​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 25 October 2012

சித்தன் அருள் - 95

அந்த ஓலைச்சுவடி கிடைக்குமா, கிடைக்காதான்னு ஒரு ஜோசியர் கிட்டே நாலணா கொடுத்து கேட்டா சொல்வான்.  அதை விட்டுட்டு இங்கே வந்து "கம்ப்ளைன்ட்" கொடுக்க வராங்களாம் போங்கயா, போங்க என்று எங்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சொன்னதால் நொந்து போன எனக்கு "இதைவிடப் பெரிய கேவலம் இனி இல்லை" என்று தோன்றியது.

ஆனால் --

யோசித்துப் பார்த்த எனக்குச் சமீபகாலமாக நிறைய தவறுகளைச் செய்து வருவதாகவே தெரிந்தது.  நான் செய்த தவறுக்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஆத்திரப்படுவது எந்த விதத்தில் நியாயம்? என்று என் உள் மனம் குத்திக்காட்டியது.

முன்பெல்லாம் நாடி பார்க்கும் முன்பு, ஒரு வித பயம் இருந்தது.  சில ஒழுக்க முறைகளைக் கண்டிப்பாகக் கடை பிடித்தேன்.  சமீப காலத்தில் அதைச் சரியாகக் கடை பிடிப்பதில்லை.  யார் கேட்டாலும், சட்டென்று ஓலைச் சுவடியை எடுத்துப் படிப்பது, அகஸ்தியர் என்னோடு இருக்கிறார் என்ற மமதை அல்லது என்னையும் அறியாமல் ஏற்பட்ட அகம் பாவமும் இருந்தது.  சில சமயம் மற்றவர் பாராட்டும் புகழ் மழையில் என்னை நானே அகஸ்தியராகவே எண்ணிக் கொண்டது, சில முக்கிய நபர்களுக்காக முறையான பக்தி, மரியாதை இல்லாமல், அவர்களுடைய பதவிக்கும், பண வசதிக்கும் மரியாதை கொடுத்து "நாடியை" அவர்கள் இடத்திற்கே வலியக் கொண்டு சென்று அவர்களுடைய நம்பிக்கையைப் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர்களுடைய இடசுத்தம் - மன சுத்தம் பற்றிக் கவலைப்படாமல் படித்ததிற்கு ஒட்டு மொத்தமான தண்டனைதான் இது என்று நினைத்துக் கொண்டேன்.

"ச்சே! இனிமேல் இந்த மாதிரி ஏர்போர்டில் செய்த தவறை மறுபடியும் செய்யக் கூடாது.  முன்பு போல் முறையோடு பிரார்த்தனை செய்து படிக்க வேண்டும்" என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.

என்ன பிரயோஜனம்.  கையில் நாடி இல்லாத போதுதான் பிரசவ வைராக்கியம் போல் இப்படிப்பட்ட ஞானம் ஏற்படுகிறது.

ஒரு பொருள் கையில் இருக்கும் போது இப்படிப்பட்ட வைராக்கியம் ஏற்படுவதில்லை.  கை விட்டு போன பின்புதான் எல்லாத் தத்துவங்களும் ஞாபகத்திற்கு வருகிறது.

இனிமேல் அந்த ஓலைச்சுவடி என் கைக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.  இந்த சமாச்சாரத்தைக் கேட்டால் என் தந்தையை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இருக்க முடியாது.  "என் தாயாரோ, இனிமேல் என் மகன் ஒழுங்காக வீட்டில் இருப்பான்.  ஊர் சுத்த மாட்டான்.  குடும்பப் பொறுப்பை ஏற்பான்.  நான்கு பேர் தினமும் வீட்டிற்கு வந்து பிரச்சினைகளைச் சொல்லிக் கழுத்தறுக்க மாட்டார்கள்.  அவர்களுக்கு "காப்பி போட்டுக் கொடுக்கிற வேலை மிச்சம்" என்று தனக்குத்தானே ஆறுதல் பட்டுக் கொள்வார்.

இப்படிச் ச்சம்பந்தமில்லாத கற்பனைகள், யார் யார் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்ற விசித்திரமான சிந்தனை என்னைக் கூனி குறுக வைத்தன.

போலீஸ் நிலையத்திலிருந்து அவமானத்தைத் தாங்கிக் கொண்டு நாங்கள் நால்வரும் மௌனமாக மெயின் ரோடிற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன் எங்கள் எதிரே வந்தான்.

அவனது வலது கால் ஊனம்.  தொடைக்கு கீழே ஒரு குச்சி போல் கால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.  ஒரு நீண்ட மூங்கில் கம்பின் உதவியோடு மூச்சு வாங்காமல், ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான்.

அரைக்கால் நிஜார்.  இடுப்பிலிருந்து கீழே நழுவாமல் இருக்க அந்த நிஜாரின் மீது அரையணா கயிற்றால் ஒரு பல்பத்தை ஸ்க்ரூ போல் இறுகக் கட்டியிருந்தான்.  காலில் செருப்பு இல்லை.  மேல் சட்டையும் இல்லை.  கருத்த தோல்.  தலையில் பரட்டை.  முடி வெட்டி பல மாதமாக இருக்கும் போல் தோன்றியது.  அதுமட்டுமல்ல அவன் தலைமுடி எண்ணை பார்த்துப் பல வருஷமாகியிருக்கும்.

வேகமாக வந்து கொண்டிருந்ததினால் அவனுக்கு மூச்சு இறைத்தது.  உடல் முழுவதும் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் இத்தனையும் தாண்டி அவன் கண்களில் மட்டும் ஒரு அபூர்வமான ஓளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

எதிரில் வந்த எங்களைக் கண்டதும் மரியாதைக்காக ஒதுங்கி நின்றாலும் அவன் எதையோ எங்களுக்கு சொல்ல வருவதுபோல் தோன்றியது.  அவனை உற்றுப் பார்க்கும் பொழுது அவன் சாதாரணச் சிறுவனாக என் மனதிற்குத் தோன்றவில்லை.  தயங்கி தயங்கி நின்றதைப் பார்த்ததும் "என்ன?" என்று கேட்டேன்.

"சார்.  பல்லாவரம் ரோட்ல ஒரு விபத்து சார்.  ஒரு கார் மரத்திலே மோதி அப்படியே நிக்குது.  ஆனா......... கார்ல யாருமே இல்லை சார்" என்றான்.

"தினம் தான் நிறைய விபத்து அந்த ரோட்ல நடக்குது.  மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாம்பரம் வழியா வரவங்க அவசரமாக காரை ஓட்டும் போது இப்படிப்பட்ட விபத்து நடக்கறதில் ஆச்சரியம் ஒண்ணுமில்லை.  இதுக்கு போய் இந்தப் பையன் ஏன் அலட்டிக்கிறான்" என்று தான் நானும் என் நண்பர்களும் எண்ணினோம்.

"சரிதான்பா.  அதுக்குத்தான் டிராபிக் போலீஸ் இருக்காங்க.  அவங்க பார்த்துப்பாங்க.  நீ ஏன் கவலைப்படறே" என்றேன்.

"இல்லை சார், அந்த காருக்குள்ளே ஓலைச்சுவடி மாதிரி ஏதோ ஒன்னு கிடக்குது.  கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தேன்.  அது ஏது என்னனு புரியவில்லை.  நீங்க போற வழியிலே அதோ அந்த கண்ணுக்கு எட்டிய தூரத்துலே இருக்கு சார்.  போய் பாருங்க சார்" என்றான் நிதானமாக.

இதுவரை அலட்சியமாக அந்தப் பையன் சொலவதைக் கேட்டிருந்த நான் "என்னது..... ஓலைச் சுவடியா?" என்று என்னையும் அறியாமல் கத்தினேன்.

"ஆமாம் சார்.  நீள நீளமாக ஏதோ ஓலைச்சுவடி மாதிரி கிடக்கு சார்" என்றான்.  மறுபடியும் அழுத்தி அழுத்திச் சொன்னதால் அந்தப் பையனை அப்படியே விட்டு விட்டு அந்த இடத்தை நோக்கி ஓடினோம்.

"பகவானே! செய்த தவறை மன்னித்துவிடு! மறுபடியும் என் கைக்கு அந்த ஓலைச்சுவடியைத் தந்துவிடு" என்று வேண்டிக் கொண்டே அந்தச் சிறுவன் சொன்ன இடத்தை நோக்கிப் போன பொழுது -

எங்கள் கண்ணுக்கு எட்டியவரை எந்த காரும் மரத்தில் மோதி நிற்கவில்லை.  விசாரித்துப் பார்த்ததில் அப்படி எதுவும் நடந்ததாக யாரும் பார்க்கவில்லை என்பது தெரிந்தது.

எனக்கு வந்த ஆத்திரத்தில் அந்த பையனை அறைந்து நாலு சாத்து சாத்த வேண்டும் போல் தோன்றிற்று.  பற்களை நற நறவென்று கடித்துக் கொண்டேன்.  இன்னும் சொல்லப் போனால் போலீஸ் நிலையத்தில் பட்ட அவமானத்தைக் காட்டிலும் இந்தப் பையனால் ஏற்பட்ட ஏமாற்றம் மிக அதிகமாகப்பட்டது.

சோதனை காலம் ஆரம்பித்துவிட்டது.  இனிமேல் ஒளியாவது சுவடியாவது எல்லாவற்றையும் விட்டுவிட்டு உருப்படுவதற்கு வழியைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பாதையோரத்தில் காணாமல் போன என்னால் பலகாலம் படிக்கப்பட்ட அந்த அகஸ்தியர் ஜீவநாடி புற்களின் மீது கிடந்தது.

ஓடிப்போய் எடுத்தேன்.  அப்படியே ரோடு என்றும் பார்க்காமல் அதற்கு நீண்ட நமஸ்காரமும் பண்ணினேன்.

என்னுடன் வந்த நண்பர்களுக்கு ஏதோ ஒரு சினிமாவில் நடக்கின்ற கதைப் போல் தோன்றியதேத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.

விமான நிலையத்திலிருந்து  காரைக் கிளப்பிய அவர்களுக்குக் கொஞ்ச தூரம் சென்றபிறகு காரில் நாடி இருப்பதைப் பார்த்திருப்பார்கள்.  இது எதற்கு நமக்கு? என்றெண்ணி போகும் பொழுது தூக்கி எறிந்திருப்பார்கள்" என்றான் என் நண்பன்.

"அதெல்லாம் இருக்காது.  ஒரு வேளை இந்த நாடியே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று பயந்து தூக்கி எறிந்திருப்பார்கள்" என்றான் இன்னொருவன்.

"ஏது எப்படியோ! கைவிட்டு போன நாடி எனக்கு திரும்பி வந்து விட்டது.  அது போதும்" என்று சந்தோஷமாக சொன்னேன் நான்.

"அது சரி, அந்தப் பையன் யார்? எதற்காக நம்மைப் பார்த்து கார் விபத்து, ஓலைச்சுவடின்னு சொன்னான்" என்று நண்பர்கள் எல்லோரும் ஒரே குரலில் கேட்டனர்.

"எனக்கும் அது ஏன்? என்று தெரியவில்லை.  பிரார்த்தனை செய்து அகஸ்தியரிடம் இது பற்றிக் கேட்டுவிடலாமே" என்றேன்.

"அது தான் முடியாதே!  ஆறு மாதம் நாடியைப் படிக்க முடியாதுன்னு சொல்லிவிட்டதாக நீ தானே என்னிடம் சொன்னாய்" என்று எனக்கு ஞாபகப் படுத்தினான் இன்னொரு நண்பன்.

நான் வாய் மூடி மௌனியானேன்.

"சரி.  இனிமேல் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?" நண்பன் கேட்டான்.

"ஆறு மாத காலம் அகஸ்தியர் எனக்குக் கொடுத்த தண்டனையை ஏற்கத்தான் வேண்டும், யாருக்கும் நாடி படிக்கவும் மாட்டேன்" என்றேன்.

"பின்பு?"

அகஸ்தியர் கருணை காட்டினால் மீண்டும் படிப்பேன்.  இல்லை அவர் யாருக்கு இந்த நாடியைக் கொடுக்கச் சொல்கிறாரோ அவரிடமே கொடுத்துவிட வேண்டியதுதான்" என்றேன் நிதானமாக.

"எப்படி சொல்கிறாய்?"

"எனக்கு எப்படி இந்த ஓலைச் சுவடி கைக்கு வந்ததோ, அதே போல் "அகஸ்தியர்" வேறொருவருக்கு கொடுக்கச் சொல்வார்.  நானும் கொடுத்துவிடுவேன் அவ்வளவுதான்" என்று நான் சொல்லி முடிப்பதற்குள், எதிர் புறத்திலிருந்து அந்தப் பையன் விந்தி விந்தி வந்து கொண்டிருந்தான்.

"சார்... அந்த காரை பார்த்தீர்களா சார்" என்றான்.

"இல்லை.  நீ சொல்றப்போலே இங்கு எதுவும் விபத்து நடக்கவில்லை என்று அக்கம்பக்கத்திலே சொல்றாங்களே"

"இல்லை சார் என் ரெண்டு கண்ணாலே பார்த்தேன் சார்.  அதுக்குள்ளே எப்படி காணாமப் போச்சுன்னு தெரியவில்லை சார்"

"சரி... வேறு ஏதோ ஓலைச்சுவடி காருக்குள்ளே இருந்ததுன்னு சொன்னாயே.  அது இது தானான்னு பார்த்துச் சொல்" என்றேன்.

"ஆமாம் சார்.  காருக்கு பின் சீட்லே இருந்தது சார்.  இது எப்படி உங்களுக்குக் கிடைச்சது?" என்று ஆச்சரியப்பட்டு கேட்டான்.

"இந்தப் புல் மேலே கிடந்தது" என்று சுட்டிக் காட்டினேன்.

"சார் அந்த மரத்துக்குப் பக்க வாட்டிலே தான் அந்த கார் மோதி நின்னிட்டு இருந்தது" என்றான் மறுபடியும்.

"சரி. விட்டுத்தள்ளு.  அவ்வளவு சீக்கிரம் அந்த காரை யார் எடுத்துப் போயிருப்பாங்க.  விபத்தும் ஆகியிருக்காது.  யாரோ பெயருக்கு காரை நிறுத்திட்டு அப்புறமா எடுத்துப் போயிருப்பாங்க"

"அப்படின்னா எப்படி இந்த ஓலைச்சுவடி இங்கே வந்தது?"

"யோசிக்க வேண்டிய விஷயம்.  மரத்துக்குப் பக்கத்திலே அந்த காரை நிருத்தியிருப்பதை இந்தப் பையன் தப்ப புரிஞ்சிருப்பான்.  சரி.  எது எப்படிப் போனா என்ன நமக்கு.  காணாம போன அகஸ்தியர் ஜீவநாடி திரும்ப எனக்குக் கிடைச்சாச்சு" என்றேன்.

"இல்லை.  இதுல ஏதோ ஒரு சூட்சுமம் இருப்பதாகத் தோணுது! சரி.  அதைப் பத்தி பின்னால பார்த்துப்போம்.  இப்போ அவங்க அவங்க வீட்டுக்கு ஒழுங்கா போய்ச் சேர்ந்தா போதும்" என்று என் நண்பன் சொல்ல அனைவரும் இந்த விமானப் பயணத்தின் புதிய அனுபவத்தைப் பற்றி பேசியபடியே வீட்டிற்கு கிளம்பினோம்.

கிளம்பும் வரை எங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருந்த அந்த ஊனமுற்றச் சிறுவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றியது.

கையிலிருந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து அவனிடம் கொடுத்த போது அவன் அதை வாங்க மறுத்தான்.

"இந்தாப்பா.  காப்பியாவது சாப்பிடு" என்று என் நண்பர் தன் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார்.  முதலில் கொடுத்த பணம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதற்காக பணத்தை வாங்க தயங்குகிறானோ என்பது அவரது எண்ணம்.

"வேண்டாங்க" என்று மேலும் தயங்கினான்.

"பின் என்னதான் வேணும் என்கிறே" என்றேன் நான்.

"தப்பாக நெனைக்க மாட்டீங்களே" என்று கேட்டு விட்டு திரு திரு என்று முழித்தான்.

"தப்பாக நினைக்க மாட்டோம் என்ன வேண்டும்?" என்று கேட்டோம்.

"எனக்கு படிக்கணம்னு ஆசை.  யாரும் பள்ளிக் கூடத்திலே சேர்க்க மாட்டேங்கிறாங்க.  ஆகையினாலே நானே தனிய படிக்கணும்னு ஆசை.  உங்கள் கையில இருக்கிற இந்த ஓலைச்சுவடியை என்கிட்டே கொடுத்தீங்கன்னா நாலு பேர்கிட்டே காட்டி படிக்க ஆரம்பிப்பேன்.  எனக்கு இதை தரீங்களா?" என்றான் அவன்.

இதை கொஞ்சம் கூட நாங்கள் யாரும் எதிர் பார்க்கவே இல்லை.  அவனது படிப்புதாகம் புரிந்தது.  அவனது வறுமை நிலையும் தெரிந்தது.  ஆனால் எதுவும் செய்ய இயலாத நிலை.

இருந்தாலும் எங்களுக்கு இழந்து போன அகஸ்தியர் ஜீவ நாடியைக் கண்டு பிடித்துக் கொடுக்க பேருதவியாக இருந்தவன் என்பதால் அவனுக்கு இந்த நாடியைப் பற்றி மேலெழுந்தவாராக எடுத்துச் சொல்லிவிட்டு இரண்டு நாளில் அங்கு வந்து அவன் கல்வி கற்க வேண்டிய வசதிகளைச் செய்து தருவதாகச் சொன்னோம்.  உறுதி மொழியும் கொடுத்தோம்.

அப்போது அவன் கேட்டான்.

"சார். எனக்கு இந்த ஒலைச் சுவடியைப் படித்து நான் நன்றாக இருப்பேனா.  மத்தவங்க போல ஸ்கூலுக்கு போவேனா என்று கேட்டுச் சொல்லுங்க சார்" என்றான்.

அவனது எதிர்பார்ப்பை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.  இவ்வளவு சாமர்த்தியமாகப் பேசும் இவன் மிகவும் வறுமையுள்ள குடும்பத்தில் பிறந்திருக்க முடியாது என்று மட்டும் என் பொறியில் தட்டியது.

"ஆறு மாதத்திற்கு நான் வரமாட்டேன்" என்று அகஸ்தியர் சொன்ன பிறகு இந்தச் சிறுவனது வேண்டுகோளை எப்படி நிறைவேற்றுவது என்ற கவலை ஏற்பட்டது.

நல்லதோ, கெட்டதோ ஒரே ஒரு முறை இந்தச் சிறுவனுக்காக முயற்சித்துப் பார்ப்போமே என்று மனப்பூர்வமாக அகஸ்தியரை வேண்டினேன்.

"இந்தச் சிறுவனின் வேண்டு கோளுக்குத் தாங்கள் நாடியில் வரவேண்டும்.  பிறகு ஆறும் மாதம் தாங்கள் கட்டளைப்படியே காத்திருக்கிறேன்" என்று கெஞ்சினேன்.

அந்தச் சிறுவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது.  அகஸ்தியர் நாடியில் தோன்றினார்.  அதே சமயம் அந்தச் சிறுவனைப் பற்றிச் சொன்ன செய்திகள் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு முதல் மனைவி மூலம் பிள்ளை இல்லை.  எனவே மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்தார்.  அந்த இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவன் இந்த ஊனமுற்ற சிறுவன்.  தங்களது கோடிக்கணக்கான கம்பனியின் சொத்து எல்லாம் இந்த ஊனமுற்றச் சிறுவனுக்குப் போய் சேர்ந்து விட்டால் தன் கதி என்னாகுமோ என்ற பயத்தில் அந்தக் கோடீஸ்வரரின் முதல் மனைவி அடியாட்கள் மூலம் இந்த ஊனமுற்றக் குழந்தையை எடுத்துக் கூவத்தில் தூக்கி வீச ஏற்பாடு செய்தார்.  குழந்தையும் கூவமஅருகே நள்ளிரவு நேரத்தில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டது.

சித்தன் அருள் ........ தொடரும்!

Thursday, 18 October 2012

சித்தன் அருள் - 94


நான்கு பேருக்கு முன்னால் - சற்று அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த மூன்றாவது நபரை நிதானமாக உற்று நோக்கினேன்.

மீண்டும் அந்த நபரே பேச்சைத் தொடர்ந்தார்.

"ஏதோ ஓலைச் சுவடியாம்.  கொலைகாரங்க வந்தாங்களாம்.  அதனால் தான் விமானம் ரிப்பெயர் ஆகியிருந்ததாம்.  சும்மா கதை விடறாங்க.  இதையும் கேட்டுட்டு ஆமாம் சாமி போடறதுக்குன்னு நாலுபேர் இருக்காங்க.  இது உண்மையா இருந்தா முதல்ல ஓடிப் போய், போலீஸ் கிட்டே  கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாமே! அதை வுட்டுட்டு..." என்று மீண்டும் ஆக்ரோஷமாகத் தொடர்ந்தார்.

பார்க்க நாகரீகமாகவும் இல்லை.  பேச்சும் அகஸ்திய ஜீவ நாடியைப் பற்றி பெறும் குறை கூறியபடியே இருந்தது.  முன்பின் தெரியாத இவரிடம் வாதம் செய்தோ அல்லது அகஸ்தியர் ஜீவநாடியைப் பற்றி பேசியோ பலனில்லை என்று பொறுமையாக இருந்தேன்.

இப்படிப்பட்ட பல நபர்களை இதற்கு முன்பும் சந்தித்து இருக்கிறேன்.  அகஸ்தியரும் அவ்வப்போது அடையாளம் காட்டியும் வருகிறார்.

"நீ எனது மைந்தன்.  சில தெய்வ ரகசியங்களைச் சமுதாய நன்மைக்காகக் கூறுவேன்.  தெரிந்து கொள்.  ஆனால் எக்காரணம் கொண்டும் உணர்ச்சி வயப்பட்டு வெளியில் சொல்லிவிடாதே.  அகத்தியனைச் சோதிக்கத்தான் நிறைய பேர்கள் வருவார்கள்.  என்னைப் பற்றி தாழ்த்தியும் பேசுவார்கள்.  பொறுமையைக் கடை பிடி.  அவர்களோடு வாதம் செய்யாதே" என்று சொல்லி இருக்கிறார்.

இதை நினைவிற் கொண்டுதான், இப்பொழுது மௌனமாக இருந்தேன்.  ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து என்னை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார்.

"நாடியாவது.......... மண்ணாங்கட்டியாவது.  இதெல்லாம் சுத்த ஹம்பக்.  பச்சையாகச் சொல்லப் போனால் ஏமாத்து வேலை, பணம் பிடுங்கத்தான் இப்படி ஒரு "கட்டை" வைச்சுட்டு பல பேர் அலையறாங்க" என்றார் தொடர்ந்து.

எனக்குப் பொறுமை குறைந்து கொண்டே வந்தது.  அவரிடம் போய் நின்றேன்.

"சார், நீங்க யாரோ - நான் யாரோ! என்னைப் பத்தியோ அல்லது கையிலிருக்கும் நாடியைப் பத்தியோ உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம்.  இதில் தவறு இல்லை.  ஆனால் எதற்காக அனாவசியமாக சுத்தி சுத்தி அவதூறு பேசணும்.  விட்டுடுங்க சார்" என்றேன்.

"அதெப்படி விடமுடியும்.  போலிஸ்காரங்க கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை இந்த ஓலைச்சுவடியை வைத்துக் கண்டுபிடிக்கறதா சொன்னீங்க.  இதை எப்படி நம்பறது?"

"நம்ப வேண்டாம் விட்டுடுங்க"

"அப்படின்னா - கப்ச விடறேன்னு சொல்லுங்க.  நான் விட்டுடுறேன்" என்று சொல்லி எக்காளமாகச் சிரித்தார்.  இதை கண்டு என் நண்பர்களுக்கு கோபமும் - ஆவேசமும் வந்தது.

அந்த விமான நிலைய ஊழியர் அவரையும் என் நண்பர்களையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.

கன்வேயர் பெல்டிலிருந்து எங்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பும் போது என்னிடம் வாக்குவாதம் செய்த அந்த நபர் வந்தார்.  அவருடன் புதியதாக நான்கு பேர்களும் வந்தனர்.

"சார்.  என் பெட்டியைக் காணவில்லை.  அது எங்கிருக்கிறது என்று நாடி மூலம் கண்டுபிடித்துத் தர முடியுமா?" என்று பவ்யமாகக் கேட்டார்.

"உங்களுக்குத்தான் நாடி மீது நம்பிக்கை இல்லையே.  பின் எதற்காக என்னிடம் வருகிறீர்கள்! விமான நிலைய அதிகாரியிடம் போய்ச் சொல்லுங்கள்.  அவர் கண்டுபிடித்துத் தருவார்" என்றேன்.

இதற்குள் அவருடன் வந்த நான்கு பேர்களும் கெஞ்சினர்.  அவர்களுக்கு நாடியின் மீது நம்பிக்கை உண்டு என்று - அகஸ்தியர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்று பவ்யமாகப் பேசினார்.

"இப்பொழுது இங்கு நாடி படிக்க இயலாது.  வேண்டுமானால் நாளைக்குக் காலையில் வந்து சந்தியுங்கள்" அகஸ்தியர் உத்திரவிட்டால் படிக்கிறேன்" என்றேன்.  சட்டென்று அந்த நபர் என் காலில் விழுந்தார்.

"அந்தப் பெட்டியில் முக்கியமானப் பொருட்கள் இருக்கிறது.  அது இன்றே குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேரவேண்டும்.  அதிகாரிகளும் பெட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உடனே கிடைக்குமா - கிடைக்காதா - என்பதை மாத்திரம் ஓலைச்சுவடியில் கேட்டச்  சொன்னால் போதும்" என்றார் அவர்.  இப்பொழுது அவரது பேச்சில் மரியாதை இருந்தது.

"உண்மையில் அவர் என் காலில் விழுந்தது கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அப்படியும் பேசவேண்டாம். அடுத்த நிமிடம் காலில் விழாவும் வேண்டாம்.  யார் இவர்?  எதற்காக இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்? என்னையே சுற்றிச் சுற்றி வருகிறார்" என்று பயம் ஏற்பட்டது.

"சார், எவ்வளவு பெரிய விஷயத்தையெல்லாம் சட்டென்று சொல்ற அகஸ்தியர் நாடியிலே -இந்த சின்ன விஷயத்தைச் சொல்ல முடியாமலா போகும்? தயவுசெய்து கேட்டுச் சொல்லுங்க சார்" என்றார்.  அவர் கண்களில் நீர் வழிந்தது.

எல்லோர் முன்னாலேயும் அவதூறாக என்னைப் பற்றியும் அகஸ்தியர் ஜீவநாடியைப் பற்றியும் பேசிய அந்த நபர், அடுத்த இருபது நிமிஷத்திற்குள் என் காலில் விழுந்து பெட்டியைக் காணோம், அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்லுங்க சார்" என்று கேட்டபொழுது "அடடா! அகஸ்தியரின் திருவிளையாடல் தான் என்ன!" என்று ஆனந்தப்பட்டேன்.  கொஞ்சம் தலைகனமும் உண்டாயிற்று.  திமிரோடு அவரைப் பார்த்தேன்.

இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று என் நண்பர்கள் கூட பெருமிதப்பட்டுக் கொண்டனர்.

ஆனால் - 

விதி அங்குதான் விளையாட ஆரம்பித்ததை நானும் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

"வெளியில் எனக்கு வேண்டிய நபருடைய "கார்" இருக்கிறது அங்கு உட்கார்ந்து பார்க்கலாமா?" என்றார்.

"அகஸ்தியரிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.  எனகென்னவோ இது சரியாகத் தோன்றவில்லை.அப்புறமாகப் படிக்கலாம்.  அதற்குள் கண்டிப்பாக உங்களுடைய பெட்டி கிடைத்துவிடும்" என்றேன்.  அவர் மீது வெறுப்பு மட்டும் எப்படியோ ஏற்பட்டது.

ஆனால் ,

என் நண்பர்களோ அவரை ஆச்சரியப்பட வைத்து மூக்கறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னைத் தூண்டிவிட்டனர்.  இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள் என்று வெறுப்பு ஏற்றினர்.  மனதுக்கு சங்கடமாக இருந்தது.  இருந்தாலும் சரி என்றேன்.

பாத்ரூமுக்கு சென்று கை கால்களை அலம்பிக்கொண்டு அந்த நபர் புடை சூழ விமான நிலையத்திற்கு வெளியே வந்தோம்.

நண்பர்கள் தள்ளி நின்றனர்.  நானும் அந்த நபரும் மாத்திரம் தொலைவில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் கதவைத் திறந்தது பின் புற இருக்கையில் அமர்ந்தோம்.

"இந்த நாடி படிப்பதை உங்கள் நண்பர்களும் கேட்க வேண்டாமா, அவர்களையும் அழைத்து வாருங்கள்" என்றேன்.

"அவர்கள் வரட்டும் அல்லது வராமல் போகட்டும்.  நீங்கள் எனக்கு மாத்திரம் படித்துச் சொன்னால் போதும்" என்றார்.  இதை கேட்டதும் என்னவோபோல் இருந்தது.  பிரார்த்தனை செய்து விட்டு நாடியைப் புரட்டினேன்.

"தெய்வீக ரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று வான் ஊர்தியில் கொள்ளை, கொலை செய்த கொலைகாரர்களைப் பற்றியும் அதற்காகவே வான் ஊர்தியில் கோளாறு ஒன்றை உண்டாக்கி, அவர்களைப் பயமுறுத்தியதையும் சொன்னேன்.  ஆனால் நீயோ என்னுடைய சொல்லை மீறி அதனை இங்குள்ள அனைவருக்கும் பரப்பிவிட்டாய்.  அகத்தியன் இருக்கிறான் என்ற தைரியத்தில் யாரிடம் எதைச் சொல்லக் கூடாதோ அவனிடமே நான் சொன்ன ரகசியத்தைச் சொல்லி விட்டாய்.  அகத்தியனுக்கு அவமரியாதை செய்துவிட்டாய்.

இதை அறிந்துகொண்டு அவனைச் சேர்ந்த நான்கு பேரும் தப்பிவிட்டனர்.  அந்தக் கொலைகாரர்களுக்கு உதவிய நண்பன்தான் இவன்.  எந்த ஒரு உடையையும் கையோடு கொண்டு வரவில்லை.  ஆனால் கொண்டு வந்தது போன்று நாடகமாடுகிறான்.  இவனை நம்பாதே.

ஆனாலும் எந்த இடத்தில் அமர்ந்து நாடி படிக்கக் கூடாதோ அந்த இடத்தில் அமர்ந்து நாடி படித்தாய்.  அடக்கமில்லை.  இதன் காரணமாக இன்னும் ஆறு மாதத்திற்கு உனக்கு நாடிபடிக்கும் திறமையை இழந்தாய்.  இனி நான் உன்னிடம் இல்லை" என்று மிகுந்த கோபத்தோடு சொன்னவர், பின்பு ஒ௦லைச்சுவடியில் தென்படவே இல்லை.

