​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 30 September 2020

சித்தன் அருள் - 928 - ஆலயங்களும் விநோதமும் - வேத நாராயண சுவாமி கோவில், நாகலாபுரம், சித்தூர்!


நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில் தமிழக எல்லையோரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம். தமிழகம் பறிகொடுத்த எல்லை பகுதியில் இந்த நாகலாபுரமும் ஒன்று. திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக இத்தலத்தில் காட்சிதருவது இத்தலத்தின் சிறப்பாகும்.

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.

நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

பங்குனி மாதம் வளர்பிறையில் (சுக்லபட்சம்) மூன்று நாட்கள் துவாதசி, திரயோதசி, சதுர்த்தி ஆகிய திதிகளில் மாலையில் சூரியன் பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தை தொட்டு வழிபடுகின்றார். இரண்டாம் நாள் சூரியன் பெருமாளின் திருமார்பை தொட்டு வழிபடுகின்றார். மூன்றாம் நாள் பெருமாளின் தலைப்பகுதியை ஒளிக் கதிர்களால் தழுவி வழிபடுவது சிறப்பு. 

இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி–பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.

பெருமாள், வலது கையில் சக்கரத்தை, எய்தும் நிலையில் பிடித்திருப்பது, மிகுந்த விசேஷமாக கருதப்படுகிறது. அவரை வணங்குபவரை, எந்நேரமும் காக்க, தயாராக நிற்கிற கோலம்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!

Tuesday, 29 September 2020

சித்தன் அருள் - 927 - ஆலயங்களும் விநோதமும் - சக்ரபாணி கோவில், கும்பகோணம்!


சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் தொடருந்து நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர ஷேத்திரம் என்றழைக்கப்படுகிது.

ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து, ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

12 கருட சேவை:- கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற மூன்றாவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப் பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை.

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வஇலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Monday, 28 September 2020

சித்தன் அருள் - 926 - ஆலயங்களும் விநோதமும் - மகாலிங்கசுவாமி கோவில், திருவிடைமருதூர், தமிழ்நாடு!


மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று.

முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். 

இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்.

மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர்.

இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சரி! நாம் தெரிந்துகொள்ள இங்கு என்ன உள்ளது!

இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.

மூகாம்பிகை சன்னதி:-  இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் "பிரம்மஹத்தி" தோஷ நிவாரண தலம் இது. அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

எல்லா கோவில்களிலும் பரிவார தேவதைகள், இறைவனை சுற்றி இருக்கும். இந்த கோவிலின் பரிவார தேவதைகள், சுற்றியுள்ள ஊர்களில், தனித்தனி கோவில்களில் அமர்ந்துள்ளனர்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

Sunday, 27 September 2020

சித்தன் அருள் - 925 - ஆலயங்களும் விநோதமும் - கிருஷ்ணர் கோவில், திருவார்ப்பு, கோட்டயம் மாவட்டம், கேரளா!


திருவார்ப்பு கிருஷ்ணர் கோவில், கேரளா மாநிலத்தில், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அதிகாலை 2 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. 3 மணிக்கு சிறப்பு பூஜை அதாவது உஷ பாயசம் எனும் உணவு கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.

இந்த திருவார்பு கோயில் 1500 வருடங்கள் பழமையான கோயில். இந்த கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருப்பதாக ஐதீகம். அதனால் மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், ஆண்டின் எல்லா நாட்களும், பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

ஒருமுறை, கிரஹணத்தின் பொழுது, இந்த கோவில் சில மணிநேரங்கள், மூடப்பட்டது. பின்னர் கோவிலை திறந்த பொழுது, கிருஷ்ணரின் இடுப்பில் கட்டியிருந்த ஒட்டியாணம், வழுகி கீழே போயிருந்தது. அந்த நேரத்தில் வந்த மஹான் ஒருவர், கிருஷ்ணர் எப்பொழுதும் பசியுடன் இருப்பதாகவும், ஆதலால், இனி அவருக்கு உணவளித்திட ஒரு பொழுதும் கோவில் மூடப்படக் கூடாது எனவும் உத்தரவிட்டார். அன்று முதல் இன்று வரை, கோவில் கதவு, சம்பிரதாயத்திற்காகக் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை என வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்படுவது வழக்கம்.

மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேளையில் கையில் கோடாரி ஏந்திய படி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும், கோவிலின் தந்திரியிடம் கோடாரியை கொடுப்பார். கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால், கதவை உடைப்பதற்காக, அந்த கோடாரி பயன்படுத்தலாம், என்பதற்காக அந்த கோடாரி கொடுக்கப்படுகிறது.

அரக்கன் கம்சனை கொன்ற கிருஷ்ணன் மிகவும் உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் அந்த கிருஷ்ணரே இந்த கோயிலில் மூலவராக அமர்ந்தார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

தினமும் கிருஷ்ணருக்கு அதிகாலையில் அவரின் உஷ்ணத்தை குறைக்க அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் மூலவரின் தலை துவட்டப்படுகிறது. அவர் பசியாக இருப்பார் என்பதால், பின்னர் உடனே நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பின்னர் தான் அவரின் உடல் துடைக்கப்படும்.

திருப்பதி, மீனாட்சி அம்மன் கோயில் என இந்து கோயில்கள் அனைத்தும் கிரகண நேரத்தில் மூடப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மட்டும் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என்பது ஐதீகம்.

சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது?

இந்த கோயிலில், நித்தமும் பிரசாதம் வழங்கப்படுவது, வழக்கமாக உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பிரசாதம் பெறாமல் வெளியே செல்ல அனுமதி இல்லை.

இரவு 11.58 மணிக்கு கோயில் மூடப்படுவதற்கு முன்னர் அங்குள்ள தந்திரி, இங்கு யாராவது பசியுடன் இருக்கிறீர்களா? என சப்தமாக கேட்பார்.

இந்த கோயிலில் பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த கோயிலில் வழங்கப்படும் கிருஷ்ணரின் பிரசாதத்தை உண்டால், அதன் பின்னர் நீங்கள் பசியால் எப்போதும் வாட மாட்டீர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சினை வராது என்பது ஐதீகம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

Saturday, 26 September 2020

சித்தன் அருள் - 924 - ஆலயங்களும் விநோதமும் - முர்தேஷ்வர் (சிவன்) கோவில், கர்நாடகா!


முர்தேஷ்வர் (சிவன்) கோவிலின் தொடக்கம், ராவணனின் காலத்திற்கு உட்பட்டது.  இது வடக்கு கர்நாடகாவில், அமைந்துள்ளது.

ராவணன், சிவபெருமானை நினைத்து, பலகாலம் தவமிருந்தான். ராவணனின் தவத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி, "யாது வேண்டும்" என்று வினவினார்.

"தங்களின் ஆத்மலிங்கம் வேண்டும்" என்றான்.

ராவணனிடம் விளையாட நினைத்த சிவபெருமான், 

"தந்தோம். ஆயினும் ஒரு நிபந்தனை. இலங்கை போய் சேரும்முன் எந்த காரணம் கொண்டும் அதை பூமியில் வைக்கக்கூடாது!. அப்படியாயின், அதன் பாரத்தினால், பின்னர் பூமியை விட்டு தூக்கவே முடியாது" என்றார்.

"அதற்கென்ன! அப்படியே ஆயிற்று!" என்று சிரித்தபடி கூறிட, சிவபெருமானும் தன் ஆத்மலிங்கத்தை, ராவணனிடம் ஒப்படைத்தார்.

ராவணன் சந்தோஷமாக ஆத்மலிங்கத்தை பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி பயணமானார்.

லிங்கத்தை தானம் கொடுத்து, சற்றே வருத்தத்துடன் திரும்பிய சிவ பெருமானுக்கு, அந்த லிங்கம் இலங்கையை அடைந்துவிட்டால், ராவணன் மிக பலம் பொருந்தியவனாக மாறிவிடுவான். பின்னர் பூவுலகில் மிகப்பெரிய அழிவினை உருவாக்குவான். அவனை யாரும் அழிக்க முடியாது, என்பது புரிந்தது.

சிவபெருமான், விநாயகப் பெருமானை அழைத்து "எப்படியும், ஆத்மலிங்கம் ராவணனுடன் இலங்கை சென்று சேராமல் இருக்க ஏதேனும் செய்து உதவி செய்யவேண்டும்" என வேண்டினார்.

பிறகு பெருமாளிடம் விநாயகப் பெருமான் நடத்தப்போகும் திருவிளையாடலுக்கு உதவி செய்யுமாறும், வேண்டினார்.

பெருமாளும், விநாயகரும் கை கோர்த்தனர்.

ராவணன், ஆத்மலிங்கத்துடன், கோகர்ணம் என்கிற இடத்தின் அருகில் வந்ததும், பெருமாள், மாயையால், சூரியன் அஸ்தமிக்கப் போவதுபோல் ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்.

ராவணன், ஆசார/அனுஷ்டானங்களில் மிகவும் ஈடுபாடுடையவர்.

மாலை நேரம் நெருங்கிவிட்டபடியால், சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். கையிலோ இறைவன் அருளிய  ஆத்மலிங்கம். கீழே வைக்க முடியாது. யாரேனும் உதவிக்கு வந்தால், தன் நித்ய அனுஷ்டானத்தை முடித்துவிடலாம். என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் பொழுது!

அந்த வழியாக ஒரு சிறுவனின் ரூபத்தில், விநாயகப் பெருமான் வந்தார்.

அவனை அழைத்த ராவணன், சற்று நேரம் ஆத்மலிங்கத்தை கையில் வைத்திருக்க வேண்டினார். குறிப்பாக அதை பூமியில் வைத்து விடக்கூடாது எனவும், கூறினார்.

அந்த சிறுவனோ, "ஒரு நாழிகை வேண்டுமானால் வைத்திருக்கிறேன். தனக்கும் நித்யானுஷ்டானங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மூன்று முறை அவர் பெயரை அழைக்க, ஒரு நாழிகைக்குள் வரவில்லையானால், அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிடுவதாக கூறியதும், ஒரு நாழிகைக்குள் வந்துவிடுவதாக கூறி சென்றார் ராவணன்.

அன்று பார்த்து நித்யானுஷ்டானங்களுக்கு எல்லா தடங்கலும் வந்தது. ராவணனால், ஒரு நாழிகைக்குள் முடிக்க முடியவில்லை.

ஒரு நாழிகை கடந்ததும், விநாயகர் மூன்று முறை "ராவணா" என கூப்பிட்டார். மந்திர ஜெபத்தில் கவனத்துடன் இருந்ததால், ராவணனால், விநாயகர் கூப்பிட்டதை கவனிக்க முடியவில்லை.

விநாயகர், கீழே ஆத்ம லிங்கத்தை பூமியில் வைத்துவிட்டு, தான் வந்தவழியே திரும்பி சென்றார்.

பூமியில் வைக்கப்பட்ட லிங்கம், கோகர்ணத்தில் பதிந்து போனது.

நித்யானுஷ்டானங்களை முடித்து வந்த ராவணனுக்கு, ஆத்மலிங்கம் பூமியில் வைக்கப்பட்டதை கண்டவுடன், உடனேயே அதை தூக்க முயற்சித்தான். முடியவில்லை. மிகுந்த கனம் ஏறிப்போயிருந்தது.

பெருமாள் தான் உருவாக்கிய "அஸ்தமன மாயையை" விலக்கிக்கொண்டார்.

ராவணனுக்கு, அனைத்தும் உடனேயே புரிந்து போனது. இனி, அந்த லிங்கத்தை அங்கிருந்து அசைக்க முடியாது என்ற எண்ணம் பயங்கர கோபத்தை உருவாக்கியது.

கோபத்துடன் லிங்கத்தை இழுத்த பொது, அது ஐந்து துண்டுகளானது. ஒன்று அங்கேயே பூமியில் பதிந்து இருந்தது. நான்கு துண்டுகளையும், நான்கு இடத்தில் தூக்கி வீச, ஒரு துண்டு லிங்கம், அதை வைத்திருந்த துணியுடன், முர்தேஷ்வரில் விழுந்தது.

ஆதலால் கோகர்ணத்தில் லிங்கம், ஒரு கூம்பு வடிவத்தில் வளைந்து இருக்கும்.

சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது?

முர்தேஷ்வர் கடற்கரை ஓரத்தில் மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. நான்கு திசைகளில், மூன்று நீர் சூழ்ந்திருக்கும் நிலையில் இறைவன் அமர்ந்திருக்க, நாம் சென்று பிரார்த்தித்தால், பிரார்த்தனை உடனே நிறைவேற்ற பட்டு, வாழ்க்கை மிகுந்த வளமாகும்.

இங்கு சிவபெருமானை 123 அடி உயரத்தில் பத்மாசனத்தில் தரிசிக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆத்மலிங்க உபாசனை பண்ண விரும்புகிறவர்கள், இங்கு சென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு, அவர் தரும் பிரசாதத்தை அருந்தி வந்தால், அவர் அருளால், நம் ஆத்மாவை. ஆத்மலிங்க உருவத்தில் மார்பில், சுழுமுனையில், சிரசில் உணர வைப்பார். அதில் பிடித்து, த்யானத்தில் மேலே ஏறி பலநிலைகளை கடந்து சென்றுவிடலாம்.  

கவனம், கேட்கவேண்டியது "நம் ஆத்மாவை" லிங்கரூப உபாஸனைக்கு. சிவபெருமானின் ஆத்மாவை லிங்கரூப உபாஸனைக்கு கேட்டுவிடாதீர்கள்! தவறாக கேட்டுவிட்டால், யார் எப்படி நம்மிடம் விளையாடுவார்கள் என கூற முடியாது. நமக்கும் தாங்க முடியாது.

அடியேனின் அனுபவம்:-

இந்த விஷயம் தெரிய வந்ததும், அங்கு வரை சென்று, "அடியேனுக்கு, ஆத்மலிங்க உபாஸனைக்கு அருளுங்கள்" என பிரார்த்தித்து, த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

யாரோ ஒரு வயதானவர் வந்து, தோளில் தட்டி, உணர்த்தி, "இந்தா! இதை சாப்பிடு! என இறைவன் சன்னதியில் நிவேதிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை தந்துவிட்டு போனார்.

இனிப்பு மனதை மென்மையாக்கும். அதுவே மனோபீஷ்டங்கள் நிறைவேற நிமித்தம்.

அதன் பின் ஆத்மலிங்க உபாசனை மிக எளிதில் கைவல்யமானது. பேச்சு மிகவும் குறைந்தது. எப்பொழுதும் ஒரு லிங்கம் மார்பில் அமர்ந்து உள்ளிருந்து வெளியே அழுத்துகிற உணர்வு வரும். மிக மிக மேன்மையானது முதல், மிக ஆபத்தான அனுபவங்கள் வரை, வரத்தொடங்கியது. எது வரினும் மனம் கலங்காமல் நின்றது. நடப்பவை அனைத்தையும் உற்றுப்பார்த்து, வாழ்ந்த பொழுது,

ஓரிடத்தில், ஒருவரிடம் இதை பற்றி கேள்வி எழுப்பினேன்.

"இதற்காகத்தான் எல்லோரும் அலைகிறோம். எனக்கு சொல்லிக்கொடு" என்றார்.

"பெரியவர் என்பதற்காக பேசினேன். யாரிடமும் பேசவே பிடிக்கவில்லை. பின்னர் இதை எப்படி தெளிவிக்க. வேண்டுமென்றால், அடியேன் உபாசனை பண்ணுகிற ஆத்மலிங்கத்தை தாரைவார்த்து விடுகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்" என சட்டென்று சொல்லிவிட்டேன்.

அவரும், அதே வேகத்தில் இருகையையும் சேர்த்து நீட்டினார்.

ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.

எதுவும் பேசாமல் அவர் இரு கரங்களையும் பற்றி, உபாசனை முத்திரைகள் செய்து, ஆத்மலிங்கத்தை, தானம் செய்துவிட்டேன். அன்று வணங்கி சென்றவர்தான். இன்றுவரை சந்திக்கவே இல்லை. அன்று செய்தது சரியா, தவறா என தோன்றவே இல்லை.

பின்னர் தான் குடும்ப வாழ்க்கை அமைந்தது. இன்றும் இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.

"தானம் செய்தது சரியா/தவறா என்று அன்று உணரவில்லை. நீங்கள் செய்த அருளை தானம் கொடுத்துவிட்டேன். மறுபடியும் கேட்கிறேன். ஆத்மலிங்கத்தை மறுபடியும் அருளுங்கள். இம்முறை தங்களை விட்டு விலகேன்" என்று.

அவரும், "பார்க்கலாம்" என்று ஒரு பாணியாக பதில் கூறுகிறார்!

இது போன்ற அனுபவங்கள் பெற முர்டேஸ்வர் சென்று வாருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................. தொடரும்!

Friday, 25 September 2020

சித்தன் அருள் - 923 - ஆலயங்களும் விநோதமும் - பெரும்திருக்கோவில், அலத்தியூர், திரூர், மலப்புரம் மாவட்டம், கேரளா!


அலத்தியூர் பெரும் திருக்கோயில், ராமர் மட்டும் தனியாக இருக்கிற கோவில் என்றாலும், அவருக்கு அருகில் தனி சன்னதியில் பவ்யமாக நின்று செவிமடுக்கும் தோரணையில் நிற்கும் அனுமன் பெயரில் தான் மிக பிரசித்தம்.

இந்தக்கோவில், ராமர் மூலஸ்தானத்தில் தனியாக அமர்ந்திருக்கிறார். அவர் முக பாவனை காணவேண்டிய ஒரு அதிசயம். ஆம்! சீதையை தேடிப் போகப்போகிற அனுமனிடம், ரகசியமாக சில விஷயங்களை, சங்கேத மொழியை, பிறர் யாரும் கேட்காத நிலையில், கூறுவது போலவும், பக்கத்து சன்னதியில், அனுமன் கைகட்டி, சற்றே தலை சாய்த்து நின்று கேட்டுக் கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

வசிஷ்ட முனிவர் இந்த கோவிலை கட்டி ராமர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.

இங்கு இருக்கும் அனுமன் மிக வரப்பிரசாதி. குழந்தைகளின் காவலன்- துர்ஸ்வப்னம், மூளை சம்பந்தமான பிரச்சினைகள் விலக்கி, மனோபீஷ்டம் போன்றவைகளை நிறைவேற்றுபவர்.

சரி! நமக்கு இங்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது!

மூலஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராமபிரானின் ரகசியம் உரைக்கிற முகபாவம்.

பவ்யமாக கைகட்டி, தலை சாய்த்து ராமர் கூறுகிற ரகசிய மொழியை கேட்கிற அனுமனின் நின்ற கோலம்.

குழந்தைகளின் மனநிலை நன்றாக அமைய அனுமனிடம் வேண்டிக்கொள்ளலாம்.

அனுமன் கடலை தாண்டியதின் மூலம் பிரச்சினைகள் விலகியது போல், நம் வாழ்விலும் மனோபீஷ்டங்கள் நிறைவேற, இந்த கோவிலில் இருக்கும் ஒரு பாறாங்கல்லை தாண்டினால், அதை தாண்டுபவரின் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் விலகும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

Thursday, 24 September 2020

சித்தன் அருள் - 922 - திருப்பதி பெருமாளுக்கு "கோவிந்தா" என்ற திருநாமம் எப்படி வந்தது!


சில நாட்களுக்கு முன், திருப்பதி வேங்கடவரை, நம் அகத்தியப்பெருமான்தான் முதன் முறையாக "கோவிந்தா" எனும் பெயர் கூறி அழைத்தார் என்பது தெரியவர, அதை சித்தன் அருளில் எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் ஏனோ நேரம் கிடைக்கவில்லை. தற்போதைய "ஆலயங்களும் விநோதமும்" தொடர் அடியேனின் முழு நேரத்தையும் வாங்கிக்கொண்டது.

சரி! பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.

சமீபத்தில், சிங்கப்பூரில் வசிக்கும், அகத்தியர் அடியவர், திரு.ஸ்ரீனிவாசன் பழனிச்சாமி என்பவர், "கோவிந்தா" நிகழ்ச்சியை தட்டச்சு செய்து, அடியேனுக்கு அனுப்பித்தந்தார். இதை அகத்தியப்பெருமானின் சித்தன் சித்தன் அருள் வலைப்பூ வழி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் என வேண்டிக்கொண்டார்.

அவருக்கு அடியேனின் மனமார்ந்த நன்றியை கூறிவிட்டு, தொகுப்பை கீழே தருகிறேன்!

பகவான் விஷ்ணு மஹாலக்ஷமி தாயாரை தேடி பூலோகம் வந்த பொழுது இந்த சம்பவம் நடந்தது.    பெருமாள் பூலோகம் வந்த பிறகு அவரும் மனிதர்களை போன்றே பசி, தாகம் போன்றவைக்கு ஆட்பட்டார். ஆகவே, ஸ்ரீநிவாஸப்பெருமாள்  அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு சென்று "முனீந்திரரே!  நான் பூவுலகிற்கு ஒரு குறிப்பிட்ட பணிக்காக வந்திருக்கிறேன், கலியுகம் முடியும் வரை இங்கு இருப்பேன்.  எனக்கு பசும்பால் மிகவும் விருப்பம், ஆகையால், எனது தினசரி தேவைகளுக்கு ஒரு பசு தேவை, உங்களிடம் உள்ள பெரிய கோசாலையில் நிறையபசுக்கள் உள்ளனவே. அதில் இருந்து எனது தேவைக்கு ஒன்று தர முடியுமா?" என்று கேட்டார்.

அகஸ்தியர் குறுநகை புரிந்தவாறு கூறினார், "ஸ்வாமி, தாங்கள் ஸ்ரீநிவாஸனாக மனித உருவில் வந்துள்ள பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு என்பது எனக்கு நன்றாக தெரியும். இந்த லோகத்தை உருவாக்கியவரும், ஆள்பவருமான தாங்கள் அடியேனின் ஆஸ்ரமத்திற்கு வந்து உதவி கேட்கிறீர்கள்  என்பது அடியேனுக்கு ஆனந்தத்தை அளிக்கிறது.  தாங்களே மாயா சக்தி என்பதும், அடியேனின் பக்தியை சோதிப்பதற்காக வந்துள்ளீர்கள் என்பதையும் உணர்கிறேன்".

"ஆகையால் தேவா, அடியேனை சாஸ்த்திரத்தை அனுஷ்டிக்க அனுமதியுங்கள்.  புனிதமான பசுவை தன்னுடைய மனைவியுடன் வந்து கேட்பவருக்கே தானம் அளிக்க வேண்டும்.  அவ்வாறு செய்வதற்கு நான் நிச்சயமாக மகிழ்வுடன்  இருக்கிறேன். ஆகவே, தாங்கள் எனது தாயாரான மஹாலக்ஷ்மியுடன் வந்து கேட்குமாறு விண்ணப்பிக்கிறேன். அதுவரை அடியேனை மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

பகவான் ஸ்ரீநிவாஸர் சிரித்தவாறு "சரி மூனீந்த்ரா, உன் விருப்பப்படியே செய்கிறேன்", என்று கூறி தன் இடம்  ஏகினார்.

பிறகு பத்மாவதி தாயாரை திருமணம் புரிந்தார்.   திருமணத்திற்கு சில நாட்களுக்கு பின் அகஸ்திய மஹாமுனிவரின் ஆஸ்ரமத்திற்கு தனது பட்டமகிஷியுடன் புனிதமான பசுவை தானம் கேட்க எழுந்தருளினார்.  முனிவர்அவ்வேளையில் வேறிடம் சென்றிருந்தார்.

அகஸ்த்தியரின் சிஷ்யர்களுக்கு வந்தது பகவான் ஸ்ரீநிவாஸர் என்பது தெரியாத காரணத்தால் அவர் வந்த காரணத்தை வினவினர்.

பகவான் உரைத்தார்."எனது பெயர் ஸ்ரீநிவாஸன், இவள் எனது மனைவி பத்மாவதி.உங்கள் ஆச்சாரியரிடம் எனது தினசரி தேவைகளுக்காக நான் ஒரு பசுவை தானமாக கேட்டிருந்தேன்.  எனது மனைவியுடன் வந்துகேட்க அவர் விரும்பியதால் நான் இப்பொழுது வந்துள்ளேன்" என்றார்.

"எங்கள் ஆச்சாரியர் தற்பொழுது ஆஸ்ரமத்தில் இல்லை. ஆகவே, பிறகு வந்து பெற்று செல்லுங்கள்" என்று பணிவாக சிஷ்யர்கள் உரைத்தனர்.

குறுநகையுடன் பகவான் ஸ்ரீநிவாஸன்,

"ஏற்கிறேன்.  ஆனால் இந்த ஜகத்தை ஆள்பவன் நான், ஆகவே என்னை நம்பி பசுவை தானமாக கொடுக்கலாம்.  நான் திரும்பவும் வர இயலாது" என்றார்.

அதற்கு சிஷ்யர்கள், "நீங்கள் இந்த இடத்தையோ அல்லது மொத்த ஜகத்தையோ  ஆள்பவராக இருக்கலாம்.  ஆனால், எங்கள் ஆச்சாரியரே எமக்கு அனைத்திற்கும் மேலானவர், அவரை வருத்தமடைய செய்யும் எச்செயலையும் செய்வதற்கில்லை, மேலும் அவர் அனுமதி இல்லாமல் எதையும் நாங்கள் செய்வதில்லை" என்று உறுதியாக பதிலுரைத்தனர். 

குறுநகை புரிந்த பகவான்,

"ஆச்சாரியரின் மீதான உங்களது பக்தியை நான் மதிக்கிறேன்.  உங்களது ஆச்சாரியர் திரும்பியதும், ஸ்ரீநிவாஸன் ஞானாத்ரி மலையில் இருந்து தன் மனைவியுடன் பசுவை தானமாக பெறவந்தேன் என்பதை கூறவும்"  என பதிலுரைத்துவிட்டு திருமலையில் இருக்கும் ஏழுமலை நோக்கி நடக்கஆரம்பித்தார்.
 
சரியாக இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அகஸ்த்திய முனிவர் தனது ஆஸ்ரமம் வந்தடைந்தார்.  சிஷ்யர்கள் மூலம் நடந்ததை அறிந்து மனம் வருந்தினார்.

சத்தமாக "என்ன துரதிர்ஷ்டம், ஸ்ரீமந் நாராயணனும், லோகமாதா லக்ஷ்மியும் வந்த பொழுது நான் இங்கில்லாமல் போனேனே" என்றவாறு மஹாமுனிவர் கோசாலைக்கு விரைந்து சென்று ஒரு "கோவு"(பசுவை தெலுங்கில் அழைக்கும் சொல்) ஒன்றை பிடித்துக்கொண்டு தாயாரும், பெருமாளும் சென்ற திசையில் ஓடினார்.

சில அடிகள் ஓடிய பிறகு தொலை தூரத்தில் ஸ்ரீநிவாஸன் அவர் மனைவி பத்மாவதியுடன் நடந்து செல்வதைகண்டார்.

அவர்களை பின் தொடர்ந்து ஓடியவாறு தெலுங்கில் "ஸ்வாமி, கோவு இந்தா (கோவு - பசு, இந்தா- எடுத்துக்கொள்ளவும் - இந்த பசுவை  எடுத்துக் கொள்ளுங்கள்), கோவு இந்தா, கோவு இந்தா என்றவாறு அழைத்தார்.  ஆனால், பகவான் திரும்பவில்லை.  இதை பார்த்த பிறகு சத்தமாக "ஸ்வாமி கோவு இந்தா" என்றவாறு கூப்பிட்டுக் கொண்டு மிகவும் வேகமாக ஓடினார். அவர் "ஸ்வாமி கோவு இந்தா" என்று கூறியவாறு ஓடியது "ஸ்வாமி கோவிந்தா ஸ்வாமி கோவிந்தா ஸ்வாமி கோவிந்தா" என்று ஒலித்தது.  இவ்வாறு மேலும் சிலமுறை ஒலித்ததும் புன்முறுவலுடன் திரும்பி பெருமாளும், தாயாரும் பசுமாட்டை பெற்றுக்கொண்டு,

"ப்ரியமுனீந்த்ரா தெரிந்தோ தெரியாமலோ எனக்கு மிகவும் ப்ரியமான கோவிந்த நாமத்தை 108 முறை கூறிவிட்டாய்.  நான் 28வது கலியுகம் முடியும் வரை சிலா வடிவில் ஏக மூர்த்தியாக ஞானத்ரி மலையில் வசிக்கவுள்ளேன். நான் பூவுலகில் இங்கு சிலா ரூபத்தில் வசிக்கும் வரை பக்தர்கள் என்னை இதே பெயரால் அழைப்பார்கள்”.

“எனக்கு இப் புனிதமான ஏழுமலையில் ஒரு கோவில் நிர்மாணிக்கப்படும். பெருந்திரளான பக்தர்கள் இங்குதினமும் வந்தவண்ணம் இருப்பர்.  அவ்வாறு வரும் பக்தர்கள், மலை ஏறும்பொழுதோ அல்லது சன்னதியில் எனது முன்பாகவோ இந்த நாமத்தால் அழைப்பார்கள்".

"நன்றாக நினைவில் கொள் முனீந்திரா, ஒவ்வொரு முறை என்னை இந்த நாமம் சொல்லி அழைக்கும் பொழுதும், நீயும் நினைக்கப்படுவாய்.  யாரேனும் பக்தர்கள், ஏதேனும் காரணங்களால்  எனது கோவிலுக்கு வர முடியாமல் போனாலும் "கோவிந்தா" என்ற இந்த நாமத்தை எத்தனை முறை கூறினாலும் அவர்களது நியாயமான கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்". "மேலும் இந்த ஏழுமலையில் ஏறும்பொழுது யாரெல்லாம் குறைந்தபட்சம் 108 முறை கூறுகிறார்களோஅவர்களுக்கு நான் மோக்ஷம் அளிப்பேன்" என்றார்.

இதுவே "கோவிந்தா!" என மலையில் பக்தர்கள் வாய்விட்டு கூறக்காரனாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

"கோவிந்தா" எனும் பொழுது, நம் குருநாதரையும் நினைக்கிறோம்,  நமது நியாயமான கோரிக்கைகள் பெருமாளால் அருளப்படுகிறது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்..................தொடரும்!

Wednesday, 23 September 2020

சித்தன் அருள் - 921 - ஆலயங்களும் விநோதமும் - மங்களேஸ்வரர் கோவில், உத்தரகோசமங்கை, ராமநாதபுரம்!


உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.

இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.

இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.

இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு.

ஆருத்திரா தரிசனம் இவ்வூரின் சிறப்பாகும். மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.

உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.

இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே, சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு. 

ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.

மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுருக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான்.

இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சி தந்தார். அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். வண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால், குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

மார்கழித் திருவாதிரையில் மரகத நடராஜருக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது?

சஹஸ்ரலிங்கம் இறைவன் முதன் முதலாக உருவாக்கிய இடம். 

பொதுவாக, தாழம்பூவை சிவ பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................தொடரும்!

Tuesday, 22 September 2020

சித்தன் அருள் - 920 - ஆலயங்களும் விநோதமும் - ராஜராஜேஸ்வரர் கோயில், தளிப்பரம்பு, கண்ணூர், கேரளா!


ராஜராஜேஸ்வர கோயில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கேரளாவின் பிரசித்தி பெற்ற 108 சிவாலயங்களில் ஒன்றாகும். தென் இந்தியாவில் பிற கோயில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பக்தர்கள் இக்கோவிலில் வந்து பிரசன்னம் பார்ப்பது வழக்கம். பிரசன்னம், கோயிலின் வெளியே அமைந்துள்ள ஒரு பீடத்தில் வைத்து பார்க்கப்படும். இந்துக்கள் அல்லாதவர்கள் இக்கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலானது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கம்.

ராமர் சீதையைக் காப்பாற்ற இலங்கைக்குச் சென்று போரில் வென்ற பின், இங்கே வந்து சிவனை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாய் இக்கோயிலின் நமஸ்கார மண்டபத்தினுள் இன்றும் யாரையும் அனுமதிப்பதில்லை.

இக்கோயிலில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து ராஜராஜேஸ்வரராக இருக்கின்றனர்.

இக்கோயிலில் இருந்த ஏழு அடுக்கு கோபுரமானது திப்பு சுல்தானால் 18 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கோபுரத்தின் சிதறல்கள் கிழக்கு வாசலில் கிடக்கின்றன. இக்கோபுரத்தை முன்னின்று இடித்தவரை பாம்பு கடித்ததால், அதன் பின் தொடர்ந்து இடிக்கவில்லை என்பது செய்தி.  

இக்கோயிலில் மற்ற சிவன் கோயிலைப் போல் வில்வ இலை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக துளசி இலை பயன்படுத்தப்படுகிறது.

சரி! இங்கு நமெக்கென்ன உள்ளது.

இந்த கோவிலில், "நெய் அமிர்து" பிரார்த்தனை மிகுந்த சக்தி வாய்ந்தது. கோவிலில் ஒரு சிறு பாத்திரத்தில், நெய் விட்டு, இலையால் மூடி கொடுப்பார்கள். இதை வாங்கி, இறைவன் முன் வைத்து, நம் பிரார்த்தனையை சமர்ப்பித்தால், அது உடனேயே நிறைவேறும்.

பகல் நேரத்தில் சிவ பெருமான் த்யானத்தில் அமர்ந்திருப்பதால், பெண்கள் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இரவு 8 மணிக்கு பூஜையின் பொழுது, அம்பாள் சிவபெருமானை வந்து சேர்வதாக ஐதீகம். அதற்குப்பின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பெண்களுக்கு தரிசன அனுமதி உண்டு.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

Monday, 21 September 2020

சித்தன் அருள் - 919 - ஆலயங்களும் விநோதமும் - உஜ்ஜீவநாதர் கோவில், உய்யக்கொண்டான் மலை, திருச்சி!


மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி "உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா" என்று கேட்ட போது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். தன்னை எமன் துரத்துவதை சொன்னார். இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.

  • இக்கோவிலில் கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி, சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.
  • 50 அடி உயர மலைக்கோயில் - ஓம் வடிவில் அமைந்துள்ளது.இங்குள்ள நடராஜர் சிலை பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்டா தேவி வழிபாடு இங்கு செய்யப்படுகிறது.

இத்தலத்தில் வசிப்போர் நீண்ட ஆயுளையும், நிறைந்த செலவங்களையும் பெறுவர். வழிபடுவோர்க்கு எம பயமில்லை என்று தலபுராணம் கூறுகிறது.

குழந்தைகளுக்கு ஜாதகத்தில் உள்ள பாலாரிஷ்டம் நீங்க, பாலாம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

கொடிமரம் முன்பு மார்க்கண்டேயனைக் காப்பதற்காக, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Sunday, 20 September 2020

சித்தன் அருள் - 918 - ஆலயங்களும் விநோதமும் - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா!


அகத்தியப்பெருமான் தென்புலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த நேரம். கிரௌஞ்சன் என்கிற அரக்கன், மலை உருவெடுத்து இருந்து, அங்கு தவமியற்ற வரும் சாதுக்களையும், சன்யாசிகளையும், கொன்று வந்தான். 

இதை அறிந்த அகத்தியப்பெருமான், "மலையுருவெடுத்த நீ மலையாகவே இருக்கக்கடவது! என் அப்பன் முருகப்பெருமான் வேல் கொண்டு உன்னை அழிப்பார்!" என சபித்தார். மலையாக உருவெடுத்த அரக்கன், மலையாகவே இறுகிப்போனான்.

எங்கும் முன் போல் போய் அசுர புத்தியை காட்ட முடியாமல் போகவே, மலையாகவே இருந்து, தன்னை தேடி வந்த அசுரர்களுக்கு, மலைக்குள்ளேயே ஒளிவதற்கு இடம் கொடுத்து வந்தான்.

தாரகாசுரனுடன் யுத்தம் செய்த பொழுது, அசுரர்களுக்கு கிரௌஞ்ச மலை அடைக்கலம் கொடுப்பதை அறிந்து, தன் வேலினால் மலையை இரண்டாக பிளந்து, கிரௌஞ்சனையும், அசுரர்களையும் முருகர், வதம் செய்தார்.

ராமாயணம், மஹாபாரதம், ஸ்கந்த புராணம், போன்ற புராண இதிகாசங்களில், கிரௌஞ்சகிரி பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த மலையில் அம்பாளுக்கும், முருகப்பெருமானுக்கும் (குமாரசுவாமி) தனித்தனி கோவில்கள் உள்ளது. இங்கு இருக்கும் விநாயகப்பெருமான் மிக பிரசித்தம். அத்தனை சக்தி வாய்ந்தவர்.

700 - 800ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட கோவில். முருகர் ஒரு 15 அடி உயரத்தில் இருப்பார். அம்பாளுக்கும், குமாரஸ்வாமிக்கும் தனித்தனி சன்னதி! இங்கு எல்லாமே, நம் எண்ணத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

சூரபத்மனை நம்முள் இருக்கும் அகங்காரமாகவும், கிரௌஞ்சனை நம் கர்மாவாகவும் விவரித்து, முருகப்பெருமான் கையிலிருக்கும் வேலை "ஞான சக்தியாகவும்" திருப்புகழ் விவரிக்கின்றது. முருகனன்றி வேறொருவரும், நம் கர்மாவை அழித்து, பிறவிப்பெருங்கடலை தாண்டிட உதவிடார் என உரைக்கின்றது.

சரி! இங்கு நமெக்கென உள்ளது!

அம்பாள் சன்னதியில், முருகர், எனக்கு வேண்டாம் என கக்கிய தாய்ப்பால், கட்டியாக வைத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் போய் பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம்! சிறுது உண்டு பார்த்தால், முதலில் விபூதி வாசனை வரும், பின்னர் பால் மணம் வரும், நம் நாக்கில்!

மிகுந்த இரைச்சலான நகர வாழ்க்கையில் வசிப்போர், ஒரு முறை இங்கு சென்று வர வேண்டும். நம் குருநாதர், அகத்தியப்பெருமான் சொல்கிற, மிக, மிக அமைதி என்ன என்பதை, அப்பொழுது உணரலாம். இயற்கையின் அமைதி நம்மை அப்படியே கட்டிப் போட்டுவிடும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்! 

Saturday, 19 September 2020

சித்தன் அருள் - 917 - ஆலயங்களும் விநோதமும் - திருமறைநாதர் கோயில், திருவாதவூர், மதுரை!


தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்டமுழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்  கரியோய் நீ 
வேண்டிஎன்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும்அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில் 
அதுவும் உன்றன் விருப்பன்றே.

என திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்து, வளர்ந்து, இறைவனிடம் தீக்ஷை பெற்ற ஊர்.

திருமறைநாதர் கோயில் திருவாதவூர், மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்கே எட்டு கி.மீ., தொலைவிலும் உள்ள திருவாதவூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வேதநாயகி அம்மன் உடனுறை திருமறைநாதர் மூலவராக காட்சி அளிக்கிறார்.

சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது.

ஒரு சமயம் திருக்கயிலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) சிவபெருமான், மறைக்கச் செய்தார். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனத்தை வேண்டினார். 'திருவாதவூர் சென்று வழிபட, தொலைந்த வாகனம் கிடைக்கும்' என்று இறைவன் அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர் வந்த பைரவர், இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல சனி, பைரவர் மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும்.

மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.

இங்கு தான் சிவபெருமான் தனது கால் சிலம்பொலியை மாணிக்கவாசகரை கேட்கச் செய்தார். இந்த மண்டபத்தை அமைத்தவர் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. கரத்தில் திருவாசக சுவடி ஏந்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன உள்ளது?

ஒருமுறை, பெருமாளுக்கு, பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கவே, அவர், தாயாரை பிரிந்து, இது விலகுவது எப்பொழுது, எப்படி என தேடி, பல இடங்களுக்கும் சென்ற பின், கடைசியாக இங்கு வந்தார். அவர் உணர்வுகள் ஒன்றி, மனம் அமைதியாகிவிடவே, இவ்விடத்திலென்ன உள்ளது என அறிய விரும்பினார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, ஒரு வண்டானது பறந்து வந்து, அருகிலுள்ள தடாகத்தில் பூத்திருந்த ஒரு தாமரையின் உள்ளே அமர்ந்தது. உடனேயே தாமரை தன் இதழ்களை மூடி அந்த வண்டை தன்னுள் அணைத்துக் கொண்டது.

இதைக்கண்ட பெருமாள், அந்த தடாகத்தில் இறங்கி, நீருடன் நீராக கலந்து, தவமிருக்கலானார். அவரின் தவ சக்தி நாளுக்கு நாள் பெருகி கொண்டே சென்றது. ஒரு நிலையில் பெருமாளின் தவசக்தியை தாங்க முடியாமல், தாமரையில் அமர்ந்த வண்டானது, சிவபெருமானாக வெளிவந்து, பெருமாளை "நாராயணா! வெளியே வா!" என்றழைத்தார். "நாரம்" என்றால் நீர். "அயணம்" என்றால் கலந்திருத்தல். நீரோடு நீராக கலந்திருந்ததால் "நாராயணன்" என சிவபெருமான், பெருமாளை அழைத்தார். பெருமாளை "நாராயணா" என்று முதல் முதலாக அழைத்த இடம், திருவாதவூர்.

சிவபெருமானுக்கு, பெருமாளே கட்டிய கோவில் இது. அதற்கு "நாராயண சேனை" அவருக்கு உதவியாக இருந்தது.

சிவபெருமான் தவத்தில் இருந்த இடம் ஆதலால், தவத்தில் திளைப்பவர்களுக்கு, மிகுந்த அமைதியை, தியானத்தின் பொழுது கொடுக்கு இடம். மீண்டும், மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என ஒருவரை கவர்ந்திழுக்கும் இடம்.

த்யானத்தில் அமர்ந்தால், எந்தவித சப்தமும், உள்ளே நுழையாது. அப்படி ஒரு அமைதியை தரும் கோவில்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!

Friday, 18 September 2020

சித்தன் அருள் - 916 - ஆலயங்களும் விநோதமும் - காளமேகப் பெருமாள், திருமோகூர், மதுரை!


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோனவூர் என்றிருந்து, பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறதுமதுரையிலிருந்து ரயில் நிலையத்திலிருந்து, பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர் அமைந்துள்ளது.

சக்கரத்தாழ்வார், சுதர்சனர் அம்சம். அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.

மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே.

சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது.

மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம்.

இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

பொதுவாக, பெருமாள் கோவில்களில், தீர்த்தம், சடாரி, துளசி போன்றவை சன்னதியிலிருந்து பிரசாதமாக வழங்கப்படும். இங்கும் அவை கொடுக்கப்படுகிறது.

முன்னொருகாலத்தில், இந்த கோவிலானது, மண்மறைந்து போனது. எப்பொழுதோ மண்ணுக்குள்ளிருந்து சிலை கிடைக்கவே, அது பெருமாளா அல்லது சிவபெருமானா என்கிற ஐயப்பாடு வரவே, ஊரிலும், ஊரை சுற்றிய கிராமத்திலும் இதைப் பற்றி விசாரித்திருக்கின்றனர். அனைத்து கிராமத்தினரும், ஒரு வயதான, கண் பார்வை இழந்த, சலவைக்காரரை போய் விசாரிக்கும்படி கைகாட்டினார்.

பக்கத்து கிராமத்தில் இருந்த அவரை கண்டுபிடித்து, விவரத்தை கேட்க, அவரோ, தனக்கு முற்றிலும் கண் பார்வை போய்விட்டபடியால் சிலையை பார்த்துக் கூறுவது கடினம் என்றார். இருப்பினும், ஒரு விஷயம் செய்து கொண்டு வருவதாயின், பதில் கூறுகிறேனென்றார்.

அவரது சிறு வயது முதலே பெருமாள் கோவில் வஸ்திரங்களை, இலவச சேவையாக, துவைத்து கொடுத்து வந்திருந்தார். பெருமாளுக்கு உடுத்தியிருந்த வேஷ்டியின் நறுமணம், அவர் உணர்வில் அன்றும் தங்கியிருந்தது.

ஆதலால், பெருமாளுக்கு, அபிஷேகம் செய்து, ஒரு துண்டால் துவட்டி கொண்டு வரச்செய்து, துண்டை பிழிந்து, அந்த தீர்த்தத்தை அருந்தியபொழுது, "அடடா, இது பெருமாள் கோவில் விக்கிரகம் அல்லவா!" என்று உரைத்தார். அன்றுடன், அர்ச்சகருக்கும், ஊர் பெரியவர்களுக்கும் இருந்த சந்தேகம் தீர்ந்தது.

இது தனக்கு சேவை செய்த சலவைக்காரனை பெருமை படுத்துவதற்காக, பெருமாள் நடத்திய நாடகம்.

ஆனால், இன்றும், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்துகிற பொழுது, துண்டினால் துவட்டி, அதை பிழிந்து தீர்த்தமாக கொடுப்பார்கள். இது கிடைப்பதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

Thursday, 17 September 2020

சித்தன் அருள் - 915 - ஆலயங்களும் விநோதமும் - கவி கங்காதீஸ்வரர் கோவில், சிவகங்கா, பெங்களூரு, கர்நாடக மாநிலம்!


கவி கங்காதீஸ்வரர் கோவில், சிவகங்கா, பெங்களூருவிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திலும், தும்கூரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

சிவகங்கா மலையையே சிவலிங்கமாக கருதி வழிபடுகின்றனர். இந்த மலையில் மூன்று இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளது.

1. அடிவாரத்திலிருந்து சற்று உயரத்தில் கங்காதீஸ்வரர் கோவில். குடவரை கோவில், சற்று பருமனான சிவலிங்கம். (மலையின் கீழ் பாகம்).

2. மலையில் 40 நிமிடம் ஏறிச்சென்றால் ஒரு சிவன் கோவில். மலை மேலிருந்து ஓடிவரும் கங்கை நீர் கோவிலுக்கு உள்ளே பாறையின் அடியில் ஓடி செல்லும். அங்கும் சிவபெருமான் லிங்க ரூபத்தில் அமர்ந்துள்ளார். (மலையின் நடு பாகம்).

3. மலையின் உச்சியில் அம்பாள், நந்திதேவர் இருவருக்கும் சன்னதி உள்ளது. (மலையின் உச்சி பாகம்).

சரி! இங்கு நமெக்கென என்ன உள்ளது?

குடவரை கோவிலில் உச்சிகால அபிஷேக, பூஜையின் பொழுது, அபிஷேகத்துக்கு நெய் வாங்கிக்கொடுத்தால், பூஜை முடிந்தபின் அதையே நமக்கு பிரசாதமாக தருவார்கள். அந்த நெய் அபிஷேகத்துக்குப்பின், வெண்ணையாக மாறியிருக்கும். நெய், வெண்ணையாகிற அதிசயத்தை இங்குதான் காண முடியும். அந்த பிரசாதம் எந்தவிதமான நோயையும் குணப்படுத்தும்!

மலையின் நடுவில் உள்ள கோவிலில், கங்கை நீர், பாறைக்கு அடிவழியாக ஓடுகிறது. சப்தம் கேட்கலாம். காண முடியாது. அந்த பாறையில் ஒரு ஓட்டை உள்ளது. அதன் வழியாக கையை உள்ளே நுழைத்தால், அப்படி செய்பவர் புண்ணியம் செய்தவராக இருந்தால், கங்கை தாவி அவர் கையில் ஏறிச் செல்வாள். நாம் அதை தீர்த்தமாக அருந்தலாம். எந்த உடல் பிரச்சினையும் உடனே தீரும். ஒருவர் தன்னைத்தானே நல்லவரா, புண்ணியம் செய்தவரா என சோதனை செய்து கொள்ள சிறந்த இடம்.

மேலும் இந்த மலையில் அகஸ்தியர், கண்வ முனி, கபிலர் போன்றவர்கள் உருவாக்கிய புண்ணிய தீர்த்தங்களும், உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

Wednesday, 16 September 2020

சித்தன் அருள் - 914 - ஆலயங்களும் விநோதமும் - அங்குண்டீஸ்வரர் கோவில், சுத்தமல்லி, திருநெல்வேலி!


தாமிரபரணி கரையில் கீழச்செவல் கிராமத்திற்கும், சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதி சித்தர்காடு. பரசுராமர் பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. சித்தபுரி, வேதபுரி, ரிஷிபுரி, சித்தர்காடு, சித்தவல்லி, சித்தமல்லி, சுத்தமல்லி என்று பல நாமங்களை கொண்டது இந்த இடம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலத்தில் பதினெண் சித்தர்கள், முனிவர்கள், தேவர்கள் வழிபட்டுள்ளனர்.

வேதவியாசரின் சீடரான சூதமா முனிவர், இந்தக் கோவிலின் பெருமையைப் பாடலாக தாமிரபரணி மகாத்மியத்தில் பாடியுள்ளார். இக்கோவிலில் பங்குனி மாதம் வரும் பரணி நட்சத்திரத்தில் இறைவனை வழிபட்டால் அனைத்து நற்பலனும் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

ஒரு சமயம் சரஸ்வதி தேவிக்கு, துர்வாச முனிவரால் சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மனுடன் சரஸ்வதி தேவி சித்தர்காட்டிற்கு தவம் செய்ய வந்தாள். அவள் பூஜிப்பதற்காக மாணிக்க லிங்கம் ஒன்றை, தேவ சிற்பியான விஸ்வகர்மா வடிவமைத்தார். அந்த லிங்கம் அங்கிருந்த பாறை மீது சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்தது. சித்தர்காட்டில் உருவான அந்த லிங்கத்திற்கு ‘சித்தீஸ்வரர்’ என்று பெயர்.

ஆரம்ப காலத்தில் இந்த ஈசனை அகத்தியர் வழிபட்டு வந்துள்ளார். அவர் உலகை சமன் செய்ய பொதிகைமலை வந்தார். அங்கு கயிலைநாதனான சிவபெருமானை வணங்க ஆவலாய் இருந்தார். ஒவ்வொரு நாளும் தீர்த்த யாத்திரையாக தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று வந்தார். அப்போது இந்த இடத்தில் நின்றபடி “ஈசனே நான் உம்மை கயிலாயமலையில் உள்ளபடியே பூஜிக்க வேண்டும்” என்று வேண்டினார்.

அப்போது சரஸ்வதிதேவி பூஜை செய்த இறைவன், அகத்தியருக்கு காட்சியளித்தார். உடனே அகத்தியர் “இறைவா! தாங்கள் கயிலாயநாதர். பனிபடர்ந்த மலையில் குளர்ச்சியாக வாழ்பவர். இங்கேயும் நீங்கள் தான் தோன்றினீர்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அப்போது “அங்கு (கயிலாயம்) நான் உண்டு என்றால், இங்கும் உண்டு” என ஒரு அசரீரிவாக்கு கேட்டது. எனவே இந்த இறைவனுக்கு ‘அங்குண்டீஸ்வரர்’ என்று அகத்தியர் பெயரிட்டு வணங்கினார்.

பரணி நட்சத்திரத்தில் கூடிய நன்னாளில் ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து மீன-பரணி வைபவத்தைக் கொண்டாடி ஆனந்தம் அடைந்துள்ளார். ஸ்ரீசக்ர நாயகி அன்னை ஸ்ரீ மாதா, இங்கு ஈசனைப் பூஜித்துக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம். பதினெண் சித்தர்களும், இதற்கு முன் வாழ்ந்த ஸ்ரீ சந்தானு மகானு பாவுலு சித்தரும் தங்களது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்கு வதற்கு முன்பாக, இத்தல சித்தீஸ்வரரை வணங்கி, அந்த சக்தி முழுவதையும் இந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இந்த இறைவன் ‘ஆதி மருந்தீஸ்வரர்’ என்றும் திருநாமம் கொண்டுள்ளார்.

காலங்கள் கடந்தது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு, சித்தீஸ்வரரை தரிசிக்க வந்தார். சுத்தமல்லியில் உள்ள தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்றபடியே சிவனை பாா்த்தார். இறைவனோ வெள்ளத்துக்குள் மூழ்கி இருக்கிறார். தவணை தீர்த்தக்கட்டத்தில் நின்று கொண்டு, “நான் உம்மை எப்படி வழிபடுவது?” என வேண்டினார்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. வடகரையில் கந்தர்வன் அமைத்த ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கி செல். அவரும் வேறு யாரும் அல்ல நான் தான் என உரைக்கும் வண்ணம், “அங்கு (தாமிரபரணி நதிக்குள்) நான் உண்டெனில், இங்கும் (வடகரையில்) நான் உண்டு” என்று அந்த அசரீரி சொன்னது. எனவேதான் வடகரையில் உள்ள சிவனும் ‘அங்குண்டீஸ்ரமுடையார்’ என பெயர் பெற்றார்.

கந்தர்வன் ஒருவன் துர்வாசரின் சாபத்தால் நாரையாக மாறினான். தனக்கு சுயஉருவம் கிடைக்க சிவபெருமானை நினைத்து தவம் செய்தான். ஆடாமல் அசையாமல் சமாதி நிலைக்கு சென்றான். பிரம்மா, புலிந்தமலை மேல் இருந்து கசாலிகா தேவியை நதியாக ஓடிவரச் செய்தார். அந்த நதி சமாதி நிலையில் இருந்த கந்தர்வனை வெகு தூரம் அடித்து வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் வீசியது. கந்தர்வன் கண்விழித்தபோது, ரிஷி பத்தினியான அக்னிசிகாவின் ஆசிரமம் தென்பட்டது.

ரிஷிபத்தினி, கற்கள் நிறைந்த ஒரு கலசத்தை கந்தர்வனிடம் கொடுத்தார். அதை வைத்து அவன் பூஜித்து வந்தான். சில நாட்களில் கலசத்தில் இருந்த கற்கள் அனைத்தும் சேர்ந்து சிவலிங்கமாக மாறியது. அதை பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி அங்கே பிரதிஷ்டை செய்து வணங்கினான், கந்தர்வன். அப்போது ஈசன், சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தோன்றி காட்சி தந்தார். அந்த இறைவன் ‘கந்தவேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன-பரணி நட்சத்திரம் அன்று, தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழையால், தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத் தாமிரபரணி இருபிரிவாகப் பிரிந்து செல்லும் சித்தர் காடு பகுதி நீருக்குள் மூழ்கியது. அப்போது கரையில் இருந்த சித்தீஸ்வரமுடையார் நயினார் என்ற அங்குண்டீஸ்வரர் கோவில் மணலில் புதைந்தது. அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சில ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, சுத்தமல்லி பகுதியில் இருந்த தாமிரபரணி தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள், அடியார்களின் நடவடிக்கையால் மணல் குவியல் அகற்றப்பட்டு, ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது.

ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த நிலை எப்போதுமே கயிலாய மலையில் சிவன் குளிர்ச்சியாக இருப்பது போலவே விளங்குகிறது. இங்கு அம்பாள் இல்லை. ஆற்றில் வெள்ளத்தில் சிலை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சுவாமிக்கு மட்டும் தினமும் பூஜை நடக்கிறது. ஹயக்ரீவரின் சாபத்தால் குதிரை முகம் கொண்ட பெண், இக்கோவிலில் வழிபட்டு சாப விமோசனமும், ஞானமும் பெற்றதால், குரு சாப நிவர்த்தி தலமாகவும் இது திகழ்கிறது.

தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் சிவாலயம், ‘ஆதி தலம்’ ஆகும். இந்த ஆலயம் தண்ணீருக்குள் மூழ்கிய வேளையில், தென் புறத்தில் ஒரு ஆலயம் அமைத்து சிவனை பூஜித்து வந்துள்ளார்கள். அந்த ஆலயம் தற்போதும் உள்ளது. அதே போல் கந்தர்வன் வழிபட்ட ஆலயம் வடகரையில் உள்ளது. ஒரே இடத்தில் ஆற்றின் நடுவிலும், ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கும் அற்புத தலமாக இந்த இடம் போற்றப்படுகிறது. இந்த மூன்று ஆலயத்தையும் ஒரு சேர வணங்குவது சிறப்பானது.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள  என்ன உள்ளது?

தாமிரபரணி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில், நதி நடுப் படுக்கையில் இருக்கும் கோவில், நீரில் மூழ்கிவிடும். அந்த நேரத்தில், அவருக்கும் சேர்த்து பூஜையை, கரையிலுள்ள அங்குண்டீஸ்வர முடையாருக்கு செய்வார்கள்.

தினமும், உச்சிகால பூசையை, கோடகநல்லூர் ப்ரஹன்மாதவப் பெருமாளும், தாயார்களும் இங்கு வந்து அங்குண்டீஸ்வரருக்கு செய்வதாக புராணங்கள் கூறுகிறது. அந்த நேரத்தில் அங்கிருப்பதே இந்த ஜென்மத்தில் கடைத்தேற நமக்கு இறைவன் அருளுகிற ஒரு வாய்ப்பு!

அங்குண்டீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த விபூதி, அவரே ஆதி மருந்தீஸ்வரர் ஆதலால், அனைத்து வியாதிகளுக்கும், சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கரையிலிருக்கும் கோவிலில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து "ஓம்" என ஜெபித்தால், கைலாசத்தில், இறைவன் முன் அமர்ந்து பிரணவம் சொல்கிற உணர்வு ஏற்படும். த்யானம் செய்வதில் ஈடுபாடுள்ளவர்கள் ஒருமுறை சென்று தரிசித்து, அனுபவிக்கவேண்டிய ஒரு கோவில், இது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!

Tuesday, 15 September 2020

சித்தன் அருள் - 913 - ஆலயங்களும் விநோதமும் - தாணுமாலயன் கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு!


அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.

அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.

தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

சுசீந்திரம், நாகர்கோவிலிருந்து 5 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது.

சரி! இங்கு நமெக்கென என்ன உள்ளது?

முதலில் சென்றதும் நாம் காண்கின்ற கணபதியாக இருப்பது சிவபெருமான். அவரது நாமமே "நீலகண்ட கணபதி". சிவபெருமானின் உக்கிரத்தை குறைப்பதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

மற்ற கோவில்கள் போல் அல்லாமல், இங்கு நவகிரகங்கள், கணபதி சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் மேல் விதானத்தில் இருப்பார்கள். நவகிரகங்களை கட்டுப்படுத்துவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைவு.

இங்கு லிங்கத்தில், மும்மூர்த்திகளும் அமர்ந்துள்ளனர். இது ஒரு அபூர்வ அமைப்பு.

22அடி உயர ஆஞ்சநேயருக்கு பூசை செய்த பிரசாதத்தை உட்கொண்டால், எந்த உடல் பிரச்சினையும் விலகிவிடும்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................தொடரும்!

Monday, 14 September 2020

சித்தன் அருள் - 912 - ஆலயங்களும் விநோதமும் - பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்,  சுருட்டப்பள்ளி, சித்தூர், ஆந்திர மாநிலம்.


சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன்-சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர்-மரகதாம்பிகை, விநாயகர்-சித்தி, புத்தி, சாஸ்தா-பூரணை, புஷ்கலை, குபேரன்-கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர்.

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.

திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், "சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்" என மன்றாடினர். உடனே சிவன் "விஷாபகரண மூர்த்தி'யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம், கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் "நீலகண்டன்' ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் "அமுதாம்பிகை' ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை, சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம்.

இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும். இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் 56 கி.மீ. ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.  

சரி! இங்கு நமக்கென்ன உள்ளது!

வழக்கமாக சிவன் கோவிலில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் கோவிலைப் போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.  

நெடுஞ்சாண் கிடையாக படுத்திருக்கும் மூலவருக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான் உண்டு. மற்ற அபிஷேகங்கள் கிடையாது.

பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இந்த பள்ளிகொண்ட நாதனை (சிவபெருமானை) சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் பதவியை அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர், என்பது தத்ரூபமான உண்மை.

உலகில் வேறு எங்கும் அம்மை மடியில் தலை வைத்து, சிவபெருமான் கிடந்த கோலத்தில் இருக்கிற காட்சியை காண முடியாது.

பிரதோஷ தரிசனம், பிறப்பின் தோஷத்தை முற்றிலும் அகற்றும். ஒரு பிரதோஷத்தன்று, இளநீர் வாங்கி வால்மீகிஸ்வரர் லிங்கத்துக்கு அபிஷேகத்துக்கு கொடுத்து, அதன் பலன் என்ன என்பதை உணருங்கள்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

Sunday, 13 September 2020

சித்தன் அருள் - 911 - ஆலயங்களும் விநோதமும் - ஆற்றுக்கால் பகவதி கோவில், திருவனந்தபுரம்!


ஆற்றுகால் பகவதி கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

இக்கோவிலில் தெய்வமாக இருப்பது கண்ணகி (பார்வதி) ஆகும். கண்ணகி கோவலனின் கொலைக்கு மதுரையில் நீதி கேட்டபின் இங்கே ஆற்றுக்காலில் சிறுமியாய் அவதரித்து ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் ஆற்றைக் கடக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறாள். பெரியவரோ, சிறுமி தனியாய் இருப்பதை அறிந்து அன்புடன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வீட்டிற்குச் சென்றதும் மாயமாய் மறைந்த சிறுமி, பின்னர் பெரியவரின் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டுமாறு சொல்கிறாள். அதனால் கட்டப்பட்டதே இக்கோவில் என்பது தலவரலாறு ஆகும்.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் முக்கிய நிகழ்வும் இத்திருவிழாவே ஆகும். இப்பொங்கல் விழாவில் சுமார் 15 லட்சம் பெண்கள் ஒரே நாளில், பொங்கல் போடுவதற்காக கலந்து கொள்வர். முதல் நாளும் அன்றைய தினமும் மொத்த நகரமும் இவர்களுக்கே சொந்தம். இந்த பொங்கல் படையலை போடுபவர்களின் பிரார்த்தனையை, அன்னை உடனேயே நிறைவேற்றி வைக்கிறாள். அன்றைய தினம் பொங்கல் போடுபவர்களையும், பக்தர்களையும் சோதனைக்கு உட்படுத்த, அன்னை இறங்கி நடப்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இத்தனை பேர்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடி இருக்கும் நிலையினால், கின்னஸ் புத்தகத்தில் "ஆற்றுகால் கோவில் பொங்கல் திருவிழா" முதன்மை ஸ்தானத்தில் உள்ளது.

சரி! இங்கு நமக்கு என தெரிந்து கொள்ள என்ன உள்ளது?

மேற் சொன்ன பொங்கல் படையல் திருவிழாவின் போது, முதல் பொங்கல் போடுகிற அடுப்பு கோவில் சார்பாக, அம்பாள் சன்னதியில் இருக்கும் விளக்கிலிருந்து அக்னியை கொண்டு வந்து, பூஜாரி ஏற்றுவார். அந்த அக்னி பின்னர் பலருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். அன்னை சார்பாக இடப்படுகிற அந்த பொங்கல் நிவேதனத்துக்குப்பின் வெளியே வராது. அது கிடைப்பது மிக மிக புண்ணியம்.

அந்த திருவிழாவில், அன்னையின் அடுப்பிலிருந்து, அக்னி விலகியதும், படையலின் முடிவில், அடுப்பினுள் இருக்கும் "சாம்பலை" பிரசாதமாக கிடைக்கப்பெறுவது மிக உயர்ந்த பாக்கியம். கடந்த இரண்டு வருடங்களாக, ஒரு நண்பரின் வழி அது கிடைக்கப் பெற்றேன்.

இந்த கோவிலில் மண்டை புற்று என ஒரு நிவேதனம் உள்ளது. மூளையில் நோய், மனநிலை பாதிப்பு, மூளையில் கட்டி என உள்ளவர்களுக்கு வேண்டிக்கொண்டு, அன்னைக்கு படைத்திட, அதுவே பிரசாதமாக திருப்பி கொடுக்கப்படும். அதை, உண்பவர்களுக்கு நோய் விலகும்.

அன்னையின் பாதத்தில் அர்ச்சனை செய்த குங்குமம், அத்தனை மகத்துவமானது. திருஷ்டி தோஷங்களை விலக்கிவிடும். குழந்தைகளுக்கு நோய்நொடி வராமல் காப்பாற்றும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

Saturday, 12 September 2020

சித்தன் அருள் - 910 - ஆலயங்களும் விநோதமும் - பாம்பாட்டி சித்தர் கோவில், புலியூர் விலக்கு, மதுரை!


இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!

என உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்பே (மூச்சு), சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார். உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். அவர்தான் பாம்பாட்டி சித்தர்!

சங்கரன் கோவிலும், மருதமலையும் தானே இவர் சமாதி இடம், மதுரை எப்படி? என்ற கேள்வி எழலாம். அது ஒரு மிகப்பெரிய காதை. அதை வேறொரு தொகுப்பில் பார்க்கலாம்.

பாம்பாட்டி சித்தர் கோவில் புலியூர் விலக்கு, என்கிற கிராமத்தில், மதுரையில் அமைந்துள்ளது. மீனாக்ஷி அம்மையின் கோவில், கிழக்கு வாசலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பாம்பாட்டி சித்தர், தனக்கு இடப்பட்ட உத்தரவை நிறைவேற்ற, தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு, பரகாய பிரவேசம் செய்த இடம். அவர் உடலை 18 தேவதைகள் காவல் காத்தது. அத்தனை தேவதைகளுக்கும் அங்கு சன்னதி உள்ளது. மிக மிக பசுமை நிறைந்த இடம்.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது?

இகபரத்தில் உள்ளவர்கள், இங்கு ஒரு பசுநெய் விளக்குபோட்டு, 108 முறை "ஓம் நமசிவாயா" என ஜெபித்து அதை காணிக்கையாக அவருக்கு கொடுத்து, தேவைகளை கூறினால், உடனேயே அந்த விஷயங்கள் கைவல்யமாவதை காணலாம். அத்தனை அற்புதமான ஸ்தலம்.

சித்த மார்க்கம், ஆன்மீக மார்கத்தில் உள்ளவர்கள், உயர்ந்த நிலைகளை கேட்டால், உபதேசமாக அவை அங்கு அருளப்படும்.

சிவலிங்கத்தை தலை கீழாக புரட்டிப்போட்டு, அதை ஒரு நாற்காலி போல் பாவித்து பாம்பாட்டி சித்தர் அமர்ந்து த்யானம் செய்த இடம். அதன் வழி, மிக உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய இடம். அந்த சிவலிங்கம் தற்போதும் அப்படியே தலைகீழாக, இன்றும், அங்கு உள்ளது என்பதுதான் ஆச்சரியம்! அதை காண்பதே இறை அருளை பெற்றுத்தரும்!

ஒரு முறை தரிசனம் செய்தாலே, அதர்வண வேத பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின், விலகிவிடும், அற்புத ஸ்தலம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் .................. தொடரும்!

Friday, 11 September 2020

சித்தன் அருள் - 909 - ஆலயங்களும் வினோதமும் - படிக்காசுநாதர், சொர்ணபுரீஸ்வரர் கோவில், அழகாபுத்தூர், தஞ்சாவூர்!

படிக்காசு நாதர் கோவில், அழகாபுத்தூர், தஞ்சாவூர். இது கும்பகோணம் சுவாமிமலையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனார் அவதரித்து, சிவபூஜை செய்து முக்தி அடைந்த திருத்தலம். அரசலாற்றில் நீர் எடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து, நித்ய பூஜையை அவர் நிறைவேற்றி வந்தார். நாடு வரட்சியில் உழன்றுகொண்டிருந்த நேரம். மக்களும் அன்னம் ஆகாரமின்றி தவித்தனர். இவரும், பசிப்பிணியால் மிகவும் மெலிந்து போனாலும், ஒரு குடத்தில் நீர் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேக பூஜை செய்து வந்தார்.

ஒருநாள், மிகுந்த சோர்வினால், அபிஷேக தீர்த்த குடம் , கை நழுவி சிவலிங்கத்தின் மேல் விழ, அவரும் மயக்கமுற்று சிவலிங்கத்தின் மேல் விழுந்தார்.

மயக்கமுற்ற நிலையில், அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் "உனக்கு என்ன வேண்டும்? கேள்!" என்றார்.

இவரும் "மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், துயர் துடைக்க வரம் அருள வேண்டும். நித்திய பூசை நல்லபடியாக நடக்கவேண்டும்" என வேண்டினர்.

"தந்தோம் யாம்! இனிமேல் தினமும் ஒரு படிக்காசு என் சன்னிதானத்தில் அருளப்படும். அதை எடுத்து பூசையை நடத்தி, மக்களின் பசி துயரை தீர்ந்த்துக்கொள்ளும்!" என உத்தரவிட்டார்.

அன்று முதல், சிவபெருமான் லிங்கத்தின்மேல் தினமும் தங்க படிக்காசு தோன்றும். புகழ்துணை நாயனாரும் அதன் பயனால், பூசைகளை சிறப்பாக செய்து, மக்களின் பசித்துயரையும் நீக்கிவந்தார்.

பலகாலங்களுக்குப்பின் அந்த ஊர் செழிப்பாக மாறிட, புகழ்துணை நாயனார், இறைவனிடம் வேண்டி, முக்தியை அடைந்தார்.

தற்போது, அவரது சந்ததியினரே பூஜை செய்து வருகிறார்கள்.

சரி! இங்கு நமெக்கென என்ன உள்ளது!

இந்த கோவிலில் சூரிய சந்திரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி உள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒன்பது குழிகள் உள்ளது. அதில் நவகிரகங்கள் வாயு ரூபத்தில் இருப்பதாக ஐதீகம்.

திருமால்தான் சங்கு சக்கரம் போன்றவற்றைக் கையில் கொண்டிருப்பார். ஆனால் இக்கோயிலில் முருகர் சங்கு சக்கரத்துடன்  இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

இங்கு வரும் பக்தர்கள், நிறைய காசினை கொண்டுவந்து, பூஜாரியிடம் கொடுப்பர். அவரும் இரண்டு இரண்டு காசாக சிவ லிங்கத்தின் ஆவுடையின் மீது வைத்து பூசை செய்வார். பின்னர், ஒரு காசினை சிவனுக்கு அர்பித்துவிட்டு ஒரு காசை தந்தவரிடம் திருப்பி கொடுத்துவிடுவார். பூசை செய்த ஒரு காசை சிவன் சார்பாக, பூஜாரியிடமிருந்து பெற்று, வீட்டிற்கு கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து இருந்தால், குடும்பம் செல்வ செழிப்பாக மாறும். இது அனுபவ பூரணமாக அனைவரும் உணர்ந்த உண்மை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருகே........................தொடரும்!