​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 30 October 2017

சித்தன் அருள் - 730 - அந்தநாள் > இந்த வருடம் (2017) - கோடகநல்லூர் - ஒரு நினைவூட்டல்!


அகத்தியப் பெருமானின் அடியவர்களுக்கு வணக்கம்!

அந்தநாள், இந்த வருடம் என்கிற தலைப்பில் வந்த அந்த புண்ணிய நாள், கோடகநல்லூரில் வரும் வியாழக் கிழமை 02/11/2017 அன்று வருகிறது என்பதை முன்னரே இங்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஒரு நினைவூட்டலுக்காக, எல்லா அகத்தியர் அடியவர்களும், அன்று கோடகநல்லூர் சென்று, தாமிரபரணியில் நீராடி, பெருமாளின் அபிஷேக பூசையில் கலந்து கொண்டு, இறைவன், அகத்தியப் பெருமானின் அருள்/ஆசிர்வாதம் பெற்று, இனிதே வாழ்ந்திட வேண்டுகிறேன். பெருமாளின் அபிஷேக பூஜை காலை 10.30க்கு தொடங்கும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார். அங்கு செல்பவர்கள், உடல் உழைப்பால் ஏதேனும் உழவாரப்பணி கிடைத்தால், செய்யுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

எல்லா அருளும் உங்கள் அனைவரையும் சேர பிரார்த்தித்துக் கொள்கிறோம்.Thursday, 19 October 2017

சித்தன் அருள் - 729 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 10


​அடுத்த வியாழக்கிழமைக்காக காத்திருந்து, மூத்தோனை வணங்கி, அனுமனை வணங்கி தினமும் பாராயணம் செய்யும் முறையை தொடங்கினேன். அதுவும் அகத்தியர் அருளால், கூடவே வளர்ந்து வந்தது. எதை நினைத்து செயலில் இறங்கினாலும் ஒரு உத்வேகம் இருப்பதையும், செயல்கள் அனைத்தும் அகத்தியர் அருளால் வெற்றியடைவதையும் காண முடிந்தது. யாரேனும் ஒருவர் வழி, இவ்வுலகுக்கு, அனைத்து உயிர்களுக்கும் ஏதேனும் ஒரு நல்லது நடக்க, இறை அருள தயாராக இருப்பின், அதை வேண்டிக்கொள்ளும் ஒரு பாக்கியம் மட்டும் எனக்கு கிடைத்தால் போதும் என்கிற மனநிலை வந்தது. ​இப்படிப்பட்ட மனநிலைதான் இறைவன் அருள் என்று உணரவும் செய்தேன்.

சந்தோசம் என்பது இயல்பாக வரக்கூடியது. ஆனால் அதிக நேரம், அதிக நாட்கள் நிலையாக நிற்காதது. இதை பகவான் நமக்கு ஒரு சோதனைக் கருவியாக வைத்திருக்கிறான் என்பதை உணர நாளாகும்.  கிடைத்தற்கரிய சந்தோஷம் ஒருவனை என்ன, என்ன செய்ய வைக்கும், எப்படி தன்னிலையை மறக்க வைக்கும் என்பது அவனுக்கும் தெரியாது.  ஆனால் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டிவிடும். இன்னும் சொல்லப்போனால், சாதாரண நிலையில் அல்லது துக்கப்படும் பொழுது உள்ள நிலையில் செய்கின்ற தவறைவிட, மிகவும் சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்கின்ற தவறு, மிகப் பெரிய தவறாகிவிடும். எனவே, எதையும் சமமாக நினைத்து வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்ற தத்துவத்தைச, சுந்தரகாண்டத்தின் 62, 63ம் சர்கத்தில் காணலாம்.

இந்த 62, 63ம் சர்கத்தை படிப்பவர்கள் அனைவருக்கும் தோல்வி என்பது நெருங்காது, பயம் என்பது இருக்காது, தடங்கல்கள் விலகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எட்டாம் வீட்டில் கேது, ராகு, குரு இருப்பவர்களும், சனிபகவானால் கஷ்டப்படும் அஷ்டம சனி நடப்பவர்களும், அஷ்டம ராகு நடந்து கொண்டிருப்பவர்களும், கஷ்டம் நீங்கி வாழ்வார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பயந்து கொண்டிருப்பவர்களுக்கு எம பயம் விலகும். இருதய அறுவை சிகிர்ச்சை, மூளை அறுவை சிகிர்ச்சை வெற்றி அடையும். திருடர்கள், நெருப்பு இயற்க்கை சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களும், துன்பத்திலிருந்து விடுதலையை நிச்சயம் அடைவார்கள்.

களத்திர ஸ்தானத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்து, அவரவர்கள் மகா புக்தியோ, திசையோ நடப்பவர்கள் 64ஆம் சர்கம் பாராயணம் செய்தால் அத்தனை தோஷத்தையும் விளக்கி, தாம்பத்திய வாழ்க்கையை மலரச் செய்யும். திருமண வாழ்க்கையில் சந்தோசம் இல்லாதவர்கள், பிரிந்து விடவேண்டும் என்று வருந்தி, தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தொழில் நிமித்தம் காரணமாகக் கணவனும், மனைவியும் தனித் தனியாக பிரிந்திருப்பவர்கள், காதல் தோல்வி ஏற்படுமோ என்று அனுதினமும் பயந்து கொண்டிருப்பவர்கள், அத்தனை பேரும் இந்த சர்கத்தை தினம் மூன்று தடவை படித்து வந்தால் போதும், நடக்காத திருமணம் நடக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் விலகும், இல்வாழ்க்கையில் பரிபூரண ஆனந்தத்தை அடைவார்கள்.

சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கவலைப் படுபவர்கள், ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச்சனி, நடந்து கொண்டிருக்கும் ஜாதகத்திற்கு சொந்தக்காரர்கள், சந்திரனோடு கேது இருப்பவர்கள், கேது திசையில் சந்திர புக்தி நடப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் சந்திராஷ்டமத்தில் அவதிப்படுபவர்கள், கணவன், மனைவியை பிரிந்திருப்பவர்கள், விவாகரத்து செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வரவில்லை என்று கவலைப்படுபவர்கள், அன்யோன்யமாக பழகத்தடை இருப்பவர்கள், களத்திர தோஷம் உடையவர்கள், செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இந்த அறுபத்திநான்காவது சர்கத்தையும் முப்பத்தாறாவது சர்கத்தையும் தொடர்ந்து தினம் பாராயணம் செய்து வந்தால், சங்கடங்கள் நீங்கி சௌபாக்கியம் பெறுவார்கள்.

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனியினால் அவதிப்படுபவர்கள், சனி மகாதிசையில் சுயபுக்தி, சூரிய புக்தி, கேது புக்தி, சந்திர புக்தி, ராகு புக்தி நடப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, கேது அந்தரம், ராகு புக்தி, ராகு அந்தரம், சனி புக்தி நடப்பவர்கள், செவ்வாயோடு கேது சம்பந்தப்பட்டு ஆறாம் வீட்டில் இருக்கும் ஜாதகவாசிகள், களத்திர செவ்வாய் தோஷத்தை உடையவர்கள் அனைவரும் இந்த அறுபத்தாறு, அறுபத்தேழாம் சர்க்கத்தை தினம் மூன்று தடவை காலையில் பாராயணம் செய்து வந்தால் அவர்களது கஷ்டம் நீங்கும், தலைவிதியே அற்புதமாக மாறும், என்று கூறி அன்று அகத்திய பெருமான் விடை பெற்றார்.

அடியேனும், அமைதியாக ராமர் பாதத்தில் நாடியை வைத்துவிட்டு, த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள்.............. தொடரும்! 

Tuesday, 17 October 2017

சித்தன் அருள் - 728 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளிலிருந்து" உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். என்றும், இனிதே நடக்கட்டும் என குருவிடம் வேண்டிக் கொள்கிறோம்! அகத்தியப் பெருமானின், அருள், வழிநடத்தல், துணை என்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினருக்கும், நண்பர்களுக்கும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தித்து, அகத்தியர் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம்.

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday, 12 October 2017

சித்தன் அருள் - 727 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 9


அகத்தியப் பெருமான் உரைத்த "ஸ்ரீராம சரிதம்" மிக நன்றாகவே வளர்ந்து வந்தது. எந்த சூழ்நிலைகளை விலக்கவேண்டும், எதை சுட்டிக்காட்டி போதனை செய்யவேண்டும் என தீர்மானித்து, அகத்தியப் பெருமானே, ஒரு மாணாக்கனை வழி நடத்தி சென்றதை நினைத்தாலே உடல் புல்லரிக்கும். தெளியாத விஷயத்தைப் பற்றி கேட்கும் முன்னரே, அதற்கான விளக்கத்தையும், உடனேயே தந்து விடுவார். அற்புதமான ஆசிரியர் அவர்.

அந்த வார வியாழக்கிழமை அன்று ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து உடலையும், மனதையும் சுத்தப்படுத்திக் கொண்டு, மூத்தோனையும், அனுமனையும் வணங்கி காத்திருந்தேன். அகத்திய பெருமான், நாடியில் வந்து கூறலானார்.

"ஒரு மனிதனின், வாழ்க்கை என்பது பலவிதமான சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட, சூழ்நிலைகளின் புற அழுத்தங்களை கொண்டது. அதன் நெளிவு, சுளிவுகளை தெரிந்து கொண்டால் ஒழிய, ஒரு மனிதனால் கரை ஏறுவது என்பது, முடியாத காரியம். "எல்லையில்லா பரம்பொருள்" என்று இறைவனை பற்றி கூறினால், அது எப்படிப்பட்ட உணர்வு அல்லது நிலை என்பதை உணர, அதுவாகவே மாறிவிடவேண்டும். இதை விவரிப்பது என்பது எங்கள் கையிலும் இல்லை. உணர வைக்க இறைவன் நினைத்தால் ஒழிய அது நடக்காது. எல்லோரும், அந்த நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்துதான், "புண்ணிய செயல்களை செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள், பற்றை அகற்றுங்கள், விதிக்கப்பட்ட கடமையை செய்யுங்கள், த்யானம் செய்யுங்கள், சித்தம் நிலைக்க வையுங்கள், அனைத்தும் இறைவன் செயல் என்றிருங்கள்" என்று கூறுகிறேன். எத்தனை பெரிய மகானாக இருந்தாலும், உடல் வலிமை பெற்றிருந்தாலும், ஒரு செயலால், பிறர் நிலை என்னவாகும் என்று ஒரு மணித்துளி யோசிக்காமல் செயல்பட்டால், லங்காபுரியை தீ வைத்து பின்னர் மனதளவில் அவஸ்தைப்பட்ட அனுமனின் நிலை தான், மனிதர்களுக்கும். இது எம் சேய்களுக்கு யாம் உரைக்கும் செய்தி" என்று பொதுவாக வாக்கை கூறிவிட்டு, சுந்தரகாண்டத்துக்குள் நுழைந்தார்.

"பரீட்ச்சையில் தோல்வி அடைந்தவர்கள், பதவியை இழந்தவர்கள், விதியினால் கஷ்டப்படுபவர்கள், அஷ்டம குரு, அஷ்டமச்சனி இருக்கிறவர்கள், சனி திசையில் ராகு புக்தி, கேது புக்தி நடக்கிறவர்கள், சூரிய தசையில் கேது, ராகு, சனி புக்தி நடக்கிறவர்கள், நொந்து போன உள்ளத்தோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா, என்ற விரக்தியில் நடமாடுபவர்கள், தோல்விகளை தவிர வேறு ஏதும் அறியாத வியாபாரிகள், தொழில் அதிபர்கள், அத்தனை பேர்களும் 55 முதல் 57 வரை உள்ள சர்கங்களை விடாப்பிடியாக தினம் மூன்று தடவை பாராயணம் செய்து பார்த்தால், துன்பம், தோல்வி, பயம், விரக்தி அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். இது நிரந்தர உண்மை" என்ற தகவலை அளித்தார்.

இதுவரை அவர் விவரித்ததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்த எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி வர உபாயங்களை இறை இத்தனை எளிதாக ஒரு காண்டத்துக்குள் வைத்து, தன் அருளையும் வழங்கியுள்ளதே. இதை விட மிகப்பெரிய பாக்கியம் மனிதனுக்கு எங்கே கிடைக்கப் போகிறது?

"ஆம்! அதுவே இறைவனின் எண்ணம் என்று முன்னரே யாம் உரைத்தோமே. சுந்தரகாண்டத்தின் எந்த ஸ்லோகத்தை, எவன், எந்த நல்ல ஒரு விஷயத்துக்காக வாசித்தாலும், அப்படி பாராயணம் பண்ணுகிற நேரத்தில், அவன், தான் அறிந்தோ, அறியாமலோ, அந்த இறையாக மாறிவிடமுடியும், இறையை உணர முடியும்" என்கிற சூட்சுமத்தையும் வெளிப்படுத்தினார்.

"மேலும், ஒருமுறை உணர்ந்துவிட்டால், பின் இந்த புவியில் அவனுக்கு என வேண்டியது ஒன்றும் இருக்காது, இல்லை என்பதே உண்மை. மனம் எதையும் வேண்டாது." என்றார்.

"58, 59 சர்கங்களை பாராயணம் செய்கிறவர்களுக்கு, இதுவரை செய்த பாபங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கும். எதிரிகளை பற்றிய பயம் விலகும். தெய்வ அனுகூலம் நெருங்கி வரும். தடங்கல்கள் ஒவ்வொன்றாக மறையும். சனிதோஷம் விலகும். ராகு, கேதுவினால் ஏற்படும் நோய்கள், கெடுதல்கள் இருக்கிற இடத்தை விட்டு ஒழியும். செய்வினை பலமற்றுப் போகும். தரித்திரம் விலகும். நின்று போன சுபகாரியங்கள் மறுபடியும் நடக்கும். தோல்வி வெற்றியாக மாறும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்" என்றார் அகத்தியப் பெருமான். 

"வாழ்க்கையில் சில முக்கியமான முடிவை எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களும், நேர்மையாகச் செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும், வில்லங்கம் இல்லாமல் செயல்பட 60, 61 சர்கங்களை படித்துவிட்டு துணிந்து செயலில் இறங்கலாம்.  சந்தோஷமாகவே எல்லாம் நடக்கும். சூரியனோடு, கேது உள்ள ஜாதக ராசிக்காரர்கள், சந்திரனோடு ராகு இருக்கும் பொழுது பிறந்தவர்கள், முக்கியமான முடிவை குடும்பத்திற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சொல்லக்கூடிய பொறுப்பில் இருப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, சூரிய தசையில் ராகு புக்தி நடக்கிறவர்களுக்கும் மேற் கூறிய சர்கங்கள், மறுமலர்ச்சியையும், ஊட்டத்தையும் கொடுக்கும், நல்வழியைக் காட்டும், மனதில் நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுக்கும்" என்றார்.

இத்துடன் அன்றைய வகுப்பை நிறுத்திக்கொண்டு அகத்திய பெருமான் விடை பெற்றார்.

நானும், அமைதியாக த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்.

Thursday, 5 October 2017

சித்தன் அருள் - 726 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 8


அடுத்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்து, காத்திருந்து, வெகு தூரம் நடந்த களைப்புதான் வந்தது. "ஸ்ரீராம சரித" தாகத்தில் இருப்பவனுக்கு தருவதெல்லாம் போதாது என்பார்கள் பெரியவர்கள். அதை, அன்று நான் உணர்ந்தேன். அகத்தியப் பெருமான் ஸ்ரீராம சரிதத்தை அருளுவது மிக மிக குறைந்ததாக போய்விட்டது என்று என் எண்ணம். இருந்தாலும், இந்தவாரம் ஏதேனும் ஒரு புது தகவல் தரமாட்டாரா, என்ற ஏக்கத்துடன், மூத்தோனை, அனுமனை வணங்கி, அகத்தியரை வணங்கி, ப்ரம்மமுகூர்த்தத்தில் ராமர் சன்னதி முன் அமர்ந்தேன்.

அகத்தியப் பெருமான் வந்த வேகத்தில் நல்ல திட்டுதான் கிடைத்தது.

"எதை கூறவேண்டும், எப்போது கூறவேண்டும் என்று எமக்குத் தெரியாதா? அதற்குள் என்ன அவசரம். ஸ்ரீராம சரிதத்தை அப்படியே வாங்கி ஒரே அடியாக ருசித்துப் பார்க்கவேண்டும் என்கிற உன் அவா புரிகிறது. சரி! கேட்டுக்கொள்" என்று ஒரு புது தகவலை கூறினார்.

"கம்பநாட்டான், தன் கவிதைகளில் மிக எளிமையாக உணர்ந்து, ஸ்ரீராம சரிதத்தை வெளிப்படுத்தினான் என்று கூறினேனே! அவனே, ஒரு பழக்கம் தொடங்கி வைத்தது அனுமன்தான் என்று உரைத்தது உண்மை.   மனிதர்கள் கோவிலுக்கு சென்றால், பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து கீழே சாஷ்டாங்கமாக விழுந்து இறைவனை வணங்குகிறார்கள், அதை முதன் முறையாக "சீதா தேவியை" இறைவியாக நினைத்து, அனுமன் தான் செய்தான். அதிலிருந்துதான் அந்த முறை மனிதர்களால் பின்பற்றப்படுகிறது. அதுவே சரியும் கூட. இந்த காலத்து மனிதர்கள், அதை பின்பற்றுவது மிக அரிது. கோவிலுக்கு வெளியே நின்று அல்லது சென்று கொண்டே, "என்ன! இறைவா சௌக்கியமா!" என்கிற பாணியில் செல்கிறார்கள். சரி! இந்த கலியுகத்தில், இவன் இவ்வளவாவது என்னை நினைக்கிறானே என்று இறைவனே, தன்னை மறந்து அருள்கிறது. நின்று செல்வதற்கே, இத்தனை அருள் புரிய இறை காத்திருக்கும் பொழுது, ஒருவன்/ஒருவள் தன்னையே இறைவனிடம் கொடுத்துவிட்டால், இறைவன் என்னவெல்லாம் அருளுவான் என்று என்னால் கூட யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஹ்ம்ம்! மனிதனுக்கு சிந்திக்க, மனதை இறைவனிடம் கொடுக்க, நேரம் வரவில்லை போலும்!" என்று நீண்ட விளக்கத்துடன் தன் ஆதங்கத்தையும், ஒரு சாதாரண தகப்பன் நிலையிலிருந்து கூறினார்.

நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். அவர் கவலை மனிதனை பார்த்து, அவன் போகும் ஆபத்தான வழியைப் பார்த்து. "குழந்தைகள், கீழே விழுந்து அடிபட்டுவிடக்கூடாதே" என்கிற தகப்பனின் மனம்.

"சரி! ஸ்ரீராம சரிதத்துக்கு வருவோம்" என்று தொடரலானார்.

அவர் போன வேகத்தை பார்த்த பொழுது, அனுமன் இலங்கையை அழித்ததை, கூறுவதில் அதிக விருப்பம் இல்லாமல் இருந்தது போல் இருந்தது. ஆம்! அழிவு என்பதை அகத்திய பெருமான் ஒரு பொழுதும் விரும்பியதில்லை. 

"நாற்பத்தி மூன்று முதல், நாற்பத்தி ஆறுவரை உள்ள சர்கங்களை, பட்டாபிஷே சர்க்கத்தோடு படித்து, பாயாசம் நிவேதனம் செய்து வந்தால் அனுமன் போல் பிரகாசிக்கலாம்" என்றார்.

அவை  "ராகு, கேது தோஷம், அஷ்டம சனி, அஷ்டம குரு, கேது இவர்களால் பீடிக்கப்பட்டவர்கள், எதிரிகளால் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள், எப்பொழுதும் வாழ்க்கையில் தோல்வி அடைந்து கொண்டு இருப்பவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற, சாதனை படைக்க, எதிராளியின் கொட்டத்தை அடக்க, இந்த சர்கங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்" என்றார்.

"துர்தேவதைகளால் பீடிக்கப்பட்டவர்கள், எதையோ கண்டு மிரண்டு, தினம் தினம் பயந்து, பயந்து வாழ்கிறவர்கள், சந்திர தசையில் ராகு, கேது புக்தி நடந்து கொண்டிருப்பவர்கள், சூரிய தசையில் கேதுவும், கேதுவோடு சந்திரனும் அஷ்டமத்தில் ராசியாக அமையப்பெற்றவர்கள் , கொடும் குணத்திற்குரிய நபர்களோடு வாழ்க்கை, தொழில் நடத்துகிறவர்கள், சந்திராஷ்டமம் வந்த நாளில் அவதியுறுகிறவர்கள், அனைவரும் இந்த நான்கு சர்கங்களை (47-50) படித்து வந்தால், ஆஞ்சநேயர் வந்து அவர்களுக்கு உதவுவார், வாழ்வு கொடுப்பார், எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் விடுதலை, கிடைக்கும்" என்றார்.

இலங்கையின் பெரும்பகுதியை, தான் ஒருவனே, தனியாக நின்று அழித்த அனுமனின் வாலில், தீ வைத்து எரிக்க தண்டனை வழங்கிய பொழுது, சீதாபிராட்டி அக்னி பகவானிடம், அனுமனுக்காக வேண்டிக் கொண்டாள். சீதாப்பிராட்டியின் வேண்டுதலுக்கு மனமிரங்கி, அக்னி பகவானும், அனுமனை தீண்டாமல் காத்தருளினார். இங்கு தான் ஒரு விஷயத்தை நீங்கள், மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

"ஒரு சுத்தமான ஆத்மா, மற்றவர்கள் கஷ்டமடையும் பொழுது, அவர்களுக்காக பிரார்த்தனை செய்தால், அந்த பிரார்த்தனை உடனேயே பலனளிக்கும்" என்ற பிரார்த்தனையின் பலத்தை தெளிவுபடுத்தினார்.

திருடர் பயம், எதிரிகளினால் பயம், போக்கிரிகளால் பயம், அக்னியினால் பயம், ஆகியவற்றினால் தினம் அவதிப்படுகிறவர்களும், கஷ்டத்தினால் மாட்டிக்கொண்டவர்களும், செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், செவ்வாய், கேது இரண்டும் சேர்ந்து எட்டாமிடம், ஆறாமிடத்தில் இருக்கும் ஜாதகர்களும், அஷ்டம திசையாக செவ்வாய் தசை நடந்து கொண்டிருப்பவர்களும், ரசாயனம், அடுப்படியில் வேலை செய்பவர்களும் 51 முதல் 54 வரையுள்ள சுந்தரகாண்ட சர்கத்தை படித்து வந்தால், அவர்களுக்கு, எந்தவித உயிர் ஆபத்தும், ஏற்படாது, தீயால் பாதிக்கப்பட மாட்டார்கள், பயமும் விலகிவிடும்" என்றார்.

"இறைவனுக்கு அருகில் இருப்பவர்களைத்தான் பகவான் சோதிக்கிறார். தள்ளி நிற்பவர்களை பகவான் கண்டுகொள்வதில்லை, என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதுவல்ல உண்மை. இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால் எளிதான பாதிப்பு வரும். சற்றே வேகமான வாகனத்திலிருந்து விழுந்தால் கொஞ்சம் பலமான பாதிப்பு வரும். ஆனால் உயரமான இடத்திலிருந்து விழுந்தால், உயிருக்கே அபாயம் தான். அது போல் தான், கெடுதல் செய்பவர்கள், பகவானை துதிப்பது போல் நாடகமாடி பெரும் பொருள் சம்பாதித்தாலும், மிக விரைவில் அவர் உயரத்திலிருந்து விழப்போகிறார் என்று அர்த்தம். இறைவன் அப்படிப்பட்டவர்களுக்கு எளிதான பாதிப்பை கொடுக்காமல், உயரமான இடத்திற்கு ஏற்றிக்கொண்டிருக்கிறார் என்பது, சித்தர்களுக்கும், மகான்களுக்கும், ஞானிகளுக்கும் மட்டும்தான் தெரியும். மூன்று உலகத்தையும் ஆண்ட ராவணனுக்கு, ஒரு சாதாரணப் பெண்ணான, பதிவிரதையான சீதாபிராட்டியால் அழிவு ஏற்பட்டதைத்தான் சுந்தரகாண்டம் எடுத்துக்காட்டுகிறது, என்கிற முக்கியமான செய்தியை, இவ்வுலக மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்" என்கிற நீதி போதனையுடன், அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டார்.

குறிப்பெடுத்த புத்தகத்தையும், அகத்தியர் ஜீவநாடியையும், ராமர் பாதத்தில் வைத்தபின், சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்த என் மனது மிக நிறைவாக இருந்தது.  அப்படியே "ஓம் அகத்தீசாய நமக!" என்கிற என்கிற ஜபத்தில் மனம் சுருண்டு அமர்ந்தது.

சித்தன் அருள்................. தொடரும்!