​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 29 July 2013

நாடி வாசிப்பது பற்றிய தகவல்!

வணக்கம்!

திரு.ஆனந்தகுமார் (ஈமெயில்:dksanand@gmail.com), என்கிற அகத்தியர் அடியவர் ஒரு தகவலை அளித்து, சித்தன் அருள் வலைப்பூவை வாசிக்கும் அடியவர்கள் நலத்திற்காக பகிர்ந்து கொள்ளச் சொன்னார்.  அந்த தகவலை கீழே தருகிறேன். மேலும் விவரங்களுக்கு திரு.ஆனந்தக்குமாரை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

மேட்டுப்பாளையத்துக்கு அருகில் கல்லாரில் அமைந்துள்ள அகத்தியர் ஆஸ்ரமத்தில் "அகத்தியர் ஜீவ நாடி" படிக்கிறார்களாம்.  "சித்தன் அருளை" தொடர்ந்து வாசித்து வந்த பல அன்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த தகவலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  "கல்லார்" ஆச்ரமத்தைப் பற்றிய விலாசத்தை  கீழே எடுத்துக் கொள்ளவும்.  சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

அவரே தந்த வேறு சில தகவல்களும்:-

திரு சரவணன் என்பவர் கிருஷ்ணகிரியில் சிவன் கோவிலை கட்டி அங்கே அகத்தியருக்கென்று ஒரு தனி சன்னதி உருவாக்கியுள்ளாராம்.

குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக, மறைந்த திரு.ஹனுமத் தாசன் (அகத்தியர் மைந்தனாக இருந்து நாடி வந்தவர்கள் அனைவருக்கும் அகத்தியர் அருள் வாக்கை வாங்கிக் கொடுத்தவர்) அவர்களுக்கு குருபூஜை 25/09/2013 அன்று இந்தக் கோவிலில் வைத்து நடத்துவதாக தீர்மானித்துள்ளார்.

அகத்தியர் அடியவர் திரு.சண்முகம் ஆவுடையப்பர் என்பவர் பகிர்ந்து கொண்ட விரிவான தகவலை கீழே தருகிறேன்.

அகத்தியர் ஜீவநாடியானது அகத்தியரின் பிரதான அடியவரான தவத்திரு தங்கராசன் என்பவரிடம் கல்லாரில் உள்ள "ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவ முருகர் ஞான பீடத்தில் உள்ளது.  சனிக்கிழமை அன்று ஐந்து பேர்களுக்கு மட்டும்தான் வாசிக்க உத்தரவு உள்ளதாம்.  யாருக்கு அகத்தியரின் அருள் உண்டோ அவருக்கு மட்டும் அகத்தியர் அருள் புரிவார்.

திரு.தங்கராசன் சுவாமிகளை 9842027383 என்கிற எண்ணிலும், மாதாஜி சரோஜினி அம்மையாரை 9842550987 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து செல்வது நல்லது என்கிறார்.

விலாசம்:-

Sri Agathiyar Gnana Peedam Thirukovil,
2/464, Agathiyar Nagar, 
Thuripaalam, 
Kallar - 641 305, 
Methupalaiyam, 
Coimbatore.

ஆஸ்ரமம் செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது.

கார்த்திகேயன்!

Thursday, 25 July 2013

சித்தன் அருள் - 134

மனிதர்கள் இத்தனை ச்ரமங்களை அனுபவிக்க காரணம் அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்கிற தவறுகள் தான் என்று பல நேரங்களில் அகத்திய பெருமான் விளக்கும் போது உணர முடிந்தது.  அதிலும் மிக கொடியது என்பது, "தவறு என்று தெரிந்தும் சுயநல நோக்குடன் செய்கிற செயல்கள்".  அதை செய்து பல வருடங்கள் ஓடியபின் அதன் தாக்கம் பலவித வேதனைகள் வழி அப்படிப்பட்டவர்களை வருத்தும் போது சித்த பெருமக்களை நாடி வந்து வழி தேடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் இரு வித மனநிலை உடையவர்கள் இருப்பார்கள்.  தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொண்டு சித்தர் சொல்கிறபடி பரிகாரங்களை செய்து விடுதலை அடையவேண்டுபவர் ஒரு தரம். இரண்டாவது தரம், அனைத்தையும் மறைத்து வைத்து, சித்தர் தவறை சூசகமாக சுட்டிக்காட்டியும்,   வந்தவர் தன்னை தவறே செய்யாத யோக்கியன் என காட்டிக் கொள்வார். அப்போது சித்தர்கள் அவர்களை நடத்துகிற முறை நிறையவே வித்யாசமானதாக இருக்கும்.  மறுபடியும் பிரச்சினை பூதாகரமாக ஆனபின் ஓடி வரட்டும், அப்போது பார்க்கலாம் என்று விட்டுவிடுவார்கள். அப்படி போய் ஓடிவரும்போது அவர்களிடம் உண்மையாகவே திருந்துகிற மன நிலை இருக்கிறதா என்று சோதித்து பார்த்தபின், மனம் கனிந்து சித்தர்கள் உதவி புரிவார்கள். அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

அன்று ஒருநாள் நாடி பார்க்க உட்கார்ந்த போது

"நீங்கள் சொன்னது அத்தனையும் செய்து விட்டேன். ஆனால் இதுவரை ஒன்று கூட நடக்கவில்லை. இருந்தாலும் மறுபடியும் அகத்தியரை நாடி வந்திருக்கிறேன்.  என் பிரச்சினைக்கு ஏதேனும் வழி காட்டுங்கள்" என்றாள் அந்த நடு வயது பெண்மணி.

"என்ன பிரச்சினை?" நிதானமாக கேட்டேன்.

"கடன் தான். என் கணவருக்கு உடல் நலம் சரியில்லை.  "கிட்னி" சரி வர இயங்கவில்லை. எனக்கும் ஒரு விபத்தில் ஏற்பட்ட அடியில் முதுகுத் தண்டில் வலி. குனிந்து நிமிர முடியவில்லை" என்றாள்.

"வேறு ஏதாவது இருக்கிறதா?"

"இருக்கு.  என் பெண்ணுக்கு இருபத்தி இரண்டு வயது.  நன்றாகவே படித்துக் கொண்டிருந்த அவளுக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. கல்லூரிக்குப் போக மறுக்கிறாள்.  தனக்குத் தானே பேசி, சிரித்துக் கொள்கிறாள்.  ராத்திரி நேரத்தில் அவள் தூங்குவதே இல்லை":

"டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டினீர்களா?"

"பார்க்காத டாக்டர் இல்லை.  ஏதேதோ மருந்து கொடுத்தார்கள். சரி வரவில்லை.  மருத்துவமனையில் அட்மிட் பண்ணி சிகிர்ச்சை செய்தேன். இதுவரை பயன் இல்லை.  யாரோ காதில் பேசிக் கொண்டே இருப்பது போல் உணர்வதாக சொல்கிறாள்".

"என்ன பேசுவதாக சொல்கிறாள்?"

"இதைச் செய்யாதே. அதை செய்யாதே, அந்தப் பக்கம் போகாதே, இதைச் சாப்பிடாதே, உன் அப்பா ஒரு அயோக்கியன், அவனை நம்பாதே, என்று சொல்வது போல் தோன்றுகிறதாம்"

"எத்தனை நாளாக?"

"எட்டு மாதமாக" என்று சொல்லி முடித்தாள்.

"இதற்கு முன்பு எப்பொழுது அகத்தியர் நாடியைப் பார்த்தீர்கள்?"

"மூன்று வருஷத்திற்கு முன்பு - அதன் பிறகு வரவேண்டும் என்று நினைத்தேன், முடியவில்லை.  இன்றைக்குத் தான் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது".என்றாள்.

இதைக் கேட்டதும், எனக்கு ஒரு மாதிரியாக ஆயிற்று!

மூன்று வருஷத்திற்குப் பின் இப்போது வந்து ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னவள், இப்பொழுது அருள் வாக்கு கேட்டு எட்டு வருஷம் கழித்து "ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னாலும் சொல்வாள்.  நமக்கென்ன? அகத்தியரிடம் வாக்கு கேட்போம்.  அவர் சொன்னால் அப்படியே சொல்வோம்.  இல்லையேல் விட்டுவிடுவோம்" என முடிவெடுத்தேன்.

அகத்தியர் நாடியில் சொன்னது இது தான்.

"அன்றைக்கு கஷ்டப்பட்டாள்.  வழி காட்டினோம். இதுவரை முறைப்படியாக எதுவும் செய்யவில்லை. இருப்பினும் அவளது கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.  பணம் பல வழிகளில் குவிந்தது. அகலக் கால் வைத்தாள்.  நாலைந்து கார்கள் வாங்கி வாடகைக்கு விட்டாள்.  மேலும் பணம் குவிந்தது. வெளிநாட்டிற்குச் சென்றாள், உல்லாசமாக பணத்தை செலவழித்தாள். தொழிலை சரியாகக் கவனிக்க முடியாததால் அத்தனை பேர்களும் ஏமாற்றினார்கள்.  கடன் ஏற்பட்டது.  இப்பொழுது அத்தனையையும் மறைத்து விட்டு அகத்தியனிடமே பொய் சொல்கிறாள்.  என்ன வேடிக்கையான உலகமடா" என்று எனக்கு மாத்திரம் தெய்வ ரகசியமாக சொல்லி விட்டு........

"சில பரிகாரங்களைச் சொல்கிறேன்.  அதை மாத்திரம் செய்து வந்தால் உன் கணவருக்கு ஏற்பட்ட கிட்னி தோஷம் விலகும்.  சவுக்கியமாக இருப்பார்", என்றார், அகத்தியர்.  சில பிரார்த்தனைகளையும் சட்டென்று சொன்னார்.

"இரண்டு கிட்னியும் சரியாகி விடுமா?" என்று ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.

"நிச்சயம் சரியாகிவிடும்.  ஆனால் ஒன்று, நீயும் உன் கணவரும் மிகப் பெரிய தவறைச் செய்து இருக்கிறீர்கள்.  அந்த ஏழைகளின் சாபம் தான் இப்படி உங்களை கஷ்டப்படுத்துகிறது.  அது என்ன தப்பு என்பது உங்களுக்கு தெரியும்" என்று ஒரு பீடிகையைப் போட்டார் அகத்தியர்.

சிறிது நேரம் யோசிப்பது போல் யோசித்துப் பார்த்து விட்டு, நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்யவே இல்லையே" என்று ஒட்டு மொத்தமாக அந்த பெண்மணி மறுத்தாள்.

அதோடு தான் செய்த தானங்களையும் பட்டியல் போட்டு பேசினாள்.  அவளது ஆணித்தரமான மறுப்பு என்னையே குலை நடுங்க வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இனி இவளோடு பேசுவதில் எந்த பயனும் இல்லை, என்று விட்டுவிட்டேன்.

என் வீட்டுக்காரருக்கு பலன் சொல்லி விட்டீர்கள். அது சரி... எப்போ எங்க கடன் அடையும்? என் பெண்ணுக்கு எப்பொழுது மனஅழுத்த நோய் விலகும். இதைப்பற்றி அகத்தியர் ஒன்றுமே சொல்லவில்லையே" என்றார் குறையுடன்.

"அகத்தியரால் சொல்ல முடியவில்லையே என்று சொல்லாதீர்கள்.  அவரால் எதையும் ஆதாரத்தோடு சொல்ல முடியும்.  ஆனால் அதைத் தாங்கும் பக்குவம் உங்களுக்கு தான் இருக்காது" என்றேன்.

"பரவாயில்லை, என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.  சொல்லுங்கள்" என்று விடாப்பிடியாக கேட்டாள்,

நான், அகத்தியரை வேண்டிக் கொண்டு நாடியைப் பிரித்தேன்.

அகத்தியர் ஓலைச் சுவடியில் வரவே இல்லை.

இதை அந்த பெண்மணியிடம் சொன்ன போது ஏளனமாகச் சிரித்தாள்.

"நீங்கள் மட்டுமல்ல.  அகத்தியரோ, காக புசுண்டரோ, திருமூலரோ கூட பதில் சொல்ல முடியாது.  ஏனென்றால் நான் என் நினைவிற்குத் தெரிந்து எந்த தவறும் செய்ய வில்லை.  அது தான் உண்மை " என்று அடித்துப் பேசினாள்.

இந்த பெண்மணி தவறு செய்யாமல் இருந்தால் அவளுக்கு ஏன் இந்த கஷ்டம். கிட்னி பழுதடைந்து உயிருக்குப் போராடும் கணவன், திடீர்ன்று மனப் பிரம்மை அடைந்து சித்த சுவாதீனமாக இளம் பெண், கூடவே கழுத்தை நெரிக்கும் கடன் ஏன் ஏற்படுகிறது? என்று நான் யோசித்தேன்.

அகத்தியரே நாடியில் வந்து சொல்லாத போது நாமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

அகத்தியரை வார்த்தைகளால் தோல்வி அடையச் செய்த மதமதப்பில் பீடு நடை போட்டாள் அந்த பெண்மணி.

பத்து மாதங்கள் சென்றன.....

அதே பெண்மணி - மிகவும் தளர்ந்த நிலையில் என்னிடம் வந்தாள்.  அவளைக் கண்டதும் என் அடிவயிறு கூட கலங்கியது.  எதற்காக வந்திருக்கிறாள் இவள்? என்று சற்று பதைபதைத்துப் போனேன்.

"அய்யா, என்னை ஞாபகமிருக்கிறதா?" என்றாள்.

"அகத்தியனை அவமானப்படுத்தி விட்டு திமிர் பிடித்த நடையில் சென்ற உன்னையா ஞாபகமிருக்காது?" என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட நான், அசட்டு சிரிப்போடு "உங்களையா எனக்கு தெரியாது?" என்று மேலோட்டமாக பேசினேன்.

"அய்யா! அகத்தியர்தான் என் வீட்டுக்காரரையும், என் பெண்ணையும் காப்பாற்றணும்" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

இது என்ன புதுசாக இருக்கு என்று எண்ணினேன்.

"சொல்லுங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு?"

"அன்னிக்கு அகத்தியர் கிட்டே சவால் விட்டுட்டுப் போனேன்.  இப்போ என் கணவரே என்னை விட்டுப் போயிடுவார் போலிருக்கு.  என் பெண்ணுக்கும் இன்னும் சித்தப் பிரமை போகவில்லை.  இன்னும் சொல்லப் போனால் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது" என்று புலம்பினாள் அவள்.

"கடனுக்கு பரிகாரம் சொன்னாரே, அதை செய்துவிட்டு வந்தீர்களா?" என்று கேட்டேன்.

"செய்யவில்லை" என்று தலையை மெதுவாக ஆட்டினாள்.

"ஒண்ணுமே செய்யாமல் மீண்டும் அகத்தியரிடம் வந்தால் நல்ல பதில் கிடைக்காதே" என்றேன்.

"நான் தான் சொல்றேனே, அகத்தியர் கிட்டே ஒண்ணுமே மறைகல்ல, பெரிய பெரிய தப்பு பண்ணியிருக்கோம்.  அது தான் என் மனதை உறுத்துகிறது.  ஆனால் அதுக்கு பரிகாரம் செய்யலே" என்று ஏதேதோ சொன்னாள்.

இனியும் இந்தப் பெண்மணியை தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணி இப்போதாவது அகத்தியர் நல்ல வார்த்தை கூறுவாரா? என்று பிரார்த்தனை செய்து நாடியைப் புரட்டினேன்.

"அன்றைக்கு அகத்தியன் இவள் பொருட்டு வாய் திறக்கவில்லை.  அதை சாதகமாக எடுத்துக்கொண்டு தன்னைப் புனிதவதியாக காட்டிக் கொண்டாள். இவள் கணவன் பிழைக்க வேண்டுமானால் நாமக்கல்லுக்குச் சென்று இளங்கோவன் குடும்பத்தினரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கட்டும் முதலில்.

பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு வந்து சேலம் குகைக்கு அருகிலுள்ள பவானியம்மாள் குடிசைக்குச் சென்று தன் கையிலிருக்கும் எட்டு பவுன் தங்க சங்கிலியை அவளுக்குக் கொடுத்து வரட்டும்.

இந்த இரண்டையும் முடித்து விட்டு சோளிங்கர் வந்து லட்சுமி நரசிம்மர் சன்னதியில் காலையிலிருந்து மாலை ஆறு மணி வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் லட்சுமி நரசிம்மர் மந்திரங்களையும், காயத்ரியையும் ஜெபிக்கட்டும்.  இனி எந்த தவறையும் செய்ய மாட்டேன் என்று லட்சுமி நரசிம்மரிடம் சத்திய வாக்கு கொடுத்து வரட்டும்.

இதை இன்னும் மூன்று நாட்களுக்குள் செய்யவில்லையெனில், கணவனையும், மகளையும் பற்றி அறவே மறந்து விட வேண்டியதுதான்" என்று அகத்தியர் அணுகுண்டு ஒன்றையும் தூக்கி எறிவது போல் போட்டார்.

இத்தனையும் கேட்டுக் கொண்ட அந்த பெண்மணி மறுமொழி பேசாமல் அகத்தியரை வணங்கி விட்டு விருட்டென்று வெளியேறினாள்.  எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஒரு வாரம் கழித்து அந்த பெண்மணி மகிழ்வோடு என்னைத் தேடி வந்தாள். தன கணவருக்கு வேறொருவரின் கிட்னி கிடைக்கப் போவதாகவும், சித்த சுவாதீனமாக இருந்த தனது இளம் மகள் இப்பொழுது முற்றிலும் தேறிவிட்டதாகவும் கூறிய போது ஆச்சரியப் பட்டு போனேன்.

"அப்படி என்னதான் அதிசயம் நடந்தது?" என்று அந்தப் பெண்மணியிடம் நிதானமாக கேட்டேன்.

"ஒரு சில டாக்டர்களின் தூண்டுதலின் பேரில் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏழைகளை ஏமாற்றி, அவர்களது கிட்னியை எடுத்து விற்று பிழைத்தோம். நல்ல வருமானம் வந்தது.  அதன் காரணமாக என் கணவருக்கு கிட்னி போயிற்று.  ஒரு ஏழைப் பெண்ணிற்கு கிட்னியை எடுக்கும் பொழுது தவறான சிகிற்சையால் அவள் பைத்தியமானாள்.  அதனால் என் பெண்ணிற்கும் சித்த பிரம்மை பிடித்தது.  இப்போது அந்த பாவம் அகத்தியர் கருணையால் விலகியது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு காணாமல் போனாள்.  இன்று வரை கண்ணில் தென்படவே இல்லை.

சுயநலத்திற்காக பிறரின் வாழ்க்கையை சிதற அடிக்கும் செயல்களுக்கு மனிதன் என்று முற்றுப்புள்ளி வைக்கிறானோ, செய்தது தவறு என்று உணர்ந்து திருந்துகிறானோ, அன்று முதல் தான் அமைதி என்பது மனித வாழ்வில் நிலைத்து நிற்கும்.  அதுவும் சித்த பெருமான் துணை இருந்தால் மட்டும் தான்.

