போடலாமா" என்று.

அதற்கு அகத்தியப் பெருமான் "அன்றே உரைத்தோம், தன்வந்தரி மந்திரத்தை, தன்வந்தரி சக்கரத்தை தாராளமாக போடலாம்" என்றார்.

நானும் "தன்வந்தரி சக்ரம் என்பது நோய்களை தீர்க்கும் ஒரு சக்கரம். உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றேன்.

"வேறு என்ன கேடக வேண்டும்?" என்று கேட்ட பொழுது,

அடுத்ததாக ஒரு நண்பர் "வாசி யோகம் செய்து வருகிறேன். அது சரியான முறையில் தான் செய்கிறேனா? அதில் மேலும் முன்னேற வேண்டும். குண்டலினி யோகம் வேண்டும்!" என்றார்.

அகத்தியர் கூறினார்.

"அகத்தியன் கொடுத்த ஒரு வழிமுறை தானடா அது. தொடர்ந்து செய்து கொண்டு வருகிறாய் என்பதை யாம் அறிவேன். கொஞ்சம் பொறுத்து இரு. அதற்கு மாற்று வழியை சீக்கிரம் சொல்லி, உன்னை அந்த நிலையிலிருந்து பதவி உயர்வு செய்வது போல, அந்த நிலையிலிருந்து மாற்றிக் காண்பிக்கிறேன். சில காலம் பொறுத்திரு. அகத்தியன் எல்லாமே அறிந்தவன் என்பதால், உனக்கு எப்போது அந்த உயர்ந்த ஞானத்தை, குண்டலினி சக்தியை தரவேண்டும் என்பது தெரியும். அகத்தியன் என்னிடம் அந்த பொறுப்பை விட்டுவிடு.  நான் பார்த்துக்கொள்கிறேன். இப்பொழுதாவது பக்குவப்பட்ட வழிக்கு வந்து கொண்டிருக்கிறாயே. உனக்கு கட்டாயம் குண்டலினி சக்தி கிடைக்கும்."

உடனேயே அவர் "இந்த பயிற்சி பண்ணலாமா? வேண்டாமா?" என்று கேட்டார்.

"இப்பொழுது வேண்டாம். குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறது. ஒரு சில பொறுப்புகள் இருக்கிறது. மானிட உலகத்துக்கு சில சேவைகள் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த யோகத்தை செய்துவிட்டால், பின்னர் சிறிதும் வேறு எதிலும் நாட்டம் இருக்கக் கூடாது. வேறு மாதிரி போய் விடும். சில மனிதர்கள் பயனில்லாமல் வீணாகப் போய்விடுவார்கள். இதுவும் கூட ஒருவகையில் குண்டலினி சக்தி என்று எண்ணிக்கொள். தகுந்த காலம் வரும். அகத்தியனே ஒருநாள், பிரம்ம முஹுர்த்தத்தில், செவ்வாய் கிழமை அன்று காலை குண்டலினி சக்திக்கு ஒரு குருவை அமைப்பார். குண்டலினி சக்திக்கு ஒரு குரு வருவார். உனக்கு அமைப்பார். பிறகு சென்று விடுவார். பின்னர் தேடினாலும் கிடைக்கமாட்டார். அது அகத்தியனாகக் கூட இருக்கலாமே" என்று பதில் வந்தது.

"அட! எப்படி சொல்கிறார் என்று பாருங்கள். அவரே வந்து உங்களுக்கு தந்தாலும் தருவார் என்று சொல்கிறார். உங்களுக்கு எவ்வளவு பெரிய பரிசு" என்றேன் நான்.

"வேறு என்ன?" என்றேன்.

"எங்கள் நாலு பேருக்கும் என்ன வாழ்க்கை அமையும்? அது ஏன் நாங்கள் நாலு பேர் மட்டும்?" என்று கேட்டார் ஒருவர்.

அதற்கு அகத்தியர் "இவர்களெல்லாம், சித்தனுக்கு தொண்டு செய்து வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். எதையும் எதிர்பார்க்காமல், மலைகளிலே, காட்டுமிராண்டி போல் திரிந்தவர்கள். ஏன் என்றால், யாருக்குமே இவர்களை கண்டால் பிடிக்காது. இவர்கள், தெய்வத் தன்மையை நோக்கி பயணம் செய்தவர்கள். பார்ப்பதற்கு, நீண்ட தாடியும், மீசையுமாக கொண்டு, உட்கார்ந்துகொண்டு, பரதேசிபோலவே உலா வந்துகொண்டிருந்த காலத்தில் எல்லாம் இவர்களை கண்டாலே மிருங்கள் எல்லாமே அஞ்சும். மிருகங்களின் பாஷையை தெரிந்து கொண்டவர்கள்.மிருகங்களை தட்டிக்கொடுத்து, பழக்கி உட்கார வைத்து காட்டிலே வாழ்ந்தவர்கள். சித்தத்தன்மையின் உச்சகட்டத்தை அடைந்தவர்களுக்கு எல்லாம், துணையாக இருந்து, அவர்கள் ஆசிர்வாதம் பெற்றவர்கள். தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்ட தவறுகளுக்ககத்தான் இப்போது மானிடர்களாக பிறந்தவர்கள். இருந்தாலும், சித்தத் தன்மை ரத்தத்திலே ஊறி போனதால் தான், சித்தத் தன்மை நோக்கி வந்திருக்கிறார்கள். அதற்கும், முன் ஜென்ம புண்ணியமே இதற்கும் காரணம். ஆகவே, மனிதனாக பிறப்பெடுத்தது, மறு பிறவி என்பது அப்பொழுது இல்லை என்றாலும் கூட, செய்த தவறுகளின் காரணமாக, கர்ம வினையை அனுபவிப்பதற்காக மனிதர்களாக பிறவி எடுத்தவர்கள். இன்றோடு அவர்கள் கர்ம வினை முடிந்தது விட்டது என்பதால், குறித்துக் கொள்ளுங்கள், இன்றோடு முடிந்து விட்டதென்பதால், சித்தத் தன்மையின் உச்சகட்டத்தை நோக்கி அவர்கள் ஒவ்வொருவரும், பயணம் செய்வார்கள். சித்தத் தன்மை என்பது துறவறம் பூணுவது அல்ல. நன்றாக ஞாபகம் வைத்துக் கொள், சித்தத் தன்மை என்பது துறவறம் பூணுவது அல்ல. மனதுக்குள் சித்த நிலையை ஏற்றுவதுதான். ஆகவே சித்தத் தன்மை என்பது யாருக்குமே புரியாது. முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும், முனிபுங்கவர்களுக்கும், தெய்வங்களுக்குமே மட்டும் தெரிந்த ரகசியம் இது. யார் யார் சித்தத் தன்மை பெற்றவர்கள் என்பதெல்லாம் அகத்தியன் யான் கணக்கிட்டு வைத்திருக்கிறேன். அந்த வரிசையில், காவிரிக்கரை ஓரத்தில் அமர்ந்து தனித்து தவம் செய்தானே, இவனுக்கும் உண்டு, வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிற அவனுக்கும் உண்டு. இன்னும் அந்த இரண்டு பேர்களுக்கும் உண்டு. நாலு பேருமே சித்த தன்மை அடைந்தவர்கள். இந்த நாலு பேர்களுமே, அகத்தியனுக்கு பல்லக்கு தூக்கியாக இருந்தவர்கள். அவர்களுக்கும், உங்கள் எல்லாருக்குமே, சூசகமாக சொன்னேன், அகத்தியன் உங்கள் எல்லோருக்குமே "பல்லக்கு தூக்கியாக" மாறிக்கொண்டிருக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார்.

"அடடா! இன்று இது ஒரு நல்ல நாடி வாசிப்பு, நல்ல செய்திகள்" என்றேன் நான்.

"வடபுலன் யாத்திரை செல்ல வேண்டும் என்று ஒரு அவா. அது நிறைவேறுமா?" என்றார் ஒருவர்.

"எப்படி திருக்குறும்குடி மலை ஏறி வந்தாயோ, அது போல் வடபுலன் யாத்திரை அமையும் என்பது எழுதி வைக்கப்பட்ட விதி. அதை மாற்ற அகத்தியனால் கூட முடியாது. ஆகையினால், மிக விரைவில், ஒரு புனிதமான நேரத்தில், இவர்கள் நான்கு பேருமே, வடபுலன் நோக்கி செல்வார்கள். சித்தர்கள் மட்டுமல்ல, தெய்வங்கள் தரிசனத்துக்கும் கூட ஏற்பாடு செய்கிறேன். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன் தெய்வத்தை பார்க்க முடியாது. பார்த்தால், ஒன்று கண்பார்வை இல்லாமல் போய்விடும், அல்லது அவர்களே இல்லாமல் போய் விடுவார்கள். அந்த விதியையும் மீறி, இவர்கள் நான்கு பேர்களும், தெய்வத்தை கண்டு வருவார்கள். இந்த நல்ல நாளில் அந்த வாக்குறுதியை தருகிறேன். இவர்கள் செல்வார்கள். தெய்வத்தை கண்டுவருவார்கள். அந்த சந்தோஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. மனதிற்குள்ளே பதிந்து கொள்ளவேண்டிய, அற்புதமான, ஆனந்தமான சந்தோஷம்டா. அதுவே, இவர்களின், பிரார்த்தனையின் உச்சகட்டத்தில், அகத்தியன் யாம் வழி காட்டுகிறேன். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்கிறேன். நீங்கள் எல்லாம் அகத்தியனை நம்புகிறீர்கள். பாக்கியெல்லாம் நம்புவதில்லை. உண்மையிலேயே நீங்கள் அகத்தியனை நம்பினால், அந்த தரிசனம் உங்களுக்கு கிடைக்கும். அது சத்தியமான வாக்கு. இங்கு யாரையுமே குறை சொல்லவில்லை. மனிதர்கள் தவறு செய்யலாம், கோபப்படலாம், ஆத்திரப் படலாம், விட்டுக் கொடுக்காமல் போகலாம். வேறு ஏதேனும் சந்தர்பத்தில், நம்பிக்கை இல்லாமல் போகலாம், தவறு இல்லை. ஆனால்,அதையும் மீறி "சிக்கெனப் பிடித்தேன்" என்று இறைவனை நோக்கி எவன் ஒருவன் "சிக்கெனப் பிடிக்கிறானோ" அவனுக்கு அகத்தியன் வழிகாட்டுவான். இப்பொழுது சித்தர்கள் காலமடா! சித்தர்களிடம் மூவரும் பொறுப்பை ஒப்படைத்தது போல, அகத்தியனிடம் மட்டுமல்ல, இன்னும் நிறைய சித்தர்களிடம், மூவர்களும், பலவித பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிராகள். நாங்கள் சித்தர்கள் எல்லாம், ஒழுங்காக, அந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதைத்தான் செய்கிறேன், செய்யப் போகிறேன். அந்த பாக்கியம் கிடைக்கும்."

சித்தன் அருள்............ தொடரும்!

Thursday, 12 December 2013

சித்தன் அருள் - 153 - நம்பிமலை!

[ நம்பிமலை கோவில் ]

அகத்தியர் சற்று நேரத்தில் கூறலானார்!

"முன்பொரு சமயம், பல்லக்கு தூக்கிகள் என்று ஒரு சிலருக்கு பெயர். அவர்கள் காலா காலமாக, பல்லக்குத் தூக்கியே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர்கள். பல்லக்கில் செல்பவனுக்கோ, "என்றைக்கு இந்த பல்லக்கு தூக்குபவர்களுக்கு நன்றி கடனை அடைக்கப் போகிறேன்" என்று ஆதங்கப்பட்டான். ஒருநாள், இறைவனே அந்த பல்லக்கில் வந்து அமர்ந்த பொழுது, இறைவனே மாறு வேடத்தில் வந்திருந்தான். மாறு வேடத்தில் வந்தாலும், வித்யாசம் பார்க்காமல், பேதம் பார்க்காமல் அவனையும் தூக்கி செல்ல, அங்கு அமர்ந்த இறைவனுக்கு, தூக்கி செல்பவனை உட்காரவைத்து, இறைவனே தன் தோளில் பல்லக்கை வைத்து தூக்கி செல்ல வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

அதன் படி ஒருநாள், இறைவன் பல்லக்கு தூக்கியாக மாறினான். பல்லக்கிலே அவனை உட்கார வைத்து ஆனந்தமாக உலா வந்தான். அது போல் இவன் அகத்தியனை பல்லக்கில் தூக்கி சுமந்து வந்தவன்டா! அதனால், அந்த இறைவன் போல், நான் அகத்தியன், ஒருநாள் இவனை பல்லக்கில் தூக்கி சுமப்பேன்!" என்றார்.

இதற்கிடையில் என் நண்பர் ஒருவர் குறிப்பிட்ட நோய்க்கு மருந்தைப் பற்றி விசாரிக்க, அகத்தியர் கூறலானார்.

"இது போன்ற பல்வேறு நோய்களுக்கெல்லாம் மூலிகைகள் இங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். ஒரு மனித உடம்பில் எத்தனை வியாதி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். என்னென்ன வியாதிகள் எல்லாம் வரும் என்று கணக்கிட்டுத்தான் போகர் மூலம் கொடுத்தேன். இங்கிருந்து ஒரு காத தூரத்திலே, ஒரு நந்தவன தோட்டத்திலே, போகர் நட்டு வைத்து வளர்த்த ஒரு மூலிகை இருக்கிறது. அந்த மூலிகையை கொடிய விலங்குகள் சுற்றி வந்து காவல் காக்கிறது. யார் உட்கார்ந்து அந்த மூலிகையை பறித்து, உருவேற்றுவது என்பதுதான் கேள்வி. அகத்தியனுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு. அகத்தியன் இதற்கு தக்க பதிலை, விதிமகளிடம் கேட்டு "ஏன் இவளுக்கு இப்படி ஆயிற்று? இதற்கு என்ன பரிகாரம்? கர்ம வினை கழிந்ததா? அவள் வாங்கின கடனை திருப்பி கொடுத்துவிட்டாளா? என்றெல்லாம் கேட்டுவிட்டு, விதிமகளின் சம்மதத்தை வாங்கிக் கொண்டு, இரண்டு நாளில் இதற்கு வழி சொல்கிறேன். அதுவரை, சற்று அமைதி காக்க."

இன்னொருவர் தனது சொந்த வாழ்க்கையை பற்றி ஒரு கேள்வி கேட்க, அகத்தியர்
 
"அன்னவன் பொறுப்பேற்று, சூரியனும், சனியும் ஒரு இடத்தில் இருந்ததால் வந்த வினை இது. அன்னவன் மேல் சனி கொண்ட கோபத்தால் சற்று விளையாடுகிறான். அவன் புத்தியை மழுங்கிவிடச் செய்வது நான்கு பேர் சேர்ந்த கும்பல், அன்னவனே, அவர்களுக்கு எதிரியாக இருப்பதால் தான் சற்று தாமதமாகிறது. இனி வரும் காக பெயர்ச்சிக்கு பிறகு, (காகம் - சனி), நல்ல மாற்றம் ஏற்படும். கடைசி வரை கை கொடுத்து நிற்பார்கள். அஞ்சிட வேண்டாம்."

நண்பர் உடனே மூன்று நாளில் குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

அகத்தியர் பதில் "சனிதான் காரணம் என்று சொல்லிவிட்டேன். எப்பொழுது அகத்தியனிடம் கோரிக்கையை இட்டாயோ அப்பொழுதே நான் பரிந்துரை செய்கிறேன். பொதுவாக, அகத்தியனை நாடி வந்திருக்க வேண்டும். அகத்தியன் நாடியின் சட்டத்தையே மாற்றுகிறாயே, என்னடா, நியாயம்? இவனுக்கு சுயமாக ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்பதற்காக, நாடிக்கே புறம்பாக கேட்கிறாய்! இது நியாயமா?"

இதை கேட்டதும் நாங்கள் அனைவரும் சிரித்துவிட்டோம். அகத்தியரும் விடுவதாக தெரியவில்லை.

"இந்நேரம் அகத்தியனை நோக்கி வந்திருந்தால், தகுந்த வழியை காட்டி, அவன் புண்பட்ட மனதை பண்படச்செய்து புது வழியில் அனுப்பியிருப்பேன். ஆனால் எப்படி கேட்கிறான் இவன். உரிமை இருக்கிறது என்பதற்காக இப்படியெல்லாமா கேட்பது. கர்ம வினை என்பதை மறந்துவிட்டான். சற்று முன்தான் சொன்னேன், அவரவருக்கு கர்ம வினை என்பது உண்டு. இவன் கர்மவினை போல் மனைவிக்கு இல்லை. இவன் மனைவியின் கர்ம வினை போல் , இவன் குழந்தைக்கு இல்லை. ஒவ்வொருவருக்கும் கர்ம வினை என்பது வேறு. ஒருத்தருக்காக கர்ம வினை என்பது வித்யாசமாக ஆகிவிடும். ஆகையால், அதை எல்லாம் தாண்டித்தான், அகத்தியன் இந்த கதையை சொல்கிறேன். அதை தாண்ட வேண்டும் என்பதற்காகத்தான் அதிக உரிமை எடுத்துக் கொண்டாய். அகத்தியன் மீது உள்ள பற்றின் காரணமாக, எத்தனையோ முடிவுகளை, துணிந்து எடுத்துக் கொண்டாய். அகத்தியன் மீதுள்ள அளவில்லாத பற்றின் காரணமாகவும், அகத்தியன் தனக்கொரு நல்லதொரு பதிலை உரைப்பான் என்பதற்காகத்தான் கேட்கிறாய் என்று எண்ணுகிறேன். அந்த உள்ளம் புண்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியும். இரண்டே நாள் என்று சொன்ன காரணம், இரண்டு நாளில் நல்ல செய்தி வந்துவிடும்."

இதற்கிடையில் ஒரு நண்பர் கேட்டார் 

"த்யானத்தில் ஒரே குழப்பமாக இருக்கிறது. த்யானமும் அதில் சம நிலையும் சித்திக்க வேண்டும்" என்று 

அகத்தியர் சொன்னார் "மனிதர் சக்திகளை அடக்குவதுதான் த்யானம். மனதை ஒரு முகப்படுத்துவது த்யானம். ஒவ்வொருநாளும் விடியல் பொழுதில் படுக்கையில் அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு, இறைவனை நோக்கி, மனதை கட்டுப்படுத்த முயர்ச்சிப்பதுதான் த்யானம். அந்த த்யானத்திலே குழப்பம் என்றால், இன்றும் சாதாரண மனிதனாகத்தான் இருக்கிறாய் என்று அர்த்தம். ஆக த்யானம் என்பது சட்டென்று வந்து விடக்கூடிய ஒன்றல்ல. படிப்படியாகத்தான் வரும்.

ஒருநாளில், காலை, வைகறை பொழுதினிலே, ஐந்து நிமிடம், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, அல்லது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்து பார். முதலில் ஏகப்பட்ட குழப்பம் வரும். மறுநாள் அந்த ஐந்து நிமிடத்தை பத்து நிமிடமாக மாற்று. திரும்பவும் த்யானம் செய். கொஞ்சம் குறையும். அடுத்தநாள் பத்து நிமிடத்தை 15 நிமிடமாக மாற்று. நிமிடத்தை கணக்குப் போட்டு த்யானத்தை முடித்து விடாதே! த்யானத்தை கடிகார முள்ளுக்கு அப்பாற்பட்டு வை. எப்போது கடிகார முள்ளை பார்க்கிறாயோ, அப்போதே நீ த்யானத்துக்கு அப்பார்ப்பட்டவன் என்று அர்த்தம். நான் சொல்ல வந்தது, ஒவ்வொரு நாளும் த்யானத்தை 1 நிமிடம், 2 நிமிடம் என்று கூட்டிக் கொண்டு வந்தாலே போதும். த்யானம் என்பது அமைதியாக, மனதை அடக்கிக்கொள்ள சித்திக்கும். இதற்காக எத்தனையோ வழி முறைகள் இருக்கிறது. பெரியோர்கள் பலர் அதை சொல்லியிருக்கிறார்கள். ஞானிகள் பலர் பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். இத்தனையும் செய்து த்யானம் கைவல்யமாகவில்லை என்றால், நீ இன்னமும் சாதாரண மன நிலையில் இருக்கிறாய் என்று அர்த்தம்.  அதை எல்லாம் தாண்டி நிற்பது தானடா த்யானம். ஆகவே, நாளை முதலாவது, மனதை கட்டுப் படுத்திக்கொள், பல்லை கடித்துக் கொண்டு. உலகியல் வாழ்க்கையை சற்று ஒதுக்கிவிட்டு, உனக்கும் சூரிய வெளிச்சத்துக்கும் இடையில் எந்த விஷயமும் வராமல், ஒரு ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு, மனதை கட்டுப்படுத்தி, உன் எதிரில் ஒளி நெளிய வேண்டும். அதை கண்டு, மனதில் இறைவனை த்யானித்து, அடக்கிக்கொண்டு த்யானம் பண்ணிப்பார். த்யானம் வரும். உறுதி உண்டடா!"

இதற்கிடையில் இன்னொரு நண்பர் "மருத்துவத் துறையில், அவர் சொல்வதை நன்றாக புரிந்து கொண்டு, நல்ல முறையில் சேவை செய்யவேண்டும். அதற்கு அவரது அருளாசி வேண்டும்" என்றார்.

"இல்லை என்றால் போகன் கட்டினை உனக்கு தந்திருக்க மாட்டேன். நீ சொல்வதை முடிப்பாய் என்பதில் அகத்தியனுக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. அதனால் தான் உன்னிடமே ஒப்படைக்கிறேன்" என்றார் அகத்தியர்.

அடுத்த கேள்வியாக அவரே "ஞானத்துக்கு போகிற வழி, அதை பற்றிய அவரது அருள் வேண்டும்" என்றார்.

"சில கர்ம வினைகள், விட்ட குறை தொட்ட குறை என்று இருப்பதால் தான், இன்னமும் அந்த மானிட பாதையில் பயணம் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரே நாளில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்து விட முடியாது. அதற்குரிய தகுதி, பயிற்சி சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் தான் உண்டு. ஆனால், அந்த சித்தத் தன்மையை நோக்கி வந்து கொண்டிருப்பதால், பகுதி பகுதியாக அந்த நிலையை அடைந்து விடுவாய். நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில காலம் தாண்டிவிட்டால், சற்று முன் அங்கோர் மனிதன் மலை ஏறும் பொழுது, இது ஒரு ஏற்றம் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றிக் கூட்டிக் கொண்டு வந்தானே, அது போலத் தானடா அகத்தியனும் உன்னை ஏமாற்றுகிறேன். இதோ பக்கத்தில் ஒரு ஏற்றம், ஏறிவிட்டால், ஞானம் வந்துவிடும், என்று வந்துவிட்டால், உனக்கு அந்த ஞானம் வந்துவிடும். எப்படி நீங்கள் எல்லாம் இந்த நம்பி மலையை அடைந்தீர்களோ, அதுபோல, நீயும் அந்த ஞானத்தின் உச்சக்கட்டத்தை அடைவாய், ஞானம் அங்கே இருப்பது போல் நினைத்து காலை எடுத்து வை. அகத்தியன் யாம் உனக்கு பக்க பலமாய் இருந்து, வழிகாட்டுகிறேன் என அருளாசி".

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday, 5 December 2013

சித்தன் அருள் - 152 - நம்பிமலை!

[நம்பிமலை கோவில்]
[வணக்கம்! நிகழ்ச்சிகளை, ஒருவர் வாழ்வில் வந்த கர்ம வினையை அகத்தியர் எப்படி பரிகரங்கள் வழி கரைத்து தருகிறார் என்பதை படித்து வந்த பலருக்கும், சமீப காலமாக "சித்தன் அருளில்" வருகிற கோடகநல்லூர், நம்பி மலை தொடர் வித்யாசமாக இருந்திருக்கும். ஆச்சரியம் இல்லாமல், ஒரு சில அகத்தியர் சொன்ன விஷயங்கள் மட்டுமே வருகிறதே என்று எண்ணலாம். ஒரு பெரியவர் (அகத்தியப் பெருமான்) ஒரு விஷயத்தை சொல்கிறார், அது குறிப்பிட்ட நேரத்தில் வெளி வருகிறது என்றால், ஒன்றை உணர வேண்டும். இந்த "சித்தன் அருள்" தொகுப்பை நான் வழங்கவில்லை. எல்லா வாரமும் தொகுப்பை வழங்கியவுடன் அப்படியே அதை அவர் பாதத்தில் "எல்லாம் உங்கள் செயல். அனைத்துப் பெருமையும் உங்களையே சாரும்" என்று சொல்லிவிடுகிறேன். அதனால், அவர் என்ன இந்த வாரம் சொல்ல நினைக்கிறார், யாருக்கு சில தகவல்கள் போய் சேரவேண்டும் என்று நினைக்கிறார் என்பதை அடியேன் யான் அறியேன். இருந்தும் ஒரு சிலர் தங்கள் மனதில் இருந்த கேள்விக்கு இதில் விடை கிடைப்பதாக சொல்கின்றனர். மிக்க மகிழ்ச்சி. எல்லோருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் எதிர்பார்த்த மாதிரி தொகுப்பு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு சில செய்திகள் நம்மை வந்து சேரவேண்டியது அதில் அகத்தியர் அருளால் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். எது அது என்பதை இனம் பிரித்து பார்த்துக் கொள்ளவேண்டியது, அவரவருக்கு விதிக்கப்பட்டது. இனி சித்தன் அருளை தொடருவோம்.]     

ஆகவே, இறைவன் விண்ணிலிருந்து வந்தவன். விஸ்வரூபம் காட்டியவன். அப்படிப்பட்ட இறைவன் அடக்கத்தின் காரணமாக தன்னை குறுக்கி கொண்டவன். தன்னை குறுக்கிக் கொண்டு, தன்னை தேடி வரும் அனைத்து பக்தர்களை அரவணைத்து, அவர்கள் கூறுவதை குனிந்து கேட்டான் அல்லவா, அதற்குத்தானடா குறும்குடி என்று பெயர். யாரோ கேட்டார்களே "குறும்குடி" என்னவென்று. இப்போது விளக்கம் சொல்லிவிட்டேன், போதுமா?

வேறு என்ன வேண்டும்? அனைவரும் வாய் திறந்து கேட்கலாம். அகத்தியன் மட்டுமல்ல, அத்தனை சித்தர்களும், இன்றைக்கு அற்புதமாக இருக்கிறார்கள். எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அகத்தியன் வாய் திறந்து பேசுகிறேன். மங்களம் உண்டாகட்டும். வாய் திறக்கட்டும். அகத்தியனிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எந்த வித்யாசமின்றியும் கேட்கலாம். ஆக, அகத்தியன் கூறுகின்ற பதில் உனக்கு மட்டுமல்ல! அத்தனை தெய்வங்கள் காதிலும் விழப்போகிறது. இன்னும் தெய்வங்கள் இங்கிருக்கிறது. ஆகவே, வாய் திறந்து கேட்கட்டுமே, என அருளாசி.

{அவர் தான் பச்சை கொடி காட்டிவிட்டாரே! இருக்கும் இடத்திலிருந்து மனம் திறந்து கேட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள். இது அன்று கூறியதாயினும், நமக்கு, இது என்றும் பொருந்தும் என்று, சொல்லாமல் சொல்கிறார்.}

அன்னவன் 1814 ஓலைச்சுவடிகளை படிக்க 8 ஜென்மம் எடுத்தாலும் முடியாது. ஏன் என்றால், போகன் ஒரு ஓலைச்சுவடியிலே 70 நோய்களுக்கு மருந்து சொல்லியிருக்கிறான். நீங்கள் கேள்விப்படாத நோய்களுக்கு எல்லாம் மருந்து இருக்கிறது. இன்னும் 90 ஆண்டுகளில் வரப்போகிற 947 வியாதிகளுக்கும் மருந்திருக்கிறது. அத்தனை வியாதிகளும் புதுப்புது வியாதிகளடா! கேள்விப்படாத வியாதிகள். மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள். எந்த மிலேச்சன் நாட்டுக்கு சென்றாலும் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள். மனிதனுக்கு வரப்போகிற அத்தனை வியாதிகளுக்கும் தேவையான மூலிகை இங்கு இருக்கிறது. திருக்குறும்குடியில், அதற்குரிய மூலிகை இருக்கிறது. இது மிக ரகசியம். அதை அடையாளம் காட்ட மாட்டேன் இப்பொழுது. தகுந்த சமயத்தில், தகுந்த நேரத்தில், தகுந்த மருந்தினை அடையாளம் காட்டுவேன். அது மட்டும் உண்மை. ஏன் என்றால், இது தெய்வீக ரகசியம் தான். இது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அகத்தியன் யாம் அதை பற்றி கவலைப் படப்போவதில்லை. ஏன் என்றால், எத்தனை நாளுக்குத்தான் தெய்வீக ரகசியம் என்று இதை மறைத்து வைப்பது. மனித குலத்துக்குப் போய் சேரவேண்டாமா? ஆகவேதான், இந்த நல்ல நாளில், முக்கண்ணன் இடம் கேட்டுக் கொண்டேன். யாருக்கும் மரணத்தை சீக்கிரம் கொடுத்துவிடாதே. அவர்களுக்கு வர வேண்டிய நோய்கள் வந்தால், அகத்தியனை நோக்கி பிரார்த்தனை செய்யட்டும். அகத்தியன் போகனை நாடுவான். போகனும் இதோ இருக்கிறான். போகன் உண்டாக்கிய மருத்துவ மூலிகைக்கு உயிர் வேண்டும். அந்த மூலிகைகள் மொத்தம் 17. 17 மூலிகைகளும் மிக அற்புதமானவை. இரவிலே ஒளி வீசும். பகலிலே, சுருங்கி இருண்டு கிடக்கும். ஆக ஒவ்வொரு இலைகளுக்கும் ஒவ்வொரு இரும்பு தன்மை உண்டு. ஒவ்வொரு இலைகளின் நரம்புகளுக்கும், ஒவ்வொரு வியாதியை குணப்படுத்தும் குணம் உண்டு. மனித உடலில் நடுவில் ஓடுகின்ற முதுகு தண்டுபோல், இலையில் நடுவில் ஓடும் நரம்புத் தண்டை மூன்றாக வெட்டி எடுத்துக் கொடுத்தால், காச நோய் உடனே நிற்கும். அதன் கடைசி பாகத்தை வெட்டி எடுத்துக் கொடுத்தால், கண் நோய் விலகும். அதன் முதல் பாகத்தை வெட்டி எடுத்துக் கொடுத்தால், வயிறு சம்பத்தப் பட்ட, குடல், கணையம் சம்பத்தப் பட்ட நோய் உடனே நிற்கும். ஒரு இலைக்கே இத்தனை செய்திகள் இருக்கிறதென்றால், அந்த மரத்துக்கு எத்தனை செய்திகள் இருக்கும். 

அந்த மூலிகைகள், இந்த அற்புதமான திருக்குறும்குடியில் இருக்கிறது. சதுரகிரி மலையிலும் இருக்கிறது. 15 ஆண்டுகள் தான் நான் தவணை தருவேன். அதற்குள், இந்த மூலிகைகள் பக்குவம் பெற்று, மக்களை சென்று சேர வேண்டும். அதற்குப் பிறகு, இந்த மூலிகைகள் குன்றி, அழிந்து விடும். அகத்தியன் எத்தனை நாளுக்குத்தான் தெய்வ ரகசியம் என்று இந்த மூலிகை ரகசியங்களை வைத்துக் கொள்வது. 

போகா என்ன சொல்கிறாய் என்று அவனை கேட்கிறேன். 

"தலையாய சித்தனே! இட்டதொரு கட்டளை
செய்யவே பிரார்த்திக்கிறேன் நான்" என்கிறான்.

மங்கோலியா நாட்டிலே நான் பிறந்தாலும், எனக்கு தலைவன் நீ தானடா. நீ உரைத்து, என்றைக்காவது நான் எதிர்த்துப் பேசி இருக்கிறேனா? தலை வணங்கித்தான் செய்திருக்கிறேன். ஆகவே, அகத்தியா, நீ எதை செய்தாலும், போகனுக்கு ஏற்புடா!

இந்த ஒலைக்கட்டில், யாருக்கும் கிடைக்காத மூலிகை ரகசியங்கள் எல்லாம், பூ உலகத்தில், பாரத மண்ணிலே பிறந்த எந்த மானிடனுக்கும் கிடைக்காத ரகசியங்கள் எல்லாம் எழுதி இருக்கிறேன்.

"அன்றொருநாள், ஆங்கொருவன், பத்து லட்சத்துக்கு விலை கூறி கேட்டானே ஒருவனிடம்; கொடுத்தானா இவன்? அன்றைக்கே பணம் சம்பாதித்திருக்கலாமே? விட்டானா? கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், அந்த ரகசியங்கள் அழிந்து தூள் தூளாகி இருக்கும். கொடுத்திருந்தால், மிலேச்சன் நாட்டுக்கு இது போய், எல்லா நோய்களுக்கும் மருந்தை கண்டுபிடித்த பெருமையை மிலேச்சன் நாட்டுக்காரன் எடுத்திருப்பான். கொடுக்கவில்லை. அப்போதே போகனை தக்கவைத்துக் கொண்டு, இன்று உன் சொல்லுக்கு அடிபணிந்து இருக்கிறான். ஆகவே, அகத்தியா! நீ என்ன சொல்கிறாயோ, அந்த வார்த்தைக்கு தலை வணங்குகிறேன்", என்று போகன் உரைக்கிறான்.

இப்பொழுது, போகனே, எனக்கு ஆனந்தமாக அனுமதி தந்துவிட்டான். அதனால் அந்த போகன் நாடியை, அன்னவனுக்கு இந்த நல்ல நாளில் கொடுத்துவிடு. இப்பொழுது சந்திராஷ்டமம் இல்லையே. கணக்குப் பண்ண வேண்டாமே. அப்படி ஒரு அற்புத நிகழ்ச்சி நடக்கிறதல்லவா? ஆகவே, சந்திர அஷ்டமம் எல்லாம் தாண்டிவிட்டது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும். இப்போதே பெற்றுக்கொள், வைத்துக்கொள். சகல விதமான ஔஷத பாக்கியங்களும் கிடைக்கட்டும் என்று அகத்தியன் சொல்கிறேன்.  அவ்வப்போது நட்சத்திர மரங்களையும் மட்டுமல்ல, இன்னும் சில ரகசியங்களை சொல்கிறேன். அகத்தியன் மைந்தன் வழி சொல்கிறேன். அதை பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் காக்க நீ உதவ வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனே உன்னை படைத்திருக்கிறான். இல்லை என்றால் தொழில் மாறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் வாழ்க்கையை வேறு விதமாக கொண்டு போயிருக்கலாம். அன்று அகத்தியன் சொன்னேன் "வெளியே வா" என்று. எந்த நம்பிக்கையில் வெளியே வந்தாய். யாரை கேட்டு வெளியே வந்தாய் என்று கேட்டவர்கள், உனக்கு பைத்தியக்காரன் பட்டம் சூட்டியதெல்லாம் எனக்குத் தெரியும். முட்டாள் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான், என் எதிரில் இருக்கின்ற அன்னவன், என்பது எனக்குத் தெரியும். பொல்லாத பணி செய்துவிட்டாய், செய்து வந்த பணியை இழந்து நிற்கிறாய், இது நியாயமா என்று, எத்தனை நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் அடி வயிற்றில் எரிந்துகொண்டு, முட்டாள்தனம் செய்கிறானே இவன், இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது என்று பேசி கொள்வதெல்லாம், அகத்தியன் காதில் விழத்தாண்டா செய்கிறது. அதை எல்லாம் தாண்டி, அகத்தியன் சொன்னான் என்பதற்காக வேலையை விட்டு வந்திருக்கிறானே இவன். இவனுக்கு அகத்தியன் ஏதாவது நன்றிக் கடன் செய்யவேண்டும். இந்த பணியை இவன் ஏற்பான். இவனால், இந்த உலக மக்களுக்கு, யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ, அந்த மனிதர்களுக்கு, இந்த பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். மருந்து தான் இப்போது உயிரை காக்கும் தெய்வம். மனதை காக்க என்னதான் யோகா இருந்தாலும், த்யானம் இருந்தாலும், அதை எல்லாம் தாண்டி, இந்த மருந்து வேலை செய்யும். அப்படிப் பட்ட மருந்தை, யாருக்கும் கிடைக்காத மூலிகையை, இன்றே தந்தேன் என்று அருளாசி.

நாடியை படித்து நிமிர்ந்த போது என் நண்பர்கள் அமைதியாக இருந்தனர். நான் கூறலானேன்.

"இந்த நாள் வரலாற்றிலேயே மிக முக்கியமாக குறிக்கப் படவேண்டிய நாள். இன்று அகத்தியப் பெருமான் நல்ல குஷி மூடில் இருக்கிறார். வேறு ஏதாவது சொல்கிறாரா என்று பொறுத்துப் பார்ப்போம்" என்றேன்.

சித்தன் அருள்.......... தொடரும்! 

Tuesday, 3 December 2013

அகத்திய பெருமானுக்கு 22/12/2013 அன்று குருபூஜை!


வணக்கம்!

ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, அகத்தியப் பெருமானின், குருபூஜை  தகவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் உள்ளவர் கலந்து கொண்டு அவர் அருள் பெற்றுக் கொள்ளலாம்.

அன்புடையீர் ,.

வணக்கம் , வாழ்க வளமுடன் 

எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் வரும் 22-12-2013 அன்று நமது மகாகுரு அவர்களின் குருபூஜை நமது ஆலயத்தில் நடைபெற உள்ளது . 

அது சமயம் அகத்திய அடியவர்கள் அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .

நாள் :22-12-2013 

இடம் :ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் வளாகம்
             மேகலசின்னம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு

நிகழ்சிநிரல் 

21-டிசம்பர்-2013 - மாலை 6.00  முதல்  மகா யாகம்

22-டிசம்பர் -2013

காலை : 5.30  முதல்      கோ - பூஜை 
காலை : 6.30 முதல்       அபிஷேகம் 
காலை :10 .00 முதல்      அன்னதானம் 

தொடர்புக்கு:-

திரு. சரவணன்:9715673777/7597773777 

Sunday, 1 December 2013

கோடகநல்லூர் - ஒரு அன்பரின் அனுபவம்!

[கோடகநல்லூர் - பச்சைவண்ணப் பெருமாள் கோவில்]

அகத்தியர் அடியவர் திரு வேங்கடரமணனும் அவரது மனைவி திருமதி அலமேலு வெங்கடரமணன் அவர்களும் சென்னையில் வசிக்கிறார்கள். அவர்கள் இருவரும் 14/11/2013 அன்று கோடகநல்லுரில் பச்சை வண்ணன் பெருமாளை தரிசித்து, தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள மனமுவந்து முன் வந்துள்ளனர். அதை அவர் பகிர்ந்து கொண்டபடியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷியின் அருளுடன், 14/11/2013 அன்று கோடகநல்லூரில் உறையும் பச்சை வண்ணப் பெருமானின் தரிசனத்துக்காக நானும் எனது மனைவியும் 11/11/2013 அன்று சென்னையில் இருந்து கிளம்பினோம். 12/11/2013 அன்று மதுரையை அடைந்து உறவினர் வீட்டில் தங்கிவிட்டு 13/11/2013 அன்று காலை 08.30 மணிக்கு மதுரையைவிட்டு திருநெல்வேலிக்கு கிளம்பினோம்.  

​திருநெல்வேலிக்கு, என் வாழ்க்கையில் முதன் முறையாக செல்கிறேன். மதியம் 12 மணிக்கு திருநெல்வேலியை அடைந்து, அருகிலுள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு, கோடகநல்லூர் செல்ல, நடுக்கல்லூர் என்கிற நிறுத்தத்தில் இறங்கினோம்.

நடுக்கல்லூரிலிருந்து, நடந்தே கோடகநல்லூர் செல்லலாம் என்று நடக்கத் தொடங்கினோம். ஒரு முன் அறிமுகமும் இல்லாத ஊர். ஒன்றரை கிலோமீட்டர் நடந்ததும் ஊரை அடைந்தோம்.

கோடகநல்லூர், ஒரு அழகிய சின்ன கிராமம். தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்து செல்கிறது.  நிறைய வீடுகள் பூட்டியே கிடந்தது. ஒருவரும் அங்கு வசிக்கவில்லை என்று தோன்றியது. 

அறிமுகம் இல்லாத ஊர்.  யாரையும் தெரியாது. தங்குகிற ​அறை வசதி இல்லாத ஊர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டேன். ஏதாவது விசாரிக்கலாம் என்றால், வீதியில் ஒருவரை கூட வெளியே காணவில்லை. அகத்திய பெருமானை மனதால் பிரார்த்தித்து "அய்யா! ஏதாவது ஒரு வழி காட்டுங்களேன்" என்றேன். 

பிரார்த்தித்து அப்படியே நின்று கொண்டிருக்கும் போது, எங்கிருந்தோ வந்த ஒரு பசுவானது என் அருகில் வந்து பார்த்துவிட்டு, "ம்மா" என்று அழைத்தபடி நடந்து சென்றது. ஏதோ ஒரு உந்துதலில் நானும் மனைவியும் அதன் பின்னர் நடக்கத் தொடங்கினோம். நேராக நடந்த பசுவானது, கிழக்கு தெரு பக்கமாக சென்று சிவன் கோவிலை அடைந்தது.

ஒரு வீட்டின் முன் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தது. யாரோ வெளியில் நிற்பதை உணர்ந்த ஒரு பெண்மணி வெளியே வந்தார்.  பசு நிற்பதையும், கூடவே நாங்கள் இருவரும் நிற்பதை கண்டு, அமைதியாக 

"என்ன வேண்டும்?" என வினாவினார்.

நான் என்னையும் என் மனைவியையும் அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னை பற்றிய முழு தகவலையும் தெரிவித்து, அந்த ஊருக்கு வந்த காரணத்தை தெளிவு படுத்திய போது, அந்த பெண்மணியே ஆச்சரியமடைந்து விட்டாள். ஆம்! அவர்களுக்கே 14/11ன் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. அனைத்தையும் கேட்ட பொழுது அந்தப் பெண்மணி, இலவசமாக தங்கும் இடம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

இத்தனையும் பேசி முடித்து திரும்பி பார்க்கையில், எங்களை அழைத்து வந்த பசுவை காணவில்லை. மறைந்து போயிருந்தது. ஆச்சரியத்துடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தோம். ஏதோ ஒரு திருவிளையாடல் அகத்தியப் பெருமான் நடத்துகிறார் என்று உணர முடிந்தது.

சிறிது நேர ஆசுவாசத்துக்குப் பின், தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

தாமிரபரணி கரையை தொட்டு ஓடிக்கொண்டிருந்தாள். நீரின் மேல் புறம் கலங்கலாக காணப்பட்டாலும், குளிக்கும் போது இதமாக இருந்தது. சுகமான குளியல், பின்னர் வீட்டிற்கு வந்து தயாராகி சிவ பெருமானை வணங்க கோயிலுக்கு சென்றோம். நல்ல தரிசனம். அமைதியான சூழ்நிலை. நிறைய நேரம் அவர் சன்னதியில் மனம் ஒன்றி த்யானம் செய்துவிட்டு மாலை 6.30 மணிக்கு பச்சை வண்ணப் பெருமானை தரிசிக்க கோயிலுக்கு சென்றோம்.

மின்சாரம் இல்லாததால், எங்கும் ஒரே இருட்டு. வெளிச்சம் இருந்தால் கண்களும், மனமும் எல்லாவற்றையும் விழுங்கிவிட நினைக்கும். சற்று யோசித்துப் பாருங்கள்! பச்சை வண்ணன் இருக்கும் இடத்தில் மட்டும் ஜோதியால் அலங்காரம் வெளிச்சத்தை இறைத்துக் கொண்டிருந்தது. அவரை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. அவர் கண்கள் கூட நம்மை உற்றுப்பார்த்து, "வாடா! இங்கே!" என்று அதிகார அன்புடன் அழைப்பது போல் இருந்தது. ஒரு நொடியில் எல்லாவற்றையும் இழந்து, மறந்து, அவர் பாதத்தில் புதைந்து கிடந்தது, என்னால் விவரிக்க முடியாத ஒரு அற்புத அனுபவம். எங்கும் அமைதி, அதை தவிர வேறு ஒன்றும் இல்லாத நிலை. என்ன கேட்கத் தோன்றும்? மனம் ஒன்றி நாங்கள் நின்று கொண்டே இருந்தோம். இது நிச்சயமாக அகத்தியர் அருளால் தான் நடக்கிறது என்பது தெளிவாகியது. குழந்தையின் பசிக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று தாய்க்குத்தானே தெரியும்! தாயாய் இருந்து, அந்த தந்தை, அன்று எங்களை ப்ரஹன் மாதரிடம் கொண்டுவிட்டான் என்று தெளிவுபட புரிந்தது.

மறுநாள் 14/11/2013. எல்லா தெய்வங்களும் ஒன்று கூடி இருந்து மனமகிழ்ந்து இருந்த நாள், இருந்த இடம். ஒரு நிமிடம் யோசித்த போதே, உடலெங்கும் புல்லரித்துப் போனது. விடியற்காலை, சூரிய உதயத்துக்கு முன்னரே எழுந்து, தாமிரபரணியில் நீராடிவிட்டு, தாமிரபரணி தாய்க்கு நன்றி சொல்லும்விதமாக, வெற்றிலை, பாக்கு, பழம், பூ, ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு வைத்து, கரையோரம் பூசை செய்தோம். மிக திருப்தியாக இருந்தது. ஆற்றின் கரையில் இருக்கும் பிள்ளையாருக்கும் பூசை செய்து பின், எங்கள் எளிய பூசையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.

​காலை 9 மணிக்கு கோயிலுக்குள் சென்ற நாங்கள், மதியம் 2.30 மணி வரை அங்கேயே இருந்து அனைத்துவிதமான, அபிஷேகம், பூசைகளை கண்டு மனம் குளிர்ந்தோம். அத்தனையும் நடந்த பின் நாங்கள் உணர்ந்தது ஒன்று தான். "இந்த ஜென்மம் எடுத்ததற்கான காரணத்தை, செய்ய வேண்டிய கடமையை, அகத்தியப் பெருமானும், ப்ரஹன் மாதரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றி தந்துவிட்டார்கள். ஆசி புரிந்துவிட்டார்கள். இனி ஒன்றும் வாழ்க்கையில் ஆவதர்க்கில்லை" என்று புரிந்தது. எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த அருள் என்று உணர்ந்து இருந்தோம்.

கோவில் அர்ச்சகருக்கு அத்தனை ஆச்சரியம். இத்தனை கூட்டம் வந்து அவர் பார்த்ததில்லை போல். அவருக்கே, இந்த கூட்டத்திற்கான காரணத்தை, வந்தவர்கள்தான் விளக்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கோவிலிலேயே மதிய உணவு கிடைத்தது.

தங்க ஓரிடம் தந்து, குளிக்க ஓரிடம் தந்து, அருள் பெற கோவிலை தந்து, பசியாற அன்னமும் தந்து, மனதையும், உடலையும் பச்சை வண்ணனும், அகத்தியரும், லோபாமுத்ரா தாயும் ஆட்க் கொண்டுவிட்டார்கள் என்று சொன்னால், மிகையாகாது.

மறுநாள் காலை (15/11/2013) விடியற்காலையில் எழுந்து, தாமிரபரணியில் முதல்நாள் நீராடிய இடத்தில், குளிக்கச் சென்றோம். அங்கு பொதுவாகவே யாரும் குளிப்பதில்லை.

முதல் நாள் நாங்கள் விட்டுச் சென்ற மஞ்சள் துண்டு மட்டும் அங்கிருந்தது. அதுவும் மஞ்சள் பூசி குளித்துவிட்டு மீதம் விட்டு வைத்தது போல். யாரும் இங்கு வந்து குளிக்கமாட்டார்கள். அப்படியிருக்க, அந்த மஞ்சள் துண்டு உபயோகப் படுத்தப் பட்டிருந்தது, எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை வரவழைத்தது. ஆகா! தாமிர பரணி தாயே நாங்கள் வைத்த மஞ்சள் துண்டை எடுத்து குளித்திருக்கிறாள் என்று தோன்றியது.  அப்படிப்பட்ட மிச்சத்தை விட்டுவிடலாமா? கூடாது. அதை பத்திரமாக  வீட்டிற்கு கொண்டு வந்து விட்டோம்.

எங்கள் அனுபவம் ஒன்றைதான் உணர்த்தியது. சித்தர்கள் வாக்கை நம்புவோர் நிச்சயமாக அவர் அருள் பெறுவார். சரியான தேடல்தான் நல்ல அனுபவங்களை தரும். ஆசியை பெற்றுத்தரும். ஒரு அடி அவர்களை நோக்கி முன் வைக்க, அவர்கள் கை கொடுத்து நம்மை தூக்கி விடுவார்கள்.

எல்லாவற்றையும் அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்து,

அன்புடன்

வேங்கடரமணன்
அலமேலு வேங்கடரமணன்