​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 14 November 2020

சித்தன் அருள் - 961 - அனைவருக்கும் குருவருள் கூடும் நேரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே! "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வாசகர்களே!

'சித்தன் அருள்" வலைப்பூ 2011இல் தொடங்கப்பட்டு 10வது வருடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையிலே, எத்தனையோ அரிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. பகிர்ந்து கொள்ளாத அனுபவங்கள் எத்தனையோ உண்டு. இருப்பினும், பல கேள்விகளை அகத்தியப் பெருமானிடம் கேட்டு ஏதோ ஒரு காரணத்தால் பதில் கிடைக்காமலேயே இருந்தது. கேட்டது கேட்டதுதான், அதை திருப்பி எடுத்துக் கொள்வதாக இல்லை என்ற திட மனதுடன், என்றேனும் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் நாட்களை கடத்தினேன்.

நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்பார்கள். அடியேனோ, நம் குருநாதர் நம்மை சோதனைக்குள்ளாக்குவது, காத்திருக்க வைப்பது, நம்மை புடம் போடவும், நம் கர்மாவை கரைத்து, வாசனைகளை களையவும் என பல முறை உணர்ந்திருக்கிறேன்.

ஒரு நாள், எத்தனை கேள்விகளுக்கு குருநாதரின் பதில் கிடைக்க வேண்டியுள்ளது என எண்ணிப்பார்த்த பொழுது, ஒரு 25 கேள்விகள் நினைவுக்கு வந்தது. ஏன் இப்படி பதில் சொல்லாமலேயே நாட்களை நகர்த்துகிறீர்களே, என் கேள்வியில் எங்கும் சுயநலமே இல்லையே. அனைத்தும் பொதுநலம், லோகஷேமம் தானே, பின்னர் அதில் என்ன தவறு உள்ளது என மௌனம் காக்கிறீர்கள் குருநாதரே! என கேட்டுவிட்டேன்.

அடியேனின் முன் அனுபவப்படி, அமைதியாக எல்லாவற்றிலிருந்தும் விலகி இருந்தால், அவராகவே யார் வழியிலேனும் பதிலை உரைத்து, அல்லது புது வேலையை தந்து, நம் மனதை மாற்றி விடுவார். அடியேனும் அவர் சொல்வதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், அவர் காட்டும் வழியில் நடந்துவிடுவேன். ஆனால் இம்முறை நடந்த விஷயம் சற்று வித்யாசமாக இருந்தது.

அடியேனை ஒரு சித்தன் அருள் வாசகர், ஈமெயில் வழி தொடர்பு கொண்டார்.

"வணக்கம்! எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம், உங்களிடம் தெரிவிக்க வேண்டிய ஒரு சில விஷயங்களை அகத்தியப் பெருமான் கூறியுள்ளார். அவர் தங்களிடம் உரையாற்ற விரும்புகிறார்!" என்றார்.

"என்ன விஷயம், என உங்களுக்கு தெரியுமா? யார் அவர்? என்னை தெரியாதவரிடம் எப்படி என்னை பற்றிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டது?" என ஈமெயில் வழி கேள்வி எழுப்பினேன்.

"அவரிடம் உங்களை தொடர்பு கொள்ளச்சொல்லி விஷயங்களை கூறியதும், "சித்தன் அருள்" வலைப்பூவை அகத்தியர் காட்டிக்கொடுத்துள்ளார். அங்கே போய் தேடி உங்கள் தொடர்பு எண் கிடைக்காததால், அவருக்குத்தெரிந்த பலரையும் தொடர்பு கொண்டு, கிடைக்காமல் போகவே, கடைசியாக என்னிடம் கேட்டார். உங்களை சந்திப்பது மிக கடினம் என்றும், செய்தியை ஈமெயில் வழி தெரிவித்து விடுகிறேன் என்று கூறினேன்" என்றார்.

மிகுந்த யோசனைக்குப் பின், "சரி! அவர் பெயரையும், தொடர்பு எண்ணையும் தெரிவியுங்கள். அடியேனுக்கு நேரம் கிடைத்தவுடன் நானே கூப்பிடுவேன் என்று தெரிவித்து விடுங்கள்" என பதில் போட்டேன்.

அவர் பெயரும், தொடர்பு எண்ணும், அடியேனுக்கு தெரிவிக்கப்பட்டது. வாங்கி பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன். உடனேயே கூப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. சில நாட்கள் கடந்து போனது.

தகவல் அடியேனுக்கு தந்தவர், சில நாட்களுக்குப்பின் அடியேனை தொடர்பு கொண்டு, அவரிடம் பேசிவிட்டீர்களா! தொடர்பு கொள்வதில் ஏதேனும் பிரச்சினையா? அவருக்கு குருநாதரிடமிருந்து அழுத்தம் அதிகரிக்கிறது என்றார். உங்கள் எண்ணை கொடுத்தால், அவரையே கூப்பிட சொல்கிறேன்" என்றார்.

"குருநாதரிடமிருந்து அவருக்கு அழுத்தமா? அவர் அழுத்தம் உணருகிற அளவுக்கு, அப்படி என்ன செய்கிறார்?" என்றேன்.

"அவர் நாடி வாசிக்கிறார்" என்றாரே பார்க்கலாம்.

அடியேனின் சிந்தனை எங்கெல்லாமோ பாய்ந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன்.

"சரி! கூடிய விரைவில் நானே அவரை அழைக்கிறேன். செல் வழிதான் அடியேனால் பேசமுடியும். நேரடியாக போய் பார்ப்பதெல்லாம் இயலாத விஷயம். கால சூழ்நிலை பயணத்துக்கு அனுமதிக்கவில்லை" என தெரிவித்தேன்.

ஒரு நாள் இரவு 8 மணிக்கு, உணவருந்திவிட்டு, சற்று நடந்துவிட்டு வரலாம் என பத்மநாபஸ்வாமி கோவிலின் தெற்கு வாசலை நோக்கி நடந்தேன். அன்று மும்மூர்த்திகளும் கோவிலுக்கு உள்ளே உலாவருகிற நாள். மெதுவாக நடந்து கோவில் வாசலை அடைந்தவுடன், இது தான் நேரம், இங்கிருந்தே அவரை தொடர்பு கொள்வோம், என நினைத்து அவர் எண்ணில் அழைத்ததும், உடனேயே எடுத்தார்.

சுருக்கமாக அடியேனை அறிமுகப் படுத்திக்கொள்ளவும், மூன்று மூர்த்திகளும் வாசலுக்கு நேராக வந்து நின்றனர். உடனேயே அவரிடம், மூன்று மூர்த்திகளும் நிற்பதை கூறி "வேண்டிக்கொள்ளுங்கள், முகூர்த்தம் நன்றாக இருக்கிறது" என்றேன், ஒரு இரண்டு நிமிடம் அமைதியானேன்.

சற்று நேரத்தில், மும்மூர்த்திகளும் கிளம்பிச் செல்லவும், "எப்பொழுது உங்களுக்கு பேச வசதிப்படும்!" என்றேன்.

"எப்பொழுது வேண்டுமாயினும்!" என்றார்.

"சரி! வியாழக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணிக்குள் உங்களை அழைக்கிறேன். அப்பொழுது கூறுங்கள்" என்றேன்.

"நான் எதுவும் சொல்வதற்கில்லை. நீங்கள் தொடர்பு கொள்கிற பொழுது அகத்தியர் நாடியில் வந்து எல்லாவற்றையும் உரைப்பார். நீங்களாக எதுவும் கேட்க தேவை இல்லை. அனைத்திற்கும் பதில் இருக்கும். அவர் உரைத்தபின், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பின்னர் நீங்கள் கேட்கலாம்!" என்றார்.

"சரி! சொன்ன நேரத்துக்கு அடியேன் அழைக்கிறேன்" என்றேன்.

"குருநாதர் என்ன சொல்லப்போகிறார்?" என்கிற எண்ணம் மனதை குடைய ஆரம்பித்தது!

சித்தன் அருள்...............தொடரும்!

9 comments:

  1. Om sri loba mudra thayar samedha agathia peruman thiruvadigale potri

    ReplyDelete
  2. ஐயனே... அகத்தியர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆவல் இப்போதே தொற்றிக்கொள்கிறது..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ அகத்தீஷாய நமஹ

    ReplyDelete
  5. Om sri lobamuthra sametha agasthiyaha namaha

    ReplyDelete
  6. குருவின் திருவருள் எல்லோருக்கும் கிடைத்து அனைவரும் நலமாக வாழ வேண்டும். .ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  7. அகத்தீசாய நம என்றொன்றொது அஷ்ட சித்தி தனை ஈவார்.

    ReplyDelete
  8. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  9. Appa Saranam Ammaiappa Saranam

    ReplyDelete