​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 29 July 2021

சித்தன் அருள் - 1016 - அன்புடன் அகத்தியர் - சுருளிமலையில் பொதுவாக்கு!


சுருளி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு!

அகத்தியா அகத்தியா என்று பக்தி காட்டி வணங்கினால் பிரம்மதேவன் மனமிரங்கி அருளுவார். ஏனென்றால் பிரம்மதேவனுக்கு அகத்தியன் நான் பல சமயங்களில் உதவி செய்து இருக்கின்றேன்.

அதுபோலத்தான் அப்பனே சித்திரகுப்தன் அவனுக்கும் பல நேரங்களில் நான் உதவி இருக்கின்றேன் பரிகாரங்கள் கூறி இருக்கின்றேன்.

மனிதர்களின் தலையெழுத்து விதியை  பிரம்ம தேவனிடம் சித்ரகுப்தன் இடம் சொல்லி மாற்ற முடியும் என்னால். ஆனால் அது தவறாகிவிடும்.

அப்பனே மனிதர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான கட்டங்கள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு வந்தால் தான் இறைவனைக் காண முடியும். இல்லையென்றால் காணமுடியாது அப்பனே. அதனால்தான், என்னை நம்பி வருபவர்களுக்கு சிறிதளவு கஷ்டத்தைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவத்தைக் கொடுத்தது இறைவனைக் காண்பதற்கு வழி காட்டுகிறேன் அப்பனே!

அப்பனே மனிதர்களுக்கு மேன்மையான எண்ணம் வேண்டும்! மேன்மையான எண்ணம் எவ்வளவு இருக்கிறதோ, அவர்களே முன்னேறி செல்வார்கள். அப்பனே மேன்மையான எண்ணம் இல்லை எனில், இறைவனை எவ்வளவு தேடினாலும், இறைவன் கிடைக்க மாட்டான். மேன்மையான எண்ணங்களும் சிந்தனைகளும் தர்ம காரியங்களும் ஈடுபடுவதும் இறைவனைக் காண வழி செய்யும் அப்பனே!

யாருக்கும் தீங்கு செய்யாத குணமும், யார் மீதும் பொறாமை இல்லாத குணமும், இருந்தால் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் கிட்டும் அப்பனே!

அறம் செய்ய விரும்பு தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்றால் அறம் அப்பனே! அறம் என்றால் தர்மம் நல்வழிகளில் யார் தர்மம் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு இறைவன் நிச்சயம் காட்சி தருவான்! அது வேண்டும் இது வேண்டும் என்று பலனை எதிர்பாராமல் எவரொருவர் தர்ம காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் நல் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் இறை தரிசனம் உண்டு அப்பனே!

அப்பனே அகத்தியா நீயே பார்த்துக்கொள் என்று வணங்கி விட்டால் போதும் நான் பார்த்துக்கொள்வேன்! என்னிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கக்கூடாது! அகத்தியா அகத்தியா என்று அன்பால் வணங்கினால் போதுமானது எனக்கு தெரியும் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அப்பனே!

நல் முறையாக இப்போதே சொல்லி விடுகிறேன் அப்பனே! பிரம்மதேவனுக்கு எந்த மாதிரியான மனிதர்களை பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறேன் அப்பனே! பொறாமை குணங்கள் இருக்கக்கூடாது. சாந்தமான மனதாய் இருக்க வேண்டும். தியானங்கள் செய்ய வேண்டும். தன்னைப்போல் பிறரை எண்ண வேண்டும். இவை போன்ற எண்ணங்கள் இருக்கும் மனிதர்களை பிரம்மதேவன் விரும்புவான், அவனும் பிரியப்பட்டு தலையெழுத்தை மாற்றி தருவான் அப்பனே!

ஆணவம் அகங்காரம் தீய குணங்கள் இருந்தால் பிரம்மதேவன் மேலும் தட்டி வைத்து கீழே விழச் செய்து விடுவான். கிரகங்களுக்கு கட்டளையிடுவான். மனிதர்கள் நிச்சயமாக அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அப்பனே மனிதர்கள் சரியான வழியில் சென்றால் பிரம்மனே அவர்கள் தலையெழுத்தை மாற்றி விடுவான்

வரக்கூடிய காலகட்டங்கள், மனிதர்களுக்கு மேலும் புதிய புதிய நோய்களை தரும் அப்பனே! நோய் நொடிகளிலிருந்து மனிதர்களை காக்க நான் முதலிலேயே மூலிகைகளை கூறி இருக்கின்றேன்! அவற்றை சரியாக உட்கொண்டு வருதல் வேண்டும் அப்பனே! இதுவே மனிதர்களுக்கு பரிகாரமாக உரைத்திருக்கிறேன். நிச்சயம் அனைவரும் நான் கூறிய மூலிகை மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும் அப்பனே.

வரக்கூடிய காலங்களில் உண்மைக்கு காலங்கள் இல்லை அப்பனே. என்போன்ற சித்தர்களை வணங்குங்கள் நாங்கள் கூறும் வாழ்க்கை முறைக்கு மாறுங்கள் நல்லதே நடக்கும் அப்பனே. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை சித்தர்கள் ஆகிய நாங்கள் எடுத்து சொல்லுவோம். நல்லவர்கள் இந்த காலகட்டத்தில் மறைந்து வாழ்வார்கள். அவர்கள் தம்மை வெளிப்படுத்த மாட்டார்கள் அப்பனே. இருக்கும் நல்லவர்களை  சித்தர்கள் ஆகிய நாங்கள் வெளிக் கொணர்வோம்.

ஒன்றுமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு அப்படி கஷ்டப்பட்டாலும் நல்லதே நினைத்துக்கொண்டு நல்லது செய்து வரும் அவர்களை நாங்கள் வெளியே வர வைத்து அனைவருக்கும் தெரிய வைப்போம். மனிதர்களால் முடியாத தெய்வ காரியங்களையும் நல்ல காரியங்களையும் சித்தர்கள்  நாங்கள் செய்து முடிப்போம். சித்தர்கள் அனைவரும் பூமியில் தான் உலாவி கொண்டிருக்கின்றோம் அப்பனே. சித்தர்கள் அனைவரும் இறங்கி வந்து விட்டார்கள். மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும் சித்தர்கள் நாங்கள் இனி பார்த்துக்கொள்வோம் அப்பனே!

மனிதர்கள் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் பல மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே.

மனிதர்கள் புண்ணிய காரியம் செய்து விட்டு நான் அதைச் செய்வேன் இதைச் செய்தேன் அந்தப் புண்ணிய காரியத்தை செய்தேன் இந்த புண்ணிய செயலைச் செய்தேன் என்று கூறிக்கொண்ட நடந்தால் அவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் அவர்களுக்கு கிடைக்காது அப்பனே. நான் அவ்வளவு புண்ணிய காரியம் செய்து இருக்கிறேன் இதையெல்லாம் செய்து இருக்கின்றேன் எனக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்றும் கூறக்கூடாது அப்பனே. நீங்கள் செய்யும் புண்ணிய செயல்கள் இறைவனுக்கும் எங்களுக்கும் தெரிந்தால் மட்டும் போதுமானது நிறைய மனிதர்களை நாங்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே. அவர்கள் புண்ணியச் செயல்கள் செய்தாலும் கஷ்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன் அவர்களுக்கு கஷ்டம் வருகிறது? ஏனென்றால் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று கூறிக் கொண்டு திரிகின்றார்கள். இதனால் தான் அவர்களுக்கு புண்ணிய பலன் கிடைக்காமல் கஷ்டம் வருகிறது மனிதர்கள் அவர்கள் செய்யும் புண்ணியச் செயல்களை இறைவா உன்னருளால் அனைத்தும் நன்றாக நடக்கட்டும் என்று கூறி எவரொருவர் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலனுண்டு அப்பனே.

