​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 27 June 2013

சித்தன் அருள் - 130

நல்ல எண்ணங்கள் தான் வாழ்க்கையை செம்மைப்படுத்தி நம்மை சுற்றி அரணாக நின்று காக்கும்.  தீய எண்ணங்கள், சிந்தனைகள், சந்தேகத்தை உருவாக்கி நிம்மதியையே கெடுத்து விடும்.  பலரும் இது போன்று நாடி படிக்க வந்து உட்கார்ந்த உடனேயே அகத்திய பெருமான் அவர்களை, மறைமுகமாகவோ, நேரடியாகவோ எச்சரித்து உடனேயே அனுப்பிவிடுவார். சிலரிடம், ஏதோ ஒரு காரணத்துக்காக கேள்வி மேல் கேள்வி கேட்டு விளையாடிவிட்டு, அவர்கள் திருந்துவார்கள் என்றால் நல் வழி காட்டுவார். அதன் படி நடந்து நல்லது செய்து வாழ்க்கையில் இழந்த சந்தோஷத்தை மீட்டு வாழ்ந்த ஒருவரின் நிகழ்ச்சியை பார்ப்போம்.    

நல்லதொரு பதவியில் இருப்பவர், அவர்.  ஆனால் அழுக்கு பேன்ட், மூன்று அல்லது நான்கு நாட்களாக துவைக்காத சட்டையைப் போட்டுக் கொண்டு எதையோ பறிகொடுத்தவர் போல் என்னிடம் வந்தார்.

"என்ன விஷயம்?"

"என் மனைவியைப் பற்றி கேட்க வேண்டும்".

"கேட்டால் போயிற்று.  எது விஷயமாக கேட்க வேண்டும் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" நிதானமாகக் கேட்டேன்.

"அவள் நடத்தையைப் பற்றி கேட்க வேண்டும்" என்று சொன்னதும் நான் வெல வெலத்துப் போனேன்.

ஏனெனில் வந்த நபருக்கு வயது குறைந்த பட்சம் ஐம்பதுக்கும் மேலிருக்கும்.  திருமணமாகி முப்பது ஆண்டு காலம் குடித்தனம் நடத்தியிருப்பார்.  அப்படியிருக்க எதற்காக இப்படியொரு சந்தேகம் என்பது ஒன்று.

இன்னொன்று, இதற்க்கெல்லாம் அகத்தியர் பதில் சொல்வாரா? மாட்டாரா? என்ற பயமும் வந்தது.  இதுவரை இப்படிப்பட்ட கேள்வியை யாரும் அகத்தியரிடம் கேட்டதில்லை.  நானும் பதில் சொன்னதில்லை.

நான் இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவருக்குப் பொறுமை இல்லை.  "நாடியில் இதற்கு பதில் கிடைக்குமா? இல்லையா?" என்று சற்று அதிகாரத்தோடு கேட்டார்.

எனக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு "நீங்கள் நினைப்பது போல் அகத்தியர் ஜோதிடர் அல்ல.  உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் அவருக்கு இல்லை.  நீங்கள் போகலாம்" என்றேன்.

இந்த பதிலை அவர் என்னிடமிருந்து எதிர் பார்க்கவில்லை.  ஒரு மாதிரியாகிவிட்டார்.  பிறகு குரலை தாழ்த்திக்கொண்டு "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன்.  தயவு செய்து அகத்தியரிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அடுத்த பீடிகையை வைத்தார்.

எனக்கு இது கேள்வி எரிச்சலை தந்தது.

"எவ்வளவு பணம் தருவீர்கள்?"

"5000"

"அவ்வளவுதானா?"

"10000"

"பரவயில்லையே.  உங்கள் மனைவியின் நடத்தையை பற்றிய கேள்விக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்கள்.  இந்த பணத்தை வைத்து அவருக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்":என்றேன்.

அவர் மவுனமானார்.

"இதற்கெல்லாம் அகத்தியரிடமிருந்து பதில் கிடைக்காது.  நீங்கள் வேறு இடத்தை நோக்கிச் செல்லுங்கள்.  பணத்தையோ அல்லது பதவியையோ வைத்து அகத்தியரிடமிருந்து அருள்வாக்கு வாங்க முடியாது" என்று கையெடுத்துக் கும்பிட்டேன்;  எப்படியேனும் அந்த நபர் இந்த இடத்தை விட்டு நகர்ந்தால் சரி என்ற எண்ணத்தோடு.

இருந்தாலும், அவர் நகர்வதாக தெரியவில்லை.

"சார்! நானும் எத்தனையோ நாடி ஜோதிடர்களை பார்த்து விட்டேன்.  பல வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன்.  பணம்தான் தண்ணீராக செலவழிகிறது.நிம்மதியான பதில் எங்கும் கிடைக்கவில்லை.  அதனால் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்".

"அதாவது உங்கள் மனைவி கற்புடையவள் என்று சொன்னால் அதை ஏற்க மாட்டீர்கள்.  நடத்தை கெட்டவள் என்று சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள் இல்லையா?"

"ஆமாம்?"

"இதிலென்ன சந்தோஷம் இருக்கிறது.  அப்படி விரும்பினால் அவளை விட்டு விலகி விட வேண்டியதுதானே"

"முடியாதே!"

"ஏன்?"

"கோடிக்கணக்கான பணம் - சொத்து அவளிடம் இருக்கிறது.  தொழில் நிமித்தம் நான் வெளியூரில் வேலை பார்க்கிறேன்.  வருஷத்திற்கு ஒன்று இரண்டு தடவைதான் வீட்டிற்குப் போகிறேன்" என்றார்.

இனியும் இவரிடம் பேசிப்பயனில்லை, அகத்தியரிடம் நேரடியாகக் கேட்டுவிடலாம் என்று எண்ணி நாடியைப் பிரித்தேன்.

"சில கட்டுப்பாடுகளை விதித்து அதற்கு உடன்பட்டுத்தான் இவனுக்கு கோடீஸ்வரியைத் திருமணம் செய்து கொடுத்தனர்.  அதற்கெல்லாம் தலையாட்டி விட்டு இன்றல்ல, நேற்றல்ல, முப்பது ஆண்டுகளாக தன மனைவி மீது சந்தேகப்பட்டு ஊர் ஊராக திரிகிறான்".

"அகத்தியனே உண்மையைச் சொன்னாலும் இவன் ஏற்க மாட்டான்.  இவனுக்குள்ள ஆசையெல்லாம் எல்லோரும் இவன் மனைவியைக் கெட்டவள் என்று சொல்ல வேண்டும் என்பதுதான்.  இதில் இவனுக்கு ஓர் அற்ப மகிழ்ச்சி.  இவனால் வேறு எதுவும் செய்ய இயலாது.  இவன் கேட்பதில் ஓர் நியாயம் இருக்கிறது.  இவன் மனைவி இவனைத் திருமணம் செய்து கொள்ளும் முன்பு, சூழ்நிலை காரணமாக தன நினைவு இல்லாத சமயத்தில் தவறு ஒன்று நிகழ்ந்திருக்கிறது.  இதனை அவளே தன வாயால் சொல்லியிருக்கிறாள்.

என்றைக்கு அவள் இந்த உண்மையைச் சொன்னாளோ அன்று முதல் இவன் நொந்து போனான். அன்றைக்கு ஏற்பட்ட சந்தேகம் இன்று வரை போகவில்லை.  இன்னும் சொல்லப் போனால் உனக்குப் பிறந்த முதல் குழந்தையைகூட நீ உன் குழந்தையாக எண்ணவில்லை.  யாருக்கோ பிறந்ததாக எண்ணுகிறாய் இல்லையா?" என்று அகத்தியர் நேரிடையாகவே அவனிடம் கேட்டார்.

"ஆமாம்" என்று தலை அசைத்தான்.

"உன் மகன் இல்லை என்று சந்தேகப்பட்டே அவனை நீ வளர்த்து வந்தாய்,  அவனுக்கு வயது இருபத்தாறு ஆகப் போகிறது.  அவனுக்கு ஓர் மணம் முடித்து தனியே வெளிநாட்டிற்கு அனுப்பிவிடு.  அதற்கான வாய்ப்புகளும் வந்து விடும்.  பிறகு உன் சந்தேகம் அத்தனையும் போய் விடும்" என்றார்.  இது தவிர, அந்த பெண்மணி கெட்டுப் போனதாகவோ அதனால் பிறந்தவன் தான் அவளது மூத்த மகன் என்றோ அகத்தியர் சொல்லவில்லை.

இதைக்கேட்டு சந்தோஷப்பட்டாலும் அவன் சரியான நிலைக்கு வரவில்லை.  அரை குறை மனதோடு எழுந்துவிட்டான்.

இது போன்ற நபர்களை ஒரு போதும் திருத்த முடியாது என்று எண்ணிக்கொண்டேன்.

ஐந்து மாதம் கழிந்திருக்கும்.

அந்த நபரும், அவனது மனைவியும் ஒரு நாள் காலையில் என்னைத் தேடி வந்தனர்.

முகத்தில் புன்னகை இருந்தது.  அப்பாடி! நம்மை இனிமேல் ஏடாகூடமாக கேள்வி கேட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள் என்று ஒரு அற்ப சந்தோஷம் ஏற்பட்டது.

தட்டு நிறைய பழங்களை வைத்து நமஸ்காரம் செய்த அந்த குடும்பத்தினர் பிறகு கீழே அமர்ந்தனர்.

"என்ன விசேஷம்? பையனுக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டதா?" என்றேன்.

"இல்லை"

"பிறகு"

"உங்களைப் பார்க்க வந்தோம்.  நான் சொன்ன சொல் எங்க குடும்பத்தை கடந்த முப்பது வருஷமாக எப்படியெல்லாம் பாதித்து விட்டது என்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன்" என்றாள் அவரின் மனைவி.

"என்னம்மா விஷயம்?"

"நான் நல்லவளா? கெட்டவளா? என்று இவரிடம் அகத்தியரே விளக்கி விடட்டும்" என்றாள்.

இதென்ன புது கதையா இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.  நாடி பார்க்க எனக்குத் தோன்றவே இல்லை.

"அகத்தியரை நான் முழுமையாக நம்புகிறேன் என் முன்னால் அகத்தியர் எதைச் சொன்னாலும் அதை ஏற்கிறேன்.  தயவு செய்து படியுங்கள்" என்றார் அந்தப் பெண்மணி.

நடப்பதை யார் தடுக்க முடியும்?  விதியை மாற்ற அகத்தியர் முன் வந்தால் சரி, என்று மனதில் திடம் கொண்டு நாடியைப் பார்த்தேன்.

"பருவம் அடைவதற்கு முன்பு, தன நினைவு இல்லாமல் இவள் இருந்த போது இவள் வீட்டு வேலைக்காரன் தொட்டிருக்கிறான்.  இது தான் நடந்து இருக்கிறதே தவிர, வேறு எந்த தவறும் நடக்கவில்லை.  இந்த சம்பவம் இவள் மனதை பெருமளவு பாதித்திருப்பதால் எல்லோரிடமும் அதை வெளிபடையாகவே சொல்லியிருக்கிறாள்.

திருமணத்திற்கு பின்பு கணவரிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றெண்ணி இந்த பழைய சம்பவத்தைச் சொன்னதால் இவளது கணவன் நொந்து போனான்.  நடந்த சம்பவம் பருவமடைவதற்கு முன்னால் நடந்திருந்தாலும் அதை இவளது கணவன் மனம் ஏற்கவில்லை.

இவனுக்கு பிறந்த முதல் குழந்தையின் ஜாடை வித்யாசமாக இருப்பதாக எல்லோரும் சொன்னதால், மேலும் அவனுக்கு சந்தேகம் அதிகமாயிற்று.  அதுவே வியாதியாக மாறிற்று.  இதுதான் உண்மை.  இவள் கெட்டுப் போகவுமில்லை எந்த தவற்றையும் பின்பு செய்யவும் இல்லை" என்று அகத்தியர் அடித்து சொன்னதின் பேரில் அவன் ஏற்றுக் கொண்டான்.

"அப்பாடி" என்று பெருமூச்சு விட்டாள், அந்தப் பெண்.

பிறந்த அந்த குழந்தை தன மகன்தான் என்று எண்ணி, அவனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான்.

"இப்பொழுதுதான் நான் முழு மனிதனாக மாறினேன்' என்று அவன் சொன்னதையும் நான் கேட்டேன்.

"வேறு யாரிடமும் ஜோதிடம் கேட்டு மீண்டும் மனதைக் குழப்பிக் கொண்டு அலையை மாட்டீர்கள்" என்றேன்.

"நிச்சயமாக போக மாட்டேன்" என்றார், உற்சாகத்தோடு.

பின்பு அந்த பெண்மணியிடம் சொன்னேன்.  "எல்லோரும் என்றைக்கும் ஒரு நாள் ஏதாவது தவறு செய்ய  நேரிடும் இது அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலை, மனதை பொறுத்தது  நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று முதலிரவில் சொன்னது முப்பது ஆண்டு கால வாழ்க்கையை பாதித்து விட்டது.  எனவே பேசுவதில் எச்சரிக்கை இருக்கட்டும்" என்றேன்.

தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய அகத்தியரை வணங்கிவிட்டு ஆனந்தமாக அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

நிம்மதியை நாம்  நமக்குள் தான் தேடிக்கொள்ளவேண்டும், வெளியே தேடினால் தொலைந்துதான் போவோம்  என்று எனக்கு அன்று புரிந்தது.

சித்தன் அருள்................... தொடரும்!

Sunday, 23 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 5

நம்மில் பலருக்கும் த்யானத்தில் அமர்ந்தால் அது எளிதில் கைவல்யமாவதில்லை. மனம் எங்கெங்கோ ஓடும், நிலைத்து நிற்காது. கவனத்தை ஒரு முனையில் பிடித்து நிறுத்த ஒரு எளிய வழி இருக்கிறது. முதலில் இந்த உலகத்தில் எதுவும் எனக்கு தேவை/முக்கியம் இல்லை என்று திடமாக நினைத்துக்கொண்டு, கவனத்தால் சுழி முனையில் (புருவங்களுக்கிடையில்) "ஓம்" என்று எழுதுங்கள்.  இதை தொடர்ந்து செய்யுங்கள்.  த்யானம் நீங்கள் நினைக்கும் விதத்தில் அமையும்.  கவனம் "ஓம்" இல் மட்டும் இருக்கட்டும்.

ஊன் உடம்பு ஆலயம் என்றார்கள் பெரியவர்கள்.  அப்படியானால் நமது சித்தம் அல்லது மார்பு இறை அமர வேண்டிய இடம்.  எந்த ரூபத்தில் இறையை வணங்க விரும்புகிறீர்களோ அந்த ரூபத்தில் அங்கு இருத்தி மானசீக பூசையை பண்ணலாம்.  உதாரணமாக "முருகரை" நீங்கள் விரும்பினால் அவர் வேலுடன் நிற்கும் கோலத்தில் மனதில் த்யானித்து இருத்தி அவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஜபங்கள், நிவேதனம் போன்றவை செய்யலாம். அவர் நம் உள்ளே இருப்பதை கண்டு அப்படியே த்யானத்தில் இருக்கலாம். மனம் ஒன்று பட்டுவிடும்.  இப்படி தினமும் செய்து வர ஒரு சில நாட்களில் நம் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதை நீங்கள் உணரமுடியும்.நம் செயல்கள் அனைத்தும் இறை செயல் போல அன்பு நிறைந்ததாக இருக்கும். அனைத்து வித்தியாசங்களும் விலகி விடும்.  இதை தான் பெரியவர்கள் திரை விலகல் என்கிறார்கள். லிங்கம் வைத்து வணங்கி வந்தால் ஒரு சில நாட்களிலேயே நம் மார்பில், நெஞ்சு கூட்டுக்குள் லிங்க ரூபம் உந்தி நிற்பதை நம்மால் உணர முடியும்.

ஜபம் பண்ணும் பொது சாத்வீக மந்திரங்கள் தான் நல்லது. ஏன் என்றால், என்ன ஜபம் ஓடுகிறதோ அதற்கேற்றாற்போல் நம் உடலும் மனமும் மாறிவிடும்.

குறைந்தது அமைதியான வாழ்க்கை வேண்டும் என்றால், எந்தக் காரணம் கொண்டும் "அதர்வண வேதம்" பக்கம் சென்று விடாதீர்கள். அது கலியுகத்தில் மனிதர் விலக்கவேண்டியது என்கிறார்கள் பெரியவர்கள்.

இத்தனை விஷயங்களை படிக்கும் பொது உங்களுக்கு ஒரு சித்தர் பாடல் நினைவுக்கு வரலாம்.  "மனம் செம்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டா", இதெல்லாம் எதற்கு என்று?  பாரபட்சமின்றி உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்.  உங்கள் மனம் சித்தர்கள் சொல்கிற அளவுக்கு "செம்மையாகிவிட்டதா?" என்று.  இல்லையெனில் மேல் சொன்னவை அத்தனையும் தேவை தான், அந்த "செம்மையான மனநிலை" அடையும் வரை.  அதற்கு  பின் மந்திரம் தேவை இல்லை.

பேசக் கூடாத மூன்று நேரங்களில், இரண்டாவது நேரம் "பூசை, த்யானம்" போன்றவை செய்யும் நேரம்.

பூசை, த்யானம் போன்றவைக்கு நாம் அமரும் நேரம் உடுத்தியிருக்கும் உடை சுத்தமாக அழுக்குகள் இன்றி இருக்க வேண்டும் என்கிறார் அகத்தியர் பெருமான். ஆதலால், அதற்காகவே ஒரு உடையை தனியாக மாற்றி வைக்கலாம்.

நம் நெற்றியை "சிவன் விளையாடும் தெரு" என்கிறார் ஒரு சித்தர். இன்னொருவரோ "உள்ளே இறை உறைகிறது என்று உணர்ந்தேன், ஆதலால் திருநீர் பூசி குங்குமம் இடுகிறேன்" என்கிறார். உணர்ந்தவர்கள் சொன்னதை நம்புவோம்.  ஒரு போதும் நெற்றியில் விபூதி குங்குமம் இல்லாமல் இருக்ககூடாது. பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

நீரில் குழைத்து நெற்றிக்கு இட்டுக்கொள்வது சித்தர், முனிவர் முறை.

பஞ்ச பூதங்களும், நவ கிரகங்களும் அடங்கிய இடம் கோவில்.  அதனால் தான் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். 14 நான்கும் அடங்கிய இடம் சென்றால் நம்முள்ளும் அவர்களின் ஆதிக்கம் அடங்கிவிடும்.  வாரத்தில் ஒருமுறையேனும் ஒரு கோவில் சென்று நம்மை சுத்தப்படுத்திக் கொள்வோம்.

எந்தக் கோவிலுக்கு சென்றாலும், நவ கிரக சன்னதிக்கு செல்லாதீர்கள்.ஒரு ஆடு தானே போய் கசாப்புகடைகாரனிடம் தலையை கொடுப்பது போன்றது. நவக்ரகங்கள் நம்மை ஆட்டி படைக்க இறைவனால் நியமிக்க பட்டவை. இதில் சந்தேகம் இல்லையே.  இறைவனே பூமிக்கு வந்தால் கூட, இவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்!  அது தான் தர்மம்.  அதை விலக்க இறைவனுக்கு கூட அதிகாரம் கிடையாது.  உதாரணமாக, சிவனை பிடித்து சனி "ஈஸ்வர" பட்டம் பெற்றான். ஒரு பெரியவரிடம் பேசியபோது சில உண்மைகள் எனக்கு புரிந்தது. உண்மைகளை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், உண்மை மாறிவிட போவதில்லை. நாம் தான் இழப்புக்கு ஆளாவோம்.அவரின் ஓர் உண்மை விளக்கம் கீழே தருகிறேன். புரிந்து கொள்ளுங்கள். "நவக்ரகங்கள் நம்மை நம் கர்மாவுக்கு ஏற்ற படி கட்டு படுத்த நியமிக்க பட்டவை. அவர்கள் தான் நம்மை சுற்றவேண்டும்.  நாம் அவர்களை சுற்றகூடாது. மேலும்,ஒன்பதுக்கும், தன்னை தேடி வந்து பூசை பண்ணுவபர்களுக்கு, சலுகை அளிக்க உரிமை கிடையாது.  ஏதேனும் சலுகை அளித்தால், அவர்கள் தலை மீது தொங்கும் கத்தியானது தன் வேலையை பார்க்கும்.  இப்படி பட்ட சூழ்நிலையில், இவர்கள் பாதிப்பை குறைக்க தான் பிற தேவதைகளை, ப்ரத்யாதி தேவதை என்று பெயரிட்டு இறைவன் நியமித்துள்ளார்.  மனம் திருந்தி, பாதிப்பின் தன்மையை குறைத்துக்கொள்ள இவர்களை தான் நாம் அணுகவேண்டும். "   நம் கர்ம வினைப்படி எழுதி வாங்கி வந்ததை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும்.  முழுமையாக எடுத்து மாற்றி விட முடியாது.  வேண்டுமானால் பிரார்த்தனை வழி அதன் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம். ஆதலால் வீட்டில் நவக்ரகங்கள் படத்தை வைத்து வழிபடுவதை தவிர்க்கவும்.

Thursday, 20 June 2013

சித்தன் அருள் - 129

செய்வினையை பற்றி அகத்தியர் பெருமான் கூறும்போது அப்படி ஒன்று இருப்பதாகவே நம்பவேண்டாம் என்று ஆணித்தரமாக சொல்கிறார். நாம் ஒரு காலத்தில் தெரிந்தோ, தெரியாமல் செய்கிற விஷயங்கள் தான் பின்னர் ஒரு காலத்தில் "செய்த வினையாக" ஏதேனும் ஒரு ரூபத்தில் நம்மை வந்து வருத்தும்.  ஒருவர் அறியாமல் வாங்கி வைத்துக்கொண்ட  சில பொருட்கள் கூட குடும்பத்தில் சிதைவை உருவாக்கும். பூசை அறையில் வைக்கப்பட்ட சேதமான லிங்கமும், சாலிக்ராமமும் எப்படி ஒரு குடும்பத்தை பாதித்து உருக்குலைத்தது என்பதை இன்றைய தொகுப்பில் பார்ப்போம். 

அகத்தியர் வந்து நாடியில் உரைப்பதினால், வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று தெளிவாக புரிந்துகொள்கிற ஒரு பாடத்தை, தினமும், ஏதேனும் ஒரு நபருக்கு அருளும் பொழுது என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. 

அப்படி அன்று நாடி படிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார்.

"செய்வினையை அகத்தியர் நம்புவதில்லை என்று சொல்கிறீர்கள்.  ஆனால் அது இருக்கத்தான் செய்கிறது.  இதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.  என் கூட என் வீட்டுக்கு வர முடியுமா?" என்று அந்தப் பெண்மணி என்னிடம் கேட்டாள்.

"அகத்தியர் உத்தரவு கொடுத்தால் வருகிறேன்" என்று நான் சொன்னேன்.

"இல்லை.  நீங்கள் கண்டிப்பாக வந்து தான் ஆக வேண்டும்.  நீங்கள் வந்தால் என் முப்பது ஆண்டு கால கஷ்டம் விலகிவிடும் என்று நம்புகிறேன்"  என்று மீண்டும் பிடிவாதம் பிடித்தாள் அந்த பெண்மணி.

"நான் பகவான் இல்லை.  சித்தர் வழிகாட்டி அவ்வளவு தான்.  எனவே என்னை தயவுசெய்து உங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.  ஆனால், அதே சமயம் உங்களுக்கு அகத்தியர் நாடி மூலம் என்ன வழிகாட்ட முடியுமோ அதை இப்போதே காட்டுகிறேன்" என்றேன்.

அந்த பெண்மணிக்கு நான் சொன்னதில் வருத்தம் ஏற்பட்டிருக்கும் போல் தெரிந்தது.  கண்ணைத் துடைத்துக் கொண்டு மெதுவாக அவளது குடும்பக் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

"நல்ல செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்.  ஏகப்பட்ட நிலங்கள், வாழைத்தோப்புகள்; பண வசதிக்கும் குறைவில்லை.  அப்படியிருக்கும் பொழுது, சொந்தக்காரர் ஒருவர், தொழில் நடத்த பத்து லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.  இதற்கு நான் மறுத்தேன்.  என் கணவரும் மறுத்தார்.

இதனால் கோபமடைந்த அந்த சொந்தக்காரர், மலையாள மந்திரவாதியை அழைத்து வந்து என்னையும், என் குடும்பத்தையும் அழிக்க செய்வினை செய்து விட்டார்.  இதனால் என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார்.  சொத்துக்களும் படிப்படியாக கரைய ஆரம்பித்தது.

எனக்குப் பிறந்த குழந்தைகளும் என்னை வெறுத்து தனித்தனியே சென்று விட்டனர்.  அது மட்டுமல்ல, வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்களை துணிந்து மணந்தும் கொண்டனர்.  எங்கள் குடும்பம் சிதறிப் போயிற்று".என்று படபடவென சொல்லி முடித்தாள் அவள்.

அந்த பெண்மணி பேசி முடித்ததும், நான் பொறுமையாகக் கேட்டேன்.

"அந்த சொந்தக்காரர் செய்த செய்வினைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறீர்களா?"

"ஆமாம்"

"எப்படி?"

"இரவில் கெட்ட ஸ்வப்னங்கள் வரும்.  யாரோ என் பக்கத்தில் நிற்பதாகத் தோன்றும்.  என்னுடன் நடந்து வரும்.  நான் நின்றால் அதுவும் நிற்கும்."

"அப்புறம்!"

"அமாவாசை - பௌர்ணமியில், தூங்கும் போது என் கழுத்தை நெரிப்பது போல் தோன்றும், எனது நெஞ்சில் இரண்டு கையால் குத்துவது போல் இருக்கும்."

"ஓகோ"

"அது மட்டுமல்ல, நான் இப்போது தனியாக இருக்கிறேனா, சில சொத்துக்களும் எனக்கிருப்பதால் யார் யாரெல்லாமோ மிரட்டுகிறார்கள்.  உயிருக்கு பயமாக இருக்கிறது" என்று கண்ணீர் மல்க அந்த பெண்மணி சொன்னபோது எனக்கும் பரிதாபம் ஏற்பட்டது.

"இதெல்லாம் சரி! இதற்கு ஏதாவது பரிகாரம் செய்திருப்பீர்களே?" என்றேன்.

"அதையேன் கேட்க்கிறீர்கள்?  லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பார்த்தேன்.  பணம் தான் செலவழிந்ததே தவிர இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.  அதனால் தான் அகத்தியரை நம்பி இங்கு வந்தேன்" என்றாள்.

இதைத் தவிர இன்னும் எத்தனையோ விஷயங்களைச் சொன்னாள்.  அதையெல்லாம் கேட்கும் பொழுது இப்போதும் கூட அப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டது.  "செய்வினை" என்பது உண்மை தான் என்று கூட எனக்கு எண்ணம் வந்தது, என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எனினும் அகத்தியரிடமே இதைக் கேட்டு விடுவதென்று தீர்மானித்தேன்.

"இந்த பெண்மணியின் கூற்றுப்படி சொந்தக்காரர் வைத்த செய்வினை தான் இத்தனைக்கும் காரணமென்றால் நாட்டில் இத்தனை கோவில்கள் எதற்கு?  பிரார்த்தனைகள் எதற்கு?  அந்த மந்திரவாதிக்கே கோவிலைக் கட்டி வணங்கி வரலாமே? ஏன் செய்யவில்லை?" என்று எடுத்த உடனேயே அதிர்ச்சியான கேள்வியைக் கேட்ட அகத்தியர் மேலும் சில விளக்கங்களைக் கேட்டார்.

"உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க முப்பது வருடத்திற்கு முந்தய பூஜை பொருள்கள் ஏதாவது வாங்கினீர்களா?'

"என் நினைவுக்கு தெரிந்து ஞாபகம் இல்லை."

"தோஷமுள்ள சிவலிங்கமும், உடைந்த சாலிக்கிராமமும் உங்கள் வீட்டு  பூசை அறையில் இருக்கிறது! இல்லையா?"

"சிவலிங்கம் இருக்கிறது.  அது தோஷமா இல்லையா என்று தெரியாது" என்றாள்.

"சாலிக்ராமம்?"

"அதை நான் தொடுவதே இல்லை.  பூசை செய்வதும் இல்லை.  என் கணவருக்கு பூசை புனஸ்காரம் என்றால் பிடிக்காது.  ஆனால் ஒன்று இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.  அந்த சிவலிங்கமும், சாலிக்ராமமும் வந்த பிறகு தான் அவர் வீட்டை விட்டு வெளியேறினார், அது உண்மை."

"தங்கள் கணவர் அதை ஒரு தடவைக் கூட தொடவே இல்லையா?"

"இல்லை"

"நீங்கள் தான் பூஜை செய்ய முடியவில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போவாரே, அந்த குருக்களை வைத்தாவது சிவலிங்க பூஜையை, சாலிக்ராம பூசை செய்திருக்கலாமே?" என்று ஒரு பீடிகையைத் தூக்கிப் போட்டார், அகத்தியர்.

"அந்த "குருக்கள்" என்று சொன்ன போது அவள் முகம் உண்மையிலேயே பேய் அறைந்தது போலாயிற்று.

சில நிமிடங்கள் அங்கு அசாதாரண நிலை நீடித்தது.

பின்பு அகத்தியரே தொடர்ந்தார்.  "உடனே சென்று அந்த தோஷமுள்ள சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் எடுத்து அருகிலுள்ள கிணற்றில் போட்டு விடு.  பிறகு மேற்கொண்டு உரைக்கிறேன்" என்றார்.

"அப்போது செய்வினைக்குப் பரிகாரம்?"

"முதலில் அகத்தியன் சொன்னதொரு சொல்லுக்கு மரியாதை கொடுத்து அப்படியே செய்து விட்டு வா" என்று ஆணையிட்டார்.

அவளும் உடனே கிளம்பி விட்டாள்.

"ஒரு தோஷமுள்ள சிவலிங்கமும், தோஷமுள்ள சாலிக்ராமமும் இந்த பெண்மணியின் வாழ்க்கையை சீரழித்து விட்டதே! இதை அறியாமல் இந்தப் பெண், "செய்வினை" மேல் பழி போடுகிறாளே, என்ன அநியாயம்" என மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.

ஒரு வாரம் கழிந்தது.

அந்தப் பெண்மணி மிகுந்த சோகத்தோடு என்னிடம் வந்தாள்.

"நீங்க சொன்னபடி அந்த சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் கிணற்றிலே போட்டு விட்டேன்.  ஆனா அதைப் போட்ட பிறகு தான் எனக்கு கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாமல் போயிற்று. பிரச்சினை மேலும் அதிகமாயிடுச்சு.  இப்போ என்ன செய்யறதுன தெரியல்ல" என்றாள்.

பேசாமல் அகத்தியர் நாடியைப் பிரித்து படிக்கலானேன்.

"உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக் கூடாது என்பது விதி.  என்றைக்கு இந்த சிவலிங்கத்தை வாங்கி பூஜை செய்ய ஆரம்பித்தாளோ, அன்றே இவள் குடும்பத்திற்கு கெடுதல் ஆரம்பித்தது.  நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த இவள் கணவன், இவளை விட்டு பிரிந்து போனான்.

இரண்டாவது சாலிக் கிராமத்தில் பல வகைகள் உண்டு.  அவற்றில் நரசிம்மர் சாலிக்ராமமும், சுதர்சன சாலிக்ராமமும் மிகவும் உக்கிரங்கள் கொண்டவை.  அப்படிப்பட்ட சாலிக் கிராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது.  அது நரசிம்மர் அல்லது சுதர்சன சாலிக்ராமம் என்று தெரிந்தால் அவற்றை உடனடியாக கோயிலுக்கு கொடுத்து விடவேண்டும்.

இந்த பெண்மணியின் வீட்டில் வைத்திருப்பது நரசிம்மர் சாலிக்ராமம்.  அந்த சாலிக்ராமம் உடையாமல் இருந்தால் கூட சாந்தி பரிகாரம் செய்து பூஜையில் வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் இவளுக்கு கிடைத்த அந்த சாலிக்ராமத்தின் வாயிற்படியில் பெரும் கீறல் விழுந்திருக்கிறது.  இது வீட்டிற்கு நல்லதல்ல.

ஹிரண்யனை வதம் செய்யும் பொழுது - நரசிம்மரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் அது! இப்படிப்பட்ட சாலிக்ராமத்தை ஒரு நாழிகை வீட்டில் வைத்திருந்தால் கூட, அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டி சுவராக்கி விடும்!  கெட்ட ஆவிகள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிடும்.

இந்த விஷயத்தை அறியாமல் இந்த பெண்மணி, யாரோ இலவசமாகக் கொடுத்ததால், ஆசைப்பட்டு வீட்டில் வைத்துக் கொண்டாள்.  வாங்கி வைத்துக் கொண்டாளே தவிர, அதற்கு சரியானபடி பால் அபிஷேகம், கங்கா ஜல அபிஷேமம், சந்தன அபிஷேகம் செய்யவும் இல்லை.  அதற்கு நைவேத்தியமும் காட்டவில்லை.

இதன் காரணமாக குடும்பம் சிதறுண்டது,  ஈன்றெடுத்த குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வைத்தது.  திசை மாறிப்போனார்கள்.  கெட்ட ஆவிகளும் இவளைச் சுற்றி வர ஆரம்பித்தது.  சொத்துக்களும் கரைந்து கொண்டிருந்தது.

யாரிடமாவது இந்த சிவலிங்கத்தையும் சாலிக்ராமத்தையும் அன்றைக்கே காட்டியிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பார்கள்.  இந்த அளவுக்கு குடும்பம் கெட்டிருக்காது.

இதெல்லாம் உணராமல் "செய்வினை" என்று பயந்து பல லட்சங்களை இவள் விரயமாக்கிவிட்டாள். அத்தனை பேர்களும் இவளை ஏமாற்றி பிடுங்கிக் கொண்டும் சென்றனர்.

இப்போது கூட அகத்தியனிடம் இந்த பெண்மணி பொய் சொல்லுகிறாள். இதுவரை அந்த சிவலிங்கத்தை கையால் தொடவும் இல்லை.  கிணற்றில் போடவும் இல்லை.  என்றைக்கு இவள் அகத்தியனை நம்புகிறாளோ அன்றைக்கு மீண்டும் வரட்டும்.  மேற்கொண்டு உரைப்போம்" என்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் அந்த பெண்மணிக்கு முகம் கலங்கியது.

"இந்த லிங்கம் ஸ்படிக லிங்கம்.  அபூர்வமானது.  யாருக்கும் இது கிடைக்காது.  நீயே வைத்துக் கொள்.  யாருக்கும் கொடுக்காதே என்று ஒருவர் சொன்னதால், அவரது பேச்சைக் கேட்டு சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் அப்படியே பூஜை அறையில் வைத்து இருக்கிறேன்" என்றவள் "என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள்.

தொடர்ந்து "அப்படியென்றால் செய்வினை எதுவும் இல்லையே?" என்றாள்.

"நீதான் யார் பேச்சையோ நம்பி "செய்வினை" இருப்பதாக சொல்லி மந்திரவாதியை அழைத்து ஏதேதோ செய்தாய்.  அவன் முறைப்படி எதுவும் செய்யவில்லை.  ஆனால், அந்த கெட்ட ஆவி உன்னையே திருப்பித்தாக்குகிறது.  கெட்ட ஆவி என்பது வேறு. செய்வினைத் தோஷம் என்பது வேறு" என்று அந்த பெண் செய்தவற்றை புட்டுப் புட்டு வைத்தார்.அகத்தியர்.

இதைக் கேட்டதும் வெல வெலத்துப் போனாள் அந்த பெண்மணி.  உடனடியாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு வீட்டிற்கு ஓடினாள்.

தோஷமுள்ள சிவலிங்கத்தையும் , தோஷ சாலிக்ராமத்தையும் கிணற்றில் தூக்கிப் போட்ட ஆறாவது மாதம் பிரிந்த கணவன் வீடு வந்து சேர்ந்தார்.  அவளை விட்டுப் பிரிந்த மகன்களும் தம் தம் மனைவிகளோடு மீண்டும் இந்தப் பெண்மணியோடு பிறந்த வீட்டிற்கே வந்து சேர்ந்தனர்.

இப்போது அந்த வீட்டில் சந்தோஷக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.  அந்த பெண்மணி "செய்வினையா?  அப்படி என்றால் என்ன?" என்று மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ச்சியோடு சிரிக்கிறாள் தற்போது!

இன்று அகத்திய பெருமான் நமக்காக சொல்லித்தந்த பாடம் என்னவென்று இந்த தொகுப்பை வாசிக்கும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  தேவை இல்லாமல் பிரச்சினைகளை, அறிந்தோ, அறியாமலோ வாங்கி சுமக்காதீர்கள். அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு, சரியான முறையில் செயல்களை செய்து, இறை அருள் பெற்று வாழுங்கள்.

சித்தன் அருள் ...................... தொடரும்!

Wednesday, 19 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 4

குளிக்கும் முறையில் பெரியவர்கள் சொல்லிப்போனதை நினைவில் நின்றவரை தெரியப்படுத்திவிட்டேன். விட்டுப் போனது ஏதேனும் நினைவுக்கு வந்தால், பின்னர் தெரிவிக்கிறேன்.  இனி பூசை முறையை பார்ப்போம்.

குளித்து முடித்தவுடன் கிழக்கு பார்த்து நின்று சூரியனை த்யானித்து நமஸ்காரம் செய்யவேண்டும்.  இந்த உலகத்தில் நம் வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் அருளுவது சூரிய தேவனே.

பூசைக்கான பூக்களை சூரிய உதயத்துக்கு பின்னும், அஸ்தமனத்துக்கு முன்னும் தான் பறிக்கலாம்.  அப்படி பறித்த பூக்களை சுத்தமான நீர் கொண்டு கழுவிய பின் தான் பூசைக்கு உபயோகிக்கலாம்.

பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.

பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி

வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.

உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது.  அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல்.  கணவன் மனைவி பிரிய வேண்டி வரும்.

சாலிகிராமத்தில் பல வகைகள் உண்டு.  இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாலிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை. அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது. அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும்.  ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்மரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்மர் சாலிக்ராமமாக மாறியது. அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டிச்சுவராக்கி விடும்.  கெட்ட ஆவிகள் கொடிகட்டி பறக்க ஆரம்பிக்கும்.

சிவலிங்கம், சாலிக்ராமம் போன்றவற்றுக்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்.  தினமும் செய்ய முடியாத நிலையில் சிவலிங்கத்தை விபூதியால் மூடிவைத்தும், சாலிக்ராமத்தை அக்ஷதையால் மூடிவைத்தும் வீட்டில் வைக்க வேண்டும்.

ஆயுத வடிவங்களான, வேல், சூலம், வாள், கத்தி போன்றவற்றை தனியாக வைத்து வீட்டில் பூசை செய்யக்கூடாது.  இறை உருவ வழிபாட்டுடன் மட்டும்தான் இவை இருக்கலாம்.  இல்லையென்றால், வீட்டில் உள்ள அனைவரிடமும் உக்கிர தன்மையை உருவாக்கும்.

நிவேதனம் என்பது பூசையின் ஒரு அங்கம்.  நிவேதனம் இல்லாமல் ஒரு பூசை நிறைவு பெறுவதில்லை.  நிவேதனம் என்றால் "தெரிவிப்பது" என்று அர்த்தம்.  அதாவது எதுவுமே என்னுடையது இல்லை என்று உணர்ந்து தெரிவிக்கிற முறை தான் "நிவேதனம்".

வெளிச்சம் என்பது சாதகமான ஒரு நிலை.  ஆதலால் விளக்கு வெளிச்சம் என்பது வீட்டுக்கு நல்லதையே செய்யும்.  24 மணி நேரமும் எரிகிற அளவுக்கு ஒரு விளக்கை ஏற்றி வந்தால், அந்த வீட்டில் கெடுதல்கள் அண்டாது.

பூசை அறையில் படங்கள், விக்ரகங்கள் கிழக்கு அல்லது வடக்கிலிருந்து நம்மை நோக்கி இருப்பது மிகச் சிறந்த அருளை பெற்று தரும்.

விளக்கில் தீபம் கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ இருக்கவேண்டும்.

பூசை, ஜபம், த்யானம் போன்றவைக்கு அமரும் போது கிழக்கு, வடக்கு நோக்கி அமர்வது உத்தமம்.  சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் போன்றவர்களை நினைத்து த்யானத்தில் அமரும் போது வடக்கு மிக சிறப்பானது.

தினமும் குறைந்தது ஒரு நாழிகையேனும்  பூசை த்யானத்துக்கு ஒதுக்க வேண்டும்.  மனித வாழ்வை தந்த இறையின் நோக்கமே, நம்முள் உறையும் இறை சக்தியை நாம் உணரவேண்டும் என்பதே. அதற்காக நாம் ஒரு அடி எடுத்துவைத்தால், இறைவன் நமக்காக 10 அடி எடுத்து முன் வருவான்.

மந்திரங்கள், மூல மந்திரங்கள், ஜபங்கள் போன்றவை அதிர்வினால், நம்முள் உறையும் ஆதார சக்ரங்களை தூண்டிவிடுகிறது.  பல வித புரிதல்களுக்கும் அதுவே நல்ல தொடக்கமாக அமையும்.

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 13 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 3

அசுத்தமான நீரை ஒரு போதும் நாம் வசிக்கும் இடத்தில் சேர்த்து வைக்கக்கூடாது.  உடனேயே  நம் இடத்தை விட்டு வெளியேற்றி விடவேண்டும்.

சுத்த நீரில் அழுக்கு நீரை ஒரு போதும் கலக்க கூடாது.  அது மிகுந்த தோஷத்தை கொண்டு தரும்.

விளையாட்டுக்கேனும் நீரை காலால் உதைத்து விளையாடக்கூடாது.

குளிக்கும் போது குவளையில் நீரெடுத்து குளித்தால், நிதானமாக எடுத்து ஊற்றிக்கொள்ளவேண்டும்.  நம்மில் பலருக்கும் வேக வேகமாக தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் குளிப்பது தான் பிடிக்கும்.  அது தவறு.  அப்படி குளிப்பது தண்ணீரை பழிப்பதற்கு சமம்.

குளிக்கும் போது, குளித்த கழிவு நீரில் ஒரு போதும் துப்பாதீர்கள்.

வாரத்தில் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பதால், உடலில் சேரும் அதிகமான சூட்டை விலக்க முடியும். ஆண்கள் புதன், சனி தினங்களிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் எண்ணை தேய்த்து குளிக்கவேண்டும்.

குளிக்கும் போது தலையிலிருந்து வழிகிற நீர் முன் நெற்றி வழியாக அல்லது முன்பக்கமாக  வழிந்து ஓடுகிறபடி குளிக்கவேண்டும்.  தலையின் பின் பக்கமாக வழிகிற நீர் "நரக தீர்த்தம்" எனப்படும்.  அதை ஒரு போதும் அப்படி வழிய விடக்கூடாது.

ஓடும் நீர் சுத்தமான தீர்த்தமாக கருதப்படுகிறது.

குளம் ஆறு, நதி, கடல் போன்ற பொது இடங்களில் குளிக்கும் போது, நாம் குளிக்கும் நீர் பிறர் மீது தெறிக்காமல்/படாமல் இருக்க பார்த்துக் குளிக்கவேண்டும்.  அது போலவே, பிறர் குளிக்கும் நீர் திவலைகள், நம் மீது படாமல் விலகி நின்று குளிக்கவேண்டும்.

சித்தன் அருள் - 128

ஆன்மீகத்தில் கரை சேர பக்தி செய்வது ஒரு வழி.  அந்த பக்தியை, பூசை, த்யானம் போன்ற முறைகளால் செய்யலாம். பூசை முறைகள் பலவிதப்படும். உருவ வழிபாடு, யந்திர, தந்திர வழிபாட்டு முறைகள் என பிரிக்கலாம். இவற்றுள், யந்திர வழிபாடு என்பது சற்று ஆபத்தானது என்பது அகத்தியரின் கூற்று.  ஒருவருக்காக யந்திரம் தயார் செய்தால், அது அவர் வசிக்கும் வீட்டில் யாகம் அல்லது பூசை செய்து, நாள் நட்சத்திரம், நேரம் பார்த்து, மிக சுத்தமான முறையில் சூழ்நிலை அமைய உருவாக்கப்படவேண்டும்.  தற்காலத்தில் யந்திரங்கள் என்பது, எங்கே எப்படி தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது என்று அறிந்தால், எத்தனை ஆபத்தான விஷயம் இது என்பது புரியும்.  "யந்திரப் பைத்தியமே" ஏற்பட்டு, அதினால் வாழ்க்கையை தொலைத்து நின்ற ஒருவரை கரை ஏற்றி விட்ட அகத்தியரின் அருளை இன்று பார்ப்போம். 

பக்தி நிறைந்த உருவத்துடன் என் முன் வந்து நின்ற அந்தப் பெரியவரைப் பார்த்த பொழுது எனக்கு அவரைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல் தோன்றியது.  நெற்றியில் நிறைய விபூதி, நடுவில் அழகாக குங்குமம், மெல்லிய ஜவ்வாது வாசனை தவழ, அவர் உருவத்தில், உடுத்தியிருந்த உடையில் எளிமை, என அத்தனை நேர்த்தி.

சுமார் அறுபது வயதைத் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். கூடவே தன மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அவரது தோற்றத்துக்கும், அவர் செயலுக்கும் நிறைய முரண் இருந்தது, பின்னர் தான் தெரியவந்தது.

அவரே பேசினார்.

"பகவான் எனக்கு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.  ஆனால் நிம்மதியைக் கொடுக்கவில்லை.  மூத்த பெண்ணை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தேன்.  அவளது தாம்பத்திய வாழ்க்கை சரியில்லை.  வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

இரண்டாவது மகளுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.  பல வருஷம் ஆகியும் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவளும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டாள்.

மூன்றாவது, பையன் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.  சட்டென்று ஒருநாள், காலேஜுக்கு போக மாட்டேன் என்று சொல்லி தன படிப்பை நிறுத்தி விட்டான்.  ஏன் என்று கேட்டால், தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறான்.  வீட்டை விட்டு வெளியே போக மறுக்கிறான்.

சதா சர்வ காலமும் தூங்கி வழிகிறான்.  பல்லைக்கூடத் தேய்ப்பதில்லை. எப்பொழுது அவனுக்கு தோன்றுகிறதோ அன்றைக்குத் தான் குளிக்கிறான். சோப்பு போட்டும் குளிப்பதில்லை.  துர்நாற்றம் வீசுகிறது.  இவனையும் திருத்த வேண்டும் என் மகள்களது இல்லற வாழ்க்கையும் நல்லபடியாக மாற வேண்டும்.  அகத்தியரை நம்பித்தான் வந்திருக்கிறேன்.  நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தன குடும்பக் கதையை வேதனையுடன் சொன்னார்.

"யாரிடமாவது இதற்கான காரணம் என்ன என்று கேட்டு அதற்குரிய பரிகாரங்களை செய்தீர்களா?" 

"செய்தோம்.  ஆனால் எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை.  அதனால் தான் கடைசி முறையாக இங்கு வந்திருக்கிறோம்" என்றார் விரக்தியோடு அந்தப் பெரியவர்.

"பரிகாரங்கள் செய்து அலுத்துப்  போனோம் பரிகாரங்களை தவிர மற்ற எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்.  நாங்கள் செய்கிறோம்" என்று முதன் முறையாக பேசினார், அந்த நபரின் மனைவி.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஆனாலும், எனக்கு இந்த வார்த்தை ஏதோ மாதிரியாக சரியில்லை என்று தோன்றியது.

"அம்மா.. அகத்தியரை ஜோதிடராக எண்ணிப் பார்க்கிறீர்கள்.  இது தவறு. அவரை அருள்வாக்கு தரும் ஞானியாக எண்ணிப் பாருங்கள்.  உங்கள் பிரச்சினைக்கு அகத்தியர் என்ன வாக்கு தருகிறாரோ அதை ஏற்று செயல் படுங்கள்.  உங்கள் இஷ்டத்திற்கோ, என் இஷ்டத்திற்கோ அகத்தியர் பேசுவதில்லை, நடப்பதில்லை" என்றேன்.

"அகத்தியர் நாடி சோதிடம் என்று தானே சொன்னார்கள்.  அதனால் தான் கேட்டேன்" என்றார் அந்த பெண்மணி.

"இவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக பேச வேண்டும்" என்று எண்ணிக் கொண்டேன்.

ஒன்றும் சொல்லாமல் நாடியைப் புரட்டிப் பார்த்தேன்.

"இன்னவன் வீட்டின் பூசை அறையில் வைத்திருக்கும் யந்திரங்களில் இரண்டு பழுதுபட்டிருக்கிறது.  இதை என்றைக்கு வாங்கிக் கொண்டு வைத்தானோ அன்று முதல் மன நிம்மதி இல்லாமல் போயிற்று.  அந்த யந்திரங்களை தூக்கி ஏறிந்து விட்டால், இத்தகைய குடும்ப கஷ்டம் ஏற்படாது" என்று நான்கே வாக்கியங்களில் அகத்திய பெருமான் சொல்லி முடித்துக் கொண்டார்.

இதைச் சொன்னதும் வந்த அந்த பெரிய தம்பதிகளின் முகத்தில் ஈயாடவில்லை.

"என்னிடம் பூசை அறையில் ஏகப்பட்ட யந்திரங்கள் இருக்கிறது.  அதில் எது "தோஷம் உள்ளது" என்று சொன்னால் அதை மாத்திரம் தூக்கி எறிந்து விடலாமே" என்றார் அவர்.

"முறைப்படி பூசை பண்ணாமல், யந்திரம் தீட்டுப்படாமல் இருக்க, வெள்ளி அல்லது தங்க மூலம் பூசாமல் இருந்தால் அந்த யந்திரத்தை அல்லது செப்புத்தகட்டைத் தூக்கி எறிந்து  விடுங்கள்" என்றேன் நான்.

"என்னிடம் ஏறத்தாழ பன்னிரெண்டு செப்புத் தகடுகள் இருக்கின்றன.  எல்லாமே பூசை செய்யப்பட்டவை". என்றார் அவர்

"பூசை என்றால் எப்படி?" என்று வினவினேன்.

"ஜோதிடர் மூலம் சொல்லி கோவிலில் பூஜை செய்யப்பட்டுக் கொடுத்தவை" என்றார்.

"முதலில் கோவிலில் பூஜை செய்வதே தவறு.  அவரவர்கள் வீட்டில் தான் பூஜை செய்ய வேண்டும்.  கோவிலில் பூஜை செய்வது இரண்டாம் பட்சம்" என்றேன்.

"வீட்டில் செய்ய வசதி இல்லாவிட்டால் என்ன செய்வது?" என்று பதில் கேள்வி கேட்டார் அவர்.

"நியாயமான கேள்விதான்.  இதை அகத்தியரிடமே கேட்டு விடுவோம்" என்று மறுபடியும் நாடியைப் புரட்டினேன்.

"எந்திரங்களை அல்லது செப்புத் தகட்டினை பூசைக்கு பயன்படுத்தும் முன்னர் அதைப் பயன்படுத்துவோர் உடல் சுத்தம், மன சுத்தமாக இருக்க வேண்டும்.  வடகிழக்குப் பார்த்து அமர வேண்டும்.  அவர்களுக்கோ அல்லது பூஜை செய்பவர்களுக்கோ எந்த விதமான தீட்டும் இருக்ககூடாது.  மந்திரங்களை தெளிவாக அவசரப்படாமல் சொல்ல வேண்டும்.  அழுக்கு வேஷ்டி, வஸ்த்திரங்களை பயன் படுத்தக் கூடாது.

இரண்டாவது கண்ட கண்ட செப்புத் தகட்டினை வைத்து பூஜை செய்யக்கூடாது.  வீட்டில் ஒன்றிரண்டு செப்புத் தகடுகள் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.  இரண்டிற்கு மேற்பட்ட செப்புத் தகடுகள் இருந்தால், அது குடும்ப நிம்மதியைக் கெடுத்து விடும்.  இவன் வீட்டில் வைக்கப்பட்ட அத்தனை செப்புத் தகடுகளும் முறையில்லாமல் பூஜை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டவை.