வியர்த்துப் போனேன்.

"என்ன ஆச்சு. என் பெட்டி கிடைத்துவிடுமா?" என்று ஒன்றும் தெரியாதவர் போல் அவர் கேட்டார்.

எனக்கு அவரைக் கண்டதும் ஆத்திரம் பிடுங்கித் தின்றது.  அடிவயற்றிளிருந்து கத்தினேன்.

"ஏன் சார் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்? நீங்கள் யார் என்று அகஸ்தியர் சொல்லிவிட்டார்.  பெட்டி எதையும் கையோடு கொண்டு வரவில்லை.  அந்த பஞ்சமகா பாவத்தைச் செய்தவர்களுக்கு நீங்களும் உடந்தையாம்.  அகத்தியனைச் சோதிக்கவே இப்படியொரு நாடகமாடிநீர்கள் என்கிறார் அகஸ்தியர்" என்று பொரிந்து தள்ளினேன்.

நான் இப்படி ஆக்ரோஷமாகச் சண்டை போடுவதைக் கண்டு தள்ளி நின்று கொண்டிருந்த அவரின் நண்பர்கள் ஓடோடி வந்தனர்.  அதே சமயம் என்னை நோக்கி என் நண்பர்களும் வந்தனர்.

கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த நிகழ்ச்சி நடந்தது.

காரின் வெளியே நின்று கொண்டிருந்த என்னைச் சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அவரோடு வந்திருந்த அந்த நான்கு நண்பர்கள் சட்டென்று அந்த காரில் ஏறி அமர்ந்தனர்.  அவரும் விருட்டென்று காரில் ஏற - அடுத்த நிமிடம் அவர்களுடைய "கார்" விருட்டென்று பறந்தது.

என்னை நோக்கி ஓடி வந்த என் நண்பர்கள் பதறியபடி "என்ன நடந்தது?" என்று கேட்டனர்.  நான் நடந்த விஷயத்தைச் சொன்னேன்.

"ஏதோ சினிமாவில் வருகிற நிகழ்ச்சிபோல் இருக்கிறது.  இதைச்சும்மா விடக்கூடாது.  வா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்" என்றனர்.

"வேண்டாம்.  ஏற்கனவே அகஸ்தியர் என் மீது கோபப்பட்டு போய் விட்டார்.  இனி ஆறு மாதத்திற்கு யாருக்கும் நாடி படிக்க முடியாது.  எனக்கு நேரம் சரியில்லை என்று எண்ணுகிறேன்.  போலீஸ் ஸ்டேஷனுக்குப் போற சமாச்சாரம் வேண்டாம்"

"அது சரி - அந்த ஓலைக்கட்டு எங்கே?" என்று கேட்டான் என் நண்பர்களில் ஒருவன்.  தேடிபார்த்தேன்.  "சுளீர்" என்றது எனக்கு.

"அது அந்த காரில் வைத்திருந்தேன்.  காரோடு போய்விட்டது" என்று துக்கம் தொண்டையை அடைக்க நான் ஏமாந்து போனதைச் சொன்னேன்.

"அடப்பாவி! இருப்பதையும் கெடுத்துவிட்டாயே! இப்போ என்ன செய்யப் போகிறாய்?"

"என்ன செய்வதென்று புரியவில்லை" குழம்பிப் போய்ச் சொன்னேன்.

"சரி இதுக்காகவாவது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் வா" என்றனர்.  வேண்டா வெறுப்பாக அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

"காரின் நம்பர் தெரியுமா? அல்லது காரின் நிறமாவது தெரியு௭மா?  அந்த ஆட்கள் தமிழர்களா? ஆந்திராவை சேர்ந்தவர்களா?  ஏதாவது சொல்ல முடியுமா?  அப்படி என்ன விலை உயர்ந்த பொருள் காணாமல் போய் விட்டது?" என்று ஆயிரம் கேள்விகளைக் கேட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கடைசியில் அது ஓலைச்சுவடி என்றதும் எக்காளமாகச் சிரித்தார்.

"யோவ்! சரியான ஆளுங்கய்ய நீங்க.  போயும் போயும் ஒரு ஓலைச்சுவடிக்காகவா இங்கு வந்து கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தீங்க.  போங்க போய் யாராவது ஒரு ஜோசியர்கிட்டே "நாலணா" கொடுத்து கேட்டா அவன் சொல்வான், ஓலைச்சுவடி கிடைக்குமா, கிடைக்காதான்னு" என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு "வந்துட்டாங்க அங்கேயிருந்து.  ஒரு "காலணா" காசுக்குப் பிரயோஜனமில்லை" என்று அங்கு நிற்கவிடாமல் விரட்டியடித்தார்.

"அகஸ்தியரே என்ன இப்படிச் சோதனை செய்கிறீர்!  மிகப் பெரிய போலீஸ் அதிகாரி எல்லாம் பய பக்தியுடன் நின்று அருள்வாக்கு பெற்று, பெரிய பெரிய பிரச்சினையிலிருந்து தப்பிக்க வைத்தது நீங்கதான்!  இன்னிக்கு ஒரு சாதாரண அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர்  இப்படிப் பேசி, கேவலப்படுத்தும்படி ஆக்கிவிட்டீரே" என்று மனம் நொந்து பிரார்த்தனை செய்தேன்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

சித்தன் அருள் ................. தொடரும்!

Wednesday, 10 October 2012

சித்தன் அருள் - 93


அன்றைக்கு ஓர் நாள்...........

திருப்பதி பெருமானைத் தரிசித்துவிட்டு அப்படியே அருகிலுள்ள விமானத்தளத்தில் உள்ள விமானத்தில் ஏறி சென்னைக்கு வந்துவிடலாமென்ற எண்ணத்தோடு நானும் எனது நண்பர்கள் மூவரும் திருப்பதிக்குப் பயணமானோம்.  போகும் பொழுது ரயிலில் செல்வது, வரும் பொழுது விமானத்தில் வருவது என்ற ஏற்பாடு.  நண்பர்கள் உற்சாகமாக ஏற்பாடு செய்தனர்.

ஆனால் என்ன காரணத்தினாலோ மனது ஒரு நிலையில் இல்லை.  ஏதோ ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படப் போகிறது.  இதில் நாமும் நிச்சயமாக மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று என் உள்ளுணர்வு விடாமல் சொல்லிக் கொண்டே வந்தது.

நண்பர்களிடம் சொல்லி அவர்களை மட்டும் விமானத்தில் அனுப்பிவிட்டு நான் மட்டும் பஸ் அல்லது ரயிலில் சென்னைக்கு திரும்பிவிடலாம் என்று கூட முயற்சி செய்தேன்.  அவர்கள் எல்லோரும் முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்ய ஆசைப்பட்டு வந்ததால் யாரும் என் கோரிக்கையை ஏற்கவில்லை.

திருப்பதி தரிசனம் முடிந்து விமானத்தில் ஏறிய பொழுது தான் கதிகலங்க வைக்கும் அந்த நிகழ்ச்சி நடந்தது.

திருப்பதி மலையானை மானசீகமாக வேண்டிக் கொண்டு விமானத்தில் ஏறியதும் சுற்று முற்றும் பார்த்தேன்.  எனக்குத்  தெரிந்தவர்கள், என் நண்பர்களை தவிர வேறு யாருமில்லை.  இருந்தாலும் பயம் மனதில் இருந்தது.  அப்போதெல்லாம் தீவிரவாதம் இல்லை.  எனவே யாரும் விமானத்தைக் கடத்திச் சென்றதாக வரலாறு இல்லை.  அப்படிப்பட்ட சம்பவம் எந்த நாட்டிலும் அப்போது நடக்கவில்லை.  எனவே எனக்கு அந்தப் பயம் இல்லை.  ஆனால் - விமானம் ஓடு பாதையை விட்டு மெல்ல மேலே எழுந்ததும் அடிவயிற்றில் திடீரென்று ஓர் பயம்.  அதனால், முதல் விமான பயணம் இனிக்காமல் போனது என்னவோ ஒரு பெரும் குறை தான்.

விமானம் முன்னூறு அடிக்கு மேல் பறப்பதாகவும், இன்னும் பதினைந்து நிமிடத்தில் இந்த விமானம் சென்னையை நெருங்கிவிடும் என்று தகவல் சொன்னார் ஒருவர்.

தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள் என் நண்பர்கள்.  கூடவே என்னையும் வம்புக்கு இழுத்தார்கள்.

கொஞ்ச நேரம் கழிந்தது.

விமானம் சென்னை விமான நிலையமருகே வந்த பொழுது மேலிருந்து பறவைப் போல இறங்கிய விமானம் ஓடுபாதைக்கு இறங்க முயற்சித்த போது சட்டென்று மீண்டும் ஆகாயத்தை நோக்கித் தாவியது.

இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் தரையில் இறங்கிவிடும்.  எனக்குள் ஏற்பட்டிருந்த பயம் விலகிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு மறுபடியும் விமானம் மேலே ஏறியதும் ஏற்கனவே இருந்த பயம் மேலும் அதிகரித்தது.

பயந்து பயந்து பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எங்கள் முன்பு வந்து நின்ற விமானப் பணிப்பெண் மெதுவாக பதறாதபடி ஆங்கிலத்தில் ஒரு சிறு அறிக்கையை நுனி நாக்கால் வெளியிட்டாள்.

"விமானத்தில் சின்ன பழுது ஒன்று ஏற்பட்டிருக்கிறது.  அதன் காரணமாக விமானத்தின் கால் சக்கரங்களில் ஒன்று சரியானபடி இயங்கவில்லை.  இன்னும் சற்று நேரம் இந்த விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும்.  அதற்குள் கால் சக்கரங்களைப் பூமியில் இறக்கும் என்ஜின் பழுது செய்யப்பட்டுவிடும்.  பயணிகள் பயப்படவேண்டாம்" என்று அமைதியாக சொல்லிவிட்டு செயற்கையாக ஒரு புன்னகையை எல்லோருக்கும் சிந்திவிட்டு விமானியின் கேபினுக்குள் சென்று விட்டாள்.

எனக்கு மட்டுமல்ல, என்னைச் சேர்ந்த அத்தனை பேர்களுக்கும் உண்மையான பயம், இதைகேட்ட பிறகுதான் முகத்தில் தோன்றியது.  அனைவரது முகத்திலும் கவலை ரேகை படர்ந்தது.

பத்து நிமிடம் கழிந்தது.

விமானப் பணிப்பெண் மீண்டும் எங்கள் முன் தோன்றி "கொஞ்சம் அமைதியாக இருங்கள்.  இன்னும் விமானத்தில் கோளாறு சீர் செய்யப்படவில்லை.  விமானம், விமானத்திலுள்ள பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானத்திலுள்ள பெட்ரோலை இப்பொழுது கடலில் கொட்டிவிட்டு, சிறிய அளவு பெட்ரோலுடன் விமானம் மீனம்பாக்கத்தை நோக்கி செல்லும், பயணிகள் பத்திரமாகத் தரை இறக்கப்படுவார்கள்.  பயப்படவேண்டாம் என்று கடைசியாகச் சொல்லிவிட்டு, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் விமானியின் கேபினுக்குள் ஒய்யாரமாக நடந்து சென்று விட்டார்.

இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பணக்காரர் மெல்ல வாய் திறந்தார்.

"நான் அடிக்கடி விமானப் பயணம் செய்கிறவன்.  விமான என்ஜினில் ஏதாவது ஒன்று பழுதானால் ஒரு என்ஜினை வைத்துக் கூட பத்திரமாக விமானத்தைத் தரையில் இறக்கிவிடலாம்.  ஆனால் விமானச் சக்கரங்களில் ஒன்று மட்டும் பழுதடைந்து இருப்பதால், விமானம் ஓடு பாதையை நெருங்கினால் ஒரு சக்கரத்தால் ஓட முடியாது.  ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டுதான் விமானம் தரையிறங்க வேண்டியிருக்கும்" என்றார்.

அவ்வளவுதான், இதைக் கேட்டதும் என் நண்பர்களுக்கு சப்தநாடியும் நின்று விட்டது. 

"ஒரு பக்கமாக ஒரு கால் சக்கரத்தோடு விமானம் தரையில் இறங்கும் போது விமான ஒட்டி கவனமாகச் செயல்படவில்லை என்றால், விமானம் குப்புற விழுந்து தீப்பிடிக்கும்" என்று அடுத்த அணுகுண்டையும் தூக்கிப் போட்டார்.  இதைக் கேட்டதும் "எமனே" பக்கத்தில் வந்து நிற்பது போல் தோன்றிற்று.  நான் நினைத்தது மிகவும் சரியாகப் போயிற்று என்பதை இப்பொழுதுதான் மற்றவர்கள் உணர ஆரம்பித்தார்கள்.  மரணபயம் அவர்களைக் கவ்வியது.

"இந்த நிலை ஏற்படுமா - அல்லது தப்பித்துக் கொள்ள முடியுமா?" என்று அகஸ்தியரிடம் கேட்டுச் சொல் என்று என் கையோடு கொண்டு வந்திருந்த ஜீவ நாடியைக் காட்டிக் கேட்டார்கள் என் நண்பர்கள்.

விமானம் மீனம்பாக்கத்தை நோக்கி மெல்ல இறங்குவதைக் கண்ட போது, பயணம் செய்த அத்தனை பேர்களும் இறை வழிபாடுதனை மனமுருகி செய்தார்கள்.

இந்த தடவை விமானம் சரியாக எந்தவித குளறுபடியுமின்றி தரையில் இறங்கிவிடும் என்று நம்பிக்கையோடு சொன்ன விமானப் பணிப்பெண் மறுபடியும் விமானம் மேலே எழும்பியதைக் கண்டு அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்.  ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.

மறுபடியும் விமானம் வானத்தில் வட்டமிடத் தொடங்கியது.

"கீழே தீயணைப்புப் படையினர்கள், அவசர சிகிர்சைக்கு உரிய ஆம்புலன்ஸ், போலீசார், விமான நிலைய ஊழியர்கள் எல்லோரும் தயாராக இருப்பதால் பயணிகள் பதறவேண்டாம்.  விமானத்தில் உள்ள கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விடும்.  யாரும் டென்சனாகி இருக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டாம்.  பெல்டால் நன்றாகக் கட்டிக் கொள்ளவும்" என்று இப்போது வேறொரு ஆண் விமானப் பணியாள் நிதானமாக அறிவித்ததோடு அவரே ஒவ்வொரு இருக்கையாக வந்து பெல்டைக் கட்டி விட்டுக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் தான் அந்த விமானப் பணியாள் என் பக்கமும் வந்தார்.  நான் என் கைப்பையிலிருந்த அகஸ்தியர் ஜீவ நாடியை எடுத்து பிரார்த்தனை செய்து படிக்க ஆரம்பித்தேன்.  அகஸ்தியர் என் கண்ணில் ஓளி வடிவாக வந்தார்.

""என்ன இது?" அந்த விமானப் பணியாள் என்னைக் கேட்டார்.

"அகஸ்தியர் ஜீவநாடி"

"எதற்காக இப்பொழுது இதனைப் பார்க்கிறீர்கள்.  பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.  இதனை உள்ளே வைத்துவிட்டு பெல்டை நன்றாகக் கட்டிக் கொள்ளுங்கள்"

"மன்னிக்கவும். இந்த விமானம் உடனடியாகத் தரை இறங்காது.  இன்னும் நான்கு முறை வட்டமடித்து விட்டுத்தான் இறங்கும்.  அதற்குள் நான் ஏன் பெல்டைக் கட்டிக்கொள்ள வேண்டும்?" என்றேன்.

"எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?"

"அகஸ்தியர் சொன்னார்.  அதை உங்களுக்கு சொல்கிறேன்".

"தயவுசெய்து எதுவும் சொல்லி விமானப் பயணிகளைக் கலங்க அடித்து விடாதீர்கள்.  நீங்கள் சொல்வது எதையும் நான் நம்பத் தயாராக இல்லை" என்றார் கடுமையாக.

இதற்குள் என்னருகே இருந்த நண்பர்கள் விமானப் பணியாளரிடம் என் கையிலிருக்கும் ஜீவநாடியைப் பற்றிச் சொல்லி அவரைச் சமாதானம் செய்ய முயற்ச்சித்தார்கள்.  ஆனால் துளி கூட அவர் இதை நம்பவில்லை. .  அவரோ தன் பிடியை விட்டுக் கொடுக்காமல் மேலும் கடுமையாக உத்தரவு போட்டார் "விமானத்தில் நான் நாடியைப் படிக்ககூடாது" என்று

என் நண்பர்கள் இதைக் கேட்டு கொதிப்படைந்தார்கள்.

ஏற்கனவே மரணபயத்தில் இருந்த அவர்கள், இப்பொழுது கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதை அறிந்து, இனிமேலும் இதனை வளர விடக்கூடாது என்று எண்ணி -

அகத்தியரை மனதார வேண்டினேன்.  அவர் நாடியில் சொன்ன தகவல் என்னைத் திக்கு முக்காட வைத்தது.  அதனை முழுமையாக வெளியே சொல்லாமல் விறுவிறு என்று அந்த ஜீவநாடியை மூடி கீழே வைத்தேன்.  விமான இருக்கை பெல்டை இறுக்கிக் கட்டிக் கொண்டேன்.  எனக்கும் உயிர் வெல்லமாயிற்றே!  விமானம் மீண்டும் ஓடுபாதைக்கு கீழே இறங்கியது.  ஆனால் வழக்கம் போல் சட்டென்று மேலே கிளம்பியது.  இந்த தடவை விமானத்தின் கால் சக்கரம் வேலை செய்வதாகவும், ஜாக்கிரதையாக விமானம் தரையில் இறக்கப்படும் என்று நம்பிக்கைத் தந்தார்கள்.

இப்படியே மூன்று முறை வானத்தில் வட்டமடித்த விமானத்தில் இருக்கிற பெட்ரோலும் காலியாகிக் கொண்டிருந்ததால் கண்டிப்பாக தரை இறங்கித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

இப்பொழுது விமானம் நான்காவது முறையாக வட்டமடித்த போது எந்த விமானப் பணியாள் என்னை நாடி படிக்க கூடாது என்றாரோ அவரே மெதுவாக என்னிடம் வந்தார்.

"நீங்க சொன்ன மாதிரி நான்காவது முறையாக வட்டமடிக்கிறோம்.  விமானி எப்படியும் தரயிரங்கித்தான் தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நாம் பத்திரமாக தரையிறங்கி விடுவோம் அல்லவா" என்று பவ்யமாக கேட்டார்.

"ஒ! நிச்சயமாக இப்போது பாருங்கள்.  இன்னும் கரக்டாக இரண்டு நிமிஷத்தில் விமானத்தின் கோளாறு தானாகச் சீராகிவிடும்.  இரண்டு கால் சக்கரங்களும் நல்லபடியாக இறங்கும்.  எல்லோரும் மிகப்பத்திரமாக இறங்குவோம்" என்றேன்.

"எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

"முதலில் விமானம் தரையில் இறங்கட்டும்.  பின்னர் சொல்கிறேன்" என்றேன்.  அதன்படி விமானம் அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் கோளாறு நீங்கி எந்தவித பயமும் இல்லாமல் தரையில் பத்திரமாக இறங்கியது.

விமான நிலையத்தில் என்னைச் சுற்றி ஒரு சிறு கும்பலே கூடிவிட்டது. எப்படி இந்தக் கோளாறு ஏற்பட்டது? இதற்கு என்ன காரணம்? என்று கேட்கவில்லை.

எப்படி நான்காவது சுற்றுக்குப் பின் விமானம் தரையில் இறங்கும் என்றும் இன்னும் இரண்டு நிமிஷத்தில் விமானத்தின் கால் சக்கரம் சரியாகும் என்று சொன்னதற்கும் காரணம் கேட்டார்கள்.

நான் விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

"இந்த விமானத்தில் நான்கு கொலைகாரர்கள் பயணம் செய்தார்கள்"

"அப்படியா?"

"அவர்கள் கொலை செய்த கையோடு கோவில் நகைகளையும் கொள்ளை அடித்து வந்திருக்கின்றனர்"

"ஐயோ!"

"அதுவும் இன்று காலையில் செய்துவிட்டு கையோடு இந்த விமானத்தில் கொண்டு வந்தனர்".

"அதற்கும் விமானம் பழுது பட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?"

"காரணம் உண்டு.  அந்தக் கோவில் மிகவும் புனிதமானது.  அக்கோவிலில் ஆத்ம சுத்தமாகப் பணியாற்றிய அப்பாவி நபர்களைத்தான் இவர்கள் துடிக்கத் துடிக்கக் கொன்றனர்"

"அப்படியானால் போலிசுக்குப் பயந்து இந்த விமானத்தில் ஏறி விட்டார்களா?"

"அதுவும் ஒரு காரணம்.  அதைவிட இன்னொரு காரணம், இந்தக் கோயில் நகைகளைக் கொள்ளையடித்து விட்டால் திருப்பதி பெருமாளுக்குக் கல்யாண உற்சவம் செய்வதாக வெகுநாள் வேண்டுதலாம்.  காலையில் கொலை, கொள்ளை அடித்துவிட்டு பதினோரு மணியில் திருப்பதியில் கல்யாண உற்சவமும் செய்துவிட்டு அந்தப் பாவக் கரங்களோடு இந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள்."

"யார் அவர்கள்?"

"விமானத்தின் முன் வரிசையில் இருவரும், பின் வரிசையில் இருவரும் வாட்ட சாட்டமாக நெற்றியில் விபூதி, சந்தனப் பொட்டோடு வேஷ்டி சட்டையோடு ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக இருந்தார்களே அவர்கள் தான்" என்று சொன்னதும் என்னைச் சுற்றி இருந்தவர்கள் அந்த நபர்களைத் தேடி போக முயற்சித்தார்கள்.

ஆனால் அவர்கள் நான்கு பேரும் தாங்கள் உடமைகளை கன்வேயர் பெல்ட் மூலம் வந்ததும், அதனை எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டதாகப் பின்பு தெரிய வந்தது.

நான் மேலும் தொடர்ந்தேன்.

"அப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்களைப் பயமுறுத்தி உயிர் என்றால் என்ன அது எப்படி துடிக்கும் என்பதைக் காட்டவே விமானத்தில் கோளாறு உள்ளது போல் காட்டவே இறைவனும், அகஸ்தியரும் நடத்திய காட்ச்சிதான் இது" என்றேன்.

"இப்போது தப்பித்து விட்டாங்களே! அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் இங்கேயே ஒப்படைத்திருக்கலாமே.  அகஸ்தியர் ஏன் இப்படிச் செய்யவில்லை" என்று கோபமாகக் கேட்டார் ஒருவர்.  அவருக்கு நான் சொன்னது பொய்யாகத் தோன்றிற்று.

சித்தன் அருள் ................ தொடரும்!

Thursday, 4 October 2012

சித்தன் அருள் - 92

அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், என் நிலைக்கு திரும்பவே சில நிமிடங்களாயிற்று.  என் வரையில் இடப்பட்ட பணியை செவ்வனவே செய்திருந்தாலும், அது எதிர் பார்த்த பலனை அளிக்கவில்லையே என்ற வருத்தம் என்னுள் துளிர்த்தது.  என் உள் உணர்வுகளை ஒதுக்கி தள்ளி விட்டு சற்று நேர அமைதிக்கு பின் 

"உண்மையில் அன்று என்னவெல்லாம் நடந்தது என்று கூற முடியுமா?" என்றேன் அவரிடம்.

போலீஸ் வழி அவரிடம் அன்று விடியற் காலையில் செய்தி வந்து சேர்ந்ததும், என் பெயர் கூறி விசாரித்தவுடன், நான் பிரச்சினையில் இருப்பதை உணர்ந்து, என்னை விடுவிக்க சொல்லி உத்தரவிட்டதும், பின்னர் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்.  அனைத்தையும் அறிந்தவுடன், அன்று காலையே கிளம்பி சென்று முக்கிய பிரமுகரை சந்தித்து பேசி இருக்கிறார்.  முக்கிய பிரமுகருக்கு நாடியில் ஒன்றும் அவ்வளவு நம்பிக்கை இல்லாததால், வந்த தந்தியை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டபின், அந்த யாகத்தையும் தொடர்ந்து நடத்த சொல்லி இருக்கிறார்.

இவர் போய் "ரகசியமாக நடத்த நினைத்த யாகம், ஒரு நாடியில் வருகிறதென்றால், அந்த நாடி உண்மை என்று உணரவேண்டாமா? ஏன் யாகத்தை நடத்தினீர்கள்?" என்று கேட்டதற்கு, 

"எத்தனையோ பேர்கள் இதுபோல் நடப்பது, நடக்க போவதை எல்லாம் சொல்கிறார்கள்.  எல்லோரையும் நம்புவதில்லை.  எனக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதை தான் நான் செய்தேன்.  யாகம் செய்தவர்கள் சொன்னதில் எனக்கு உடன்பாடிருந்ததால் என் குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பை மனதில் கொண்டு அதை செய்ய உத்தரவிட்டேன்.  உங்களுக்கு, அதில் நம்பிக்கை இருந்தால் நம்புங்கள்.  எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.  இனிமேல் இதை பற்றி பேசக்கூடாது" என்று உத்தரவு இட்டார் அந்த முக்கிய பிரமுகர்.

அகத்தியர் சொன்னால் அப்படியே நடக்கும் என்று எப்போதும் நம்புகிற இவருக்கு அதற்கு மேல் எதையும் பேச முடியவில்லை.  மௌனமாக ஆனால் இனி இந்த நாட்டில் என்னென்ன சேதங்கள் நிகழப் போகிறதோ என்கிற மனக்கவலையுடன் என்னை காண வந்துள்ளார்.

"அகத்தியர் நாடியில் என் மன கவலைக்கான பதிலை பெற்று தர முடியுமா?" என்று கேட்டார்.

"கேட்டு பார்க்கிறேன்.  ஆனால் என்ன பதில் வருகிறதோ அதை நீங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.  அகத்தியரை நிர்பந்த படுத்த முடியாது" என்றேன்.

தலையாய சித்தர் அகத்தியரை பிரார்த்தித்துவிட்டு, நாடியை படிக்க தொடங்கினேன்.

"சித்தர்கள் ஆகிய நாங்களெல்லாம், இந்த மனிதர்கள் திருந்தட்டுமே என்று தான் தவறு செய்ய புகுவோரை, முன்னரே எச்சரிக்கை செய்கிறோம்.  அதையும் மீறி, சிலவேளை விதி, தன் பலத்தை காட்டும்.  ஆறறிவு படைத்த மனிதருக்கு சிந்திக்கும் திறமையை கொடுத்த தெய்வம், ஒரு சிலருக்கு அதை இந்த மாதிரி நேரங்களில் அகம்பாவம் என்ற உணர்வை கொடுத்து, வேலை செய்ய விடுவதில்லை.  இங்கு நடந்ததும் அதுதான்.  இனி நடக்க போவதை பொறுத்திருந்து பாருங்கள்." என்று கூறிவிட்டு,

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை சுட்டி காட்டி "இதை நீங்கள் இருவரும் ஒரு மண்டலம் ஜெபித்து வாருங்கள்.  உங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சுருக்கமாக கூறி நிறுத்திக் கொண்டார். 

இனி அவரிடமிருந்து இந்த விஷயத்தில் பதில் வரப்போவதில்லை என்று உணர்ந்து, வந்திருந்தவரும் விடை பெற்றார்.

பதினைந்து நாட்கள் சென்றது..............

ஒருநாள் மதியம் வானொலி வழியாக அந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாருடைய ஆயுளுக்கு பங்கம் என்று யாகத்தை நடத்தினார்களோ, அவர் அன்று காலையில் நடந்த ஒரு கோர விபத்தில், கழுத்துக்கு கீழே அனைத்து பாகங்களும் சிதைந்து போன நிலையில் இறந்து போனார்.  விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த நிறைய அப்பாவி மக்களும் அவருடன் போய் சேர்ந்தனர்.  இதன் தொடர்பாக எதிரொலித்த கலவரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தவர்களும் அதிகம் பேர்கள்.

அவரின் இழப்பில், அந்த முக்கிய பிரமுகர் நொறுங்கி போனார்.  அதர்வண வேதம் இத்தனை வேகமாக வேலை செய்யும் என்று, அன்று தான் நானும் உணர்ந்தேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின், அவர் இறந்த அதே மணி துளியில், அந்த முக்கிய பிரமுகரும், கொல்லப்பட்டார்.  இரண்டு நாட்களுக்கு நாடெங்கும், கலவரம், கொலை, கொள்ளி வைப்பு என்று ஜாதி மத, இன பேதமின்றி நடந்தது.  அனைத்து இயக்கமும் நின்று போனது.  குறிப்பிட்ட சமூகத்தினர் லட்ச்சக்கணக்கில் உயிர் இழந்தனர் அல்லது வாழ்க்கையை மொத்தமாக தொலைத்து நின்றனர். சுமுகமான நிலை திரும்புவதற்கே பல நாட்களாயிற்று. 

அகத்தியர் உத்தரவின் பேரில், எவ்வளவு முடியுமோ அத்தனை பேரை/நண்பர்களை அழைத்து சென்று சிவன் கோவிலில் "மோக்ஷ தீபம்" ஏற்றினேன்.  ஏற்றி முடித்ததும், போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.

வீடு வந்து சேர்ந்து "எல்லாம் முடிந்துவிட்டதல்லவா?" என்ற கேள்வியுடன் அகத்தியர் நாடியை படிக்க "பொறுந்திருந்து பார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.  அதை படித்துவிட்டு நாடியை மூடிவைத்து, மிகுந்த அசதியுடன் அமர்ந்தேன்.  கூட வந்த நண்பர்கள் "என்ன செய்தி?" என்றிட. "ஒன்றுமில்லை! ரொம்ப அசதியாக இருக்கிறது" என்று கூறி மழுப்பினேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின் அந்த குடும்பத்தில் மிச்சம் இருந்த ஒருவரும் ஒருநாள் கொல்லப்பட்டார்.  அந்த வம்சத்தில் ஒருவரும் மிச்சம் இல்லாத படி விதிமகள் உத்தரவால் அழிக்கப்பட்டனர்.  இவரது மரணத்தினாலும் பல உயிர்கள் சேதமடைந்தது.  பல மாதங்களுக்கு அதன் பின் விளைவுகள் நீடித்தது.

சித்தர்கள் பல விஷயங்களை மறைத்து வைத்துத் தான் நம்மிடம் சில விஷயங்களை செய்யாதீர்கள் என்று கூறுகின்றனர்.  கேள்வி கேட்க்கும் புத்தியுடைய நமக்கு, எதிர் கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர, சரியான கேள்வியை கேட்கத் தெரிவதில்லை.  அவர்கள் நம் எதிர்காலத்தை மிக துல்லியமாக கணிக்க தெரிந்தவர்கள்.  அதை புரிந்து கொண்டு வேட்கையை தணித்து, அவர்கள் காட்டும் வழியில் சென்றால், நல்ல படியாக கரை ஏறலாம்.

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பது நிதர்சன சத்தியம்.

சித்தன் அருள் ............. தொடரும்!