​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 October 2013

சித்தன் அருள் - 147 - நம்பிமலை!

"அகத்தியரே! ஏதாவது எங்களுக்கும் சொல்லேன்" என்று சித்தர்கள் என்னை கேட்கிறார்கள். சித்தர்களுக்கே அகத்தியன் சில பாடம் நடத்த வேண்டி இருக்கிறது. சில சமயம் சித்தர்களே தலைக்கு மீறிப் போய்விடுகிறார்கள். அமைதியாக இருந்து விடுகிறார்கள். சித்தர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்வேன். 

"என்னைத் தேடி வருகின்ற அத்தனை மானிடர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை கொடுத்து அவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும். அது தான் அகத்தியன் உங்களுக்கு இடுகின்ற கட்டளை" என்று சொல்லியிருக்கிறேன். 

ஆக, அந்தச் சித்தர்களை யார் யார் எந்த தேசத்தில் வணங்கினாலும். எந்த ரூபத்தில் வணங்கினாலும், அவர்களுகெல்லாம் எந்த வித துன்பமும் இல்லாமல், அவர்கள் வாழ்க்கைக்கு எந்த வித குறைகளும் இல்லாமல், எடுத்த காரியங்களை திண்ணமாக செய்து வைக்க, அகத்தியன் நான் பார்த்துக் கொள்வேன். அவர்களும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். ஆக, எங்கள் சித்தர்களுக்குள் பேதமில்லை. இவர்களில் யாரை வணங்கினாலும் அதுஅகத்தியனுக்கு வந்து சேரும்".

இந்த புனிதமான இடத்தில் எத்தனையோ விழாக்கள் நடந்திருக்கிறது. எத்தனையோ யாகங்களை அகத்தியன் கண்டிருக்கிறேன். இங்கிருந்து 12வது காததூரம் சென்று விட்டால் அற்புதமான குகை இருக்கிறது. அந்த குகைக்குள்ளே மிகப்பெரிய, பயங்கரமான புலிகள் காவல் காத்து வருகிறது. அதற்குள்ளேதான், அத்தனை சித்தர்களும் அமர்ந்திருக்கிறார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு தங்கும் இடம் வாங்கலாம். பொதிகை மலையிலே எத்தனையோ அதிசயங்கள் இருக்கிறது என்று அகத்தியன் ஏற்கனவே சொன்னேன். 

என் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிற ஒருவனுக்கு கூட, அந்த குகைக்கு சென்று பார், சில ஆச்சரியங்கள் நடக்கும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்த குகைக்கு வழி காட்டவில்லை என்கிற குறை மனிதர்களுக்கு உண்டு. மனிதன் தானே, எதிர்பார்ப்பதில் தவறில்லை. அகத்தியன் சொன்னான். சொன்னபடி அகத்தியன் நடக்கவில்லை என்று பழியை சுமத்தலாம். பழியை சுமத்துவதில் தவறில்லை. அகத்தியன் இப்படித்தான் சிலவேளை ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடுகிறேன். அதன் பிறகு அகத்தியனே திருத்திக் கொள்வதும் உண்டு. சிலவேளை, சில காரணங்களால் சொன்னது நடக்க முடியாமல் போவது உண்டு. 

இப்பொழுது கூட என் அருகில் ஒரு அருமை சித்தன் இருக்கிறான். கோபப்பட்டு, நான் எழுதிய 5000 ஓலைச் சுவடிகளை கடலில் தூக்கி ஏறிந்து விட்ட கதை உங்களுக்குத் தெரியாது. அந்தச் சுவடிகள் எல்லாம் மிதந்து கொண்டு இருக்கிறது நாகப்பட்டினம் கடற்கரையிலே, என்று சொல்லி, அங்கு சென்று கண்டு வரலாம் என்று சொன்னேன். பல நாட்களுக்கு முன் சொன்னேன் "நாகப்பட்டினம் ஏகு. அங்கு வடகிழக்கு திசை பக்கமாக அமரு. அலைகளை எண்ணிக்கொண்டுவா. 89வது அலையிலே கையை நீட்டு. உனக்கு அகத்தியனின் ஓலைச்சுவடி கையில் விழும் என்று கூட சொல்லியிருக்கிறேன். அது உண்மை." அதை இவனிடம் விட்டுவிடுகிறேன். அகத்தியன் எழுதிய 5000 ஓலைச்சுவடியும் இருக்கிறது. 

அதில் இல்லற சூட்சுமங்கள் எதுவுமே இல்லை. அற்புதமான சூட்சுமங்கள். ஒருமுறை அதை யாராவது ஒரு மனிதன் படித்துவிட்டால் போதும், இந்த உலகத்துக்கே விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும். அவன் குடும்பத்துக்கு 333 ஆண்டுகளுக்கு எந்தவித தோஷமும் வராது. அவன் பரம்பரை முதல், பரம்பரை பரம்பரையாக அந்த குடும்பம் செழிக்கும். உலகமே அழிந்து போனாலும், அவர்கள் குடும்பம் அழியாதடா! பிரளயமே வந்து அவர்களை அழித்தெடுத்தாலும், அவர்கள் தலை நிமிர்ந்து நிற்பார்கள். அத்தகைய விஷயங்களை ஓலைச் சுவடியில் சொல்லியிருக்கிறேன். அது கிடைத்தால், யார் ஒருவன் படித்தால், அதை பதிவு செய்துகொண்டால் போதும். வாழ்க்கை, அமைதியாக, ஆனந்தமாக இருக்கும். உயிர் காக்கும் மந்திரம் கூட அதில் சொல்லியிருக்கிறேன். 

உயிர் காக்கும் மந்திரம் பற்றி சொல்லும் போது, இங்கொருவன் தன குழந்தை, எப்பொழுது உயிர்காத்து நடக்கும் என்று ஆசைப்பட்டு, அகத்தியன் சொன்னபடி தானங்கள் எல்லாம் செய்துவிட்டு, அன்றாடம் அகத்தியனை மன்றாடிக் கொண்டிருப்பதெல்லாம் அகத்தியன் யாம் அறிவேன். எப்படிப்பட்டவன், எந்த திசையில் சென்று கொண்டிருந்தவன் எல்லாம், அகத்தியனை நோக்கி வந்தது, அகத்தியனுக்கு பெருமை அல்ல. அந்த உயிர் காப்பாற்றப் பட்டு, அந்த குழந்தை எழுந்து சர்வ சாதாரணமாக நடக்கவேண்டும், குதிக்க வேண்டும், ஆடவேண்டும், பாடவேண்டும் என்பது தான் அகத்தியன் கணக்கு. அந்த உயிரின் பொல்லாத விதி தன்னை மாற்றி எழுதுகிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை வேறு. அந்த உயிரை காப்பாற்றியது அகத்தியன் என்று பெருமையாக அகத்தியன் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. இவன் செய்த புண்ணியம், இவன் அகத்தியனை நாடினான். அகத்தியன் விதியை நாடினான். விதி பிரம்மாவை நாடியது. விதி அவனுக்கு உயிர் கொடுத்தது. இன்னும் சில குறைகள் இருக்கிறது. முன் ஜென்ம கர்ம வினைகள். அது கழிந்து கொடிருப்பதால் தான் சற்று காலம். அதுமட்டும் ஒழுங்காக இருந்து விட்டால் இவன் வாழ்க்கை வேறு விதமாக ஆகிவிடும். இப்படி ஒரு சிறு துன்பத்தை கொடுத்து அவனை இந்தப் பக்கம் திருப்பி வைத்திருக்கிறேன். இது அகத்தியன் கொடுக்கிற தண்டனை என்று எண்ணிவிடக்கூடாது. அந்த குழந்தை நல்லபடியாக இருந்திருந்தால், இவன் வாழ்க்கை வேறு விதமாக வித்யாசமாக போயிருக்கும். ஆகவே, அவனை நல்ல வழியில் திருப்பி, முன் ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் எல்லாம் அவனுக்கு பலனளிக்க.

அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். கொடுமுடியில் அன்று காவிரி நதிக்கரை ஓரத்திலே சொன்னேன், அதை இப்போது ஞாபக படுத்திப் பார்க்கிறேன்.  காவிரி நதி கங்கை நதியில் குளித்து நீராடி தன் பாபத்தை போக்கிக் கொண்டாள். கங்கையோ, இந்த நம்பி மலையில் வந்து மஞ்சள் தேய்த்து நீராடி தாமிரபரணியில் தன் பாபத்தை போக்கிக்கொண்டாள். அன்று முதல் இன்று வரை காவிரியும், கங்கையும், அந்த புனிதம் கெடாமல் இருக்கிறது. ஆண்டுகள் ஆயிரமானாலும் இந்த நதிகள் புனிதம் கெடுவதில்லை. அதற்கு மூல காரணமே தாமிரபரணி நதிக்கரை தான். எல்லோரும் பாபத்தை தொலைக்க கங்கைக்கு போவார்கள். கங்கையே அற்புதமாக ஆனந்தப் பட்டு மஞ்சள் தேய்த்து நீராடிய நதி இது. மஞ்சள் தேய்த்து நீராடிய பாறை கூட இங்கு இருக்கிறது. அகத்தியன் தெளிவாக சொன்னால், பாறையை பெயர்த்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால், அகத்தியன் சுட்டிக் காட்ட மாட்டேன். அகத்தியன் மைந்தனுக்கு சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், அங்கு தான் அற்புதமான வரளி மஞ்சளை எடுத்து தேய்த்து நீராடிய புனிதமான இடமடா! அந்த இடத்தில் அமர்ந்து கொண்டுதான் அகத்தியன் இந்த வாக்கை உரைக்கிறேன். அதனால் தான் என்னவோ, அந்த அகோபிலத்து நாயகன் கூட காது கொடுத்து கேட்கிறான் பார். என்ன ஆசை அவனுக்கு. எல்லோரும் போல சொல்ல வேண்டியது தானே, கேட்கவேண்டியதுதானே. ஆசை! இப்படி எத்தனையோ அற்புதமான சம்பவங்கள் நடக்கிறது.

இன்னும் எத்தனையோ சொல்ல மனம் துடிக்கிறது.

நான் போய் தீபாராதனை காட்டிவிட்டு வந்து விடுகிறேன். ஒரு அரை நாழிகை காக்க. அங்குள்ள நம்பிக்கும் மற்றவர்களுக்கும் தீபாராதனை  காட்டிவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு உரைக்கிறேன் நான்.

[நானும் போய் தீபாராதனை பார்த்து, ஆசி வாங்கிக்கொண்டு (உங்கள் சார்பாக), எல்லோரையும் அடுத்தவாரம் சந்திக்கிறேன்!|


எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். ஓம் அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்................. தொடரும்

Saturday 26 October 2013

சித்தன் அருள் - 146 - நம்பிமலை!

[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இன்று எனது நண்பர், இந்த சித்தன் அருள் தொகுப்புக்கு உயிர் கொடுத்தவர், தன் உயிர் நீத்த நாள். (ஆங்கில தியதிப் படி). அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இன்றைய தினம் இந்த தொகுப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். "பெற்றால் தான் தகப்பனா" என்ற தொகுப்பை பார்த்துவிட்டு, அடியேனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி, சித்தன் அருளை நம்பிமலையில் தொடருவோம்.]  

"ஆதிசேஷனே இங்கு புற்று உருவாக அமர்ந்திருக்கிறானடா. அதுதான் உண்மை. புற்று என்பது நீ நினைக்கும் படி சாதாரண புற்றல்ல. ஆதிசேஷன் என்றைக்காவது புற்று உருவில் வந்து அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறாயா? அது மட்டுமல்ல. அன்னவனுக்கு எதிரியாய் இருக்கிற "கருட ஆழ்வாரும்" ஆதிசேஷனுடன், கை கோர்த்து இருக்கிற காட்சி, வேறு எங்குமே காணமுடியாத காட்சி. எதிரிகள், எங்காவது கை குடுத்து இருப்பதை பார்த்திருக்கலாம், நடிப்பாக இருக்கலாம். ஆக, இங்கு தான் இப்பொழுது, அந்த அதிசயம் நடந்திருக்கிறது. ஆக, புற்றுக்கு அதிபதியாம் ஆதிசேஷன், அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து வலது கையை பிடித்துக்கொண்டு இருக்கிறார் கருட ஆழ்வார். கருடனும், பாம்பும் விரோதி தானே, இங்கே எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? அதுதாண்டா ஆச்சரியம். அகத்தியனுக்கு கிடைத்த மரியாதை என்று எண்ணுகிறேன். அகத்தியன் மேல் எவ்வளவு அன்பு கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தக் கண்கொள்ளா காட்சியை பார்த்து எல்லோருமே, ஆச்சரியப் படுகிறார்கள். யாருக்கு யாரடா விரோதி? எப்போதுமே இல்லை. விரோதம் என்பது நடிப்புத்தான் தவிர, விரோதமே இல்லை.

அன்றைக்கு ஒருநாள், உலகத்துக்காகத்தான் ராமன் அவதாரமே எடுத்தான். ராவணனை கொன்றதாக வரலாறு இருந்தது. ராவணன் பிறக்கவில்லை, கொல்லப்படவில்லை.இரண்டுமே இறைவனின் படைப்பு தானே. நாடகமாடியிருக்கிறார்கள், மக்களை திருத்துவதற்காகத்தான். அதனால் தான் இங்கு ராமாயணமே ஏற்பட்டது. அங்கேயும் ஐந்து பேர்கள், மகாபாரதத்திலும் ஐந்து பேர்கள். பஞ்ச பூதங்கள் தான். பஞ்ச பூதங்கள் தான், பூமி தாய்க்கு மகனாகப் பிறந்து, புவியில் இருக்கும் மனிதர்களுக்கெல்லாம், அங்கோர் நல்லதொரு வழியை காட்டுவதற்காகத்தான், அங்கேயும் ஐந்து பேர்கள். துரியோதனன், ராவணன், ஹிரண்ய கசிபு எல்லோரும் ஒரே வம்சாவழியில் வந்தவர்கள் தான். ஆகவே, இவர்கள் படைப்பு என்பது, அப்படி படைக்க வேண்டும் என்பது நியதி, அவர்கள் அப்படித்தான் நடிப்பார்கள். நல்லோர்கள் வாழவேண்டும், கெட்டவர்கள் ஒழியவேண்டும் என்பதில், யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள்? ஹிரண்ய கசிபு நல்லவன் இல்லையா? ராவணன் என்ன தவறு செய்தான், அவனை போய் பழி வாங்குவதற்கு. இங்கிருந்து பார்த்தால், யாருமே தவறு செய்யவில்லை. ஆனால் தவறு செய்வது மனித இயல்பு. அப்படி பாபங்களை செய்தால் தண்டனை உண்டு என்று நீதி தன்னை போற்றுவதற்காகத்தான் மகாபாரதமும், ராமாயணமும் எழுதப்பட்டது. எதற்காக சொல்கிறேன் என்றால், யார் அந்த ராவணனாக நடித்தானோ, யார் அந்த ஹிரண்ய கசிபுவாக வாழ்க்கையை நடத்தி முடித்தானோ, அவனே, லக்ஷ்மி நரசிம்மார் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, கையை பிடித்துக்கொண்டு, அளவளாவி, ஆனந்தப் பட்டுக் கொண்டு இருக்கிற காட்சி நடக்கிறது. இத்தகைய அரிய காட்சி வேறு எங்கும் பார்க்க முடியாது.  மலைகளில் தான் காண முடியும். மந்தார வேளையிலே, மேகத்தின் உச்சியிலே, ஆனந்த ஸ்வரூபத்திலே, வருண பகவான் அமர்ந்து கொண்டு இந்த காட்ச்சியை பார்ப்பது, உச்சியிலிருந்து பார்த்தால் எனக்கு தெரிகிறதடா. ஆக, உன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல, தெய்வங்கள் இருக்கிறது. தெய்வங்கள் இருப்பதினால் தான் அற்புதமான காட்சி அகத்தியனுக்கு கிடைக்கிறது. அகத்தியனுக்கு கிடைக்கிற காட்சியை தான் அகத்தியன் யான் உனக்கு சொல்கிறேன். இது தெய்வ ரகசியம் என்றாலும் கூட, இங்குள்ள மனித சித்தர்களுக்கு அந்த அரிய காட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அகத்தியன் இங்கு உங்களை எல்லாம் வரச்சொன்னேன்.

புளிய மரத்தடியிலே எத்தனையோ செய்திகள் உண்டு. இன்றைக்கும் புளியமரத்தடியிலே ஏராளமான சித்தர்கள் தவமிருக்கிறார்கள். அந்த அருவியின் ஒரு கிளை அந்த புளிய மரத்துக்கு அடிவழி ஓடி, அங்கு ஒரு குகை ஒன்று இருக்கிறது. அந்த குகையில் 18 சித்தர்களும் இருக்கிறார்கள். அந்த 18 சித்தர்கள் என்னுடன் உள்ள 17 சித்தர்கள் அல்ல. இங்குள்ள 18 சித்தர்களும் அங்கு தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பௌர்ணமி தோறும் வெளியே வந்து வெளியுலகத்தை சுவாசிப்பது வழக்கம். காற்றை ச்வாசிப்பதல்ல, மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சுவாசிப்பது வழக்கம். அப்படிப்பட்ட சித்தர்கள், வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகத்தான், மூன்று அடி உயர உருவமாக புற்றிலிருந்து வெளியே குதிப்பார்கள். ஒருவருக்கொருவர் பறவைகள் போல் சப்தமிட்டுக்கொள்வார்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள், ஒருவருக்கொருவர் கைதட்டி ஆரவாரம் செய்து கொள்வார்கள். சித்தர்கள் மனமகிழ்ந்து கழிக்கின்ற காலத்தை தரிசிக்கிற பாக்கியம் எத்தனை பேர்களுக்கு கிடைக்கப் போகிறது? முடிந்தால், சித்திரா பௌர்ணமி நாளில் மட்டுமல்ல, எந்த பௌர்ணமி நாளிலும், விடியற் காலை நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு, வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, அந்த புளியமரத்தடியை நோக்கி எட்டிப்பார், அங்கிருந்து வருகின்ற சப்தங்கள், உனக்கு மட்டும் தெளிவாக கேட்க்கும். அதற்கும் அகத்தியன் அருளாசி வழங்குகிறேன். யாராவது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், இங்கு வந்து அமர்ந்திருந்தால், அந்த சித்தர்கள் காட்ச்சியை, எல்லாருமே பார்க்கலாம். அந்த சித்தர்கள் எல்லாம் மிக மிக அற்புதமானவர்கள். பூமிக்கு வெளியே வரமாட்டார்கள். பூமிக்கு கீழே பூமா தேவியுடன் கருணை கொண்டு, இந்த மலை வளத்தையும், நதி வளத்தையும், மண் வளத்தையும் பாதுகாத்து வருகிறார்கள். இன்னும் பல செய்திகள் உண்டு. இங்கு ஏராளமான மணிகள், நவரத்தினங்கள் கொட்டி குவிந்து கிடக்கிறது. யாருக்கும் தெரியாது. ஆனால் அத்தனையும் பூமிக்குள் இருக்கிறது. அத்தனையும் நம்பிக்காக, அவரவர்கள், ஆசையோடு கொண்டு கொடுத்த வைரங்களடா! வைரக் கற்கள், கிடைக்காத கற்கள் எல்லாமே இருக்கிறது. இதை சொன்னால், எல்லாருமே, உடனே பூமியை தோண்டிப் பார்ப்பார்கள் என்பதினால் தான், அகத்தியன் அதை வாய் திறந்து தெளிவாக சொல்லவில்லை. அகத்தியனுக்குத் தெரியும். இப்பொழுது கூட நவரத்ன அபிஷேகம் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லா அபிஷேகமும் முடிந்த பிறகு, வைரக் கற்களால் அபிஷேகம் நடக்கிறது. நவரத்தினங்களால் செய்யப் படும் அபிஷேகத்தை ஏற்று வாங்கிக்கொண்டு அந்த நம்பிமலைப் பெருமான், ஆனந்தப் பட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் என்றால், கற்களைப் பற்றி சொல்லும் போது ஒரு விஷயத்தை சொல்லியாகவேண்டும். அரசன் மணி முடியிலே நவரத்னங்களை அணிவது ஆடம்பரத்துக்காக அல்ல. அவனை பாதுகாத்துக் கொள்வதற்காக. நவ கிரகங்களின் பாதிப்பிலிருந்து அந்த கற்கள் அவனை காப்பாற்றும். ஆகவே, நவரத்னங்களை ஒருவர் அணிந்து கொண்டால், அவரவருக்கு பக்தி இல்லாவிட்டாலும், அந்த கற்கள் அவனை காப்பாற்றும். அகத்தியன் நவரத்னங்களுக்கு பரிந்துரை செய்வதாக எண்ணி விடக்கூடாது. ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு உயிர் இருக்கிறது, ஒரு ஆத்மா இருக்கிறது. அது தன்னை தானே அழித்துக் கொண்டு அதை அணிபவர்களை காப்பாற்றும். ஆக, அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. மணி மகுடத்தில் எத்தனை கற்களை வைக்கவேண்டும், எந்த கற்களை வைத்து எத்தனை நாளைக்கு அரசாள முடியும் என்றெல்லாம் வரலாறு இருக்கிறது. சிரசின் மணி முடியிலிருந்து சில கற்கள் தவறி விழுந்தால், மன்னன் பதவி இழப்பான் அல்லது உயிர் துறப்பான். அது ஆட்சியை முடித்துவிடும். இது எல்லாம் பெரும் கணக்கடா. அது உங்களுக்கு இப்போது தேவை இல்லை. ஆனால் கற்களிலும் பிரச்சினை இருக்கிறது. அந்த கற்களில் உணமையான கற்கள், பூமா தேவி கணக்குப்படி, மனிதர்கள் கணக்குப் படி, பூ லோகத்தில் கோடிகளை தாண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களுக்கு மட்டும் தெரிந்த இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும். அகத்தியன் சொல்லிவிட்டான் என்று, நீங்கள் அங்கு அங்கே எட்டிப்பார்த்து, ஏதோ மின்னுகிறதே, இது வைரமாக இருக்குமோ, அகத்தியன் சொன்ன கற்களாக இருக்குமோ என்று எண்ணக்கூடாது. அதெல்லாம் இங்கிருந்து 500 அடிக்கு கீழே, பள்ளத்தாக்கில், பூமிக்கு கீழே, ஆதிசேஷனால் பத்திரமாக காப்பாற்றப்பட்டு வருகிறது. என்றைக்காவது ஒருநாள் அது உன் கண்களுக்கு தெரிய வரலாம். அது அவர்கள் செய்த புண்ணியம்.

இனி சித்தர்களைப் பற்றிச் சொல்கிறேன். என் அருமை சித்தர்கள் என்னை தூண்டி விடுகிறார்கள்.

சித்தன் அருள்.......... தொடரும்!(எப்போதும் போல் இனி வியாழனன்று)

Thursday 24 October 2013

சித்தன் அருள் - 145 - நம்பிமலை!

இது வரையில் முக்கண்ணன் சதுரகிரியில் உட்கார்ந்திருந்தான், கைலாய மலையில் உட்கார்ந்திருந்தான், நேற்றைய தினம் மானசரோவரில் உட்கார்ந்திருந்தான், முந்தாநாள், மிலேச்சன் நாட்டுப் பகுதியில் மலை மேல் உட்கார்ந்து, ஆனந்தம் அடைந்திருந்தான். அதே முக்கண்ணன் கூட இதோ வந்து கொண்டிருக்கிறான். அருமை அகத்தியன் மேல் அத்தனை பாசம் அவனுக்கு. அகத்தியன் என்ன சொல்லப் போகிறான் என்பதில் ஆசை. இது ஒட்டுக் கேட்பதல்ல. நேரடியாகவே வந்து உட்கார்ந்து கொண்டு, காது கொடுத்து, காதில் கை வைத்து, அகத்தியன் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்கிறானே, இந்தக் காட்சி யாருக்கு கிடைக்கும்? அகத்தியன் மேல் எவ்வளவு பெரிய மரியாதை. 

அகத்தியனை  பற்றி அன்றைக்கே நான் சொல்லிவிட்டேன். அகத்தியன் யார்? என்பதை பற்றி எல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பிரம்மாவின் பெரும் பாகத்தை (அதிகாரத்தை) அகத்தியன் கைக்குள் வைத்திருக்கிறேன். சிவபெருமான் அனைத்து தொழிலையும் அகத்தியனிடம் விட்டுவிட்டு அமைதியாக இருக்கிறார். விஷ்ணுவோ, "சகலதும் உன்னுடையது" என்று பத்திரமே எழுதிவிட்டு, கையை நீட்டிவிட்டார். ஆக, இந்த மூன்று தெய்வங்களின் மொத்த உருவமாகத்தான் அகத்தியன் நான் வந்திருக்கிறேன். அகத்தியனை எல்லோருமே சாதாரணமாக நினைக்கிறார்கள். ஏதோ தாடிக்கார கிழவன் என்றோ, அல்லது 4000 ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு முனிவன் என்றோ, லோபா முத்திரையுடன் காமத்துடன் உலாவருபவன் என்றெல்லாம் இன்றைக்கும் பேசப்படுகிறதடா. ஆனால், அப்படியல்ல. மூன்று தெய்வங்களின் மொத்த உருவத்தையும், அகத்தியன் நான் வாங்கியிருக்கிறேன். தற்புகழ்ச்சிக்காக, அகத்தியன் நான் இதை சொல்லவில்லை. அகத்தியன் யார் என்று இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை. 

அகத்தியன் சாதாரணமாக, அகம், மனதுக்குள்ளே நான் இருக்கிறேன். யார் யார் எனக்கு வேண்டியபவர் என்றோ, வேண்டாதவர் என்றோ என்பது அல்ல. எம் மனத்தாரும், எந்த குலத்தாரும், எந்த ஜாதியை சேர்ந்தவர்களும், எந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் அகத்தியன் கவலைப் பட்டதாக, வரலாறே கிடையாது. ஆனால், யார் ஒருவன், அகத்தியனை நம்பி, அடி, முடியுடன் விழுந்துவிட்டானோ, அவனை கடைசி வரை கை தூக்கி விடாமல் இருக்க மாட்டேன். பலமுறை யாம் உரைத்திருக்கிறேன், உங்களுகெல்லாம் தோளாக, தூணாக, இறக்கையாக, உல்லாசமாக உட்காரவைத்து, உச்சாணி கொம்பினிலே, ஊஞ்சல் கட்டி, உன்னை ஆட வைத்து வேடிக்கை பார்த்தால், மயில் இறகால், ஒரு விசிறி போல் உன்னை வீசிக்கொண்டிருப்பேன். அகத்தியனுக்கு இப்படி ஒரு கடுமையான தண்டனை என்று எண்ணாதே. என் குழந்தைகளுக்கு, நான் சீராட்டாமல், வேறு யாரடா சீராட்டுவார்கள். அந்த மாதிரி, அற்புதமான பாக்கியத்தை பெற்றவர்களடா, இங்குள்ள அத்தனை பேர்களும். என்னை மாபெரும் முனி என்று எண்ணாதே! நான் உள்ளத்திலும் குழந்தையடா. உங்களுக்கெல்லாம் ஏதாவது நன்றிக் கடன் செய்யவேண்டும் என்று ஆசை. அப்படி நீ என்ன அகத்தியனுக்கு செய்துவிட்டாய் என்று கேட்கலாம்? 

அந்தோ, அகத்தியனை முழுமையாக நம்பி, அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறார்களே, ஒவ்வொரு தொழிலையும், எதிர்காலத்தையே, அகத்தியனிடம் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்களே எல்லோரும். அவர்களுகெல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் நன்றி கடன் செய்ய வேண்டாமா?  அந்த நன்றி கடனாக இப்பொழுது முதல் அகத்தியன் யாம் சொல்கிறேன்,

இன்று முதல் உங்களுக்கு எல்லாம் ஒரு புனிதத்தை யாம் தரப்போகிறேன். ஆக காலையிலே சொன்னேன், அகத்தியன் மைந்தனை திட்டினேன். ஏனடா ராகுகாலத்தில் அகத்தியனை நினைக்க மறந்தாய் என்று சொன்னேன். அதல்ல. சில சமயம் கடிந்து கொள்வது உண்டு. பூனை எலியை கவ்வுவதற்கும், தன் குட்டியை கவ்வுவதற்கும், வித்யாசம் உண்டடா. என் மைந்தன் தவறு செய்யக் கூடாது என்பதற்காகத்தான், அவசரப்பட்டான், மணியை கொண்டான், நேரமாயிற்று என்று புலம்பினான். இவன் ஏன் இந்த சித்தன் நிலையிலிருந்து இறங்கி வந்தான் என்று எனக்குப் புரியவில்லை. பட படப்புக் கூடாது. இன்னும் பக்குவம் வரவேண்டும் என்பதற்காகத்தான், மண்டையில் ஒரு குட்டு குட்டினேன். அதுதான் உண்மை. ஆக அவன் வருத்தப்பட்டாலும் சரி, வருத்தப்படாவிட்டாலும் சரி, என் மைந்தனை பக்குவப்படுத்தி உட்கார வைக்கவேண்டும் என்பதற்காகவும் இன்னும் பல அரிய செய்திகளை அவன் வாயால், உங்களுக்கெல்லாம் அகத்தியன் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வழி முறையை எடுத்துச் சொன்னேன் காலையில். அவன் கோபப்பட்டாலும் பரவாயில்லை, அகத்தியன் கவலைப் படப் போவதில்லை, அவனும் கவலைப்பட மாட்டான் என்பதற்காகச் சொன்னேன். அது மட்டுமல்ல, சந்திர அஷ்டமம் யாருக்குமே, கிடையாது என்று சொன்னேன். சந்திர அஷ்டமம் உண்டாக்கியதெல்லாம் யாரடா? மனிதன்தானடா. இறைவன் என்றைக்கடா, சந்திரா அஷ்டமத்தை உண்டு பண்ணினான். ஆக, இறைவனுக்கேதடா சந்திர அஷ்டமம். அவர்கள் எப்படியும் போகட்டும், ஏன் ஊர் கதைக்கெல்லாம் போகிறாய் என்று சொல்லாதே. இந்த பேச்சு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.

ஆகவே வந்த காரியம் பார்த்துவிட்டு, அபிஷேகம், ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மங்களா சாசனம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரே நிமிடத்தில், 27 நட்சத்திரங்களும், தேவாதி தேவர்களும், நந்தி தேவரும், சிவன் பிரம்மா விஷ்ணு,போன்ற தெய்வங்களும், ஒரே இடத்தில் உட்கார்ந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மங்களாசாசனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனந்தமாக 12 திருமண் இட்டுக்கொண்டு, விஷ்ணு பவனி வருகிற காட்சி எப்படி இருக்கிறது என்று தெரியுமா? தன்னை தேடி முக்கண்ணன் வந்துவிட்டான், அகத்தியன் வந்துவிட்டான், பிரம்மாவும் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார். 17 சித்தர்களும் உட்கார்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம் நம்பி தாமரை கண்ணை விரித்துப் பார்க்கிறார், அவ்வளவு சந்தோஷம், அவன் கண்ணிலே பூத்துக் குலுங்குகிறதடா! அந்த அருமையான காற்று, அருமையான செய்தி, அருமையான மலை இங்கு தான் இறைவன் இருக்கிறான். அகத்தியன் உட்பட 18 சித்தர்களும் இங்கு தான் உட்கார்ந்திருக்கிறார்கள். 17 சித்தர்களும், முக்கண்ணனும் சேர்ந்திருக்கிற காட்சி, வேறு எங்கும் கிடைக்காது. இவர்களுக்குத்தான் கிடைக்கிறது. கண் திறந்து பார்க்க முடியாது. உங்கள் அனைவருக்குமே, உணர்ச்சி பூர்வமாக கண்ணை மூடி திறந்தால் போதும், உங்களுக்கு அந்த காட்சி கிடைக்கும் என்பதை அகத்தியன் யாம் அறிவேன். அத்தனை அற்புதமான காட்ச்சிகள் எல்லாம் உண்டு. ஏன் என்றால்,

இந்த நம்பியை பற்றிய மிகப் பெரிய வரலாறு உண்டு, நிறைய பேருக்கு தெரியாது. விஷ்ணு, எத்தனையோ அவதாரங்களை எடுத்தாலும், நம்பி அவதாரம் என்று ஒன்று உண்டு. அதோ, அஹோபில மடத்து நரசிம்மனே, ஒருவனே பல ரூபத்தில் இருப்பதை இங்கு தான் பார்க்கிறேன். விஷ்ணு ஒருவன் தான் அஹோபில நரசிம்மனாக அமர்ந்திருக்கிறான். சிங்க சொரூபமாக, தங்கப் பல்லக்கில் உட்கார்ந்து ஆனந்தப் படுவது போல, அவர் பக்கத்தில் அமர்ந்து அவர் பத்னி, அவர் காலை பிடித்துவிட்டுக் கொண்டு, நம்மை எல்லாம் ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த பாக்கியம் உங்களுக்கு மட்டுமல்ல, அகத்தியனுக்கும் கிடைத்திருக்கிறதடா! அகத்தியன்தான் வரச்சொன்னேன் என்றாலும் கூட, அகத்தியன் மேல் எத்தனை மதிப்பு அவர்களுக்கு. ஆக,மானிட ஜென்மங்களும் அகத்தியனை நம்புகிறார்கள். முத்தெய்வங்களும், அகத்தியனை நோக்கி வருவதெல்லாம், யான் இவ்வளவு பாக்கியம் பெற்றவனாகி, யாம் பெற்ற இன்பம் உங்களுக்கு தெரியவேண்டாமா? அந்த பாக்கியத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காகத் தான், ஆதரவோடு, கனிவோடு உங்களை எல்லாம் இங்கு வரச் சொன்னேன். இந்த அருமையான நேரத்திலே, ஆனந்தமான நேரத்திலே, உங்கள் அத்தனை பேர்களுக்கும், தேவ லோகத்தில் இருந்தால் என்ன சுகம் கிடைக்கும், என்ன மரியாதை கிடைக்கும், என்ன ஆனந்தம் கிடைக்குமோ, அந்த ஆனந்தத்தை அகத்தியன் யாம் கண்டிப்பாகத் தருவேன். அதுமட்டுமல்ல, அருகிலுள்ள சித்தர்களை பற்றி சொன்னால், சித்தர்கள் யாரடா? ஜமதக்னி, விஸ்வாமித்ரர், துர்வாசர் போன்ற முனிவர்களும், இன்னும் முக்கியமான பல முனிவர்கள் எல்லாம் இங்கு வந்து இந்த புளிய மரத்தடியில் அமர்ந்து இறைவனின் இடத்தில் ஆனந்தப் பட்டு, ஒன்று கூடி, ஒரு பட்டம் அளிப்பு விழா போல, எல்லோரும் கூடி பேசி கலந்து கொண்டிருப்பது போல, அவரவர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் சித்தர்களாக புற்றுக்குள்ளிலிருந்து வெளியே வந்தவர்கள். மூன்றடி உயரம் தான் இருக்கும் அந்த புற்று, ஆனால் அத்தனை பேர்களும், தங்களை சித்தர்களாக மாற்றிக் கொண்டு அதோ அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள்.  மங்களாசாசனம் முடிந்து விட்டது, நம்பி பெருமான் எல்லோருக்கும் ஆசி வழங்க, சிவபெருமான் இதோ பார்வதியுடன் அமர்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒளிப்படத்தில் காண்பிப்பது போல் தோன்றுகிறதல்லவா! அகத்தியன் வார்த்தை அலங்காரத்துக்காக இதை சொல்லவில்லை. நடக்க கூடியதை அப்படியே சொல்லுகிறேனடா! கதவு மூடி இருப்பதால், உங்கள் புறக்கண்ணுக்குத் தெரியாது, அகக்கண்ணுக்கு, கண்ணை மூடி திறந்து பார்த்தால், நம்பிமலைவாசன் ஆனந்தப் பட்டுக்கொண்டிருக்கிறார், லக்ஷ்மியோடு. முக்கண்ணனே வந்து வணங்குகிறானே அதுதாண்டா ஆச்சரியம். மேலும் அஹோபிலமே வந்து வணங்குகிற இந்த பாக்கியம் யாருக்கடா கிடைக்கும். சித்தர்கள் 17 பேரும் அவர்களை வணங்கிவிட்டு வருகிறார்கள். 

புற்றை பற்றி சொல்லும் போது, மிகப் பெரிய ஆச்சரியமான சம்பவம் இப்பொழுதுதான் நடந்திருக்கிறது. நானே எதிர் பார்க்கவில்லை. 

சித்தன் அருள் ........... வரும் சனிக்கிழமை அன்று தொடரும்!

Wednesday 23 October 2013

சித்தன் அருள் ...... பெற்றால் தான் தகப்பனா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பல முறை யோசித்தபின், இதுவும் ஒரு சிறந்த வழி என்று தோன்றியதினால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். எனது நண்பர் மிக பெருந்தன்மையாக என்னிடம் பகிர்ந்து கொண்ட, நாடியில் வந்த விஷயங்களைத்தான், அகத்தியர் அனுமதியுடன் உங்கள் அனைவருடன் அடியேன் "சித்தன் அருளில்" பகிர்ந்து கொள்கிறேன். மனிதனாக பிறந்தவர் இறந்து தான் ஆகவேண்டும். இறந்த பின் அவருக்கான சடங்குகளை, அவரவர் குல வழக்கப்படி செய்துதான் ஆகவேண்டும். 

எனது நண்பரின் மறைந்த திதி நேற்று (22/10/2013) வந்து சென்றது. நான் கேள்விப்பட்டவரையில் அவருக்கான வருடாந்திர திதி சடங்குகள் எதுவுமே அவர் குடும்பத்தாரால் செய்யப்படவில்லை என்று செய்தி. என் வரையில், அவர் ஞாபகர்த்தமாக ஒரு முருகர் கோவிலில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்ய முடிந்தது. அவர் மறைந்த ஆங்கில தியதி வரும் சனிக்கிழமை (26/10/2013) அன்று வருகிறது.

வாழ்க்கையின் உலக இன்பங்களில் திளைத்து செல்லும் நமக்கு, அன்மீகப்பாதையில், சித்தர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆசிகளை வாங்கித்தந்து , பலரின் வாழ்க்கையை செப்பனிடுவதே தன் கடமை என்று வாழ்ந்து சென்ற அந்த புண்ணிய ஆத்மாவுக்கு, நினைவார்த்தமாக நாம் அனைவரும் ஏதேனும் ஒரு நல்லது செய்ய வேண்டும். இத்தனை அருளை வாரி வழங்கிய அந்த ஆத்மாவின் நினைவாக, ஒருவருக்கேனும் அன்றய தினம் (26/10/2013) "அன்னதானம்" செய்யுங்கள். அது போதும். இதுவே என் வேண்டுதல்.

இந்த விஷயத்தை கூட உங்களிடம் பகிர்ந்துகொள்ள அனுமதி அளித்தது அகத்தியப் பெருமான்தான்.

இதை நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆகவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது! எனக்கு கிடைத்த செய்தியை பகிர்ந்து கொள்கிற ஒரு செயல் மட்டும் தான்.

எல்லோரும் அவர் அருளை பெற்று நலமுடன் வாழ பிரார்த்தித்துக் கொண்டு..........


கார்த்திகேயன்

Friday 18 October 2013

கல்லார் அகத்தியர் ஞானபீடம் - அகத்தியர் குரு பூசையும் சில தகவல்களும்!

வணக்கம்!

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவமுருகர் ஞான பீடத்திற்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சென்று வந்தார். அவர் அங்கிருந்து திரட்டிக் கொண்டு வந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்திய பெருமான் ஜீவ நாடியில் வந்து உத்தரவிட்டதின் பேரில், கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவமுருகர் ஞான பீடத்தில் 22/12/2013, ஞாயிற்றுகிழமை அன்று ஸ்ரீ அகத்தியர் குருபூசை விழாவும், "சர்வ தோஷ நிவாரண மகா யாகம்" ஒன்றையும், தவத்திரு ஸ்ரீ தங்கராசன் சுவாமிகள் தலைமையில் நடத்த நிச்சயித்துள்ளார்கள். அன்றைய தினம் அகத்தியர், மற்ற சித்தர்களுடன் வந்திருந்து யாகத்தை மேற்பார்வையிட்டு, அடியவர்களை ஆசிர்வதிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

"சித்தன் அருள்" வலைப்பூவை வாசித்து வரும் அகத்தியர் அடியவர் அனைவருக்காகவும் ஒரு அழைப்பிதழை அனுப்பித் தந்து வெளியிடச் சொன்னார்கள். அதை கீழே தருகிறேன்.     



மேலும் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது புதன் கிழமையும், சனிக்கிழமையும் நாடி வாசிக்க அகத்தியர் தயை கூர்ந்து அனுமதித்துள்ளாராம்.
  • நவம்பர் கடைசி வரை தற்போது நாடி வாசிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளதாம். டிசம்பரில் நாடி வாசிக்க வேண்டாம் என்று உத்தரவாம். மறுபடியும் தை மாதத்தில் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
  • அதலால், தற்போது நவம்பர் மாத கடைசி வரை உள்ள தியதிக்கு மட்டும் தான் முன் பதிவு செய்கிறார்களாம்.
  • ஒரு குழுவில் எத்தனை பேர்கள் சென்றாலும், நாடி வாசிக்கும் போது, ஒருவர் மட்டும்தான் அவர் முன் அமரலாமாம்.
  • சூரியன் அஸ்தமனம் ஆகிவிட்டால், நாடி படிக்கப் படுவதில்லை.

யாகத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் "9842550987" என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு மேல் விவரங்களை அறிந்து கொள்ளவும். எல்லோரும் சென்று அகத்திய பெருமான் அருள் பெற்று நலமாக வாழ பிரார்த்தித்துக் கொண்டு, 

கார்த்திகேயன்.

Thursday 17 October 2013

சித்தன் அருள் - 144 - நம்பிமலை!

ஆக, எது நித்தியம், எது அநித்தியம் என்பதை எல்லாம், எத்தனையோ பேர்களுக்குத் தெரிந்தாலும், தெரிந்தே செய்கின்ற பாபங்கள் பலப் பல. அந்தப் பாபங்கள் எத்தனை தெரிந்தே செய்திருந்தாலும், இங்கு உள்ளோர் ​​அனைவர், அத்தனை பேருக்கும், அதிலிருந்து விடுதலை பெற வைக்கிறேன். அது தான் இன்று முக்கியமான செய்தி. யார் யார் என்னென்ன பாபங்களை, தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, கோபத்திலோ, ஆத்திரத்திலோ, ஆக, யார் சொல்லை கேட்டோ, தன்னிலை மறந்தோ, ஏதேனும் செய்திருந்தால், அத்தனை பாபங்களையும், இந்த புனித நதியில் அகத்தியன் தாரை வார்த்துக் கொடுக்கிறேன். ஆக, இன்றுமுதல் இங்குள்ள அத்தனை பேர்களும் இந்த நிமிடம் முதல் புண்ணியவான்களாக மாறிவிட்டார்கள். 

அன்றொரு நாள் குளிக்கச் சொன்னன். சொன்னபோது எதற்கு என்று எதிரே கையை காட்டி "நீராடி விட்டு வந்தால் போதுமே" என்றான். நானே உங்கள் அனைவருக்கும் இந்த புனித நீரை கொண்டு நீராடி வைக்கிறேன். ஆக, அகத்தியன் நீராடி வைத்த காட்சி இது வரைக்கும் கேட்டதில்லை. என்றைக்காவது அகத்தியன் தனக்குத் தானே நீராடிக் கொண்டதாக வரலாறே இல்லை. அகத்தியனுக்கு நீராட  வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அகத்தியன் புனித நீரை கொண்டு ஆட்டியதெல்லாம், எம்பெருமான் முக்கண்ணனுக்கும், நம்பி திருமலைக்கும் தான் நீராட்டியிருக்கிறேன். இதே நாளில், இதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில், இங்கு உள்ளுக்குள் அமர்ந்திருக்கின்ற நம்பி பெருமாளுக்கு அகத்தியன் நீராடிக் கொண்டு இருக்கிறேன். அது யாருக்கும் தெரியாது. கண் திறந்து கண் மூடிப்  பார்த்தால்,அந்த நம்பிக்கே பாலபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் அகத்தியன் செய்து கொண்டிருக்கிறேன். ஆக அதையும் செய்துகொண்டு உனக்கும் வாக்கு தருகிறேனடா! அந்த புனித மிகு நீர் அருகிலே ஓடுகிறதே, ஆனந்தமாக சலசல என்ற சப்தத்தோடு. அந்த சப்தத்தை கணக்கிட்டால், 9 வகையான ராகங்கள் கிடைக்கும். அந்த ஒன்பது வகை ராகங்களை கொண்டுதான் அந்த நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த புனித நீரை அகத்தியன் கையிலே எடுத்து, இங்குள்ள அத்தனை பேருக்கும் நீராடல் போல தெளித்திருக்கிறேன். ஆகவே, சற்று முன் இவன் சொல்லியிருப்பான். 2 நாழிகைக்கு முன்பாக செவ்வானத்திலிருந்து சிறு சிறு துளி நீர் விழுந்தது. மழை எப்படி விழுந்தது என்று எல்லோரும் எட்டிப்பார்த்தார்கள். அந்த நீர், அகத்தியன் தெளித்த நீரடா. அந்த நீரை தெளித்து, உங்களை எல்லாம் புண்ணியவான்களாக ஆக்கிவிட்டுத்தான் அகத்தியன் அழைத்து வந்திருக்கிறேன். சில காதம் நடக்கச்சொன்னேன். மலையில் கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காகவல்ல. இப்படிப்பட்ட மலைகளிலும், காடுகளிலும் தான் சித்தர்கள், காலாற நடந்து போய் கொண்டிருக்கிறார்கள். சற்று முன் அகத்தியனை  நோக்கி ஒரு சித்தன் வந்தான். அந்த சித்தன் பெருவிரலாலேயே நடப்பான். அப்படி பெருவிரலால் உனக்கு முன் நடந்து வந்தது யாருக்குமே தெரியாது. அவன் தாண்டா, உங்களை கை தூக்கி அழைத்து வந்து, உட்கார வைத்திருக்கிறான். அவன் காலாலே நடந்ததில்லை. கால் பெரு விரலாலே நடந்தவன். அவனும் இதோ அமர்ந்திருக்கிறான் பக்கத்திலே. அன்னவன் அற்புதமான சித்தன். ஆனந்தமான சித்தன். அவன அகத்தியனுக்கு மிக வேண்டியவன். அவன் யார் என்று பின்னர் சொல்கிறேன். அந்த சித்தன்தான் உங்களை எல்லாம் தட்டிக் கொடுத்து, காற்றாக, மரத்தின் இலையாக, சந்தோஷத்தை விட்டுக் கொடுத்து, கை பிடித்து அழைத்து வந்து உட்கார வைத்திருக்கிறான். அகத்தியனை சுற்றி 17 சித்தர்கள் இருக்கிறார்கள். இன்னும் பலரும் வந்து கொண்டு இருக்கிற நேரம். இந்த காட்சி எத்தனை பேர்களுக்கு கிடைக்கும் என்று எண்ணுகிறாய். எத்தனை வித புண்ணியங்கள் பண்ணியிருந்தால், இந்த காட்சி கிடைத்திருக்கும் தெரியுமா? ஆகவே, மனித உள்ளங்கள் எல்லாமே வித்யாசம் இல்லாமல் இருக்கவேண்டும்.

சற்று முன் செப்பினான் ஒருவன். நான் வேறு குலத்தை சேர்ந்தவன். எனக்கு எப்படி இந்த பாக்கியம் என்று. "தேவர்" குலம் என்ன சாதாரண குலமா? அந்த குலத்தை பற்றிய வரலாறு உனக்கு தெரியாது. மிகப் பெரிய வரலாறு உண்டு. உந்தன் முன்னோர்கள் எல்லாம் படிப்படியாக அன்னதானம் பல செய்து, இதயங்களை குளிரவைத்து, ஏராளமான உயிர்களுகெல்லாம் உயிர் கொடுத்து வாழ்ந்த குடும்பம் அது. முன் ஜென்ம தாத்தாக்கள், பாட்டிக்கள் என்னென்ன அன்னதானங்கள் எல்லாம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று அகத்தியன் பெரும் கணக்கை எடுத்துச் சொல்வேன். அதற்கெல்லாம் இப்பொழுது நேரம் இல்லை. ஆகவே, மனித நேயம் தான் இங்கு முக்கியம். அகத்தியன் என்றைக்காவது சாதி வேறுபாடு பார்த்ததுண்டா? வேடர் குலத்தை சேர்ந்த கண்ணப்பனுக்கு அபய ஹஸ்தம் கொடுத்து முக்கண்ணன் மோக்ஷம் தரவில்லையா? ஆகவே, இறைவனுக்கும், சித்தர்களுக்கும் ஜாதி மதம் ஏதும் இல்லையடா! ஆத்மா ஒன்றுதான் முக்கியம். அந்த ஆத்மா பரிசுத்தமாக இருக்கவே, அகத்தியன் இங்கு அழைத்து வந்தேன். முன்னோர் சமயத்தில் இவர்கள் எல்லாம், அகத்தியன் போல சித்தர்களை, சிவிகையில் தூக்கி வந்து கீழே இறக்கி, நம்பி தனை தரிசனம் செய்து விட்டு, பின் அதே சிவிகையில் தூக்கிவந்து கீழே இறக்கிய காட்ச்சிகள் எல்லாம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த சிவிகையை தூக்கி வந்தவன் பெரும் புண்ணியவானாக, வானத்தில் இன்று நட்சத்திரமாக நின்று கொண்டு இருக்கிறான் என்பதெல்லாம் பெரும் கதையடா.

ஆக, இந்த நம்பி கோயிலில் இன்னொரு விஷயமடா! இதோ அற்புதமான காட்சி அகத்தியனுக்கு தெரிகிறது. சற்று கண் மூடிப் பார்த்தால், இந்த மலையின்  தோற்றமும், சுற்றுப்புற சூழ்நிலைகளும், அருவி நீரோட்டமும் எல்லாம், அஹோபிலத்தை பற்றியே நோக்கி எண்ணத்தோன்றும். அஹோபிலம் சென்றவனுக்குத்தான் அந்த அருமை தெரியும். அதே அஹோபிலத்து நரசிம்ஹன் இங்கு பக்கத்தில் அமர்ந்து அகத்தியன் என்ன வாய் திறந்து சொல்லப் போகிறான் என்று வாய் மூடி கேட்கிறானே, இதை விட அகத்தியனுக்கு வேறென்னடா பெருமை வேண்டும். நரசிம்ஹனே இங்கு வந்து என் வார்த்தையை கேட்கிறான் என்றால் அவனை எங்கு வைக்க வேண்டும். அவனுக்கு நான் சேவை செய்திருக்கிறேன். அவனுக்காக அன்னதானம் செய்திருக்கிறேன். கோவில் மணி அடித்திருக்கிறேன். அவனுக்கு எத்தனையோ விதமான சேவை செய்து, கை கட்டி வாய் பொத்தி, அவனிடம், "எப்படி இரண்யவதம் செய்தாய்?" என்று கேட்டிருக்கிறேன்.  நரசிம்ஹனே, இரண்ய வதத்தை பற்றி அன்று அஹோபிலத்தில் கருணை கூர்ந்து காட்சி கொடுத்தான். எல்லோரும் சொல்வார்கள், அகத்தியனுக்கு சிவபெருமான் திருமண காட்சி ஒன்று தான் என்று மிகைபடுத்துகிறார்களடா. அகத்தியனுக்கு, நரசிம்கனே அன்றைக்கு ஒருநாள் ஹிரண்ய வதத்தையே கண் கொள்ளக் காட்ச்சியாய் காட்டினான். அந்த பெரும் புண்ணியவான், பெரும் கடவுள் இன்றைக்கு என் பக்கத்தில் நன்றியுடன்அமர்ந்துகொண்டு இருக்கிறான்.  அவனும் காது கொடுத்து கேட்கிறான், அகத்தியன் என்ன சொல்லப் போகிறான் என்று. அகோபில நரசிம்கனே இங்கு வந்து அமர்ந்திருக்கிற நேரமடா! நீ அஹோபிலத்துக்குச் சென்று நரசிம்ஹனை தரிசிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இந்த இடத்தில் ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு, அன்னவனை நினைத்துக் கொண்டு பார்த்தால் உன் கண்ணுக்கு அந்த நரசிம்ஹர் காட்சி தருவார். அந்த நரசிம்ஹரை அகத்தியன் யான் கேட்கிறேன். அவரும் புன்னகை பூக்கிறார். ஆக, புன்னகை பூக்கிறார் என்றால் காட்சி தரப்போகிறார் என்று அர்த்தம். ஆக, இங்குள்ள ஏழு பேருக்கும், அவரை நினைத்துப் பார்த்தால், அஹோபில நரசிம்ஹனே அகத்தியனை நோக்கி வந்திருக்கிற காலமடா. ஏன் அஹோபிலத்திலிருந்து இங்கு வந்தான் என்று கேட்டால், இன்று தான் மிக முக்கியமான நாள். நம்பியும், அஹோபில நரசிம்ஹனும் ஒன்று தானே. அந்த நம்பிக்கு அகத்தியன் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், தேன் அபிஷேகம், இது போன்ற 28 அபிஷேகங்களை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நான் நடத்துகின்ற அபிஷேக காட்சி இருவரும் கண்டு கொள்ளட்டுமே என்று தான் அவர்கள் முன் அமர்ந்திருக்கிறேன். மனிதர்கள் தெய்வத்தை பார்ப்பது கடினம். தெய்வம் மனிதர்களை பார்ப்பது மிக சுலபம். தெய்வ தரிசனம் என்பது ஒரு சிலருக்குத்தான் கிடைக்குமே தவிர, மற்றவர்களுக்கு கிடைக்காது. ஆனால் அந்த விதியையும் மீறி என் மைந்தர்களுக்கு அகத்தியன் சண்டை போட்டாவது காட்டுவேன். ஏன் என்றால், ஒரு முறை தெய்வ தரிசனம் பெற்றவன், மறு முறை உயிரோடு இருப்பதில்லை என்பது நியதி, ஒரு கணக்கு. ஏற்கனவே ஒரு முறை இதை பற்றி சொன்ன போது, தெய்வத்தை ஒளி வடிவில் காட்டியவன் மறு நாள் உயிரோடு இருந்ததில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு ஆங்கில படத்தை எடுத்தவனை பற்றி கூறியிருக்கிறேன்.  ஆனால் பலமுறை தெய்வ தரிசனத்தை அகத்தியன் மைந்தனுக்கு நான் காட்டியிருக்கிறேன்.  ஆகா, மைந்தனுக்குத்தான் தரிசனமா, எங்களுக்கு எல்லாம் கிடையாதா என்று உரிமையோடு போராடி வந்திருக்கிறார்கள் இவர்கள் எல்லாம். அந்த உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஏன் என்றால், இங்கு இருக்கிற அத்தனை பேர்களுமே அகத்தியனுக்கு வேண்டியவர்கள். அகத்தியனை, அங்கமெல்லாம் பாராட்டி, சீராட்டி வளர்த்தவர்கள். அகத்தியனை தம் கை குழந்தையாக கூட பாராட்டியிருக்கிறார்கள். இப்பொழுதல்ல முன் ஜென்மத்தில். ஆகவே, அந்த நன்றி கடன் அகத்தியன் செய்ய வேண்டாமா? அப்படிப்பட்டவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை தரவேண்டாமா? என்பதை சொல்லத்தான், இந்த நல்ல நாளில், நம்பிக்கு, சனிக்கிழமை, அனுஷம் நட்சத்திரத்தில்.......... அந்த நட்சத்திரம் கூட இந்த நல்ல நாளில் அங்கே பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. 27 நட்ச்சத்திரமும், 27 பொற்குடங்களை எடுத்து நம்பிக்கு ஆராதனை செய்து வருகிற காலமடா. அகத்தியன் மட்டுமா அபிஷேகம் செய்கிறேன்?   27 நட்சத்திரமும் ஆராதனை செய்து கொண்டிருக்கிற அருமையான காலமடா! இப்படிப்பட்ட நேரத்தில் தான் உங்கள் எல்லோரையும் வர வைத்து, அவன் சன்னதி முன் அமரவைத்து, நம்பிக்கு அபிஷேகம் செய்கிற அந்த கண் கொள்ளா காட்ச்சியை, புண்ணியத்தை பெறட்டும் என்பதற்காகத்தான் உங்களையெல்லாம் வரவழைத்தேன். அது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ செய்திகளை சொல்ல வேண்டும். இதோ என்னப்பன் முக்கண்ணனும் கூட வந்து கொண்டிருப்பதாக தகவல். ஒளிப்படத்தில் கேட்பதுபோல் இருக்கிறதல்லவா. இதை நம்பலாமா, வேண்டாமா என்று யோசிக்கலாமா? 

எங்காவது நம்பி ஆலயத்தில் சிவ பெருமான் வந்து அமர்ந்ததாக கேள்விப்பட்டிருக்கிறாயா? இதோ இங்கு ஒரு புதிய வரலாறு இன்று எழுதப்பட்டிருக்கிறது.

சித்தன் அருள் ............ தொடரும்!​

Friday 11 October 2013

சித்தன் அருள் - கல்லாரில் ஒரு அனுபவம்!


வணக்கம்!

சித்தன் அருள் வலைப்பூவில் வரும் அகத்தியப் பெருமானின் அருளை வாசித்த பலரும், தற்போது "கல்லார் ஸ்ரீ அகத்தியர் தவமுருகர் ஞானபீடத்தில்" திரு தவயோகி தங்கரசன் சுவாமிகள் அவர்களை சந்தித்து, அகத்தியரின் அருள் பெறுகின்றனர். அப்படி சமீபத்தில் அருள் பெற்ற ஒரு அகத்தியர் அடியவர் சித்தன் அருளுக்காக பகிர்ந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்கள் எல்லோருடன்  பகிர்ந்து கொள்கிறேன். அனுபவத்துக்குப் போவோம்.

வணக்கம்!

"அகத்தியரே பெரும் பேற்றை அடைந்தோராவார் 
அம்மம்மா வெகு தெளிவு அவர் வாக்குந்தான்!
அகத்திலுறை பொருளெல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர் வாக்கு செவி கேட்க அருமையாகும்!
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்!
அம்மலையும்  அகத்தியரின் மலையுமாகும்!
அகத்தியரின் அடையாளம் பொதிகை மேரு
அவர் மனது மவரைப் போற் பெரியோர் உண்டோ!"
காகபுசுண்டர்

பல வாரங்களாக சித்தன் அருளை படித்து வந்த நான், அதில் வரும் பல விஷயங்களை என் சந்தேகங்களுக்கு உடனடி பதில்களாக உணரத் தொடங்கினேன். ஒவ்வொரு வாரமும் ஒரு பதில் கிடைக்கும். இந்த வாரமும் ஒரு பதில் கிடைத்தது "ஒரு இடம் செல்வதற்கு நம்மை அறியாமல் தவிர்க்க முடியாத தாமதங்கள் நடந்தால் அது நம் நன்மைக்கே"!

நீண்ட நாள் குறை ஒன்று இருந்தது. அக்குறைக்கு பல இடத்தில் நாடி சோதிடம் பார்த்து பரிகாரங்கள் செய்திருக்கிறேன். ஆனால் அகத்தியர் ஜீவநாடி மூலம் பதில் வரும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை! அவர்களிடமிருந்து அழைப்பு வந்து விட்டால், என்ன நேர்ந்தாலும் அவர்கள் செயலே என்பது கண்கூடாக ஒரு படம் பார்ப்பது போல காட்டினார்கள், நம் பெரியவர்கள்! 

நீண்ட யோசனைக்குப் பின் ஒரு நல்ல விரத நாளாக தேர்ந்தெடுத்து, இறைவன் மேல் பாரத்தை போட்டு, சித்தனருளில் இருக்கும் கல்லார் ஞான பீடத்தின் தொலைபேசி எண் எடுத்து, என் நெருங்கியவரிடம் கொடுத்து பேசசொன்னேன். எல்லாம் அவர்கள் கிருபை என்றே சொல்லலாம். கூடிய சீக்கிரமே நாடி படிக்க நாள் குறித்து கொடுத்தது தான் முதல் ஆச்சர்யம்! ஆனால் அன்று முதல், அதுவரை தெரிந்து செய்த பாவங்கள் எல்லாம் என் தூக்கத்தை கெடுத்தன! உண்மையில் எவ்வளவு பெரிய பாவி என்று இந்த குறுகிய காலத்தில் என்னையே நான் அறிந்தேன்! சரி, தெரியாமல் செய்த பாவத்திற்கு ஏதோ விதத்தில் மன்னிப்பு உண்டு. ஆனால் வினை பயன்கள் ஜென்மம் தோறும் தொடரும் என்பதை சித்தன் அருள் மூலம் படித்திருக்கிறேன். இதை எல்லாம் வைத்து பார்க்கையில் அகத்தியர் எனக்கெல்லாம் தீர்வு சொல்வாரோ? என்ற பயம் என்னை சூழ்ந்தது!

நினைத்த பொழுதெல்லாம் ஜெபம், பசுவுக்கு பழம் பசியாரக் கொடுப்பது, என்று எனக்கு தெரிந்து, கற்ற சில பரிகாரங்களை செய்து வந்தேன். செல்ல வேண்டிய நாள் நெருங்க நெருங்க பல இரவுகள் தூக்கம் இழந்தது தான் உண்மை.. "அவர் (அகத்தியப் பெருமான்) நன்றாக கடிந்து கொண்டால் கூட பரவாயில்லை ஆனால் உதவ மாட்டேன் என்று சொன்னால் எங்கு செல்வது, எல்லாம் முடிந்துவிடுமே" என்ற பயம்.

பலமுறை அகத்தியர் கோவில் செல்கிற ஒரு நண்பரிடம் இந்த உணர்வுகளையே சொல்லிக் கொண்டிருந்தேன். பாவம் அவருக்கும் விட்டால் போதும் என்பது போல இருந்திருக்கும் போல. 

"பயம் இருந்தால் போகாதே" என்று பதில் சொல்வார். மீண்டும் கவலை எட்டி பார்க்க தைரியத்தை வரவழைத்து கொண்டு அடுத்த வேலையை பார்த்து கொண்டிருந்தேன்!

பிரயாணத்துக்கு எதிர்பார்த்த நாளும் வந்தது. ரயிலில் டிகெட் கிடைக்காததால் பஸ்ஸில் செல்லலாம் என்று முடிவாகியது. அங்கே இருக்கும் சிறு குழந்தைகளுக்காக இனிப்பு காரம் எல்லாம் வாங்கி, அந்த நண்பரிடம் தெரிவுபடுத்தி கிளம்பலாம் என்றிருந்தேன். தொடர்பு கொண்ட போது அவர் "அகத்தியருக்கு என்ன கொண்டு போகிறாய்?" என்று ஒரே கேள்வி கேட்டார்!

பதில் ஒன்றும் வரவில்லை. பிறகு அவரே வஸ்திரம், வெத்தலை, பாக்கு, பழங்கள், சாம்பிராணி, பன்னீர் போன்றவை வாங்கிக்கொள் என்றார். இரவில் கடைகளில் ஒன்றும் கிடைக்காதலால் பஸ் ஏறிவிட்டோம்.

ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிய பேருந்து மழையால் ஆமை வேகத்தில் சென்றது. நான்கு மணிக்கு கோயம்பத்தூர் செல்ல வேண்டிய வண்டி ஆறு மணிக்கு தான் சென்றது. நல்லது! கடைகள் திறக்கும் அதற்குள், என்று மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்தில் சென்றோம். 

அங்கே ஒரே கடையில், மாலை மற்றும் இதர சாமான்கள் கிடைத்தது பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. அங்கே வண்டிகளை விசாரித்தால் ஆறு கிலோமீடர் தூரம் இருக்கும் கல்லாருக்கு 600 ரூபாய் கேட்டார்கள். என்ன செய்வது என்று நிற்கையில் திடீர் என்று ஒரு ஆட்டோ ஓட்டுனர் அருகில் வந்து அவர் வண்டியில் "சீக்கிரம் ஏறுங்கள் என்றார்" நான் போகும் இடத்தை சொன்னேன் "நூறு ரூபாய் கொடுங்கள் முதலில் வண்டியில் ஏறுங்கள் என்று கூறினார். மணி சுமார் காலை எட்டு மணி இருக்கும். இடம் தெரியும் என்று கூறிய ஆட்டோ ஓட்டுனர் தெரியாமல் ராமகிருஷ்ணர் மடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லாததால் விஷயம் ஒன்றும் கேட்காமல் குளித்துவிடலாம் என்று தீர்மானித்து சென்றேன். அங்கே ஏதோ ஆறு ஓடுகிறது குளிக்கலாம், என்று ஒருவர் பதிவு இட்டிருப்பதை அறிந்து ஆவலுடன் சென்றேன். ஆனால் அங்கே ஸ்நானம் செய்ய முடியவில்லை ஏனென்றால் ஆறு ஒன்றும் தென்படவில்லை. மனதிற்குள் ஒரு சந்தேகம் "அவர் கூறினாரே! இது தான் அந்த இடமா?" என்று. என் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தார் என்னுடன் வந்தவர். இடம் மாறி வந்துவிட்டதை அறிந்து, பிறகு வேகமாக அகத்தியர் பீடம் நோக்கி சென்றோம். தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே "வந்தாயா ஒரு வழியாக" என்று கேட்பது போல இருந்தது அந்த இடம். மணி ஒன்பது அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது. கூட வந்தவர் ஸ்நானம் செய்தவுடன் அறையில் உட்கார்ந்து ஒரு சில ஜெபம், ஸ்லோகம் எல்லாம் படிக்கலானேன். அகத்தியருக்கு என வாங்கி சென்ற மாலை எதிர் பார்த்ததை போல அவர் கழுத்திலிருந்து பாதம் வரை சூழ்ந்து நின்றது. அதுவே எனக்கு ஒரு விதமான அமைதியை தந்தது. சரியான விதத்தில் தான் நம் செயல்கள் அமைந்துள்ளது என்று உணர முடிந்தது..

கூட்டம் அதிகமாவே இருந்தது. சற்று நேரம் கழித்து மாதாஜி தியான அறையிலிருந்து வெளியே வந்தார். பெயர்களை கூப்பிடும் பொழுது எங்கள் பெயரை சொன்னோம். "அடேடே இப்போ தான் கூப்பிட்டேன் நீங்கள் வரவில்லை என்று அடுத்த பதிவுகளை உங்களுக்கு முன்னரே மாற்றி போட்டுவிட்டேன்" என்றார். எங்கள் பெயரை பின்பு எழுதி கொண்டார். பதினாராவது பதிவு! 

சரி நல்லது நீண்ட நேரம் ஜெபம் செய்யுவோம் என்று உட்கார்ந்திருந்தோம்.

ஒரு 11 மணி வாக்கில் அங்கே வசிக்கும் ஒருவரிடம் பேச்சு கொடுக்கையில் அங்கே ஏக முக ருத்ராக்ஷம் எப்படி வந்தது என்பதை சொன்னார்.  நம்மை அறியாமல் அந்த இடத்தை வணங்க தோன்றியது. அவரிடம் என் மனதில் இருக்கும் ஐய்யத்தை கேட்டேன். 

"தெரிந்து பாவம் செய்தால் அகத்தியர் உதவுவாரா?"

அவர் சொன்ன பதில் மிகவும் அற்புதமாக இருந்தது 

"பஞ்சமாபாவங்கள் செய்தாலும் மன்னிக்கும், பத்து மடங்கு, தாய் உள்ளாம் கொண்டவர் அகத்தியர்!" என்று கூறினார்! 

பேசிக்கொண்டே தவத்தில் இருக்கும் முருகனை பார்த்தால் "அட நம்ப முருகனா! சேட்டை ஒண்ணும் பண்ணாமல் இப்படி இருக்காரே" என்று நினைத்ததுதான் தாமதம்! அடுத்த சில நொடிகளில் அந்த பெரியவரே

"இன்று கூட்டம் அதிகம்" என்றார்.

நான் "இரவு ஆகிவிடும் போல இருக்கே" என்றேன். 

அதற்கு அவர் "இல்லை இல்லை அங்கே சூரியன் அஸ்தமனம் ஆனால் அகத்தியர் நிறுத்து என்று கூறுவார். அதற்கு மேல் ஒருவரி படிக்க முடியாது" என்றார். சப்த நாடியும் அடங்கி விட்டது எனக்கு! அங்கே இருக்கும் குளிர் நடுக்கலுக்கும், மழைக்கும், சூரியன் நான்கு மணிக்கே மறைவார் போலிருந்தது! 

"சூரியன் அஸ்தமனம் என்றால் எப்பொழுது?" என்று கேட்டேன். 

அவர் "அது எப்போவேண்டும் என்றாலும், நான்கு, ஐந்து இல்லை ஆறு மணி கூட ஆகலாம்!" என்றார். 

"இதுவரை இன்று படித்ததே ஆறு பேருக்கு தான்!!! யாரும் ஒன்றும் செய்ய முடியாது. கெஞ்சினாலும், அழுதாலும் அவர் வைக்கிற கணக்கு தான். மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அஸ்தமித்தால் கிளம்பவேண்டியது தான்! பெயரை முன்னே படித்தும் பாக்கியம் கிட்டவில்லையே! இது தெரியாமல் பொறுமையாக வந்தோமே என்று மனதிற்குள் குமுறல்! "முருகா என்னை காப்பாற்று!" என்று ஒரு ஆறு, ஏழு முறை சஷ்டி கவசம் சொல்லலானேன், ஹனுமன் சாலிசா , அகத்தியர் அகண்ட ஜெபம் என்று ஒரே மூச்சில் நடந்தது. அனைவரையும் சாப்பிட அழைத்தார்கள். என்னால் செல்ல முடியவில்லை. மனதளவில் ரொம்ப குழம்பி போயிருந்தேன். மதியம் இரண்டு மணி அளவில் அமைதியே உருவான திரு தவயோகி சுவாமிகள் வெளியே வந்தார். "பசியாரிவிட்டீர்களா?" என்று கேட்டார் 

"இல்லை" என்று கூறினேன்.

"நான் பசியாரிவிட்டு வருகிறேன் நீங்களும் செல்லுங்கள்" என்றார். அவர் வார்த்தைகளில் ஒரு அமைதி நிலவியது!! பிறகு மாதாஜி எங்களை அழைத்து சென்றார்

"கண்டிப்பாக உங்களுக்கு நாடி படிப்போம்" என்று கூறினார். கொஞ்சம் மனம் லேசானது. பிறகு அதே ஜெபம், ஸ்லோகம் தான்! எங்களுக்கு பிறகு சில பேர்கள் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையோடும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தலை அசைக்க முடியாமல் இருந்தார். அவரை பார்த்ததும் எனக்குள் ஒரு கரிசனம். எங்கள் குறையும் தீர்க்க வேண்டிய ஒன்று தான், ஆனால் அவரின் பெயரை அழைப்பதன் சாத்தியக்கூறுகள் ரொம்ப குறைவு. அவரிடம் சென்று "நீங்கள் எங்களுக்கு முன் செல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டேன். "முதலில் உங்களுக்கு முடியட்டும். நீங்கள் தான் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறீர்கள்" என்று சொன்னார்!!!

அத்தனை பேர்களுக்கும் அருள்கிட்ட வேண்டும் என்று, ஒருமுறை, மேற்கு நோக்கி எல்லாருக்குமாக ஆதித்ய ஹிருதயம் சொல்லலானோம்! என்ன ஆச்சர்யம் சூரியன் அன்று ஆறு மணிக்கு மேலும் அஸ்தமிக்கவில்லை!

ஒரு நாலரை மணியளவில் எங்களை அழைத்தார்கள். உள்ளே சென்றவுடன் ஏகமுக ருத்ராக்ஷத்தை காணலாம். பெரியவரை நமஸ்கரித்து விட்டு உட்கார்ந்தேன். கேள்விகளை எழுதி கையில் வைத்திருந்தேன்! 

ஐய்யா அவர்கள், என் பெயரும், என் தந்தையார் பெயரும் கேட்டார். கேள்வி இருக்கிறதா என்று கேட்டார். 

"கேள்வி என்ன ஐய்யா, குறை தான் உள்ளது" என்றேன்.

அதற்கு பின் அவர் படித்தது எல்லாம் பதில்களும், காரணங்களும், பரிகாரங்களும் தான்! யாருக்கு இவ்வளவு கருணை இருக்கும்? ஒரு பத்து நிமிடத்தில் தாயாக, தந்தையாக எல்லாமாக ஆகிவிட்டார் அகத்தியர்! அந்த பத்து நிமிடங்களும் என் சரீரம் எனக்கு மறந்து போகிவிட்டது. காற்றில் இருக்கும் பறந்து செல்லும் இல்லை போல உணர்வு ஏற்பட்டது! ஒரு தாய் தன மகவை தூளியில் இட்டு தாலாட்டும் உணரமுடிந்தது. அத்தனை துன்பமும் சரீரத்திற்கே என்று அறிய வைத்து விட்டார்! பல ஜென்ம வாசனைகளை கூறுகையில் இந்த ஜென்மம் மறந்து விட்டது! குறையே ஒரு குறையாக இல்லை! ஆனாலும் கருணை மழை போல் உதவ வந்துவிட்டார் அகத்தியர்! அதில் வந்த சில வார்த்தைகள் போதும்! ஜென்மக் கடலை தாண்டிவிடலாம் என்று தோன்றியது!

மாதாஜி அவர்கள் வார்த்தைகளை ஒரு புத்தகத்தில் பதிவு செய்து நமக்கு தெளிவாக விளக்குகிறார். பிறகு அந்த புத்தகத்தை நம்மிடம் கொடுக்கிறார்கள். கேள்விகள் ஒன்றாக இருப்பினும் இரண்டு பேர்கள் உள்ளே செல்ல முடியாது. ஒருவருக்கு மட்டுமே நாடி பார்க்கப்படும். மற்றொருவர் தனியாக செல்லவேண்டும். அது அகத்தியரின் வாக்கு. பிறகு தெளிவாக சொல்லும் பொழுது அடுத்த நபரையும் அழைக்கிறார்கள். அவர்கள் எந்தவித பணமும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அங்கே நடக்கும் அன்னதானத்திற்கும் நற்செயல்களுக்கும் நம்மால் முடிந்த அளவு கொடுக்கலாம். குறைந்தது ரூபாய் ஐநூறாக இருந்தால் நலம் என்று தோன்றுகிறது. மேலும் கொடுப்பது மிகவும் புண்ணியம்தான். குரு பூஜையின் பொழுது நடக்கும் யாகத்திற்கு வந்து அருள் பெறவேண்டும் என்பது அங்கே இருக்கும் பெரியவர்களின் ஆசி.

ஓம் அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday 10 October 2013

சித்தன் அருள் - 143 - நம்பிமலை!


நடப்பவை எல்லாம் நல்லதற்கே என்று நினைப்பவன் நான். எத்தனையோ ஆபத்தான சூழ்நிலைகளிலும் அகத்தியப் பெருமான் என்னை சுற்றி அரணாக நின்று காத்த நாட்கள் உண்டு. நானும் அடிப்படையாக மனிதன் தானே. சிலவேளை பயம் வரும். இருந்தும் மனதை தேற்றிக்கொண்டு, அகத்தியரையே திட்டிக்கொண்டு சமாளிப்பேன்.  "இவர் எதற்காக இப்படி மாட்டிவிடுகிறார்" என்று கூட வெறுத்துப் போய் விடுவேன். எத்தனையோ குழப்பமான நிலைகளில் மனதில் தோன்றியதை எல்லாம் வார்த்தைகளாக வெளிக்கொட்டி, அதை அகத்தியப் பெருமான் கேட்டு, அவரிடமிருந்து பலமான குட்டு பலமுறை வாங்கியிருக்கிறேன்.

அப்படி ஒருநாள் யாரும் இல்லாத போது நாடியை புரட்டிப் பார்த்தேன். ஒரு மலை மீது இருக்கும் கோவிலுக்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் செல்க, அங்கு யாம் வந்து உரைக்கின்றோம் என்று உத்தரவு வந்தது. அதை சிரம் மேற்கொண்டு நானும் எனது ஒரு சில நண்பர்கள் குழாமுடன் கிளம்பினேன். அந்த நாள் 31/07/2009, வெள்ளிக்கிழமை, அனுஷம் நட்சத்திரம், சுக்ல பக்ஷ தசமி. என்னை போகச் சொன்னது நம்பிமலை கோவிலுக்கு. இது திருநெல்வேலி ஜில்லாவில் திருகுறும்குடி என்கிற கிராமத்துக்கு அருகில் உள்ளது. தமிழக வன பாதுகாப்புக்கு உட்பட்டு இருக்கிற ஒரு வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது, நம்பி மலை கோவில்.  மேல் இருக்கும் கோயில் 108 வைஷ்ணவ ஸ்தலங்களில் ஒன்று. நம்பியாறு என்கிற நதி இங்கு உற்பத்தியாகி, சிற்றாறு தாமிரபரணியாக உருவாகுவதும் இங்கு தான்.

நாங்கள் சென்ற வண்டி ஏதோ ஒரு காரணத்தால் தாமதமாக சென்று சேர்ந்தது. ஏன் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் சொன்ன நேரம் கழிந்துவிட்டது என்று நினைத்து, வழியெல்லாம் பொருமிக்கொண்டே வந்தேன். நண்பர்களோ, "இதுகெல்லாம் ஏதோ ஒரு காரணம் இருக்கும். பொறுமையாக இருப்போமே" என்று சொல்லிக்கொண்டு வந்தனர். இருந்தாலும் பொறுமை இழந்த நான் வெளியே எட்டி பார்த்து "வெயில் வேறு அதிகமாக உள்ளது. எப்படி அடிவாரத்திலிருந்து மேலே ஏறப்போகிறோம்? இன்று எனக்கு சந்திர அஷ்டமம் வேறு. மௌனமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதையும் கலைத்து, இப்படி சோதனை செய்கிறாரே" என்று கூறிக்கொண்டு வந்தேன்.

ஒரு வழியாக மலை அடிவாரம் வந்து சேர்ந்த பொழுது மணி 10.30 ஆகிவிட்டது. வண்டியில் வந்த களைப்பு, வெயிலின் கடுமை, வியர்வை, நினைத்தது போல் பயணம் அமையாதது, எப்படி இனி மலை ஏறி போகப்போகிறோம் என்ற நினைப்பு போன்றவை உடலை அசத்த, சற்று நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே என்று நாடியை புரட்ட, சும்மா சொல்லக்கூடாது, நன்றாகவே என்னை வறுத்துவிட்டார். 

நாடியில் வந்தது இதுதான்.

"ஒளி மறை அனுஷம் உதித்திட்ட வேளையிலே மனம் குளிர்ந்து அகத்தியன் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இன்னவனுக்கு ஆங்கு ஓர் ஊர்துவண்டி சற்று தாமதமாக வந்ததாக புலம்பிக்கொண்டான் என் மைந்தன். அன்னவனுக்கு இன்னும் புரியவில்லை. அது ராகு காலம். நல்ல காலத்தில் காலடி எடுத்து வைத்தால் தான் எதிர்காலத்தில் நடப்பதெல்லாம் நல்லதாக நடக்கும் என்பதற்காகவே 10.22 க்கு தாண்டா அகத்தியனே அங்கு கால் எடுத்து வைக்கச் சொன்னேன். 9 முதல் 10.30 வரை ராகு காலம் என்பதாலே, அங்கு அடி எடுத்து வைக்கவேண்டாம் என்பதற்காகவே தான் ஊர்தி வண்டி கூட என்றைக்கும் இல்லாமல் இன்று சற்று தாமதமாக வந்து சேர்ந்தது. ஆகவே, நடக்கின்ற காரியங்களும், சொல்லப்படுகின்ற விஷயங்களும் நல்லதொரு சகுனத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அகத்தியன் கணக்கு. ஆகவே தான் அகத்தியன் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன். ஆண்டு 50தாய் இவன் படித்தும் இன்னும் அவனுக்கு போதிய ஞானம் இல்லை என்பதை அகத்தியன் எண்ணுகிறேன். நேரம் ஆகிவிட்டது, மலையில் தான் நேரமாகிவிட்டது, விசுக் விசுக் என்றிருந்தான். இறை, இயற்கையை பழிப்பதற்கு இவனுக்கு என்னடா அதிகாரம் இருக்கிறது. காலம் ஆகத்தாண்டா செய்யும். காலம் கனியும் வரை சற்று பொறுத்திருக்க வேண்டும் என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீ, உன்னை நீயும் கட்டுப் படுத்திக் கொள்ளவில்லை. 10.30 மணிக்குத் தான் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று நியதி. அதன் படி காலடி எடுத்து வைத்தாய். இனி நேராக உன்னை ஆச்வாசப்படுத்திக்கொண்டு உடன் வந்திருப்பவரின் அறிவுரை படி நேராக நம்பி மலைக்கு செல்க. மற்றவற்றை கோயில் வாசலிலே யாம் மேற்கொண்டு உரைப்பேன் என அருளாசி.

இன்னொரு சொல்லும் கூட உண்டடா!  இங்கு மனிதர்கள் போடுகின்ற பஞ்சாங்கத்திலே ஆங்கு ஒரு சந்திராஷ்டமம் என்று உண்டு. மேஷ மைந்தனுக்கோ இன்று சந்திராஷ்டமம் என்றான். எப்போதுமே உன் பயணத்தின் போதெல்லாம் சந்திராஷ்டமம் வந்து குறிக்கிடத்தான் செய்யும். விதி. ஆனால், அந்த சந்திராஷ்டமங்கள், இன்று முதல் இவனுக்கு அகத்தியன் ஒரு உறுதி மொழி தருகிறேன்,  "எந்த சந்திர அஷ்டமமும் இவனுக்கு ஒன்றும் செய்யாது. ஏன் என்றால் அப்படி ஒரு எண்ணம் முதலில் இருந்தது. புறப்படும் போதும், வரும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதெல்லாம், சந்திராஷ்டமம் வருகிறது என்றால் சற்று வாயடக்கி மௌனமாக இருந்துவிட்டால் போதுமே என்று எண்ணுவான். வாயை அடக்கினால் வார்த்தை இல்லை. வார்த்தை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை. வார்த்தையை அடக்க  வேண்டாம், கடுமையான வார்த்தையை சொல்லவேண்டாம் என்றேனே தவிர மௌனமாய் இருப்பதில் அர்த்தம் இல்லை. ஆக அவனுக்கு இன்றைக்கு ஒன்று சொல்லுகிறேன். அருகிலுள்ள விதிமகளிடம் கேட்டு விட்டு உரைக்கிறேன். இன்னவனை பொறுத்த அளவில் சித்தர் நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். சித்தர் நிலைமையை நோக்கி சென்று கொண்டு இருக்கிற அத்தனை பேர்களுக்கும் சந்திராஷ்டமம் ஒன்றும் செய்யாது. அந்த வாக்குறுதியை யாம் உலாவி வரும் தென் பொதிகை மலையோரம் நின்று தென்றல் காற்றாக இருந்து நான் சொல்கிறேன், இனி யாருக்குமே சந்திராஷ்டமம், எந்த வித தொல்லையும் தராது என்று அருளாசி. இன்றிலிருந்து அகத்தியன் கொடுக்கிற புது காணிக்கையடா! ஏன் என்றால், நீ என் இடத்துக்கு வந்திருக்கிறாய். நான் உனக்கு ஏதேனும் வெகுமதி தரவேண்டும் அல்லவா. ஆக இந்த விதத்தில் தான் அகத்தியன் ஏதேனும் வெகுமதி தர முடியும். சந்திரனையும், அஷ்டமங்களையும் பற்றி நீ கவலைப்படாதே. நீ உன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஏகுக நம்பிமலை நோக்கி என்று அருளாசி." என்று முடித்துக்கொண்டார்.

நண்பர்களோ "நங்கள் அப்போதே சொன்னோம். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று. இப்பொழுது பாருங்கள், அவரிடம் திட்டு வாங்கிவிட்டீர்கள். இது உங்களுக்கு தேவையா?" என்று கிண்டலடித்தனர்.

சற்று நேர ஆசுவாசத்திற்கு பின் மெதுவாக மலை மீது வளைந்து செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினோம். கோவில் இருக்கும் இடத்தை அடைந்த உடன், ஒரு நமஸ்காரத்தை செய்துவிட்டு, நேராக நம்பியாறு சென்று களைப்பு தீர குளித்தோம். பின்னர் வந்து மலை மேல் நம்பியை தரிசித்துவிட்டு, கோவில் வாசலில் பெருமாளுக்கு நேராக அமர்ந்து நாடியை புரட்டினேன். அதில் வந்த தகவல்கள் ஆச்சரியப்பட வைத்தது.

"ஒளி மறை அனுஷம் உதித்திட்ட வேளை இது. இங்குள்ளோர் அனைவருக்கும் எதிர்கால நிலைப்பற்றி, அகத்தியன் ஏன் இங்கு வரச்சொன்னேன் என்பது பற்றியெல்லாம், பெரும் கதை ஒன்றை யாம் சொல்லப்போகிறேன். நடந்து முடிந்த காலங்கள் எல்லாம், நீங்கள் எல்லாம் வாழ்ந்தது வாழ்க்கையல்ல. இனிமேல் வாழப்போவதுதான் வாழ்க்கை என்கிற முறையில் அகத்தியன் பல்வேறு காரணங்களை இங்கு சொல்லப்போகிறோம். அகத்தியன் இங்கு வந்து வாக்கு உரைக்க, நீங்கள் மனிதர்கள் மட்டுமல்லாமல், சித்தர்கள் 17 பேர்களும் இப்பொழுது என் முன் கூடியிருக்கிறார்கள். நீண்டநாட்களுக்குப் பின் அகத்தியன் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்பதற்காக. அருமை மைந்தர்கள், சிஷ்யர்கள் அனைவரையும் வரச்சொன்னேன். அத்தனை பேர்களும் இந்த மலையில் குழுமியிருக்கிற நேரமடா. அருமையான காலம், அருமையான சூழ்நிலை.  அன்றொருநாள் யாம் உரைத்தோம், வட்டப்பாறை பக்கத்தில் அமர்ந்து, வானத்தில் வட்ட நிலா பவனி வர, தெம்மாங்கு பாடுகின்ற குயிலோசை போல ஆங்கோர் அருவி வீழ்ச்சியில் நாதம் வர, தென்றல் காற்று அமைதியாக வீச, இங்கு உட்கார்ந்து மனித சித்தர்களும், தெய்வ சித்தர்களும் பேசுவோம் என்று அன்றைக்கும் ஒரு நாள் சொன்னேன். இன்றைக்கு ஒத்திகை பார்க்கத்தான் உங்களை வரச்சொல்லியிருக்கிறேன். பின் ஒரு நாள் மிகப்பெரிய காரியம் நடக்கப் போகிறது. அதற்குப் பிறகுதான் இந்த பூலோகத்தில் வித விதமான மாற்றங்கள் எல்லாம் ஏற்படப் போகிறது. அதிலிருந்து பொல்லாத பாபங்கள் செய்கின்ற அத்தனை பேர்களும் புழுப் புழுவாய் நெளிந்து உயிர் துடிக்கப் போகிறார்கள். புண்ணியவான்கள் அத்தனை பேர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அகத்தியன் காட்டப் போகிறேன். ஏன் இங்கு வரச்சொன்னேன் என்பதெற்கெல்லாம் காரணம் உண்டு. இத்தனை காத தூரம் தள்ளி விட்டு, இந்த மலை பாங்கான அடியில், மௌனமான நேரத்தில் நம்பி திருக்கோயில் முன்பே இங்கு அகத்தியன் வந்து அமர்ந்ததுக்கும், அருள் வாக்கு சொல்வதற்கும் எத்தனையோ காரணங்கள் உண்டு. எல்லாம் தெய்வ ரகசியம் என்பதால் சிலவற்றை யாம் உரைக்கின்றோம்.

அருமை தம்பி போகன் அன்னவனும் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். போகன் கொடுக்கின்ற மருந்துதான் உலகத்தில் மிகச் சிறந்ததான மருந்தடா. அகத்தியன் கூட  முழுப் பொறுப்பையும் போகனிடம் விட்டுவிட்டேன். போகனை வழிபட்டு வருகின்ற பலருக்கு, அவர்கள் கொடுக்கின்ற மருந்துகளெல்லாம் ஔஷதிகள் அல்ல, உயிர் காக்கும் மூலிகைகளாக இருக்கும். அந்த உயிர் காக்கும் மூலிகைகளை இன்னவன் கையால், இன்னவன் கொடுத்தால்தான், உயிர் பிழைக்கும் என்று நியதியும் இருக்கிறது, விதியும் இருக்கிறது. ஆகவே, போகனும் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். போகனைப் பற்றி நிறைய விஷயங்கள்  சொல்லவேண்டும்.ரசவாதம் பண்ணினவன். பாதரசத்தை உண்டாக்கியவன். அதனால் 400, 500 ஆண்டுகள் மனிதர்களை வாழவைக்க முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தியவன். அப்படிப்பட்ட அரும் பெரும் ரகசியத்தை எல்லாம் அருகிலுள்ள போகன் ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருக்கிறான்.இந்த நல்லநாளில், அந்த ஓலைச்சுவடியை, 9 நாட்களுக்கு, அதாவது போகன் ஔஷதம் நடத்துகின்ற அன்னவன் கையில், 9 நாளைக்கு கையிலே ஒப்படைக்கிறேன். போகரின் சம்மதம் கேட்டுத்தான் சொல்கிறேன். அந்த நாடியை கொண்டுவரச் சொன்னதன் காரணமே, போகன் பெயரால் மருத்துவம் நடத்தும் அன்னவன் கையில் இன்று முதல் 9 நாட்கள் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஒவ்வொன்றாக யாம் சொல்லுவோம். ஒவ்வொரு ஔஷதங்களும், ஒவ்வொரு உயிரை காக்கும்,  ஒவ்வொரு நோயை போக்கும் என்பது உலகறிந்த விஷயம். மருத்துவம் சம்பந்தமாக பேசுகிறேன் என்று எண்ணிட வேண்டாம். இங்குள்ள மூவர் மருத்துவத்தில் தலை சிறந்தவர்களாக இருக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு மருத்துவத்தை முதலில் சொல்லிவிட்டு, பின் பொது வாழக்கைக்கும், இயல்பான நிலைமைக்கும் அகத்தியன் யாம் வருகிறேன்.

ஔஷதம் என்றாலே மருந்து. மருந்து எதற்கு என்றால் ஆயுளை காப்பதற்கு மட்டுமல்ல, மனத்துக்கும் மருந்து தேவை. அதனால் மா மருந்து என்பார்கள். மனம் ஒருநிலை பட்டுவிட்டால் வாழ்க்கையை வென்று விடலாம். மனத்தை பற்றி எத்தனையோ செய்திகள், எத்தனையோ வரலாறுகள். எத்தனையோ புனிதமான ஆத்மாக்கள் எல்லாம் படிப் படியாக பேசியிருக்கிறார்கள். பகுதி பகுதியாகவும், விலாவாரியாகவும் பேசியிருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, உலக நாடுகளில் முழுவதுமே மனத்தைப் பற்றியும், மனத்தின் பேராற்றலை பற்றியும், மனம் என்னென்ன பாடு படுத்துகிறது என்பதை எல்லாம் சொல்லி அவ்வப்போது குறிப்பேடுகளில் எழுதிவைத்தும், கொள்கை என பரப்பி வருகிற காலம் இது. மனம் ஒருவனுக்கு அமைதியாகிவிட்டால் வாழ்க்கையில் எங்கோ சென்று விட்டான். எதை  கொண்டு வந்தான்,எதை எடுத்துச் செல்வதற்கு என்று "பகவத் கீதையில்" அன்றொருநாள் பகவான் கிருஷ்ணன் சொன்னோதொரு வார்த்தை எல்லாம் இன்றைக்குத்தான் நிஜமாகப் போகிறதடா.

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday 3 October 2013

சித்தன் அருள் - 142 - கார்கோடகநல்லூர்

அந்த காலத்தில் மிகப் பெரிய அக்ரகாரம் இருந்தது. அற்புதமான மனிதர்கள் இருந்தனர். அத்தனை பேரும் கூண்டோடு அழிந்து விட்டார்கள். ஒரு சமயம், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அக்ரமங்கள் சற்று அதிகமாக போன போது, ஒரு பிரளயம் ஏற்படவேண்டும் என்று தீர்மானித்து தாமிரபரணியில், யாமே வெள்ளப் பெருக்கை உண்டாக்கினோம். அதன் காரணமாக பொல்லாத நபர்களெல்லாம், ஏறத்தாழ, ஒரு லட்சத்திற்கு மேல் அழிந்து விட்டனர். 

இந்த சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் அருமையான இடம். அவ்வளவு தெய்வ அம்சம் பொருந்திய இடம். தெய்வங்கள் நடமாடிய இடம். இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது. இந்த நதி இந்த இடத்தில் தான் புனிதம் கெட்டுவிடவில்லை. இப்பொழுது கூட, அகத்தியன் இந்த வார்த்தையை சொல்லுகிறபோது, தாமிரபரணி நதி பக்கத்தில் உட்கார்ந்து, காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறாளடா. அந்த அனுபவம் கண் மூடி த்யானித்துப் பார்த்தால், புல்லரிக்கும், புல்லரிக்கின்ற குளிர்ச்சி பரவும். அப்படி பரவும் குளிர்ச்சி கூட தாமிரபரணி உங்களுக்கு கொடுக்கிற வாழ்த்துக்கள் என்று எண்ணிக்கொள். வானமே இந்த நல்லதொரு நாளில் தானே விரும்பி வந்து அமர்ந்திருக்கிறது. வானத்துக்கு பலம் மேகம், அந்த மேகத்துக்கு அதிபதி வருண பகவான். இதோ இங்கு பக்கத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, திரும்பி பார்க்கிறேன். என் அப்பன் அனுமன் அதோ ஓரத்தில் கை கூப்பி, வாய் பொத்தி; என்ன தாசச்ய வினயத்தோடு உட்கார்ந்திருக்கிறார். என் கண்ணுக்கு தெரிவதெல்லாம் உங்களுக்கு சொல்லுகிறேன்.  நீங்களும் முடிந்தால் கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். அகத்தியன் சொல்லை மட்டும் கேளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் அந்த காட்சி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஏன் என்றால் தெய்வங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற நேரம்.  ஒரு சமயத்தில்,ஆஞ்சநேயர் வந்து ராமபிரானோடு இந்த தாமிரபரணி நதிக்கரையில் நீராடி, அமர்ந்து, மனம் விட்டு பேசி, நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தமாக இருந்த இடம். ராமர் சிரித்தது அபூர்வம். ராமர் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து, கடைசி வரை எடுத்துப் பார்த்தால், வாழ்க்கை எல்லாம் ரொம்ப சோகம். ஆனால் எல்லாம் சோகமாக இருந்தால் கூட, அத்தனை பேர்களும் "ராமஜயம்" என்று எழுதுகிறோமே தவிர " கிருஷ்ண ஜெயம்" என்று எழுதுவதில்லை.  வேறு எந்த  ஜெயமும் எழுதுவதில்லை. "ஹயக்ரீவர் ஜெயமும்" எழுதுவதில்லை. ராமர் அப்படிப்பட்ட ராமர். ராமரின் மறு அவதாரமாக, பச்சை வண்ணன் இதோ அமர்ந்திருக்கிறான். சிலையாக அமர்ந்த நாளும் இந்த  நாள் என்று ஏற்கனவே சொன்னேன். அந்த நாள் திரும்ப ஞாபகத்துக்கு வருவதால் அதையே சொன்னேன். சிறப்பு மிக்க புண்ணிய பூமியில் இன்றைய தினம் அமர்ந்திருக்கிறோம். ஒருவன் தெய்வத்துக்காக செய்கின்ற காரியங்களுக்கு எல்லாம், அவன் மூன்று ஜென்மமாய் குடும்பம் நன்றாக தழைக்கும். அவர்கள் செய்த பாபங்கள் அத்தனையும் தூள் தூளாகும். அவன் குடும்பம் முன்னூறு ஆண்டுகளாய் இன்னும் சீர் பெற்று, சிறப்பு பெற்று வாழும். நாகலிங்கத்தைப் பற்றிச்சொன்னேன். ஆதிசேஷன் அவதாரம் தான், என்று ஆதிசேஷன் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இங்கு கருடனுக்குத்தான் பால் அபிஷேகம். பாம்புக்கு அல்ல. ஆக, பாம்புக்கு சமமான கோபத்துடன், இங்கிருந்து ஆட்சி செய்ததினால் தான், இன்றைக்கும் கார்கோடகன் என்றால் அவ்வாறு எண்ணுகிறார்கள்.

ஆனால் ஒரு தீமை வந்தால் தான் ஒரு நன்மை விளையும் என்பதற்கு அன்றைக்கே ஒரு உதாரணம் ஆக இருந்தவன் தான் கார்கோடகன். கருட பகவானும் இங்கு பக்கத்திலே அமர்ந்திருக்கிறான். அவன் பக்கத்திலேயே ஆதிசேஷனும் அமர்ந்திருக்கிறான். என்ன ஒற்றுமை பார்த்தாயா! மனிதர்களுக்குத்தான் பகைமை உண்டு. தேவர்களுக்கு பகைமை இல்லை. அவர்களுக்கும் பிளவு உண்டு, அதை தாண்டித்தான் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கு இராவணன் அவதாரம் என்பதில், இராவணன் கொல்லப்பட்டான் என்று சொல்கிறார்கள். இராவணன் கொல்லப்படவில்லை. இராவணன் போல் இருப்பவன் கொல்லப்படவேண்டும், தர்மம் செழிக்கவேண்டும் என்பதற்காகத்தான். அன்றும் ஆதிசேஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். இங்கே கருடாழ்வாரும் பக்கத்தில் அமர்ந்து, பெருமாளை கண் கொட்டாமல் ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த அரிய காட்சிகளை எங்கு சென்றாலும் காணமுடியாது. ஆக, இரு துருவங்கள் ஒன்று சேர்ந்து, பகவானை, அதாவது விஷ்ணுவை, கை கூப்பி வணங்குகிற காட்சி இப்பொழுது பார்க்கிறேன். இந்த அருமையான நாள், அகத்தியனுக்கு உகந்த நாள். ஆகவேதான் அகத்தியன் உங்களை இங்கு வரச்சொன்னேன். அகத்தியன் விஷ்ணுவாகவும் இருக்கிறேன், பிரம்மாவாகவும் இருக்கிறேன், சிவனாகவும் இருக்கிறேன். ஆகவே, எனக்கு நடமாடும் இடமே இந்த பொதிகை மலை தானடா. இப்பொழுதுதான் பொதிகை மலையிலிருந்து பேசிவிட்டு வந்தேன். இப்பொழுது உங்கள் பக்கத்திலிருந்து அமர்ந்து கொண்டுதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என்னுடன் இங்கு இருக்கின்ற அத்தனை பேர்களுமே, சதுரகிரிக்கு போக விரும்பினார்கள். சதுரகிரி இருக்கும் திசை நோக்கி வணங்கினால், அங்கிருக்கும் சித்தர்கள் அனைவருமே இங்கிருந்து, ஆசிர்வதிக்கும் காட்சியை எனக்கு காண முடிகிறது. ஆக எல்லா தெய்வங்களும், எல்லா மனிதர்களும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் யார் யார் அகத்தியனை வணங்கி வந்தார்களோ, எவர் எவர், இந்த பச்சை வண்ணனை வணங்கி சேவை செய்தார்களோ, அவர்களுக்குத்தாண்டா இந்த கோடகநல்லூர்ருக்கு அகத்தியன் வரவேற்று, அவர்கள் செய்த பாபங்களில் 33 விழுக்காடுகளை விலக்கியிருக்கிறேன். ஏற்கனவே புண்ணியத்தையும் தந்திருக்கிறேன். இப்பொழுது கடைசியாக, அவர்கள் செய்த பாபங்கள், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, கோபத்திலோ, ஆத்திரத்திலோ செய்த பாபங்கள், விதியின் செயலால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். மனிதர்கள் தானே, சற்று நிறம் மாறியிருப்பார்கள். குணம் மாறியிருப்பார்கள். வாக்கில், நாக்கில் நரம்பில்லை. எது வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். புண்பட நடந்து கொண்டு இருக்கலாம். ஆனால் அது அத்தனையும் தாண்டி இவர்களுக்கு, இன்றைய தினம் மிகப்பெரிய புண்ணியத்தை, 33 சதவிகித புண்ணியத்தை என் அருமை தாமிரபரணி நதியே அவள் சார்பாக அவர்களுக்கு வழங்குகிறாள். அந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். தாமிரபரணி நதி எப்படிப்பட்ட  நதி என்று சொல்லியிருக்கிறேன், கங்கையின் பாபம் போன நதி. அவளே தன் கைப்பட சொல்லுகிறாள், "என்னால் ஆனதை இங்குள்ள அனைவருக்கும் 33 விழுக்காடுகள் தருகிறேன்". இன்று முதல் நீ எடுத்துப்பார். உதிரத்தை கூட எடுத்து விஞ்சான ரீதியில் சோதனை செய்து பார். அங்கொரு வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடம் தான் இந்த தாமிரபரணி நதிக்கரை. ஆசியோடு உங்களுக்கு கொடுத்த புண்ணியம். அந்த புண்ணியத்தை வாங்கிக்கொள். இன்று முதல் இங்குள்ள அனைவருக்கும் எல்லா க்ஷேமமும் கிடைக்கட்டும். நல்லதொரு வாழ்க்கை அமையட்டும். கடந்தகால வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு, ஒரு புதிய வாழ்க்கை தொடங்கட்டும், என்று இந்த கோடகநல்லூர் விஷ்ணுவின் சார்பில், என்னுடன் இருக்கின்ற 204 சித்தர்கள் சார்பில், முனி புங்கவர் ஜமதக்னி வந்திருக்கிறார். ஜமதக்னி யார். எவ்வளவு பெரிய மகான். கங்கை நதிக்கரையில், பூமிக்கடியில் 4000 ஆண்டுகளாக தவம் செய்கின்ற மாமுனி. அவரும் இதோ வந்திருக்கிறார். அன்னவனுக்கு, அகத்தியன் தண்டம் இட்டு சமர்ப்பிக்கிறேன். முனிவர்கள் போற்றுதல் என்பது இயலாத காரியம். அவரின் நல்லதொரு வாக்கை உங்களுக்கு வாங்கி தருகிறேன். நீங்களெல்லாம் கடும் தவம் செய்து காட்டிலே, தண்ணீர் கூட இல்லாமல், பல ஆண்டுகள் ஜபம் செய்து தவத்தை செய்திருக்கவேண்டும். உங்கள் மேல் புற்று வந்திருக்கவேண்டும். புற்றாகி இருந்து கூட நீங்கள் ஜபத்தை செய்திருக்க வேண்டும். அப்படி செய்தவர்களுக்குத்தான் மோக்ஷம் கிட்டும். மோக்ஷ உலகம் கிடைக்கும். வைகுண்ட பதவி கிடைக்கும். ஆனால் ஜமதக்னி போன்ற முனிவர்கள் எல்லாம் அருள் கூர்ந்து வாழ்த்துவதை கண்கூடாக நான் காண்கிறேன். ஆக, அகத்தியனுகல்ல அந்த வாழ்த்து, இங்கு அமர்ந்திருக்கும் உங்களுக்குத்தான். இந்த கோடக நல்லூரிலே, ஆன்மீக பணி செய்கின்ற அத்தனை பேர்களுக்கும், உயிர்களுக்கும் அந்த அருள் போய் சேரும். இங்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இன்றைய தினம் மிகப் பெரிய பரிசு போல, அகத்தியன் யான் விரும்புவதெல்லாம், இங்குள்ளவர்களுக்கு எல்லாம் நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும். இனியது நடக்கவேண்டும். இயலாமை போகவேண்டும். கோபம் ஒழிய வேண்டும். மனதில் புண்ணியமது செழிக்கவேண்டும். அதுமட்டுமல்ல, ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறேன். நிறைய பேருக்கு தெரியாது. இங்குள்ள பலருக்கு எதிர் காலத்தில், மறு பிறவி இல்லை என்பது உண்மை. அந்த நல்லதொரு வாழ்த்தையும், விதிமகளின் சார்பாக அகத்தியன் உங்களுக்கு அளிக்கிறேன். யார் அந்த மறு பிறவி இல்லாதார்வர்கள் என்று இப்பொழுது சொல்ல மாட்டேன். காரணம் உங்களுகெல்லாம் உடனே திமிர் வந்துவிடும். ஆகா! எனக்குத்தான் மறு பிறவி இல்லையே, நான் எந்த தப்பும் செய்யலாம் என்று தோன்றிவிடும். ஆகவே, சற்று அடக்கமாக சொல்கிறேன். இங்குள்ள பலருக்கு மறுபிறவி இல்லாமல் அகத்தியன் பார்த்துக்கொள்கிறேன். செய்த பாபங்களுக்கு மோக்ஷத்தை தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். 

என் அருமை லோபமுத்திரா என்று சொல்லக்கூடிய தாமிரபரணி நதிக்கரை உங்களுக்கு 33 விழுக்காடு புண்ணியத்தை தந்திருக்கிறாள். ஆக ஏற்கனவே அகத்தியன் கொடுத்த புண்ணியம், தாமிரபரணி நதி கொடுத்த புண்ணியம், அபிஷேகம் நடந்த அற்புதமான நாள் இது. இதே நாளில் தான் நீங்கள் அனைவருமே, அந்த அற்புத சம்பவம் நடந்ததை கண்ணால் பார்த்திருக்கிறீர்கள். நான் சொன்னேனே பல சம்பவங்கள். அத்தனை சம்பவத்தை கண்ணாலே பார்த்த புண்ணியம் உங்களுக்கு இருந்திருக்கிறது. அதனால் தான் இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, என்று சொல்லி, எல்லாம், எல்லோரும் வளமுடன் வாழ்க என அருளாசி.

​கோடகநல்லூர் "சித்தன் அருள்" இத்துடன் நிறைவு பெற்றது.​​எல்லோரும் எல்லா நலமும் சித்தன் அருளால் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

கார்த்திகேயன்.​