​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 January 2018

சித்தன் அருள் - 745 - அகத்தியர் தரிசனம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அடியேனது இரு நண்பர்கள் இந்த வாரம் பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்து, அவர் சன்னதியில் அஷ்ட திக்கிற்கும் விளக்கு போட்டு, அருள் பெற்று வந்ததை தெரிவித்தனர். அவர்கள் பகிர்ந்து கொண்ட இரு வீடியோவையும், ஒரு சில புகை படங்களையும், இன்றைய அகத்தியப் பெருமான் தரிசனமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.








ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

இந்த தொகுப்பில் தரிசனம் கொடுத்த அகத்தியப் பெருமான் நிறையவே அடியேனுக்கு அருளினார். அந்த விஷயத்தையும் கூறலாம் என்று ஒரு எண்ணம்.

போன வருடம் இதே சமயத்தில் கேட்ட பொழுது "நீ எங்கும் செல்லவேண்டாம். அங்கேயே இரு" என்று உத்தரவு வந்து, வீட்டிலேயே இருந்த பொழுது தான் என் தகப்பனாரின் மறைவு நிகழ்ந்தது. நிறையவே சடங்குகள், கட்டுப்பாடுகள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரு வருடம் நிறைவு பெற காத்திருக்கிறேன். எல்லா வாரமும் எங்கேனும் ஒரு மலை ஏறி ஏதேனும் ஒரு கோவிலில் இறை தரிசனம் பெறுவது வழக்கம். நம்பிமலை, ஓதிமலை, திருவண்ணாமலை என உதாரணம் கூறலாம். கர்மம் செய்தவன் ஒரு வருடத்திற்கு மலை ஏறுவது, கடல் ஸ்நானம் போன்றவை செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகள். அடியேனுக்கு, சித்தர்கள் கூற்று வாழ்க்கை முறையாகி போனதால், ஆசாரா அனுஷ்டானங்களில் அத்தனை விருப்பமில்லை. இருப்பினும், செய்யக்கூடாது என்பதை செய்தால், என் தாயின் மனம் வேதனைப்படுமே என்றுணர்ந்து, என் அவாக்களை (மலைக்கோவில்) கட்டிப் போட்டேன். கட்டிப்போட்டது சும்மா இருக்குமா? குரங்கு மனம் போல், ப்ராணாவஸ்தை.

இந்தமுறை வனத்துறை அனுமதிக்கும் நேரத்தில் பொதிகைக்கு செல்ல முடியாது. ஒருவருடம் நிறைவு பெற வேண்டும்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நண்பர் வந்து பொதிகை செல்லலாம் என்றிருக்கிறேன், என்றார்.

அடியேன் சார்பாக அபிஷேகத்துக்கு ஒரு சில விஷயங்களை தருகிறேன். அதை எடுத்துக்கொள். அவருக்கு அபிஷேகம் செய்த எண்ணை வேண்டும். அவர் பாத விபூதி வேண்டும். இது இரண்டும் கிடைக்கும். இனி சொல்லப்போவதை கவனமாக கேள்! அடியேன் அகத்தியப் பெருமானிடம், அவருக்கு அணிவித்த "வெட்டிவேர்" மாலையை தருமாறு கேட்டிருக்கிறேன். முதலில், பூசாரியிடம் கேள். இல்லையே என்பார். காத்திரு! சற்று நேரத்தில், ஞாபகம் வரவே, நில் தருகிறேன் என்பார். வாங்கி கொண்டு, வந்து தரவும், என கூறினேன்.

அதே போல், முதலில் இல்லை என்று மறுத்தவர், அடியேனின் நண்பர் விலகாமல் இருப்பதை கண்டு ஞாபகம் வரவே, எடுத்து கொடுத்து அனுப்பினார். அனைத்து பிரசாதமும் வந்து சேர்ந்தது. கூடவே, வெட்டிவேர் மாலையும், அவருக்கு அபிஷேகம் செய்த தேனும்!

எதுவுமே கேட்காதிருப்பவன், கேட்டிருக்கிறான், கொடுத்துவிடுவோம் என்று தீர்மானித்து அத்தனை பிரசாதத்தையும் கொடுத்தனுப்பியிருக்கிறார். பெரியவருக்கு எப்படி நன்றி சொல்வது?



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

Saturday 20 January 2018

சித்தன் அருள் - 744 - விளக்கு போட்ட அடியவர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருளில் அகத்தியர் உத்தரவின் பேரில் விளக்கு போடச் சொன்னதை தொகுத்தபின், எத்தனை பேர் இதை புரிந்து கொண்டு செய்வார்கள் என்ற எண்ணம், அடியேனுள் உதித்தது உண்மை. சரி! யார் யார் போடவேண்டும் என்று குருநாதர் நினைக்கிறாரோ, அவர்களிடமிருந்து விளக்கை போட வைத்து வாங்கிவிடுவார், என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன். உண்மையிலேயே, அகத்தியர் அடியவர்களிடமிருந்து வந்த செய்தி அடியேனை நிறையவே சந்தோஷப்படுத்தியது என்பதே உண்மை. நிறைய பேர்கள் விளக்கு போட்டதை தெரிவித்தார்கள். மிக்க மிக்க நன்றி. நிச்சயமாக லோகம், அனைத்து ஆத்மாக்களும் க்ஷேமமாக இருக்கும்.

அகத்தியர் அடியவர் திரு.கோபிநாத் என்பவர் விளக்கு போட்டுவிட்டு, புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார். அதை நீங்கள் அனைவரும் காண கீழே தருகிறேன்.





சிங்கப்பூரில் வசிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திரு பாஸ்கரன் லோகஷேமத்துக்காக, அகத்தியர் உத்தரவால் போட்ட விளக்கின் புகைப்படம். இங்கு கோவிலில் 8 திக்கில் போட அனுமதிக்காததால், ஒரே தட்டில் 8 திசை நோக்கி பெருமாள் முன் சமர்ப்பித்தார். என்ன வேண்டிக்கொண்டு போடுகிறோம் என்பதே முக்கியம், என்பதை இங்கு இறைவன் நமக்கு தெரிவித்துள்ளார். மிக்க நன்றி திரு.பாஸ்கரன் அவர்களே!


சிங்கப்பூரில் வசிக்கும் திரு குமார் என்பவர், அங்கு உறையும் சிவாலயத்தில், லிங்கத்தை சுற்றி அஷ்ட திக்கிலும் விளக்கு போட்டார். தீப ஒளி எட்டு திக்கையும் நோக்கி பாய்ந்து செல்வது போல் புகைப்படம் அமைந்துள்ளது. எல்லாம் அவன் செயல் அன்றி வேறொன்றுமில்லை. உண்மையான வேண்டுதலுக்கு, பக்திக்கு இறைவன் என்றுமே அருள் புரிவார் என்பதில் சந்தேகமில்லை. அந்த புகைப்படங்களை கீழே தருகிறேன். அகத்தியப் பெருமானும் அங்கு உறைகிறார் என்பது ஒரு விசேஷ செய்தி.




திருவண்ணாமலையில் அகத்தியர் உத்தரவின்படி 108 விளக்கு போட்ட அகத்தியர் அடியவர் திரு ராகேஷ், அப்போது எடுத்த புகைப்படங்களை, அவரது தொகுப்பையும், கீழே தருகிறேன். மிக்க நன்றி திரு.ராகேஷ் அவர்களே.

சித்தன் அருள் உத்தரவில் விளக்கு போட சொன்ன பதிவை படித்தோம். எப்போது? எங்கே? என்று யோசித்து விட்டு சில நாட்கள் காத்திருந்தோம். அப்போது தான் புரிந்தது, சென்ற மகா ஆயில்யம் பூஜையில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் அகத்தியர் பெருமான் ஆராதனையில், நாம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாக 108 விளக்குகள் போட்டோம். அன்றைய நாளில், பூசைக்கு வந்த ஒவ்வொருவரும் பொறுமை காத்து, ஒவ்வொரு விளக்கையும் ஏற்றி, உலக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தனர். அதேபோன்று தற்போது திருஅண்ணாமலை கிரிவலம்  செல்லும்  போதும், நாம் அஷ்டலிங்கங்கள் சன்னதியில் தற்போது விளக்கேற்றி வருகின்றோம். சித்தன் அருள் பதிவை பார்த்த பின்பு, நாம் கோயில் குருக்களிடம் கேட்டோம், அவர்கள் அஷ்டதிக்குகளில் விளக்கு போட அனுமதி கொடுத்தனர்.

இதற்கு மேல் நம்மால் காத்திருக்க முடியவில்லை. இன்றைய அஷ்டமி திதியில் கூடுவாஞ்சேரியில் உள்ள வேலி அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பைரவருக்கு விளக்கு போட தயாரானோம். அகல் சற்று பெரிய அளவில் இரு நாட்களுக்கு முன்னரே தயார் செய்து விட்டோம். இன்று காலையில் 1 கி நெய் வாங்கி விட்டு, சுமார் 9:30 மணி அளவில், பைரவரை வேண்டி, ஆயத்தப் பணிகள் தயாரானது. நெய்யை ஒவ்வொரு அகல்களில் ஊற்றினோம். சரியாக 6 அகல்களுக்கு நெய் சரியாக இருந்தது. மீதி உள்ள அகல்களுக்கு என்ன செய்வது? சோதிப்பது நம்மை உணர்த்தத்தானே என்று பொறுமை காத்து, அகத்தியரிடம் வேண்டினோம். பின்னர் கோயில் குருக்கள் எண்ணெய் கொடுத்தார்கள். அப்பாடா! என்று மனதில் அமைதி வந்தது. பின்னர் ஒவ்வொரு திக்கிலும் விளக்கை வைத்து விட்டு, பிரார்த்தனை செய்து விட்டு, விளக்கேற்றினோம், பைரவர் அருள் மனதில் மத்தாப்பாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த சில அடியார்கள், விளக்கில் சரியாக திரி பொருந்தவில்லை. பெரிய அகல் என்றால் இரண்டு திரியை இணைத்து ஒன்றாக்கி போடவும் என்று பேசியது நம் காதில் விழுந்தது. அவர்களை அழைத்து, நீங்களே அந்த கைங்கர்யத்தை செய்ய வேண்டினோம். உடனே அவர்கள் அனைத்து விளக்கிலும்  திரியை சரி செய்தார்கள். பின்னர் என்ன! விளக்கு ஜொலித்தது. நம் மனமும் பிரகாசித்தது.

வழிநடத்தும் சித்தன் அருளிற்கு நன்றி!"







சிங்கப்பூரில் வசிக்கும் அகத்தியர் அடியவர், திரு.பாஸ்கரன் அவர்கள், அங்கு உறையும் சிவாலயத்தில் லோகஷேமத்துக்காக விளக்கு போட்டுள்ளார். மிக்க நன்றி! குருவருள் உண்டாகட்டும்!


சென்னையில் வசிக்கும் அகத்தியர் அடியவர் திரு தினேஷ் குமார் என்பவர் அகத்தியர் உத்தரவை சிரம் மேற்கொண்டு கோவிலில் அஷ்டதிக்கிற்கும் விளக்கேற்றியுள்ளார். அவருக்கு அகத்தியர் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.


ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளுக்கு அனைத்தும் சமர்ப்பணம்!

Thursday 18 January 2018

சித்தன் அருள் - 743 - அஷ்டதிக்கிலும் விளக்கு போடுங்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சித்தன் அருள் வலைப்பூவில் தொகுப்பை தர முடியாமல் போனது. அன்று மாலை, அகத்தியர் கோவிலுக்கு எப்போதும் போல சென்று தரிசனத்துக்கு அமர்ந்த பொழுது, "ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்லோகத்தை ஜெபித்து அவர் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு, த்யானத்தில் "இந்த வாரமும் எந்த ஒரு தொகுப்பையும் வெளியிடமுடியாதபடி தனிப்பட்ட வாழ்க்கையில் மூழ்கடித்துவிட்டீர்களே. தாங்கள் அருளிய சுமை பரவாயில்லை! அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால் உங்கள் சேய்களுக்காக ஏதேனும் ஒன்றை கூற அனுமதித்திருக்கலாமே! ஏன் இப்படி நடக்கிறது? உங்கள் சேய்களின் செயல்களின் பெருமை அனைத்தும்  உங்கள் அருளால், உங்கள் பாதத்தில் சமர்ப்பணம்! ஏதேனும் தவறிருந்தால், அது சேய்களின் அறிவின்மை, மன்னித்தருளுக!" என்று கூறி அவர் பாதத்தை மனதில் இருத்தி த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

"ஏதேனும் இறை சன்னதியில் (கோவிலில்) எட்டு திக்கிற்கும் விளக்கேற்றச்சொல், என் சேய்களிடம்" என்று உத்தரவு வந்தது.

இப்படிப்பட்ட உத்தரவு அடியேனுக்கு புதியதல்ல. ஒருமுறை, அருணாச்சலத்தில், கிரிவலம் முடித்த பொழுது, இறையே, அடுத்த கிரிவலம் முதல் எட்டு லிங்கத்திற்கும் (அஷ்ட திகபாலகர்கள் பிரதிஷ்டை செய்த) விளக்கேற்றி, "லோகஷேமத்துக்காக" வேண்டிக்கொள் என்று உத்தரவு வர, அதை அங்கு செல்லும் பொழுதெல்லாம் இறை அருளால், நிறைவேற்றி வந்தேன். வெறும் விளக்கு மட்டும் போட்டால், இதுவரை விளக்கேதும் ஏற்றதா இவன் ஏன் இதை இப்பொழுது செய்கிறான் என்கிற கேள்வி வரும் என்றுணர்ந்து, நண்பர்களிடம், பூசையை சிறிய அளவில் செய்துவிடுவோம், என்று கூறி, வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுபத்தி, அச்சுவெல்லம், என வழி மாற்றி செய்ய வைத்தேன். ஒவ்வொரு சன்னதியிலும், ஒவ்வொருவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். சிறு பூசையாக இருந்தாலும், பிரார்த்தனையை மனதிலிருந்து கூறி கிரிவலத்தை நிறைவு செய்வோம். எல்லோருக்கும் திருப்தி.

அந்த உத்தரவின், உண்மையை புரிந்து கொள்வது மிக கடினம். சித்தர்கள் அதனை எவ்வளவு தூரம் மறைக்க முடியுமோ, அந்த அளவு மறைத்து, தன் சேய்களிடம் சிறு பிரார்த்தனையை காணிக்கையாக பெறுவார்கள். அதையும் இறைவனிடம் கூறிவிடுங்கள்/சமர்ப்பித்துவிடுங்கள் என்று அகத்திய பெருமான் கூறுகிறார் என்றால், மனித பிரார்த்தனையையும் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆகவே, அகத்தியர் அடியவர்களிடம், அவர் கூறிய செய்தியை தெரிவிப்பது என் கடமை. அகத்தியர் அடியவர்கள் அனைவரும், இதில் ஆத்மார்த்தமாக பங்கு பெற வேண்டும் என்பதே, அடியேனின் விருப்பம். உங்களால் இயன்றவரை, ஏதேனும் ஒரு நாள் மாலை 6 மணிக்கு, எங்கேனும் ஒரு கோவிலில், எட்டு திக்கிற்கும் ஒரு சிறு விளக்கை ஏற்றி விட்டு, அகத்திய பெருமானின் உத்தரவுப்படி, இந்த தீபத்தை ஏற்றிவிட்டு "இறைவா உன் கோவிலில் இந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறோம்! இது லோக ஷேமத்துக்காக! இதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என வேண்டிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன்.

சமீபகாலத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் நாடி வாசிக்க சென்ற பலருக்கும், இந்த உத்தரவை/அருளை தவிர, வேறு எதுவும் சித்தர்கள் கூறவில்லை என்பதிலிருந்து, இது எத்தனை முக்கியமான உத்தரவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடனேயே செயல் படுவது, மிக சிறந்தது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! 

Thursday 4 January 2018

சித்தன் அருள் - 742 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 9


இறைவன், அகத்தியர் அருளால், "அந்த நாள்>> இந்த வருடம் - 2017 - கோடகநல்லூர்" தொகுப்பின் ​முடிவுரைக்கு வந்துவிட்டோம். இதன் தொடர்பாக, எங்கும் உறையும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். "நன்று என்கிற வார்த்தை மிக மிக சிறியது. அன்று வந்திருந்த அகத்தியர் அடியவர்கள், அன்றைய தினம்  பெருமாளுக்கு,அகத்தியரின் பூசைக்கு "உழவாரப் பணி" செய்ததற்கு கைமாறாக என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுதுதான், "பெருமாளின் மஞ்சள் பொடி" பிரசாதம் நினைவுக்கு வந்தது. அதை அன்று பெருமாளே மனம் உவந்து அருளிய பொழுது, அடியேனுக்கு புரிந்தது, ஒன்றுதான். பெருமாளே, இந்த கலியுகத்தில், "அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து, அவரை மனம் குளிரவைக்க, இத்தனை விஷயங்களை செய்துவிட்டார்களே" என்று பூரித்து போனதால், அவர் கைமாறாக இத்தனை நாள் யாருக்கும் செய்யாமல் இருந்து, சில காலத்துக்கு முன் அடியேனுக்கு அருளியதை உங்களுக்கும் அருளினார் என்று தான் சொல்லவேண்டும். ஆம்! அந்த சூட்ச்சுமத்தை இங்கு சூசகமாக சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள். மனித உடலில் இருக்கும் எந்த வியாதியையும் (விஷம், கர்மா வினை) எடுத்து, நல் வாழ்வு அளிப்பது, அவர் கரம், பாதம் பட்ட மஞ்சள்பொடி.  அதை உங்கள் அனைவருக்கும் வாங்கி கொடுத்து, உங்களுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ உடலுக்குள் இருக்கும் நோயை அடியோடு விரட்டிவிடவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அதற்காக பெருமாளிடமும், அர்ச்சகரிடமும் அத்தனை விண்ணப்பித்தேன். அகத்தியர் அருளால் அதுவும் வெற்றி பெற்றது. என்றேனும், அங்கு செல்லும் பொழுது, மஞ்சள்பொடி வாங்கி கொடுத்து, பெற்று, அங்கிருப்பவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து, இறை அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.

முதலில் திருமஞ்சன மஞ்சள் பொடியை கொடுக்கும் பொழுது, அது மிக வேகமாக தீர்ந்துவிட்டது. அப்பொழுது, ஒரு பெண், தன் தகப்பனாருக்கு உடல் நிலை சரியில்லை எனவும், இன்று இந்த கோவிலுக்கு வந்தால் மருந்து கிடைக்கும் எனவும் யாரோ சொல்லியதை கேட்டு, வந்திருந்தாள். அந்த பெண், இன்னும் சிறிது வேண்டும் என வினவிய பொழுது, திருமஞ்சன மஞ்சள் பிரசாதம், தீர்ந்து போய்விட்டிருந்தது. நானே, என் கரங்களை பார்த்து, "என்ன செய்வது?" என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நினைவுக்கு வந்தது, பெருமாள் பாதத்தில் பூசிவைத்த மஞ்சள்.

"சற்று பொறுங்கள்! பிரசாத விநியோகத்தின் முடிவில், தருகிறேன். மறக்காமல் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அவர் வந்த பொழுது நிறையவே கொடுக்க முடிந்தது. எல்லாம் அகத்தியர் அருள்.

கடந்த வருடம், இதே நாளில் இங்கு வந்து ஒரு தாய் தன் மகளின் மேல் படிப்புக்கா வேண்டிக்கொள்ள, பெருமாளும் அதை அருளி நிறைவேற்ற, அந்த மகளுக்கு அவள் விரும்பிய மேல் படிப்பே கிடைக்க, இந்த முறை அந்த தாய், மகளையும் அழைத்து வந்து பெருமாளுக்கு நன்றி கூறிவிட்டு, பெருமாளின், அகத்தியப் பெருமானின் கனிவை எல்லோரிடமும் கூறி சந்தோஷப்பட்டார்.

ஒரு "அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்"லிருந்து அடுத்த வருட அந்த புண்ணிய திதிக்குள், இறைவனும், அகத்தியரும் எத்தனையோ பேரின் வேண்டுதல்களை, சரியான நேரம் பார்த்து நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து அடியேன், மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த அனைவருக்கும் கூற விரும்புவது ஒன்றுதான்!, "பொறுமையாக இருங்கள்! அகத்தியப் பெருமான் அருளுவார்" அதையும் நீங்கள் மட்டும்தான் உணர்வீர்கள்.

கோடகநல்லூர் மட்டுமல்ல, எந்த கோவிலிலும், மாலை/சந்தியா வேளையில் சுற்று விளக்கேற்றுவது, மூலவருக்கு பூசைக்கு "பச்சை கற்பூரம்" வாங்கி கொடுப்பது போன்றவை இறையை மனம் நெகிழவைக்கும், இறைவனின் அருளை உடனடியாக தருவிக்கும் என்பதும் உண்மை!

அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து செய்த உழவாரப் பணி, உண்மையிலேயே அடியேனுக்கு 1008 கைகள் முளைத்துவிட்டது போன்று தோன்றியதே உண்மை. அதற்காக உங்கள் அனைவருக்கும் மிக மிக கடமை பட்டுள்ளேன்.

இந்த 2018ம் ஆண்டிலும், இதுபோல் நிறைவாக, அந்த புண்ணிய நாளில் பூசைகள் நடந்திட, அகத்தியர் அடியவர்கள் அருள் பெற்றிட, பெருமாளும், அகத்தியப் பெருமானும் அருளுவார்கள் என்ற திடமான நம்பிக்கையுடன், அனைத்து அகத்தியர் அடியவர்களும், க்ஷேமமாக, அமைதியாக, நிறைவாக வாழ வேண்டிக்கொண்டு, இந்த தொகுப்பை "ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில்" சமர்ப்பித்து, இன்றைய தினம் அகத்தியப் பெருமானின் திருஅவதார தினம், அவர் கோவிலுக்கோ, அல்லது அவர் பூசை நடக்கும் இடங்களுக்கோ சென்று உழவாரப்பணி செய்து, அவர் அருளை பெற்றுக்கொள்ளுங்கள், என்று நினைவூட்டி, விடை பெறுகிறேன்! ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!



[கோடகநல்லூர் அகத்தியப் பெருமான் நிகழ்த்திய அற்புத பூசையின் நிகழ்வுகள் தொகுப்பு இத்துடன் நிறைவு பெற்றது!]

சித்தன் அருள் ................. தொடரும்!

Tuesday 2 January 2018

சித்தன் அருள் - 741 - அகத்தியப் பெருமானின் திருஅவதார நாள் - 04-01-2018


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

வருகிற வியாழக்கிழமை அகத்தியப் பெருமானின் அவதார நட்சத்திரமான ஆயில்யம் வருகிறது. அன்று அனைத்து அகத்தியர் கோவில்களிலும், திரு சன்னதியிலும் அகத்தியப் பெருமானுக்கு சிறப்பான பூசை நடை பெரும். அகத்தியர் அடியவர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் சென்று, பூசையில் கலந்து கொண்டு, முக்கியமாக உழவாரப் பணி செய்து, அவர் அருள் பெற்றிட வேண்டுகிறேன்.

திரு ஸ்வாமிநாதன், பாண்டிச்சேரி, அகத்தியர் இல்லத்தில் நடைபெறும் ஆயில்ய பூசையை உங்கள் முன் சமர்ப்பிக்க வேண்டியதால், அந்த தகவலை கீழே தருகிறேன்.

"நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  மார்கழி மாதம் 20 ஆம் நாள் (04/01/2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 6:30  மணி முதல் பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லத்தில் அருள்பாலிக்கும் அகத்தியர் லோபாமுத்திரை  தம்பதியினருக்கு அபிஷேகம், அலங்காரம்,திருமண வைபவம்  செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். 

  6:30 மணி - அபிஷேகம் 
  9:00 மணி - ஹோமம் 
10:30 மணி -திருக்கல்யாணம் 
11;30 மணிக்கு மேல் - திருக்கல்யாண விருந்து 

அனைவரையும் வருக! வருக!! என்று பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லம் சார்பாக வரவேற்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு; சுவாமிநாதன் 9894269986

ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!