​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 28 June 2012

மருத்துவர்களுக்கு அகத்தியரின் அறிவுரை!

சித்தன் அருளை தொகுப்பதற்காக நிறைய புரட்டியபோது ஒரு தகவல் என் கண்ணில் பட்டது.  அது தொகுப்பாக குழுவில்/ப்ளாகில் வந்து சேர சிறிது காலம் ஆகும் என்பதால், அதன் உட்கருத்தை மட்டும் உடனே உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

நம்மிடையே, இந்த தொகுப்பை வாசிப்பவர்களில் பல மருத்துவர்களும் (டாக்டர்) இருக்கலாம்.  அவர்கள் தங்கள் கடமையை (தொழிலை) செய்வதற்கு, பல நோயாளிகளையும் பார்க்கவேண்டிவரும்.  தொட்டு சிகிற்சை செய்யவேண்டிவரும்,  மருந்து கொடுக்கவேண்டிவரும், ஊசி போட வேண்டிவரும்.  ஏதாவது ஒரு காரணத்தால் அந்த நோயாளி என்றேனும் இறக்க நேர்ந்தால், நேர்மையான எண்ணத்துடன் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் சிகிச்சை செய்திருந்தாலும், அந்த நோயாளி இறந்ததினால் (என்றாயினும்) கொன்ற பாபத்துக்கு இணையான "பிரம்மா ஹத்தி தோஷம்" சிகிட்ச்சை அளித்த அந்த மருத்துவருக்கு வரும். அதுதான் உண்மை விதி.  இதை அகத்தியரே ஒரு மருத்துவருக்கு நாடி பார்க்கும் பொழுது சொல்கிறார். இது அந்த தொழிலில் தவிர்க்க முடியாதது.இதற்க்கான பரிகாரமும் அகத்தியரே சொல்கிறார். அதிலிருந்து விடுபட, ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டதாக தெரிந்தால், அன்றே சிவன் கோவிலில் அந்த நோயாளியை நினைத்து "மோக்ஷ தீபம்" ஏற்றவேண்டும். மரண செய்தி என்று தெரிந்ததோ அன்றோ அல்லது உடனேயோ (வரும் நாட்களில் கூட)  இதை செய்தால், அந்த தோஷம் விலகிவிடும் என்கிறார். அதற்காக வேண்டுமென்றே கொன்று விட்டு "மோக்ஷ தீபம்" போட்டால் போதுமே என்று நினைக்க கூடாது. வேண்டுமென்று செய்ததற்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது.

இதை செய்யாமல் போனால், அந்த தோஷமானது, கூட இருந்து, மருத்துவரை வருத்தும். மருத்துவர்களே, இதை புரிந்து கொண்டு உடனே செய்வது நல்லது. ஏன் வாரத்தில் ஒரு நாள் ஒரு முறையேனும் இப்படி தீபம் ஏற்றிவர, தெரியாமலே நம்மிடம் வந்து சேர்ந்த தோஷத்தை விலக்கி கொள்ளலாமே. யோசியுங்கள்! நலம் பெறுங்கள்!

சித்தன் அருள் - 78 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!


என்னிடம் இருக்கும் ஜீவநாடியில் இருந்துதான் அகஸ்தியர் அருள் புரிந்து வருகிறார் என்று இதுவரையில் நினைத்திருந்தேன்.  ஆனால் வேறு சில நாடிகள் மூலமும் அகஸ்தியர் அருள் புரிகிறார் என்பதை அகஸ்தியர் சொல்ல நான் கேட்ட பொழுது அதிசயித்துப் போனேன்.

முதலில் இந்தக் கிராமத்தில் அடியெடுத்து வைத்தபோது அந்த கிராமத்தின் பெருமை, மலைக்கோயிலின் பெருமை தெரியாமலிருந்தது.  கடந்த இரண்டு நாட்களாக எனக்கு அகஸ்தியர் மூலம் கிடைத்த அனுபவத்திற்குப் பின் என்னையும் அறியாமல் அந்தக் கோயிலின் மீது ஓர் ஈர்ப்பு தன்மை ஏற்பட்டது.

இரவில் மட்டும் தேவர்களையும், சித்தர்களையும் ஒலிவடிவாக கண்டு வந்த நான் இப்பொழுது பகலிலும் வழிபடத் தொடங்கினால் என்ன? என்று தோன்றியது.  கீழே இறங்கி குளித்து, பூசையை முடித்துவிட்டு மற்றவர்களோடு வீண் அரட்டை அடிப்பதை விடப் பேசாமல் இங்கு வந்து பகல் முழுவதும் த்யானம் செய்வது நல்லது எனத் தோன்றியதை குருக்களிடம் சொன்னேன்.

அவர் "திருவாதிரை" நட்சத்திரத்தைச் சொன்னதும் நேற்றிரவு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் திருவாதிரைக் களியாக மாறியதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் என்று என் உள்மனம் சொன்னதால் பகலிலே சிவபெருமானை தரிசனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தேன்.

இதற்கிடையில்,

நோய்வாய்ப்பட்ட கர்ணத்தின் தம்பி மனைவி இறைவனடி சேர்ந்துவிட்டதாகவும் மற்ற காரியங்கள் அங்கேயே நடப்பதாகவும் தகவல் கிடைத்தது.  எப்படியோ "கர்ணம்" தப்பிவிட்டார்.  அவர் தம்பிக்கும், அவர் மனைவியிடமிருந்து விடை கிடைத்து விட்டது.  இனிமேல் தன் இரண்டாம் மனைவியோடு குடித்தனம் நடத்த காஷ்மீரத்திருக்குப் புறப்பட்டுச் செல்லலாம்.

கர்ணத்தின் தம்பியின் சொத்துக்கள் இனி இந்த மலைக் கோயிலுக்கு சேர்ந்து விடும்.  அதை வைத்து, ஆகம விதிப்படி விமரிசையாக கோயில் கும்பாபிஷேகம் செய்துவிடலாம்.  கோயிலுக்குரிய தோஷம் விலகிவிடும் என்று இப்படியெல்லாம் மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.

கிராமத்திற்கு சென்று என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர் சிற்றுண்டி தண்ணீர் சகிதம் மதியத்திற்கு மேல் மலைப்படி ஏறினேன்.  விளக்கு, டார்ச் லைட் எதுவும் கொண்டு வராதே.  நடு வழியில் படுக்காதே, நந்திக்கு பக்கத்தில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  தப்பித் தவறிக் கூட கண்ணைத் திறக்காதே - இதெல்லாம் இன்று நள்ளிரவில் நான் கடைபிடிக்க வேண்டிய விதிகள்.

இரண்டு நாள் இரவில் எனக்குக் கிடைத்த அனுபவம் அலாதிதான்.  இதைவிட மூன்றாவது நாளான இன்று என்ன அதிசயத்தை அகஸ்தியர் எனக்குக் காட்டப் போகிறார் என்ற ஆர்வம் சாயங்காலத்திலிருந்தே ஏற்பட்டது.  மலைக்கு வருகிறவர்கள் பலர், சுவாமியைப் பார்க்கிறார்களோ இல்லையோ, நந்தி பக்கத்திலிருந்த என்னை, வினோதமாய்ப் பார்த்தார்கள்.  மிருகக் காட்சி சாலையில் வினோதமான மிருகத்தைத் தள்ளி நின்று பார்ப்பது போல்தான் என் மனதில் தோன்றியது.

கொஞ்ச நேரம் த்யானம்.  கொஞ்ச நேரம் மலையை சுற்றி வருதல்.  கொஞ்ச நேரம் அந்த மலையை சுற்றி உள்ள காட்ச்சிகளை ரசித்தல்.  கோயிலில் ஏதாவது கல்வெட்டு தென்படுகிறதா? என்று கோயில் மதில் சுவற்றை தடவிப் பார்த்தேன்.  இப்படியாகச் சாயங்காலம் வரை பொழுதைக் கஷ்டப்பட்டு கழித்தேன்.  முழுமையாக "த்யானம்" செய்யச் சூழ்நிலை இடம் தரவில்லை.

சாயரட்ச்சை ஆனதும் குருக்கள் கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கினார்.  அவரை வழியனுப்பிவிட்டு அமைதியாக நந்தி பக்கம் அமர்ந்தேன்.

திடீரென்று ஒரு குளிர்ந்த காற்று வேகமாக வீசியது.  உடம்பை நன்றாகப் போர்த்திக் கொள்ளலாம் என்றால் - ஒரு துண்டைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை.  இந்த குளிர்காற்று தொடர்ந்து வீசினால் ஒன்று நான் ஜுரத்தால் அங்கேயே படுத்திருப்பேன், அல்லது போனால் போகட்டும் போடா என்று விறு விறு என்று மலையிலிருந்து கீழே இறங்கி, கிராமத்தில் எங்கேயாவது அடைக்கலாமாகியிருப்பேன்.

எனினும் தட்டுத் தடுமாறி என் கைபெட்டியைத் திறந்து அந்தத் துண்டை எடுத்து முண்டாசு போல் கட்டிக் கொண்ட போது என் பெட்டியிலிருந்த அகத்தியர் நாடியை, மறுபடியும் வீசிய காற்று எங்கேயோ தூக்கிச் சென்றுவிட்டது.

எனக்கு உயிர்காத்த அந்த நாடியைத் தொலைத்தது துரதிஷ்டம்தான்.  பெட்டியை ஒரு ஓரமாகக் காற்றுபடாமல் சாய்த்துவிட்டு அந்த சந்தியாகால இருட்டில் தேடியபொழுது என் கைக்கு எங்குமே கிட்டவில்லை.  மாறாக அந்தக் குளிரிலும் நான் வியர்த்துப் போனதுதான் மிச்சம்.

சில சமயங்களில் இக்கட்டான சூழ்நிலையில் நான் மாட்டிக் கொண்டு முழித்தபோது "இந்த நாடியைத் தூக்கி எறிந்துவிட்டால் என்ன?" என்று நினைத்தது உண்டு.  ஆனால் இன்றைக்கு உண்மையில் அந்த ஓலைச்சுவடி காற்றினால் தூக்கிச் செல்லப்பட்டபோது ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன்.

"சரி.  எப்படி என் கைக்கு வந்ததோ அப்படியே கை மாறிவிட்டது.  எல்லாம் அகத்தியர் இஷ்டம் என்று கஷ்டப்பட்டு என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.  மேலும் நேரத்தை வீணாக்க கூடாது என்பதால் அலைந்து திரிந்து பார்த்துவிட்டு மறுபடியும் அந்த நந்தியின் காலடியில் அமர்ந்தேன்.

நந்தியின் காலடியில் அமர்ந்ததால் அடிக்கடி அப்போது வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த வேகமான காற்று இப்பொழுது என் மீது படாமலே சென்றது. அந்தக் காற்றிலிருந்து என்னைக் காப்பாற்ற நந்தி பெருமானே தன் இரு கரங்களுக்கு இடையில் என்னை மிக நன்றாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது போல் ஓர் உணர்வு தலை தூக்கியது.

இப்பொழுது எனக்குக் குளிர் காற்று தெரியவில்லை.

ஒரு உஷ்ணமான மூச்சு என்னைச் சுற்றி வீசியதால் தலையில் கட்டிய முண்டாசுவைக் கழற்றி விட்டேன்.  நேரமாக நேரமாக என் சட்டை, பனியன் இவற்றையும் கழற்றி விட்டேன்.

காற்று பலமாக வீசிய போதும் நான் வெறும் மார்புடன் இருந்தேன்.  குளிர்வாடை தெரிய வில்லை.  ஆனால் ஒரு உஷ்ணமான காற்று மட்டும் என்னைச் சுற்றி வீசிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.  அது எப்படி எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.  அப்படியே விட்டு விட்டேன்.

நேரமாக நேரமாக நான் கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஈடுபட்டேன்.  இடை இடையே ஜீவநாடி காணாமல் போனதால் மனம் சஞ்சலப்பட்டது.  முழுமையான த்யானம் எட்டவில்லை.  பசியும் என்னைவிட்டு விலகிவிட்டதால் கொண்டு வந்திருந்த சாப்பாடு அப்படியே கிடந்தது.

கண்ணை மூடிக்கொள்ளச் சொல்லியிருந்ததால் அப்படியே மூடிக் கொண்டு தியானத்தை செயல் படுத்த ஆரம்பித்தேன்.  எவ்வளவு நேரம் இப்படியே இருந்திருப்பேனோ தெரியாது.  திடீரென்று மெட்டி ஒலிச் சத்தம் கேட்டது.

சட்டென்று கண்ணைத் திறந்தேன்.  மெட்டிச் சப்தம் காணவில்லை.

மறுபடியும் அகத்தியரை வேண்டி த்யானம் செய்து கண்ணை மூடிக் கொண்டேன்.  இப்போது பல மெட்டிகளின் சப்தங்கள் கேட்டது.  நறுமணப் புகை நாசியில் நுழைந்தது.  மேளம் துந்துபிகள் முழக்கம், ஆலயமணி ஓசை, மங்கலமான வேத கோஷம் காதில் விழ ஆரம்பித்தது.

சர்வ வியாபியான சிவ பெருமானும் பார்வதி தேவியும் நடுவில் அமர்ந்திருக்க மலர்களால் வாசனைத் திரவியங்களால் சித்தர்கள், தேவர்கள், அர்ச்சனை அபிஷேகங்களைச் செய்கிறார்கள்.

விஷ்ணு - சிம்ம முகத்தோடு லெட்சுமி தேவி சகிதம், சிவபெருமானுக்கு மங்கள ஸ்நானம் செய்கிறார்.

பிரம்மன், சரஸ்வதி தேவியோடு வந்து சிவபெருமானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் செய்கிறார்.

பிறகு இந்திரர்கள் - முனிவர்கள் - சித்தர்கள் - அபிஷேக ஆராதனை செய்கிறார்கள்.  எங்கும் மங்கள கோஷம்.

இவையெல்லாம் பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிட பின்பு பெரும்காற்று ஒன்று வேகமாகக் கருவறையிலிருந்து வெளியேற, அங்கிருந்த அத்தனை பேர்களும் ஒரு நொடி நேரத்தில் மறைகிறார்கள்.

பின்பு வெகுநேரம் எந்தவித சப்தமும் பரிமள வாசனையும் என்னில் படவில்லை.  கண்ணை திறந்தேன்.

அமைதியான சூழ்நிலை கண்ணில் தெரிந்தது.  நந்தி பெருமான் தன் பிடியிலிருந்து என்னை விட்டுவிட்டது போன்று தோன்றியது.  நேற்றைய இரவு போல் என்னைப் பயமுறுத்தும் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

நள்ளிரவு நேரம் என்பதை வானத்து நட்சத்திரங்களும் கிராமத்திலிருந்து அவ்வப்போது குரைக்கும் நாய்களின் சப்தமும் மட்டும் மெல்லியதாக உணர்த்தின.

சற்று முன்னர் நான் கண்டது கற்பனையா? இல்லை நடந்ததா? என்பதை அறியும் முயற்சியில் இறங்கவில்லை.

இதை வெளியில் சொன்னால் அளவுக்கு மீறிய கற்பனை என்று ஒரே பேச்சில் என்னைப் பைத்தியக்காரனாக்கி விரட்டி விடுவார்கள்.  இல்லையென்றால் கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு.  அதையும் தாண்டி நான் பேசுவதாக எண்ணி, இந்த சமுதாயத்திலிருந்தே விலக்கி வைத்தாலும் வைக்கலாம்.  மொத்தத்தில் என்னை நம்பவே மாட்டார்கள்.  எனவே இதைச் சொல்லாமல் அகத்தியருக்கு நன்றி சொல்லி, அமைதியாக இருப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.

நேற்று இரவை விட இன்று எனக்குக் கிடைத்த அனுபவம் புதிதுதான்.  கண்ணை மூடிக் கொண்டு சிவபார்வதியையும் லெட்சுமி நரசிம்மரையும், பிரம்மா சரஸ்வதியையும் இன்னும் பல்வேறு தேவர்களையும் ஒன்று சேர தரிசனம் செய்தது அதைவிட இவர்கள் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் அபிஷேகம் செய்வதை மானசீகமாக தரிசனம் செய்தது எனக்குக் கிடைத்தது,  என் பெற்றோர் செய்த புண்ணியம் தான்.  இதுதான் உண்மை.

இத்தகைய அபூர்வமான பாக்கியத்தை எனக்கு மூன்றாம் நாள் இரவு அன்று தந்த அகத்தியர், என்னிடமிருந்த நாடியைக் காற்றில் பிடிங்கிக் கொண்டது நான் செய்த பாபம் என்று எண்ணினேன்.

எப்படி எனக்குக் கிடைத்ததோ அப்படியே அதுவும் என் கைவிட்டுப் போயிற்று என்று ஒரு வகையில் திருப்தியாக இருந்தாலும், நிறையப் பேர்கள் எதையும் நம்ப மாட்டார்கள்.  பொய் சொல்கிறான் என்று தான் பெயர் சூட்டிவிடுவார்கள்.

பல்வேறு மிக முக்கியமான பெரிய பதவியில் நாட்டை ஆளுகின்ற பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் ரகசியமாகத் தங்களது எதிர் காலத்தைப் பற்றியும், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டுக் கொண்டு சென்ற நேரம்.

நாட்டிற்காகவும் சில காரியங்கள் அப்போது செய்ய வேண்டியிருந்தது.  அதற்கெல்லாம் நல்ல வழியைக் காட்டுவதாக அகஸ்தியர் ஏற்கெனவே சொல்லி இருந்தார்.  இதெல்லாம் இப்போதுதான் என் நினைவுக்கு வந்தது.

அப்படிப்பட்ட நேரத்தில் என் கையிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டது மலை காற்று என்று நான் உண்மையைச் சொன்னால், சத்தியமாக ஒருவர் கூட நம்பமாட்டார்கள்.

இந்த நேரத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதை நினைத்து துக்கம் தொண்டையை அடைக்கத்தான் செய்தது.  யாருக்கும் கிடைக்காத சில பாக்கியங்களைக் கொடுத்துவிட்டுப் பிடுங்கவும் வேண்டாமே என்று நினைத்து வருந்தினேன்.  இதனால் பகவான் காட்டிய அந்த அருமையான "காட்சி" முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போயிற்று.

மறுநாள் விடியற்காலை.

பொல பொலவென்று விடியத் தொடங்கிய காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.  இரவில் சாப்பிடாமல் இருந்த சாப்பாட்டு பொட்டலத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு வெற்று வயிற்றில் தண்ணீரை மட்டும் குடித்து முடித்தேன்.

காலையில், குருக்களும் வேறு சிலரும் வேகமாக மலையேறி வந்தார்கள்.  என்னைக் கண்டு "நேற்றைக்கு என்ன நடந்தது சொல்லுங்கோ" என்று ஆவலாகக் கேட்டார்கள்.  அவர்களது வேகத்தை சட்டென்று மாற்றக் கூடாது என்பதை உணர்ந்து "எல்லாம் நல்லபடியாக முந்தாநாள் மாதிரி தரிசனம் கிடைத்தது.  அதை அப்புறமாகச் சொல்றேன்" என்று கூறவிட்டு மௌனமானேன்.

குருக்களுக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லை.  "கொஞ்சம் இருங்கோ, கருவறைக்குச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்.  முந்தாநாள் மாதிரி ஏதாவது விசேஷம் நடந்திருக்கிறதா" என்று சொல்லிவிட்டு, கோவில் கதவைத் திறந்தார்.

அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே கையில் எதையோ எடுத்துக் கொண்டு பரக்கப் பரக்க என்னை நோக்கி ஓடி வந்தார்.

"என்ன சுவாமி அப்படிச் செய்திட்டேளே.  இது ரொம்பத் தப்பாச்சே" என்றார் குருக்கள்.  அவர் முகத்தில் எள்ளும் கொள்ளுமாக கோபம் வெடித்தது.

"என்ன செஞ்சுட்டேன் விளக்கமாகச் சொன்னா நன்னாயிருக்கும்"

"உங்களை கோயில்ல தங்கச் சொன்னதே ரொம்பத் தப்பு.  கர்ணம் இடம் கொடுத்திட்டார்.  ஊர் மக்கள் சொல்றதும் சரிதான்" என்றார், இன்னும் கடுமையாக.

நேத்திக்கு மிகுந்த மரியாதையோடு சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்து வாய் நிறைய உபசரித்த குருக்களா இப்படி பேசுகிறார்? என்று எண்ணி நான் "ஹ்ம். நமக்கு நேரம் சரியில்லை.  இல்லைனா அகத்திய நாடி கைவிட்டுப் போகுமா? அல்லது குருக்கள் தான் இப்படி மாறி பேசுவாரா?" என்று மனதில் சொல்லிக் கொண்டேன்.

"செய்யற தப்பையும் செய்திட்டு இப்படி குத்துக்கல் மாதிரி நிக்கறேளே.  இது ஊர் மக்களுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமோ........... உங்களை மாத்திரம் இல்லை, என்னையும் சேர்த்து மரத்திலே கட்டி உசிரை எடுத்துடுவா!" என்று மேலும் பொருமினார்.

குருக்களோடு மலைமேல் வந்திருந்த இரண்டொருவரின் முகம் மாறியது.  என்னை முறைத்துப் பார்த்தார்கள்.  ஏதோ மிகப் பெரிய விபரீதம் கருவறைக்குள் நடந்திருக்கிறது.  இதற்கு மூல காரணம் நான்தான் என்பதை குருக்கள் கண்டு பிடித்து விட்டதாக எண்ணினார்கள் போலும்! ஏற்கனவே இவர்களுக்கு கர்ணத்தின் மீது ஆத்திரம் இருந்தது.  இப்போது குருக்களே, கர்ணத்தைப் பற்றிச் சொல்லும்போது அவர்களுக்கு படு குஷியாகி விட்டது.

"என்ன சாமி - என்ன நடந்தது?"  கேட்டார்கள் அவர்கள்.

"என்ன நடக்கக் கூடாதோ அது நடந்திருக்கு.  நேத்திக்கு திருவாதிரை ஆச்சேன்னு சொல்லி, சிவனுக்குப் பிடித்தமான களியைப் பண்ணி பகவானுக்கு எடுத்து வச்சேன்.  நைவேத்தியம் பண்ணிட்டு எடுத்துண்டு வரலாம்னு நெனச்சு மறந்துட்டேன்.  இப்போ வந்து பார்த்தா, இந்த மனுஷன் ராத்திருக்கு உள்ளே போய் அந்த நைவேத்தியத்தை கபளீகரம் பண்ணிட்டு இவருக்கு நான் கொடுத்த தயிர் சாதத்தை அரையும் குறையுமாகச் சாப்பிட்டுவிட்டு அப்படியே எச்சிலோடு கருவறையிலே போட்டுட்டு வந்துட்டார்.  இப்படிச் செய்யலாமா?" என்றார் குருக்கள், மிகுந்த வருத்தத்துடன்.

எனக்கு இது ஒரு அதிர்ச்சி தகவலாக இருந்தது.

"குருக்களே! அவசரப்பட்டு ஏதாவது சொல்லாதீர்கள்.  நேத்திக்கு ராத்திரி பூராவும் நான் நந்தி பக்கத்திலேதான் உட்கார்ந்திருந்தேன்.  இன்னும் சொல்லப்போனால் நீங்க கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தை அங்கேதான் வெச்சிருந்தேன்.  சாப்பிடக்கூட இல்லை.  வேணும்னா பாருங்கோ" என்று திரும்பிப் பார்த்தேன்.

அங்கே சற்றுமுன் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைக் காணவில்லை.

"இதைத்தானே தேடறேள்.  அது எப்படி அங்கிருக்கும்?  பாதி சாப்பிட்டும் சாப்பிடாமல் பொட்டலம் பிரிஞ்சு உள்ளே கிடக்கிறதே" என்று தன் கையிலிருந்த அந்தச் சாப்பாட்டுப் பொட்டலத்தை தூக்கிக் காண்பித்து, தூர எறிந்தார்.  பின்னர் கை கழுவி வருவதாகச் சொல்லிச் சென்றார்.  குருக்களது இந்த செய்கை எனக்கு வியப்புக் கலந்த வருத்தத்தைத் தந்தது.

குருக்கள் திரும்பி வந்ததும் அவரிடம் கேட்டேன்.

"குருக்களே - நீங்க ரொம்பக் கோபமாக இருக்கேள்.  நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ.  கோயில் கருவறைச் சாவி உங்ககிட்டே தானே இருக்கு?  பின் நான் எப்படிக் கோயிலுக்குள் போயிருக்க முடியும்!" என்றேன்.

"என்னது எப்படிப் போயிருக்க முடியுமா? அதற்கு ஆதாரம் இருக்கு - கொண்டு வந்து காட்டட்டுமா" என்றவர் சட்டென்று மறுபடியும் கோவிலுக்குள் நுழைந்தார்.

திரும்பி வரும் பொழுது அந்தக் குருக்களின் கையில் நேற்றிரவு காற்றினால் தூக்கிச் செல்லப்பட்ட காணாமல் போன, அகத்தியரின் ஜீவநாடி இருந்தது.

சித்தனருள்............... தொடரும்!

Thursday, 21 June 2012

சித்தன் அருள் - 77 - இரண்டாம் நாள் அர்த்தஜாம பூசை!


மலைகோயிலை அடைந்ததும் கையில் கொண்டு வந்திருந்த அரிக்கேன் லைட்டை சின்னதாக்கி கோயில் திண்ணையின் ஒரு ஓரத்தில் வைத்தேன்.  கூஜாவை என் கைப் பக்கம் வைத்துக் கொண்டேன். குருக்கள் கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்திலிருந்து மசாலா ஊறுகாய் வாசனை மூக்கைத் துளைத்தது.

உடனே சாப்பிட வேண்டும் என்றது நாக்கு. சாப்பிட்டு தூங்கி விட்டால் நள்ளிரவு சித்தர்கள் தரிசனம் கிடைக்காமல் போகுமே என்ற கவலை.  பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

உடனே ஜீவநாடியைப் பார்க்கும் பொழுது -என்ன சொல்வதென்றே புரியவில்லை.  நேற்றைக்கு அப்படி ஒரு தரிசனத்தைக் கொடுத்து என்னை உச்சாணிக் கொம்பில் ஏற்றி இருக்கவும் வேண்டாம். இன்று காலையில் கிராமத்து மக்களிடம் மாட்டிவிட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கவும் வேண்டாம். இந்த அனுபவத்தால் என்ன பலன் எனக்குக் கிட்டப் போகிறது என்று நினைத்தால் மனது வெற்றிடமாகத்தான் இருந்தது.

இந்த சமயத்தில் பார்த்து தான ஆந்தை அலற வேண்டும்.

இந்த ஆந்தை நேற்றைக்கு இல்லை.  அதுவும் படுபயங்கரமாக அலற மனதில் "கிலி" ஏற்படத்தான் செய்தது. விரட்டிப் பார்த்தேன்.  நான் கத்தினதுதான் மிச்சம்.  அது நகரவே இல்லை.

மனபயத்தை போக்க சுதர்சன மந்திரத்தைச் சொல்லலானேன்.

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு ஓநாய் ஊளையிட்டது. அதுவும் கர்ண கடூரமாக இதைக் கேட்டதும் மந்திரமே என் வாயிலிருந்து வர மறுத்தது.  உடலும் வியர்க்க தொடங்கியது.

ஓநாய் தனியே வந்தால் இருக்கிற கல்லை எடுத்து வீசி விரட்டி விடலாம்.  பல ஓநாய்கள் வந்தால் அவ்வளவு தான் என் உடம்பு எனக்கு இல்லை.  இந்த "பயம்" எதுக்காக வந்தது என்பதும் தெரியவில்லை.

எதுக்கும் அரிக்கேன் லைட்டை அசைத்துக் காட்டுவோம், உதவிக்கு ஜனங்கள் வந்தால் வரட்டும். இல்லையேல் "போதுமடா சாமி" என்று கையெடுத்துக் கும்பிட்டு ஊரைப் பார்க்கப் போய்ச் சேருவோம்.  அகஸ்தியர் கோபப்பட்டு என்னை விட்டு விலகினாலும் சரி, இல்லை சித்தர்களின் தெய்வ தரிசனம் எனக்குக் கிட்டாமல் போனாலும் சரி என்ற முடிவுக்கு வந்தேன்.

அரைமணி நேரம் இந்த மௌனப் போராட்டம் எனக்குள் நடந்தது.  அதே சமயம் நான் நினைத்தபடி ஒரு ஓநாய் அல்ல, பல ஓநாய்கள் ஒன்று சேர்ந்து ஊளையிடிடுகின்ற சப்தம் என்னை நடுங்க வைத்தது.  மலைக்குக் கிளம்பு முன்பு ஒரு கிராமத்தான் சொன்னானே "இவன் மலைக்குப் போறான்.  இன்னிக்கு என்ன நடக்கப் போகுதுன்னு பொழுது விடிஞ்சா தெரிந்து போகும்" என்று சொன்ன வார்த்தை சம்மட்டி போல் என் நெஞ்சில் அடித்தது.

அவன் நினைத்தபடி ஏதாவது நடந்து விடுமோ? என்ற பயம் ஒட்டிக்கொண்டது.

இரவு மணி பதினொன்று இருக்கும்.

தொடர்ந்து ஓநாய்களின் ஊளைச்சத்தம்.  இதையொட்டி ஆந்தையின் அலறல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.  இன்று ஒருநாள் மட்டும் இங்கிருந்து பார்த்து விடுவோம்.  நாளைக்குக் காலையில், முதல் வேலையாக ஊருக்குப் போய் விட வேண்டியதுதான் என்று மறுபடியும் எண்ணம் வந்தது.

அப்போது ---

விறு விறுவென்று பலர் காற்றோடு காற்றாக கோயில் கருவறைக்குள் நுழைவது போன்று ஒரு பிரம்மை.  அரூபமாக இப்படி பலர் இரண்டு அல்லது மூன்று பேராக நுழைவது தெரிந்தது.

அவர்கள் உள்ளே நுழைந்த பின்னர் -- ஆந்தையின் அலறல் ஓநாய்களின் ஊளைச் சப்தம் கேட்கவில்லை. ஆனால் என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நாலைந்து ஓநாய் அப்படியே அப்படியே ஒன்று சேர்ந்து என்னை நோக்கி ஒரே பார்வையாகப் பார்த்த பொழுது "தொலைந்தோம்" என்று தீர்மானித்து விட்டேன்.

அவைகள் அப்படியே நின்று கொண்டிருந்தன.  ஆனால் ஊளையிடவில்லை.  அரிக்கேன் லைட்டை எடுத்து அரைகுறை தைரியத்தில் ஏதேதோ சொல்லி அவற்றை விரட்டிப் பார்த்தேன்.  கையில் கிடைத்த சிறு சிறு கற்கள், காய்ந்து விழுந்த மரத்துண்டுகள், குச்சிகள் ஆகியவற்றை எடுத்து அவற்றின் மீது வீசிப் பார்த்தேன்.  இருந்தாலும் அவைகள் அசையவில்லை.

இந்தச் சயமத்தில் அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்து அகஸ்தியரிடம் உதவி கேட்க நினைக்கவும் முடியவில்லை. கை, கால்களில் நடுக்கமும் பயமும் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர இயல்பான நிலைக்கு நான் திரும்பவில்லை.

ஒரு வேளை நான்தான் பிரம்மை பிடித்து ஒன்றுமில்லாததை ஓநாய்கள் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறேனா? என்று கூடச் சந்தேகம் வந்தது. இனியும் அவற்றை விரட்ட எனக்குப் பலமில்லை.  விட்டுவிட்டேன்.

காற்றே வீசாத அந்த நள்ளிரவு நேரத்தில் திடீரென்று காற்று லேசாக வீசியது.  இது உடம்பெல்லாம் பயத்தால் வெளிவந்த வியர்வைக்கு அருமருந்தாக இருந்தது.  சந்தன வாசனை மூக்கில் தெரிந்தது.

பயந்து கொண்டிருந்த என் தலையில் "ஜில்" என்று குளிர்ந்தநீர் ஊற்றியது போன்று உணர்வு.

ஓநாய்ப் பக்கம் கவனம் செலுத்தாமல் - பார்வையை கோயிலின் கர்ப கிரகத்தை நோக்கிப் பதிவு செய்தேன். அடுத்த சில வினாடிகளில் வேத கோஷம், சிவநாம அர்ச்சனை, ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டது; ஆலய மணியோசை துந்துபி முழக்கம், பேரிகை சப்தம், மேள சப்தம் போன்று பல்வேறு கருவிகளைக் கொண்டு எழுப்பும் ஓசை காதில் சன்னமாகக் கேட்டது. கையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு அந்தக் கருவறைக் கதவின் முன்பு சாஷ்டாங்கமாக வணங்கினேன். ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் அந்த அற்புதமான மங்களச் சப்தம் முடிந்தது.  பதினாறு வகை அபிஷேகங்கள் நடப்பது போல் ஓர் கனவு.  பின்பு தூபம், தீபம் காட்டுதல் பின்னர் மலர்களைச் சிவ பெருமானின் மீது தூவி "புஷ்பவான்" என்று மங்கள வார்த்தை சொல்லும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது.

"அப்பாடா! இதுக்குத்தான் இத்தனை கஷ்டப்பட்டேனா?" என்று மனம் ஆரோக்கியமாகக் கேட்டது.

அகஸ்தியர், முதல் நாள் எனக்குச் சித்தர்களின் தரிசனத்தை அரூபமாகக் காட்டிய பொழுது எந்தவிதப் பதற்றமும் இல்லை.ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தோடு அகமகிழ்ந்து போனேன்.

ஆனால்,

இன்றைக்கு எனக்கு பயமுறுத்தும் சூழ்நிலைதான் அதிகம் தோன்றியது.  ஓநாய்களும், ஆந்தையும் என்னைப் படுத்தியபாட்டால் இன்றைக்குக் கிடைத்த அந்த அபூர்வமான காட்ச்சியைச் சரியாக அனுபவிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது.

அகஸ்தியப் பெருமானை முழுமையாக நம்பி பயப்படாமல் சுதர்சன மூல மந்திரத்தைச் சொல்லி, த்யானம் செய்து கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் சித்தர்களது அபிஷேக ஆராதனையைக் கேட்டு சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றிருப்பேன்.

எப்படியோ அரை மணி நேரம் கழிந்தது.

இப்பொழுது அந்த ஓநாய்களையும் காணவில்லை.  ஆந்தையையும் காணவில்லை.  கோயில் கருவறையில் கேட்டுக் கொண்டிருந்த மந்திர சப்தங்கள், மங்கள வாத்தியங்கள் கேட்கவில்லை. ராக்கால பூசையை முடித்துவிட்டுச் சித்தர்கள் போயிருக்கக் கூடும் என்றுணர்ந்தேன்.

பசி வயிற்றைக் கிள்ளியது.கொண்டு வந்திருந்த சாப்பாட்டு பொட்டலங்களைப் பார்த்தேன்.  அதை எடுத்து வாயில் போட்ட பொழுது, அது சாம்பார் சாதமாக இல்லை.  மாறாக "திருவாதிரை" அன்று சிவபெருமானுக்கு படைக்கும் "திருவாதிரைக் களியாக" மாறியிருந்தது.

எனக்கு குருக்கள் மீது வந்தது கோபம்.  நாளைக்கு பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

பின்பு அகஸ்தியரை வேண்டி நாடியைப் பிரித்தேன்.

"ஆந்தையும் - ஓநாய்களும் வந்ததைக் கண்டு பயந்து போயிருப்பாய்.  இவைகள் முன் ஜென்மத்தில் மனிதர்களாக இருந்து பாவத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டவை.  சிலர் கொலை செய்யப்பட்டனர்.  மறுபிறவியில் ஆந்தையாக - ஓநாய்களாக மாறி, ஆத்ம சாந்தி அடையாமல் அலைந்து கொண்டிருக்கின்ற துஷ்ட தேவதைகள்.  இவைகளுக்கு தேவர்கள், சித்தர்கள், ரிஷிகளைக் கண்டால் பிடிக்காது.  நாங்கள் இங்கு வருவதை அறிந்து அப்படி அலறியதற்கு இதுதான் காரணம்.  இறைவன் சந்நிதி அருகே அவைகள் வராது.யாமும் உனக்கு பாதுகாப்பு வளையம் போட்டுக் காப்பாற்றினோம்.

இது பற்றி அறியாத மனிதர்கள் பலர், இந்த துஷ்ட தேவதைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் யாரும் இரவில் இங்கு வந்து தங்குவதில்லை. இக்கோயிலில் ஆகம விதிப்படி சாந்தி பண்ண வேண்டும்.  அதுவும் செய்யவில்லை.துஷ்ட சக்திகள் அப்படிச் செய்யாவண்ணம் கெடுக்கின்றன. ஆனால் சித்தர்கள் நாங்கள் சிவபெருமான் அனுமதி பெற்று, கருவறையில் புண்ணிய வாசனம் செய்து ஆராதிக்கின்றோம்.  நூற்றி இருபது வருடங்களுக்கு ஒருமுறை செய்யும் இந்த அபிஷேக ஆராதனையைச் சிவபெருமானும் ஏற்றுக் கொள்கிறார்.

நாளை இரவும் எங்களது ஆராதனை தொடரும்.  அப்பொழுது பெருமளவு தேவர்கள் இங்கு வருவர். அந்தக் காட்சியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அகத்தியன் மைந்தனாகிய உனக்கும் அப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கவே யாம் உன்னை இங்கு வரச் சொன்னோம். ஆனால் நீயோ என்னை நிந்திக்கிறாய்.  என்ன ஞாயம்?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

நான் மௌனமானேன்.

பின்பு அகஸ்தியரே தொடர்ந்தார்.

"நாளைக்கு இக்கோயிலின் நடுவழியில் நிற்காதே.  வெளிச்சத்திற்கு எதுவும் கொண்டு வராதே.அந்த நந்திக்குப் பக்கத்தில் சிவலிங்கத்தை நோக்கி கண்ணை மூடிக்கொண்டு நள்ளிரவு வரை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இரு.  வேறு எதைப் பற்றியும் நினைக்காதே.

மனித வடிவைச் சேர்ந்தவர்களுக்கு இறைவன் தரிசனம் நேரடியாகக் கிட்டது.

கண்ணை மூடிக் கொண்டால் காட்சி தெரியும். தப்பித் தவறிக் கண்ணைத் திறந்துவிட்டால் உனக்கு தரிசனம் கிடைக்காது.  யாம் நுமக்கு முன்பு காட்டிய ராகவேந்திரர், அனுமன் தரிசனம் போல் இந்த தெய்வீக தரிசனம் தரக் காரணம், சென்ற ஜென்மத்தில் என்னையே சர்வகாலம் நினைத்து எனக்கொரு கோயிலைக் காட்டிக் கடைசி வரை பூசித்ததால் தான்.

பூமியில் இதுபோல் பல்வேறு தரிசனத்தை உனக்கு மட்டுமின்றி பலருக்கும் காட்டி வருகிறேன்.  அவர்கள் எல்லோரும் மானிட வடிவில் சித்தராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை நீயும் விரைவில் சந்திப்பாய்.  இம்மாதிரியான அனுபவங்களை மேலும் பெறுவாய்" என்று நிதானமாக அந்த மலைக் கோயிலைப் பற்றியும் எனக்கு எதனால் இந்தக் காட்ச்சியைத் தருகிறார் என்பதைப் பற்றியும் விளக்கினார் அகஸ்தியர்.

மறுநாள் காலையில் --

நான் மலையிலிருந்து கீழே இறங்காமல் அங்கேயே காத்துக் கிடந்தேன்.  சாதாரணமாகக் காலையில் இறங்கி வரும் என்னை நோக்கி காத்திருந்த குருக்களும் இன்னும் சிலரும், என்னை காணாமல் பதறி அடித்துக் கொண்டு மலைக் கோயிலுக்கு ஏறி வந்தனர்.

அசந்து தூங்கி இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு சிலர், "ஏதாவது ஒன்னு ஆகியிருக்கும்" என்ற நப்பாசையில் ஓரிருவர்.  நேற்று ராத்திரி என்ன நடந்தது என்று என்னிடம் நேரிடையாக கேட்கத் துடித்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்து வந்தனர்.

கோவிலின் வாசற்கதவு பக்கம் அமைதியாக உட்கார்ந்து த்யானம் செய்து கொண்டிருந்த என்னைத் தொந்தரவு செய்யாமல் பக்கத்தில் சுற்றி நின்றனர்.  தியானத்தை முடித்த பின்னர் எல்லோரும் என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டனர்.

அவர்களிடம் என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாகக் கூற விரும்பவில்லை.

நான் உயிருடன் இருப்பது கண்டு நொந்து போனவர் "நேத்து ஒரே ஓநாய்ச் சப்தம் கேட்டது.  அது ஏதாவது உங்களைத் தொந்தரவு பண்ணி கை காலைக் கடிச்சுப் போட்டதோன்னு பயம்.  ராத்திரிப் பூரா தூக்கமில்லை.  மலைக்கும் வர முடியாதே.  அதனால் தான் வேகமாக குருக்களை எழுப்பி ஓடியாந்தேன்" என்றார்.

இதைக்கேட்டு " ஆமாம்! ஆமாம்! நாங்களும் ரொம்பத்தான் பயந்து போயிட்டோம்" என்று துதிபாடினார்கள் சிலர்.

அவர்களது பேச்சில் ஒரு உண்மை மட்டும் தெரிந்தது.  அதாவது ராத்திரி மலைக் கோயிலில் தங்கினால், அவர்களுக்கு ஏதாவது ஒரு பெரிய தண்டனையை பகவன் கொடுத்திருக்க வேண்டும்.  அப்படிக் கொடுக்கவில்லை என்றால் அது தெய்வ சக்தி குறைந்து விட்டதாக எண்ணிக் கொள்வார்கள்.  இதனால் அந்த தெய்வத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் போய் விடும்.

எனக்கு அப்படிப்பட்ட தண்டனை கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு ஓடி வந்த சிலர், என்னைக் கண்டு வெறுப்படைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டதையும் பார்த்தேன்.

குருக்களை அழைத்து "கருவறையில் ஏதேனும் மாற்றமிருக்கிறதா" என்று பார்க்கும்படி கேட்டேன்.

அவர் பதிலொன்றும் சொல்லாமல் விறு விறு என்று கோயில் கதவைத் திறந்தார்.  சுற்றும் முற்றும் பார்த்தவர் சட்டென்று வெளியே வந்தார்.

"சுற்றிலும் யாரோ தண்ணீர் விட்டுத் தெளித்தமாதிரி இருக்கிறது.  அப்புறம் சுவாமி மீது நாகலிங்கப் பூ இருக்கிறது" என்றார்.

'வேறு ஏதாவது தெரிந்ததா?"

"இல்லை.  எனக்கு இதுவே ஆச்சரியமாக இருக்கிறது.  ராத்திரி நான் கோயிலை மூடிண்டு திரும்பறப்போ சுவாமிக்கு பவளமல்லி மாலையும், வில்வ இலையும் தான் போட்டிருந்தேன்.  இப்போ அதன் மேல் நாகலிங்கப் பூ வைத்திருக்கிறது ஆச்சரியமா இருக்கு"

"ம்ம்"

"அதுமட்டுமில்லை, நேத்திக்கு கருவறையிலே, யாரோ புகுந்து நன்னா தண்ணீர் விட்டுச் சுத்தமா அலம்பிவிட்ட மாதிரி இருக்கு.  எனக்கு ஒண்ணுமே புரியல்ல" என்றார் குருக்கள்.

அவரின் சந்தேகத்தை அப்புறம் தீர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு " அது சரி. நேத்திக்கு எனக்குச் சாப்பிட என்ன கொடுத்தீர்" என்றேன்.

"சாம்பார் சாதம், தயிர் சாதம் - இரண்டு பொட்டலம்"

"திருவாதிரை அன்னிக்கு பண்ணுவாளே - அந்தக் "களி" பண்ணிக் கொடுத்தீரா?" என்றேன்.

"இல்லையே" என்று கையைப் பிசைந்தார்.

"பரவாயில்லை நான் ராத்திரிச் சாப்பிட்டது திருவாதிரைக் களி மாதிரி இருந்தது.  அதனால் கேட்டேன்." என்று சமாளித்தேன்.

"அப்புறம் என்ன செய்வதாக உத்தேசம்" என்று கேட்டார், குருக்கள்.

"கீழே போய் இறங்கிக் குளிச்சிட்டு நேராகக் காலையிலேயே இந்த சந்நிதானத்திலே நந்திக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பகல் பூரா த்யானம் செய்யப் போகிறேன்" என்றேன்.

அவர்களுக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.

ஆனாலும் குருக்கள் எதையோ நினைத்துக் கொண்டு "ஒ! இன்னிக்கு திருவாதிரை நட்ச்சத்திரம்.நேத்திக்கு ராதிரியிலிருந்தே வந்துவிட்டது.  அதற்காக ஜபம் பண்ணப் போறேளா" என்றார். இதில் ஒரு சூட்ச்சுமம் அடங்கியிருப்பது பின்னர்தான் தெரிய வந்தது.

சித்தனருள்.................. தொடரும்!

Thursday, 14 June 2012

சித்தன் அருள் - 76


பஞ்சாயத்து கூட்டி வெளியூர்காரனான என்னைக் குற்றவாளியாக்கி அவர்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் தந்திருக்கலாம்.  குறைந்த பட்சம் நூறு தடவை பொதுமக்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யச் சொல்லியிருக்கலாம்.  அங்கு அதுதான் குறைந்த பட்சத் தண்டனை.  அதிக பட்சமாக அந்த ஊர் நடுவிலுள்ள மரத்தில் கட்டிப் போட்டு, குடிக்க தண்ணீர் மட்டும் ஒரு வேலையாளை விட்டுக் கொடுக்க வைத்து இரண்டு நாட்கள் கழித்து, கட்டை அவிழ்த்து விடுவார்கள்.  இதே தவற்றை உள்ளூர்க்காரர்கள் யாராவது செய்திருந்தால் மேற்கூறிய தண்டனையைக் கொடுத்து விட்டு பின்னர் ஊரைவிட்டு ஒரு ஆண்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.  இப்படி ஊரை விட்டு ஓராண்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ன காரணமாக இருந்தாலும் ஊருக்குள்  நுழையவே முடியாது.  நுழையவே கூடாது.  அவர்கள் திருமணமாகி இருந்தாலும் அல்லது அவர்களுக்கு வேறு சொத்து நிலம் இருந்தாலும், குடும்பம் இருந்தாலும் அந்த ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை தான்.  இது எனக்குப் பின்னர் தான் தெரிந்தது.

ஒரு வேளை இந்தச் செய்தியை நான் முன்கூட்டியே அறிந்திருந்தால் நிச்சயம் அந்தப் பக்கம் தப்பித் தவறிக் கூட எட்டிப் பார்த்திருக்கவே மாட்டேன்.  என்னைப் பொறுத்த வரையில் அந்த மலையில் நள்ளிரவில் எனக்குக் கிடைத்த சித்தர்கள் வேதகோஷத்தை விட அந்த கிராமத்துப் பஞ்சாயத்துத் தண்டனை சட்டம், இருக்கிற சந்தோஷத்தை அடியோடு மாற்றி முகத்தில் மரண பயத்தை உண்டாக்கியது என்னவோ உண்மைதான்.

யார் செய்த புண்ணியமோ நல்லவேளை எந்தவித அவமரியாதையும் இல்லாமல் தப்பித்து விட்டேன்.  இதெல்லாம் எண்ணும் பொழுது எனக்கு இந்த அகஸ்தியர் தொடர்பு தேவையா? என்ற வெறுப்புணர்ச்சி தான் அடிக்கடி மேலோங்கும்.

தக்க சமயத்தில் ஏதோ சொல்லி எல்லோரையும் திகைக்க வைத்து என்னை  இருண்ட சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தாலும், சில சமயம் ஏற்படுகிற தாமதங்கள், சூழ்நிலைகள், மாட்டிக்கொண்டு விழிக்கும் பொழுது, அகஸ்தியரை நான் மனதிற்குள் திட்டி இயல்பான தைரியத்தை இழந்து இது எனக்கு தேவைதானா? என்ற எண்ணங்கள் ஏற்படும்.

"கர்ணம்" மட்டும் அப்பொழுது எனக்கு ஆதரவு தராமல் உண்மையைச் சொல்லித் தன்னை அவமானம் படுத்தி விட்டானே என்று நினைத்துக் கோபத்தில் தண்டனையை கொடுத்திருந்தால் என் கதி அதோ கதிதான்.

இல்லை, சொன்னபடி எட்டு மணி நேரத்தில் கரணத்தின் தம்பி அங்கு வராமல் இருந்தாலும் என்பாடு கேவலம்தான், இல்லை வேறுமாதிரியும் நினைக்கலாம்.  அதாவது கரணத்தின் தம்பியோடு நானும் சேர்ந்தது காரணத்தைப் பழிவாங்க ஏற்கனவே போட்ட திட்டம் தான் இது என்றெண்ணி இதற்குச் சில உள்ளூர்க்காரர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சினிமா பாணியில் என்னை சந்தேகத்திற்க்குரியவனாக்கி வாயில் வந்ததை தண்டனையாகத் தந்து சுக்கு நூறாக்கி கை அல்லது காலை முடக்கி அந்தக் கிராமத்தை விட்டே துரத்தியிருக்கலாம்.

இத்தனையும் செய்துவிட்டு அதே அகஸ்தியர் ஜீவநாடியை ஊர்மக்கள் முன்னிலையில் தீயில் இட்டு பொசுக்கியும் இருக்கலாம்.  அதோடு மட்டுமின்றி இந்த மலைக் கோவிலுக்கு யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு வந்தேன்.  அங்கு எனக்கு என்ன நடந்தாலும் நிச்சயம் வெளியே தெரியவே தெரியாது.  சொல்லவும் மாட்டார்கள்.  கண்டுபிடிக்கவும் முடியாது.  அன்றே என் வாழ்க்கைக்கு ஓர் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டிருக்கும்.

எப்படியோ, இத்தனை தடங்கல்களையும் தாண்டி வெற்றி பெற வைத்துவிட்ட அகஸ்தியரை நன்றியோடு வணங்குவதா? இல்லை கோபத்தில் அவரைத் திட்டி "போதுமடா சாமி" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு அந்த ஜீவநாடிக் கட்டை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவதா? என்று தெரியாமல், கர்ணம் என் கையைப் பிடித்துச் சொன்னதையும் முழுக்கவனத்தோடு கேட்டு ஆனந்தப் படாமல் பித்துப் பிடித்த நிலையில் தான் அப்போது இருந்தேன் என்பது மட்டும் உண்மை.

"அதான் கர்ணம் அய்யா சொல்லிட்டாங்க இல்ல, அப்புறம் என்ன அசுவாசமாகக் காப்பியை குடிச்சுட்டு அந்தத் திண்ணையிலே உட்காருங்க தம்பி.  ஊர்லேர்ந்து வந்த தம்பிக்கு உங்களைப் பத்தித் தெரியாது.  அவரை உட்கார வெச்சுட்டு கர்ணம் அய்யா வருவாரு.  அதுவரைக்கும் உட்காருங்க தம்பி" என்று அந்த கிராமத்திலுள்ளவர்கள் ரொம்ப மரியாதையாக என்கிட்டே சொன்னார்கள்.

இதற்குள் யாரோ ஒருவர் அந்தத் திண்ணையைப் பெருக்கி, ஈரத்துணியைக் கொண்டு துடைத்து ஒரு பவானி ஜமுக்காளத்தை விரித்தார்.  என் கையிலிருந்த அகஸ்தியர் நாடி உள்ளடக்கிய அந்தப் பெட்டியைப் பயபக்தியுடன் வாங்கி, இடுப்பில் துண்டைக்கட்டிக் கொண்டு மரியாதையுடன் அந்த திண்ணையின் மீது விரித்த ஜமுக்காளத்தில் வைத்து  பின்னர் எண் ஜாணும் கீழே படும்படியாக வணங்கி, நாடியைக் கண்ணில் தொட்டு ஒற்றிக்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து அந்த கிராமத்து ஜனங்கள் அத்தனை பேர்களும் இதே மாதிரியாகச் செய்தனர்.  காலையில் கிடந்த என் கதி என்ன! இப்பொழுது கிடைக்கும் மரியாதை என்ன? என்று இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.  ஒ... இதுதான் வாழ்க்கையோ? என்று மனம் சிட்டாய்ப் பறந்தது.

ஊரிலிருந்து வந்த கர்ணத்தின் தம்பி, இந்தியா பாகிஸ்த்தான் போரில் காலில் குண்டடிப்பட்டு, ஐந்து நாட்கள் அனாதையாக ஸ்ரீநகர் மலைப் பிரதேசத்தில் தன் நினைவின்றிக் கிடந்திருக்கிறார்.  பிறகு மலை வாழ் மக்கள் சிலர் அவரைக் கண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க, குண்டடிப்பட்டு கிடந்த ஒரு காலை வெட்டி எடுக்குப்படி ஆகிவிட்டது.

இந்தச் செய்தியை ஊருக்குச் சொன்னால் குடும்பத்தார் பதறி விடுவார்கள்.  கட்டின மனைவியும் தற்கொலை செய்துவிடுவாள் என்று பயந்து பல வருஷங்கள் யாரு கிட்டேயும் இந்தத் தகவலை அவர் தெரிவிக்கவே இல்லை.  இருந்தாலும் அவருடைய சக நண்பர் ஒருவருக்கு மிகவும் காலம் கடந்து இந்தச் செய்தி தெரிந்து, அவருடைய அண்ணனான கர்ணத்திற்கு மேலோட்டமாக ஒரு கார்டு எழுதி போட்டிருக்கிறார்.

தம்பிக்கு கால் போய் விட்டது.  ராணுவத்திலிருந்து அவனை விலக்கி விட்டார்கள்.  ஆனாலும் ஊருக்கு வராமல் ஸ்ரீநகர் பகுதியிலே சுற்றிக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கு கிராமத்திற்குத் திரும்பும் உத்தேசம் இல்லை என்ற செய்தியப் போஸ்ட் கார்ட் மூலம் அறிந்த அந்த கர்ணம், இதனையே துருப்புக் கார்டாகப் பயன்படுத்தி தம்பி பெண்டாட்டியை ஏமாற்றித் தம்பி போரில் செத்துவிட்டான் என்று சொல்லி அவளையும் தன் வலைக்குள் இழுத்து அவனுக்குச் சொந்தமான நில புலன் தோட்டம் ஆகியவற்றையும் திட்டமிட்டுப் பிடுங்கி வைத்திருக்கிறார் என்ற விவரம் பரவலாகப் பேசப்பட்டது.

இப்பொழுது அவரிடம் பயம் இருந்தது.  பதட்டம் இருந்தது.  பணிவும் மரியாதையும் என் மீது அளவுக்கு அதிகமாகவே காணப்பட்டது.  ஏதாவது விபரீதம் நடந்துவிட்டால் தன் தம்பி, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து விடுவான் என்ற மரண ஓலமும் அவர் நெஞ்சிற்குள் ஊடுருவி இருப்பதை என்னால் காண முடிந்தது.

எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்தேன்.

"இன்னவன் தம்பி இமயத்தின் ஓரத்தில் ஓர் விதவைப் பெண்ணை ஏற்கனவே மணந்தவன்.  தேநீர்க் கடை ஒன்றையும் வரும்படிக்காக நடத்தி வருகிறான்.  அதிக நாள் இங்கு தங்குவான் இல்லை.  இவன் இங்கு ஏகியதே கைபிடித்த முதல் மனைவிக்கு கருமம் செய்யவே.  அவளோ இன்னுமோர் இரு நாளே உயிர் வாழ்வாள்.  முன் ஜென்ம பாசமே இவனை இமயத்திலிருந்து ஈர்த்தது இங்கு" என்று சொன்னவர்...

"அன்னவன் இங்கு வந்த நோக்கமே முதல் மனைவியை அழைத்துச் செல்லலாம் என்ற நோக்கம்.  ஆயின் விதிமகள் செயலால் அந்த எண்ணம் ஈடேராது.  அன்னவளைக் கரைஎற்றிவிட்டு அத்தனை சொத்துக்களையும் இவன் இந்த மலை கோவிலுக்கு எழுதி வைப்பான்.  அதனை ஏற்க!  பழுதொன்றும் வாராது உன் உயிர்க்கு.  காரணம் முன் ஜென்மத்தில் பல்லோர் உயிரை ஓடுகின்ற நீரிலிருந்து காப்பாற்றினாய்" என்று முடித்தார் அகஸ்தியர்.

இதைக் கேட்டதும் அப்படியே குலுங்கிக் குலுங்கி அழுதவர் அப்படியே அகஸ்தியர் நாடிக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார்.  தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறாரா இல்லை தம்பி தன்னைக் கொல்லாமல் விட்டு விடுவான் என்று அகஸ்தியர் சொன்னதைக் கேட்ட ஆனந்தத்தில் நீந்துகிறாரா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

எனக்கென்னவோ இப்படிப்பட்ட கர்ணத்திடமிருந்து நான் தப்பித்தேனே என்ற சந்தோஷம் தான் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.  ஏனெனில் இன்னும் இரண்டு நாட்கள் அந்த மலைக் கோயிலில் இரவில் தங்கவேண்டுமே.  திடீரென்று புத்திமாறி, ஏடாகூடமாக ஏதாவது கர்ணம் சொல்லிவிட்டால் என்ற பயமும் அவ்வப்போது வரத்தான் செய்தது.

மாலை நேரம் முடிய இன்னும் சிறிது நாழிகை இருந்தது.

கர்ணமும் அவரது தம்பியும் "நோயாளியைப்" பார்க்க பக்கத்து ஊருக்கு வில்வண்டியில் சென்று விட்டார்கள்.

போகும் போது "எனக்கு என்ன என்ன வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டுமோ அதை எல்லாம் கோயில் குருக்கள் செய்து தருவார்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எனக்கு உண்மையில் அந்த கோயில் குருக்கள் செய்வாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் இருந்தது.  இரண்டு பழமும் குடிக்கத் தண்ணீரும் இருந்தால் போதும், இன்றிரவைச் சமாளித்து விடலாம் என்று அதற்கு மட்டும் ஏற்ப்பாடு செய்யச் சொன்னேன்.

இருட்டு நெருங்கிய பொழுது அந்தக் கோயில் குருக்கள் இரண்டு பொட்டலங்களையும் ஒரு கூஜா நிறையத் தண்ணீர், ஒரு அரிக்கேன் லைட் சகிதம் என்னிடம் வந்தார்.

"இதில் ஒன்று சாம்பார் சாதம்.  மற்றொன்று தயிர் சாதம்.  குடிக்கிறதுக்கு இந்த கூஜா நிறைய ஜலம் இருக்கு. கூஜாகுள்ளேயும் டம்ளர் இருக்கு. .  கோயில்ல விஷ ஜந்து நடமாட்டம் அதிகம் பார்த்துப் போங்கோ" என்று பவ்யமாகச் சொன்னார்.

"சாப்பாடு வேண்டாம்.  குடிக்க தண்ணீர் மட்டும் இருந்தால் போதும்" என்றேன்.

"என் மீது உங்களுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கு.  அதான் நான் ஸ்ரமப்பட்டுப் பண்ணிக் கொண்டு வந்ததை வேண்டாம்னு சொல்றேள்.  எனக்குத் தெரிஞ்சு ராத்திரி மலைக்குப் போனவா யாரும் மறுநாள் உயிரோடு வந்ததாகக் கேள்விப்பட்டதே இல்லை.  நீங்க ஊருக்குப் புதுசு.  இந்த விஷயம் தெரிஞ்சிருக்க ஞாயம் இல்லை.  அதான் தடுத்து நிறுத்தப் பார்த்தேன்.  முடியல்ல.  பகவான் புண்ணியத்திலே நீங்களும் உயிர் தப்பிட்டேல்.  எதுக்கு சொல்றேன்னா அப்படி ஏதாவது எசகு பிசகுன்னு நடந்திருந்ததுன்ன கோயிலுக்கு தோஷம் வந்திடும்.  ஏற்கனவே நிறையப் பேர் அப்படி உயிர் விட்டதுக்கு இன்னிக்கு வரை எந்த சாந்தி ஹோமமும் பண்ணவில்லை.  இதெல்லாம் நெனச்சுண்டு தான் சொன்னேன்" என்று ஒரு குறையைக் கொட்டி அழுதார் அந்த குருக்கள்.

"நேத்திக்கு தப்பிச்சிட்டேன், இன்னிக்கு" என்றேன் கிண்டலாக.

"சத்தியமா ஒன்று ஆகாது.  சாப்பாடு எடுத்துண்டு போங்கோ.  அரிக்கேன் லைட்டையும் பத்திரமா வெச்சுக்கோங்கோ.  ராத்திரி ஏதாவது உதவி தேவைன்ன அங்கிருந்து இந்த அரிக்கேன் லைட்டை இப்படியும் அப்படியுமா ஆட்டுங்கோ".

"அரிக்கேன் லைட்டை ஆட்டினா?"

"நாங்க ஊர் ஜனங்க சகிதம் உங்களுக்கு தேவையான உதவியைச் செய்ய ஓடி வருவோம்"

அதெப்படி முடியும்.  யார் மலைக்குப் போனாலும், ராத்திரி தங்கக் கூடாது.  அப்படி மீறித் தங்கினா உயிர் போய்விடும்னு நீங்கதானே சொன்னீர்கள்.  நானே உதவி கேட்டு லைட்டை ஆட்டினா யார் துணிஞ்சு மலைக்கு மேலே வருவா?"

"பாதி தூரம் வருவோம்.  நீங்களும் இறங்கி வரணும்.  ஏதாவது உதவி கேட்டக் கொடுப்போம்.  நீங்க அதை எடுத்துண்டு கோயிலுக்குப் போகலாம்.  நாங்க மேல வரமாட்டோம்.  அப்படியே கிராமத்துக்குத் திரும்பிவிடுவோம்" என்று சாமர்த்தியமாக விளக்கம் அளித்தார் அந்தக் கோவில் குருக்கள்.

"அது சரி.  இந்த மாதிரி ராத்திரி தங்கி அவா அரிக்கேன் லைட்டால் உதவி கேட்டு நீங்களோ அல்லது உங்க கிராமத்தைச் சேர்ந்தவர்களோ யாராவது மலைக்கு வந்து உதவி செய்திருக்கீர்களா?"

"இதுவரை அப்படி நடந்ததே இல்லை.  கர்ணம் அய்யா தான் இப்படியொரு யோசனையைச் சொல்லி, உங்களை நல்ல கவனிக்கச் சொல்லியிருக்காங்க.  அதத் தான் ஒங்க கிட்டே சொன்னேன்" என்றார் தீர்க்கமாக.

"சரி" என்று அவரை அனுப்பிவிட்டு கூஜா நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டேன்.  மற்றொரு கையில் அகஸ்தியர் நாடி, சாப்பாட்டு பொட்டலம், கூடவே அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு அந்த மலைக்  கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

ஏதோ எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி "டென்சிங்" போவது போல் சென்ற என்னை அந்த கிராம மக்கள் கை கூப்பி அனுப்பி வைத்தனர்.  அவர்கள் அப்போது என்னைப் பார்த்த பார்வைகளில் ஏகப்பட்ட அர்த்தங்கள் இருந்தன.

"நேத்திக்கு தப்பிச்சிட்டான்.  இன்னிக்குச் சரியா மாட்டிப்பான் பாரு" என்று சொல்வது போல் இருந்தது.

"இந்தக் கர்ணத்திற்கு விவரமே போதாதுங்க.  எப்படி இருந்த கிராமத்துக் கட்டுப் பாட்டை அவரே மாத்திட்டாருங்களே..... இதுகெல்லாம் அந்த தெய்வம் சும்மா விடாதுங்க.  பொறுத்துப் பாருங்க.  இன்னிக்கு என்ன நடக்கப் போகுதுங்கன்னு பொழுது விடிஞ்சா தெரிஞ்சு போகுதுங்க" என்று மெல்லிய குரலில் யாரோ சொன்னது ஒலிக்கவும் செய்தது.

தைரியத்தை முன்னால் நிறுத்தி, அகத்தியர் துணையோட மலைக் கோயிலை அடைத்த போது எங்கிருந்தோ ஓநாய் ஒன்று ஊளையிட்டது.  ஆந்தையும் அலறியது.

சித்தனருள்................ தொடரும்!

Thursday, 7 June 2012

சித்தன் அருள் - 75


சில சிவாலயங்களில் அர்த்த ஜாம பூசை என்பது மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கும்.  சிவராத்திரி அன்று ஆறுகால பூசை என்பது நிச்சயம் உண்டு.  பெரும்பாலும் சாதாரண நாட்களில் நள்ளிரவு நேரத்தில் சிவனுக்கு பூசை செய்வதில்லை.  ஆனால் இதையெல்லாம் தாண்டி அதிக ஆள் நடமாட்டம் இல்லாத ஆறுகால பூசையும் செய்யமுடியாத அந்தக் கோயிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒரு முறை அகஸ்தியர் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள் அர்ச்சனை அபிஷேகம் செய்வதும், அதை மானசீகமாகக் கோயிலின் வெளியிலிருந்து கேட்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது என்பதை ஜீரணிக்க என்னால் முடியவில்லை.

இது ஒரு சித்து விளையாட்டு என்றுதான் முதலில் எண்ணினேன்.  அதன் உண்மையான சூட்ச்சுமத்தை அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அன்றைக்கு மாத்திரம் யாராவது ஒருவர் என்னுடன் அங்கு தங்கியிருந்தால் இந்த சந்தோஷத்தை விடிய விடியப் பங்கு போட்டிருப்பேன்.

ஆனால் யாரும் எனக்குத் துணையில்லையே என்பதால் அந்த சந்தோஷமான திகில் அனுபவம் மனதில் சோகத்தையும் ஏக்கத்தையும் கொடுத்தது.

இந்த அற்புதமான சம்பவத்திற்குப் பின் எனக்கு தூக்கமே வரவில்லை.  எப்பொழுது பொழுது விடியும், கீழே இறங்கி யாரிடத்திலேயாவது இதைப் பற்றிப் பெசமாட்டோமா என்ற ஆவல் உந்த, கூண்டில் அடைபட்ட புலிபோல் அந்தக் கோயிலையே நள்ளிரவில் வலம் வந்து கொண்டிருந்தேன்.

விடியற்காலை ஐந்து மணி அளவில் மிதமான குளிர்ந்த காற்று வீசியது.  அந்தக் காற்றில் புஷ்பங்களின் அன்றலர்ந்த மனமும் நாசிக்கு அபூர்வமாகச் சில மருந்துச் செடிகளின் வாசனையும் உடல் சோர்வை மெல்ல அகற்றியது.

சூரியன் நன்றாக உதிக்கும் வரை அந்த இயற்கையின் செழிப்பில் தன்னை மறந்து தூங்கினேன்.  முகத்தில் சூரியன் பட்டது.

வாரிச் சுருட்டிக் கொண்டு சிவபெருமானை வணங்கி விட்டு மெதுவாக அந்த மலையிலிருந்து கீழே இறங்கினேன்.  அப்படியே என் கண்கள் கீழே பார்த்த பொழுது, சுமார் இருபது அல்லது முப்பது பேர்கள் மலையடிவாரத்தில் கூட்டமாக நின்று கொண்டு என்னை நோக்கிக் கையைக் காண்பித்து தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"சரிதான்! சரியாக இவர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டோம்" என்ற பயம் மனதில் எழுந்தது.

இவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம். வேறொன்றும் பொய் சொல்லவும் முடியாதே.  "அகஸ்தியர்" என்றால் இவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ? அதுவுமின்றி, கிராமத்துக் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி தண்டனை தரலாம்.  அது எந்த தண்டனையோ?  என்று பலவாறு சிந்தித்துப் பின்னர் "எது நடந்தாலும் என்ன? வருவதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்!

மலையடிவாரத்தில் "எப்படி திரும்பி வந்தான்?" என்று ஒருவர்கொருவர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டார்கள்.

சிலரது பார்வையில் என் மீது வெறுப்பு இருப்பது தெரிந்தது.  பலர் எனக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டுத் தான் போகவேண்டும் என்ற ஆத்திரம் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டேன்.  இன்னும் பலருக்கு மலையில் ராத்திரி என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதுபோல் தோன்றியது.

"ஏய்! தம்பி, இங்கே வாங்க"

ஒரு வயது முதிர்ந்த மீசைக்காரர் என்னைஅதிகாரத்தோடு தன் பக்கம் அழைத்தார்.  மௌனமாக அவரிடம் போனேன்.

"வணக்கம் சொல்லுங்க.  அவருதான் இந்த கிராமத்துக் கர்ணம்" என்று கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் எனக்கு உத்தரவிட்டார்.

கையோடு கொண்டு வந்த பையைக் கீழே வைத்துவிட்டு மரியாதைகாகக் கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

என்னைப் பற்றி அதிகாரத் தோரணையில் விசாரித்தார்.  அவரது இடது கை அடிக்கடி மீசையைத் தடவிக் கொண்டிருந்தது.  அதோடு அவரிடம் நான் சொன்னதை அவர் லேசில் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

"ஐம்பது வருஷமா இந்தக் கோயில்ல யாரும் ராத்திரி நேரம் தங்கறதே இல்லை.  அப்படியே தெரியாத்தனமாக இந்த மலையிலே தங்கினவங்க மறுநாள் செத்த பிணமாகத்தான் ஆகியிருக்காங்க.  இதுல நீ ஒருத்தன் தான் இப்போ உயிரோடு வந்திருக்கே" என்றார் கர்ணம்.

"எல்லாம் அகஸ்தியர் அருள்!" என்றேன்.

இது அவருக்கு துளியும் பிடிக்கவில்லை. கோபத்தோடு என்னை பார்த்தார்.

"சும்மா கதைவிடாதே.  நான் இதேல்லாம் துளியும் நம்பரவனில்லை.  ஏன் இந்த கிராமத்து ஜனங்களும் நம்ப மாட்டாங்க.  உன்னைப் பார்த்த சந்தேகமா இருக்கு.  கோயிலில் ஏதாவது நகை நட்டுக் கிடைக்கும் திருடிப் போகலாமுன்னு வந்திருப்பே" என்றார் கர்ண கடூரமாக.

"சத்தியமாக அப்படி இல்லை.  வேணும்னா என்னை நீங்க எல்லோரும் இங்கேயே சோதித்துப் பார்க்கலாம்" என்று சொன்னேன்.  என்றாலும் நிலைமை இப்படி விபரீதமாகப் போகும் என நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.  போகிற போக்கைப் பார்த்தால், அவசரத்திலோ அல்லது ஆத்திரத்திலோ அங்குள்ள மரத்தில்கட்டி வைத்து தொலை உரித்தாலும் உரிக்கலாம் என்றுதான் தோன்றியது.

குறிப்பாக நேற்றைக்கு என்னை வழிமறித்த கோயில் குருக்களுடைய பார்வை அவ்வளவு கடூரமாக இருந்தது.  போதாக் குறைக்கு அந்தக் கர்ணத்திடம் ரகசியமாக அடிக்கடி காதில் ஏதேதோ ஊதிக் கொண்டிருந்தார்.

"ஊர்ப்பஞ்சயத்தைக் கூட்டி அப்புறம் இந்த வெளியூர் ஆளுக்கு தீர்ப்பு சொல்லலாம்" என்றனர் சிலர்.

"அதெல்லாம் அப்புறம்.  முதல்ல இவன் பையை எல்லாம் சோதனை போட்டுப் பாருங்க.  அதற்கப்புறம் முடிவு செய்யலாம்" என்றார் அவர்.

"பையனைப் பார்த்தா கோயில்ல திருட வந்த மாதிரி தெரியல்ல.  தெரியாத்தனமாக வந்திட்டான்.  இரண்டு தட்டு தட்டி புத்திமதி சொல்லி அனுப்புங்க" என்றனர் பலர்.

"கர்ணம், தலையாரி அய்யா அவசப்பட்டு எந்த முடிவும் செய்திடாதீங்க.  பையன் மலையிலே தங்கி உயிரோடு வந்ததே, தெய்வத்தின் அருள்.  சட்டென்று தவறா மதிப்புப் போட்டு தெய்வக்குற்றத்திற்கு ஆளாக வேண்டாம்.  மலையிலே என்ன நடந்துச்சுன்னு மொதல்ல விலாவாரியாக விசாரியுங்க" என்று பாதிப்பேர் ஒரே சமயத்தில் குரல் கொடுத்தனர்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தாங்கள் கருத்தைத் தலையாரி, கர்ணத்திடம் புட்டுப்புட்டு வைத்தனர்.

கால் மணி நேரம் கழிந்தது.

"என்னப்பா வெளியூர்ப் பிள்ளை.  அவங்கதான் கேட்கிறாங்கல்ல.  மலையிலே என்னதான் நடந்துச்சு சொல்லு" என்று உத்தரவிட்டார்.

நான் என்ன நடந்தது என்பதை ஒன்று விடாமல் சொன்னேன்.  இப்படிச் சொல்லும் முன்பு அகஸ்தியரிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டேன்.  ஏனெனில் இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே எனக்கு உத்திர விட்டிருந்ததால் அவரிடம் மனிப்புக் கேட்டபிறகு சொல்ல வேண்டியதாயிற்று.

சொன்னதை கேட்டுக் கொண்டார்களே தவிர, பெரும்பாலோர் இதை முழுமையாக நம்பவில்லை. எப்படி அவர்களை நம்ப வைப்பது என்று தெரியாமல் திகைத்த நான், தலையாரி, கர்ணம் ஆகியோரிடம் அகஸ்தியர் நாடியைப் பார்த்து விட்டுச் சொல்வதாகவும் ஆனால் அதற்கு முன்பு நான் பல் தேய்த்து, குளித்து முறைப்படி பூசை செய்ய வேண்டும்.  அதற்கு ஏற்பாடு செய்து தந்தால் அவர்கள் அத்தனை பேர்க்கும் அகஸ்தியர் அருளால் எனக்குக் கிடைத்த அதே அனுபவத்தை நான் பெற்றுத் தருவேன் என்று உறுதி கொடுத்தேன்.

அரை மணி நேரத்திற்குப் பின் அந்த கிராமத்து மக்கள் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், என்னைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்தத் தலையாரியே எனக்கு அவர் வீட்டில் தங்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

ஒரு மணி நேரம் கழிந்தது.

காலையில் வந்திருந்த அந்தக் கூட்டம் இப்படி அப்படி நகராமல் தலையாரி, கர்ணம் வீடு வாசலில் அப்படியே தரையில் துண்டு போட்டு ஏதோ ஒரு அரசியல்வாதியின் மீட்டிங் கேட்பது போல் உட்கார்ந்திருந்தது.

கொல்லைப்புறம் இருக்கும் வயல்காட்டு வழியாக நான் தப்பிச் சென்றாலும் சென்று விடுவேன் என்ற சந்தேகம் காரணமாக அங்கும் நான்கு பேர்கள் காவல் இருந்தார்கள்.

ஏதாவது பொய் சொன்னால் அந்தக் கிராமத்துப் பஞ்சாயத்தில் ஏதாவது தண்டனை கிடைத்திருக்கும்.  அவர்களிடமிருந்து லேசில் தப்ப முடியாது.  நல்லவேளை "கர்ணம்" மனம் இறங்கினார்.

பிரார்த்தனை முடிந்ததும் அகஸ்தியர் நாடியை எடுத்தேன்.

"என்னைப் பற்றி அகஸ்தியர் என்ன சொல்கிறார், முதல்ல சொல்லு.  இது உண்மையாக இருந்தால் போதும்.  மற்றது எதுவும் படிக்க வேண்டாம்" என்றார் அந்த கர்ணம்.

"அய்யா, படிக்கிறேன்" என்று படிக்க ஆரம்பித்தேன்.

"உங்கள் பெயர் அவினாசிலிங்கம்.  கூடப் பிறந்தவர் ஒரு சகோதரன்.  இளம் வயதில் நல்ல சொத்து சுகம் உள்ள குடும்பம்.  உங்கள் தந்தைக்கு இரண்டு மனைவிகள்.  இதனால் குடும்பம் பின்னால் உடைந்தது.  உங்களது தம்பி, திருமணம் செய்து கொண்டு ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார்.  பத்தாண்டுகளாக அவர் திரும்பி வரவே இல்லை.

தம்பி ஊருக்குத் திரும்பி வராததர்க்குக் காரணம் அவன் ஸ்ரீநகரில் நடந்த பாகிஸ்த்தான் யுத்தத்தில் மாண்டு விட்டதாகச் சொல்லி, அவனது சொத்தையும் அபகரித்துக் கொண்டீர்கள்.  அதோடு மட்டுமின்றி, அவனது மனைவியையும் வலுக்கட்டாயமாக உங்களுடைய காமக் கிழத்தியாகவும் மாற்றிக் கொண்டீர்கள்.  இதனால் உங்களது முதல் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.  இது உண்மை தானே?" என்று மளமளவென்று அகஸ்தியர் ஜீவ நாடி மூலம் சொன்னதை நிதானமாக அழுத்தம் திருத்தமாகப் படித்தேன்.

இந்தச் செய்தியை எதிர் பார்க்காத அந்தக் கர்ணம் வெலவெலத்துப் போனார்.  ஊர் ஜனங்களுக்கும் அந்த ரகசிய வாழ்க்கை ஏற்கனவே தெரிந்ததினால், அவர்களால் எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று.

சுற்றுப்புறச் சூழ்நிலையை ஒரு கண்ணோட்டம் விட்டு "அய்யா! மேற்கொண்டு படிக்கலாமா?" என்று கேட்டேன்.

மௌனமாக தலையை ஆட்டினார்.

"இறந்து போனதாகச் சொன்ன உங்கள் தம்பி இன்னும் எட்டு மணி நேரத்தில் ஊனத்தோடு இங்கு வரப்போகிறான்.  இனி எப்படிச் சமாளிக்கப் போகிறீர்?" என்று அகஸ்தியர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு நிறுத்திக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அந்த கிராமத்து மக்களிடம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.  திண்ணையில் கால் மேல் கால் போட்டு அலட்ச்சியமாக என்னை ஏளனமாக முதலில் பார்த்தவர், அகஸ்தியர் நாடியைப் படிக்கப் படிக்க முகம் வெளுத்து, உடலில் பதற்றம் ஏற்பட குற்றவாளி போல் ஆனவர், தன் தோளின் மேல் போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.  விருட்டென்று எழுந்து அங்குள்ள எல்லோரையும் பார்த்து சட்டென்று திண்ணையிலிருந்து கீழே இறங்கினார்.

இப்பொழுதுதான் எனக்கு உண்மையில் பயமேர்ப்பட்டது.  ஏதாவது இல்லாதது பொல்லாததைச் சொல்லி வசமாக மாட்டிக் கொண்டேனா? அகஸ்தியர் என்னைக் கை கழுவி விட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.  பிரார்த்தனை செய்து கொண்டேன்.

திண்ணையிலிருந்து கீழே இறங்கிய அந்தக் கர்ணம் கிராமத்து மக்களை நோக்கி ஒரு தடவை பார்த்து "அவசப்பட்டு நான் செய்த தவறுக்கு என் மனைவியைப் பறிகொடுத்து விட்டேன்.  எனது இரண்டாவது மனைவியும் பயங்கரமான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இப்பவோ அப்பவோ என்று சாகக் கிடக்கின்றாள்.  என் தம்பியைச் செத்து விட்டதாகச் சொல்லி, அவன் சொத்தை அபகரித்ததும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும்.  இதற்கெல்லாம் ஒன்று சேர்த்து நான் அணுஅணுவாக நொந்து கொண்டிருக்கிறேன்.  இந்தத் தம்பி நாடி மூலம் சொன்னதெல்லாம் உண்மை.  இப்போ என் தம்பி இந்த ஊருக்கு வரப்போகிறான்னு தம்பி சொல்லுது,  அது மட்டும் உண்மையாக இருந்தால் அகஸ்தியரை நம்புகிறேன்.  இந்த தம்பியையும் நம்புகிறேன்" என்றார் கர்ணம்.

ஊர் மக்களும் கர்ணம் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.

"அப்பாட தப்பித்தேன்!" என்று அப்போது நான் நினைத்து சந்தோஷப் பட்டாலும் மதியம் இரண்டு மணி வரை பதைபதைப்பாக இருந்தது.

அந்தக் கர்ணம் தன்னால் என்ன காரியம் எனக்குச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொடுத்தார்.

மதியம் மூன்று மணிக்கு ஒரு வில் வண்டியில் அவரது தம்பி வந்து இறங்கினார்.  ஊர் மக்களே அவரை வரவேற்க ஓடி வந்தனர்.

வண்டியிலிருந்து அவர் இறங்கச் ஸ்ரமப்பட்டார்.  நானும் ஆவலோடு வண்டி அருகே சென்று எட்டிப் பார்த்தேன்.

அவருக்கு ஒரு கால் இல்லை.  கால் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

பதறிப் போனார்கள் அவர்கள் அத்தனை பேர்களும்.  அவர்களோடு நானும் உண்மையில் நொந்து போனேன்.

அகஸ்தியரின் அருள்வாக்கு நல்லபடியாக நடக்கும் என்றாலும் இப்படியொரு சோகத்தைக் கர்ணத்திர்க்குக் கொடுத்திருக்க வேண்டாமே என்று தோன்றியது.

தம்பியைக் கட்டிப் பிடித்துத் தேம்பி தேம்பி அழுதுவிட்டுப் பின்னர் என்னை நோக்கி வந்த கர்ணம் "தம்பி நீங்க எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் இங்கே தங்கலாம்.  மலைக் கோயிலுக்குப் போகலாம்.  உங்களுக்கு துணையாக நானும் இந்த கிராமத்து மக்களும் இருப்போம்.  சரிதானா?" என்றார் என்கையைப் பிடித்துக் கொண்டு.

சித்தனருள்................. தொடரும்!