​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 28 February 2020

சித்தன் அருள் - 849 - மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம்!


மதுரையில், இறைவன் திருவிளையால் புரிந்த ஊரில், நம் குருநாதர் அகத்தியருக்கு ஒரு கோவில் கூட இத்தனை காலங்களாக தென்படவில்லை. இது ஏன் என பலமுறை அவரிடமே கேட்டதுண்டு. பதில் - ஒரு புன்னகையும், மௌனமும். இதில் ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று உணர்ந்து, பின்னர் அடியேனும் மௌனமாகிப்போனேன்.

அனைத்து அகத்தியர் அடியவர்களின் சிறு முயற்சியால், அன்னை வாலையின் அருளோடு, சமீபத்தில் மதுரை பசுமலையில் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமான் வந்தமர்ந்தார்.

உண்மையிலேயே, அடியேன் எதிர்பார்ப்பு நிறைவேறியதில், மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். குடமுழுக்கு அதன் பின்னர் அவர்களின் ஆசி போன்ற விரிவான தகவலை ஒரு அகத்தியர் அடியவர் அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளை" வாசிக்கும் ஒவ்வொருவரும், அறிந்துகொள்வதற்காக அவற்றை கீழே தருகிறேன்.

26-Feb-2020 ஆதி சக்தி வாலை பொது ஜீவ நாடி நூல்:- 

மதுரை பசுமலையில் பிப்ரவரி 7ஆம் தேதி குடமுழுக்கு கண்ட ஶ்ரீ லோபாமுத்திரா உடன்உறை அகத்திய மஹரிஷி ஆலயத்திற்காக ஆலய அகத்தியர் அடியவர்கள் வேண்டி, உரைக்கப்பட்ட பொது நாடி வாக்கு.

நாடி வாக்கு;-

அருள் வடிவான சிவத்தை போற்றி அருளுகிறேன் அன்னை என் ஜீவ மொழி ஆசி! புவிதனில் அகத்தியனுடன் லோபமாதா தாயும் பரசிவமாய் பரம் பொருளாய் வரத்தை வந்த தடத்தில், தடத்திலே கையிலை ஈசன் சக்தி யானும் தரணி காக்க வந்திட்டோம். அகத்தியன் லோபா மாதாவாக. நிலமதில் நல்லோர்கள், தனவான்கள், தயவான்கள் நீதியுடன் யாசகம் பெற்று அமைத்த நல் சித்தர் குடில் அதுவில், அருளாய் முப்பெரும் தேவர் உடன் தேவியரும் , சித்தர்கள், ரிஷி கணங்கள், முனிவர்கள், யோகிகள், சிவ கணங்கள், நவ நாத சித்தர்கள் சூட்சும வடிவில் வடிவிலே வாழுகின்றார். இதுவே உண்மை.

வகை பட அமைத்த நல் கோட்டம், அதில் கந்தனும் வேல் படையும் ஆதி மூலரும், ஔவையும் கலியுகம் காக்க கருணைபட வந்திருக்கார். வந்திருக்கார் நவகோடி சித்தர்களும் சூட்சுமத்தில் விண்ணுலக தெய்வ கணங்கள் மனம் மகிழ்ந்து இருக்கார். விகாரி ஆண்டு கலைத்திங்கள் ஆறிரண்டு திகதி புகர் வாரம் ( தை மாதம் 24 வது நாள் - குடமுழுக்கு நடந்த பிப்ரவரி 7,2020 ஆம் நாள், வெள்ளிக்கிழமை) விண்ணிலிருந்து இறை கணங்கள் அகத்தியனை கண்டு ரசித்தார்.

கண்டு ரசித்தார் கலையுகம் காவல் தெய்வம் வெளிப்பட கூறிடம் இது தடம் வருவோர் மூவினை சாபமுடன் பிரம்ம சாபம், பித்ரு சாபம், பெண் சாபம், பிரேத சாபம், பூமி சாபம், கங்கா சாபம், குல தெய்வ சாபம் தீரும்மென்பேன். 

தீருமென்பேன் சர்ப்ப தோஷம், நவ கிரக தோஷம், புத்திர தோஷம், தீரும் மாங்கல்ய தோஷம், குசன் தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பூ தோஷம், மைந்தன் குற்றம் , இதனுடன் கலியுகத்தில் பிறவி பலன் பயன் தோஷம் தீரும். தீரும் பாலரிஷ்டம் , உடல் உயிர் மனக்குறைகள்,தர்ம வழி தவ வழி செல்லுவோர்க்கு உலகில் சைவ நெறி தவராது நிற்ப்பவர் தமக்கும் சத்தியமாய் முக்தியும் அருளிடுவர் சிவ கணங்கள். சிவ கணங்கள்
மகிழ்ந்து இருக்கார் இங்கு.

சிவமுடன் நாராயணர் அருளும் இது தடம் இருப்பதுவால் பல குறைகள் சாம்பலாய் போகும்.

இயம்பிட விதி மாற்றும் வித்தை கூட உண்டு. உண்டுதான் அகத்தியரும் பிரம்ம சொரூபமாக நிற்க்க உரைத்திட இனி வரும் காலம் முழு மதிதோரும் ( ஒவ்வொரு பௌர்ணமி அன்றும்)

அகத்தியருக்கும் அன்னைக்கும் விழா எடுக்க அருள் வடிவில் சித்தர்கள் எல்லாம் கலந்து செல்வர். செலவர் மனம் மகிழ்ந்து அருள் வரம் தந்து ஜெகத்திலே சூட்சும சக்திகள் வந்திறங்கி வரம் தருவர் பணிவோர்க்கெல்லாம் வந்த வினை, வரும் வினை, பெற்ற இரு வினைகள் (குழந்தைகள் பெற்ற வினை) யாவும் தீரும். (வந்த வினை- சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா) தீரும் போகாத கொடு வினை. எல்லாம் தவசிகளே விரும்பி அமைத்த குடில் இது அறியவேண்டும். பக்குவம் உள்ள மனிதர் தவம் இயற்றும் காலம் பராசக்தி பார்வை படும்,  அருள் தடம் இது. 

[இந்த ஆலயத்தில் யாராவது தவம் செய்தால் ஆதி வாலை பரமேஷ்வரியே கண் திறந்து அந்த ஆலயத்தை பார்க்கக்கூடிய அருள் சிறந்த ஒரு தடமாக இந்த இடம் உள்ளது. இப்பேர்பட்ட்வல்லமை பொருந்திய இந்த அகத்திய மஹரிஷி ஆலயத்தில் மக்கள் வந்தால் அவர்கள் வினை எல்லாம் தீரும். இந்த உலகத்தில் எந்த தெயவத்தினிடம் சென்று நம் குறைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் அப்படீன்னு தெரியாதவங்க இந்த அதி மகத்துவம் மிக்க ஆலயத்துக்கு வந்தால் எந்த குறைகளாக இருந்தாலும் அத்துனை குறைகளையும் ஆசான் அகத்திய மஹரிஷிகளும் அன்னை லோபாமுத்திரையும் கண் திறந்து அருள் ஆசி வழங்கி சிவ சக்தி சொரூபத்தில் இருந்து மக்களுக்கு வினைகளை/விதிகளை நீக்கி வாழ்வில் வளங்களை அருளுவார்கள் என்ற சத்திய வாக்கை வாலை அன்னை இந்த ஆலயத்திற்க்கு அளித்த விளக்கத்தை நிறைவு செய்கின்றோம்]

நாடி ஆசி முற்றே 

அகத்திய மஹரிஷி இங்கு பிரம்ம சொரூபம் ஆக உள்ளார். அதனால் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வர்ர் போல் விதியை மாற்றும் ஆலயம்

மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

அ/ மி சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,
தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை-4.

[திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  அருகில். மதுரை திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே, எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு  முந்தின ஸ்டாப்.]

Sri Arulmiga Sakthi Mariamman Temple,
Thiagarajar Colony,
GST Road, Moolakarai, 625004,, Pasumalai, Madurai, Tamil Nadu 625004, India

https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7


ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

Wednesday, 26 February 2020

சித்தன் அருள் - 848 - பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் திருவிழா!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லா வருடமும் நடைபெறும், பலராமபுரம் அகத்தியர் கோவில் 10 நாட்கள் திருவிழா, இந்த வருடம் 5-4-2020 முதல் 14-04-2020 வரை மிக சிறப்பாக ​பூஜை, யாகம், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அகத்தியப் பெருமானின் அருளாசியுடன், அனைத்து "சித்தன் அருள்" வலைப்பூ வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் பங்குபெறுவதற்காக, ஒரு அழைப்பிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள், அழைப்பிதழில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு, பங்கு பெற்று, ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.
சித்தன் அருள்................. தொடரும்!

Friday, 21 February 2020

சித்தன் அருள் - 847 - மகாசிவராத்திரி!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று மகாசிவராத்திரி. உங்களுக்கு தெரியும், அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேக பூஜைகள் மிகச்சிறப்பாக நடத்தப்படும் என்று. சிவராத்திரி பூசையில் கலந்து கொள்ளவே, எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். முன் கர்ம வினைகள் விலகி வழிவிட்டு, இறைவனும் அவனை நினைக்க வைத்தாலே, யோசிக்கவே தோன்றும். அதிலும், நினைப்பு வந்து, பூசையில் கலந்து கொண்டு, உழவாரப்பணியும் செய்கிற பாக்கியம் கிடைத்தால், அல்லது அன்றைய தினம் கிரிவலம் செய்து, தான தர்மங்கள் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அது மிகப்பெரிய பாக்கியம்.

தர்மம் செய்யவேண்டும் என்ற உடன் யோசனையே இருக்க கூடாது. செய்து விட வேண்டும். நம்முடன் சிறிது பழம் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செய்கையில் வழியில் அமர்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் ஒரு பசு நிமிர்ந்து நம்மை பார்த்தால், அது தானம் செய்ய வேண்டிய நிமித்தம் என்று உணருங்கள். யாருக்கு, எங்கு, எப்படி கர்மவினைகள், தானம் வழி கழித்து விடப்படும் என்பதை, இறைவனும், சித்தர்களும்தான் தீர்மானிக்கிறார்கள்.

இது புரிந்தவர்கள் விருப்பப்படி சிவராத்திரியை அமைத்துக்கொள்ளலாம்.

ஓம் நமசிவாய!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 20 February 2020

சித்தன் அருள் - 846 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


உணவும் நீரும், பசித்திருப்பவனுக்கு சோர்வை எப்படி மாற்றுகிறதோ, அப்படியே, மூச்சு சக்தியினால் (பிராணாயாமத்தால்) உள்ளுறங்கி கிடக்கும் நாத சக்திகளை தசவாயுக்களின் உதவியினால் தூண்டிவிட்டு, மாகேஸ்வரி பீடத்தில் இணைக்க முடியும். அப்படி இணைத்தால், அந்த சாதகனுக்கு பிரகாசமும், இளமையும் திரும்பும். இப்படி திரும்பும் நிலையை "மறு உரு திரும்புதல்" என்பர். ஆங்கிலத்தில் "REVERSE  ENGINEERING" என்பர். இதன் வழி முறையை பல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சித்தர்களும், சித்த மார்கத்தில் முழு மூச்சாக இறங்கி  செல்பவர்களுக்கு மட்டும் தான் இது கைவல்யம் ஆகிறது.

தசவாயுக்களுடன் உணர்ந்து பழகி, அவற்றின் அசைவை கட்டுப்படுத்த தெரிந்த ஒருவருக்கு, அது மிக சுலபமாக கட்டுப்படும். அப்படி கட்டுப்படுத்த தெரிந்துவிட்டால், பிராணனை உடலின் எந்த பகுதிக்கும் மாற்றி அமைக்கலாம், எந்த உறுப்பையும் செயல் படுத்தவோ, செயல் இழக்க வைக்கவோ முடியும். அப்படிப்பட்ட நிலைகளை அடைந்தவர்கள், அநேகமாக, சமூகத்தை விட்டு விலகி நின்று, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத நிலைக்கு மாற்றிக் கொண்டுவிடுவர். அப்படிப்பட்ட மனிதர்களை சந்திப்பதோ, தொடர்பு கொள்வதற்கோ, இறை அருள் வேண்டும். தொடர்பு கிடைத்துவிட்டால்,  மிகப்பெரும் பேறு பெற்றவர்களாவோம்.

சுவாசத்தை சித்தர்கள் குதிரைக்கு சமமாக ஒப்பிடுவார்கள். குதிரை மிருகமாக இருக்கும் பொழுது அதற்கு நான்கு கால்கள். மனிதனுக்குள் மூச்சாக ஏறி இறங்கும் பொழுது வருகிற மாத்திரைகளின் வித்தியாசத்தில் ஒரு உடலின் ஆரோக்கியம் உள்ளது. சாதாரணமாக 8 மாத்திரைகள் பிராண வாயு உள் புகும் பொழுது, 12 மாத்திரைகள் பிராணவாயு வெளியேறுகிறது. சுருங்கக் கூறினால் 4 மாத்திரைகள் உடலுக்கு பிராணவாயு நஷ்டமடைகிறது. இப்படி மூச்சு நஷ்டப்படாமல் இருக்க, வாசியை பயில வேண்டும்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை முறை சுவாசம் விடவேண்டும் என்றும். இத்தனை சுவாசத்தின் முடிவில் பிராணன் உடலை விட்டு விலக வேண்டும் என இறைவன் விதியில், எழுதி வைத்திருப்பான். சித்தர்கள் என்போர், வாசி வழி சுவாசத்தின் நீளத்தை குறைத்து, வாசி நஷ்டப்படமால் கவனித்து, ஒருவனின் வாழ்நாளை நீடித்தனர். இந்த அதிசயம் ஆராய்ச்சியாளருக்கு பிடிபடாததால், அவர்களால் இந்த ரகசியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. வாசி பழகி விட்டால், இது புரிந்து விடும். புரிந்த பின் பின்னர், வெளியே கூறத் தோன்றாது. மட்டுமல்ல, அந்த நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலையில் இறைவன் வைத்துள்ளார். என்னதான் அவனவன் உணர்ந்ததை கூற முயற்சித்தாலும் அது தெளிவாக வெளியே வராத சூழ்நிலையை தான் அமையும்.

நீரிலே போட்ட ஒரு பொருள், அழுகிவிடும். மண்ணிலே புதைக்கப்பட்ட ஒரு பொருள் மக்கிப்போகும். ஆதலினால், வாசி யோக நிலையில் ஒருவன் நெருப்பையும், காற்றையும், ஆகாயத்தையும் தன்னுள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம். பிராணனை கட்டுப்படுத்தி வழி நடத்துவதால், ஏனைய ஒன்பது வாயுக்களையும் தன் வசமாக்கிட முடியும். அப்படிப்பட்டவரை "ஆதாரயோகி" என்பார்கள். ஆதாரயோகி, நீரிலிருந்தாலும், மண்ணில் இருந்தாலும், அவர் உடல் கெடாது. இதைத்தான் ஒருசில யோகிகள் செய்து காட்டுகிறார்கள்.

ஒரு வாசியோகி, யோகத்தால் (பிராணாயாமம்) தன் தேகம், உள்ளம், உயிர் என்ற மூன்றினையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். வாசியோக முறை அதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரயோகி காலத்தை பற்றி சிந்தனையின்றி, வாசி யோகத்தால் உடலுக்கு வளம் ஏற்றுவதில் உன்னிப்பாக இருப்பான். அதனுடன், சக்தியின் திருவருள் பலம் ஏற்பட்ட பின் ஆதாரயோகிக்கு, கால பலம் அதிகரிக்கிறது. காலம் ஆதாரயோகியை கட்டுப்படுத்தாமல் விலகி நிற்கும். இந்த நிலையால், ஆதாரயோகி காலக் கழிவால், பாதிக்கப்பட மாட்டான்.

அமுதம் உண்டவர்களுக்கு மரணமில்லை. ஆதாரயோகி சஹஸ்ராரத்தில், வற்றாத ஊற்றாக, தலைகீழ் லிங்கத்திலிருந்து வழியும் அமுத தாரையை இறை அருளால் எப்பொழுதும் அருந்துவான். அந்த யோகியின் "ஞானப் பசி" கூட இதனால் தீர்ந்துவிடும் என்கின்றனர், சித்தர்கள்.

சித்த தர்மம், ஒருவன் காலத்தை வெல்லவும், காலன் கைவசப்படாமல் இருக்கவும் வழி வகுக்கிறது.

"மூலத் துவாரத்து மூளும் ஒருவனை 
மேலைத் துவாரத்து மேலூர் நோக்கி 
காலுற்றுக் காலனை காய்ந்தங்கி யோகமாய் 
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே!"

என்ற சித்தரின் பாடல் "மூலாதாரத்தில் மூண்டு எழுகின்ற சோதியாகிய தலைவனை பிரம்மரந்திரமாகிய சஹஸ்ரதளத்தில், மேலாக 12 விரற்கடையில் பொருத்தி ஒளியாகக் கண்டு அங்கு மேலே பொருத்தியவர், சுழுமுனை நாடியில் விளங்குவதால், காலனை வென்று விளங்கும் வழியை, அறிந்தவராகிறார். இதை விளக்கவே, பூமியில் திருக்கடவூர் ஸ்தலம் உருவாக்கப்பட்டது.

  1. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் - ஒருவனின் ஒளி விளங்கும் சிரசு.
  2. அபிராமி = சரஸ்வதி, பார்வதி இருவருக்குமான பெயர், (சரஸ்வதி நிலையில் சூக்ஷுமமான ஞானத்தையும், பார்வதி என்கிற நிலையில் சக்தி நிறைந்த ஒளியையும் குறிக்கும்).
  3. திருக்கடவூர் - கடைசியாக உள்ள துவாத சாந்த வெளியை குறிக்கும்.
இந்த உண்மையின் பக்கத்திலிருந்து பார்க்கும் பொழுது, திருக்கடவூரில், ஒவ்வொரு தம்பதியரும், தங்கள் "60ம் ஆண்டு நிறைவை (சஷ்டியப்த பூர்த்தி)" ஏன் பூஜை, யாகத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று புரியும். 

சாகாத வித்தைக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் இருப்பது இறைவனே என்கிறார் இராமலிங்க அடிகளார். மரணமில்லா பெறுவாழ்வைப் பெற அவர் கூறுவது "பசித்திரு, தனித்திரு, விழித்திரு" என்பதே.

விழிப்புடன் இருந்தாலே, மற்ற இரண்டும் தானே கைவல்யமாகும். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்.................... தொடரும்!Monday, 17 February 2020

சித்தன் அருள் - 845 - உங்கள் நலனுக்காக ஒரு சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஆதிசங்கரர் நமக்களித்த "சௌந்தர்யா லஹரியிலிருந்து" இரு ஸ்லோகங்கள் கீழே தரப்பட்டுள்ளது. முதல் சுலோகம் 32வது ஸ்லோகமாக வரும். இரண்டாவதாக உள்ள சுலோகம் 99வது ஸ்லோகமாக வருகிறது.

அடியேனுடைய குருநாதர் இந்த 32வது ஸ்லோகத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 48 முறை ஜெபித்துவிட்டு, 99வது ஸ்லோகத்தை ஸ்லோகத்தை, கடைசியில் மூன்று முறை கூறி நிறைவு செய்யச் சொன்னார். என்ன வேண்டுமோ அதை முதலிலேயே அம்பாளிடம் வேண்டிக்கொள் என உத்தரவிட்டார்.

என்ன வேண்டிக்கொள்வது? என்ற எண்ணம் வரவே, பொதுவாக எல்லோருடைய நலத்திற்கும் வேண்டிக்கொண்டு ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபம் செய்து வர, மந்திரமும் வளர, அடியேனுடைய வாழ்க்கையில் அனைத்தும், அம்பாளின் அருளால் வந்து சேர்ந்தது. பின்னர் ஒரு முறையேனும் வாழ்க்கையில், எதற்காகவும் திரும்பி பார்க்க வேண்டிய நிலை வரவில்லை என்பதே உண்மை.

நம்புகிறவர்களுக்கு வாழ்க்கை உங்கள் கையில்.

சரி! இப்பொழுது இதை ஏன் கூறுகிறேன் என்றால், அகத்தியப் பெருமானின் சித்தனருளை வாசிக்கும் அனைவருக்கும் தெரிவிக்கும் படி, நம் குருநாதரின் உத்தரவாகியுள்ளதால்தான். விருப்பமுள்ளவர், இந்த இரண்டு ஸ்லோகங்களை தினமும் கூறி வாருங்கள். நல்லதே நடக்கும்.

32வது சுலோகம்:- 

சிவ சக்தி காம ஷிதி ரத ரவிச் சீதகிரணக
ஸ்மரோ ஹம்ஸ-சக்ர ததனு ச பரா-மார ஹரய
அமீ ஹ்ருல்லேகாபிஸ்  தீஸு ருபி-ரவசாநேஷு கடிதா 
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜநநி நாமா வயவதாம்!

शिवश्शक्तिः कामः क्षितिरथ रविश्शीत किरणः 
स्मरो हंसश्शक्रः तदनुच परामारहरयः 
अमी ह्रुल्लेखाभिः तिसृभिः अवसानेषु घटिताः
भजन्ते वर्णास्ते तवजनानि नामावयवताम्!

shivah shaktih kamah khshitiratha ravih shItakiraNah

smarO hamsah shakrah tadanuca parAmAraharayah
amI hrullEkhAbhih tisrubhih avasAnEShu ghaTitA
bhajantE varNAstE tava janani nAmAvayavatAm  

99வது சுலோகம்:-

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி சபத்னோ விகரதே
ராதேபாதி வ்ரித்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவன்னேவ ஷபித பசுபாச வ்யதிகர
பராநந்தாபிக்யாம்  ரசயதி ரசம் தஃவத்பஜனவான் !    

सरस्वत्या लक्ष्म्या विधि हरि सपत्नो विहरते

रतेः पतिव्रत्यं शिथिलयति रम्येण वपुषा
चिरं जीवन्नेव क्षपित-पशुपाश-व्यतिकरः
परानन्दाभिख्यं रसयति रसं त्वद्भजनवान् !

saraswatyA lakshmyA vidhi hari sapatnO viharatE

ratE pativrityAm sithilayati ramyENa vapuShA
ciram jIvannEva kshapita pashupAsha vyatikarah
parAnandAbhikhyam rasayati rasam tvadbhjanavAn 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்/சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................... தொடரும்!