என்றைக்கு மூன்று செப்புத் தகடுகளை இவன் வீட்டில் வைத்து பூஜை செய்து வர ஆரம்பித்தானோ அன்றைக்கே இவன் குடும்பத்திற்கு சோதனைகள் வர ஆரம்பித்து விட்டது.  முறைப்படி வீட்டில் யாகம் வைத்துப் பண்ணாத எந்த செப்புத்தகடுகளும் பயனற்றவை.  இந்த தப்பை இவன் செய்திருப்பதால் குடும்பத்தில் இத்தனை சோதனை" என்றார் அகத்தியர்.

மேலும் அவர் கூறும் பொது "தவறான முறையில் பூஜை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட சுதர்சன யந்திரம் வைத்து என்றைக்கு வீட்டில் பூஜை செய்ய ஆரம்பித்தானோ அன்று முதல் இவனது ஒரே மகன் சித்தம் கலங்கி போனான்.  துஷ்ட தேவதைகளிடம் மாட்டிக்கொண்டான்.  மற்ற இரு பெண்கள் வீட்டில் "தீட்டு" அதிகமாக பட்டதாலும் அவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனைகள் ஏற்பட்டது" என்று முடித்தார்.

வந்தவருக்கு இதைக் கேட்டதும் முகம் இருண்டு போயிற்று.

யார் எந்த செப்புத் தகட்டைக் கொண்டு தந்தாலும் உடனே வாங்கிக் கொண்டு பூஜை அறையில் ஆணியடித்து சட்டென்று மாட்டிக் கொள்வார்.  இவருக்கு "யந்திரப் பைத்தியம்" என்று பெயர், என்று தெரிய வந்தது.

மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் எந்திரம் எதுவாக இருந்தாலும் வாங்குவார்  "இந்த செப்புத் தகட்டை வைத்து கொண்டால் கோடீஸ்வரர் ஆகலாம்.  கடன் தொல்லை விலகும், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.  நீண்ட நாள் வியாதித் தொல்லை தீரும் என்று யார் சொன்னாலும் அதை நம்பிக்கையுடன் வாங்குவார், என்று பின்னர் தெரிந்தது.

"அகத்தியர் சொன்னபடி எல்லாம் செய்துவிட்டு வாருங்கள்.  அருமையான செய்தி கிடைக்கும்.  எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்" என்று அனுப்பி வைத்தேன்.

ஆனாலும் அவர் முகத்தில் ஏதோ கவலை இருப்பது தெரிந்தது. "ஒரு வேளை அகத்தியர் யந்திர விஷயத்தைப் பற்றிச் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ" என்று என் உள் மனதில் தோன்றியது.  சரி! என்று விட்டுவிட்டேன்.

அடுத்த சில மாதங்கள் வரை அந்த தம்பதிகளை சந்திக்கவே இல்லை.  ஏதோ நல்லபடியாக குடும்பம் முன்னேறியிருக்கும் என்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் மாலை -

அந்தப் பெரியவர் தன குடும்பம், மகன், மகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.  சந்தோஷம் அவர்கள் முகத்தில் பரவியிருந்தது.

வந்தவர், வயது வித்யாசம் கூடப் பார்க்காமல் சட்டென்று என் காலில் விழுந்து "நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்.  அகத்தியர் கிட்டே சொல்லி மன்னிக்கச் சொல்லுங்கள்" என்றார்.

"என்ன தப்பு செய்தீர்கள்?"

"அகத்தியர் அருள் வாக்கை நம்பாமல் இன்னொருவரிடம் அகத்தியர் சொல்வது உண்மையா? என்று கேட்டேன்.  பரிகாரங்கள் நிறைய சொல்லியிருநதால் எனக்கு நம்பிக்கை வந்திருக்கும்.  பரிகாரம் ஒன்றே ஒன்று மட்டும் நீங்கள் சொன்னதால் மனம் உடைந்து போய் அந்த நபரிடம் சென்றேன்.

அவரோ கட கடவென்று சிரித்து "அகத்தியர் ஜீவ நாடியில் சொன்னதாக "அவன்" சொல்கிறான்.  அதை நம்பாதே.  அவருக்கே சவால் விடும்படி ஒரு பெரிய ஹோமம் செய்து பிரம்மாண்டமான "யந்திரம்" ஒன்றைச் செய்து தருகிறேன் என்று சொல்லி, பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.  அவர் கொடுத்த செப்புத் தகட்டை மறுபடியும் வீட்டு பூஜை அறையில் வைத்தேன்.  இது நான் செய்த மிகப் பெரிய தவறு.

அடுத்த சில மணி நேரத்தில் வந்த செய்திகள், நடந்த சம்பவங்கள், சில தேவை இல்லாத மரணங்கள் என்னைத் திகைக்க வைத்தன.  என் மனைவியோ கோபத்தில் என் வீட்டு பூசை அறையில் இருந்த அத்தனை செப்புத் தகடுகளையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டாள்.

எனக்கு, முதலில் என் மனைவி மீது கோபம் தான் ஏற்பட்டது.  ஆனால் அத்தனைச் செப்புத்தகடும் கிணற்றில் விழுந்த பின்னர் ஒன்றரை மாதங்களில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

முப்பது ஆண்டுகளாக இல்லாத சந்தோஷம் இப்போது கிடைத்துள்ளது. இப்பொழுதுதான் என் இல்லற வாழ்க்கை நல்லபடியாக மாறிவிட்டது. இரண்டாவது பெண் கருவுற்று இருப்பதாக சொல்கிறாள்.

இதை விட ஆச்சரியம் என் பையன் சித்த ப்ரம்மையிலிருந்து விடுபட்டு மற்றவர்களைப் போல்  நல்ல மனநிலைக்கு வந்து விட்டான்.  மறுபடியும் கல்லூரிக்கு படிக்க செல்கிறான்" என்றார்.

தொடர்கதையை சொல்வது போல் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைச் சொன்னார்.

நான் மவுனமாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு இப்படிச் சொல்கிறவர்கள் நாளைக்கு யார் பேச்சைக் கேட்டும் திசைமாறிப் போகலாம் என்றுதான் நினைக்கத் தோன்றிற்று.

அகத்தியரே! இவர்களை காப்பாற்றுங்கள் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.

இந்த தொகுப்பை வாசிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யந்திரங்களை வீட்டில் வைத்துக் கொள்ளும் முன் சற்று யோசிக்கவும். தேவையா?உண்மையான பக்தியையும், பிரார்த்தனையையும் விட உயர்ந்த்தது இந்த உலகில் எதுவும் இல்லை. ஏன் என்றால் எந்திர ரகசியங்கள் அனைத்தும் தெரிந்தவர் என்று அகத்தியரை தவிர வேறு ஒருவர் இங்கு இல்லை என்பது நிச்சயம்.

சித்தன் அருள்................. தொடரும்!

Sunday, 9 June 2013

பஞ்சேஷ்டி - ஒரு அறிமுகம் - அகத்தியர் அடியவர்களுக்காக!

பஞ்சேஷ்டி - சென்னை கொல்கத்தா நெடும் சாலையில், சென்னையிலிருந்து சுமார் ஒரு முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், அகத்தியர் உறையும் திருத்தலம்.  அகத்தியப் பெருமான் இந்த இடத்தில் ஐந்து மகா யாகங்களை செய்துள்ளார். அதன் பின்னர் லோக க்ஷேமத்துக்காக, பரத கண்டத்தை காப்பாற்றுவதற்காக பல முடிவுகளை எடுத்து அதை நடை முறைப் படுத்தினார் என்று கூறுகின்றனர்.  இந்த பதிவில், அந்த திருத்தலத்தை அறிமுகமில்லாதவ்ர்களுக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்த போது வலைப்பூவில் ஒரு ஒளிநாடா பார்க்க நேர்ந்தது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இன்றும் எல்லா மாதமும் "சதயம்" நட்ச்சத்திரம் அன்று, ஒரு உத்தரவின் பெயரால் சிறப்பு பூசையும் வழிபாடுகளும், அன்றைய தினம் மாலையில் நடப்பதாக தகவல்.  ஒரு முறை சென்று கலந்துகொண்டு அவர் அருள் பெறுங்களேன்.  அகத்தியருக்கு என்று ஒரு தனி சன்னதியும் உள்ளது. சிலா ரூபத்தில் அவரது பார்வை நம்மை மதி மயக்கிவிடும்.  குறிப்பாக அன்றைய தினம் அபிஷேகம் நடக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தித்துக் கொண்டு, ஒளி நாடாவை பாருங்கள்.

ஓம் அகத்தீசாய நமக!

Wednesday, 5 June 2013

சித்தன் அருள் - 127

[நாளை (06/06/2013) போகர் சித்தரின் ஜென்ம நட்ச்சத்திரம்.  பெரியவரை போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கி விடலாம் என்று ஒரு அவா.  ஆதலின், சித்தன் அருள் இந்த வாரம் மட்டும் புதன் இரவிலேயே.  மகிழுங்கள்!]

வழிபாட்டு ஸ்தலங்களாக கோவில்களும், பள்ளிகளும், மசூதிகளும் அமைக்கப்பட்டது, பொதுநல எண்ணத்துடனும், மனிதருக்குள் அறம் செய்யவேண்டும் என்கிற எண்ணததை விதைத்து அவனை வழி நடத்தவே, என்று அகத்தியர் பெருமான் ஆணித்தரமாக உரைக்கிறார்.  பிரார்த்தனைக்கு மீறிய பலமான, எளிய, ஒரு நல்ல வழி இந்த உலகத்தில் இல்லை என்றே கூறலாம்.  என்ன தான் முன்வினை கர்மா இருந்தாலும், பிரார்த்தனை என்பது தலை எழுத்தையே மாற்றக்கூடியது. கடைசியில் வெற்றி பெருவதுவ்ம் அதுவே என்கிறார் அகத்தியர்.  கலியின் பாதிப்பால் மனித மனம் உலகாதாய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, இறை பக்தி மனிதனை விட்டு விலகிவிடும் என்பதினால், அப்படி அலையும் மனதை ஒருமைபடுத்தி இறை எண்ணத்தை நோக்கி திசை திருப்பத்தான் சித்தர்கள் இத்தனை கோவில்களை அமைத்தனர்.  அவர்களுக்குத்தான் எத்தனை கனிவு!  அப்படிப்பட்ட கோவில்களுக்கே, அதன் விசேஷ நிகழ்ச்சிகளுக்கே அசுத்தம் காரணமாக பாதிப்பு வருமானால் சித்தர்கள் வந்து அதை சரி செய்து மறுபடியும் மகிழ்ச்சி நிலவ உதவி புரிவார்கள், என்பது தெள்ளத்தெளிவு.  அப்படி, அகத்திய பெருமான் வந்து உதவி புரிந்து ஒரு கோவிலின் தன்மையை நலம் பட செய்த ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.
  
நாடி படிக்கவேண்டும் என்று வேண்டி என் முன் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் மிகவும் நொந்து போய் இருந்தார்.

"என்ன விஷயம்?" என்று நான் கேட்க்கும் முன்பே அந்தப் பெரியவருடன் வந்திருந்த சிலர் ஒரே குரலில்

"எங்க ஊர் கோவில் கும்பாபிஷேகம் தட்டிக் கொண்டே போகிறது.  யார் துணிந்து செயல்பட்டாலும் அவர்கள் ஒரு மாதத்திற்குள் சட்டென்று இறந்து போய் விடுகிறார்கள்.  இப்படி எட்டு பேர்கள் வரை இறந்து விட்டதால், யாரும் தைரியமாக முன் வந்து ஏற்று நடத்த வருவதில்லை.  ஒருவரின் தலைமை இன்றி கும்பாபிஷேகம் நடத்துவது இயலாது. அந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடியுமா?  இல்லையா? ஏதாவது பிரச்சினை இருக்கிறது என்றால் கும்பாபிஷேகம் செய்யாமல் விட்டு விடலாமா? என்று கேட்கத்தான் வந்திருக்கிறோம்" என்றார்கள்.

"அது என்ன கோவில்?" என்றேன்.

"திரௌபதி அம்மன் கோவில்.  ஆயிரம் வருஷத்திற்கு முன்பு கட்டியது." என்றனர்.

"இதற்கு முன்பு எப்பொழுது கும்பாபிஷேகம் நடந்தது?"

"ஐம்பது வருஷம் ஆகியிருக்கும்." என்றனர்.

சில நிமிடம் அமைதிக்குப்  பின் நான் அகத்தியரிடம் வேண்டி நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

அகத்திய பெருமான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிட்டார்.

"கோவிலின் வட கிழக்குப் பகுதியில் எட்டடிக்கு தோண்டிப் பார்க்கட்டும்.  ஒரு மண் சட்டியில் தேவை இல்லாத கரும் பொருட்கள் இருக்கும்.  அதை கை படாமல் எடுத்து துணியைச் சுற்றி தெற்குத் திசையில் தூக்கி எறியட்டும்.  பிறகு அஷ்டதிக் பாலகர்களுக்கு எட்டு கலசம் வைத்து புண்ணியாகவாசனம் செய்து அந்த நீரை கோவிலின் எட்டுத் திக்குகளிலும் தெளிக்கட்டும்.  பிறகு பாலாலயம் செய்து கும்பாபிஷேக ஏற்ப்பாடுகளைச் செய்தால் தடையின்றி மிகவும் அற்புதமாக திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும்.  கவலைப் பட வேண்டாம்.  இனி உயிர் சேதம் ஏற்படாது" என்றார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் முதன் முதலாக வாய் திறந்து பேசினார் என் முன் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர்.

"அய்யா! இப்போதைக்கு நான்தான் பொறுப்பேற்று நடத்த இருக்கிறேன்.  அந்தக் கோவிலின் பரம்பரைச் சொந்தக்காரர், தர்மகர்த்தா என் கூடச் சேர்ந்தவங்க, உறவுக்காரங்க எல்லோரும் இதற்கு முன் தர்மகர்த்தாவாக இருந்து பார்த்தாங்க.  அவங்க அத்தனை பேர்களும் எப்போது இந்தக் கோவில் கும்பாபிஷேகம் பொறுப்பு ஏற்றார்களோ, அதிலிருந்து ஒரு மாசத்துக்குள்ள எதனால் என்று அறியாமலே இறந்து போயிட்டாங்க" என்றார் கவலையோடு.

"கவலைப் படாமல் இருங்கள்.  உங்களுக்கு ஒன்றும் ஆகாது.  அகத்தியர் சொன்னபடி செய்யுங்க. அது போதும்" என்றேன்.

"அவங்க உயிர் போனதுக்கு என்னங்க காரணம்?"

"அதைப் பற்றி இப்ப எதுக்கு கவலைப் படணும்.  முதல்ல தைரியத்தை வரவழச்சுட்டு போய் ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.  மிகுந்த நம்பிக்கையோடு புறப்பட்டுச் சென்றார்கள்.  அதே சமயம் அவர்களுக்காக நானும் வேண்டிக் கொண்டேன்.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.

திடீரென்று அந்த கும்பாபிஷேக கமிட்டியைச் சேர்ந்த ஒருவர் பதை பதைக்க ஓடி வந்தார்.

"அய்யா! அகத்தியர் அருள் வாக்குப் படி அந்த வடகிழக்குப் பகுதியிலே தோண்டிப் பார்த்தோம்.  மண்டையோடும் எலும்புக் குவியலும் தூள் தூளாகிக் கிடந்தது.  அதை எடுத்து தூரப் போடும் போது, யார் அந்த எலும்புக் கூட்டை எடுத்தாங்களோ அவங்களை ஒரே தூக்காக தூக்கிப் போட்டுவிட்டது. அந்த ஆளுக்கு ஒரு கையும் விளங்கலே, ஒரு காலும் விளங்கலே.  ஆசுபத்ரியிலே கொண்டு போய் சேர்த்திருக்கோம்.  இப்போ என்ன செய்யறதுன்னு புரியல்ல.  அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்கள் அய்யா" என்று கேட்டுக் கொண்டார்.

நாடியில் வந்து அகத்தியர் "கை படாமல் அந்தக் கரும் பொருளைத் தூக்கி எறியச் சொன்னேன்.  ஆனால் அதையும் மீறி அந்த கரும் பொருள் மீது கை வைத்ததால் ஏற்பட்ட விளைவு அது.  இருப்பினும் அவன் உயிருக்குப் பாதிப்பு இல்லை.  இன்னும் நான்கு மாதத்தில் இயல்பான நிலைக்கு வந்து விடுவான்.  பயப்படவேண்டாம்" என்று தைரியம் கொடுத்தார்.

வந்தவர் "கும்பாபிஷேகம் நல்ல படியாக நடக்குமா அய்யா?" என்றார்.

"நிச்சயம் நடக்கும்.  ஆனால் ஒன்று.  கும்பாபிஷேகம் நடத்துவோர் அனைவரும் தங்களுக்கு காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும்" என்றார் அகத்தியப் பெருமான்.

"அப்படியென்றால் என்ன?" என்றார் வந்தவர்.

"திரௌபதி அம்மன் முன்னிலையில் நாற்பத்தி எட்டு நாட்களுக்கு முன்பு (அதாவது பாலாலயம் ஆரம்பிக்கும் பொழுது) அம்மன் பாதத்தில் கயிறு வைத்து அர்ச்சனை செய்து, அதை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்" என்றார் அகத்தியர்.

"அப்படியே செய்கிறோம்"

"இன்னொன்று, அந்தக் கோவிலில் தோண்டப்பட்டு கண்டெடுத்த "மண்டை ஓடு" எலும்புத் துண்டுகள் பற்றி பயப்பட வேண்டாம்.  நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் கட்டிடமோ, மதில் சுவரோ இல்லை.  இந்தக் கோவிலில் பணி புரிந்த ஒரு சந்நியாசி இறந்து விட்டார். எனவே வேறு விதத்தில் சந்தேகப் பட வேண்டாம்" என்று விளக்கம் சொன்னார் அகத்தியர்.

மேலும் கூறும் போது, "எதற்கும் அந்த இடத்தில் ஒரு புண்ணியாக வசனத்தை" அந்தணர்களைக் கொண்டு செய்து விடு.  அதே சமயம் அந்தணர்களும் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும்.  இல்லையென்றால் புண்ணியாக வசனத்தை செய்தும் பயனில்லை" என்று ஒரு புதிரை வைத்தார்.

"அய்யா! அந்தணர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.  அல்லது யாரை வைத்து இந்த புண்ணியாசக  வசனத்தைச் செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டினால் நன்றாக இருக்கும்" என்று வந்தவர் அகத்தியரிடம் வேண்டுகோள் விடுவித்தார்.

"நிச்சயமாக வழி காட்டுவேன்.  முறையாக காப்பு கட்டாததாலும், வடகிழக்கு மூலையில் பிரேத தோஷம் இருப்பதினாலும், பாலாலயம் செய்யும் அந்தணர்கள் சுத்தமாக இல்லாமல் கலசத்தை வைக்க முயன்றதாலும் தான் இதற்கு முன்பு பொறுப்பேற்ற அனைவரும் இறந்தனர்.  இப்போது முறைப்படி செய்யப் போவதால் எந்த உயிருக்கும் ஆபத்தில்லை, பயப்படவேண்டாம்" என்று சொல்லி அவரது சந்தேகத்தை தீர்த்தார்.

"அய்யா! தப்பாக எண்ண வேண்டாம்.  யார் புண்ணியாக வசனம் செய்யத் தகுதியுடையவர் என்பதை அடையாளம் காட்டினால், அகத்தியர் சொன்னபடி அந்த நபரைக் கொண்டே எல்லாக் காரியங்களையும் செய்து விடுகிறோம்.  எங்களுக்கு எந்த அந்தணர் நல்லவர், எந்த அந்தணர் சுத்தமில்லாதவர் என்று தெரியவில்லை" என்றார் வந்தவர்.

"எல்லா அந்தணர்களும் நல்லவர்கள் தான்.  ஆனால் முறைப்படி வேதம் கற்று அதிக பணத்துக்கு ஆசைப்படாமல் தெய்வ பக்தியோடு இறை பணி செய்து வருகிறவர்கள் மிகச் சிலரே.  திருவாரூர் காவிரிக் கரையோரம் உள்ள குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு பிரம்மச்சாரியாக இருக்கிற எண்பத்தைந்து வயதுடைய நீலகண்டன் என்னும் பெயரோடு வாழ்ந்து வரும், சித்தத்தன்மை மிக்க ஒருவனைத் துணை கொண்டு கும்பாபிஷேகப் பணியைச் செய்யலாம்" என்றார்.

"மிக்க நன்றி அகத்தியர் அய்யா! அப்படியே செய்கிறோம்" என்று பயபக்தியோடு நமஸ்காரம் செய்துவிட்டு, சென்றார் அவர்.

பதினெட்டு நாட்கள் கழிந்திருக்கும்.

திரௌபதி அம்மன் கும்பாபிஷேக தலைவர், துணை ஆட்கள் புடை சூழ மறுபடியும் என்னிடம் வந்தார்.

"அய்யா! அகத்தியர் சொன்ன படி நாங்கள் திருவாரூருக்குப் போனோம்.  ஆனால் நீலகண்டர் என்னும் நபரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து அசந்து விட்டோம்.  இப்போது வேறு என்ன செய்வது?" என்று கவலையோடு கேட்டார்.

"நீலகண்டப் பெரியவர் அந்த ஊரில் இருப்பது உண்மை தானா? என்று நான் கேட்டேன்.

"அந்த நபர் பற்றி பெருமையாக பேசுகிறார்கள்.  ஆனால் எப்போது ஊரில் இருப்பார், எப்போது எங்கே செல்வார்னு யாருக்கும் தெரியாதுன்னு சொல்றாங்க.  இப்போது என்ன செய்யறதுங்க?" என்றார்.

"கொஞ்சம் இருங்கள்" என்று அகத்தியரை வேண்டினேன்.  நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"யாரைத் துணை கொண்டு கோவில் விழாவைத் தடங்கலின்றி நடத்தலாம் என்று கேட்டதால் நீல கண்டன் போன்ற வேத ஒழுக்கம் உள்ளவனை அன்று அடையாளம் காட்டினேன்.  அவனைப் போல் பலர் ஆங்காங்கே இருப்பது உண்மை. எனினும் அந்த நீலகண்ட சாஸ்திரியே நிச்சயம் உங்களது திரௌபதி அம்மனுக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பார்.  பயப்படாமல் ஊருக்குப் போங்கள்" என்று அருள் வாக்கு தந்தார் அகத்தியர்.

நாடியில் அகத்தியர் சொன்னாலும் நல்லபடியாக நடத்தி முடியும் வரை அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.  அந்த நீலகண்ட சாஸ்திரிகளை விட்டால் நாட்டில் வேறு வேத விற்பன்னர்களே இல்லையா? எத்தனையோ கும்பாபிஷேகம் அன்றாடம் நடக்கத்தானே செய்கிறது?  எல்லாவற்றிற்கும் நீலகண்டரா வந்து நடத்தி வைக்கிறார்?  ஏதோ ஒருவர் செய்யும் தவறுக்காக எல்லா வேத விற்பன்னர்களும் பொறுப்பாக முடியாது.  எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கத்தானே செய்கிறது" என்று நானும் மனதில் எண்ணிக் கொண்டேன்.

ஆனாலும் அகத்தியர் கட்டளைக்கு அடிபணிய வேண்டியிருப்பதால் அமைதியானேன்.

ஓரளவுக்கு விஷயம் தெரிந்தவர்களை வைத்து "அஷ்டதிக்கு" திசைகளுக்கும், அந்த வடகிழக்குத் திசைக்கும் புண்யாக வசனம் செய்தாகி விட்டது.  இருப்பினும் அந்த நீலகண்டர் வரவில்லை.என்று செய்தி வந்து சேர்ந்தது.

எப்படியோ பணம் சேர்த்து முப்பது லட்சம் ரூபாயில் அந்த கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தனர்.  முன்னதாகவே கும்பாபிஷேகக் கமிட்டியார் அனைவருக்கும் காப்பு கட்டப்பட்டது.  இருந்தாலும், தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் அத்தனை பேர்களுக்கும் "உயிர் பயம்" இருக்கத்தான் செய்தது.  நல்ல அந்தணர்  என்று  அகத்தியரால் அடையாளம் காட்டப்பட்ட நீலகண்டரை பார்க்கவே முடியவில்லை, ஆதலால் கும்பாபிஷேகம் எப்படி நடக்குமோ என்ற பயம் வேறு அவர்களை ஆட்க்கொண்டது.

"பாலாலயம்" வைக்க நாள் குறிக்கப்பட்டது.  இதற்குள் சிலர் மறுபடியும் திருவாரூர் சென்று நீலகண்டரைத் தேடினர்.  அன்றைக்கும் சென்றவர், இன்று வரை வீடு திரும்பவில்லை, அனேகமாக அவர் "அலகாபாத்" சென்று இருக்கலாம் என்று தகவல் கிடைத்தது.

"அந்த நீலகண்டர், பாலாலயமும் செய்து முடிப்பான், அஞ்சிட வேண்டாம்.  நம்பிக்கை இல்லையெனில் விருப்பப்பட்ட நபரைக் கொண்டு பாலாலயமும், கும்பாபிஷேகமும் செய்து கொள்க" என்று அகத்தியர் கோபத்தோடு பதில் சொல்லி விட்டதால் அவர்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாடிப் போனார்கள்.  இது எனக்கே சங்கடமாக இருந்தது.

அன்றைக்கு பாலாலயம் செய்ய எல்லா எற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு வயதான வேத அந்தணர் அந்த திரௌபதி அம்மன் கோவிலுக்கு, விடியற்காலையில் வந்துசேர்ந்தார்..

தன்னை "நீலகண்டன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  வேறு ஒன்றும் பேசவே இல்லை.  மவுனமாக பாலாலயம் பொறுப்புகளை ஏற்றார்.  இதைக் கண்டு, அந்த கும்பாபிஷேக கமிட்டியாருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அகத்தியரே அனுப்பி வைத்தது போல் இருந்தது., அந்த நீலகண்டரின் நடவடிக்கை.  எப்படியோ அகத்தியர் வாக்கு நிறைவேறுகிறதே என்ற சந்தோஷம் அங்குள்ள அனைவரது முகத்திலும் தெரிந்தது.

கடைசிவரை பேசாமல் இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் கலச ஸ்தாபனம் செய்து திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் நீலகண்டர்.  எல்லோருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

அவருக்கு தகுந்த கெளரவம் செய்ய நினைத்து, பட்டு சால்வைகளும், பணமும் எடுத்துக் கொண்டு கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, அவர் தங்கி இருந்த இடத்திற்கு எல்லோரும் சென்றனர்.

ஆனால் நீலகண்டரை காணவில்லை.

எங்கு போயிருப்பார்? என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் தேடினர்.  ஆனால், கண்டு பிடிக்க முடியவில்லை.

தன்னைப் பற்றி அதிகம் பேசாமல் கும்பாபிஷேகம் பொறுப்பில் மட்டும் முக்கியக் கவனம் கொண்டு எள்ளளவும் குறைவின்றி மந்திரத்தை சொல்லி,  பாரம்பரிய மற்றும் சாஸ்த்திர சம்பிரதாய முறையைக் கைவிடாமல் கும்பாபிஷேகத்தை நடத்திக் கொடுத்த நீலகண்டரைத் தேடி திருவாரூர் சென்றனர், திரௌபதி அம்மன் கும்பாபிஷேக கமிட்டியினர்.

அங்கே "நீலகண்டர்" இருந்தார்.

ஆனால், அவர், கும்பாபிஷேகம் நடத்திய நீலகண்டர் அல்ல.

அப்படியானால் கும்பாபிஷேகம் நடத்தியவர் யார்?

இந்தக் கேள்விக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.  ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.  "சித்தர் வாக்கு கொடுத்தால், அந்த "நீல கண்டரே" நம்மையும் காக்க எந்த ரூபத்திலும் வருவார்" என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சித்தன் அருள் .................... தொடரும்!

Tuesday, 4 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 2

சித்தர்கள் நிலை என்பது வேறு. 

அவர்கள் தவமிருந்து தன்னை உணர்ந்து, தன் நிலையை இறையிடம் உணர்த்தி மேல் நிலை அடைந்தவர்கள்.  

அப்படிப்பட்ட நிலையை அடைந்த சித்தர்கள் கூட ஒரு எளிய மனிதனாகத்தான் ஏதோ ஒரு ஜென்மத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திட நம்பிக்கையும், அசைவில்லாத திட வைராக்கியமும் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்றது என்பதே உண்மை. அதுவே அவர்களை அனைத்தையும் துறக்க வைத்தது.  நாம் நமது என்கிற நிலையை களைந்து "லோக க்ஷேமம்"  என்கிற நிலைக்கு கொண்டு சென்றது.    

இந்தக் காலத்தில் அத்தனை கடினமான துறவு நிலை, குடும்பத்தில் பிறந்து நிறைய கடமைகளை சுமந்து நடக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு, சாத்தியமில்லை.  ஆகவே எத்தனை முடியுமோ அந்த அளவுக்கு "உன்னை சுத்தப் படுத்திக்கொள்" என்பதற்கு ஒரு சில விஷயங்களை சொல்லிப் போயினர்.  அவற்றில் ஒரு சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

 1. நடப்பதெல்லாம் ஈசன் செயல் என்றறி
 2. இரப்பார் முன், கையில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லாதே.
 3. இந்த நிமிடம், எதுவாகினும் நம்மிடம் இருக்க, வேண்டுபவனிடம், பின்னொருமுறை தருகிறேன் என்று சொல்லாதே.
 4. எதுவும் எனது என எண்ணாதே.  அனைத்தும் அதை படைத்த இறைவனுக்கே சொந்தம்.
 5. புகழும் போது "புளங்கிதம்" கொள்வதும், துக்கத்தில் துயரடைவதும் கூடாது.  (ஏக மன பக்குவ நிலை கொள்ளவேண்டும்).
 6. வாசி நிலை பழகவேண்டும்.
 7. பார்வையாளனாக இரு, எதையும் உருவாக்காதே.
 8. செயல் அனைத்தும் அறம் வளர்ப்பதாக வேண்டும்.
 9. பதற்றம் களைய பயம் விலகும்.
 10. ஆசை அறுத்தால் வாசனை விலகும். வாசனை இல்லேல் பிறவி தளை இல்லை.
 11. இயற்கையோடு ஒன்றி நில்.
 12. ஆக்கும், அழிக்கும் உரிமை இறைக்கு மட்டும்.

மேல் சொன்னவை ஒரு துளி தான்.  இன்னும் நிறைய உண்டு.  சரி! இனி வாழும் முறையில் பெரியவர்கள் சொல்லிப்போன சில விஷயங்களை பார்ப்போம்.

நம் வாழ்வில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளை தரப்படுத்தி விவரித்துள்ளார்கள்.  சில இடங்களில் இப்படி செய் என்கிற உத்தரவு மட்டும் தான் இருக்கும்.  ஏன் என்று கேள்வி கேட்க நமது மனம் விரும்பும்.  ஆனால் அதற்கு விடை இல்லை.  ஆதலால், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.  தரப்படுத்தப்பட்ட தலைப்புக்கள் பூசை முறை,  குளிக்கும் முறை, உறங்கும் முறை, தர்மம் செய்யும் முறை, வாழும் முறை என பலவிதமாக உள்ளது.

முதலில், குளிக்கும் முறையை பார்ப்போம்.

 • குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.  (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).
 • தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் "ஓம்" என்று த்யானம் செய்து எழுதுங்கள்.  அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.  ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
 • அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.  நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை. 
 •  தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.  துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.
 • பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
 • குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.  தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.
 • குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
 • நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
 • நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
 • நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
 • உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.

சித்தன் அருள்..................... தொடரும்!