​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 3 December 2017

சித்தன் அருள் - 736 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 5

சரி! இரண்டு அண்டாவும் அகத்தியர் அடியவர்களால், நதியிலிருந்து நீர் எடுத்து வரப்பட்டு, நிரப்பப்பட்டுவிடும், என்று உணர்ந்து, அடுத்த விஷயத்துக்கு அர்ச்சகரை தொடர்பு கொண்டேன்.

"சுவாமி!, இந்த மஞ்சள் பையை பெருமாள் பாதத்தில் வைத்து விடுங்கள். பிறகு, பூசை முடிந்த பின் வாங்கி கொள்கிறேன்" என்று கொடுத்தேன். சந்நிதானத்துக்குள் செல்வதால், என்னவென்று பிரித்துப் பார்ப்பது பழக்கம். அதை பிரித்துப் பார்த்து, உடனேயே, அப்படியே கொண்டு பெருமாள் பாதத்தில் வைத்து விட்டு வந்தார்.

"ஒரு வேண்டுதல் கூட உள்ளது" என்றேன்.

"என்ன?" என்றார் அர்ச்சகர்.

"மஞ்சள் பொடி வாங்கித்தருகிறேன். அதை பெருமாள் வலதுகரம், பாதம், மார்பு, தாயார் கரங்களில் சார்த்திவிட்டு, தாருங்கள். அனைவருக்கும் அதை மருந்தாக கொடுக்க வேண்டும்" என்றேன்.

"இன்று நேரமே இல்லை! பிறகு நான் உங்களுக்கு தனியாக வைத்து தருகிறேன்" என்றார்.

"அடியேனுக்கு, பெருமாளும், அகத்தியரும், நீங்களும் எப்பொழுது வேண்டுமானாலும் தருவீர்கள். அது தெரியும். ஆனால், இங்கு வந்திருக்கும் அகத்தியர் அடியவர்களுக்கு, இன்றைய புண்ணிய நாளன்று, பெருமாள் ஆசிர்வாதத்துடன், மஞ்சள் பொடியை கொடுக்க விரும்புகிறேன். அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்பது பெருமாளின் விருப்பமும் கூட. இன்று விட்டால், இவர்களுக்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி வரும்" என்று கூறியவுடன், அதை புரிந்துகொண்டு, "சரி" என்றார். அதற்கான ஏற்பாட்டை கவனிக்க புறப்பட்டேன்.

பெருமாளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் பண்ணவேண்டும் என்ற அவாவில், பழங்களை வாங்கி வந்திருந்தோம். அதை தயார் பண்ண 5 அடியவர்கள் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். மேலும் நிறைய பேர்களுக்கு, ஏதேனும் ஒரு விதத்தில் வேலை செய்திட அவா. ஒருவர் வந்து, "இத்தனை நேரம் நீங்கள் பழங்களை சிறு துண்டுகளாக்கி விட்டீர்களே, சற்று விலகி, எனக்கும் அந்த வேலையை செய்ய ஒரு வாய்ப்பை தரக்கூடாதா?" என்று கேட்க, குழுவில் அமர்ந்து வேலை பார்த்த ஒரு சிலர் விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும் என்று வழி விட்டனர். ஆனந்தமான காட்சி அது.

அப்போதுதான் கவனித்தேன், வாங்கி வந்திருந்த பழங்கள் மிக குறைவாகவும், பஞ்சாமிர்தம் தயார் செய்ய தந்திருந்த பாத்திரம் மிகப் பெரியதாகவும் இருந்தது. அடடா! பழங்கள் குறைந்துவிட்டதே. எப்படி இந்த பாத்திரம் நிரம்ப போகிறது? பக்கத்தில் எங்கும், பழங்கள் கிடைக்காதே, டவுனுக்கு சென்றால் தான் வாங்க முடியும். இன்னும் ஒரு அரை மணி நேரத்தில், பூசை தொடங்கிவிடுவார்களே! என்ற எண்ணம் வந்தது.

நம் கையில் இது இல்லை என்றுணர்ந்து, பெருமாளுக்கு எப்படி வேண்டுமோ, அப்படி அவர் அமைத்துக்கொள்ளட்டும், என்ற நினைப்புடன், நடுக்கல்லூர் வரை சென்று ஒரு சில சாமான்களை 15 நிமிடத்தில் வாங்கி வர தீர்மானித்தேன். எப்படி செல்வது? என்ற எண்ணம் வந்த பொழுது, ஒரு அகத்தியர் அடியவர் தன்னிடம் இரு சக்கர வாகனம் இருப்பதாகவும், தான் சென்று வருவதாகவும் கூறினார்.

"இல்லை! நான் வர வேண்டும். என்னென்ன சாமான்கள் என்று எனக்குத்தான் தெரியும். வாருங்கள் சென்று வரலாம்" என்று புறப்பட்டோம்.

20 நிமிடத்தில் சாமான்களை வாங்கி வந்து பார்க்கையில், பஞ்சாமிர்த பாத்திரம் நிரம்பி வழிந்திருந்தது. எனக்கு ஆச்சரியம். எப்படி? என்று ஒரு நண்பரிடம் வினவ, வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஏதேனும் ஒரு பழம் வாங்கி வந்திருந்தனர். நாம் வாங்கியது தீர்ந்து போய் விட்டது என்றறிந்தவுடன், அவர்கள் கொண்டு வந்ததையும் கொடுத்து உதவினார்கள், என்றார்.

மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என தீர்மானித்து, ஐந்து பேரை தேர்வு செய்து, கோவில் பிரகாரத்தில் இருக்கும் சுற்று விளக்கை ஏற்ற சொல்லலாம் என்றுதான் சாமான்கள் வாங்க சென்றேன். கூடவே மஞ்சள் பொடியும்.

மஞ்சள் பொடியை பெருமாள் கரங்களில் பூசுவதற்கு ஏதுவாக, ஒரு பாத்திரத்தை தந்தார், அர்ச்சகர். அதை பிரிக்க முயலும் போது, முடியவில்லை. உடனேயே ஒரு அடியவர் வந்து, "அய்யா! மஞ்சள் பொடியை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், அடியேன் அதை கத்தரித்து தருகிறேன்" என்று வினவினார். 

"வந்து அமருங்கள், இருவரும் சேர்ந்து செய்வோம்" என்று அவர் கத்தரித்து தர, அடியேன் பாத்திரத்தில் ஒவ்வொன்றாக போட்டேன்.

அவர் பொள்ளாச்சியிலிருந்து அகத்தியர் பூசைக்கு வந்திருக்கிறார்.

"அடுத்த முறை, நான் மஞ்சள் பொடி தயார் செய்து கொண்டு வருகிறேன். எவ்வளவு வேண்டி வரும்?" என்றாரே பார்க்கலாம்.

"தற்போது 500 கிராம் வாங்கியிருக்கிறேன். இது காணுமோ எனத்தெரியவில்லை. அனைவருக்கும், திருப்தியாக கொடுக்க வேண்டுமென்றால் ஒரு கிலோ வரை வேண்டிவரும். அதை அடுத்த வருடம்தான் தீர்மானிக்க முடியும்" என்றேன்.

அர்ச்சகர் வந்து, மஞ்சள்பொடி வைத்திருந்த பாத்திரத்தில், பெருமாளின் தீர்த்தத்தைவிட்டு, நன்றாக குழைத்து, பின் பெருமாள், தாயார் கைகள், மார்பு, பாதத்தில் பூசிவைத்துவிட்டு, வெளியே வந்து பாத்திரத்தை காட்டினார்.

அதில் மிச்சம் மீதி எதுவுமே இல்லை.

"பூசை முடிந்து கேளுங்கள், எடுத்து தருகிறேன்" என்று விட்டு போனார்.

வெளியே வந்து பார்த்த பொழுது, இரண்டு அண்டாவும் நிரம்பி, நான்கு குடங்களிலும் நீர் இருந்தது. ஐந்தாவது குடம் எங்கே? என்று பார்க்க, அதை நிரப்ப 5 அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து நதியை நோக்கி, சென்று கொண்டிருந்தனர்.

"நம்ம நிலைமையை பாரு! அகத்தியர் பூசையில், பெருமாளுக்கு நதி நீர் எடுக்க விரும்பிய பொழுது, கடைசி குடம் ஒன்று தான் இருக்கிறது. நாம் ஐந்து பேர் போட்டி போடுகிறோம். சரி ஐந்து பேரும் பிரித்துக்கொண்டு சேவை செய்வோம்" என்றபடி கோவிலுக்கு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

மூன்று ஆண்களை தெரிவு செய்த பின், பெண்கள் பகுதியை நோக்கி "யாராவது இரண்டு பேர் வருகிறீர்களா? சுற்று விளக்கு போடவேண்டும்!" என்று கேட்ட தாமதம், அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்கள் குழு அப்படியே எழுந்தனர்.

"அடடா! இத்தனை பேர் வேண்டாம்! ஒரு மூன்று பேர் போதும்" என்றவுடன் 4 பேர்கள் வந்தனர்.

அவர்கள் கையில் விளக்கேற்றுவதற்கான சாமான்களை கொடுத்த பின், சீக்கிரம் போட்டுவிடுங்கள்! பூசை உடனேயே தொடங்கிவிடுவார்கள், என்றேன்.

அவர்கள் ஒரு குழுவாக சென்ற பின் தான் ஒரு யோசனை வந்தது.

பெருமாள் இங்கு வந்த பொழுது, முதலில் அமர்ந்த மண்டபத்தில் விளக்கு போடச் சொல்லவே இல்லையே, என்று நினைத்து  போய் பார்த்தால், அந்த மண்டபத்தில் இரண்டு புறப்பாடு வாகனங்களை வைத்திருந்தனர்.

ஒரு நான்கு அடியவர்களை சேர்த்துக் கொண்டு, அந்த வாகனங்களை இன்னொரு இடத்திற்கு சுமந்து சென்று மாற்றிய பின், அந்த மண்டபத்தை சுத்தம் செய்ய கூறினேன்.

ஒருவர், அந்த மண்டபம் சற்று உயரமாக, நீளமாக இருந்ததால், மேலேறி சுத்தம் செய்யட்டுமா என்ற உடன், முதன் முறையாக அந்த அர்த்த மண்டபத்தின் முக்கியத்தை கூற, புரிந்து கொண்டு, அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தினோம். பெருமாள் அமர்ந்த இடம் என்பதால், எல்லோருக்கும் விளக்கு போட ஆசை. "அனைவரும் ஒரு விளக்கு போடுங்கள்" என்று கூறிவிட்டு, கருட மண்டபம் வந்து பார்க்க, உற்சவ மூர்த்தங்களை, அர்ச்சகர் கொண்டு வைத்திருந்தார்.

அண்டா நிறைய நதி நீர். என்னவோ ஒன்று குறைகிறதே என்று யோசனை வர, போகரின் 128 மூலிகைப்பொடியை அர்ச்சகரிடம் கொடுத்து இரண்டு அண்டாவிலும் போடச்சொன்னேன்.

"பூசையை தொடங்கலாமா?"என்று சைகையால் அர்சகர் கேட்க, ஒரு 10 நிமிடம் தாருங்கள், ஒருசிலர் சுற்று விளக்கேற்ற போயிருக்கிறார்கள். இப்பொழுது வந்துவிடுவார்கள்" என்றேன்.

அவர்களும், 10 நிமிடத்தில் வந்து சேர, அர்ச்சகர் உற்சவ மூர்த்தங்களுக்கான அபிஷேக ஆராதனையை, மார்பில், தலையில், கையில் எண்ணை சார்த்தி, தொடங்கினார்.

"அப்பாடா! ஒருவழியாக பூசை ஆரம்பித்தாகிவிட்டது! அது போதும்! இனி அகத்தியரும் பெருமாளும் மற்றவைகளை பார்த்துக் கொள்வார்கள். அடியேன் சிறிது நேரம் இளைப்பாரலாம்" என்று பின்னாடி இருந்த மேடை பக்கமாக சென்றேன்.

அங்கு ஒரு பெரியவர், அகத்தியர் பூசைக்கு, அடியவர்கள் கொண்டு வந்த சாமான்களை, பிரித்து, குழுவாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

நான் எட்டி பார்க்கவே, அவர், "சரியா, விதவிதமாக அடுக்கி வைத்துவிட்டால், எடுத்துக் கொடுப்பது சுலபம். அபிஷேகத்தின் போது என்ன வேண்டுமோ, கேளுங்கள். சரியாக எடுத்துக் கொடுத்து விடுகிறேன்" என்றார்.

அப்பொழுதுதான் கவனித்தேன். அகத்தியர் அடியவர்கள் பூசைக்கு கொண்டு வந்த சாமான்கள் பாதி மேடையை நிரப்பி இருந்தது. ஏதோ யோசனையுடன் திரும்பி பார்க்க, எங்கும் அகத்தியர் அடியவர்கள் அபிஷேக பூஜையை ஆனந்தமாக தரிசித்துக் கொண்டிருந்தனர்.

பரவசத்தால், "அகத்திய பெருமானே! பெருமாளே!" என்று கண்மூடி தியானிக்க, அங்கு அர்ச்சகர் நின்றிருந்த இடத்தில், அவரில்லை, அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தாயாருடன் நின்று பூசை செய்து கொண்டிருந்தார்.


சித்தன் அருள்................ தொடரும்!
 

10 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  2. அன்னை லோபமுத்ரா சமேத அகஸ்திய பெருமானின் திரு வடி சரணம். அபிஷேகம், மஞ்சள் பொடி பிரசாதம், திவ்ய தர்சனம், தெய்வ வாக்காக நீங்கள் பதிவு எங்கள் பாக்கியம்.

    ஜெய் ஸ்ரீ ராம்
    வேலும் மயிலும் சேவலும் துணை

    ReplyDelete
  3. அய்யா வணக்கம்,

    ஓம் அகத்தீசாய நமஹ!

    ஒவ்வாரு வரியை படிக்கும் போது உண்மையிலே எனக்கு மெய் சிலிர்க்குது அய்யா. ஏனென்றால் அகத்தியர் அருகில் இருந்து, அவர் செய்த பூஜைகளை நானும் காணும் பாக்கியம் நங்கள் பெற்றோம் என்று.

    நாங்கள் ஐவரும் சேர்ந்து ஒரு குடம் நீர் தாமிரபரணியில் இருந்து எடுத்து வந்து ஊற்றும் பாக்கியமும் பெற்றோம் அய்யா.

    எல்லாம், அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி...

    நன்றி அய்யா.

    ஓம் அகத்தீசாய நமஹ.

    அன்புடன்,

    மு. மோகன்ராஜ்
    மதுரை

    ReplyDelete
  4. Sir,
    Very happy to be one among the people gathered at Kodaganallur on that day.
    When I was circumbulating the temple , I thought that Agasthiar would have reached the temple and I can't see him but he can see everyone inside the temple. Best spiritual moments I ever had before. As you said ii, without agasthiar's blessing it would have been impossible to me to reach Kodaganallur on that day .My heart beats faster when I think of that experience. Praying agasthiar to bless me to attend every year till I am alive .

    ReplyDelete
  5. ஐயா சிவ சக்கரம் படம் இருந்தால் பதிவிடவும்.. காலை விழித்தவுடன் நினைப்பதர்க்கு ..

    ReplyDelete
  6. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  7. அய்யா,
    ஓம் அகத்தீஸ்யா நமஹ, சென்ற வருடமே பூஜையில் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இம்முறை அகத்தியர் அருளால் பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தற்கு அகத்திய பெருமானுக்கும், இதை முன்னின்று அனைத்து ஏற்பாடுகளும் செய்த தங்களுக்கும், இதில் பங்கேற்று தங்களால் முடிந்த சேவையை செய்த அனைத்து பக்தர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete