​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 July 2013

சித்தன் அருள் - 134

மனிதர்கள் இத்தனை ச்ரமங்களை அனுபவிக்க காரணம் அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்கிற தவறுகள் தான் என்று பல நேரங்களில் அகத்திய பெருமான் விளக்கும் போது உணர முடிந்தது.  அதிலும் மிக கொடியது என்பது, "தவறு என்று தெரிந்தும் சுயநல நோக்குடன் செய்கிற செயல்கள்".  அதை செய்து பல வருடங்கள் ஓடியபின் அதன் தாக்கம் பலவித வேதனைகள் வழி அப்படிப்பட்டவர்களை வருத்தும் போது சித்த பெருமக்களை நாடி வந்து வழி தேடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் இரு வித மனநிலை உடையவர்கள் இருப்பார்கள்.  தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொண்டு சித்தர் சொல்கிறபடி பரிகாரங்களை செய்து விடுதலை அடையவேண்டுபவர் ஒரு தரம். இரண்டாவது தரம், அனைத்தையும் மறைத்து வைத்து, சித்தர் தவறை சூசகமாக சுட்டிக்காட்டியும்,   வந்தவர் தன்னை தவறே செய்யாத யோக்கியன் என காட்டிக் கொள்வார். அப்போது சித்தர்கள் அவர்களை நடத்துகிற முறை நிறையவே வித்யாசமானதாக இருக்கும்.  மறுபடியும் பிரச்சினை பூதாகரமாக ஆனபின் ஓடி வரட்டும், அப்போது பார்க்கலாம் என்று விட்டுவிடுவார்கள். அப்படி போய் ஓடிவரும்போது அவர்களிடம் உண்மையாகவே திருந்துகிற மன நிலை இருக்கிறதா என்று சோதித்து பார்த்தபின், மனம் கனிந்து சித்தர்கள் உதவி புரிவார்கள். அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

அன்று ஒருநாள் நாடி பார்க்க உட்கார்ந்த போது

"நீங்கள் சொன்னது அத்தனையும் செய்து விட்டேன். ஆனால் இதுவரை ஒன்று கூட நடக்கவில்லை. இருந்தாலும் மறுபடியும் அகத்தியரை நாடி வந்திருக்கிறேன்.  என் பிரச்சினைக்கு ஏதேனும் வழி காட்டுங்கள்" என்றாள் அந்த நடு வயது பெண்மணி.

"என்ன பிரச்சினை?" நிதானமாக கேட்டேன்.

"கடன் தான். என் கணவருக்கு உடல் நலம் சரியில்லை.  "கிட்னி" சரி வர இயங்கவில்லை. எனக்கும் ஒரு விபத்தில் ஏற்பட்ட அடியில் முதுகுத் தண்டில் வலி. குனிந்து நிமிர முடியவில்லை" என்றாள்.

"வேறு ஏதாவது இருக்கிறதா?"

"இருக்கு.  என் பெண்ணுக்கு இருபத்தி இரண்டு வயது.  நன்றாகவே படித்துக் கொண்டிருந்த அவளுக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. கல்லூரிக்குப் போக மறுக்கிறாள்.  தனக்குத் தானே பேசி, சிரித்துக் கொள்கிறாள்.  ராத்திரி நேரத்தில் அவள் தூங்குவதே இல்லை":

"டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டினீர்களா?"

"பார்க்காத டாக்டர் இல்லை.  ஏதேதோ மருந்து கொடுத்தார்கள். சரி வரவில்லை.  மருத்துவமனையில் அட்மிட் பண்ணி சிகிர்ச்சை செய்தேன். இதுவரை பயன் இல்லை.  யாரோ காதில் பேசிக் கொண்டே இருப்பது போல் உணர்வதாக சொல்கிறாள்".

"என்ன பேசுவதாக சொல்கிறாள்?"

"இதைச் செய்யாதே. அதை செய்யாதே, அந்தப் பக்கம் போகாதே, இதைச் சாப்பிடாதே, உன் அப்பா ஒரு அயோக்கியன், அவனை நம்பாதே, என்று சொல்வது போல் தோன்றுகிறதாம்"

"எத்தனை நாளாக?"

"எட்டு மாதமாக" என்று சொல்லி முடித்தாள்.

"இதற்கு முன்பு எப்பொழுது அகத்தியர் நாடியைப் பார்த்தீர்கள்?"

"மூன்று வருஷத்திற்கு முன்பு - அதன் பிறகு வரவேண்டும் என்று நினைத்தேன், முடியவில்லை.  இன்றைக்குத் தான் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது".என்றாள்.

இதைக் கேட்டதும், எனக்கு ஒரு மாதிரியாக ஆயிற்று!

மூன்று வருஷத்திற்குப் பின் இப்போது வந்து ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னவள், இப்பொழுது அருள் வாக்கு கேட்டு எட்டு வருஷம் கழித்து "ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னாலும் சொல்வாள்.  நமக்கென்ன? அகத்தியரிடம் வாக்கு கேட்போம்.  அவர் சொன்னால் அப்படியே சொல்வோம்.  இல்லையேல் விட்டுவிடுவோம்" என முடிவெடுத்தேன்.

அகத்தியர் நாடியில் சொன்னது இது தான்.

"அன்றைக்கு கஷ்டப்பட்டாள்.  வழி காட்டினோம். இதுவரை முறைப்படியாக எதுவும் செய்யவில்லை. இருப்பினும் அவளது கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.  பணம் பல வழிகளில் குவிந்தது. அகலக் கால் வைத்தாள்.  நாலைந்து கார்கள் வாங்கி வாடகைக்கு விட்டாள்.  மேலும் பணம் குவிந்தது. வெளிநாட்டிற்குச் சென்றாள், உல்லாசமாக பணத்தை செலவழித்தாள். தொழிலை சரியாகக் கவனிக்க முடியாததால் அத்தனை பேர்களும் ஏமாற்றினார்கள்.  கடன் ஏற்பட்டது.  இப்பொழுது அத்தனையையும் மறைத்து விட்டு அகத்தியனிடமே பொய் சொல்கிறாள்.  என்ன வேடிக்கையான உலகமடா" என்று எனக்கு மாத்திரம் தெய்வ ரகசியமாக சொல்லி விட்டு........

"சில பரிகாரங்களைச் சொல்கிறேன்.  அதை மாத்திரம் செய்து வந்தால் உன் கணவருக்கு ஏற்பட்ட கிட்னி தோஷம் விலகும்.  சவுக்கியமாக இருப்பார்", என்றார், அகத்தியர்.  சில பிரார்த்தனைகளையும் சட்டென்று சொன்னார்.

"இரண்டு கிட்னியும் சரியாகி விடுமா?" என்று ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.

"நிச்சயம் சரியாகிவிடும்.  ஆனால் ஒன்று, நீயும் உன் கணவரும் மிகப் பெரிய தவறைச் செய்து இருக்கிறீர்கள்.  அந்த ஏழைகளின் சாபம் தான் இப்படி உங்களை கஷ்டப்படுத்துகிறது.  அது என்ன தப்பு என்பது உங்களுக்கு தெரியும்" என்று ஒரு பீடிகையைப் போட்டார் அகத்தியர்.

சிறிது நேரம் யோசிப்பது போல் யோசித்துப் பார்த்து விட்டு, நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்யவே இல்லையே" என்று ஒட்டு மொத்தமாக அந்த பெண்மணி மறுத்தாள்.

அதோடு தான் செய்த தானங்களையும் பட்டியல் போட்டு பேசினாள்.  அவளது ஆணித்தரமான மறுப்பு என்னையே குலை நடுங்க வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இனி இவளோடு பேசுவதில் எந்த பயனும் இல்லை, என்று விட்டுவிட்டேன்.

என் வீட்டுக்காரருக்கு பலன் சொல்லி விட்டீர்கள். அது சரி... எப்போ எங்க கடன் அடையும்? என் பெண்ணுக்கு எப்பொழுது மனஅழுத்த நோய் விலகும். இதைப்பற்றி அகத்தியர் ஒன்றுமே சொல்லவில்லையே" என்றார் குறையுடன்.

"அகத்தியரால் சொல்ல முடியவில்லையே என்று சொல்லாதீர்கள்.  அவரால் எதையும் ஆதாரத்தோடு சொல்ல முடியும்.  ஆனால் அதைத் தாங்கும் பக்குவம் உங்களுக்கு தான் இருக்காது" என்றேன்.

"பரவாயில்லை, என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.  சொல்லுங்கள்" என்று விடாப்பிடியாக கேட்டாள்,

நான், அகத்தியரை வேண்டிக் கொண்டு நாடியைப் பிரித்தேன்.

அகத்தியர் ஓலைச் சுவடியில் வரவே இல்லை.

இதை அந்த பெண்மணியிடம் சொன்ன போது ஏளனமாகச் சிரித்தாள்.

"நீங்கள் மட்டுமல்ல.  அகத்தியரோ, காக புசுண்டரோ, திருமூலரோ கூட பதில் சொல்ல முடியாது.  ஏனென்றால் நான் என் நினைவிற்குத் தெரிந்து எந்த தவறும் செய்ய வில்லை.  அது தான் உண்மை " என்று அடித்துப் பேசினாள்.

இந்த பெண்மணி தவறு செய்யாமல் இருந்தால் அவளுக்கு ஏன் இந்த கஷ்டம். கிட்னி பழுதடைந்து உயிருக்குப் போராடும் கணவன், திடீர்ன்று மனப் பிரம்மை அடைந்து சித்த சுவாதீனமாக இளம் பெண், கூடவே கழுத்தை நெரிக்கும் கடன் ஏன் ஏற்படுகிறது? என்று நான் யோசித்தேன்.

அகத்தியரே நாடியில் வந்து சொல்லாத போது நாமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

அகத்தியரை வார்த்தைகளால் தோல்வி அடையச் செய்த மதமதப்பில் பீடு நடை போட்டாள் அந்த பெண்மணி.

பத்து மாதங்கள் சென்றன.....

அதே பெண்மணி - மிகவும் தளர்ந்த நிலையில் என்னிடம் வந்தாள்.  அவளைக் கண்டதும் என் அடிவயிறு கூட கலங்கியது.  எதற்காக வந்திருக்கிறாள் இவள்? என்று சற்று பதைபதைத்துப் போனேன்.

"அய்யா, என்னை ஞாபகமிருக்கிறதா?" என்றாள்.

"அகத்தியனை அவமானப்படுத்தி விட்டு திமிர் பிடித்த நடையில் சென்ற உன்னையா ஞாபகமிருக்காது?" என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட நான், அசட்டு சிரிப்போடு "உங்களையா எனக்கு தெரியாது?" என்று மேலோட்டமாக பேசினேன்.

"அய்யா! அகத்தியர்தான் என் வீட்டுக்காரரையும், என் பெண்ணையும் காப்பாற்றணும்" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

இது என்ன புதுசாக இருக்கு என்று எண்ணினேன்.

"சொல்லுங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு?"

"அன்னிக்கு அகத்தியர் கிட்டே சவால் விட்டுட்டுப் போனேன்.  இப்போ என் கணவரே என்னை விட்டுப் போயிடுவார் போலிருக்கு.  என் பெண்ணுக்கும் இன்னும் சித்தப் பிரமை போகவில்லை.  இன்னும் சொல்லப் போனால் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது" என்று புலம்பினாள் அவள்.

"கடனுக்கு பரிகாரம் சொன்னாரே, அதை செய்துவிட்டு வந்தீர்களா?" என்று கேட்டேன்.

"செய்யவில்லை" என்று தலையை மெதுவாக ஆட்டினாள்.

"ஒண்ணுமே செய்யாமல் மீண்டும் அகத்தியரிடம் வந்தால் நல்ல பதில் கிடைக்காதே" என்றேன்.

"நான் தான் சொல்றேனே, அகத்தியர் கிட்டே ஒண்ணுமே மறைகல்ல, பெரிய பெரிய தப்பு பண்ணியிருக்கோம்.  அது தான் என் மனதை உறுத்துகிறது.  ஆனால் அதுக்கு பரிகாரம் செய்யலே" என்று ஏதேதோ சொன்னாள்.

இனியும் இந்தப் பெண்மணியை தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணி இப்போதாவது அகத்தியர் நல்ல வார்த்தை கூறுவாரா? என்று பிரார்த்தனை செய்து நாடியைப் புரட்டினேன்.

"அன்றைக்கு அகத்தியன் இவள் பொருட்டு வாய் திறக்கவில்லை.  அதை சாதகமாக எடுத்துக்கொண்டு தன்னைப் புனிதவதியாக காட்டிக் கொண்டாள். இவள் கணவன் பிழைக்க வேண்டுமானால் நாமக்கல்லுக்குச் சென்று இளங்கோவன் குடும்பத்தினரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கட்டும் முதலில்.

பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு வந்து சேலம் குகைக்கு அருகிலுள்ள பவானியம்மாள் குடிசைக்குச் சென்று தன் கையிலிருக்கும் எட்டு பவுன் தங்க சங்கிலியை அவளுக்குக் கொடுத்து வரட்டும்.

இந்த இரண்டையும் முடித்து விட்டு சோளிங்கர் வந்து லட்சுமி நரசிம்மர் சன்னதியில் காலையிலிருந்து மாலை ஆறு மணி வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் லட்சுமி நரசிம்மர் மந்திரங்களையும், காயத்ரியையும் ஜெபிக்கட்டும்.  இனி எந்த தவறையும் செய்ய மாட்டேன் என்று லட்சுமி நரசிம்மரிடம் சத்திய வாக்கு கொடுத்து வரட்டும்.

இதை இன்னும் மூன்று நாட்களுக்குள் செய்யவில்லையெனில், கணவனையும், மகளையும் பற்றி அறவே மறந்து விட வேண்டியதுதான்" என்று அகத்தியர் அணுகுண்டு ஒன்றையும் தூக்கி எறிவது போல் போட்டார்.

இத்தனையும் கேட்டுக் கொண்ட அந்த பெண்மணி மறுமொழி பேசாமல் அகத்தியரை வணங்கி விட்டு விருட்டென்று வெளியேறினாள்.  எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஒரு வாரம் கழித்து அந்த பெண்மணி மகிழ்வோடு என்னைத் தேடி வந்தாள். தன கணவருக்கு வேறொருவரின் கிட்னி கிடைக்கப் போவதாகவும், சித்த சுவாதீனமாக இருந்த தனது இளம் மகள் இப்பொழுது முற்றிலும் தேறிவிட்டதாகவும் கூறிய போது ஆச்சரியப் பட்டு போனேன்.

"அப்படி என்னதான் அதிசயம் நடந்தது?" என்று அந்தப் பெண்மணியிடம் நிதானமாக கேட்டேன்.

"ஒரு சில டாக்டர்களின் தூண்டுதலின் பேரில் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏழைகளை ஏமாற்றி, அவர்களது கிட்னியை எடுத்து விற்று பிழைத்தோம். நல்ல வருமானம் வந்தது.  அதன் காரணமாக என் கணவருக்கு கிட்னி போயிற்று.  ஒரு ஏழைப் பெண்ணிற்கு கிட்னியை எடுக்கும் பொழுது தவறான சிகிற்சையால் அவள் பைத்தியமானாள்.  அதனால் என் பெண்ணிற்கும் சித்த பிரம்மை பிடித்தது.  இப்போது அந்த பாவம் அகத்தியர் கருணையால் விலகியது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு காணாமல் போனாள்.  இன்று வரை கண்ணில் தென்படவே இல்லை.

சுயநலத்திற்காக பிறரின் வாழ்க்கையை சிதற அடிக்கும் செயல்களுக்கு மனிதன் என்று முற்றுப்புள்ளி வைக்கிறானோ, செய்தது தவறு என்று உணர்ந்து திருந்துகிறானோ, அன்று முதல் தான் அமைதி என்பது மனித வாழ்வில் நிலைத்து நிற்கும்.  அதுவும் சித்த பெருமான் துணை இருந்தால் மட்டும் தான்.

சித்தன் அருள் ...................... தொடரும்!

8 comments:

  1. ஒரு பொய்யான விஷயத்தை பல முறை பலரிடம் சொன்னால் உண்மையாகும் என்பதும் ஒரு உண்மையை பல முறை பொய் என்று சொன்னால் அது பொய்யாகவே மாறும் என்பது பலரின் தவறான நம்பிக்கை! அப்படி சொல்வதால் அதன் தன்மை ஒன்றும் மாறபோவதில்லை, ஆனால் நம் மனது தான் மாறி புரிந்து கொள்கிறது! அப்படி மற்றவர்களை ஏமாற்ற நினைக்கும் மனது தனுக்கு தானே ஏமாந்து கொள்கிறது என்பதை நன்றாக உணர்த்தி இருக்கிறார் சித்தர் பெருமான்! தவறு என்பதை நாம் தவறு என்று ஏற்று கொள்வதால் நமக்கு விமோசனம் என்று தெளிவாக சொல்கிறது இந்த அத்யாயம்! பிறரை ஏமாற்றி நாமே தான் ஏமாறுகிறோம்! அத்தனைக்கும் சாட்சி அந்த அந்தர்யாமி!நன்றி இதை புரியவைத்ததற்கு!

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete
  4. Jai Sarguru Jai Agathiyare namaha

    ReplyDelete
  5. True...Ayya only sees the trust you have and how honest you are...if we fall at his feet asking for forgiveness for the sins we have done.. he some how sows the way..sometimes even if we did not do what was told by him..i feel he understand our frustration and guides and sends someone else to have the problem solved...many times his kindness brings tears in my eyes...

    ReplyDelete
    Replies
    1. It is not only the trust, He considers the unwavering faith in him and dharma, and spotless conduct in one's life.

      Delete