​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 30 June 2017

சித்தன் அருள் - 709 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மாயை, மாயை, மாயை, மாயை என்று பொதுவாகக் கூறினால் எங்ஙனம் புரியும்? என்று மனிதர்கள் வினா எழுப்பலாம். உண்மைதான். வெறும் உலகியல் பற்று கொண்டு, உலகியல் ஆசை கொண்டு, உறவுகளில் சிக்கிக் கொண்டு, உடல் இச்சைக்குள் மாட்டிக்கொண்டு உடல் சேவையே உண்மையான சேவை. அதை நோக்கி செல்வதே வாழ்க்கையின் இலட்சியம் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கு அதனைத் தாண்டிய நிலை புரிவது கடினம் என்றாலும் உயர்ந்த விஷயங்களை, நல்ல விஷயங்களை, மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் எடுத்துக் கூற, கூற, கூற, கூற இறைவன் தந்திட்ட அந்த சிறிய அறிவிலே ஒரு சிறிய சிந்தனை வெளிச்சம் புதிதாகத் தோன்றட்டுமே! என்றுதான் நாங்கள் கூறிக்கொண்டே இருக்கிறோம்.

Thursday, 29 June 2017

சித்தன் அருள் - 708 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே நல்ல கருத்துக்களையும், நல்ல ஞானத்தையும் மனிதன் அன்றாடம் சிந்தித்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்க, இருக்கத்தான் அதிலிருந்து அவன் விலகாமல் இருப்பதற்குண்டான மனோதிடம் உருவாகும். எனவே ஒரு மனிதன் மௌனமாக இருப்பதும், மௌனத்தை கலைத்துப் பேச முற்பட்டால் எப்பொழுதுமே நல்ல சாத்வீகமான நல்லதொரு சத் விஷயமாகப் பேசுவதும், இறை சார்ந்த விஷயங்களைப் பேசுவதுமாக இருப்பதே ஏற்புடையதாக இருக்கும். "முழுக்க, முழுக்க ஆன்மீகத்தை வாழ்க்கையாகக் கொண்டு அதை நோக்கியே செல்வேன்" என்று உறுதி எடுத்துக்கொண்ட மனிதர்களெல்லாம் மிக, மிக, மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லாப் பணிகளையும் பார்த்துக்கொண்டு பகுதி, பகுதியாக கால அவகாசம் ஒதுக்கி வித்தை கற்கிறேன் என்கின்ற மாணவன் சற்றே குறைவாக மதிப்பெண் எடுத்தால் பாதகமில்லை. ஆனால் முழுநேரமும் வித்தை கற்கத்தான் ஒதுக்கியிருக்கிறேன் என்று அப்படி ஒதுக்கி வித்தை கற்கின்ற மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்ணை எடுக்க வேண்டுமல்லவா?.  அதைதான் முழுநேர ஆன்மீகத்தை நோக்கி செல்கின்ற மனிதர்கள் கருத்தில் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் வெறும் உலகியல் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு சாதனமாகத்தான் ஆன்மீகம் இருக்குமே தவிர உண்மையாகவே எந்த நோக்கத்திற்காக ஆன்மீகத்தை நோக்கி ஒரு மனிதன் செல்கிறானோ அந்த நோக்கியம் கைவராமல் பல்வேறு பிறவிகளைத் தாண்டி செல்ல வேண்டியிருக்கும். அடுத்தடுத்த பிறவிகளில், இந்தப் பிறவியில் உழைத்த உழைப்பு கைகொடுக்கும் என்றாலும் மாயையில் சிக்கிவிட வாய்ப்பும் இருக்கிறது. இறைவனின் கருணையை சரியான பாத்திரமாக இருந்து மனிதன் பயன்படுத்திக் கொண்டிட வேண்டும்.

Wednesday, 28 June 2017

சித்தன் அருள் - 707 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மனிதன் என்னதான் ஆன்மீக வழியில் வருவதாக எண்ணினாலும் கூட "தான் பிறரைப் போல அல்ல. ஆன்மீகத்தில் இருக்கிறோம்" என்று எண்ணும்பொழுதே ஒரு மாய சேற்றில் அவன் விழுந்து விடுகிறான். உண்மையான ஆன்மீகம் யாரையும் வெறுப்புடன் பார்க்காது.  உண்மையான ஆன்மீகம் எல்லோரையும் அரவணைத்தே செல்லும். உண்மையான ஆன்மீகம் பிறர் தூஷகம் செய்தாலும், (பதிலுக்கு) பிறரை தூஷகம் செய்யத் தூண்டாது. எனவே கிட்டத்தட்ட பக்தர்கள் பார்வையில் இறை எப்படி இருந்தாலும் இறைவனின் பார்வையில் பக்தர்கள் எப்படி இருக்கிறார்கள் ? என்பதே ஒரு உயர்ந்த சிந்தனையாகும். அந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டால்தான் மாயையில் சிக்கிடாமல் இருப்பதற்கு நல்லதொரு வழியை மனிதர்கள் உணரலாம்.