சித்தன் அருள் ...................... தொடரும்!

Thursday, 18 July 2013

சித்தன் அருள் - 133

கலியுகம் ஒரு விசித்திரமான காலம். நன்றாக நல்ல மனநிலையுடன் வாழவேண்டிய மனிதர்கள் கூட அதன் பாதிப்பினால் கெட்டுப் போவார்கள். அதுவும் இறைவன் நமக்கு நடத்தும் ஒருவித சோதனைதான், என்று உணர்பவர் மிக குறைவே.. 

எளிய அன்பு நிறைந்த வாழ்க்கை, .பிறருக்கு கெடுதல் செய்யாத மன நிலை, பிறர் பொருளுக்கு ஆசை படாத மனம், நேர்மையான வாழ்க்கை முறைகள் போன்றவற்றை மனிதன் உணமையிலேயே தொடர்கிறானா என்று அறிய இறைவன் நடத்தும் ஒரு சோதனை என்றுதான் பெரியவர்கள் எப்போதும் அதை சொல்வார்கள்.  

மனிதன் தவறு செய்தால் முன் காலத்தில் பின்னர் வேறு ஒரு ஜென்மத்தில் அதற்கான தண்டனையை அனுபவித்து வந்தான்.  ஆனால் கலியுகத்தில் தவறின் ஆதிக்கம், வீர்யம் போன்றவை போகிற போக்கை பார்த்து இறைவனே,  இந்த ஜென்மத்திலேயே அதன் பலனை அனுபவித்துவிடு என்று பலமுறை மாற்றி விதிக்கிறான். நாம் அனைவரும் ஒரு செயலை செய்யும் முன் ஒரு முறை நன்றாக யோசித்து, இது தர்மத்துக்கு முரணானதா என்று தீர்மானித்து அதை விலக்கி வாழ்ந்தால், நிம்மதியாக வாழலாம்.  பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டு, அதனால் "பிரம்மஹத்தி" தோஷம் அடைந்த ஒரு நிகழ்ச்சியையும், அதே சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை,  மனம் கனிந்து அகத்திய பெருமான் இறங்கி வந்து காப்பாற்றியதையும் இன்றைய தொகுப்பில் படிக்கலாம்.   

ஒரு நாள், ஒரு தம்பதியர் நாடி பார்க்க வேண்டும் என்று என் முன் வந்து அமர்ந்தனர்.  அவர்கள் முக பாவத்திலேயே, இருவரும் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள் என்று உணர்ந்தேன்.

"திருமணமாகி ஏழு வருஷம் ஆயிற்று. மூன்று குழந்தைகள் குறை ப்ரசவத்தில் போயிற்று.  எங்களுக்கு குழந்தை பாக்கியம் தங்குமா? என்று  அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என கணவர் கேட்டார்.

பார்ப்பதற்கு கிராமப்புறத்திலிருந்து வந்திருப்பது போல் தோன்றினாலும், ஓரளவுக்கு எல்லா விஷயமும் தெரிந்தவர்களாக இருந்தனர்.

எல்லாக் குழந்தைகளும் எட்டாவது மாதத்தில் தான் இறந்திருக்கிறது என்பதைக் அவர்கள் கூறிய போது, கேட்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

அவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன். வருத்தப்படும் விஷயங்கள் தான் தெரிய வந்தது. கூடப்பிறந்தவர்கள் சிலருக்கு குழந்தையே இல்லை. ஒரு சிலருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.  ஆனால் "மூளை" வளர்ச்சியே இல்லை.  ஒருவருக்கு மாத்திரம் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கிறது.  ஆனால், அதுவும் பிறக்கும் பொழுதே, இதயத்தில் சிறு ஓட்டை இருந்திருப்பதால் அந்தக் குழந்தை மருத்துவச் சிகிர்சையில் வளர்ந்து கொண்டிருக்கிறது, என்று தெரிய வந்தது.

"வாரிசு" அவர்கள் குடும்பத்தில் சரியாகத் தங்கவில்லை என்பதும் "ஆண்" குழந்தையே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த முப்பது ஆண்டு காலமாக இல்லை என்பதையும் வைத்துப் பார்க்கும் பொழுது ஏதோ ஒரு "கர்மவினை" அந்த குடும்பத்தாருக்கு இருக்கிறது என்பது உண்மையாகிறது.

அகத்தியரிடம் இது பற்றி கேட்ட பொழுது "இப்போது சென்று இன்னும் மூன்று மாதகாலம் கழித்து வரட்டும்.  பின்பு இது பற்றி யாம் உரைப்போம்" என்று சொல்லி மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் நிறுத்தி கொண்டார்.

பொதுவாக ஏதாவது ஒரு காரண காரியத்தைக் கூறி அதற்கு சில பிரார்த்தனைகளைச் சொல்லி அனுப்பிவைக்கும் அகத்தியர், இந்த தம்பதிகளை "பிறகுவா" என்று சொன்னபோது எனக்கே ஒரு மாதிரியாக போய்விட்டது.

நிறைய எதிர்ப்பார்த்து வந்த அந்த தம்பதிகளுக்கு அகத்தியரின் இந்த பதில் ஏமாற்றத்தைத் தந்தது. மனம் நொந்து போய்த் திரும்பியது மட்டும் உண்மை என அவர்கள் நடவடிக்கை எடுத்துக் காட்டியது.

மூன்று மாதம் கழிந்தது.

திரும்பி வர மாட்டார்கள் என்று நினைத்த எனக்கு அவர்கள் இருவரும், சொன்னபடியே அகத்தியர் நாடி பார்க்க வந்தது ஆச்சரியமாக இருந்தது.

"அகத்தியன் சொன்னபடி வந்தனை.  இது அகத்தியனுக்கு மகிழ்ச்சி.  எனினும் இன்னும் நான்கு அமாவாசைக்குப் பின்பு வரின் உங்களது வாரிசு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்.  கவலைப்பட வேண்டாம்.  உங்களுக்கு நிச்சயம் "ஆண் வாரிசு" இருக்கிறது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.  முன்பு சொன்ன வாக்குறுதியை விட பரவாயில்லை என்றாலும், ஏன் சரியான பதிலைத் தர மறுக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.  ஒரு திருப்தியோடு நாடி படித்து முடித்தோம் என்று இல்லாமல் போய் விட்டது.

ஆனாலும், "அகத்தியர் மீது வைத்த பற்றால் நான்கு மாதம் வரை நாங்கள் காத்திருக்கிறோம்.  எப்படியோ எங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டினால் சரி" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர் அந்த தம்பதியினர்.

அவர்கள் சென்ற பிறகு அகத்தியரிடம் நான் கேட்டேன்.  "எதற்காக இப்படி இழுத்தடிக்கிறீர்கள்.  அவர்களுக்கு வாரிசு உண்டா?  இல்லையா?  இல்லை என்றால் என்ன பரிகாரம் செய்தால் அவர்களுக்கு குழந்தை தங்கும்? என்று அருள் வாக்கு கொடுத்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சி, வந்திருந்தவர்களும் சந்தோஷமாகச் சென்று இருப்பார்களே" என்று . கேட்டேன்.

"காரணம் இல்லாமல் யாம் வாய் திறக்க மாட்டோம்.  சிலருக்கு உடனடியாக அருள்வாக்கு கொடுப்பதில்லை.  சிலருக்கு அவர்களது ஊழ்வினைக்கு ஏற்றவாறு பதில் சொல்வேன்.  சிலர் அருள் வாக்குப் பெற்றும் காரியம் நடக்கவில்லை என்று சொல்வதும் உண்டு.  இன்னும் பலரோ காரியம் நடக்கவில்லை என்பதற்காக பொறுமை இழந்து உன்னையும், என்னையும் தரக் குறைவாக எண்ணி திட்டவும் செய்வார்கள்.  எனினும் நான் வாக்கு கொடுக்கும் வரை அனைவருக்கும் படி.  யார் யார் எப்படி எல்லாம் உன்னிடம் வேஷம் போடுகிறார்கள் என்பதையெல்லாம் நானறிவேன்.  அப்படிப்பட்ட நபர்களை அடையாளம் காட்டுகிறேன்.  அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடு" என்று ஒரு சிறிய விளக்கத்தை அளித்தார்.

அகத்தியர் இந்த செய்தியை சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு.  நாடி பார்க்கும் போது இருக்கின்ற வேகம், நாடி பார்த்த பிறகு இல்லை.  எப்போதும் நல்ல வாக்கு சொல்லவேண்டும், வந்தவுடன் காரியம் ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இல்லையென்றால் வெறுத்துப் போகிறார்கள், இதுதான் உண்மை.

எனினும் அந்த தம்பதிகள் நான்கு மாதம் கழித்து வரும் பொழுது அகத்தியர் என்ன சொல்லப் போகிறார் என்று நானும் ஆவலோடு காத்திருந்தேன்.

நான்காவது மாதம் கடைசியில் அந்த தம்பதிகள் வந்தனர்.

நாடியைப் பிரித்துப் படித்தேன்.

"ஈன்றோர் செய்திட்ட புண்ணியத்தால் இப்பொழுது கருவொன்று உருவாகி மாதம் மூன்று ஆகிறது. இக்கரு நிலைத்து தங்க தினமும் கந்தர் சஷ்டி கவசத்தை மூன்று முறை படிப்பதோடு யார் எதைக் கொடுத்தாலும் இனி கையால் வாங்கி உண்ண வேண்டாம்.  ஏனெனில் இதுவரை நடந்த கருக்கொலைக்கும் காரணம் இருக்கிறது.

உங்களுக்கு "வாரிசு" வருவதை பலர் விரும்பவில்லை.  வேண்டுமென்றே இனிப்பாக பேசி, இனிப்புப் பலகாரத்திற்குள் "கரு" வை கொல்வதற்காக மருந்து வைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.  அதன் காரணமாகத்தான் மூன்று ஆண் சிசுக்கள் கொல்லப்பட்டிருக்கிறது.

இனியும் அம்மாதிரி யாரேனும் இனிப்பு பலகாரத்தை வலுக்கட்டாயமாக வாயில் ஊட்டினால் அவர்களுக்குத் தெரியாமல் வெளியே துப்பி விடுக" என்று லேசாகக் கோடிட்டுக் காட்டினார் அகத்தியர்.

இதைப் படித்ததும் அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அகத்தியர் சொன்னபடி அந்த பெண் மூன்று மாத கர்ப்பம் என்பதையும் சந்தோஷமாகச் சொன்னார் அந்த புருஷன்.

"எப்படி விரோதிகளை சமாளிப்பது?" என்று அவர்கள் யோசித்தனர்.  ஏனெனில் அவர்களுக்கு குறைந்த பட்சம் நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது.  உறவினர் பலருக்கு அந்த நில விஷயத்தில் ஒரு கண்.  இவர்களுக்குப் பிள்ளை பிறந்து விட்டால் அந்த நிலத்தை அபகரிக்க முடியாதே, என்ற பேராசையால் இந்த பெண்ணுடன் பாசத்தோடு பழகுவதுபோல் பழகி கருக்கலைப்பு மருந்தை ஊட்டியிருக்கிறார்கள்.

அதன் காரணமாகத்தான் இந்தப் பெண்ணுக்கு மூன்று ஆண் குழந்தை கருவிலேயே கொல்லப்பட்டிருக்கிறது.

அவர்களிடம் நான் சொன்னேன் "உங்களால் முடியுமானால், இப்பொழுது முதலே வெளியூரில் சில காலம் தங்குங்கள்.  பிறகு ஊருக்குத் திரும்புங்கள்.  யாரேனும் ஏதேனும் கேட்டால் வயிற்றில் கரு சரியாக வளரவில்லை, ஒன்பது மாதம் வரை ஒன்றும் சொல்ல முடியாது என்று எல்லோருக்கும் ஒரே மாதிரி பதில் சொல்லுங்கள்.

மருத்துவத்தை சொந்த ஊரில் இல்லாமல் வெளியூரில் பார்த்துக் கொள்ளவும்.  ஆனால் நீங்கள் மருத்துவ சிகிர்சைக்கு போகும் விஷயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.

அதே சமயம் யார் எந்த இனிப்பு பலகாரத்தையோ அல்லது வேறு பலகாரத்தைக் கொடுத்தாலும் அதைச் சாப்பிடாமல் மறைத்து வைத்து விடுங்கள். உங்களுக்கு ஆரோக்கியமான வாரிசு பிறக்கும்" என்று ஏதோ எனக்கு தெரிந்த வழியைச் சொன்னேன்.

"இப்படி பயந்து பயந்து கருவைக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.  ஒரு வேளை நல்லபடியாக குழந்தை பிறந்தாலும் பின்னாளில் இந்தக் குழந்தைக்கு ஆபத்து வராதா?" என்று கேட்டார், அந்த பெண்ணின் கணவர்.

"நியாயம் தான்.  அதற்குள் அகத்தியர் ஏதாவது ஒரு நல்ல வழியை காட்டுவார். சற்று பொறுமையுடன் இருங்கள்" என்றேன்.

இடையில் நான்கு மாத காலம் அவர்கள் என்னைத் தேடி வரவும் இல்லை.  நானும் அதை பெரியதாக நினைக்கவும் இல்லை.

திடீரென்று ஒரு நாள் அந்த தம்பதிகள் வந்தனர்.

வெளியூரிலே வீட்டை வாடகைக்கு எடுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருப்பதாகவும் இப்பொழுது வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் "குழந்தை" நல்ல படியாகப் பிறந்து விடும்" என்று சொன்னவர்கள்

கூடவே இன்னொரு அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் சொன்னார்கள்.

"மிக நெருங்கிய உறவினர்கள் இருவர், வெளியூரில் இவர்கள் தங்கியிருப்பதைக் கண்டு, அங்கேயே நேராகச் சென்று இருக்கிறார்கள்.  இரண்டு இனிப்புப் பொட்டலங்களை இந்தப் பெண்ணிடம் கொடுத்து தங்கள் கண் முன்னே சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.  நல்ல வேளை இந்தப் பெண் அதனைச் சாப்பிடவில்லை.  வந்தவர்கள் சில மணி நேரம் இருந்து விட்டு பின்பு சென்று விட்டார்கள். அவர்கள் பேசிய விதம் இனிப்பு கொடுத்த விதம் மீது சந்தேகம் வந்ததால் அவர்கள் கொடுத்த இனிப்புப் பலகாரத்தை அப்படியே தூக்கிக் கொண்டு இதில் ஏதேனும் மருந்து கலந்திருக்கிறதா" என்று தகுந்த நபரிடம் கொடுத்து சோதித்து பார்க்க சொல்லியிருக்கிறார்கள்:.

சோதனை செய்து பார்த்தவர்கள், "இதை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட்டு விடும். அத்தகைய "கள்ளிப் பால்" கலந்து இந்த இனிப்பு தயாரிக்கப்பட்டிருக்கிறது", என்று உணமையைச் சொல்லி விட்டனர்.

அதிர்ச்சியில் உறைந்து போன அந்த தம்பதிகள் "இதே நபர்கள்தான் முன்பும் இப்படி இனிப்பு பலகாரம் கொடுத்தனர்.  அதை உண்ட பின்புதான் கருச்சிதைவு ஏற்பட்டது.  இப்போது அதே தவறை செய்கிறார்களே" என்று வருந்தியிருக்கிறார்கள்.

இதே நிலை எதிர்காலத்தில் குழந்தை பிறந்த பின்பும் வந்து விடக்கூடாதே" என்ற பயத்தில் அகத்தியரை நாடி வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

"பகவானே" என்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்து விட்டு, அகத்தியரிடம் வேண்டினேன்.

"இவர்களுக்கும் புத்திர தோஷம் இருந்தது.  அது மூன்று ஆண் குழந்தைகளைப் பறிகொடுத்ததினால் அந்த கர்மவினை தீர்ந்தது.  இனி பிறக்கப்போகும் வாரிசு ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் வாழ்கின்ற அதிர்ஷ்டத்தைப் பெற்றதாகவும் இருக்கும் பயப்பட வேண்டாம்.

மூன்று கரு சிசுக்களைக் கொன்றதால் இவர்களது உறவினர்கள் இருவரும் சித்தப்பிரம்மை  பிடித்து அலையப் போகிறார்கள்.  அவர்களது மரணம் கூட இயற்கையானதாக இருக்காது என்பது விதி.  இதை மாற்ற யாராலும் முடியாது" என்றார் அகத்தியர்.

"குழந்தை பிறந்த பிறகு குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்காக என்னென்ன உதவி செய்ய வேண்டுமோ, அதை ஆண்டு தோறும் தொடர்ந்து செய்துவரின் வம்சம் தழைக்கும்.  யாரும் இனிமேல் எந்த வித உபத்திரவத்தையும் தர மாட்டார்கள்" என்றும் வாக்குறுதி கொடுத்தார்.

"இந்த நல்ல அருள்வாக்கு பெற ஒரு வருடகாலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.  சிலர் இதை அறியாமல் அருள் வாக்கு கேட்டு பரிகாரம் செய்து முடித்து உடனடியாக நடக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்களே" என்று அகத்தியரிடம் கேட்டேன்.

"அப்படிப்பட்டவர்களை விட்டு விடு.  யாமும் நல்வாக்கு மறுபடியும் தரமாட்டோம்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

இன்றைக்கு...........

அந்த தம்பதிகளுக்கு மூன்று வாரிசுகள் பிறந்து வெளிநாட்டுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதே சமயம் இந்த தம்பதிகளுக்கு துரோகம் செய்தவர்கள் சித்தபிரம்மை பிடித்து அலைந்து கொண்டிருப்பதாக தகவல்.

நடப்பதெல்லாம் அவன் செயல்தான்.  இருப்பினும் அவனே நமக்கு நல்ல வாய்ப்பை தந்து நன்றாக வாழு என்று சொல்லாமல் சொல்லி, பல முறை பெரியவர்கள் வழி நல் வழி காட்டி, நமக்கும் அறிவை கொடுத்தும், மேலும் மேலும் தவறை செய்யும் போது, இந்த ஜென்மத்தின் தவறுக்கு, இப்போதே அனுபவி என்று தண்டனையை கலியுகத்துக்கு வேண்டி இறைவனே மாற்றியது கூட, சரிதான் என்று ஆணித்தரமாக கூற முடியும். ஒருவருக்கு கிடைக்கும் தண்டனை மற்றவருக்கு ஒரு பாடமாக அமையும், அமையவேண்டும்.  

சித்தன் அருள் ................. தொடரும்!

Tuesday, 16 July 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 6

ஆன்மீகத்துக்கு பல முகங்கள் உண்டு.  அவற்றில் ஒன்று கோவில் வழிபாடு. இருக்கும் இடத்தில் இருந்து பூசை செய்ய முடியாதவர்களுக்கு கோவில் ஒரு வரப்பிரசாதம்.  அங்கு சென்றால் நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே.

 • கண்டிப்பாக தலைக்கு குளித்துவிட்டு, அசுத்தமின்றி, நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது சந்தானம் தரித்ததுதான் கோவில்களுக்கு செல்லவேண்டும்.
 • கோவில் பூசைக்கு அல்லது இறைவனுக்கு என்று கொடுக்கப்பட்ட எதையும், தொடுவதோ, நமெக்கென எடுத்துக் கொள்வதோ கூடாது 
 • சிவ அபசாரம் என்பது மிகக் கொடிய பாவங்களில் ஒன்று. மெதுவாக ஆனால் வீரியத்துடன் நம்முள் நின்று வருத்தும்.
 • கோவிலின் ஈசான்ய மூலை மிக புனிதமானது.  சற்று நேரம் அங்கமர்ந்து த்யானம் செய்யவும்.
 • கோவிலில் இகபர வாழ்க்கையின் எண்ணங்களை களைந்து இறைவன் திருவடியை சிந்தையில் நிறுத்துங்கள்.
 • தரிசனம் முடித்து திரும்புகையில் கோவில் வாசலில் ஒரு நிமிடம் அமர்ந்து கண்மூடி "போதும்! நிறைவாக உள்ளது! இனி வரும் பக்தர்களை வழிநடத்தி அருள் புரியுங்கள்" என்று நினைத்து வரவும்.
 • கோவில்களில் காணப்படும் கொடி மரத்தை தொட்டு வணங்கக் கூடாது. கொடிமரத்துக்கு பின்னால் மட்டும் தான் கீழே விழுந்து வணங்கலாம். கொடிமரத்தை தாண்டிவிட்டால் கை கூப்பி மட்டும் தான் வணங்க வேண்டும்.  கோவில் பூசாரிக்கு மட்டும் தான் தன கடமையின் பாகமாக கொடி மரத்தை தாண்டி வணங்குகிற உரிமை உண்டு.
 • கோவிலில் ஏதேனும் பெரியவர்களை சந்திக்க நேர்ந்தால், கீழே விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது.  கோவிலில் உறையும் இறையை தவிர வேறு எந்த மனிதருக்கும் நமஸ்கார வணக்கத்தை ஏற்றுக் கொள்கிற தகுதி கிடையாது.
 • நல்ல எண்ணங்கள் மனதில் இருக்க இறை வழிபாடு நடத்தப் படவேண்டும்.
 • அமைதி உள்ளும் வெளியேயும் இருக்க நம்மால் இயன்ற மௌனத்தை கடை பிடிக்க வேண்டும்.
 • நாம ஜபம், மந்திரங்கள் (மனதுள்) நம்முள் படர, இறை அருள் நம்மை சூழ்வதை உணரலாம்.
 • மருத்துவர்கள் பிரம்மஹத்தி தோஷம் விலக விளகேற்றும் போது, அந்த விளக்கை சிவலிங்கத்துக்கு முன் வைக்கச் சொல்லி பூசாரியிடம் கொடுக்கவும்.  சிவலிங்கத்துக்கு முன் ஏற்றுகிற விளக்கு மட்டும் தான் "மோக்ஷ தீபமாக" கருதப்படும், பலன் கொடுக்கும்.
 • கோவிலில் சன்னதியில் இறையை தரிசனம் செய்யும் போது முதலில் பாதத்தை தரிசனம் செய்து மனதில் இருத்தியபின், முகத்தை தரிசனம் செய்யவேண்டும்.
 • பூ, சந்தானம், விபூதி போன்ற பிரசாதங்களை இரு கை நீட்டி வாங்கிக்கொள்ளவேண்டும். அவை நம் கை விட்டு கீழே சிந்தாமல், சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
 • கோவில் கோமுகம் மிக புனிதமானது.  அங்கு வழியும் தீர்த்தம் நம்முள் இருக்கும் அனைத்து கெடுதல்களையும் விலக்கும். கோமுகததை சுத்தம் செய்து, சந்தானம் குங்குமம் இட்டாலே அங்கு உறையும் இறைக்கு நாமே நேரடியாக பூசை செய்த பலன் கிடைக்கும். கோமுகத்தின் அருகில் அனைத்து பெரியவர்களும் உறைவதாக ஐதீகம்.
 • சிவன் கோவிலில் பிரகாரத்தில் இருக்கும் "பிட்சாடன" மூர்த்தியின் பிச்சை பாத்திரத்தில் நம்மால் இயன்ற காசை போட்டு வேண்டிக்கொண்டால் நம் நிதிநிலை பிரச்சினை உடனே தெளிவாகும்.

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday, 11 July 2013

சித்தன் அருள் - 132

வாழ்க்கையின் பெரும பகுதியின் நிலைமையை தீர்மானிப்பது நாம் முற்காலத்தில் விதைத்த செயல்களே.  நல்லதை செய்தால் அமைதியான வாழ்க்கையும், நிறைய தவறுகளை செய்திருந்தால் வருத்தபடுகிற சூழ்நிலையும் பின் காலத்தில் அறுவடை செய்யவேண்டி வரும். அகத்திய பெருமான் நாடியில் வந்து சொல்லும் பொது "உன் வாழ்க்கையை உன் நற் செயல்களால் தீர்மானிக்கிறாய்" என்று பலமுறை கூறியுள்ளார்.  உதாரணமாக ஒரு திருமணத்தை நல்ல வாழ்க்கையாக்கி தருவது, நேரம் பார்த்து சரியான முறையில் சில விஷயங்களை செய்தால் மட்டுமே, அமைதியான வாழ்க்கையேனும் கிடைக்கும்.  ஒவ்வொரு செயலிலும் ஏதோ ஒரு ஆத்மாவை திருப்திப் படுத்துகிற ஒரு தன்மை இருந்தால், அல்லது இது ஏதேனும் ஒரு உயிரை சென்று சேர்ந்து நல்லதை செய்யும் என்கிற எண்ணத்துடன் செய்தால், கண்டிப்பாக அதன் நல்ல பலன் என்றேனும் திரும்பி வந்து நம்மை அரணாக சுற்றி நின்று காக்கும்.  இதை அனுபவத்தால் தான் உணரமுடியும்.  சேர்த்து வைத்த சொத்து, பணம், புகழ் இவை நல்ல முறையில் சேர்ந்திருந்தால்தான் நாமும், நம் சந்ததிகளும் நல்ல மன நிலையில் நிம்மதியாக வாழ முடியும்.  தவறான முறையில் சேர்த்து வைத்த சொத்து எத்தனை கோடியாக இருந்தாலும், பின் வரும் தலை முறை, நடக்கின்ற கெடுதல், ஏன் என்று தெரியாமல் தவிக்கும்.  அப்படி தவிக்கும் போது, தவறு செய்தவர்கள் என்று தெரிந்தும், அவர்களும் மனம் திருந்தி வாழட்டுமே, என்று கருணையுடன் அகத்திய பெருமான் பரிகாரங்களை செய்ய சொல்லி, அவர்களை கரை ஏற்றி விட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.    

ஒரு நாள் நாடி பார்க்க ஒரு தாயும், மகளும் வந்தனர்.  அவர்கள் தோற்றத்திலே பணத்தின் வீர்யம் கொடிகட்டிப் பறந்தது.  

"எங்களுக்கு இருக்கிற ஒரே பெண் இவள் தான்.  நிறைய சொத்து இருக்கிறது.  சகல பொருத்தமும் பார்த்துதான் திருமணம் செய்தோம்.  ஆனால் இருவரும் தம்பதிகளாக வாழவே இல்லை.  இவளுக்கு திருமண வாழ்க்கை இருக்கிறதா, இல்லையா? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டாள் அந்த பெண்மணி.

"திருமணமாகி அவர்கள் குடித்தனம் நடத்தவே இல்லையா?" என்று வினாவினேன்.

"நடத்தினார்கள்.  மூன்று மாத காலம்" என்றாள்..

"பிறகு" என்றேன்.

"பெங்களூரில் தனியாக ஒரு தொழில் நடத்தப் போவதாகவும், அதற்குப் பிறகு தனிக்குடித்தனம் ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி விட்டுச் சென்றவன் தான்.  மூன்றாண்டு காலமாக பெண்ணை எட்டிக் கூட பார்க்கவில்லை". என்றாள்.

"ஏன் வரவே இல்லை?"

"தொழில் சரியாக அமையவில்லை.  அதற்கேற்ற மாதிரி இடமும் கிடைக்கவில்லை.  அப்படி இடம் கிடைத்து தொழில் ஆரம்பித்துவிட்டால் உடனே தனிக்குடித்தனம் ஆரம்பித்து விடலாம் என்று பையனின் பெறோர்கள் சொல்கிறார்கள்."

 "பையனை நேரில் கண்டு பேசினீர்களா?"

"அவன்தான் கண்ணிலே தென்படவே மாட்டேங்கிறானே.  அவன் பெற்றோரிடம் கேட்டால் வெளியூர் போயிருக்கிறான், வெளிநாடு போயிருக்கிறான் என்று தான் பதில் வருகிறது" என்று வருத்தப்பட்டாள் அந்தப் பெண்ணின் தாயார்.

சற்று நேரம் பொறுமையாக இருந்து விட்டு எதற்கும் அகத்தியரையே "நாடியில்" கேட்டு விடலாம் என்ற எண்ணத்தில் நாடியைப் புரட்டினேன்.

"ஜாதகத்தை அலசி அலசிப் பார்த்து திருமணம் செய்ததாக கூறுகிறார்.  ஜாதக குறிப்பு சரியாக இருந்தால் எல்லாமே நன்றாக நடந்திருக்கும்.  ஆனால் வந்த ஜாதகமும் சரி, இவளுடைய பெண்ணின் ஜாதகமும் சரியாகக் குறிக்கப்படவில்லை.

விதியை மனிதன் நிர்ணயிக்க முடியாது.  விதிதான் மனிதனை நிர்ணயிக்கிறது.  ஜாதகக் குறிப்பை வைத்து ஓரளவு தான் பொருத்தம் பார்க்க முடியும்.  இதை யாரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது.  மனிதன் யாரும் சரி, குரு, செவ்வாய், ராகு - கேதுவைப் பார்த்திருக்கிறானா?  அவற்றோடு கை குலுக்கி இருக்கிறானா?  பின் எப்படி தோஷம் என்று கிரகங்களைப் பார்த்து சொல்ல முடியும்?  பிரார்த்தனைகள், பூர்வ புண்ணியம் இந்த இரண்டும் தான் ஒருவனுக்கு நல்லது செய்ய முடியும்.

எப்போதைக்கு எப்போது "கரு" உருவாகிறதோ அப்பொழுது அந்த கருவுக்கு ஜாதகம் கணித்தாயிற்று.  இதை பிரம்மாவும் சித்த தன்மை பெற்றவர்களும் தான் அறிவர்.  மற்ற குறிப்புகள் எல்லாம் வித்யாசமானதாகத்தான் இருக்கும்.  அதனால் தான் பலன்கள் தாமதமாகவோ அல்லது வேறு விதமாகவோ காணப்படும்.  ஜாதகத்திலே ஏராளமான விஷயங்கள் உண்டு.  அதை எல்லாம் சட்டென்று சொல்ல முடியாது.  இந்த திருமணம் நடந்த பொழுது என்னென்ன தவறுகள் நடந்தது என்பதை யாம் பட்டியலிட்டுத் தருகிறோம்" என்றார் அகத்தியர்.

"வீட்டிற்கு பொற்கொல்லரை அழைத்து வந்து, ஒரு அருமையான நன்னாளில், சந்திராஷ்டமம் இல்லாத நாளில், அஷ்டமி, நவமியைத் தவிர்த்து விடியற்காலை வேளையில் பிரம்ம முகூர்த்தத்தில் தங்கத்தை உருக்கி இதற்குப் பிறகே திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

ஆனால்.........

உன் மகளுக்கு கடையில் தாலியை வாங்கி இருக்கிறாய்.  வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று வாங்கி இருக்கிறாயே தவிர அந்த நாள் உன் பெண்ணுக்கு ஏற்ற நாளா? என்று கூர்ந்து பார்க்கவில்லை.  அதோடு யாராவது ஒரு ஜோதிடரை முழுமையாக நம்பவேண்டும்.  அதையும் செய்யவில்லை.

நிதானமாக செயல்படாதது, அடிக்கடி ஜோதிடர்களை மாற்றிக் கொண்டிருப்பது, எல்லாம் தெரியும் என்று தனக்குத்தானே தன்னிச்சையாக முடிவெடுப்பது போன்ற நடவடிக்கையால் உன் மகளுக்குத் திருமாங்கல்யம் வாங்கும் நாள் சரியில்லாமல் போயிற்று.

சரி! அப்படித்தான் வாங்கினதும் வாங்கினாய், அதை பூஜை அறையில் வைத்து பிரார்த்தனை செய்திருக்க வேண்டும்.  அல்லது கோவிலில் வைத்து அர்ச்சனை செய்திருந்தால் அந்த சந்திராஷ்டம தோஷம் விலகியிருக்கும்.  அதையும் செய்யாமல் இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைத்து விட்டாய்.

இதையும் தாண்டி இன்னொரு தவறும் உன்னை அறியாமல் நடந்திருக்கிறது.  திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்கும் அந்தணர் அதைப் புனிதப் பொருளாக எண்ணி, கையில் வைத்து கிழக்கு நோக்கி அமர்ந்து பிரார்த்தனை சொல்லிய பின்பு மணமகனிடம் கொடுக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யவில்லை.  "தாலி" தொலைந்து விடக்கூடாது என்பதற்காக அதை தன இடுப்பில் சொருகிக் கொண்டார்.  புனிதமான பொருள்களை மார்புக்கு கீழ் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது விதி.  இதனையும் மீறி இடுப்பில் அந்த புனிதமான தாலியை சொருகிக் கொண்டதால், அவரது உடலில் வழிந்த "வியர்வை" ஒளிக்கற்றையால் அந்த புனிதம் கெட்டுவிட்டது.

இத்தனையும் மீறி நல்லோர்களது பிரார்த்தனையால் உனது மகளது திருமணம் நடைபெற்றது என்பதுதான் உண்மை.  இது அவசரகால உலகம்.  அகத்தியர் சொற்படி உங்களால் நடக்க இயலாது தான்.  ஆனாலும் ஓரிரு முறைகளாவது கடைபிடித்தால் இப்படிக் கண்கலங்கி வந்திருக்க வேண்டாமே" என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

"சரி, எல்லாமே நடந்து விட்டது.  இப்போது இதற்கு ஏதேனும் பிரார்த்தனையோ பரிகாரமோ செய்து விட்டால் போதுமா?  அதற்கு அகத்தியர் ஏதேனும் வழி காட்ட வேண்டும்" என்றார் வந்த பெண்மணி.

"மூன்று மாதம் கழித்து வா.  பின்பு இதற்கு ஒரு வழி பிறக்கும்.  அது வரை சில பிரார்த்தனைகளை செய்தால் நல்ல பலன் கிட்டும்" என்றார் அகத்தியர்.

அகத்தியர் சொன்ன பதிலால் அந்த பெண்மணி திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை.

"பணம்" இருக்கிறது, செல்வாக்கு, புகழ் இருக்கிறது என்ற தைரியத்தில் "அலட்ச்சியமாக" எழுந்து போனாள்.

"விதி" இன்னும் அவளுக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

இரண்டு மாதம் கழிந்தது.

திடீரென்று அந்த பெண்மணி என்னைத் தேடி வந்தாள்.

"அகத்தியர் சொன்ன பரிகாரங்களை எல்லாம் செய்து விட்டேன்.  இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.  இன்னமும் மாப்பிளைக்கு தொழில் அமையவில்லை.  என் மகளுடைய எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது.  அவன் வருவானா, மாட்டானா?, "விவாக ரத்து" பண்ணி விடலாமா? என்று பார்க்கிறோம்" என்று வெறுப்போடு பேசினாள்.

எனக்கு இது தர்ம சங்கடமாக இருந்தது.

"மூன்று மாதம் கழித்துதானே வரச் சொன்னார் அகத்தியர்.  அதற்குள் யார் இவர்களை வரச் சொன்னது" என எண்ணிக் கொண்டேன்.

மவுனமாக நாடியைப் பிரித்தேன்.

"பொறுமை இல்லாதவர்களுக்கு அகத்தியன் நல்வழியைக் காட்டமாட்டான்.  அகத்தியன் தெய்வமல்ல.  தலையாயச் சித்தன்.  வழியொன்றைக் காட்டுவான்.  அவ்வளவுதான்.  எப்பொழுது அகத்தியன் வாக்கு பலிக்கவில்லை என்று சொல்கிறாளோ இனிமேல் அகத்தியன் எந்த வித வழியையும் காட்டமாட்டான். அருள் வாக்கும் தரமாட்டான்.  மூன்று மாத காலம் முறைப்படி பிரார்த்தனையைச் செய்யாமல் அகத்தியனைப் பழிப்பதில் என்ன லாபம்?" என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார். 

எதிர்பாராத இந்த வார்த்தையால் அந்த பெண்மணி மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தாள். கண் கலங்கியது.  தொண்டையிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.  நொந்து போனாள்.  சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, ஏதோ உணர்ந்து அவளே பேசினாள்.

"நான் அவசரப்பட்டு வந்தது தப்புதான்.  என் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லையே என்ற கவலைதான்.  பரிகாரங்களையும், நான் முறைப்படி செய்யவில்லை என்பது உண்மைதான்.  என்னை மன்னித்து விடுங்கள்.  அகத்தியரிடம் நல்ல வாக்கு வாங்கிக் கொடுங்கள்" என்று வேண்டினாள்.  

அகத்தியர் சில சமயம் இப்படி கோபப்பட்டு பேசுவதுண்டு.  அதே சமயம், சற்றே நேரத்தில் மிகவும் இரக்கப்பட்டு பலருக்கும் நல்வழியைக் காட்டியதும் உண்டு.  அந்த பெண்மணியை சிறிது நேரம் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து அகத்தியரை மனதார வேண்டி மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்யச் சொன்னேன்.

நானும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்துவிட்டு வேறு சிலருக்கு நாடி படிக்க தொடங்கினேன்.  

இரண்டு மணி நேரம் கழித்து பின்பு அந்த பெண்மணிக்காக நாடியைப் புரட்டினேன்.  அந்த பெண்மணியின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையால் 

"அகத்தியனை அலட்ச்சியப்படுத்தினாள்.  அரை குறை நம்பிக்கையோடு பரிகாரம் செய்தாள்.  அதுவும் தன கையால் செய்யாமல் பாதிக்கப்பட்ட இவளது மகள் மூலமும் செய்யாமல் வேலைக்காரி மூலம் பிரார்த்தனை செய்தாள்.  எனவே அந்த புண்ணியமெல்லாம் வேலைக்காரிக்கே போயிற்று.  அவள் வீட்டில் பிரிந்திருந்த தம்பதிகள் இப்போது ஒன்று சேர்ந்து விட்டனர்.  அந்த ஆத்திரத்தில்தான் இவள் அகத்தியனைத் தேடி ஓடி வந்திருக்கிறாள்.  இப்படிப்பட்டவளுக்கு பணத் திமிர் இருக்கும் வரை அகத்தியன் அருள்வாக்கு தரமாட்டான்.  ஆறுமாதம் அவகாசம் தருகிறேன்.  தன கையாலேயே நான் சொன்ன பிரார்த்தனைகளை செய்து விட்டு, நம்பிக்கை இருந்தால் அகத்தியனை தேடி வரட்டும்.  அல்லது வேறு இடம் செல்லட்டும்", என்று அகத்தியர் தீர்மானமாக சொல்லிவிட்டார் 

காலில் விழுந்து கொஞ்சாத குறைதான்.  துக்கம் தொண்டையை அடைக்க "அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை" என ஒத்துக்கொண்டு, "இனி நல்லபடியாக என் கையாலேயே அத்தனை பிரார்த்தனைகளையும் செய்கிறேன்.  சீக்கிரமே என் மகளுக்கு வாழ்க்கை அமைய அருளாசி கூறுங்கள்" என்று வேண்டிக்கொண்டாள் அந்தப் பெண்மணி.

ஆறுமாத காலம் கழிந்தது.

ஒருநாள், முக மலர்ச்சியோடு அந்த பெண்மணி, தனது மகள், மப்பிளையோடு என்னைப் பார்க்க வந்தாள்.

"பரவயில்லையே, பிரிந்த மணமக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்களே" என்று சந்தோஷப்பட்டேன்.

"இவர்தான் என் மாப்பிள்ளை" என்று அறிமுகப்படுத்தினாள் அந்த அம்மணி.

அவனை வாழ்த்தி விட்டு "என்னப்பா? என்ன நடந்தது?" என்று விளையாட்டாகக் கேட்டேன் 

"எல்லாமே அகத்தியருக்கு தெரியாதா" என்று ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டு அமைதியானான்.

நாடியை லேசாகப் புரட்டினேன்.

"படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த இவனுக்கு ஒரு பணக்கார வீட்டில் சம்பந்தம் கொள்ள வேண்டும், அவர்களது உதவியோடு சொந்தமாக ஒரு புதிய தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.

தான் பெரிய கம்பனியில் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி இந்த வீட்டில் திருமணம் செய்து கொண்டான்.  மூன்று மாதம் போராடிப் பார்த்தான்.  மாமியார் வீட்டில் இவனுக்கு பண உதவி செய்வதாக தெரியவில்லை.  அதோடு 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்தான்.  தொழில் நன்றாக அமையவில்லை.

பண உதவி செய்யாததினால் கட்டிய மனைவியை வேண்டாமென்று ஒதுக்கினான்.  அவர்களுக்கு முதலில் விஷயம்  புரியவில்லை பின்னர்தான் பணம் கொடுத்தார்கள்.  அதையும் வாங்கிக்கொண்டு வாங்கிய கடனை அடைத்தான்.  இப்போதுதான் இவனுக்கு தொழில் அமைந்திருக்கிறது  பிறகுதான் கட்டிய மனைவியோடு இணைந்திருக்கிறான்.  இப்படிப்பட்டவன் பிற்காலத்தில் இன்னும் இதுபோல பல விஷமங்களைச் செய்வான்.  இவர்களும் பணம் கொடுத்துதான் வாழவேண்டும்.

ஏன் இந்த சோதனை எனில் இவர்களிடம் இருப்பது எல்லாம் பெரும்பாலும் குறுக்கு வழியில் சம்பாதித்தது தானே.  அது இவன் மூலம் செலவழிக்க வேண்டும் என்பது நியதி.  எனினும் அகத்தியனை நோக்கி அவ்வப்போது வரட்டும்.  இவனையும் திருத்தி அவளது இல்லற வாழ்க்கையை தொடர்ந்து சந்தோஷமாக மாற்றுவோம்" என்று எனக்குச் சொன்னார்.

இன்னும் அந்த குடும்பத்தினர் என்னிடம் வந்து கொண்டிருக்கின்றனர்  அகத்தியர் அந்த குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறார் நல்ல முறையில்.

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday, 4 July 2013

சித்தன் அருள் - 131

அகத்திய பெருமான் பல முறை, நாடியில் வந்து பொதுவாக சொல்லும் போது "தவறை திருத்திக்கொள்ளுங்கள்" என நாடி படிக்க வருபவர்களிடம் கூறி, அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவார்.  திருந்தியவர்கள் வாழ்க்கை மிகத் தெளிவடைவதை பல முறை பார்த்திருக்கிறேன். 

பிறருக்காக சொல்லப்பட்டாலும், பல முறை தனிமையில் இருக்கும்போது, அதில் எனக்கும் எச்சரிக்கை உள்ளதோ என யோசித்து பார்த்ததுண்டு. தவறின் வேகம், வலிமை அனுசரித்து பாதிப்புகள் உண்டாவதை எத்தனையோ பேரின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியவைத்துள்ளது.  தவறுகளில் மிக கொடியது இன்னொரு உயிரை கொல்வது, கொல்ல நினைப்பது.  அது "பிரம்மஹத்தி தோஷத்தை" வரவழைக்கும்.  யாருக்கு எதிராக இந்த தோஷத்தை செய்ய நினைக்கிறார்களோ, அவர்கள் கர்மா படி விஷயங்கள் நடக்கும்.  அவர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்று விதி இருந்தால், யாரோ, ஏதோ ரூபத்தில் வந்து செய்தியை மறைவாக சொல்லியோ, அல்லது நேரடியாக தலையிட்டோ காப்பாற்றுவார்கள்.  அப்படி அகத்திய பெருமான் தலையிட்டு ஒரு குடும்பத்தை காப்பாற்றிய நிகழ்ச்சியை இன்றைய தொகுப்பில் பார்ப்போம்.  இந்த தொகுப்பை படித்து முடிக்கும் போது, உளமார படிக்கும் அனைவருக்கும் தனிமையில் அமர்ந்து நிறைய அளவுக்கு "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜபம் செய்யவேண்டும் என்று தோன்றும்.  தோன்றினால் செய்யுங்கள்.  சரியான வழியை யார் முகமேனும் காட்டுவார்.

மிகவும் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள்.  பேச்சிலே மேன்மை தெரிந்தது.  கணவன் மனைவி அவர்களுடைய மகள் ஆகிய மூவரும் என்னைப் பார்க்க வந்திருந்தனர்.

எல்லோருக்கும் உள்ள பிரச்சினைதான் இவர்களுக்கும் இருக்கும். ஆதலால், அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்டு, வாங்கித்தரலாம்  என்று எண்ணினேன்.

"அகத்தியரை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறேன்.  உங்களது கேள்விகளை அவரிடம் சொல்லுங்கள், நல்ல பதில் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு நாடியை படிக்க ஆரம்பித்தேன்.

நாடியில் வந்த அகத்திய பெருமான் "முதலில் இவர்கள் இங்கிருந்து  வீட்டிற்குச்     சென்றதும் வேறு எங்கேயாவது ஒருநாள் தங்கி, பகல் பொழுதில் தங்கள் வீட்டிற்குள் நுழையட்டும்.  இவர்கள் எதற்காக அகத்தியனைக் காண வந்தார்களோ அந்த நல்ல காரியம் நடக்கும்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.   அகத்தியர், இதற்கு மேல் சூசகமாகக் கூட எதுவும் சொல்லவில்லை.

வந்தவர்களுக்கு இந்த வாக்கு திருப்தியைத் தரவில்லை என்பது மட்டும் புரிந்தது.  ஆனால் நான் ஒன்றும் சொல்ல முடியாதே, அதனால், அமைதியாகவே  பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நாங்கள் நிறைய விஷயத்தை அகத்தியரிடமிருந்து எதிர் பார்த்துத் தான் வெளியூரிலிருந்து இங்கு வந்தோம்.  ஆனால் விளக்கமாக அகத்தியர் எதுவும் சொல்லவில்லையே?" என்றார் வந்தவர்.

மறுபடியும் கட்டைப் பிரித்தேன்.

"தெரிந்தோ, தெரியாமலோ  இந்த இளம்பெண் ஒருவனிடம் காதல் வயப்பட்டிருக்கிறாள்.  இடையில், இவள் அவனது நடவடிக்கையைக் கண்டு அவனிடமிருந்து ஒதுங்கி நின்றாள்.  ஆனால், அவனோ, இதைத் தாங்க முடியாமல் ஒரு பெரிய இடத்து சம்பந்தம் வீணாகப் போகிறதே என்று பரிதவித்து இந்தப் பெண்ணைக் கொலை செய்யக் கூட முயற்ச்சித்தான்.  சித்த பிரமையாகி விட்ட அவனது கொடுமையான எண்ணத்தைக் கண்டு, இந்தப் பெண்ணும், அவளது பெற்றோர்களாகிய நீங்கள் இருவரும் பயந்து நடுங்கி இங்கு வந்திருக்கிறீர்கள்.  இதுதானே விஷயம்?" என்று நிதானமாக அகத்தியர் கேட்டார். இதைப் படித்ததும் "ஆமாம்" என்றனர்.

"அகத்தியர் முதலிலேயே இதைச் சொல்லியிருந்தால் மிகவும் பரவசப்பட்டு இருப்போம்" என்றாள் அந்தப் பெண்ணின் தாயார்.

 "அகத்தியர் எப்பொழுதுமே சட்டென்று சொல்வதில்லை.  முதலில் வந்தவரின் மன நிலையை சோதிப்பார்.  இவர்கள் உண்மையில் தன்னை நம்பி வந்திருக்கிறார்களா? என்று தெரிந்து கொண்ட பின்புதான் தனது அருள்வாக்கைத் தருவார்" என்றேன்.

"சிலருக்கு மட்டும் நல்லபடியாக, உடனடியாக நடந்து விடுகிறதே!"

