​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 28 July 2017

சித்தன் அருள் - 715 - திரு.ஹனுமந்ததாசன் அய்யா அவர்களின் புகைப்படம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

முதன் முறையாக, பல அகத்தியர் அடியவர்கள், மறைந்த திரு.ஹனுமந்த தாசன் அய்யா அவர்களின் திருமுகத்தை காண விழைந்து, அவரது புகைப்படத்தை கேட்ட பொழுது, அகத்தியரின் பாசம் மிகுந்த மைந்தனாய் இருந்த ஒருவரை எல்லோருமே பார்க்கட்டும் என்று, அடியேனின் கைவசம் இருந்த இந்த புகைப்படத்தை "சித்தன் அருள்" வலைப்பூவில் தருகிறேன். அனைவரும் ஏற்றுக்கொண்டு இன்புறுக.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

Thursday, 27 July 2017

சித்தன் அருள் - 714 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 4 !


என்ன நடந்தாலும் உடனேயே, ஏன் எதற்கு என்கிற கேள்விகளை கேட்டு, அதற்கு அடியேனின் மனம் தெளிவு பெறுகிற பதில் கிடைக்கும் வரை, விடாமல் இறைவனிடம், சித்தர்களிடம் கேட்டு வந்த மனநிலை, அகத்தியர் நடத்திய வகுப்பில் படித்தபின் எங்கேயோ தொலைந்து போனது.

"நீ தெரிந்துகொள்ள வேண்டாம், அது தெய்வீக ரகசியம். முன் கர்மா வினை" என்றெல்லாம் பலமுறை பதில் வந்த பொழுது, நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றிற்கும் பதில் எதிர் பார்க்கக்கூடாது. ஏதோ போனால் போகிறது என்று இத்தனையாவது இந்த ஜென்மத்தில் அருளுகிறார்களே என்று அமைதியாகிவிட்டேன் என்பதே உண்மை. அது முதல், "இத்தனை பாக்கியத்தை கொடுத்தாய் இறைவா, அகத்திய பெருமானே" என மனதுள் நினைத்து, நன்றியை மௌனமாக சொல்லிவிட்டு விலகிவிடுவேன். இந்த வாழ்க்கையில் நல்லது செய்ய அடியேனிடம் வந்த வாய்ப்புகள் தான் மிகப் பெரிய சொத்து, என்பதே என் அடிப்படை எண்ணமாக மாறியது. இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். இல்லையேல் என் கர்மா அதற்கு இடம் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிடுவேன்.

"தன் அபிமான சிஷ்யனை அனுப்பி வைத்தார் தகவலுடன்" என்று முன் பதிவில் சொல்லியிருந்தாலும், சிஷ்யர் நேரடியாக வரவில்லை. தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அவரை பற்றி சொல்வதென்றால், சித்தர்களின் அபிமான அடியவர். அதிகம் பேசவோ, உரைக்கவோ மாட்டார். அனைத்து மொழியும் பேசத்தெரிந்தவர். ஆனால் அதிகம் பேச விருப்பப்படமாட்டார். பொதுவாக பேசும் பொழுது எல்லா மொழியும் கலந்து பேசுவார். செந்தமிழ் என்பது அவர் வரையில் இல்லை என்பதே உண்மை. அவரை சந்திப்பது என்பதே மிக்க குறைவு. பேசுவது அதை விடக் குறைவு.

தொலைபேசி எண்னை தந்துவிட்டு "நீ கூப்பிடாதே! தேவை இருந்தால் நானே கூப்பிடுவேன்" என்று சென்றவர். அடியேன் அவரை அழைத்ததே கிடையாது. திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டு, கடலென விஷயங்களை கொட்டுவார். அனைத்தும் அகத்தியர், சித்தர்களை பற்றியது. பிறகு "நான் ஒரு மாதத்திற்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன். இது அவர்கள் உத்தரவு, பிறகு அழைக்கிறேன்" என்று கூறி வைத்துவிடுவார்.

இப்படிப்பட்டவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இவ்வளவுக்கும், இவரிடம் என் தந்தை இறைவன் திருவடியை அடைந்தார் என்று கூட கூப்பிட்டு சொல்லவில்லை. இவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது என்று பிறர் அறியாத விஷயம். ஆதலால், வேறு யாரும் சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை.

"திருச்சிற்றம்பலம்" என்கிற முகவுரையுடன் எப்போதும் போல பவ்யமாக பேசினேன்.

"திருச்சிற்றம்பலம்" என்று மறு முனையிலிருந்து மெலிதாக சன்னமாக குரல் வந்தது.

"என்ன குரல் மிக சன்னமாக உள்ளதே. நலம் தானே?" என்று விசாரித்தேன்.

"நலமாக இருக்கிறேன். இப்பொழுது தெளிவாக கேட்கிறதா?" என்று செந்தமிழுக்கு தாவினார்.

பேச்சில் வந்த மாற்றத்தை உடனடியாக கவனித்தேன்.

ஏன் எதற்கு என்று தெரியாததால், "சொல்லுங்கள் என்ன விஷயம்?" என்றேன்.

"என்ன? தகப்பனார் இறைவன் திருவடியை அடைந்துவிட்டார் போல!" என்றார்.

"ஆம்!" எனக் கூறி நடந்த விஷயங்களை விவரித்து, அவருக்கு தெரிவிக்காததற்கு மன்னிப்புக் கேட்டேன்.

"தகப்பனாரின் மரணம் மட்டும் தான் தெரிவிக்கப்படவில்லையோ?" என்று கொக்கி போட்டார்.

"இப்போதைக்கு இறைவன் தீர்மானத்தால் நடந்த நிகழ்ச்சி அது ஒன்று தானே. வேறு எதுவும் சொல்கிறமாதிரி நடக்கவில்லை" என்றேன்.

"ஓ! அப்படியா? வேறு எதற்கும் வேண்டுதல் சமர்ப்பிக்கவில்லையோ?" என்றார்.

"வேண்டுதல்" என்கிற வார்த்தையை கேட்டதும், என் மனம் விழித்துக் கொண்டது. அது எப்படி இவருக்கு தெரியும்? என்று மனதுள் எண்ணம் ஓடியது.

பேசுவது நண்பரா, அகத்தியரா என்கிற எண்ணம் ஓடியது என்னுள். ஏன் என்றால், அவர் பேச்சில் தமிழ் அப்படி சுத்தமாக விளையாடியது. இவர் இப்படி பேசுபவரும் அல்ல. நல்ல அதிகார தோரணை.

"சரி! பொறுமையாக இருந்து கூறுவதை கேட்போம்" என தீர்மானித்து, "சொல்லுங்கள்" என்றேன்.

"உன் தகப்பன் இறைவன் திருவடியை அடைந்தது இறைவனின் சித்தம். வந்தவர்கள் அனைவரும் திரும்பி சென்றுதான் ஆகவேண்டும் என பல முறை உரைத்திருக்கிறோம். யாருக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என சித்தர்கள் தான் இறைவனிடம் சிபாரிசு செய்வார்கள். அதன் படி இறைவன் உத்தரவால் சில விஷயங்களை செய்ய உத்தரவாகும். உனக்குள் "மோக்ஷ தீபம்" போடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது ஒரு எண்ணம் மட்டுமே. யாருக்கு போடவேண்டும் என்று சித்தர்கள் உரைத்தால் அன்றி முறைப்படி போடுதல் கூடாது. மனிதருக்கு தோன்றினால், அது ஒரு வெறும் எண்ணம் மட்டுமே. திதி கூட நீங்கள் கொடுப்பது சித்தர் மரபு படி இல்லை. போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம். போன ஆத்மாவை விட்டு விடவேண்டும். மனிதன் தன் செயலினால், அந்த ஆத்மாவை திரும்பி பார்க்க வைக்க கூடாது. மறு பிறவியோ, ஜென்மமோ எதுவாகினும், அந்த ஆத்மாவின் கர்மா வினையை பார்த்து, இறைவன் தீர்மானத்தால் நடப்பது. உன் தகப்பனாக இருந்த ஆத்மாவுக்கு அது தேவை இல்லை. புரியும் என்று நினைக்கிறேன். எண்ணங்கள் செயல் ஆக மாறவேண்டியது இறைவன் சேவைக்கு" என்றார்.

அடியேன், அப்படியே ஆடிப் போய்விட்டேன். நேரடியாக வந்து ரெண்டு சார்த்தியிருந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது. அவ்வளவு தூரத்துக்கு உள்ளே பதியும் படி, மனதுள் போட்டு வைத்திருந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டார்.

என்னுள் எழுந்தது ஒரு எண்ணம் மட்டுமானால், அதை உடனேயே விட்டுவிடவேண்டும். அவர் சொல்வதில் ஒரு காரணம் இருக்கும். சோதனையே வேண்டாம். சரி மாற்றி அனுமதி கேட்போம், என தீர்மானித்து,

"சரி! மோக்ஷ தீப எண்ணத்தை கைவிட்டு விடுகிறேன். ஆனால் சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு சேவை செய்கிற விதமாக, லோக ஷேமத்துக்கு வேண்டிக்கொண்டு, கோடகநல்லூர் சென்று சுற்று விளக்கு போடலாமா? அதற்கு அனுமதி/உத்தரவு உண்டா?" என்று கேட்டேன்.

"அதை செய்! அதை இறைவன் ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை அருளுவார். அதை பெற்றுக்கொள்" என்று கூறியதும் தொலைபேசி தொடர்பு தானாக துண்டிக்கப்பட்டது.

அடியேன் எத்தனை முறை முயற்சி செய்தும், ஒரு முறை தொடர்பு போனதே ஒழிய அவருடன் பேச முடியவில்லை.

"சரி! வேண்டிய தகவல் வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்" என நினைத்து விட்டுவிட்டேன்.

அவர் பேசிய தமிழ், அதன் நெடி என்னுள் உருத்திக் கொண்டே இருந்தது. இது அவர் இல்லையே. ஆனால் அவர் தான். இத்தனை தெளிவாக தமிழில் பேசுகிறாரே. இப்படி இதற்கு முன் இருந்ததில்லையே என்று ஒரு எண்ணம் என்னுள் ஓடிக் கொண்டே இருந்தது.

ஒரு முப்பது நிமிடம் கழிந்திருக்கும்.

அவர் தொடர்பு கொண்டார், மறுபடியும்.

இம்முறை அவரே முதலில் "திருச்சிற்றம்பலம்" என்றார்.

பதிலுக்கு கூறிவிட்டு, "என்ன விஷயம் என்றேன்!"

"இப்பொழுதுதான் என் செல்லை பார்த்தேன். அதில் உங்கள் மிஸ் கால் இருந்தது! என்ன விஷயம். ஏதேனும் அவசர தேவையா?" என்றார் எப்போதும் போல.

"என்ன மனுஷர் இவர்? இப்போது தான் பேசினார்! அதற்குள் மறந்து விட்டாரா?" என்று யோசித்தபடி,

"நீங்கள் தான் சற்று முன் என்னை அழைத்து சில விஷயங்களை கூறினீர்கள். நாமிருவரும் 20 நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம்." என்றேன்.

"நானா? உங்களுடனா? எப்போது பேசினேன். என்ன பேசினேன்?" என்றார்.

பேசிய அனைத்தையும் கூறிய பொழுது "என்ன சொல்றீங்க. நான் வெளியே போய் விட்டு இப்பொழுதுதான் வீடு திரும்பினேன். என் செல் என்னிடம் தான் உள்ளது. மேலும் நீங்கள் சொல்கிற "மோக்ஷ தீபம்" இறைவன் சித்தம் போன்றவை எனக்கு தெரியாத விஷயம். நான் எப்படி அதை பற்றி கூறியிருக்க முடியும்? இன்று வரை பிதுருக்கள் விஷயத்தை பற்றி நாம் இருவரும் ஏதேனும் பேசியிருக்கிறோமா? இல்லையே! இது வேரென்னவோ நடந்திருக்கிறது" என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே " உங்கள் செல்லை பாருங்கள். அதில் ஒரு மணி நேரத்துக்கு முன் நீங்கள் என்னை அழைத்ததின் தெளிவு இருக்கும்" என்றேன்.

தொடர்பில் இருந்து கொண்டே "செல்லை" பரிசோதித்தவர், "அப்படி எதுவும் என் செல்லில் இல்லையே" என்றார்.

