​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 30 June 2016

சித்தன் அருள் - 362 - "பெருமாளும் அடியேனும்" - 56 - "அஞ்சனாத்திரி" பெருமாளின் பரிசு!


“வேங்கடவனே! அஞ்சனையின் புத்திரனுக்கு ‘ஹனுமான்’ என்று பெயர் வைத்தது மிகப்பெரும் அதிர்ஷ்டம்தான். என்ன இருந்தாலும் என் மகனை வாயு பகவானுக்கு தத்து கொடுத்தது எனக்கே பிடிக்கவில்லை. ஏதோ ஒன்று என் மனத்தை உறுத்திக் கொண்டு இருக்கிறது” என்று கேசரி, அஞ்சனையிடம் புலம்பத்தான் செய்தான்.

“நாதா! எதுவும் நம் கையில் இல்லை. எல்லாம் கலியுக நாதனான வேங்கடவன் பார்த்துக் கொள்வான். எனக்குக் கூட உள் மனத்தில் மிகப் பெரும் மனவருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய?”

“நீ வேங்கடவனிடம் சொல்லி, நம் குழந்தையை நம்மிடமே பெற்று வந்திருக்கலாம். ஏனோ வாய் மூடி மௌனமாகி விட்டாய். கஷ்டப்பட்டுப் பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்தாற் போல் நிற்கிறோம்.”

“கேசரி மன்னா! நான்தான் வேங்கடவன் சொல்லுக்கு வாயடைத்துப்போய் நின்றேன் என்றால், தாங்களாவது வேங்கடவனிடம் போராடி மறுத்து குழந்தையைத் திரும்பப் பெற்றிருக்கக் கூடாதா? அப்போது தாங்களும் தான் மௌனமாக இருந்து விட்டீர்கள்.”

“அஞ்சனை! ஒன்று செய்யலாமா? மீண்டும் வேங்கடவனிடம் சென்று நம் ஏக்கத்தைச் சொல்லி வாயுபகவான் தத்து எடுக்கும் முன் தடுத்துப் பார்க்கலாமா?” என்று குழந்தையின் மீதுள்ள பாசத்தைக் காட்டி நாத் தழுதழுக்க கேசரி கேட்டான்.

“நாதா! ஹனுமான் நம் குழந்தைதான். அவன் வேறு எங்கும் சென்றிடவில்லை. நம்மிடம்தான் வளரப்போகிறான். வாயுபகவான் அவ்வப் போது வந்து அவனுக்கு வளமான ஆரோக்கியத்தையும் ஞான பலத்தையும் கொடுக்கப் போகிறார். அவ்வளவுதானே! இதற்கு ஏன் கலங்குகிறீர்கள்? நாம் மறுபடியும் வேங்கடவனிடம் சென்று முறையிடுவது நன்றாக இருக்காது.” என்றாள் அஞ்சனை.

அதற்குப் பிறகு, கேசரியால் பதில் ஒன்றும் பேச முடியவில்லை. முதலில் தலையை ஆட்டி விட்டு, இப்பொழுது குழந்தையைப் பிரிய மனமில்லாமல் இருதலைக் கொள்ளிமேல் எறும்பு போல மனத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கேசரியை நினைத்து அஞ்சனைக்கு அழுகை வந்தது.

“எதுவும் நிரந்தரமில்லை” என்னும் தத்துவத்தை இந்தப் பூலோக மக்களுக்கு தனக்குப் பிறந்த குழந்தையின் மூலம் பரம் பொருளான திருமலைவாசன் வெளிப்படுத்துகிறான் போலும் என்று அஞ்சனை எண்ணிக்கொண்டு, தன் கணவன் கேசரியைச் சமாதானப்படுத்த அழைத்துச் சென்றாள்.

மறுநாள் காலை வேங்கடவனை தரிசிக்க அஞ்சனை மாத்திரம் சென்றாள். வேங்கடவன் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக கேசரி அஞ்சனையுடன் செல்லவில்லை.

“என்ன ஏதாவது குழப்பமா? கேசரி ஏன் வரவில்லை?” என்று திருமலைவாசன் கேட்டார் அஞ்சனையிடம்.

“பின்னால் வருவார். அவருக்கு மனமே சரியில்லை”

“என்ன குறை?”

“எல்லாம் பிள்ளையின் மீதுள்ள பாசம்தான்”

“கேசரிக்கு, தன் பிள்ளையைத் தத்து கொடுக்க விருப்பமில்லை போலிருக்கிறது. அவ்வளவுதானே?”

“ஆமாம். முதலில் தங்கள் முன்பு தலையை ஆட்டினார். பின்னர் என்னிடம் வந்து புலம்புகிறார். இரவு முழுவதும் தூங்கவே இல்லை.”

“அப்படியென்றால், வாயு பகவானை அழைக்கிறேன். நேரிடையாகவே அழைத்துப் பேசிவிடலாமே”

“திருமாலே! தாங்கள் எங்களைச் சோதிக்க வேண்டாம். எல்லாமே தங்கள் திருவுள்ளப்படியே நடக்கட்டும்.”

“அஞ்சனை! உன் மனம் பக்குவப்பட்டு விட்டது. கஷ்டப்பட்டு ஈன்றெடுத்த குழந்தையை உடனடியாக தத்து கொடுக்க யாருக்குமே மனம் வராது. நீ தெய்வ அம்சம் பொருந்தியவள். தைரியமாக முன்வந்து நான் சொன்னதை ஏற்றுக் கொண்டாய். ஆனால் கேசரி இன்னும் என் வேண்டுகோளை ஏற்கவில்லை போலும்...”

“பெருமாளே! கேசரியை நான் சமாதானப்படுத்திக் கொள்கிறேன். அதோடு அவருக்கு இந்த திருமலையில் ஒரு விநாடி கூட இருக்கப் பிடிக்கவில்லையாம். இன்றே இந்த மலையை விட்டுக் கிளம்பவேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார். தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்?”

“அப்படியா! அனுமதி கொடுத்துவிட்டால் போயிற்று. ஆனால் ஒன்று. இந்த மலையில் இன்னும் பத்து நாளில் மிகப்பெரும் யாகமும் நாமகரணமும் நடக்கப்போகிறது. அதை முடித்துவிட்டு ஆனந்தமாக நீங்கள் ‘அனுமனோடு’ உங்கள் ராஜ்யத்திற்குச் செல்லலாமே” என்றார் திருமலைவாசன்.

“தங்கள் உத்தரவுக்கு நான் கீழ்ப்படிகிறேன். அதே சமயம் கேசரியைக் கட்டுப்படுத்தி இங்கே வைப்பது என்பது சிரமம்.”

“அதுசரி, கேசரியை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த யாகமும் நாமகரணமும் எதற்கு என்று கேட்கவில்லையே” என்று திருமலைவாசன் சிரித்துக் கொண்டே அஞ்சனையிடம் கேட்டார்.

“சொல்லுங்கள் வேங்கடவா!”

“நீ வந்து இங்கு தவம் செய்து, தெய்வீகக் குழந்தையைப் பெற்றாய் அல்லவா? உன் பெயரில் இந்த பூலோகத்தில் பிரளயம் ஏற்பட்டாலும், அந்த பிரளயத்தையும் தாண்டி இந்த ஏழுமலைகளில் ஒன்றாக விளங்க வேண்டும் என்பதற்காக நாமகரணம் சூட்டப் போகிறேன்.”

“என் பெயரிலா?”

“ஆமாம். அஞ்சனைக்கு இந்தத் திருவேங்கடவன் கொடுக்கும் அன்புப்பரிசு. இனிமேல் நீ வாழ்ந்த, தவம் புரிந்த அந்த இடத்திற்கு ‘அஞ்சனாத்திரி’ என்று பெயர் வைக்கப்போகிறேன்.”

“மிக்க மகிழ்ச்சி வேங்கடவா! தங்களுக்கு இந்த அஞ்சனை தன்யளானேன்.”

“அது சரி! ஒரு சிறு சந்தேகம்.”

சித்தன் அருள்............. தொடரும்!

Wednesday, 29 June 2016

சித்தன் அருள் - 361 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"கடமையை ஆற்றுவதோடு, உடலுக்காக உழைப்பதோடு, உள்ளுக்குள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் அந்த ஆத்மாவிற்காகவும் உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். மனிதப் பிறவியின் உண்மையான நோக்கம் அதுதான். இக்கருத்தை ஆழ்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

Tuesday, 28 June 2016

சித்தன் அருள் - 360 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"கொடுத்துக் கொடுத்து வறுமையடையும் விதி இருந்தாலும் பாதகமில்லை. கொடுத்ததினால் ஒரு நிலை வந்தால், அதுதான், இந்த உலகத்தில் உச்சகட்ட வளமை. அவன்தான் இறைவனுக்குப் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

Monday, 27 June 2016

சித்தன் அருள் - 359 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"எப்பொழுது மருத்துவ சிகிர்ச்சை என்று ஒன்று ஏற்படுகிறதோ, அப்பொழுதே சேர்த்த புண்ணியம் போதவில்லை, பாபம் இன்னும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். வீண், விரயங்கள் ஏன் வருகிறது என்றால், ஒருவன் மெய்யான வழியிலே புண்ணியத்தை சேர்க்கவில்லை என்பதே பொருள். ஒருவன் கணக்கிலே இத்தனை தனத்தை பிடுங்கவேண்டும் என்று விதியிருந்தால், அத்தனை தனம் விரயமாகும். சிலர் தனத்தை இருகப் பிடித்து வைக்கிறார்களே, விதி, அவர்களிடமிருந்து தனத்தை எடுக்கிறவிதமே வேறு. கள்வர்களாலும், கொள்ளையர்களாலும், வேறு சில பகற்கொள்ளையர்களாலும், தனம் பிடுங்கப்படும். ஒரு சோம்பேறிக் கூட்டத்தை நாம் ஏன் உருவாக்கவேண்டும்? என்று எண்ணி, ஒரு திருட்டுக்கு கூட்டத்தை உருவாக்கிவிடுவார்கள், இவர்கள்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு! 

Sunday, 26 June 2016

சித்தன் அருள் - 358 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"சுருக்கமாக சொல்வதென்றால், ஒருவன், ஆலயங்கள் சென்றாலும், சொல்லாவிட்டாலும், யாகங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும், எவன் ஒருவன், சத்தியத்தையும், தர்மத்தையும், விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ, அவனைத்தேடி இறை வரும் என்பது மெய்." - அகத்திய பெருமான் அருள்வாக்கு! 

Saturday, 25 June 2016

சித்தன் அருள் - 357 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது, அந்த தர்மமே எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால், ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளைப் பெற முடியாது. ஒரு மனிதன் இறை அருளைப் பெற வேண்டுமென்றால், ஏன்? இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, தர்ம குணமும், பிறருக்கு உதவும் குணமும் இருந்துவிட்டால் போதும், இவன் இறையை தேடவேண்டியதில்லை. இறை, இவனைத்தேடி வந்துவிடும். அவனிடம், இறையே வந்து கை ஏந்தும்!" - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Friday, 24 June 2016

சித்தன் அருள் - 356 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பதென்பது, அக்னியை மடியில் வைத்துக்கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே, விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று, ஆதியிலிருந்தே, ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழகவேண்டும். இடையிலிருந்து தொடங்கினால், அதற்கு, அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அறத்தில் மிகப்பெரிய அறம், உண்மை பேசுவதாகும்." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Thursday, 23 June 2016

சித்தன் அருள் - 355 - "பெருமாளும் அடியேனும்" - 55 - வாயுபகவான் வேண்டுதலும் - "ஹனுமான்" நாமகரணமும்!


பெருமாளும், அஞ்சனையும், கேசரியும் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, சட்டென்று அங்கு வந்து நின்றார், வாயு பகவான்.

"தன்யன் ஆனேன்" என்று வேங்கடவனை வணங்கி நின்ற வாயுபகவானை ஆசிர்வதித்தார், திருமலைவாசன்.

"என்ன விஷயம் வாயு பகவானே?"

"தங்களிடமும், அஞ்சனையிடமும், அஞ்சனையின் கணவரான கேசரியிடமும் ஒரு சிறு விண்ணப்பம் கேட்டு வந்திருக்கிறேன். தங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்" என்றார் வாயுபகவான்.

​"வாயு பகவான் பொதுவாக இப்படி ஒரு வேண்டுகோள் கேட்டு இதுவரை என்னிடம் வந்ததில்லையே! ம்ம்.... பரவாயில்லை! வேண்டியதை வாய் திறந்து கேட்கலாமே!" என்றார் வேங்கடவன்.

"தங்கள் கருணை உள்ளம் வாயுபகவான் அறியாதவனா? கேள்வி கேட்காமலே பதில் கிடைப்பது போல் எங்கள் உள்ளத்தை அறிந்து உதைவிசெய்ய வருபவரல்லவா தாங்கள்? ஆனால்......" என்று தயங்கினார்.

"என்ன வாயு! எதற்காக இந்தத் தயக்கம்?"

"இது அஞ்சனை-கேசரி சம்பந்தப்பட்ட விஷயம். அதனால்தான் யோசித்துப் பேசவேண்டியிருக்கிறது" என்று பீடிகை போட்டார் வாயு பகவான்.

இதைக் கேட்டதும் கேசரி "வாயுபகவானுக்கு எங்களிடம் என்ன உதைவி கேட்டாலும் செய்கிறோம். இதை எங்களது பாக்கியமாகவே எண்ணுகிறோம். தாராளமாக தயக்கமில்லாமல் கேட்கலாம். இல்லையா அஞ்சனை?" என்று அஞ்சனை பக்கம் திரும்பி முகம் பார்த்துக் கேட்டார்.

"என் கணவரின் விருப்பம்தான் என் விருப்பம். அதோடு திருமலைவாசன் என்ன உத்தரவு இடுகிறாரோ அதை கண் போல் பாவித்து செயல் படுவோம்" என்றாள் அஞ்சனை.

வாயுபகவான் தன் இருகைகளையும் கூப்பிக் கொண்டு "அஞ்சனை ஈன்றெடுத்த அருட் செல்வ புத்தலைவனை, வேங்கடவன் திருப்பாதம் முன்பு "தத்து" எடுத்து வளர்க்கலாம் என எண்ணுகிறேன்" என்று தயங்கி, தயங்கிச் சொன்னதைக் கேட்டு மிகப் பெரும் அதிர்ச்சிக்குள்ளானாள், அஞ்சனை.

"என்ன சொன்னீர்கள்? என் குழந்தையை தங்கள் தத்து எடுத்து வளர்ப்பதா? ஒருக்காலும் தரமுடியாது" என்று சொன்னவள், பெற்ற வயிறு தாங்கமுடியாமல் தன் கைகுழந்தையைத் தூக்கி, நெஞ்சில் அரவணைத்துக் கொண்டு, விருட்டென்று பர்ணசாலையின் உட்புறம் கோபத்தோடு புகுந்தாள்.

அஞ்சனையின் தாய்ப் பாசமும், வாயு பகவான் சொன்னதால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தாங்காமல், எங்கே தன் குழந்தையை இப்பொழுதே தூக்கிக் கொண்டு சென்று விடுவாரோ என்று வாயுபகவான் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும், தன்னைக் கூட மதிக்காமல் உள்ளே சென்று விட்டாளே என்று திருமால் கூட  யோசனை செய்தார்.

கேசரியால் வாயுபகவானுக்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. வாய் மூடி மௌனமாக நின்றார்.

திருமால் இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டார். பிறகு, "வாயுதேவா! என்ன இது, உனக்கு இப்படியொரு விபரீத ஆசை?" என்று நிதானமாக கேட்டார்.

"இல்லை வேங்கடவா! எனக்கென்னவோ அஞ்சனையின் குழந்தையை நான் தான் வளர்க்க வேண்டும் என்று தோன்றிற்று. இப்படிப்பட்ட அற்புதமான குழந்தை, இந்த மூன்று உலகத்தையும் தன்னுள் அடக்கி, கம்பீரமாக பிற காலத்தில் விளங்கப் போகிறான், என்று அசரீரி வாக்கு எனக்குச் சொன்னது. அஞ்சனையிடம் சென்று கேள். முதலில் மறுப்பாள். பின்னர் அகமகிழ்ந்து தருவாள். அந்த புத்திரனை உன் புத்திரன் போல் வளர்த்து வா" என்று மூன்று நாள்களாக என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் தங்கள் மலைக்கு ஓடிவந்தேன். தாங்கள்தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும்" என்று வேங்கடவனின் திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்தார், வாயு பகவான்.

இதைக் கேட்டு, திருமாலே திகைத்துப் போனார்.

"அசரீரியின் பெயரால் எங்கள் குழந்தையை எங்களிடமிருந்து பிரித்து விடவேண்டாம், வாயுதேவா!" என்றார் கேசரி, தழு தழுத்த குரலில்.

"நான் பிரிப்பதற்காக இங்கு வரவில்லை. இது ஏற்கனவே ப்ரம்ம தேவன் இட்ட கட்டளை. இதை உணர்த்தத்தான் இவ்வாறு கேட்டேன். தங்களுக்கும் மூன்று நாள்களுக்கு முன்பு கனவு வந்திருக்குமே"

"பிரம்மதேவர் இப்போது நேரில் வந்து சொன்னாலும் நாங்கள் ஈன்றெடுத்த எங்களது செல்வத்தை ஒருபோதும் தங்களுக்கு தத்துக் கொடுக்காத தயாராக இல்லை" என்றார் கேசரி.

இதையெல்லாம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த பெருமாள், ஏனோ வாயைத் திறக்கவே இல்லை.

"தத்து என்றால் என்னிடம் நிரந்தரமாக தங்கள் குழந்தையைக் கொடுத்து முறைப்படி யாகங்கள் செய்து கோத்திரம் மாற்றுவதல்ல. இந்தக் குழந்தை சிறிதுகாலம் என்னுடன் வளர்வான். சிறிதுகாலம் உங்களால் பாதுகாப்பாக வளர்வான். ஆனால் பிற்காலத்தில் "வாயு புத்திரன்" என்ற பெயரிலேயே வலம் வருவான்" என்றார் வாயுபகவான்.

"முதலில் தத்து என்றீர்கள். இப்போது பாகம் பாகமாக பிரித்து இருவரும் வளர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் அப்படி என்ன ஆசை நான் பெற்ற குழந்தையின் மீது? இதென்ன கடைசரக்கா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை?" என்று வெறுப்போடு சொன்னான் கேசரி.

இதற்குள் உள்ளுக்குள் சென்ற அஞ்சனை குழந்தையைப் பாதுகாப்பாக வைத்து விட்டு சற்று கோபத்தோடு வெளியே வந்தாள்.

"பெருமாளே! இதென்ன சோதனை! அதுவும் தங்கள் முன்பாகவே இது நடக்கிறதே? தாங்களும் வாய் பேசாமல் நிற்கிறீர்கள்?" என்று கண்ணீருடன் கேட்டாள்.

"அஞ்சனை! அந்தக் குழந்தை உன் புத்திரன்தான். சந்தேகமே இல்லை. இந்த பூலோகம் இருக்கும் வரை அவன் அஞ்சனையின் மைந்தன் என்றுதான் பேசப்படுவான், ஆனால்"

"என்ன ஆனால்?"

"ஒரு குடும்பத்தில் சிலருக்கு வாரிசு இருக்காது. அப்போது யாரோ ஒரு சகோதரிக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதனை அத்தனை பேரும், தங்கள் வாரிசாக எண்ணிப் பாசத்தோடு எடுத்துக் கொஞ்சிக் குலவுவதுபோல் உன் குழந்தையையும் வாயுதேவன் தனக்குப் பிறந்த குழந்தையைப் போல் எடுத்துக் கொஞ்ச ஆசைப்படுகிறான். இதில் தவறு இல்லையே!"

"குழந்தையை எடுத்துக் கொஞ்சட்டும், மகிழட்டும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே தத்துப் பிள்ளையாகத் தானே என்னிடம் கேட்டார்? அதை எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்?"

"நியாயம்தான். வாயுதேவன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்" என்றார் வேங்கடவன்.

"திருமலைவாசா ! இதில் எனக்கு சற்று மாறுபட்ட கருத்து உண்டு. அஞ்சனை தேவிக்குப் பிறந்த குழந்தை தெய்வீகக் குழந்தை. இதனை என் வாரிசாக மாற்றி என் பொறுப்பை எல்லாம் அவனிடம் ஒப்படைக்க ஆசையாக இருக்கிறது. என்னிடம் மாத்திரமல்ல. பஞ்ச பூதங்களுக்கு என்னென்ன மஹா பலம் உண்டோ, அத்தனையும் அஞ்சனையின் புத்திரனுக்கு வழங்கி அகில தேவர்களுக்கெல்லாம் தேவனாக மாற்ற ஆசை"

"நல்ல யோசனை. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது."

"தாங்களும் அனுக்கிரகம் செய்ய வேண்டும். அஞ்சனையிடம் இந்தக் குழந்தை இருந்தால் அத்தகைய வலிமை வாய்ந்த சக்தியை நாங்கள் யாரும் ஊட்ட முடியாது. ஒரு சாதாரண மானிடக் குழந்தை போல்தான் வளர வேண்டியிருக்கும்" என்றான் வாயுதேவன்.

"அதுவும் நியாயம்தான்" தலையை ஆட்டினார் பெருமாள்.

"அதனால்தான் தங்களிடம் அஞ்சனை தம்பதியிடம், இப்போது விண்ணப்பிக்கவே யாம், பஞ்ச பூதங்களின் சார்பில் இங்கு வந்திருக்கிறேன். தாங்கள்தான் இதற்கு அருள வேண்டும்" என்றான் வாயுதேவன்.

சற்று யோசித்துவிட்டு, கேசரியின் பக்கம் திரும்பினார் திருமலைவாசன்.

"கேசரி! உன் அபிப்பிராயம் என்ன?"

"என் குழந்தையை நான் தத்து கொடுக்க முடியாது!"

"சரி!"

"வாயுபகவான் வேண்டுமானால் அவ்வப்பொழுது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லட்டும்."

"சரி!"

"என் மைந்தனுக்கு பஞ்ச பூத சக்தி அனைத்தும் கொடுக்க வேண்டுமானால் வாயுதேவன் என்னிடத்திற்கு வந்து எங்கள் கண் முன்னாலேயே கொடுக்கட்டும்."

"சரி!"

"என்னுடைய குழந்தைக்கு வாயுதேவனால் எந்தவிதக் கெட்ட பெயரும் வரக்கூடாது!"

"சத்தியமாக  வராது" என்று உறுதிமொழி கொடுத்தான் வாயுதேவன்.

பிறகு அஞ்சனையிடம் திரும்பி "உன் அபிப்பிராயம் என்ன?" என்று புன்னகையுடன் கேட்டார் திருமலைவாசன்.

"வேங்கடவா! காரணமில்லாமல் எந்தக் காயையும் நகர்த்த மாட்டாய் நீ! ஏதோ ஒரு நாடகம் ஆடுகிறாய், எங்களை ஏமாற்ற என்பது மட்டும் புரிகிறது. என் கணவர் சொல்வதுதான் நியாயம் என்று நானும் நினைக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. இதில் நான் சொல்லியா எதுவும் நடக்கப் போகிறது? நாடகத்தை ஆரம்பித்துவிட்டால். நடத்து. எல்லாமே எனக்கு நீதானே" என்று சற்று விரக்த்தியோடு பேசினாள் அஞ்சனை.

வேங்கடவன் புன்னகை பூத்தார்.

"அஞ்சனை! யாருக்கும் எந்தக் குறையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆமாம் உன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்?"

"இன்னும் பெயரே வைக்கவில்லை. அதையும், தாங்களே தங்கள் திருவாயால் சொல்லுங்களேன்"

"ம்ம்... சொல்கிறேன். "ஹனுமான்" என்று அழைக்கலாமா?" என்றார் வேங்கடவன்.

"சந்தோஷமாக ஏற்கிறோம்" என்று அஞ்சனை தம்பதி மனப்பூர்வமாக ஏற்றனர்.

சித்தன் அருள்.............. தொடரும்! 

Wednesday, 22 June 2016

சித்தன் அருள் - 354 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"தனம் சேர்க்கிறேன்" என்று "ஏதாவது ஒரு வழியில் தனம் சேர்ந்தால் போதும்" என்று பாவத்தை சேர்த்துக் கொண்டால், பிறகு எதற்காக அந்த தனத்தை சேர்த்தானோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும், என்பதே உண்மையாகும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு! 

Tuesday, 21 June 2016

சித்தன் அருள் - 353 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"பணிவு என்பது இனிமையை வளர்க்கிறது. உறவை மேம்படுத்துகிறது. ஆக்கபூர்வமான அலைகளை வெளிக்கொண்டு வருகிறது. அந்த அலைகள் பிறர் மனதை சாந்தப்படுத்துகிறது.

"ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா?" என்று அடுத்தவர் ஏங்கும் வண்ணம், வார்த்தைகளை குறைத்தே, பயன்படுத்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை, ஒரு ஓவியம் சொல்லும் என்பார்கள். வார்த்தைகள், ரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

Monday, 20 June 2016

சித்தன் அருள் - 352 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"எந்த மனிதனிடம், ஒருவன், தேவை இல்லாமல் விவாதம் செய்து, அபவாதம் செய்து, வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ, அந்த மனிதனுக்கு, இலவச சேவையாக, இவன் செய்த பூஜா பலன்களையும், புண்ணிய பலன்களையும் தாரைவார்க்கிறான், என்பது ஆன்மீகத்தின் பேருண்மையாகும்.  அகுதொப்ப, உண்மையை மனதில் கொண்டு, சினத்தை தவிர்த்து, மௌனத்தை கடைபிடித்தால், எப்படி ஒரு கஞ்சன், தன் தனத்தை, பேழைக்குள்ளே வைத்து வைத்து பூட்டுகிறானோ, அப்படி, இவன் செய்த பூஜா பலனும், புண்ணிய பலனும், மௌனத்தால் வியம் ஆகாமல் இருக்கும்." - அகத்திய பெருமான் அருள்வாக்கு! 

Wednesday, 15 June 2016

சித்தன் அருள் - 351 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"ஒரு மனிதன், மனதை தூய கருவறையாக்கி, உடலை ஆலயமாக்கி, மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிடவேண்டும். எங்கு சென்று அமர்வது? என்று தெரியாமல், இறை திணற வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Tuesday, 14 June 2016

சித்தன் அருள் - 350 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"ஒரு நல்லவனை தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, அது போக, தீயவனிடம் இருக்ககூடிய சிறிதளவு புண்ணியத்தை அவன் நல்லவனுக்கு தருகிறான் என்பதே பொருள். எனவே, உலகம் இயங்குவதற்கு, எல்லா வகையான மனிதர்களும், கர்ம கழிவிற்காக தேவைப்படுகிறார்கள். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு இந்த உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும், மிக எளிதாக, மிக நீதியாகத் தோன்றும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Monday, 13 June 2016

சித்தன் அருள் - 349 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"முன்வினைப்பயனை அனுபவித்து தீர்க்கலாம். தர்மத்தால் தீர்க்கலாம், இறை வழிபாட்டால் தீர்க்கலாம். முன் வினைப்பயன் குறையக் குறைய துன்பங்கள் குறைந்து கொண்டே வரும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Saturday, 11 June 2016

சித்தன் அருள் - 348 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல, இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர் காற்று, ஆகாயம், பூமி, விருட்சங்கள் பொதுவானது. நாம் எப்படி இந்த உலகத்தில் வாழ்வதற்கு வந்திருக்கிறோமோ, அதைப் போலத்தான் பிற உயிர்களும் வந்திருக்கிறது என்கிற எண்ணம் வந்துவிட்டாலே, யார் மீதும் சினம், ஆத்திரம், பொறாமை எழாது. அனைவரும் நம்மை போன்ற உணர்வுள்ள மனிதர்கள் என்று எண்ணிவிட்டாலே, அங்கே நன்மைகள் நடந்துகொண்டே இருக்கும். எனவே, இந்த உண்மையை புரிந்துகொண்டால், மனித நேயம் வளரும், அங்கே நற்செயல்கள் அதிகமாகும். நற்செயல்கள் அதிகமாக அதிகமாக அங்கே நல்லதொரு மனித பிணைப்பும், சமூக பிணைப்பும் உருவாகும். அப்படிப்பட்ட உயர்ந்த உச்சகட்ட சமூக நலத்திலே பிறக்கின்ற குழந்தைகளும், உயர்வாகவே இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் கோபமும், எரிச்சலும், மன உளைச்சலும், பிறர் மீது பொறாமையும், குற்றச்சாட்டுகளும் கொண்டு யார் வாழ்ந்தாலும், இந்த எண்ணப்பதிவு, வாரிசுக்காக, வாரிசுதோறும், வாரிசு வழியாக, வம்சாவளியாகக் கடத்தப்பட்டு, கடத்தப்பட்டு, தீய பதிவுகள் எங்கும் ஆட்க்கொண்டு, அந்த தீய பதிவுகள் எல்லார் மனதிலும் நுழைந்து, தவறான செய்கைகளை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். எனவே தான் நல்லதை எண்ணி, நல்லதை உரைத்து, நல்லதை செய்யவேண்டும், என்று யாம் எம்மை நாடுகின்ற மாந்தர்களுக்கு என்றென்றும் கூறிக் கொண்டிருக்கிறோம்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

Friday, 10 June 2016

சித்தன் அருள் - 347 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"உள்ளதை உள்ளபடி கூறி வாழுங்கால், என்றென்றும் வெற்றியும் தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதை கூறாது, அல்லதை கூறுங்கால், தொடர்ந்து பாவச் சேற்றிலே ஆழ்ந்து, ஆழ்ந்து துன்பப்பட நேரிடும். உரைத்திடுவோம், எவன் எப்படி வாழ்ந்தாலும், அது குறித்து கவனம் செலுத்தாது, உண்மையை நன்றாக ஆய்ந்து, உணர்ந்து, சிந்தித்துப் பேசி, உள்ளதை கூறி, நல்லதை செய்து வாழுங்கால், நலம் தொடரும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு! 

Thursday, 9 June 2016

சித்தன் அருள் - 346 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"செல்வம் திரட்டுவதை விடக் கடினம், இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது. ஆக, "இதனால் நான் இந்த தவறை செய்தேன், இந்த சூழ்நிலையால் நான் அடி பணிந்து போக வேண்டி வந்தது" என்று, எந்தக் காரணமும் கூறாமல், ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் தொடங்கிவிட்டால், இறை அவனை நோக்கி வரும் என்பது உறுதி." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Monday, 6 June 2016

சித்தன் அருள் - 345 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால், இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு." -  அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Sunday, 5 June 2016

சித்தன் அருள் - 344 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!


"ஒருவன் எம்மை நாடாவிட்டாலும் பரவாயில்லை! மெய்யாகவே தர்மவானாக, எல்லா நிலைகளிலும் நல்லவனாக, தன் மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால், அவன் எம்மை தேட வேண்டாம். யாமே அப்படிப்பட்ட மனிதனைத் தேடிச் செல்வோம்." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Saturday, 4 June 2016

சித்தன் அருள் - 343 - பழனியில் ஸ்ரீமத் போகர் ஜென்ம நட்சத்திர பூசை-2016

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நேற்று (03/06/2016) வெள்ளிக்கிழமை அன்று பழனியில் போகர் சித்தரின் ஜென்ம நட்சத்திர பூசை நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட ஒன்றிரண்டு புகை படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!
பழனி மலை கோவில் கோபுரம் 

போகர் சித்தர் சமாதி நுழைவு வாசல், பழனி


அபிஷேக பூசை 

புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்

போகர் பூசை செய்த மரகத லிங்கத்திற்கு அபிஷேகம்

பழனி மலை - மாலை நேர தோற்றம் 

பழனி மலை - இரவு நேர தோற்றம்

போகர் பெருமான் குகை வடிவ ரதத்தினுள்


ஆவினன்குடி கோபுரமும் ரதமும்

தண்டாயுதபாணியும் போகரும்

மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கல்வடிவ போகர் குகையின் இடதுபக்கம்

பழனியில் வசித்த சாக்கடை சித்தர் சமீபத்தில் இறைவனிடம் கலந்தார். சமாதியில் வைக்கும் முன் அவர் உடல் அன்பர்கள் பார்வைக்கு அமர்ந்த நிலையில் மரியாதை செய்து வைக்கப்பட்டது.


ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீஸ்வராயா நமஹ! 

சித்தன் அருள் - 342 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"சேர்த்த பாபத்தை குறைப்பதற்கும், இனி பாபம் செய்யாமல் வாழ்வதற்கு மட்டும்தான் மனித தேகம், மனிதப் பிறவி. சிந்திக்கும் ஆற்றலை, இறை மனிதனுக்கு தந்ததின் காரணம், பிறர் துன்பங்களைக் கண்டு வருந்த, இரங்கவேண்டும் என்பதற்காகத்தான். அப்படிப்பட்ட இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும், அவர்கள் உயர்ந்த ஆத்மாக்களே! இதில், விலங்கு, விருஷம், மனிதன் என்ற பேதமில்லை." - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!

Thursday, 2 June 2016

சித்தன் அருள் - 341 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!


"இறைவன் பார்த்துப் பார்த்து செய்தால் இங்கே மனிதனுக்கு பஞ்சபூதங்கள் கிட்டாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் காற்று வீசட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் சூரிய ஒளி கிட்டட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நீர் கிடைக்கட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நிலவொளி கிடைக்கட்டும் என்று இறைவன் ஒரு பொழுதும் சிந்திப்பதில்லை. செயல்படுவதில்லை. அந்த இறைவனின் மிகப் பெரிய பராக்கிரம சிந்தனைக்கு ஒவ்வொரு மனிதனையும், நாங்கள் அழைக்கிறோம். அந்த உயர்ந்த உச்ச நிலையிலிருந்து அள்ளி, அள்ளி வழங்குவதே எம் வழியில் வருபவர்களுக்கு அழகாகும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

சித்தன் அருள் - 340 - "பெருமாளும் அடியேனும்" - 54 - அஞ்சனைக்கு ஆஞ்சநேயர் !


சோதனைகள் அதிகம் அதிகமாக தெய்வபக்தி மேலோங்கும். அதே சமயம் பகவானும் கருணை கொண்டு, அவதாரம் எடுப்பார். இதுதான் அன்று முதல் இன்று வரை நடக்கிற அதிசயம்.

திருமலையில் வேங்கடவன் அவதாரம் எடுத்தாலும், கலிபுருஷனால் ஏற்பட்ட தொந்தரவுகள் மிக அதிகம். அத்தனையும் தாண்டித்தான் வேங்கடவன் தன்னை நாடிவந்த அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.

இந்த சமயத்தில்தான்.................

கேசரியும்-அஞ்சனையும் வேங்கடவன் அருள் பெற திருமலைக்கு வந்து தங்கினார். தங்களுக்கு ஓர் அருமையான வாரிசு வேண்டும் என்ற ஆசையில் தவமிருக்க வந்த அஞ்சனை தம்பதிக்கு கலிபுருஷனால் எதுவும் செய்ய முடியவில்லை. தோற்றுப்போனான்.

வேங்கடவன் கருணையால் கேசரியின் தவப்பலமும், அஞ்சனையின் பிரார்த்தனையும் ஒன்று சேர்ந்தது. அஞ்சனை, நீண்ட நாள்களுக்குப்பின் ஒரு பங்குனி பௌர்ணமியில் கருவுற்றாள்.

நல்லபடியாக பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக, கேசரி வேங்கடவனை வேண்டிய பொழுது, "கேசரி! இதற்காகவா கவலைப் படுகிறாய்! என் பாரியாள் மகாலக்ஷ்மியே அஞ்சனை பக்கத்தில் இருந்து சுகப்பிரசவம் பார்ப்பாள். அது மட்டுமல்ல, பிரம்மாவின் மனைவி கலைவாணியும், முக்கண்ணனின் பாரியாள் பார்வதி தேவியும் அஞ்சனைக்கு பக்க பலமாக இருப்பார்கள். வேறு என்ன வேண்டும்?" என்று தரிசனம் கொடுத்து அருள்வாக்கு கொடுத்தார்.

"இதை விட வேறு பாக்கியம் எனக்கு என்ன வேண்டும்?" என்று கேசரி சந்தோஷப்பட்டார்.

"உனக்கு பிறக்கப் போகிற வாரிசு இந்த உலகத்தையே ஆளப் போகிறான். பக்திக்கு அவனை விட வேறொருவனை உதாரணம் காட்ட முடியாது. அது மட்டுமல்ல. அவனை வெல்ல யாராலும் முடியாது. அப்படிப்பட்ட பாரக்ரமசாலி" என்று பிறக்கப் போகின்ற குழந்தையைப் பற்றி பெருமையாகச் சொல்லி, கேசரி-அஞ்சனையை வேங்கடவன் வாழ்த்தினார்.

அஞ்சனையிடம் இதைச் சொன்னதும், அஞ்சனை முதலில் சந்தோஷப் பட்டாலும், அவள் மனதில் ஒரு சோகம் இருக்கத்தான் செய்தது.

"என்னதான் இருந்தாலும், என் குழந்தையை வேறு ஒருவருக்கு "தத்து" கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றாள்.

"என்ன சொல்கிறாய் அஞ்சனை?"

"பிள்ளை வரம் வேண்டித்தானே நாம் இங்கு வந்தோம்"

"ஆமாம்!"

"வேங்கடவனும் நமக்கு  பாக்கியத்தைத் தந்தார். இல்லையா?"

"சந்தேகமென்ன?'

"அப்படிப்பட்ட பிள்ளையை வாயு பகவானுக்கு " தத்து" கொடுக்க முன் வரலாமா?"

"என்ன அஞ்சனை! உனக்கு என்ன ஆயிற்று?" என்று பதறிப் போனான் கேசரி.

தான் கண்ட அந்த கனவுக் காட்ச்சியைச் சொன்னாள் அஞ்சனை.

"அட பைத்தியமே! ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான கனவுக் காட்சி வரும். அவை எல்லாவற்றுக்கும் மதிப்பு கொடுத்தால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. நமக்குத்தான் வேங்கடவனே அருகில் இருக்கிறார். பிறகு என்ன பயம்? எல்லாவற்றையும் திருமலை நாதனே பார்த்துக் கொள்வார்" என்று தைரியம் ஊட்டினான் கேசரி.

கேசரியின் தைரியமான வார்த்தைகள், அஞ்சனைக்கு வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது.

சில காலம் சென்றது.

ஒரு நாள் அஞ்சனையே வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்து "என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆயுள் பலம், ஆரோக்கிய பலம் அதிகரிக்க சீமந்தம் செய்ய வேண்டும். அதற்கான வசதிகள் திருமலையில் இல்லையே! உற்றார் உறவினர் எல்லோரும் வெளியூரில் இருக்கிறார்களே? என்ன செய்வது?" என்று கேட்டாள்.

"இவ்வளவுதானே! புரட்டாசி மாதம் எனக்கும் பிடித்த மாதம். இங்கு என்னைத் தேடி இந்திரலோகமும் வரும். முனிபுங்கவர்களும் வருவார்கள். அவர்கள் அத்தனை பேர் முன்னிலையில், சீமந்தம்-வளைகாப்பை நானே ஏற்ப்பாடு செய்கிறேன் போதுமா?" என்று கருணையோடு  கூறினார் வேங்கடவன்.

"இப்படி கூட அதிசயம் நடக்குமா?" என்று அஞ்சனை வியந்து போனாள்.

"அஞ்சனை! என்ன யோசிக்கிறாய்?"

"ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் தங்கள் திருப்பாதத்தில் ஒப்படைத்துவிட்டேன், பிரபு! நேரம் நெருங்க நெருங்க ஏதோ ஒரு பயம் என்னை வாட்டுகிறது! கலிபுருஷனால் எனக்கு, ஏதாவது தொந்தரவு வருமோ என துளி பயம் ஏற்படுகிறது!" என்றாள்.

"அஞ்சனை! உனக்கு தன்னம்பிக்கை குறைந்திருக்கிறது. உன்னை மிகவும் தைரியசாலி என்று நினைத்தேன். இத்தனை உறுதிமொழி அளித்த போதும் நீ கூட என்னை நம்பவில்லை பார்த்தாயா?" என்றார் திருமலை வாசன்.

"பகவானே! தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. எல்லா வற்றையும் தாங்கள் பொற்தாமரைப்பாதத்தில் ஒப்படைத்தப் பிறகு எனக்கு  பயமும் இல்லை. தாங்கள் வார்த்தை தேவகானமாக இருக்கிறது. இருந்தாலும் பெண் ஜென்மம் தானே! சஞ்சலம் இருக்கத்தானே செய்யும். எனவே, இதை தாங்கள் பெரியதாக எண்ணவேண்டாம்." என்று காலில் விழுந்து நமஸ்கரித்தாள், அஞ்சனை.

வேங்கடவன், அஞ்சனைக்கு வாழ்த்து கூறினார், சிறு புன்சிரிப்புடன்.

புரட்டாசி மாதம், திருமலையே கோலாகலமாக இருந்தது. வேங்கடவனை தரிசிக்க மூவுலகத்திலிருந்தும் வந்திருந்தனர். தரிசனம் செய்து முடித்த கையேடு, அஞ்சனையின் விருப்பப்படி சீமந்தமும் வளைகாப்பும் பெருமாள் சன்னதியில், எல்லோருடைய முன்னிலையில் நடந்தது.

"திருமலையில் சீமந்தம் நடந்தது, இதுதான் முதல் தடவை என்பதால், யாருக்கும் கிடைக்காத பெருமை, கேசரி-அஞ்சனை தம்பதிக்கு கிடைத்தது".

சீமந்த வாழ்த்துகளைப் பெற்ற பின்பு மகாலட்சுமி அஞ்சனையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள். பிரசவத்திற்கு தேவையான மூலிகை மருந்துகளை தன்வந்தரி பகவானே நேரில் வந்து கொடுத்தார்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில், அஞ்சனை ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

மகாலக்ஷ்மியும், பார்வதி தேவியும், சரஸ்வதி தேவியும் அந்தக் குழந்தையை ஆசையோடு முத்தமிட்டுக் கொஞ்சினர்.

முப்பெரும் தேவியரும் முதன் முதலாக ஒன்று சேர்ந்து கொஞ்சிக் குலாவிய பெருமையும் பாக்கியமும் அஞ்சனையின் புத்திரனுக்குத்தான்  கிட்டியது. இதுவரை அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வேறு எந்த தெய்வக் குழந்தைக்கும் கிட்டியதாகத் தெரியவில்லை.

குழந்தை ஆரோக்கியமாக சிரித்தது. பார்க்கப் பார்க்க அந்தக் குழந்தையின் முகத்தில் விஷ்ணு, சிவன், பிரம்மா இவர்களிடம் காணப்படும் தெய்வீக சக்தி இருப்பதை அனைவரும் கண்டனர். மெய்மறந்து போனார்கள்.

தான் பெற்ற குழந்தையைக் கண்டு ஆனந்தப்பட்டாலும், வேங்கடவன் தனக்குத் தைரியம் கொடுத்தாலும், இந்தக் குழந்தை தன்னிடம் அதிக நாளைக்கு நீடித்து இருக்குமா? என்ற பயம், அஞ்சனையிடம் இருந்து வந்தது மட்டும் உண்மை.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் திருமலையில் தங்கி இருப்பது? ஊர் போய்ச் சேரவேண்டாமா? என்ற எண்ணம் கேசரிக்கு ஏற்பட்டது. தன் என்னத்தை அஞ்சனையிடம் சொல்ல, அஞ்சனையோ பெருமாளிடம் உத்தரவு கேட்டுவிட்டு பின்பு செல்லலாம் என்றாள்.

"தாய் வீட்டிற்கு வந்த பெண் பிரசவம் முடிந்ததும் கணவன் வீட்டிற்கு செல்வதுதான் முறை. ஆனால் குறைந்தது மூன்று பௌர்ணமியாவது இருக்க வேண்டுமே? அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?" என்று வேங்கடவன் சிரித்துக் கொண்டே சொன்னார்.

வேங்கடவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று கேசரி-அஞ்சனை முடிவு செய்த பொழுது...........

அந்த அதிசயம் நிகழ்ந்தது!

சித்தன் அருள்.......................... தொடரும்!

Wednesday, 1 June 2016

சித்தன் அருள் - 339 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!


"மனதிலே தீய எண்ணங்களும், சுயநல எண்ணங்களும் குறைந்து கொண்டே வரவேண்டும். எதைப் பார்த்தாலும் பொதுப் பார்வையாக, ஒரு மகான் இந்த இடத்தில் இருந்தால் எப்படி செயலாற்றுவார்? ஒரு சித்தன் இந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன முடிவெடுத்திருப்பார்? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து செயலாற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம் சரியான ஆன்மீக வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் முடிவெடுத்துக் கொள்ளலாம்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!