​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 20 February 2017

சித்தன் அருள் - 597 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணாகடாக்ஷத்திலே, இவனொத்த ஆத்மாக்கள் எம்மிடம் வரும்போதெல்லாம், அஃதொப்ப கிரகநிலையை அனுசரித்து இறைவன் அருளாலே கூறுகிறோம் என்றாலும்கூட, அடிப்படை விஷயம் யாதென்றால், விஷத்தை உண்டுவிட்ட ஒருவனுக்கு, அவன் உடலில் இருந்து விஷத்தை எடுப்பதற்கு மருத்துவர்கள் எங்ஙனம் போராட்டம் நடத்துகிறார்களோ, அந்த போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளையெல்லாம் மருத்துவர்கள் கையாள்கிறார்களோ, அதைப்போலதான் பாவங்கள் என்ற கடுமையான விஷம் ஒரு மனிதனை பற்றியிருக்கும் பட்சத்திலே, அதை எடுப்பதற்கென்றுதான் பிறவிகளும், பிறவிகளில் பல்வேறுவிதமான சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த சம்பவங்களை வெறும் உலகியல் ரீதியாக பார்க்கும்பொழுது கடினமாக, சோதனையாக, அவமானமாக, வேதனையாக தெரியும். ஆனாலும்கூட அதை ஒரு சிகிச்சை முறையாக பார்த்தால் நோயாளிக்கு அது எப்படி அவசியமோ அதைப்போல பாவங்களைக் கழிப்பதற்காக பிறவியெடுத்த ஆத்மாக்களுக்கு இஃதொப்ப லௌகீக அனுபவங்கள் அவசியம் என்பது புரியும். எனவே விஷத்தை உண்டுவிட்ட மனிதனுக்கு விஷமுறிப்பு சிகிச்சைபோல பாவங்களிலிருந்து ஒரு ஆத்மாவை விடுவித்து, நிரந்தரமாக தன்னை அறிவதற்கென்று எந்தப் பிறவியில் அந்த ஆத்மாவை தேர்ந்தெடுத்து தருகிறாரோ, அந்தப் பிறவியில் லௌகீக வெற்றிகள் அத்தனை எளிதாக கைவரப் பெறாமலும், சுற்றமும், உறவும் ஏளனம் செய்யும் வண்ணமும், ‘"பித்து பிடித்தவன், பிழைக்கத் தெரியாதவன்" என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டும் அந்த ஆத்மா, வாழத்தான் வேண்டும். நாங்கள் கூறவருவது ஒன்றுதான். இது போன்ற நிலையிலே மனம் தளராமல் திடம்கொண்டு வாழ்வதற்கு, இஃதொப்ப ஆத்மாக்கள் முயற்சியும், பயிற்சியும் செய்வதோடு விடாப்பிடியாக இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான். இஃதொப்ப ஆத்மாக்களுக்கு ஒருவேளை, ஒருவேளை ஜீவ அருள் ஓலையிலே வாக்குகள் வாராது. இருப்பினும் யாம் இறைவன் அருளால் எஃதாவது ஒரு வழியில் வழிகாட்டிக்கொண்டே இருப்போம். இறைவன் அருளாலே தத்துவ நிலை தாண்டி, பிறவியெடுத்ததற்கு ஏதோ ஒரு இல்லறம் நடத்தி, வாரிசை பெற்று வாழவேண்டிய நிலையிலே அந்த வாழ்க்கையும் ஓரளவு அர்த்தம் உள்ளதாக வேண்டும் என்று எண்ணுகின்ற நிலையிலே, அஃதொப்ப ஒரு பங்கம் வராமல் வாழ யாம் இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.