​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 28 December 2017

சித்தன் அருள் - 740 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 8


கோடகநல்லூர் வந்து சேர்ந்த சுவாமிநாதன் தம்பதியருக்கு, நிறைய பேரை சந்திக்கிற பாக்கியம் கிடைத்துள்ளது. அதிலும் முக்கியமாக, அபிஷேக பூசையின் போது அகத்தியப்பெருமான் பூசை செய்கிற காட்சியை "கண்டு" உணரவே, அவர் தன் மனைவியிடம், "அகத்தியப்பெருமான் அபிஷேக ஆராதனை செய்வதை பார்த்தாயா?" என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் மனைவி "அவர் மட்டுமா! லோபாமுத்திரையும் இருக்கிறாளே! உங்களுக்கு தெரியவில்லையா?" என்று எதிர் வினா எழுப்பினார். எத்தனை முறை பிரார்த்தனை செய்தும், அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைக்கவில்லையாம்.

சரி! பூசை முடிந்துவிட்டது! அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த அர்ச்சகரை பார்த்து "சுவாமி! எனக்கு, பெருமாளுக்கு பூசை செய்த சிறிதளவு பூ பிரசாதமாக கொடுங்களேன்!" என்றார். இவர் விண்ணப்பத்தை அர்ச்சகர் காதில் வாங்கின மாதிரியே தெரியவில்லை. இவரும் பல முறை கேட்டுப் பார்த்தார். அர்ச்சகர், பெருமாள் சன்னதிக்கு சென்று நிறைய மாலை, பூவை எடுத்து, இவரை சுற்றி நின்றவர்களுக்கு கொடுத்தாரே ஒழிய, இவருக்கு ஒரு பூ கூட கொடுக்கவில்லை.

சரி! நமக்கு இன்று கொடுப்பினை இல்லை போலும், என மனசை தேற்றிக்கொண்டு, பெருமாளை பார்த்தார்.

பிறகு என்னவோ தோன்ற, மனைவியிடம், "வா! நாம் போய் அகத்தியர் பூசையின் பிரசாதம் வாங்கிக்கொள்ளலாம். அனைவரும் போகத் தொடங்கிவிட்டனர். பின்னர் தீர்ந்து விடப்போகிறது. அந்த அருளேனும் நமக்கு கிடைக்கட்டும்!" என்று கூற, பெருமாளின் சன்னதி முன் நின்று கொண்டிருந்த அவர் மனைவியோ திடமாக கூறினாள்.

"எனக்கு லோபாமுத்திரை அம்மா சின்ன குழந்தையின் வடிவில், பச்சை சட்டை போட்டு காட்சி கொடுப்பேன் என்று வாக்கு தந்துள்ளார். அவர் வரவேண்டும்! பார்த்தபின்தான் இந்த பெருமாள் சன்னதியை விட்டு விலகுவேன்! அதுவரை பெருமாளை பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். அம்மாவை வரச்சொல்லுங்கள் என்று வேண்டுதலை சமர்ப்பிப்பேன்!" என்று உறுதியாக கூறி நின்றார்.

"என்னடா இது நமக்கு வந்த சோதனை! அம்மா எப்ப வந்து நாம் எப்போது செல்வது" என்ற சிந்தனை இவருக்குள் ஓடியது.

யாரோ மூலஸ்தானத்தில் அர்ச்சனை பண்ண, அது முடிந்து தீபாராதனை நடந்தது. கைகூப்பி, பெருமாளை வணங்கி நின்று கொண்டிருந்த அந்த அம்மாவின் பின் பக்கத்தில் யாரோ சுரண்டுவது போல் இருந்தது. உணர்வு வந்து திரும்பி பார்க்க, ஒரு சிறு குழந்தை பச்சை சட்டை, பச்சை பாவாடை அணிந்து அந்த அம்மாவை தட்டி கூப்பிட்டு கொண்டிருந்தது.

சற்றே அதிர்ச்சி அடைந்து, திரும்பி பார்த்து, அந்தக் குழந்தையிடம் "என்னமா வேண்டும்!" என அவர் மனைவி கேட்க,

"நீங்களெல்லாம் ஸ்வாமியை பார்க்கிறீர்கள்! எனக்கு முகமே தெரியவில்லை. என்னை தூக்கிக்கோயேன்! நானும் ஸ்வாமியை பார்ப்பேனே!" என்று கூறியது.

உடனேயே லோபாமுத்திரையின் நினைவு வர, அப்படியே அந்த குழந்தையை வாரி அணைத்து, கையில் தூக்கி கொண்டாள், அவர் மனைவி.

அவர் கையில் அமர்ந்து கொண்ட குழந்தை, பெருமாளை பார்க்காமல், அந்த அம்மாவையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

"ஸ்வாமியை பார்க்கணும்னு சொன்னயே! அங்க பாரு! என்ன பார்த்து சிரிச்சிண்டு இருக்காதே! என கூறியவரிடம்,

"ஸ்வாமியை பார்த்தாச்சு! என்னை கீழே இறக்கிவிட்டேன்!" என கேட்டது.

உடனேயே கீழே இறக்கிவிட்டவுடன், நேராக சன்னதிக்கும் முன் உள்ள இடத்தில் தாம்பாளத்தில் பூசைக்கு வைத்திருந்த பூக்களிலிருந்து, இரண்டு தாமரை பூக்களை கையில் எடுத்து வந்து அந்த அம்மாவிடம் "என்னை இனி தூக்கிக்கொள்" என்று கூறியது.

தூக்கிக் கொண்டதும், அந்த இரு பூக்களை கையில் வைத்து உருட்டி விளையாடிக்கொண்டே சுவாமிநாதனை பார்த்துவிட்டு புன் சிரிப்புடன் அந்த அம்மாவின் கையில் அமர்ந்து கொண்டது..

இவரோ, ஒரே ஆச்சரியத்தில் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்!

என்ன சொல்வது, என்ன கேட்பது என்று கூட தோன்றவில்லை.

சற்று நேரம் பூக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தையிடம், அதன் தாய் பின்னாலிருந்து "பாரும்மா! அந்த பூக்கள் எல்லாம் சுவாமி பூசைக்காக வைத்திருக்கிறார்கள். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு" என்று கூறியதும், அதை கேட்டு அந்த அம்மாவிடம் "என்னை கீழே இறக்கிவிடு! நான் போய் பூவை தட்டில் வைக்கணும்!" என்று கூறியது.

கீழே இறங்கி சென்று, சமர்த்தாக எடுத்த இடத்திலேயே திரும்பி வைத்துவிட்டு, தன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது. இதற்குள் சற்று கூட்டம் வரவே, அர்ச்சகர் மறுபடியும் தீபாராதனையை காட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் பெருமாள் தீபாராதனையை பார்த்து, மெய் மறந்து நின்றனர்.

அந்த தம்பதியரும் தான்.

தீபாராதனை முடிந்த பின் அந்த குழந்தையின் நினைவு மெதுவாக வர, திரும்பி பார்த்து தேடினால், எங்கும், அந்த தாயும் இல்லை, குழந்தையும் இல்லை.

மனதுள் "லோபாமுத்திரா" என்று அழைத்து வெளியே பிரகாரத்தில், கோவிலுக்கு வெளியே எங்கு சென்று தேடியும் இருவரையும் காணவில்லை.

மறுபடியும் சன்னதிக்குள் வந்து பார்த்த பொழுது அங்கு யாருமே இல்லை. இது என்ன திருவிளையாடல் என்று மனதுக்குள் தோன்றியது. சற்று கவனமாக இருந்து, அந்த குழந்தையை இன்னும் சற்று நேரம் பிடித்து வைத்திருக்கலாமே, என்ற எண்ணம் இருவருக்குள்ளும் தோன்றியது.

அவர் மனைவியோ "பார்த்தீங்களா! அம்மா வருவான்னு எனக்கு வாக்குரைத்தாள்! அதன் படியே, சொன்ன சொல்லை காப்பாத்திட்டாள்! வந்தது அவளே தான்! இது போதும்! பெருமாளுக்கு மிக்க நன்றி!" என கூறி காத்திருந்தனர்.

"இனி நமக்கு எங்கே பூ கிடைக்கப் போகிறது!" என்று நினைத்து விலக நினைத்த சுவாமிநாதனை, அர்ச்சகர் கூப்பிட்டு, "எங்க போறீங்க? நீங்கதானே ஒரு பூவாவது கொடுங்கள் என்று கேட்டீர்கள்! இப்போது பெருமாள் கொடுக்க சொல்லிட்டார்! சற்று பொறுங்கள், நான் உள்ளே சென்று வருகிறேன்" என்று கூறி சென்றவர்.

திரும்பி வந்து "நீங்கள் உங்கள் அங்கவஸ்திரத்தை நீட்டி பிடியுங்கள், அம்மா, நீங்க உங்கள் புடவை தலைப்பை நீட்டி பிடியுங்கள்" என்று கூறிவிட்டு, நிறைய மாலைகளை இரு வஸ்த்திரத்திலும் போட்டுவிட்டு, "இது போறுமா! இன்னும் வேணுமான்னு பெருமாள் கேட்க சொன்னார்!" என்றாரே பார்க்கலாம்.

அதை கேட்ட ஸ்வாமிநாதன் அவர்கள், "அய்யா! மன்னிக்கவும்! நான் ஒரு பூ தான் கேட்டேன். நீங்களோ அத்தனை மாலையையும் பெருமாள் உத்தரவால் கொடுத்துவிட்டீர்கள். இதுவே மிக அதிகம். இன்னும் வேண்டாம். ரொம்ப திருப்தி!" என்று கூறிவிட்டு, பெருமாளின் அருளுக்கு நன்றி கூறி, சுமக்க முடியாமல் சுமந்து வந்து, தங்கள் வாகனத்துக்குள் வைத்துவிட்டு வந்து பார்த்தால், அவர்களுக்கும், அகத்தியர் அவர் பூசையின் பிரசாதத்தை கிடைக்கும்படி செய்தார்.

பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் பொழுதும், கண்கள் அங்குமிங்கும் தேடியது, அந்த குழந்தையை ஒரு முறை கூட பார்க்க முடியுமா என்று.

அப்பனும், அம்மையும் கிளம்பி போய்விட்டிருந்தனர். தேடியதுதான் மிச்சம். ஆனால், மிகுந்த மனநிறைவுடன், அன்று அவர்கள் விடை பெற்றனர்.

"அந்தநாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர் - எப்படிப்பட்ட புண்ணிய தினம் என்பதை, அன்று, காலமும், அடியேனும் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு, அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தோம், என்பது மட்டும் உண்மை.

[அடுத்த தொகுப்புடன் கோடகநல்லூர் தொடர் நிறைவு பெறும்].

சித்தன் அருள்..................... தொடரும்! 

Thursday, 21 December 2017

சித்தன் அருள் - 739 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 7

அமைதியாக இருந்த மனதை மணி மந்திரம் உசுப்பிவிட்டது. பெருமாளை திரும்பி பார்த்த அடியேன் அசந்து போனேன். பெருமாள், தாயாரின் முகம் மட்டும்தான் வெளியே தெரிந்தது. அவர்கள் கழுத்துவரை பூக்களாலும், மாலைகளாலும், துளசியாலும் மூடி மறைத்திருந்தார் அர்ச்சகர். அவ்வளவு பூக்களை, அகத்தியர் அடியவர்கள் வாங்கி வந்திருந்தனர். பெருமாளை பார்க்கவே அதிசயமாக இருந்தது.

கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர், பெருமாள் இருப்பதே தெரியவில்லை என்று அர்ச்சகருக்கு செய்தி சொன்னதின் பேரில், பூக்களை அழுத்தி கீழே இறக்கி, பெருமாள் தாயாரின் மார்பு வரை பூக்களை வைத்து, அவர் கரங்கள் வெளியே தெரியும் படி அமைத்தார், அர்ச்சகர்.

சிறிது நேரம் மந்திரோச்சாடனம் நடந்தது. பின்னர் நிவேதனத்துக்காக திரை போடப்பட்டது. அனைத்து அகத்தியர் அடியவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஊசி விழும் ஓசை கூட தெளிவாக கேட்க்கும் அப்படி ஒரு அமைதி. இத்தனை மனிதர்கள் சேர்ந்திருக்கும் இடத்தில் இது ரொம்ப அபூர்வம். அகத்தியர், அவர் அடியவர்களை அமைதிப்படுத்திவிட்டார் போலும் என்று தோன்றியது. உண்மையிலேயே, அவர்களை மௌனமாக மனதுள் பாராட்டினேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு விழாவை நடத்துவதென்றால், இப்படித்தான் நடத்த வேண்டும் என்று அகத்தியர் சொல்லாமல் சொல்லி காட்டுவது போல் இருந்தது.

உள்ளேயும், வெளியேயும் நிவேதனத்தை முடித்து, பலி பீடங்களுக்கு அஷ்ட திக்கிலும் உணவளித்துவிட்டு வந்த அர்ச்சகர் தீபாராதனைக்கு தயாரானார். முதலில், மூலஸ்தானத்தில் தீபாராதனை நடக்கும் என்று அறிவித்துவிட்டு உள்ளே சென்றார். அத்தனை பேருக்கும் உள்ளே சென்று தரிசிக்க இடம் கிடைக்காது என்றறிந்த நிறைய அகத்தியர் அடியவர்கள், வெளியே நின்று தீபாராதனையை தரிசித்தனர். அடியேன் நின்ற இடத்தை விட்டு அசையவே இல்லை. எப்பொழுது வேண்டினாலும் பெருமாள் தரிசன வாய்ப்பை கொடுக்கிறார். இம்முறை, மற்ற அடியவர்கள் அதை வாங்கி கொள்ளட்டுமே என்று தோன்றியது. அமைதியாக மனக்கண்ணில் அவர் பாதத்தை நினைத்து வேண்டிக் கொண்டேன். 

உள்ளே தீபாராதனையை முடித்துக் கொண்டு அர்ச்சகர் வெளியே வந்தார். அடியவர்கள் அனைவரும் சுதாகரித்து நின்றனர். அடியேன் மனதுள் திடீரென ஒரு எண்ணம் ஓடியது. அப்படியே அதை உருவகப்படுத்தி பெருமாளிடம் சமர்ப்பித்தேன்.

"பெருமாளே! அகத்தியப் பெருமானே! எத்தனையோ அடியவர்கள், எங்கிருந்தெல்லாமோ இங்கு வந்து நதியில் தீர்த்தமாடி, உழவாரப்பணி செய்து, தங்கள் பூசையில் கலந்துகொண்டு, தங்கள் விண்ணப்பங்களை தெரிவித்துள்ளனர். இங்கு வரவேண்டும் என நினைத்து, பல சூழ்நிலைகளால் வர முடியாமல் போன ஆத்மாக்களும் உண்டு. எங்கிருந்து, உங்களை நினைத்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தாலும், இங்கு வந்திருந்து சமர்ப்பித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி வைத்து ஆசீர்வதியுங்கள். எல்லோரும் உங்கள் அருளுக்காக காத்திருக்கின்றனர். எந்த குறையும் இல்லாமல், இன்று அந்த அடியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அள்ளி அள்ளி கொடுத்து உங்களுக்கு சேவை செய்துள்ளனர். எல்லோரும் நலமாக வாழ வாழ்த்த வேண்டும். எல்லோரும் பத்திரமாக வீடு சென்று சேரவும் அருளவேண்டும்!" என வேண்டிக்கொண்டேன்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்து கண்ணை திறக்கவும், தீபாராதனை. என் பார்வைபெருமாளின் முகத்திலும், அவர் கரத்திலும் நின்றது.

"அடியேனின் விண்ணப்பம்! ஞாபகம் இருக்கட்டும் பெருமாளே" என்று கூறி முடித்த அடுத்த நிமிடம், அவர் தலையில் இருந்த ஒரு பூ, வலது கரத்தில் விழுந்து தெறித்தது.

"சரி! அவர் சம்மதித்துவிட்டார்!" என தோன்ற, ஆனந்தமாக தீபாராதனையை அதன் மந்திரத்துடன் உச்சரித்து நிறைவு செய்தேன். அனைத்து பெருமையையும் பெருமாள், அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்தேன்.

அனைத்து அகத்தியர் அடியவர்களும் மெய்யுருகி மனம் ஒன்றி தீபாராதனையில் பங்கு பெற்றனர். நிச்சயமாக அவர்கள் அனைவருக்கும் அருள் கிடைத்திருக்கும். என்னென்ன அனுபவங்களை அவர்கள் இனி சந்திக்கப் போகிறார்களோ, அதை அவர்களாக தெரிவித்தால் அன்றி தெரிய வராது, என்று மனதுக்கு தோன்றியது. வந்திருந்த அனைவருக்கும் பூசை முடிந்த பின் தீர்த்தம் கொடுத்து, பெருமாளின் சடாரி சார்த்தப்பட்டது. நிறைய பேருக்கு, பெருமாளின் துளசி, பூ, மாலை, குங்குமம் என பலவித பிரசாதங்களை அர்ச்சகர் வழங்கினார்.

இன்னுமொரு எண்ணம் திடீரென்று உரைக்கவே உடனேயே பெருமாளிடம் விண்ணப்பித்தேன்.

"இன்றைய புண்ணிய நாளில், அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த இந்த அபிஷேக ஆராதனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் ஒரு நிமித்தத்தை காட்டக்கூடாதா?" என்றேன்.

"உடனேயே தெரியவரும்" என்று உத்தரவு வந்தது.

உடனேயா! அப்படி என்றால், யாராவது வந்து செய்தி சொல்லப்போகிறார்களா? என்றெல்லாம் மனம் எண்ணியது.

சற்று குழம்பி நிற்கையில், திடீரென ஓதிமலை ஓதியப்பர் ஞாபகத்துக்கு வந்தார்.

"அடடா! இறைவன் குளிர்ந்தால், மழை வருமே! ஓதிமலை போல இங்கும் வறுத்தெடுத்து விடுவாரா? என்று எண்ணி நிற்கையில், மழை தொடங்கியது.

மனம் மெதுவாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றது.

நிவேதன ப்ரசாதங்களான, புளியாதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், அகத்தியர் அடியவர்கள் கொண்டுவந்த இனிப்பு வகைகள் என அனைத்தையும் விநியோகம் செய்ய 6 பேரை தெரிவு செய்தேன். அவர்களுக்கு ஒரே ஒரு உத்தரவு தான். வரிசையாக நின்று கொடுக்க வேண்டும். அடியவர்கள் வரிசையில் வந்து வாங்கி கொள்வார்கள். மேலும் ஒருவர் முதலில் நின்று அனைவருக்கும் "தட்டை" கொடுங்கள். விநியோகம் நடக்கையில், யாரேனும் ஒரு அடியவர் வந்து "நானும் என் கையால் விநியோகம் செய்கிறேனே!" என வேண்டிக் கொண்டால், கேட்டவர் விலகி வழிவிட்டு, அவர் வேண்டுதலையும் நிறைவேற்ற வேண்டும்!" என்றேன்.

"இரண்டு நிமிடம் பொருத்துக் கொள்ளுங்கள்! உடன் வருகிறேன்!" என்று கூறி, அர்ச்சகரை தேடி ஓடினேன். அடியேன் வருவதை கண்டதும் அவருக்கு புரிந்தது. வேகமாக உள்ளே சென்று, பெருமாள் பாதத்தில் வைத்திருந்த பையுடன், ஒரு பாத்திரத்தில் பெருமாள் மார்பு, கரங்கள், பாதம், தாயார் பாதத்தில், கையில் சார்த்தியிருந்த மஞ்சள் பொடியை நன்றாக சுரண்டி எடுத்து, போட்டுத் தந்தார். நிமிர்ந்து பெருமாளை பார்த்து, "மிக்க நன்றி பெருமாளே! பிறகு வருகிறேன்!" என்று கூறி, விநியோகம் தொடங்க இருந்த இடத்துக்கு வந்தேன்.

விநியோகம் தொடங்கியது. மிக அமைதியாக, எந்த உந்தும், தள்ளும் இன்றி, கையில் தட்டை ஏந்தி வந்து, அடியவர்கள் பிரசாதத்தை வாங்கி கொண்டனர். எல்லோருக்கும், அவர்கள் விருப்பப்படி, பிரசாத அளவு கொடுக்கப்பட்டது. இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. அந்த வரிசையின் கடைசியில், சிறிதளவு மஞ்சள் ப்ரசாதத்துடன் ஒரு "786" எண் கொண்ட ரூபாயை ஒவ்வொரு அகத்தியர் அடியவருக்கும் "பெருமாளின் பரிசு! பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்"; "இது மஞ்சள்பொடி பிரசாதம். பெருமாளிடமிருந்து உங்களுக்கு மருந்து. உள்ளுக்கு சாப்பிடுவதற்கு" என்று கூறி கொடுக்கப்பட்டது.

"சித்தன் அருளை" வாசிக்கும் அனைவருக்கும் "786" எண் பற்றி தெரியும் என்பதாலும், அதுவும் பெருமாளின் பாதத்தில் சமர்ப்பித்து கொடுக்கப்பட்டதாலும், மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டனர். அதில் ஒரு சிலர், வாங்கிய உடனேயே "எண்ணை" பார்த்து, "எவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருக்கிறேன், கோடகநல்லூர் பெருமாள்தான் முதன் முறையாக ஆசி கூறி கொடுத்திருக்கிறார்" என்று கூறி  வாங்கிச்சென்றனர். ஒரு கட்டத்தில், "786" எண் கொண்ட ரூபாய் தீர்ந்து போய்விட, தொடர்ந்து "354" என்கிற எண் கொண்ட ரூபாய் கொடுக்கப்பட்டது.

"354" என்றால் ஓதியப்பர் (சுப்பிரமணியர்). சுப்பிரமணிய சக்கரத்தில் "354" என்கிற எண் தமிழ் எழுத்தாக மாற்றி எழுதப்பட்டிருக்கும். ஆகவே, இந்த முறை கோடகநல்லூரில், "354" என்கிற எண்ணையும் பெருமாள், அகத்தியர் ஆசிர்வாதத்துடன், மீதி இருந்த அனைவருக்கும் கொடுத்து முடித்தோம்.

பெய்த மழையில் நனைந்தபடியே அனைத்து அகத்தியர் அடியவர்களும் நிவேதன பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு, பின் அந்த தட்டை அதற்கென கோவிலுக்கு வெளியே வைத்திருந்த ஒரு பெட்டியில் கொண்டு போட்டனர். கோவில் பிரகாரத்தை சுத்தமாக வைத்திருக்க இயற்கையாகவே அவர்களுக்குள் அகத்தியர் உத்தரவு போட்டுவிட்டார் போலும்.  அதற்காக அடியேன் மிகவும் கடமை பட்டுள்ளேன்.

அடுத்த அரை மணி நேரத்தில், கருடர் மண்டபத்திலிருந்த இரு பீடங்களை அதன் இடத்தில் சுவாமி சன்னதிக்குள், ஒரு சில அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து தூக்கி கொண்டு வைத்தனர். இன்னும் சில அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து கருட மண்டபத்தை, பிரகாரத்தை, நடை பாதையை பெருக்கி சுத்தம் செய்து "பளிச்சென" ஆக்கிவிட்டனர். வெளியே வந்து பார்த்த அர்ச்சகரும், நிர்வாகிகளும் அசந்து விட்டனர்.

"இங்குதான் ஒரு அபிஷேக பூசை நடந்ததா? என்று கேட்கிற அளவுக்கு மிக மிக அருமையாக சுத்தம் பண்ணிவிட்டார்களே, இவர்கள்!" என்று அர்ச்சகர் அனைத்து அகத்தியர் அடியவர்களையும் வாழ்த்தினார். அதை கேட்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

இரு அகத்தியரின் அபிமான அடியவர்கள் கோடகநல்லூர் வந்து சென்றபின், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடியேனுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனுமதியுடன், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

அனுபவம் ஒன்று).  திரு ஜெயராமன் பெங்களூருவில் வசிக்கிறார். போன வருடம் 2016இல் "அந்த நாள் >> இந்தவருடம்" என்கிற அந்த புண்ணிய நாள் அன்று, கோடகநல்லூர் வந்து, அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்ட பொழுது ஏதோ தோன்றவே, தீபாராதனையின் பொழுது, பெருமாளிடம் தனக்கு ஒரு நல்ல வேலை பெங்களூருவில் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாராம். கோடகநல்லூர் வந்து சென்ற பின், உடனேயே திருப்பதியும் சென்று ஸ்வாமியை தரிசனம் செய்கிற பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 90 நாட்களில், அவர் விரும்பியபடி, பெங்களூருவில் நல்ல வேலை கிடைக்க, இந்த வருடமும் வந்து பூசையில் கலந்து கொண்டார். அதற்கு முன் அடியேனை தொடர்பு கொண்டு "நான் பெருமாளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்! என்ன செய்யலாம் என்று கூறுங்களேன்!" என்றார். இந்தவருடமும் வந்து பூசையில் கலந்து கொள்ளுங்கள்! பெருமாளே வழி காட்டுவார், என பதிலளித்தேன். இந்த முறை வரும் பொழுது, இன்னொரு புதிய வேண்டுதல் அவருடன் சேர்ந்து கொண்டது. தனக்கான வேண்டுதல் அல்ல. அவரது சகோதரி ஒரு வீடு கட்டி முடித்துவிட்டார். ஆனால் வீடு கட்டி கொடுத்தவர் வீட்டு சாவியை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். வருடம் இரண்டு ஓடி விட்டது. கோவிலுக்கு கிளம்பும் முன் தன் சகோதரியை அழைத்து "நான் கோடகநல்லூர் சென்று உனக்காக வேண்டிக் கொள்ளப்போகிறேன்! பெருமாள் நிச்சயம் உனக்கு உதவி புரிவார்" என்று கூறிவிட்டு வந்து தீபாராதனையின் பொழுது விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டார்.

கோடகநல்லூர் பூஜை முடிந்து ஊருக்கு திரும்பியவருக்கு, மகிழ்ச்சியான செய்தியை பெருமாள் கொடுத்துவிட்டார். வீட்டை கட்டியவருக்கு, அந்த பூசை நடந்த தினம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வீட்டு சாவியை, இவரது சகோதரியை கண்டு கொடுத்து, "நீங்கள் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிக் கொடுத்துவிட்டு சென்றாராம். இந்தமுறையும் ஈமெயில் வழி அடியேனை தொடர்பு கொண்டு நடந்ததை கூறி, "பெருமாள் உடனேயே அருளியதற்கு, நன்றியாக நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார். "முடிந்தால், சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் வந்து பெருமாளுக்கு பிரகாரத்தில் சுற்று விளக்கு போடுங்கள்", என்றேன்.

அந்த நாளில் சுற்று விளக்கு போட்டவர்களிடம் ஒரு விஷயத்தை கூற மறந்து போனது. அதை இங்கே தெரிவிக்கிறேன்.

அடியேன் பலமுறை சுற்று விளக்கு போட்டிருக்கிறேன். அது தனியாகவோ, அல்லது சிறு குழந்தைகளின் உதவியுடனோதான் இருக்கும். முதல் முறை விளக்கு போடச் சொன்ன பெருமாள் கூடவே, "நீ ஏற்றும் தீபத்தில் என் வலது பாதம் இருக்கும். கண் மூடி த்யானம் செய்து பார்" என்றார். அந்த முறை முதல், ஒவ்வொரு முறையும் அவர் பாதத்தை பார்த்திருக்கிறேன். சில வேளை பெருமாளின் வலது கால் பாதத்துடன் இன்னொரு வலது கால் பாதம் (மெட்டியுடன்) தெரியும். அதை தாயாரின் பாதமாக பாவித்து வணங்கி வருகிறேன். அன்று சுற்று விளக்கு போட்டவர்கள் யாரேனும் கண் மூடி பெருமாளின் பாதத்தை தரிசித்தார்களா? என்று தெரியவில்லை. ஆனால், விளக்கு போட்டவர்கள் அனைவரும், பெருமாள் பாதத்துக்கு விளக்கு போட்ட பாக்கியசாலிகள். மற்றவர்களுக்கு, அடுத்த முறை பெருமாள் அருளுவார் என்று நம்புகிறேன். அடுத்த முறை என்றால், அடுத்த வருடம் அந்த நாள் என்று அர்த்தமல்ல. விதியிருப்பின், பெருமாள் அழைத்தால், சீக்கிரமாகவே அது நடக்கலாம். வேண்டிக்கொள்ளுங்கள்.

இரண்டு). திரு சுவாமிநாதன், பாண்டிச்சேரியில் வசிக்கிறார். சிறந்த அகத்தியர் அடியவர். தன் வீட்டில் அகத்தியர் லோபாமுத்திரை தாயின் விக்ரகங்களை வைத்து தினமும் பூசை செய்து வருகிறார். நிறைய அனுபவங்களை, அகத்தியரின் வழிகாட்டுதல்களை பெற்றவர். இந்த வருடம் "அந்தநாள்" அன்று தன் மனைவியுடன் தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர் மனைவியும், அகத்தியர், லோபாமுத்திரையின் சிறந்த பக்தை. கோடகநல்லூருக்கு கிளம்பும் முன் பூசை அறையில் நின்று வேண்டிக்கொள்ள, அவர் மனைவிக்கு லோபா முத்திரை தாயின் ஆசிர்வாதம் வாக்காக கிடைத்துள்ளது.

"சிறு குழந்தையாக, பச்சை சட்டை, பச்சை பாவாடை போட்டு உனக்கு நான் அங்கு வந்து காட்சியளிப்பேன்!" என்று அருள் வாக்கு கிடைத்துள்ளது!

திடமான நம்பிக்கையுடன் இருவரும் கோடகநல்லூர் வந்து சேர்ந்தனர்.

சித்தன் அருள்........................ தொடரும்!

Thursday, 14 December 2017

சித்தன் அருள் - 738 - அந்தநாள் >> இந்த வருடம் 2017 >> பாபநாசம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லோரும் நலமாக வாழ்க என்பதன்றி வேறொன்றும் இங்கு பிரார்த்தனை இல்லை. இன்று, வியாழக்கிழமை அன்று தர வேண்டிய தொகுப்பை தயார் பண்ண முடியவில்லை. ஒருவாரமாகவே மிகுந்த அலைச்சல். இருக்கிற பிரச்சினை போதாதென்று, நேற்று வருண பகவானும் நிறையவே ஆசிர்வாதம் பண்ணப்போக, முழுவதும் நனைந்த பறவையாக வீடு வந்து சேர்ந்தேன். தட்டச்சு செய்ய, மனம் ஒன்று படவில்லை. தொகுப்பு வெளியிட முடியவில்லை.

எப்போதும் போல, அகத்தியர் கோவிலுக்கு மாலை சென்ற பொழுது, முதலில் அனைத்துப் பெருமைகளையும் அவர் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு, நன்றியை கூறி, கூடவே "இன்று ஏன் தொகுப்பை வெளியிடமுடியாதபடி சூழ்நிலை அமைந்துவிட்டது?" என்ற கேள்வியை சமர்ப்பித்தேன்.

சென்ற நேரம், அவருக்கு நிவேதனம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், சன்னதி பக்கம் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு. ஆகவே, அவர் சன்னதிக்கு நேர் எதிரே அமர்ந்து, பூசை முடியும் வரை, கண்மூடி, த்யானத்தில் அமர்ந்தேன். ஏதோ தோன்ற, அவர் லோக ஷேமத்துக்காக அளித்த, "ஆதித்ய ஹ்ருதயம்" சுலோகம் தானாகவே உள்ளிருந்து வந்தது. கண் மூடி, அவர் பாதத்தை சுழி முனையில் அமர்த்தி, சுலோகத்தை உருப்போட, உடல் மிக எளிதாக மாறியது. திடீரென ஒரு உத்தரவு தெளிவாக கேட்டது.

"மார்கழி மாதம் பாபநாச ஸ்நானம் செய்து, சிவபெருமானை தரிசித்துவர, எம் சேய்களுக்கு தெரிவித்துவிடு" என்று வந்தது.

முன்னரே இதை பற்றிய செய்தியை "அந்தநாள் >> இந்த வருடம் >> 2017" என்கிற தலைப்பில் சித்தன் அருள் வலைப்பூவில் தெரிவித்திருந்தேன். உங்கள் அனைவருக்கும் அதன் முக்கியத்தை நினைவூட்டுவதற்காக ஒரு முறை கூட இந்த தொகுப்பில் தெரிவிக்கிறேன்.

"பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2017 முதல் 13/01/2018க்குள் வருகிறது."

குறிப்பிட்ட நாளை கூறாமல், 29 நாட்களை அளித்து அருளை அள்ளிச்செல்ல அகத்தியப் பெருமான் வழி காட்டுகிறார்.

அவரவர் வசதிப்படி, 16/12/2017 முதல் 13/01/2018க்குள் ஒரு நாள் சென்று பாபநாசத்தில் தாமிரபரணி நதியில்  (கோவில் முன் உள்ள படித்துறையில்) ஸ்நானம் செய்து, பின் இறைவனையும் அம்பாளையும் தரிசித்து, விண்ணப்பத்தை சமர்ப்பித்து, அருள் பெற்று வாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அங்கு செல்பவர்கள், அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருக்கும் உரலில் மஞ்சளை போட்டு (அதுவும் அங்கேயே இருக்கும். வாங்கி செல்ல வேண்டும் என்பதில்லை!) இடித்து, அங்கு வருபவர்களுக்கு அளித்து, சிறிது பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு செல்லும் படியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொல்லச்சொன்னதை தெரிவித்துவிட்டேன். அடியேன் வேலை முடிந்தது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!

அக்னிலிங்கம்!

Thursday, 7 December 2017

சித்தன் அருள் - 737 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 6


எதைக் கண்டாலும், எதை உணர்ந்தாலும், பெரியவர்கள் எதை உரைப்பது என்று தீர்மானிக்கிறார்களோ, அதைத்தான் பிறருக்கு, ஓரளவுக்கு தெரிவிக்க முடியும். முழுமை பெற வேண்டுமென்றால், ஒருவர், அவராகவே உணர்ந்தால்தான் உண்டு. அப்பொழுதும், அங்கும், அவர்கள் அருள் வேண்டும்.

அன்று அடியேன் கண்ட காட்சியை யாரிடமும் அங்கு வைத்து உரைப்பதில்லை என்று தீர்மானித்தேன். யாருக்கெல்லாம், எவ்விதத்தில் உணர வைத்தார்களோ என்ற எண்ணமும் வந்தது. ஒரு விஷயத்தை அடியேன் அடிக்கடி மனதுள் நினைப்பது உண்டு. அவர்கள் பார்வை நம் மீது பட்டதா என்பதுதான் முக்கியமே தவிர, நம் பார்வை அவர்கள் மீது பட்டதா என்பது முக்கியமில்லை. ஏனென்றால், நம் நேரம் நல்லதாக இருந்தால், நாம் அறியாமலேயே, ஒருவேளை "நயன தீக்க்ஷை" கூட கிடைக்கலாம். அப்படி, அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு, அவர்கள் அறியாமலேயே, அவரின் அருள் பார்வை கிடைத்தது? என்று யோசிக்க தொடங்கினேன்.

நேரம் வரும் பொழுது அது தெரியவரும், என்று எண்ணம் மனதுள் வந்தது.

ஆம்! அது உண்மை என்பது, பின்பு வேறு ஒரு அகத்தியரின் சிறந்த அடியவர், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறிய பொழுது உணர்ந்தேன்.  ஒன்று மட்டும் நிச்சயம். அன்று, அங்கு வந்திருந்து, பெருமாளின் ஆராதனையை கண்டு மகிழ்ந்தவர், மிக, மிக புண்ணியசாலிகள். அதற்காக, வராதவர்கள், வர ஆசைப்பட்டு பல காரணங்களால் வர முடியாதவர்கள், பாக்கியம் செய்யாதவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்களுக்கும் சேர்த்து, கடைசியில், தீபாராதனையின் பொழுது அடியேன் வேண்டிக்கொண்டேன் என்பதே உண்மை.

பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் தொடங்கிய பொழுது, முதலில் துளசியால் தைலக்காப்பு போடப்பட்டது. மிச்சம் மீதி இருந்த தைலத்தை, அர்ச்சகர் பாத்திரத்துடன் தர, அதை பெற்று அங்கு வந்திருந்த அனைவருக்கும், கரங்களில், பிரசாதமாக கொடுக்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

பால், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், தேன், நெய், பலவிதமான மூலிகைகள், தயிர், வாசனாதி திரவியங்கள், பன்னீர், இளநீர், அடியவர்கள் சுமந்து கொண்டு கொடுத்த தாமிரபரணி தீர்த்தம் என அபிஷேகம் நீண்டு கொண்டே சென்றது. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு சிலர் ஸ்லோகங்களை கூறினார். இரு பெரியவர்கள் குழுவுடன், அர்ச்சகர் சேர்ந்து புருஷசூக்தம் கூறி, கலச தீர்த்தத்தை பெருமாளுக்கும், தாயாருக்கும், தேசிகருக்கும் சிறப்பாக அபிஷேகம் செய்தார். பெருமாளுக்கும், தாயாருக்கும் சார்த்திய மஞ்சள்பொடி கலவையை பிரசாதமாக தர, அதுவும் கொஞ்சமாக இருந்ததால் எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை. சீக்கிரமே தீர்ந்து போனது. பெருமாளின் உள் சன்னதியில், அவர் கரத்தில், மார்பில், பாதத்தில் சார்த்தியது பத்திரமாக இருப்பதால், அதை எடுத்து முடிந்தவரை பிறகு கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன்.

விமர்சையான அபிஷேக ஆராதனைகள் நிறைவு பெற்றதும், திரை போடப்பட்டது. பெருமாளுக்கு அலங்காரம் தொடங்கியது.

வந்திருந்த அகத்தியர் அடியவர்களின் கூட்டத்தை பார்த்ததும் சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அனைவரும் பசியோடு அமர்ந்திருந்தனர். பெரியவர்கள் சற்றே, அசந்து போய் அமர்ந்திருந்தனர். எல்லோருக்கும், பிரசாதம் விநியோகம் செய்யவேண்டும். பிரசாத விநியோகத்துக்கான தட்டை கொண்டு வருவதாக சொன்னவர், மறந்து போய் விட்டிருந்தார். கையில் இருந்ததோ 200 தட்டுகள். அனைவருக்கும் கொடுப்பதற்கு போதாது. என்ன செய்வது என்று ஆதங்கத்துடன் யோசித்த பொழுது, திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பர், அடியேனின் முக மாற்றத்தை கண்டு, "என்ன ஆயிற்று? என்ன வேண்டும்?" என்றார். நடந்ததை கூற, அவசர தேவையை உணர்ந்து, இன்னொருவரை கூட்டிக்கொண்டு தட்டு வாங்க கிளம்பினார்.

"என்ன பெருமாளே! அகத்தியரே! இப்படி போட்டு தாக்குகிறீர்களே! இந்த கடைசி நிமிடத்தில் உணர்த்தினால், அடியேன் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு மாற்று வழியை நீங்கள் தான் காட்ட வேண்டும்" என பிரார்த்தித்தேன்.

என்னவோ தோன்ற, மேடையில் சாமான்கள் வைத்த இடத்தில் நின்று கொண்டு எங்கேனும் ஒரு வழி கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்ததை கவனித்த ஒருவர் வந்து, "யாரோ ஒரு அகத்தியர் அடியவர், நிறைய காகித தட்டுகளை கொண்டு வந்திருக்கிறார். இதோ பாருங்கள்" என்று காட்ட, எனக்கு போன மூச்சு திரும்பி வந்தது போல் உணர்ந்தேன். அதை கையில் எடுத்து பார்க்கவும், அதை வாங்கி வந்த பெரியவர் அருகில் வந்தார்.

"இந்த தட்டுக்கள் நீங்கள் வாங்கி வந்ததா? உங்கள் தனிப்பட்ட தேவைக்கா அல்லது வீட்டுக்கு கொண்டு போக வாங்கினீர்களா?" என்றேன்.

"இதை நான் தான் வாங்கி வந்தேன். இங்கு அகத்தியர் அடியவர்களுக்கு விநியோகம் செய்ய ஏதேனும் கொண்டு வரவேண்டும் என்று, நேற்று இரவுதான் எண்ணம் வந்தது. இனிப்போ, சாப்பிடும் பொருளோ கிடைக்காததால், இதை வாங்கி கொண்டு வந்தேன்" என்றார்.

அடியேனுக்கு, என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"பிரசாத விநியோகத்துக்கு தட்டுக்கள் குறைவாக இருக்கிறது. உங்கள் அனுமதி இருந்தால், இதை நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?" என்றேன்.

"அதற்காகத்தான் வாங்கி வந்திருக்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன விஷயம். என் மகனும், மருமகளும் வந்திருக்கிறார்கள். அவர்கள் கையால், ஒரு சிலருக்கு ஏதேனும் அன்னம் பாலிக்க விரும்புகிறார்கள். பிரசாத விநியோகத்தின் பொழுது, அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியுமா?" என்றார்.

"பிரசாத விநியோகத்தின் பொழுது, அழைத்து வாருங்கள். நிச்சயமாக அந்த வாய்ப்பை அகத்தியர் அருளுவார்" என்று கூறி, தட்டுக்களை மனமுவந்து தந்தற்கு நன்றியை கூறி, கருடாழ்வார் மண்டபத்தில் இருக்கும் பெருமாளுக்கும், அகத்தியருக்கும், புன்னகையுடன் நன்றியை கூறினேன்.

அருகில் இருந்த நண்பரிடம் "இதெல்லாம் சோதனைகளாக இருந்தாலும், கடைசியில் இன்பமாக முடிவது, அவர்களால்தான்" என்றேன்.

தட்டு வாங்க போன நண்பர், 200 தட்டுகளுடன் வந்து சேர்ந்தார். பெரியவர் கொடுத்தது 500 தட்டுகள்.

"தட்டு இல்லை என்றாயே! வந்து சேர்ந்துவிட்டதா?" என்று கேட்கும் பாணியில், திரை விலகியபொழுது பெருமாள் கேட்பது போல் இருந்தது.

அவர் எப்பொழுதும் "பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை நம்மைக் கொண்டு ஆட்ட வைப்பார்" என்று ஒரு எண்ணம் மனதுள் வந்தது.

சரி! ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்றில், நம்மை மாட்டிவிட்டுவிடுவார் என்று தோன்றி முடியும் முன்னரே ஒருவர் சற்று உரக்க கூறினார்.

"பத்து நாட்கள் ப்ரம்மோஸ்த்வம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. அந்த பத்து நாட்களில் பெருமாளுக்கு வந்த பூசை சாமான்களை விட இரண்டு மடங்கு, இந்த அரை நாள் பூசையில் கொண்டு வந்துவிட்டார்களே அடியவர்கள்!" என்றாரே பார்க்கலாம்.

அவர் பேசியது அடியேனிடம். நிறைய பேர் திரும்பி பார்த்தனர்.

"சரிதான்! நம்மை மாட்டிவிட்டு பெருமாள் அங்கிருந்து வேடிக்கை பார்க்கிறார். பதில் சொல்லாமல் பேசாமல் இருப்போம்" என்று இருந்தேன்.

அவர் விடுவதாக இல்லை.

"என்ன சுவாமி! பதிலே காணம்!" என்றார்.

"என்ன சொன்னாலும் மாட்டிக் கொண்டு விடுவேன். பிரச்சனையாகிவிடும். இதுதான் அகத்தியரின் சக்தி என்றால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ, தெரியாது" என்று யோசித்து 

"இந்த கேள்வியை நீங்கள் பெருமாளிடம்தான் கேட்கவேண்டும். எல்லாம் அவர் ஏற்பாட்டில் நடக்கிறது. நாங்களெல்லாம், அவருக்கும், அகத்தியருக்கும் அடியவர்கள். கொடுத்த வேலையை தெரிந்தவரை செவ்வென செய்ய முயற்சி செய்கிறோம்" என்று கூறி விலகினேன்.

"அதுதான் உண்மை" என்று யாரோ சன்னமாக கூறுவது கேட்டது.

மறுபடியும், கோவில் மணியின் சப்தத்துடன், மந்திர பூசைகள் ஆரம்பமானது.

சித்தன் அருள்..................... தொடரும்!

Sunday, 3 December 2017

சித்தன் அருள் - 736 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 5

சரி! இரண்டு அண்டாவும் அகத்தியர் அடியவர்களால், நதியிலிருந்து நீர் எடுத்து வரப்பட்டு, நிரப்பப்பட்டுவிடும், என்று உணர்ந்து, அடுத்த விஷயத்துக்கு அர்ச்சகரை தொடர்பு கொண்டேன்.

"சுவாமி!, இந்த மஞ்சள் பையை பெருமாள் பாதத்தில் வைத்து விடுங்கள். பிறகு, பூசை முடிந்த பின் வாங்கி கொள்கிறேன்" என்று கொடுத்தேன். சந்நிதானத்துக்குள் செல்வதால், என்னவென்று பிரித்துப் பார்ப்பது பழக்கம். அதை பிரித்துப் பார்த்து, உடனேயே, அப்படியே கொண்டு பெருமாள் பாதத்தில் வைத்து விட்டு வந்தார்.

"ஒரு வேண்டுதல் கூட உள்ளது" என்றேன்.

"என்ன?" என்றார் அர்ச்சகர்.

"மஞ்சள் பொடி வாங்கித்தருகிறேன். அதை பெருமாள் வலதுகரம், பாதம், மார்பு, தாயார் கரங்களில் சார்த்திவிட்டு, தாருங்கள். அனைவருக்கும் அதை மருந்தாக கொடுக்க வேண்டும்" என்றேன்.

"இன்று நேரமே இல்லை! பிறகு நான் உங்களுக்கு தனியாக வைத்து தருகிறேன்" என்றார்.

"அடியேனுக்கு, பெருமாளும், அகத்தியரும், நீங்களும் எப்பொழுது வேண்டுமானாலும் தருவீர்கள். அது தெரியும். ஆனால், இங்கு வந்திருக்கும் அகத்தியர் அடியவர்களுக்கு, இன்றைய புண்ணிய நாளன்று, பெருமாள் ஆசிர்வாதத்துடன், மஞ்சள் பொடியை கொடுக்க விரும்புகிறேன். அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்பது பெருமாளின் விருப்பமும் கூட. இன்று விட்டால், இவர்களுக்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி வரும்" என்று கூறியவுடன், அதை புரிந்துகொண்டு, "சரி" என்றார். அதற்கான ஏற்பாட்டை கவனிக்க புறப்பட்டேன்.

பெருமாளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் பண்ணவேண்டும் என்ற அவாவில், பழங்களை வாங்கி வந்திருந்தோம். அதை தயார் பண்ண 5 அடியவர்கள் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். மேலும் நிறைய பேர்களுக்கு, ஏதேனும் ஒரு விதத்தில் வேலை செய்திட அவா. ஒருவர் வந்து, "இத்தனை நேரம் நீங்கள் பழங்களை சிறு துண்டுகளாக்கி விட்டீர்களே, சற்று விலகி, எனக்கும் அந்த வேலையை செய்ய ஒரு வாய்ப்பை தரக்கூடாதா?" என்று கேட்க, குழுவில் அமர்ந்து வேலை பார்த்த ஒரு சிலர் விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும் என்று வழி விட்டனர். ஆனந்தமான காட்சி அது.

அப்போதுதான் கவனித்தேன், வாங்கி வந்திருந்த பழங்கள் மிக குறைவாகவும், பஞ்சாமிர்தம் தயார் செய்ய தந்திருந்த பாத்திரம் மிகப் பெரியதாகவும் இருந்தது. அடடா! பழங்கள் குறைந்துவிட்டதே. எப்படி இந்த பாத்திரம் நிரம்ப போகிறது? பக்கத்தில் எங்கும், பழங்கள் கிடைக்காதே, டவுனுக்கு சென்றால் தான் வாங்க முடியும். இன்னும் ஒரு அரை மணி நேரத்தில், பூசை தொடங்கிவிடுவார்களே! என்ற எண்ணம் வந்தது.

நம் கையில் இது இல்லை என்றுணர்ந்து, பெருமாளுக்கு எப்படி வேண்டுமோ, அப்படி அவர் அமைத்துக்கொள்ளட்டும், என்ற நினைப்புடன், நடுக்கல்லூர் வரை சென்று ஒரு சில சாமான்களை 15 நிமிடத்தில் வாங்கி வர தீர்மானித்தேன். எப்படி செல்வது? என்ற எண்ணம் வந்த பொழுது, ஒரு அகத்தியர் அடியவர் தன்னிடம் இரு சக்கர வாகனம் இருப்பதாகவும், தான் சென்று வருவதாகவும் கூறினார்.

"இல்லை! நான் வர வேண்டும். என்னென்ன சாமான்கள் என்று எனக்குத்தான் தெரியும். வாருங்கள் சென்று வரலாம்" என்று புறப்பட்டோம்.

20 நிமிடத்தில் சாமான்களை வாங்கி வந்து பார்க்கையில், பஞ்சாமிர்த பாத்திரம் நிரம்பி வழிந்திருந்தது. எனக்கு ஆச்சரியம். எப்படி? என்று ஒரு நண்பரிடம் வினவ, வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஏதேனும் ஒரு பழம் வாங்கி வந்திருந்தனர். நாம் வாங்கியது தீர்ந்து போய் விட்டது என்றறிந்தவுடன், அவர்கள் கொண்டு வந்ததையும் கொடுத்து உதவினார்கள், என்றார்.

மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என தீர்மானித்து, ஐந்து பேரை தேர்வு செய்து, கோவில் பிரகாரத்தில் இருக்கும் சுற்று விளக்கை ஏற்ற சொல்லலாம் என்றுதான் சாமான்கள் வாங்க சென்றேன். கூடவே மஞ்சள் பொடியும்.

மஞ்சள் பொடியை பெருமாள் கரங்களில் பூசுவதற்கு ஏதுவாக, ஒரு பாத்திரத்தை தந்தார், அர்ச்சகர். அதை பிரிக்க முயலும் போது, முடியவில்லை. உடனேயே ஒரு அடியவர் வந்து, "அய்யா! மஞ்சள் பொடியை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், அடியேன் அதை கத்தரித்து தருகிறேன்" என்று வினவினார். 

"வந்து அமருங்கள், இருவரும் சேர்ந்து செய்வோம்" என்று அவர் கத்தரித்து தர, அடியேன் பாத்திரத்தில் ஒவ்வொன்றாக போட்டேன்.

அவர் பொள்ளாச்சியிலிருந்து அகத்தியர் பூசைக்கு வந்திருக்கிறார்.

"அடுத்த முறை, நான் மஞ்சள் பொடி தயார் செய்து கொண்டு வருகிறேன். எவ்வளவு வேண்டி வரும்?" என்றாரே பார்க்கலாம்.

"தற்போது 500 கிராம் வாங்கியிருக்கிறேன். இது காணுமோ எனத்தெரியவில்லை. அனைவருக்கும், திருப்தியாக கொடுக்க வேண்டுமென்றால் ஒரு கிலோ வரை வேண்டிவரும். அதை அடுத்த வருடம்தான் தீர்மானிக்க முடியும்" என்றேன்.

அர்ச்சகர் வந்து, மஞ்சள்பொடி வைத்திருந்த பாத்திரத்தில், பெருமாளின் தீர்த்தத்தைவிட்டு, நன்றாக குழைத்து, பின் பெருமாள், தாயார் கைகள், மார்பு, பாதத்தில் பூசிவைத்துவிட்டு, வெளியே வந்து பாத்திரத்தை காட்டினார்.

அதில் மிச்சம் மீதி எதுவுமே இல்லை.

"பூசை முடிந்து கேளுங்கள், எடுத்து தருகிறேன்" என்று விட்டு போனார்.

வெளியே வந்து பார்த்த பொழுது, இரண்டு அண்டாவும் நிரம்பி, நான்கு குடங்களிலும் நீர் இருந்தது. ஐந்தாவது குடம் எங்கே? என்று பார்க்க, அதை நிரப்ப 5 அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து நதியை நோக்கி, சென்று கொண்டிருந்தனர்.

"நம்ம நிலைமையை பாரு! அகத்தியர் பூசையில், பெருமாளுக்கு நதி நீர் எடுக்க விரும்பிய பொழுது, கடைசி குடம் ஒன்று தான் இருக்கிறது. நாம் ஐந்து பேர் போட்டி போடுகிறோம். சரி ஐந்து பேரும் பிரித்துக்கொண்டு சேவை செய்வோம்" என்றபடி கோவிலுக்கு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

மூன்று ஆண்களை தெரிவு செய்த பின், பெண்கள் பகுதியை நோக்கி "யாராவது இரண்டு பேர் வருகிறீர்களா? சுற்று விளக்கு போடவேண்டும்!" என்று கேட்ட தாமதம், அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்கள் குழு அப்படியே எழுந்தனர்.

"அடடா! இத்தனை பேர் வேண்டாம்! ஒரு மூன்று பேர் போதும்" என்றவுடன் 4 பேர்கள் வந்தனர்.

அவர்கள் கையில் விளக்கேற்றுவதற்கான சாமான்களை கொடுத்த பின், சீக்கிரம் போட்டுவிடுங்கள்! பூசை உடனேயே தொடங்கிவிடுவார்கள், என்றேன்.

அவர்கள் ஒரு குழுவாக சென்ற பின் தான் ஒரு யோசனை வந்தது.

பெருமாள் இங்கு வந்த பொழுது, முதலில் அமர்ந்த மண்டபத்தில் விளக்கு போடச் சொல்லவே இல்லையே, என்று நினைத்து  போய் பார்த்தால், அந்த மண்டபத்தில் இரண்டு புறப்பாடு வாகனங்களை வைத்திருந்தனர்.

ஒரு நான்கு அடியவர்களை சேர்த்துக் கொண்டு, அந்த வாகனங்களை இன்னொரு இடத்திற்கு சுமந்து சென்று மாற்றிய பின், அந்த மண்டபத்தை சுத்தம் செய்ய கூறினேன்.

ஒருவர், அந்த மண்டபம் சற்று உயரமாக, நீளமாக இருந்ததால், மேலேறி சுத்தம் செய்யட்டுமா என்ற உடன், முதன் முறையாக அந்த அர்த்த மண்டபத்தின் முக்கியத்தை கூற, புரிந்து கொண்டு, அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தினோம். பெருமாள் அமர்ந்த இடம் என்பதால், எல்லோருக்கும் விளக்கு போட ஆசை. "அனைவரும் ஒரு விளக்கு போடுங்கள்" என்று கூறிவிட்டு, கருட மண்டபம் வந்து பார்க்க, உற்சவ மூர்த்தங்களை, அர்ச்சகர் கொண்டு வைத்திருந்தார்.

அண்டா நிறைய நதி நீர். என்னவோ ஒன்று குறைகிறதே என்று யோசனை வர, போகரின் 128 மூலிகைப்பொடியை அர்ச்சகரிடம் கொடுத்து இரண்டு அண்டாவிலும் போடச்சொன்னேன்.

"பூசையை தொடங்கலாமா?"என்று சைகையால் அர்சகர் கேட்க, ஒரு 10 நிமிடம் தாருங்கள், ஒருசிலர் சுற்று விளக்கேற்ற போயிருக்கிறார்கள். இப்பொழுது வந்துவிடுவார்கள்" என்றேன்.

அவர்களும், 10 நிமிடத்தில் வந்து சேர, அர்ச்சகர் உற்சவ மூர்த்தங்களுக்கான அபிஷேக ஆராதனையை, மார்பில், தலையில், கையில் எண்ணை சார்த்தி, தொடங்கினார்.

"அப்பாடா! ஒருவழியாக பூசை ஆரம்பித்தாகிவிட்டது! அது போதும்! இனி அகத்தியரும் பெருமாளும் மற்றவைகளை பார்த்துக் கொள்வார்கள். அடியேன் சிறிது நேரம் இளைப்பாரலாம்" என்று பின்னாடி இருந்த மேடை பக்கமாக சென்றேன்.

அங்கு ஒரு பெரியவர், அகத்தியர் பூசைக்கு, அடியவர்கள் கொண்டு வந்த சாமான்களை, பிரித்து, குழுவாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

நான் எட்டி பார்க்கவே, அவர், "சரியா, விதவிதமாக அடுக்கி வைத்துவிட்டால், எடுத்துக் கொடுப்பது சுலபம். அபிஷேகத்தின் போது என்ன வேண்டுமோ, கேளுங்கள். சரியாக எடுத்துக் கொடுத்து விடுகிறேன்" என்றார்.

அப்பொழுதுதான் கவனித்தேன். அகத்தியர் அடியவர்கள் பூசைக்கு கொண்டு வந்த சாமான்கள் பாதி மேடையை நிரப்பி இருந்தது. ஏதோ யோசனையுடன் திரும்பி பார்க்க, எங்கும் அகத்தியர் அடியவர்கள் அபிஷேக பூஜையை ஆனந்தமாக தரிசித்துக் கொண்டிருந்தனர்.

பரவசத்தால், "அகத்திய பெருமானே! பெருமாளே!" என்று கண்மூடி தியானிக்க, அங்கு அர்ச்சகர் நின்றிருந்த இடத்தில், அவரில்லை, அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தாயாருடன் நின்று பூசை செய்து கொண்டிருந்தார்.


சித்தன் அருள்................ தொடரும்!