​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 28 September 2017

சித்தன் அருள் - 725 - அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர் - 02-11-2017


[ அருள் சுகம் தந்த சுந்தரகாண்டம் தொகுப்பு அடுத்த வாரம் தொடரும்.]

 ​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அந்த நாள் >> இந்த வருடம் என்கிற தலைப்பில் முன்னரே, பல புண்ணிய தலங்களில், புண்ணிய திதி, தியதி போன்றவை சித்தன் அருளில் குறிப்பிடப்பட்டிருந்ததை படித்திருப்பீர்கள். அதில் ஒரு சிலர், அந்த நாட்களில் அந்தந்த இடங்களுக்கு சென்று அருள் பெற்றதும் அடியேன் அறிந்தேன். இனி, இந்த வருடத்தில், கடைசியாக வருவது

கோடகநல்லூர்.

ஆம்! 02-11-2017, வியாழக்கிழமை அன்று வருகிறது. அந்த தினத்தை அகத்தியர் அருள், வழி நடத்துதலுடன் நம்மால் இயன்ற அளவு, சிறப்பாக நடத்திட ஒரு சில அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளனர். திருக்கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டபொழுது, அதையும் அளித்து, வேண்டிக்கொண்டபடி, அன்றைய தினம் காலை 10.30க்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) பூசைகள் செய்யலாம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர் என்கிற விவரத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தூரத்திலிருந்து வரும் அகத்தியர் அடியவர்களும், அன்றைய தினம் நலமாக வந்து சேர்ந்து, நதியில் நீராடி பின்னர், திருமஞ்சன பூசைகளை பார்த்து பெருமாளின் அருளை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் காலை 10.30 என்கிற நேரம் குறிக்கப்பட்டுள்ளது. அன்று வியாழக்கிழமை ஆக இருப்பதால், அது ஒரு முகூர்த்த நேரம் கூட. எல்லாம் அகத்தியர் அருளால் அமைந்துள்ளது. அந்த நாளின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள, இறைவன், அகத்தியர் அருளை பெற, அன்றைய தினத்தை பற்றி  அகத்தியர் அருளியதை (சித்தன் அருளில் முன்னரே திரு.கார்த்திகேயன் அவர்கள் தந்ததை) கீழே தருகிறேன்.

 1. 6000ம் வருடம் இந்த கோவில் இருக்கும் இடத்தை அகத்திய பெருமான் சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.
 2. தாமிரபரணியை உருவாக்கிய பெருமை அகத்தியரைச் சேரும். அதில் அன்றைய தினம் நீராடி, கங்கை, நதி தேவியானவள், தன் பாபத்தை கரைத்துக் கொண்டதாக அகத்தியர் கூறுகிறார். கங்கை புனிதநீராடிய இடங்களில், கோடகநல்லூரும் ஒன்று.
 3. 1800 வருடங்களுக்கு முன் இங்கு ஒரு நந்தவனம் அமைத்து, அகத்தியர் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த புண்ணிய நாள். அவர் வார்த்தைபடி "அகத்தியனே இந்த பெருமாளுக்கு, அங்கமெல்லாம் பால் அபிஷேகம், 14 வகை அபிஷேகம் செய்து குளிரவைத்த அற்புதமான நாள் இதே நாள் தான்!"
 4. விஷத்தை விஷத்தால் எடுக்கவேண்டும் என்கிற பழ மொழியையும் தாண்டி, விஷத்தை "கருடன்" முறித்தார் என்கிற நிகழ்ச்சி இங்குதான் நடந்திருக்கிறது. அது நடந்த நாளும் இதுவே.
 5. பச்சை என்பது பசுமை. பச்சை என்பதற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. ஆக, யார் யார் பச்சைக்கல் நவரத்னத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் கெடாது, வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான், பச்சை தான் புதன், புதன் தான் விஷ்ணு. ஆகவே பச்சைக்கும், விஷ்ணுவுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. அதை எல்லாம் எடுத்துக்காட்டிய அற்புதமான நாள் இது தான்.
 6. 1547 ஆண்டுகளுக்கு முன் கருடப் பெருமான் விஸ்வரூபம் எடுத்த இடம்.  ஆகவேதான் கருட ஆழ்வாருக்கு இங்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.
 7. ஐப்பசி மாதம், கார்த்திகை மாதம், ஆக இரண்டு மாதங்கள் அத்தனை தெய்வங்களும் இங்கு கூடி, ஒன்றாக ஆனந்தப்பட்டு, அழகாக சமைத்த அமுதத்தை ஒரு கவளம் உட்கொண்டு ஆனந்தப்பட்ட அற்புதமான நாள் இது.
 8. இந்த நதிக் கரை ஓரத்தில் அத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து அந்த ஆடி தோறும், அந்த ஆடி அமாவாசையோ, ஆடி பெருக்கன்றோ, கை ஊட்டி சாப்பிடுவார்களே, கை பிசைந்து சாப்பிடுவார்களே, அந்தப் பழக்கம் ஏற்பட்ட நாளும், இதே நாள் தான்.
 9. புனிதமான இடம் கார்கோடக நல்லூர். கார்கோடகம் என்றால் விஷம். அந்த கார்கோடகனையே நல்லவனாக மாற்றிய நாளும் இதே நாள் தான்.
 10. ஏற்கனவே, முன் ஜென்மத்து தோஷங்கள் இருந்தால், அதன் காரணமாக மனதாலோ, உடலாலோ வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால், குடும்பம் செழிக்காமல் இருந்தால், வாழ்க்கையில் நொந்து நூலாகிக்கொண்டிருந்தால், அத்தனை வியாதிகளும் தோலிலோ, உடலிலோ இருந்தால், அவை அத்தனையும் போகக்கூடிய நல்ல நாள் இந்த நாள்.
 11. "4000 ஆண்டுகளாக அகத்தியன் தவமிருந்த காலம். பல பிரளயங்களை கண்டவன் நான். இன்று வரை பிரளயம் கண்டவர்கள் இரண்டே இரண்டு பேர்கள் தான். ஒருவர் காக புசுண்டர், மற்றொருவர் அகத்தியர். அகத்தியனுக்கு சர்வ வல்லமை உண்டடா. அகத்தியன் ஏதோ சிவ மைந்தன் என்று, சிவனை சேர்ந்தவன் என்றோ மட்டும் எண்ணக் கூடாது. முருகப்பெருமான் அவதாரம் என் குருவாக என்றாலும் கூட, அவரை குருவாக நானாக ஏற்றுக்கொண்டேன். சிவபெருமான் அவரின் 75 விழுக்காடு அதிகாரத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார். விஷ்ணுவோ, கேட்கவே வேண்டாம். பஞ்சணையில் அமர்ந்தபடி, பாற்கடலில் படுத்தபடியே, மஹாலக்ஷ்மியின் கையை பிடித்து தன் கை மீது வைத்து, பால் ஊற்றி அத்தனை பொறுப்பையும் எனக்கு கொடுத்து விட்டிருக்கிறார். விஷ்ணு என்ன கார்யம் செய்வாரோ, அதை என்னால் செய்ய முடியும். ஏன் என்றால் அவரிடமிருந்து முழ பொறுப்பையும் நான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்த நல்ல நாளும் இந்த நாள்தாண்டா. எத்தனை காரணங்கள் இங்கு நடந்திருக்கிறது. எத்தனை அதிசயங்கள் இந்த மண்ணில் நடந்திருக்கிறது. இவையெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியுமாடா. வரலாறு தெரியாமல் பேசுவதை நான் பார்க்கிறேன். வரலாற்றை 4000 ஆண்டுகளாக கண்டவன் நான். அதனால் தான் சொல்கிறேன், விஷ்ணு, மகாலக்ஷ்மியின் கையை பிடித்து,பாற்கடலில் உறையும் அமுதத்தை ஊற்றி தாரை வார்த்து "எனது சகல விதமான சௌபாக்கியங்களையும், நீ யாருக்கு விரும்புகிறாயோ எப்படிவேண்டுமானாலும் கொடு.  நான் ஒருபோதும் உன் விஷயத்தில் தலையிடமாட்டேன். நீ எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்" என்று சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்." அந்த நாளும் இந்த நாள்.
 12. பிரம்மாவும் சரஸ்வதியும் ஓடோடி வந்து, "எங்களின் சார்பாக, மண்ணில் வாழும் மனிதர்களுக்கு ஏதேனும் கல்வியில் மோசமாகவோ, ஆரோக்கியத்தில் குறைவாக இருந்தால், ஆக இன்னும் பல விதிகளில் ஏதேனும் தவறு செய்திருந்தால், மூளை வளர்ச்சி குறைகள் இருந்தால், உடல் நடக்க முடியாமல், கை கால் விளங்காமல் இருந்தால், அது மட்டுமல்ல வாய் பேசாமல் இருந்தால், கண் பார்வை இல்லாமல் இருந்தால், இது போல் அங்க அவயவங்கள் இருந்து பிரயோசனம் இன்றி இருந்தால், அவர்களுகெல்லாம் எங்கள் சார்பாக, நான் படைத்தவன், படைத்ததற்கு காரணம் உண்டு.ஏன் அப்படி படைத்தேன் என்று யாரும் கேட்க முடியாது. ஆனால் என்னுடைய படைப்பின் ரகசியத்தை எல்லாம் உனக்கு தருகிறேன். நீ விரும்பினால் அவர்களின் தலை விதியை மாற்று" என்று சொன்ன நல்ல நாளும் இந்நாள் தாண்டா. ஆகவே எவ்வளவு பெரிய நல்ல சம்பவங்கள் இந்த பூமியில் நடை பெற்று இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்."
 13. "இந்த சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் அருமையான இடம். அவ்வளவு தெய்வ அம்சம் பொருந்திய இடம். தெய்வங்கள் நடமாடிய இடம். இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது. 
 14. ஒரு சமயத்தில்,ஆஞ்சநேயர் வந்து ராமபிரானோடு இந்த தாமிரபரணி நதிக்கரையில் நீராடி, அமர்ந்து, மனம் விட்டு பேசி, நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தமாக இருந்த இடம்.
 15. அகத்தியர் ஆசிர்வதித்த பொழுது கூறலானார். " எல்லா தெய்வங்களும், எல்லா மனிதர்களும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் யார் யார் அகத்தியனை வணங்கி வந்தார்களோ, எவர் எவர், இந்த பச்சை வண்ணனை வணங்கி சேவை செய்தார்களோ, அவர்களுக்குத்தாண்டா இந்த கோடகநல்லூர்ருக்கு அகத்தியன் வரவேற்று, அவர்கள் செய்த பாபங்களில் 33 விழுக்காடுகளை விலக்கியிருக்கிறேன். ஏற்கனவே புண்ணியத்தையும் தந்திருக்கிறேன். இப்பொழுது கடைசியாக, அவர்கள் செய்த பாபங்கள், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, கோபத்திலோ, ஆத்திரத்திலோ செய்த பாபங்கள், விதியின் செயலால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். மனிதர்கள் தானே, சற்று நிறம் மாறியிருப்பார்கள். குணம் மாறியிருப்பார்கள். வாக்கில், நாக்கில் நரம்பில்லை. எது வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். புண்பட நடந்து கொண்டு இருக்கலாம். ஆனால் அது அத்தனையும் தாண்டி இவர்களுக்கு, இன்றைய தினம் மிகப்பெரிய புண்ணியத்தை, 33 சதவிகித புண்ணியத்தை என் அருமை தாமிரபரணி நதியே அவள் சார்பாக அவர்களுக்கு வழங்குகிறாள். அந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். தாமிரபரணி நதி எப்படிப்பட்ட  நதி என்று சொல்லியிருக்கிறேன், கங்கையின் பாபம் போன நதி. அவளே தன் கைப்பட சொல்லுகிறாள், "என்னால் ஆனதை இங்குள்ள அனைவருக்கும் 33 விழுக்காடுகள் தருகிறேன்". இன்று முதல் நீ எடுத்துப்பார். உதிரத்தை கூட எடுத்து விஞ்சான ரீதியில் சோதனை செய்து பார். அங்கொரு வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடம் தான் இந்த தாமிரபரணி நதிக்கரை. ஆசியோடு உங்களுக்கு கொடுத்த புண்ணியம். அந்த புண்ணியத்தை வாங்கிக்கொள். இன்று முதல் இங்குள்ள அனைவருக்கும் எல்லா க்ஷேமமும் கிடைக்கட்டும். நல்லதொரு வாழ்க்கை அமையட்டும். கடந்தகால வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு, ஒரு புதிய வாழ்க்கை தொடங்கட்டும், என்று இந்த கோடகநல்லூர் விஷ்ணுவின் சார்பில் ஆசி கூறுகிறேன்."
 16. அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
இப்படிப்பட்ட கோடகநல்லூர் புண்ணிய பூமியில், அந்த புண்ணிய திதி 02-11-2017 வியாழக்கிழமை அன்று வருகிறது.

