​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 October 2019

சித்தன் அருள் - 823 - அகத்தியரின் அனந்தசயனம்!


"தேவருக்குற்ற கோயில்
திருமகள் தேடி நிற்கும் கோயில்
தீராக்குறை தீர்க்கும் கோயில் 
தவறிழைப்பாரைக் கொல்லும் கோயில்
யாம் போற்றும் பத்மநாபனவன் கோயில்"

என்பது அனந்தசயனத்தை பற்றிய அகத்தியர் வாக்கு.

அனந்தசயனம் என்ற வார்த்தையை கேட்டால் சித்த மார்கத்தில் செல்பவர்கள் ஒரு நிமிடம் மௌனமாகி, மனதுள் அகத்தியரை நினைத்து நமஸ்காரம் செய்வர். இது சான்றோர் நிலை. மற்றவர்கள், இந்த வார்த்தையை கேட்டால், ஆச்சரியத்துடன், ஏதோ கிடைத்தாற்போல் பூரித்துப்போய், நிறைய கேள்விகளை கேட்பார்கள். இந்த இருவகை மனிதர்களின் எண்ணமும் இரு திசையில் செல்வதே காரணம்.

முன்காலத்தில் அனந்தசயனம், அனந்தபுரி என்றழைக்கப்பட்ட நிலப்பரப்பே இன்று "திருவனந்தபுரம்" என்றழைக்கப் படுகிறது. இங்கு குடிகொண்டுள்ள இறைரூபத்தின் பெயரான  "அனந்த பத்மநாபன்" என்கிற பெயரிலிருந்து உருவானதே "திரு அனந்தபுரம்".

இந்த கோவில் உருவாக்கியதில் நம் குருநாதருக்கு நிறையவே பங்குண்டு. இறைவன் அருளால், எத்தனை பெரிய முயற்சி எடுத்து இந்த கோவிலை உருவாக்கினார் அகத்தியர், என்பதை தெரிந்துகொண்டால்,  மனத்தில் ஒருவித பயமும், பக்தியும் உருவாகும், என்பதை அடியவர்களுக்கு உணத்தவே, இந்த தொகுப்பை சமப்பிக்கிறேன்.

முதலில் நாம் நமக்குள்ளே சில கேள்விகளை கேட்கவேண்டும். அவை,

1. திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாளுக்கு சேவை செய்து, சேரநாட்டை ஆண்டு வந்த மன்னர்களுக்கு, எதற்கு, அதே போல் இன்னொரு கோவில் கட்ட தோன்றியது? காரணம் என்ன? தேவை என்ன?

2. பத்மநாபபுரத்தை தலைநகராக கொண்டு சேரநாட்டை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மகாராஜா, திடீரென ஒரு முடிவெடுத்து, திருவனந்தபுரத்துக்கு தலைநகரை மாற்றியமைத்து, கோவிலைக்கட்டி, அரண்மனை கட்டி, பிரஜைகளை அழைத்துக்கொண்டு வந்து அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது, எதற்காக? அப்படி ஒரு முடிவை எடுக்க, அவரை தூண்டியது யார்?

3. இவர்கள் அனைவரும் இங்கு வரும் முன்னரே, அனந்தன்காடு என்கிற இடத்தை பெருமாள் தெரிவு செய்து அமர்ந்த காரணமென்ன?

4. பிற பெருமாள் கோவில் போல இல்லாமல், இங்கு இறையை மூன்று வாசல் வழியாகத்தான் பார்க்க முடியும். அது ஏன்?

5. பிற கோயில்களை போல் இல்லாது, பெருமாளின் மூலவர் சிலை, 10008 சாலிக்கிராமங்களால் உருவாக்கப்பட்டது ஏன்?

இந்த கேள்விக்கான விடைகளை தெரிந்து கொண்டால், அந்த கோவிலுக்கு செல்லும் பொழுது, இறைவனின் எண்ணம் மட்டும் நம்முள் இருக்கும். அந்த "நிதி" இருக்கும் அறையின் வாசலை தேட தோன்றாது. முன்னர் சொன்னது போல் மனத்தில் ஒருவித பயமும், பக்தியும் உருவாகும்.

அனந்தன்காட்டில் பெருமாள் அமர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது, கைலாயத்த்தில். ஆம்! சிவபெருமான், பார்வதி திருமணத்திற்காக, அனைவரும் ஒன்று கூடிய பொழுது, சிவபெருமான் தன், தீர்மானத்தை பெருமாளிடம் தெரிவித்ததாக, சிவபுராணம் கூறுகிறது.

அன்று எடுக்கப்பட்ட தீர்மானம், பின்னர் கோவிலாக உருப்பெற்று நிற்பதைத்தான், இன்று நாம் காண்கிறோம். 

நம் குருநாதர் அகத்தியப் பெருமானும், இதில் பெரும் பங்கு வகித்துள்ளதனால், அடியேனுக்கு, "நடந்தது என்ன?" என்று அறிய ஆவலானது. கிடைத்த தகவல்கள் பிரமிப்பூட்டுவனவாக இருந்ததால், அத்தனையையும் சேர்த்து வைத்து, ஒரு தொகுப்பாக மாற்றினேன்.

இதற்கு குருநாதர் அகத்தியப் பெருமானும் அருளினார்.

சித்தன் அருள்..................... தொடரும்!

Sunday 27 October 2019

சித்தன் அருள் - 822 - தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று (27/10/2019) கொண்டாப்படும் தீபத்திருநாள் என்கிற தீபாவளி, உங்கள் குடும்பத்திலும், உற்றார், உறவினர்கள் அகத்திலும், நிறைவை, நிம்மதியை, ஆரோக்கியத்தை, செல்வத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, இறை அருளை பெற்றுத்தரட்டும் என, அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறோம். எல்லோரும் "நலம்" பெற்று நீடூழி வாழ்கவென அகத்தியப்பெருமானின், ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Friday 18 October 2019

சித்தன் அருள் - 821 - அந்தநாள் >> இந்த வருடம் - 2019 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் அருளி, எல்லா வருடமும் நடத்தி தருகிற "அந்தநாள்-இந்த வருட பூஜை", இந்த வருடம் 10/11/2019, ஞாயிற்றுக்கிழமை, கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் கோவிலில் நடக்கிறது.

அகத்தியர்  அடியவர்கள் அனைவரும் ஒன்று கூடி, எல்லா வருடமும், சிறப்பான அபிஷேக ஆராதனைகளை பெருமாளுக்கு செய்து, அவர் அருள் பெற்று செல்வோம் என்பது நினைவிருக்கும். ஆனால், இந்த வருடம் அபிஷேக ஆராதனைகளை செய்வது நடக்கும் என்று தோன்றவில்லை. ஏன் என்றால், கோவில் நிர்வாகம்,பெருமாளுக்கு பாலாலயம் செய்வித்து, கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்திருப்பதால், அன்றைய தினம் அபிஷேக ஆராதனைகள் செய்வது இயலாது என்று கூறிவிட்டனர்.

இருப்பினும், அகத்தியர் கூற்றின் படி, அன்றைய தினம் மிக முக்கியமான நாள் ஆனதால், அடியவர்கள் கோடகநல்லூர் வந்து, தாமிரபரணியில் நீராடி, பெருமாளை தரிசித்து, தாமிரபரணியின், சித்தர்களின், இறையின் அருளை பெற்று செல்லலாம். பெருமாளுக்கு, பூமாலை, பூஜைக்கான பொருட்கள் கொண்டு வந்தால், உற்சவ மூர்த்திக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து, அருளை பெறலாம்.

மறுபடியும் ஞாபகபடுத்துவதற்காக, அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை, சுருக்கமாக கீழே தருகிறேன்.

"எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."


அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அன்றைய தினம் கோடகநல்லூர் வந்து இறையருள் பெற்றுச் செல்லுமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சாணம்!

சித்தன் அருள்................... தொடரும்!

Tuesday 15 October 2019

820 - சித்தன் அருள் - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில்" "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். பல அகத்தியர் அடியவர்கள் கேட்டுக்கொண்டதின் பெயரில், அந்த தொடரை ஒரு pdf  தொகுப்பாக மாற்றி உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். தேவைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பிலிருந்து, டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Download Link:-

சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் 

சித்தன் அருள்.................... தொடரும்!