"நாம் பேசியதை நான் பதிவு செய்யவில்லை. இருப்பின் உங்களுக்கு இந்த நொடியே அனுப்பி வைத்திருப்பேன். என் வேண்டுதலுக்கு இறங்கி அகத்தியப் பெருமானே உங்களுள் இறங்கி, எனக்கு பதிலத்துள்ளார் என்று நினைக்கிறேன். போதும். இதை பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். எனக்கான தகவல் வந்துவிட்டது. மிக்க நன்றி. ஆனால் அவர் சொன்ன படி இந்த வாரம் கோடகநல்லூர் சென்று பெருமாளுக்கு விளக்கு போடப் போகிறேன். கிடைப்பது எதுவாகினும் அது லோக ஷேமத்துக்காக மட்டும் என்று உறுதி கூறுகிறேன். போதுமா!" என்றேன்.

"என்னவோ போங்க! என்னென்னவோ நடக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ரொம்ப யோசித்தால், பைத்தியம் தான் பிடிக்கும். நடந்த வரையில் நல்லதாக நடந்திருக்கிறது. அது போதும். சரி விடை பெறுகிறேன்" என்று கூறி சென்றவர், இன்று வரை அதன் பின் கூப்பிடவில்லை என்பதே உண்மை.

விடைபெறும் முன் ஒரு கேள்வியை கேட்டேன்.

"இது போல வேறு எங்கேனும், யாரிடமாவது மாட்டிக் கொண்டீர்களா?" என்றேன்.

"ஆமாம்" என்று மட்டும் கூறினார்.

அவர் சொன்னது போல், இங்கே என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தால், பைத்தியம் தான் பிடிக்கும். கேட்ட கேள்விக்கு, வேண்டுதலுக்கு சரியான வழியை காட்டினார்கள், பெரியவர்கள் என்று மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அந்த வார கடைசியில், பெரியவர்கள் அனுமதி அளித்ததின் பேரில், கோடகநல்லூர் கிளம்பி சென்று, பெருமாள் அனுமதியுடன் சுற்று பிரகாரத்தில், விளக்கு போட்டேன், மாலை 6 மணிக்கு. சுமார் ஒரு 20 கல் விளக்கு இருக்கிறது. அனைத்தையும் முடிந்த வரை சுத்தம் செய்து, விளக்கு போட ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆனது.

பெருமாள் முன்பு போய் நின்ற பொழுது எதுவும் கேட்க தோன்றவில்லை.

"இந்த தீப சுடரை, வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு, பூமியை எட்டு திக்கிலிருந்தும் காப்பாற்றுங்கள். அனைத்து ஆத்மாவும் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று மனதுள் ஒரு பிரார்த்தனை வந்தது.

அதையே அவரிடம் சமர்ப்பித்தேன்.

"இன்னும் இது போல் உங்களுக்கு விளக்கு போட நிறைய வாய்ப்பை அளியுங்கள்" எனவும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.

இன்றும் வாய்ப்பை அள்ளி வழங்குகிறார்.

சரி! பெருமாள் என்ன பரிசு தந்தார்?

அன்றைய தினம், கோவில் நடை சேர்த்தும் முன் எதேச்சையாக விளக்கு எரிகிறதா என்று எட்டி பார்க்க, கிடைத்த காட்சியை கீழே உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். படத்தை பெரிதாக்கி பார்த்தால் என்ன தெரிகிறது என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.


படத்தின் இடது பக்க விளக்கின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தான் முதலில் பெருமாள் அமர்ந்திருந்தாராம். அங்கிருந்து தான் சித்தர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க இப்போதைய சன்னதிக்கு வந்து அமர்ந்தாராம்.

இதை வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் யாருக்கேனும், ஒரு வாய்ப்பு கிடைத்தால், சுற்று விளக்கு போடுங்கள். நம் வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்படும்.

இந்த அனுபவத்திலிருந்து அடியேன் புரிந்து கொண்டது ஒன்று தான். சித்தர்கள் வழியில் செல்பவர்களை மட்டுமல்ல, அவர்கள் எண்ண ஓட்டங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், திருத்தி வழி நடக்க விடுகிறார்கள்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு அனைத்தும் சமர்ப்பணம்! 

Thursday, 20 July 2017

சித்தன் அருள் - 713 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 3 !​​[அகத்திய பெருமான் அருளிய இந்த அனுபவம் கீழே தந்துள்ள வெளியீடுகளின் தொடர்ச்சி]

https://siththanarul.blogspot.com/2017/04/643.html

https://siththanarul.blogspot.com/2017/04/646-2.html

சித்தரை, இறைவனை வேண்டிக்கொண்டு, அவர்கள் காட்டுகிற பாதையில் பயணிக்கையில், நிறையவே ஆச்சரியங்களை சந்திக்க வேண்டிவரும். நடக்கிற விஷயங்கள் கூட நாம் நினைத்தபடி இல்லாவிடினும், எங்கோ ஒரு கர்ம வினையில் கொக்கி போட்டது போல் இருக்கும்.

அடியேனின் இருப்பிடம் விட்டு எங்கு, எதற்கு செல்லினும், சித்தர்களை வேண்டிக் கொண்டு, இறைவனை த்யானித்துவிட்டு, "உங்கள் அருகாமையும் அருளும் வழி நடத்தட்டும், காப்பாற்றட்டும்" என்று செல்வது ஒரு பழக்கம்.

கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமாளும் பரிவாரங்களும், சித்தரும் அருள் புரிந்ததற்கு (மஞ்சள் பொடி பிரசாதம், விபூதி), நன்றி சொல்லும் விதமாக அந்த வார கடைசியில், இரு தினங்கள் விடுமுறை வந்த பொழுது கோடகநல்லூர் சென்று பெருமாளை வணங்கி வரலாம் என்று ஒரு எண்ணம் வந்தது.

எப்போதும் போல் மாலை குளித்துவிட்டு பூசை அறையில் அமர்ந்து த்யானத்தில் என் விண்ணப்பத்தை தெரிவித்தேன்.

சொன்னால் நம்புவது கடினம். மிக வேகமாக பதில் வந்தது.

"எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே அமர்ந்திரு!".

நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனேன். 

"இதென்ன இப்படி ஒரு கட்டளை. ஒரு பொழுதும் இப்படி கூறியது கிடையாதே. சரி அவர்கள் சொன்னது போலவே செய்வோம். எங்கும் செல்ல வேண்டாம்"  என தீர்மானித்தேன்.

மறுநாள் ஒரு நண்பர் வந்து "இந்த வார கடைசியில் இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது. பொதிகை சென்று அகத்தியரை தரிசித்து பூசை செய்து விட்டு வரலாம் என்று இருக்கிறேன். நீங்கள் வருகிறீர்களா?" என்றார்.

"மன்னிக்கவும். எனக்கு உத்தரவு வேறு ஒன்று. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க சொல்லியிருக்கிறார்கள். பூசைக்கான ஒரு சில சாமான்களை அடியேனும் வாங்கித்தருகிறேன். நீங்கள் சென்று வாருங்கள். வந்து எனக்கு பிரசாதம் கொடுங்கள். அது போதும். அவர்கள் உத்தரவை அடியேன் மீற முடியாது. பின்னர் ஒரு முறை பார்க்கலாம்" என்று பதில் கூறி அனுப்பிவைத்தேன்.

நண்பர்கள் இருவரும் எனக்கு மட்டுமல்ல, என் தகப்பனாருக்கு நல்ல நண்பர்கள்.

இத்தனை வருடங்களாக இறைவனிடம், சித்தர்களிடம் அடியேன் வேண்டி கேட்டு கொண்டது ஒன்று தான்.

"என் தாய், தந்தையின் கடைசி மூச்சு இருக்கும் வரை, அவர்களுடன் அடியேன் இருக்க வேண்டும். அவர்களுக்கான கடமைகளை, உங்கள் அருளுடன் செய்து முடிக்க வேண்டும். பெற்றோருக்கு எந்த கடனும், இந்த வாழ்க்கையில் மிச்சம் வைக்கக்கூடாது." என்பதே.

வியாழக்கிழமை காலை என் நண்பர்கள் கிளம்பி சென்றனர், பொதிகைக்கு.

வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணிக்கு அடியேனின் தகப்பனார் இறைவன் திருவடியை அடைந்தார்.

நான் பொதிகை சென்றிருந்தால், குடும்பமே மிக சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும். இரண்டு நாட்கள் கழித்துதான் உடல் சம்பந்தமான கடைசி கர்மாக்களை செய்திருக்க முடியும். ஏன் என்றால், பொதிகையில் இருக்கும் பொழுது, எந்த விதத்திலும், யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது.

பொறுமையாக, அமைதியாக என் தகப்பனாருக்கான ஈம கர்மாக்களை செய்து முடிக்க, ஞாயிறன்று நண்பர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு, என் தகப்பனாரின் முகம் பார்க்கவோ, கடைசி கர்மங்களில் பங்கு கொள்ளவோ முடியவில்லை.

இருவரும் வந்து அடியேனை பார்த்த பொழுது ஒன்று கூறினேன்.

"வந்த உத்தரவின் அர்த்தம் இதுதான். எனக்கு விதி இருக்கிறது. புரிந்து கொண்டேன். உங்களுக்கு இல்லை. அதனால் உங்கள் அருமை நண்பரின் (என் தகப்பனாரின்) முகத்தை பார்க்க கொடுத்துவைக்கவில்லை. சரி! அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கிப்போனார். நாம் நம் பயணத்தை தொடரத்தான் வேண்டும். சென்று வாருங்கள்" என்றேன்.

இருவரும் விடை பெற்றனர்.

தகப்பனாரின் தசத்தின கர்மாவின் இடையில் ஒருநாள், அமைதியாக அமர்ந்திருந்த பொழுது ஒரு எண்ணம் அடியேனுள் உதித்தது.

"அகத்தியர் நாடியில் வந்து சொல்லியபடி, முறையாக "மோக்க்ஷ தீபம்" என் தகப்பனாருக்கு போட்டால் என்ன? அந்த ஆத்மாவும், இறைவன் அருளால், கரையேறட்டுமே".

"சரி! அதற்கான வேலைகளில் இறங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடலாம்" என்று தீர்மானித்தேன்.

தகப்பனாரின் 10வது நாள் சடங்கிற்கு வந்த ஒருவரிடம் "கோடகநல்லூர் பெருமாள் கோவிலில், என் தகப்பனாருக்கு "மோக்ஷ  தீபம்" போட விரும்புகிறேன். அனுமதி வேண்டும். அதை வாங்கி கொடுங்கள்" என்றேன்.

"இந்த மோக்ஷ தீபம் என்றால் என்ன?" என்றார்.

"அது ஒரு பூசை முறை. கோவிலின் ஈசான மூலையில் ஒரு சனிக்கிழமை அன்று 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். மறு நாள் காலை பூசை செய்த அனைத்து பொருட்களையும் ஒன்று விடாமல் எடுத்து, நதியில் சேர்த்து விடவேண்டும். இவ்வளவுதான். பூசை சம்பந்தமான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அனுமதியை பெற்றுத்தாருங்கள்" என்றேன்.

"சரி! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சென்றார்.

வேறு யாரிடமும் இதை பற்றி மூச்சு விடவில்லை.

ஒரே ஒரு நண்பரிடம் "கூடிய விரைவில் நாம் ஒரு இடம் வரை போய் வரவேண்டிவரும். தயாராக இரு" என்று மட்டும் சூசகமாக கூறி வைத்தேன்.

தகப்பனாரின் 13 நாட்கள் சடங்கு முடியும் வரை காத்திருந்தேன்.

அதன் பின் தான் கோவிலுக்கு செல்கிற உரிமை உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்வதால், யார் மனதையும் நோகடித்து நாம் நம் வழியில் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்தேன்.

13வது நாள் மாலை குளித்து மறுபடியும் ஜெபம் த்யானம் என்று தொடங்கிய பொழுது, 

அகத்தியப் பெருமானிடம் "அடியேன் தகப்பனாருக்கு நீங்கள் கூறியபடி முறையாக மோக்ஷ தீபம் போடவேண்டும் என்று எண்ணம். அதற்கு தங்கள் அனுமதி வேண்டும். அருளுக" என ஒரு விண்ணப்பத்தை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றேன்.

ஒரு நிகழ்ச்சிக்கு வேண்டிய எல்லா திட்டங்களையும், ஏற்பாடுகளையும் பலரை வைத்து நாம் செய்தாலும், அதது எப்படி நடக்க வேண்டும் என்று ஒருவர் தான் தீர்மானிப்பார். அது இறைவன் சித்தம்.

என் திட்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. என் மனதுள் ஒளித்து வைத்திருந்தேன். அனுமதி வரட்டும் பிறகு முழு வீச்சில் பயணிக்கலாம் என்று அமைதியாக இருந்தேன்.

இரண்டு நாட்களாகியும் ஒரு உத்தரவும் வராததால், "என்ன? பெரியவர்களுக்கு "மோக்க்ஷ தீபம்" போடுவதில் விருப்பமில்லையோ? பதில் வரவே இல்லையே?" என்று ஒரு உறுத்தல் தொடங்கி வளரத் தொடங்கியது.

அடியேன் தீர்மானித்து வைத்திருந்த சனிக்கிழமைக்கு இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது. அதற்குள் அத்தனை பொருட்களையும் வாங்க வேண்டுமே? என்கிற விசனம் வந்தது.

"பெரியவர்களே! என்ன அய்யா பண்ணறீங்க? உத்தரவோ, பதிலோ சொல்லக்கூடாதா?" என்று மனதுள் சத்தமாக வேண்டிக் கொண்டேன். சுருக்கமாக சொல்வதென்றால் நாள் நெருங்க நெருங்க ஏற்பாடுகளுக்கான நேரக்குறைவை உணர்ந்த மனது சற்று அழுத்தத்துக்கு உள்ளானது.

அடியேனின் வேண்டுதல் அவர்களுக்கு கேட்டுவிட்டது போலும்.

"பதிலே கொடுக்காமல் இருந்தால், இவன், இவன் இஷ்டப்படி செய்துவிடுவான். உண்மையை உணர்த்துவோம்" என்று தீர்மானித்தார்கள்.

பதிலை, அனுமதியை எதிர்பார்த்திருந்த எனக்கு, அகத்திய பெருமான், மனித உருவில் இருக்கும் தன் அபிமான சிஷ்யனை விளக்கமான பதிலுடன் அனுப்பிவைத்தார்.

சித்தன் அருள் ................... தொடரும்!

Tuesday, 4 July 2017

சித்தன் அருள் - 712 - அருள்வாக்கு நிறைவு பெற்றது!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில் இன்று வரை தொடர்ந்து வந்த "இன்றைய அருள்வாக்கு" நிறைவு பெற்றது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அவர் கூறிய வழியில் சென்று, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன். பிரார்த்தனைக்கு மிஞ்சியது எதுவும் இவ்வுலகில் இல்லை என்பார்கள். அடியேனின் பிரார்த்தனை, இந்த வலைப்பூவை வாசித்த அனைத்து அடியவர்களுடனும் கூட இருந்து நல்லதை செய்யும் என அகத்தியர் சார்பாக கூறிக்கொண்டு, உங்கள் அனைவரின் நல்ல எண்ணங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு மனம் நெகிழச் செய்தமைக்கு மிக்க நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க அனைவரும் லோபாமுத்திரா சமேத அகத்தியர் அருளுடன்.

அக்னிலிங்கம் 

Sunday, 2 July 2017

சித்தன் அருள் - 711 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மாயை இத்தன்மையது, இப்படித்தான் என்று ஒரு எல்லை வகுத்துக் கூற இயலாது.  ஏன்? சில சமயம் ஒருவனுக்கு மாயையாக இருப்பது இன்னொருவனுக்கு மாயையாகத் தோன்றாது. அந்த தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமும் எந்த அளவிற்கு ஒரு மனிதனுக்கு உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, செல்கிறதோ அந்த உயர்விலே ஒரு மனிதனின் உயர்ந்த சிந்தனையிலே மாயை எனும் விழுதுகள் அறுபட்டு, அறுபட்டு சென்று கொண்டேயிருக்கும். இருந்தாலும் எந்த உயரத்தில் சென்றாலும் அங்கும் சில விழுதுகள் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவேதான் மனிதன் மிகக்கடுமையாகப் போராடி நல்ல உடல் திறத்தோடு, நல்ல உள்ள திறத்தோடு, இறை பக்தியோடு, சாத்வீக எண்ணங்களோடு, சாத்வீக செயல்களோடு, சத்தியத்தோடு தொடர்ந்து போராடுவதோடு, மெய்யான மெய்ஞானம் நோக்கி தடுமாற்றம் இல்லாமல் செல்ல வேண்டும்

Saturday, 1 July 2017

சித்தன் அருள் - 710 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

"புற விஷயங்கள் என்னை பாதிக்கின்றன. நான் விரும்புகின்ற மெய்ஞானத்தை நோக்கி செல்ல விடாமல் தடுக்கின்றன" என்று மனிதர்கள் எண்ணுவது ஒரு வகையில் நியாயம்தான் என்றாலும் இந்த நிலையையும் ஒரு மனிதன்  தாண்டி செல்ல வேண்டும். புற விஷயங்களோ, வேறு விஷயங்களோ ஒரு மனிதனின் மெய்யான மெய்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது அல்லது அந்த நோக்கத்தை தடை செய்கிறது என்றாலே அந்த மனிதன் இன்னும் நன்றாக, உறுதியாக, உறுதியாக, உறுதியாக மெய்ஞானத்தை பற்றவில்லை. அதை நோக்கி செல்லவில்லை என்பதே மெய்யாகும். எனவே ஒரு உறுதியான உறுதிப்பாடு ஒரு மனிதனின் ஆத்ம நிலை குறித்தும் உடல் சார்ந்து இருக்கின்ற வாழ்க்கை எதற்கு? இந்த ஏணி எதற்கு? இந்தத் தோணி எதற்கு?  இந்த வாகனம் எதற்கு?  வாகனத்திலேயே வாழப்போகிறோமா? அல்லது நதியை கடக்க மட்டுமே இந்தத் தோணியா? என்பதைப் புரிந்து கொண்டு நதியைக் கடக்கும் வரை தோணியின் முக்கியத்துவம். ஊரை சென்றடையும் வரை வாகனத்தின் முக்கியத்துவம். அஃதொப்ப லிகிதம் பத்திரமாக சென்று யாரிடம் சேரவேண்டுமோ, சேரும் வரை உறையின் முக்கியத்துவம், இந்த அளவிலே உடல் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம். எனவே அதற்காக உடலைப் பேணுதல் அவசியம் என்றாலும் உடல்  உணர்ந்து கொடுக்கும் உணர்வுகளுக்குள் உள்ளம் விழுந்துவிடக்கூடாது.  அங்கே ஆத்மாவின் சொல்படி உடல் கேட்டால் அது மாயையை வெல்ல நல்லதொரு பயணமாக இருக்கும். உடலின் இச்சைக்கு ஏற்ப ஆத்மா செல்ல துணிந்தால் அங்கே மாயை எனும் கடலுக்குள் அந்த ஆத்மா முழுகிக்கொண்டே இருக்கிறது என்பது பொருளாகும். ஒவ்வொரு தினமும் ஒரு மனித வாழ்விலே மனித நோக்கத்திலே உலகியல் வெற்றியை எந்த அளவு குவித்திருக்கிறோம் என்று எண்ணும். ஆனால்  அது ஒரு நிலை என்றாலும் அதுவே ஒரு உன்னத நிலை அல்ல என்பதை மெய்யான மெய்ஞான வழியிலே வருகின்ற ஆத்மாக்கள் உணர வேண்டும். ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு கணமும் பாவங்கள் சேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதும் முன்னரே சேர்த்த பாவங்களை தொலைப்பதுமே ஒரு மெய்யான வாழ்வாக இருக்க வேண்டும் ஒரு மெய்யான மெய் ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு. எனவே வாதங்கள், விசாரங்கள், தத்துவ விளக்கங்கள், நிறைய நூல் ஓதுதல் என்றெல்லாம் ஒரு மனிதனை ஆன்மீகப் பாதைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் இது போன்ற நூல்களை வாசிப்பதும், வாசித்ததை மனதிலே வைத்து யோசிப்பதும், யோசித்த பிறகு இறையை நோக்கி எதை யாசிக்க வேண்டும் ? என்பதை உணர்வதும் பிறகு எப்படி பூசிக்க வேண்டும் ? என்பதையும் மனிதன் மெல்ல, மெல்ல காய்த்தல், உவத்தலின்றி நடுநிலையில் நின்று புரிந்து கொண்டு  செயலாற்ற வேண்டும்.