​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 1 July 2021

சித்தன் அருள் - 1010 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


நாடியில் வந்து அகத்தியப்பெருமான் உரைக்கின்ற அருள்வாக்கை உள்வாங்கி, உணர்ந்து, அதன்படியே வாழ்ந்துவிட்டால், அந்த ஒருவனுக்கு தெரியாமலேயே, இறைவன் அவனை தேடி வந்து, "என்ன வேண்டும் உனக்கு, இதை எல்லாம் எடுத்துக்கொள்" என கெஞ்சும். இதை தத்ரூபமாக பல அகத்தியர் அடியவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது உணர்ந்தேன். மிக அருமையான சில அருள்வாக்கும் தெரிய வந்தது.

"எதிலும் தன்னிச்சையாக செயல்படும் சுதந்திரம், மனிதர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த உரிமையை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமே இல்லை."

மேலும் ஒரு மனிதன் இனி மேலும் திருந்தட்டும் என்று ஒரு அருள்வாக்கை கூட அருளினார்.

"இந்த காலத்தில், இறையை வணங்காவிடினும், மனிதம் ஜீவகாருண்யத்துடன் இறைவன் படைத்த ஜீவன்களுக்கு நல்லது செய்திட, தானம் செய்திட, தர்மம் செய்திட, புயலுக்கு பின் வரும் காலத்தில், அவன் பாபக்கணக்கு திருத்தி எழுதப்படும். யாமே அதற்கு இறை முன் சாட்சி நிற்போம்." என்றார்.

எத்தனை கருணையுடன் அகத்தியப்பெருமான், எத்தனையோ தவறு செய்கின்ற மனிதரிடம், திருந்திவிடு, நான் காப்பாற்றுகிறேன், யாமே சாட்சியாக இருப்பேன் என்றெல்லாம் உரைக்கிறார். இந்த மனிதர்களுக்கு விடிவுகாலமே இல்லையா? என்றெல்லாம் யோசனை சென்ற பொழுது, கருட புராணத்தில் கூறியுள்ள விஷயங்களை தொகுத்து வழங்கலாம் என்று தோன்றியது. உங்களில் நிறைய பேர் இவைகளை வாசித்திருக்கலாம். இருப்பினும், அகத்தியப்பெருமான் கூற்றுக்கு கூட நிற்கும் விதமாய் இதை சமர்ப்பிக்கிறேன்.

கருட புராணம் என்பது மனிதர்கள் செம்மையாக வாழ்வதற்காக இறைவனால் உரைக்கப்பட்டது. மனிதனாக பிறவி எடுத்த அனைவரும் நேர்மையாக வாழ்ந்து பிறவி இல்லா நிலையை அடைய, மொத்த கர்மாவும் அழிந்துவிட, இவையெல்லாம் தவறு, இன்னின்ன நரகங்கள், தண்டனைகள், நிலைகள், என பல கிளைகளாக பிரிகின்றது. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்துதான் இவ்வுலகைவிட்டு செல்ல வேண்டும். இறைவனே மனிதனாக அவதாரம் எடுத்தாலும், இந்த நியதிக்கு விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

இறைவன், நமக்கு இந்தப் பிறவியை "மனித ஜென்மமாய்" கொடுத்திருக்கிறான். இந்த ஜென்மத்தில் தான், ஒருவன் பாவங்களைப் போக்கி, புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும். மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன. தீர்த்த யாத்திரை, ஷேத்ர தரிசனம் போன்றவைகளால் பாவங்கள் விலகும் என்பர். அவ்வப்போது, வசதிக்கு ஏற்ப, சிறு, சிறு தான தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், வாழ்நாளில், செய்த புண்ணியம் ஒன்று சேர்ந்து சேர்த்த பாபத்தை கடந்துவிடும். அதுவே ஒருவனுக்கு நல்ல வழியை காட்டும்.

`மனிதர்கள், குறைந்தபட்ச நல்லொழுக்கத்தையேனும் பின்பற்றி வாழ வேண்டும்’ என்ற உயரிய நோக்கத்திலேயே ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும் விளைவாக பாவ, புண்ணியங்கள் இருக்கின்றன என்று வகுக்கப்பட்டது. 

மனிதர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில், இறந்ததும் அவர்களின் ஆன்மாவுக்குத் தண்டனையோ, வெகுமதியோ உண்டு. அதற்காகவே சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டுள்ளன என்பதும் பொதுவாக எல்லா மதங்களும் கூறும் கருத்து. சொர்க்க, நரகம் பற்றி மற்ற எல்லா நூல்களைவிடவும் கருட புராணத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டிருக்கின்றன. 