இதை படிக்கும் அகத்தியர் அடியவர் அனைவரும், அன்றைய தினம் கோடகநல்லூர் சென்று, நதியில் நீராடி, இறைவனை வணங்கி, திருமஞ்சன சேவையில் பங்கு கொண்டு, இறைவன், சித்தர்கள் அருள் பெற்று க்ஷேமமாக வாழ்ந்திட வேண்டுகிறேன்.

கோடகநல்லூர் செல்லும் வழி - திருநெல்வேலியிலிருந்து சேரன்மாதேவி பாதையில், நடுக்கல்லூரில் இறங்கி 1 1/2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அனைவரும் சென்று, அருள் பெறுக!

அக்னிலிங்கம்!

Friday, 22 September 2017

சித்தன் அருள் - 724 - ஒரு வேண்டுகோள்!


ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் வலைப்பூவிலிருந்து ஒரு வேண்டுகோள்!

நம் பாரத பூமியிலே எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. தற்போது "சித்தன் அருள்" இங்கு தெய்வத் தமிழில், ஆங்கிலத்தில், மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. அகத்தியர் நமக்கு காட்டித்தந்த பாதை மிக விசாலமானது. ஏன் அதை பிற மொழிகளிலும் வெளியிடக்கூடாது என்ற அவாவில், எனக்குத் தெரிந்த மலையாள மொழியை தேர்ந்தெடுத்த பொழுது, தமிழ் மட்டும்தான் உனக்கு, மலையாள மொழியில் பகிரந்திட அனுமதியில்லை என்று வந்தது. சரி என்று விட்டுவிட்டேன். 

ஒரு சில காலத்திற்குப் பின், மலையாள மொழி அறிந்த இன்னொரு அகத்தியர் அடியவருக்கு அந்த வாய்ப்பை அகத்தியப்  பெருமான் கொடுக்க, இன்று அந்த வலைப்பூ நன்றாக வளர்ந்து வருகிறது. அவரும், அகத்தியருக்கு, மிகப் பெரிய சேவையை, மனம் விரும்பி செய்து வருகிறார்.

இதே போல், பாரத நாட்டில் உள்ள வேறு மொழி அறிந்த அகத்தியர் அடியவர்கள் இங்கு யாரேனும் இருந்து, விருப்பப்பட்டு, சித்தன் அருளை மொழி பெயர்த்து வெளியிட விரும்பினால், அடியேனை agnilingamarunachalam@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியிடுபவருக்கென ஒரு சில விதி முறைகளை அகத்தியப் பெருமான் விதித்ததை தனிப்பட்ட முறையில் தெரிவிக்கிறேன்.

அகத்தியருக்கு சேவை செய்ய கிடைத்த இந்த அரிய வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தொடர்பு கொள்பவர்கள், தயவுசெய்து தங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண்ணுடன், எந்த மொழியில் வெளியிட விரும்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்கவும். எந்தக் காரணம் கொண்டும், அவர்களின் சுய தகவல் இங்கு வெளியிடப்பட மாட்டாது/பகிரப்படமாட்டாது  என்பதை உறுதி கூறுகிறேன்.

அக்னிலிங்கம்!

   

Thursday, 21 September 2017

சித்தன் அருள் - 723 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 7


​​அடுத்த வார வியாழக்கிழமை, அதிகாலையில், வகுப்பு தொடர்ந்தது, அகத்தியர் கூறலானார்.

"பிறர் துன்பப்படுகிற சூழ்நிலைகளை, அவர்கள், அதை கடந்து வந்த பின்னும், ஒருவன் விரிவாக நினைக்கிறான் என்றால், அதே சூழ்நிலைகளில் அவன் இருந்து கொண்டு தானும் சிரமப்பட்டு, பிறரையும் (அதில் தொடர்பு கொண்டவர்களையும்) மறுபடியும் வருத்தத்திற்குள்ளாக்குகிறான் என்று அர்த்தம். ஆனால் கம்பனோ, சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பத்தை மிக மிக சுருக்கி எட்டு ஸ்லோகங்களில் முடித்துவிட்டான். ஆம்! அவனால், சீதை துன்பப்படுகிற சூழ்நிலையை பொறுக்க முடியவில்லை. சீதையும் மறுபடியும் துன்பத்திற்குள்ளாக்குகிறோம் என்று நினைத்த மாகா புருஷன். அவன் எழுதிய காவியம், மென்மைக்கு சான்று. இதுபோல் யாரும் எழுதவில்லை" என்று ஒரு வித்யாசமான கருத்தை கூறி தொடர்ந்தார்.

"எத்தனை துன்பம் வரினும், நல்லவர்கள் இருக்கும் வரை, ஒருவர் வாழ்வில், இறைவனே, நம்பிக்கை விளக்கேற்ற ஒருவரை அனுப்புவார். அப்படி வந்தவர் கூறும் வார்த்தைகளை மனதிற்கொண்டு, அந்த ஒருவன்/ஒருவள் தன்னை சாந்தப்படுத்திக்கொண்டு, அமைதியாக இறையிடம் தன் மனதை கொடுத்து வாழ்ந்துவிட்டால், எப்படிப்பட்ட புயல், வாழ்க்கையில் வந்தாலும், அது பாதிக்காமல், அமைதியாக சென்று கொண்டிருக்கலாம். அதற்கு, மிக மிக பொறுமை வேண்டும். அது, இந்த கால மனிதனுக்கு இல்லாததே, கலி தன் விளையாட்டை விளையாட, எளிதாக்குகிறது, மேலும் பிரச்சினைகளை வலுவேற்றுகிறது.  இறைவனிடம் தன் மனதை கொடுத்து, அத்தனை விளையாட்டையும் அவர் விளையாட வைப்பதற்காகத்தான், "ஒரு மனிதன் தன் மனதை தவிர, இறைவனுக்கு கொடுப்பதற்கு என்று இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை" என்று அடிக்கடி கூறி வருகிறோம்." என்றார்.

"இருபத்தி ஒன்பதாவது சர்கத்தில், எட்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நல்ல சகுனங்கள் எவை, எவை என்பதை மனிதனுக்கு உணர்த்தும்."

"தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை நீங்க, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர, குடும்பத்தில் ஏற்படும் மற்ற அனைத்து கஷ்டங்கள், மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகள் சுகம் பெற, அத்தனை பேர்களும் இந்த சுந்தரகாண்டத்திலுள்ள 30வது சர்க்கத்தை தினமும் மூன்று தடவை, அனுமனை நினைத்துக் காலையில் பாராயணம் செய்து வந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சந்திர மகா தசையில் ராகு, கேது புக்தி நடப்பவர்கள், ராகு மகா தசையில் சந்திர புக்தி, சூரிய புக்தி நடப்பவர்கள், கேது தசையில் சந்திரன், செவ்வாய், சூரிய  புக்தி நடப்பவர்கள், ஆகியோருக்கு இந்த முப்பதாவது சரகம் நல்ல உயரிய வாழ்வுதனை அள்ளிக்கொடுக்கும்." என்றார்.

"முப்பத்தி ஒன்று முதல், முப்பத்தி ஐந்தாவது சர்கம் வரையில் உள்ள ஸ்லோகங்களை தினமும் பாராயணம் செய்வதால், கீழ் காணும் சிரமங்கள் அனைவருக்கும் விலகும்.

கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்கிறவர்கள் அனுமனின் ஸ்ரீராம சரிதத்தை தினம் படிப்பது நன்று. வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள், வாழ்க்கையில் நம்பிக்கை குறைந்தது போகிறவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் அனைவரும், இந்த சர்கங்களை படித்துக் கொண்டே வந்தால் போதும், துன்பம் அத்தனையும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும்." என்றார்.

"நமோஸ்து வாசஸ்பதயே ஸ்வஜ்ரிணே ஸ்வயம்புவே
சைவ ஹூதாஸனாயச|
தானே சோக்தம் யதிதம் மாமக்ரோத வனெள
கஸா தச்ச ததாஸ்து நான்யதா!!

என்கிற இந்த ஸ்லோகத்தை யார் சொன்னாலும்,அநேக நன்மைகளை பெற்று வாழ்வார்கள். சுந்தரகாண்டத்தில் சொல்லப்பட்டுள்ள மிக மிக முக்கியமான ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று." என்றார்.

"கஷ்டங்கள் தொடர்ந்து பெறுகின்ற அனைத்து மக்களும், ஆபத்தில் துடிப்பவர்களும், வியாதியினால் போராடுபவர்களும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பவர்களும், அஷ்டம குரு, அஷ்டம கேது, ராகு நடந்து கொண்டிருப்பவர்களும் , திருமணமாகாத ஆண், பெண் இருபாலர்களும் 35, 36, 37, 38 ஆவது சர்கங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றும், கஷ்டங்களை விலக்கி வைத்துவிடும்! சௌபாக்கியங்களை அளிக்கும். இது ஒரு மிக மிக முக்கியமான சௌபாக்கிய பகுதியாகும்" என்று உரைத்தார்.

"மனம் நொந்துபோன மனிதர்களுக்கு முப்பத்தி ஒன்பதாவது சர்கத்தில் உள்ள 53 ஸ்லோகங்கள், ஒரு வரப்பிரசாதம்."

"பயத்தினால் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், தன்  பலத்தை தானே அறிந்து கொள்ளாதவர்களுக்கும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் குரு, கேது, சனி இருந்து அதற்குரிய மகாதசையோ, புக்தியோ, அந்தரமோ நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற துர்தேவதைகளால் திடீரென்று பீடிக்கப்பட்டவர்களுக்கும், தோஷங்கள் அனைத்தும் உடனடியாக மறையவும், சந்தோஷங்கள் அதிகரிக்கவும், காவல்துறை, ஜெயில் பயம் விலகவும், முப்பத்தி ஒன்பது முதல் நாற்பத்தி ரெண்டு வரையில் உள்ள சர்கங்களில் உள்ள அனைத்து ஸ்லோகங்களையும், மனதிற்குள் தினம் பாராயணம் செய்து வரலாம். அத்தனை சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் இவை" எனக்கூறி அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டார்.

நானும், நாடியை ராமர் பாதத்தில் வைத்துவிட்டு, த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள் ................ தொடரும்!

Thursday, 14 September 2017

சித்தன் அருள் - 722 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 6


​​ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அடுத்தவார வியாழக்கிழமை வந்தது. காலையில் இருந்தே இருப்புக்கொள்ளவில்லை. போனவாரம் வகுப்பை முடித்து நாடியை ராமர் பாதத்தில் வைத்த பொழுது, துளசி மாலை அவர் கழுத்திலிருந்து கழன்று நாடியின் மேல் விழுந்ததை என்னால் மறக்கவே முடியவில்லை. அதை ஒரு நல்ல சகுனமாக மனம் பார்த்ததினால், என் குருநாதர் அகத்தியருக்கு கிடைத்த பெருமையாகத்தான் உணர்ந்தேன். ஸ்ரீராமரே அகத்தியர் அருளியதை வாழ்த்தினார் என்றுதான் தோன்றியது. அப்படியானால் எப்படிப்பட்ட பெருமையை அகத்தியப் பெருமான் பெற்றிருக்கிறார், அதில் ஒரு சிறிதளவு சேவையை ராமருக்கு அடியேனும் செய்துள்ளேன் என்பதில், என் மனம் மிகுந்த நிறைவு பெற்றது.

மூத்தோனையும், அனுமனையும் வணங்கி பூஜை அறையில் அமர்ந்து அகத்தியரை த்யானித்துவிட்டு, நாடியை திறந்து பார்த்தால், அகத்தியப் பெருமானின் வார்த்தைகள், மிகுந்த சந்தோஷத்துடன், வந்தது. எல்லாம் ஸ்ரீராமர் அருளிய செயல் என்று நினைத்துக் கொண்டேன்.

அகத்தியர் கூறலானார்.

"இறைவன் அருளால், இறை அருளியதை தருகிற வேலை மட்டும்தான் என்னுடையது. அதன் கூட, பிறகு நடப்பதெல்லாம் இறைவன் மனம் கனிந்துவிட்டான், அருளுகிறான் என அர்த்தம் கொள்ளவேண்டும். அதுதான் உண்மையும் கூட. சாதாரண, சின்ன சின்ன விஷயங்களில் கூட மனிதருக்கு இறைவன் பல முறை அருளியுள்ளான். ஆனால் அதை புரிந்து கொள்ளும் தன்மை, அந்த மனிதனுக்கு ஏற்படுவதில்லை. காரணம், அவன் எதிர்பார்ப்பு, லோகாய, பௌதீக விஷயங்களில் சார்ந்துள்ளது. ஒருமுறை இறை யோசித்து அருளியது, பிறகு ஒருநாள், ஒரு நல்ல நிகழ்ச்சி அந்த மனிதனுக்கு நடக்கும் வரை, காத்திருந்து கூட நிற்கும். அவனது தர்மத்துக்கு உட்பட்ட விஷயம் நிறைவேறியதும், அது அவனை விட்டு விலகிவிடும். இந்த அருள் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரியவர்கள் "எப்பொழுதும் இறைவனுடன் இரு, எப்பொழுதும் தர்மம் செய், எப்பொழுதும் புண்ணிய ஸ்தல வழிபாடு செய், எப்பொழுதும் பூசை செய், எப்பொழுதும் பிற ஆத்மாக்களிடம், மனிதராயினும், பிற உயிர்களாயினும், அவைகளும் நம்மைப்போல் தன் கர்மாவை, உருவெடுத்து வந்து அனுபவிக்க பிறந்திருக்கிறார்கள், என்ற எண்ணத்துடன், கனிவோடு இரு" என்று கூறினார்கள். ஆனால் மனிதனோ, தான், தன் குடும்பம் என்று மட்டும் இருக்கிற, அந்த மனநிலைதான் அவனை அத்தனை பிரச்சினைகளையும் எதிர் கொள்ள செய்கிறது. அவனும் கூடிய விரைவில் தளர்ந்து போய், இறை வழியை கைவிட்டு, சாதாரண மிருக நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறான். ஒருவனுக்கு அல்லது ஒருவளுக்கு உதவி செய்வதினால் யாரும் யார் கர்மாவையும் மாற்றிவிட முடியாதுதான். கர்மாவை/விதியை பலமிழக்க செய்ய இறைவன் ஒருவனால் தான் முடியும். பிறகு ஏன் உதவி என்றால், உதவி செய்கிறவன் கர்மாவில் விதிக்கப்பட்டுள்ள "உதவி செய்" என்கிற இறைவனின் உத்தரவு அங்கு நிறைவேற்றப்படும். அதன் வழி உதவி பெருகிறவனும் சற்று சுலபமாக மூச்சு விட்டுக்கொண்டு தன் கர்மாவை கடந்து போவான். இங்கு ஒரு விதத்தில் பார்த்தால், கர்ம பரிவர்த்தனை நடக்கிறது என்று மனிதர்களால் உணர முடியும். சித்தர்களுக்கும், இறைவனுக்கும் மட்டும் தெரியும், இங்கு கர்ம பரிபாலனமும் நடக்கிறது."

இதைக் கேட்டதும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

"என்ன இது! ஸ்ரீ ராம சரிதையை விட்டு வெளியே செல்கிறோமோ!" என்று.

அதற்கும் அகத்தியர் பதிலளித்தார்.

"உன் கேள்வி நியாயமானது. இருந்தும் நீதியை, நல்லவற்றை திருப்பி திருப்பி கூறினால், ஒரு முறைக்கு இருமுறை கூறினால், சிலவேளை மனிதன் விழித்துக் கொள்வானே என்றும், எங்கள் வேலை இன்னும் சுலபமாக முடியுமே என்றும் நினைத்துத்தான் இதைக் கூறினேன். சரி விஷயத்துக்கு வருகிறேன்." என்று கூறி ஸ்ரீராம சரிதைக்குள் புகுந்தார்.

"அஞ்சனை மைந்தனை ஸ்ரீராமபிரான் வெகுவாக நம்பினார். இதை அனுமனும் உணர்ந்திருந்தார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இருக்கவேண்டும் என்று அனுமனும் தன் சக்தியை உணர்ந்து செயல் பட்டார். அத்தனை கவனத்துடன், அனுமன் செயல்பட்ட விதம், அவர் செய்த லீலைகள், தூதுவனுக்குரிய குணங்கள், என்னால் முடியும் என்கிற நம்பிக்கை, ஸ்ரீராம சேவையே என் பிறப்பின் அர்த்தம், ஸ்ரீராம தாசத்துவம், அவர் செய்த ஜபம், த்யானம் போன்றவை, பின்னால் முனிவர்களால் மந்திர உருவில் போற்றப்பட்ட பொழுது, இறை கனிந்து தன் அருளை அந்த மந்திரத்திற்குள் புகுத்தி, இன்றும் மனித இனம் அதை பாராயணம் செய்தால் பலனை, இறை அருளை பெற்றுக் கொள்ளட்டும் என்று தீர்மானித்ததை, அடியேனும் கண்கூடாக பார்த்தேன். ஒவ்வொரு மிக சிறந்த நிகழ்ச்சிக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். சுந்தரகாண்டம் அனுமனின் லீலைகளாயினும், இன்றும் பலம் மிகுந்து, அருள் நிறைந்த, சிறந்த பலனளிக்க கூடிய ஒரு காண்டமாக இருக்க காரணமே, அதனுள் உறைந்திருக்கும், ஸ்ரீராமனின் ஆசிர்வாதம்தான். இது மட்டும் மனிதனுக்கு புரிந்தால் போதும், அவன் தன் வாழ்க்கையை நல்ல பாதையை நோக்கி திருப்பி விடலாம் ."

"மனிதன் முயற்சி செய்யும் பொழுது இடையூறு வரத்தான் செய்யும். அதையும் தாண்டி செல்கிற மன தைரியம் அவனுக்கு வேண்டும். சுந்தரகாண்டத்தின் பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று சர்கங்களில் உள்ள 195 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு, அனுமனே அதை அருளுவார், அனைத்து தடைகளும் நீங்கிவிடும், என்பது சத்தியம்." 

"ராகு, சனி, கேது, குரு" ஆகிய நான்கு கிரகங்களும் அஷ்டமத்தில் இருந்து ஆட்டிவைக்கும் பொழுது, சங்கடங்களையும், மனக்கலக்கத்தையும், எப்பேர்பட்டவர்களும் சந்திக்க வேண்டிவரும். அப்படிப்பட்ட அத்தனை பேர்களும், வேலைக்கு முயற்சி செய்யும் இளைஞ்சர்கள், திருமணம் இன்னும் நடக்கவில்லையே என்று மனதிற்குள் குமரிக்கொண்டிருக்கும் யுவதிகள், பணத்தட்டுப்பாடு கொண்டு எப்படி வாழப் போகிறேன் என்று துடி துடிக்கும் சம்சாரிகள், அத்தனை பேர்களும் கண்டிப்பாக இந்த சுந்தர காண்டத்திலுள்ள பதினான்கு சர்க்கங்களையும் படித்து வந்தால் மிகப் பெரிய எதிர்காலம் சீக்கிரமே கிடைக்கும், அதையும் அனுமனே தருவார், இது நிச்சயம்!" என்று அருள் வாக்கு தந்தார் அகத்தியப் பெருமான்.

எனக்கென்னவோ "சும்மாவேனும், தேனீ கூட்டை அசைத்துப்பார்ப்போமே" என்று ஆசைப்பட, இப்படி அமுதமாக, வாழ்க்கை செம்மைப்பட, அகத்தியர் அருளுகிறாரே, என்று ஒரே ஆச்சரியம். 

"பதிநான்காவது சர்க்கத்தை தினமும் பாராயணம் பண்ணி, ஒரு மனிதன் தன் பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டால், இறை அருள், எந்த காரியத்தையும் சாதிக்க வைக்கும்.

"ஜாதக ரீதியாக தொட்டதெல்லாம் தடங்கல் ஆகிக்கொண்டிருப்பவர்களும், சுபகாரியமான திருமணம், சீமந்தம் நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தினர்களும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க துடிப்பவர்களும், அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்களும், ராகு, கேது தோஷங்களில் பீடிக்கப்பட்டவர்களும், சனி மகா தசையில் ராகு, கேது புத்தி நடப்பவர்களும் வறுமையில் வாடுபவர்களும், இந்த சுந்தரகாண்டத்தின் பதினெட்டாவது சர்க்கத்திலுள்ள ஸ்லோகங்களை விடாது படித்து வந்தால், அனைத்து சிரமங்களும், அனுமன் அருளினால் விலகும்" என்றார்.

இருபத்து மூன்று முதல் இருபத்தி ஆறாவது வரையுள்ள நான்கு சர்கங்களில், வால்மீகி பெண்மைக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், அதனால் அடைகிற துன்பங்களையும் விவரித்து கூறியுள்ளார். விவாகரத்து செய்ய நினைப்பவர்கள், கணவனை விட்டு பிரிந்து வாழ்பவர்கள், வெளியுலக வட்டாரத்தில் மற்ற சக நபர்களால் விரட்டப்படும் பெண்களுக்கும், தங்கள் ராசியில் ஏழாமிடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது உள்ள பெண்களுக்கும், அந்த களத்திர அஷ்டம ஸ்தானக் கொடுமையிலிருந்து நீங்க; ஆறாமிடத்து பாவம் பலமற்று செயல்பட இந்த நான்கு சர்கங்களையும், அப்படியே பட்டாபிஷேக சர்கத்தையும் படித்தால், துயரம் விலகும், கணவர் கிடைப்பார், இல்லற வாழ்க்கை மேலும் இனிமையாகும்" என்றார்.

அன்றைய வகுப்பை இத்துடன் முடித்துக் கொண்டு அகத்தியர் ஆசிர்வதித்து விடை பெற்றார். நானும் நாடியையும், குறிப்பெடுத்த புத்தகத்தையும் ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.

பின் எழுந்து, "ஓம் அகத்தீசாய நமஹ" என்று த்யானத்தில் ஆழ்ந்தேன்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Monday, 11 September 2017

சித்தன் அருள் - 721 - ஒரு அகத்தியர் அடியவரின் ஓதியப்பர் பிறந்தநாள் தரிசன அனுபவம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒரு அடியவர் "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவில், இந்த வருட ஓதியப்பர் பிறந்தநாள் ஓதிமலையில் எப்படி கொண்டாடப்பட்டது என்பதை இங்கே தெரிவிக்குமாறு கேட்டிருந்தார். அடியேனுக்கு இந்த முறை செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எப்படி செல்வது என்று கேட்டு தெரிந்துகொண்ட ஒரு அகத்தியர் அடியவர் தனது அனுபவத்தை எனக்கு தெரிவித்திருந்தார்.

அவர் அனுமதியுடன், இந்த வருட ஓதியப்பர் பிறந்தநாள் அனுபவத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். படித்து இன்புறுக. 

ஒம் அகத்திசாய நமஹ.....

ஒதிமலை பயணம் மிக சிறப்பாக அமைந்தது.   சனிக்கிழமை   ஆலயம் திறக்காது என்று பூசாரி கூறிவிட்டார். அதனால் ஞாயிற்றுக் கிழமை என்னுடன் நம்பிமலை வந்த நண்பருடன் பயணம் செய்தென். சுருக்கமாக என்னுடைய அனுபவங்களை பகிர்ந்த்து கொள்கிறேன். எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.

மலை ஏறி ஒரு மணி நெரம் கழித்து பூசாரி வந்தார். ஒதியப்பரை முதன் முதலாக தரிசிக்கப் போகிறேன் என்று மனதில்  சின்ன ஒரு படபடப்பு. 

பூசாரி வந்து சன்னதியை  திறந்து    திரையை விலக்கி அவருடைய முகத்தை சந்தன அலங்காரத்தில் காட்டியபோது அந்த அழகிய முகம்  என்னுள்  தெறித்து உடலில் பல பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது, என்பதே உண்மை. அதை உணர்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். அதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஒரு பத்து நிமிடங்கள் நான் நானாக இல்லை. அப்பப்பா.....இப்படி ஒரு கருணையும் அழகும் ததும்பும் முகம். 

அவர் முகத்தை கண்டதன் பிறகு மலை ஏறிய களைப்பு எங்கெ சென்றது என்று தெரியவில்லை. பூசாரி வருவதற்குள் வந்த அன்பர்கள் சிலர் ஆலயத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அபிஷேகம் ஆரம்பமாயிற்று. ஒவ்வொரு அபிஷெகத்தையும் மிகுந்த சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக் கொண்டது அவருடைய முகத்தில் புன்சிரிப்பில் தெரிந்தது. மேலும்  எனக்கு  அவருடைய  ஒவ்வொரு அபிஷேகத்தை பார்க்கும் பொழுது பழனி பாலதண்டாயுத சுவாமி உருவம் அவருடைய முகத்தில் தெரிந்தது.

அபிஷேகம் நடப்பது ஒதியப்பருக்கா இல்லை பழனி பாலதண்டாயுத சுவாமிக்கா என்று தெரியவில்லை. இது ஏன் என்னுள் தோன்றியது என்று தெரியவிலை. ஒரு 3 வினாடிகள் என் கண்கள் குளமாயின. என்னுடைய கோரிக்கைகளை அவர் காலடியில் சமர்ப்பித்து விட்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் சட்டென்று என்னுடைய மன நிலையில் ஒரு மாற்ற்ம் ஏற்பட்டதை உணர முடிந்தது. மனம் மிகவும் லேசாகி விட்டதை போன்ற உணர்வு. மிகவும் திருப்தியான ஒரு மன நிலை.  

எல்லாம் முடிந்து அலங்காரத்திற்காக திரை மூடப்பட்டது. அவருடைய தெறிக்க விடும் தரிசனத்திற்காக் காத்திருந்தென்.

திரை விலகி தீபாராதனை   ஒளியில் கோடி ஸூரியனின் பிராகசத்துடன் விபூதி அலங்காரத்தில் ஒதியப்பர் திவய தரிசனமும் அருளும் மிகுந்த அதிர்வலையுடன் கிடைத்தது. தலையாய சித்தன் அகத்தியருக்கு என்னுடைய நன்றியை அந்த சமயத்தில்  ஒதியப்பரிடம் சமர்பித்தேன். அவருடைய வலது பக்கத்தில் இருந்து பூக்கள் வாரி விழுந்தன. அவ்வளவு மகிழ்ச்சியுடன் அத்தனை அன்பர்களுக்கும் அவர் அருள் கிடைத்தது என்பதை உணர முடிந்த்தது.

அனைத்தும் முடிந்து பிறகு வேண்டுகோளுக்கு உத்தரவு கேட்கும் நேரம் வந்தது. பூசாரியிடம் கூறியபின் என்னுடைய கோரிக்கையை  ஏற்று, அவர் சன்னதி முன்  மேல் சட்டையின்றி மண்டியிட்டு நமஸ்கரித்து வேண்டுகோளை சமர்பிக்க சொன்னார். நான் என்னுடைய வேண்டுகோளை அவர் முன் சமர்ப்பித்து அவர் உத்தரவு கொடுத்தாரா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் பூசாரி அவர்கள், உங்களுக்கு  உத்தரவு கொடுத்துவிட்டார் என்று கூறினார். எனக்கு ஒரு சின்ன மனவருத்தம். அவர் உத்தரவு கொடுத்து நான் பார்க்கவில்லயே சுவாமி என்று பூசாரியிடம் கேட்டேன். உடனே அவர் ஒரு கையை தூக்கி காண்பித்து அருமையான முறையில் உங்களுக்கு உத்தரவு கொடுத்தார். நீங்கள் என்ன கோரிக்கையை அவரிடமும் வைத்தீர்கள் என்று கேட்டார். பொதுவாக யாரிடமும் அவர் அப்படிக் கேட்டதில்லை என்று தோன்றியது.

நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய ஒரு பாக்கியத்தை கூறினேன். உங்கள் கோரிக்கையை அவர் கூடிய விரைவில் நிறைவேற்றுவார். அடிக்கடி வந்து அவர் அருளை பெற்று செல்லுங்கள். பிறகு ஒதியப்பருக்கு அபிஷேகம் செய்ய என்ன செலவாகும் என்று பொதுவாக அவரிடம் கேட்டு தெரிந்தது கொன்டேன். 

மிகுந்த மன நிறைவுடன் ஒதியப்பர் சன்னதி முன்பு விளக்கேற்றி வழிபட்டு அவர் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து அடிக்கடி அவருடைய தரிசனம் பெற சந்தர்பத்தை அமைத்து தருமாறு வேண்டிக் கொண்டேன்.

பிறகு ஒதியப்பரை பிரிய மனமில்லாமல் அவரிடம் பிரியா விடை பெற்று அங்கிருந்து   கிளம்பினேன். பேருந்து பயணத்தில் இரவு முழுவதும் ஒதியப்பரின் அருள் ததும்பும் அந்த முகம் என் மனதை விட்டு நீங்கவில்லை. மறுநாள் அதிகாலை வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக அகத்தியப் பெருமானுக்கு என் மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொண்டேன். "உடலாலும் மனதாலும் எந்த தடங்கலும் இல்லாமல் நான் ஒதியப்பரை தரிக்க அருள் புரிய வேண்டும்" என்ற  என்னுடைய தினசரி வேண்டுதலை நல்லபடியாக நிறைவேற்றி வைத்துள்ளார். இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.

ஒதிமலை ஆண்டவா போற்றி..... ஒம் அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday, 7 September 2017

சித்தன் அருள் - 720 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 5


[வணக்கம் அடியவர்களே! இது வரை "சுகம் தரும் சுந்தரகாண்டம்" உருவான நிகழ்ச்சிகளை சொல்லி வந்திருந்தாலும், இந்த தொகுப்பு முதல் நம் அனைவரின் பிரச்சினைக்கும், இறைவன் உத்தரவால், அகத்தியப்பெருமான் எந்தெந்த ஸ்லோகங்களை கூறி வந்தால் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறலாம் என்று கூறியது, தெரிவிக்கப்படுகிறது. சற்று உள்வாங்கி படித்து, நடைமுறைப்படுத்தி, வாழ்க்கையில் நிம்மதியை தேடிக்கொள்ளுங்கள்.]

அகத்தியப் பெருமான் கூறலானார்.

"ஸ்ரீராம சரிதையை வால்மீகி ஏழு காண்டங்களாக விவரித்துள்ளார் எனினும், இறையே இந்த சுந்தரகாண்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நவகிரக தசை, திசா புக்தியில் சிரமப்படுகிறவர்கள், அப்படிப்பட்ட தாங்க முடியாத பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடியை சேர, இறைவனே காட்டிக்கொடுத்த மகா புண்ணிய வழி. கர்மாவுக்கு ஏற்றவாறு தண்டனையை இறைவனே கொடுத்தாலும், அதுவே மனம் விரும்பி திருந்தி வாழ நினைக்கும் மனிதர்களுக்கு, மாற்று வழியை காட்ட கால காலமாக யோசித்துக் கொண்டிருந்தது என்பது, சித்தர்களாகிய எங்களுக்கு இப்பொழுதுதான் புரிய வந்தது. இதை கைப்பற்றி, மனம் ஒன்றி, தன்னையே இறைவனுக்கு கொடுப்பவனுக்கு, விடுதலை நிச்சயம். நினைத்தது நிறைவேறும்." என்றார்.

"அனுமனை பெருமைப்படுத்தவும், சுந்தரகாண்டம் உருவானது. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில், இறைவனே மனித அவதாரம் எடுத்தால் எப்படிப்பட்ட கர்ம வினையையும் தாங்கித்தான் கடந்து வரவேண்டும் என்று உணர வைத்த இறைவன், தன் தாசனை பணிந்து, அவர் செய்த அரிய விஷயங்களை பாராயணம் செய்வதின் மூலம், மனித இனத்தின் பிரச்சினைகளை விலக்க, வழிகாட்டியது."

"எத்தனையோ பேர்கள் சீதையை தேடி பல திசைகளிலும் சென்ற பொழுது, அனுமனே, நிச்சயமாக நல்ல செய்தியை கொண்டு வருவான் என்று ராமனுக்கு தெரிந்திருந்தது. ஏன்? அனுமனின் தாச குணம், எதையும் தீர ஆராய்ந்து செயல்படுத்தும் குணம், இயற்கையாகவே அவருள் நிறைந்திருந்த தூதுவரின் திறமை, பெரியோரின் வாழ்த்துக்களை, ஆசிர்வாதத்தை, எப்பொழுதும் வேண்டிக்கொள்ளும் எண்ணம் போன்றவையே.  அனுமன் லங்காபுரிக்கு கிளம்பும் முன் கூட, சூரியன், இந்திரன், வாயு போன்றோரின் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தான் கிளம்பினார்."

"எந்த நல்ல காரியத்தை செய்யும் முன்னரும், செய்யும் பொழுதும் இறைவன், பெரியவர்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் வாழ்த்து மனிதருக்கு கண்டிப்பாக தேவை. அருளின்றி இவ்வுலகில் எதுவும் நன்று கூடாது. அதை மறந்ததின் விளைவுதான், இன்றைய மனித குலத்தின் நிலைக்கு காரணம். இதை புரிந்து கொள்பவர்கள், அதன்படி நடந்து கொள்பவர்களுக்கு, இந்த கலியுகத்திலும், இப்புவியிலேயே, குறைந்தது நிம்மதியை இறை அருளும். இறைவனுக்கு, தன்னைவிட, தன் அடியவர்களை காப்பாற்றுவதிலேயே கருத்து அதிகம். ஆதலால், இறைவனின் அடியவர்க்கு அடியவர்களாக இருந்து, இறைவன் செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களுக்கு, அந்த இறையே இறங்கி வந்து அவர்கள் தேவையை நிறைவேற்றும்."

"ஏழரைச் சனி ஆரம்பமானவர்களுக்கும், அஷ்டம சனியால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், சனி மகா தசையில் கேது புக்தியோ, கேது தசையில் சனி புக்தியோ நடப்பவர்களுக்கும், சுந்தரகாண்டத்தின் முதல் சர்க்கத்தை (அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்களை) தினம் பாராயணம் செய்தால், அந்த கஷ்டங்கள் நீங்கிவிடும். அவர்கள் மனதில் அச்சம் என்பதே இருக்காது" என உரைத்தார்.

'நேர்மையாக முயற்சி செய்தால் வெற்றி அடையலாம் என்றாலும், எந்த கிரகங்களினாலும் எந்த இடையூறு வந்தாலும் மனிதர்கள் அனைவரும் சுந்தரகாண்டத்திலுள்ள ஐந்து, ஆறு, ஏழாவது சர்க்கத்தை தினம் பாராயணம் பண்ணி வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இதற்காகவே எழுதப்பட்டது இந்த சர்கங்கள் என்பது, ஆன்றோர் வாக்கு".

"நம்பிக்கைதான் வாழ்க்கை எனினும், சுந்தரகாண்டனத்தின் ஒன்றுமுதல் ஒன்பது வரை உள்ள சரகத்தையும் விடாமல் தினம் படித்து வருபவர்களுக்கு, ராகு, கேது, சனி ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து நிரந்தர விடிவு கிடைக்கும். இது சாத்தியமான உண்மை" என்று அகத்தியர் உரைத்தார்.

நாடியில் வந்து அகத்தியப்பெருமான் பலருக்கும், பரிகார நிவர்த்தியாக நாக பிரதிஷ்டை எனக்கூறி, நாக/சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், ப்ரம்ம ஹத்தி தோஷம் என்றெல்லாம் கூறிய பொழுது, புரியாமல் இருந்த அத்தனை தோஷங்களும், மேற் சொன்ன சர்கங்களை தினம் வாசித்து வருவதால், நிவர்த்தியாகும் என்ற உண்மை புரிந்தது.

எதுவும் மறுகேள்வி கேட்காமல் அகத்திய பெருமான் கூறியதை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.

அதிகாலை நேரம். ஜன்னல் திறந்திருந்தால், மெலிதாக காற்று வீசியதை போல் உணர்ந்தேன். நல்ல நறுமணம், துளசி வாசனை, போன்றவை நான் அமர்ந்திருந்த அறையில் தோன்றியது. குறிப்பெடுப்பதிலேயே கவனமாக இருந்ததால், வாசனையை உணர சற்று தாமதமாகிவிட்டது.

எழுதுவதை நிறுத்திவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.

"இன்றய தினம் இது போதும். பின்னர் தொடரலாம்! ஆசிகள்!" என்று கூறி அகத்தியர் அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டார்.

நான் எழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். நாடியை, குறிப்பெடுத்த புத்தகத்தை, ராமர் பாதத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, கை கூப்பி அவரையே ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க, ராமர் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த துளசி மாலையின் முடிச்சு கழன்று, துளசி மாலை நாடியின் மேலே விழுந்தது.

அதை கண்ட என் மனம் சிலிர்த்துப் போனது என்று கூறவும் வேண்டுமோ. ஒரு நிமிடம் ஏதோ ஒரு பரவச உணர்வு உடல் முழுதும் பரவி நிற்க, என் கண்கள் குளமாயின.

"இது போதும்! இது போதும் இறைவா! உங்கள் ஆசிர்வாதம், இது புத்தகமாக வெளியிடப்படும் பொழுது, அதை வாசிக்கும் அனைவருடைய பிரச்சினைகளும் விலகி, அனைவருக்கும் அவரவர் வாழ்வில் இன்பம் பெற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டு பூசை அறையை விட்டு வெளியே வந்தேன்.

மனம் தானாக "ஓம் அகத்தீசாய நமஹ" என்று அழைத்து செல்ல, இன்னொரு அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

சித்தன் அருள்........... தொடரும்!