​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 7 December 2017

சித்தன் அருள் - 737 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 6


எதைக் கண்டாலும், எதை உணர்ந்தாலும், பெரியவர்கள் எதை உரைப்பது என்று தீர்மானிக்கிறார்களோ, அதைத்தான் பிறருக்கு, ஓரளவுக்கு தெரிவிக்க முடியும். முழுமை பெற வேண்டுமென்றால், ஒருவர், அவராகவே உணர்ந்தால்தான் உண்டு. அப்பொழுதும், அங்கும், அவர்கள் அருள் வேண்டும்.

அன்று அடியேன் கண்ட காட்சியை யாரிடமும் அங்கு வைத்து உரைப்பதில்லை என்று தீர்மானித்தேன். யாருக்கெல்லாம், எவ்விதத்தில் உணர வைத்தார்களோ என்ற எண்ணமும் வந்தது. ஒரு விஷயத்தை அடியேன் அடிக்கடி மனதுள் நினைப்பது உண்டு. அவர்கள் பார்வை நம் மீது பட்டதா என்பதுதான் முக்கியமே தவிர, நம் பார்வை அவர்கள் மீது பட்டதா என்பது முக்கியமில்லை. ஏனென்றால், நம் நேரம் நல்லதாக இருந்தால், நாம் அறியாமலேயே, ஒருவேளை "நயன தீக்க்ஷை" கூட கிடைக்கலாம். அப்படி, அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு, அவர்கள் அறியாமலேயே, அவரின் அருள் பார்வை கிடைத்தது? என்று யோசிக்க தொடங்கினேன்.

நேரம் வரும் பொழுது அது தெரியவரும், என்று எண்ணம் மனதுள் வந்தது.

ஆம்! அது உண்மை என்பது, பின்பு வேறு ஒரு அகத்தியரின் சிறந்த அடியவர், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறிய பொழுது உணர்ந்தேன்.  ஒன்று மட்டும் நிச்சயம். அன்று, அங்கு வந்திருந்து, பெருமாளின் ஆராதனையை கண்டு மகிழ்ந்தவர், மிக, மிக புண்ணியசாலிகள். அதற்காக, வராதவர்கள், வர ஆசைப்பட்டு பல காரணங்களால் வர முடியாதவர்கள், பாக்கியம் செய்யாதவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்களுக்கும் சேர்த்து, கடைசியில், தீபாராதனையின் பொழுது அடியேன் வேண்டிக்கொண்டேன் என்பதே உண்மை.

பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் தொடங்கிய பொழுது, முதலில் துளசியால் தைலக்காப்பு போடப்பட்டது. மிச்சம் மீதி இருந்த தைலத்தை, அர்ச்சகர் பாத்திரத்துடன் தர, அதை பெற்று அங்கு வந்திருந்த அனைவருக்கும், கரங்களில், பிரசாதமாக கொடுக்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

பால், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், தேன், நெய், பலவிதமான மூலிகைகள், தயிர், வாசனாதி திரவியங்கள், பன்னீர், இளநீர், அடியவர்கள் சுமந்து கொண்டு கொடுத்த தாமிரபரணி தீர்த்தம் என அபிஷேகம் நீண்டு கொண்டே சென்றது. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு சிலர் ஸ்லோகங்களை கூறினார். இரு பெரியவர்கள் குழுவுடன், அர்ச்சகர் சேர்ந்து புருஷசூக்தம் கூறி, கலச தீர்த்தத்தை பெருமாளுக்கும், தாயாருக்கும், தேசிகருக்கும் சிறப்பாக அபிஷேகம் செய்தார். பெருமாளுக்கும், தாயாருக்கும் சார்த்திய மஞ்சள்பொடி கலவையை பிரசாதமாக தர, அதுவும் கொஞ்சமாக இருந்ததால் எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை. சீக்கிரமே தீர்ந்து போனது. பெருமாளின் உள் சன்னதியில், அவர் கரத்தில், மார்பில், பாதத்தில் சார்த்தியது பத்திரமாக இருப்பதால், அதை எடுத்து முடிந்தவரை பிறகு கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன்.

விமர்சையான அபிஷேக ஆராதனைகள் நிறைவு பெற்றதும், திரை போடப்பட்டது. பெருமாளுக்கு அலங்காரம் தொடங்கியது.

வந்திருந்த அகத்தியர் அடியவர்களின் கூட்டத்தை பார்த்ததும் சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அனைவரும் பசியோடு அமர்ந்திருந்தனர். பெரியவர்கள் சற்றே, அசந்து போய் அமர்ந்திருந்தனர். எல்லோருக்கும், பிரசாதம் விநியோகம் செய்யவேண்டும். பிரசாத விநியோகத்துக்கான தட்டை கொண்டு வருவதாக சொன்னவர், மறந்து போய் விட்டிருந்தார். கையில் இருந்ததோ 200 தட்டுகள். அனைவருக்கும் கொடுப்பதற்கு போதாது. என்ன செய்வது என்று ஆதங்கத்துடன் யோசித்த பொழுது, திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பர், அடியேனின் முக மாற்றத்தை கண்டு, "என்ன ஆயிற்று? என்ன வேண்டும்?" என்றார். நடந்ததை கூற, அவசர தேவையை உணர்ந்து, இன்னொருவரை கூட்டிக்கொண்டு தட்டு வாங்க கிளம்பினார்.

"என்ன பெருமாளே! அகத்தியரே! இப்படி போட்டு தாக்குகிறீர்களே! இந்த கடைசி நிமிடத்தில் உணர்த்தினால், அடியேன் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு மாற்று வழியை நீங்கள் தான் காட்ட வேண்டும்" என பிரார்த்தித்தேன்.

என்னவோ தோன்ற, மேடையில் சாமான்கள் வைத்த இடத்தில் நின்று கொண்டு எங்கேனும் ஒரு வழி கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்ததை கவனித்த ஒருவர் வந்து, "யாரோ ஒரு அகத்தியர் அடியவர், நிறைய காகித தட்டுகளை கொண்டு வந்திருக்கிறார். இதோ பாருங்கள்" என்று காட்ட, எனக்கு போன மூச்சு திரும்பி வந்தது போல் உணர்ந்தேன். அதை கையில் எடுத்து பார்க்கவும், அதை வாங்கி வந்த பெரியவர் அருகில் வந்தார்.

"இந்த தட்டுக்கள் நீங்கள் வாங்கி வந்ததா? உங்கள் தனிப்பட்ட தேவைக்கா அல்லது வீட்டுக்கு கொண்டு போக வாங்கினீர்களா?" என்றேன்.

"இதை நான் தான் வாங்கி வந்தேன். இங்கு அகத்தியர் அடியவர்களுக்கு விநியோகம் செய்ய ஏதேனும் கொண்டு வரவேண்டும் என்று, நேற்று இரவுதான் எண்ணம் வந்தது. இனிப்போ, சாப்பிடும் பொருளோ கிடைக்காததால், இதை வாங்கி கொண்டு வந்தேன்" என்றார்.

அடியேனுக்கு, என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"பிரசாத விநியோகத்துக்கு தட்டுக்கள் குறைவாக இருக்கிறது. உங்கள் அனுமதி இருந்தால், இதை நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?" என்றேன்.

"அதற்காகத்தான் வாங்கி வந்திருக்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன விஷயம். என் மகனும், மருமகளும் வந்திருக்கிறார்கள். அவர்கள் கையால், ஒரு சிலருக்கு ஏதேனும் அன்னம் பாலிக்க விரும்புகிறார்கள். பிரசாத விநியோகத்தின் பொழுது, அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியுமா?" என்றார்.

"பிரசாத விநியோகத்தின் பொழுது, அழைத்து வாருங்கள். நிச்சயமாக அந்த வாய்ப்பை அகத்தியர் அருளுவார்" என்று கூறி, தட்டுக்களை மனமுவந்து தந்தற்கு நன்றியை கூறி, கருடாழ்வார் மண்டபத்தில் இருக்கும் பெருமாளுக்கும், அகத்தியருக்கும், புன்னகையுடன் நன்றியை கூறினேன்.

அருகில் இருந்த நண்பரிடம் "இதெல்லாம் சோதனைகளாக இருந்தாலும், கடைசியில் இன்பமாக முடிவது, அவர்களால்தான்" என்றேன்.

தட்டு வாங்க போன நண்பர், 200 தட்டுகளுடன் வந்து சேர்ந்தார். பெரியவர் கொடுத்தது 500 தட்டுகள்.

"தட்டு இல்லை என்றாயே! வந்து சேர்ந்துவிட்டதா?" என்று கேட்கும் பாணியில், திரை விலகியபொழுது பெருமாள் கேட்பது போல் இருந்தது.

அவர் எப்பொழுதும் "பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை நம்மைக் கொண்டு ஆட்ட வைப்பார்" என்று ஒரு எண்ணம் மனதுள் வந்தது.

சரி! ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்றில், நம்மை மாட்டிவிட்டுவிடுவார் என்று தோன்றி முடியும் முன்னரே ஒருவர் சற்று உரக்க கூறினார்.

"பத்து நாட்கள் ப்ரம்மோஸ்த்வம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. அந்த பத்து நாட்களில் பெருமாளுக்கு வந்த பூசை சாமான்களை விட இரண்டு மடங்கு, இந்த அரை நாள் பூசையில் கொண்டு வந்துவிட்டார்களே அடியவர்கள்!" என்றாரே பார்க்கலாம்.

அவர் பேசியது அடியேனிடம். நிறைய பேர் திரும்பி பார்த்தனர்.

"சரிதான்! நம்மை மாட்டிவிட்டு பெருமாள் அங்கிருந்து வேடிக்கை பார்க்கிறார். பதில் சொல்லாமல் பேசாமல் இருப்போம்" என்று இருந்தேன்.

அவர் விடுவதாக இல்லை.

"என்ன சுவாமி! பதிலே காணம்!" என்றார்.

"என்ன சொன்னாலும் மாட்டிக் கொண்டு விடுவேன். பிரச்சனையாகிவிடும். இதுதான் அகத்தியரின் சக்தி என்றால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ, தெரியாது" என்று யோசித்து 

"இந்த கேள்வியை நீங்கள் பெருமாளிடம்தான் கேட்கவேண்டும். எல்லாம் அவர் ஏற்பாட்டில் நடக்கிறது. நாங்களெல்லாம், அவருக்கும், அகத்தியருக்கும் அடியவர்கள். கொடுத்த வேலையை தெரிந்தவரை செவ்வென செய்ய முயற்சி செய்கிறோம்" என்று கூறி விலகினேன்.

"அதுதான் உண்மை" என்று யாரோ சன்னமாக கூறுவது கேட்டது.

மறுபடியும், கோவில் மணியின் சப்தத்துடன், மந்திர பூசைகள் ஆரம்பமானது.

சித்தன் அருள்..................... தொடரும்!

9 comments:

 1. "அன்று, அங்கு வந்திருந்து, பெருமாளின் ஆராதனையை கண்டு மகிழ்ந்தவர், மிக, மிக புண்ணியசாலிகள். அதற்காக, வராதவர்கள், வர ஆசைப்பட்டு பல காரணங்களால் வர முடியாதவர்கள், பாக்கியம் செய்யாதவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்களுக்கும் சேர்த்து, கடைசியில், தீபாராதனையின் பொழுது அடியேன் வேண்டிக்கொண்டேன் என்பதே உண்மை" - அய்யா கண்ணீர் மல்க நன்றிகள் கோடி. கர்மம் வாட்டினாலும் சித்தன் அருள் மடியில் தலை வைத்து அருள் கிடைக்கிறது அன்னை லோபாமுத்திரை சமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம் , தாயார் சமேத பச்சைபவண்ண பெருமாளின் திருவடி சரணம் வேலும் மயிலும் செய்வாலும் துணை - Senthilnathan - Chennai

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஐயா!!!

   எங்கள் எல்லாருக்கும் வேண்டியதற்காக மிக்க நன்றிகள் ஐயா....

   இப்பதிவை படிக்கும் போது நான் அங்கு இருப்பதை போலவே உணர்கிறேன்...

   இறைவா உமது அருளே அருள்...

   Delete
 2. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 3. Sir
  What is the meaning of nayana theekshai?
  How to know whether Agasthiar has seen us or not?
  Thanks..

  ReplyDelete
  Replies
  1. நயனம் என்றால் கண். பார்வையினாலேயே ஒருவருக்கு தீக்ஷை கொடுப்பது, என்று அர்த்தம். அதாவது சித்தத்தன்மையை அற்பார்வையினாலேயே அருள்வது, என்று இங்கு அர்த்தம்.

   Delete
 4. "நயன தீக்க்ஷை apdi enna sir

  ReplyDelete
 5. நயனம் என்றால் கண். பார்வையினாலேயே ஒருவருக்கு தீக்ஷை கொடுப்பது, என்று அர்த்தம். அதாவது சித்தத்தன்மையை அற்பார்வையினாலேயே அருள்வது, என்று இங்கு அர்த்தம்.

  ReplyDelete
 6. ஓம் ஸ்ரீ லோபாமுத்திர சமேத அகத்தீசாய நம:

  எங்கள் எல்லாருக்கும் பிரார்த்தனை செய்வதற்கு பாக்கியம் பெற்றோம், நமஸ்காரம் ஐயா

  எப்பொழுதாவூது நேரில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு காத்துருக்கிறோம்

  நன்றி ஓம் சாய் ராம்

  ReplyDelete
 7. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete