​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 26 September 2013

சித்தன் அருள் - 141 - கார்கோடகநல்லூர்

ஆக, இந்த பூமி என்பது சித்தர்கள் நடமாடிய இடம், முனிவர்கள், முனி புங்கவர்கள் நடமாடிய இடம்.  மகா புருஷர்கள், தாமிரபரணியில் நீராடி, தங்கள் பாபத்தை போக்கிக்கொண்ட இடம். சற்று சில நாட்களுக்கு முன்பு, இதே அகத்தியன், நம்பி மலையில் இரவு 12 மணிக்கு நாடி படிக்கச் சொன்னேன். அங்கே ஒரு விஷயத்தை சொன்னேன். உங்களுகெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் மறுபடியும் சொல்வதால் தவறில்லை. ஏன் என்றால், எத்தகைய, வளமான புண்ணிய நதி இந்த தாமிரபரணி என்பது உங்களுகெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். அதற்காக சொல்கிறேன்.

அன்றொருநாள், அத்தனை பாபங்களையும் சுமந்த மனிதர்கள் அனைவரும், அந்தந்த நாட்டிலுள்ள எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடினர். கங்கையில் பலர், கோதாவரியில் பலர், யமுனையில் பலர், வைகையில் பலர் என்று நீராடி தங்கள் பாபத்தை போக்கினர். கடைசியில், எல்லா நதிகளும் சேர்ந்து, "எல்லா மனிதர்களும் குளித்ததினால் அத்தனை பாபமும் எங்களிடம் சேர்ந்துவிட்டது. நாங்கள் எங்கு போய் பாபத்தை தொலைப்போம்" என்று கேட்ட பொழுது, கங்கையில் போய் குளியுங்கள், அந்த பாபம் கரைந்து போகும் என்றார் விஷ்ணு. இதை சிவபெருமானும் ஆமோதித்தார். பிரம்மாவோ "ஆமாம் ஆமாம்"  "ததாஸ்து" என்றார். அப்பொழுது எல்லா நதிகளும் கங்கையில் நீராடி குளிக்கவும், கங்கையே பாபமாயிற்று. அப்பொழுது கங்கை ஓடி வந்து அழுதாள் அகத்தியனிடம். 

"அகத்தியா! அகத்தியா! என்னிடம் எல்லா பாபங்களையும் கொட்டிவிட்டு போகிறார்களே. இவர்கள் இன்னும் பாபங்களை செய்து விட்டு மறுபடியும் என் மீது கொட்டுவார்களே! இதெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் இல்லையே. என்னை தலையில் வைத்துக் கொண்டிருக்கும் சிவபெருமான் ​என்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நீயாவது என்னை கண்டு கொள்ளக்கூடாதா! பாபத்தை போக்கக்கூடாதா?" என்று அன்று ஒருநாள் கேட்டாள். 

அப்பொழுது அகத்தியன் சொன்னேன்,"அஞ்சிடாதே! எமது தாமிரபரணி நதிக்கரையில் வந்து தாமிரபரணியில் நீராடும் போது உன் சகோதரி, உன் அத்தனை பாபத்தையும் எடுத்துக் கொள்வாள்" என்று சொன்னேன்.

அப்பொழுது கங்கை கேட்டாள் "என் பாபத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால்,  ​தாமிரபரணி அத்தனை பாபத்தை என்ன செய்வாள்?" என்றாள்.

"அதை நான் போக்கி விடுகிறேன்! எனக்கு அந்த சக்தி உள்ளது"  என்று சொல்லிய அந்த நாள் இந்த நாள்தான்.

அதைத்தான் அன்றொரு நாள் நம்பிமலையில், நடு இரவில், ஆங்கோர் வாக்குரைக்கும் போது சொன்னேன், "இன்றைய தினம் நம்பிமலையில் ஆற்றில் கங்கை வந்து நீராடி விட்டு சென்று இருக்கிறாள். கீழே இறங்கி பாருங்கள், கீழே வட்டப் பாறையில் அவள் மஞ்சள் பூசி குளித்த மஞ்சள் கூட இருக்கும்" என்று சொன்னேன்.

மறு நாள் காலை சென்று பார்த்தார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது என்று சொன்னார்கள். இது அகத்தியர் செய்யும் ஆச்சரியம் அல்ல. இதுவரை காணப்படாத மஞ்சள் துண்டு அந்தப் பாறையில் எப்படி வந்தது? எந்தப் பெண்ணாலும் அங்கு செல்ல முடியாது, நீராட முடியாது. ஆதிவாசிகளாக இருந்தாலும் கூட பண்ண முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கங்கை அங்கு வந்து மஞ்சள் நீராடி பாபத்தை போக்கிக் கொண்ட நம்பியாறு, தாமிரபரணி சிற்றாறு. ஆக நதியின் பெருமையை பற்றி சொன்னேன். அந்த நதியில் ஒருமுறை நீராடினால் போதும், அத்தனை தோஷங்களும் போகும். கங்கையே நீராடிய நாள், நல்ல நாள், கங்கை அகத்தியன் உபதேசம் பெற்ற நாள். அகத்தியன் உபதேசம் பெற்ற கங்கை நடந்து வந்து, இந்த தாமிரபரணியில் நீராடுவதற்கு முன்பாக இந்த கோடகநல்லூருக்கு வந்தாள். அங்கு தான் விசேஷம் இருக்கிறது. இதை அன்றைக்கே, அடுத்த நாள் காலையில், நம்பி மலையில் சொல்லலாம் என்று எண்ணி இருந்தேன். ஏதோ ஒன்று உறுத்தல், ஏதேனும்  நடந்துவிடலாம், நாளை மன நிலை என்ன ஆகுமோ. எல்லோருக்கும் இதை கேட்கக் கூடிய பாக்கியம் இருக்கிறதோ இல்லையோ. யாம் அறியேன். ஆகவே தான் இப்பொழுதே சொல்கிறேன். இந்த கோடகநல்லுருக்கு கங்கை வந்தாள். தாமிர பரணியில் நீராடி தபசு செய்த இடம் தான், நீங்கள் அமர்ந்திருக்கின்ற இந்த இடம். இதே ஓரத்தில் தான் கங்கை என்ற புண்ணிய நதி தன் தபசு கோலத்தில் உட்கார்ந்து தன் பாபத்தை போக்க வந்த இடம்தான் இந்த கோடக நல்லூர். ஏற்கனவே இன்னொரு சம்பவம் இங்கு நடந்திருக்கிறது. இந்த தாமிரபரணி நதிக்கரை பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றேன். இந்த ஊருக்கு சற்று தொலைவில் இருக்கிறது, கரும்குளம் என்ற அற்புதமான ஊர். ஏற்கனவே பலருக்கு சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால் ஒரு சிலருக்கு இன்னும் தெரியாது என்பதற்காக சொல்ல விரும்புகிறேன். அன்றொருநாள், அகலிகையால் சாபம் விடப்பட்ட இந்திரன் உடம்பெல்லாம் நோயுற்று திண்டாடி துடித்திருக்கும் போது "என் பாபத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்" என முக்கண்ணனிடம் கேட்ட பொழுது, எல்லா தெய்வங்களும் கண்ணை மூடிக்கொண்டு அகத்தியனை கை காட்டி விட்டார்கள். அப்பொழுது அகத்தியன் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.  இந்திரா கவலைப்படாதே! உனக்குள்ள நோயை தீர்ப்பதற்கு கருங்குளத்திற்கு வா. அங்குள்ள தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி, அங்கமர்ந்து கொள். தண்ணீருக்குள் 37 நிமிடம் உட்கார்ந்து கொள். நவக்ரகங்கள்  தம்பதிகளாக வருவார்கள்.அங்கு வந்து நவக்ரகங்கள் தம்பதிகளாக வந்து ஆசிர்வதிப்பார்கள். அதில் நீராடிவிட்டு, அப்படியே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய். உன் தோஷம் எல்லாம் போகும் என்று சொன்னேன். இந்திரன், இதே ஸ்ரீவைகுண்டம் என்கிற புண்ணிய தலத்துக்கு வந்து அந்த நதியில் அகத்தியன் சொன்னபடி நீராடி, கண்ணை விழிக்கிறான், நவக்ரகங்கள் தம்பதிகளாக காட்சி கொடுக்கின்ற முதல் இடம், இன்றுவரை வேறு எங்கும் இல்லை, கரும்குளமே. அந்த கருங்குளத்தில் தான் இன்றைக்கும் கூட தம்பதிகளாய் இருக்கிற நவக்ரகங்கள் இருக்கிறது. அது ஆண்டு வரலாறு பலப் பல. நவக்ரகங்கள் தம்பதிகளாக ஒன்று சேர்ந்து காட்சி கொடுத்த நிகழ்ச்சி வேறு எங்காவது உண்டா! இதற்குப் பிறகுதான் மற்ற கோவில்களில் ஆரம்பித்திருக்கிறார்களே தவிர, முதலிடம், கருங்குளம்தான். தம்பதிகள் அகத்தியன் சொல்படி கேட்டு, அகத்தியன் யாம் அங்கிருந்தேன், இந்திரன் வந்தான், நதியில் நீராடிவிட்டு அப்படியே நமஸ்காரம் பண்ணினான். அவன் அத்தனை தோஷங்களும், அகலிகையால் ஏற்பட்ட தோஷங்கள், விச்வாமித்ரரால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கியது. அந்த நாளும் இந்த நாள் தான். மேலும் இந்த நாளை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பல மணிகணக்காக சொல்லிக்கொண்டே போகலாம். வரலாறு தெரியாதவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களாக சட்டத்தை போட்டுக் கொள்வது மனிதர்கள் தானடா! இவர்களுக்கு என்ன தெரியும் சட்டத்தைப் பற்றி. ஆகம விதியை பற்றி ஏதாவது தெரியுமா? எத்தனை விஷயங்களை கண்டு கொண்டாலும், இன்னும் மனிதர்களுக்கு புரியவில்லை. இன்னும் தெரியவில்லை. இவர்கள், ரத்தமும், சதையும் நன்றாக இருக்கும் வரை எதை வேண்டுமானாலும் பேசலாம், பாராட்டலாம். ஆகவே, அத்தனையையும் ஒதுக்கிவிட்டு, இறைவன் நமக்கு நல்லது செய்திருக்கிறான், நல்ல வாக்கு கொடுத்திருக்கிறான். நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறான். அதற்கு நன்றி சொல்லவேண்டிய நல்ல நாள் இந்த நாள் தான். இந்த புனிதமான ஸ்தலத்துக்கு வந்த பிறகாவது, இனி புத்தி திருந்தி கொள்ளட்டும். இஷ்டப்படி வைப்பதெல்லாம் சட்டம், என்பதை தூக்கி எறியட்டும். மனிதர்களின் ஆத்மா, தெய்வமே. எல்லா ஆத்மாக்களுக்குள்ளும், தெய்வம் இருக்கிறது. அகத்தியன் எந்த ஆத்மாவையும் குறை சொல்லி பேசியது கிடையாது. எல்லோரிடமும் பலமுறை சொல்லியிருக்கிறேன். உன் முன் அமர்ந்திருப்பவன் உன்னை விட பாக்கியசாலியாக இருந்திருக்கலாம், உன்னை விட புண்ணியம் செய்தவனாக இருந்திருக்கலாம். அவனது ஏழ்மையின் காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ சற்று கோபப்பட்டு இருக்கலாம். பேசத்தெரியாமல் பேசியிருக்கலாம். அவனை, அவன் பேசியதை மன்னித்துவிடு. என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். இன்னமும் அவர்கள் யாரும் கேட்கவில்லை என்றாலும் மறுபடியும் சொல்ல வேண்டும் அல்லவா. ஆகவே புனிதமான நாள், புனிதமான இடம். இந்த இடத்திலே, நாக பிரதிஷ்டை அகத்தியன் சொல்லி, அது நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் ஆக இருந்து வருபவர்கள் 1547 ஆண்டுகளாக சேவை செய்து வந்தவர்கள். ஒன்றே ஒன்று சொல்வேன். இவர்கள் சும்மா இந்த கோவிலுக்கு சேவை செய்ய வரவில்லை. முன் ஜென்மத்து தொடர்பு இருக்கிறது. இவர்களுக்கு, குலோத்துங்க சோழனும், குலோத்துங்க பாண்டியனும், வர்த்தமான் பாண்டியனும் எழுதி வைத்த செப்புப் பட்டயம் இன்றும் இருக்கிறது. கோவிலின் வட கிழக்கு திசையில், 40 அடிக்கு கீழே 6 செப்புத் தகடுகள் இருக்கிறது. என் கணக்குப்படி இங்கு சுற்று புறத்தில் 40 மைல் அளவுக்கு இந்த கோவிலுக்கு எழுதி வைத்த சொத்துக்கள் உண்டு. அப்படி இந்த கோவிலை நிர்வாகித்து வந்தவர்கள் தான், அடுத்த பிறவி, அடுத்த பிறவி என எடுத்து இப்பொழுதும் நிர்வாகித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு கைங்கரியம் செய்பவர்களுக்கு அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் இருக்கிறது. யார் யார் இந்த கோவிலுக்கு கைங்கர்யம் செய்து வருகிறார்களோ, யார் யார் ஆத்மார்த்தமாக அபிஷேகம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கும் முன் ஜென்ம தொடர்பு உண்டு. இல்லையென்றால் அகத்தியன் இங்கு வந்து ஒரு வாக்கு உரைக்க மாட்டேன். அனைவருக்கும் நிறைய சொத்து சுகம் உண்டு, இன்றும் இருக்கிறது; ஆனால் மறைந்து இருக்கிறது.

சித்தன் அருள்.......... தொடரும்!

Thursday, 19 September 2013

சித்தன் அருள் - 140 - கார்கோடகநல்லூர்

அதற்கு முன்னால் பச்சைக்கும்  விஷ்ணுவுக்கும் சம்பந்தம் கிடையாது. புதனுக்கும், விஷ்ணுவுக்கும் சம்பந்தம் இருந்ததாக வரலாறே இல்லை. அத்தனையும் தாண்டித்தான், பச்சை என்றால் விஷ்ணு. விஷ்ணு யாரிடம் இருக்கிறாரோ அவனை விஷம் அண்டாது, அதற்கு கார்கோடகன் தான் ஒரு காரணம். ஏறத்தாழ 727 ஆண்டுகள் அந்த கார்கோடகன் ஆட்சி செய்த இடம், இது. ஏகப்பட்ட பேருக்கு தொல்லை கொடுத்த இடம். தன் பக்கம், இந்தப் பக்கமாக நல்லவர்கள் யாருமே வரக்கூடாது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்த இடம். தவமுனி தன் குழந்தை இறந்து விட்ட காரணத்தினால் கண்ணீர் விட்டு அழுத போது, கருடப் பெருமான் விஸ்வரூபம் எடுத்த இடம். எங்காவது, கருடப்பெருமான் விஸ்வரூபம் எடுத்ததாக கேட்டு இருக்கிறாயா? கேட்டு இருக்க முடியாது. ஆகா! அற்புதமான காட்சியடா! இப்பொழுதும் அகத்தியன் கண்ணுக்கு தெரிகிறது. 1547 ஆண்டுகளுக்கு முன் நடந்த அற்புதமான விஷயத்தைதான் இப்பொழுது நான் சொல்கிறேன். அந்த கருடன் விஸ்வரூபம் எடுத்த இடம். ஆகவேதான் கருட ஆழ்வாருக்கு இங்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. எவ்வளவு புனிதமான நாள் தெரியுமா இன்று? ஆகவேதான் அகத்தியன் உங்கள் அனைவரையும் வரச்சொன்னேன், இந்த வரலாற்றை சொல்லி "எவ்வளவு புண்ணிய பூமி இது தெரியுமா". இங்கு உட்கார்ந்து படிக்கின்ற இடத்துக்கு அடியிலே, மிகப் பெரிய "புளிய மரம்" இருக்கிறது. அந்தப் புளியமரத்தில் கீழே 108 கிளைகள் உண்டு.  108 கிளைகளிலும் 108 தெய்வங்கள் இருக்கிறது. 108 மாமுனிவர்கள் அங்கே இருக்கிறார்கள்.108 மூலிகைகள் இருக்கிறது. உயிர் காக்கும் மூலிகைகள். உயிர் காக்கும் மூலிகை பற்றி எல்லாம் அகத்தியன்  சொல்லியிருந்தேன். கண் இல்லாதவனுகெல்லம் கண் வந்த இடம் இது. கை கால் இழந்தவர்களுக்கெல்லாம் கை கால் கொடுத்த மூலிகை இங்கு இருக்கிறது. அந்த மூலிகையின் சாற்றை பிழிந்து, வேப்பமரத்தின் அடியில் வைத்து, அதோடு செந்தூரம் கலந்து சிறிது பாதரசத்தை கலந்து, வணங்கா முடி என்கிற அற்புத மூலிகை, 240 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வளரும். அந்த செடியின் வேர்களை பிழிந்து சார் எடுத்து ஆங்கொரு வேப்பமர பொந்தில் உள்ளே வைத்து பசும் சாணத்தால் மூடி வைத்து, 32 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் அந்த மூலிகை அற்புதமாக இருக்கும். அந்த மூலிகையை ஒரு துளி, ஒரு அணு அளவு யார் உட்கொண்டாலும், அவர்களுக்கு மூப்பு நரை என்பது வராது. தோல்கள் சுருங்காது. கண்களும், இமைகளும் பளிச்சென்று இரவில் கூட ஆந்தை போல தெரியும். ஒரு மனிதனின் உடலில் மொத்தத்தில் உள்ள நரம்புகள் 7747. இதில் வரக்கூடிய நோய்கள் 4148. அகத்தியன் ஏதேனும் பொய் கணக்கு சொல்கிறேன் என்று எண்ணக் கூடாது. முடிந்தால் நீங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வட கிழக்கு திசையில் இருக்கும் 8 வது கல்லை புரட்டி பார். அங்கு மனிதன் உடலிலே உள்ள வியாதிகள், "அச்" என்று தும்முவது முதல் கண்டமாலை என்னும் கொடிய நோய். அத்தனையும் சேர்த்து வைத்தது ஒரு மனிதனுக்கு உடலில் வருகின்ற நோய்கள் 4148. அத்தனை வியாதிகளையும் போக்குகிற வல்லமை இந்த மூலிகைக்கு உண்டு. அந்த மூலிகை, இந்த கோவிலுக்கு கீழே 48 அடிக்கு மேலே தோண்டிப் பார்த்தால் ஒரு அழகான செடி இன்றைக்கும் பசுமையாக இருக்கும். அகத்தியன் பொய் கணக்கு சொல்லவில்லை, மந்திர ஜாலம் காட்டவில்லை. பயமுறுத்தவில்லை. ஆக உங்களை எல்லாம் ஏமாற்றவில்லை. இன்றைக்கு இந்த பூமியிலே தாமிர பரணி நதிக்கரையிலே, வற்றாத ஜீவ நதிக்கரை ஓரத்திலே அந்த மூலிகை வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்கு, யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்குமோ, அகத்தியன் யாம் அறியேன்! ஆனால் அந்த மூலிகை சாற்றை உண்டு தான் மாமுனிவர்கள், ரிஷிகள், முனி புங்கவர்கள் எல்லாம் ஆண்டாண்டு காலமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அகத்தியன் கூட இருக்கும்  205 சித்தர்களும் அந்த மூலிகையின் பயனை பெற்றவர்கள்.  400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த மூலிகையை உட்கொண்டவர்களுக்கு எல்லாம் இன்னும் 400 ஆண்டுகளுக்கு வாழ்க்கை இருக்கும். மனிதர்களுக்கு ஏன் அப்படி வாழ்க்கை இல்லை என்றால், அவர்கள் செய்கின்ற பாபங்கள், அவர்களாகவே ஏற்றுக்கொண்ட சட்டங்கள். இவர்களே இறைவனுக்கு போடுகின்ற கட்டளைகள், இறைவனுக்குப் பிடிப்பதில்லை. 

இங்கு மிகப் பெரிய நந்தவனமாக இருந்த போது, செல்வ செழிப்போடு இருந்தது இந்த பூமி. முக்கண்ணனும், இன்னும் தெய்வங்களும், பல பிரம்மாவும் ஒன்றுகூடி உலாவந்த இடம் இது. ஐப்பசி மாதம், கார்த்திகை மாதம், ஆக இரண்டு மாதங்கள் அத்தனை தெய்வங்களும் இங்கு கூடி, ஒன்றாக ஆனந்தப்பட்டு, அழகாக சமைத்த அமுதத்தை ஒரு கவளம் உட்கொண்டு ஆனந்தப்பட்ட அற்புதமான நாள் இது. அன்றெல்லாம், அதற்குப் பிறகுதாண்டா, இந்த நதிக் கரை ஓரத்தில் அத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து அந்த ஆடி தோறும், அந்த ஆடி அமாவாசையோ, ஆடி பெருக்கன்றோ, கை ஊட்டி சாப்பிடுவார்களே, கை பிசைந்து சாப்பிடுவார்களே, அந்தப் பழக்கம் ஏற்பட்ட நாளும், இதே நாள் தாண்டா. அன்றைக்கு முக்கண்ணனும், பெருமாளும், பிரம்மாவும், இன்னும் சரஸ்வதி போன்ற தெய்வங்களும் ஒன்றாக அமர்ந்த காட்சிதான் இப்பொழுது அகத்தியன் கண்ணுக்கு தெரிகிறது. அந்த இடத்துக்கு மேலே நான் அமர்ந்து கொண்டு, அகத்தியன் நான் செப்புகிறேன். அவர்களை வணங்கிவிட்டுதான் விஷயத்தை சொல்லுகிறேன். புனிதமான இடம் கார்கோடக நல்லூர். கார்கோடகம் என்றால் விஷம். அந்த கார்கோடகனையே நல்லவனாக மாற்றிய நாளும் இதே நாள் தான். சற்று முன் சொன்னேனே! கருடன் வந்து விஷத்தை எடுத்தார் என்று. அப்பொழுதுதான் விஷ்ணுவும் இங்கு வந்து தரிசனம் கொடுத்தார். அந்த விஷ்ணு தரிசனம் கொடுத்த அந்த நன் நாள், இந்நாள். இங்குதான் விஷ்ணு, 1744 வருடங்களுக்கு முன் தோன்றி பச்சை வண்ணனாக அமர்ந்து, சிலையாக அமர்ந்தார். அந்த நாளும்,இதே நாள் தான். இந்த பெருமாளுக்கு முதலில் பச்சை வண்ணன் என்று தான பெயர். அதற்கு பிறகு பழக்க வழக்கத்தில் வேறு மாதிரி பிரம்மா என்று ஆகிவிட்டது. பிரம்மாவும் கூட இருந்ததால் பிரம்ம சொரூபம் என்று பார்த்தார்கள். பிறகு மாதாவாய் நினைத்துப் பார்த்தார்கள். ஆகவே எல்லாமாக கலந்து தான் கடைசியாக "ப்ரஹன் மாதாவாக" மாறிவிட்டது. இது வழக்குச்சொல் தவிர உண்மையிலேயே பச்சைவண்ணன் தான். விஷ்ணு பகவான் ஆசைப்பட்டு அமர்ந்த இடம். யாருக்கு இந்த பாக்கியம் இருக்கிறதோ அவர்களுக்கு இன்னும், இப்பொழுது சொல்கிறேன். அவர்கள் செய்த பாபங்கள் எல்லாம், 1/3 சதவிகிதம் இப்பொழுதே விலகிவிட்டது. இங்கு இருக்கிற அத்தனை பேர்களுக்கும் அந்த வாய்ப்பை அகத்தியன் நான் சந்தோஷமாக தாரை வார்த்துத் தருகிறேன். அது மட்டுமல்ல, தொடர்ந்து பிரார்த்தனை செய்து, இன்னொரு பலனையும் இவர்கள் பெறப்போகிறார்கள். ஏற்கனவே, முன் ஜென்மத்து தோஷங்கள் இருந்தால், அதன் காரணமாக மனதாலோ, உடலாலோ வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால், குடும்பம் செழிக்காமல் இருந்தால், வாழ்க்கையில் நொந்து நூலாகிக்கொண்டிருந்தால், அத்தனை வியாதிகளும் தோலிலோ, உடலிலோ இருந்தால், அவை அத்தனையும் போகக்கூடிய நல்ல நாள் இந்த நாள் என்பதால் அந்த தோஷத்தையும் அகத்தியன் ப்ரஹன் மாதா சார்பில், விஷ்ணுவின் சார்பிலும், என் அருகே இருக்கிற 204 சித்தர்கள் சார்பிலும் அவர்களுக்கும் அந்த வாய்ப்பை தந்து தாரை வார்த்துக் கொடுக்கிறேன். தாரை வார்த்துக் கொடுப்பது என்பது மிக அற்புதமான காலம். எப்போதைக்கு எப்போது அகத்தியன் தாரை வார்த்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டானோ, தன்னுடைய பொருள்களை உங்களிடம் ஒப்படைத்ததாக அர்த்தம்.

4000 ஆண்டுகளாக அகத்தியன் தவமிருந்த காலம். பல பிரளயங்களை கண்டவன் நான். இன்று வரை பிரளயம் கண்டவர்கள் இரண்டே இரண்டு பேர்கள் தான். ஒருவர் காக புசுண்டர், மற்றொருவர் அகத்தியர். அகத்தியனுக்கு சர்வ வல்லமை உண்டடா. அகத்தியன் ஏதோ சிவ மைந்தன் என்று, சிவனை சேர்ந்தவன் என்றோ மட்டும் எண்ணக் கூடாது. முருகப்பெருமான் அவதாரம் என் குருவாக என்றாலும் கூட, அவரை குருவாக நானாக ஏற்றுக்கொண்டேன். சிவபெருமான் அவரின் 75 விழுக்காடு அதிகாரத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார். விஷ்ணுவோ, கேட்கவே வேண்டாம். பஞ்சணையில் அமர்ந்தபடி, பாற்கடலில் படுத்தபடியே, மஹாலக்ஷ்மியின் கையை பிடித்து தன் கை மீது வைத்து, பால் ஊற்றி அத்தனை பொறுப்பையும் எனக்கு கொடுத்து விட்டிருக்கிறார். விஷ்ணு என்ன கார்யம் செய்வாரோ, அதை என்னால் செய்ய முடியும். ஏன் என்றால் அவரிடமிருந்து முழ பொறுப்பையும் நான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்த நல்ல நாளும் இந்த நாள்தாண்டா. எத்தனை காரணங்கள் இங்கு நடந்திருக்கிறது. எத்தனை அதிசயங்கள் இந்த மண்ணில் நடந்திருக்கிறது. இவையெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியுமாடா. வரலாறு தெரியாமல் பேசுவதை நான் பார்க்கிறேன். வரலாற்றை 4000 ஆண்டுகளாக கண்டவன் நான். அதனால் தான் சொல்கிறேன், விஷ்ணு, மகாலக்ஷ்மியின் கையை பிடித்து,பாற்கடலில் உறையும் அமுதத்தை ஊற்றி தாரை வார்த்து "எனது சகல விதமான சௌபாக்கியங்களையும், நீ யாருக்கு விரும்புகிறாயோ எப்படிவேண்டுமானாலும் கொடு.  நான் ஒருபோதும் உன் விஷயத்தில் தலையிடமாட்டேன். நீ எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்" என்று சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.

பிரம்மாவும் சரஸ்வதியும் ஓடோடி வந்து 

"அகத்தியா! நான் என்ன உனக்கு தரவேண்டும்" என்று கேட்டார்.

"நான் என்ன செய்யப் போகிறேன். நான் ஒரு சித்தன் தானே." என்றேன்.

"இல்லை! இல்லை! எங்களின் சார்பாக, மண்ணில் வாழும் மனிதர்களுக்கு ஏதேனும் கல்வியில் மோசமாகவோ, ஆரோக்கியத்தில் குறைவாக இருந்தால், ஆக இன்னும் பல விதிகளில் ஏதேனும் தவறு செய்திருந்தால், மூளை வளர்ச்சி குறைகள் இருந்தால், உடல் நடக்க முடியாமல், கை கால் விளங்காமல் இருந்தால், அது மட்டுமல்ல வாய் பேசாமல் இருந்தால், கண் பார்வை இல்லாமல் இருந்தால், இது போல் அங்க அவயவங்கள் இருந்து பிரயோசனம் இன்றி இருந்தால், அவர்களுகெல்லாம் எங்கள் சார்பாக, நான் படைத்தவன், படைத்ததற்கு காரணம் உண்டு.ஏன் அப்படி படைத்தேன் என்று யாரும் கேட்க முடியாது. ஆனால் என்னுடைய படைப்பின் ரகசியத்தை எல்லாம் உனக்கு தருகிறேன். நீ விரும்பினால் அவர்களின் தலை விதியை மாற்று" என்று சொன்ன நல்ல நாளும் இந்நாள் தாண்டா. ஆகவே எவ்வளவு பெரிய நல்ல சம்பவங்கள் இந்த பூமியில் நடை பெற்று இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

சித்தன் அருள்....... தொடரும்!  

Monday, 16 September 2013

சித்தன் அருள் - அகத்தியர் அறிவுரை!

இறைவனின் அருளை கொண்டு இயம்புவது யாதெனின், முக்காலத்தையும் உணரக்கூடிய எம்மால் வருகின்ற மனிதரின் கடந்த காலங்கள், நிகழ் காலங்கள், எதிர் காலங்கள், சம்பவங்கள், மனதில் ஓடுகின்ற எண்ணங்கள், அனைத்தையும் அறுதியிட்டு, உறுதியாக கூற இயலும். நாடி வாசிக்க வருகிற மனிதர்கள் ஐயப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் ஒருபோதும் சினம் கொள்வதில்லை. ஏன் என்றால், சித்தர்களின் நாமத்தை வைத்து, மனிதர்களை ஏமாற்றும் கூட்டம் ஒன்று இங்கு இருப்பதால், சித்தர்களின் நாமத்தை வைத்து, வாக்கை ஓதும் அனைத்தையுமே ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வருகின்ற மனிதனின் மனம் ஏற்கும் வண்ணம் விஷயங்களை/வாக்கை சொன்னால் தான், நன்மை ஏகும் என்பது சராசரி மனிதனின் மன நிலை. இது குறித்து எமக்கு, சினமோ, வருத்தமோ இல்லை. ஆனால் ஒரு மனிதன் சகல் இடத்திலும் ஒன்று போல இருக்கிறானா? அதே போல் தான் மகான்களும்.  இன்னும் புரிவது போல் சொல்வதென்றால், ஒரு மனிதன் தன் மனைவியிடம் நடந்து கொள்கிற முறை வேறு, சகோதரியிடம் நடந்து கொள்கிற முறை வேறு. தாயிடம் நடந்து கொள்கிற முறை வேறு, தந்தையிடம் நடந்துகொள்கிற முறை வேறு. பிள்ளைகளிடம் நடந்துகொள்கிற முறை வேறு, சக ஊழியரிடம் நடந்துகொள்கிற முறை வேறு. மேல் அதிகாரியிடம் நடந்து கொள்கிற முறை வேறு. ஒரே மனிதன் தான், ஒரே விதமான குணங்கள் கொண்டவன்தான். ஆனால், இடம் பார்த்து, சூழல் பார்த்து, உறவு நிலை பார்த்து மனிதர்கள் பழகுவது போல நாங்கள் ஞானிகள் என்றாலும், எந்த இடத்தில், எந்த ஜீவ நாடியிலே எம்மை நாடி வருகின்ற மனிதருக்கு, யாது உரைக்க வேண்டும் என இறை எமக்கு கட்டளை இடுகிறதோ, அதைத்தான் யாம் உரைக்கிறோம். யாம் உணர்ந்ததை எல்லாம், எமது ஞான திருஷ்டியில் பார்த்ததை எல்லாம் உரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னொன்று, இந்த சுவடியை ஓதுகின்றவனின் புண்ணிய பலன், நாடியை பார்க்க வருகின்ற மனிதரின் புண்ணிய பலன், அவனின் பரந்த பக்தி நிலை, செய்துவரும் தர்ம காரியங்கள், இவற்றை வைத்து தான் எமது வாக்கின் போக்கு இருக்குமே தவிர, உரைப்பது சித்தர்கள்தான் என்று நம்பும் வண்ணம் வாக்கை உரைத்தால் தான் நாங்கள் நம்புவோம் என்பதற்காக நாங்கள் எதையும் கூறிவிட இயலாது.

எதுவுமே முன் ஜென்ம தொடர்புதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு யாம் உள்ளே இருந்து சிலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறோம். ஒருவன் முன் அதிகாலை பொழுதிலே, பத்மாசனமிட்டு வட கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, மன ஒருமைப்பாட்டுடன், தன் புருவ மத்தியில் த்யானத்தை தொடர்ந்து செய்துவர, அவனுள்ளேயே இருந்து யாம் வாக்கை உரைப்போம். அப்படிப்பட்டவன், எமது வாக்கை கேட்டு பலருக்கும் உரைத்திடுவான். 

நாடிகளை நம்பி பலர் வாழ்ந்து வருகிறார்கள்.  நாடிகளில் வரும் வாக்கு பெரும்பாலும் மெய் ஆகிவிடுகிரது, சிலவேளை பொய்யாகிவிடுகிறது. பொய் ஆகிப்போன நேரத்தில் மனம் சோர்ந்து, ஒரு மனிதன் நம்மை ஏமாற்றி விட்டான், பொய்யான வாக்கை உரைத்து நம் தனத்தையும், காலத்தையும் வீணாக்கிவிட்டான் என்று சினம் பலருக்கு வருவது இயல்பு. இப்படிப்பட்டவர்களுக்கு யாம் கூறுவது என்னவென்றால், எவன் ஒருவன் ஏமாறுகிறானோ அவன் யாரயோ, எந்த ஜென்மத்திலோ ஏமாற்றியிருக்கிறான் என்று பொருளாகும். எந்த வகையில் ஏமாறுகிறானோ அந்த வகையில் ஏமாற்றி இருக்கிறான் என்று பொருள். இன்னொன்று, ஒருவனின் முன் ஜென்ம பாபங்களை எல்லாம் ஒருவன் கழிக்க வேண்டும் என்றால், முழுக்க முழுக்க துன்பங்களை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதில்லை. அவன் நேர்மையாக ஈட்டிய பொருளை, அவன் அறியாமல் எவன் ஒருவன் வஞ்சித்து, ஏமாற்றி எடுக்கிறானோ, அவன் இழந்த பொருளுடன், அவன் முன் ஜென்ம பாபங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல குறைகிறது. ஆகவே, நாங்கள் அடிக்கடி கூறுவது போல, ஏமாற்றம் என்பது இந்த உலகில் இல்லவே இல்லை. விழிப்புணர்வோடு வாழட்டும், உள்ளத் தெளி உணர்வோடு வாழட்டும். அறிவு தெளிவோடு வாழட்டும். ஆனாலும், அதனையும் தாண்டி ஒரு மனிதன், சக மனிதனால், சக அமைப்பால் ஏமாற்றப் படுகிறான் என்றால், அவன் முன் ஜென்ம பாபங்களே.  ஏமாற்றங்களை முன் ஜென்ம பாப கழிவு என்று எடுத்துக்கொண்டுவிட்டால், உலகில் எந்த மனிதரும், ஏமாற்றம் குறித்து எந்த நிலையிலும் வருத்தப்பட தேவை இல்லை. இப்படிப்பட்டவர்களை எதற்காக நடமாடவிடவேண்டும், அவர்களை கட்டுப்படுத்தக்கூடாதா என்ற கேள்வி வரும். இந்த உலகிலே, இறை நாமத்தை வைத்து ஏமாற்றுகின்றார்கள். மேலும் பல்வேறு நிலையில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். எனவே, இவை எல்லாம் உலக இயக்கத்திற்கு, கர்ம கழிவிற்கு, கர்ம பாபங்களின் பரிவர்த்தனைக்கு என்று அந்தந்த மனிதர்களின் பூர்வீக வினைகளுக்கு ஏற்ப இறைவனால் கொடுக்கப்படுகிறது. எனவே உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள்  கொண்ட மனிதர்களும் தேவை படுகிறார்கள். கர்ம கழிவிற்கும் தேவை. எங்கனம் மின் சக்தியானது முழுமையாக பயன் பட வேண்டுமானால், நேர் எதிர் அலைகளை கொண்ட இரு முனை இணைப்பு தேவைப்படுகிறதோ, அதே போல் தான் உலகிலே நல்லோரும், தீயோரும் இருக்கிறார்கள். எனவே, ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.

எனவே, அகச் சிந்தனையை அதிகமாக்கிக்கொண்டு, மனித நிலையிலே எந்த துறவு மனிதனை சந்தித்தாலும் கூட நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், பல்வேறு ஆன்மீக அனுபவங்களை அந்த மனிதரிடம் கற்றாலும் கூட, அப்படி பட்ட மனிதர்களும் கூட ஒரு மாயையில் சிக்கி இருப்பவனே, அவனுக்கும் சில பாப வினைகள் இருப்பதால், ஒரு நேரத்தில் நல்ல கருத்தை கூறுவான், சில நேரத்தில் தவறான கருத்தை கூறுவான். எனவே, மனித நிலையில் துறவி, ஞானி என்பவனை சந்திப்பது தவறல்ல, சந்தித்தால், சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே யாம் இத்தருணம் கூறுவது.   

​சித்தன் அருள்.............. தொடரும்!

Sunday, 15 September 2013

சித்தன் அருள் - அகத்தியர் மூல மந்திரம் (தமிழில்)!

(பஞ்செஷ்டியில் அகத்திய பெருமான்)
வணக்கம்!

ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, அகத்தியர் மூலமந்திரம் (தமிழில்) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை கீழே தந்துள்ள லிங்கிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.  இது அகத்தியரே நாடியில் வந்து சொன்னதாக தகவல். நித்ய பாராயணம், த்யானத்துக்காக மனப்பாடம் செய்து உபயோகித்துக்கொண்டு, அவர் அருள் பெற்று நலமுடன் வாழ்க.

http://www.mediafire.com/listen/6pbwe1bga1ap7iy/Agathiyar_Moola_Mantra.mp3  

நன்றி 
கார்த்திகேயன் Thursday, 12 September 2013

சித்தன் அருள் - 139 - கார்கோடக நல்லூர்!

நாடி வாசிக்கும் என்னை பலமுறை, பல இடங்களுக்கு அகத்திய பெருமான் செல்ல சொல்வது உண்டு.  ஏன் எதற்கு என்பதறியாமலே அவர் சொன்ன இடங்களுக்கு செல்வேன். ஆனால் அங்கு அவர் நடத்திகாட்டுகிற விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை வரவழைக்கும். மந்த்ராலயம், ரண மண்டலம்,திருப்பதி, பத்ராசலம், அஹோபிலம், ஈரோடுக்கு அருகிலுள்ள சிவ பெருமான் உறையும் மலை,  போன்ற இடங்களை பற்றி முன்னரே சொன்னதுண்டு. அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து, இன்னார் இன்னாரை அழைத்துக்கொண்டு செல், அங்கு நாம் நிறைய விஷயங்களை உரைப்போம் என்றார்.  என்ன என்று திகைத்து போனாலும், அவர் சொல்லை சிரம் மேற்கொண்டு நடத்தி, நானும் என் நண்பர்கள்  புடைசூழ கிளம்பி சென்றேன். என்னுடன் வந்தவர்கள் அனைவரும் எத்தனை பாக்கியசாலிகள் என்று பின்னர் தான் புரிந்தது.

என்னை கிளப்பிவிட்டு போகச்சொன்னது திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். வெளியே தெரியாத எத்தனையோ கிராமங்களில் அதுவும் ஒன்று. அதன் பெயர் "கோடகநல்லூர்". அங்கு இரண்டு கோவில்கள் இருக்கிறது. கிராமத்தின் தொடக்கத்தில் சிவ பெருமானின் கோவிலும், கிராமத்தின் மறு கோடியில் "ப்ரஹன் மாதர்" என்றழைக்கப்படுகிற பெருமாள் கோவிலும். நாங்கள் சென்றமர்ந்தது "கோடகநல்லூர் ப்ரஹன் மாதர்" கோவில்.

அன்றைய தினம் 31-10-2009. சனிக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம்,  சுக்ல பக்ஷ த்ரயோதசி திதி.

(இந்த வருடம் நவம்பர் 14ம் தியதி வருகிறது)

அகத்தியர் உத்தரவின் பேரில் ஒரு சிறு சன்னதியை தேர்ந்தெடுத்து, அனைவரும் அமர்ந்திருக்க, நாடியை புரட்டினேன்.  அதில் வந்து அகத்தியர் கூறிய விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை ஊட்டுவதாக இருந்தது.

அகத்தியப் பெருமான் கூறியதை அவர் மொழிந்தது போலவே பார்க்கலாம்.

"ஐப்பசி மாதம் உத்திரட்டாதி உதித்துவிட்ட வேளையிலே, ஓர் கோவில் பற்றி, எதிர்கால நிலைபற்றி, கடந்த கால வரலாற்றைப்பற்றி, அகத்தியன் யாம் 6000 ஆண்டுகளாக இந்த கோவிலை சுற்றி சுற்றி வந்தவன் என்ற முறையில் அகத்திலிருந்து வார்த்தை சொல்கிறேன். முன்பொரு சமயம் இதே நாளில், இதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில், அகத்தியன், பக்கத்தில் ஒரு நந்தவனத்தில் குடி கொண்டு அங்கு உள்ள பரப்ரஹ்மம் என்று சொல்லக்கூடிய வேங்கடவனுக்கு, அகத்தியன் அபிஷேகம் செய்த புண்ணிய நாளடா இது. இல்லை என்றால் அகத்தியன் ஏனடா இங்கு வரப்போகிறேன். ஆக முன் ஜென்மத்தில், இதே நாளில், இதே நட்சத்திரத்தில் இதே நேரத்தில் அருமை மிகு என் அப்பன் சனீச்வர பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அகத்தியன் வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்த அற்புதமான நாளடா. அதை நினைவு கூறுகிற எண்ணத்தில் தான் அகத்தியனே இங்கு ஏகினோம், நாள் குறித்துக் கொடுத்தோம். ஆகவே, ஆங்கோர் சர்ப்பம் ஒன்று அமையப்போகிறது இங்கு ஆனந்தமாக. இந்தக் கோயிலின் வரலாற்றை இதுவரை, யாருமே சரியாக எழுதினது கிடையாது. 1747 ஆண்டுகளுக்கு முன் இந்த இடம் மிகப் பெரிய நந்தவனமாக இருந்தது. சித்தர்கள் மட்டுமல்ல, முனிவர்கள், மகா முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஆனந்தமாக இறைவனை வழிபட்ட நல்ல நாள் இது. ஆகவே இந்த புண்ணிய ஸ்தலத்தில் வந்து, தாமிரபரணி நதிக்கரை ஓரமாக அமர்ந்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு காரணமிருக்கிறது.  

நிறைய பேருக்கு தெரியாது.  இன்று லோபாமுத்திரை என்று சொல்லக்கூடிய, என்னுடன் இருக்கின்ற மனைவியின் பெயராக உச்சரிக்கின்றனர். லோபாமுத்திரை யார் என்ற கேள்வி இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை. அவள் யார்? பிறந்தது என்ன, வளர்ந்தது என்ன என்று கேட்டதில்லை. அன்னவளே அகத்தியனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதிக்கரைதானடா லோபாமுத்திரை. எங்கும் இல்லாத அதிசயம் தானடா இங்கு நடந்திருக்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு நதி உருவாகி, கிளம்பி பல கிளைகளாக பிரிந்து கடலிலே கலக்கும் போது வேறு மாநிலத்திலே, வேறு கடலிலே கலக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, வேறு உலகத்தில் எங்குமே பார்க்க முடியாத அதிசயம் இங்குதான நடந்துள்ளது.  எந்த மலையில் தாமிரபரணி நதி உற்பத்தியாகிறதோ, அதே நதி நெல்வேலி என்று சொல்லப்படுகின்ற திருநெல்வேலியில், புண்ணிய நதிகளில் நீராடி, நடை கலந்து, உடை அணிந்து ஆனந்தப்பட்டு இங்குள்ள கடலில் கலப்பது போல் வேறு உலகத்தில் எங்கும் இந்த அதிசயத்தை காண முடியாது. அந்த நதியை உண்டாக்கிய பெருமை அகத்தியனுக்கு உண்டடா. ஆகவே அந்த நதியின் பெயரை தான் லோபாமுத்திரை என்று ஆக்கியிருக்கிறேனே தவிர, சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் மனைவி ஏதடா? ஆக, எந்த சித்தனாவது மனைவியுடன் இருப்பதை நீ பார்த்திருக்கிறாயா? பார்த்திருக்க முடியாது. அப்படியென்றால் அகத்தியனுக்கு மட்டும் லோப முத்திரை ஏன் என்று கேட்கலாமே.  இதுவரை ஏன் கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நான் சொல்ல வேண்டியது கடமை, ஏன் என்றால் அந்த லோபாமுத்திரையை, தாமிர பரணி நதிக்கரையில், இந்த கோடகநல்லூர் புண்ணிய ஸ்தலத்தில் தான் அமர்ந்து உண்டாக்கிய இடம் இது. தாமிரபரணி நதிக்கரையை, லோபாமுத்திரையாக்கி என்கூட வைத்துக் கொண்டிருக்கிறேனே, மனைவி அல்ல. தாமிரபரணி நதிக்கரையில் தான் நான் இருக்கிறேன். பொதிகை மலையில் தான் நான் உலா வந்து கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் இதோ இந்த இடத்தில் தான் இருக்கிறேன். ஏன் என்றால் இரண்டு ஜென்மங்களுக்கல்ல; 1800 ஆண்டுகளுக்கு முன் இங்கோர் நந்தவனம் அமைத்து, என்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தினம் இன்று என ஏற்கனவே சொன்னேனே. அதையும் ஞாபகப் படுத்திக்கொள். தாமிரபரணி நதிக்கரையை, லோபமுத்திரையாக்கி என் அருகில் வைத்துக் கொண்டிருக்கிறேனே,  அந்த அற்புதமான நிகழ்ச்சி நடந்த நாளும் இதே உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றுதான், இதே நாள். முன்ஜென்மத்தில் ஏறத்தாழ 1477 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்லத்தான் இங்கு வந்திருக்கிறேன். ஆக அகத்தியன் உலாவிக்கொண்டிருக்கிறேன். அகத்தியன் மட்டுமல்ல, என்னுடன் இருக்கின்ற 205 சித்தர்களும் இங்கு உலாவிக் கொண்டு இருக்கிறார்கள். அது மிகப் பெரிய விசேடமடா. இதுவரை அகத்தியனுக்கு 18 சித்தர்கள் என்று தான் பெயர். அகத்தியனை தலையாய சித்தர் என்று சொல்வார்கள். சிவ மைந்தன் என்று சொல்வதுண்டு. சிவ மைந்தன் என்பது ஒரு புறம் இருக்க; நான் அக்னியில் உண்டானவனடா! சிவனுக்கு கண்ணிலோ, நெற்றியிலோ உண்டானவன் அல்ல. சிவன் செய்த யாகத்தினால் உண்டாக்கப்பட்டவன் நான். ஆகவே சிவ மைந்தன் என்று சொல்வார்கள். 

சிவன் மட்டுமல்ல, விஷ்ணுவும் தங்கள் அதிகாரத்தை அகத்தியன் ஆன என்னிடம் ஒப்படைத்த நாளும் இந்த நாள் தான். இந்த நாள் எத்தனை விசேடமான நாள் என்று சொல்லத்தான், உங்கள் அனைவரையும் தாமிர பரணி நதிக்கரைக்கு வரச்சொன்னேன். ஆகவே, இந்த நாளில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. ஒன்று, அகத்தியனே இந்த பெருமாளுக்கு, அங்கமெல்லாம் பால் அபிஷேகம், 14 வகை அபிஷேகம் செய்து குளிரவைத்த அற்புதமான நாள் இதே நாள் தான். தாமிரபரணி நதிக்கரையை லோபாமுத்திரையாக மாற்றிய நாள் இந்த நாள். அது மட்டுமல்ல, இந்த கோவிலுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு,அது சரியாக எழுதப்படவில்லை என்று சொன்னேன்.குறை சொல்வதற்காக அல்ல. குறையே அல்ல இது.

ஒரு சமயம், அசுரனாக இருக்கின்ற ஆதிசேஷனும், கார் கோடகனும் கொடி கட்டி பறந்த காலம். மிகப் பெரிய முனிவரின் மூன்று வயது குழந்தையை ஆதிசேஷன் கொத்திவிட்டதால், உயிர் துறக்கும் நேரத்தில், முனிவர்கள் துதித்தார்கள். "பெருமாளே இத்தனை நாள் உனக்கு அபிஷேகம் செய்தேனே, ஒரு விஷ பாம்பு என் குழந்தையை கொன்று விட்டதே! குழந்தையை உயிர்பித்து தரமாட்டாயா? என்று முனிவர் அவர் கேட்டார்.  அப்பொழுது அகத்தியன் நான் கூட இருந்தேன். அந்த நேரத்தில் தான் கருடன் இங்கே வந்தான். கருடனை பார்த்ததும் பாம்பது ஓடியது. கருடனே தன் மூக்கால் விஷத்தை எடுத்த நாளும், இந்த புண்ணிய நாள்தாண்டா. எவ்வளவு பெரிய அதிசயங்கள் நடந்திருக்கிறது தெரியுமா? யாருக்கு தெரியும் இந்த வரலாறு.  ஆகவே எந்த கோவிலும் இல்லாத சிறப்பு இந்த கோவில் கருடனுக்கு இருக்கிறது. இந்த கருடனுக்கு அபிஷேகம் நடக்கிற காரணமே இது தானடா. விஷத்தை விஷத்தால் எடுக்கவேண்டும் என்கிற பழ மொழியையும் தாண்டி, விஷத்தை "கருடன்" முறித்தார் என்கிற நிகழ்ச்சி இங்குதான் நடந்திருக்கிறது. இது நடந்தது ஏறத்தாழ 1377 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் தான். இந்த ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம் அத்தனை விசேஷமான நாள் தான். எவ்வளவு பெரிய வரலாற்றை எல்லாம் சுமந்து கொண்டிருக்கிறது இந்த புண்ணிய பூமி என்பது தெரியுமா?

இங்கு ஒன்று சேர்ந்திருக்கும் இவர்கள் அந்த காலத்தில் ஒரு நீராடி மண்டபத்தை கட்டியிருக்கிறார்கள். நீராடி மண்டபத்தை மட்டுமல்ல, பொய்கை குளத்தை கட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கண்ணாடி பல்லக்கு என்று சொல்லக்கூடிய, தங்கப் பல்லக்கை கட்டியிருக்கிறார்கள். இந்த கோயிலுக்கு ஏற்கனவே, 300 ஏக்கர் நஞ்சையும், 300 ஏக்கர் புஞ்சை நிலமும் உண்டு. மாமரம், தென்னை மரம், பலா மரம் போன்ற மரங்களும், மொத்தத்தில் அகத்தியன் கணக்குப் படி பார்த்தால் இந்த நெல்லை மாவட்டத்தின் நுனி வரை பொதிகை மலையின் அடிவாரம் வரை இந்த கோயிலுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு சொந்தமாக, வல்லபாய குலோத்துங்க சோழன் என்ற மன்னன் கோயிலுக்காக பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறான். இந்த கோயிலில் அன்று முதல் இன்று வரை பரம்பரை தர்மகர்த்தாக்கள் என்று சொல்லக்கூடியவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள்.  இவர்கள் எல்லாம் அநபாய சோழன், குலோத்துங்க சோழ அரசவையிலிருந்து இந்தக் கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருந்தவர்கள். இந்த கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருக்கும் போதுதான் அங்கமெல்லாம் அபிஷேகம்,  அன்றாடம் ஆறுகால பூஜை நடந்த அறுபுதமான இடம் இது. அதுமட்டுமல்ல, இந்த கோயிலுக்காக, இந்த வம்சம் நல்லபடியாக தழைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, மூன்றே மூன்று பேர்கள் தான் இங்கு மாறி மாறி வரும். ஒன்று கிருஷ்ணஸ்வாமி  என்று வரும்.இன்னொன்று ஸ்ரீநிவாசன் என்று வரும். இன்னொன்று திருவேங்கடாச்சாரி என்று வரும். திருவேங்கடாச்சாரி என்பது பின்னர் ராமசாமி என்று மாற்றப்பட்டது. இந்த பரம்பரை நிர்வாகத்துக்காக, அநபாய சோழனும், குலோத்துங்க சோழனும் எழுதிகொடுத்த பட்டயம் இந்த கோயிலின் வடகிழக்கு திசையில் 40 அடிக்கு கீழே இருக்கிறது. அந்த செப்பு பட்டயத்தை எடுத்துப் பார்த்தால், எத்தனை நிலங்களை காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை காணிக்கையும் பெற்று தான் அறங்காவலர்கள் இந்த கோவிலை நடத்தி வந்துள்ளனர். 

ஆகவே, கோடகன் என்பவன் கொடிய விஷம் கொண்டவன். அவன் மூச்சு விட்டாலே முன்னூறு காதம் (மைல்) விஷம் பரவி அனைத்தும் இறக்கக்கூடும். அவ்வளவு கடுமையான விஷத்தை உடைய  "கார் கோடகன்" குடியிருந்த இடம். அவன் அரசாட்சி செய்து கொண்டிருந்த இடம். அவனை யாரும் நெருங்க முடியாமல், அரக்கர்களின் உச்சகட்ட ஆட்சி நடந்து கொண்டிருந்த இடம். அங்கு தான் பராசரமுனிவரும், பரஞ்ஜோதி முனிவரும், இன்னும் பல முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த அரக்கனின் பலத்தை குறைப்பதற்காக கடும் தவம் இயற்றி வேங்கடவனை வணங்கினார்கள். வேங்கடவனே "ப்ரஹன் மாதா" என்கிற பேரிலே வந்தமர்ந்தான். ப்ரஹன் மாதவுக்கும் அந்த சோதனை எற்பட்டதடா. அவனையும் அரக்கன் விடவில்லை, சுற்றி வந்தான். மூச்சுவிட்டான். ஒன்றும் நடக்கவில்லை. அதன் காரணமாக தன்னை பச்சை நிறமாக மாற்றிக்கொண்டான் வேங்கடவன். கார்கோடகன் என்று சொல்லக்கூடிய அரக்கன் ப்ரஹன் மாதாவை தீண்ட முயற்ச்சித்தான். ப்ரஹன் மாதா பச்சை நிறத்தில் ஜொலித்தான். பச்சை என்பது பசுமையடா. பச்சை என்பதற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. ஆக, யார் யார் பச்சைக்கல் நவரத்னத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் கெடாது, வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான், பச்சை தான் புதன், புதன் தான் விஷ்ணு. ஆகவே பச்சைக்கும், விஷ்ணுவுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. அதை எல்லாம் எடுத்துக்காட்டிய அற்புதமான நாள் இது தான்.

சித்தன் அருள் ............... தொடரும்!

Monday, 9 September 2013

கல்லார் அகத்தியர் ஞானபீடம் - ஒரு தகவல்!

வணக்கம்!

ஒரு அகத்தியர் அடியவர் தந்த தகவலின் பேரில், அகத்தியர் ஞானபீடம், கல்லாரில் இருக்கும் மாதாஜியிடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது.  இதை, என் வாழ்க்கையின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஒரு சில தகவல்களை தந்தார்கள் உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள.

சித்தன் அருளை வாசித்த அன்பர்களுக்கு தெரியும், அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை போன்ற தினங்களில் அகத்தியர் வாக்கு உறைப்பதில்லை.  ஆனால், கல்லார் ஆஸ்ரமத்தில், வாரத்தில் ஒருநாள் மட்டும் (சனிக்கிழமை) நாடி வாசிக்கப்படுவதால், அகத்திய பெருமான் மனம் கனிந்து சனிக்கிழமை அந்த திதிகள், நட்சத்திரங்கள் வந்தாலும் அருள் வாக்கு தருவதாக உறுதி அளித்துள்ளாராம்.

மேலும் ஒரு சந்தோஷ விஷயம் என்னவென்றால், சமீபத்தில் இங்கு வந்து நாடி படித்து அகத்தியர் அருள் வாக்கை பெற்ற மூன்று குடும்பத்தில், மிகவும் தள்ளிப்போன திருமணம், நிச்சயமாகி, இந்த மாதம் திருமணம் நடக்கப்போகிறதாம்.

மேலும் ஒரு தகவல். தொடர்பு கொண்டு நாடி வசிக்க முன் பதிவு வேண்டுகிற அனைவருக்கும் அங்கு பதிவு செய்கிறார்களாம்.

அகத்தியர் அருளை பெற விழைகின்ற அனைவருக்கும் இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் உடனேயே நடக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு,

இதை வாசிக்கும் அனைவரும் சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

ஓம் அகதீசாய நமஹ! 
கார்த்திகேயன்

Thursday, 5 September 2013

சித்தன் அருள் - 138

மனிதர்கள் பலவிதம்.  மனதில் ஓர் எண்ணத்தை மறைத்து வைத்து வெளியே வேறொன்றை பேசுவர்.  இதை வஞ்சம் எனலாம்.  இது உண்மையாக இல்லாத நிலை. இப்படியே பிற மனிதர்களை ஏமாற்றி வாழ்ந்து வந்த ஒருவரை விதி சரியாக மாட்டிவிடும் ஒருநாள்.  அந்த நாளில் அவர் மாட்டிக்கொண்டு விழிப்பது இறையிடமாக இருக்கலாம், சித்தரிடமும் ஆகலாம். சித்தரிடம் விளையாடும் போது அவரும் விளையாடுவார். புரிந்து கொண்டால் விளையாட்டை நன்றாகவே நாமும் ரசிக்கலாம். சித்தரை ஏமாற்றவா முடியும். வந்தவரை கடைசியில் மன்னித்து தன்  வழிக்கே கொண்டு வந்து சித்தர் நினைத்ததை நடத்தி வைத்து அமைதியையும் மகிழ்ச்சியையும் அவர்கள் வாழ்க்கையில் தவழ விடுவார். எல்லா நன்றியையும் இறைவனுக்கே சமர்ப்பித்துவிட்டு தன்  வழியில் அவர் சென்று விடுவார். அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைய தொகுப்பில் பார்ப்போம். ​

​ஒரு நாள் நாடி படிக்க வந்த ஒருவர்​ "எங்களுக்கு பெண் குழந்தையே இல்லை.  பிறந்த மூன்று குழந்தைகளும் ஆண் குழந்தைகள்தான்.  அந்த குழந்தைகளில் ஒன்றுக்கு இதயத்தில் துவாரம் இருக்கிறது.  ஒருவனுக்கு மூளை வளர்ச்சியே இல்லை, இன்னொருவனுக்கு பேச்சு இன்றுவரை வரவில்லை" என்று மிகுந்த வருத்தப் பட்டு சொன்னார் ​.

அவரை கண்டால்​ ஒரு நடுத்தர வயதைச் சேர்ந்த பணக்காரர்​ என தோன்றியது.​ பணம் தான் பலரையும் மதியிழக்க செய்து, யாரிடம் கேட்கிறோம் அல்லது பேசிகிறோம் என்பதை கூட யோசிக்க விடாமல் வாய்க்கு வந்தபடி பேச வைக்கும்.

"​சரி! ​நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டேன்.

"எனக்கு பிறந்த மூன்று ​ஆண்  குழந்தைகளும் சரியில்லை. சொத்து இருக்கிறது.  அதே சமயம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அது வளர்ந்து ஆளாக்கி வீட்டோடு இருக்கிற மாப்பிள்ளையாகப் பார்த்து, அவனிடம் என்னோட சொத்துக்களையும் ஒப்படைத்து விடுவேன்.  இதற்கு அகத்தியர் அருள் புரிய வேண்டும்" என்று சர்வ சாதாரணமாக சொன்னார் அவர்.

"அகத்தியரிடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்க கூடாது ​என்ற விவஸ்தையே இல்லாமல் ​போய் விட்டதே. அகத்தியர் என்ன ஜோதிட​ரா​?  தலையாய சித்தர் ஆயிற்றே என்ற எண்ணம் ஏன் இந்த நபருக்கு வரவில்லை?" என்று கவலைப்பட்டேன்.

பிறந்த குழந்தைகளை நல்லபடியாக மாற்ற வழி என்ன என்று கேட்டிருந்தால் உண்மையில் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். மாறாக இன்னொரு பெண் குழந்தை வேண்டுமாம்.  அதை வளர்த்து ஆளாக்கி, அவளுக்கு திருமணம் முடித்து, அவளுக்கு வருகின்ற கணவனிடம் சொத்துக்களை ​ஒப்படைப்பாராம். எவ்வளவு பெரிய ஆசை?

ஒரு வே​ளை அடுத்த குழந்தையும் ஆணாக பிறந்து விட்டால் என்ன செய்யப் போகிறார்? என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

எனது எண்ணம் அவருக்கு புரிந்து ​இருக்குமோ என்னவோ. சட்டென்று அவரே ​பேசினார்.

"இப்பொழுது என் மனைவி "உண்டாகி" இருக்கிறாள்.  பிறக்கிற குழந்தை ஆணாக இருந்தால், டாக்டரிடம் சொல்லி கருக்கலைப்பு செய்து விடுவேன்.  ஒரு ​வேளை பிறக்கிற குழந்தை பெண்ணாக இருந்தால் பரவாயில்லை என்று விட்டுவிடுவேன்.  அகத்தியர் தான் இதற்கு வழி சொல்ல வேண்டும்" என்றார் சர்வ சாதாரணமாக.

அவருடைய இந்தப் பேச்சு எனக்கு ஆச்சரியத்தை தந்தது.​ கூடவே சிறிதளவு கோபத்தையும் கிளறியது.   "குழந்தையே இல்லாமல் எத்தனையோ பேர் தத்தளித்துக் கொண்டிருக்க, இவரோ பிறக்கிற குழந்தையை கருக்கலைப்பு செய்யத் தயாராக இருக்கிறாரே! என்ன மனிதர் இவர்" என்று அதிசயப்பட்டுப் போனேன்.

சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு "அகத்தியரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" என்றேன்.

"பிறக்கிற குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ள வேண்டும்."

"தெரிந்தால்"

"அதற்கேற்ப நடந்து கொள்வேன்"

"எப்படி?"

"ஆண் குழந்தை எனில் கருக்கலைப்பு செய்து விடுவேன்.  பெண் குழந்தை எனில் ஏற்றுக் கொள்வேன்."

"இதற்கு அகத்தியர் பதில் சொல்ல மறுத்தால் என்ன செய்வீர்கள்?"

"அகத்தியர் நாடியில் சொல்வதெல்லாம் பொய் என்று எண்ணிக்கொள்வேன்.  யாரும் அகத்தியர் நாடியை நம்ப வேண்டாம் என்று எல்லோருக்கும் சொல்வேன்" என்று முரட்டுத்தனமாக பேசினார்.

"நான் நாடியை படிக்காமல் விட்டு விட்டால் என்ன செய்வீர்கள்?"

"என் கேள்விக்கு பயந்து நாடி படிக்காமல் விட்டு விட்டதாக எல்லோரிடமும் கூறுவேன்"

"இப்படிச் சொன்னால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏனெனில் அகத்தியர் நாடியைப் படித்துதான் நான் பிழைக்க வேண்டும் என்ற நிலை, இறைவன் அருளால் எனக்கில்லை. இன்னொன்று, எனக்கோ அகத்தியருக்கோ விளம்பரம் தேவை இல்லை.  நாடி படித்து அது நடக்க முடியாது போனால் வருத்தமாக இருக்கும்.  அதே சமயம் மறுபடியும் யாரும் அகத்தியர் நாடியைப் படிக்க என்னிடம் வர மாட்டார்கள்.  இது எனக்கு நிம்மதி தான்" என்றேன்.

இந்த பதிலை அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை போலும். கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.  அவரிடம் இருந்த பணமும், திமிரும் அவரை இப்படி பேச வைத்தாலும், நானோ அல்லது அகத்தியரோ இப்படிப்பட்ட நபர்களை சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

"என்ன சார், சட்டென்று இப்படி சொல்லி விட்டீர்களே! நான் விளையாட்டுக்காக அப்படி பேசினேன்.  தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று பின்னர் குழைந்தார். பேச்சிலும் லேசாக பணிவு வந்தது.

நான் கேட்டேன்.

"பிறக்கிற குழந்தை ஆணா, ​பெண்ணா என்று சொல்லக்கூடாது என்று ​மருத்துவ ரீதியாக ஒரு சட்டம் இருக்கிறது. மருத்துவர்களே வாய் திறக்காத ​போது, அகத்தியர் எப்படி வாய் திறந்து கூறுவார்? எனவே இப்படிப்பட்ட கேள்வியை அகத்தியரிடம் கேட்காதீர்கள்" என்றேன்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  "சார் நான் என் குடும்ப டாக்டரிடம் இதுபற்றி கேட்டுவிட்டேன்.  அவரும் பிறக்கிற குழந்தை ​ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்.  எதற்கும் அகத்தியரிடம் கேட்டுவிட்டு கருக்கலைப்பு செய்யலாமென்று இருந்தேன்.  எத்தனையோ நல்ல காரியங்களை செய்கின்ற அகத்தியர், இந்த விஷயத்தில் நல்ல வாக்கு தருவார் என்றுதான் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறேன்" என்று கடைசியாக, வந்த உண்மையைச் சொல்லிவிட்டார்.

இப்பொழுதுதான் எனக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.

"அகத்தியரே! இப்படி ஒரு சோதனையைக் கொடுத்து விட்டீரே! நான் இவருக்கு நாடி படிப்பதா? அல்லது வேண்டாமா? என்று யோசிக்கும்படி ஆக்கிவிட்டீரே! பிறக்கிற குழந்தை "ஆண்" என்று சொல்லிவிட்டால், அந்தக் குழந்தையை இவர் கருக்கலைப்பு செய்து விடுவார்.  பெண் குழந்தை என்று கூறி அது மாறிவிட்டால் பின்னால் எந்த நிலைக்கு கொண்டு ​போய் விடுமோ என்று தெரியாது.​ ​இவருக்கு நாடி படிப்பதா, இல்லை முடியாது என்று தட்டிக் கழிப்பதா?" என்று ஒரு சிறு போராட்டம் எனக்குள் ஏற்பட்டது.

நாடி படிக்க முடியாது என்று என்னால் சொல்ல மனது இடம் கொடுக்கவில்லை. அவர் ​விருப்பப்படி படித்துப் பார்ப்போம். அகத்தியர் இதற்கு ஒரு வழியை காட்டாமலா விட்டுவிடுவார் என்ற தைரியத்தில் அகத்தியர் ஜீவநாடியை கையில் எடுத்தேன்.

"என் முன்பு அமர்ந்திருக்கும் இவனோ, ஈன்றெடுத்த குழந்தைகளை நம்பவில்லை. அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக மாற என்ன வழி என்று கேட்டிருந்தால் அழகான வழியைக் காட்டியிருப்பேன்.

தனது சொத்தை காப்பாற்ற, புதிய அத்தியாயத்தை எழுத நினைக்கிறான். கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது போல், இதற்கு அகத்தியனை துணைக்கு அழைக்கிறான். மறுத்தால் அகத்தியர் வாக்கு பொய் என்று ஊரை அழைப்பானாம்.

இவன்​,​ எத்தனை நாளைக்கு இந்த சொத்து சுகத்தோடு வாழப்போகிறான் என்பதை ஒரு வினாடியாவது சிந்தித்தானா? கருக் கொலை செய்ய இந்த அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்க வந்திருக்கிறானா? என்னடா விந்தை!" என்று எனக்கு ரகசியமாக சொல்லிவிட்டு,

"உன் ​எண்ணம் நிறைவேறும். 6 மாதம் கழித்து வா" என்று ஒரே வார்த்தையில் பதில் கூறினார்.

இதைக் கேட்டதும் அந்த பணக்கார நபருக்கு ஒரே குஷி. எப்படியென்றால் இனி பிறக்கும் குழந்தை "பெண்" வாரிசு தான் என்று எண்ணி சந்தோஷமாக புறப்பட்டுச் சென்றார்.

அவர் புறப்பட்டுச் சென்றதும் எனக்கு ஒரே சந்தேகம்.  என்னிடம் அகத்தியர் சொன்னது சரியா? இல்லை வந்தவரிடம் அகத்தியர் சொன்னது நிஜமா? என்று!

"பொறுத்துப்பார்" என்று பின்னர் எனக்கும் விடை கிடைத்தது.

4 மாதம் கழிந்திருக்கும்.

திடீரென்று ஒரு நாள் எதையோ பறிகொடுத்தவர் போல் ஓடி வந்தார் அதே நபர்.

என்னவென்று கேட்டேன்.

"வியாபாரத்தில் பெருத்த நஷ்டம். திடீரென்று ஏற்பட்ட விபத்தால் "இரண்டு கோடி" நஷ்டப்பட்டு விட்டேன்.  எல்லா சொத்துக்களையும் ​விற்கும் படி ஆகிவிட்டது.  இப்பொழுது ஒன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது.  வாழ்வா, சாவா என்று போராடிக் கொண்டிருக்கிறேன். அகத்தியர் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

"மனைவி எப்படி இருக்கிறாள்?"

"இன்றோடு அவளுக்கு எட்டாவது மாதம். குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நம்புகிறேன். அகத்தியர் தான் சொல்ல வேண்டும்" என்று சோர்ந்த குரலில் பேசினார்.

அகத்தியரிடம் கேட்டேன்.

"இவனுக்கு வேண்டியது பெண் குழந்தை தானே! அதுதான் அன்றைக்கே சொல்லிவிட்டேனே. இவன் விருப்பப்படி நடக்கும் என்று. பின் ஏன் பதறுகிறான்?"

"பிறந்த குழந்தை நீண்ட ஆயுளுடன், நோய் நொடியில்லாமல் இருக்க வேண்டும். அதையும் அகத்தியர் அருள வேண்டும்."​ என்றார்.​

"இதை முக்கண்ணனும், பிரம்மாவும் ​தான்​ முடிவு செய்ய வேண்டும். இந்த அகத்தியன் அல்ல."

"அப்படியென்றால்?"

"முதலில் பிறந்த மூன்று ஆண்  குழந்தைகளின் சிகிற்சைக்கு ஏற்பாடு செய். இன்னும் ஒன்றரை மாதத்தில், வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் வருவார்.  புனிதமிகு மகா ன​து ஆசிர்வாதத்தில் அந்த மூன்று குழந்தைகளும் படிப்படியாக முன்னேறுவார்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் அந்த மூன்று குழந்தைகளும் நல்ல விதமாக ஏற்றம் காண்பார்கள்" என்றார் அகத்தியர்.

"மிக்க நன்றி" - வந்தவர் அகத்தியரை வணங்கினார்.

"அதுமட்டுமல்ல, இருக்கிற சொத்துக்களை இந்த மூன்று ஆண் குழந்தைகளுக்கு எழுதிவை.  இந்த சொத்து கை விட்டுப் போகாது. பிற்காலத்தில் இதுவே ஆலமரமாக பாதுகாக்கும்".

"​உத்தரவு அகத்தியரே!  அப்படியென்றால் பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு..." வந்தவர் இழுத்தார்.

"அதைப்பற்றி ஏன் இப்போது கவலை? பெண் குழந்தை கேட்டாய். அதை யாம் ஏற்று பிரம்மனிடம் சொல்லி பிறக்க ஏற்பாடு செய்தோம்.  அவ்வளவுதான். மற்றவை விதிப்படி நடக்கும்" என்று சொல்லி மறைந்து கொண்டார் அகத்தியர்.

சந்தோஷமும் சந்தேகமும் கொண்டு அந்த நபர் கிளம்பினார். இது ஒரு விசித்திர கேசாக இருக்கிறதே என்று நான்​ ​ யோசித்தேன்.

இரண்டு மாதம் கழித்து அவர் மீண்டும் வந்தார்.

"மூன்று குழந்தைகளும் இப்போது தேறி வருகின்றனர். அகத்தியர் சொல்படி அந்த குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல் விரைவில் இயல்பான நிலைக்கு வந்துவிடும் என்று புட்டபர்த்தி சாய்பாபாவின் அனுக்ரகத்தால்  இயங்கும் ஒரு மருத்துவமனைக்கு வந்த வெளிநாட்டு டாக்டர் சொன்னார். எனக்கும் மனப்பாரம் குறைந்தது.

அகத்தியர் சொன்னபடியே இருக்கிற பாக்கிச் சொத்தை அந்த மூன்று ​ஆண் குழந்தைகளின் பெயரில் எழுதி வைத்துவிட்டேன். இப்போது வியாபாரமும் "சூடு" பிடித்திருக்கிறது.  விரைவில் இழந்த சொத்துக்களையும் ​மீட்டு விடுவேன் என்ற தைரியம் வந்திருக்கிறது" என்றவர் சட்டென்று தேம்பித் தேம்பி அழுதார்.

என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. அவரே காரணத்தையும் சொன்னார்.

"நான் ஆசைப்பட்டபடி பெண் குழந்தை பிறந்தது. அதனுடன், ஓர் ​ஆண் குழந்தையும் பிறந்தது.  இரு குழந்தைகளும் இரட்டை குழந்தைகளாக பிறந்தனர்.  இதில் ​ஆண் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது.  ஆனால் பெண் குழந்தையோ, பிறந்த நான்கு மணி நேரத்தில் இறந்து விட்டது" என்று அவர் சொல்லி முடித்தார்.

அகத்தியரின் வாக்கு பலித்தது.  ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்ட அந்த நபரின் பேராசை நொறுங்கிப் போயிற்று.

"விதி" அவரது மூன்று மகன்களையும் காப்பாற்றி விட்டது. இதைத்தான் முன்கூட்டியே அறிந்த அகத்தியர், அந்த மூன்று மகன்களது பெயரிலும் சொத்துக்களை எழுதி வைக்கச் சொன்னாரோ?" என்று எனக்கு அப்போது எண்ணத் தோன்றியது. ​ எதற்கும் அகத்தியரிடம் கேட்டு தெளிவடைந்து விடுவோம் என்று நாடியை புரட்டினேன்.

"அவனது செல்வத்தினால் எதையும் சாதித்துவிட முடியும் என்கிற கர்வம், இறைவனிடமே புத்திசாலித்தனமாக கேட்டு தான் நினைத்ததை பெற்றுவிடலாம் என்கிற குறுக்கு புத்தி போன்றவைக்கு சரியான பாடம் புகட்ட யாம் நினைத்தோம். பெண் குழந்தை வேண்டும் என்றானே ஒழிய ​ஆயுளை தீர்மானிப்பது இறைவன் செயல் என்பதை அவன் அறியான். அந்த மூன்று குழந்தைகளுக்கும் மருத்துவசிகிரச்சைக்கு பின் உடல் நிலை சரியாகி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பது இறைவன் விதித்த விதி.

பெரும்பாலோருக்கு எதை எப்படி கேட்கவேண்டும், எப்போது கேட்கவேண்டும் என்பது தெரியாததே பல பிரச்சினைகளுக்கும் காரணம். இவனும் அவர்களில் ஒருவன்" என்று அகத்திய பெருமான் விளக்கம் கூறினார்.

சித்தன் அருள்............... தொடரும்!

Wednesday, 4 September 2013

ஒதிமலை முருகர் பிறந்தநாள் தொகுப்பு - 2013

வணக்கம் அகத்திய பெருமான் அடியவர்களே!

செப்டம்பர் 02 ம் தியதி ஒதிமலை சென்று ஓதியப்பரின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி அவர் அருளை பெற்று வந்த என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஞாயிற்று கிழமை அன்று ஐந்து பேர் சேர்ந்து மலை ஏறி மறுநாள் கோவில் திறக்கும் வரை காத்திருந்திருக்கிறார்கள்.  இரவில் பலமாக காற்று வீச குளிர் நன்றாகவே உணர முடிந்ததாம். இரவில் கோவிலுக்கு மிக அருகில் நிற்கும் ஒரு உயர்ந்த மரத்தை உலுக்கி எடுத்த காற்று, ஓதியப்பர் கோவில் மண்டபத்துக்குள்ளே வரவே இல்லையாம்.  இது ஒரு மிகுந்த ஆச்சரியம். கீழே தருகிற படங்களில் விதவிதமாக தெரிந்தால் அது சித்தர், ஓதியப்பர் அருள். உன்னிப்பாக பாருங்கள்.

அதிகாலை சூரிய உதயம் மிக சிறப்பாக அமைந்தது. அந்த புகைப்படம் இதோ!


உதயத்தில் ஒதிமலையின் நிழல் எதிர் மலையிலிருந்து ஓடி வந்து நிற்கும். அது ஒரு அருமையான காட்சி. அந்தப் படம் இதோ.


வானத்தில் மேகங்கள் கூட விதவிதமாக காட்சி கொடுத்தது.  அந்த புகை படங்கள் இதோ.இரவில் ஒதிமாலையில் மழை இல்லை. கோயம்பத்தூரில் சரியான மழையாம். சன்னதி திறந்ததும் மிகுந்த உஷ்ணம் பரவியதை உணர்ந்திருக்கின்றனர்.  ஓதியப்பருக்கு எண்ணை காப்பு (குளிர்விக்க தோதான எண்ணை) போட்டதும், தொடங்கிய மழை இரவு 07.30 வரை நீடித்ததாம்.

எல்லாம் அவன் செயல் என்று நினைப்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். சமீப காலமாக வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அடியவர்களுக்கு "உத்தரவு" கொடுத்து வந்த ஓதியப்பர், பிறந்த நாள் திங்கட்கிழமையில் இருந்தும், மனம் உவந்து நிறைய பேருக்கு "உத்தரவு" கொடுத்தது, மிகுந்த ஆச்சரியம். வந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக, மன திருப்தியுடன், அவர் அருளுடன் சென்றனர். ஓதியப்பரின் பிறந்தநாள் அலங்கார கோலம் உங்கள் அனைவருக்காகவும் இதோ.


எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ்க! இறையருள் உங்களை சூழ்ந்து நின்று வழி நடத்தட்டும்.

கார்த்திகேயன்