​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 30 September 2016

சித்தன் அருள் - 454 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஆடுகளத்திலே விளையாடுவது மனிதர்கள்தான். நாங்கள் நடுவர்கள், தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான் எங்கள் கடமையே தவிர "இப்படி ஆடு! அப்படி ஆடு!" என்று ஆட்டம் தொடங்கும் முன் வேண்டுமானால் சொல்லலாம். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நாங்கள் யார் பக்கமும் பேசக்கூடாது. எனவே, வழிகாட்ட நாங்கள் என்றும் இருக்கிறோம். ஆனால் அந்த வழியில் செல்ல மனிதர்கள்தான் தயாராக இல்லை. உலகியல் பிரச்சனைகளை ஆன்மீகப் பிரச்சினைகளோடு இணைத்துக் குழப்புவதே மனிதனுக்கு இயல்பாகிவிட்டது.

Thursday, 29 September 2016

சித்தன் அருள் - 453 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"சிவனேனு இரு" என்பதை "எதையும் செய்யாமல் இரு" என மனிதன் எடுத்துக் கொள்கிறான். அப்படியல்ல. ஒரு மனிதன் புறத்தோற்றத்திலே செயல்படாதது போல் தோன்றினாலும், அவன் ஆத்மா நன்றாக பலம்பெற்று,   வினைகளை எல்லாம் முற்றிலுமாக எரித்து, பிறகு சதா பத்மாசனத்திலே அமர்ந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறையோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, சதா சர்வகாலமும், அந்த இறையோடு தொடர்பில் இருக்கும்பொழுது, அந்த தவத்தின் பலன், ஒளி, ஆற்றல், அலைகள் எல்லாம், அவன் சார்ந்திருக்கும் இடத்தை சுற்றி பல நன்மைகளை செய்யும். அப்படி இருப்பதற்குப் பெயர்தான் "சிவனேனு இரு" என்பதின் பொருளாகும்.

சித்தன் அருள் -452- "பெருமாளும் அடியேனும்" - 67 - வேங்கடவரும் அகத்தியரும் "நாராயணரும்"


நாராயணப் பெரியவர் கொண்டுவந்த மூட்டையிலிருந்து சாளக்கிராமம் கீழே விழுந்ததும் விழுந்த இடத்தில் சுனை தோன்றியதும் அந்தச் சுனைக்குள் சாளக்கிராமம் இருப்பதையும் கண்டு வியந்து போன ‘அகத்தி’ என்ற அகத்தியருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இப்படிப்பட்ட அதிசயம் நடக்குமா? என்று வியந்து போன அகத்தி, நாராயணப் பெரியவரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்.

“பெரியவர் யாரென்று இந்த அடியேன் தெரிந்து கொள்ளலாமா?”

“நீ யாரென்று சொன்னால் என்னைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.”

“ஐயாவைப் பார்க்கும்பொழுது வைணவத்திற்காக எதையும் இழப்பவர், வேங்கடவன் மேல் பற்று கொண்டவர் என்று உயர்ந்த எண்ணம் ஏற்பட்டது. “கோவிந்தா! கோவிந்தா!” என்று, தாங்கள் ஒவ்வொரு வினாடியும் நாமத்தைச் சொல்லி வந்தீர்கள். வேங்கடவ தாசனான தங்களுக்கு கைம்மாறு செய்ய வேண்டி, மாற்று உருவம் எடுத்து தங்களுக்கு உதவிசெய்ய வந்தேன். அடியேனுக்கு அகத்தியன் என்று பெயர்” என்றார் அகத்தி என்ற அகத்தியர்.

“அகத்தியர் போன்ற சித்த புருஷர்களைச் சந்திக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அகத்தியர் இன்னும் இளமை வேஷம் போடவேண்டாமே! நிஜ உருவத்திலேயே எனக்குக் காட்சியைத் தந்தால் பாக்கியவான் ஆவேன்.” என்றார் நாராயணப் பெரியவர்.

“சந்தோஷமாக” என்று சொன்ன அகத்தியர் அடுத்த வினாடி அகத்தியராக மாறி இயல்பான நிலைக்கு வந்தார்.

நாராயணப் பெரியவர் தன் இரு கைகளையும் கூப்பி சாஷ்டாங்கமாக அகத்தியர் காலில் விழுந்தார். அவரை கைதாங்கிப் பிடித்துக் கொண்ட அகத்தியர் “இது வேங்கடவன் சந்நிதி. ஆதிசேஷனின் தலையில் வேங்கடவன் அமர்ந்திருக்கும் புண்ணிய ஸ்தலம். இங்கே என் காலில் விழக்கூடாது. வேங்கடவன் காலில் விழ வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“அகத்தியரே! தங்களை இந்தத் திருமலையில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நான் வேங்கடவனைப் பற்றி கிரந்தத்தில் நிறைய ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். இதைத் தாங்கள் தமிழில் மொழி பெயர்த்து எல்லாரும் அறிய வெளிக் கொணரவேண்டும். செய்வீர்களா?” என்று கேட்டார் நாராயணப் பெரியவர்.

“இது வேங்கடவனே அடியேனுக்கு இட்ட கட்டளையாக எண்ணுகிறேன். வேங்கடவனின் எண்ணம் அதுபோல் இருக்குமேயானால் இந்தத் திருமலையில் தாங்கள் எழுதிய கிரந்தத்தை மொழிபெயர்ப்பு செய்து, புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று அதை அரங்கேற்றமும் செய்துவிடுகிறேன். போதுமா?” என்றார் அகத்தியர்.

“தன்யனானேன்” என்ற நாராயணப் பெரியவரிடம் அகத்தியர் “பெரியவரே! எனக்கொரு சந்தேகம். தாங்கள் யார்? எதற்காக கஷ்டப்பட்டு மலையேறி வரவேண்டும்? அதுவும் சாளக்கிராமத்தையும் ஓலைச் சுவடிகளையும் தலையில் சுமந்து?” என்று லேசாக நிறுத்தினார்.

“ம்ம்! வேறு என்ன சந்தேகம் அகத்தியரே! எதுவும் கேட்க வேண்டியதுதானே?”

“சாளக்கிராமம் ஏன் வெளியே வந்து விழுந்தது? விழுந்த இடத்தில் எப்படி சுனை உண்டாயிற்று? சாளக்கிராமம் அந்தச் சுனைக்குள் இருப்பதன் காரணம் என்ன? இதையெல்லாம் தாங்கள் கூறவேண்டும் என்று ஆசை” என்றார் அகத்தியர்.

“நாராயணப் பெரியவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இப்படி இந்த மரநிழலில் ஆற அமர உட்கார்ந்து பேசலாமா?” என்றார்.

“தாராளமாக” என்று அகத்தியர் சொல்ல, இருவரும் அந்த சுனை தோன்றிய பள்ளத்தின் அருகிலுள்ள நாவல் மரத்தடியில் அமர்ந்தார்கள்.

“என் பெயர் நாராயணன். வைணவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இளம் வயதிலே வேதம், கிரந்தம் போன்றவற்றைக் கற்றேன். எட்டு வயதில் வீட்டை விட்டுப் புறபட்டேன். இப்பொழுது வயது எண்பத்தெட்டு ஆகிறது. கடந்த எண்பது ஆண்டுகளாக இந்த பாரத தேசம் முழுவதும் கோவில் கோவிலாகச் சுற்றினேன். அறுபது வயதில் நான் நேபாளத்துக்குச் சென்று கண்டகி நதியோரம் ஆஸ்ரமம் போல் ஒன்றை அமைத்துக் கொண்டு விஷ்ணுவைத் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் என் மடியில் இந்த சாளக்கிராமம் வந்து விழுந்தது.”

தானாக எப்படி சாளக்கிராமம் வந்து விழுகிறது என்று எண்ணி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஓர் அசரீரிக் குரல் கேட்டது. “நாராயணா! நீ இங்கேயே இருந்து இருபத்தைந்து ஆண்டு காலம் இந்த சாளக்கிராமத்தை வைத்து பூஜை செய். உன் எண்பத்தைந்தாவது வயதில் இங்கிருந்து நடைப்பயணமாக திருமலைக்குப் புறப்பட்டுச் செல். அப்போது இந்த சாளக்கிராமமும் உன்னுடன் இருக்கட்டும். திருமலையில் ஓர் அதிசயம் நடக்கும். எந்த இடத்தில் இந்த சாளக்கிராமம் உருண்டு கீழே விழுகிறதோ அந்த இடத்தில் ஒரு சுனை தோன்றும். சாளக்கிராமமும் அதனுள் இருக்கும். அந்த இடத்தில் அமர்ந்து வேங்கடவனை நோக்கித் தவம் செய். வேங்கடவனே உனக்கு நேரில் தரிசனம் தருவார். நீ பிறந்ததன் பயனை அடைவாய்.”

என்று சொன்ன அசரீரியின் வாக்கை தெய்வ வாக்காக எண்ணினேன். அதன்படி இருபத்தைந்து ஆண்டு காலம் விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தேன். என் எண்பத்தைந்தாவது வயதில் நேபாளத்திலிருந்து புறப்பட்டேன். மூன்றாண்டுகள் நடைப்பயணமாகப் பயணம் செய்து இன்றைக்கு வேங்கடவன் மலையில் படியேறிக் கொண்டிருக்கிறேன்.” என்று அகத்தியரிடம் தன் வாழ்க்கையில் நடந்த கதையைச் சொன்னார் நாராயணப் பெரியவர்.

எட்டு வயதிலிருந்து எண்பத்தெட்டு வயது வரை சதாசர்வ காலமும் நாராயணனையே பிரார்த்தனை செய்து, பாரதத்தின் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்த இவர் உண்மையிலேயே புண்ணியசாலிதான்.

வேங்கடவனின் பரிபூர்ண கருணை இவருக்கு நன்றாகவே கிட்டியிருக்கிறது என்று எண்ணிக் கொண்ட அகத்தியர், நாராயணப் பெரியவரை ஆற அமர அமர்த்தி அவருக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துவிட்டு பின்பு நேராக வேங்கடவனின் சந்நிதிக்குச் சென்றார்.

நாராயணப் பெரியவரைப் பற்றிச் சொன்னதும் “அகத்தியரே! அந்த சாளக்கிராமத்தில் இருப்பதும் நான்தான். இன்றல்ல நேற்றல்ல; நாராயணன் ஏழு ஜன்மமாகவே என் மீது அளவற்ற பக்தி கொண்டவன். இன்னும் சொல்லப்போனால் ஒரு நெருங்கிய நண்பரைப் போலவே நான் இந்த நாராயணனிடம் பழகி வந்திருக்கிறேன். கடைசி காலத்தில் தமக்கு என் காலடியில் அடைக்கலம் பெற வேண்டி இப்போது இந்த மலைக்கு வந்திருக்கிறான்.” என்றார் வேங்கடவன்.

“அவ்வளவு பக்திமானா இந்த நாராயணர்?”

“ஆமாம். வேண்டுமென்றால் இப்போதே அவருக்கு ஒரு சோதனை வைக்கிறேன் இம்மியளவும் கூட என் நிலையிலிருந்து மாறமாட்டார் என்பதை நீயே பாரேன்” என்றார் வேங்கடவன்.

“தாங்களே அமுதவாய் திறந்து நாராயணரைப் பற்றிச் சொல்லும்போது எதற்கு ஐயனே அவரைச் சோதிக்க வேண்டும்?”

“இல்லை அகத்தியரே! இவரது பக்தி எல்லையைக் கடந்தது. அதனால்தான் இவரது கடைசி காலத்தில் நாராயணனை இங்கு வரவழைத்தேன். பாரேன் வேடிக்கையை” என்ற பெருமாள் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மௌனம் சாதித்தார்.

கீழே...

எந்த இடத்தில் நாராயணப் பெரியவர் அமர்ந்திருந்தாரோ அந்த இடத்தில் திடீரென்று தீ பிடித்தது. பட்சிகள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு மரங்களை விட்டுப் பறந்தன. காட்டிலுள்ள மிருகங்கள் பயந்து நடுநடுங்கி அபயக் குரல் எழுப்பின. பசுமையாக இருந்த காடு எப்படி தீ பிடித்தது என்று அங்கிருந்த முனிவர்கள் வியப்புடனும் பீதியுடனும் பேசிக்கொண்டனர்.

ஆனால்...

இவரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் “கோவிந்தா! கோவிந்தா!” என்று கண்ணை மூடிக்கொண்டு வேங்கடவனையே ஜபம் செய்து கொண்டிருந்தார் நாராயணப் பெரியவர்.

அவரைச் சுற்றி வட்டவடிவமாக அக்னி எரிந்து கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் நாராயணப் பெரியவரின் தியானம் கொஞ்சம் கூடக் கலையவே இல்லை. மற்றவர்களாக இருந்தால் இந்நேரம் தலைதெறிக்க ஓடிப்போயிருப்பார்கள்.

வேங்கடவன், இந்தக் காட்சியை அகத்தியருக்குக் காட்டி “இவருடைய ஆழ்ந்த பக்தியைப் பற்றி என்ன நினைக்கிறாய் அகத்தியரே!” என்றார்

“அற்புதமானது. ஆனந்தமானது. எளிதில் வரையறுத்துச் சொல்லமுடியாதது” என்றார்.

“அப்படியெனில் இவரது பக்திக்கு நாம் என்ன கைமாறு செய்யலாம்?” என்று வேங்கடவன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார்.

“ஐயனே! இதில் நானென்ன சொல்வதற்கு இருக்கிறது? தாங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன்படியே செய்யலாமே” என்றார் அகத்தியர் பவ்வியமாக.

“அது தெரியாமல்தானே நானே குழம்பிக் கொண்டிருக்கிறேன்” என்ற வேங்கடவன் “இனி நாராயணனைச் சோதனை செய்தது போதும். அக்னி தேவன் விலகிக் கொள்ளட்டும்” என்றார்.

அடுத்த விநாடி அக்னி தேவன் மறைய நாராயணப் பெரியவர் இருந்த இடம் மறுபடியும் பசுமைச் சோலையாக மாறிவிட்டது. காண்பது கனவா? நனவா? என்று திருமலையிலுள்ள முனிபுங்கவர்கள் வியப்பின் எல்லைக்குச் சென்றுவிட பட்சிகளும், மிருகங்களும் உற்சாகமாக அந்தக் காட்டில் வலம் வரத்தொடங்கின.

“ஒன்று செய்வோம். நாமிருவரும் நேரடியாகவே நாராயணனிடம் போவோம். அவருடைய விருப்பத்தைக் கேட்போம். அவர் என்ன விரும்புகிறாரோ அதையே செய்வோம்.” என்றார் அகத்தியர்.

வேங்கடவன் அதற்குச் சம்மதம் தெரிவிக்க அகத்தியரும் வேங்கடவனும் நேராக திருமலையில் ஜபம் செய்யும் நாராயணப் பெரியவரிடம் வந்தனர்.

“நாராயணா” என்றழைத்தார் வேங்கடவன்.

பெருமாளின் திவ்வியமான, மங்களகரமான தேனமுதக் குரலைக் கேட்டு நாராயணப் பெரியவர் கண் திறந்தார்.

எதிரே வேங்கடவன் தரிசனத்தைக் கண்டதும் சாஷ்டாங்கமாக பொற்பாதத்தில் விழுந்தார். அவர் கண்ணில் ஆனந்தம் கரை புரண்டோடியது.

“என்மீது இடைவிடாது பக்தி கொண்டு பிரார்த்தனை செய்து வரும் உனக்கு என்ன வேண்டும்?”

“வேங்கடவா! தங்கள் தரிசனம் ஒன்றே போதுமானது. வேறொன்றும் வேண்டாம் ஐயனே!”

“நீ என்னைப் பற்றி கிரந்தத்தில் நிறைய எழுதியிருக்கிறாயாமே”

“ஆமாம்.”

“அதை அகத்தியன் பொறுப்பேற்று தமிழில் மொழி பெயர்த்து விடுவான். கவலைப்படாதே! வேறு என்ன வேண்டும்?”

“உன் திருவடியில் நான் சரணாகதி ஆகிவிட்டேன். உன் திருவடித் தாமரைப் பாதங்களைக் கண் கொட்டாமல் காலம் காலமாக கண்டு கொண்டே இருக்க வேண்டும்.”

“பிறகு?”

“வேறொன்றும் வேண்டாம் ஐயனே!”

“நீ கேட்டதை நான் கொடுத்துவிட்டேன். அகத்தியர் அதற்குச் சாட்சி. இப்போது நான் கொடுப்பதை நீ வாங்கிக் கொள்.” என்றார் வேங்கடவன்.

நாராயணர் பதில் எதுவும் சொல்லாமல் மிரள மிரள விழித்தார்.

“இந்த இடம் இனிமேல் உன் பெயரால் ‘நாராயண கிரி’ என்று வழங்கப்படும். என் மீது அளவற்ற பக்தி கொண்ட உன் போன்ற பக்தர்களுக்கு வேங்கடவன் அளிக்கும் அன்புப் பரிசு இது” என்று சொல்லி ஆசிர்வாதம் வழங்கினார்.

இன்றைக்கு “நாராயணாத்திரி” என்று சொல்லப்படும் மலையில்தான் நாராயணப் பெரியவர் அருரூபமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வேங்கடவன் தன் பக்தன் மீது வைத்த கருணைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

சித்தன் அருள்........................ தொடரும்!

Wednesday, 28 September 2016

சித்தன் அருள் - 451 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறைவனை வணங்க காலம், நாழிகை ஏதும் இல்லையப்பா. மனிதன் விருப்பத்திற்கேற்ப, எப்பொழுது வேண்டுமானாலும், இறைவனை வணங்கலாம். அது, வணங்குகின்ற மனிதனின் மன நிலையைப் பொறுத்தது. மனதிலே எழுகின்ற பக்தி நிலையைப் பொறுத்தது. இதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

Tuesday, 27 September 2016

சித்தன் அருள் - 450 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மௌனத்தை குறித்துப் பேசினாலே "மௌனம்" பங்கமாகிவிடும். அப்பா! இகுதொப்ப நிலையிலே, குரு தட்சிணாமூர்த்தியை, குரு வாரம் சென்று, முடிந்த வழிபாடுகளை செய்து வந்தாலும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டை அன்றாடம் செய்து வந்தாலும், "மௌனத் தவம்" ஒருவனுக்கு சித்திக்கும்.

Monday, 26 September 2016

சித்தன் அருள் - 449 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மனித ஆத்மாக்கள் கடைதேறுவதற்காக சாஸ்த்திரங்கள் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்துவிட்ட பிறகு, சாஸ்த்திரங்களை அதிகம் கவனிக்க வேண்டாம்.

Saturday, 24 September 2016

சித்தன் அருள் - 448 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எத்தனைதான் ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்தாலும், ஒருவனுக்கு பிணி வரவேண்டும் என்ற விதி நிலை வந்துவிட்டால், பிணி வந்தே தீருமப்பா. இறைவனைத் தொடு. உனக்கு "சிகிச்சையே" தேவையில்லையப்பா. எத்தனையோ வகையான சிகிச்சை முறைகள் காலாகாலம் சித்தர்களால் மனிதர்களுக்கு  தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது. மூலிகைகளை ஏற்பது, எந்த உணவையும் ஏற்காமல் விரதத்தோடு இருந்து சில பிணிகளை நீக்குவது, வெறும் நீரை மட்டும் பருகி சில பிணிகளை நீக்குவது, உடலிலே சில இடங்களில் சில குறிப்பிட்ட அழுத்தங்களைத் தந்து நோய்களை நீக்குவது, எந்த வகையான அழுத்தங்களையும் தராமல், குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கி "திருஷ்டி" சிகிச்சை என்ற ஒன்று இருக்கிறது. இப்படியெல்லாம் பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பது உண்மை.  ஆனால், தெள்ளத் தெளிவாக கற்றுணர்ந்த மனிதர்கள் இன்று குறைவு. எப்பொழுதுமே அரைகுறை  அறிவு, ஆபத்தைத்தான் தரும் என்பதை புரிந்துகொண்டு, ஒரு துறையில் தெளிவான அறிவு இல்லாத மனிதர்கள், இது போன்ற எந்த முயற்சியும் செய்தல் கூடாது.

Friday, 23 September 2016

சித்தன் அருள் - 447 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இடைவிடாத பிரார்த்தனைகள், நல் அறங்கள் நலம் சேர்க்கும். இகவாழ்வில் எதிர்ப்படும் இன்ப துன்பங்கள் யாவும், அவரவர் கர்மத்தின் எதிரொலியாகும். அதனை உணர்ந்து, பாவங்கள் செய்யாமலும், செய்த பாவத்தை எண்ணி வருந்தி, திருந்தியும், அதோடு இறை வணங்கியும்,  புரிந்தும் வாழ, நலமாகும். திவ்யமான பரம்பொருளை உணர்ந்து, திருவடி பற்றும் வளர, துன்பங்கள் அணுகாது. இதைத் தவிர வேறு எதை அடைந்தாலும், நிரந்தர சாந்தி கிட்டாது. தளர்வோ, விரக்தியோ, வேதனையோ, எதிர் மறை எண்ணங்களோ, ஒரு பொழுதும் துன்பத்தை மாற்றாது. திட மனம் கொண்டு எதனையும் எதிர்கொள். பதட்டமின்றி செயல்படுத்துதலும் நலம் சேர்க்கும். சேர்க்கின்ற புண்ணியமே  கடை வரையில் துணையாகும். சேர்க்கின்ற பாவமோ என்றென்றும் இடராகும். சிறப்பில்லா பாவ சூழல் மேலும் பாவத்தை சேர்த்து விடும் என்பதால், சிந்திக்க வேண்டும். பாவ எண்ணம் கூடாது. பாவ எண்ணங்கள் வளரவும் கூடாது. கூடாதப்பா, அகுதொப்ப மாந்தர்களுடன் உறவும் கூடாது. குறித்திடுவோம். எத்தனை துன்பத்திலும், எத்தனை சிக்கலிலும் கருத்தில் கொள்ளவேண்டும். "இதனால் பாவம் செய்தேன்" என்றியம்பக்கூடாது. பற்றற்று வாழ, அதற்கான முயற்சியை தொடர, நலம்.

Thursday, 22 September 2016

சித்தன் அருள் - 446 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"குங்குமத்தை விட, நேரடியாக தூய்மையான சந்தனத்தை, மங்கலச்சின்னமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் ரசாயனங்களை எல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள் அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக்கொள்ளாமல், மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியை, பொடித்து வைத்துக்கொள்ளலாம். அதுதான், சித்தர்களின் முறையாகும்."

Wednesday, 21 September 2016

சித்தன் அருள் - 445 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஒருவன், எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும் கூட, மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் கூட, அவன் செய்கின்ற தவறு என்பது, யார் செய்தாலும் தவறுதான் என்பதை, மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகமே -  "நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே" என்று நக்கீரன் மூலம் பரமசிவன் உணர்த்தினார்."

Monday, 19 September 2016

சித்தன் அருள் - 444 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"இறை தரிசனம் கிட்டும் போது, இறைவனை தரிசித்த பல அசுரர்களின் கதைகளை மனதிலே எண்ணிக் கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்தும் பல அசுரர்கள் திருந்தவில்லை. தன் அசுரத்தனங்களை விடவில்லை. எனவே, இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை வைக்கும் பொழுதே "இறைவா! என்னை நீ ஆட்க்கொண்டு விடு, நீ வேறு, நான் வேறு என்றில்லாமல், எப்படி நதி தனியாக இருக்கும் வரை நதி; அது கடலில் கலந்துவிட்டால், இது நதி, இது கடல் என்று பிரிக்க முடியாதோ, அதைப்போல் என்னை ஆக்கிவிடு" என்று ஒரு பிரார்த்தனையை வைத்தால் போதும்.

Sunday, 18 September 2016

சித்தன் அருள் - 443 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தண்டிப்பதோ, தண்டனை தருவதோ, பிற உயிர்களை துன்புறுத்துவதோ, எமக்கோ, இறைவனுக்கோ வேலையல்ல. எல்லோருக்கும் நன்மை புரிவதுதான் எமது வேலையப்பா. ஒரு குழந்தை கோபித்தால், உடனே தாயும் தந்தையும் குழந்தை மீது கோபம் கொள்வார்களா? எம்மையும், இறையையும் ஒரு மனிதன் ஏன் இகழ்கிறான். தான் நினைத்தது நடக்கவில்லை, தன் ஆசை நிறைவேறவில்லை, என்ற வேதனையில்தானே ஏசுகிறான்? நிறைவேற்றி தந்தால் என்ன நடக்கும்? என்று இறைக்குத் தெரியும். ஒன்றை தந்தால்தான், இறைவன் அருளுகிறான் என்று மனிதன் தவறாகவே நினைக்கிறான். பல சமயங்களில் இறைவன், தராமலேயே ஒரு மனிதனை காப்பாற்றுகிறான். எனவே, "ஒன்றை தந்தால் என்னவாகும்? தராவிட்டால் என்னவாகும்? என்பது இறைக்குத்தான் தெரியும், என்பதால் இறைவன் இத்தகைய ஏச்சு, பேச்சுக்களை எல்லாம் பொருட்படுத்துவதேயில்லை."

Saturday, 17 September 2016

சித்தன் அருள் - 442 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஆத்மா உயர் நிலையை அடைய, செவியை மூடு. இறை நாமம் மட்டும் விழட்டும். விழியை மூடு. விழியைத் திறந்தால் அதில் இறை காட்சி மட்டும் தெரியட்டும். உள்ளத்தை விசாலமாக்கு. அதில் பிற உயிர்களின் கஷ்டத்தை மட்டும் நிரப்பு. அவர்களின் கஷ்டம் தீருவதற்கு உன்னால் முடிந்ததை செய். இது போதும்."

Friday, 16 September 2016

சித்தன் அருள் - 441 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"மந்திரங்களை சொல்லும் போது, தர்ப்பை ஆசனத்தின் மீது அமர்ந்தால், அது நல்ல பலனைத் தரும். திருப்புகழை ஓதியபடி நடந்தால் முக்தி."

Thursday, 15 September 2016

சித்தன் அருள் - 440 - "பெருமாளும் அடியேனும்" - 66 - அகத்தியரும் நாராயணரும்!


அகத்தியரைக் கண்டதும் கலிபுருஷன் தானாகக் கையெடுத்துக் கும்பிட்டான்.

“என்ன வேண்டும் கலிபுருஷா?”

“அகத்தியருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. எதற்காக பிரம்மதேவர் என்னைப் படைத்தாரோ அந்தப்பணியைச்செய்ய என்னால் முடியவில்லை. வேங்கடவன் கல் தெய்வமாக இருந்து என் பணியில் குறுக்கிடுகிறார். நான் இதுவரை ஈடுபட்ட அத்தனை முயற்சியிலும் என்று கண்ணீரோடு மன்றாடிக் கேட்டான். எனக்குத் தோல்விதான். தாங்களாவது இதனை வேங்கடவனிடம் எடுத்துச் சொல்லக்கூடாதா?”

“கலிபுருஷா! இனி இந்தப் பூலோகம் கொஞ்சம் கொஞ்சமாக உன் வசமாகத்தான் மாறப் போகிறது. இந்தப் பூலோக மக்கள் இனி அதர்மத்தைத்தான் கடைப்பிடிக்கப் போகிறார்கள். பின் எதற்காகக் கண் கலங்குகிறாய்?”

“மாமுனியே! தாங்கள் சொன்னால் நிச்சயம் அது நடக்கும். ஆனால் இந்தத் திருமலை வேங்கடவன் இருக்கும் வரை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதைத் தாங்களே அறிவீர்கள்.”

“கலிபுருஷா! இங்குதான் நீ ஒன்றை மறந்துவிட்டாய். உன் பலத்தை யாரிடம் காண்பிக்க வேண்டுமோ அவர்களிடம் காண்பிக்க வேண்டும். ஆனால் நீயோ எம்பெருமான் விஷ்ணுவிடமே மோதுகிறாய். இது எந்த விதத்தில் நியாயம்? அதனால்தான் அத்தனையும் தவிடு பொடியாகிறது.”

“உண்மைதான். ஆனால் என் பலம் என்னவென்று தெரிய வேண்டாமா? அதற்கேற்பத் தானே செயல்படமுடியும்? அதனால்தான் இந்தச் செயல்களில் ஈடுபட்டேன்.”

“கலிபுருஷா! நீ உன் தொழிலை பிரம்மா இட்ட கட்டளைப்படி செய்வதில் தவறில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை வாசனிடம் தஞ்சமடைந்தால், அவர்களை உன்னிடமிருந்து காக்க திருமலைவாசன் விஸ்வரூபம் எடுக்கத்தான் செய்வார். இதில் எந்தத் தவறும் இல்லையே!”

“தலையாய சித்தரே! உங்கள் கூற்றை ஏற்கிறேன். இருப்பினும் பிரம்மாவின் ஆணைப்படி சொல்படி செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன். இப்படி ஆரம்பமே படுதோல்வி அடைந்து விட்டதால், பேசாமல் இந்தப் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றே எண்ணம் தோன்றுகிறது.”

“தவறு கலிபுருஷா! நீ எடுத்த முடிவு தவறு. மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து அதன் மூலம் அவர்கள் ஞானத்தை பெற்று இறைவழியை நோக்கி வரவேண்டும். இதற்காகத்தான் பிரம்மா உன்னைப் படைத்திருக்கிறான். அந்தக் கடமையிலிருந்து நீ வழுவி விடக்கூடாது.”

“தாங்கள் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள். ஆனால் இதை நடைமுறைப்படுத்த என்னபாடு படவேண்டியிருக்கிறது தெரியுமா?”

“கலிபுருஷா! இன்றைய நிலையை வைத்து எதுவும் முடிவுசெய்ய முடியாது. நாளை இந்தப் பூலோகம் முழுவதும் உன் வசம் ஆகப்போகிறது. நீயாயிற்று பெருமாள் ஆயிற்று. நான் ஏன் இதில் குறுக்கிடப் போகிறேன்?” என்ற அகத்தியரைப் பார்த்து கலிபுருஷன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுகிறீர். அதை நினைத்தேன். சிரிப்பு வந்தது.”

“கலிபுருஷா! நியாயமும் நீதியும் தர்மமும் எங்கிருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். அதே சமயத்தில் நீ எனக்குப் பகைவனும் அல்ல. இதைப் புரிந்து கொண்டால் போதும்.”

“நன்றி தலையாய சித்தரே! நன்றி. என்றைக்காவது ஒரு நாள் இந்தக் கலிபுருஷன் தங்களைத் தேடி அடைக்கலம் ஆகலாம். அப்போது தாங்கள் தர்மம் நீதி என்று சொல்லி என்னைக் கை கழுவி விட்டுவிடக்கூடாது.”

“அப்படிப்பட்ட நிலை உனக்கு வராது என்று எண்ணுகிறேன். அப்படி வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.” என்றார் அகத்தியர்.

அகத்தியரை வணங்கிவிட்டு கலிபுருஷன் திருமலையிலிருந்து கீழே இறங்கிச் சென்றான்.

கலிபுருஷன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அகத்தியரின் பார்வையில் பழம் பெரும் விஷ்ணு பக்தரான நாராயணர், தென்பட்டார்.

நூறு வயதைத் தாண்டியிருக்கும் அவர் சரீரம் ஏறத்தாழச் சுருங்கி, வரி வரியாகக் கோடுகளாய் மாறித் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களில் மட்டும் தீர்க்கம் குறையவே இல்லை.

பன்னிரு திருமண் அணிந்து முப்புரிப் பூணூலைத் தாறுமாறாகப் போட்டுக் கொண்டு நடக்கமுடியாமல் ஒவ்வோர் அடியாக உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து, கையிலுள்ள கைத்தடியால் மெல்ல மெல்லப் படியில் ஊன்றி ‘நாராயணா’ என்றும் ‘கோவிந்தா’ என்றும் ஆத்மார்த்தமாக நெஞ்சிலிருந்து சொல்லிக் கொண்டே திருமலைவாசனை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த நாராயணரைப் பார்த்ததும் அகத்தியருக்கே அவரைக் கை கூப்பி நமஸ்கரிக்க வேண்டுமென்று தோன்றிற்று.

சாந்த சொரூபமாக செக்கச் சிவந்த மேனியராக பஞ்சகச்சம் கட்டி, மேல் அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு தலையில் சிறு சாக்கு மூட்டையில் அன்றாட பூஜைக்குரிய பொருள்களையும் சுமந்து கொண்டு வந்திருந்தார்.

நாராயணப் பெரியவருக்கு ஏதேனும் ஒருவகையில் உதவிசெய்ய வேண்டும் என்று அகத்தியருக்குத் தோன்றியது.

சட்டென்று தன்னை இருபத்திரண்டு வயதுப் பையனாக மாற்றிக் கொண்ட அகத்தியர் அந்தப் பெரியவருக்கு உதவி செய்யப் போனார். அந்தப் பெரியவரின் கையைப் பிடித்துக் கொண்டார். மெல்ல இருவரும் நடந்து மலையேறினார்கள்.

நாராயணப் பெரியவர், அகத்தியராக இருந்து இளைஞனாக மாறிய அவனைப் பார்த்துக் கேட்டார்.

“யாரப்பா நீ? எனக்கு உதவி செய்ய வந்திருக்கிறாய். ஆச்சரியமாக இருக்கிறதே?”

“தொண்டனுக்குத் தொண்டன்.”

“அப்படியென்றால் உனக்கு பெற்றோர் வைத்த பெயர் இல்லையா?”

“உண்டு ஸ்வாமி! ‘அகத்தி’ என்று பெயர்.”

இதைக் கேட்டதும் அந்தப் பெரியவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

“அகத்தி என்று சொல்கிறாய். இது முற்றுப் பெறாத வாக்கியம் போல் இருக்கிறது. ஆனாலும் நீ சாதாரண ஆள் இல்லையப்பா”

“ஐயா! தாங்கள் நினைப்பது போல்நான் இல்லை. மிக மிகச் சாதாரணமானவன். தமிழைப் பற்றி ஐயாவுக்குத் தெரிந்த அளவு எனக்கு ஞானம் இல்லை.”

“அது சரி! என்னதான் தொழில் செய்கிறாய்?”

“இந்த மலைக்கு வருவோர் போவோருக்கு என்னாலான சரீர உதவி செய்து கொண்டு பிழைப்பை நடத்துகிறேன் ஐயா!”

“கேட்கக் கஷ்டமாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் உனக்கு உதவிசெய்ய என்னிடம் பொற்காசு எதுவும் இல்லை.”

“வேண்டாம் சாமி.”

“வெள்ளிக் காசும் இல்லை.”

“பரவாயில்லை.”

“அப்படியென்றால் நீ இப்போது செய்யும் உதவிக்கு நான் எப்படி நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது?”

“ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. தங்களைப் போன்ற வயதான பெருமாள் பக்தர்களுக்கு சரீரத்தால் உதவி செய்யும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்திருக்கிறது. இதைவிடப் பெரும் புண்ணியம் வேறு என்ன வேண்டும் சாமி.” என்றான் அந்த இளைஞன்.

“எனக்கொரு சந்தேகம்.”

“சொல்லுங்க சாமி!”

“பார்ப்பதற்கு இளம் வயது பாலகனாகத் தெரிகிறாய். ஆனால் பேச்சும் செயலும் பழுத்த அனுபவம் வாய்ந்த மகரிஷியின் வாக்கு போல் தெரிகிறது. உண்மையில் நீ யார்?”

“சாமி நினைக்கிறபடி வேறு யாருமில்லை. சாதாரணமானவன் தான்” என்ற அகத்தியச் சிறுவன் அடுத்த நிமிடம் அந்தப் பெரியவர் தள்ளாடி விழுவது போல் தெரிந்ததால் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அப்போது,

நாராயணப் பெரியவர் தலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சாளக்கிராமம் சட்டென்று மூட்டையிலிருந்து கீழே பொத்தென்று விழுந்தது.

விழுந்த இடத்தில் சுனை ஒன்று தோன்றியது. அதில் அந்தச் சாளக்கிராமம் நீருக்கு அடியில் இருப்பது பார்வையில்பட்டது.

சித்தன் அருள்......................... தொடரும்!

Wednesday, 14 September 2016

சித்தன் அருள் - 439 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"வாழும்போது ஒரு ஆத்மா, கடைசியாக அது எந்த நிலையில் இருந்ததோ, எந்த அளவிற்கு பிராயச்சித்தம் செய்து முன் ஜென்ம பாவத்தை குறைத்து இருக்கிறதோ, எந்த அளவிற்கு புண்ணியத்தை சேர்த்து இருக்கிறதோ, எந்த அளவிற்கு ஆத்ம பலத்தை அதிகரித்துள்ளதோ, அதைப் பொறுத்தே, அந்த ஆத்மா செல்லும் தூரமும், காலமும், பரிணாமமும் இருக்கும். அப்படி எதுவும் செய்யாமல், சராசரியாக உண்டு, உறங்கி, விலங்கு போல் வாழ்ந்த ஆத்மாவால் உணரவும் முடியாது, வேறு எங்கும் செல்லவும் முடியாது. குறிப்பிட்ட இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும், அந்த ஆத்மா."


Tuesday, 13 September 2016

சித்தன் அருள் - 438 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"வாழும் பொழுது மனிதனாக வாழவேண்டும். பாவத்தை, மூட்டை மேல் மூட்டை கட்டிக்கொண்டவனுக்கு, "தான் செய்ததெல்லாம்" பாவம் என்ற உணர்வு வரும் வரை, அதற்குண்டான துன்பமும், அதை திருத்தும் வண்ணம்தான், இறைவன் அவ்வாறு (வாழ்க்கையை) அமைத்திருக்கிறான். யாரையும் தண்டிப்பதோ, வேதனைப்படுத்துவதோ அல்ல விதியின் வேலை, உணர்ந்து, திருத்தப்பட வேண்டும் என்பதுதான்."

Monday, 12 September 2016

சித்தன் அருள் - 437 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஒவ்வொரு வழிபாட்டையும் செய்துவிட்டு, அதை இறைவன் ஏற்றுக் கொண்டுவிட்டாரா? என்று கேட்பது எப்படி இருக்கிறது? என்றால் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதிவிட்டு, தேர்வை திருத்துகின்ற குருநாதனிடம் "எனக்கு எந்த அளவுக்கு மதிப்பெண் போடப்போகிறாய்? போட்டிருக்கிறாய்?" என்று கேட்டால், அந்த குருவின் மனநிலை எவ்வாறு இருக்கும்?  ஆக, உன் கடமையை, உறுதியாக, தெளிவாக செய்து கொண்டே போ. இறைவன் அருள் என்று வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதே. வெற்றி இருக்கிறதா? என்று பார்த்து செய்வதற்கு, ஆன்மீகம் ஒன்றும் உலகியல் காரியம் இல்லையப்பா. இது அனைவருக்கும் பொருந்துமப்பா!"

Sunday, 11 September 2016

சித்தன் அருள் - 436 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஏறத்தாழ நான்காயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த தமிழகத்திலே, ஸ்ரீரங்கம் பகுதியிலே மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. பிரளயம் வடிந்து, மீண்டும் இடம் பெயர்ந்த மக்கள் எல்லாம் மாண்ட பொழுது, தொடர்ந்து மழை பெய்தது. பிரளயம் என்றால் உலகமே அழிந்து விடாதப்பா. ஆங்காங்கே சிறு, சிறு அழிவுகள் ஏற்படும். அப்போதெல்லாம், அரங்கத்தில் இருந்து, அரங்கனை பூசை செய்யும் பாக்கியத்தை, இங்கு வந்து செல்லும் பலரும் பெற்றிருக்கிறார்கள். ஒரு முறை அரங்கனுக்கு "தளிகை" ஏதும் செய்யவியலாத சூழல் ஏற்பட்ட பொழுது, அவரவர்கள், தம் வீட்டிலே உள்ள, தரக்குறைவான தானியத்தை எடுத்து வந்து, "இதுதான் இருக்கிறது" என்று கொடுத்து, அதை ஏதோ ஒரு கஞ்சி போல் வைத்து படைக்க, அதை "பால் சாதமாக" அரங்கன் மாற்றி அருளினார். அப்படி அரங்கனை சோதித்தவர்களில் எம் சேய்களும் உண்டு."

Saturday, 10 September 2016

சித்தன் அருள் - 435 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தீயவர்கள் எக்காரணம் கொண்டும் தம்மை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். நல்லவர்கள், எதற்காக தம் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்? தேள் கடைசிவரை அதன் சுபாவத்தை (கொட்டும் சுபாவத்தை) விடவில்லை. ஆறு அறிவு மிக்க மனிதன், பிறருக்கு நன்மை செய்ய தீர்மானித்துவிட்டால், தன் சுபாவத்தை,  விடக்கூடாது."

Friday, 9 September 2016

சித்தன் அருள் - 434 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தீயவர்கள் எக்காரணம் கொண்டும் தம்மை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். நல்லவர்கள் எதற்காக தம் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்? தேள் கடைசிவரை அதன் சுபாவத்தை (கொட்டும் சுபாவத்தை) விடவில்லை. ஆறு அறிவு மிக்க மனிதன், பிறருக்கு நன்மை செய்ய தீர்மானித்துவிட்டால், தன் சுபாவத்தை, விடக்கூடாது."

Thursday, 8 September 2016

சித்தன் அருள் - 433 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"எல்லாம் இறைவன் படைத்த உயிர்கள். இதில் உயர்வு, தாழ்வு பேதமில்லை. பொதுவாக, சாத்வீக உயிரினங்களிலே பல்வேறு முனிவர்களும், சமயத்தில் ரிஷி பத்னிகளும் அவதாரம் செய்வார்கள். இவர்களே வரம் கேட்டு வந்து, தங்களுடைய பால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாக்கியம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிறவி எடுப்பார்கள்.  தேவர்களும், தேவதை வர்க்கங்களும், கந்தர்வர்களும் சாபத்தினால் இவ்வாறு பிறப்பதும் உண்டு. எனவேதான், எத்தனையோ உயிரினங்கள் இருக்க, பசுக்களுக்கு யாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். மான், மயில் மற்றும் கிளி போன்ற உயிரினங்களில் கூட முனிவர்கள், தேவதை வர்கங்களாக இருப்பதால் தான், பெரும்பாலும் இவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது. முன்னரே பல புண்ணியங்களை செய்து, தவத்திலே சிறந்து விளங்குகின்ற ஒரு முனிவரோ, ரிஷிபத்னியோ இவ்வாறு பிறவி எடுக்கும்பொழுது அறியாமையால், மனிதர்கள் தீங்கு இழைத்தால், எந்த அளவுக்கு பாவம் வரும் என்பதை ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்."

சித்தன் அருள் - 432 - "பெருமாளும் அடியேனும்" - 65 - பூமாதேவியின் நாடகம்!


எல்லாருக்கும் துன்பத்தை வரவழைத்துக் கொடுத்து, அதனைப் போக்க அதர்ம வழியில் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதற்காகப் பிறந்த கலிபுருஷன் திருமலை வேங்கடவனை திருமலையிலிருந்து விரட்டி அடிக்க இப்பொழுது வராஹமித்திரரிடம் வந்து துர்போதனைகளைச் செய்தான். கலிபுருஷனின் நாடகத்தை அறிந்து அவனுக்கு சாதகமாகப் பேசுவதுபோல் வராஹமித்திரர் பேசினார்.

ஆனால் பூமாதேவிக்கோ கலிபுருஷனின் வாக்கு அத்தனையும் உண்மையாகப் பட்டது. “இந்த மலை தங்களுக்குத்தான் சொந்தம். இதை வேங்கடவன் எப்படி அத்தனையும் தனதாக்கிக் கொள்ளமுடியும்?” என்று ஆவேசம் கொண்ட பூமாதேவி வேங்கடவனை அழைத்துவர தூதுவனை அனுப்பினார். சில நாழிகையில் வராஹமித்ரர் முன்பு வந்து நின்றார் வேங்கடவன். “தன்னியனானேன். சொல்லுங்கள் வராஹமித்திரப் பெரியவரே! எதற்காக என்னை அழைத்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? என்றார் வேங்கடவன்.

வராஹமித்திரர் பூமாதேவியை நோக்கிக் கைகளைக் காட்டினார்.

“ஆமாம். நான்தான் உங்களை இங்கு வரச்சொன்னேன்” என்றாள் பூமாதேவி.

“அப்படியா, என்ன விஷயமோ?”

“இந்த மலையை, என் கணவரிடம் தாங்கள் பெற்றுக் கொண்டீர்கள்”

“ஆமாம்”

“நாளுக்கு நாள் எங்களுக்கிருக்கும் அத்தனை மலைகளையும் தங்கள் வசம் ஆக்கிக்கொண்டு வருகிறீர்கள். பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இந்த மலை வேங்கடமலை, திருமலை என்று மாறிவிட்டது. இது எங்களுக்கு மிகவும் மனக் கஷ்டமாக இருக்கிறது.”

“மனத்திற்குக் கஷ்டமா? எப்படி தேவி?”

“இந்த மலைக்கு என் கணவர் பெயர்தான் இருக்கவேண்டும். ஆனால் இல்லையே!”

“ஓகோ.”

“இதுவரை ஐந்து மலைகளைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். மீதம் இருக்கும் இரண்டு மலைகளையாவது எங்கள் வசம் இப்போது ஒப்படைக்க வேண்டும்.” என்றாள் பூமாதேவி.

இதைக் கேட்டதும் திருமலைவாசன் புன்னகை பூத்தார்.

“அதற்கென்ன கொடுத்து விட்டால் போயிற்று. அது இருக்கட்டும். வராஹர் இது பற்றி ஒன்றுமே வாய் திறக்கவில்லையே. அவர் வாய் திறந்து சொல்லட்டும்.”

“வேங்கடவா! அவர் வாய் திறந்து இன்றைக்குப் பேசமாட்டார்.”

“ஏன்?”

“இன்றைக்கு மௌன விரதம்”

“அப்படியென்றால் இது பற்றி நாளைக்குப் பேசுவோம். வராஹர் ஒரே ஒரு வார்த்தை இப்போது சொல்லிவிட்டால் போதும். தாங்கள் கேட்கும் இரண்டு மலைகளென்ன? ஏழு மலைகளையும் தங்களுக்கே அர்ப்பணிக்க அடியேன் தயாராக இருக்கிறேன்.”

என்று திருமலைவாசன் நிதானமாகச் சொன்னபோது வராஹர் சட்டென்று வாய் திறந்து “வேங்கடவா! அப்படியொன்றும் அவசரப்பட்டு ஏதேனும் செய்துவிடாதே.” என்று பேசினார்.

“என்ன தேவி! வராஹர் மௌனவிரதம் என்றீர்கள். இப்பொழுது வராஹர் வாய் திறந்து பேசுகிறாரே! இது என்ன விந்தை?”

என்று நாசூக்காகக் கேட்டார் திருமலைவாசன். பூமாதேவிக்கு இதைக் கேட்டு என்னவோ போலாயிற்று. தலைகுனிந்து நின்றாள்.

“எப்பொழுது பார்த்தாலும் உண்மை மட்டுமே பேசிக்கொண்டிருந்த பூமாதேவிக்கு கலிபுருஷன் பார்வை பட்டதுமே பொய் சொல்லத் தோன்றிற்றே இதுதான் எனக்குக் கவலை யாகப்போயிற்று. எனினும் எல்லாம் நன்மைக்கே. நீ பூமாதேவியின் மீது கோபமோ வருத்தமோ கொள்ளாதே.” என்றார் வராஹர்.

“வேங்கடவா! என் கணவர் சொல்வதை நம்பாதே. நான் என்ன பேராசைக்காரியா? என்னால் ஒரு கடுகுக்குள்ளும் வாழமுடியும். ஆனால் என் இடத்தை விட்டுக் கொடுக்க முடியாது.”

“அடடா! பொறுமையின் சின்னமாக விளங்குகிற பூமாதேவியா இப்படி கோபப்படுவது? அன்னையே! இந்த பூலோகம் முழுவதுமே தங்களைச் சேர்ந்ததுதானே? அப்படியிருக்க நான் தாங்கள் கேட்டதைத் தரமாட்டேன் என்று சொல்வேனா? தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதானே?”

என்று பெருமாள் மென்மையாகப் பேசினார்.

ஆனால்-

வராஹமித்திரரோ இதனை ஏற்கவில்லை.

“நான் அன்றைக்கு இந்த மலையை உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். மறுபடியும் ஏற்கமாட்டேன். இது உன்னுடைய இடம்” என்று உறுதியாக இருந்தார்.

தன் கணவரின் பிடிவாதத்தைக் கண்டு பூமாதேவிக்கு சிறிது அதிர்ச்சிதான்.

“தாரை வார்த்துக் கொடுத்ததற்காக அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டுமா?” என்றாள்.

“பூமாதேவி! உன்னைக் கூட உன் பெற்றோர் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள். இப்பொழுது மறுபடியும் நான் உன்னை, உன் பெற்றோர்க்குத் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது. ஒரு முறை அக்னி சாட்சியாக யார் ஒருவர் எந்தப் பொருளையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால் அதனை எப்பேர்ப்பட்டவர்களும் மீண்டும் பெறமுடியாது. அதுபோல்தான் இதுவும்.” என்ற வராஹர்,

“வேங்கடவா! இதெல்லாம் கலிபுருஷனால் வந்த வினை. அமைதியாக ஆனந்தமாக இருந்த இவளை ஆசைகாட்டித் தூபம் போட்டுவிட்டான். இவளும் கலிபுருஷனின் நாடகத்தை நம்பிவிட்டாள். அதன் விளைவுதான் இது. எனவே நீ தாராளமாக இந்த மலையில் இருந்து ஏகப்பட்ட அதிசயங்களைச் செய்க. அதற்காகத்தான் நீ இந்த வேங்கட அவதாரம் எடுத்திருக்கிறாய். எனவே பூமாதேவி சொன்னதை எதையும் பொருட்படுத்தாதே.” என்று அமைதியாக முடித்தார்.

“வராஹமித்ரரே! தங்களின் எல்லையற்ற கருணைக்கு நன்றி. ஆனால் பூமாதேவியின் மன வருத்தத்தையும் சுமந்து செல்கிறேன் என்பதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்றார் திருமலைவாசன்.

“அப்படியே வேங்கடவா! இனிமேல்இப்படிப்பட்ட பாபகாரியங்கள் இந்த பூமியில் தினம் நடக்கும். தர்மம் மறையும். கொலை, கொள்ளை அதிகமாகும். பெரியவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். குழந்தைகள் இளம் வயதிலேயே கெட்டுப்போவார்கள். தாம்பத்திய வாழ்க்கை நீடித்து நிற்காது. நீதிகள் வேரோடு சாயும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாது.”

“ஒவ்வொரு குடும்பத்திலும் பூசல் இருக்கும். ஒற்றுமை குலையும். நோய்கள் புதிது புதிதாகக் கிளம்பும். தெய்வ பக்தி குறையும். இதெல்லாம் கலிபுருஷனின் வேலை. இனிமேல் கலிபுருஷனின் ஆட்சி என்பதால் எல்லாருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்று எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தார் வராஹர்.

“தாங்கள் எல்லாம் தெரிந்தவர். நாசூக்காக எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள். தங்களின் நாயகியான அன்னை பூமாதேவிக்கும் இது பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே. ஏன் தெரியாமல் போயிற்று?” என்று திருமலைவாசன் சொன்னதும், கலகலவென்று சிரித்தபடியே திருமலைவாசன் முன் வந்து நின்றாள் பூமாதேவி.

“வேங்கடவா! எனக்கும் எல்லாம் தெரியும். இருப்பினும் ஒரு நாடகம் ஆடினேன். அவ்வளவுதான்.” என்றாள் பூமாதேவி.

“நாடகமா? என்ன சொல்கிறீர்கள் பூமாதேவி!”

“கலிபுருஷனைப் பற்றி வராஹமித்திரரான என் கணவருக்குத் தெரிந்ததைவிட இன்னும் அதிகமாகவே எனக்குத் தெரியும். இந்தக் கலிபுருஷனை வளரவிடாமல் தடுக்கவே இங்கு தாங்கள் திருமலைவாசனாக அவதாரம் எடுத்திருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.”

“அப்படித் தெரிந்துமா தாங்கள் இப்படி...”

“நடந்து கொண்டேன் என்று நினைக்கிறீர்களா? தெய்வ நிலையில் நான் இருந்தாலும் கேட்பார் பேச்சைக் கேட்டால் எல்லாருமே புத்திமாறிப் போவார்கள் என்பதை நிலை நிறுத்தவே நான் நாடகம் ஆடினேன். இந்த நிலை மானிடர்களுக்கு மாத்திரம் இல்லை. தெய்வ நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று உலகத்தார்க்கு உண்மையை உணர்த்தவே இப்படியொரு நாடகம். போதுமா வேங்கடவா?” என்று கள்ளம் கபடமற்றுச் சிரித்தாள் பூமாதேவி.

“நான் கூட இந்த விஷயத்தில் ஏமாந்து விட்டேன். இது உண்மைதான்.” என வராஹமித்திரரும் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

இந்த சம்பவங்களை மறைமுகமாகக் கேட்டுக் கொண்டிருந்த ‘கலிபுருஷன்’ இனிமேல் திருமலையில் இருந்தால் தன்னால், தான் நினைத்த காரியங்களைச் சாதிக்க முடியாது என முடிவெடுத்தான்.

இனிமேல்...

தெய்வத்தோடு போராடக்கூடாது. நேராக பூலோக ஜனங்களின் மத்தியில் செயல்பட்டால் ஜனங்கள் ஏமாந்து விடுவார்கள் என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு திருமலையிலிருந்து கிளம்பினான்.

அப்போது ‘நில்’ என்று சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான் கலிபுருஷன்.

அங்கு அகஸ்தியர் நின்று கொண்டிருந்தார்.

சித்தன் அருள்...................... தொடரும்!

Wednesday, 7 September 2016

சித்தன் அருள் - 431 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"பாவமே செய்யாமல் வாழக் கற்றுக்கொண்டு விட்ட பிறகு, இறைவனிடம் வினா தொடுக்கலாம், அவரை வம்புக்கு இழுக்கலாம். ஆனால் நம்மிடமே பல குறைகள் இருக்கும் போது, எந்த நம்பிக்கையில் இறைவனிடம் விவாதம் செய்ய இயலும்?"

Tuesday, 6 September 2016

சித்தன் அருள் - 430 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தீபத்தின் முகங்கள் அதிகமாக, அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு. "12" முக தீபத்தில் சகல வதனங்களும் அடங்கி இருப்பதால், அத்தருணம், பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து, ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடுபாட்டோடு வழிபாடு செய்தால், அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதைவிட, ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்."

Monday, 5 September 2016

சித்தன் அருள் - 429 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கும், மனைவி கணவனை மதிக்காமல் இருப்பதற்கும் வினைப்பயன் தான் காரணம். இந்த பிரச்சினை விலக நவக்கிரக காயத்ரியை, அதிதெய்வ காயத்ரியை, சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

Friday, 2 September 2016

சித்தன் அருள் - 428 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"வாழ்க்கையில் எதிர்படும் எல்லாவகையான ஏழைகளுக்கும், உழைக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், உழைத்தும் போதிய வருமானம் இல்லாதவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்வதும், இதுதான், அதுதான் என்றில்லாமல், ஆய்ந்து பார்க்காமலும், சமயத்தில் தேவை என்று வரும்பொழுது, அள்ளி, அள்ளித் தரக்கூடிய சிந்தனையிலே ஒரு பெருந்தன்மையான போக்கிலே, தர்மத்தை செய்து கொண்டேயிருந்தால், அது இறையருளை பெற்றுத்தர உதவும் அப்பா!"

Thursday, 1 September 2016

சித்தன் அருள் - 427 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"உலகியல் செயல்கள் அனைத்தும், கர்ம வினைகளால் (மனிதர்கள்) ஏற்படுத்திக் கொள்பவை, ஏற்பட்டுக்கு கொண்டு இருப்பவை, என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்ற மனிதன், அந்த நிறுவனத்தை தன் இல்லமாக ஒரு பொழுதும் கருதுவதில்லை. வந்து போகின்ற இடமாகத்தான் கருதுகிறான். ஆனால், தன் இல்லம், தன் வாகனம், தன் குடும்பம் என்றால், சற்றே ஓட்டுதல் வந்துவிடுகிறது. எனவே, இந்த உலகத்தையும் ஒரு நிறுவனமாகப் பார்த்து, இங்கே சில காலம் பணிபுரிய, இந்த ஆத்மா, இந்த உடம்பு என்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. வந்த பணி முடிந்தவுடன் இல்லம் திரும்புவது போல, அது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும் என்ற நினைவோடு வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டுவிட்டால், மனம் ஒடுங்கத் தொடங்கிவிடும்."


சித்தன் அருள் - 426 - "பெருமாளும் அடியேனும்" - 64 - வராஹமித்ரர் பூமாதேவிக்கு வேங்கடவன் அருளுதல்!


“வராஹமித்திரரைச் சந்திக்க வேண்டும்.” என்று வேங்கடவனுக்குத் தகவல் வந்ததுமே வேங்கடவன் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

“கலிபுருஷன் ஒதுங்கிவிட்டான், திருமலையிலிருந்து அவன் வெளியேறி விட்டான் என்றுதான் நினைத்தேன். ஆனால் மறுபடியும் அவன் தன் வேலையைத் தொடங்கி விட்டானே.” என்று எண்ணிக் கொண்ட வேங்கடவன், வராஹமித்திரரைப் பார்க்க உடனடியாகப் புறப்பட்டார்.

வராஹமித்திரருக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும். இருந்தும் பூமா தேவிக்காக ஒரு நாடகம் ஆடினார்.

வேங்கடவன் வந்ததும், வராஹமித்திரரே வாயிலுக்குச் சென்று முகமன் கூறி வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்.

“வரச் சொன்னீர்களாமே?”

“ஆமாம்”

“என்ன விஷயமோ?”

“ஒன்றுமில்லை. சிறிதுகாலம் இந்த மலையில் தங்கவேண்டும் என்று கேட்டாய். நானும் மறுப்பில்லாமல் ஒப்புதல் தந்தேன். இப்போது இங்கேயே நிரந்தரமாக இருக்கப்போவதாக அறிந்தேன். அது உண்மையா வேங்கடவா?”

“ஆமாம். பூலோக மக்களுக்கு இன்னும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. கலிபுருஷன் வேறு பல வகையில் பொதுமக்களுக்கும், தேவர்கள், ரிஷிகள், போன்றவர்களுக்கும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவனையும் சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. இதையெல்லாம் உத்தேசித்து இந்த மலையில் மேலும் சிறிது காலம் தங்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.”

“சந்தோஷமான செய்திதான். ஆனால்...”

“என்ன ஆனால்?”

“இந்த மலை என்னுடைய மலை. ஆனால் இப்பொழுது உன் பெயரில் திருமலை என்று ஆகிக் கொண்டிருக்கிறது. இது நியாயமில்லையே! வராஹமித்திரர் மலையாகத்தானே இருக்கவேண்டும்?” என்றாள் பூமாதேவி.

“இதைச் சொல்லத்தான் கூப்பிட்டு அனுப்பினீர்களா? இதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. இப்போதே வேண்டுமானாலும் தங்கள் பெயருள்ள மலையாக மாற்றிவிடுகிறேன். அவ்வளவுதானே?” என்றார் வேங்கடவன் சிரித்துக் கொண்டே.

“வேங்கடவா! உன்னைப் பற்றி எனக்கு மிக நன்றாகத் தெரியும். எனக்கும் பெயராசையும் இல்லை. பேராசையும் இல்லை. ஆனால் பூமா தேவிக்கு மட்டும் இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.” என்று நாசூக்காக கண் சிமிட்டிப் பேசினார் வராஹமித்திரர்.

“பூமியில் பிறந்த எல்லாருக்கும் இப்படியோர் ஆசை வரும். இது இயற்கை. தடுக்க முடியாது. அப்படியிருக்க பூமாதேவி என்ற பெயர் கொண்ட அவர்களுக்கு இப்படியொரு பெயராசை ஏற்பட்டிருப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை.” என்று வேங்கடவனும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். இதைக் கேட்டதும் பூமாதேவி பொறுமை இழந்தாள்.

“எனக்கொன்றும் பெயராசை இல்லை. கலிபுருஷன் வந்தான். நடந்ததைச் சொன்னான். அவன் சொன்னது எனக்கு நியாயம் என்று பட்டது. இதில் என்ன தவறு?”

“அன்னை பூமாதேவியே! அமைதி காக்க. இப்போது உங்களுக்கு இந்த மலை வேண்டுமா? வராஹமித்திரர் மலை என்று பெயர் வேண்டுமா?”

“எனக்கு இரண்டும் வேண்டும்” என்றார் பூமாதேவி ஆக்ரோஷமாக.

“அவ்வளவுதானே? இப்போதே தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பின் விளைவுகளுக்கு என் மீது பழி போடக்கூடாது.”

“மாட்டேன் வேங்கடவா! ஒருபோதும் உங்கள் மீது பழி போடமாட்டேன்.” என்றவள், “இப்போதே நீங்கள் மலையைவிட்டு வெளியேற வேண்டும். இனிமேல் இங்கு திருமலை என்ற பெயரைச் சொல்லக்கூடாது. இனிமேல் காலாகாலத்திலும் இந்த மலைக்கு ‘வராஹர்மலை’ என்றே பெயர் அமைய வேண்டும்.” என்று பூமாதேவி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது வானத்திலிருந்து ஒரு பெரும் இடி இடித்தது. மழையும் கொட்டத் தொடங்கியது.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் திருமலையில் எங்கு திரும்பினாலும் நீரினில் மலையே மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டது. இதையெல்லாம் கண்டும் வேங்கடவன் அமைதியாக தியானத்தில் அமர்ந்தார்.

வராஹமித்திரருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அவரால் வருண பகவான் வேகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பதறிப் போனார்.

“வேங்கடவா! இதென்ன கொடுமை? உங்களால் இந்த மழையைத் தடுத்து நிறுத்த முடியாதா?”

“ம்ம்... முடியாது வராஹமித்திரரே!”

“ஏன்?”

“இது உங்களுடைய மலை. இதன் நல்லது கெட்டது எல்லாம் உங்களுக்கே சேர்ந்தது. நீங்கள் தான் வருணனை வேண்டிக் கொள்ள வேண்டும்.”

“வேங்கடவா! இதென்ன நியாயம்? உன் பெயரால் இந்த மலை உருவாகும்போது எப்படி இது என் மலையாகும்?”

“என்ன வராஹரே! நீங்கள்தான் இப்போது இந்த மலை என்னுடையது என்றீர்கள்?”

“நான் அப்படி எண்ணவில்லை. பூமாதேவிதான் ஆசைப்பட்டாள்.”

“அப்படியென்றால் பூமாதேவியே வருணனை வேண்டி மழையை நிறுத்தச் சொல்லட்டும்”

“சொல்லலாம். ஆனால் பெய்கின்ற மழையெல்லாம் இந்தப் பக்கம்தான் கொட்டுகிறதே தவிர உங்கள் பக்கம் ஒரு துளிகூடப் பொழியவில்லை. வெள்ளமும் தேங்கவில்லை. அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்றாள் பூமாதேவி சற்று வெறுப்பாக.

“அதற்கு நான் என்ன செய்யமுடியும் பூமாதேவி? அது வருணனின் செயல்.” என்றார் வேங்கடவன் நமட்டுப் புன்னகையுடன்.

வராஹமூர்த்தி இப்பொழுது பூமாதேவியை அழைத்து “நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்.”

“கேளுங்கள்”

“தாத்தாவின் சொத்து யாருக்குப் போய்ச் சேரும்?”

“இதிலென்ன சந்தேகம்? கண்டிப்பாக மூன்றாவது சந்ததிக்கு. அதாவது பேரன் பேத்திக்கு.”

“சரியாகச் சொன்னாய் பூமாதேவி!” இப்பொழுது அதன்படிதானே இங்கும் நடந்திருக்கிறது?”

“எப்படி?”

“வேங்கடவன் என்னுடைய பேரன். அப்படியென்றால் இந்த மலையும் அவனுக்குத்தானே போய்ச் சேரவேண்டும்? அதன்படியே தான் நானும் இந்த மலையை பேரனான வேங்கடவனுக்குக் கொடுத்திருக்கிறேன். பிறகு எதற்கு வேங்கடவனிடமிருந்து இந்த மலையைப் பிடுங்க எண்ணுகிறாய்?”

இதைக் கேட்டதும் பூமாதேவி அயர்ந்து போனாள்.

“அதிருக்கட்டும். முதலில் வருணனை வேண்டி இந்த மழையை நிறுத்தச் சொல்லுங்கள்.”

“சொல்கிறேன். இந்த மலையை வேங்கடவனுக்கு நிரந்தரமாகக் கொடுத்து விடலாம் அல்லவா?”

“சந்தோஷமாக” என்றாள் பூமாதேவி.

இதைச் சொல்லி முடிக்கவும் வரலாறு காணாத மழை அப்படியே நின்று விட்டது. வெள்ளச் சேதமும் இல்லை.

“பூமாதேவி! மற்ற பெண்களைப் போலத்தான் நீயும் கேட்பார் பேச்சைக் கேட்டு வேங்கடவனிடம் வாதம் செய்தாய். வருணனுக்கு இது அதர்மம் என்று தெரிந்தது. உன்னைத் திருந்த வைக்கவே மழையைக் கொட்டித் தீர்த்துவிட்டான். போதுமா?” என்றார் வராஹமித்ரர்.

“அது சரி. வருகிற அனைவரும் வேங்கடவனையே நோக்கித் தரிசித்துச் சென்றால் பின்னர் இங்கு வராஹர் என்பவர் ஒருவர் இருந்தார் என்பதற்கு அடையாளமே இல்லாமல் போய் விடுமே! அதற்கு இந்த வேங்கடவன் என்ன செய்யப் போகிறான்?” என்று பூமாதேவி செல்லமாக வராஹமித்திரரைக் கேட்டாள்.

“இவ்வளவுதானே? நானே இப்போது எல்லாருக்கும் சொல்லிவிடுகிறேன். என்னை நேரிடையாக வந்து தரிசனம் செய்பவர்களுக்கு ஒன்றில் கால்பாகம்தான் பலன் கிடைக்கும். ஆனால் என்னை வந்து தரிசனம் செய்யும் முன்பு இந்த கோனரி நதியால் உண்டாக்கப்பட்ட புஷ்கரணியில் ஸ்நானம் செய்து, வராஹமித்திரரையும் பூமாதேவியையும் வணங்கி, இதற்குப் பிறகு வேங்கடவனான என்னை வணங்கினால் அத்தனை பேருக்கும் நூற்றுக்குநூறு புண்ணியம் கிட்டும்.

வராஹமித்திரர் கூடிய பூமாதேவியை மட்டும் இந்த மலையில் வணங்கிச் சென்றால் அத்தனை சௌபாக்கியங்களும் கிட்டும். கடன் தொல்லை தீரும். கல்வியில் தடை இருக்காது. வேண்டிய புகழ் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். இத்தகைய பாக்கியம் இந்த பூலோகத்து மக்களுக்கு நிச்சயம் உண்டாகும். இது வேங்கடவனின் வாக்கு. போதுமா தேவி?” என்று வேங்கடவனே வாய் திறந்து சொன்னார்.

இதைக் கேட்டு பூமாதேவியும் வராஹமித்திரரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

“சரி. இனி நான் சென்று வரட்டுமா?” என்று வேங்கடவன், வராஹமித்திரரிடம் விடைபெற்று வெளியே வந்த போது ‘கலிபுருஷன்’ வேங்கடவன் கண்ணில் படாமல் மறைந்து நின்றான்.

வேங்கடவன் வெளியேறிய பின்பு வராஹமித்திரர் முன்பு கலியன், மீசையை முறுக்கிக் கொண்டு வந்து நின்றான். அவனைக் கண்டதும் பூமாதேவிக்கு அடிவயிற்றில் எரிந்தது.

‘என் குடும்பத்தையே கெடுக்க வந்த கோடரிக் கம்பு இவன்தான்’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள்.

அந்தப்பெருமூச்சு அக்னிப் பிழம்பாக மாறியது. கலிபுருஷனை நோக்கி வேகமாகச் சென்றது. அக்னியின் வேகத்தைத் தாங்கமுடியாமல் கலிபுருஷன் எடுத்தான் ஓட்டம்.

கண், மண் தெரியாமல் கலிபுருஷன் ஓடிக்கொண்டிருந்தான். இதைக்கண்ட வராஹமித்திரரும் பூமாதேவியும் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்.

சித்தன் அருள்..................... தொடரும்!