​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 January 2016

சித்தன் அருள் - ஒரு விளக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில், அவர் கூறியதை, உங்கள் முன், அவர் அனுமதியுடன் தொகுத்து வழங்குகிற பாக்கியத்தை அடியேனுக்கு அளித்துள்ளார்.

இந்த வலைப்பூவின் நிறுவனர் திரு.கார்த்திகேயன், அடியேனிடம் அகத்தியர் அருளியதை தொகுத்து வழங்குகிற பொறுப்பை ஒப்படைத்த பொழுது, இது என்னால் முடியுமா என்ற எண்ணம் இருந்தது என்னவோ உண்மை. இருப்பினும், அனைத்தையும் அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்து இன்று வரை நடந்து வந்துவிட்டேன். 

கடந்து வந்த நாட்களில், பல அகத்தியர் அடியவர்களும் இந்த தொகுப்பை பற்றி பல கேள்விகள் கேட்டனர். 

"இவை எல்லாம் அகத்தியர் கூறியதா? அகத்தியர் நாடியில் வந்ததா? உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சிகள் தானா? பெருமாளுக்கு, அகத்தியர் மீது அத்தனை அன்பா? அதெப்படி ஒரு சிவனடியாரை பெருமாள் தன் திருவிளையாடல்களுக்கு உபயோகப் படுத்திக் கொண்டார்? இவற்றை எல்லாம் நாங்கள் எப்படி நம்புவது?" என்று பலவிதமான கேள்விகள்.

சமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர் வேறு ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதை கீழே தருகிறேன்.

"ஓம் அகத்தீசாய நமஹ. ஐயா, வணக்கம்.எனக்குள் பல நாட்களாகவே ஒரு கேள்வி. நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 'பெருமாளும் அடியேனும்' என்கிற இந்த தொகுப்பு யாருக்கேனும் ஜீவநாடியில் வந்த விஷயங்களா (நம்பிமலை, கோடகநல்லூர் போல்) அல்லது ஏதேனும் புராணங்கள்/ உப புராணங்கள் - இவைகளில் உள்ளனவையா அல்லது ............. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளா?!.............. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா. இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும்."​

தட்டச்சு செய்பவனான என்னிடம் இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாததால், இதை தொகுத்து வழங்குகிற பணியை தந்த திரு.காத்திகேயனிடமே ஒப்படைத்துவிட்டேன்.  அவரது விளக்கத்தை கேட்டு ஒரே பதிலாக அதை கீழே தொகுத்து தருகிறேன்.

"நாடியானது, திருப்பதியில் ஒரு பைத்தியத்தினால் (போகர் பெருமான்) என் நண்பரிடமிருந்து திருடப்பட்டு பின்னர் அது ஒரு துளசி மாலை கூடையில் பெருமாள் பாதத்தில் போய் சேர்ந்து, மறுபடியும் பேஷ்கார் உதவியுடன் திரும்பி கிடைத்ததை நீங்கள் எல்லோரும் சித்தன் அருளில் படித்திருப்பீர்களே. அந்த நாடி திரும்பி கிடைத்த உடன் அன்று இரவு அஹோபில மடத்தில் அவர் தங்கி, நள்ளிரவில் நரசிம்மரின் உலாவை உணர்ந்து சிலிர்த்ததையும் படித்திருப்பீர்கள். அந்த நள்ளிரவிலேயே, நரசிம்மர் உலா வந்து போகட்டும் என்று காத்திருந்து, பின்னர் இரவில் ஓடி வந்த அர்ச்சகர் ஒரு விஷயத்தை சொன்னார்.

அர்ச்சகர் கனவில் பெருமாள் தோன்றி  "அகத்தியன் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்! அவனை துச்சாடனம் பண்ணக்கூடாது" என்று கூறினார். இதை அந்த அர்ச்சகரே என் நண்பரிடம் கூறினார். 

இங்கு தான் என் நண்பருக்கு, அகத்தியப் பெருமானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றியது. உடனே கேட்காவிட்டாலும் பின்னர் ஒருநாள் தனிமையில் இருக்கும் பொழுது அந்த கேள்வியை கேட்டார்.

"அய்யனே! பெருமாள் உங்களை ரொம்ப வேண்டப்பட்டவன் என்றார். அப்படியானால், தாங்கள் அருள் கூர்ந்து, திருப்பதி பெருமாளின் அவதாரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கூற முடியுமா? அதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது". என்றார்.

"அது விரிவான பல நிகழ்ச்சிகளை உட்கொண்டது. நேரம் வரும் பொழுது கூறுகிறேன்" என்று கூறி பின்னர் அகத்தியப் பெருமான் நாடியில் வந்து கூறியதே, இன்று "பெருமாளும் அடியேனும்" என்ற தொடருக்காக தொகுக்கப் பட்டுள்ளது. அகத்தியரின் பெருமையை உலகறியச் செய்ய. பெருமாளும் அவர் நடத்திய திருவிளையாடலில் அகத்தியப் பெருமானை, தனது வலக்கரமாக சேர்த்துக் கொண்டார்." இதுதான் நடந்தது. 

"இன்று இந்த தொடரில் வரும் விஷயங்கள் அனைத்தும் அகத்தியப் பெருமான் நாடியில் வந்து கூறியதே! இறைவனுக்கே வைஷ்ணவம், சைவம் என்கிற பேதம் இல்லாதிருக்கும் பொழுது, இறைவனை தேடி செல்கிற சித்தர் அடியவர்களான நாம் அப்படி ஒரு வித்யாசத்தை ஒரு பொழுதும் மனதில் நினைக்கவே கூடாது. அனைத்தையும் ஒன்றென உணர வேண்டும்." என பதிலளித்தார் திரு கார்த்திகேயன்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

Thursday 28 January 2016

சித்தன் அருள் - 270 - "பெருமாளும் அடியேனும்" - 38 - ஆதிசேஷனும் சனீச்வரன் ஆதிக்கத்தில்!


காலம் காலமாக பெருமாளுக்குக் குடை பிடித்துத் தொண்டு செய்துவரும் ஆதிசேஷன் அன்றைக்கு என்னவோ சற்று மனம் குழம்பியபடியேதான் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

கல்கி அவதாரம் எடுக்கும் வரை பூலோகத்து மக்களைக் காப்பாற்ற வேங்கடவன் திருமலையில் கல் கடவுளாக அவதரித்தார். இது ஒரு வகை புது அவதாரம். கலியின் கொடுமை மிகவும் அதிகம். அதனைச் சமாளிக்க வேறு அவதாரம் எடுத்துப் பயனில்லை என்றுதான் வேங்கடவன் திருமலைக்குப் புறப்பட்டார்.

கலிபுருஷனும் தன் பலத்தைக் காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தான். திருமலைத் தெய்வத்தின் முன்பு கலியால் எதையும் சாதிக்க முடியவில்லை. எனவே சனீச்வரனுடன் சேர்ந்து, ஆதிசேஷனைத் திருமாலிடமிருந்து பிரித்து, திருமாலை பலமற்றவராக மாற்றவேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கினான்.

பல்லாயிரம் ஆண்டுகளாக தனக்குப் பக்கபலமாக இருந்த ஆதிசேஷனும் கலிபுருஷனால் பிடிக்கப்பட்டு தவறான பாதைக்குச் சென்று விடக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்த திருமால், அதை நாசூக்காகவும் சுட்டிக் காட்டினார்.

கருடாழ்வார் மாதிரி, தானும் திசை மாறிவிடுவேன் என்று திருமால் சொன்னது ஆதிசேஷன் மனதைப் புண்படுத்தியது. "திருமாலைவிட்டு ஒரு பொழுதும் அகலாத நான், எப்படியவருக்குத் துரோகம் செய்வேன்? எப்படி என்னை தவறாக எடைபோட்டுவிட்டார் திருமால்? அவருக்கு தெய்வமனசாட்சியே இல்லையா? " என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பிய ஆதிசேஷனை, சனிபகவான் இடை மறித்தார்.

ஈஸ்வரனுக்குப் பின் சனிபகவான்தானே கண்கண்ட தெய்வம் என்று எண்ணிய ஆதிசேஷன், சனீச்வரனைக் கையெடுத்துத் தொழுதார்.

"மங்களம் உண்டாகட்டும் ஆதிசேஷா!" என்று சனீச்வரன் வாழ்த்தினார்.

"தன்யனானேன்!"

"என்ன ஆதிசேஷா? ஏதோ ஒரு குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறதே. உண்மை தானா?" என்று பீடிகையைப் போட்டார்.

"ஆமாம் சனீஸ்வரரே! ஆமாம். தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை" என்றார் ஆதிசேஷன்.

"கலங்கவேண்டாம் ஆதிசேஷா! நான் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறேன். என்ன விஷயம்? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்" என்றார் சனீச்வரன்.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தங்களிடம் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை........... ஆனால்....."

"என்ன ஆனால்?"

"தங்களும் கலிபுருஷனும் சேர்ந்து இந்த பூலோகத்தில் கலி சாம்ராஜ்ஜியம் தொடங்கப் போவதாகக் கேள்வி. ஆகவே தங்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!" என்றார்.

இதைக் கேட்டு சனீச்வரன் கடகடவென்று வாய்விட்டு சிரித்தார்.

"ஆதிசேஷா! தாங்கள் மிகுந்த புத்திசாலி என்றுதான், இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால், தங்களும் மற்றவர்களைப் போல்தான். யார் என்ன சொன்னாலும் சட்டென்று நம்பிவிடுவீர்கள் போலும். தேவலோகத்தில் இருந்துமா இன்னும் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை?" என்று சனீச்வரன் தன் பொல்லாத்தனத்தை மெல்ல ஆதிசேஷன் மீது வீசினார்.

"தாங்கள் தவறாக நினைக்ககூடாது. என் காதில் விழுந்ததை அப்படியே சொன்னேன்!" என்றார் ஆதிசேஷன்.

"மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். தாங்கள் ஏன் என்னைக் கண்டு பயப்படவேண்டும்? தாங்கள்தான் எழுமலையாக மாறி, திருமாலுக்கு மிகமிக வேண்டப்பட்டவர்கள் ஆகிவிட்டீர்கள். பின் எதற்கு கவலை?"

"சனீஸ்வரரே! நான் பயப்படவில்லை. தங்களை நினைத்தும் கலங்கவில்லை. ஆனால் ஒரு சிறு தவறு. யாரை நான் கண் கண்ட தெய்வமாக எண்ணிக் கொண்டிருக்கிறேனோ, அதே திருமால் என்னை இப்போது நம்பவில்லை. அனலில் பட்ட பூச்சிபோல் துடிக்கிறேன்" என்று ஆதிசேஷன் சட்டென்று எல்லாவற்றையும் மனம்திறந்து கொட்டிவிட்டார்.

பழம் நழுவி பாலில் விழுந்தார் போல் சனீஸ்வரனுக்கு. இதைக் கேட்டதும் தாங்கமுடியாத சந்தோஷம் ஏற்பட்டது.

இனிமேல் ஆதிசேஷனைத் தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொள்ளலாம். பிறகு ஆதிசேஷனை வைத்து ஒவ்வொரு காயாக நகர்த்தித் திருமாலைப் பலமிழக்கச் செய்துவிடலாம்.

இப்படிச் செய்தால் பிரம்மாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும் ஆகிவிடும். கலிபுருஷனுடைய கோபத்தையும் தணித்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்து சந்தோஷப்பட்டார், சனீச்வரன்.

பின்னர் ஆதிசேஷன் தோளில் கையைப் போட்டார்.

கையைப் போட்டதுமே, ஆதிசேஷனுக்கு அஷ்டமச்சனி ஆரம்பித்து விட்டதாக திருமால் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.

பாவம், ஆதிசேஷன், இதனை உணரவில்லை. தன் சோகத்தைத் தீர்க்க வந்த மகாபுருஷர், மிகவும் உத்தமர் என்றுதான் ஆதிசேஷன் பெரிதும் நம்பினார்.

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday 21 January 2016

சித்தன் அருள் - 269 - "பெருமாளும் அடியேனும்" - 37 - சனீச்வரன் கலிபுருஷன் அடுத்த திட்டமிடல்!


"என்னை மன்னித்துவிடுங்கள் சனீஸ்வரரே! தோல்வி பயத்தாலும் அந்த வேங்கடவன் லீலைகளாலும் நான் என்னையே இழந்துவிட்டேன். இனி, தங்கள் மனம் கோணும்படி பேசமாட்டேன்" என்றான் கலிபுருஷன்.

"மன்னித்தோம் கலிபுருஷா! வேங்கடவனது பலத்தை எப்படி ஒடுக்குவது என்று பின்னர் யோசிப்போம். இந்த திருமலையில் இருந்து கொண்டு, நீ நினைத்த காரியத்தை சாதிக்க முடியாது" என்றார் சனீஸ்வரன்.

"பின்னர் என்ன செய்ய வேண்டும்?"

"நிறைய வழி இருக்கிறது. அந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிடும். நான் சொல்லுகிறபடி மட்டும் செய்தால் போதும். பூலோகம் இனி உங்கள் கையில்தான். எள் அளவும் சந்தேகமில்லை!"

"தங்களை நான் நம்பலாமா?"

"ஏன் இந்த சந்தேகம்? நிச்சயம் நம்பலாம்."

"எதை வைத்து நான் நம்புவது?"

"இனிமேல் என் மனைவி என் வீட்டிற்கு இப்போதைக்கு வரமாட்டாள். அவள் மனம் திருந்தி  என் இல்லம் வரப் பல வருஷங்கள் ஆகும். அது வரை நான் என்ன செய்வது? உன்னுடன் இருந்து உன் விருப்பப்படி நானும் வளைந்து கொடுத்துத்தான்  போகவேண்டும். எனக்கும் பொழுது போகவேண்டுமே. அதனால் நான் நிச்சயம் கூட இருந்து இந்த பூலோக ஜனங்களை மாற்றி புத்தியைக் கெடுத்து "கலி" புருஷனான உன்னை உன் பெருமையை எடுத்துக் காட்டுவேன். இது போதுமா? இன்னும் ஏதாவது வாக்குறுதி கொடுக்க வேண்டுமா?"

"அது சரி! கோபித்துக் கொண்டுபோன தங்கள் மனைவி, இடையில் புத்தி மாறி, சட்டென்று தங்கள் இல்லத்திற்குத் திரும்பி வந்து விட்டால்?"

"ஒரு போதும் நடக்காது! அவளுக்கு ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது. போதக் குறைக்கு அஷ்டமத்திலும் நான்தான் இருக்கிறேன். ஒருவருக்கு அஷ்டமத்து சனியும் ஏழரைச் சனியும் சேர்ந்து நடந்தால், என்ன ஆகும் தெரியுமா? எனவே அவள் "சனி"யிலிருந்து விடுபட்டு திரும்பவும் நல்லபடியாக வீடு திரும்ப தேவலோகக் கணக்குப்படி பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் ஆகும். அதற்குள் இந்த பூலோகத்தை நாமிருவரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி விடலாம். விளக்கம் போதுமா? இன்னும் வேண்டுமா?" என்றார் சனீஸ்வரன்.

"போதும்! போதும்! பரம திருப்தி  எனக்கு. ஆனாலும் வேங்கடவனை இப்படியே விட்டால், விஷயம் விபரீதமாக ஆகிவிடும். கருடாழ்வாரும் வேங்கடவனும் சமரசம் ஆகிவிட்டார்கள். இனி அவர்களை பிரிக்கிற முயற்ச்சியில் இறங்க முடியாது. வேறு என்ன செய்யலாம்?"

"கலிபுருஷா! எனக்கு "மந்தன்" என்று ஒரு பெயருண்டு. முடவனாக நான் இருப்பதால் என் செய்கைகள் அனைத்தும் தாமதமாகத்தான் இருக்கும். என்னை யோசிக்க விடு! என்னாலான கைங்கர்யமாக எப்படியும் இந்த மலையில் குடி கொண்டிருக்கும் வேங்கடவனை விரட்டி அவரை நிர்கதி ஆக்கி விடுவேன்.  ஆனால் அதற்கு வேறுமாதிரி நடந்து கொள்ள வேண்டியிருக்கும். அதை நான் பொறுத்துக் கொள்வேன்" என்றார் சனீச்வரன்.

கலிபுருஷனுக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் நிம்மதியே வந்தது. "வேங்கடவா உன்னை பார்க்கிறேன் ஒரு கை" என்று திருமலையில் குடியிருக்கும் பெருமாளைப் பார்த்து பற்களை "நற நற"வென்று கடித்தான்.

வேங்கடவன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு, மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

பெருமாள் பக்கத்திலிருந்த ஆதிசேஷன், பவ்யமாக வாயைப் பொத்திக் கொண்டு "தன்யனானேன் வேங்கடவா! அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். கேட்கலாமா?" எனக் கேட்டார்.

"தாராளமாகக் கேளேன்!" என்றார் பெருமாள்.

"கலிபுருஷனும் சனீஸ்வரனும் தற்சமயம் ஒன்று சேர்ந்துவிட்டதாக எனக்குத் தெரியவந்தது. இதைத் தாங்கள் தெரிந்தும்,  கொடுமைக்குத் துணை போகலாமா? அவர்களை ஒன்று சேர விடலாமா?" என அடிவயிற்றிலிருந்து கேட்டார்.

"என்னை, என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்?" என்றார் பெருமாள்.

"கலிபுருஷனால்தான் பூலோகம் விஷமாகிக் கொண்டிருக்கிறது. அவனை முதலில் அடக்கி ஒடுக்க வேண்டாமா?"

"பிறகு?"

"இந்த சனீஸ்வரனுக்கு என்ன கெடுதல் வந்தது?  எதற்காக கலிபுருஷனோடு சேர வேண்டும்? அதையும் தாங்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்யக் கூடாதா?"

"சரி! வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?"

"ஆமாம்! தாங்கள் இதெயெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். அடுத்த நிமிடமே கலிபுருஷனை விழுங்கி இந்த அராஜகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்" என ஆதிசேஷன் வெகுண்டு சொன்னதைக் கேட்ட வேங்கடவன் மௌனமாக தனக்குள் சிரித்துக் கொண்டார்.

"வேங்கடவா! இன்னும் ஏன் மௌனம்? நான் சொன்னது எல்லாம் தங்கள் காதில் விழுந்ததா?"

"நன்றாக விழுந்தது ஆதிசேஷா! ஆனால் நான் ஏன் மௌனமாக இருக்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். இவ்வளவு தூரம் ஆக்ரோஷமாகப் பேசுகிற நீ கருடாழ்வார் போல் திடீரென்று மாறமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் திருமலையான்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் வாயடைத்துப் போனார் ஆதிசேஷன். கண்ணீர் மல்க திருமலைவாசனின் காலில் அப்படியே விழுந்தார். பின்னர் "என்னைப் போய் தாங்கள் இப்படி சந்தேகிக்கலாமா? இது பெரிய அபசாரமில்லையா?" என்று கேட்டார்.

"பயப்படாதே ஆதிசேஷா! நீயும் என்னை விட்டு விலகமாட்டாய். நானும் உன்னைக் கைவிடமாட்டேன். சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்" என்று தைரியம் கொடுத்தார், வேங்கடவர்.

அதே நேரத்தில்....................

கலிபுருஷனும் சனி பகவானும் "ஆதிசேஷனை" தங்கள் வலையில் விழவைக்க ஒரு புதிய திட்டத்தைத் தீட்டி அதை செயல்படுத்தவும் மாறுவேடத்தில் ஆதிசேஷன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதை,  அறியாமல் ஆதிசேஷன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சித்தன் அருள்.................... தொடரும்!

Thursday 14 January 2016

சித்தன் அருள் - 268 - அகத்தியப் பெருமானின் ப்ராஜெக்ட் - பங்குபெற வாருங்கள்!


வணக்கம் அகத்தியப் பெருமானின் அடியவர்களே!

முதலில், அகத்தியர் அடியவர்கள், அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும், 

"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

இனி வரும் நாட்களில் எல்லோரும் "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின்" அருள் பெற்று, ஷேமமாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

"பெருமாளும் அடியேனும்" என்கிற தொடருக்கு ஒரு இடைவேளை விடுகிறேன். 

அகத்தியப் பெருமான் ஒரு நுட்பமான "தொடர் வேலையை", சென்னையில் வசிக்கும் "இரு அடியவர்களுக்கு" கொடுத்துள்ளார். அவர்களும் "அகத்தியரின் சித்தன் அருளை" வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் யாரேனும் முன் வந்தால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு செய்யலாமே என்று யோசனை கூறவும், அதை பற்றிய தகவலை இந்த வாரம் உங்களுக்குத் தெரிய வைக்கலாம் என்பதினால் உருவான தொகுப்பு இது.

அந்த வேலை என்பது, மனித குல மேம்பாட்டிற்காக.  இன்று வரை அதர்மம் செய்து, வாழ்ந்து சேர்த்துக் கொண்ட கெட்ட கர்மாக்கள் இந்த "பிரபஞ்சத்தை" விட்டு கரைந்து போகவும், அதில் நாம் அனைவரும், ராமருக்கு அணில் சேது பாலம் கட்ட உதவியது போல், ஒரு சிறு பங்கை செய்து அருள் பெறவும் வழிவகுக்கப் பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை கண்டு அரண்டு போகாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். அதர்மத்தினால் "எதிர்வினைகள்" எகிறிய பொழுது, இயற்கையே இறங்கி வந்து சுத்தம் பண்ண ஒரு முடிவெடுத்தது என்பதே உண்மை. இதுவரை நடந்த இயற்கை சீற்றம் ஒரு "முன்னோட்டம்" மட்டும்தான்.

இந்த தொடர் வேலை என்பது மிக எளிதான ஒன்று. அதைப் பற்றிய தகவலை கீழே தருகிறேன். இறைவன்/அகத்தியரின் உத்தரவு என்பது இதுதான்.

"எங்கும் மந்திர ஜபம் ஒலித்தால் அத்தனை கெட்ட கர்மாவும் கரைக்கப்படும்" என்று செய்தி வர ஒரு நல்ல முயற்சியாக நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில்களில், தினமும் மந்திர ஜபம் ஒலிக்க ஏற்பாடு செய்தால் என்ன? என்ற எண்ணம் வந்தது, அந்த இரு அடியவர்களுக்கும். இத்தனை பெரிய நாட்டில் இருவரால் இதை செய்ய முடியாது என்பதால், அகத்தியர் அடியவர்களின் உதவியை பெற்று, வெகு விரைவாக, அவரவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில், இதை செய்யலாம் என்று தீர்மானித்துள்ளனர். இதற்கு ஆகும் அத்தனை செலவையும் அந்த இரு அகத்தியர் அடியவர்கள் ஏற்றுக் கொள்வதாக தீர்மானித்துள்ளனர். இதில், என்னையும் சேர்த்து, யாருக்கும் பொருள் அல்லது பண உதவிக்கு பங்கு பெற முடியாது என்பதே உண்மை. புரிந்து கொள்ளுங்கள். 

அகத்தியர் அடியவர் என்கிற முறையில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் பெயர், முழுவிலாசம், செல் எண், கோவில் பெயர், இருக்கும் இடம் இவைகளை கீழே தந்துள்ள மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். ஒரு 7லிருந்து 10 நாட்களுக்குள் நீங்கள் தெரிவித்த விலாசத்துக்கு ஒரு மந்திரம் அடங்கிய DVD வந்து சேரும். அதை கொண்டு போய் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் கொடுத்து அவர்களிடம் தினமும், காலை, மாலை இருவேளைகள் ஒலிக்கச் செய்யவும். மிக எளிய வேலை, அவ்வளவு தான்.

இது ஒரு மிகப் பெரிய அகத்தியர் ப்ராஜெக்ட்.  இதில் பங்கு பெறுவது என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆகவே தீர்மானம் என்பது உங்கள் கையில். உங்கள் பெயர், விலாசம், செல் எண்கள் எந்தக் காரணம் கொண்டும் வெளியிடப் படமாட்டாது, தவறாகவும் உபயோகப் படுத்த மாட்டாது என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்த ப்ராஜெக்டை, நம் தமிழர் திருநாளாம் "பொங்கல் பண்டிகை" அன்று முதல் தொடங்கலாம் என்பது எண்ணம்.

இதை முதலில் சென்னையில் மட்டும் தான் நடைமுறைப் படுத்துகிறார்கள். மற்ற இடங்களுக்கு பின்னர் விரிவுபடுத்த தீர்மானம் உள்ளது. ஆகவே, சென்னையில் உள்ள அகத்தியர் அடியவர்கள், விருப்பப்பட்டால் இதில் கலந்து கொண்டு அகத்தியப் பெருமானின் அருளை பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மெயில் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி: agasthiyarproject@gmail.com

வணக்கம்!

Thursday 7 January 2016

சித்தன் அருள் - 267 - "பெருமாளும் அடியேனும்" - 36 - சனீச்வரன் கலிபுருஷன் - கருத்து வேற்றுமை!


​ஏற்றமும், இறக்கமும் கொண்டதுதான் வாழ்க்கை. இதைப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.  எல்லாருக்கும்​ எல்லாம் நினைத்தவுடன் நடக்க வேண்டும் என்பது மிகச் சாதாரண எதிர்பார்ப்புதான். இது நடந்தால் உற்சாகத்தால்  குதிப்பார்கள். இல்லையேல், நிம்மதி இல்லாமல் மனத்தால் அத்தனை பேரையும் சபிப்பார்கள்.

இந்த நிலை மனிதர்களுக்கு மாத்திரமல்ல, தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், கந்தர்வர்களுக்கும் மட்டுமின்றி கிரகங்களுக்கும் இருந்திருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.

எல்லோரும் சனி என்று பேரைக் கேட்டவுடனே அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்கள். இறைவன் கூட சனிபகவானைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட சனீஸ்வரனுக்கு, கலிபுருஷனால் சனி பிடித்துக் கொண்டது என்றால் ஆச்சரியம் தானே.

"அன்றைக்குப் பிரம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை இப்பொழுது தவறவிட்டு விட்டாய். நீ நம்பிக்கைத் துரோகி" என்று கலிபுருஷன் கன்னா பின்னாவென்று சனீஸ்வரனைத் திட்டியதைக் கண்டு சனீச்வரன் கோபப்படவே இல்லை. மௌனமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

"கலிபுருஷா! பேசுவதை எல்லாம் பேசிவிட்டாயா? உன் ஆத்திரம் கோபமெல்லாம் அடங்கியதா? இப்பொழுது நான் பேசலாமா?" என நிதானமாகக் கேட்டார் சனீச்வரன்.

"ம்ம்! பேசு!" என்று வாய் திறந்து சொல்லாமல், கையால் சம்மதம் கொடுத்து, முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான், கலிபுருஷன்.

"பொதுவாக, இரண்டு பேரிடம் நான் மோதமாட்டேன். ஒன்று இறை பக்தர்களிடம், மற்றொன்று அனுமனிடம்! இது உனக்குத் தெரியுமா?" என்றார் சனீச்வரன்.

"தெரியாது" என்று தலையை ஆட்டினான்.

"இறை பக்தர் என்பது யாராக இருந்தாலும் பகவானிடம் அளவு கடந்த பக்தியைக் கொண்டு தனக்கென்று எதுவும் கேட்காமல், சரணாகதித் தத்துவத்தோடு இருப்பவர்கள். இவர்கள் பக்திக்கு மெச்சி, அவர்களை தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தால் கூட மன்னித்து அவர்களைக் காப்பாற்றுவேன். இந்த கருடாழ்வார் ஓர் இறை பக்தன். அதனால் விட்டுக்கொடுத்தேன்." என்றார்.

"அப்படியானால் இதை முன்கூட்டியே எனக்குச் சொல்லியிருந்தால் நான் உன்னை இங்கு அழைத்துக் கொண்டே வந்திருக்க மாட்டேன். என்னையும் ஏமாற்றிவிட்டாய். பிரம்மாவுக்கு கொடுத்த உறுதிமொழியையும் மறந்து விட்டாய். நான் இனியும் உன்னை நம்பவே மாட்டேன்."  என்றான் கலிபுருஷன்.

"நல்லது! கலிபுருஷரே! நல்லது. இன்னமும் தங்கள் கோபம் மறையவில்லை போலும். தாங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள். தாங்கள் காது கொடுத்து கேட்பதாக இருந்தால் சொல்லுகிறேன்!"  என்றார் சனீச்வரன்.

"உலகமெல்லாம் கெடுதலுக்கு மறுபெயர் "சனி" என்று திட்டுவதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கே கெடுதல் செய்த முதல் நபர் நீ தான்" என்றார் சனீச்வரன்.

"எப்படி?"

"நன்றாக அன்போடும் சந்தோஷத்தோடும் வாழ்ந்து கொண்டிருந்த என்னுடைய தாம்பத்திய வாழ்க்கையைக் கெடுத்த ஒரே நபர், நீ தான். என்னை விட்டு என் மனைவி பிரிந்து போனாள். அதை கூட பொருட்படுத்தாது, பிரம்ம தேவருக்குக் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற உன் பின்னால் நான் இங்கு வந்தேன். மற்ற யாராக இருந்தாலும், உன் பின்னே வந்திருப்பார்களா?"

"வந்து என்ன பயன்? யாரை பிரிக்க வேண்டுமோ அவர்களை பிரிக்க முடியாமல் போயிற்று" என்றான் கலிபுருஷன்.

"இந்த காரியத்தை செய்வதில் சற்று முந்தியிருக்க வேண்டும். நிச்சயம் செய்து காட்டியிருப்பேன்."

"சனீஸ்வரா! இந்த பேச்சை நான் நம்ப மாட்டேன். திட்டம் போட்டு, நாடகமாடி தாமதமாக வந்து இங்கு காரியத்தையே கெடுத்துவிட்டாய். அதுதான் உண்மை!" என்றான் கலிபுருஷன்.

"ஏன் கவலைப்படுகிறாய், கலிபுருஷா? பூலோகத்தில் உன் ராஜ்யம்தான் இனி கொடிகட்டிப் பறக்கப் போகிறது. நினைத்ததெல்லாம் சாதிக்கப் போகிறாய். தர்மம் அழியப் போகிறது. தம்பதியாக ஆனா மறு வினாடியே தனித்தனியாகப் பிரிவார்கள்.கர்பத்திலே குழந்தைகள் கொல்லப்படும். கோயிலில் கொலை, கொள்ளை நடக்கும்.

ஒரு புதுமையான இயக்கம் தோன்றும். அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆன்மீக வாழ்க்கையை ஒழித்துக் கட்ட முயற்சி செய்வார்கள். பொய் கொடிகட்டிப் பறக்கும். பெரியவர்களின் சொற்பேச்சு வீணாகும். அண்ணன் மனைவியை தம்பி அபகரிப்பான். விவசாய நிலம் அழியும். தண்ணீர் கஷ்டத்தால் ஜனங்கள் தவித்துப் போவார்கள். குடிக்கிற நீரும், காசு கொடுத்து வாங்கித்தான் சாப்பிட வேண்டியிருக்கும்" என்று சனீச்வரன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது "நிறுத்து! நிறுத்து" என்று உரத்த குரலில் கலிபுருஷன் தடுத்து நிறுத்தினான்.

திடுக்கிட்டு பார்த்தார் சனீச்வரன்!

தங்களுடைய வார்த்தைகளை நான் நம்பத் தயாராக இல்லை. இந்த பூலோகம் கலிபுருஷனான என் வசம் ஆக வேண்டும். இதைத் தடுக்கிறார், திருமலைவாசனான வேங்கடவன். முதலில் வேங்கடவனது பலத்தைக் கட்டுப்படுத்த தங்களால் என்ன செய்ய முடியும்? இப்பொழுதே கருடாழ்வாரையும் வேங்கடவனையும் பிரிக்க முடியவில்லை. கோட்டை விட்டு விட்டு விழிக்கிறேன். இதற்கொரு வழியை சொல்லிவிட்டு பின்பு உன்னுடைய வீரப் பிரதாபங்களைப் பற்றிப் பேசு" என்றான் ஒருமையும், பன்மையும் கலந்து.

"கலிபுருஷா! எனக்கு முதலில் கொடுத்த மரியாதை இப்பொழுது படிப்படியாகக் குறைந்து வருவதை நானும் பார்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் என்ன? பரவாயில்லை!  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், என் உதவி இல்லாமல் உன்னுடைய ஆட்சி பூலோகத்தில் நிலைத்து நிற்காது. இதை நினைவிற் கொண்டு மரியாதை கொடுத்துப் பேசு" என்றார் சனீச்வரன் கோபத்தோடு!

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்ட கலிபுருஷன் பயந்து போனான். 

சித்தன் அருள்........................ தொடரும்!

Saturday 2 January 2016

அரிய தகவல்கள் - அகத்தியர் அடியவர்களுக்காக!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவில் முருகரை பற்றிய அவர் அருளிய விஷயங்களை, மகாசஷ்டியின் போது தொகுத்து தந்ததை படித்திருப்பீர்கள். அதனூடே தராத ஒரு சில விஷயங்களை இங்கே கீழே தருகிறேன்.

"பெருமாளும் அடியேனும்" தொடருக்காக தட்டச்சு செய்யும் பொழுது ஒரு இடத்தில் ஆதிசேஷன் மிகுந்த கருணையுடன், கருடாழ்வாருக்காக பெருமாளிடம் பரிந்துரை செய்வார். அதில் அத்தனை கனிவு இருக்கும். அதை படித்த நிமிடத்தில் ஒரு கேள்வி என்னுள் எழுந்தது.

ஆதிசேஷன் நாக ரூபம். மிகுந்த கோபத்தையும், வீரியமான விஷத்தையும் கொண்ட உவமானம். அதெப்படி இத்தனை கருணை/கனிவு அவர் மனதில் தோன்றுகிறது? இங்கு ஏதோ ஒன்று மறைக்கப்பட்டுள்ளதே! என்ற எண்ணம் தோன்றியது.
​​
உடனேயே, இதை அகத்தியப் பெருமானிடம் "எப்படி ஆதிசேஷன் இப்படி கருணை கொண்டவராக இருக்க முடியும்? அத்தனை கொடிய தன்மையை பிரதிபலிக்கும் ஒரு ஜீவனை, காக்கும் கடவுளான பெருமாள் எப்படி தன் சயனத்துக்கு எடுத்துக் கொண்டார்? இதில் மறைந்துள்ள உட்பொருள்/உண்மை என்ன?"  என்று கேள்வியை வைத்தேன்.

"குஹ த்ரயம்" என்கிற வடமொழி நூலில், சுப்ரமண்யரை பற்றி விவரிக்கும் இடத்தில் "பெருமாளுக்கு ஆதிசேஷனாக வந்ததே முருகன்தான்" என்று விவரித்துள்ளார்.  முருகர் பிரம்ம ஞானத்தின் ஸ்வரூபம். எல்லா தெய்வங்களும் தங்கள் அங்கத்தில் அதை சர்ப்ப ரூபத்தில் அணிந்திருக்கிறார்கள். பகவான் விஷ்ணு அதை பள்ளிகொள்ள எடுத்துக் கொண்டார். இதற்கு உதாரணமாக, இன்றும் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில், சுப்ரமண்யரை "நாக" ரூபத்தில் பூசை செய்து வருகிறார்கள் என்பதே அத்தாட்சி என்கிறார்.

அதே போல் இன்னொரு கேள்வி. ஒரு மனிதன் நித்தியம் செய்ய வேண்டிய "பஞ்சதாயன பூசை"யில் குறிப்பிடப்படுகிற தெய்வங்கள் ஐந்து. அவை, கணபதி, சூரியன், சிவன், அம்பாள், விஷ்ணு. இதில் சுப்ரமண்யரின் பெயர் இடம் பெறவில்லை. அதெப்படி சுப்ரமண்யர் இல்லாமல் ஒரு பூசையை நிறைவு செய்ய முடியும்?" என்ற கேள்வி உதித்தது.

இதற்கு தந்த விடை ஆச்சர்யமாக இருந்தது.
  1. சூரியன் பூசை - எல்லாவற்றையும் அருளும்.
  2. கணபதி பூசை - எல்லா விக்னங்களையும் விலக்கும்.
  3. சிவன் பூசை - ஞானத்தை அருளும்.
  4. அம்பாள் பூசை - மேற்சொன்ன அனைத்தையும் அனுபவிக்க, உடலுக்குள் சக்தியாக இருந்து அருளும்.
  5. விஷ்ணு பூசை - எந்த இழப்பும், பாதிப்பும் இன்றி பாதுகாத்து மேற் சொன்னவைகளை அனுபவிக்க வைக்கும்.
இந்த ஐந்து பேருக்கும் செய்கிற பூசை கடைசியில் பிரம்ம ஞானத்திடம் செல்லும்!

அந்த பிரம்ம ஞானமே "சுப்பிரமணியர்".

  • இவர்கள் அனைவருக்கும் செய்கிற பூசை சுப்ரமண்யரை சென்று சேரும்.
  • சுப்ரமண்யரை மட்டும் பூசை செய்தால், இவர்கள் அனைவரையும் பூசை செய்த பலன் கிட்டும்.
ஞானம் உள்ளவர்களுக்குத்தான் எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். பிரம்ம ஞானம் உள்ளவர்களுக்கு அவதாரம் எடுக்க முடியும். சித்தத்தன்மை அடைந்தவர்கள் பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள். அப்படியானால் ஏசுபிரான் ஆக வந்தது யார் என்ற கேள்வி வந்தது. ஏசுபிரானை நினைக்கிறபொழுது, அவர் உயிர்தெழுந்தது, பகைவரையும் மன்னித்தது போன்ற குணங்களை கண்டால், இவை ஒரு சித்தரால் மட்டும்தான் முடியும் என்று என் எண்ணம். சித்தரிலும் மிகக்கனிவு கொண்ட ஒருவரால்தான் இதுவும் முடியும். இதை ஒரு கேள்வியாக யோசித்த சில நாட்களில், நாடியில் ஒரு கேள்விக்கு விடை அளிக்கையில், "சிலுவைக்காரனாக வந்ததே போகன்தானடா!" என்று அகத்தியப் பெருமான் விளக்கினார். அப்பொழுதே இந்த விஷயத்தில் அனைத்தும் விளங்கிவிட்டது எனலாம்.

பெருமாள், அகத்தியரை தன் வலதுகரம் என்கிறார். திருப்பதியில், நரசிம்மராக வந்து, ஒரு அர்ச்சகரிடம், அகத்தியரை "எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன், துச்சாடனம் பண்ணக் கூடாது" என்கிறார். இறைவனுக்கே வலதுகரமாக விளங்குபவர் என்ன வேண்டிக் கொண்டாலும் அதை இறைவன் உடனேயே நிறைவேற்றுவார். உதாரணமாக, 

குற்றாலத்தில் "பெருமாள்" விக்ரகத்தை அகத்தியப் பெருமான் தன் கைகளால் அன்புடன் தடவிக் கொடுத்து வேண்டிக் கொண்டபொழுது, இறைவன் தன் உருவத்தை "சிவலிங்கமாக"  மாற்றிகொண்டார் என்பதை, இறைவன் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவன். ஒரு வகை வழிபாட்டுக்குள் கட்டுப்பட்டவன் அல்ல, என்பதை, இந்த மனிதர்களுக்கு புரியவைக்கத்தான் என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார், அகத்தியப் பெருமான். அப்படி உருவமாற்றம் நடந்ததை, எதிர்த்த பக்தர்களை, அம்பாள் நடுவராக இருக்க, அகத்தியப் பெருமான், 5 நாட்கள் எதிர் வாதம் செய்து, இறை அருளால் வென்று, ஊரைவிட்டு ஓடிப்போக தீர்மானித்த நாராயண பக்தர்களை மனம் மாற்றி, சித்தர்களாக மாற்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டார், அகத்தியர். 

இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். சித்தமார்கத்தில் இருப்பவர்கள். எதிர் வகை செய்தவர்களையும் மன்னித்து தன் வசம் சேர்த்து கொள்வதில், பரந்த மனப்பான்மையில் இருக்கவேண்டும் என்பதை அகத்தியப் பெருமான் நமக்கு சொல்லாமல் சொல்கிறார்.

"நடக்கட்டும் நம்புகிறோம்" என்கிற மனித எண்ணத்தை கைவிட்டு "நம்புகிறோம், நடக்கும்" என்ற அகத்தியர் வாக்கை எல்லோரும் கைப்பற்றுவோம், இனி வரும் நாட்களில். ஏன் என்றால், இது சித்தர்கள் காலம். தகுந்த காலத்தில், நம்மிடையே, ஏதேனும் ஒரு ரூபத்தில் அருகில் இருந்து வழி நடத்த தீர்மானித்த ஒரு சித்தரின் எண்ணத்தை, கிடைக்கப் பெரிய, அறிய வாய்ப்பை, நம் சிறுமையான எண்ணத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக இதை கூறுகிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

Friday 1 January 2016

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த புத்தாண்டு, உங்கள் வாழ்வில், நிறைய மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, இறை அருளை, ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின் கனிவை, பாதுகாப்பை, வழிநடத்தலை அருளட்டும் என்று வாழ்த்துகிறோம்!

எல்லோரும் இறை அருள் பெற்று நலமாக வாழவேண்டும்!

கார்த்திகேயன்
அக்னிலிங்கம்