Tuesday, 27 June 2017

சித்தன் அருள் - 706 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான் நவக்ரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி, ஏன்?, இறைவனே ஆனாலும் சரி,  எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில் தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும்.  அதே சமயம் விதிக்கு எதிராக சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின்ற மனிதனுக்கு அந்த அளவு புண்ணிய பலமும், ஆத்ம பலமும் இருக்க வேண்டும். சராசரியான பிரார்த்தனைகளும், வழிபாடுகளும், சிறிய தர்மமும் அத்தனை எளிதாக விதியை மாற்றி விடாது. எனவே விதியை மீறி ஒருவன் எண்ணுவது நடக்க வேண்டுமென்றால் மனம் தளராமல் தொடர்ந்து இறை பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு புண்ணிய பலத்தையும் எல்லா வகையிலும் அதிகரித்துக் கொண்டு, சுய பிரார்த்தனையினால் ஆத்ம பலத்தையும் அதிகரித்து மனம் தளராமல் போராட கற்றுக் கொள்ள வேண்டும்.

Saturday, 24 June 2017

சித்தன் அருள் - 705 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம், இயம்புகிறோம், இயம்புகிறோம் எனும்பொழுது இறைவனின் கருணையால் யாதுதான் மாந்தர்களுக்கு கிட்டியிருக்கிறது?, இனி யாதுதான் கிட்ட இருக்கிறது? என்ற எண்ணங்கள் பல்வேறு தருணங்களில் பல்வேறு ஆத்மாக்களுக்குத் தோன்றுகிறது. இஃதொப்ப நடக்காத ஒன்றையும், கிட்டாத ஒன்றையும் எண்ணி ஏங்குவது மனித இயல்பு. இறைவனின் கருணையாலே யாவும் நடந்து கொண்டேயிருக்கிறது என்பதை மனித மனம் அத்தனை எ ளிதாக புரிந்து கொள்வதில்லை. இஃதொப்ப கூறுங்கால் இயல்பாகவே போய்விடுகிறது மனிதனுக்கு அனைத்து நலமும். நலமில்லாத ஒன்றை எண்ணி, எண்ணியே மனித மனம் விசனம் கொள்கிறது.

வேறு வகையில் கூறப்போனால் இயல்பாகவே ஒருவனிடம் ஏராளமான ஆஸ்தி இருப்பதாக்க கொள்வோம். அஃது அன்னவனுக்கு பெரிதாகத் தோன்றாது. இருக்கின்ற ஆஸ்தியெல்லாம் சிக்கலில் மாட்டி தன் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற சூழல் வந்து அந்த அபாயத்தை அவன் தாண்டி மீண்டும் அவன் எண்ணுகின்ற அந்த பெருஞ்செல்வம் அவன் கையிலே கிட்டினால் அது அவனுக்கு பெரிதாகவே தோன்றுகிறது அல்லது இயல்பாகவே தேகம் நன்றாக இருக்கும்பொழுது யாதொன்றும் தோன்றுவதில்லை மாந்தனுக்கு. ஒரு சிறு குறை ஏற்பட்டு அந்தக் குறை என்று அகலும் என்று எண்ணி, எண்ணி ஏங்கி குறை அகன்றவுடன் சற்றே நிம்மதி கொள்கிறான். இறைவன் அருளாலே கூறுங்கால் அவன் கையில் இருக்கும் தனம் கையிலே இருந்தால் பெரிதாகத் தோன்றுவதில்லை. கையிலே இருக்கும் தனம் தொலைந்து கிட்டினால் பெரிதாகத் தோன்றுகிறது. இந்த மனித இயல்பும் மாயைக்கு உட்பட்டதே. எனவேதான் மாயை குறித்து எம்போன்ற மகான்களும், ஞானிகளும் அவ்வப்பொழுது மாந்தர் குலத்தை எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறோம்.

Thursday, 22 June 2017

சித்தன் அருள் - 704 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தர்மத்தின் தன்மை கொடுக்கின்ற பொருளின் அளவைப் பொருத்ததல்ல. கொடுக்கின்ற மனிதனின் மனதைப் பொருத்தது. கோடி, கோடியாக அள்ளித் தந்துவிட்டு தனிமையில் அமர்ந்துகொண்டு "அவசரப்பட்டு விட்டோமோ? நமக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டோமோ?" என்று ஒரு தரம் வருத்தப்பட்டாலும் அவன் செய்த தர்மத்தின் பலன் வீணாகிவிடும். ஆனால் ஒரு சிறு தொகையை கூட மனமார செய்துவிட்டு, மிகவும் மனம் திறந்து "இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததே?" என்று ஒருவன் மகிழ்ந்தால் அது கோடிக்கு சமமாகும். 

Wednesday, 21 June 2017

சித்தன் அருள் - 703 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே யாம் உணர்த்துவதைவிட விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரந்து கேட்கும்பொழுது தராத மனிதனுக்கு இறைவன் கள்வனை படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும், துயரப்படும் மனிதனைப் பார்த்து அங்கே நல்ல குணத்தை பயன்படுத்தவேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. "இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன? தேகம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும்?" என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான். "இவனுக்கென்ன? இவன் குடும்பத்தில் இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும் உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? அவர்கள் செய்யட்டுமே? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு? நாம் ஏன் இதிலே ஈடுபடவேண்டும்?" அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். "இவனுக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால் அதற்கு நானா பொறுப்பு? நான் எதற்கு அதிலே தலையிடவேண்டும்?" என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால் மிக தந்திரமாக சிந்தனை செய்வதில் சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும் தன் சாமர்த்தியத்தைதான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி, அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும்பொழுது மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்லை.

Tuesday, 20 June 2017

சித்தன் அருள் - 702 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான ஜபங்களை விட, உள்ளன்போடு, ஆத்மார்த்தமாக ஓரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் "லோகாயம் போக வேண்டும். இறை தரிசனம் மட்டுமே வேண்டும்" என்ற எண்ணத்தோடு ஜபித்தால், கட்டாயம் இறை த்வாபர யுகத்தில் மட்டுமல்ல, த்ரேதா யுகத்தில் மட்டுமல்ல, இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் லகரம், லகரம் மந்திரங்களை ஜெபி என்று யாம் கூறுவதின் காரணமே, மனித மனம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்படாததால். இப்படி மந்திரங்களை சொல்லிக்கொண்டேயிருந்தால் என்றாவது ஒரு நாள் அவனையுமறியாமல் மனம் லயித்து ஒரு முறை அந்த "திரு" வின் நாமத்தை, மனம், வாக்கு, காயம், 72,000 நாடி நரம்புகளில் பரவ கூறுவான் என்றுதானப்பா, நாங்களும் கூறுகிறோம். எனவே இறை நாமத்தைக் கூறிக்கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நாளில் சித்திக்கும்.

Monday, 19 June 2017

சித்தன் அருள் - 701 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

சேர்ப்பதல்ல, சேர்த்து வைப்பதல்ல சுகம், இருப்பதையெல்லாம் தந்துகொண்டே இருப்பதே சுகம். இழக்க, இழக்கத்தான் மனிதன் பெறுகிறான். எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ, நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் தன்னையே எப்போது இழக்கிறானோ, அப்பொழுதுதான் ஒருவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு மனிதன் வழங்கி கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும், ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே, கொடுப்பது ஒன்று மட்டும் தான் இறைவனின் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.

Sunday, 18 June 2017

சித்தன் அருள் - 700 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது போல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும். இன்னும் கூறப்போனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து, நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக்கொண்டிருக்கிறான். அப்படியல்ல. வயிற்றைப் பார்த்து, வயிற்றுக்கு எது சுகமோ, வயிற்றுக்கு எது நன்மை தருமோ அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான். இன்னும் கூறப்போனால் உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால், மாற்று இரை தேவையில்லை. அஃதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும். எனவே உடல் உழைப்பு, சிந்தனை உழைப்பு இவற்றைப் பொறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன ? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் உணவைப் பயன்படுத்த வேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் கொள்வதும், உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் கொள்வதும், இன்னும் கூறப்போனால் மசை பண்டம், இன்னும் அதிக காரம், அதிக சுவையான பொருள்கள், செயற்கையான உணவுப் பொருள்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும். வயது, தன்னுடைய உடலின் தன்மை, அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை, மன நிலை இவற்றை பொருத்துதான் எப்பொழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியம், ஒருவன் எந்த சூழலில் இருக்கிறானோ, எந்த தட்ப, வெப்ப நிலையில் இருக்கிறானோ அதற்கு ஏற்றாற் போல் உணவை மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது,  உணவை பகிர்ந்துண்டு ஏற்பது. அஃது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே, இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல், உணவு வீணானானாலும், உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும். உணவு, நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும். எனவே உணவை ஒவ்வொரு மனிதனும் உண்ணும்பொழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து, ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அஃதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததொரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்க வேண்டும். காலம் தவறாமல், நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம், ஒருவன், ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு, அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பொழுது மேலும் மூன்று மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக ‘ ஆஹா ! இப்பொழுது சமைத்த உணவு பத்தாது. இப்பொழுது வெந்து கொண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் போடுகிறேன் ‘ என்று  யாராவது போடுவார்களா ?. மாட்டார்கள். இதை முழுமையாக சமைத்த பிறகு வேறொரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும்பொழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் கொள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும், அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிரார்த்தனையாலும், தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க, வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பக்குவமாக உணவை, அகங்காரம் இல்லாமல், ஆத்திரம் இல்லாமல் , வேதனை இல்லாமல், கவலையில்லாமல், கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மன நிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறையிருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.

Saturday, 17 June 2017

சித்தன் அருள் - 699 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியே தவறு செய்யக் கூறினாலும் அல்லது செய்யத் தூண்டினாலும் தன் மனதை கட்டுப்படுத்தி, போராடி, தவறு செய்யாமல், பாவத்தை சேர்க்காமல் வாழப் பழக வேண்டும். விதி நல்லவற்றை செய்ய வாய்ப்பைக் காட்டும்பொழுது தாராளமாக அந்த வழியில் நடக்கலாம். ஆனல் நல்லவையல்ல என்று விதி தூண்டும்பொழுது, நல்ல ஆத்மாக்களுக்கு, ஓரளவு நன்மைகளை எண்ணக்கூடிய ஆத்மாக்களுக்கு, இறைவன் மனசாட்சி மூலமாக "வேண்டாம், இந்த வழி செல்லாதே, இதை செய்யாதே" என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டேயிருப்பான். அந்த மனசான்றை மதித்து நடந்தால், அந்த தவறிலிருந்து, அந்த பாவத்திலிருந்து ஒருவன் தப்பிக்கலாம். ஆனால் பலகீனமான மனம் கொண்டவனால் அப்படி தப்பிக்க இயலாது. அதனால்தான் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால், ”தொடர்ந்து தர்மம் செய், பிரார்த்தனை செய், ஸ்தல யாத்திரை செய், ஸ்தல யாத்திரை செய், புண்ணிய நதியில் நீராடு" என்கிறோம். பலகீனமான மனம் கொண்ட மனிதனை விதி இன்னமும் அவன் செய்த பாவங்களுக்கு ஏற்ப மேலும் பாவத்தை சேர்க்க வைத்து தாங்கொண்ணா நரகத்தில் தள்ளிவிடும் என்பதால்தான் ஸ்தல யாத்திரையும், பிரார்த்தனையும், தர்மமும், சத்தியமும் தொடர்ந்து செய்ய, செய்ய, செய்ய. அவன் விதி மெல்ல, மெல்ல மாறி அவனை மென்மேலும் அற வழியில் திசை திருப்பும். அதற்குதான் நாங்கள் ஆலய தரிசனம், கூட்டுப் பிரார்த்தனை, தனி மனித பிரார்த்தனை, தர்மகாரியங்கள் செய்ய அருளாணை இட்டுக்கொண்டே இருக்கிறோம். இவற்றை தன்முனைப்பு இல்லாமல் செய்வதால், எந்தவிதமான பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்வதால் ஒருவனின் மனம் திடம் பெறுகிறது. ஒருவனின் மனம் வைராக்யம் பெறுகிறது. ஒருவனின் மனம் பரம்பொருள் மீது ஐக்கியமாகிறது. ஒருவனின் மனம் வைரம் போல் உறுதியாகிறது. இதனால், எந்தவிதமான எதிர்ப்புகளையும், எந்தவிதமான வாழ்க்கை சூழலையும் தடுமாற்றமில்லாமல் வாழ்வதற்குண்டான ஒரு திறனை மனிதன் பெறுகிறான். எனவேதான் பிரார்த்தனையும், பிரார்த்தனையோடு கூடிய நல்லவிதமான அறச்செயலும் ஒரு மனிதனுக்கு தேவை என்பதை எப்பொழுதுமே வலியுறுத்தி வருகிறோம்.

Friday, 16 June 2017

சித்தன் அருள் - 698 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு 

இஃதொப்ப எத்தனை நல்ல ஆத்மாவாக இருந்தாலும் எமை நாடுகின்ற தருணம் அவனின் கிரக நிலையும், இறைவனின் அனுமதியும் இருக்கும் பட்சத்தில் யாம் இறைவன் அருளைக்கொண்டு வாக்குகளைக் கூறுகிறோம். ஒரு வேளை நாங்கள் வாக்கே கூறவில்லை என்பதாகக் கொண்டாலும், அதனால் அந்த ஆத்மா அல்லது அந்த மனிதன் முழுக்க, முழுக்க தகுதியற்றவன் என்றோ அல்லது தீயவன் என்றோ பொருளல்ல. அல்லது நாங்கள் தொடர்ந்து நாழிகை, நாழிகையாக வாக்கைக் கூறுகிறோம் என்பதற்காக அவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்றோ, குணத்தில் உயர்ந்தவன் என்றோ பொருள் அல்ல. எனவே இவையெல்லாம் அந்தந்த நாழிகையின் கிரக நிலையைப் பொருத்தும், அந்தந்த மனிதனின் வினைப்பயனைப் பொருத்தும் அமைவதாகும். இஃதொப்ப தொடர்ந்து ஒரு மாணாக்கனை வைத்துக்கொண்டு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டேயிருந்தால், இதை சிறப்பு என்பதா ? தனி கவனம் செலுத்துகிறார் என்பதா ? அல்லது ஒரு முறை உரைத்தாலே புரிந்து கொள்ளும் மாணவனை அந்த ஆசிரியர் சரியாக கவனிக்கவில்லை என்று கூறுவதா ?. பலமுறை திரும்ப திரும்ப போதிக்க வேண்டிய நிலையில் இருந்தால் கேட்கின்ற மாணாக்கனின் கிரகிக்கும் திறன் குறைவு என்பது பொருள். ஒரு முறை குறிப்பாக கூறினாலே ஒரு மாணாக்கன் புரிந்து கொண்டு விட்டால் கிரகிக்கும் திறன் அஃதொப்ப சிந்தனையாற்றல் சரியாக இருக்கிறது என்பது பொருள்.

Thursday, 15 June 2017

சித்தன் அருள் - 697 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மகாபாரதத்திலே தர்மருக்கும், யக்ஷனுக்கும் இடையே நடந்த கேள்வி, பதில் இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் தர்மம் குறித்தும், தர்ம சிந்தனை குறித்தும் பிற்கால மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகம். அந்த இடத்திலே தர்மத்தை நுட்பமாக பார்க்க வேண்டும். அந்த ஒட்டு மொத்த வினாக்களின் விடையே, அங்கு இறுதியாக ஒருவனை உயிர்ப்பித்துத் தருகிறேன் என்றால், அது யார்? என்று கேட்டால், அங்கே என்ன விடை வருகிறது என்பதை பொறுத்துதான் அங்கே தர்மத்தின் நுணுக்கம் இருக்கிறது. பராக்ரமசாலியான பீமனையோ, அற்புதமான வில்லாற்றல் கொண்ட அர்ஜுனனையோ கேட்காமல் மாத்ரியின் மகனை கேட்டதால் அங்கே தர்மம் உயர்ந்து நிற்கிறது. ஏனென்றால் குந்தியின் வாரிசாக நான் இருக்கிறேன். என் சிற்றன்னையின் வாரிசாக யாரும் இல்லை. அவர்களின் வாரிசாக ஒருவனையாவது தரக்கூடாதா? என்ற நோக்கம்தான் அங்கே உயர்வாக இருக்கிறது. இப்படித்தான் தர்மத்தை சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படைக் குறிப்புக்காக நிகழ்த்தப்பட்ட இறை நாடகம்.

Wednesday, 14 June 2017

சித்தன் அருள் - 696 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தாங்கள் வகுத்துக் கொடுத்ததுள்ள சாஸ்திரங்களிலும், பூஜா முறைகளிலும், யாகங்களிலும் உள்ள இடைசெருகல்களை நீக்கி மூலத்தை தந்து அருள வேண்டும்.

இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால், அப்படி நீக்கினாலும் அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வரவேண்டும் என்றால், அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக்கொள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத, சுகத்தைத் தராத, நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும், எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது. உதாரணமாகக் கூறுவோம். சிலவற்றை மனிதன் அறிவு கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது போன்ற தருணங்களிலே ஒரு சிரார்த்தம் என்றால், திதி என்றால், அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும், காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் கொண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத்தான் தரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ அவன் அதை வாங்கிக் கொள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு ‘"நான் காய்கறிதான் வாங்கித் தருவேன் " என்று இவன் கூற, அவன் என்ன செய்கிறான்? காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் கொண்டே அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மன நிலை காரணம்? எனவே சாஸ்திரங்களும், மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொண்டு கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பொது நலம் கருதி மாற்றிக் கொள்வது தவறல்ல. ஆனால் சாஸ்திரங்களை மனிதன் சுய நலத்திற்காக மட்டுமே எப்பொழுதும் மாற்றுகிறான். பொது நலத்திற்காக மாற்றுவதில்லை. "தர்மம் செய்" என்றால் மட்டும், "இன்று வெள்ளிக் கிழமை. இப்பொழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பொழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பொழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பொழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய்க்கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன்" என்று, தருவதற்கு, ஆயிரம் சட்ட,திட்டங்களைக் கூறுகின்ற மனிதன், பெறுவதற்கு எந்த சட்ட, திட்டமாவது போடுகிறானா? "வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம்" என்று யாராவது கூறுகிறார்களா? வெள்ளிக்கிழமைதானே மகாலக்ஷ்மிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம், பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் போய்விட்டது. இஃதொப்ப நிலையிலே ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படிக் கேட்கிறான் ? "என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா?" என்றுதான் கேட்கிறான். "நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம, காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா?" என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சொல்கின்ற மனிதன் எப்படி சொல்கிறான்? "நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால் தேவையற்ற அபவாதம்தான் வரும், எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத்தரும்" என்றெல்லாம் போதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகி விட்டார்கள். எனவே நல்லதை, தர்மத்தை, சத்தியத்தை, விட்டுக்கொடுக்காமல், பொது நலத்தை, பொது சேவையை விட்டுக்கொடுக்காமல், ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும் சாதகமோ அல்லது பாதகமோ இல்லாமல் பொது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, 13 June 2017

சித்தன் அருள் - 695 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மனிதனை இறைவனை நோக்கி திசை திருப்ப விடாமல் தடுப்பது எது? இறைவன் எப்பொழுதும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது கருத்து அளவில் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் முழுமையாக அந்தப் பரம்பொருளை ஒரு சராசரி நிலையில் யாராலும் உணர முடிவதில்லை. இறைவன் என்கிற அந்த மாபெரும் ஆற்றலை வரைகலையில் உள்ளது போலவோ, சிற்பத்தில் உள்ளது போலவோ ஆலயத்தில் காண்பது போலவோ தனியாக ஒரு நண்பனை பார்ப்பது போல, ஒரு உறவை பார்ப்பது போல பார்த்தால்தான் இறை என்று மனித மனதிற்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்படி பார்ப்பது, உணர்வது மட்டும் இறையல்ல. அதனையும் தாண்டி அந்த இறைவன் எந்தெந்த வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்? சம்பவங்கள் மூலம், நல்ல நிகழ்வுகள் மூலம், தன்னை சுற்றி வாழ்கின்ற நல்ல மனிதர்கள் மூலம் அந்த இறைத்தன்மை என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அஃதாவது ஆறு, நதி என்றால் என்ன? என்று கேட்டால் ஒரு மனிதன் எதைக் கூறுவான்?. நீர் நிரம்பிய ஒரு இடமா? அல்லது நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடமா? நீர் ஓடிக்கொண்டேயிருப்பது ஆறு என்றால் நீர் வற்றிய பிறகு அதனை என்னவென்று அழைப்பது? ஒரு நீண்ட பள்ளமான பகுதியிலே மணல் இருக்கிறது. அங்கங்கே திட்டு,திட்டாக நீர் தேங்கியிருக்கிறது. இதனையும் நதி என்று கூறலாமா? அல்லது கரைபுரண்டோடும் வெள்ளத்திலே சிக்கிக்கொண்ட மனிதன் அதனையும் நதியென்று கூறுவானா? எல்லாம் ஒரு வகையில் நதியென்றாலும் நதி வெளிப்படுகின்ற விதம் மாறுபடுகிறது. ஒரு இடத்தில் அகலமாக, ஆழமாக, நீண்டும் இன்னொரு இடத்தில் குறுகியும் செல்கிறது.

Saturday, 10 June 2017

சித்தன் அருள் - 694 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக ஒருவன், அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து, எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு அலைந்து, திரிந்து, திளைத்து சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதனிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதனிடம் இருந்தால் இவன் ஏற்றுக்கொள்வானா? என்று பார்த்து, இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால், பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்க மாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை? என்று ஆய்ந்து பார்த்து, ஆய்ந்து பார்த்து இவனை இவனாகவே பகுத்துப் பார்த்து, பகுத்துப் பார்த்து இவனை இவன் சரி செய்து கொண்டால் மெல்ல, மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Friday, 9 June 2017

சித்தன் அருள் - 693 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைகொண்டு, இயம்புவது யாதென்றால் இஃதொப்ப உலக வாழ்வினிலே, பல்வேறு மனிதர்களுக்கு காலகாலம் பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இவைகளையெல்லாம் விலக்கி வைத்து, பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைதான் பெரும்பாலான மனிதர்கள் விரும்புகிறார்கள். இஃதொப்ப நிலையை பார்க்கும்பொழுது அஃதொப்ப ஒரு அமைதியான வாழ்வு என்பது பெரும்பாலும் சராசரி வாழ்வில் கிட்டுவது கடினமே. இவைபோக, வினைகளின் எதிரொலி, அதன் வழியில் வாழ்க்கையில் பல்வேறுவிதமான அனுபவங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதால் மனித வாழ்வு என்பது, பல கோணங்களில் பார்க்கும்பொழுது, அமைதியைத் தராத நிலையிலும், சந்தோஷத்தை தராத நிலையிலும் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனாலும் கூட மனதை தளரவிடாமல் வாழ்க்கையை எதிர்கொள்வதும், இறை நம்பிக்கையோடு வாழ்வதுமாக வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள கட்டாயம் மெல்ல, மெல்ல மாற்றங்கள் ஏற்படும்

Thursday, 8 June 2017

சித்தன் அருள் - 692 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே மாயையை வெல்ல வேண்டும் என்று புறப்பட்ட மனிதன் வென்றதாகத் தெரியவில்லை. இன்னும் கூறப்போனால் "இது மாயை,  இது மாயை இல்லை" என்று ஒரு மனிதன் எண்ணும்பொழுதே அவன் மாயைக்குள் சிக்கி விடுகிறான். ஒரு மனிதனின் தாயைப் போல் அவனுடன் இரண்டற கலந்திருப்பதே மாயைதான். அறியாமையின் உச்சம், பாசத்தின் உச்சம், ஆசையின் உச்சம், எதிர்பார்ப்பின் உச்சம், தேவைகளின் உச்சம் – இப்படி மனித எண்ணங்களில் எவையெல்லாம் மகிழ்ச்சி என்று அவன் இதுவரை எண்ணிக்கொண்டு வாழ்கிறானோ அவற்றின் அத்தனை கூறுகளையும் பார்த்தால் அது மாயையின் விழுதுகளாகவே இருக்கும். பின் எப்படித்தான் வாழ்வது? வாழ்க்கையை எதிர்கொள்வது? என்றால் உடலால் வாழ்வது ஒரு வாழ்வு. சிந்தனையால் வாழ்வது ஒரு வாழ்வு. வெறும் உடலால் வாழ்வது மிருக வாழ்வு. அதனையும் தாண்டி சிந்தனையால் வாழ்வதும் அந்த சிந்தனையும் அற சிந்தனையாக இருப்பதுமே இறை நோக்கி செல்வதற்குண்டான படிகளாகும். எல்லாவற்றையும் ஒரு உன்னத ஞானியின் பார்வையிலே பார்க்கப் பழகுவதும் எது நிலைத்ததோ, எது நிலைக்குமோ, எது நிலைத்த தன்மையை தருமோ, எது தீய பின் விளைவுகளைத் தராத ஒரு நிலையோ, அஃது எஃது? அதை எப்படி உணர்வது? அதற்காக யாது செய்வது? என்று சதா சர்வ காலம் சிந்தித்து வாழ்வதே அற சிந்தனையாகும்.

Wednesday, 7 June 2017

சித்தன் அருள் - 691 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பொதுவாகவே, வாழும் மகான்கள் என்று பலரை மனிதர்கள் நாடுகிறார்கள். அதை நாங்கள் குறையோ, குற்றமோ கூறவில்லை. அதாவது ஒருவன் இந்த ஜீவ அருள் ஒலையை நம்பி, நாடி, இதன் கருத்துக்களை ஏற்கத் துவங்கும்பொழுது நாங்கள் இறைவனருளால் கூறுகின்ற கருத்தையெல்லாம் 100 – க்கு 100 பின்பற்றி, அதன் வழியாக நடக்க, நடக்க மெய்யான ஞானிகளை இவன் தேட வேண்டாம். மெய்யான ஞானிகள் இவனைத் தேடி வருவார்கள். அதுதான் ஏற்புடையது. அங்கு ஞானி இருக்கிறார், இங்கு ஞானி இருக்கிறார் என்று தேடி சென்றால், அதனால் தேவையில்லாத குழப்பங்கள்தான் ஏற்படும். எத்தனைதான் மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும் கூட, இந்த பூமியிலே பிறவி எடுத்துவிட்டால் சில விரும்பத்தகாத குணங்களும் அவரிடம் இருக்கலாம். அப்பொழுது என்னவாகும்? அந்த ஒரு பகுதியைப் பார்க்கின்ற மனிதன் தவறாகப் பார்ப்பான். நாங்கள் நல்லவற்றை எடுத்துக் கூறினால் "சித்தர்களே இப்படியெல்லாம் உயர்வாகக் கூறுகிறார்களே? எங்கள் பார்வைக்கு அப்படித் தோன்றவில்லையே?" என்று ஒருவன் கூறுவான். எனவேதான், சமகாலத்தில் வாழ்கின்ற ஞானிகள் குறித்து நாங்கள் எந்த விளக்கமும் தர விரும்புவதில்லை.

Tuesday, 6 June 2017

சித்தன் அருள் - 690 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தொண்டுகள் தொடர்ந்து செய்கின்ற எல்லோரையும் இறைவன் அருள் பெற்ற சேய்கள் என்று நாங்கள் கூறுவோம். எனவே நல்லதொரு வழிகாட்டக்கூடிய (இந்த பரந்த பாரத பூமியிலே பிறந்தது போல்) நூற்றுக்கணக்கான ஞானிகள் இல்லாத தேசத்திலிருந்தும் கூட ஒரு சில மகான்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அந்த தேசத்திலிருந்து கூட இப்படி உன்னதமான தொண்டை செய்யக்கூடிய ஒரு நங்கை (அன்னை தெரசா) வந்திருக்கிறாள் என்றால் அது பாராட்டப்படக்கூடிய விஷயம்.  இந்த சேவை இல்லாததால்தான் இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மார்க்கம் களங்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது சேவையும், பிரார்த்தனை எனப்படும் பக்தியும் பிரிந்து நிற்கிறதோ, அந்த மார்க்கம் வளராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த (இந்து மதம் என்று நாங்கள் கூறவில்லை. புரிவதற்காக கூறுகிறோம்) இந்து மார்க்கமானது வளர வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய மனிதர்கள் ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து சேவைகளை அதிகப்படுத்தினால் கட்டாயம் இந்த மார்க்கம் உயர்ந்த மார்க்கமாக மாறும். உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட, ஆனால் அந்த கருத்துக்களைப் பின்பற்றாத மனித கூட்டம் கொண்ட ஒரு மார்க்கம் இது.

Monday, 5 June 2017

சித்தன் அருள் - 689 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இயல்பாகவே ஒருவனிடம் ஏராளமான ஆஸ்தி இருப்பதாக்க கொள்வோம். அஃது அன்னவனுக்கு பெரிதாகத் தோன்றாது. இருக்கின்ற ஆஸ்தியெல்லாம் சிக்கலில் மாட்டி, தன் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற சூழல் வந்து அந்த அபாயத்தை அவன் தாண்டி, மீண்டும் அவன் எண்ணுகின்ற அந்த பெருஞ்செல்வம் அவன் கையிலே கிட்டினால், அது அவனுக்கு பெரிதாகவே தோன்றுகிறது அல்லது இயல்பாகவே தேகம் நன்றாக இருக்கும்பொழுது யாதொன்றும் தோன்றுவதில்லை மாந்தனுக்கு. ஒரு சிறு குறை ஏற்பட்டு அந்தக் குறை என்று அகலும் என்று எண்ணி, எண்ணி, ஏங்கி குறை அகன்றவுடன் சற்றே நிம்மதி கொள்கிறான். இறைவன் அருளாலே கூறுங்கால் அவன் கையில் இருக்கும் தனம் கையிலே இருந்தால் பெரிதாகத் தோன்றுவதில்லை. கையிலே இருக்கும் தனம் தொலைந்து கிட்டினால், பெரிதாகத் தோன்றுகிறது. இந்த மனித இயல்பும் மாயைக்கு உட்பட்டதே. எனவேதான் மாயை குறித்து எம்போன்ற மகான்களும், ஞானிகளும் அவ்வப்பொழுது மாந்தர் குலத்தை எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறோம்.

Sunday, 4 June 2017

சித்தன் அருள் - 688 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விண்மீன்களாக மாறும்பல உன்னதமான ஆன்மாக்கள் , சதா சர்வ காலம் இறை தியானத்தில் இருப்பார்கள். தன் ஆக்க பூர்வமான கதிர்களை பூமிக்கும், மற்ற லோகங்களுக்கும் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவையெல்லாம் (ஆத்மாக்கள்) இறைவனை நோக்கி வரவேண்டும் என்று துடிக்கிறதோ, அவற்றை மேலும் நல்ல பாதையில் தூண்டி விடுவதற்குமான முயற்சியில் அது போன்ற ஆத்மாக்கள் இறங்கி செயலாற்றிக் கொண்டேயிருக்கும்.

Saturday, 3 June 2017

சித்தன் அருள் - 687 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனம் ஒரு நிலைப்பட்டு செய்யக்கூடிய விஷயமே பூஜைதான். புற சடங்குகள் எதற்காக என்றால், உடலும், உள்ளமும் ஒரு புத்துணர்வு பெற்று அதை நோக்கி எண்ணங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக. ஆனால் புற சடங்குகள் நன்றாக செய்யப்பட்டு, மனம் மட்டும் அங்கே கவனம் குவிக்கப்படாமல், மனசிதைவோடு இருந்தால் அது உண்மையான பூஜை ஆகாது. அதற்காக மனம் சிதைகிறதே என்று, பூஜை செய்யாமலும் இருக்கக்கூடாது. செய்ய, செய்ய நாளடைவில் மனம் பக்குவம் பெற்று, பண்பட்டு ஒரு நேர் கோட்டில் செல்லத் துவங்கும். 

Friday, 2 June 2017

சித்தன் அருள் - 686 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே எம்மைப் பார்த்து "ஒரு தர்ம காரியம் செய்ய வேண்டும். செய்யலாமா?" என்று கேட்டால் "வேண்டாம்" என்று சொன்னால் எல்லோரும் என்ன கூறுவீர்கள்?  "சித்தர்கள் திருவாக்காலேயே வேண்டாம்"  என்று வந்துவிட்டது. "சித்தர்களே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று கூறும்பொழுது நாமும் அதை அனுசரித்தே நடக்க வேண்டும்" என்று அனைவருமே எண்ணுவார்கள். "சரி, செய்து கொள்ளலாம்" என்று கூறிவிட்டால் நடைமுறையில் சிக்கல் வரும்பொழுது, "இப்படியெல்லாம் சிக்கல்கள் வருகிறதே, எதற்காக சித்தர்கள் அருளாசி தந்தார்கள்?" என்று எம்மை நோக்கி வினா எழுப்புவார்கள். எனவே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று நாங்கள் ஒருபொழுதும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் "இப்படியொரு தர்ம காரியம் நடந்துகொண்டிருக்கிறது அல்லது நடக்க இருக்கிறது. எனவே பொருள் தாருங்கள், பொருள் தாருங்கள்" என்று பலரிடம் சென்று யாரும் வினவ வேண்டாம். இயல்பாக இங்கு நடப்பதையெல்லாம் புரிந்துகொண்டு தன்னை இணைத்துக்கொள்ளக்கூடிய மனிதன் வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம். ஏனென்றால் மனிதர்களைப் பொருத்தவரை அவனாக விதிவழியாக சென்று எத்தனை லகரம் தனத்தையும் ஏமாற சித்தமாக இருப்பான். ஆனால் தானாக முன்வந்து ஒரு அறச்செயலுக்கு தனம் தருவது என்பது மிக, மிகக் கடினம். அதற்கும் விதியில் இடம் வேண்டும். தருபவன் உயர்ந்த ஆத்மா, தராதவன் தாழ்ந்த ஆத்மா என்ற ரீதியில் நாங்கள் கூறவில்லை.  தராத நிலையில் அவன் பாவக்கணக்கு இன்னும் இருக்கிறது. அவனுடைய பாவங்களும் தீரவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்வதைத் தவிர, வேறு வழியேதுமில்லை.

Thursday, 1 June 2017

சித்தன் அருள் - 685 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே ஒரு மனிதன் நல்லவனாக இருப்பது மட்டுமல்ல, இங்கிதம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இஃதொப்ப நிலையிலே, பிறருக்கு எந்தவகையிலும், உடல் ரீதியாகவும், எண்ணங்கள் ரீதியாகவும், பார்வைகள் ரீதியாகவும் தொல்லை தருகின்ற மனிதனாக இருத்தல் கூடாது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் பார்க்கும்பொழுதே மனதிலே உற்சாகம் ஏற்பட வேண்டும். "ஆஹா! இந்த மனிதனை இதற்கு முன்னால் சந்தித்ததே இல்லை. ஆனால் இவனை பார்க்கவேண்டும், இவனுடன் பழகவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதே? அது ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும் கட்டாயம் இவன் நல்ல எண்ணங்கள் கொண்ட ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்" என்று ஒரு மனிதனைப் பார்க்கின்ற இன்னொரு மனிதனுக்குத் தோன்றும் வண்ணம், ஒவ்வொரு மனிதனும் தன் மனதிலே நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டிட வேண்டும்.