​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 13 April 2024

சித்தன் அருள் - 1586 - இவர்!

சித்தன் அருள் - 1579ன் தொடர்ச்சியாக!

சித்த வித்யார்த்திகளை புரிந்து கொள்வது சற்று கடினம். எப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள் என தீர்மானிக்க முடியாது. இந்த ஆகாசலிங்க ப்ரதிஷ்டையில் அவர் விருப்பப்படியே விட்டு விலகி நின்றேன். மூன்று வாரங்களுக்கு அவரை சந்திக்க செல்லவே இல்லை. பிரதிஷ்டை முடிந்து பிறகு ஒருநாள் பார்க்க செல்லலாம் என்று இருந்துவிட்டேன்.

ஒருநாள் குருவிடமிருந்து அழைப்பு வந்தது. ஏன் காணவில்லை என்று? நடந்ததை கூறினேன்!

"என்னிடம் முன்னரே கூறியிருக்கலாமே! நான் ஏற்பாடு பண்ணியிருப்பேனே! சரி போகட்டும். நாளை விடுமுறை தானே வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள்!" என்றார்.

மறுநாள் மாலை அந்தி மயங்கும் நேரத்தில் கோவிலுக்கு சென்றேன்! கீழே இருக்கும் ஒவ்வொரு இறை மூர்த்தங்களையும் வணங்கிவிட்டு படி ஏறி கோபுரமேடைக்கு சென்ற பொழுது, ஆகாச லிங்கம் மிக அருமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பார்த்த உடனேயே ப்ரதக்ஷிணம் செய்து அவர் முன் த்யானத்தில் அமர்ந்தேன். 

வினாடிக்குள் மனம் ஒன்று பட "ஓம் நமசிவாய" என்கிற  ஜபம் ஓடத்தொடங்கியது. உடல் உணர்வுகளை இழந்து, த்யானம் எங்கோ அழைத்து சென்றது.

மனக்கண்ணில்  கைலாசம்,அண்ணாமலையார் போன்றவர்கள் வந்து சென்றனர். "நீர் ஏன் அய்யா! இங்கு வந்து அமர்ந்தீர்?" என்று கேள்வியை கேட்டேன். அரை மணிநேர த்யானத்துக்குப்பின் ஒரு வில்வ இலையை எடுத்து லிங்கத்தில் சேர்த்த பொழுது, "இன்னும் 48 நாட்களுக்குள் உண்மை விளங்கும்" என்று வந்தது.

கை கூப்பி வணங்கிவிட்டு, "உமக்கும் வேற வேலை இல்லை! இப்படி ஏதாவது தகவலை கொடுத்து  தவிக்க விடுவது உங்கள் வழக்கம் தானே" என்று சிரித்தபடி கீழே இறங்கி வந்தேன்.

குருவும், சிஷ்யரும் மிக தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தனர். தூரத்தில் விலகி நின்று காத்திருக்க, குரு சிஷ்யரிடம், "நீ, அவனை அழைத்துக் கொண்டு போய் சாப்பிடச்சொல், விட்டா அப்படியே கிளம்பி போய்விடுவான்" என்றிட, சிஷ்யர் வந்து, அடியேன் கழுத்தில் கையை வளயமாக்கி போட்டு, சாப்பிட அழைத்து சென்றார்.

உடல் சிலிர்த்தது, மேலும் வலி உருவாகிற்று. சித்த வித்யார்த்தி, த்யானம் செய்த பின் தொட்டால் அப்படித்தான் இருக்கும்.

அவர் உணவை பரிமாறிய பொழுது, வந்த உத்தரவை அவரிடம் கூறலாமா? என்று யோசித்து, வேண்டாம் என்று தீர்மானித்தேன்.

வாரத்தின் கடைசி நாட்களில் விடுமுறையாததால், எப்போதும் கோடகநல்லூர் கிளம்பி சென்று சனிக்கிழமை மாலையில் பெருமாளுக்கு விளக்கேற்றி வேண்டிக் கொள்வேன். அந்த முறை, மிகுந்த அசதியாக இருந்ததால், வெள்ளிக்கிழமை இரவு, போக வேண்டாம் வீட்டில் இருந்து விடுவோம் என தீர்மானித்து, கம்ப்யூட்டரில் எதோ வேலை செய்து கொண்டு இருக்கும் போதே அசதியில் அமர்ந்து உறங்கிவிட்டேன்.

சற்று நேரத்தில், வலது காதருகில் வந்து "நாளை விடுமுறை தானே, நீ வந்து எனக்கு விளக்கு போட்டேன்" என்று யாரோ கூறுவது கேட்டது.

சிலிர்த்து எழுந்து எங்கு இருக்கிறோம் என்று பார்த்த பொழுது உறங்கிப்போனது தெரிய வந்தது. உடலில் அசதி இருந்தது.

"ரொம்ப அசதியா இருக்கு! பெருமாளே, நீங்கள் தெம்பு ஊட்டினால் வர முடியும். உங்களை நம்பி இறங்கி வருகிறேன்!  பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறி வண்டியை எடுத்து கிளம்பினேன்.

காற்றில் இருந்த குளிர்ச்சி உடலுக்கு தெம்பை ஊட்டியது.

பாட்டு கேட்டபடி வண்டி ஒட்டிக்கொண்டிருக்க, இரவு மணி 1.30 இருக்கும், ஒரு அழைப்பு செல்லில் வந்தது.

இந்த நேரத்துக்கு யார் கூப்பிடுகிறார்கள், என வண்டியை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், அது குருவின் அழைப்பு.

"திருச்சிற்றம்பலம்! என்ன இந்த நேரத்தில?" என்றேன்.

"சிவசிதம்பரம்! நீ இப்ப எங்க இருக்கே?" என்றார்.

"அடியேன் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருக்கிறேன்! என்ன விஷயம்?" என்றேன். 

"சிஷ்யன் சமாதி ஆயிட்டான். அவன் உடலை கோவிலில் வைத்திருக்கிறார்கள். நீ வந்துவிடு. இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கு வந்துவிடுவேன்!" என்றார்.

இதை கேட்ட அடியேனுக்கு தூக்கி வாரிப் போட்டது?

"எப்படி எப்ப நடந்தது?" என்றேன்.

"இன்று காலை அமர்ந்துவிட்டான்! நீ அங்கு வந்து சேரு!" என்று கூறி துண்டித்தார்.

ஒரு நிமிடத்தில் சுதாகரித்து, வண்டியை கோவிலை பார்த்து ஓட்டினேன்.

உடலெங்கும் வெள்ளை துணி சுற்றி பத்மாசனத்தில் அவர் உடல் கோவிலில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவர் ஏற்கனவே சொல்லியிருந்த இடத்தில் மிகப்பெரிய குழியை குழித்துக் கொண்டிருந்தனர்.

அவர் ஏற்கனவே  அடியேனுக்கு சொல்லி தந்தபடி 108 முறை "ஓம் நமசிவாய" என ஜபம் செய்து அவரிடம் சமர்ப்பித்தேன். எங்கும் அமைதி. எல்லோருக்கும் அதிர்ச்சி. இத்தனை வேகத்தில் அவர் சமாதியை அடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மெதுவாக மாடிப்படி ஏறி ஆகாசலிங்கத்தின் முன் நின்று கேட்டேன், "உன் பிரதிஷ்டை முடிந்து இன்று 46வது நாள். சஹஸ்ராரத்துக்கு ஏறி பூட்டிக்கொள்வது எப்படி என்பதை அவருக்கு காட்டிக்கொடுத்து, கூட்டி சென்றுவிட்டாயே!" என்றேன்.

சற்று நேரத்தில் குருவும் ஏனைய சிஷ்யர்களும் வந்து சேர்ந்தனர். குருவானவர் அவர் உடலை பிடித்து, தடவி, தட்டி பார்த்தபின் உரைத்தார்,

"என் சிஷ்யன், சமாதியாகிவிட்டான்! இனி திரும்பி வரமாட்டான்! இன்று மதியம் அவனை குழிக்குள் இறக்கி சமாதியில் வைத்து விடுவோம்" என்றார்!

பின்னர் மெதுவாக அடியேன் அருகில் வந்து நின்றவர் "நீங்க எப்ப வந்து சேர்ந்தீங்க?" என்றார்.

"ஒரு மணி நேரமாயிற்று! அடியேனுக்கு சமாதியில் வைக்கும் வரை இங்கு நிற்க முடியாது. முக்கியமான வேலை இருக்கிறது. நீங்கள் அனைவரின் உதவியுடன் செய்ய வேண்டியதை செய்யுங்கள்!" என்றபின், அவரை தனியே அழைத்து

"நன்றாக தேடுங்கள், உங்களுக்கு செய்தி எழுதி வைத்தபின்தான் அவர் சமாதி அடைந்திருக்கிறார். இந்த வழியை அவருக்கு காட்டிக்கொடுத்தவர், மேலே ஆகாசலிங்கமாக அமர்ந்திருக்கிறார். வேண்டுமென்றால், அவர் முன் அமர்ந்து த்யானம் செய்யுங்கள். உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை தெரிவிப்பார், அடியேன் கிளம்புகிறேன்!" என்றேன்.

சற்று நேரம் யோசித்தவர், "யாரும் மேலே வராதீங்க" என்றுவிட்டு ஆகாசலிங்கம் முன் த்யானத்தில் அமர்ந்தார்.

"குருவுக்கான தக்ஷிணை உன் திருவோட்டில் உள்ளது. நீ கிளம்பி என் கோவில் வாசலுக்கு வந்து அமர்ந்திரு. நேரம் வரும் பொழுது யாமே வந்து கூட்டி செல்கிறோம்" என உத்தரவு வந்தது.

திருவோட்டில் இருந்த காசுகளை கொட்டிவிட்டு அடியில் பார்க்க, ஒரு காகிதத்தில், சஹஸ்ராரம் ஏறுவது, பூட்டிக்கொள்வது எப்படி என அவர் படம் வரைந்து வைத்திருந்தார், குரு தட்சிணையாக.

அன்றைய தினம், மதியம் அவர் தன்னை பூட்டிக்கொண்டு 36 மணி நேரத்துக்குப்பின் அவருக்காக குழிக்கப்பட்ட குழியில் சமாதியில் வைக்கப்பட்டார்.

சாதாரணமாக ஒரு மனிதன் இறந்தால் நான்கு மணி நேரத்தில் "rigour mortis" என்கிற உடல் இருகிய தன்மை ஏற்படும். 36 மணி நேரம் கழிந்தும், சாதாரண மனிதனின் கை, கால்கள் போல் எல்லாமே மடங்கியது. குழியில், வில்வ இலையும், விபூதியும் நிரப்பி அவர் உடலின் மூக்கின் அருகில் வந்ததும், அவர் கண்ணிலிருந்து நீர் தாரையாக ஒழுகியது.

அவர் சமாதியின் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றும் தின பூஜை நடக்கின்றது.

இறைவன் கூறிய கோவில் முன் குருவானவர் சாதுக்களுடன் அமர்ந்து, இறைவன் வரவை எதிர் பார்த்து இன்றும் அமர்ந்திருக்கிறார்.

ஆகாசலிங்கம், இறைவன் நடத்திய திருவிளையாடல் என்று உணர்ந்து கொண்டேன். 

மேலே உள்ள படத்தில் ஆகாசலிங்கம் உள்ளது. பெரிதாக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. ஐயா சொல்ல வார்த்தைகளே இல்லை...இந்த பதிவு படித்தபொழுது வேறு உலகத்தில் நடந்தவற்றை நேரில் பார்த்தது போலே ஓர் உணர்வு...மிக்க நன்றிகள் பல...அறிய அற்புத ங்களை தங்களின் மூலமாக தெரிந்துகொள்கின்றோம்.

    நீங்கள் புனித ஆத்மா ஓருமுறையேனும் உங்களை நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.🙏🙏🙏

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய திரு. கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்குரிய திரு. அக்னிலிங்கம் அருணாசலம் ஐயா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்குரிய திரு. ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு வணக்கம்,

    குரு அகத்தியர் அடியவர்கள் அணைவருக்கும் வணக்கம்,

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    மிக்க நன்றி ஐயா,
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  6. இந்த கோவில் எங்கு உள்ளது ஐயா

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete