​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 25 February 2021

சித்தன் அருள் - 985 - அனந்த சயனத்தில் ஆஞ்சநேயரும் அகத்தியப்பெருமானும்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியரின் அனந்தசயனம் என்கிற தொகுப்பில் கீழ்கண்ட வரிகள் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கோவிலின் கிழக்கு வாசல் வழி பத்மனாபாரை தரிசனம் செய்ய வந்தால் கொடிமரத்துக்கு அருகில் ஆஞ்சநேயர் சன்னதி இருப்பதை காணலாம். அவர் வெண்ணை சார்த்தப்பட்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பார். அனைவரும் தரிசிக்கலாம், ஆயின் அனுமனின் பாதத்தை காண முடியாது. ஏன் எனில், அனுமனின் பாதங்கள் இருப்பது, அகத்தியப்பெருமானின் தோள்களில்.

தவக்கோலத்தில் இருந்த ஆஞ்சநேயர், அனைத்து தேவர்களும், முனிவர்களும், இறைமூர்த்தங்களும், சித்தர்களும், நாரயணரின் பத்மநாபர் அவதாரத்தை கண்டு மகிழ்வதாக கேள்வியுற்று, தானும் அனந்தன் காட்டிற்கு எழுந்தருளினாராம். வெகு தூரத்தில் நிற்பதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை நிலவியது அனந்தன் காட்டில். அத்தனை உயர் ஆத்மாக்களும் சூழ்ந்து நின்று பத்மனாபரின் அருளை பெற்றுக் கொண்டிருந்ததினால், ஆஞ்சநேயருக்கு பத்மநாபரின் திருப்பாத தரிசனம் கூட கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தமுற்ற ஆஞ்சநேயரின் மனநிலையறிந்த பெருமாள் அகத்தியரை நோக்கி கண் அசைக்க, அவரும் அனுமனை கண்டார்.

"வாருங்கள் ராமதூதனே! நாங்கள் அனைவரும் பத்மனாபாரின் திருமேனியை கண்டு மனம் மகிழ்ந்துள்ளோம்! தாங்களும் வந்து இறையருளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

"நன்றி! அகத்தியரே! இருப்பினும் இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால், அடியேனுக்கு அவர் தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. பத்மநாபரின் திருப்பாத தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும். ஆனால், அத்தனை பேரும் அவர் முன் நின்று மறைப்பதால் ஒன்றுமே தெரியவில்லை!" என்றார் ஆஞ்சநேயர்.

"அடடா! தாங்களுக்கு பத்மநாபரின் தரிசனம் தானே வேண்டும்! இதோ, அடியேன் தோள்களில், தங்கள் திருப்பாதம் பதித்து ஏறி நின்று, அவரின் தரிசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி அவர் முன் நின்றார்.

அனுமனும் பத்மநாபரை, அகத்தியப்பெருமானின் தோள்களில் ஏறி நின்று தரிசித்துவிட்டு, மன நிறைவுடன், அகத்தியப்பெருமானை, அவரின் சேவைக்கு பாராட்டி ஆசிர்வதித்து சென்றார் என்பதை சுட்டும் விதமாக, அந்த ஆஞ்சநேயர் திருப்பாதத்தில் அகத்தியர் தோள்கள் இருப்பதாக வடிவமைத்துள்ளனர். ஆனால், அனுமன் திருப்பாதத்தை காண்பதே மிக அரிது என்கிற நிலையில் தான் இன்றைய சூழ்நிலை. ஏன் என்றால், அனுமாருக்கு சார்த்திய துளசி மாலை, கீழ்வரை தொங்கிக்கொண்டிருக்க, அகத்தியர் திரு உருவம் அதற்குப் பின் மறைந்திருக்கும். அப்படியிருக்க, அகத்தியரை எங்கு பார்க்க!

2020ம் வருடம், மார்ச் மாத கடைசியில், ஒரு வியாழக்கிழமை, அகத்தியப்பெருமானிடம் வேண்டுதலை வைத்தேன். 

"அடியேன் அருகிலேயே இருந்தும், பத்மனாபானரை தரிசனம் செய்து வருடங்களாயிற்று.  ஆஞ்சநேயருக்கு கீழ் இருக்கும் உங்களை பார்ப்பதுதான் அடியேனின் விண்ணப்பம். அதை நிறைவேற்றி தரவும்" என்றேன்.

மாலை நேரம் ஒரு மூன்று மணி இருக்கும். சற்றே இலகுவாக, த்யான நிலையில் அமர்ந்து அகத்தியரின் பதிலை எதிர் பார்த்து காத்திருக்க, உத்தரவு வந்தது.

"இன்று மாலையே அந்த தரிசனம் செய்து விடு" என அவர் கூறியது மிக தெளிவாக கேட்டது.

மிக்க மகிழ்ச்சியுடன் கிளம்பி சென்றேன். கோவிலில் கூட்டம் இல்லை. முதலில் அகத்தியர் சமேத ஆஞ்சநேயர் தரிசனம் பின்னர்தான் பத்மநாபர் தரிசனம் என்று மனம் கூறியது.

அதற்கேற்றாற்போல், கிழக்கு வாசல் ஆஞ்சநேயர் சன்னதியில், அடியேனுக்கு பரிச்சயமான ஒருவர் பூஜாரியாக நின்று கொண்டிருந்தார்.

அடியேனை கண்டதும் ஒன்றும் பேசாமல் ஆஞ்சநேயருக்கு சார்த்திய வடைமாலையிலிருந்து சற்று பிரசாதம் எடுத்துக் கொடுத்தார்.

அடியேன் அவரிடம், "பத்மநாபா! ஆஞ்சநேயர் சன்னதி கதவை திற, எனக்கு ஒரு விஷயம் பார்க்க வேண்டும் என்றேன்."

அவரும் உடனேயே கதவை திறந்தார். ஆஞ்சநேயர் கம்பீரமாக வெண்ணை சார்த்தப்பட்டு, துளசி மாலை அணிந்து நின்றிருந்தார். அந்த துளசி மாலை சரியாக ஆஞ்சநேயர் பாதம் வரை மறைத்திருந்தது. அடியேன் மனம், குருநாதர் பாதத்தில் இருந்ததால், குனிந்து, அவரை நன்றாக தரிசனம் செய்தேன். அவர் கைகூப்பிய நிலையில் நிற்க, அவர் தலைக்கு மேல் கம்பீரமாக ஆஞ்சநேயர்.

சற்று நேரம் அமைதியாக குருநாதர் உருவத்தை உற்று பார்த்தேன்.

அமைதியை கலைத்தபடி பூஜாரி கேட்டார் "இது யார் தெரியுமா?" என்றார்.

அடியேன் அமைதியாக புன்னகைத்தபடி இருந்தேன்.

"இது அகஸ்தியர் தெரியுமோ?" என்றார்.

"அப்படியா? என்றேன் ஆச்சரிய பாவத்துடன்!

"குருநாதா நமஸ்காரம் என்றேன்" கைகூப்பி.

அவருக்கு ஒரு திருப்தி, அடியேனுக்கு தெரியாத ஒரு விஷயத்தை கூறிவிட்டோம் என்று. அங்கிருந்து உடனேயே உள்சென்று நரசிம்மர், பத்மநாபர், கிருஷ்ணர் சன்னதிகளில் தரிசனம் செய்து, வீடு வந்து சேர, வாட்ஸாப்பில் கோவில் செய்தி வந்தது.

"நாளை முதல், மறு அறிவிப்பு வரும் வரை, கோவிட் பிரச்சினையால், கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!".

பத்து மாதங்கள் வரை அந்தத்தடை நீடித்தது என்பதே உண்மை.

பிரார்த்தனை ஆத்மார்த்தமாக இருந்ததால், குருநாதர் ஏற்பாடு செய்து, கடைசி நிமிடத்தில் தரிசனம் செய்து வைத்தார் என்பதே உண்மை.

சரி! ஆஞ்சநேயரும் அகத்தியப்பெருமானும் கீழ் உள்ள படத்தில் இருப்பது போலவே உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday, 18 February 2021

சித்தன் அருள் - 984 - புண்ணிய ஸ்தலங்கள் - பெருமாள் - நவதிருப்பதி !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

​ஆலயம் தொழுவது சாலமும் நன்று என பெரியவர்கள் கூறி சென்றாலும், நமது குருநாதர் கூற்றின்படி, இறை சாந்நித்யம் நிறைந்த கோவில் தரிசனத்தில், நாம் ஒவ்வொருவரும், நம் கெட்ட கர்மாவை கழித்து, புண்ணியத்தை சேர்த்து இப்பிறவியிலேயே கரையேறி விடலாம் என்கிறார். அப்படிப்பட்ட கோவில்களில், இன்று பெருமாளின் நவதிருப்பதி கோவில்களை பற்றி பார்ப்போம்.

நவ திருப்பதி என்பது, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் உள்ளது. ஒன்று திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களிலும், இரண்டாவது கும்பகோணத்தை சுற்றியும் உள்ளது.

கும்பகோணத்தை சுற்றிய நவத்திருப்பதிகள் என்பது கீழ் வருமாறு.

 1. திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
 2. நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
 3. நாச்சியார்கோவில் - செவ்வாய்
 4. திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
 5. திருஆதனூர் - குரு
 6. திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
 7. ஒப்பிலியப்பன் கோயில் - சனி
 8. கபிஸ்தலம் - ராகு
 9. ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது

தசாவதாரமும் நவகிரகங்களும்:

நவகிரகங்களின் சன்னதி என்பது  பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படுகிற ஒரு நிலையை எங்கும் காணலாம்.   பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்யலாம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.

ஒன்பது கிரகங்களையும், தசாவதாரத்தையும் தொடர்பு படுத்தி ஒரு சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

இதன் அடிப்படையில் பார்த்தால் கிரகங்களை தசாவதாரத்துடன் தொடர்பு படுத்திவிட, 

 1. ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
 2. ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
 3. ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
 4. ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
 5. ஸ்ரீ வாமனவதாரம் - குரு
 6. ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
 7. ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
 8. ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
 9. ஸ்ரீ வராகவதாரம் - ராகு
 10. ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என அமையும்.

பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

 1. ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
 2. வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
 3. திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
 4. திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
 5. ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
 6. தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
 7. பெருங்குளம் - சனி ஸ்தலம்
 8. இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
 9. இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்

1. ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி கோவில்:-

திருத்தல அமைவிடம்:

ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:

தல மூர்த்தி : கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி : வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)
தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம் : சூரிய ஸ்தலம்

2. விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):-

சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்

3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்:-

செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.

தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்

4. திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:

புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்

5. ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:-

குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி

6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:-

சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்

7. திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:-

சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்

8.&9. திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):-

ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்

நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து. காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம் செய்வது எளிது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Saturday, 13 February 2021

சித்தன் அருள் - 983 - புண்ணிய ஸ்தலங்கள் - சிவம்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குருநாதர் அவர் உரைத்த அருள் வாக்கில், உடலை வருத்தி புண்ணிய தலங்களை, கோவில்களை சென்று தரிசிப்பதால், ஒரு மனிதனின் கெட்ட கர்மா மிக வேகமாக கரைந்து போய், புண்ணியம் நன்றாக சேர்ந்துவிடும். நிறைய புண்ணியம் சேர்த்து, பாபம் அழித்து, அத்தனை புண்ணியத்தையும், குருநாதனுக்கோ, இறைவனுக்கோ, தாரை வார்த்துக் கொடுத்தால், அந்த ஆத்மா உடலை நீத்தபின், நேராக மோக்ஷத்துக்குத்தான் செல்லும், எனவும் உரைத்துள்ளார்.

அத்தனை உயரிய கருத்தை பெரியவர்கள் மறைத்து வைத்து, பல புண்ணிய இடங்களையும் கண்டறிந்து, மனிதன் கரையேற வேண்டி, இறைவன் ஆட்கொண்ட இடங்களில் கோவிலை அமைத்து, அங்கு சென்று உண்மையாக தரிசனம் செய்து வர வேண்டி சில விஷயங்களை, வழிகளை உரைத்தனர்.

அப்படிப்பட்ட சிவஸ்தலங்களை கீழே தருகிறேன்.  

1. பஞ்ச கேதார சிவ தலங்கள்:-  

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் சிவாலிக் மலையில் அமைந்துள்ள கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய ஐந்து இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சிவத் தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றியதாக சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் சிவபெருமானை கேதரநாதன் என்றும் அழைக்கின்றார்கள்.

 1. கேதார்நாத் - உடல்
 2. துங்கநாத் - கைகள்
 3. ருத்ரநாத் - முகம்
 4. மத்தியமகேஷ்வர் - தொப்புள்
 5. கல்பேஷ்வர் - தலைமுடி

2. பஞ்ச தாண்டவ தலங்கள் என்பது சிவபெருமானின் பஞ்ச தாண்டவங்கள் நிகழ்ந்த சிவத்தலங்களைக் குறிப்பதாகும். பஞ்ச என்ற சமஸ்கிருத சொல்லிற்கு ஐந்து என்று பொருளாகும்.

 1. சிதம்பரம் நடராசர் கோயில் - ஆனந்த தாண்டவம்.
 2. திருவாரூர் தியாகராஜர் கோயில் - அஜபா தாண்டவம்.
 3. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் - சுந்தரத் தாண்டவம்.
 4. அவிநாசி அவிநாசியப்பர் கோயில் - ஊர்த்துவ தாண்டவம்.
 5. திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் - பிரம்ம தாண்டவம்.

3.  ஐம்பெரும் மன்றங்கள்:-

ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தின அம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து தலங்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.

 1. சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்
 2. மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்
 3. திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்
 4. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்
 5. குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).

இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.

4.  பஞ்சலிங்க தலங்கள்:-

இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள ஐந்து சிவ தலங்கள் பஞ்சலிங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை வட இந்தியாவின் பஞ்ச பூதத் தலங்களைப் போல் மிகவும் பிரசித்தி பெற்ற காசிக்கு சமமானதாக வகைப் படுத்தப்படுகின்றன. இத்தல கோபுரங்கள் அனைத்தும் ஓய்சாளா சிற்ப முறைகளில் கட்டப்பட்டவையாகும்.

 1. அர்கேசுவரர் லிங்கத்தலம்
 2. பாதாளேசுவரர் லிங்கத்தலம்
 3. மரனேசுவரர் லிங்கத்தலம்
 4. மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்
 5. வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்

5. ஆறு ஆதார சிவத்தலங்கள்:-
 
ஆதார தலங்கள் என்பவை மனிதனின் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் உரிய சிவத்தலங்களாகும். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பன அந்த ஆறு ஆதாரங்களாகும்.

 1. திருவாரூர் மூலாதாரம்
 2. திருவானைக்கா சுவாதிட்டானம்
 3. திருவண்ணாமலை மணிபூரகம்
 4. சிதம்பரம் அநாகதம்
 5. திருக்காளத்தி விசுத்தி
 6. காசி ஆக்ஞை

6.  சப்தவிடங்கத் தலங்கள்:-

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள்

 1. திருநள்ளாறு,
 2. நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம்,
 3. திருக்காராயில், 
 4. திருக்குவளை, 
 5. திருவாய்மூர், 
 6. வேதாரண்யம் ஆகியனவாகும். 

இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.

சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.

 1. திருவாரூர் - வீதி விடங்கர்
 2. திருநள்ளாறு - நாகவிடங்கர்
 3. நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
 4. திருக்காராயில் - ஆதிவிடங்கர்
 5. திருக்கோளிலி - அவனிவிடங்கர்
 6. திருவாய்மூர் - நீலவிடங்கர்
 7. வேதாரண்யம் - புவனிவிடங்கர்
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.

 1. திருவாரூர் தியாகராசப்பெருமான் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
 2. திருநள்ளாறு - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
 3. நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
 4. திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
 5. திருக்குவளை - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
 6. திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
 7. வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

7. சப்த கரை சிவ தலங்கள்:-

சேய் ஆற்றின் (செய்யாறு) வட கரையில் அமைந்த சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவத் தலங்கள் ஆகும். அவை:

 1. காஞ்சி
 2. கடலாடி
 3. மாம்பாக்கம்
 4. எலத்தூர்
 5. மாதிமங்கலம்
 6. பூண்டி
 7. குருவிமலை

8. சப்த கைலாய தலங்கள்:-

அன்னை உமையவள் இறைவன் ஈசனோடு கலந்து அவருடைய இடப்பாகம் பெறுவதற்காக அருணாச்சலேஸ்வரம் நோக்கிச் செல்லும் பயணத்தில் ஏழு இடங்களில் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாா். அவை முறையே சப்த கைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த எழு தலங்களும் சேயாற்றின் தென் கரையில் அமைந்துள்ளன. அவை

 1. மண்டகொளத்தூர்
 2. கரைப்பூண்டி
 3. தென்பள்ளிப்பட்டு
 4. பழங்கோயில்
 5. நார்த்தாம்பூண்டி
 6. தாமரைப்பாக்கம்
 7. வாசுதேவம்பட்டு

9. அட்டவீரட்டானக் கோயில்கள்:-

அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

 1. திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
 2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
 3. திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
 4. திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்
 5. திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்
 6. திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
 7. திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
 8. திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

10. நவலிங்கபுரம்:-

நவலிங்கபுரம் என்பது ஒன்பது லிங்கங்களைப் பிரதானமாகக் கொண்ட சிவலிங்கக் கோயில்களின் தொகுப்பாகும். இக்கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ளது. நவலிங்கபுர கோயில்களில் வல்லநாடு திருமூலநாதர் கோயில் என்பது தலைக்கோயிலாக அறியப்படுகிறது.

 1. வல்லநாடு திருமூலநாதர் கோயில்
 2. காந்தீசுவரம் ஏகாந்தலீஸ்வரர் கோயில்
 3. புறையூர் அயனாதீசுவரர் கோயில்
 4. தெற்கு காரசேரி குலசேகரமுடையார் கோயில்
 5. காயல்பட்டினம் மெய்கண்டேசுவரர் கோயில்
 6. கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயில்
 7. புதுக்குடி வடநக்கநாதர் கோயில்
 8. வெள்ளூர் நடுநக்கநாதர் கோயில்
 9. மனவளராய நத்தம் தென்நக்கநாதர் கோயில்

11. தமிழகத்தின் நவ கைலாயங்கள்:-

தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இந்தத் தலங்களை தரிசனம் செய்ய மார்கழி மாதங்களில் தமிழக அரசே சிறப்பு பேருந்தினை ஏற்பாடு செய்கிறது. காலையில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி நவகைலாயங்களை தரிசனம் செய்துவிட்டு இரவுக்குள் திருநெல்வேலிக்கு திரும்பிட ஏற்பாடு செய்யப்படுகிறது

 1. பாபநாசம், 
 2. சேரன்மகாதேவி, 
 3. கோடகநல்லூர், 
 4. குன்னத்தூர், 
 5. முறப்பநாடு, 
 6. திருவைகுண்டம், 
 7. தென்திருப்பேரை, 
 8. ராஜபதி, 
 9. சேர்ந்த பூமங்கலம் 

ஆகிய ஊர்களை நவகைலாயங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேல்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று தலங்களை நடுகைலாயங்கள் என்றும், இறுதி மூன்றினை கீழ்க்கைலாயங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.

12. நவ சமுத்திர தலங்கள்:-

 1. அம்பாசமுத்திரம்,
 2. ரவணசமுத்திரம்,
 3. வீராசமுத்திரம்,
 4. அரங்கசமுத்திரம்,
 5. தளபதிசமுத்திரம்,
 6. வாலசமுத்திரம்,
 7. கோபாலசமுத்திரம்,
 8. வடமலைசமுத்திரம் (பத்மனேரி),
 9. ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்).

13. சிறப்புக் காட்டுத் தலங்கள்:-

சிறப்புக் காட்டுத் தலங்கள் என்பவை புராண காலத்தில் புகழ்பெற்று விளங்கிய காடுகள் நிரம்பிய சிவத்தலங்களாகும். இத்தலங்கள் பெரும் காடுகளாக இருந்த பொழுது சிவத்தலங்கள் அதில் எழுப்பபெற்றன. இவை வன விசேஷ தலங்கள் என்றும் அறியப்படுகின்றன

 1. கடம்பவனம் மதுரை
 2. குண்டலிவனம் திருவக்கரை
 3. குதவனம் திருவுச்சாத்தனம்
 4. செண்பகவனம் திருநாகேச்வரம்
 5. மகிழவனம் திருநீடூர்
 6. மறைவனம் வேதாரண்யம் (திருமறைக்காடு)
 7. மாதவிவனம் திருமுருகன்பூண்டி
 8. மிதுவனம் நன்னிலம்
 9. வில்வவனம் திருவாடானை
 10. வேணுவனம் திருநெல்வேலி

14. முக்தி தரவல்ல சிவத்தலங்கள்:-

முக்தி தரவல்ல சிவத்தலங்கள் என்பவை உயிர்களின் ஆத்மாவிற்கு வீடுபேறு கிடைக்க செய்யும் சிவத்தலங்களாகும். இந்து சமயத்தில் முக்தி தரவல்லவர்களாக மும்மூர்த்திகள் உள்ளார்கள். இவர்களில் திருமாலும், பிரம்மாவும் ஆன்மாக்களின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப முக்தி தருபவர்களாகவும், சிவபெருமான் அனைவருக்கும் முக்தி தருபவராகவும் இருக்கிறார். ஏழு பிரளயங்களில் மகா பிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடி அண்ட சராசரங்களையும் தனக்குள் ஒடுக்குகிறார். அப்பொழுது அனைத்து உயிர்களுக்கும் கட்டாய முக்தியை சிவபெருமான் அளிக்கிறார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

 1. திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
 2. சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
 3. திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
 4. காசி-இறக்க முக்தி தருவது

15. ஜோதிர்லிங்கத் தலங்கள்:-

 1. சோம்நாத், பிரபாச பட்டணம், கிர் சோம்நாத் மாவட்டம், குஜராத்.
 2. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்.
 3. மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
 4. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம்.
 5. கேதார்நாத் கோயில், உத்தராகண்டம்
 6. பீமாசங்கர் கோயில், சகாயத்திரி, மகாராஷ்டிரா.
 7. காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
 8. திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா.
 9. வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட்.
 10. நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.
 11. இராமேஸ்வரம், தமிழ்நாடு
 12. கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டி

சிவபெருமானின் பெயர், திருத்தல வகை, நகரம், மாநிலம்

 • கேதாரீஸ்வரர் மலைக்கோவில் கேதர்நாத் உத்ராஞ்சல்
 • விஸ்வேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கங்கை நதிக்கரை) வாரணாசி உத்ரபிரதேசம்
 • சோமநாதேஸ்வரர் கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை) சோமநாதம் குஜராத்
 • மகா காளேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை) உஜ்ஜயினி மத்திய பிரதேசம்
 • ஓங்காரேஸ்வரர் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோவில் இந்தூர் மத்திய பிரதேசம்
 • திரியம்பகேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கோதாவரி நதிக்கரை) நாசிக் மகாராஷ்டிரம்
 • குஸ்ருணேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் ஓளரங்கபாத் மகாராஷ்டிரம்
 • நாகநாதேஸ்வரர் தாருகாவனம் காட்டுத்தலம் ஓளண்டா மகாராஷ்டிரம்
 • வைத்தியநாதேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் பரளி மகாராஷ்டிரம்
 • பீமசங்கரர் மலைக்கோவில் பூனா மகாராஷ்டிரம்
 • மல்லிகார்ஜுனர் மலைக்கோவில் ஸ்ரீ சைலம் ஆந்திர பிரதேசம்
 • இராமேஸ்வரர் கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா) இராமேஸ்வரம் தமிழ்நாடு

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 4 February 2021

சித்தன் அருள் - 982 - ஆலயங்களும் விநோதமும் - வாஞ்சிநாதசுவாமி கோயில், திருவாஞ்சியம்!


இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 25கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம்.

இயமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி இயமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார். மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். இத்தலத்தில் இயமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு.

 • "காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம்.
 • இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
 • இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் தொன்நம்பிக்கைகளாகும்.
 • திருமகள், இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம்.
 • இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.
 • இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.
 • யமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
 • காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று.
 • கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்!