​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 31 January 2017

சித்தன் அருள் - 581 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு


உடலின் ஏற்ற, மாற்றங்கள் ஆன்மாவைப் பாதிப்பதில்லை. ஆனாலும் கூட, இந்த உலகிலே ஆன்மாவைப் பார்க்கின்றவர்கள் யாருமில்லை. உடலைப் பார்த்துதான் எடை போடுவார்கள், மதிப்பீடு தருவார்கள். அப்படி ஆன்மா உயர்வாகவும், உடல் பிறரால் மதிக்கப்படாமல் இருக்கப்பட வேண்டும் என்கிற நிலைக்கு ஒரு ஆன்மா தள்ளப்பட வேண்டுமென்றால் அதற்கு ஏற்றாற்போல் பாவ, புண்ணியங்கள் இருக்க வேண்டும். அஃதொப்ப சில மகான்களும், ஞானிகளும் விரும்பியே, பிறர் தன்னை மதிக்கக்கூடாது என்பதற்காக, அழகற்ற தேகத்தைப் பெறுவதும் உண்டு. அஷ்டாவக்ரர் அப்படித்தான். அஷ்ட வக்ரம் எனப்படும் எட்டு விதமான கோணல்களோடு கூடிய உடம்பைப் பெற்ற பிறவியெடுத்தார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனம் செய்தார்கள். அது குறித்து அவர் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆன்மா பயணம் செய்வதற்கு ஏதோ ஒரு உடல் என்ற அளவில் மட்டும்தான் அதை நினைத்தார். தேகம் அழகாக இருக்க வேண்டும் என்பதை விட ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதில்தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும். தேகத்தை விட ஆன்மா அழகாக இருப்பதே மனிதனுக்கு ஏற்புடையது.  ஆன்மாவிற்கு அழகு எது? என்றால் தர்மமும், சத்தியமும்தான். அதை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் போதும். இஃதொப்ப நிலையிலே இந்த தேகத்திற்கு ஏற்படக்கூடிய வயோதிகம், இளமை, அழகு அனைத்துமே தேகத்தோடு முடிந்து விடுகிறது. ஆன்மாவை அணுவளவும் பாதிப்பதில்லை.

Monday, 30 January 2017

சித்தன் அருள் - 580 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஞானம் பெற வேண்டும், தவம் செய்ய வேண்டும், இறை வழியில் செல்ல வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும், பக்தி வழியில் செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு தடைகள் வருகிறது. மனதிலே தேவையில்லாத எண்ணங்கள் வருகிறது, என்று பல மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இல்லையென்றால் நன்றாக வெற்றி பெறலாம் என்றால், இவைகளைத் தாண்டி செல்வதற்குண்டான வைராக்யத்தை ஒரு மனிதன் பெற வேண்டும். உலகியல் ரீதியான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை தடையென்றாலும், அதனைத் தாண்டி செல்கிறான். தனக்குப் பிரியமான காதலியை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் சிந்தித்து அந்த சந்திப்புக்கு எத்தனை தடை வந்தாலும் அதனைத் தாண்டி அங்கே செல்கிறான் அல்லவா? என்ன காரணம்? அந்த நோக்கத்தில் அவனுக்கு உறுதி இருக்கிறது. அதைப்போல, இறைவனை உணர வேண்டும். மெய்ஞானத்தை கண்டிப்பாக இந்தப் பிறவியில் உணர்ந்துவிட வேண்டும். இறையருளை பரிபூரணமாகப் பெற்றுவிட வேண்டும். என்கிற உறுதி அணுவளவும் தளராமல் மனித மனதிலே வந்துவிட்டால், மற்ற விஷயங்கள் குறித்து அவனுக்கு எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எதை செய்தாலும், எப்படி செய்தாலும் நோக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.

Thursday, 26 January 2017

சித்தன் அருள் - 579 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, ஒரு மனிதன் நல்லவனாக இருப்பது மட்டுமல்ல, இங்கிதம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இஃதொப்ப நிலையிலே, பிறருக்கு எந்தவகையிலும் உடல் ரீதியாகவும், எண்ணங்கள் ரீதியாகவும், பார்வைகள் ரீதியாகவும், தொல்லை தருகின்ற மனிதனாக இருத்தல் கூடாது. ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் பார்க்கும்பொழுதே மனதிலே உற்சாகம் ஏற்பட வேண்டும். "ஆஹா! இந்த மனிதனை இதற்கு முன்னால் சந்தித்ததே இல்லை! ஆனால் இவனை பார்க்கவேண்டும், இவனுடன் பழகவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதே? அது ஏன் என்று தெரியவில்லை! ஆனாலும் கட்டாயம், இவன் நல்ல எண்ணங்கள் கொண்ட ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்" என்று ஒரு மனிதனைப் பார்க்கின்ற, இன்னொரு மனிதனுக்குத் தோன்றும் வண்ணம், ஒவ்வொரு மனிதனும், தன் மனதிலே நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டிட வேண்டும்.

Wednesday, 25 January 2017

சித்தன் அருள் - 578 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், இஃதொப்ப பாவவினைகள் முற்றாக ஒழிந்தால் ஒழிய, ஒரு மனிதனால் கூடுமானவரை பக்குவமும், நல்ல தெய்வீகம் சார்ந்த புரிதலும் அடைவது என்பது கடினம். என்றாலும் இறைவனை வணங்கி இயம்புவது யாதென்றால் அங்ஙனம் புரிதல் வரவில்லை என்பதற்காகவே, மனிதர்கள் செய்கின்ற அத்தனையையும் ஏற்றுக்கொள்வது என்பது இயலாதது. புரிதல் வரவில்லை என்பதல்ல பிரச்சினை. புரிந்துகொள்ள மறுப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இறைவன் அருளாலே ஒரு மனிதன் வினைகளுக்கு கட்டுப்பட்டு, கண்ணுக்குத் தெரியாத விதியின்பிடியில் சிக்கி அந்த விதியின் பின்னால் சென்று கடைவரையில் பாவ, புண்ணியங்களுக்கு ஆட்பட்டு, அதன் பின்னாலேயே செல்வதற்குண்டான நிலைதான் பெரும்பாலும் இருக்கிறது. இந்தப் பாவங்கள் அறியாமையை தோற்றுவிக்கிறது. மாயையிலே மனிதன் சிக்கித்தவிக்க வழி செய்கிறது. பாசத்திலும், பந்தத்திலும் சிக்கித்தவிக்க வழிகாட்டுகிறது. பொய்யை மெய்போலும், மெய்யை பொய்போலும் காட்டுகிறது. இதிலிருந்து ஆத்மாவை கரையேற்றத்தான் ஞானிகளும், மகான்களும் இறைவனின் கருணையைக்கொண்டு காலகாலம் முயற்சி செய்து வருகிறார்கள். ஆயினும் கூட, லகரத்தில் ஒரு ஆத்மா மேலேறி வருவதே கடினமாகத்தான் இருக்கிறது. காரணம் என்ன? பரிபூரண சரணாகதி என்பது இல்லாத நிலை. எதையும் மனிதன் தன் அறிவோடு பொருத்திப்பார்ப்பது. தன் அறிவிற்கு விளங்கவில்லையென்பதால், அனைத்தும் ஏற்புடையது அல்ல என்று ஒதுக்கி வைப்பது. எனவேதான் இறைவன் அருளாலே ஜீவ அருள் ஒலையிலே சில ஆத்மாக்களுக்கு நல்ல வழி காட்டலாம் என்று, இறைவன் கருணைகொண்டு இஃதொப்ப எம்போன்ற மகான்கள் வாயிலாக சில ஆத்மாக்களுக்கு வழிகாட்டுகின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நிலையை தொடர்ந்து நாங்கள் கடைபிடிக்கும் வண்ணம் அருளாணையிட்டாலும் கூட, ஆன்மீகம் அறியாத மனிதனை விட, ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்டு இங்கு வரக்கூடிய பலரும் பக்குவமில்லாமல் இருப்பதும், புரிதல் இல்லாமல் இருப்பதும், மிக, மிக, மிக முட்டாள்தனமாக நடந்துகொண்டு, தன்னுடைய முட்டாள்தனத்தின் உச்சக்கட்டத்தால், துன்பத்திலே மாட்டிக்கொண்டு "சித்தர்கள் எஃதும் செய்யவில்லை, கைவிட்டுவிட்டார்கள்" என்று கூறுவது ஒரு விதத்திலே மனித நிலையிலே பார்த்தால், மனிதனுக்கு நியாயமாகத் தெரிந்தாலும் மகான் பார்வையில் பார்க்கும்பொழுது, நகைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. முட்டாளை திருத்துவது கடினம். மூடனுக்கு அறிவுரை பகர்வது கடினம், என்று எமக்கும் தெரியும், இறைவனுக்கும் தெரியும். ஒரு மகானின் இனிமையான உபதேசத்தைவிட பாவ வினையின் வழிகாட்டுதலுக்கு அதிக மதிப்பு இருக்கிறது மனிதனிடம். அதனால்தான் நல்லவை எந்த மனித மனதிலும், எக்காலத்திலும் ஏறுவதில்லை.

Tuesday, 24 January 2017

சித்தன் அருள் - 577 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒற்றுமையாக வாழக்கூடாது என்று நாங்கள் எப்பொழுதாவது வழிமுறையைக் காட்டியிருக்கிறோமா? நீ எதை வேண்டுமானாலும் கூறு. "எங்கள் தன்முனைப்பும், ஆணவமும், சினமும்தான் முக்கியம்" என்று மனிதர்கள் வாழ்ந்தால், அப்படி அவர்களை விதி அழைத்து சென்றால், அதற்கு சித்தர்களோ, நவக்ரகங்களோ அல்லது இறைவனோ எப்படி பொறுப்பேற்க இயலும்? எனவே மனிதர்கள் தமக்குள் சிந்தித்துப் பார்த்து, தன் குறைகளை அன்றாடம் பகுத்துப்பார்த்து, ஒவ்வொன்றாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும். ஆனால் மனிதனுக்கு எப்பொழுதுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிவது அடுத்தவனின் குறையும், குற்றமும்தான். அதனால்தான் இத்தனை பிரச்சினைகளும் வாழ்க்கையிலே ஒவ்வொரு மனிதனுக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது. தன் குறைகளை ஒவ்வொரு மனிதனும் சீர்தூக்கிப் பார்த்து அதனை மெல்ல, மெல்ல விட்டுவிட்டாலே இந்த உலகிலே பெரும்பாலும் அமைதி நிலவும்.

Monday, 23 January 2017

சித்தன் அருள் - 576 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனித வடிவிலே சிறந்த குரு வேண்டுமென்று பல மனிதர்கள் நாடுகிறார்கள். நன்றாக புரிந்து கொண்டிட வேண்டும். மனித வடிவிலே சிறந்த குருமார்கள் இல்லாமலில்லை. ஆனால், அதை ஒரு மனிதன் தன்னுடைய முன்ஜென்ம பாவங்களை குறைத்து, குறைத்து, குறைத்து, அதனையும் தாண்டி ஆன்மீக தாகம் எடுத்து, எடுத்து, எடுத்து அதை நோக்கிய சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத நிலையில், இறைவனாகப் பார்த்துதான் தக்க குருவை அனுப்பி வைப்பார். ஆனால் தன்னைப் பற்றி வெளியில் கூறிக்கொள்ளும் பெரும்பாலான குருமார்கள் அனைவருமே முழுமையான ஞானமோ, முழுமையான இறையருளைப் பெற்றவர்களோ அல்ல. வெறும் ஒரு மடத்து நிர்வாகியாகவும், ஆன்மீகத்தைத் தொழில் போலவும் செய்யக்கூடிய மனிதர்களே அதிகம். எனவே மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை வியம் ஆக்கிட வேண்டாம்.  சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும் எஃதாவது ஒரு நல்ல விஷயம் இல்லாமலிருக்காது.  அதைக் கற்றுக்கொண்டு தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக அமைதியாக, முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, அமைதியாக, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு அலைந்து, திரிந்து, திளைத்து சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதனிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதனிடம் இருந்தால் இவன் ஏற்றுக்கொள்வானா? என்று பார்த்து, இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால், பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்க மாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை? என்று ஆய்ந்து பார்த்து, ஆய்ந்து பார்த்து இவனை இவனாகவே பகுத்துப் பார்த்து, பகுத்துப் பார்த்து இவனை இவன் சரி செய்து கொண்டால் மெல்ல, மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Sunday, 22 January 2017

சித்தன் அருள் - 575 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஜனகன் மன்னனாகி அரசாண்டாலும், கூட அவனுடைய சிந்தனையானது இறைவனின் திருவடிகளில் இருந்தது. மன்னன் என்பது ஒரு வேடம், ஒரு நாடகம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதற்குள் அவன் லயித்துப் போய்விடவில்லை. அதைப்போல ஒரு மனிதன் இந்த உலகிலே எதை செய்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் "இவையனைத்தும் ஒரு நாடகம், ஒரு சொப்பனம்" என்று எடுத்துக்கொண்டு "மெய் என்பது இறைவனின் திருவடியே" என்பதை புரிந்துகொண்டு எதைப் பேசினாலும், எதை செய்தாலும், ஆழ்மனதிலே ஒரு தீவிர வைராக்யம், இறைவனின் திருவடியை நோக்கி இருந்து கொண்டேயிருந்தால், அர்ஜுனனின் குறி போல இது தவறாது இருந்தால், எந்த சூழலையும் தாண்டி சென்று வெற்றி காண இயலும். ஆனால் தடைகளும், குழப்பங்களும், மன சஞ்சலங்களும் இல்லாத நிலையில் ஒருவன் தவம் செய்யலாம் என்றாலும் அது யாருக்கும், இந்த உலகில் மட்டுமல்ல, எந்த உலகிலும் சாத்தியமில்லை. ஒன்று, இறை சிந்தனைக்கு மாற்றாக வந்து ஒருவனின் கவனத்தை திசை திருப்புகிறது என்றால் என்ன பொருள்? இறைவனின் சிந்தனையை விட அதிலே அவன் மனம் ஒரு ஈடுபாட்டை, ஒரு சுகத்தை உணர விரும்புகிறது, என்றுதான் பொருள். எனவே அதனையும் தாண்டி இறைவனின் திருவடிகளில் ஒரு சுவையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் நாங்கள் எப்பொழுதுமே கூறவருவது.

Saturday, 21 January 2017

சித்தன் அருள் - 574 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு, இயம்புவது யாதென்றால், காலகாலம் மனிதர்கள், வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கும் விதத்திலே எத்தனையோ முயற்சிகள் எடுப்பதில் ஒன்றுதான், தெய்வீக வழியில் தீர்வைக் காண எண்ணுவது. இஃதொப்ப முறையிலே மகான்களை, ஞானிகளை நாடுவதும், அதில் ஒன்றாக இஃது போன்ற நாடிகளை நாடுவதும், காலகாலம் நடந்துகொண்டே இருக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால், இயம்புங்கால், நாடிகளை பார்ப்பது என்பது வேறு, நாடிகளை வாசிக்கக் கேட்பது என்பது வேறு. நாடிகளை முழுமையாக உணர்ந்து கொள்வது என்பது வேறு. நாடிகளை பார்ப்பதும், கேட்பதும் ஒரு மேலெழுந்தவாரியான சிந்தனை. நாடிகளை முழுமையாக ஞானக்கண்ணோட்டத்தோடு உணர்ந்து கொள்ள முயற்சி செய்யாவிட்டால், நாடியில் பலாபலன்கள் பலியாதது போலும், நாடிகள் அனைத்தும் பொய் போலவும், மனிதனுக்குத் தோற்றமளிக்கும். இஃதொப்ப நிலையிலே ஞானிகளும், மகான்களும், மனிதனின் விதியும், இஃதொப்ப அந்த ஞானிகளின் கருணையால், இறைவனின் அருளால் அந்த மனிதனின் விதியில் சேர இஃதொப்ப நாடிகளின் மூலம் எம்போன்ற மகான்கள்,  வாக்கை இறைவனருளால் அருளிக்கொண்டே வருகிறார்கள்.  இஃதொப்ப நிலையிலே நாங்கள் மீண்டும், மீண்டும் கூற வருவது என்னவென்றால், ஒரு மனிதன் இதுவரை எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் மற்றும் புண்ணியங்களின் நிலை, இப்பொழுது நடப்பு பிறவியில் அவன் சிந்தனை, அவன் செயல். இஃதொப்ப ஒரு ஆலயத்தில் இருக்கும்பொழுது மட்டுமாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதே! இது போன்ற நாடிகளைக் கேட்கும்பொழுதாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே! என்பது ஒரு மாறாத உண்மையாக இருந்தாலும், எம்மைப் பொருத்தவரை இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. எனவே ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும், எல்லா நிலையிலும் பரிபூரணமான நல்லறிவைப் பெறுவதோடு, நல்ல குணத்தை வளர்த்துக் கொண்டிட வேண்டும். ஒரு மனிதன் தனக்கு தேவையான விஷயங்களை அல்லது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, தவறான வழியைத் தேர்ந்தெடுப்பதின் காரணமே அவனுக்கு சரியான வழிமுறையில் வெற்றி கிடைக்கவில்லை என்பதாலும், சரியான வழிமுறையில் சென்றால் வெற்றி கிடைக்க நீண்ட காலம் ஆகிறது என்பதற்காகவும், அஃது மட்டுமல்லாமல் குறுக்கு வழியிலே சென்றால் விரைவில் வெற்றி பெறலாம், பலரும் அவ்வாறு பெற்றிருக்கிறார்கள் என்பதே காரணம்.  இவையனைத்துமே, மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய நிலையாகும்.

Friday, 20 January 2017

சித்தன் அருள் - 573 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மற்றவர்களுக்கு இருக்கிறது என்று சொல்வதே தன்முனைப்பின் அடையாளம்தான். உலகிலே மிகவும் தீயவர் யார்? மிகவும் நல்லவர் யார்? என்ற தேர்வு பஞ்ச பாண்டவர்களில் தர்மருக்கும், கௌரவர்களில் துரியோதனனுக்கும் வைத்தபொழுது, துரியோதனன் சென்று வந்து, முனிபுங்கவர்களிடம் "யாரைப் பார்த்தாலும் எனக்கு கெட்டவனாகத்தான் தெரிகிறார்கள். எல்லோரும் தீயவர்கள்தான். இந்த உலகம் தீயவர்களால்தான் நிரம்பப்பட்டிருக்கிறது" என்று கூறினானாம். தர்மர் வந்து கூறும்பொழுது "இந்த உலகில் எல்லோரும் நல்லவர்களே. இருக்கின்றனர். ஒரே தீயவன் நான்தான்" என்று கூறினானாம். இந்த சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது என்ன. தன்னுடைய பார்வையில், எல்லாம் நல்லவைகளாகத் தெரியவே தன்னுடைய மனதையும், சிந்தனையையும், கருத்தையும் அனுமதித்தால், அதுவே சிறப்பாகும். ஒரு மகா பெரிய தீயவனிடமும், ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும். எத்தனை பெரிய நல்லவனிடமும், எஃதாவது ஒரு தீய குணம் இருக்கும். நல்லவனிடம் இருக்கின்ற தீய குணத்தை சீர்தூக்கிப் பார்த்து, அவன் திருத்திக் கொண்டிய வேண்டும். தீயவனிடம் இருக்கக்கூடிய நல்ல குணத்தை, அவன் மேலும் வளர்த்துக்கொண்டு, அதன் மூலம் மற்ற தீய குணங்களை விட, அவன் முயற்சி செய்ய வேண்டும்.

Thursday, 19 January 2017

சித்தன் அருள் - 572 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதன் முழுக்க, முழுக்க ஞானியாகவோ, சித்தனாகவோ மாறிவிட வேண்டும் என்று, நாங்கள் கூறவில்லை. அது அவன் எண்ணினாலும் நடக்காது என்பது வேறு விஷயம். ஆனால் நாங்கள் கூற வருவது கூடுமானவரை தன்னலத்தைக் குறைத்து பொதுநலமான எண்ணங்களோடு வாழ்தல், பிறருக்கு முடிந்தவரை நன்மைகளை செய்தல், நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும் தீமைகளை செய்யாதிருத்தல், சூழ்ச்சி, வஞ்சனை இவற்றை பின்பற்றாமல், வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல், தம், தம் கடமைகளை நேர்மையாக ஆற்றுதல், கடமைகளை நேர்மையாக செய்ய முடியாத நெருக்கடி வரும் தருணம் அந்தப் பணியையே புறக்கணித்தல். ஏனென்றால் நேர்மையற்று ஒருவன் எதைபெற்றாலும் அதனால் அவன் பெறுவதல்ல, அனைத்தையும் இழக்கிறான் என்பதே சித்தர்கள் பார்வையில் உண்மையாகும். எனவே நேர்மையான எண்ணம், உபகாரமான எண்ணம், சதா தர்ம சிந்தனை, பரிபூரண சரணாகதி, பக்தி இவையெல்லாம் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் இறை வழி என்பது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் முழுக்க, முழுக்க, முழுக்க இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் இறைவன் சோதனைக்கு ஆட்பட்டே ஒருவன் மேலேறி வரவேண்டும். நாங்கள் அடிக்கடி கூறுவதை மீண்டும் நினைவூட்டுகிறோம். மைதானத்திலே வாயு உருளை வைத்து விளையாடுகின்ற மனிதர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துகொண்டு வெற்றிப் புள்ளிகளைக் குவிக்கப் போராடுவார்கள். ஒருவன் அந்த வாயு உருளையை உதைத்துக்கொண்டே வெற்றிப் புள்ளிக்காகப் போராடுவான். மாற்று அணியினர் அதைத் தடுப்பார்கள். அப்பொழுது அந்த வெற்றிப் புள்ளியைக் குவிக்க வேண்டிய மனிதன் "இப்படியெல்லாம் தடுத்தால் என்னால் எப்படி வெற்றிப் புள்ளியை குவிக்க முடியும்? இவர்கள் எல்லோரும் விலகிச் சென்றால் நான் எளிதாக வெற்றி பெறுவேன்" என்று கூறினால் அதை, ஆட்டத்தின் விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா ? அதைப் போலதான் ஞானம் பெற வேண்டும், தவம் செய்ய வேண்டும், இறை வழியில் செல்ல வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும், பக்தி வழியில் செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு தடைகள் வருகிறது. மனதிலே, தேவையில்லாத எண்ணங்கள் வருகிறது என்று பல மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இல்லையென்றால் நன்றாக வெற்றி பெறலாம் என்றால் இவைகளைத் தாண்டி செல்வதற்குண்டான வைராக்யத்தை ஒரு மனிதன் பெற வேண்டும். உலகியல் ரீதியான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை தடையென்றாலும் அதனைத் தாண்டி செல்கிறான். தனக்குப் பிரியமான காதலியை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் சிந்தித்து அந்த சந்திப்புக்கு எத்தனை தடை வந்தாலும் அதனைத் தாண்டி அங்கே செல்கிறான் அல்லவா? என்ன காரணம்? அந்த நோக்கத்தில் அவனுக்கு உறுதி இருக்கிறது. அதைப்போல இறைவனை உணர வேண்டும். மெய்ஞானத்தை கண்டிப்பாக இந்தப் பிறவியில் உணர்ந்துவிட வேண்டும். இறையருளை பரிபூரணமாகப் பெற்றுவிட வேண்டும் என்கிற உறுதி அணுவளவும் தளராமல் மனித மனதிலே வந்துவிட்டால், மற்ற விஷயங்கள் குறித்து அவனுக்கு எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எதை செய்தாலும், எப்படி செய்தாலும் நோக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.

Wednesday, 18 January 2017

சித்தன் அருள் - 571 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு, இயம்புவது யாதென்றால் நல்லாசிகளை இறைவனருளால் இயம்புகின்ற இத்தருணம் இஃதொப்ப....மீண்டும்,மீண்டும் சில ஆண்டுகளாக இங்கு வருபவர்களுக்கு உரைப்பதுதான். பாவ வினைகள் கடுகளவு இருந்தாலும், மனிதனுக்கு மலையளவு துன்பத்தைத் தரலாம். இன்னும் கூறப்போனால், ஒரு ஞானியின் பக்குவம் கைவரப் பெறுவதே, எந்த லோகத்தில் வேண்டுமானாலும் நிம்மதியாய் வாழ்வதற்கு ஏற்ற நிலை. இஃதொப்ப கூறுங்கால் ஞானியின் வைராக்யமும், தெய்வீக விழிப்புணர்வும் வருவது, கடினம்தான் என்றாலும், அதனை நோக்கி முயன்றுகொண்டே இருப்பதே, சிறப்பு. இல்லையென்றால் இந்த உலக வாழ்வு என்றாலும், வேறு உலக வாழ்வென்றாலும் கூட அந்தந்த இயல்பு மனோதர்மத்திற்கு ஏற்ப, மன உளைச்சல்கள், வேதனைகள் வந்துகொண்டேயிருக்கும். ஒன்றை புறத்தேயிருந்து துன்பமாக, இன்பமாக பார்ப்பதைவிட பார்க்கின்ற மனிதனின் மனோபாவத்தைப் பொறுத்தே அந்த இன்பமும், துன்பமும் தெரிகிறது எனலாம். இது சற்று கடினமான கருத்துதான், என்றாலும், உண்மைதான். இரண்டு மனிதர்கள் மிகப்பெரிய வியாபாரம் செய்வதாக வைத்துக்கொண்டால் ஒருவனுக்கு பல லகரம் நட்டம் வந்துவிடுகிறது. இன்னொருவனுக்கு அதைவிட இன்னும் நட்டம் வந்துவிடுகிறது. சற்றே சிந்தித்து, இயல்பாக எடுத்துக்கொண்டு, மேலும் பிரச்சினைகள் வளராமல் பார்த்துக்கொள்கின்ற முடிவை எடுக்கின்ற மனிதன் உண்மையில், நட்டம் வந்திருந்தாலும் நட்டமில்லாத நிலையைதான் அடைகிறான். அஃதாவது நட்டம் என்பது அவனுடைய வியாபாரத்தில் இருக்கிறது. வியாபாரம் அவன் செய்தது என்றாலும் கூட, அது அவன் மனதை பாதித்தால், மேற்கொண்டு செயலாற்றல் என்பது இல்லாமல் ஆகிவிடும். ஆனால், இதுபோன்ற துன்பங்கள் வரும்பொழுது மனிதன் பெரும்பாலும் என்ன எண்ணுகிறான்? இப்படியொரு துன்பம் வந்துவிட்டதே? என்று எண்ணி, எண்ணி மருங்கிப் போவதால், கடுகளவு துன்பம் மலையளவு ஆகிறது. விதி அப்படித்தான் அவனை அச்சுறுத்தி, அவனுடைய பாவத்தைக் கழிக்கிறது என்றாலும் சற்றே மனதை திடப்படுத்தி, இறை வழிபாட்டினில் கவனம் செலுத்தினால், மாயையான இந்த லோகத்தில் இறைவனை மறுப்பதும், இறைவனை மறப்பதும், சத்தியத்தை விடுவதும், தர்மத்தை விடுவதும் மட்டும்தான், ஒரு மனிதன் அடையக்கூடிய மிகப்பெரிய நஷ்டமாகும். அஃது போக நஷ்டம் என்பதோ, கஷ்டம் என்பதோ இந்த உலகில் ஏதுமில்லை. இஃதொப்ப கருத்தினை மனதிலே திடமாக வைத்துக்கொண்டால் வாழ்வு நலமாக செல்லும்

Tuesday, 17 January 2017

சித்தன் அருள் - 570 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட, அதை ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்பதை பற்றிய எண்ணத்திற்கு; ஒருவனின் மனம், புத்தி, அறிவு, ஞானம் - இவற்றை நல்கக்கூடிய கிரக அமைப்பு - இதை பொறுத்துத்தான், இந்த வாதத்தை எடுத்துக் கொள்ள முடியும். முழுக்க, முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற ஒரு மனிதனிடம் "நீ தர்மம் செய். தர்மம் செய், தர்மம் செய்" என்று நாங்கள் கூறினாலும், அதில் சிறிதளவே அவன் செய்கிறான். ஆனால், பாவங்கள் குறையவில்லை. இவன் எவ்வாறு பாவங்களை குறைப்பது? சரி, இவனுக்கு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால்தான் திருப்தி என்றால், அப்படியே செய்யட்டும். அபிஷேகத்திற்காக பொருள் வாங்குகிறான். அந்த வியாபாரம் செழித்து வளரட்டும். அது அந்தந்த மனிதர்களுக்கு போய் சேருகிறது அல்லவா? அந்த அடிப்படையிலும் இவன் அபிஷேகத்திற்காக முயற்சி செய்கின்ற காலமும், அதனால் பயன் அடையக்கூடிய மனிதர்களையும் பார்க்கவேண்டும். அப்படியாவது சிறிதளவு கர்மா இவனுக்கு குறையட்டும் என்றுதான் கூறுகிறோம். அதே சமயம், ஒரு உயர்ந்த பொருளை ஏன் கல்லின் மீது ஊற்றவேண்டும்? அதை ஏழைகளுக்குத் தந்தால் ஆகாதா? என்று ஒரு வாதத்தை வைக்கும் பொழுது ஒருவனுக்கு பிரியமான தந்தை, தாய், மனைவி, மக்கள் போன்றோர்களின் பிம்பங்களை களங்கப்படுத்தி, அதன் மீது எச்சில் உமிழ் என்றால், உமிழ்வானா? எனவே, அந்த பிம்பங்களை அவன் தன் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற குணம் இன்றளவும் இருக்கிறது.  அப்படியிருக்கும்பொழுது, "சிலை" என்று கருதக்கூடிய மனிதனுக்கு, அது வெறும் சிலை, ஆனால் அது உள்ளே "தெய்வம்தான்" என்று ஆணித்தரமாக நம்புகின்ற மனிதனுக்கு "நாம் தெய்வத்திற்க்கே அபிஷேகம் செய்கிறோம்" என்ற சந்தோஷமும் அதன் மூலம் மன அமைதியும் வரும்.  இப்படியான மனிதனை, சற்றே பக்குவமடைந்த பிறகு, மெல்ல, மெல்ல தர்ம வழியில் திருப்பி விடலாம். எடுத்த எடுப்பிலேயே "நீ அப்படியெல்லாம் அபிஷேகம் செய்து பொருளை வீண் செய்யாதே. உன்னை சுற்றி உள்ள ஏழைகளுக்கு கொடு" என்று சொன்னால், அவன் மனம் ஏற்காது. ஓரளவு நல்ல ஆத்மா, காலப்போக்கில் திருந்துவான் என்றால், அவனை, அவன் போக்கில் சென்றுதான் நாங்கள் திருத்துவோம். எனவே, இதில் யார் செய்வதும் குற்றமல்ல. பாதிப்பும் அல்ல. இரண்டு வழிகளுமே சிறப்புத்தான். 

Monday, 16 January 2017

சித்தன் அருள் - 569 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மாணவன் ஒரு தேர்வு எழுதி பூர்த்தியடைந்து வந்தவுடன், இந்த இந்த தேர்வுகளிலே, இன்ன குறைகள் நிகழ்ந்துவிட்டன. எனவே, எனக்கு மதிப்பெண் குறைந்துவிடும். எனவே, மதிப்பெண் கூடுதலாகப் பெற முயற்சி செய்ய வேண்டும், என்று முயற்சி செய்கிறான்.  அகுதொப்ப நிலையிலே, தேர்வின் மதிப்பெண்  குறைந்து இருக்கிறது. இப்பொழுது, இவன் மீண்டும் தேர்வு எழுதி, மதிப்பெண் பெற்று வரும் வரையில், இவன் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டால், இவன் எதைக் கூறுவான்? அதிகமாக வரும் என்று, தான் எதிர்பார்க்கின்ற மதிப்பெண்ணை கூற முடியுமா? அல்லது குறைந்த அளவு பெற்ற மதிப்பெண்ணை கூற முடியுமா? இதைத்தான் பூஜைக்கும், புண்ணியத்திற்கும் ஒரு மனிதன் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏற்கனவே, பிறவிதோறும் பெற்று, செய்து, அனைத்தையும் நுகர்ந்து, அது போக இப்பிறவிக்கு வந்துள்ள மனிதர்கள் ஒன்றை மட்டும்தான் எண்ணி பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும். அது இல்லையே, இது இல்லையே என்று எண்ணுவதைவிட, பிறவி, இறைவன், சித்தர்கள், நவகிரகங்கள், கர்மா போன்ற வார்த்தைகளை செவிமடுத்து, ஓரளவு அந்த வழியில் வர இறைவன் அனுமதி  தந்திருக்கிறார், என்றுதான் பெருமைபட்டுக் கொள்ள முடியுமே தவிர, இருக்கின்ற இந்த மதிப்பெண்ணுக்கு என்ன உண்டோ, அதுதான். இதனையும் மீறி ஒருவன் பூசைகள் செய்தால், அதற்குண்டான பலன், பின்னால்தான் கிட்டும்.

Sunday, 15 January 2017

சித்தன் அருள் - 568 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பாவ வினைகள் மேற்கொண்டு பாவங்கள் செய்யத் தூண்டுகிறதே? என்றால், அதற்குதான் இறை தரிசனமும், பிரார்த்தனைகளும், சிறு அளவிலாவது தர்மத்தையும் செய்யப் பழக வேண்டும்.  அஃதோடு மட்டுமல்லாமல் பாவங்கள் மேலும் பாவங்களை செய்யத் தூண்டினாலும் கூட, இது போன்ற நல்ல விஷயங்களை சத்சங்கமாகக் கூடிப் பேசி, பேசி "இது பாவம், இதை நோக்கி செல்லாதே, இது புண்ணியம், இதை நோக்கி செல்" என்று அறிவிற்கு கூறிக்கொண்டே இருக்க வேண்டும். மனிதனை பொருத்தவரை மிக,மிக பலவீனமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பல மனிதர்கள் ஒன்று சேர்ந்து எதை செய்கிறார்களோ, எதைக் கூறுகிறார்களோ அதுவே உண்மை, அதுவே நன்மை, என்று ஒரு மனிதன் பின்பற்றத் துவங்குகிறான்.  ஒரு மனிதன் அந்த நல்ல தன்மையை அடைந்து விட்டால் ஒருவன் செய்கின்ற நல்லதைப் பார்த்து தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவான். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறு இருப்பதில்லை. "அவன் குறுக்கு வழியில் தனத்தை சேர்க்கிறான். ஏன் நான் சேர்க்கக்கூடாது? அவன் இதுவரை மாட்டிக்கொள்ளவில்லை. நானும் மாட்டிக்கொள்ளக் கூடாது. அவன் குறுகிய காலத்தில் இத்தனை இல்லம் வாங்கிவிட்டான். நானும் வாங்க வேண்டும்" என்றுதான் ஒப்பிட்டுப் பார்க்கிறானே தவிர, இந்த உலகிலே உள்ள எதுவும் தன் ஆத்மாவிற்கு சொந்தமில்லை. ஆத்மாவை உயர்த்த வராது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளவோ, புரிந்து கொண்டாலும்  அதனை ஏற்றுக்கொண்டு பின்பற்றவோ மனிதர்களுக்கு அத்தனை பொறுமை இல்லை. அத்தனை நல்ல எண்ணங்களும் வளர்வதில்லை. எப்பொழுதுமே தன் வீடு, தன் பெண்டு, தன் மக்கள் என்று சுயநலத்தோடு வாழ்கிறான். பொது நல எண்ணமும், நோக்கமும் வளர, வளர, தன்னுடைய உழைப்பு தனக்கு மட்டும்தான் சொந்தமாக வேண்டும் என்ற குறுகிய சுபாவம் சென்று, "ஏதோ விதிவசத்தால் பலருக்கு இங்கே உழைக்க வாய்ப்பில்லை. உழைக்க எண்ணினாலும் அந்த உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. தன்னை சுற்றி எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்.  இறைவனருளால் தான் நாம் நன்றாக இருக்கிறோம். நாம் அரவணைத்துக் கொள்வோம்" என்ற எண்ணம் வந்தால்தான் இறைவனின் கருணை மேலும் பெருகும். பஞ்ச பூதங்களும் சமன் அடையும்.

Saturday, 14 January 2017

சித்தன் அருள் - 567 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


இந்த பொங்கல் திருநாள் முதல், நீங்கள் அனைவரும் எல்லா அருளும் பெற்று, மனோபீஷ்டங்கள் நிறைவேறி இனிதாக, அமைதியாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

அக்னிலிங்கம்

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அருள் வாக்கைக் கேட்டவுடன் மனிதர்கள் எல்லோரும் புனிதர்கள் ஆகிவிடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் கூட இறைவனிட்ட கட்டளையை செய்துகொண்டுதான் இருக்கிறோம். இஃதொப்ப ஜீவ அருள் ஒலையை சுத்தமாக மறுத்து, நம்பிக்கையில்லாமல், ஒதுங்கி, தன் அறிவை நம்பி வாழ்கின்ற மனிதன் கூட எம்மைப் பொருத்தவரை ஏற்கத்தக்கவன்தான். ஆனால் ‘சில பொழுது நம்புவேன், சில பொழுது நம்பமாட்டேன், சிலவற்றை ஏற்றுக்கொள்வேன். பலவற்றை ஏற்றுக்கொண்டிடமாட்டேன் ‘ என்று இருக்கின்ற மனிதர்களை எந்த வகையில் சேர்ப்பது? ஆயினும் இவர்களையும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். எம்மைப் பொருத்தவரை விருப்பு, வெறுப்புகளை தாண்டிய நிலை, தர்மசங்கடத்தை உணராத நிலைதான் சித்தத்தன்மை என்றாலும் கூட, விதியின் போக்கு எமக்கும் தெரிந்தாலும், மனிதர்களின் மதியில் அமர்ந்து கொண்டு விதி விளையாடினாலும் கூட, யாமும் மனிதர்களை நோக்கும்பொழுது பல சமயங்களில் தர்மசங்கடத்திற்கு ஆளாவது என்பது உண்டு. அவைகளையெல்லாம் வார்த்தைப்படுத்திக்கூட சொல்ல இயலாத நிலைதான் இருக்கிறது. ஒரு மனிதன் "இஃதொப்ப ஜீவ அருள் ஒலையை நம்புகிறேன். இதிலே கூறுவது சித்தர்கள்தான் என்று ஒத்துக்கொள்கிறேன்" என்று வெளிப்படையாக கூறிவிட்டு அல்லது உள்ளத்தில் அஃதொப்ப கருத்தை வைத்துக்கொண்டு, நடைமுறையில் தனக்கும் தன்னை சார்ந்தோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டால் அஃதொப்ப மனிதனை எப்படி சொல்லி திருத்துவது? "ஒரு மனிதனுக்கு விருப்பம் போல் வாழ சுதந்திரம் இல்லையா? அவனுக்கு சுய அறிவும், அறிவாற்றலும் இல்லையா? அந்த அறிவு காட்டுகின்ற பாதையில் செல்லக்கூடாதா?" என்றால், பெரும்பாலான மனிதர்களுக்கு விதி, எது சுகமோ அந்த சுகமான வழியையே காட்டி "இப்படி செல், இதுதான் அமைதியான வழி, சுகமான வழி" என்று சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அப்படி விதி காட்டுகின்ற வழியெல்லாம் சிக்கலைதான் மனிதனுக்கு பெரும்பாலும் தருகிறது. சுருக்கமாகக் கூறப்போனால் ஒரு மனிதன் இயல்பான வாழ்க்கையும் வாழ வேண்டும். அதே சமயம் சித்தத்தன்மையை அடையவும் முயல வேண்டும். ‘ சித்தர்கள் வழியில் வருகிறேன் ‘ என்று தேவையில்லாத குழப்பங்களையெல்லாம் தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கும் ஏற்படுத்திவிடக்கூடாது. இறைவன் அருளாலே தொடர்ந்து நன்மைகளை செய்வதும், நன்மைகளை செய்கின்றபொழுது அவை நிரந்தர நன்மைகளாக அனைவருக்கும் ஆகும் வண்ணம் செய்வதும், ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும். பெரும்பாலான மனிதர்களுக்கு மனம் உற்சாகமாக இருந்தால் உடல் சற்று முன்பின்னாக இருந்தாலும், இயங்கிவிடும். இக்கால கட்டத்தில் பலருக்கு உடலைவிட உள்ளம் பாதித்து விடுகிறது. உடலே பாதித்தாலும் கூட உள்ளம் அதனை பொருட்படுத்தவில்லையென்றால் உடல் உற்சாகமாகத்தான் இருக்கும். இது காலகாலம் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய விதிதான். ஆனாலும் நடைமுறை என்பது அவ்வாறு இருப்பதில்லை. மனதிற்கு உற்சாகத்தைத் தருகின்ற உறவுகள் மிகக்குறைவு. எனவே அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு பாவக்கழிவு என்ற அளவிலே ஏற்றுக்கொண்டு இறைவனை நோக்கி மனதை திசை திருப்புவது ஒன்றுதான், அனைவருக்கும் ஏற்றதொரு நல்வாழ்வை, அமைதி வாழ்வை நல்கும். ஆசிகள்!

Friday, 13 January 2017

சித்தன் அருள் - 566 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எல்லா வகையான பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் ஒரு மனிதனின் விதிதான் காரணம். அதே சமயம் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும்,அவன் உயர்விற்கும், அவன் சுகத்திற்கும், அவன் வெற்றிக்கும், அவன் நிம்மதிக்கும் அதே விதிதான் காரணம். ஒரு மனிதன் வங்கியிலே சிறிது, சிறிதாக தனத்தை போட்டுக்கொண்டே வந்திருந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிறிய தொகை, பெரிய தொகையாக வளர்ந்து அவனுக்கு திருப்பித் தரப்படுகிறது. அதைப் பெறுகின்ற மனிதன் சந்தோஷம் அடைவான். அதே வங்கியில் கடனைப் பெற்ற மனிதன் அதே வங்கியிலிருந்து தனத்தைப் பெறுவதற்கு பதிலாக ஏற்கனவே வாங்கிய கடனுக்காக சிறிது, சிறிதாக இவன் அடைத்துக்கொண்டே வரவேண்டும். எப்படி அடைக்க வேண்டும் ? எத்தனை காலம் அடைக்க வேண்டும்? என்றால் இவன் வாங்கிய தொகை, அதற்குண்டான வட்டி விகிதம், இவன் எத்தனை விதமான பாணியில் திருப்பித் தருவதற்குண்டான ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை பொறுத்து இருக்கிறது. ஆனால் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் செலுத்திவிட்டு ‘ நான் கடினப்பட்டு பெறுகின்ற தொகையாவையும் வங்கியே பிடுங்கிக் கொள்கிறது. இதிலிருந்து எனக்கு விடுதலை கிடையாதா?" என்றால், வங்கியில் உள்ள மனிதர்கள் என்ன கூறுவார்கள்?. ‘அப்பனே! நீ பெற்ற தொகை இந்த அளவு.  அதற்குண்டான வட்டி விகிதம் இந்தளவு. இதுவரை செலுத்தியது இந்தளவு. இனி செலுத்த வேண்டியது இந்தளவு‘ என்று கூறுவார்களே, அதைப்போல, ஒரு மனிதன் பாவத்திற்குண்டான சூழலை நுகர, நுகர அந்த பாவம் குறைந்து கொண்டே வருகிறது. இரண்டையும் நாங்கள் அனுபவம் என்றுதான் பார்க்கிறோம். மனிதன் வேண்டுமானால் சுகம் என்றும், துக்கம் என்றும், தண்டனை என்றும் பார்க்கலாம். பாவங்களால் ஒரு மனிதன் நுகரும் அந்த நிகழ்வுகளை ஒரு அனுபவமாக நாங்கள் பார்க்கிறோம். புண்ணியத்தால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய சந்தோஷமான அனைத்து நிகழ்வுகளையும் வேறொரு அனுபவமாக நாங்கள் பார்க்கிறோம். இரண்டுமே ஒரு மனிதனால் நுகரப்பட்டு, நுகரப்பட்டு ஒரு நிலையில் சீர்நிலைக்கு வந்துவிடும். எனவே ஒரு மனிதன் உடலிலே நோய் வந்தாலும், ஒரு மனிதனால் இயல்பாக சிந்திக்க முடியாமல் தவறான சிந்தனையிலே தன்னை ஆழ்த்திக்கொண்டு தவறான பாதையில் சென்றாலும், அல்லது தோல்வி மேல் தோல்வி வந்தாலும் அல்லது வெற்றி மேல் வெற்றி வந்தாலும் அவையனைத்தும் அவன் என்றோ, எத்தனையோ பிறவிகளில் சேர்த்த பாவ, புண்ணியங்களின் எதிரொலிதான். 

Thursday, 12 January 2017

சித்தன் அருள் - 565 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் பெருங்கருணையைக் கொண்டு இத்தருணம் உரைப்பது யாதென்றால், இகுதொப்ப முழுக்க, முழுக்க லோகாய விஷயங்களுக்காகவும், புலன் ஆசைகளுக்காகவும் மட்டும் வாழக்கூடிய மனிதர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். இது ஒரு வகையில்  அவனவன் கர்மவினை என்றாலும் கூட, இத்தனையும் மீறிப் போராடித்தான் வரவேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏதோ யோக நிலையை நோக்கி, ஞான மார்கத்தை நோக்கி, நிஜமாகவே செல்லக்கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகிலே, சராசரி விஷயங்களும், சாமான்ய விஷயங்களும்தான், சாமான்ய மனிதர்களால் எப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. இகுதொப்ப சித்தர்களின் நாமத்தை உச்சரிப்பதாலோ, சதாசர்வகாலம், சித்தர்களைப்பற்றி விவாதம் செய்வதாலோ மட்டும், ஒருவருக்கு ஞானம் வந்துவிடுவதில்லை. இகுதொப்ப, சித்தர்களை பற்றி பேசுவதாலும், இறைவனைப் பற்றி பேசுவதாலும், சில மந்திரங்களை உச்சரிப்பதாலும் ஏதாவது நன்மை கிட்டாதா? அல்லது லோகாயத்தில் உள்ள கஷ்டங்கள் விலகாதா? என்றுதான் பல மனிதர்கள் வருகிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அதுவும் குற்றமில்லை என்று தோன்றினாலும் கூட, அதனையும் தாண்டி மெய்யான ஞானத்தேடலான மனிதக் கூட்டம் ஒன்று இருந்தால்தான், அந்த மனிதக்கூட்டத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு, எதனையும் செய்தால்தான், கூடுமானவரை பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும். மற்றபடி எமது வழியில் வருகின்ற பல்வேறுப்பட்ட மனிதர்களாக இருந்தாலும், ஆன்மநேய மனிதர்களாக இருந்தாலும்,  உள்ளே, உள்முகமாக அகத்திலே பெருந்தன்மை இல்லாததால், உள்ளே வளராமல் இருப்பதால், இகுதொப்ப மாந்தர்களோடு உறவு வைத்துக் கொண்டால், பெயரளவிற்கு ஆன்மிகம் இருக்குமே தவிர, உண்மையான ஆன்மீகமாக இராது.

Wednesday, 11 January 2017

சித்தன் அருள் - 564 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தெய்வ சாந்நித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தைப் பொருத்தது அல்ல. எனவே, எந்த ஆலயத்திலும், மனம் ஒன்றி, மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல், வைராக்கியம் கொண்டு மனதைத் தெளிவாக வைத்து, மனதை பக்தியிலே ஆழ்த்தி, மனதை பரிபூரண சரணாகதியிலே வைத்து, வேறு உலக சிந்தனை ஏதும் ஏழா வண்ணம், இறையை இல்லத்தில் இருந்து பூசித்தாலும், அது நல்ல உள்ளத்தில் இருந்து வரும் பூசையாக இருக்குங்கால், இறைவனின் அருளும், இறைவனின் சாந்நித்யம் கிட்டும் அப்பா! இகுதொப்ப நிலையிலே இறைவனின் அருளாசி,  நிச்சயம்,நிச்சயம், நிச்சயம். ஆசிகள்!

Monday, 9 January 2017

சித்தன் அருள் - 563 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி? என்று எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும்,  இறை சக்தியைக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட, இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவன் உழன்று, சிதிலப்பட்டு, பக்குவப்பட்டு, வேதனைப்பட்டு, கவலைப்பட்டு, கஷ்டப்பட்டு, தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளவேண்டும், என்பதுதான் இறையின் எண்ணம் ஆகும்.

Sunday, 8 January 2017

சித்தன் அருள் - 562 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன் பலகீனமானவன். கர்மத்திற்கு உட்பட்டவன். பக்குவம் அடையாதவன். பக்குவம் அடையாத மனிதர்கள் எது உரைத்தாலும் அதை நீ செவியில் ஏற்கவேண்டாம். உன் பொருட்டு அனைவருக்கும் யாம் இயம்புவது என்னவென்றால், எமது வாக்கை கேட்பதாலேயே ஒரு மனிதன் மேன்மை அடைய இயலாது. இகுதொப்ப "இவனுக்கெல்லாம் சித்தர்கள் என்றென்றும் வாக்கு உரைக்கிறார்களே? ஆயினும் இவனுக்கெல்லாம் வாக்கு உரைத்தாலும், இவன் பிறர் மனம் புண்படவும், சித்தர்களுக்கு விரோதமாகவும் நடக்கிறான். இங்குதொப்ப, இன்னவனுக்கு எதற்கு சித்தர்கள் வாக்கு உரைக்கவேண்டும்?  என்று எண்ணுதல் கூடாது. யாராக இருந்தாலும் இறையின் கட்டளைப்படி வாக்கு உரைத்து, அவனின் மனநிலையை மாற்றி, நல்வழியில் திருப்ப வேண்டும், என்பதற்காக, நல்லோர், நல்லோர் அல்லாதோர் அனைவருக்கும், பல்வேறு சூழலில் வாக்கு உரைக்கவேண்டியுள்ளது. உள்ளதை, உள்ளபடி கூறி வாழுங்கால். என்றென்றும் வெற்றியும், தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதை கூறாது, அல்லதை கூறுங்கால், தொடர்ந்து பாவசேற்றிலே  ஆழ்ந்து, ஆழ்ந்து துன்பப்பட நேரிடும். உரைத்திடுவோம், எவன் எப்படி வாழ்ந்தாலும்,  அது குறித்து கவனம் செலுத்தாது, உண்மையை நன்றாக ஆய்ந்து, உணர்ந்து, சிந்தித்துப் பேசி, உள்ளதைக் கூறி, நல்லதை செய்து வாழுங்கால், நலம் தொடரும்.  உரைத்திடுவோம், இவ்வாறெல்லாம் வாழாத மனிதனுக்கு, நல்விதமான வாழ்வு இருப்பது போல் தோன்றும். அப்படி தோன்றினாலும், அது நீடிக்காது, என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தெள்ளிய நெஞ்சத்திலே நல்ல விதைகளை ஊன்றி, ஊன்றி தெளித்துவிட்டால், தெளிவாய், காலப்போக்கில், அந்த நல் வித்துக்கள் எல்லாம் முளைத்து நல் வ்ருக்ஷங்களாகி, நல் கனிகளை  தரும்.அந்த கனிகள் மூலம், மேலும், மேலும் பல நல்வித்துக்கள் உருவாகும்.  எனவே, எது குறித்தும் கலங்காது, உன்னால் இயன்ற தர்மங்களை, பிரார்த்தனைகளை செய்து வாழ்ந்து வா. என்றென்றும் நலம் தொடரும் உன்னை. ஆசிகள்! சுபம்!

Saturday, 7 January 2017

சித்தன் அருள் - 561 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

நாங்கள் கூறுகின்ற வாக்கின் தன்மையை ஆய்ந்து, பகுத்து, புரிந்து ஏற்றுக்கொள்வது என்பதும் ஒரு மனிதனின் பக்குவம், மனோபலம், கர்ம வினைகள்தான் தீர்மானிக்கிறது. அது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது மனிதர்களுக்கு இல்லை என்பதால்தான் யாமும் பொட்டில் அடித்தாற்போல் கூறாமல், மேலெழுந்த வாரியாகவே கூறிக்கொண்டு செல்கிறோம். ஒருவனைப் பார்த்து எதிர்காலத்தில், உனக்கு இருதயத்தில் குறைபாடு வருமாப்பா. எனவே, இன்றிலிருந்தே, தக்க உடற் பயிற்சி செய்து, அன்ன ஆகாரத்தில் கவனமாக இருந்து, நிறைய தர்மங்களை செய்து, நிறைய பூசைகளை செய்துவா  என்றால், நல்ல வேளை கூறினீர்களே என்று எடுத்துக் கொள்ளாமல்,  எனக்கு இருதயத்தில் பாதிப்பா? எனக்கு இருதயத்தில் பாதிப்பு வந்துவிடுமா, என்று அவன் அன்றில் இருந்தே அச்சப்பட துவங்கினால், இது போன்ற வகை ஏன் கூறினோம்? என்றுதான் மகான்களுக்கும் இருக்கும். எனவே எதிர்காலத்தை தெரிந்து கொண்டு, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிந்து கொண்டு வாழ வேண்டும், என்பதற்காகத்தான் மனிதன் ஜோதிடம், அருள்வாக்கு போன்றவற்றை பார்க்கிறான். ஆனால் அவன் எதிர்காலம் அவன் எண்ணுவது போல் ஆக்கபூர்வமாக இருந்துவிட்டால் பாதகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அப்படி இல்லாதபோது எதைக் கூறுவது? அப்படி எதிர்காலத்தை பற்றி கூறி அச்சுறுத்துவதை விட, எதிர்காலத்தில் வரக்கூடிய விதி வழியாக எதிர் காலத்தில் வரக்கூடிய ஆபத்துகளை எல்லாம் மாற்றுவதற்கு அல்லது அந்த துன்பங்களை எல்லாம் தாங்குவதற்கு மனவலிமை அதிகரிக்கும் வண்ணம் பிரார்த்தனைகளையும், தர்மங்களையும் எம்மை நாடும் மனிதர்களுக்கு கூறினால் அதை, அவன் கவனமாக பின்பற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம், எதிர்காலம் என்பது சிறப்பாகவே இருக்கும்.  எனவே, இகுதொப்ப யாம் கூறுவது என்னவென்றால், எம்மை நாடும் தருணம், எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால், இறுதியில் இறைவன் அருளால், பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

Friday, 6 January 2017

சித்தன் அருள் - 560 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

வலம்புரி சங்கை, முக்கண்ணனை வைத்து யார் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கே தரவேண்டும். முக்கண்ணனின் வழிபாடு முறையாக செய்பவருக்கே வலம்புரி சங்கு சென்று சேரவேண்டும். சங்கை அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் முன், சங்கையே அபிஷேகம் செய்ய வேண்டும். அகுதொப்ப, மேல் உள்ள குறிப்புகளை அகற்றிவிட்டு, சுத்தமான நீரில் ஏக தினம் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் சுத்தமான ஆவின் (பசுவின்) பாலில் சூலத்திங்கள்  குறையாது வைத்திருக்க வேண்டும். சூல முறை பால் மாற்ற வேண்டும். கங்கை நீரில் வைக்க, மேலும் நலம். ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பத்திரமாக வைக்க வேண்டும்.

Thursday, 5 January 2017

சித்தன் அருள் - 559 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

நதியின் சங்கமம் ஆழியோடு.
உயர் நற்றமிழின் சங்கமம் நற்சுவையோடு.
விதித்த விதியின் சங்கமம் அவனவன் செயலோடு.
என்றென்றும் பதியின் சங்கமம் மெய் பத்தினியோடு.
அவனவன் மதியின் சங்கமம் உயர் குணத்தோடு.
விளைந்த கதியின் சங்கமம் அவனவன் எண்ணத்தோடு.
என்றென்றும் தர்மத்தின் சங்கமம் புண்ணியத்தோடு.
தளர்வில்லா மனதின் சங்கமம் இறையோடு.
தப்பில்லா வாழ்வும் வளமோடு இருக்க 
நாள் நாளும் நிகழும் சங்கமம் நல்வினையோடு
நலமில்லா சூழலின் சங்கமம் முன் கர்மத்தோடு
நன்றாய் உயிரின் சங்கமம் ஆக்கையோடு 
அந்த ஆக்கையின் சங்கமம் ஆண், பெண் கலப்போடு
அறியுங்கால் அடியாரின் சங்கமம் உயர் தொண்டோடு
உயர் தொண்டின் சங்கமம் நல் புண்ணியத்தோடு
ஆன்மா,ஆக்கை எடுத்த பயன், புலன் ஆசை விட்டு, அன்றாடம், அறம், சத்தியம் தொடர்ந்து
மெய் ஞான வழியில் சென்று, ஆக்கை தாண்டி ஆன்மாவை இறையோடு சங்கமித்தாலே.
சங்கமிக்கும் காலம் வரை தேகம் மீண்டும், மீண்டும் சங்கமிக்கும்.
தமிழ் சங்கமம் வளர்த்த அன்னை மீனாள், பெருகூர் தன்னில் இருந்து, சங்கத்தோடு சில சந்தேகத்தோடு எம்முன் அமர்ந்த, என்றும் எம்மையே சங்கமித்து, எம்மையே சங்கல்பம் செய்து, சங்கில் இருந்து நாதம் வந்தாலும், எம் நாதமாக எண்ணி, எம்மையே சங்கநாதம் செய்யும் பூர்வ ஜென்ம தொடர்........... நல்லாசி!

Wednesday, 4 January 2017

சித்தன் அருள் - 558 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் அருளைக்கொண்டு, இயம்புவது யாதென்றால், இகுதொப்ப ஒரு மனிதனின் மனோநிலை, எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ, எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ, எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ, அந்த அளவிற்குத்தான் அவனை பொறுத்தவரை இந்த உலகமும், வாழ்க்கையும் உயர்வாகத் தெரியும். மனம்தான் வாழ்க்கை, மனம்தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி, எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி, எல்லாமே எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒருவிதமாகவும், நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க, அவனை பொறுத்தவரை இந்த உலகம், கயப்பாக தோன்றும். எனவே இப்படி இந்த உலகை, உலகை சுற்றி உள்ள மனிதர்களை, உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன், தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல, என்றாலும், அப்படித்தான் நடக்கவேண்டும் என்று எண்ணி, அதற்கு மாறாக நடக்கும் பொழுது ஒருவன் வருத்தப்படுகிறானே, அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையையும் மன உளைச்சலையும் தருகிறது. எனவே, இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதைவிட, "எப்படி இருந்தாலும் அதை ஏற்று கொள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா, எனக்குக்கொடு" என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும், திடத்தையும் அடைந்துவிட்டால், அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே, "துன்பங்களை மாற்று, தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று" என்று வேண்டுவதைவிட, "எல்லா நிலைகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும், நான் திடகாத்திரமாக, நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா" என்று வேண்டிக் கொண்டால் அதுதான் தீர்க்கமான ஒரு முடிவாக, நல்ல ஒரு நிச்சயமான, நிம்மதியான வாழ்விற்கு, அடித்தளமாக அமையும்.

Tuesday, 3 January 2017

சித்தன் அருள் - 557 - அகத்தியரும் மஞ்சள்பொடியும்!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! ஒரு அகத்தியர் அடியவருக்கு கிடைத்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அகத்தியப் பெருமானின் பெருங்கருணையை நாமும் ருசிப்போம்.]

தேடுங்கள்! தேடி அலையவே வாழ்க்கை. அப்படி அலைகிற பொழுது நிறையவே அனுபவங்கள் கிடைக்கும். அந்த அனுபவங்களே போதும், ஒரு நொடியில் வாழ்க்கையை சரியான பாதையில் திருப்பிவிட. வருடங்கள் தேவை  இல்லை. தேடும் பாதையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு புண்ணிய ஆத்மா, ஏன் சித்தரே நம்மை வரவேற்க நின்று கொண்டிருப்பார். எப்பொழுதும், மனம் அமைதியாக இருந்தால், நிகழ்காலத்தில் தெளிவாக இருந்தால், இவை அனைத்தையும் உணரலாம், உணர்ந்து வாழலாம். அப்படி இருந்த ஒரு நாழிகையில், அடியேனுக்கு கிடைத்த "சித்தன் அருளை" இந்த வலைப்பூவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர் வழி என்று ஒன்று இருக்கிறது, அது தர்மத்தின் வழி என்று கேள்விப்பட்டு, தொடக்க வகுப்பில் சேர்ந்த காலம். அந்த பாதையில் நடக்க தொடங்கிய பொழுதே, "கவனம்" என்பது தானாக என்னுள் முளைத்தது. பொறுமை, நடப்பதை சலனமின்றி பார்ப்பது, இவை எல்லாம் தெரிவிக்கப்பட்டது. எந்த சித்தரை வணங்குவது என்று தெரியாத ஒரு மனநிலையில் இருக்கும் பொழுது, சேர்ந்த நண்பர்கள் அகத்தியப் பெருமானை காட்டினார்கள். இவரை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர் கூறியது எதுவெல்லாம்? நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூட தெரியாத நிலையில் வலைப்பூவில் இவரை பற்றி நிறையவே தகவல் கிடைத்தது. கிடைத்த தகவல்களை எல்லாம் வாழ்க்கையில் அது போலவே நடைமுறைப்படுத்த தொடங்கினேன். விரைவில் நல்ல பலன்கள் கிடைத்தது. என்னை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியது. இது என் தேடலை வேகப்படுத்தியது என்பதே உண்மை. தினமும், ஒவ்வொரு நொடியும் அவரை நினைத்து பிரார்த்தனைதான்.

நாம்தான் மனிதராயிற்றே. கர்ம விதியின்படி நோய்க்கு உட்பட வேண்டிய ஒரு காலமும் வந்தது. அது ஒரு குளிர்காலம்.  பிறவி முதலே, மூச்சு முட்டு, மார்பில் சளி என்று சிரமப்பட்டுக் கொண்டிருந்த என்னை, அந்த குளிர்காலம் புரட்டிப் போட்டது. இந்த பாதையில் நடக்கத் தொடங்கியவுடன், மருந்து என ஒன்றை எடுத்துக் கொள்வதை அறவே தவிர்த்துவிட்டேன். எதுவாயினும், உடல் இயற்கையாக உள்சேர்ந்த கழிவுகளை வெளியேற்றிக் கொள்ளவேண்டும் என எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஒரு வாரமாயிற்று. மார்பில் சேர்ந்த சளி குறைவதாக தெரியவில்லை. மேலும் மேலும் வலுப்பெற்று, இழுவை நிலைக்கு கொண்டு சென்றது. சிரமம் அதிகமாகவே, ஒரு மருத்துவரை அணுகி பரிசோதிக்க, அவர் சளியின் இழுவை வேகத்தை பார்த்து, கோபப்பட்டார், மிக பலமான மருந்து மாத்திரைகளை சாப்பிடவேண்டும் என எழுதிக்  கொடுத்தார். சரி! ஒருமுறை நம் தீர்மானத்தை விலக்கி வைத்து, அவர் சொல்படி கேட்போம் என மருந்தினை எடுத்துக் கொண்டேன். ஒன்றும் உதவி செய்யவில்லை. இன்னும் ஒருவாரம் ஆகியும் மார்பு சளி அப்படியேத்தான் இருந்தது. மேலும் வலுவடைந்தது போல் ஒரு உணர்வும்.

சரி! தினமும் அகத்தியர் சித்தரை நினைத்து பிரார்த்தனை செய்கிறோமே. அவரிடமே இதற்கு ஒரு வழியை கேட்போம் என்று நினைத்து அன்றைய தினம் த்யானத்தில் என் பிரார்த்தனையை சமர்பித்தேன்.

"அய்யனே! இரு வாரமாக மார்பு சளி, மூச்சு முட்டல் போன்றவை ரொம்பவே படுத்துகிறது. மருத்துவ சிகிர்ச்சை எடுத்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஏதேனும் ஒரு வழி காட்டுங்களேன். இந்த மார்பு சளி இழுவையிலிருந்து விடுதலை தரக்கூடாதா?" என பிரார்த்தித்தேன்.

சற்று நேர அமைதி. கண் மூடி, த்யானத்தில் அவர் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

"பெருமாள் கோவிலில், என் சன்னதிக்கு வா! மஞ்சள் மருந்தாக தருகிறேன்" என்று மிக சன்னமாக கூறுவது கேட்டது. கவனம் அசைவின்றி இருந்ததால், சொன்னது அனைத்தும் மனதுள் பதிந்தது.

"சரி! ஏதோ உத்தரவு வந்துவிட்டது. சென்று விட வேண்டியதுதான்." என்று நினைத்து, எந்த பெருமாள் கோவில் என தேடத்தொடங்கினேன். நினைவை துழாவிப் பார்த்து (பெருமாள் கோவிலில், அகஸ்தியர் சன்னதி) என்று உத்தரவு வந்தது நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் திருப்பதிசாரம் பெருமாள் கோவில் தான் என்று உணர்ந்தேன்.

இந்த அகத்தியர் சன்னதியை பற்றி சொல்வதென்றால், அகத்தியர் தனி சன்னதியில் இல்லை. ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர், இன்னும் இரு முனிவர்கள் இவர்களுடன் ஆஞ்சநேயருக்கு நேராக நின்று அவர் முகத்தை இவரும், இவர் முகத்தை அவரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பொதிகையில் ஸ்தாபிதம் செய்துள்ள அதே முக ரூபத்தை கொண்டுள்ள ஒரு சிலை. இது இருப்பதும், பெருமாள் கோவிலில் ஆனால் உள் மண்டபத்தில்.

அடுத்து வந்த ஞாயிற்று கிழமை, நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு "திருப்பதிசாரம்" கோவிலுக்கு சென்றேன். செல்லும் வரையிலும், வியாதி குணமாகவே இல்லை.

நேராக அகத்தியப் பெருமான் சன்னதிக்கு சென்று சற்று நேரம் அவரையும், மற்ற தெய்வங்களையும் பிரார்த்தித்து நின்றேன்.

"வர சொன்னீர்கள். இந்த கோவில்தான் என்று மனதுள் நினைத்து வந்தாயிற்று. அந்த நினைப்பு சரியா, தவறா என்று தெரியாது. தாங்கள்தான் கனிவு கூர்ந்து அருளவேண்டும்" என விண்ணப்பித்துவிட்டு சற்று நேரம் நின்றேன். சுற்று முற்றும் பார்த்தும், எங்கும் மஞ்சளின் சாந்நித்தியம் கிடைக்கவில்லை. காற்றில் கூட மஞ்சளின் வாசனை தெரியவில்லை.

"என்ன இப்படி?" என்று நினைத்து, "சரி! பெருமாளை தரிசித்து ஆசிர்வாதம் வாங்கி வரலாம். அதன் பின் மஞ்சள் கிடைக்கும்" என்று அவர் சன்னதியை நோக்கி சென்றேன்.

மிகுந்த அமைதி. பூசாரியும் இரு பக்தர்களும்தான் இருந்தார்கள். சன்னதிக்கு அருகில் சென்று பெருமாளையும், தாயாரையும் பிரார்த்தித்து சற்று நேரம் அங்கேயே நின்றேன். எதோ ஒன்று உந்த, "பெருமாளே, உங்கள் பிரியப்பட்டவர் வரச்சொன்னார். வந்துவிட்டது இது. ஏனோ தெரியவில்லை, இங்கு அவர் தருவதாக சொன்ன மருந்து கிடைக்குமா? எங்கும் சிறு வாசனை கூட இல்லையே! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறேனா? புரிய வையுங்களேன்" என வேண்டிக்கொண்டேன்.

ஒரு ஐந்து நிமிடம் அவர் முன் நின்று பிரார்த்தித்து விட்டு, மறுபடியும் ராமர் அகத்தியர் சன்னதி முன் வந்து நின்றேன். கண் மூடி த்யானத்தில் அகத்தியரை வேண்டி நின்றேன்.

சற்று நேரத்தில், மஞ்சள் வாசனை மூக்கினுள் நுழைந்து, என் தியானத்தை கலைத்தது.

"என்ன! ஆச்சரியம்! மஞ்சள் பொடி வாசனை வருகிறதே! எங்கிருந்து?" என கண் திறந்து அகத்தியரை பார்க்க,

எனக்கு பின்னாலிருந்து "ஹ்ம்ம்" என குரல் வந்தது.

திரும்பி பார்த்த பொழுது, நாலடி உயரத்தில் ஒரு வயதான பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு, அவர் கையை பார்க்க, அங்கே ஒரு வெள்ளிக்கிண்ணத்தில் தூய மஞ்சள் பொடி, ஒரு சிறு ஸ்பூன். நான், அவரின் முகத்தை தீர்க்கமாக பார்த்து உள் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆனால் கடைசிவரை, அவர் கண்களை (விழிகளை) பார்க்க விடவில்லை.

"இந்தா! இதை சாப்பிடு!" என்று ஸ்பூன் நிறைய மஞ்சள் பொடியை, இருமுறை, என் நீட்டிய கைகளில் பதித்தார்.

மஞ்சளின் மணம் மூக்கை துளைத்து ஏறியது. அதுவே, அந்த மருந்தின் வீரியத்தை உணர்த்தியது.

அவர் அளித்ததை அப்படியே வாயில் போட்டு முழுங்கிவிட்டு, வேகமாக கைப்பையை திறந்து 50 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் தக்க்ஷிணையாக கொடுத்தேன்.

சிறு புன்னகையுடன் அதை வாங்கியவர், அப்படியே அதைக் கொண்டு போய் பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருக்கும் உண்டியலில் போட்டார். ஒரு முறை பெருமாளை திரும்பி பார்த்து, கண்மூடி த்யானித்துவிட்டு, எதிர் பக்கம் இருக்கும் ஒரு சன்னதியை நோக்கி சென்றார்.

அதே இடத்தில் சிலைபோல் நின்று மொண்டிருந்த நான், நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு திடீரென அவரை தொடரவேண்டும் என ஆவல் உந்தவே, வேக வேகமாக அகத்தியப் பெருமானுக்கு அவர் சன்னதியில் நின்று நன்றி கூறிவிட்டு, அவர் சென்ற வழியில் நடக்கத்தொடங்க, "பெருமாளை ப்ரதக்ஷிணம் செய்து போ" என யாரோ சொல்வதுபோல் உணர்ந்தேன்.

பெருமாளை ப்ரதக்ஷிணம் செய்து வரும்முன் அவர் போய்விட்டாலோ என்று எண்ணம் வந்தது. "சரி! சொல்லக்கேட்டுவிட்டோம்! அதன் படியே நடப்போம்" என நினைத்து, பெருமாளை ப்ரதக்ஷிணம் செய்து வந்து பார்த்தால், அவர் எங்குமே இல்லை.

மிக மிக அமைதியாக முடிந்தவரை அனைத்து இடங்களிலும் தேடியும், அவரை பார்க்க வில்லை.

கூட வந்த நண்பருக்கும் மஞ்சள்பொடி சாப்பிடக் கிடைத்தது. அவரும் வேக வேகமாக கோவிலுக்கு வெளியே தெரு முனைவரை சென்று தேடியும், அவரை பார்க்க முடியவில்லை.

"என்ன செய்யலாம்?" என்ற  பொழுது,

"வந்த வேலை முடிந்துவிட்டது! கிளம்புவோம் வா!" என கூறி அனைவருக்கும் நமஸ்காரத்தை தெரிவித்து ஊருக்கு கிளம்பினோம்.

எப்படி சொல்ல? ஊர் வந்து சேர்வதற்குள்ளாகவே, மூச்சுமுட்டு விலகிப் போனது. மறுநாள் மார்பில் கட்டியிருந்த சளி, எங்கு போனது என்று தெரியவில்லை.

அகத்தியப் பெருமானின் அருளுக்கு ஈடிணை இவ்வுலகில் எதுவுமே இல்லை. சரி! மஞ்சள் பொடியை மருந்தாக கொண்டு தந்தது யார்? அகத்தியரா? இல்லை அவர் சிஷ்ய கோடிகளில் ஒருவரா? இன்றும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

இதில், இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால்,

பிறிதொரு முறை,  வேறு ஒருவருக்காக, அந்த கோவிலுக்கு சென்று, அர்ச்சகரிடம் "பெருமாளுக்கு நிவேதனம் செய்த மஞ்சள்பொடி கிடைக்குமா?" என்றிட, அவர்,

"இந்த கோவில்ல அப்படி பிரசாதம் எல்லாம் கிடையாது. சந்தனமும், துளசியும்தான் கொடுப்போம். பெருமாள் கோவில்ல கொடுக்கிற தீர்த்தம் கூட இந்த கோவில்ல கொடுக்கும் முறை இல்லை" என்று விரட்டிவிட்டார். பழக்கமே இல்லாத இடத்தில் வந்து, அடியவருக்காக மருந்தை அளித்த அகத்தியரை, என்னவென்று சொல்வது. இல்லை! அர்ச்சகரிடம் போனமுறை இப்படி நடந்ததே என்று கூறவா முடியும்?

அகத்தியப் பெருமானின் இந்த திருவிளையாடலை என்னவென்று சொல்வது. அவர், தன் சேய்களை மிகுந்த கவனத்துடன், எதை செய்யவேண்டுமோ, அதை செய்து, காத்து வருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!   

சித்தன் அருள் - 556 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தர்மம் தருவதே தருமம். தர்மத்தில் யார் தருகிறார், யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா. தன்னிலை உணர்ந்து, தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். தர்மம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே, தருமம். தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம். பேதங்கள் நோக்காது செய்வதே தருமம். உறவு, நட்பு, பகை நோக்காது செய்வதே தர்மம். அப்பனே தருமம், அன்னைக்கு அன்னையே தருமம். அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தர்மம். அகத்தில் சாந்தம் பொங்க, வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தர்மம். அதனை உணர்ந்து, உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தர்மம். தர்மத்தை தடுக்காதிருப்பதே தர்மம். பற்றில்லா செய்வதே தர்மம். அறப்பண்போடு செய்வதே தர்மம். தன்னலம் விட்டும், பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம். தன் இனமில்லா, பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம். தன்னை அறிந்து தனக்குள் இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம். கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம். நாட்டம் தவிர்ப்பதே தர்மம். இட்டம் (இஷ்டம்) பலிப்பதே தருமம். இட்டம் (இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம். நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தர்மம். இலகுவாக வாழ்வை மாற்றித்தருவதே தர்மம். தன் நிலை தாண்டி மேல் உயரவைப்பதே தர்மம். தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தர்மம். தன்னையறிய உதவும் தர்மம். தன்னலமில்லா பொதுநலத்தை வளர்ப்பதே, தர்மம். தன்னை, தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டுவது தர்மம். உறவு தாண்டிச் செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தர்மம். உயிர் காக்க உதவுவது தர்மம். உள்ளன்போடு செய்வது தர்மம். தன்னை, தனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தர்மம். இதுபோல் தொடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம். இதனை உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம். தினம் நாளும் செய்வதை வகுத்து, வகுத்து, பிரித்துப் பிரித்து பார்த்து, அதில் உள்ள தன்மையை நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம். ஆசிகள்!

Monday, 2 January 2017

சித்தன் அருள் - 555 - புத்தாண்டில் பாபநாசம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த வருட முதல் நாளில் பாபநாசத்தில் நீராடி, இறைவனை தரிசித்து (மார்கழி மாதம், பாபநாச நீராடல், இறை தரிசனம், இந்த பூமியில் மறுபிறவியை தவிர்க்கும் என்பார்கள்), அகத்தியருக்கு, கல்யாண தீர்த்தத்தில் அபிஷேகம் செய்கிற பாக்கியத்தை அடியேன் பெற்றுக் கொண்டேன். உண்மையாகவே, சில மாதங்களாக அகத்தியரிடம் வேண்டாத நேரமில்லை. எல்லோருக்கும் அபிஷேகம் பூசை செய்கிற பாக்கியத்தை இறைவன் அருளிய பொழுது, தங்களுக்கு மட்டும் அபிஷேகம் செய்கிற அந்த நொடி இதுவரை கிடைக்கவே இல்லை. அதை இங்கேயே, பாபநாசத்தில் உங்கள் சன்னதியில் அருளக்கூடாதா என்று சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தேன்.

எதற்கும் நேரம், காலம் என்று ஒன்று உண்டு. நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், இந்த வருடம் முதல் நாளில், ஒரு நண்பருடன் சென்று, கூட்டம் இல்லாத தருணத்தில், அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், அபிஷேகம், அலங்காரம், ஜபம், நிவேதனம் போன்றவை செய்ய முடிந்தது. நிச்சயமாக அது குருவருள். அடியேனின் வாழ்வில், முதல் முறையாக, அகத்தியப் பெருமானுக்கும் லோபாமுத்திரை தாய்க்கும், என் கரத்தால் அபிஷேகம் செய்கிற பாக்கியம் கிடைத்தது. (ஒரு தகவல் - அங்கே செல்பவர்கள் யார் வேண்டுமானாலும் அபிஷேக பூசை செய்யலாம். செல்லும் பொழுது, பூசைக்கான, தகுந்த ஏற்பாடுடன் செல்வது நல்லது. மாலை 5 மணிக்கு மேல் கல்யாணதீர்த்தம் பகுதிக்குள் யாரையும் விடுவதில்லை.) பூசை மிக எளியதாக இருந்தாலும், மிகுந்த மன நிறைவை தந்தது.

பூசை முடித்து, அவரிடமே செய்த பூசையை ஒப்படைக்கும் பொழுது ஒரு எண்ணம் தோன்றியது. அதையும் விண்ணப்பித்து விட்டேன்.

"அய்யனே! எத்தனையோ அடியவர்கள், எத்தனையோ பிரச்சினைகளுடன் நித்தம், நித்தம் வாழ்க்கையில் போராடி வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கர்ம வினைகள் தீரவும், மன எண்ணங்கள் ஈடேறவும், இனி வரும் நாட்களில் உங்கள் அருகாமையும், வழி நடத்துதலும் கிடைக்க வேண்டும். உடனேயே அருளுங்கள்."

அங்கு மிகுந்த அமைதி நிலவியது. அகத்தியப் பெருமான் நிச்சயம் அனைவருக்கும் அருளுவார். பொறுமை அவசியம். அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறேன்.

மேலும், வரும் வழியில், கோடகநல்லூர் சென்று, தாமிரபரணியில் நீராடி, பச்சை வண்ணப் பெருமாளின் தரிசனமும், ஆசிர்வாதமும் பெற்று, ஊர் வந்து சேர்ந்தோம். செல்லும் வழி எங்கும், வலைப்பூவழி தொடர்பு கொள்ள முடியாததால், நேற்றைய தினம் "அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கை" வழங்க முடியவில்லை. இருப்பினும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தயப் பெருமானிடம் உங்கள் அனைவருக்காகவும் விண்ணப்பிக்க முடிந்ததே என்பதில் மிகுந்த மன நிறைவு பெற்றேன்.
 
எல்லோரும் அவர் அருள் பெற்று நிறைவாக வாழவேண்டும்.ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள் - 554 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

புத்தாண்டு - 2017

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் அனைத்து அருளையும் வழங்கட்டும் என்று அகத்தியப் பெருமான், இறைவனிடம் வேண்டுதலை சமப்பித்துள்ளேன். அனைவரும் அதை அவர்களிடமிருந்து பெற்று சந்தோஷமாக, அமைதியாக, மேலும் அவர்கள் அருள் கிடைக்கும்படியான வளர்ச்சியை பெறவும் வாழ்த்துகிறேன். இந்த ஆண்டின் இனி வரும் ஒவ்வொரு நாட்களும், வினாடியும் அகத்தியர் அருளுடன் வந்து சேரட்டும்.

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இகுதொப்ப யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல், உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால், அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது கடினம். ஆனால், அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்தோ அல்லது சிறிது மோரை சேர்த்தோ அந்த உப்பை சரி செய்வது போல, ஒரு மனிதன், கர்ப்ப கோடி காலம்  எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும், அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக, புதிதாக பாவம் செய்யாமலும், அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும், சிறிது நீரையோ, மோரையோ சேர்ப்பதுபோல, புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டு வந்தால், அகுதொப்ப அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது போல, அந்த பாவத்தினால் வரக்கூடிய விளைவுகள் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும். பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதால், உப்பின் தன்மை தெரியாதது போல, சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக, அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக, பாவத்தின் தாக்கம், அவன் தாங்கும் வண்ணம் அமைந்துவிடுகிறது. அவ்வளவே. இந்த கருத்தை மனதில் கொண்டு, எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும், (அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்படவேண்டாமா என்று வினவ வேண்டாம்) யாராக இருந்தாலும், அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கை என்றும் உயர்வாக, இனிமையாக, திருப்தியாக, சந்தோஷமாக, சாந்தியாக இருக்கும். ஆசிகள்!