​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 4 October 2012

சித்தன் அருள் - 92

அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், என் நிலைக்கு திரும்பவே சில நிமிடங்களாயிற்று.  என் வரையில் இடப்பட்ட பணியை செவ்வனவே செய்திருந்தாலும், அது எதிர் பார்த்த பலனை அளிக்கவில்லையே என்ற வருத்தம் என்னுள் துளிர்த்தது.  என் உள் உணர்வுகளை ஒதுக்கி தள்ளி விட்டு சற்று நேர அமைதிக்கு பின் 

"உண்மையில் அன்று என்னவெல்லாம் நடந்தது என்று கூற முடியுமா?" என்றேன் அவரிடம்.

போலீஸ் வழி அவரிடம் அன்று விடியற் காலையில் செய்தி வந்து சேர்ந்ததும், என் பெயர் கூறி விசாரித்தவுடன், நான் பிரச்சினையில் இருப்பதை உணர்ந்து, என்னை விடுவிக்க சொல்லி உத்தரவிட்டதும், பின்னர் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்.  அனைத்தையும் அறிந்தவுடன், அன்று காலையே கிளம்பி சென்று முக்கிய பிரமுகரை சந்தித்து பேசி இருக்கிறார்.  முக்கிய பிரமுகருக்கு நாடியில் ஒன்றும் அவ்வளவு நம்பிக்கை இல்லாததால், வந்த தந்தியை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டபின், அந்த யாகத்தையும் தொடர்ந்து நடத்த சொல்லி இருக்கிறார்.

இவர் போய் "ரகசியமாக நடத்த நினைத்த யாகம், ஒரு நாடியில் வருகிறதென்றால், அந்த நாடி உண்மை என்று உணரவேண்டாமா? ஏன் யாகத்தை நடத்தினீர்கள்?" என்று கேட்டதற்கு, 

"எத்தனையோ பேர்கள் இதுபோல் நடப்பது, நடக்க போவதை எல்லாம் சொல்கிறார்கள்.  எல்லோரையும் நம்புவதில்லை.  எனக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதை தான் நான் செய்தேன்.  யாகம் செய்தவர்கள் சொன்னதில் எனக்கு உடன்பாடிருந்ததால் என் குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பை மனதில் கொண்டு அதை செய்ய உத்தரவிட்டேன்.  உங்களுக்கு, அதில் நம்பிக்கை இருந்தால் நம்புங்கள்.  எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.  இனிமேல் இதை பற்றி பேசக்கூடாது" என்று உத்தரவு இட்டார் அந்த முக்கிய பிரமுகர்.

அகத்தியர் சொன்னால் அப்படியே நடக்கும் என்று எப்போதும் நம்புகிற இவருக்கு அதற்கு மேல் எதையும் பேச முடியவில்லை.  மௌனமாக ஆனால் இனி இந்த நாட்டில் என்னென்ன சேதங்கள் நிகழப் போகிறதோ என்கிற மனக்கவலையுடன் என்னை காண வந்துள்ளார்.

"அகத்தியர் நாடியில் என் மன கவலைக்கான பதிலை பெற்று தர முடியுமா?" என்று கேட்டார்.

"கேட்டு பார்க்கிறேன்.  ஆனால் என்ன பதில் வருகிறதோ அதை நீங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.  அகத்தியரை நிர்பந்த படுத்த முடியாது" என்றேன்.

தலையாய சித்தர் அகத்தியரை பிரார்த்தித்துவிட்டு, நாடியை படிக்க தொடங்கினேன்.

"சித்தர்கள் ஆகிய நாங்களெல்லாம், இந்த மனிதர்கள் திருந்தட்டுமே என்று தான் தவறு செய்ய புகுவோரை, முன்னரே எச்சரிக்கை செய்கிறோம்.  அதையும் மீறி, சிலவேளை விதி, தன் பலத்தை காட்டும்.  ஆறறிவு படைத்த மனிதருக்கு சிந்திக்கும் திறமையை கொடுத்த தெய்வம், ஒரு சிலருக்கு அதை இந்த மாதிரி நேரங்களில் அகம்பாவம் என்ற உணர்வை கொடுத்து, வேலை செய்ய விடுவதில்லை.  இங்கு நடந்ததும் அதுதான்.  இனி நடக்க போவதை பொறுத்திருந்து பாருங்கள்." என்று கூறிவிட்டு,

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை சுட்டி காட்டி "இதை நீங்கள் இருவரும் ஒரு மண்டலம் ஜெபித்து வாருங்கள்.  உங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சுருக்கமாக கூறி நிறுத்திக் கொண்டார். 

இனி அவரிடமிருந்து இந்த விஷயத்தில் பதில் வரப்போவதில்லை என்று உணர்ந்து, வந்திருந்தவரும் விடை பெற்றார்.

பதினைந்து நாட்கள் சென்றது..............

ஒருநாள் மதியம் வானொலி வழியாக அந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாருடைய ஆயுளுக்கு பங்கம் என்று யாகத்தை நடத்தினார்களோ, அவர் அன்று காலையில் நடந்த ஒரு கோர விபத்தில், கழுத்துக்கு கீழே அனைத்து பாகங்களும் சிதைந்து போன நிலையில் இறந்து போனார்.  விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த நிறைய அப்பாவி மக்களும் அவருடன் போய் சேர்ந்தனர்.  இதன் தொடர்பாக எதிரொலித்த கலவரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தவர்களும் அதிகம் பேர்கள்.

அவரின் இழப்பில், அந்த முக்கிய பிரமுகர் நொறுங்கி போனார்.  அதர்வண வேதம் இத்தனை வேகமாக வேலை செய்யும் என்று, அன்று தான் நானும் உணர்ந்தேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின், அவர் இறந்த அதே மணி துளியில், அந்த முக்கிய பிரமுகரும், கொல்லப்பட்டார்.  இரண்டு நாட்களுக்கு நாடெங்கும், கலவரம், கொலை, கொள்ளி வைப்பு என்று ஜாதி மத, இன பேதமின்றி நடந்தது.  அனைத்து இயக்கமும் நின்று போனது.  குறிப்பிட்ட சமூகத்தினர் லட்ச்சக்கணக்கில் உயிர் இழந்தனர் அல்லது வாழ்க்கையை மொத்தமாக தொலைத்து நின்றனர். சுமுகமான நிலை திரும்புவதற்கே பல நாட்களாயிற்று. 

அகத்தியர் உத்தரவின் பேரில், எவ்வளவு முடியுமோ அத்தனை பேரை/நண்பர்களை அழைத்து சென்று சிவன் கோவிலில் "மோக்ஷ தீபம்" ஏற்றினேன்.  ஏற்றி முடித்ததும், போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.

வீடு வந்து சேர்ந்து "எல்லாம் முடிந்துவிட்டதல்லவா?" என்ற கேள்வியுடன் அகத்தியர் நாடியை படிக்க "பொறுந்திருந்து பார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.  அதை படித்துவிட்டு நாடியை மூடிவைத்து, மிகுந்த அசதியுடன் அமர்ந்தேன்.  கூட வந்த நண்பர்கள் "என்ன செய்தி?" என்றிட. "ஒன்றுமில்லை! ரொம்ப அசதியாக இருக்கிறது" என்று கூறி மழுப்பினேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின் அந்த குடும்பத்தில் மிச்சம் இருந்த ஒருவரும் ஒருநாள் கொல்லப்பட்டார்.  அந்த வம்சத்தில் ஒருவரும் மிச்சம் இல்லாத படி விதிமகள் உத்தரவால் அழிக்கப்பட்டனர்.  இவரது மரணத்தினாலும் பல உயிர்கள் சேதமடைந்தது.  பல மாதங்களுக்கு அதன் பின் விளைவுகள் நீடித்தது.

சித்தர்கள் பல விஷயங்களை மறைத்து வைத்துத் தான் நம்மிடம் சில விஷயங்களை செய்யாதீர்கள் என்று கூறுகின்றனர்.  கேள்வி கேட்க்கும் புத்தியுடைய நமக்கு, எதிர் கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர, சரியான கேள்வியை கேட்கத் தெரிவதில்லை.  அவர்கள் நம் எதிர்காலத்தை மிக துல்லியமாக கணிக்க தெரிந்தவர்கள்.  அதை புரிந்து கொண்டு வேட்கையை தணித்து, அவர்கள் காட்டும் வழியில் சென்றால், நல்ல படியாக கரை ஏறலாம்.

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பது நிதர்சன சத்தியம்.

சித்தன் அருள் ............. தொடரும்!

1 comment: