​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 29 April 2021

சித்தன் அருள் - 998 - அன்புடன் அகத்தியர் - நாடி வாக்கு - சிதம்பரம்!


ஒரு முறை சிதம்பரம் கோவிலில் அர்த்தஜாம பூஜைக்காக காத்திருந்த பொழுது, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் நாடி வாசிக்க வேண்டி வந்தது. தனிப்பட்ட நாடி வாக்கில் அகத்தியப் பெருமான் வந்து பொதுவான ஒரு சூட்சுமத்தை உரைத்தார். அதை மட்டும் அடியவர்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே தருகிறேன்.

"அப்பனே, இன்னொரு விளக்கத்தையும் ஒரு சூட்சுமமாக விளக்குகின்றேன்.  யாரும் விளக்கவில்லை. அப்பனே! பௌர்ணமி, அமாவாசை திதிகளில் இங்கு அமர்ந்து/உறங்கினால் அப்பனே, உடுக்கை சத்தம் கேட்கும், அப்பனே! நடை பயணம் கேட்கும், சலங்கை ஒலி கேட்கும். அப்பனே இங்கு திரிவார் என்பது திண்ணம். சிவபெருமான் இங்கு நடப்பதை கேட்கலாம். இது ஞானிகளுக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.

அப்பனே! எவையென்று கூற! அப்பனே! இன்னொரு விளக்கத்தையும், மிக சூட்சுமமாக விளக்குக்கின்றேன். இதையும் யாரும் விளக்கவில்லை. அப்பனே! இரவு இங்கு உலா வந்து ஒரு காலம் அமர்ந்து, பின்னர் அண்ணாமலைக்கு வருவான். பின்னர் அங்கு சுற்றி திரிவான் இறைவன். பின்பு ஏகாம்பரம் என்றழைக்க கூடிய காஞ்சிபுரம் செல்வான். இங்கிருந்து காளத்திரி (காளஹஸ்தி) போவான். அதன் பின்னர் அதிகாலையில் திருவானைக்காவில் நீராடுவான் இவன்" என்றார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நாடி வாசித்தது ஒரு அமாவாசை திதி அன்று, சிதம்பரத்தில். நாடி வாக்கை பதிவு செய்த பொழுது, பின்னணியில் சதங்கை ஒலியும் பதிவாகியுள்ளது. அதை உணரும் பாக்கியம் ஒரு சிலருக்குத்தான் கிடைத்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்! 

Sunday 25 April 2021

சித்தன் அருள் - 997 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-2!

இன்னும் ஒரு சூட்சுமமான விஷயத்தை உரைக்கின்றேன். கெட்ட வினைகளால் இன்னும் கெடுதல் நிகழ்ச்சிகள் வரும். ஒன்றை உரைக்கின்றேன். நல் முறையாக அனுதினமும், மாலை வேளையில் இல்லத்தில் ஒரு தீபமேற்றி, அதில் நல் மூலிகைகள் இட்டு, ஒரு சிறு கற்கண்டம், ஏலக்காயும் இட்டு, நல் முறையாய் வேண்டிக்கொண்டு, "அகத்தியன்" என்று சொல்லிவிடுங்கள். அப்பனே, யான் இருக்கின்றேன். யான் இருக்கும்பொழுது, எதையும் நம்பாதீர்கள். அப்பனே, இதையும் யான் சொல்லுகின்றேன். யான்தான் அகத்தியன் என்றெல்லாம் வருவார்கள். அப்பனே நம்பிவிட்டால், நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்று சொல்வேன். [தீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக உரைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் (பச்சை கற்பூரம் ஆகலாம்) - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்].

அகத்தியன் என்று ஒருவன் இருக்கின்றான், இப்பொழுது தேடி வந்தீர்களே, எவ்வாறு தேடி வந்தீர்கள், நீங்களா வந்தீர்கள், இல்லை யானே அழைத்தேன். யானே அழைத்த பொழுது, நல்லது செய்யாமல் விட்டுவிடுவேனா நான். அதனால் பக்தன் என்று நிறைய பேர் வருவார்கள். இனியும் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லுவேன். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை எடுத்து வாருங்கள். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை விட்டுவிட்டு, நாடி சென்றால், நீயும் மனிதன், அவனும் மனிதன். இதை சிந்தித்துக்கொள் என் மக்களே! இப்பொழுது கூட சொல்லிவிடுங்கள் "அகத்தியன் இருக்கின்றான்" என. பின்பு, உங்கள் வேலையை பார்க்கத் தொடங்குங்கள்.

சாமியார் வேடம் போட்டு உட்கார்ந்து கொண்டால் எல்லாம் வரும் என்றுணர்ந்து, தானே சாமியார், என கூறுவான். அவன்தன் பலவித சுகங்களை அனுபவிப்பான். இவனைவிட கீழான மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. ஆனால் யாரையும் நம்பாதீர்கள், நம்பாதீர்கள் என்றுதான் யான் சொல்வேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமைகள் இருக்கின்றது. இனிய அறிவை யான் கொடுத்துவிடுவேன். ஆயினும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான வினைகளில் மாட்டிக் கொண்டிருக்கின்றீகள், என்பது எந்தனுக்குத் தெரியும். அவை, சிறிது சிறிதாக விலகும் என்பேன்.

அப்பனே, நல் முறையாக எதனை செய்தால், என்றெல்லாம் தோன்றும். எதுவும் வேண்டாம். அகத்தியனை நினைத்துக் கொள்ளுங்கள். அப்பனே, பின் மகன்களுக்கு எதை செய்யவேண்டும் என்று எமக்குத்தெரியும். அதை யான் செய்கின்றேன். அதை விட்டுவிட்டு, அது வேண்டும், இது வேண்டும் என கேட்டுக் கொள்ளாதீர்கள்.  அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள், போதுமானது.

வரும் வழியிலேயே ஆசீர்வாதங்களை கொடுத்துவிட்டேன். அன்பு மகன்கள், இப்பொழுதும் யான் இங்கே இருக்கின்றேன். அனைவருக்கும், எனது ஆசிகள். மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன். அப்பனே எம்மை தேடி இங்கு வந்தீர்களே! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சுபிட்சம் நடக்கப்போகின்றது. இதுவரை ஈசன் நடத்தும் நாடகத்தில் கட்டங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதையும் யான் பார்த்துக் கொள்கின்றேன். அன்பு மகன்களே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் செல்லுங்கள்.

மீண்டும் ஒருமுறை உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே பக்திமான்களாகலாம். அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால், மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், என் மக்களே. அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுத்து அனுப்புகின்றேன், இப்பொழுது.

பொதிகை வாக்கு நிறைவு பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday 22 April 2021

சித்தன் அருள் - 996 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-1!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.ஜானகிராமன் அவர்கள், நாடியில் வாசிக்கும் விஷயங்களை ஒரு தலைப்பின் கீழ் வெளியிட, வாசகர்களிடம், ஒரு தலைப்பை சொல்லுங்களேன், என கேட்டிருந்தேன். நிறைவாக அகத்தியர் அடியவர்கள் நிறையபேர் பலவித தலைப்பை கூறியிருந்தனர். அவற்றை குருநாதரிடம் சமர்ப்பித்து கேட்ட பொழுது "அன்புடன் அகத்தியன்" என்ற தலைப்பு அவரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தலைப்பை அகத்தியர் அடியவர் உமாராணி என்பவர் கூறியிருந்தார். அவருக்கும், வேறு பல தலைப்பையும் கூறிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைத்தளத்தின் "நன்றி"யை தெரிவித்துக்கொள்கிறேன்.  நலமாய் வாழ்க!

முதன் முதலாக, அகத்தியப்பெருமானுடன் ஆன நாடி வாக்கு யாத்திரையை "பொதிகையிலிருந்து" தொடங்குவோம்.

2021இல் ஒரு அகத்தியர் குழுவானது, பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்தனர். அந்த குழுவில்  இருந்த, திரு ஜானகிராமன் அவர்கள், பூசைக்குப் பின் அகத்தியரிடம் பொது அருள் வாக்கு கேட்டார். அவர் நாடியில் வாசித்ததை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக கீழே தட்டச்சு செய்து சமர்ப்பிக்கிறேன்.

"அப்பனே நலன்கள் ஏகும்! காண வந்தீர்கள், எவை என்று கூறாமல்! அப்பனே அத்தனை அனுக்ரகங்கள். ஒவ்வொருவரையும் யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். அப்பனே கவலை இல்லை. ஆனாலும் வரும் காலம் அழியும் காலம் என்பேன்.  அப்பனே! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள், கட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் அப்பனே! என்னை நம்பியவர்களை ஒரு பொழுதும் கைவிட்டதாக சரித்திரம் இல்லை. அப்பனே வரும் காலங்களில் இதைத்தான் சொல்லுகின்றேன்.

ஈசனும் வரும் காலங்களில் பலவித கட்டங்களை கொடுப்பான். என் பக்தர்களை, கூடவே இருந்து கட்டங்களிலிருந்து காப்பேன் என்று இப்பொழுது உத்தரவு அளிக்கின்றேன்.  எவ்வாறு என்றும் கூட, முடியாமல் பின் எவ்வாறு தாழ்ந்து வந்தீர்கள் என்று கூட என்னால் பார்க்க முடிந்தது. அப்பனே இருந்த போதிலும், என் ஆசிகள் பரிபூரணம் என்பேன்.

அப்பனே, இங்குள்ளவருக்கும், ஒவ்வொருவருக்கும் நான் பார்த்து ஆசிர்வதித்துவிட்டேன் என்பேன், அவரவர் வழியில் செல்ல. அப்பனே, ஆனாலும் துன்பங்கள் நீங்காது, ஏன் என்றால் இது கலியுகம். அகத்தியன் என்று சொன்னாலே மோட்சம்தான். ஆனாலும் சில சில வினைகளால், கட்டங்கள் வரும், அதையும் நான் தீர்த்து வைத்துவிட்டால், பின் மனித பிறப்பிற்கு சரித்திரமே இல்லாமல் போய்விடும். இதனால் நன்கு உணர்ந்து எதனை செய்வது என்றும், எதனை செய்யக்கூடாது என்பதும் எந்தனுக்கு தெரியும். பின்பு சிறிது கட்டங்கள் வந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள். ஆனாலும் இன்பமே வந்துவிட்டாலும், மோக்ஷ கதியை அடைய முடியாது. அப்பனே, அகத்தியனை வணங்குபவர்கள்,நிச்சயமாய் மோக்ஷகதியை அடைவார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கட்டங்கள் வந்து கொண்டிருக்கும். அதையும், தனிப்பாதையாய் மாற்றுகிறேன். அப்பனே, இப்பொழுது சொல்கின்றேன், அனைவருக்கும், இது மோக்ஷ பிறப்பு. அது எப்படி என்று உணராமலேயே என்னை வந்து கண்டுவிட்டீர்கள். ஆனால் நானும் வழியில் உங்களோடு வந்தேன் என்பேன்.  அதனால், தொல்லைகள் இல்லை, தொல்லைகள் வராது என்பேன். அப்பனே, எவை என்று சிந்தித்துப் பார்த்தால், பொய்யான உருவங்கள், பொய்யான பக்தர்கள், பொய்யானவர்கள், நிறைய வருவார்கள். அப்பனே நம்பிக்கையாக இருங்கள், அகத்தியன் இருக்கிறான் என்று. ஆனாலும், யாரையும், இனிமேல் நம்புதல் கூடாது என்பேன். அப்பனே, நான் அதை செய்வேன், இதை செய்வேன் என்றெல்லாம் வருவார்கள். எம்மை நம்பிவிட்டால், (அவர்களால்) ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.  அகத்தியன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிடுங்கள். அனைவருக்கும், ஆசிகளாக, எந்தனுக்கு அகத்தியன் இருக்கின்றான் என்று சொல்லிவிடுங்கள். ஆனாலும், நிறைய பேர்கள் வருவார்கள். அதனை செய்கின்றேன், இதனை செய்கிறேன் என்பார்கள். அதனால் ஒன்றும் பிரயோசனமில்லை, கட்டங்கள்தான் வரும். இங்கு இறைவனின் சக்தியை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அதனால்தான் சொல்லுகின்றேன்.

அதை செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும் நம்பிவிடாதீர்கள். அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும். இதை விட்டுவிட்டு மற்றவைகளை நம்பி போனால், எவை என்று தெரியாத அளவுக்கு, கட்டங்களை அள்ளித்தந்து போவார். அப்பனே! ஈசன் நடத்தும் நாடகத்தில், அழியும் காலம் வந்துவிட்டது. அப்பனே, ஒவ்வொரு வினைகளாலும் மனிதன், மனிதனை அழித்துக் கொள்வான்.

சித்தன் அருள்...............தொடரும்!

Thursday 15 April 2021

சித்தன் அருள் - 995 - அகத்தியர் ராஜ்ஜியம் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் அருளால், அவரின் உத்தரவின் பேரில், திரு. ஜானகிராமனை, நாடி வாசிப்பவராக  சித்தன் அருள் வலைப்பூ வழி உங்களுக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகமிருக்கும், என நினைக்கிறேன். எத்தனையோ அடியவர்களின், கேள்விகளுக்கு விடை அளித்து, வழி நடத்தி, மனப்புண்களுக்கு மருந்துதாக, யாம்  உன்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றெல்லாம் அருள்வாக்கு தருவதாக, தெரிய வந்தது.

திரு ஜானகி ராமன், அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுது, அடியேனை அழைத்து, அவருக்கு அகத்தியப்பெருமான் இடுகின்ற கட்டளைகளை, அதன் வழி நடத்துகிற நல்ல விஷயங்களை, அனுபவங்களை, முடிந்தவரை, அகத்தியர் உத்தரவுடன் பகிர்ந்து கொள்வார்.

அனுபவங்களை கேட்கும் பொழுது, அடடா, இதுவல்லவா, குருநாதர் நடத்தும் நாடகம். இதில் அடியேனுக்கு பங்கு பெற முடியாமல் போனதே! என நினைக்க தோன்றும். இருப்பினும், ஒரு முறை, பேசும்பொழுது, "இந்த மாதிரி அனுபவங்களை/பொது வாக்கை, அகத்தியர் அனுமதியுடன் சித்தன் அருள் வலைப்பூவில் வெளியிடலாம்! அவரிடமே, உத்தரவு கேளுங்களேன், என்றேன்.

கேட்டுப் பார்க்கிறேன், என்ன சொல்வார் எனத் தெரியவில்லை! என்றார்.

"சரி! பார்க்கலாம்! என்றேன், சிரித்தபடி.

வருடங்களாக ஒரே பிரார்த்தனையை திருப்பி திருப்பி அகத்தியப்பெருமானிடம் வைத்து, அவர் மனம் இளக வைத்த அடியவர்கள் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்த்தார் என்றால், இந்த ஒரு வேண்டுதலையும் அனுமதிப்பார் என்று அடியேன் மனம் கூறியது. பொறுமையாக காத்திருந்தேன்.

இரு வாரங்களுக்குப்பின் அகத்தியப்பெருமான் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியால் மனம் குளிர்ந்து, மிகுந்த சந்தோஷத்தில் இருந்த நேரம், ஜானகி ராமன், அகத்தியப்பெருமானிடம் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டார்.

"நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் எந்த விதத்திலும் அந்த நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள் மனம் நோகாமல், அவர்கள் அடையாளம் வெளியே தெரியாமல். வார்த்தைகளை மிக கவனமாக உபயோகித்து, யோசித்து வெளியிட வேண்டும். அனைவரும் எமது சேய்களே!  ஒருவரின் அனுபவம், பிறருக்கு பாடமாக அமையலாம், வழி நடத்தலாகவும் அமையலாம். ஆகவே, அனுமதி உண்டு!" என ஆசிர்வதித்தார்.

இந்த தகவலை அவர் அடியேனிடம் தெரிவித்த பொழுது, மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். இத்துடன், அவ்வப்பொழுது, அகத்தியப்பெருமான் நாடியில் உரைக்கும், பொது வாக்கினையும் அனைவருக்கும் தெரிவிக்கலாம் எனவும் அனுமதித்துள்ளாராம்.

சரி! இங்கு தெரிவிக்கப்படுகிற விஷயங்களை ஒரே தலைப்பின் கீழ் தொகுத்து வழங்கலாம் என்று ஒரு எண்ணம்.

"அகத்தியர் ராஜ்ஜியம்" என்கிற தலைப்பை யோசித்துள்ளேன். உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் கூறுங்கள். மிக சிறப்பாக இருக்கிறது என அகத்தியப்பெருமான், கூறினால் அதை எடுத்துக்கொள்ளலாம்.

விரைவில் அடியேன் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்!

சித்தன் அருள்............தொடரும்!

Wednesday 14 April 2021

சித்தன் அருள் - 994 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22]


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2020ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:- 

07/06/2021 - திங்கள்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

20/07/2021 - ஆடி மாதம் - செவ்வாய்க்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம் 

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

21/07/2021 - ஆடி மாதம் - புதன்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி திதி - கேட்டை நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

22/07/2021 - ஆடி மாதம் - வியாழக்கிழமை  - சுக்லபக்ஷ திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம்.

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

04/09/2021 -ஆவணி மாதம் - சனிக்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.

18/10/2021 - திங்கள் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம். 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2021 முதல் 13/01/2022க்குள் வருகிறது. 

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-

23/12/2021 - வியாழக்கிழமை - மார்கழி மாதம், சதுர்த்தி திதி - ஆயில்யம் நட்சத்திரம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Tuesday 13 April 2021

சித்தன் அருள் - 993 - இந்த வருட திருவோண நாட்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது."

சித்திரை - 04/05/2021
வைகாசி - 31/05/2021
ஆனி - 27/06/2021
ஆடி - 25/07/2021
ஆவணி - 21/08/2021
புரட்டாசி - 17/09/2021
புரட்டாசி - 15/10/2021
ஐப்பசி - 11/11/2021
கார்த்திகை - 08/12/2021
மார்கழி - 05/01/2022
தை - 01/02/2022
மாசி - 28/02/2022
பங்குனி -28/03/2022

அகத்தியரின் உத்தரவை நிறைவேற்றி, அவர் அருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!