மனிதர்கள், குலதெய்வம் விஷயங்களில், மனிதன் தவறு செய்கின்றான் அப்பனே பெண்களுக்கு இரண்டு குல தெய்வம் அவர்கள் பிறந்த வீட்டில் வழிபடும் குலதெய்வம் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்றால் கணவன் வழி குலதெய்வம் அதுவும் குல தெய்வமாகி விடுகிறது. அதனால் பெண்களுக்கு இரண்டு குல தெய்வங்கள் இரு குல தெய்வங்களையும் வணங்கி வர அவர்கள் வாழ்க்கையில் சிறப்பைத் தரும் அப்பனே.

மனிதர்கள் இறைவனை தேடும்பொழுது கஷ்டத்தை தான் முதலில் சந்திக்க வேண்டும் அப்பனே. கஷ்டங்களெல்லாம் அனுபவங்கள் ஆகிவிடும் கடைசியில் இறைவனே மெய் என்று உணர்வார்கள் மனிதர்கள் அனைவரும். மாயையின் பிடியிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே. மாயைவழியே சென்று கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. இறைவனை வணங்குவதற்கு கஷ்டமாக நினைப்பார்கள். கஷ்டங்கள் வரும். கஷ்டத்திலும் நிலையாக நின்று இறைவனை நினைத்து இறைவா நீயே என் கதி என்று நினைத்தால் அந்த இறைவனே வந்து அழைத்துச் செல்வான் அப்பனே. ஆகையால் நல்முறையாக அப்பனே நேர்வழியில் செல்லுங்கள்.  யாருக்கும் துரோகங்கள் செய்யாதீர்கள். வஞ்சகம் ஏமாற்றுதல் போன்றவை செய்துகொண்டு இருந்தால், நீங்களே ஏமாந்து போவீர்கள் அப்பனே. வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாது. நாங்கள் காட்டிய வழிகளில் வாருங்கள். இறைவனை நிச்சயம் நாங்கள் காண்பிப்போம். வரும் காலகட்டங்களில் கூட உண்மை மறைந்துவிடும். ஆனால் எவர் ஒருவர் நேர்மையை கடைப்பிடித்து தர்ம சிந்தனையுடன் கூடிய பக்தியை காட்டுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு. அதனால் அப்பனே நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்.

மீண்டும் வந்து வாக்கு உரைக்கின்றேன்!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 22 July 2021

சித்தன் அருள் - 1015 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


"கொடிய கேடுகள் ஒருங்கே அடைவதற்கு, ஆசை எனப்படும் இந்த அவாவே காரணம்! என்றும் "ஆசையே அழிவுக்கு காரணம் என்றும் போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, தம் இறுதி நாளான அந்திம காலத்தில், சொர்க லோகத்தை அடைவார்கள். புலன்கள் சென்ற வழியில், மனதை செல்ல விடாமல், மனதை அடக்கி சுதந்திரமாக எவன் ஒருவன் இருக்கிறானோ, அவனே எல்லா வகையான நன்மைகளுக்கும் உரியவன் ஆவான். சுதந்திரம் இல்லாதவன், பாலிய பருவத்தில் தாய் தந்தையாரது சொல் கேட்பவன், யௌவன  பருவத்தில் மோக்ஷஸ்த்ரியின் கட்டளைக்கு  பணிந்து அவள் கட்டளைகளை  தலைமேல் தூக்கி நடப்பவன், வயோதிகப்பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணிந்து "கிழப்பிணமே! வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட!" என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழிகளை கேட்டு, மனம் பொருமி கிடப்பான். ஆகையால், கல்வியும் வித்தையும் கற்று உணர்ந்தவனே ஆனாலும், ஞானம் (மெய்அறிவு) இல்லாவிட்டால், பெண்ணை போல என்றுமே, சுதந்திரம் இல்லாதவனாக கிடப்பான்.

"கருடனே! கேட்பதாலும், ஸ்பரிச உணர்வினாலும், பார்வையினாலும், நாவின் ருசியாலும், முகரும் நாசியால், நாசமடைவதற்கு, எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

 1. புள்ளிமானானது, புல்லாங்குழலின் இசையை கேட்டு மயங்கி தான் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் இருந்து, வேடனால் பிடிக்கப்படுவதால், அந்த புள்ளிமான் காதால், கெடுவதாகும்.
 2. புணர்ச்சியை விழைந்த ஆண் யானை, ஒரு பெண் யானையை பின் தொடர்ந்து சென்று, யானை வேட்டைக்காரர்கள் தோண்டிய படு குழியில் விழுவதால், அந்த யானை, ஸ்பரிச இன்பத்தால், கெடுவதாகும்.
 3. வீட்டில் பூச்சிகள், மழை காலத்தில், எறியும் விளக்கை கண்டு, கனிந்திருக்கும் நல்லதொரு கனி என்று நினைத்து, அதில் பாய்ந்து விழுந்து, எரிகின்ற விளக்கின் ஜ்வாலையில் விழுந்து எரிந்து தீய்ந்து போவதால், அது கண் பார்வையால் கெடுவதாகும்.
 4. தேனீக்கள் தேன் சுவையை விரும்பி, தம் கூட்டியே, தேனை சேர்த்து, அதில் தங்கியிருக்கும் பொது, தேன் சேகரிக்கும் வேடர்கள், தீயால் கொளுத்தி தேனீக்களை விரட்டியும், சாகடித்தும், தேனை கவர்ந்து செல்வதால், அத்தேனீக்கள், நாவால் கெடுவனவாகும்.
 5. தூண்டில் முள்ளின் முனையில் கோர்த்த, மண்ணுள்ளி புழுவின் இறைச்சியின் நாற்றத்தை விரும்பிய மீன், அதை பற்றி இழுத்து, தூண்டில் முள் நெஞ்சில் சொருகி, துடி, துடித்து முடிவதால், அந்த மீன் நாசிபுலனால் கெடுவதாகும்.

கருடா! இவ்வாறு ஒரு இந்திரிய உணர்வினாலேயே, ஒவ்வொரு ஜீவராசிகள், நாசமடையும் போது, பஞ்ச இந்திரிய இச்சைகளை உடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாக இராது, என்பதில் சந்தேகமும் உண்டாக முடியுமா?

இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எதுஅதிகமாயினும், பெண்டு பிள்ளைகள் அதிகமாகி பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதி அடையமாட்டான்.  பாலியனாயினும், யுவனாயினும், விருத்தனாயினும் நாட்கள் கழிந்து செல்வதையே கணித்து கொண்டிருக்கும் "மிருத்யு" (மரணதேவன்) என்று ஒருவன் இருக்கத்தான் இருக்கிறான். அவன் இருப்பதை உணர்ந்து நடப்பவன் தான் இல்லை. உலகில், மனிதன் பிறந்து, பிறந்தே இறக்கிறான். யாரிடமும் சொல்லாமல், கேளாமல் வந்து பிறப்பதை போலவே, பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், பொருள் ஆசையால் தேடிய பொருள், மண்ணாசையால் தேடிய மனை, மாளிகை ஆகிய அனைத்தையும் விட்டு, உற்றோரும், உறவினரும், பெற்றவர்களும் பார்த்திருக்க, சொல்லியது சொல்லாமலேயே, மனிதன் மாண்டு விடுகிறான். பெற்றோர்கள், பெண்டு பிள்ளைகள் ஆகியவர்களில் ஒருவரும் தனக்கு துணை இல்லாமல், தான் ஒருவனாகவே, அவன் எப்படி பூமியில் தனியனாக பிறந்தானோ, அப்படியே அவன் மட்டுமே, தனியனாகவே மடிந்து போகிறான். ஒருவன் இறந்த உடன், அவன் உடலை, காஷ்டம் போல பூமியில் கிடத்தி, உற்றாரும், உறவினரும் எல்லோருமாக சேர்ந்து, "ஆ ஊ" என்று அழுது அரற்றுவார்கள். அவ்வாறு அவர்கள் அழுது புலபுவதால், செத்தவன் அடையும் பயன் தான் என்ன?

பொய்யான பத்திரங்கள் எழுதுதல், பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், வழிப்பறி செய்தல், கொலை புரிதல், முதலிய, தீய தொழில்களை புரிந்து ஒருவன் பொருளை சம்பாதிக்க, அவனை சார்ந்த அனைவருமே, அவன் சம்பாதித்த பொருள்களை, உரிமையுடன் அனுபவிப்பார்கள். பொய் ஓலை எழுதலாகிய, அத்தகைய தீய செயலை செய்ததால், வருகின்ற கொடிய பாபத்திலும், பொருள்களை அனுபவிப்பர்களுக்கு பங்கு ஏதேனும் உண்டோ என்றால், ஒரு சிறிதும் இருப்பதில்லை. அவர்கள், பாபத்தின் பயனில் பங்கு கொள்வதில்லை. அந்த பாப செயலை செய்து, பிறர் பொருளையோ, உரிமையையோ அல்லது உழைப்பையோ, கவர்ந்தவர் யானோ, அவன் ஒருவனே அந்த பாபம் முழுமைக்கும் பாத்தியம் உடையவனாகி தீய நரகத்தை அடைவான். அவ்வாறு தீய செயல்களை செய்து, அவன் ஈட்டிய பொருளாவது, அவன் மாண்ட பிறகு, அவனோடு செல்லுமோ என்றால், அதுவும் கொஞ்சம் கூட செல்லாமல், அவனை விட்டு விட்டு, அவன் வீட்டிலேயே தங்கி விடும்.உறவினர் முதலியவர்களும் அவனது சவத்தோடு மயானம் வரை சென்றுவிட்டு, உடனே தம் வீடு மீண்டுவிடுவார்கள். இறப்பதற்கு முன்பு அவன் செய்த பாப புண்ணியங்களே மாயனத்தையும் தாண்டி அவனவனுடன் செல்வனவாகும். 

எனக்கு பக்தனாகி தொண்டு புரியும் செந்தண்மை பூண்ட அந்தணனுக்கு எந்த பொருள் கொடுக்கப்படவில்லையோ, அந்தப்பொருள், அது உடையவனுக்கு சொந்தமல்ல; உலோபியிடம் இருக்கும் பெரும் பொருள், "ஐய்யகோ! நாம் நல்ல அந்தணர்களின் கையில் தானமாக கொடுக்கவில்லையே, தீர்த்த யாத்திரைகளுக்கும், தலயாத்திரைகளுக்கும் நாம் பயன்படுத்தவில்லையே, புண்ணிய செயல்களுக்கு பயன்படுத்தவில்லையே, கிருமிக்கூடாகி உடலானது அநித்தியமாயிற்றே, மலக்குடல் ஆகிய மனித உடல், எரிந்தோ, அழிந்தோ போகக்கூடியதாயிற்றே! நம்மை வைத்திருக்கும் உலோபி, இந்த உண்மை அறியாமல் இருக்கிறானே. அவன் இறந்த பிறகு நம்மை வேறு எவன் தான் கவர்ந்து செல்வானோ? அவன் ஒருங்கே கவர்ந்து நம்மை எந்த விலை மகள் கையிலே கொடுப்பானா, என்று கதறும். 

பூர்வ ஜென்மத்தில் தான தர்மங்களை செய்தவனே, அடுத்த பிறவியில் மகா பாக்கியவனாகின்றான். ஆகையால், அந்த ஜென்மத்திலும் அவன் தான தர்மங்களை செய்தால், அடுத்த பிறவியில், அதிக தனவானாக இருப்பான். எவன் ஒருவன் தான தர்மங்களை பக்தி ஸ்ரத்தையின்றி செய்தாலும் அந்த தான தர்மங்களை செய்தவனாக ஆகமாட்டான். தான தர்மங்களை பக்தி சிரத்தையோடு செய்பவன்தான், எண்ணியவற்றை எல்லாம், எண்ணியவாறே, எய்துவான். அரும்பெரும் பேறான மோக்ஷமும் அவனுக்கு கிடைக்கும். பக்தி சிரத்தையோடு செய்யப்படும் தருமமோ, தானமோ தினையளவே, சிறிதாக இருந்தாலும், மலையளவு பெரிய நன்மையைத் தரும். ஒரு போலும் இல்லாத முனிவர்கள் எல்லாம் தம் நல்ல மனம், நற்செயல்களாலேயே நிரதிசய இன்ப வீடாகிய எம்முலகை அடைகிறார்கள். ஆகையால், உள்ளத்தூய்மையும், பக்தியும் இல்லாமல், தானம், தருமம், தவம் முதலியவற்றை செய்தாலும் அவை ஒரு சிறிதும் பயன்படாமல் போய்விடும். முக்த்திக்கு சாதனமான பக்தியையாவது, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை (திருத்தொண்டுகளையாவது) செய்வதும், தான தர்மங்களை செய்வதுமே உத்தமமாகும்" என ஸ்ரீமந்நாராயணர் உணர்த்தி அருளினார்.

சித்தன் அருள்.............தொடரும்! 

Monday, 19 July 2021

சித்தன் அருள் - 1014 - சித்த பெருமக்களின் வாலைக்குமரி அம்மன்!


சித்த மார்கத்தில் நுழைந்து நடப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சிறந்ததாயினும், இறை அருளை கூட்டவும், சித்தர்கள் அருகாமையை உணரவும், சக்தியை வாலையாக வழிபடுவது இன்றியமையாத ஒன்று. சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உணர்ந்த சித்த பெருமக்கள், வாலை என்கிற சிறு வயது பெண்ணாக அம்பிகையை வணங்கி, பூசித்து அவள் அருள் பெற்றுக்கொள்கிற ஒரு மாதமாக "ஆடி" மாதத்தை வகுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த மாதத்தில், மனிதர்களாகிய நாமும் வாலையை பூசிக்கும் விதமாக செவ்வாய்/வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவில்களில் அலங்காரம் பூசை கண்டு தொழுது அவளருள் பெறுவது இயல்பு. சக்தியை, 9 வயது பெண்ணாக (பூப்பெய்தா பருவத்தில்) அனைத்து விதத்திலும் அலங்கரித்து பூசை செய்வது சிறப்பு. ஒரு சிலர், வயதுக்கு வராத ஒரு சிறுமியை வீட்டில் அழைத்து, ஒரு குழந்தை தன்னை அழகு படுத்திக்கொள்ள என்னென்ன தேவைப்படுமோ, அத்தனை பொருட்களையும் வாங்கி, ஏதேனும் ஒரு கோவிலில் சன்னதியில் வைத்து பூஜித்து, அந்த குழந்தைக்கு கொடுப்பார்கள். இதுவும், வாலை அம்மன் அருளை பெற மிக எளிய வழியாகும்.

இனி, வாலைக்குமரியை பற்றிய ஒரு தொகுப்பை பார்ப்போம்.

வாலையம்மன்: சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு. யார் அந்த வாலையம்மன்? வாலைப் பெண் தெய்வம் எனப்படும் பாலாவின் சிறப்பு என்ன? சித்தர்கள் எவ்வாறு பூஜித்தனர்?

அண்டமெல்லாம் விளங்கும் ஒப்பற்ற சக்தியாக இருக்கக் கூடிய அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் பூஜித்து வருகிறோம்.

இருப்பினும் நமது செந்தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்ற சித்த புருஷர்கள் இறை நிலையை அடைய யோக முறைகளையும், பூஜை முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
 
சிவ வழிபாடு அனைத்து சித்தர்களும் செய்து வந்தது நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் அந்த சித்த நிலையை அடைய வேண்டிய சக்திகளை பெறுவதற்கு சில இரகசிய வழிபாட்டு முறைகளை செய்து வந்துள்ளனர்.

அப்படி அவர்களின் வழிபாட்டில் இருந்த ஒப்பற்ற சக்திகளை வழங்கிய வழிபாடே “வாலையம்மன்“ (பாலா) வழிபாடு ஆகும்.

காளி ஞானத்தின் வடிவமா? காளி வழிபாடு எப்படி தோன்றியது?

நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பிள்ளைத் தமிழ் பருவங்களில் “வாலை பருவம்” ஒரு பருவம் உண்டு. ஒன்பது வயது நிரம்பிய பெண் குழந்தையை வாலை என்று கூறுவர்.

இந்த வாலையம்மன் வழிபாடும் சிறு பெண் குழந்தை வழிபாடே ஆகும். பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும்.

பெண் குழந்தை என்றாலே அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்கும். இதனை தான் பாலாவும் செய்கிறாள்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள்.

முதலில் போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதா தன்னுள் இருந்து ஒரு சிறு பெண்ணை தோன்றச் செய்து அனுப்பி வைத்தாள்.

அக்குழந்தையும் அனைவரையும் மாய்த்து வெற்றியுடன் திரும்பியது. அச்சிறு குழந்தை தான் பாலாம்பிகை. இவளே வாலாம்பிகை, வாலையம்மன், அசோக சுந்தரி, பாலா திரிபுரசுந்தரி, பாலா என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள்.

வாலையம்மன் (பாலா) சின்னஞ்சிறு குழந்தையாவாள். இவள் குணங்களும் குழந்தைத் தனமாகவே இருக்கும்.

குழந்தையை கொஞ்சி அழைத்தவுடன் ஓடி வருவது போல ஓடி வருபவள். இவளின் வடிவாமானது சொல்லுதற்கரிய பேரழகு பொருந்திய ஒன்பது வயது குழந்தையாகும்.

கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள். ஞானமே வடிவாக இருப்பவள் ஆவாள். ஸ்ரீ சக்ர வடிவமானவள், ஸ்ரீபுரத்தில் அன்னை லலிதாவுடன் எப்போதும் இருப்பவள்.


இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.

இவளைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில் 26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் கூறியுள்ளனர்.

இந்த வாலாம்பிகை வழிபாடானது சித்தர்களின் வழிபாட்டில் பெரிய ரகசியங்களை கொண்டதாகும். யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது.

இதனை வாலை கொம்மி போன்ற பாடல்களில் சித்தர்களே உணர்த்தி உள்ளனர். கொங்கணவர் தனது வாலை கொம்மியில்,

“வீணாசை கொண்டு திரியாதே 
இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு 
காணாத வாலையைக் கண்டுகொண்டால் 
காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே”

என்ற பாடலின் மூலம் வாலையை கண்டு வணங்கினால் ஆகாயத்தை கூட ஆளலாம் என்று எடுத்துரைக்கிறார். மேலும் கருவூராரும் வாலையை போலே ஒரு தெய்வம் இல்லையென கூறியுள்ளார்.

சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில் “பாலா லீலா வினோதினி” என்று இவளை குறிப்பட்டுள்ளார். திருமூலர், போகர் என அனைத்து சித்தர்களும் வாலையம்மனை வழிபட்டுள்ளனர்.

இந்தக் குழந்தையை வழிபட்டு தான் சித்தர்கள் சித்திகளை பெற்றனர் என்பது நமக்கு தெளிவாகிறது.

பாலா பரபிரம்மத்தை காண நம்மை கைப்பிடித்து அழைத்து செல்பவள். இவளை மூல மந்திரங்கள் மூலம் ஜெபம் செய்ய சீக்கிரமே நம்வசப்படுபவள்.

மூன்று வித மான மூல மந்திரத்தின் மூலம் இவளை துதிக்கின்றனர்.

பாலா திரியட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ” என்ற மந்திரம் பாலாவின் மூல மந்திரம் ஆகும்.

ஐம் என்பது பிரம்மா, வாணி பீஜம் ஆகும். க்லீம் என்பது விஷ்ணு, லட்சமி மற்றும் காளி பீஜமாகும்.

சௌம் என்பது சிவன், சக்தி மற்றும் முருகன் பீஜமாகும். எனவே பாலாவை இம்மந்திரத்தால் வழிபட கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும்.

பாலா சடாட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ
சௌ க்லீம் ஐம்”

திரியட்சரி மூல மந்திரம் பலித்தமான பின்பு சடாட்சரியால் வழிபடலாம்.

பாலா நவாட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ

சௌ க்லீம் ஐம்

ஐம் க்லீம் சௌ”

சடாட்சரி மூல மந்திர பலத்தமான பின் நவாட்சரி மூல மந்திரத்தால் வழிபடலாம்.

பாலா தியான மந்திரம்

"அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!"

என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய்  ஓடி வருபவள்.

பாலா திரிபுரசுந்தரியை அக கண்ணினாலே கண்டு தான் சித்தர்கள் பூஜித்தனர். எனவே பாலாம்பிகைக்கு கோயில்கள் மிக குறைவாகும்.

நம் தமிழகத்தில் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோவில் பாலா பீடம் நெமிலி என்ற ஊரில் அமைந்துள்ளது. மேலும் சில இடங்களில். லலிதா திரிபுரசுந்தரி கோயிலில் பாலாவிற்கான சன்னதி அமையப் பெற்றுள்ளது.

கலியுகத்தின் ஒப்பற்ற சக்தி பாலாம்பிகை. நாம் வாழுகின்ற இக்கலியுகத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வ​​ருகிறோம். நற்கதிக்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோம்.

இந்த நரக வாழ்வில் இருந்து விடுபட்டு நற்பேறு அடைய வழிக்காட்டுபவள் பாலாம்பிகையே ஆவாள். அவள் பாதம் பணிந்து சரணாகதி அடைந்து எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Sunday, 18 July 2021

சித்தன் அருள் - 1013 - அன்புடன் அகத்தியர் - ஆடி 1 அருள்வாக்கு!


ஆடி 1 இன்று குரு அகத்தியர் உரைத்த பொதுவாக்கு.

ஆதி சிவசங்கரி திருத்தாள் போற்றி போற்றியே!

மனமகிழ்ந்து சொல்கின்றேன் அகத்தியன்.

இவ்வுலகில் வரும் மாற்றங்கள் எண்ணிலடங்கா எண்ணிலடங்கா என்பேன். ஆனாலும் மனிதர்கள் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் புரியாமல் போகும்

ஆனாலும் இறை பலங்கள் அதிகமாக காணப்படும். ஆனாலும் இறைவனை நோக்கி பின் சென்றாலும் மனிதனுக்கு புத்தி இல்லாமல் பின்பு கீழே விழுந்து விடுவான் என்பேன்.

என்பேன் இதன் பின்னும் மறுவாக்கு எவ்வாறு என்பதையும் உணர்த்தும் அளவிற்கு மேன்மையான இப்புவியில் உயர்வான இடத்திற்கு கூட கிரகங்கள் அழைத்துச்செல்லும் ஆனாலும் மனிதர்களின் போக்கு சரியில்லாமல் கிரகங்கள் அவனை தட்டி தட்டி அமுக்கி விடும்.

அப்பன்களே நல்முறையாக, நல்முறையாக வாழ்ந்து விடுங்கள் உந்தன் வாழ்க்கையை பற்றி பின் எவ்வாறு என்று உணர்ந்து இருக்கின்றீர்களோ அவ்வாறே வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

உண்மை, நியாயம், தர்மம், அப்பனே உத்தமம், இவை போன்று, இதேபோன்று வாழ்ந்தால்தான் இனிமேலும் வாழ்க்கையை கடக்க முடியும் என்பேன்.

அதை விட்டுவிட்டு பொய், பொய் கூறி அலைதல், ஏமாற்றுதல், பிறரை ஏமாற்றி பணம் பறித்தல் இவையெல்லாம் செய்து கொண்டிருந்தால் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட பின் நீ அவனிடம் இருந்து பணம் பறித்தாயே அவன்தான் உயர்வானே தவிர நீ ஏமாற்றப்படுவாய் கடைசியில்.

அப்பனே ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் வருங்காலங்களில் அப்பனே அவரவர் வினைக்கு ஏற்பவே கிரகங்கள் நிச்சயம் வேலை செய்யும் என்பேன்.

அப்பனே ஏமாற்றி விடாதீர்கள் ஏமாற்றி விடாதீர்கள்.

அப்பனே இன்னும் இன்னும் பல எவ்வாறு என்பதையும் கூட பரிகாரங்கள் மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனாலும் அப்பனே விதியின் மாற்றத்தை யாராலும் மாற்றம் மாற்ற முடியாது இதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் ஆனாலும் அப்பனே அவ் விதியை தான் யான் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன் மனிதர்களே புரிந்து கொள்ளுங்கள்.

அப்பனே பின் நலம் நலமாகும் என்றெல்லாம் அப்பனே இவ்வுலகத்தில் எவை என்றுகூட மனிதனால் அனைத்தும் செய்ய இயலும் என்பேன் ஆனாலும் மனிதன் எவ்வாறு செய்தால் பின் நலமாகும் உயர்ந்து விடலாம் என்பதை கூட என்னால் கூற முடியும்.

ஆனாலும் அதனை வைத்து அப்பனே ஏமாற்றி விடுவார்கள் ஏமாற்றியும் பிழைப்பார்கள் அப்பனே கலியுகத்தில் அப்பனே வருங்காலங்களில் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம் அப்பனே ஆனாலும் அப்பனே இப்போதுகூட சொல்கின்றேன் சித்தர்கள் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள் இப்புவியில் அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக பார்த்தால் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள் அப்பனே சித்தர்களை கொண்டு ஏமாற்றினால் அப்பனே அப்பனே பொறுத்து கொண்டிருக்கின்றோம் யாங்கள். 

அப்பனே ஆனால் அடி கொடுத்தால் பின் எவ்வாறு என்பதையும் கூட இனிமேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமான நோயை ஏற்படுத்துவோம் யாங்கள்.

அப்பனே நிச்சயமாய் நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட ஏமாற்றி விடாதீர்கள் அப்பனை இவ்வுலகத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றோம் சித்தர்கள் யாங்கள் அப்பனே ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை படுத்தியும் ஏமாற்றி வருகிறார்கள் ஏமாற்றம் எவ்வளவு காலங்கள் காலங்களுக்கு என்று யாங்கள் பார்க்கின்றோம்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட வேண்டாம் அப்பா வேண்டாம் சொல்கின்றேன் நியாயமாக நியாயமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே பொருள் சிலரிடமிருந்து சில ஏழைகளிடம் இருந்தும் அப்பனே பொருள்கள்  பறிக்காதீர்கள் அப்பனே அன்பு கருணை வையுங்கள் அப்பனே அனைவரும் ஒன்றைப் போல் நினையுங்கள் அப்பனே பொறாமை வேண்டாம்.

போட்டிகள் வேண்டாம் அப்பனே இவை இருந்தால் பொறாமையே போட்டியே தன்னை அழித்து விடும் என்பேன் அப்பனே வேண்டாம் வேண்டாம் அப்பா எங்கள் வழியில் வருபவர்கள் உத்தமமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

அப்படியே திரும்பவும் சொல்கின்றேன் கடைசியாக எச்சரிக்கின்றேன் அப்பனே கடைசியாக எச்சரிக்கின்றேன் எச்சரிக்கின்றேன் எச்சரிக்கின்றேன் மறுபடியும் தவறு மேல் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு என்பேன்.

அப்பனே நல் முறையாய் அகத்தியன் பற்றி எல்லோருக்கும் அறியும் என்பேன் .

அறியும் என்பேன்  கருணை உள்ளவன் என்பதை கூட அறிவீர்கள் ஆனாலும் அப்பனே மனிதர்கள் மனிதர்களை நம்பி பிழைக்காதீர்கள்.

அப்பனே எவ்வாறே மனிதனை நம்பி மனிதன் பிழைப்பதா?

அப்பனே இது தவறு என்பேன் தவறு என்பேன் இன்னொரு இன்னொரு முறையும் விளக்குகின்றேன்.

அப்பனே இவ்வுலகத்தில் மனிதன் மனிதனை அழித்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனை ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என்று கனிவுடன் சொல்கின்றேன்.

அப்பனே ஆனாலும் பலமுறை சொல்லியும் அப்பனே ஏமாற்றியவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்பதெல்லாம் அப்பனை ஒன்றை உரைக்கின்றேன் அனைவரையும் இறைவன் படைத்தான் ஆனாலும் இறைவன் படிதான் நடந்து கொண்டிருக்கின்றது விதியின்படி தான் நடந்து கொண்டிருக்கின்றது ஆனாலும் அப்பனே இதில் மனிதன் திருத்துவானா??

எதற்காக திருத்துவான்? எதற்காக எல்லாம் திருத்துவானா?? 

திருத்துவான் ஏன் அப்பனே மனிதனை மனிதன் திருத்த முடியுமா நிச்சயம் முடியாது என்பேன் இவையெல்லாம் திருத்தும் அளவிற்கு நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் எல்லாம் ஏமாற்றி பணம் பறித்து அப்பனே ஆனாலும் பணம் பறித்து ஓடிவிடுவார்கள் ஆனாலும் ஏமாறுபவர்கள் அங்கேதான் உட்கார்ந்து இருப்பார்கள் அப்பனே ஒன்றும் நடக்கப்போவதில்லை அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களை நம்புவதை விட இறைவனை நம்புங்கள் ஆனாலும் அப்பனே இவை என்று பல சித்தர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் மனிதனுக்கோ புத்தி இல்லை புத்தி இல்லை மனிதன் ஏதாவது சொல்லிவிட்டால் ஓடோடி போகிறார்கள் அப்பனே இது ஞாயமா அப்பனே சித்தர்கள் எவ்வாறு என்பதையும் கூட அப்பனே சித்தர்கள் பின் எப்பொழுதும் பணத்திற்காக ஆசைப்படமாட்டார்கள் அப்பனே அப்பனே இவ்வுலகத்தில் சித்தர்கள் வந்ததே அப்பனே பின் நல்வழிப்படுத்தி நல் ஒழுக்கமாக வாழ பின் வாழ்ந்து நல் முறையாக பெயர் புகழும் வாழ்வதற்கே பின் ஏற்படுத்தி இருக்கின்றோம் யாங்கள்.

அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் கூட எங்கு பணம் அதிகம் இருக்கின்றதோ நிச்சயமாய் அங்கு யாங்கள் இருக்க மாட்டோம்.

என்பதுதான் ஆனாலும் அப்பனே பொய் சொல்லி பொய் சொல்லி ஏமாற்றுகிறார்களே அப்பனே 

நியாயமா? அப்பனே?

அப்பனே தண்டனை உண்டு தண்டனை உண்டு இப்படி எவ்வாறு எதனால் என்பதை கூட யான் பொறுத்திருந்துதான் பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட இவ்வுலகில் மாற்றங்கள் உண்டு மாற்றங்கள் உண்டு ஆனாலும் மனிதனின் மனிதனின் மாற்றம் உண்டு ஆனால் மனிதன் சத்திய வழியில் நிற்பதில்லை அதனாலே மனிதன் மாற்றம் ஏற்படுத்தினாலும் மனிதன் கீழே இறங்கி விடுவான் அப்பனே.

அப்பனே கலியுகம் கலியுகத்தில் ஏமாற்றுபவர்கள் அதிகம் என்பேன் அப்பனே சத்தியம் நீதி தர்மம் எங்கடா?? ஏதடா??

அப்பனே தர்மத்தைக் கடைப் பிடி அப்பனை அனைவரும் ஒன்றாக கடைபிடி பின் எவ்வாறு பின் அனைவரும் சமம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் சமம் என்ற சொல்லுக்கு அப்பனே அப்பொழுதுதான் என்னுடைய அருளைப் பெற முடியுமே தவிர அப்பனை மற்றவை எதைச் செய்தாலும் என் துன்பங்கள் தான் விளைவிக்கின்றேன். 

இப்பொழுதே சொல்கின்றேனடா மனிதா மனிதா உணர்ந்துகொள் ஏமாற்றாதே பொறாமை கொள்ளாதே அப்பனே என்னுடைய அடியவராக இருந்தாலும் பொறாமை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் நிறையபேர் அப்பனே வேண்டாமாடா எச்சரிக்கின்றேன்.

எச்சரிக்கின்றேன் கடைசியாக ஒரு முறை ஆனாலும் இவ்வாறே சென்று கொண்டு இருந்தால் யானே அழிப்பேன் வந்து.

பின் அப்பனே அப்பனே அகத்தியா என்று சொல்லி கொஞ்சவும் கூடாது என்பேன்.

அப்பனே ஒன்றை தெரிவித்துக் கொள்கின்றேன். அப்பனே வேண்டாம் அப்பா.

கர்மத்தை கர்ம பூமியில் கர்மம் விலகட்டும் அப்படியே இருந்து விடு. இவை எல்லாம் விட்டுவிட்டு அப்பனே இனிதான் ஆனாலும் இன்னும் போலியானது போலியானவர்களே வருவார்களப்பா .

சாமியார்கள் யாங்கள் சாமியார்கள் நாங்கள் அதை செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்பதெல்லாம் சொல்லிச் சொல்லி ஏமாற்றி விடுவார்கள் அப்பனே நம்பாதீர்கள்.

அப்பனே நல் முறையாக இன்னும் கூட வருவார்களப்பா சுவடியின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று சுவடியை வைத்துக்கொண்டு ஏமாற்றுவார்களப்பா.

ஏமாற்றி திரிவார்களப்பா.

அப்பனே எச்சரிக்கின்றேன் அடி விழுந்தால் அனைத்தும் விழுந்து விடுவீர்கள் அப்பனே இனிமேலும் ஏமாற்றியது போதும் திருந்தி விடுங்கள் அப்பனே நல் முறையாக.

அப்பனே மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றது அதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மனசாட்சிக்கு தகுந்தார் போல் நடந்தால் விளைவுகள் பலமாகும் என்பேன் அப்பனே சித்தர்கள் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அப்படி ஒன்றே ஒன்று யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனை இனிமேலும் தவறு செய்தால் முதலில் நோயை சிறிது ஏற்படுத்துவோம் அதன்பின்னே பலமாக்குவோம்.

அப்பனே உணருங்கள் திருந்துங்கள் நல்வழி படுத்துகின்றேன் யான். 

அப்பனே வேண்டாமப்பா

அப்பனே நல்வழி செல்லுங்கள். அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் ஏன்? பொய்யான விஷயங்களை செய்து கொண்டிருக்கின்றீர்கள் நியாயமா? இது?

அப்பனே யானும் பலமுறை பூலோகத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று என்னிடத்தில் வருகின்றீர்களே! அப்படி நீங்கள் முதலில் என்ன செய்தீர்கள் என்று நினைத்து பாருங்கள் அப்பனே அப்பொழுது புரியும்.

அப்பனே நிச்சயமாய் விதியையும் என்னால் மாற்ற முடியும் அப்பனே தெரிந்துகொள்ளுங்கள்.

அன்பால் இறைவனை வணங்குங்கள் போதுமானது மற்றவை யான் செய்கின்றேன் அப்பனே அடுத்த வாக்கும் நல் முறையாக சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

Thursday, 15 July 2021

சித்தன் அருள் - 1012 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


ஸ்ரீமன் நாராயணர் கருடனை நோக்கி கூறலானார்.

"உலகில் எண்பத்துநாலு லட்சம் யோனி பேதங்கள் உள்ளன. அவை, அண்டசம், உற்பிசம், சராயுசம், சுவேதசம் என்று நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு வகையில், அண்டசம் என்ற வகையில், முட்டையிலிருந்து 21 லட்சம் பறவைகள் தோன்றின. பூமியிலிருந்து தோன்றினவாகிய உற்பிச வகையில் இருபத்தியொரு லட்சம் மரம், செடி, கொடி முதலிய தாவர வகைகள் தோன்றின. கர்பப்பையிலிருந்து தோன்றுவதான, சராயுசம் என்ற வகையில், இருபத்தியொரு லட்சம் மனிதர் முதலானவர்கள் தோன்றினர். வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் என்ற வகையில் இருபத்தியொரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன.

பிறவிகள் அனைத்திலும், மானிடப்பிறவி கிடைப்பது, அரிதிலும் அரிது. அந்த மனிதப்பிறவியே, புண்ணியப் பிறவி ஆகும். 

 1. பொருள்களை பார்ப்பதற்குரிய கண்களும், 
 2. விஷயங்களை கேட்பதற்குரிய காதுகளும், 
 3. இனிமையை உணரவதற்குரிய நாக்கும், 
 4. வாசனைகளை அறிவதற்குரிய நாசியும், 
 5. காமம் உய்ப்பதற்குரிய உடலும் 
 6. நன்மை தீமைகளை பகுத்து உணர்வதற்கு, உணர்வும் இருப்பதால்,
மனிடப்பிறவியே சிறப்புடையது.

உணவு, உறக்கம். அச்சம், புணர்ச்சி, ஆகியவை அனைத்தும் எல்லா உயிரினங்களுக்கும் உரிய இயற்கையாக உள்ளன. ஞானம் மட்டும், எல்லா உயிர்களுக்கும், பொதுவானது அல்ல.

கிருஷ்ணசாரம் என்கிற கருப்பு நிறமுடைய மான்கள், எந்த பூமியில் வசிக்கின்றனவோ, அந்த பூமியே புண்ணிய பூமி ஆகும். அந்த பூமியில் தேவர்களையும், முனிவர்களையும், பித்ருக்களையும் பூஜிப்பவர்களுக்கு, நன்மைகள் மிகவும் உண்டாகும். அந்த புண்ணிய பூமியிலேதான் முப்பத்து முக்கோடி தேவர்களின் சாந்நித்தியம் எப்போதும் இருக்கும்.

பூத, பிரேத, பைசா சாதிகளில் ஆவி உருவம் மட்டுமே உண்டு. அவற்றில் தேகம் பெற்ற ஜீவர்கள், சிறப்புடையவர்கள். அந்த ஜீவர்களில், பசு, பட்சி பிறவிகள் எடுத்து, சிறிது அறிவோடு ஜீவிக்கும் தேகிகள், சிறப்புடையன. அவற்றை விட, மனிதர் சிறப்புடையவர்கள். மனிதர்களில், தாம் உணர்ந்த வழியில் நிலையாக நிற்பவர்கள் இன்னும் சிறப்புடையவர்கள். அவர்களை விட, பிரம்ம ஞானம் அடைந்தவர்கள், இன்னம் அதிக சிறப்புடையவர்கள்.

பல கோடி பிறவிகளாலேயே அடையப்படுவனவாகிய, சொர்க மோக்ஷங்களை அடைவதற்கு, மானிடப்பிறவியே, காரணமாக இருக்கின்றது. அத்தகைய மானிடப் பிறவியை அடைந்து, நல்ல வினைகளை செய்து, நல்ல உலகத்தை அடையாமல், நரலோகத்தில் தள்ளக்கூடிய, தீய செயல்களை புரிந்து, உயர்ந்த மானிடப் பிறவியையே வீணாக்குபவர்கள்தான், உலகில் மிகப்பலராக இருக்கிறார்கள். புண்ணியத்தால் அடைந்த அந்த மானிடப் பிறவியால், பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத்தானே வஞ்சனை செய்து கொள்பவர்கள் ஆவார்கள்.

மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை எனப்படும் இம்மூன்று ஆசைகளால் மயக்கமுற்று, செய்யத்தகாதவற்றை செய்து, தன் மனசாட்ச்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீய செயல்களை செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ அவன், மிருங்களுக்கு ஒப்பானவன். அவனை விட தீயவன் ஒருவனும் இல்லை.

ஆசை பெருக்கத்தால், ஆசையானது, பேராசை ஆகுமே அல்லாமல், அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழ்வும், வளராது. பேராசையால் திணிக்கப்பட்ட மனிதன், தன் பேராசை மிக்க மனத்தாலேயே, இவ்வளவு, அவ்வளவு என, அளவு எதுவும் இல்லாமல் யாவுமே நிறைய கிடைத்தாலும் "இன்னும் வேண்டும்! இதை விட அதிகம் வேண்டும்" என்று அலைவானே தவிர, தனக்கு கிடைத்ததை கொண்டு ஒரு பொழுதும் திருப்தி அடையமாட்டான். அத்தகையவனுக்கு ஒரு நூறு பொன் கிடைத்தால் அதை கொண்டு திருப்தி அடைய மாட்டான். ஆயிரம் பொன் வேண்டும் என்று இச்சிப்பான். அந்த இச்சைக்காக அற நெறிகளை மீறுவான். மனசாட்சியை மீறுவான். இந்நிலையில் அவனுக்கு ஆயிரம் பொன் கிடைத்தால், அத்தோடும் திருப்தி அடையமாட்டான். ஆயிரம் பொன் அடைந்தவன், லட்சம் பொன்னை இச்சிப்பான். லட்சம் பொன்னை அடைந்தவன் கோடி பொன்னை இச்சிப்பான். கோடிப் பொன் அடைந்தவன், ஒரு தேசத்தின் ஒரு பகுதியை தனதாக்கி கொள்ள இச்சிப்பான். பிறகு அரசனாக விரும்புவான். அரசனான பின் புவி முழுவதற்கும் ஏக சக்ராதிபதியாக விரும்புவான். அவ்வாறு, சக்கரவர்த்தியான பிறகோ, அப்போதும் ஆசை விடாமல், தேவனாக வேண்டுமென இச்சிப்பான். தேவனான உடன் தேவேந்திரன் ஆவதற்கு இச்சிப்பான். இவ்விதமாக இச்சையானது மேலும் மேலும் பெருகுமே அன்றி, ஒரு அளவோடு அது நிற்பதில்லை. இந்த இச்சையானது, பொருள் ஆசையாக இருப்பது, மண்ணாசையாக மாறும். மண்ணாசை வளர வளர, பெண்ணாசை வளரும். இந்த மூன்று ஆசைகளும், மனதில் பெருகப்பெருக அவன் மனித தன்மையையே இழந்துவிடுவான். குழப்பத்துக்கு ஆளாவான். அறிவு சரிவர வேலை செய்யாமல் ஆசை உணர்வே அதிகமாவதால், தன் ஆசை நிறைவேற தான் அடைய இச்சிக்கும் பொன்னுக்கும், மண்ணுக்கும், பெண்ணுக்குமாக சுயநலக்காரனாக மாறுவான். அக்கிரமக்காரனாக பலருக்கும் துரோகம் செய்து, தன் ஆசைகளை நிறைவேற்றுவதில், வெறியனாகி விடுவான்.

அவனது ஆசைகள் வளருகிற அந்த அளவுக்கு அவன் வாழும் காலம் நீடிப்பதில்லை. மேலும் இத்தகைய இச்சையை ஒழிக்காதவன், கண்டவருக்கெல்லாம் கரம் குவிப்பான். பிறரால் இகழப்படுவான். இறுதியில், இறந்த பிறகு, நரகத்துக்கே ஆளாவான்.

சித்தன் அருள்....................தொடரும்!

Thursday, 8 July 2021

சித்தன் அருள் - 1011 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


​கருட  பகவான், ஸ்ரீமந்நாராயணனிடம் ஐயம் தெளிவதற்காக கீழ் காணும் கேள்விகளை சமர்ப்பித்தார்.
 1. உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்?
 2. அவர்கள் மரணமடைந்த பிறகு, என்ன காரணத்தால், சுவர்க நரகங்களை அடைகிறார்கள்?
 3. எந்த பாபத்தால், ஜீவர்கள், மரித்த பிறகு பிரேத ஜென்மத்தை அடைகிறார்கள்?
 4. எந்த புண்ணியத்தை செய்தால் அந்த ஜென்மம், நீங்கும்?
 5. எந்த கர்மத்தால், நிரதிசய இன்ப வீடான தங்கள் லோகத்தை அடைவார்கள்?
 6. முன்பு செய்த பாபங்களை, எவ்வாறு, மரண காலத்தில் நீக்கிக்கொண்டு, நல்லுலகம் அடையலாம்?
 7. எத்தகைய கர்மங்களால், பாவங்கள் விலகும்?
 8. இறக்கும்போது, யாரை நினைத்தால், நற்கதி கிடைக்கும்?
இவற்றை எல்லாம் அடியேனுக்கு உரைக்க வேண்டும் என்றார், கருட பகவான்.

பகவான், ஸ்ரீஹரி, "கருடனே! நல்லதொரு கேள்வியை கேட்டுவிட்டாய். அதையும், நல்ல முறையில் கேட்டாய். நீ கேட்டதெல்லாம், உலகினருக்கு புரியாத ரகசியங்கள். அவற்றை, யாம் கூறுகிறோம், கவனமாக கேள்" என்றார்.

எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது ஒருநாளில் இறப்பது நிச்சயம், என்பதை, ஒரு மனிதனும் நினைப்பதில்லை. உலகில் பிறந்து விட்டது உண்மை, என்பது போல், இறத்தலும் உண்மை என்று நினைப்பவன், கோடியில் ஒருவனாவது இருக்கிறானோ, இல்லையோ? உயிர்களை கவர்ந்து செல்லும் கூற்றுவன் என்று எமதர்மன் ஒருவன் இருக்கிறான் என்றும், வாழ்வின் இறுதி காலத்தில், அவன் கையில் அகப்பட்டே ஆகவேண்டும் என்றும், அடுத்து அடுத்து நினைத்து திடுக்கிடுபவன் எவனோ, அவனே, "நேற்றய பொழுது போய்விட்டது! இன்றைய போகுதும் போய்விட்டது! இதுபோல் நாளாக நாளாக நமது வாழ்நாள் வீண்நாளாக கழிக்கின்றதே? நம் வந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைத்து பயந்தாவது, நல்ல தர்மங்கள் இயற்றி, அறநெறிப்படி வாழ்வான். ஒருவன், தனக்குரிய கர்மங்களை ஒழுங்காக செய்து வருவானாகில், அக்கருமங்களே, அவனை காப்பாற்றும். இன்ன குலத்தில் பிறந்தவன், இன்ன மரபு படி இத்தகைய கர்மங்களை செய்ய வேண்டும் என்று, வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன. கருடா! அத்தகைய குலாச்சார தர்மங்களை உணர்ந்து ஒருவன் தான் பிறந்த குலத்திற்கு, ஏற்ற கர்மங்களை செய்வதோடு, மேலும், கீழும் செல்லாமல், உரிய கர்மங்களையே, எவன் ஒருவன் முறைப்படி செய்கிறானோ, அவனே, எல்லா இடத்திலும் மேன்மை அடைவான்."

"ப்ரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். அவர்களில், 
 1. பிராமணருக்கு, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு கர்மங்கள் உள்ளன.
 2. க்ஷத்ரியருக்கு, ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படை பயிற்றல், பொருதல் என்ற ஆறுவகை கர்மங்கள் உண்டு.
 3. வைசியருக்கு, ஒதல், வேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களை காத்தல், ஏர் ஊழல் என ஆறு கர்மங்கள் உண்டு.
 4. சூத்திரருக்கு, ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுக்களை காத்தல், வேட்டல் முதுகிலிய ஆறு கர்மங்கள் உண்டு.

அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கப்படி நடப்பதே அவரவருக்கு பெரிய தவமாகும். அத்தவத்தில், வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து இறுதியில், தமக்குரிய உலகத்தை அடைவார்கள். ஆகையால், யாவரும், தத்தமக்கு உரிய ஓழுக்கத்தில் நிலை நிற்பதே சிறப்பாகும். யாவராயினும், எந்த பொருளையும், விரும்பலாகாது. எத்தகைய மாதவத்தையும், அத்தகைய இச்சையே கொடுத்துவிடும். அவாவை ஓழித்து பற்றற்றவர்களே பேரறிஞர்களாவர்!" என்று திருமால் திருவாய் மலர்ந்து அருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

Thursday, 1 July 2021

சித்தன் அருள் - 1010 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


நாடியில் வந்து அகத்தியப்பெருமான் உரைக்கின்ற அருள்வாக்கை உள்வாங்கி, உணர்ந்து, அதன்படியே வாழ்ந்துவிட்டால், அந்த ஒருவனுக்கு தெரியாமலேயே, இறைவன் அவனை தேடி வந்து, "என்ன வேண்டும் உனக்கு, இதை எல்லாம் எடுத்துக்கொள்" என கெஞ்சும். இதை தத்ரூபமாக பல அகத்தியர் அடியவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது உணர்ந்தேன். மிக அருமையான சில அருள்வாக்கும் தெரிய வந்தது.

"எதிலும் தன்னிச்சையாக செயல்படும் சுதந்திரம், மனிதர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த உரிமையை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமே இல்லை."

மேலும் ஒரு மனிதன் இனி மேலும் திருந்தட்டும் என்று ஒரு அருள்வாக்கை கூட அருளினார்.

"இந்த காலத்தில், இறையை வணங்காவிடினும், மனிதம் ஜீவகாருண்யத்துடன் இறைவன் படைத்த ஜீவன்களுக்கு நல்லது செய்திட, தானம் செய்திட, தர்மம் செய்திட, புயலுக்கு பின் வரும் காலத்தில், அவன் பாபக்கணக்கு திருத்தி எழுதப்படும். யாமே அதற்கு இறை முன் சாட்சி நிற்போம்." என்றார்.

எத்தனை கருணையுடன் அகத்தியப்பெருமான், எத்தனையோ தவறு செய்கின்ற மனிதரிடம், திருந்திவிடு, நான் காப்பாற்றுகிறேன், யாமே சாட்சியாக இருப்பேன் என்றெல்லாம் உரைக்கிறார். இந்த மனிதர்களுக்கு விடிவுகாலமே இல்லையா? என்றெல்லாம் யோசனை சென்ற பொழுது, கருட புராணத்தில் கூறியுள்ள விஷயங்களை தொகுத்து வழங்கலாம் என்று தோன்றியது. உங்களில் நிறைய பேர் இவைகளை வாசித்திருக்கலாம். இருப்பினும், அகத்தியப்பெருமான் கூற்றுக்கு கூட நிற்கும் விதமாய் இதை சமர்ப்பிக்கிறேன்.

கருட புராணம் என்பது மனிதர்கள் செம்மையாக வாழ்வதற்காக இறைவனால் உரைக்கப்பட்டது. மனிதனாக பிறவி எடுத்த அனைவரும் நேர்மையாக வாழ்ந்து பிறவி இல்லா நிலையை அடைய, மொத்த கர்மாவும் அழிந்துவிட, இவையெல்லாம் தவறு, இன்னின்ன நரகங்கள், தண்டனைகள், நிலைகள், என பல கிளைகளாக பிரிகின்றது. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்துதான் இவ்வுலகைவிட்டு செல்ல வேண்டும். இறைவனே மனிதனாக அவதாரம் எடுத்தாலும், இந்த நியதிக்கு விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

இறைவன், நமக்கு இந்தப் பிறவியை "மனித ஜென்மமாய்" கொடுத்திருக்கிறான். இந்த ஜென்மத்தில் தான், ஒருவன் பாவங்களைப் போக்கி, புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும். மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன. தீர்த்த யாத்திரை, ஷேத்ர தரிசனம் போன்றவைகளால் பாவங்கள் விலகும் என்பர். அவ்வப்போது, வசதிக்கு ஏற்ப, சிறு, சிறு தான தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், வாழ்நாளில், செய்த புண்ணியம் ஒன்று சேர்ந்து சேர்த்த பாபத்தை கடந்துவிடும். அதுவே ஒருவனுக்கு நல்ல வழியை காட்டும்.

`மனிதர்கள், குறைந்தபட்ச நல்லொழுக்கத்தையேனும் பின்பற்றி வாழ வேண்டும்’ என்ற உயரிய நோக்கத்திலேயே ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும் விளைவாக பாவ, புண்ணியங்கள் இருக்கின்றன என்று வகுக்கப்பட்டது. 

மனிதர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில், இறந்ததும் அவர்களின் ஆன்மாவுக்குத் தண்டனையோ, வெகுமதியோ உண்டு. அதற்காகவே சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டுள்ளன என்பதும் பொதுவாக எல்லா மதங்களும் கூறும் கருத்து. சொர்க்க, நரகம் பற்றி மற்ற எல்லா நூல்களைவிடவும் கருட புராணத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டிருக்கின்றன. 

பதினெட்டுப் புராணங்களில் தொன்மையான கருட புராணம் நீத்தார் வாழ்வு, ஈமச் சடங்குகள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் மட்டுமன்றி மருத்துவம், வானியல், உடல் இயக்கம், ஆன்மாக்களின் நிலைகள், நவரத்தினப் பலன்கள், சடங்குகள், தானம் உள்ளிட்ட பல விவரங்கள் பத்தொன்பதாயிரம் பாடல்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. `இறப்புக்குப் பிறகு ஆன்மாக்களின் நிலை’ என்று கருட பகவான் கேட்க, ஶ்ரீமன் நாராயணன் விளக்கிச் சொல்லும் கருத்துகளையே வியாச பகவான் 19 ஆயிரம் ஸ்லோகங்களாக, `கருட புராணம்' என்ற பெயரில் இயற்றியிருக்கிறார். 

என்னென்ன நரகத்தில் எந்த தவறுகளுக்கு, என்னென்ன தண்டனை என பார்ப்போம்.

தாமிஸிர நரகம்

பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்

இந்த நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும்.

இங்கு உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள்.

ரௌரவ நரகம்

பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுத்தல், பிரித்தல், அழித்தல், அவர்களின் பொருள்களைப் பறித்தல்.

இங்கு, பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்

மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தல், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல்.

குரு என்ற கோரமான மிருகம் பாவிகளைச் சூழ்ந்து, முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்

சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்துதல்.

எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்

பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தல், துன்புறுத்தியும் பட்டினி போடுதல்.

அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவார்கள்.

அசிபத்திரம்

தெய்வ நிந்தனை செய்தல், தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றுதல்.

இங்கு, பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு இனம் புரியாத ஒரு பயமுடன் அவதிப்படுவார்கள்.

பன்றி முகம்

குற்றமற்றவரைத் தண்டித்தல், நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோதல்.

இங்கு பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.

அந்தகூபம்

உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்.

கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்

பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.

இங்கு, பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்

சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள்.

இங்கு நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்

தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்தல்.

பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடைய கிருமிகள் மூலம் பாவிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்.

சான்மலி

நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழுதல்.

இங்கு, பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தல்.

வைதரணி என்ற ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்

சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த லட்சியம் இன்றி வாழ்தல்

இங்கு பாவிகளை விஷம் கொண்ட பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்

பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்

இங்கு, கூர்மையான பாணங்களை பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்

பசுக்களைக் கொடுமை செய்தல்.

பாவிகளுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்

மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.

இங்கு பாவிகள் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.

சாரமேயாதனம்

வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்று குவித்தல்

விசித்திரமான கொடிய மிருகங்கள் பாவிகளை வதைக்கும்.

அவீசி

பொய்சாட்சி சொல்தல்

இங்கு, நீர்நிலைகளில், ஜீவன்கள் தூக்கி வீசி அழுத்தப்படும்.

மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.

நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.

தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

விருந்தினரை வெறுத்தோர், சுயநலவாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!