Thursday, 13 February 2020

சித்தன் அருள் - 844 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


[ வணக்கம்! இந்த வார தொகுப்பை சற்று மனம் நிறுத்தி/ஒன்றி நிதானமாக வாசிக்கவும் ]

ஹடயோகத்தில் மூச்சுசக்தியை கும்பகத்தில் நிறுத்திவிட்டால், மனதின் செயல் நிறுத்தப்பட்டுவிடும். இதை சமாதி நிலை என்பர். கேசரி யோகத்தில், உள்நாக்கை, நாக்கினால் மூடினால்/அழுத்தினால் சுவாசம் நின்று மனம் ஓய்ந்துவிடும். இவை இரண்டும் முயற்சி செய்து தேர்ந்திட, விதி விலகி வழிவிடவேண்டும். ஆதனிலால்தான், யாருக்கு விதி வழி விடுகிறதோ அவர்களின் கர்மாவை உற்று நோக்கித்தான், இந்த பயிற்சியை, சித்தர்கள் தீக்ஷையாக கொடுத்தனர். இது மற்றவர்களிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டு, ரகசியமாக காப்பாற்றப்பட்டு வந்துள்ளது.

யோகமுறைகள்/பிராணாயாம முறைகளை தொடங்கும் காலத்தில், ஒருவன் உடல் பற்றிய உணர்வில் இருப்பான். ஹடயோகத்தில் தொடங்கி மனம் பற்றிய அமலயோக நிலைக்கு செல்லும் பொழுது, த்யானிப்பவனுக்கு இருவித யோகநிலைகள் அவன் முன் தோன்றும்.

சிவ ஸ்வரூபத்தை சூன்யம் என்றும், குணங்கள் அற்றது என்றும் த்யானிக்கிற அபாவ யோகம் ஒன்று;
இரண்டாவது சிவஸ்வரூபத்தை பேரானந்த ஸ்வரூபமாகவும், நிர்மலமானதாகவும் தியானிப்பது - இதை அமலயோகம் என்பர்.

அதனால்தான் சித்தர்கள் இவ்வுடலை "ஐந்து கல்லால் ஒரு கோட்டை;  ஒன்பது வாசல்" என்று பாடி சென்றனர்.

நீண்ட காலம் வாழ வழி பிராணாயாமம் செய்தால்தான் என சித்தர்கள் அனுபவபூர்வமாக உணர்த்தி சென்றனர். சூரியகலை(வலது மூக்கு வழி செல்லும் சுவாசம்), சந்திரகலை (இடது மூக்குவழி செல்லும் சுவாசம்) வழியே செல்லும் ஸ்வாசங்களால்தான் ஒருவரின் ஆயுள் கணக்கிடப்படுகிறது.

ஆரோக்கியமான ஒரு தேகத்தில் சூரிய நாடி வழி 8 அங்குல சுவாசமும், சந்திரநாடி வழி 12 அங்குல சுவாசமும் நடக்கிறது. சந்திர நாடி வழி சுவாசத்தை செல்ல விடாமல், சூரிய நாடி வழி (வலது நாசி) சுவாசம் செல்லும்படி பழகிக்கொண்டால் 120 ஆண்டுகள் (தீர்காயுள்) வரை உயிர் வாழலாம் என்கின்றனர், சித்தர்கள்.

எல்லா இந்திரியங்கள் வழியும் வரும் அறிவானது ஆக்ஞாசக்ரம் என்கிற நெற்றிக்கண்ணில் (சுழுமுனை) வந்து சேருகிறது. சுழுமுனை என்பது ஆகாய தத்துவம் கொண்டது.  ஆதலினால், இதை காண்பது அரிது. அறிவு ஆக்ஞா சக்கரத்துக்கு மின் அலைகளாக வருவதை நாதம் என்பர். இந்த ஆக்ஞா சக்கரத்தை மாகேஸ்வரி பீடம் (PITUATARY GLAND) என்பர். இங்குதான் முதல் தொடக்க நிலை ஆரம்பமாகிறது. இவ்விடத்தில், வந்து சேரும் நாதம் எண்ணங்களால் சிதறடிக்கப்படும் பொழுது, த்யானத்தில் மனம் ஒன்றாமல், எங்கெங்கோ அலை பாய்கிறது. இங்கு வரும் மின்னலைகள் ஒரே புள்ளியில் நிற்க, அந்த நாதத்தை சஹஸ்ராரத்துக்கு தொடர்ந்து செலுத்திட, அதுவே மாற்றிப்படைக்கும் சக்தியாக மாறும்.

மேற்சொன்ன மாகேஸ்வரி பீடநிலை தான் ஒரு சிலருக்கு அதீத சக்தியை கொடுக்கிறது. உதாரணமாக, எதிரில் இருப்பவரின் எண்ணத்தை வாசிப்பது, கர்மவினைப்படி என்ன நடக்கும் என்று சரியாக உணர்வது, ஆதார சக்கரங்களின் அசைவு, அவற்றின் நிறங்களில் வரும் மாறுதல், ஒருவருக்கு உள்ளே உள்ள வியாதியை கண்டறிவது போன்ற அதிசய செயல்களை செய்கிற சக்தியை கொடுக்கும். இவற்றில் ஒன்றும் மயங்கிவிடாமல் தொடர்ந்து பிராணாயாம நிலையை பயிற்சி செய்பவர், ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒவ்வொரு அஷ்டமாசக்தியையும் அடைவர். அஷ்டமாசக்தியை அடைந்து, அதிலும் மயக்கமுறாமல் தொடர்பவர்கள், ஒரு நிலையில் "மகா சக்தி" என்கிற நிலையை அடைந்து இறைவனோடு கலந்து ஒன்றி இருப்பார்கள். இதுவே "சித்த நிலை". எல்லாம் இருந்தும், ஒன்றின் மீதும் பற்றின்றி இருக்கும் நிலை. இறை உத்தரவை நிறைவேற்றும் நிலை.

பிராணாயாமம் > தசவாயுக்கள் > சூர்யசந்திர கலைகள் > நாதம் > சஹஸ்ராரம் > ஆதார சக்கரங்கள் (நாடி சுத்தி) > அஷ்டமாசித்துக்கள் > மாகேஸ்வரி பீடம் > மகா சக்தி லயனம் என்பதே மனிதன் சித்தத்தன்மை அடைய, சித்தர்கள் வகுத்து கொடுத்த வழி. பிராணன் லயம் செய்யும் முறையை அறிந்தவர்களிடம், சிவம் பிரகாசிக்கும் என்பதே சித்தநிலை பற்றிய சுருங்கிய வாக்கியம்.

சித்தன் அருள்....................... தொடரும்!

Sunday, 9 February 2020

சித்தன் அருள் - 843 - சுகப்பிரம்ம மஹரிஷி அருளிய சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சுகரூபாய வித்மஹே சுபீக்ஷ காரகாய தீமஹி
தன்னோ சுகப்பிரம்ம ப்ரசோதயாத்!

ஒரு அகத்தியர் அடியவர், சுகப்பிரம்ம மகரிஷி, நாடியில் வந்து அருளிய ஒரு ஸ்லோகத்தை, மற்ற அகத்தியர் அடியவர்களுடன் பகிர்ந்து கொள்ளச்சொல்லி அனுப்பித்தந்தார். நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் குழந்தைகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு வந்துவிடும். கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை ஜெபம் பண்ணைச் சொல்லுங்கள். குழந்தைகள் படித்தவற்றை மனதில் வைத்துக்கொள்ளவும், மனதில் நின்றவற்றை தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் வாங்கவும், இது சரஸ்வதி தேவியின் அருளை பெற்றுத் தரும், என வாக்கு வந்துள்ளது.

ஸ்ரீ வித்யா ரூபிணி; சரஸ்வதி; சகலகலாவல்லி;
சாரபிம்பாதரி; சாரதா தேவி; சாஸ்திரவல்லி;
வீணா புஸ்தக தாரிணி;
வாணி; கமலபாணி; வாக்தேவி: வரதாயாகி;
புஸ்தக ஹஸ்தே; நமோஸ்துதே!

நாமும் இதை மனப்பாடம் பண்ணி, குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 6 February 2020

சித்தன் அருள் - 842 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


ஒரு உடலில் பிராணன் மேல் நோக்கி இயங்க, அபானன் கீழ் நோக்கி இயங்கும். இவை இரண்டும் கோர்த்துக்கொண்டு ஒன்றை மற்றொன்று தன் இயக்கத்துக்கு ஏற்ப மேலும், கீழுமாக இழுக்கும். இதை பிராண-அபான பந்தனம் என்பர். இந்த இயக்கம் குடலில் ஏற்படும் தாக்கத்தை சரி செய்து, ஜீரண சக்திக்கு தேவையான ரத்தத்தை அதன் அதன் உறுப்புகளுக்கு அனுப்பும். ஆகவே, பிராணனின் இயக்கம், அதிகப்படியான வயிற்றிலுள்ள வாயுவை ஏப்பமாக வாய் வழி வெளியேற உதவுகிறது. அபானனின் இயக்கம், அதிகப்படியான வாயுவை ஆசனவாய் வழி, அபான வாயுவாக வெளியேற்றுகிறது.

விக்கலை உருவாக்குவதே உதானனின் வேலைகளில் ஒன்று. இது குரல்வளை நரம்புகளை கட்டுப்படுத்தி, அவைகளை முடுக்கிவிட்டு விக்கல் சப்தத்தை உருவாக்குகிறது. இந்த விக்கல் நிறைய பேருக்கு நீண்ட நேரம் தொடர்ந்து நின்று எரிச்சலையும், வெறுப்பையும் உருவாக்கும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைவரும் ஒரு விஷயத்தை சற்று யோசிக்க வேண்டும். குடலுக்கு ஏற்பட இருந்த ஒரு அதீத தாக்கத்தை, இந்த உதானன் தன் நிலையில் நின்று பலிகொடுத்து, குடலையும், உடலையும் காப்பாற்றிவிட்டு, என் கையிருப்பு குறைந்துவிட்டது என்று நமக்கு தெரிவிப்பதற்கே, விக்கலை உருவாக்குகிறது. எப்பொழுது உதானன் இழந்த சதவிகிதத்தை, அது திரும்பி பெறுகிறதோ, அப்பொழுது தொண்டை நரம்புகளை தூண்டி விடுவதை நிறுத்திக் கொள்கிறது. விக்கல் நின்று விடுகிறது.

சரி! உதானனின் இழப்பை எப்படி நிரவர்த்தி செய்வது? மிக எளிது. விக்கல் தொடங்கியவுடன். மார்பு நிறைய பிராண வாயுவை நிரப்பி, அப்படியே கும்பத்தில் ஒரு 30 வினாடிகள் பிடித்து வைத்துவிடுங்கள். நுரையீரல் பிராண வாயுவை வேறு வேறாக பிரித்து அதனதன் இடங்களுக்கு அனுப்பும். உதானனின் குறைவு நிவர்த்தி செய்யப்படும். விக்கல் நின்று விடும்.

தசவாயுக்களை சமன்படுத்தி, உடலில் சக்தியை மெருகேற்றுவதை பிராணாயாமம் செய்கிறது. மனித உடலிலுள்ள அசுத்தத்தை அணுவளவிலிருந்து, சுத்த நிலையை அடையவைக்க முடியும் என கண்டுபிடித்து அதற்கான பயிற்சியையும் வகுத்து தந்தவர்கள் சித்தர்கள். இதையே அவர்கள் "வாசி யோகம்" என்றனர். மனித உடலில் இருக்கும் உயிரின் ஊசலாட்டத்தை சூட்ச்சுமக் கயிறு என்றனர் சித்தர்கள். இந்த உயிரின் ஊசலாட்டத்தை பிடித்து மேலேறி ஜோதியை காண்பதே "சாகாக்கலை" என்பர். "சூத்திரப்பாவை கயிறருந்து வீழும்முன், சூட்ச்சுமக் கயிற்றினைப் பாரடா, அதிசூட்சுமக் கயிற்றினைப் பாரடா" என்றார் குணங்குடி மஸ்தான் சாகிப்.

சாகாக்கலையின் ஆணிவேரே யோகாப்யாசம் தான். 108 வகையான யோகாப்யாசனங்கள் இங்குள்ளன. அதில் மிக முக்கியமானது 72 ஆசனங்கள். நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவரின் இதயம் நிமிடத்திற்கு 72 முறை அடித்துக்கொள்கிறது. இதை கவனித்தால் ஒரு துடிப்புக்கு ஒரு ஆசனம் என்பது சித்தர்கள் கூறும் வழி.

சித்தம் நிலைத்து நிற்க பிராணாயாமம் செய்வது மிக முக்கியம். ஒரு தம்பதியருக்கு சந்ததி உருவாக காரணமாக இருப்பதே நிலையான சித்தம் தான். சித்தம் சிதறி இருந்தால், சந்ததி உருவாவது தடைபடும்.

ஹடயோகம் மூலம் அதிக காலம் வாழலாம் என சித்தர்கள் கண்டுபிடித்தனர். "ஹ" என்பது சூரியனை குறிக்கும். "ட" என்பது சந்திரனை குறிக்கும். சூரிய, சந்திர நாடிகளை சரியான விகிதத்தில் இயக்கினால், மனதை ஒருமுகப்படுத்த முடியும். மூக்கின் நுனியில் பார்வையை நிறுத்துவதின் மூலம் மனதை ஒன்றுபடச் செய்யலாம். இதையே ஒரு சிலர் சாம்பவி முத்திரை எனவும், கேசரி முத்திரை எனவும் கூறுவர்.

சித்தன் அருள்........... தொடரும்!