​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 29 March 2021

சித்தன் அருள் - 992 - அகத்தியரின் பாலராமபுரத்தில், திருவிழா!

 வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பாலராமபுரம் அகத்தியப்பெருமானின் கோவிலில், வருடாந்திர பூசை திருவிழா, ஏப்ரல் மாதம் 5ம் தியதி முதல் 14ம் தியதி வரை நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை கீழே தருகிறேன். இந்த திருவிழாவில் பங்கு பெற விரும்புகிறவர்கள், தொடர்பு கொள்ள வேண்டியது,

திரு.ரத்தீஷ், செயலர் பாலராமபுரம் கோவில் - 90483 22565.

அனைவரும் அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் பெற்று சிறப்பாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Monday, 22 March 2021

சித்தன் அருள் - 991 - அனந்தபத்மநாப சுவாமி கோவில், திருவனந்தபுரம்-பத்மநாப ஸ்வாமிக்கு சூரிய பகவானின் நமஸ்காரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

திருவனந்தபுரத்திலுள்ள, ஸ்ரீ பெரும்தேவி தாயார் சமேத அனந்த பத்மநாபா சுவாமி கோவில் என்பது நம் குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு நிறையவே தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். அகத்தியப்பெருமான், சிவபெருமானின் உத்தரவால், பாரத கண்டத்தை காக்க பல விஷயங்களை நடத்திக் கொடுத்தார். அதில் மிக மிக உயர்ந்த நிலையில் அவரே விரும்பி தன் ஜீவசமாதியாக பத்மநாபசுவாமி கோவிலையும் அமைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட கோவிலை பின்னர் காலங்களில், விரிவுபடுத்திய பொழுது, கட்டிடக்கலையின் மிக அரிதான சூக்க்ஷுமத்தை கோபுர வடிவில் அமைத்தார். அது என்ன என்பதை கீழே விளக்குகிறேன்.

வருடத்தில் இரண்டு நாட்கள் பகலும், இரவும் சரி சம அளவாக இருக்கும் நாட்கள் இரண்டே நாட்கள் தான். அவை, மார்ச் மாதம் 21ம் தியதியும் செப்டம்பர் மாதம் 23ம் தியதியும். இந்த இரண்டு நாட்களிலும் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், கோவிலின் கிழக்கு வாசலில் நின்று கோபுரத்தை பார்த்தால், சூரியன், தன் கதிர்களை கோபுரத்தின் ஐந்து வாசல்கள் வழியும் நுழைந்து, வெளிச்சம் போட்டு கோபுரத்தை அழகுபடுத்தி செல்வதை காணலாம்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி நம் குருநாதரின் சமாதி கோவிலில் எல்லா வருடமும் நடக்கிறது என்பது மிக ஆனந்தம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

அடியேனுக்கு கிடைத்த ஒரு காணொளியை, நீங்களும் கண்டு மகிழ இங்கு சமர்ப்பிக்கிறேன்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள் ............... தொடரும்!

Thursday, 18 March 2021

சித்தன் அருள் - 990 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு சிறு பரிகாரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நவகிரகங்களில், சனி கிரகத்தினால், மனிதர்கள் கடுமையாக பாதிக்க படக்கூடாது என்பதற்காக அகத்தியப்பெருமான் ஒருமுறை அருள்வாக்கில் நல்ல வழியை உரைத்தார். அதை செய்து பார்த்த பொழுது, அன்னம் தானமாக கொடுப்பதின் பலனை அடியேன் தத்ரூபமாக அனுபவித்ததினால், நண்பர்களுக்கு தெரிவித்து நல்ல பலனை அவர்கள் பெற்றதையும் கண்டேன்.  இன்று அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சனிக்கிழமையன்று ஒரு உள்ளங்கை நிறைய பச்சரிசியோ அல்லது அதை நன்கு பொடி செய்து மாவோ எடுத்து, சூரியன் உதித்தபின் நமஸ்காரம் செய்துவிட்டு, அரச மரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வந்து, அந்த அரிசியை/அரிசி மாவை மரத்தை/விநாயகரைச்சுற்றிப்போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம்.  சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள், தமது மழைக் காலத்திற்காக  சேமித்து  வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படிஇரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அது வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு  உணவாகப் போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, சனி மகா தசை நடப்பவர்களுக்கு, இது ஒரு மிகப் பெரிய வரப்ரசாதம் ஆகும். இதனுடன், உடல், ஊனமுற்றவர்களுக்கு காலணிகள், அன்ன தானம் அளிப்பது, மிக நல்லது.

இதை தொடர்ந்து செய்து வர பல தலைமுறைகளுக்கான புண்ணியத்தை நாம் எளிதில் சேர்த்துவிடலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Sunday, 14 March 2021

சித்தன் அருள் - 989 - குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு சமர்ப்பணம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானுக்கு குருதக்ஷிணையாக திரு.R.தேவராஜன் அவர்கள் சமர்ப்பித்த பாடல் தொகுப்பில், இரண்டு பாடல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இரு பாடல்களையும் கேட்டுவிட்டு, இயற்றி, இசை அமைத்து, பாடி சமர்ப்பித்த அனைவரையும், வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இன்னும் இதுபோல் நிறைய பாடல்களை குருநாதர் மேல் பாடி சமர்ப்பிக்க வேண்டிக் கொண்டு, அடியேன் அவர்களை வாழ்த்துகிறேன்.

பாடல் : சப்த ரிஷிகளில்
இயற்றியவர் : திரு.கு.மா.பா.திருநாவுகரசு
இசை :திரு.R.தேவராஜன்
பாடியவர் : திரு.பிரசன்னாபாடல் : அ முதல் ன் வரை எழுத்துக்கள்
இயற்றியவர் : திரு.கு.மா.பா.திருநாவுகரசு
இசை : R.தேவராஜன்
பாடியவர் : R.தேவராஜன்பாடல்கள் ஐந்தையும் டவுன்லோட் செய்ய கீழே உள்ள தொடுப்பை  உபயோகிக்கவும்.


ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்................தொடரும்!

Saturday, 13 March 2021

சித்தன் அருள் - 988 - பச்சைவண்ணப் பெருமாளுக்கு/குருவுக்கு சமர்ப்பணம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.R.தேவராஜன் என்கிற இறை/அகத்தியர் அடியவர் ஒரு பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாடலாக, "கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமாள்" மீது இயற்றி பாடப்பட்ட பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

பாடல்:திரு.ந.முரளிதரன்
இசை:R.தேவராஜன்
பாடியவர்: :R.தேவராஜன்  

பாடலை கேட்டபின், இயற்றி, இசையமைத்து, பாடிய அனைவரையும் வாழ்த்தி வணங்கிட வேண்டுகிறேன். இவர்கள், மேலும் மேலும் நிறைய பாடல்களை சமர்ப்பித்து, இறையருள்/குருவருள் பெற வேண்டிக்கொள்கிறேன்.


பச்சை வண்ண பெருமாளே
----------------------

பல்லவி :-
-----------------

பச்சை வண்ண பெருமாளே
பவளவாய் திருமாலே
ப்ரஹன் மாதவனே
உன்னை, ஐப்பசியில் காண்பேனோ
ஐயுற்றேன் நானே
தொற்று எங்களை தடுக்குமோ
உன் திருவடி
பற்ற வழி  பிறக்குமோ

சரணம் :-
----------------

குருவின் திருவருள்
குறையின்றி இருக்க
கலக்கம் எல்லாம்
காற்றாய் பறக்க
அம்பாய் அடியவர்கள்
தெம்பாய் கிளம்பிட

திரயோதசி மலர்ந்த காலை
லோப அன்னையை வணங்கிய வேளை
சேயென தழுவி
குளிர்ந்து போனாளே  
ஆசி வழங்கி போனாளே

சரணம் :-
---------------

குறுமுனி  கையால்
அபிஷேகம் கிடைக்க
ஆனந்த லயமாய்
மாதவன் சிரிக்க
பண்பாய் அன்பர்கள்
பரவசமாய் பார்த்திட

கருட பூமி வந்த நாளே
கோடி புண்ணியம்
சேரும் நாளே
நீரென அருவி
எந்தன்  க(ண்)ணிலே
சேரும்
உந்தன் பாதத்திலே


குருவே சரணம்

பாடல்:திரு.ந.முரளிதரன்
இசை:R.தேவராஜன்
பாடியவர்: :R.தேவராஜன்


குருவே சரணம்
 ----------------------------

பல்லவி :-


குருவே சரணம் குருவே சரணம்
எனை ஆட்கொண்ட மாமுனியே சரணம்
கருவே வினை தருமே பிணை
மறுபிறவி அறுக்கும் மாமருந்தே சரணம்

இடகலை பிங்கலை இடையே நடமிடும் சிவமைந்தனே சரணம்

சரணம் :-
---------------

உந்தன் தமிழ்தனை
துளியென தந்தனை
என்னுள் அமிழ்தென
நாளும் வளர்த்தனை
அருளினை தருவாய்
அறத்தினை முகிலாய்
மனத்தினில் பொதித்த
மாமுனியே சரணம்

சரணம் :-
--------------

கோபக் கனலினை
குளிர செய்தனை
பாபச் சுமையினை
பஞ்சென குறைத்தனை
அகத்தினை ஒளியாய்
சகத்தினை காப்பாய்
லோப மணாளனே சரணம்

ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 11 March 2021

சித்தன் அருள் - 987 - அகத்தியப்பெருமானுக்கு குருதக்ஷிணை சமர்ப்பணம்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய மஹாசிவராத்திரி அன்று எல்லோரும் இறையருள் பெற்று நலமாய் வாழ பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய!

திரு.தேவராஜன் என்கிற அகத்தியர் அடியவர், நம் குருநாதர், கோடகநல்லூர் பெருமாள் பெயரில், ஒரு பாடல் தொகுப்பை இசை தட்டாக வெளியிட்டுள்ளார். மிக சிறப்பாக வந்துள்ள அந்த பாடல்களை, கோடகநல்லூர் பெருமாள் சன்னதியில் சமர்ப்பித்தபின், சென்னை தியாகராஜ நகரில் உள்ள அகத்தியர் ஆலயத்திலும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

இசை தட்டில் வெளியிட்ட ஐந்து பாடல்களையும், அடியேனுக்கு அனுப்பித்தந்து, அனைத்து அடியவர்களும் கேட்டு பயனுற, அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூவில் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளார். முதல் பாடலை வீடியோவாக உருமாற்றி கீழே தருகிறேன். பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளது. 

பாடல்: உம்மை தேடி சென்ற வழிகள்
பாடியவர்:D.பிரவீன் சக்ரவர்த்தி
இசை:R.தேவராஜன்
இயற்றியது-திரு.அக்னிலிங்கம்குருவுக்கு தக்ஷிணையாக பாடலை சமர்ப்பித்த திரு: R.தேவராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்து, பாடிய திரு.பிரவீன் சக்ரவர்த்தி மேலும் இதுபோல் நிறைய பாடல்களை குருவின் மீது இயற்றி/பாடி வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன். நீங்களும் பாடலை கேட்டு, அவருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

உம்மை தேடிக் சென்ற வழிகள் என்னை
அழைத்து சென்றது ஆண்டவனிடம்

குரு தக்ஷிணை கொடுக்க உம்மை
ஓடித் தேடிய அப்பொழுது
"நல்லது செய்ய பழக
வாய்ப்பளித்தது இறைவன் என்றீர்!"
அவனுக்கு நன்றி கூறு
அதுவே குருதக்ஷிணை ஆகும்
இறையே அனுமதிக்கா எதுவும்
எங்கள் தட்சிணையாகாதென்றீர்.

மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கவேண்டா!
மனமது செம்மையாகிட
ஆசைகளை அறுமீன்காள் என்றீர்
கரையேரா ஆசைகள் எல்லாம்
வாசனையாய் மாறுமென்று
கடவுளை நாடிச்செல்ல
கடத்திவிட மறுத்ததேனோ!

உங்களின் தரிசனம் கூட
நியாயமாய் மறுக்கப்பட
இருமுறை சன்னதி வந்தும்
கதைவடைத்தது அது ஏனோ!
அனுபவமே நான்தான் என்று
ஆதியில் இறையே உரைக்க
அனுபவம் தேடிச்சென்று
இறையை கண்டு கொண்டேன்.

மேலான தர்மங்கள் மனிதருக்கு உரைத்திட
இறைவன் அனுமதிதான் என்றும் தேவை என்றீர்
மனிதருக்கு புரியும் விதமாய்
மனதினை மாற்றியமைக்க
குருவருள்தான் என்றும் வேண்டும் அய்யா!

இனியுள்ள வாழ்க்கையில்
குரு உம்மை அடிபணிந்து
உம் திருப்பாதம் சிரசில் ஏந்தி
மகிழ்ந்திட வாய்ப்பளிப்பீர்!

சித்தன் அருள்............தொடரும்!

Thursday, 4 March 2021

சித்தன் அருள் - 986 - ஆலயங்களும் விநோதமும் - ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி!


திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது. இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது

முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். 

பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.

நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.

ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.

நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5–ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.

தாமாகத் தோன்றிய பெரிய திருமேனி. மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

திருத்தொலைவில்லிமங்கலம் அருகிலுள்ள சௌரமங்கலம் கிராமத்தில் அவதரித்த நம்மாழ்வாரை, அவரது பெற்றோர் குருகூருக்கு அழைத்து வந்து ஆதிநாதன் ஸந்நிதியில் விட்டனர். குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்தது. மதுரகவி ஆழ்வார் இங்கு வந்து தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய்மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. அதனால் 'ஆழ்வார் திருநகரி' என்று பெயர் பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!