​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 14 September 2017

சித்தன் அருள் - 722 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 6


​​ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அடுத்தவார வியாழக்கிழமை வந்தது. காலையில் இருந்தே இருப்புக்கொள்ளவில்லை. போனவாரம் வகுப்பை முடித்து நாடியை ராமர் பாதத்தில் வைத்த பொழுது, துளசி மாலை அவர் கழுத்திலிருந்து கழன்று நாடியின் மேல் விழுந்ததை என்னால் மறக்கவே முடியவில்லை. அதை ஒரு நல்ல சகுனமாக மனம் பார்த்ததினால், என் குருநாதர் அகத்தியருக்கு கிடைத்த பெருமையாகத்தான் உணர்ந்தேன். ஸ்ரீராமரே அகத்தியர் அருளியதை வாழ்த்தினார் என்றுதான் தோன்றியது. அப்படியானால் எப்படிப்பட்ட பெருமையை அகத்தியப் பெருமான் பெற்றிருக்கிறார், அதில் ஒரு சிறிதளவு சேவையை ராமருக்கு அடியேனும் செய்துள்ளேன் என்பதில், என் மனம் மிகுந்த நிறைவு பெற்றது.

மூத்தோனையும், அனுமனையும் வணங்கி பூஜை அறையில் அமர்ந்து அகத்தியரை த்யானித்துவிட்டு, நாடியை திறந்து பார்த்தால், அகத்தியப் பெருமானின் வார்த்தைகள், மிகுந்த சந்தோஷத்துடன், வந்தது. எல்லாம் ஸ்ரீராமர் அருளிய செயல் என்று நினைத்துக் கொண்டேன்.

அகத்தியர் கூறலானார்.

"இறைவன் அருளால், இறை அருளியதை தருகிற வேலை மட்டும்தான் என்னுடையது. அதன் கூட, பிறகு நடப்பதெல்லாம் இறைவன் மனம் கனிந்துவிட்டான், அருளுகிறான் என அர்த்தம் கொள்ளவேண்டும். அதுதான் உண்மையும் கூட. சாதாரண, சின்ன சின்ன விஷயங்களில் கூட மனிதருக்கு இறைவன் பல முறை அருளியுள்ளான். ஆனால் அதை புரிந்து கொள்ளும் தன்மை, அந்த மனிதனுக்கு ஏற்படுவதில்லை. காரணம், அவன் எதிர்பார்ப்பு, லோகாய, பௌதீக விஷயங்களில் சார்ந்துள்ளது. ஒருமுறை இறை யோசித்து அருளியது, பிறகு ஒருநாள், ஒரு நல்ல நிகழ்ச்சி அந்த மனிதனுக்கு நடக்கும் வரை, காத்திருந்து கூட நிற்கும். அவனது தர்மத்துக்கு உட்பட்ட விஷயம் நிறைவேறியதும், அது அவனை விட்டு விலகிவிடும். இந்த அருள் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரியவர்கள் "எப்பொழுதும் இறைவனுடன் இரு, எப்பொழுதும் தர்மம் செய், எப்பொழுதும் புண்ணிய ஸ்தல வழிபாடு செய், எப்பொழுதும் பூசை செய், எப்பொழுதும் பிற ஆத்மாக்களிடம், மனிதராயினும், பிற உயிர்களாயினும், அவைகளும் நம்மைப்போல் தன் கர்மாவை, உருவெடுத்து வந்து அனுபவிக்க பிறந்திருக்கிறார்கள், என்ற எண்ணத்துடன், கனிவோடு இரு" என்று கூறினார்கள். ஆனால் மனிதனோ, தான், தன் குடும்பம் என்று மட்டும் இருக்கிற, அந்த மனநிலைதான் அவனை அத்தனை பிரச்சினைகளையும் எதிர் கொள்ள செய்கிறது. அவனும் கூடிய விரைவில் தளர்ந்து போய், இறை வழியை கைவிட்டு, சாதாரண மிருக நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறான். ஒருவனுக்கு அல்லது ஒருவளுக்கு உதவி செய்வதினால் யாரும் யார் கர்மாவையும் மாற்றிவிட முடியாதுதான். கர்மாவை/விதியை பலமிழக்க செய்ய இறைவன் ஒருவனால் தான் முடியும். பிறகு ஏன் உதவி என்றால், உதவி செய்கிறவன் கர்மாவில் விதிக்கப்பட்டுள்ள "உதவி செய்" என்கிற இறைவனின் உத்தரவு அங்கு நிறைவேற்றப்படும். அதன் வழி உதவி பெருகிறவனும் சற்று சுலபமாக மூச்சு விட்டுக்கொண்டு தன் கர்மாவை கடந்து போவான். இங்கு ஒரு விதத்தில் பார்த்தால், கர்ம பரிவர்த்தனை நடக்கிறது என்று மனிதர்களால் உணர முடியும். சித்தர்களுக்கும், இறைவனுக்கும் மட்டும் தெரியும், இங்கு கர்ம பரிபாலனமும் நடக்கிறது."

இதைக் கேட்டதும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

"என்ன இது! ஸ்ரீ ராம சரிதையை விட்டு வெளியே செல்கிறோமோ!" என்று.

அதற்கும் அகத்தியர் பதிலளித்தார்.

"உன் கேள்வி நியாயமானது. இருந்தும் நீதியை, நல்லவற்றை திருப்பி திருப்பி கூறினால், ஒரு முறைக்கு இருமுறை கூறினால், சிலவேளை மனிதன் விழித்துக் கொள்வானே என்றும், எங்கள் வேலை இன்னும் சுலபமாக முடியுமே என்றும் நினைத்துத்தான் இதைக் கூறினேன். சரி விஷயத்துக்கு வருகிறேன்." என்று கூறி ஸ்ரீராம சரிதைக்குள் புகுந்தார்.

"அஞ்சனை மைந்தனை ஸ்ரீராமபிரான் வெகுவாக நம்பினார். இதை அனுமனும் உணர்ந்திருந்தார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இருக்கவேண்டும் என்று அனுமனும் தன் சக்தியை உணர்ந்து செயல் பட்டார். அத்தனை கவனத்துடன், அனுமன் செயல்பட்ட விதம், அவர் செய்த லீலைகள், தூதுவனுக்குரிய குணங்கள், என்னால் முடியும் என்கிற நம்பிக்கை, ஸ்ரீராம சேவையே என் பிறப்பின் அர்த்தம், ஸ்ரீராம தாசத்துவம், அவர் செய்த ஜபம், த்யானம் போன்றவை, பின்னால் முனிவர்களால் மந்திர உருவில் போற்றப்பட்ட பொழுது, இறை கனிந்து தன் அருளை அந்த மந்திரத்திற்குள் புகுத்தி, இன்றும் மனித இனம் அதை பாராயணம் செய்தால் பலனை, இறை அருளை பெற்றுக் கொள்ளட்டும் என்று தீர்மானித்ததை, அடியேனும் கண்கூடாக பார்த்தேன். ஒவ்வொரு மிக சிறந்த நிகழ்ச்சிக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். சுந்தரகாண்டம் அனுமனின் லீலைகளாயினும், இன்றும் பலம் மிகுந்து, அருள் நிறைந்த, சிறந்த பலனளிக்க கூடிய ஒரு காண்டமாக இருக்க காரணமே, அதனுள் உறைந்திருக்கும், ஸ்ரீராமனின் ஆசிர்வாதம்தான். இது மட்டும் மனிதனுக்கு புரிந்தால் போதும், அவன் தன் வாழ்க்கையை நல்ல பாதையை நோக்கி திருப்பி விடலாம் ."

"மனிதன் முயற்சி செய்யும் பொழுது இடையூறு வரத்தான் செய்யும். அதையும் தாண்டி செல்கிற மன தைரியம் அவனுக்கு வேண்டும். சுந்தரகாண்டத்தின் பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று சர்கங்களில் உள்ள 195 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு, அனுமனே அதை அருளுவார், அனைத்து தடைகளும் நீங்கிவிடும், என்பது சத்தியம்." 

"ராகு, சனி, கேது, குரு" ஆகிய நான்கு கிரகங்களும் அஷ்டமத்தில் இருந்து ஆட்டிவைக்கும் பொழுது, சங்கடங்களையும், மனக்கலக்கத்தையும், எப்பேர்பட்டவர்களும் சந்திக்க வேண்டிவரும். அப்படிப்பட்ட அத்தனை பேர்களும், வேலைக்கு முயற்சி செய்யும் இளைஞ்சர்கள், திருமணம் இன்னும் நடக்கவில்லையே என்று மனதிற்குள் குமரிக்கொண்டிருக்கும் யுவதிகள், பணத்தட்டுப்பாடு கொண்டு எப்படி வாழப் போகிறேன் என்று துடி துடிக்கும் சம்சாரிகள், அத்தனை பேர்களும் கண்டிப்பாக இந்த சுந்தர காண்டத்திலுள்ள பதினான்கு சர்க்கங்களையும் படித்து வந்தால் மிகப் பெரிய எதிர்காலம் சீக்கிரமே கிடைக்கும், அதையும் அனுமனே தருவார், இது நிச்சயம்!" என்று அருள் வாக்கு தந்தார் அகத்தியப் பெருமான்.

எனக்கென்னவோ "சும்மாவேனும், தேனீ கூட்டை அசைத்துப்பார்ப்போமே" என்று ஆசைப்பட, இப்படி அமுதமாக, வாழ்க்கை செம்மைப்பட, அகத்தியர் அருளுகிறாரே, என்று ஒரே ஆச்சரியம். 

"பதிநான்காவது சர்க்கத்தை தினமும் பாராயணம் பண்ணி, ஒரு மனிதன் தன் பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டால், இறை அருள், எந்த காரியத்தையும் சாதிக்க வைக்கும்.

"ஜாதக ரீதியாக தொட்டதெல்லாம் தடங்கல் ஆகிக்கொண்டிருப்பவர்களும், சுபகாரியமான திருமணம், சீமந்தம் நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தினர்களும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க துடிப்பவர்களும், அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்களும், ராகு, கேது தோஷங்களில் பீடிக்கப்பட்டவர்களும், சனி மகா தசையில் ராகு, கேது புத்தி நடப்பவர்களும் வறுமையில் வாடுபவர்களும், இந்த சுந்தரகாண்டத்தின் பதினெட்டாவது சர்க்கத்திலுள்ள ஸ்லோகங்களை விடாது படித்து வந்தால், அனைத்து சிரமங்களும், அனுமன் அருளினால் விலகும்" என்றார்.

இருபத்து மூன்று முதல் இருபத்தி ஆறாவது வரையுள்ள நான்கு சர்கங்களில், வால்மீகி பெண்மைக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், அதனால் அடைகிற துன்பங்களையும் விவரித்து கூறியுள்ளார். விவாகரத்து செய்ய நினைப்பவர்கள், கணவனை விட்டு பிரிந்து வாழ்பவர்கள், வெளியுலக வட்டாரத்தில் மற்ற சக நபர்களால் விரட்டப்படும் பெண்களுக்கும், தங்கள் ராசியில் ஏழாமிடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது உள்ள பெண்களுக்கும், அந்த களத்திர அஷ்டம ஸ்தானக் கொடுமையிலிருந்து நீங்க; ஆறாமிடத்து பாவம் பலமற்று செயல்பட இந்த நான்கு சர்கங்களையும், அப்படியே பட்டாபிஷேக சர்கத்தையும் படித்தால், துயரம் விலகும், கணவர் கிடைப்பார், இல்லற வாழ்க்கை மேலும் இனிமையாகும்" என்றார்.

அன்றைய வகுப்பை இத்துடன் முடித்துக் கொண்டு அகத்தியர் ஆசிர்வதித்து விடை பெற்றார். நானும் நாடியையும், குறிப்பெடுத்த புத்தகத்தையும் ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.

பின் எழுந்து, "ஓம் அகத்தீசாய நமஹ" என்று த்யானத்தில் ஆழ்ந்தேன்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Monday, 11 September 2017

சித்தன் அருள் - 721 - ஒரு அகத்தியர் அடியவரின் ஓதியப்பர் பிறந்தநாள் தரிசன அனுபவம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒரு அடியவர் "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவில், இந்த வருட ஓதியப்பர் பிறந்தநாள் ஓதிமலையில் எப்படி கொண்டாடப்பட்டது என்பதை இங்கே தெரிவிக்குமாறு கேட்டிருந்தார். அடியேனுக்கு இந்த முறை செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எப்படி செல்வது என்று கேட்டு தெரிந்துகொண்ட ஒரு அகத்தியர் அடியவர் தனது அனுபவத்தை எனக்கு தெரிவித்திருந்தார்.

அவர் அனுமதியுடன், இந்த வருட ஓதியப்பர் பிறந்தநாள் அனுபவத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். படித்து இன்புறுக. 

ஒம் அகத்திசாய நமஹ.....

ஒதிமலை பயணம் மிக சிறப்பாக அமைந்தது.   சனிக்கிழமை   ஆலயம் திறக்காது என்று பூசாரி கூறிவிட்டார். அதனால் ஞாயிற்றுக் கிழமை என்னுடன் நம்பிமலை வந்த நண்பருடன் பயணம் செய்தென். சுருக்கமாக என்னுடைய அனுபவங்களை பகிர்ந்த்து கொள்கிறேன். எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.

மலை ஏறி ஒரு மணி நெரம் கழித்து பூசாரி வந்தார். ஒதியப்பரை முதன் முதலாக தரிசிக்கப் போகிறேன் என்று மனதில்  சின்ன ஒரு படபடப்பு. 

பூசாரி வந்து சன்னதியை  திறந்து    திரையை விலக்கி அவருடைய முகத்தை சந்தன அலங்காரத்தில் காட்டியபோது அந்த அழகிய முகம்  என்னுள்  தெறித்து உடலில் பல பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது, என்பதே உண்மை. அதை உணர்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். அதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஒரு பத்து நிமிடங்கள் நான் நானாக இல்லை. அப்பப்பா.....இப்படி ஒரு கருணையும் அழகும் ததும்பும் முகம். 

அவர் முகத்தை கண்டதன் பிறகு மலை ஏறிய களைப்பு எங்கெ சென்றது என்று தெரியவில்லை. பூசாரி வருவதற்குள் வந்த அன்பர்கள் சிலர் ஆலயத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அபிஷேகம் ஆரம்பமாயிற்று. ஒவ்வொரு அபிஷெகத்தையும் மிகுந்த சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக் கொண்டது அவருடைய முகத்தில் புன்சிரிப்பில் தெரிந்தது. மேலும்  எனக்கு  அவருடைய  ஒவ்வொரு அபிஷேகத்தை பார்க்கும் பொழுது பழனி பாலதண்டாயுத சுவாமி உருவம் அவருடைய முகத்தில் தெரிந்தது.

அபிஷேகம் நடப்பது ஒதியப்பருக்கா இல்லை பழனி பாலதண்டாயுத சுவாமிக்கா என்று தெரியவில்லை. இது ஏன் என்னுள் தோன்றியது என்று தெரியவிலை. ஒரு 3 வினாடிகள் என் கண்கள் குளமாயின. என்னுடைய கோரிக்கைகளை அவர் காலடியில் சமர்ப்பித்து விட்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் சட்டென்று என்னுடைய மன நிலையில் ஒரு மாற்ற்ம் ஏற்பட்டதை உணர முடிந்தது. மனம் மிகவும் லேசாகி விட்டதை போன்ற உணர்வு. மிகவும் திருப்தியான ஒரு மன நிலை.  

எல்லாம் முடிந்து அலங்காரத்திற்காக திரை மூடப்பட்டது. அவருடைய தெறிக்க விடும் தரிசனத்திற்காக் காத்திருந்தென்.

திரை விலகி தீபாராதனை   ஒளியில் கோடி ஸூரியனின் பிராகசத்துடன் விபூதி அலங்காரத்தில் ஒதியப்பர் திவய தரிசனமும் அருளும் மிகுந்த அதிர்வலையுடன் கிடைத்தது. தலையாய சித்தன் அகத்தியருக்கு என்னுடைய நன்றியை அந்த சமயத்தில்  ஒதியப்பரிடம் சமர்பித்தேன். அவருடைய வலது பக்கத்தில் இருந்து பூக்கள் வாரி விழுந்தன. அவ்வளவு மகிழ்ச்சியுடன் அத்தனை அன்பர்களுக்கும் அவர் அருள் கிடைத்தது என்பதை உணர முடிந்த்தது.

அனைத்தும் முடிந்து பிறகு வேண்டுகோளுக்கு உத்தரவு கேட்கும் நேரம் வந்தது. பூசாரியிடம் கூறியபின் என்னுடைய கோரிக்கையை  ஏற்று, அவர் சன்னதி முன்  மேல் சட்டையின்றி மண்டியிட்டு நமஸ்கரித்து வேண்டுகோளை சமர்பிக்க சொன்னார். நான் என்னுடைய வேண்டுகோளை அவர் முன் சமர்ப்பித்து அவர் உத்தரவு கொடுத்தாரா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் பூசாரி அவர்கள், உங்களுக்கு  உத்தரவு கொடுத்துவிட்டார் என்று கூறினார். எனக்கு ஒரு சின்ன மனவருத்தம். அவர் உத்தரவு கொடுத்து நான் பார்க்கவில்லயே சுவாமி என்று பூசாரியிடம் கேட்டேன். உடனே அவர் ஒரு கையை தூக்கி காண்பித்து அருமையான முறையில் உங்களுக்கு உத்தரவு கொடுத்தார். நீங்கள் என்ன கோரிக்கையை அவரிடமும் வைத்தீர்கள் என்று கேட்டார். பொதுவாக யாரிடமும் அவர் அப்படிக் கேட்டதில்லை என்று தோன்றியது.

நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய ஒரு பாக்கியத்தை கூறினேன். உங்கள் கோரிக்கையை அவர் கூடிய விரைவில் நிறைவேற்றுவார். அடிக்கடி வந்து அவர் அருளை பெற்று செல்லுங்கள். பிறகு ஒதியப்பருக்கு அபிஷேகம் செய்ய என்ன செலவாகும் என்று பொதுவாக அவரிடம் கேட்டு தெரிந்தது கொன்டேன். 

மிகுந்த மன நிறைவுடன் ஒதியப்பர் சன்னதி முன்பு விளக்கேற்றி வழிபட்டு அவர் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து அடிக்கடி அவருடைய தரிசனம் பெற சந்தர்பத்தை அமைத்து தருமாறு வேண்டிக் கொண்டேன்.

பிறகு ஒதியப்பரை பிரிய மனமில்லாமல் அவரிடம் பிரியா விடை பெற்று அங்கிருந்து   கிளம்பினேன். பேருந்து பயணத்தில் இரவு முழுவதும் ஒதியப்பரின் அருள் ததும்பும் அந்த முகம் என் மனதை விட்டு நீங்கவில்லை. மறுநாள் அதிகாலை வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக அகத்தியப் பெருமானுக்கு என் மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொண்டேன். "உடலாலும் மனதாலும் எந்த தடங்கலும் இல்லாமல் நான் ஒதியப்பரை தரிக்க அருள் புரிய வேண்டும்" என்ற  என்னுடைய தினசரி வேண்டுதலை நல்லபடியாக நிறைவேற்றி வைத்துள்ளார். இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.

ஒதிமலை ஆண்டவா போற்றி..... ஒம் அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday, 7 September 2017

சித்தன் அருள் - 720 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 5


[வணக்கம் அடியவர்களே! இது வரை "சுகம் தரும் சுந்தரகாண்டம்" உருவான நிகழ்ச்சிகளை சொல்லி வந்திருந்தாலும், இந்த தொகுப்பு முதல் நம் அனைவரின் பிரச்சினைக்கும், இறைவன் உத்தரவால், அகத்தியப்பெருமான் எந்தெந்த ஸ்லோகங்களை கூறி வந்தால் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறலாம் என்று கூறியது, தெரிவிக்கப்படுகிறது. சற்று உள்வாங்கி படித்து, நடைமுறைப்படுத்தி, வாழ்க்கையில் நிம்மதியை தேடிக்கொள்ளுங்கள்.]

அகத்தியப் பெருமான் கூறலானார்.

"ஸ்ரீராம சரிதையை வால்மீகி ஏழு காண்டங்களாக விவரித்துள்ளார் எனினும், இறையே இந்த சுந்தரகாண்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நவகிரக தசை, திசா புக்தியில் சிரமப்படுகிறவர்கள், அப்படிப்பட்ட தாங்க முடியாத பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடியை சேர, இறைவனே காட்டிக்கொடுத்த மகா புண்ணிய வழி. கர்மாவுக்கு ஏற்றவாறு தண்டனையை இறைவனே கொடுத்தாலும், அதுவே மனம் விரும்பி திருந்தி வாழ நினைக்கும் மனிதர்களுக்கு, மாற்று வழியை காட்ட கால காலமாக யோசித்துக் கொண்டிருந்தது என்பது, சித்தர்களாகிய எங்களுக்கு இப்பொழுதுதான் புரிய வந்தது. இதை கைப்பற்றி, மனம் ஒன்றி, தன்னையே இறைவனுக்கு கொடுப்பவனுக்கு, விடுதலை நிச்சயம். நினைத்தது நிறைவேறும்." என்றார்.

"அனுமனை பெருமைப்படுத்தவும், சுந்தரகாண்டம் உருவானது. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில், இறைவனே மனித அவதாரம் எடுத்தால் எப்படிப்பட்ட கர்ம வினையையும் தாங்கித்தான் கடந்து வரவேண்டும் என்று உணர வைத்த இறைவன், தன் தாசனை பணிந்து, அவர் செய்த அரிய விஷயங்களை பாராயணம் செய்வதின் மூலம், மனித இனத்தின் பிரச்சினைகளை விலக்க, வழிகாட்டியது."

"எத்தனையோ பேர்கள் சீதையை தேடி பல திசைகளிலும் சென்ற பொழுது, அனுமனே, நிச்சயமாக நல்ல செய்தியை கொண்டு வருவான் என்று ராமனுக்கு தெரிந்திருந்தது. ஏன்? அனுமனின் தாச குணம், எதையும் தீர ஆராய்ந்து செயல்படுத்தும் குணம், இயற்கையாகவே அவருள் நிறைந்திருந்த தூதுவரின் திறமை, பெரியோரின் வாழ்த்துக்களை, ஆசிர்வாதத்தை, எப்பொழுதும் வேண்டிக்கொள்ளும் எண்ணம் போன்றவையே.  அனுமன் லங்காபுரிக்கு கிளம்பும் முன் கூட, சூரியன், இந்திரன், வாயு போன்றோரின் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தான் கிளம்பினார்."

"எந்த நல்ல காரியத்தை செய்யும் முன்னரும், செய்யும் பொழுதும் இறைவன், பெரியவர்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் வாழ்த்து மனிதருக்கு கண்டிப்பாக தேவை. அருளின்றி இவ்வுலகில் எதுவும் நன்று கூடாது. அதை மறந்ததின் விளைவுதான், இன்றைய மனித குலத்தின் நிலைக்கு காரணம். இதை புரிந்து கொள்பவர்கள், அதன்படி நடந்து கொள்பவர்களுக்கு, இந்த கலியுகத்திலும், இப்புவியிலேயே, குறைந்தது நிம்மதியை இறை அருளும். இறைவனுக்கு, தன்னைவிட, தன் அடியவர்களை காப்பாற்றுவதிலேயே கருத்து அதிகம். ஆதலால், இறைவனின் அடியவர்க்கு அடியவர்களாக இருந்து, இறைவன் செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களுக்கு, அந்த இறையே இறங்கி வந்து அவர்கள் தேவையை நிறைவேற்றும்."

"ஏழரைச் சனி ஆரம்பமானவர்களுக்கும், அஷ்டம சனியால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், சனி மகா தசையில் கேது புக்தியோ, கேது தசையில் சனி புக்தியோ நடப்பவர்களுக்கும், சுந்தரகாண்டத்தின் முதல் சர்க்கத்தை (அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்களை) தினம் பாராயணம் செய்தால், அந்த கஷ்டங்கள் நீங்கிவிடும். அவர்கள் மனதில் அச்சம் என்பதே இருக்காது" என உரைத்தார்.

'நேர்மையாக முயற்சி செய்தால் வெற்றி அடையலாம் என்றாலும், எந்த கிரகங்களினாலும் எந்த இடையூறு வந்தாலும் மனிதர்கள் அனைவரும் சுந்தரகாண்டத்திலுள்ள ஐந்து, ஆறு, ஏழாவது சர்க்கத்தை தினம் பாராயணம் பண்ணி வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இதற்காகவே எழுதப்பட்டது இந்த சர்கங்கள் என்பது, ஆன்றோர் வாக்கு".

"நம்பிக்கைதான் வாழ்க்கை எனினும், சுந்தரகாண்டனத்தின் ஒன்றுமுதல் ஒன்பது வரை உள்ள சரகத்தையும் விடாமல் தினம் படித்து வருபவர்களுக்கு, ராகு, கேது, சனி ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து நிரந்தர விடிவு கிடைக்கும். இது சாத்தியமான உண்மை" என்று அகத்தியர் உரைத்தார்.

நாடியில் வந்து அகத்தியப்பெருமான் பலருக்கும், பரிகார நிவர்த்தியாக நாக பிரதிஷ்டை எனக்கூறி, நாக/சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், ப்ரம்ம ஹத்தி தோஷம் என்றெல்லாம் கூறிய பொழுது, புரியாமல் இருந்த அத்தனை தோஷங்களும், மேற் சொன்ன சர்கங்களை தினம் வாசித்து வருவதால், நிவர்த்தியாகும் என்ற உண்மை புரிந்தது.

எதுவும் மறுகேள்வி கேட்காமல் அகத்திய பெருமான் கூறியதை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.

அதிகாலை நேரம். ஜன்னல் திறந்திருந்தால், மெலிதாக காற்று வீசியதை போல் உணர்ந்தேன். நல்ல நறுமணம், துளசி வாசனை, போன்றவை நான் அமர்ந்திருந்த அறையில் தோன்றியது. குறிப்பெடுப்பதிலேயே கவனமாக இருந்ததால், வாசனையை உணர சற்று தாமதமாகிவிட்டது.

எழுதுவதை நிறுத்திவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.

"இன்றய தினம் இது போதும். பின்னர் தொடரலாம்! ஆசிகள்!" என்று கூறி அகத்தியர் அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டார்.

நான் எழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். நாடியை, குறிப்பெடுத்த புத்தகத்தை, ராமர் பாதத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, கை கூப்பி அவரையே ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க, ராமர் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த துளசி மாலையின் முடிச்சு கழன்று, துளசி மாலை நாடியின் மேலே விழுந்தது.

அதை கண்ட என் மனம் சிலிர்த்துப் போனது என்று கூறவும் வேண்டுமோ. ஒரு நிமிடம் ஏதோ ஒரு பரவச உணர்வு உடல் முழுதும் பரவி நிற்க, என் கண்கள் குளமாயின.

"இது போதும்! இது போதும் இறைவா! உங்கள் ஆசிர்வாதம், இது புத்தகமாக வெளியிடப்படும் பொழுது, அதை வாசிக்கும் அனைவருடைய பிரச்சினைகளும் விலகி, அனைவருக்கும் அவரவர் வாழ்வில் இன்பம் பெற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டு பூசை அறையை விட்டு வெளியே வந்தேன்.

மனம் தானாக "ஓம் அகத்தீசாய நமஹ" என்று அழைத்து செல்ல, இன்னொரு அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday, 31 August 2017

சித்தன் அருள் - 719 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 4


இனி வியாழக்கிழமை மட்டும்தான் ஸ்ரீராமசரிதை அகத்தியரால் உரைக்கப்படும் என்று அறிந்தபின் மனம் அடங்கிப்போனது. அடுத்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்தேன்.

இருபது வருடங்களுக்கு முன்னால் அனுமனை தொழுதபோது வேண்டிக்கொண்டதை, இங்கு நினைவு கூறுகிறேன். அப்பொழுதே, அனுமன் கொடுத்த உத்தரவு இதுதான்.

"தலையாய சித்தாராம் அகத்தியன் தானிருக்க - அன்னவரே உனக்கு வழிகாட்டுவார்" என்று வாழ்த்தி மறைந்தார் அனுமன். அது இப்பொழுது நடக்கிறது. அகத்தியர் வழிகாட்டுதலில், ஸ்ரீராம சரிதை முழுதும் எனக்கு உரைக்கப்பட்டாலும்,  அதில் ஒரு சிறு துளிதான் "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற தலைப்பில் வெளி வரப்போகிறது என்பதிலிருந்து, இறைவனின் சூட்ச்சுமம் ஓரளவுக்கு எனக்கு புரியத் தொடங்கியது. இன்ன வியாதிக்கு இன்ன மருந்து என வைத்தியன் பார்த்துப் பார்த்துக் கொடுப்பது போல, உலக மக்களின் கர்ம வினைக்கு என்ன தேவையோ அதை மட்டும் இறைவன் அருளுகிறார் என்பதே உண்மை.

வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் உடலையும், மனதையும் சுத்தப்படுத்திக் கொண்டு மூத்தோனையும், அனுமனையும் பிரார்த்தித்து, ஸ்ரீராமர் சன்னதியில் வைத்திருந்த நாடியை எடுத்து, அகத்தியரை மனதார பிரார்த்தித்து, காத்திருந்தேன்.

அகத்தியப் பெருமான் நாடியில் வந்து உரைக்கலானார்.

"வனவாசம் சென்ற சீதை ஸ்ரீராமபிரானின் அனைத்து தேவைகளையும், அரண்மனையிலிருந்தால் எப்படி கவனித்துக் கொள்வாளோ அப்படியே ஒரு பத்தினியின் மன நிலையில் அமர்ந்து கவனித்துக் கொண்டாள். ஸ்ரீராமரின் தேவைகள் மிக மிக குறைந்து போனதால், அவர் அனுமதியுடன் பர்ணசாலையை சுற்றியுள்ள வனங்களில் தனியே புகுந்து, காய், கனிகளை பறித்து, பூக்களை பறித்து மாலையாக உருவாக்கி, ஸ்ரீ ராமரின் பாதத்தில் சமர்ப்பித்து, மகிழ்ந்து போவாள். முதலில் இலக்குவனை துணையாக அனுப்பி வைத்த ராமன், சில நாட்களில் சீதையை வனத்தில் தனியாக போக விட்டது இலக்குவனுக்கே வருத்தமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஸ்ரீ ராமன் இட்ட ஆணையை சிரம் தாழ்த்தி ஏற்று வந்தான். விதி தன் வேலையை நேரம் பார்த்து தொடங்குவதை ஸ்ரீ ராமனும் உணர்ந்திருந்தால், அனைத்தும் அதன் போக்கிலேயே செல்லட்டும் என்று தான் சீதையின் பாதுகாப்பை ஸ்ரீராமன் விலக்கியதாக" அகத்திய பெருமான் உரைத்த பொழுது, அதைக் கேட்ட எனக்கே, உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது.

தெய்வமே மனித அவதாரம் எடுத்திருக்க, விதி பலம் பெறட்டும் என்று ஸ்ரீராமனே அமைதியாய் இருக்க, அந்த விதியின் சக்தி சூர்ப்பணகை, மாரீசன், ராவணன் உருவில் வந்து ஒரு சில நாடகத்தை நடத்தி, சீதையை கைது செய்து லங்காபுரியில் சிறைவைத்தது என்று அகத்தியர் கூறினார்.

"இப்படிப்பட்ட விதியின் விளையாட்டுதான் இன்னொரு உருவில், காலகாலமாக ஸ்ரீராமனையே நினைத்து தவம் செய்து காத்திருக்கும் வாயு புத்திர அனுமனை ஸ்ரீராமரிடம் கொண்டு சேர்த்தது."

"அனுமனுக்கு தன் பிறப்பின் அர்த்தம் விளங்கத்தொடங்கியதும் அந்த நேரத்தில் தான். இங்கு ஒரு விஷயத்தை கவனி மைந்தா! ஒரே நேரத்தில் ஒரு விஷயத்தில், விதியானது இரு விதமாக, சிறப்பானதாகவும், சிரமம் தருவதாகவும் அமைந்திருக்கிறது. விதியின் விளையாட்டே இப்படித்தான். அதை மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது." என்றார்.

ஸ்ரீராமரும், இலக்குவனும் சீதையை தேடித் தேடி மனம் உடல் இரண்டும் சோர்ந்து போனதை தெரிவித்த பொழுது எனக்குள்ளேயே ஒரு அசதி பரவியது. மனத்தால், அகத்தியர் உரைப்பதை அப்படியே உணர்ந்து, ஸ்ரீராமபிரானுக்கு ஒரு சிரமம் என்ற பொழுது அதன் வீச்சம் என்னுள் பரவியதினால், என்னுள்ளும் அந்த சோர்வு வந்ததை நன்றாக உணர முடிந்தது.

ஸ்ரீ ராமகாதை வனத்தினுள் புகுந்தபின், அனுமனுக்கு ஸ்ரீராம இலக்குவனின் தரிசனம் கிடைத்தவுடன், என் மனது தன் இயல்பு நிலைக்கு வந்தது. அடடா! அனுமன் வந்து சேர்ந்ததும் என்னவோ ஒரு பாதுகாப்பு உணர்வு என்னுள் புகுந்து, என் மனதையும் நேர்படவைத்தது, என்பதே உண்மை.

இந்த பகுதியிலிருந்து "சுந்தரகாண்டம்" துவக்கம் என்று புரிந்த பொழுது மனம் சந்தோஷப்பட்டது.

"என்ன? அனுமனின் சக்தி உன் மனதையும் சமன்படுத்தி, புத்துணர்ச்சியை தருகிறதோ? யாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உனக்குமட்டுமல்ல, இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும், பாத்துகாப்பு உணர்வை கொடுப்பதே அனுமனின் நாமம். அவரை நினைத்த மாத்திரத்திலேயே மனதுக்கு பிடிக்காத பிரச்சினைகள் விலகிவிடும் என்பதை இன்னும் மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. அனுமனுக்கு பிடித்ததோ "ராமநாமம்". அதை ஜெபித்துக் கொண்டிருந்தாலே தானாக பிரியப்பட்டு அனுமன் அதை ஜெபிப்பவர்களுக்கு பாதுகாப்பை கொடுத்து விடுவான். இதை முதல் குறிப்பாக எடுத்துக் கொள்" என்று அகத்திய பெருமான் கூறிய பொழுது, நானே என் கனவு மெய்படப்போகிறது என்கிற சந்தோஷத்தில் திளைத்துப் போனேன்.

கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று தீர்மானித்து உடனேயே ஒரு புத்தகத்தை எடுத்து முதலில் மூத்தோனை வணங்கி, அனுமனை வணங்கி, அதன் மேல் புறத்தில் "ஸ்ரீ ராமஜெயம்" என்று எழுதி, அகத்தியர் அடுத்து "எழுதிக்கொள்" என்று கூறப்போகிற தகவலுக்கு காத்திருந்தேன்.

அகத்தியர் கூறலானார்.

"கம்பனும், வால்மீகியும்  எழுதிய ஸ்ரீ ராமா சரிதையில் அனைத்து ஸ்லோகங்களும் இரு மொழிகளில் இருந்தாலும், வால்மீகி எழுதிய ராமாயணத்தில் "ஸ்ரீ ராம சரிதையின்" சக்தி மிகுந்த ஸ்லோகங்களை சுட்டிக்காட்டி, எந்த எந்த சர்கங்கள், எப்படிப்பட்ட பிரச்சினைகளை கடந்துவர ஒரு மனிதனுக்கு உதவி செய்யும் என்பதை தெளிவாக கூறவும். இதை நம்பி பாராயணம் செய்பவர்கள் நிச்சயமாக தங்கள் கர்மாவை கடந்துவிடுவார்கள். இது ஸ்ரீராமர், ஸ்ரீ அனுமன் அருளால் அடியேன் அகத்தியனுடைய வாக்கு. அதுதான் இறைவன் சித்தம். அதை சிரம் மேற்கொண்டு இட்ட பணியை செவ்வனவே  செய்வதே என்னுடையவும், உன்னுடையவும் வேலை. புரிந்ததா?" என்று ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. என்னையே ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். நான் காண்பது, கேட்டது உண்மைதானா? "அடடா! அகத்திய பெருமான் எப்படிப்பட்ட வேலையை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். யாருக்கு இப்படிப்பட்ட யோகம் அமையும். இது ஒன்று போதுமே, இப்படிப்பட்ட ஒன்று போதுமே. நேராக இறைவன் பாதத்தில் சென்று அமர்ந்து விடலாமே" என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

"என்ன? குறிப்பெடுக்க தயாராகிவிட்டாயா? கூறத்தொடங்கலாமா?" என்று ஒரு கேள்வியை கேட்டார்.

இப்படியெல்லாம் ஒரு ஆசிரியனின் குணத்தோடு அகத்திய பெருமான் ஒரு பொழுதும் என்னிடம் பேசியதில்லை.

மிகுந்த பக்தியுடன் முதலில் அகத்திய பெருமானுக்கு நன்றி சொல்லிவிட்டு 

"அடியேன்! தயாராக காத்திருக்கிறேன்" என்றேன்.

சித்தன் அருள்......... தொடரும்!

       

Thursday, 24 August 2017

சித்தன் அருள்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால், இந்த வார 'சுகம்தரும் சுந்தரகாண்டம்" தொகுப்பை தட்டச்சு செய்ய முடியவில்லை. ஒரு வார இடைவேளைக்குப்பின் மீண்டும் சந்திக்கிறேன்!

அக்னிலிங்கம்!

Thursday, 17 August 2017

சித்தன் அருள் - 718 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 3

​​
அகத்தியப் பெருமானின் வார்த்தைகளில் ஸ்ரீராம சரிதத்தை ருசித்த எனக்கு இருப்புக் கொள்ளவே இல்லை. அவரும் அதற்குப் பிறகு வந்த நாட்களில், வேறு விஷயங்களை கூறினாரே தவிர, ஸ்ரீராமா காதையை தொடர்வது பற்றி மூச்சு விடவில்லை. என் எதிர்பார்ப்போ, ஸ்ரீராம காதை. அவரோ உலக விஷயங்களை பற்றி பேசினார்.

ஒரு நாள் என் அவாவை கட்டுப்படுத்த முடியாமல் "என்ன அகத்திய பெருமானே, இப்படி பண்ணுகிறீர்களே. ஸ்ரீராம காதை அப்படியே நிற்கிறதே!" என்று கேட்டுவிட்டேன்.

"அடேய்! மானிடா! எமக்குத் தெரியாதா எப்பொழுது உரைக்க வேண்டும் என்று? ஏன் அவசரப்படுகிறாய். அனைத்தையும் உரைப்பேன். பொறுமையாக இரு. எதற்கும், காலம் நேரம் பார்க்கிற உனக்கே அது புரியவில்லையா? குருவாரம் என்பது குருவருள் கூட்டுவது. அன்று எல்லா சித்தர்களும், முனிவர்களும், மகான்களும், தன்னை வழிபடுகின்ற நல்ல உள்ளங்களை கரையேற்ற நிறைய அறிவுரைகளை தருவார்கள். அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காகத்தான் உன்னை காத்திருக்க வைத்திருக்கிறேன். ஸ்ரீ ராமரையும், அனுமனையும் உன் குருவாக போற்றி வாழ்ந்து வரும் உனக்கு, அவர்கள் சாட்சியாக இது உரைக்கப்படவேண்டும், என்பதே என் அவா. இன்னும் நிறைய அதிசயங்களை போகப்போக நீ உணர்வாய். ஆகவே, வரும் குருவாரத்துக்காக காத்திரு" என்று மென்மையாக சொன்னார். ஆனால் அதுவே என்னை கடுமையாக திட்டியதாகத்தான் உணர்ந்தேன்.

[அகத்தியர் அடியவர்களே! ஏன் "சித்தன் அருள்" வியாழக்கிழமை அன்று மட்டும் வெளியிடப்பட்டது, அதுவும் சூரிய உதயத்துக்கு முன் உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது இப்பொழுது தெளிவாகியிருக்கும் என்று எண்ணுகிறேன். அதை வாசிப்பவர்கள் மனதில் புகுந்து சூக்ஷுமமாக விஷயத்தை தெளிவாக்குவேன் என அகத்தியப் பெருமான் ஆணையிட்டதினால்தான்.]

"சே! என்ன இது. எத்தனை முறை அடி வாங்கினாலும் என் மனது நாய் வால் போல் நிமிராமலேயே நிற்கிறது" என்று என்னையே நான் கடிந்து கொண்டேன்.

கேட்ட தவறான கேள்விக்கு அகத்தியரிடம் மன்னிப்புக் கேட்டேன்.

"போகட்டும் பாதகமில்லை! ஸ்ரீராம காதையின் மீது நீ கொண்ட அவாவால், இவ்வுலகு மேம்பட உன் சார்பாக ஏதேனும் இந்த மனித குலத்துக்கு செய்யவேண்டுமே என்கிற எண்ணத்தால் அந்தக் கேள்வி வந்தது என்று யாம் அறிவோம். இந்த ராம கதையின் "சுந்தர காண்டம்" பகுதியை விளக்கும் பொழுது நீ குறிப்பெடுத்துக் கொள்ளலாம். அந்த பதிவிற்கு "சுகம் தரும் சுந்தர காண்டம்" என பெயர் வைத்துவிடு" என்று தலைப்பையும் அவரே எடுத்துக் கொடுத்தார்.

அந்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்தேன்.

வியாழக்கிழமை வந்தது. அதிகாலை எழுந்து நீராடி, பூசை அறையில் அமர்ந்து மூத்தோனையும், அனுமனையும் த்யானம் செய்து அகத்திய பெருமானின் நாமத்தை கூறி "ஸ்ரீராமரின் காதையை" அருளுமாறு வேண்டிக்கொண்டேன்.

நாடியில் அகத்திய பெருமான் வந்து அருளலானார்.

"ஒவ்வொரு மனிதருக்கும், திருமணத்தில் திருப்புமுனை அமையும். அவன் வாழ்வே சில வேளை தலைகீழாக மாறிவிடும். மனித அவதாரம் எடுத்த ஸ்ரீராமருக்கும் அதுதான் நடந்தது. அவரது திருமணம்தான் இராமாயண காவியம் உருவாக காரணமான திருப்புமுனையாக அமைந்தது. உலகுக்கே, தன் செயலால் உணர்த்த வந்த தெய்வம், அதன் பின் நடந்ததை எல்லாம் ஒரே மனநிலையில் எடுத்துக் கொண்டதினால், மிகப் பெரிய சித்தத்தன்மையை அடைந்தது. சித்தர்களாகிய நாங்களே "அடடா! எந்த தவமும், யோகமும், பயிற்சியும் இல்லாமலேயே கூட, எதையும் அதனதன் போக்குப்படி ஏற்றுக்கொண்டு, சந்தோஷ, வருத்தமின்றி வாழ்ந்தாலும், மிகப் பெரிய சித்தனாக முடியும் என்கிற பாடத்தை, அன்று அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். நாங்களே எங்களை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டோம் என்றால் பார்த்துக்கொள்" என்று மனம் திறந்து ஸ்ரீராமபிரானை பாராட்டி மகிழ்ந்தார்.

ரிஷிகள், முனிவர்கள், முனி புங்கவர்கள், நாரதர், தேவ கணங்கள், சித்தர்கள் புடை சூழ மங்கள நாளில், ஸ்ரீராமபிரான் சீதா தேவியை தன் துணைவியாக ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியை அகத்திய பெருமான் விவரித்த பொழுது, நானே அங்கிருந்து அதை நேரில் கண்டது போல் என் மனக்கண்ணுள் அத்தனையும் விரிந்தது. அப்பப்பா! மனம் அத்தனை புளங்காகிதம் கொண்டது. யாருக்கு மறுபடியும் அப்படிப்பட்ட காட்சி கிடைக்கும். என்னே பாக்கியம்! என நினைத்து 

நாடியை ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு, எழுந்து அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.

"அய்யனே! இப்பிறவியின் பேற்றை பெற்று விட்டேன்! மிக்க நன்றி!" என அகத்தியருக்கு நன்றியை கூறினேன்.

"இனிமேலும் இதுபோல் அரிய நிகழ்ச்சிகள் இந்த ராமர் சன்னதியில் நடக்கும், உணருவாய், காண்பாய். நடந்தபின் அதை உரைக்கிறேன். ஒன்று தெரியுமோ உனக்கு! ராமர் தன் அபிமான அனுமனை பெருமை படுத்துவதற்காகவே, "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற தலைப்பை நீ பதிவு செய்யப்போகிற விஷயங்களுக்கு வழங்கினார். அவர் எடுத்துக் கொடுத்த தலைப்பு அது. இறை, தான் வெளிப்படுத்த நினைக்கிற விஷயங்களுக்கு, தானே பொருள் உணர்த்தும். அது அந்த தலைப்பில் உள்ளது. பிறகு நிதானமாக அதை உணர்ந்தது ரசித்துப்பார்" என்றார். ["சித்தன் அருள்" தலைப்பை, அகத்தியப்பெருமான்தான் எடுத்துக் கொடுத்தார். அந்த அருளைத்தான், இன்றும் நாம் அனைவரும் பருகிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்.]

நான் அசைவுற்று, அமைதியாக அமர்ந்திருந்தேன். ஒன்றுமே தோன்றவில்லை.

ஸ்ரீராமர் சீதையின் குடும்ப வாழ்க்கையின் தொடக்கத்தில்தான் பலரது விதி ஒரே நேரத்தில் தன் வேலையை தொடங்கியது என்று, தசரதன், கைகேயி, ராமர், கூனி, பரதன், லக்ஷ்மணன் போன்றோரின் வாழ்க்கை விதி முடிச்சை திறந்து காட்டினார். விதியே, ராமபிரான் இத்தனை பெரிய விஷ(ய)த்தை எப்படி எதிர்கொள்கிறார் என்று வேடிக்கை பார்த்தது, என்று அகத்தியர் உரைத்தார். ஸ்ரீராமரோ, எப்போதும் அணியும் பொறுமை என்கிற மன நிலையில் அந்த சூழ்நிலையை எதிர் கொண்டு, விதியையே ஏமாற்றினார். தெய்வமே மனித அவதாரம் இப்பூமியில் எடுத்துவிட்டால், அவர்களும் இப்பூமியின், நவகிரகங்களின், விதியின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி, பணிந்து காட்டினார் ஸ்ரீராமர்.

ஸ்ரீராமகாதை விதியின் விளையாட்டால் வனவாசம் சென்றது. மன்னனாக ராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டிய தெய்வம், விதிக்கு பணிந்து, மரவுரி தரித்து காட்டில் வாழ்ந்ததை அகத்திய பெருமான் விவரித்தபோது, அதை கேட்ட நானும், உள்ளுக்குள் காட்டில் உணரப்படும் குளிர்ச்சி பரவுவதை உணர்ந்தேன். இதிலிருந்தே அகத்தியப் பெருமான் "ஸ்ரீராம காதையை" எப்படி உள் உணரும்படி விளக்கினார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

"இப்படிப்பட்ட உண்மையான விளக்கங்களை புத்தகமாக லோகஷேமத்துக்காக, மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மேம்பட வெளியிட்டால், அந்த நிலைமை எப்படி இருக்கும்?" என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

"என்ன மறுபடியும் கேள்வியா? பொறுமையாக இரு. நேரம் வரும்போது நீயே அதை உணருவாய்." என்றார் அகத்தியர் நான் கேட்காமலேயே.

"இன்று இங்கு நடக்கிற இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன். ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை தொடக்கம் முதல் கடைசி வரை கூட இருந்து கவனித்த அகத்தியன் அவர் காதையை கூறுகிறான். அதை கேட்கவே புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்று அத்தனை சித்தர்களும் இந்த அறையில் அமர்ந்து மெய் உருக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை விட மிகப் பெரிய பெருமை உனக்கெதற்கடா" என்று உண்மையை போட்டுடைத்தார்.

ஒரு வினாடிக்குள் நான் அதிர்ந்து போனேன்.

"சரி! இனி அடுத்த முகூர்த்தத்தில் தொடருவோம். இன்று இத்தனை போதும்" என்று அகத்தியப் பெருமான் அன்றைய வகுப்பை நிறுத்திக் கொண்டார்.

நான் பொதுவாக "எல்லா சித்தர்களையும் ஒரு நிமிடம் நிற்கச்சொல்லுங்கள்" என்று அகத்திய பெருமானிடம் கூறிவிட்டு 

எழுந்து 

சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரித்தேன்.

அப்படியே ஒரு பத்து நிமிடம் இருந்திருப்பேன். யாரோ முதுகில் தட்டி எழுப்புவதுபோல் தோன்ற, நாடியை ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு 

"ஓம் அகத்தீசாய நமஹ!" என்று த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்! 

Thursday, 10 August 2017

சித்தன் அருள் - 717 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 2


அகத்தியர் நாடியில் வந்து அருளலானார்.

"இறைவன் அருள் துணை கொண்டு, இறைவன் உத்தரவால், இந்த உலகத்துக்காக, வாழும் அனைத்து உயிர்களும் தன்னை உணர்ந்து, இறைவனை உணர்ந்து உய்வு பெறவும், இந்த இறைவன் காதை உனக்கு உரைக்கப்படுகிறது. இந்த காதையில் உள்ள முக்கியமான சத்துக்கள் மட்டும் பிறரை சென்று சேர்ந்தால் போதும். ஆதலால் இதை எழுத்து வடிவத்தில் வெளியிடும் பொழுது, இறை என்ன நினைத்ததோ அது மட்டும் வெளியிடப்பட வேண்டும். ஸ்ரீ ராம காதை முழுமையாக உனக்கு உரைக்கப்படும்.

இவ்வுலக மனிதர்கள் பூர்வ கர்மவினையினால் நிறையவே வருத்தங்களை, துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். என்ன தான் செய்தாலும், விதி அதன் பிடியை தளர்த்துவதில்லை. இறை மனம் கனிந்து, அந்த விதியை தளர்த்திட, சூசகமாக தன் அருளை ராமகாதையின் எந்தெந்த ஸ்லோகங்களில் மறைத்து வைத்திருக்கிறது என்பதை உனக்கு உரைக்கிறேன். அதை வெளியுலகுக்கு தெரியப்படுத்து. என் வாக்கில் ராமாயணம் முழுவதும் உனக்கு உரைக்கப்படும். அதை நீ உணர்வாய்!" என்றதும் 

நான் இடைமறித்து "ஒரு சிறு விண்ணப்பம். ராமாயணம் முழுவதும் நீங்கள் உரைக்கப்படப்போகிற அதே வார்த்தைகளில், வெளியிட்டால், உங்கள் பரிபூரண அருளுடன், ஆசைப்பட்டதை நடத்திவிட்டோம் என என் மனது திருப்திப்படுமே! அப்படிப்பட்ட அருளை தரக்கூடாதா?" என்று பெருத்த ஆசையுடன் அகத்தியப் பெருமானிடம் கேட்டுவிட்டேன்.

"உண்மை தான்! இந்த உலகம் ஸ்ரீராமனின் காதையை மேலும் உணர்ந்து மேம்படும். ஆனால், அதற்கு இறை அனுமதி அளிக்கவில்லை. அது தெய்வீக சூட்ச்சுமங்களை உட்கொண்டது. தற்போதைக்கு, சுட்டிக் காட்டப்படும் ஸ்லோகங்களை, அதை கூறுவதானால், ஒரு மனிதன் எப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்று தெரிவித்து, இறைக்கு, அவர் இட்ட கட்டளைக்கு அடி பணிந்து கொடுத்த வேலையை செவ்வனவே செய்து, உன் மன ஆசையை தணித்துக்கொள். நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் உண்டு. மனதை ஆசைக்கு உட்படாமல் அடக்கி, தெரிவிக்கின்ற விஷயங்களை அதன்படியே உள்வாங்கி, எதெது சுட்டிக் காட்டப்படுகிறதோ, அதை மட்டும் பதிவு செய்து, இந்த உலக நன்மைக்காக எழுத்துருவில் மாற்றி விடு. மற்றவற்றை இறைவன் அருளால், நான் பார்த்துக் கொள்கிறேன். 

அடேய் மைந்தா! இத்தனை யுகங்கள் ஓடிய காலத்தில், எத்தனையோ முறை விண்ணப்பித்தும், இறைவனே தன் சரிதையை, என் நாவால் கூற, இப்பொழுதுதான் அனுமதி தந்தான். எனக்கு அனுமதியை பெற இறைவனிடம் எத்தனை போராடினேன் என்று எமக்குத்தான் தெரியும். எனக்கு அனுமதி கிடைத்ததும், உடனேயே அது மானிட ஜென்மத்துக்கும் இவ்வுலகில் கிட்டட்டும் என்று உன் வழியாக அருளுகிறேன். இதன் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள். சித்தன் மனநிலை அப்போது உனக்கு புரியும்!" என்று ஒரே போடாகப் போட்டார்.

எனக்கு முழுவதும் புரிந்து போயிற்று. சப்த நாடியும் அடங்கிவிட்டது.

பொதுவாக, மனிதர்களுக்கு, துன்பம் வரும்போது, இது எதனால் வந்தது என்று உணரும்போது சப்த நாடியும் அடங்கிவிடும். ஒரு நல்ல விஷயத்தில், நடந்த உண்மை புரியும் பொழுது, சப்த நாடியும், நெஞ்சு அதிர அடங்கியதை அன்றுதான் உணர்ந்தேன்.

நாம் மனிதர்கள், எத்தனை தவறுகள், கட்டுப்பாடில்லாமல் செய்தாலும், நமக்கென இறைவனிடம் வாதாடி, இறை அருளை பெற்றுத்தர சித்தர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இல்லையேல், அவர்கள் வேண்டுதல்களை இறை அனுமதிக்கவில்லையெனில், இவ்வுலகம் என்றோ மிருகக் குணம் நிறைந்த மனிதக் கூட்டமாகத்தான் இருந்திருக்கும். சித்தர்கள் நம்மிடம் எல்லோரிடமும் பேசாவிட்டாகிலும், நம்மை வழி  திருப்பி, திருத்தி, மன்னிக்க வைத்து, அமைதியாக வாழவைக்க, இறைவனிடம் கொண்டு சென்று நம்மை சேர்க்க, எத்தனை காலமாக, யுகம் யுகமாக, முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று அந்த நொடியில் எனக்கு புரிந்தது.

இது புரிந்த நொடியில், அமைதியாகிவிட்டேன். இனி அருள்வது அகத்தியர் செயல் மட்டும்தான் என்று தீர்மானித்தேன்.

ஸ்ரீ ராம காதையை தொடங்கும் முன், ராமரின் ஜாதகத்தை அலசி விரிவாக உணர்த்தினார். அதன்  பெருமைகளை,மனிதர்களுக்கு புரியவைப்பதற்காக, தான் ஏற்றுக்கொண்ட அவதாரத்தில் எத்தனை துன்பங்களையும், தாங்க தயார் என்று இறை தீர்மானித்து, எல்லா கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், இறையே தன் பிறவியை தீர்மானித்தது. அனைத்து கிரகங்களும் உச்சத்தில் இருந்தால், பொதுவாக  மிக உயர்ந்த வாழ்க்கைதான்  அமையும் என்று மனிதர்கள் நினைத்திருந்த காலத்தில், மற்றவர்கள், உயர்ந்தோர் எதிர்பார்க்காத நிலையில், தான் எத்தனை சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் என்பதை சூசகமாக உணர்த்துவதற்காக இந்த அவதாரம் எடுத்தார் என்றும் கூறினார்.

அவர் கூறுவதை அனைத்தையும் மிக கவனமாக கேட்டுக் கொண்டே வந்தேன். குறிப்பெடுத்தது மனதில் மட்டும் தான். எழுத்துருவில் கொண்டு செல்ல உத்தரவு கொடுக்கவே இல்லை. ஸ்ரீ ராமபிரானின் சரிதையை பால பருவத்திலிருந்து  தொடங்கி, கல்விக்கான குருகுல வாழ்க்கையை கூறி, ஸ்ரீ ராமாபிரானுக்கே தன் சக்தியை உணர்த்த விஸ்வாமித்ரர் அழைத்து சென்றது, அந்த காலத்திலேயே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்பது ஸ்ரீ ராமரை பொறுத்தவரை ஏன் என்று உணர்த்தியது, ஜனகன் மகள் சீதையை யார், எதற்கு அவதாரம் எடுத்தாள் என்று புரியவைத்தது எல்லாவற்றிலும் இறைவனின் முன் தீர்மானங்களை வெளிப்படுத்திய விதம், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. விஸ்வாமித்ரர் இத்தனை பாக்கியசாலியா என்று அன்றுதான் உணர்ந்தேன்.

விஸ்வாமித்ரருக்கு கிடைத்த அந்த பாக்கியத்தில், ஒரு சதவிகிதம் ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அடடா! அவன் நேராக மோக்ஷத்துக்கு சென்று,  பெருமாள் காலடியிலேயே கிடந்திருப்பான். அத்தனை பெருமைக்குரியது, என்று தோன்றியது.

ஸ்ரீ ராமகாதை வளர்ந்து கொண்டே சென்றது. அதிலேயே மிக கவனத்தில் இருந்த எனக்கு, என்னுள் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடியவில்லை. ஆனால் மனம் மிக மிக பஞ்சாக மாறியது என்று மட்டும்தான் கூற முடியும்.

"இத்துடன் இன்று நிறைவு செய்வோம்! மறுபடியும் வேறு ஒரு நல்ல முகூர்த்தத்தில்  உரைக்கிறேன். இனி நான் சென்று பூசை த்யானம் போன்ற நித்தியா கர்மாக்களை செய்ய வேண்டும். ஆசிகள் உனக்கு" என்று நிறுத்திக் கொண்டார்.

"ஒரே ஒரு விண்ணப்பம்!" என்று ஒன்றை கேட்க நினைத்தேன்.

"என்ன இதுவரை எதையுமே பதிவு செய்ய அனுமதிக்கவில்லை என்பது தானே உன் விண்ணப்பம். சரியான நேரம் வரும் பொது இறை அருளியதை யாம் கூறுவோம். அதுவரை பொறுமையாக கேட்டு வா! உனக்கென்ன தெரியும் இறைவனின் உத்தரவு. யாம் பார்த்து கூறுகிறோம். அப்போது போதும்" என்று கேள்வியை/விண்ணப்பத்தை என்னை கேட்கவிடாமல், அவரே பதிலை கூறினார்.

சரிதான்! நாம் கேள்வியை மனதுள் உருவாக்கும் முன்னரே, அதை கண்டுபிடித்து, அதற்கான பதிலையும் கூறுவதில் அவருக்கு நிகர், அவர்தான் என்று உணர்ந்து, மூத்தோனையும், அனுமனையும் வணங்கி நாடியை பூசை அறையில் இருந்த ஸ்ரீ ராமர் விக்கிரகத்தின் பாதத்தில் வைத்தேன். எழுந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். பிறகு, த்யானத்தில் அமர்ந்து

"ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜெபிக்கத் தொடங்கினேன்.

சித்தன் அருள்................ தொடரும்!
Thursday, 3 August 2017

சித்தன் அருள் - 716 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 1


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.ஹனுமந்ததாசன் ஸ்வாமிகளின், முக தரிசனத்துக்காக அவர் படத்தை வெளியிட்ட பொழுது, நிறைய பேர் கருத்து தெரிவித்திருந்தனர். அதில், ஒருவர், "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற பெயரை உச்சரித்திருந்தார். அதை கேட்டதும், அந்த புத்தகத்தை, அவர் உருவாக்கிய பொழுது நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை திரு.கார்த்திகேயன் அவர்களிடம் தெரிவித்திருந்தார். அதை அடியேனிடம் தெரிவித்த பொழுது, பின்னர் எப்போதேனும் ஒரு முறை நேரம் வரும் பொழுது தெரிவிக்கலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தேன். இத்தனை வருடங்களாக மனதை விட்டு விலகி இருந்த அந்த நிகழ்ச்சி இப்போது தெரிவிக்கப்படவேண்டும் என்பது அகத்திய பெருமானின் விருப்பம் போல. விளக்கியது அனைத்தும் அப்படியே மனக்கண் முன் விரிந்தது. ஒவ்வொரு வார்த்தையும், என் நண்பர் கொட்டியது நினைவுக்கு வர, அதை அப்படியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

இனி கார்த்திகேயன் அவர்களின் நண்பரின் பார்வையில் இருந்து இதை பார்ப்போம்.

தினமும் அதிகாலை ப்ரஹ்மமுகூர்த்தத்தில் எழுந்து உடலையும், மனதையும் சுத்தி செய்து கொண்டு, த்யானம் ஜபம் போன்றவை செய்து அகத்திய பெருமானை அடிபணிந்து, ஆராதித்து வந்த பொழுது ஒரு நாள் ஏனோ ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது. அதை அகத்தியரிடமே கேட்டு அருள் பெறலாமே என்று, பூசை அறையில் இருந்த நாடியை எடுத்து வேண்டுதலை கொடுத்த பின் அகத்தியர் பதிலுக்காக காத்திருந்தேன்.

கேட்டது இது ஒன்று தான்.

"ஏற்கனவே இதை கேட்டுவிட்டேன். நேரம் வரும் போது, அருளுகிறேன் என்றீர்கள். காலமும் கடந்து கொண்டிருக்கிறது.  எத்தனையோ பேர் ஸ்ரீராமனின் சரிதத்தை எழுதியிருக்கிறார்கள். தாங்கள் அருள் புரிந்து, அடியேனும் அவர் காதையை எழுதி வெளியிட உதவி செய்யக் கூடாதா?" என்றேன்.

"அவசர புத்தி உனக்கெதற்கு? நேரம் நெருங்கி விட்டது. நானே அதை பற்றி உன்னிடம் கூறலாமென்றிருந்தேன். நீயே கேட்டுவிட்டாய். வரும் குருவாரத்தன்று, ப்ரம்ம முகூர்த்தத்தில், இறைவன் அருளால் அதை தொடங்கலாம். இறைவனே உத்தரவு கொடுத்துவிட்டார். யாம் சொல்லச்சொல்ல, கேட்டு எழுதி வா. தினமும் சொல்வதை பதிவு செய்யும் முன் மூத்தோனையும் வணங்கி, வாயு புத்திரனையும் வணங்கி அருள் பெற வேண்டும். இவர்கள் இருவரின் அருளுடன், இனிதே அனைத்தும் நிறைவேறும். எமது ஆசிகள் உரித்தாகுக" என்று அகத்திய பெருமான் கூறிய பொழுது, என்னாலேயே என் கண்களை நம்ப முடியவில்லை. நாடியை அதன் இடத்தில் வைத்துவிட்டு சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அகத்தியரை வணங்கி, நன்றியை கூறினேன்.

அறையை விட்டு வெளியே வந்ததும் அந்த அதிகாலை நேரத்திலேயே, உடலெங்கும் வியர்த்துவிட்டது. அத்தனை சந்தோஷ படபடப்பு.

மனம் இருப்பு கொள்ளவில்லை. அங்கும், இங்கும், குறுக்கவும், நெடுக்கவுமாக நடந்து யோசிக்கலானேன். இத்தனை பாக்கியம் யாருக்கு கிடைக்கும். எத்தனை வருட வேண்டுதல். அகத்திய பெருமான் உரைக்கிறேன் என்று விட்டாரே. அவர் என்ன சொல்கிறாரோ, அதுவே எழுதப்படவேண்டும். ஏன்? எப்படி? எதற்கு என்ற கேள்விகளெல்லாம் தேவை இல்லை. நான் ஏதாவது கேட்கப்போக, அவர் கோபத்தில் இனி உரைக்கமாட்டேன் என்று கூறிவிட்டால்? இனிமேல் ரொம்பவுமே பொறுமையாக இருக்க வேண்டும். அகத்தியரே ஸ்ரீராமரின் சரிதத்தை உரைக்கிறார் என்றால், மற்ற சித்தர்கள் நிச்சயமாக அதை கேட்க வருவார்கள். ஆதலால், அவர் ஸ்ரீராமரின் சரிதத்தை உரைப்பதை பூசை அறையிலே வைத்து எழுத வேண்டும். எழுதி முடித்து, நிறைவு பெற்ற பின் தான், மூன்றாவது மனிதரே அறிய வேண்டும். எல்லோருக்கும் இது ஒரு ஆச்சரிய பரிசாக இருக்க வேண்டும், என்றெல்லாம் மனதுள் எண்ணங்கள் ஓடியது.

வியாழக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்க, அகத்திய பெருமான் பல கோவில் சன்னதிக்கும் என்னை விரட்டி வைத்து, இறைவனின் அருளை பெற்று வரச் சொன்னார். எங்கும், எல்லா கோவில்களிலும் மிகுந்த மரியாதை, உபசரிப்பு. எத்தனை கூட்டமிருந்தாலும், யாரேனும் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, தனியே அழைத்து சென்று இறைவனின் தரிசனத்தை என் மனம் திருப்தி அடையும் வரை பெற்று தந்தனர். நடப்பதை கண்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

"நம்மையும் விரட்டிவிட்டு, போகும் இடத்திலெங்கும், முன் ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறாரே, அகத்திய பெருமான்" என்று மனதுள் நினைத்துக் கொண்டேன். செல்லும் இடமெங்கும் இறைவனின் தரிசனம் கிடைக்க, கிடைக்க,  உடலெங்கும் பூரிப்பு, மனமெங்கும் பரவசம்.

நனைந்த காகிதமாக மனமும், உடலும் மென்மையான நிலையில் புதனன்று வீடு சேர்ந்து, பூசை அறையில் புகுந்து அகத்தியப் பெருமானுக்கு நன்றி சொல்லி, "நாளை காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் உங்கள் வாக்கில் ஸ்ரீ ராமனின் சரிதத்தை  கூறி, அடியேனுக்கு எழுதுகிற பாக்கியத்தை அருளுங்கள்" என்று பிரார்த்தனையை வைத்து விட்டு,

எப்பொழுது ப்ரம்ம முகூர்த்த வேளை வரும் என்று, படுக்கையில் படுத்தபடி யோசனையில் இருந்தேன்.

நடுவில் "நல்லோருக்குப் பெய்யும் மழை" என சம்பந்தமே இல்லாமல் ஒரு வாக்கியம் யோசனையில் வந்து போனது. இது என்ன இப்படி ஒரு யோசனை. இதன் அர்த்தம் என்ன? என்று நீண்ட நேரம் யோசிக்கும் பொழுதே, என்னை அறியாமல் உறங்கிப் போனேன்.

நாம் என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம், எதிர் பார்க்கலாம். ஆனால் எந்த நிகழ்ச்சிகளின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்பதை இறைவனும், சித்தர்களும்தான் தீர்மானிப்பார்கள். நாம் எதிர்பார்ப்பது போல் அல்லாமல் வேறு விதமாக இருந்தால், அதற்கும் ஒரு காரணம் இருக்கும், என்று மனித மனம் ஒரு பொழுதும் ஒப்புக் கொள்ளாது.

இறை வழியில் தெளிவாக செல்பவர்கள் இதை நன்றாக  அறிந்தவர்கள். தொடக்க நிலையில் இருப்பவர்கள் அவர்கள் எதிர் பார்ப்பதுபோல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடந்தால், இது என்ன இறைவன் அருள் என்று அசந்து போவார்கள். அத்துடன் முயற்சியையும் கைவிட்டுவிடுவார்கள். அது ஒரு குறிப்பிட்ட சோதனை காலம் என்பதை உணர்வதில்லை.

ஆனால், அகத்தியப் பெருமானோ, ஒரு திடமான தீர்மானத்தில் இருந்தார் என்று, மறுநாள் காலை ப்ரம்ம முகூர்த்தத்தில், நாடியில் வந்து பேசிய பொழுது தான் உணர்ந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்!

Friday, 28 July 2017

சித்தன் அருள் - 715 - திரு.ஹனுமந்ததாசன் அய்யா அவர்களின் புகைப்படம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

முதன் முறையாக, பல அகத்தியர் அடியவர்கள், மறைந்த திரு.ஹனுமந்த தாசன் அய்யா அவர்களின் திருமுகத்தை காண விழைந்து, அவரது புகைப்படத்தை கேட்ட பொழுது, அகத்தியரின் பாசம் மிகுந்த மைந்தனாய் இருந்த ஒருவரை எல்லோருமே பார்க்கட்டும் என்று, அடியேனின் கைவசம் இருந்த இந்த புகைப்படத்தை "சித்தன் அருள்" வலைப்பூவில் தருகிறேன். அனைவரும் ஏற்றுக்கொண்டு இன்புறுக.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

Thursday, 27 July 2017

சித்தன் அருள் - 714 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 4 !


என்ன நடந்தாலும் உடனேயே, ஏன் எதற்கு என்கிற கேள்விகளை கேட்டு, அதற்கு அடியேனின் மனம் தெளிவு பெறுகிற பதில் கிடைக்கும் வரை, விடாமல் இறைவனிடம், சித்தர்களிடம் கேட்டு வந்த மனநிலை, அகத்தியர் நடத்திய வகுப்பில் படித்தபின் எங்கேயோ தொலைந்து போனது.

"நீ தெரிந்துகொள்ள வேண்டாம், அது தெய்வீக ரகசியம். முன் கர்மா வினை" என்றெல்லாம் பலமுறை பதில் வந்த பொழுது, நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றிற்கும் பதில் எதிர் பார்க்கக்கூடாது. ஏதோ போனால் போகிறது என்று இத்தனையாவது இந்த ஜென்மத்தில் அருளுகிறார்களே என்று அமைதியாகிவிட்டேன் என்பதே உண்மை. அது முதல், "இத்தனை பாக்கியத்தை கொடுத்தாய் இறைவா, அகத்திய பெருமானே" என மனதுள் நினைத்து, நன்றியை மௌனமாக சொல்லிவிட்டு விலகிவிடுவேன். இந்த வாழ்க்கையில் நல்லது செய்ய அடியேனிடம் வந்த வாய்ப்புகள் தான் மிகப் பெரிய சொத்து, என்பதே என் அடிப்படை எண்ணமாக மாறியது. இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். இல்லையேல் என் கர்மா அதற்கு இடம் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிடுவேன்.

"தன் அபிமான சிஷ்யனை அனுப்பி வைத்தார் தகவலுடன்" என்று முன் பதிவில் சொல்லியிருந்தாலும், சிஷ்யர் நேரடியாக வரவில்லை. தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அவரை பற்றி சொல்வதென்றால், சித்தர்களின் அபிமான அடியவர். அதிகம் பேசவோ, உரைக்கவோ மாட்டார். அனைத்து மொழியும் பேசத்தெரிந்தவர். ஆனால் அதிகம் பேச விருப்பப்படமாட்டார். பொதுவாக பேசும் பொழுது எல்லா மொழியும் கலந்து பேசுவார். செந்தமிழ் என்பது அவர் வரையில் இல்லை என்பதே உண்மை. அவரை சந்திப்பது என்பதே மிக்க குறைவு. பேசுவது அதை விடக் குறைவு.

தொலைபேசி எண்னை தந்துவிட்டு "நீ கூப்பிடாதே! தேவை இருந்தால் நானே கூப்பிடுவேன்" என்று சென்றவர். அடியேன் அவரை அழைத்ததே கிடையாது. திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டு, கடலென விஷயங்களை கொட்டுவார். அனைத்தும் அகத்தியர், சித்தர்களை பற்றியது. பிறகு "நான் ஒரு மாதத்திற்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன். இது அவர்கள் உத்தரவு, பிறகு அழைக்கிறேன்" என்று கூறி வைத்துவிடுவார்.

இப்படிப்பட்டவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இவ்வளவுக்கும், இவரிடம் என் தந்தை இறைவன் திருவடியை அடைந்தார் என்று கூட கூப்பிட்டு சொல்லவில்லை. இவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது என்று பிறர் அறியாத விஷயம். ஆதலால், வேறு யாரும் சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை.

"திருச்சிற்றம்பலம்" என்கிற முகவுரையுடன் எப்போதும் போல பவ்யமாக பேசினேன்.

"திருச்சிற்றம்பலம்" என்று மறு முனையிலிருந்து மெலிதாக சன்னமாக குரல் வந்தது.

"என்ன குரல் மிக சன்னமாக உள்ளதே. நலம் தானே?" என்று விசாரித்தேன்.

"நலமாக இருக்கிறேன். இப்பொழுது தெளிவாக கேட்கிறதா?" என்று செந்தமிழுக்கு தாவினார்.

பேச்சில் வந்த மாற்றத்தை உடனடியாக கவனித்தேன்.

ஏன் எதற்கு என்று தெரியாததால், "சொல்லுங்கள் என்ன விஷயம்?" என்றேன்.

"என்ன? தகப்பனார் இறைவன் திருவடியை அடைந்துவிட்டார் போல!" என்றார்.

"ஆம்!" எனக் கூறி நடந்த விஷயங்களை விவரித்து, அவருக்கு தெரிவிக்காததற்கு மன்னிப்புக் கேட்டேன்.

"தகப்பனாரின் மரணம் மட்டும் தான் தெரிவிக்கப்படவில்லையோ?" என்று கொக்கி போட்டார்.

"இப்போதைக்கு இறைவன் தீர்மானத்தால் நடந்த நிகழ்ச்சி அது ஒன்று தானே. வேறு எதுவும் சொல்கிறமாதிரி நடக்கவில்லை" என்றேன்.

"ஓ! அப்படியா? வேறு எதற்கும் வேண்டுதல் சமர்ப்பிக்கவில்லையோ?" என்றார்.

"வேண்டுதல்" என்கிற வார்த்தையை கேட்டதும், என் மனம் விழித்துக் கொண்டது. அது எப்படி இவருக்கு தெரியும்? என்று மனதுள் எண்ணம் ஓடியது.

பேசுவது நண்பரா, அகத்தியரா என்கிற எண்ணம் ஓடியது என்னுள். ஏன் என்றால், அவர் பேச்சில் தமிழ் அப்படி சுத்தமாக விளையாடியது. இவர் இப்படி பேசுபவரும் அல்ல. நல்ல அதிகார தோரணை.

"சரி! பொறுமையாக இருந்து கூறுவதை கேட்போம்" என தீர்மானித்து, "சொல்லுங்கள்" என்றேன்.

"உன் தகப்பன் இறைவன் திருவடியை அடைந்தது இறைவனின் சித்தம். வந்தவர்கள் அனைவரும் திரும்பி சென்றுதான் ஆகவேண்டும் என பல முறை உரைத்திருக்கிறோம். யாருக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என சித்தர்கள் தான் இறைவனிடம் சிபாரிசு செய்வார்கள். அதன் படி இறைவன் உத்தரவால் சில விஷயங்களை செய்ய உத்தரவாகும். உனக்குள் "மோக்ஷ தீபம்" போடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது ஒரு எண்ணம் மட்டுமே. யாருக்கு போடவேண்டும் என்று சித்தர்கள் உரைத்தால் அன்றி முறைப்படி போடுதல் கூடாது. மனிதருக்கு தோன்றினால், அது ஒரு வெறும் எண்ணம் மட்டுமே. திதி கூட நீங்கள் கொடுப்பது சித்தர் மரபு படி இல்லை. போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம். போன ஆத்மாவை விட்டு விடவேண்டும். மனிதன் தன் செயலினால், அந்த ஆத்மாவை திரும்பி பார்க்க வைக்க கூடாது. மறு பிறவியோ, ஜென்மமோ எதுவாகினும், அந்த ஆத்மாவின் கர்மா வினையை பார்த்து, இறைவன் தீர்மானத்தால் நடப்பது. உன் தகப்பனாக இருந்த ஆத்மாவுக்கு அது தேவை இல்லை. புரியும் என்று நினைக்கிறேன். எண்ணங்கள் செயல் ஆக மாறவேண்டியது இறைவன் சேவைக்கு" என்றார்.

அடியேன், அப்படியே ஆடிப் போய்விட்டேன். நேரடியாக வந்து ரெண்டு சார்த்தியிருந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது. அவ்வளவு தூரத்துக்கு உள்ளே பதியும் படி, மனதுள் போட்டு வைத்திருந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டார்.

என்னுள் எழுந்தது ஒரு எண்ணம் மட்டுமானால், அதை உடனேயே விட்டுவிடவேண்டும். அவர் சொல்வதில் ஒரு காரணம் இருக்கும். சோதனையே வேண்டாம். சரி மாற்றி அனுமதி கேட்போம், என தீர்மானித்து,

"சரி! மோக்ஷ தீப எண்ணத்தை கைவிட்டு விடுகிறேன். ஆனால் சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு சேவை செய்கிற விதமாக, லோக ஷேமத்துக்கு வேண்டிக்கொண்டு, கோடகநல்லூர் சென்று சுற்று விளக்கு போடலாமா? அதற்கு அனுமதி/உத்தரவு உண்டா?" என்று கேட்டேன்.

"அதை செய்! அதை இறைவன் ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை அருளுவார். அதை பெற்றுக்கொள்" என்று கூறியதும் தொலைபேசி தொடர்பு தானாக துண்டிக்கப்பட்டது.

அடியேன் எத்தனை முறை முயற்சி செய்தும், ஒரு முறை தொடர்பு போனதே ஒழிய அவருடன் பேச முடியவில்லை.

"சரி! வேண்டிய தகவல் வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்" என நினைத்து விட்டுவிட்டேன்.

அவர் பேசிய தமிழ், அதன் நெடி என்னுள் உருத்திக் கொண்டே இருந்தது. இது அவர் இல்லையே. ஆனால் அவர் தான். இத்தனை தெளிவாக தமிழில் பேசுகிறாரே. இப்படி இதற்கு முன் இருந்ததில்லையே என்று ஒரு எண்ணம் என்னுள் ஓடிக் கொண்டே இருந்தது.

ஒரு முப்பது நிமிடம் கழிந்திருக்கும்.

அவர் தொடர்பு கொண்டார், மறுபடியும்.

இம்முறை அவரே முதலில் "திருச்சிற்றம்பலம்" என்றார்.

பதிலுக்கு கூறிவிட்டு, "என்ன விஷயம் என்றேன்!"

"இப்பொழுதுதான் என் செல்லை பார்த்தேன். அதில் உங்கள் மிஸ் கால் இருந்தது! என்ன விஷயம். ஏதேனும் அவசர தேவையா?" என்றார் எப்போதும் போல.

"என்ன மனுஷர் இவர்? இப்போது தான் பேசினார்! அதற்குள் மறந்து விட்டாரா?" என்று யோசித்தபடி,

"நீங்கள் தான் சற்று முன் என்னை அழைத்து சில விஷயங்களை கூறினீர்கள். நாமிருவரும் 20 நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம்." என்றேன்.

"நானா? உங்களுடனா? எப்போது பேசினேன். என்ன பேசினேன்?" என்றார்.

பேசிய அனைத்தையும் கூறிய பொழுது "என்ன சொல்றீங்க. நான் வெளியே போய் விட்டு இப்பொழுதுதான் வீடு திரும்பினேன். என் செல் என்னிடம் தான் உள்ளது. மேலும் நீங்கள் சொல்கிற "மோக்ஷ தீபம்" இறைவன் சித்தம் போன்றவை எனக்கு தெரியாத விஷயம். நான் எப்படி அதை பற்றி கூறியிருக்க முடியும்? இன்று வரை பிதுருக்கள் விஷயத்தை பற்றி நாம் இருவரும் ஏதேனும் பேசியிருக்கிறோமா? இல்லையே! இது வேரென்னவோ நடந்திருக்கிறது" என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே " உங்கள் செல்லை பாருங்கள். அதில் ஒரு மணி நேரத்துக்கு முன் நீங்கள் என்னை அழைத்ததின் தெளிவு இருக்கும்" என்றேன்.

தொடர்பில் இருந்து கொண்டே "செல்லை" பரிசோதித்தவர், "அப்படி எதுவும் என் செல்லில் இல்லையே" என்றார்.

"நாம் பேசியதை நான் பதிவு செய்யவில்லை. இருப்பின் உங்களுக்கு இந்த நொடியே அனுப்பி வைத்திருப்பேன். என் வேண்டுதலுக்கு இறங்கி அகத்தியப் பெருமானே உங்களுள் இறங்கி, எனக்கு பதிலத்துள்ளார் என்று நினைக்கிறேன். போதும். இதை பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். எனக்கான தகவல் வந்துவிட்டது. மிக்க நன்றி. ஆனால் அவர் சொன்ன படி இந்த வாரம் கோடகநல்லூர் சென்று பெருமாளுக்கு விளக்கு போடப் போகிறேன். கிடைப்பது எதுவாகினும் அது லோக ஷேமத்துக்காக மட்டும் என்று உறுதி கூறுகிறேன். போதுமா!" என்றேன்.

"என்னவோ போங்க! என்னென்னவோ நடக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ரொம்ப யோசித்தால், பைத்தியம் தான் பிடிக்கும். நடந்த வரையில் நல்லதாக நடந்திருக்கிறது. அது போதும். சரி விடை பெறுகிறேன்" என்று கூறி சென்றவர், இன்று வரை அதன் பின் கூப்பிடவில்லை என்பதே உண்மை.

விடைபெறும் முன் ஒரு கேள்வியை கேட்டேன்.

"இது போல வேறு எங்கேனும், யாரிடமாவது மாட்டிக் கொண்டீர்களா?" என்றேன்.

"ஆமாம்" என்று மட்டும் கூறினார்.

அவர் சொன்னது போல், இங்கே என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தால், பைத்தியம் தான் பிடிக்கும். கேட்ட கேள்விக்கு, வேண்டுதலுக்கு சரியான வழியை காட்டினார்கள், பெரியவர்கள் என்று மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அந்த வார கடைசியில், பெரியவர்கள் அனுமதி அளித்ததின் பேரில், கோடகநல்லூர் கிளம்பி சென்று, பெருமாள் அனுமதியுடன் சுற்று பிரகாரத்தில், விளக்கு போட்டேன், மாலை 6 மணிக்கு. சுமார் ஒரு 20 கல் விளக்கு இருக்கிறது. அனைத்தையும் முடிந்த வரை சுத்தம் செய்து, விளக்கு போட ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆனது.

பெருமாள் முன்பு போய் நின்ற பொழுது எதுவும் கேட்க தோன்றவில்லை.

"இந்த தீப சுடரை, வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு, பூமியை எட்டு திக்கிலிருந்தும் காப்பாற்றுங்கள். அனைத்து ஆத்மாவும் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று மனதுள் ஒரு பிரார்த்தனை வந்தது.

அதையே அவரிடம் சமர்ப்பித்தேன்.

"இன்னும் இது போல் உங்களுக்கு விளக்கு போட நிறைய வாய்ப்பை அளியுங்கள்" எனவும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.

இன்றும் வாய்ப்பை அள்ளி வழங்குகிறார்.

சரி! பெருமாள் என்ன பரிசு தந்தார்?

அன்றைய தினம், கோவில் நடை சேர்த்தும் முன் எதேச்சையாக விளக்கு எரிகிறதா என்று எட்டி பார்க்க, கிடைத்த காட்சியை கீழே உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். படத்தை பெரிதாக்கி பார்த்தால் என்ன தெரிகிறது என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.


படத்தின் இடது பக்க விளக்கின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தான் முதலில் பெருமாள் அமர்ந்திருந்தாராம். அங்கிருந்து தான் சித்தர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க இப்போதைய சன்னதிக்கு வந்து அமர்ந்தாராம்.

இதை வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் யாருக்கேனும், ஒரு வாய்ப்பு கிடைத்தால், சுற்று விளக்கு போடுங்கள். நம் வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்படும்.

இந்த அனுபவத்திலிருந்து அடியேன் புரிந்து கொண்டது ஒன்று தான். சித்தர்கள் வழியில் செல்பவர்களை மட்டுமல்ல, அவர்கள் எண்ண ஓட்டங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், திருத்தி வழி நடக்க விடுகிறார்கள்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு அனைத்தும் சமர்ப்பணம்! 

Thursday, 20 July 2017

சித்தன் அருள் - 713 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 3 !​​[அகத்திய பெருமான் அருளிய இந்த அனுபவம் கீழே தந்துள்ள வெளியீடுகளின் தொடர்ச்சி]

https://siththanarul.blogspot.com/2017/04/643.html

https://siththanarul.blogspot.com/2017/04/646-2.html

சித்தரை, இறைவனை வேண்டிக்கொண்டு, அவர்கள் காட்டுகிற பாதையில் பயணிக்கையில், நிறையவே ஆச்சரியங்களை சந்திக்க வேண்டிவரும். நடக்கிற விஷயங்கள் கூட நாம் நினைத்தபடி இல்லாவிடினும், எங்கோ ஒரு கர்ம வினையில் கொக்கி போட்டது போல் இருக்கும்.

அடியேனின் இருப்பிடம் விட்டு எங்கு, எதற்கு செல்லினும், சித்தர்களை வேண்டிக் கொண்டு, இறைவனை த்யானித்துவிட்டு, "உங்கள் அருகாமையும் அருளும் வழி நடத்தட்டும், காப்பாற்றட்டும்" என்று செல்வது ஒரு பழக்கம்.

கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமாளும் பரிவாரங்களும், சித்தரும் அருள் புரிந்ததற்கு (மஞ்சள் பொடி பிரசாதம், விபூதி), நன்றி சொல்லும் விதமாக அந்த வார கடைசியில், இரு தினங்கள் விடுமுறை வந்த பொழுது கோடகநல்லூர் சென்று பெருமாளை வணங்கி வரலாம் என்று ஒரு எண்ணம் வந்தது.

எப்போதும் போல் மாலை குளித்துவிட்டு பூசை அறையில் அமர்ந்து த்யானத்தில் என் விண்ணப்பத்தை தெரிவித்தேன்.

சொன்னால் நம்புவது கடினம். மிக வேகமாக பதில் வந்தது.

"எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே அமர்ந்திரு!".

நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனேன். 

"இதென்ன இப்படி ஒரு கட்டளை. ஒரு பொழுதும் இப்படி கூறியது கிடையாதே. சரி அவர்கள் சொன்னது போலவே செய்வோம். எங்கும் செல்ல வேண்டாம்"  என தீர்மானித்தேன்.

மறுநாள் ஒரு நண்பர் வந்து "இந்த வார கடைசியில் இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது. பொதிகை சென்று அகத்தியரை தரிசித்து பூசை செய்து விட்டு வரலாம் என்று இருக்கிறேன். நீங்கள் வருகிறீர்களா?" என்றார்.

"மன்னிக்கவும். எனக்கு உத்தரவு வேறு ஒன்று. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க சொல்லியிருக்கிறார்கள். பூசைக்கான ஒரு சில சாமான்களை அடியேனும் வாங்கித்தருகிறேன். நீங்கள் சென்று வாருங்கள். வந்து எனக்கு பிரசாதம் கொடுங்கள். அது போதும். அவர்கள் உத்தரவை அடியேன் மீற முடியாது. பின்னர் ஒரு முறை பார்க்கலாம்" என்று பதில் கூறி அனுப்பிவைத்தேன்.

நண்பர்கள் இருவரும் எனக்கு மட்டுமல்ல, என் தகப்பனாருக்கு நல்ல நண்பர்கள்.

இத்தனை வருடங்களாக இறைவனிடம், சித்தர்களிடம் அடியேன் வேண்டி கேட்டு கொண்டது ஒன்று தான்.

"என் தாய், தந்தையின் கடைசி மூச்சு இருக்கும் வரை, அவர்களுடன் அடியேன் இருக்க வேண்டும். அவர்களுக்கான கடமைகளை, உங்கள் அருளுடன் செய்து முடிக்க வேண்டும். பெற்றோருக்கு எந்த கடனும், இந்த வாழ்க்கையில் மிச்சம் வைக்கக்கூடாது." என்பதே.

வியாழக்கிழமை காலை என் நண்பர்கள் கிளம்பி சென்றனர், பொதிகைக்கு.

வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணிக்கு அடியேனின் தகப்பனார் இறைவன் திருவடியை அடைந்தார்.

நான் பொதிகை சென்றிருந்தால், குடும்பமே மிக சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும். இரண்டு நாட்கள் கழித்துதான் உடல் சம்பந்தமான கடைசி கர்மாக்களை செய்திருக்க முடியும். ஏன் என்றால், பொதிகையில் இருக்கும் பொழுது, எந்த விதத்திலும், யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது.

பொறுமையாக, அமைதியாக என் தகப்பனாருக்கான ஈம கர்மாக்களை செய்து முடிக்க, ஞாயிறன்று நண்பர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு, என் தகப்பனாரின் முகம் பார்க்கவோ, கடைசி கர்மங்களில் பங்கு கொள்ளவோ முடியவில்லை.

இருவரும் வந்து அடியேனை பார்த்த பொழுது ஒன்று கூறினேன்.

"வந்த உத்தரவின் அர்த்தம் இதுதான். எனக்கு விதி இருக்கிறது. புரிந்து கொண்டேன். உங்களுக்கு இல்லை. அதனால் உங்கள் அருமை நண்பரின் (என் தகப்பனாரின்) முகத்தை பார்க்க கொடுத்துவைக்கவில்லை. சரி! அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கிப்போனார். நாம் நம் பயணத்தை தொடரத்தான் வேண்டும். சென்று வாருங்கள்" என்றேன்.

இருவரும் விடை பெற்றனர்.

தகப்பனாரின் தசத்தின கர்மாவின் இடையில் ஒருநாள், அமைதியாக அமர்ந்திருந்த பொழுது ஒரு எண்ணம் அடியேனுள் உதித்தது.

"அகத்தியர் நாடியில் வந்து சொல்லியபடி, முறையாக "மோக்க்ஷ தீபம்" என் தகப்பனாருக்கு போட்டால் என்ன? அந்த ஆத்மாவும், இறைவன் அருளால், கரையேறட்டுமே".

"சரி! அதற்கான வேலைகளில் இறங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடலாம்" என்று தீர்மானித்தேன்.

தகப்பனாரின் 10வது நாள் சடங்கிற்கு வந்த ஒருவரிடம் "கோடகநல்லூர் பெருமாள் கோவிலில், என் தகப்பனாருக்கு "மோக்ஷ  தீபம்" போட விரும்புகிறேன். அனுமதி வேண்டும். அதை வாங்கி கொடுங்கள்" என்றேன்.

"இந்த மோக்ஷ தீபம் என்றால் என்ன?" என்றார்.

"அது ஒரு பூசை முறை. கோவிலின் ஈசான மூலையில் ஒரு சனிக்கிழமை அன்று 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். மறு நாள் காலை பூசை செய்த அனைத்து பொருட்களையும் ஒன்று விடாமல் எடுத்து, நதியில் சேர்த்து விடவேண்டும். இவ்வளவுதான். பூசை சம்பந்தமான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அனுமதியை பெற்றுத்தாருங்கள்" என்றேன்.

"சரி! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சென்றார்.

வேறு யாரிடமும் இதை பற்றி மூச்சு விடவில்லை.

ஒரே ஒரு நண்பரிடம் "கூடிய விரைவில் நாம் ஒரு இடம் வரை போய் வரவேண்டிவரும். தயாராக இரு" என்று மட்டும் சூசகமாக கூறி வைத்தேன்.

தகப்பனாரின் 13 நாட்கள் சடங்கு முடியும் வரை காத்திருந்தேன்.

அதன் பின் தான் கோவிலுக்கு செல்கிற உரிமை உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்வதால், யார் மனதையும் நோகடித்து நாம் நம் வழியில் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்தேன்.

13வது நாள் மாலை குளித்து மறுபடியும் ஜெபம் த்யானம் என்று தொடங்கிய பொழுது, 

அகத்தியப் பெருமானிடம் "அடியேன் தகப்பனாருக்கு நீங்கள் கூறியபடி முறையாக மோக்ஷ தீபம் போடவேண்டும் என்று எண்ணம். அதற்கு தங்கள் அனுமதி வேண்டும். அருளுக" என ஒரு விண்ணப்பத்தை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றேன்.

ஒரு நிகழ்ச்சிக்கு வேண்டிய எல்லா திட்டங்களையும், ஏற்பாடுகளையும் பலரை வைத்து நாம் செய்தாலும், அதது எப்படி நடக்க வேண்டும் என்று ஒருவர் தான் தீர்மானிப்பார். அது இறைவன் சித்தம்.

என் திட்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. என் மனதுள் ஒளித்து வைத்திருந்தேன். அனுமதி வரட்டும் பிறகு முழு வீச்சில் பயணிக்கலாம் என்று அமைதியாக இருந்தேன்.

இரண்டு நாட்களாகியும் ஒரு உத்தரவும் வராததால், "என்ன? பெரியவர்களுக்கு "மோக்க்ஷ தீபம்" போடுவதில் விருப்பமில்லையோ? பதில் வரவே இல்லையே?" என்று ஒரு உறுத்தல் தொடங்கி வளரத் தொடங்கியது.

அடியேன் தீர்மானித்து வைத்திருந்த சனிக்கிழமைக்கு இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது. அதற்குள் அத்தனை பொருட்களையும் வாங்க வேண்டுமே? என்கிற விசனம் வந்தது.

"பெரியவர்களே! என்ன அய்யா பண்ணறீங்க? உத்தரவோ, பதிலோ சொல்லக்கூடாதா?" என்று மனதுள் சத்தமாக வேண்டிக் கொண்டேன். சுருக்கமாக சொல்வதென்றால் நாள் நெருங்க நெருங்க ஏற்பாடுகளுக்கான நேரக்குறைவை உணர்ந்த மனது சற்று அழுத்தத்துக்கு உள்ளானது.

அடியேனின் வேண்டுதல் அவர்களுக்கு கேட்டுவிட்டது போலும்.

"பதிலே கொடுக்காமல் இருந்தால், இவன், இவன் இஷ்டப்படி செய்துவிடுவான். உண்மையை உணர்த்துவோம்" என்று தீர்மானித்தார்கள்.

பதிலை, அனுமதியை எதிர்பார்த்திருந்த எனக்கு, அகத்திய பெருமான், மனித உருவில் இருக்கும் தன் அபிமான சிஷ்யனை விளக்கமான பதிலுடன் அனுப்பிவைத்தார்.

சித்தன் அருள் ................... தொடரும்!