பதினெட்டுப் புராணங்களில் தொன்மையான கருட புராணம் நீத்தார் வாழ்வு, ஈமச் சடங்குகள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் மட்டுமன்றி மருத்துவம், வானியல், உடல் இயக்கம், ஆன்மாக்களின் நிலைகள், நவரத்தினப் பலன்கள், சடங்குகள், தானம் உள்ளிட்ட பல விவரங்கள் பத்தொன்பதாயிரம் பாடல்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. `இறப்புக்குப் பிறகு ஆன்மாக்களின் நிலை’ என்று கருட பகவான் கேட்க, ஶ்ரீமன் நாராயணன் விளக்கிச் சொல்லும் கருத்துகளையே வியாச பகவான் 19 ஆயிரம் ஸ்லோகங்களாக, `கருட புராணம்' என்ற பெயரில் இயற்றியிருக்கிறார். 

என்னென்ன நரகத்தில் எந்த தவறுகளுக்கு, என்னென்ன தண்டனை என பார்ப்போம்.

தாமிஸிர நரகம்

பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்

இந்த நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும்.

இங்கு உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள்.

ரௌரவ நரகம்

பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுத்தல், பிரித்தல், அழித்தல், அவர்களின் பொருள்களைப் பறித்தல்.

இங்கு, பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்

மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தல், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல்.

குரு என்ற கோரமான மிருகம் பாவிகளைச் சூழ்ந்து, முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்

சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்துதல்.

எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்

பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தல், துன்புறுத்தியும் பட்டினி போடுதல்.

அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவார்கள்.

அசிபத்திரம்

தெய்வ நிந்தனை செய்தல், தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றுதல்.

இங்கு, பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு இனம் புரியாத ஒரு பயமுடன் அவதிப்படுவார்கள்.

பன்றி முகம்

குற்றமற்றவரைத் தண்டித்தல், நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோதல்.

இங்கு பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.

அந்தகூபம்

உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்.

கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்

பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.

இங்கு, பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்

சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள்.

இங்கு நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்

தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்தல்.

பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடைய கிருமிகள் மூலம் பாவிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்.

சான்மலி

நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழுதல்.

இங்கு, பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தல்.

வைதரணி என்ற ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்

சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த லட்சியம் இன்றி வாழ்தல்

இங்கு பாவிகளை விஷம் கொண்ட பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்

பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்

இங்கு, கூர்மையான பாணங்களை பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்

பசுக்களைக் கொடுமை செய்தல்.

பாவிகளுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்

மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.

இங்கு பாவிகள் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.

சாரமேயாதனம்

வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்று குவித்தல்

விசித்திரமான கொடிய மிருகங்கள் பாவிகளை வதைக்கும்.

அவீசி

பொய்சாட்சி சொல்தல்

இங்கு, நீர்நிலைகளில், ஜீவன்கள் தூக்கி வீசி அழுத்தப்படும்.

மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.

நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.

தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

விருந்தினரை வெறுத்தோர், சுயநலவாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

9 comments:

  1. ஓம் அகத்திய குருவே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  2. குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏 குருவே சரணம் 💐💐💐

    ReplyDelete
  3. ஓம் அகத்தியர் திருவடி போற்றி

    ReplyDelete
  4. ஓம் அகத்தியர் திருவடி போற்றி

    ReplyDelete
  5. ஓம் அகத்தீஸ்வராய போற்றி போற்றி

    ReplyDelete
  6. After reading this, atleast those who r siththanqrul followers should stop eating animals. Agnilingam sir has taken so much efforts to compile these episodes. Very complicated and time consuming work. Atleast for his sake all siththanarul followers shall not kill animals for their food.
    Sri lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  7. ஸ்ரீலோபாமுத்ரா சமேத அகத்தியர்திருவடிகளே போற்றி🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. ஐயா நான் நாடி படிப்பதற்காக தங்கள் தொலைபேசி எண்ணிற்கு என் பெயர் மற்றும் ஊரை 26-03-2021 அன்று அனுப்பி இருந்தேன் இது வரை யாரும் என்னை தொடர்பு கொள்ள வில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, நாடி வாசிப்பது அடியேன் அல்ல. திரு.ஜானகிராமன் அவர்கள்.

      அவர் தற்போது அகத்தியரின் உத்தரவின் பேரில், கோவில் தரிசனம், புண்ணிய தல யாத்திரையில் உள்ளார்.

      அகத்தியரிடம் வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

      அக்னிலிங்கம்!

      Delete