"நியாயம் தான், வந்தவுடன் எல்லாம் நடந்து விட்டால் எனக்கும் மகிழ்ச்சி.  ஆனால்  சிலருக்கு நான்கு நிலைகளை கடந்துதான் நடக்கிறது.  இதற்கு பொறுமை தேவை" என்றேன்.

"அதென்ன நான்கு நிலை?"

"அதான் சொன்னேனே.  முதலில் சில வழிகளைக் காட்டுவார்.  நம்பிக்கையோடு செய்தால் அவர்களது காரியம் வெற்றி பெற்று விடும்.  ஒரு வேளை அப்படிச் செய்தும் காரியம் வெற்றி பெறவில்லை எனில் வேறொரு வழியைக் காட்டுவார்.  இதற்கும் பொறுமை வேண்டும்.  பெரும்பாலும் இரண்டாவது பிரார்த்தனைகளில் எதிர்பார்க்கும் காரியம் முடிந்து விடும்.  அப்படியும் முடியவில்லை எனில் மறுபடியும்  அகத்தியரிடம் வந்தால் "விதி"யதை  மாற்ற முடியுமா என்று பிரம்மாவிடம் கேட்டு பதில் சொல்வார்.  எப்படிப்பட்ட காரியமும் முடிந்து விடும்.  எனக்குத் தெரிந்து என்னிடம் வந்து அகத்தியர் அருள்வாக்கு பெற்றவர்கள் மூன்றாவது நிலையிலேயும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்."

 "இப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்றனர்.

நாடியை மீண்டும் புரட்டினேன் 

"இந்தப் பெண்ணிற்கு அவனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது.  ஆனால் நீங்கள் ஊரை விட்டு வந்த விஷயம் அவனுக்குத் தெரிந்துவிட்டது.  தனக்குக் கிடைக்காத இந்த பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்  கூடாது என்றெண்ணி மிகப் பெரிய தவறினை செய்திருக்கிறான்."

"என்ன தவறு?"

"அதை இப்போது சொல்வதற்கில்லை.  ஆனால் எந்த தவறைச் செய்தானோ அதே தவற்றால் அவன் தண்டிக்கப்படுவான்.  அது மட்டும் நிச்சயம்.  அதுவரை கருட தண்டகத்தையும், துர்கா சப்தசதி பாராயண  மந்திரத்தையும் இந்த  நிமிடம் முதல் சொல்லி வாருங்கள்.  இதுதான்  உயிர்  காக்கும் மந்திரம்" என்று நாடியில் வந்தது.

"மற்றபடி பயப்படுவதற்கு எதுவுமில்லை, தைரியமாக சென்று வாருங்கள்" என்றேன்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்களே தவிர முழுமனதோடு இந்த பிரார்த்தனைகளைச் செய்வார்களா என்று எனக்குத் தோன்றவில்லை.

அவர்கள் சென்ற பிறகு எனக்குள்ளேயே குழப்பம்.  வருங்காலத்தைப் பற்றி அகத்தியர் ஒரே சொல்லில் சொல்லாமல் ஏன் இப்படி சுற்றி சுற்றி வளைத்துச் சொல்கிறார்.  யார் வந்து எதைக் கேட்டாலும் முடியும், முடியாது.  எதிர்பார்த்தது  நடக்கும், நடக்காது என்று சட்டென்று சொல்லி விட்டால் எத்தனை ஆறுதலாக இருக்கும் என்று பெருமூச்சு விட்டேன்.

அவர்கள் சென்று இரண்டு நாட்கள் ஆகியிருக்கும்.

"அகத்திய பெருமானுக்கு மிக்க நன்றி.  எங்கள் மூவர் உயிரும் காப்பாற்றப்பட்டது" என்று அவர்களிடமிருந்து தகவல் வந்தது.

"எப்படி?" என்று ஆர்வத்தோடு கேட்டேன்.

"நாங்கள் அன்று இரவே எங்கள் பண்ணை வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஆனாலும் அகத்தியர் நள்ளிரவில் அன்றைக்குத் தங்கக் கூடாது என்று சொன்னதால், அரைகுறை மனதோடு வெளியூருக்கு சென்று லாட்ஜில் தங்கினோம்.

மறுநாள் பகல் பொழுதில் எங்கள் வீட்டிற்குள் நுழைந்த போது படுக்கை அறைக்குள் நான்கு நல்ல பாம்புகள் இருந்தது.  அந்த அறையில் யார் வந்து இந்த விஷமுள்ள கருநாகங்களை  கொண்டு விட்டிருப்பார்கள் என்று பயந்து போனோம். நன்றாக மூடியிருந்த படுக்கை அறைக் கதவுகள் உடைக்கப்பட்டு அறைக்குள் பாம்புகளை வீசியிருக்கிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அறைக்குச்  செல்லும் வழியிலும் விஷமுள்ள பெரிய சர்ப்பங்கள் எங்கள் கண்ணில் தென்பட்டது.

வீட்டு வேலைக்காரர்கள் மூலம் அத்தனை பாம்புகளையும்  ஜாக்கிரதையாக பிடித்தோம். வேறு பாம்புகள்  இருக்கிறதா என்று இரண்டு நாட்களாக தேடிப்பார்த்தோம்.

இப்பொழுது தான் நாங்கள் நிம்மதியாக தூங்கப் போகிறோம்.  நல்ல வேளை.  அன்று நள்ளிரவே நாங்கள் பண்ணை வீட்டில் தங்கியிருந்தால் எங்களது மூவருடைய படங்களும் இன்றைய தினம் செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் வந்திருக்கும்.  அகத்தியர் தான் எங்களைக் காப்பாற்றினார்" என்று நடந்த நிகழ்ச்சியை அப்படியே தொடர்கதை போல் பரபரப்பாகச் சொன்னார்.

"வேலைக்காரனுக்கு தெரியாமல் இப்படி நடந்திருக்குமா? அவனை விசாரித்தீர்களா?" என்றேன்.

"அவன் மேல் தவறு இல்லைங்க.  அவனுக்கு குடிப்பழக்கம்  உண்டு நன்றாக குடித்து விட்டு தூங்கியிருக்கிறான்.  அவனையும் அறியாமல் நடந்த நிகழ்ச்சி இது" என்றார்.

"பாம்புகளைக் கொண்டு வந்து படுக்கை அறையில் விட்டு உங்களைக் கொல்லும் அளவுக்கு உங்களுக்கு அப்படி யாருங்க எதிரி இருக்காங்க!" என்றேன்.

"எனக்கு தெரிந்து என் மகள் மேல் ஆக்ரோஷம் கொண்ட அவளது பழைய நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.  வேறு யாரும் எனக்கு எதிரி இல்லை?" என்றார் அவர்.

"கருட தண்டகம் படித்ததால் பாம்புகளிடமிருந்து தப்பி இருக்கிறீர்கள்  தொடர்ந்து படித்து வாருங்கள். எல்லாவிதத்  தொல்லையிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள்.  இதுதான் அகத்தியர் இட்டதொரு கட்டளை" என்று பேசி முடித்தேன்.

என்னதான் இவர் பூசி மொழுகினாலும் எனகென்னவோ அவர் வீட்டு வேலைக்காரன் மீது ஒரு  சந்தேகம் இருந்தது.  நான்  சரியா என்பதை அறிந்து கொள்ள அகத்தியர் நாடியைப் பிரித்தேன்.

"ஏதாவது சொல்லி நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றிவிடாதே. இன்னும் சிலநாள்  பொறுத்திரு. குற்றவாளி யார் என்பது புரிந்து விடும்" என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். நானும் அப்படியே விட்டு விட்டேன்.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.  வெளியூரிலிருந்து அந்த பெரியவரே என்னிடம் பேசினார்.

"சார்! என் பெண் மீது  கோபம் கொண்ட அந்த பையன் விஷம் குடிச்சு ஆஸ்பத்திரியிலே பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கான்.  உயிர் தப்புவது கடினம் என்று சொன்னார்கள்.  அவன் நண்பர்கள் மூலம் என் வீட்டிற்கு பாம்புகளை கொண்டுவந்து விட்டது, எங்களை கொல்ல நினைத்தது எல்லாம் வெளியே வந்து விட்டது.  நாங்கள் அகத்தியர் அருளாலே தப்பிச்சுட்டோம்" என்றவர் "இதைத்தான் நாசூக்காக அகத்தியர் எங்களிடம் அன்றைக்கே சொல்லி விட்டார்.  நாங்கதான் அதை சரியாக புரிஞ்சிக்க முடியல்ல" என்றார் ஒரு வகையான பதற்றத்துடன்.  நான் மௌனமானேன்.

சில நாட்களுக்கு  முன்பு வந்த அந்த நபர் தனது மகளின் திருமணப் பத்திரிகையை வைத்து விட்டு, "அந்த பையன் முகமே நீலமாக மாறிவிட்டது உயிர் தப்பித்தானே தவிர நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு  சித்த பிரமையாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக  இருக்கிறான். கலியுகத்தில் இப்படியும் காரியங்கள் நடக்கத்தான் செய்கிறது" என்றார்.

தவறுக்கு தண்டனை உடனே கிடைத்து விட்டால் தெய்வத்தின் பெருமை யாருக்கும் தெரியாது.  பொறுமையாக இருந்து தான் தெய்வம் ஒவ்வொரு தவற்றையும் தண்டிக்கிறது.

அதுவரை மக்களுக்கு அகத்தியர் மீதும் தெய்வத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் சந்தோஷம்.

"ஓம் அகத்தீசாய நமஹ!"

சித்தன் அருள்.................... தொடரும்!