சித்தன் அருளில் வெளிவந்த "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" தொகுப்பை நீங்கள் படித்திருக்கலாம். அதில் ஒரு குருவும் இரண்டு வித்யார்த்திகளையும் அறிமுகப் படுத்தியிருப்பேன். அதில் இரண்டாவது, இளைய வித்யார்த்தி எனது அருமை நண்பர். தான் குருவாக வரித்துக் கொண்டவருக்கு, என்னென்ன சேவைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும், நேரம், காலம் பார்க்காமல் செய்பவர். குருவிடம் மிகுந்த மரியாதை கொண்டவர்.
இவருக்கு என ஒரு குடும்ப கோவில் இருந்தது. அங்கு சன்னதிக்கு பக்கத்திலேயே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து " நான் போன பின் இங்கு குழி எடுத்து என் உடலை சமாதியில் வைக்க வேண்டும்!" என அடிக்கடி கூறி வந்தார். குருவானவர் "அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம், நான் கவனித்துக் கொள்கிறேன்" என ரொம்ப எளிதான விஷயமாக பேசிக்கொள்வார். அருகில் நின்ற அடியேனுக்கு இது உறுத்தலாக இருப்பதை உணர்ந்த குருவானவர், "வித்யார்த்திகள், இப்படித்தான் பேசுவாரக்ள். எல்லோரும் சமாதி நிலைக்குத்தான் முயற்சிக்கிறார்கள். அதை அருளுவது இறைவன் செயல். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்பார்.
இவர், பொழுது போக்கிற்காக ஒரு மருத்துவ மனையில் மேலதிகாரியாக வேலை பார்த்தார். தான் சித்த மார்கத்தில் கற்ற மூச்சு வித்தைகளை சக மருத்துவர்களை கூப்பிட்டு காண்பிப்பார். அவர்களும், இவரை பரிசோதிக்கும் பொழுது அரண்டு விடுவார்கள். ஒரு முறை மருத்துவரிடம், என் இருதயம் துடிப்பது நின்றுவிட்டது. என்னை பரிசோதியுங்கள் என கூற, அவர்களும், இவர் கூறுவது உண்மை என்று கண்டறிந்து, ecg, xray, scan போன்றவைகளை எடுத்து பார்க்க, எதிலுமே துடிப்பு இல்லாததை கண்டறிந்தனர். இவரோ, அனைத்து பரிசோதனையும் செய்து விட்டீர்களா? நான் எப்போதும் போலத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பரிசோதனை கூற்றின் படி நான் உயிரோடு இருக்கக் கூடாது. இதெப்படி சாத்தியம்? ஏன்றார் சிரித்தபடி.
"சித்த மார்கத்தில் எல்லாம் சாத்தியம். அதற்கான மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இப்பொழுது கூட என் இதய துடிப்பை, மூச்சு பயிற்சியால், இடம் மாற்றியுள்ளேன். வேண்டுமென்றால், என் தலையின் பின் பக்கத்தில், கழுத்துக்கு மேல் பரிசோதனை செய்தால் இதயத்துடிப்பை காணலாம். பரிசோதித்துப் பாருங்கள் என்றிட, மருத்துவர்களும், பரிசோதித்து, அவர் கூறுவது உண்மை என முடிவுக்கு வந்தனர். இப்படி பல விஷயங்களை செய்து மருத்துவர்களையும், நண்பர் வட்டத்தையும் பதற வைப்பது, இவருக்கு வேடிக்கை.
இந்த மனிதரின் வேடிக்கைக்கு பின் ஒரு திடமான எண்ணம் உறைந்திருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
இரு மாத இடைவெளிக்குப் பின் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. ஒரு பெரிய லிங்கத்தை வாங்கி கோவிலில் ஒரு ஓரமாக வைத்திருந்தார்.
"என்ன சுவாமி எண்ணம்? இவ்வளவு பெரிய லிங்கம் ப்ரதிஷ்டைக்கு வாங்கியிருக்கீங்க?" என்றேன்.
"அது ப்ரதிஷ்டைக்குத்தான் வந்திருக்கு. ஆனா கீழே பூமியில் இல்லை. கோவிலின் மேலே கோபுரத்துக்கு முன்னாடி, ஆகாச லிங்கமாக பிரதிஷ்டை பண்ண உத்தரவாகியிருக்கு. அதுவும், சித்த மார்க்க முறைப்படி "பிராணாப்ப்ரதிஷ்டை" என்றார்.
"வாருங்கள், பிரதிஷ்டை பண்ணப்போகிற இடத்தை காட்டுகிறேன்" என்று அழைத்து சென்றார்.
கோபுரம் வடக்கு நோக்கி இருக்க, அதற்கு முன் விரிவான இடம். ஒரு நிமிடம் அங்கு நின்ற பொழுதே அந்த இடத்தின் அதிர்வலைகள் ஓங்கி தாக்கியது.
இந்த இடத்தில் ஆகாச லிங்கம், சரியான தேர்வுதான், என உண்ர்ந்தேன்..
"என்று?" என சுருக்கமாக கேட்டவுடன்
"உங்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது. சித்தமார்கத்தில் கைதேர்ந்த எட்டு குருவை வைத்து அஷ்டதிக்கையும் ஆவாஹனம் செய்து, இந்த பிரதிஷ்டை நடக்கும். அதற்குப்பின் என்றேனும் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்" என்றுவிட்டார்.
"சரி! இறைவன் விளையாட இறங்கிவிட்டார். இனி வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இல்லை என உணர்ந்தேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
வணக்கம் இந்த ஆலயம் எங்கு உள்ளது நண்பரே? விபரம் தெரிவித்தால் பல ஆன்மீக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete