​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 20 August 2013

இருவார இடைவேளை!

வணக்கம்!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் எனக்கு ஒரு சிறு இடைவேளை வேண்டியுள்ளது.  இருவாரங்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் "சித்தன் அருள்" தொடர் வழியாக சந்திக்கிறேன். அது வரை அகத்தியப் பெருமான் அருளிய நல்ல விஷயங்களை சிந்தித்திருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்!

ஓம் அகத்தீசாய நமஹ!

கார்த்திகேயன்

Monday, 19 August 2013

நாடி தொடர்பான தகவல்!

வணக்கம்!

திரு.கல்யாண குமார் என்கிற அகத்தியர் அடியவர் எனக்கு தெரிவித்த தகவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.  

வணக்கம் அன்புடையீர்,

ஒம் அகத்திசாய நம !!!

கருணை உள்ளம் கொண்ட கும்ப முனியின் அருளால் வைகாசி வளர்பிறையில் இருந்து , கோயம்புத்தூர் அருகே உள்ள கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில் அகத்தியர்  ஜீவ அருள் நாடியில் அருள்வாக்கு வருவதாக தகவல் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்பிற்கு மாதாஜி சரோஜினி - 9842550987

கல்லார் அகத்தியர் ஞான பீட முகவரி 

Sri Agathiar Gnana peedam
2/464-E, Agathiar Nagar,Thoorippalam
Kallar-641305,Mettupalayam,Coimbatore Dt, Tamilnadu, India 
PH:98420 27383, 98425 50987


நாடி பார்க்கும் நாள்:சனிக்கிழமை மட்டும் 
நேரம் :9 மணி முதல் 2 மணி வரை 
கட்டணம்:500/- ரூபாய்

என்றும் அன்புடன் 
கல்யாணகுமார் 

Thursday, 15 August 2013

சித்தன் அருள் - 137

​இல்லறத்தில் "திருமண வாழ்க்கை" என்பது இறைவனால் பலவித விஷயங்களை கருத்தில் கொண்டு ஆசிர்வதிக்கப் படுகிறது.  திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களின் முன்ஜென்ம, இந்த ஜென்ம கர்மா, அவர்களின் பெற்றோர்களின் கர்மா என்பதை பொறுத்து அவர்களுக்கு வாழ்க்கை அமையும். அவர்களை சூழ்ந்து நிற்பது நல்ல கர்மாவானால் இனிய வாழ்க்கையும், கெட்ட கர்மாவானால் அல்லல் நிறைந்த வாழ்க்கையும் அமையும்.  பிறர் வாழ்க்கையை அபகரித்துவிட்டு நம் சந்ததி மட்டும் நிறைவாக இருக்கவேண்டும் என்று செய்கிற செயல்கள் ஒரு போதும்​நிம்மதியை தராது. மேலும் நேர்வழியில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு திருமணம் நடத்தினால் மட்டுமே அவர்களுக்கு வாழ்க்கை இனிமையாக அமையும்.

இன்றைய தொகுப்பில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

ஒரு நாள் என் முன் வந்து நாடி வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்ந்தனர் ஒரு தம்பதியினர். அவர்கள் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தனர்.
  
"இந்தத் திருமணம் நடக்கக் கூடாது, இதை எப்படியாவது அகத்தியர் தான் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோபத்தோடும், ஆத்திரத்தோடும் தங்கள் பெண்ணைப் பற்றி பொருமிய படியே வேண்டுகோள் வைத்தனர் என்னிடம் ​, ஒரு பெற்றோர்.​

வந்த வேகத்தில் பேசியதால் அவர்கள் தங்கள் பெண் மீது கடும் கோபம் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களது ஆத்திரம் அடங்கட்டும் என்று சில நிமிடம் பொறுமையாக இருந்தேன்.

"பொதுவாக அகத்தியர், திருமணத்தை நடத்தி வைக்கத்தான் முன் வருவாரே தவிர, தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கம் இல்லையே.  தவறான நோக்குடன் வந்திருக்கிறீர்கள்.  வேறு இடம் சென்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்றேன்.

"அகத்தியருக்குத் தெரியும்.  அவரிடம் கேட்டுப் பாருங்களேன்" என்றார்கள் விடாப்பிடியாக.

நாடியைப் பிரித்தேன்.

"இந்தத் திருமணம் நடக்கக் கூடாது என்பதில் அகத்தியனுக்கும் உடன்பாடுதான்" என்றதும் அவர்கள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்.

"ஆனால், இந்த திருமணம் நடக்கும்" என்று அடுத்த வரி சொன்னதும் அவர்கள் முகம் சுருங்கி விட்டது.

"இது அருள்வாக்கு போல் தெரியவில்லை.  நீங்களாக இட்டுக் கட்டிச் சொல்வதுபோல் இருக்கிறதே" என்றவர்கள், "வேறு வழியே இல்லையா?" என்றார்கள்.

"வேறு வழி இல்லை.  எனினும் உங்களுக்கு வேண்டியது அந்த பையனோடு உங்கள் பெண்ணிற்கு திருமணம் நடக்கக் கூடாது.  உங்கள் பெண் உங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவுதானே?" என்று கேட்டார் அகத்தியர்.

"ஆமாம்"

"அப்படியென்றால், நான்கு நிலைகளை நீங்கள் கடக்க வேண்டும்.  ஒன்று சில பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும்.  இரண்டாவது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது.  மூன்றாவது இந்த ​ப்​ பையனுக்கும் உங்கள் பெண்ணிற்கும் திருமணம் நடக்கும்.  இதை தடுக்க முடியாது.  நான்காவது உங்கள் பெண் உங்கள் வீட்டிற்க்கே திரும்பி வந்து விடுவாள்" என்றார் அகத்தியர்.

"இவை எல்லாம் ஒன்றுகொன்று நேர்மாறாக இருக்கிறதே.  சரியாக வெட்டொன்று துண்டு ரெண்டாக இருக்க வேண்டாமா?  திருமணம் நடக்கும் என்றாலே, நாங்கள் இங்கு வந்ததற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம்.  பிறகு அவள் வீ ​ட்​டிற்கு வந்தால் என்ன? வராமல் போனால் என்ன?" என்று கோபத்தோடு கேட்டார்கள்.

"அம்மணி நீங்கள் கேள்வி கேட்டீர்கள்.  அகத்தியரிடமிருந்து பதில் வாங்கித் தந்திருக்கிறேன்.  ஏற்றுக் கொள்வதும், இதை மறுப்பதும் உங்கள் இஷ்டம்" என்றேன்.

"இல்லை சார்.  என் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இன்னும் இருபத்தேழு நாளில் திருமணம்.  இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  எங்களை கேட்காமலேயே திருமண எற்பாடுகளைச்செய்து விட்டார்கள்.  இது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் இதை தடுத்து நிறுத்த அகத்தியரை நாடி வந்திருக்கிறோம்" என்றார்கள்.

"காலம் கடந்து கடைசி நேரத்தில் வந்திருக்கிறபடியால் அகத்தியரால் எதுவும் செய்ய இயலாது.  ஆனால் சூட்சுமமாக சில செய்திகளை சொல்லியிருக்கிறார்.  இதில் ஏதோ காரணம் இருக்கும்" என்று சமாதானம் கூறினேன்.

"அகத்தியரை நாடி வந்தால், அத்தனையும் உடனே நடக்கும் என்றார்கள்.  அதனால் தான் நாங்கள் இங்கு வந்தோம்.  ஆனால் சொல்வதைப் பார்த்தால் ஏதோ எங்களை சமாதானப்படுத்துவதற்காக கதை விடுவது போல் தோன்றுகிறது" என்றார் கணவர்.

"நீங்கள் மட்டுமல்ல இந்த நாடியை படிக்கிறவர்களும், நாடிக் கட்டுரையை படிக்கிறவர்களுக்கும் இதை ஒரு கற்பனைக் கதையாகத்தான் எண்ணுகிறார்கள்.  அது அவரவர்கள் இஷ்டம்" என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

"பரிகாரங்கள் சொல்லுங்கள் செய்து பார்க்கிறோம்" என்றார்கள் கடைசியில்.

"சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை செய்ய வேண்டும்.  அதன் பின்னர் நாகத்தோடு கார்கோடக யந்திரத்தை முறையாக பூசித்து வைக்க வேண்டும்" என்று அகத்தியர் சொன்னார்.

அரைகுறை நம்பிக்கையோடு எழுதிக் கொண்டு போனார்கள்.

பதினெட்டு நாட்கள் கழிந்திருக்கும்.

"சார். அகத்தியர் சொன்ன பரிகாரங்களைச் செய்து விட்டோம்.  இன்னும் காரியம் வெற்றி பெறவில்லை.  அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிடும் போலிருக்கிறதே" என்றார்கள் நேரில் வந்து.

"திருமணம் நடக்கட்டுமே" என்றார், அகத்தியர்.

"இப்படிச் சொன்னால் எப்படி?"

"திருமணம் நடக்கும், பின்பு உங்கள் விருப்பப்படியே உங்கள் மகளுக்கு முறைப்படி உங்க ஜாதியிலேயே திருமணம் அமோகமாக நடக்கும்" என்று அருள்வாக்கு கூறினார்.

ஆனால், அவர்களுக்கு இதில் உடன்பாடில்லை.​ ​ மனமுடைந்து சட்டென்று வெளியே சென்று விட்டார்கள்.

நானும் அதை பெரிதுபடுத்தவில்லை, விட்டுவிட்டேன்.

பத்து நாட்கள் கழிந்தது.  மீண்டும் அதே தம்பதிகள் என்னிடம் வந்தார்கள்.  முகத்தில் சோகம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

"சார்! அகத்தியர் சொன்னபடியே அவர்கள் திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். இப்பொழுது அவள் கணவன் அஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்" என்றனர்.

"அடப் பாவமே! எப்படி? என்ன நடந்தது?" என்றேன்.

"திருமணத்தை பதிவு செய்து முடித்து திரும்பிக் கொண்டிருக்கும் ​போது, கார் விபத்தில் அவனுக்கு இடுப்பிற்கு கீழ் சரியான அடி.  நல்ல வேளை என் மகள் உயிர் பிழைத்துக் கொண்டாள்"​ என்றார்.​

"உங்கள் மகள் உயிர் பிழைத்துக் கொண்டது சந்தோஷம்.  அவன் நிலை எப்படி?"

"அவனுக்கு ஆயுள் கெட்டி. இடுப்பிற்கு கீழ் எந்த உறுப்பும் செயல்படவில்லை.  இன்னும் மூணு மாதம் கழித்து வெளியே வந்து விடுவான். ஆனால் அவனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று அமெரிக்க டாக்டர்களே சொல்லி விட்டார்களாம்".

"அப்படி​ ​என்றால்"

​"​இவன் பெயருக்கு தான் கணவன்.​"​

"ஆமாம்.  இப்படியிருக்க உங்கள் மகளால் எப்படி அவனோடு குடித்தனம் நடத்த முடியும்?"

"அதைத்தான் நாங்களும் யோசிக்கிறோம்.  இந்த விஷயத்தில் என் மகள் என்ன முடிவு எடுக்கப் போகிறாள் என்பதைப் பற்றி தெரியவில்லை." என்றனர்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.  மவுனம் காத்தேன்.

"அகத்தியர் தான் அன்றைக்கே சொல்லிவிட்டாரே, திருமணம் நடக்கும், அதைத் தடுக்க முடியாது என்றார்.  அதன்படி நடந்து விட்டது.  இப்பொழுது தாம்பத்திய வாழ்க்கை அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்துவிட்டது.  இனி அடுத்தபடி அவள் அவனை விட்டு பிரிந்து வர வேண்டியது தான் பாக்கி" என்று எண்ணிக் கொண்டேன்,

ஒருவேளை திருமணமான கணவனை விட்டு விட மனமில்லாமல் கடைசிவரை அவனுக்கு தொண்டு செய்தே வாழப்போகிறேன் என்று அந்தப் பெண் புதிய முடிவும் எடுக்கலாமே":, என்று கூட எனக்குத் தோன்றிற்று.

எதற்கும் நாடியை பார்க்கலாமே என்று பிரித்துப் பார்த்தேன்.

"மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் அவன், தன மனைவிக்கு தானே வேறொருவனை விரும்பி மணமுடித்து வைப்பான்.  இவளுக்கு வரும் இரண்டாவது கணவன், அவளது ஜாதியைச் சேர்ந்தவனாக இருப்பான்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.  பெற்றோர் விருப்பபடி அவளுக்கு பெற்றோர் வழி ஜாதியிலே திருமணம் நடக்கும். அந்தப் பையனும் அமெரி ​க்​​காவிலே குடியிருப்பதால் பிரச்சினை எதுவும் பின்னால் வராது" என்று அருள் வாக்கு சொன்னார்.

இதைக் கேட்டதும்தான் அந்தப் பெற்றோருக்கு பெரு மூச்சு வந்தது.  அகத்தியர் மீது நம்பிக்கையும் பிறந்தது.

"எல்லாம் சரி! ஆனால் ஏன் இவளுக்கு இப்படியொரு திருமணம் நடந்தது? அகத்தியர் நினைத்திருந்தால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாமே" என்று பயந்தபடியே கேட்டேன்.

"அந்தப் பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு இதற்கு விளக்கம் சொல்கிறேன்" என்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

ஒன்பது மாதம் கழிந்தது.

அகத்தியர் சொன்னபடியே அந்தப் பெண்ணிற்கு அவளது கணவனே வேறொருவனுக்குத் திருமணம் செய்து வைத்தான்.  இந்த இரண்டாவது கணவன், அவளுக்குத் தூரத்து சொந்தமாகவும் அமைந்து விட்டது மிகப் பெரிய சந்தோஷம்.

இந்த இரண்டாவது திருமணத்திற்குச் சென்றுவிட்டு அமெரிக்காவில்  இருந்து திரும்பிய அந்த பெண்ணின் பெற்றோர்கள், பிறகு ஒரு நாள் என்னைச் சந்தித்தனர்.

"என் பெண்ணின் திருமண வாழ்கையைப் பற்றி அகத்தியர் பின்னர் சொல்கிறேன் என்று சொன்னாரே.  இப்போது சொல்வாரா?" என்று கேட்டனர்.

படிக்க ஆரம்பித்தேன்.  படிக்க படிக்க அந்த பெற்றோரின் முகம் வெளுத்துப் போயிற்று.  கை-கால்கள் நடுங்கின.

அந்த செய்தி இதுதான்.

"கோவிலுக்கு கொடுத்த பணத்தை கோவிலுக்குச் செலவழிக்காமல் அதை பொய் கணக்கெழுதி உன் பெண்ணிற்கு செலவழித்து படிக்க வைத்தாய்.  கூடப் பிறந்த சகோதரியை ஏமாற்றி அவளுக்கு சேர வேண்டிய நியாயமான சொத்தை அபகரித்து அந்தப் பணத்தைக் கொண்டு வெளிநாட்டிற்கு உன் பெண்ணை அனுப்பி படிக்கவும், வேலைக்காகவும் பணத்தை தாறுமாறாக செலவழித்தாய்.

அதே சமயம், சகோதரி தனது குழந்தையைப் படிக்க வைக்க உதவிக் கேட்ட பொழுது பணம் கொடுக்க மறுத்ததோடு, அந்தக் குழந்தை பெரியவளாகி, திருமணம் செய்ய நினைத்த பொது, அந்த திருமணத்திற்கு லஞ்சம் பெற்ற, பாவப்பட்ட பணத்தைக் கொடுத்து அரைகுறை மனதோடு திருமணத்தை நடத்தியதோடு அந்தத் தம்பதிகளையும் பிரித்தாய்.

பின் எப்படியடா உன் பெண்ணின் திருமண வாழ்க்கை நல்லபடியாக நீடிக்கும்.  குறுக்கு வழியில் பணத்தைச் சேர்த்து அந்த பாவப்பட்ட பணத்தைக் கொண்டு சொந்தக் குழந்தைக்கு ஊட்டி வளர்த்தால், இது பாவத்தை ஊட்டி வளர்ப்பதாகும்.  அதனால் தான் இத்தனை சோகம் உன் பெண் வாழ்க்கையில் நடந்தது.

இந்த இரண்டாவது மணவாழ்க்கையும் நல்ல படியாக நீடிக்க இனியாவது பாவத்தைச் செய்யாதே. அவரவர் பொருளை அவரவர்களுக்கே திருப்பிக் கொடு. இல்லையேல், அவளது எதிர்காலம் கேள்விக்குறி தான்" என்றார் அகத்தியர்.

அன்று அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை வாங்கிக்கொண்டு சென்றவர்கள் பிறகு வரவே இல்லை.  அவர் சொல்படி நல்லது செய்து தன் மகளின் வாழ்க்கையை சமன் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஊட்டும் உணவும், வாழ்க்கையும், நல்ல கர்மாவை சுமந்த தாக இருந்தால் தான் வாழ்க்கையே அமைதியாக இருக்கும்.  இதை எல்லோரும் புரிந்துகொண்டால் சரி.  யாரும் உணரவில்லை, யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து மனதில் தோன்றியதை எல்லாம் செய்து, அதுவே தவறான வழியில் சம்பாதித்த செல்வமாக இருந்தால், யாருக்கும் நிம்மதியான இல்லற வாழ்க்கை என்பது கானல் நீராகத்தான் அமையும்.

உணர்ந்து விலகி நின்று அனைவரும் வாழ்வது நல்லது. 

சித்தன் அருள்................... தொடரும்!

Tuesday, 13 August 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 8

 • உண்ணும் உணவை ஒரு போதும் கைக்குள் உருட்டி உண்ணக்கூடாது. உருட்டி வைப்பது "பிண்டம்" எனப்படும். இது பித்ரு சடங்கில் உணவை வைக்கும் முறை.  உருட்டி உண்டால் நமக்கு நாமே பிண்டம் போட்டுக்கொள்வது போல் ஆகிவிடும். அது அன்னத்தை அவமதிப்பதாகவும் ஆகிவிடும்.
 • பெண்கள் உணவை பரிமாறும் போது தலை முடியை முடிந்து கொணட பின்னர்தான் பரிமாற வேண்டும். தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு உணவு பரிமாறக் கூடாது. நெற்றியில் திலகமும் இருக்கவேண்டும்.
 • உணவு உண்ட பின் குளிக்கக் கூடாது.  அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால், உண்டு ஒரு மணி நேரம் கழிந்து தான் குளிக்கவேண்டும். ஒருவர் உண்ட உணவு ஒரு மணி நேரத்துக்குள் ஜீரண நிலைக்கு சென்று விடும்.  கழிவுகள் அகற்றப்பட்டுவிடும். குளிப்பதினால் உடல் சூடு தணிக்கப்படுவதால், ஜீரணத்தை பாதிக்கும்.
 • ஒரு மணிநேரத்துக்கு பின் இரைப்பையில் தாங்கும் உணவு விஷமாக மாறி உடலை வருத்தும்.  அசைவ உணவு ஒரு மணி நேரத்துக்குள் ஜீரணிக்கப்படமாட்டா. ஆதலால், அசைவ உணவை உண்டு நமக்கு நாமே விஷம் ஏற்றிக் கொள்வதை தவிர்க்கவேண்டும். யோசிக்கவும்.
 • நவ கிரகங்கள் ஒருவரை, அவருக்கு எது மிக பிடிக்குமோ அந்த வழியில் தூண்டுதலை கொடுத்து, உள்ளே நுழைந்து தாங்கள் செய்ய வேண்டிய "வேலையை" செய்யும். அதில் ஒன்று உணவு.ஆதலால் எந்த குறிப்பிட்ட உணவின் மீதும் ஆசை/பற்றுதலை வைக்காமல் எது வந்து சேருகிறதோ அதை இறை சிந்தனையுடன் உண்பதினால், இவர்கள் பிடியிலிருந்து தப்பி விடலாம்.
 • உணவு தானம் எத்தனையோ தோஷங்களுக்கு சிறந்த பரிகாரம். ஒருவனுக்குள் நடக்கும் கர்ம யாகத்துக்கு உதவி புரிவதினால், நம் கர்மாவும் அதனுடன் கழிந்து போகும். அதனால் தான் கலியுகத்தில் "அன்னத்துக்கு" மிஞ்சின தர்மம் இங்கு இல்லை என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
 • பிறர் உண்ணும் இடத்தருகில் நின்று தும்முவது, துப்புவது போன்ற அசுத்தங்களை பிறர் செய்யக்கூடாது.
 • உண்ணும் உணவால் உடல் மேன்மை பெற பெரியவர்கள் அளவாக உண்ணச்சொன்னார்கள். எப்படி?  உண்ணும் முன் சுத்தமான நீரால் காலை கழுவிவிட்டு அமர வேண்டும்.  காலில் உள்ள நீர் உலந்ததும் சாப்பிடுவதை நிறுத்திவிடவேண்டும். இது தேவைக்கு சாப்பிடுவதை தெரிந்துகொள்ள ஒரு அளவுகோல்.
 • இரவு உண்ணும் உணவில், தயிர், நெல்லிக்காய், கீரை, இஞ்சி போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது உடல் நலத்துக்கு நல்லதல்ல.
 • மிளகு ஒரு நல்ல மருந்து.  தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள். இது எந்த விஷத்தையும் அறுத்துவிடும். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்கிற மொழி இதன் மகத்துவத்தால் வந்தது.
 • ஜீரகம் செரிமானத்துக்கு மிகவே உதவிபுரியும். அசைவம் சாப்பிட்டவர்கள் உடல் சுத்தி பெற 48 நாட்களுக்கு சீரகத்தை தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து அருந்தி வந்தால் தாது சுத்தி ஏற்படும்.
 • உணவில் கடுகை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளுங்கள். இது மிக வீரியமான ஒன்று. பின்னர் ஏதேனும் வியாதிக்காக மருந்து சாப்பிட்டால் மருந்து வேலை செய்யாது.
 • வாரத்தில் ஒரு நாள் உப்பை தவிர்த்து (இரு வேளையேனும்) விரதமிருங்கள். வைத்தியச் சிலவை நிறைய அளவுக்கு தவிர்க்கலாம்.

சித்தன் அருள்............... தொடரும்!

Friday, 9 August 2013

பெரியவர்கள் சமாதியான இடங்கள் - ஒரு தொகுப்பு

வணக்கம்!

பெரியவர்கள் சமாதியான இடங்களை பற்றிய ஒரு தொகுப்பை ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.  அதை பார்த்தபோது, பெரியவர்கள் சமாதிகளை தேடி அலைகின்ற எல்லோருக்கும் ஒரு பேருதவியாக இருக்கும் என்று நினைத்து, அந்த நண்பரின் அனுமதியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  கீழே இருக்கும் தொடுப்பில் போய் டவுன்லோட் செய்துகொள்ளவும். 

கார்த்திகேயன்

http://www.mediafire.com/download/fmrgvigglzp6vgl/Periyava_Samadhi.pdf


Thursday, 8 August 2013

சித்தன் அருள் - 136

"இவனைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று ஓர் அழகான இளஞ்சன் ஒருவனை என் முன்னால் காட்டி ஒருவர் கேட்டார்.  அந்த இளைஞ்சனை கண்களால் அளவேடுத்தேன்.

நல்ல செக்கச் சிவந்த மேனி, குறுந்தாடியுடன் நடிகர் மாதிரி அரை குறையாக சீவப்பட்ட தலையுடன் காணப்பட்டார்.  இறுகலான பாண்ட், டி சர்ட் அணிந்திருந்தார். உடம்பெங்கும் வாசனை வரும் அளவுக்கு வாசனை திரவியங்களை தூவியிருந்தது தெரிந்தது.  ஆனால், கண்களில் மட்டும் ஏனோ ஒரு மிரட்சி.

வலது கையில் பல சுற்றுக்களால் சுற்றப்பட்ட சாயம் போன சிவப்புக் கயிறு இருந்தது.  ஆனால் 'வாட்ச்" இல்லை. டி ஷர்டை நன்றாக "இன்" பண்ணியிருந்தான்.  மற்ற படி, அவனிடம் எந்த குற்றமும் இருப்பதாக என் கண்ணிற்கு தெரியவில்லை.

"நமஸ்தே" என்று அவன் என்னிடம் சொல்லி, ஒருகையால் என் காலைத் தொட்டுக் கும்பிட்டது வட இந்தியப் பாணியை நினைவுப்படுத்தியது.  முகத்தில் அபாரமான களை தென்பட்டதால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாக, நல்ல படிப்பு படித்தவனாகவும் இருப்பான் என்று என் அறிவுக்குத் தோன்றியது.

அவனை உட்காரச் சொல்லிவிட்டு, அவனுடன் வந்தவரிடம் "என்ன விசேஷம்?" என்று சாதாரணமாகக் கேட்டேன்.

"இவனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" மீண்டும் கேட்டார் அவர்.

"எதுவும் கேடுதலாகத் தோன்றவில்லை.  அவ்வளவுதான்!"

"இவன் குணத்தைப் பற்றி......"

"பார்க்க சாத்வீகமாக இருக்கிறான்.  மற்றவற்றை அகத்தியரிடம் தான் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றேன்.

நான் சொன்னதை அந்தப் பெரியவர் ஏற்பதாகத் தெரியவில்லை.  நான் அதைப் பற்றி கவலைப்படாமல் நாடியைப் பிரித்தேன்.

"ஈன்றோர் செய்த தவறால் இவன் இப்போது தண்டனையை அனுபவிக்கிறான்.  ஒன்றரை ஆண்டு முன்பு சிறு விபத்தால் இவனது சிறு மூளையின் ஒரு பகுதி லேசாகப் பாதிக்கப்பட்டது.  யார் செய்த புண்ணியமோ இவனைக் காப்பாற்றி இருக்கிறது.  உயர் தொழில் நுட்பக் கலையில் வல்லவனாகத் திகழ்ந்த இவன், புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்கிறான்" என்று மிகச் சுருக்கமாக முடித்தார் அகத்தியப் பெருமான்.

விஷயத்தை வந்தவரிடம் லேசாக எடுத்துக் காட்டிவிட்டு "என்ன நடந்தது" எனக் கேட்டேன்.

"அகத்தியர் ஒன்றும் சொல்லவில்லையா?" என்று அலட்ச்சியமாக கேட்டவர், என்ன நடந்தது என்பதை கூறினார்.

"இவன் எம்.டெக். படித்தவன்.  கல்லூரியில் விளையாடும் பொழுது ஒரு சிறு அடி தலையின் பின்புறம் ஏற்பட்டது.  அதை அப்போது பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.  இப்பொழுது வேலைக்குச் செல்கிறான்.  ஆனால் அங்கே அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறான். தான் யார் என்பதே தெரியவில்லை.  நினைத்தால் வேலைக்குப் போகிறான்.  இல்லையேல் தூங்கு தூங்கு என்று தூங்குகிறான்.  இவன் மன நிலை பாதித்திருக்கிறது.  யாராவது செய்வினை செய்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.  இதை அகத்தியரிடம் கேட்டச் சொல்லுங்கள்" என்றார் அந்தப் பெரியவர்/

"செய்வினையை அகத்தியர் நம்பவில்லை.  எனவே அதை விட்டு விடுங்கள்" என்று சொன்ன நான், "வேறு என்ன தான் பாதிப்பு இருக்கிறது" என்று கேட்டேன்.

"என்னைப் போட்டு அடிக்கிறான்.  அவன் அம்மாவை கத்தியால் கீறுகிறான்.  கூடப் பிறந்தவர்களையும் எட்டி  உதைக்கிறான்,   தகாதவாறு நடந்து கொள்கிறான்."

"அப்புறம்?"

இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை குளிக்கிறான்.  பல்லை தேயப்பதே இல்லை.  பழைய சட்டையை கழற்ற மறுக்கிறான்.  ராத்திரி முழுவதும் விழித்திருக்கிறான்.  அடிக்கடி ரெயில் தண்டவாளத்தில் ரெயில் என்ஜின் செயல்படுவதைப் போல் செயல்பட்டுக் காட்டுகிறான்."

"டாக்டரிடம் அழைத்துச் சென்றீர்களா?"

"அதை ஏன் கேட்கிறீர்கள்?  நாங்கள் பார்க்காத டாக்டரே இல்லை. கொடுக்காத மருந்தும் கிடையாது.  எதிலும் குணமாகவில்லை. கடைசி முயற்சியாக அகத்தியரிடம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் அந்தப் பெரியவர்.

நிதானமாக அந்தப் பையனைப் பார்த்தேன்.  லேசாக புன்னகை புரிந்தான் அவன்.

அகத்தியர் இந்தப் பையனை எப்படி குணப்படுத்தப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் ஏதோ ஒரு பெரும் பாதிப்பு இவனை கடுமையாக பாதித்திருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது.

நாடியைப் புரட்டினேன்.

"இன்னவனுக்கு சிறு மூளையின் சிறிய நரம்ப்யுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.  ரத்த ஒட்டம் சிறப்பாக இல்லை.  சிறு மூளையில் கீறல் அறுவைச் சிகிர்ச்சை ஒன்றை செய்தால் பையன் பிழைத்துக் கொள்வான்" என்றவர், பல்வேறு மூலிகைகளை சொல்லி, "இவற்றை பக்குவமாகப் பொடி செய்து காலையிலும், மாலையிலும் தேன் கலந்து கொடுத்து வந்தால் 90 நாட்களில் தெளிவான நிலைக்கு வந்து விடுவான்.  இப்பொழுது கட்டுப்படுத்தாவிட்டால் எல்லோரையும் கடிக்கத் தோன்றும்.  இவன் தன்னைத் தானே கடித்து புண்ணாக்கிக் கொள்வான்.  இது செய்வினைக் கோளாறு அல்ல" என்று சுருக்கமான அருள் வாக்கைத் தந்தார் அகத்தியப் பெருமான்.

நான் இதைப் படித்து முடித்ததும், அந்தப் பெரியவர் சட்டென்று எழுந்து விட்டார், முகத்தையும் சுருக்கிக் கொண்டார்.

"நான் எதையோ நினைத்து இங்கே வந்தேன்.  இது அருள்வாக்கு தருவதாகத் தெரியவில்லையே.  இந்த நோய் எப்பொழுது குணமாகும்? எப்படி குணமாகும்? என்று சொல்லாமல் வழ வழவென்று பரிகாரம் மட்டும் சொல்கிறாரே" என்று கோபித்துக் கொண்டார் அவர்.

நான் சொன்னேன்..

"இப்படி கோபித்துக் கொண்டு போவது நல்லதில்லை.  எனக்கு நாடி படிக்க வேண்டும் என்ற வசியமும் இல்லை.  இரண்டாவது, அகத்தியர் பெருமான் அருமை தெரியாமல் ஏதேதோ பேசுவதும் நல்லதில்லை. எனவே, தாங்கள் அருள் கூர்ந்து எழுந்து போகலாம்!" என்றதும் பதைபதைத்துப் போனார்.

"நான் அப்படிச் சொல்லவில்லை.  அகத்தியரிடம் வந்தால் உடனே சரி செய்து விடுவார் என்று எல்லோரும் சொன்னார்கள்.  அதனால் அப்படி பேசிவிட்டேன்" என்றார்.

எனக்கு அந்தப் பெரியவர் மீது வருத்தம் இருந்தாலும், அந்தப் பையனைப் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு விதத்தில் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஏனோ தோன்றியது.

அகத்தியரிடம் வேண்டி மீண்டும் நாடியைப் புரட்ட ஆரம்பித்தேன்.

"இந்த பாதிப்பு ஏற்பட்டதற்கு அருகில் இருக்கும் அவனது தந்தையே காரணம்.  சிறு வயதில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து வரும் போது, கூட வந்த நண்பனை ரயில் முன் தள்ளினான். நல்ல வேளையாக அந்த நண்பன் உயிர் பிழைத்துக் கொண்டான். ஆனால் ரெயில் எஞ்சினின்ஒரு பகுதி, அவனது தலையில் லேசாக உரசியதால் பிற்காலத்தில் அவனது சிறு மூளை பாதித்து இன்று வரை பைத்தியம் போல் நடமாடிக் கொண்டிருக்கிறான்.

அந்தப் பையன் இட்ட சாபம், இப்பொழுது இந்த நபரின் பையனை பாதித்திருக்கிறது.  இப்பொழுதெல்லாம் முன் ஜென்ம பாபம், புண்ணியம் என்று சொல்வதை விட, இந்த ஜென்மத்திலேயே அவரவர்கள் செய்த பாபத்தை அனுபவிக்கிறார்கள்.  அதனால் தான் வசதியிருந்தும், அழகிருந்தும் இந்த நபருக்கு சித்த பிரம்மை பிடித்த நிலையில் மகன் அமைந்து விட்டான்" என்று அகத்தியர் சொன்ன போது அந்தப் பெரியவருக்கு முகம் அஷ்ட கோணலாக மாறியது.

ஏதோ சொல்ல நினைத்தவர், வாயை மூடிக் கொண்டார்.

கவுரவ குறைச்சல் காரணமாக அந்தப் பெரியவர் அகத்தியர் சொன்னதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது.

சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அகத்தியரை வேண்டி நாடியைப் புரட்டினேன்.

"இந்த அகத்தியன் இவ்வளவு தூரம் கடந்த கால நிகழ்ச்சியை எடுத்துச் சொல்லியும் இவன், தன தவறை உணர்வதாகத் தெரியவில்லை. இன்னொன்றையும் சொல்கிறேன் கேள்.  இந்த வாலிபனுடைய தாத்தா, அதாவது இந்த நபரின் தந்தை முன்னொரு காலத்தில் ரெயில் எஞ்சின் ஓட்டுனராக இருந்தார்.  இவர் ரெயிலை இயக்கி ஓட்டும் பொழுது, தெரிந்தோ, தெரியாமலோ ஏகப்பட்ட மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது.  இதில் பாதி தற்கொலையாக இருக்கலாம். சில கவனக் குறைவாக கூட இருந்திருக்கலாம்.  எப்படி இருந்த போதிலும் இவனது தந்தைக்கு பல உயிரைக் கொன்ற தோஷம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக அந்த உயிர்கள் சாந்தி அடைய மோட்ச்ச தீபம் ஏற்றியிருக்க வேண்டும்.  அல்லது ராமேஸ்வரம் சென்று தில சாந்தி யாகம், பீடாபரிஹார யாகம், யம தர்ப்பணம் போன்ற ஒன்பது வகை தர்ப்பணங்களை செய்திருக்க வேண்டும்.  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உயிரும் ரெயிலில் அடிபட்டு இறந்தால், அந்த ரெயிலை இயக்குபவர் இதனைக் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்களது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை இப்படித்தான் சித்த பிரம்மையில் பாதிக்கும்.  இந்த பரிகாரத்திற்கு வேறு மாற்று பரிகாரமும் கிடையாது.  இப்படிப்பட்ட பாவத்தை இந்த இளைஞ்சனின் தந்தை அகத்தியனிடம் ஒத்துக் கொள்கிறாரா இல்லையா?" என்று அகத்தியர் நேரடியாகவே கேட்டுவிட்டார்.

ஐந்து நிமிடம் மவுனமாக இருந்த அந்த இளைஞ்சனின் தந்தை, அதை கடைசியாக ஒத்துக் கொண்டார்.

"அகத்தியரை ஒரு ஜோதிடராக எண்ணித்தான் நான் இங்கு வந்தேன். என் தந்தையைப் பற்றியும் என்னைப் பற்றியும் இப்படி புட்டுப் புட்டு வைப்பார் என எண்ணவில்லை.  ஒரு முனிவரை நான் தரக் குறைவாகப் பேசியதற்கு வருந்துகிறேன்.  அகத்தியர் சொன்னது எல்லாம் உண்மை.  இப்பொழுது நான் என்ன செய்தால் என் மகனுக்குரிய சித்த சுவாதீனம் நீங்கும்?" என்று பரிதாபமாகக் கேட்டார்.

"ஏற்கனவே நான் சொன்ன மூலிகைகளை முறைப்படி பதப்படுத்தி தினமும் உண்டு வரட்டும்.  ராமேஸ்வரம் சென்று ஒன்பது வகையான தோஷ பரிகாரங்களை முழு நம்பிக்கையோடு செய்யட்டும்.  பிறகு சோளிங்கருக்கும், குணசீலப் பெருமாள் கோவிலுக்கும் சென்று மூன்று நாட்கள் தங்கி வரட்டும். இத்தனை பிரார்த்தனைகள் செய்யும் பொழுது தடங்கல் வரலாம், எரிச்சல் வரலாம், அகத்தியர் மீது கோபமும் வரலாம்.

ஆனால்.....

பக்தியோடு பிரார்த்தனை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்த "தோஷம்" விலகுவதோடு, இன்னும் ஒன்பது வருடத்தில் இவன் சித்த ப்ரம்மயிலிருந்து விடுபடுவான்.  இவன் சித்த பிரம்மை நீங்கியதும் திருமணம் நடக்கும்.  நல்ல தொழிலொன்றையும் தொடங்குவான். ஒரு விஷயம், இந்த பிரார்த்தனை செய்யும் பொழுது "தீட்டு" படக் கூடாது. கவனமுடன் செய்யட்டும். ஏதேனும் தவறு நடந்தால் பின்பு அகத்தியனை பழிக்கக் கூடாது" என்றும் எச்சரித்து அனுப்பினார்.

ஆறு மாதம் கழிந்திருக்கும்.

அகத்தியர் சொன்னபடி எல்லா பரிகாரங்களையும் முழுமையாக, நம்பிக்கையோடு செய்து விட்டதாகவும், இப்பொழுது அந்த இளைஞ்சனுக்கு கொஞ்சம் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார், அந்தப் பெரியவர்.

மகிழ்ச்சியாக இருந்தது.

சரியாக ஒன்பது ஆண்டுகள் கழிந்தது.

"என் பையன் இப்பொழுது மிக நன்றாகத் தேறிவிட்டான்.  திருமணமும் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. சொந்தத் தொழில் ஒன்றையும் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான்.  சரளமாக ஆங்கிலத்தில் பேசி, எல்லோரையும் வியக்க வைக்கும் அவன், தினமும் விடியற்காலை வேளையில் ஆழ்ந்த பக்தியோடு பிரார்த்தனைகளையும் செய்து வருகிறான்" என்று அந்தப் பையனின் தந்தை ஆனந்தமாக என்னிடம் சொன்ன போது அகத்தியர் எப்படியெல்லாம் அருள் பாலிக்கிறார் என்று மனம் நெகிழ்ந்து போனேன்.

"வாகன ஓட்டுனர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் வண்டியில் யாரேனும் விழுந்து அடிபட்டு இறந்திருந்தால் நீதி மன்றத்திலிருந்து வேண்டுமானால் தப்பி விடலாம்.  ஆனால் தெய்வ சன்னதியில் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டுமானால் அவர்கள், மேல் சொன்னதுபோல் பரிகாரம் ஒன்றை தகுந்த சித்தர் மூலம் செய்து கொள்வது நல்லது, நம்பிக்கை இருந்தால்!" 

"இல்லையெனில், அவர்கள் கண்ணெதிரேயே அவர்களது "வம்சம்" சித்தப் ப்ரம்மையால் பாதிக்கப்படலாம்.  இதை தவிர்க்கலாமே!"


சித்தன் அருள்........... தொடரும்!

Tuesday, 6 August 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 7

இந்த தொடரை ஆரம்பித்த பின் நிறைய வேலை பார்க்க வேண்டி வந்தது. தகவல்களை திரட்டுவது எத்தனை கடினம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.  வலைபூ வாசகரிடமிருந்து நிறையவே கேள்விகள்.  பல நேரங்களில் அவை என்னை சிந்திக்க வைத்தது என்பது உண்மை.  நம் முன்னோர்கள், முனிவர்கள், சித்தர்கள் எத்தனை ஆராய்ந்து பார்த்து, இம்மாந்தர்கள் ஆன்மீகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று கனிவுடன் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிப் போனார்கள் என்று நோக்கும் போது, அவர்கள் செய்த தியாகம் அளவிடமுடியாதது. சின்ன சின்ன விஷயங்களில் எத்தனை கவனம் செலுத்தினால் சிறப்பாக விளங்கலாம் என்று தெளிவுபட கூறியுள்ளனர்.

 • உணவு, ஒரு மனிதனுக்கு இன்றி அமையாதது.  உடலுள் தங்கும் உயிரை அது தங்க வேண்டிய வரை உடலை பேணி காக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் கூட நாம் எத்தனை கவனமாக இருந்தால், அந்த இருப்பே நம்மை பல நிலைகளை கடக்க உதவி புரியும் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர். சித்தர்களில் அகத்தியர், உணவை மருந்தாக பாவித்து மருத்துவ முறையை நடை முறை படுத்தினார்.  இனி, உண்ணும் முறையில் நாம் என்னென்ன விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
 • அசைவம் அல்லது புலால் என்கிற உணவு முறையை அனைவரும் ஒதுக்க வேண்டும் என்கின்றனர். அசைவம் உண்பவருக்கு தாது சுத்தி உண்டாகாது என்கின்றனர் சித்தர்கள், அதனால் அவர்களால் ஆன்மீகத்திலோ, சித்த முறைகளிலோ மேல் படிக்கு உயரமுடியாது என்று திண்ணமாக கூறுகிறார். யோசிக்கவும்.
 • அசைவம் உண்டவர், சமைப்பவர் கையிலிருந்து எதை வாங்கி சாப்பிட்டாலும், அவரிடம் உள்ள தோஷம் உண்பவருக்கும் வரும்.
 • எந்த தெய்வமும் ஒரு உயிரை பலி கொடு என்று கேட்பதில்லை. பெரியவர்கள் அறுக்க சொன்னது ஒன்று,  நம்மவர் அறுப்பது வேறொன்று. இதற்கும் மேல் ஒருபடி சென்று "கொன்றால் பாபம் தின்றால் தீரும்" என்று ஒரு மொழியை சொல்லி, கொன்றதை தானும், தன்னுடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து உண்பது என்பது, "பிரம்ம ஹத்தி" தோஷத்தை தானும் ஏற்றுக்கொண்டு, பிறரையும் சுமக்க வைப்பது போன்றது.
 • உண்ண அமர்ந்த உடன், இறைவனை த்யானித்து "நீயே என்னுள் இருந்து இந்த உணவை உனக்கு சமர்ப்பணம் செய்ததாக ஏற்றுக்கொள்.  இந்த உணவு நல்ல சக்தியை, நல்ல எண்ணங்களை எனக்குள் தரட்டும். உண்பது இவ்வுடலாயினும் இதன் தாத்பர்யம் உன்னை வந்து அடையட்டும்" என்று வேண்டிக் கொண்டு உண்ணவேண்டும்.
 • பேசக்கூடாத  மூன்றாவது நேரம் என்பது "உண்ணும் பொழுது". மற்ற இரண்டு நேரங்களும் முன்னரே பார்த்தோம். அவை குளிக்கும் போதும், த்யானம் அல்லது பூசை செய்யும் போதும்.
 • உணவை சமைப்பவர், சமைக்கும் போது  சுத்தத்துடன், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். அவரது தூய நிலையும், எண்ணமும் அந்த உணவு  வழியாக அதை சாப்பிடுபவருக்குள் சென்று அவரது மன நிலையை சமன் செய்யும்.  இதற்காக, சமைப்பவர்  தனக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை, மூல மந்திரங்களை மனதுள் சொல்லிக்கொண்டே சமைக்கலாம். ஒருவரது மன நிலையை உணவு நிறைய அளவுக்கு  மாற்றி விடும் என்று உணர்ந்தே, நம்  முன்னோர்கள் வீட்டை விட்டு வெளியே சாப்பிடுவதை தவிர்த்து வந்தார்கள்.  "ஆசாரம்" என்று இதை அழைத்தனர்.  இறைவனை சார்ந்தது நின்று விலக்க வேண்டியதை விலக்கி நிற்பது என்று பொருள். இது ஒரு வர்ணத்தாருக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் உரியது.
 • நல்ல எண்ணங்களுடன், அமைதியாக இருந்து, உண்ணும் உணவில் கவனம் வைத்து உண்ண வேண்டும்.
 • உண்ணும் உணவு வெளியே சிதறாமல் கவனமாக உண்ண வேண்டும். சிந்திய உணவை நீரினால் சுத்தம் செய்து பின்னர் உண்ணலாம்.
 • இறைத்யானத்துக்குப் பின், உண்ணும் முன் ஒரு பிடி உணவை வலது கையில் வைத்துக்கொண்டு, சித்தர்களையும், மகான்களையும் த்யானித்து "இது உங்களுக்கான அவிர்பாகம். இதை எந்த உயிர் சாப்பிட்டாலும், இதன் தாத்பர்யம்  தங்களை வந்து சேரட்டும்" என வேண்டிக்கொண்டு, அருகில் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கொடுத்து வெளியே  எங்கேனும் வைத்திட, அதை சாப்பிடுவது அணிலோ,, காகமோ எதுவோ ஆயினும், அந்த உணவின் தாத்பர்யம் என்பது  பெரியவர்களை சென்று சேரும். இதுவும் ஒரு வகை குருபூசை.
 • உண்ணும் நேரத்தில் நீர் அருந்த வேண்டி வந்தால், இடது கையால் அருந்த வேண்டி வரும்.  அப்போது வலது கையை சாப்பிடும் தட்டில்/இலையில் வைத்துக் கொண்டு நீர் அருந்தலாம். விதி விலக்கு உண்டு. மற்ற நேரத்தில் வலது கையால் தான் நீர் அருந்தவேண்டும்.
 • உணவு அருந்தும் சூழ்நிலை சுத்தமாக, அசுத்தமாகாமல் இருக்க வேண்டும். உணவு அருந்துவதினால், நமக்குள் ஒரு யாகம் நடக்கிறது என்பதை உணரவேண்டும்.  அதை "கர்ம தகனம் என்பார்கள் பெரியவர்கள். ஆதலால், ஆத்மா அக்னி வேள்விக்கு என்று படைக்கப்பட்ட எதையும் (இலையில்/தட்டில் பரிமாறப்பட்ட) வீணாக்கக்கூடாது. உண்ண விரும்புவதை மட்டும் பரிமாற வேண்டுங்கள்.
 • பசுவுக்கு ஒரு பிடி புல்லோ, த்வாதசி திதி அன்று அகத்தி கீரையோ, ஒரு கை உணவோ கொடுப்பதினால், நிறைய தோஷங்களிலிருந்து விமோசனம் பெறலாம்.  பித்ரு தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து பசுவின் பசியை ஆற்றினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
 • நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தும் "அரிசி"யின் மறுபெயர் "அரிசிவா" என்கின்றனர் சித்தர்கள். அது, நாராயணர், சிவபெருமானின் ரூபம்.  ஆதலால், அதனை மிகவும் மதிப்பவருக்கு அவர் அருள் சேரும். எந்த நேரத்திலும் அலட்ச்சியம் கூடாது.
 • சாப்பிட உட்கார்ந்தபின், உணவை உண்டு முடிக்கும் வரை எந்த காரணம் கொண்டும் எழுந்திருக்கக்கூடாது.  அப்படி செய்வது, அன்ன த்வேஷம் என்கிற தோஷத்தை கொண்டு தரும்.  அன்ன த்வேஷம் ஒருவருக்கு வந்தால், நல்ல காலத்தில் எல்லாம் நிறைவாக இருக்க, ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாமல் போய்விடும்.
 • வெளிச்சம் இல்லாத பொது உணவு உண்ணக்கூடாது. சாப்பிடும் போது மின்சாரம் தடைபட்டு வெளிச்சம் போய்விட்டால், விளக்கேற்றி வைத்து அந்த வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.
 • பூசை அறையிலோ, வீட்டிலோ விளக்கு எரிந்து கொண்டிருந்தால், யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் விளக்கை நிறுத்தக் கூடாது.

சித்தன் அருள்........... தொடரும்

Monday, 5 August 2013

முருகர் பிறந்த நாள் - செப்டம்பர் 02, 2013


வணக்கம்!

போகர் சித்தர் கூற்றுப்படி முருகப்பெருமான் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் பிறந்ததாக அறிய முடிகிறது. இந்த வருடம் அவரது பிறந்தநாள் நாள் செப்டம்பர் 02ம் தியதி வருகிறது. நுணுக்கமாக பார்த்தால், அவர் பிறந்ததாக கூறிய திங்கட்க்கிழமை அன்று இந்தவருடம் அவர் நட்சத்திரம் வருகிறது. அகத்தியப் பெருமானுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த மஹா குருவான முருகரின் பிறந்த நாளை அன்றைய தினத்தில் எந்த கோவிலிலும் உணர்ந்து செய்வதாக தகவல் இல்லை.  அகத்தியர் அடியவர்கள் ஆன நாம் அன்று அவர் ஆசிர்வாதம் / அருளை பெற ஏதேனும் ஒரு நல்லதை செய்வோம்.

என் நண்பர் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை உங்களுக்கு தர விரும்புகிறேன். ஒதிமலை முருகர் கோவிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக அன்றைய தினம் முருகருக்கு அபிஷேக ஆராதனை செய்து வருகிறார்களாம். அந்த நேரத்தில் மனிதர்களான நாம் மட்டுமன்றி சித்தர்களும் அரூபமாக வழிபாடு நடத்துகிறார்கள். அன்று முதல் 90 நாட்களுக்கு சித்தர்கள் அனைவரும் அந்த மலையில் இருந்து முருகரை வழிபடுவார்களாம். நம்மிடம் நேர்மை இருந்து, த்யானத்தில் அமர்ந்தால் நமது மனக்கண்ணில் அவர்கள் பூசையை, அவர்களை காணமுடியும் என்று கூறுகிறார். வசதி உள்ளவர்கள் அன்றைய தினம் சென்று வாருங்கள்!

சென்று அவர் அருள் பெற்று நலமுடன் வாழ்க!

கார்த்திகேயன்!

Thursday, 1 August 2013

சித்தன் அருள் - 135

இந்தக் காலத்தில் ஒருவருக்கு இருக்கும் வசதி, சொத்து, ஆள் வசதி போன்றவற்றை ஒப்பிட்டுத்தான் அவருக்கு, சமுதாயம் (மனிதர்கள்) மதிப்பு கொடுக்கிறது. அவரிடம் இருக்கும் சொத்தை பரிசோதித்தால், நேர்மையான முறையில் சம்பாதித்ததாக இருப்பது என்பது மிக குறைவாகவே இருக்கும். இப்படி தவறான முறையில் சேர்த்து வைத்த சொத்துக்கள், கூடவே கெட்ட கர்மாவையும் அவர்கள் தலையில் ஏற்றி வைக்கும்.  அப்படிப்பட்ட கர்மா ஒருநாள் தாக்கும் போது, அவர்கள் சந்ததிகளும் அதை அனுபவிக்க வேண்டிவரும்.  தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்கிற படி, ஏமாற்றும் போது ஒருவர் வெற்றி பெறுவதாக உணர்ந்தாலும், அது நிரந்தரமில்லாதது. என்றும், ஏமாற்றியவன் வெற்றி பெற்று நிரந்தரமாக நிம்மதியாக வாழ்ந்ததாக ஒரு போதும் காண முடியாது.  தான் சுகமாக வாழ்ந்தாலும், தன சந்ததிகள் கண் முன்னே ஸ்ரமப்படுவதை காண வேண்டி வரும்.

ஒரு நாள், நாடி படிக்க அமர்ந்த போது ஓரளவுக்கு நல்ல வசதி வெளிப்படையாக தெரிந்த ஒருவர் கீழ்வருமாறு கேட்டார்.

"வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த முக்கியமான பத்திரங்களைக் காணவில்லை. அகத்தியர் தான் கண்டு பிடித்து தரவேண்டும்" என்று கண்கலங்கிய நிலையில் கேட்டார்.

"என்ன பத்திரங்கள் காணாமல் போயிற்று?" என்று நான் கேட்டேன்.

"எட்டு வீட்டு மனைக்குரிய தாய்ப் பத்திரங்கள்.  இவை அனைத்தையும் அடமானம் வைத்து பணம் வாங்கிப் போனார்கள்.  ஆறு வருடமாக என் பீரோவில்லேயே பத்திரமாக இருந்தது.  இப்போ காணோம்".

"காணோம்னு உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"

"அடமானம் வெச்ச ரெண்டு பேரு, வாங்கின பணத்தை அசலும் வட்டியுமா கொடுத்திட்டு பத்திரத்தை திருப்பி கேட்டாங்க. அதை கொடுக்கலாம்னு பீரோவைத் திறந்தா, அந்த எட்டு தாய்ப் பத்திரமும் காணலைங்க".

"வேறு டூப்ளிகேட் பத்திரம் இல்லையா?  இருந்தால் அதை அலுவலக ஆபீசிலே கொடுத்து ஒரிஜினலாக மாத்திக்கலாமே" என்றேன்.

"உங்க யோசனையெல்லாம் சரிபட்டு வராதுங்க.  கொடுத்த ஒரிஜினல் பத்திரத்தை கொடுன்னு ஒத்தைக் கால்ல நிக்கிறாங்க. அகத்தியரை கேட்டுச் சொல்லுங்கய்யா" என்றார், அவர்.

அகத்தியரிடம் நாடி பார்க்க வருகிறவர்கள் தங்கள் முற்பிறவியில் செய்த கர்ம வினை போகவும், இந்தப் பிறவியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறவும், முக்கியமான பிரச்சினைகளில் இருந்து விலகவும்தான் வழி கேட்டு வருவார்கள்.

ஆனால்.......

இப்பொழுதோ அகத்தியரை, குறி சொல்லும் ஜோதிடராக எண்ணியும், காணாமல் போனதைக் கண்டுபிடித்து தர உதவும் போலீஸ் அதிகாரியுமாக மாற்றி விட்டார்களே, என்பதுதான் எனக்கு வருத்தம்.

இதையெல்லாம் சொன்னால் இவர்கள் கேட்கவும் மாட்டார்கள். அதோடு என் மீது கோபமும் படலாம்.  அகத்தியர் வழிகாட்டினால் கூட இவன் சொல்லமாட்டான் போலிருக்கிறதே என்று என்னைத் திட்டவும் செய்வார்கள்.

எனவே வாய் திறக்காமல் அகத்தியர் நாடியைப் புரட்டினேன்.

"இதுவரை எல்லா நாடிகளையும் பார்த்து விட்டு, இப்பொழுது தானே ஜீவ நாடியில் இருக்கும் என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?  இதுவரை அந்தந்த நாடியில் சொன்ன பிரார்த்தனைகளை பரிகாரங்களை முறைப்படி செய்திருக்கிறாயா?" என்று ஒரு கேள்வி கேட்டார் அகத்தியர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை.  யார் யார் எதைச் செய்யச் சொன்னார்களோ அதை அப்படியே செய்து விட்டேன்.  ஆனால் நாடிகள் சொன்னபடி இதுவரை எதுவும் நடக்கவில்லை?" என்றார் சற்று வேகமாக.

"அகத்தியனை சோதிக்க வேண்டாம்.  இது நெருப்போடு விளையாடுவது போல்.  நாடிகளில் வந்த பிரார்த்தனைகளைச் செய்யாதது மட்டுமின்றி, எல்லா நாடிகளில் சொன்னது எதுவும் பலிக்கவில்லை என்று சொல்கிறாய்?  நாளைக்கு இந்த ஜீவ நாடியையும் பழிக்க மாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?" என்று அகத்தியர் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

"இன்று உனக்கு சந்திராஷ்டமம், நல்ல பதில் ஏதும் வராது. பதினைந்து நாட்கள் கழித்து வா.  பிறகு சொல்கிறேன்" என்று சட்டென்று முடித்துக்கொண்டார்.

இந்த வார்த்தைகள் அவருக்கு மனதை நிச்சயம் புண்படுத்தியிருக்கவேண்டும்.  பேசாமல், சொல்லாமல் அவர் எழுந்து சென்று விட்டார்.

இருபது நாட்கள் கழித்து வேறொருவர் என்னிடம் வந்தார். தன்னிடமிருந்த நில பத்திரங்கள் அனைத்தையும் காணாமல் போனதாகவும், அதை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்றும், முதலில் வந்தாரே, அதே பாணியில் என்னிடம் கேட்டார்.

இந்த நபர் கேட்ட கோரிக்கையும், முதலில் வந்த நபர் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது.  எனக்கு திடீரென்று ஒரு சந்தேகம். எதற்கும் அகத்தியரிடம் இது பற்றி கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன்.

"அன்றைக்கு வந்தவன்தான். அவன் பொருட்டு இவனைத் தூது விட்டிருக்கிறான்.  அகத்தியன் முன்பு நிற்க அவனால் இயலாது. அவனுக்கு குற்ற மனது.  காரணம் பத்திரங்கள் காணாமல் போனது உண்மையில்லை.  அந்த தாய்ப் பத்திரங்கள் எட்டும் அவனிடமே பத்திரமாக இருக்கிறது.  அந்த பத்திரம் துணை கொண்டு, வேறு ஒருவனுக்கு நிலத்தை விற்றுவிட்டான். இதுதான் உண்மை.

அகத்தியன் சொல்லில் பொய் இருக்கும்.  இதை வைத்து அகத்தியன் பெயரைச் சொல்லி ஏமாற்றி விடலாம் என்ற வஞ்சக நெஞ்சத்தோடு, இவனை தூது விட்டிருக்கிறான்" என்று தெய்வ ரகசியம் போல் என்னிடம் தெளிவு படுத்தி விட்டார்.

நான் அமைதியானேன்.  இதை பற்றி மூச்சு விடவே இல்லை.  

"பத்திரங்கள் எப்படி காணாமல் போயிற்று?"

"தெரியலையே. தெரிந்தால் உங்களிடம் நான் ஏன் வருகிறேன்?"

"பத்திரங்கள் அனைத்தும் உங்கள் வீட்டு தோட்டத்தில் புதைக்கப் பட்டிருக்கின்றன என்று அகத்தியர் சொல்கிறாரே!"

"இல்லைங்க! சத்தியமா இல்லைங்க!"

"அப்படி புதைக்கப்படவில்லை என்றால் நிச்சயம் உங்கள் வீட்டில் தான் இருக்கிறது.  நன்றாக தேடிப் பாருங்கள், கண்டிப்பாக கிடைக்கும்" என்றேன்.

"இன்னும் எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?"

"பத்திரங்கள் காணாமல் போயிருந்தால் தானே நாட்களைப் பற்றி சொல்ல முடியும்?"

"என்ன சார் சொல்றீங்க?"

"நீங்களும் உங்க சொந்தக்காரரும் தப்பு செய்து விட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களே" என்றேன்.

வந்தவர் வெல வெலத்துப் போனார்.  அப்படியே மன்னிப்பு கேட்பது போல் கேட்டு விருட்டென்று ஓடிப்போனார்.

மூன்று மாதம் கழிந்திருக்கும்.

பத்திரங்களை காணவில்லை என்று வந்த அந்த இரண்டு பேரும் முகத்தை தொங்கப் போட்டு என் முன் வந்தார்கள்.  எதற்காக என்னைத் தேடி வந்திருக்க வேண்டும்? என்று யோசனையில் ஆழ்ந்தேன்.

"அய்யா! சில ஏழைகளிடம் தாய்ப் பத்திரங்களை வாங்கி கடன் கொடுத்தேன்.  அவங்களால் திரும்ப பணம் கொடுக்க முடியாது என்கிற நம்பிக்கையிலே சில பத்திரங்களை வைத்து கோல்மால் செய்து வேறொருவருக்கு நிலத்தை பினாமி பெயரில் விற்றும் விட்டேன்.

ஆனால்........

இப்போ சரியாக நான் மாட்டிக் கொண்டேன்.  அரசாங்கத்திடம் முறையிட்டு என் மேலே வழக்கு போட்டிருக்காங்க.  யாருக்காக இந்த சொத்தை எல்லாம் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ.... அந்த பையன் - என் மகன் ஒரு விபத்தில் மாட்டி - உயிருக்கு ஊசலாடிகிட்டு இருக்கான்.  நீங்கதான் எங்க குடும்பத்தை காப்பாத்தணும்" என்றார், வந்தவர்.

"உங்களுக்கோ நல்ல பண வசதி இருக்கு.  பேசாமல் அவரவருக்குரிய தாய்ப் பத்திரங்களை திருப்பி கொடுத்திடுங்க. இன்னொருத்தருக்கு சில நிலங்களை பினாமி பெயரில் விற்றதற்கு உரிய பணத்தை வட்டியும், முதலுமாக கொடுத்து நிலத்தை திருப்பி வாங்கி, யாருக்கு சொந்தமோ அவங்க கிட்டேயே திருப்பி கொடுத்திடுங்க.  உங்க முயற்சிக்கு அரசாங்கமும் நிச்சயம் உதவி செய்யும்."

"இதெல்லாம் நடக்குங்களா?"

"கண்டிப்பாக நடக்கும்! அது மட்டுமல்ல உன் பையனும் உயிர் பிழைத்து மிகவும் சவுக்கியமாக இருப்பான்" என்றேன்.

"அகத்தியர் கிட்டே ஒரு வார்த்தை கேட்டு சொல்லுங்க சார்" என்றார்.

இவ்வளவு சொன்ன பிறகும் என் வார்த்தையில் துளிகூட நம்பிக்கை இல்லை.  அகத்தியர் மீது தான் நம்பிக்கை இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்!

நாடியைப் படித்தேன்.

"செய்த தவறுக்கு இவர்கள் இருவருக்குமே தண்டனை உண்டு.  அதிலிருந்து தப்புவது சற்று ஸ்ரமம்.  ஈன்றெடுத்த மகன் விபத்தில் சிக்கினாலும் அதிலிருந்து வெளியே வந்து விடுவான். இருப்பினும் கடைசி வரை காலைச் சாய்த்து, சாய்த்து தான் நடக்க வேண்டியிருக்கும்.  இதற்கு வேறு பரிகாரம் எதுவும் இல்லை" என்று அகத்தியர் முடித்துக் கொண்டார்.

இதைக் கேட்டு மனம் நொந்துதான் போனார்கள்.  என்ன தண்டனை கிடைக்கும் என்ற கவலை அவர்கள் இருவரையும் வாட்டியதைக் கண்டேன்.

நான்கு மாதம் கழிந்தது.

ஏமாற்றி நில பட்டாவை வேறு விதமாக மாற்றி மற்றொருவருக்கு விற்ற கிரிமினல் குற்றத்திற்காக குறைந்த பட்சம் ஆறு மாத காலம் சிறைத்தண்டனை அவர்களுக்கு கிடைத்தது.

நன்னடத்தை இருந்தால் இதற்கு முன்பாகக் கூட அவர்கள் இருவரும் விடுதலை செய்யப் படலாம் என்றும் சொல்லப்பட்டது.

பிறகு அவர்களைப் பற்றி வெகு நாட்களாக தகவலே இல்லை!

ஒருநாள்..

முப்பத்தி ரெண்டு வயது பையன் மோட்டார் சைக்கிளில் வந்தான்.  காலை சாய்த்து சாய்த்துக் கொண்டு நடந்து வந்ததால் எனக்கு அந்த நிலப்பட்டா ஊழல் நபரது ஞாபகம் வந்தது.

வந்த அந்த பையன், நான் நினைத்தது சரி என்பதை உறுதிப் படுத்தினான்.

"அப்பா இப்போ ரொம்பவும் மாறிட்டாங்க! அவர் செய்த தப்புக்கு ஆறு மாதம் ஜெயில்ல இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜெயிலை விட்டு வெளியே வந்ததும் தான் யாரையெல்லாம் ஏமாற்றி சொத்தை வாங்கினாரோ அத்தனையையும் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதற்கிடையில் ஆசுபத்திரியில் இருந்த நானும் நீண்ட நாட்களுக்குப் பின் வீடு திரும்பி விட்டேன்.  ஆனால் என்னால் மற்றவர்களைப் போல் நேராக நிற்க முடியாது.  சாய்த்து சாய்த்து தான் நடக்க வேண்டியிருக்கிறது.  அப்பாவால் வரமுடியவில்லை.  தங்களை பார்த்துவிட்டு வரச் சொன்னார்" என்றான் பவ்யமாக.

நாடியில் வந்தது இதுதான்.

"ஏழையின் வயிற்றை அடித்து கொள்ளை அடித்தவன் எவனும் உருப்பட்டதாக வரலாறு இல்லை!

தன் குடும்பத்திற்காக குறுக்கு வழியில் சொத்தை சேர்த்தால் அந்த சொத்து குடும்பத்திற்கு போய்ச் சேராது.  மாறாக பெரும் பாவமும், தோஷமும் மலை போல் குவியும்.

தவறு செய்பவன் இன்றைக்கு உங்கள் கண்களுக்கு நன்றாக இருப்பவன் போல் தோன்றும்.  ஆனால் அவன் அதள பாதாளத்தில் விழப்போகிறான். எழுந்திருக்கவே முடியாது.  ஆனால் இது நடக்க நாளாகும்.

இது நிலப்பட்டாவை ஏமாற்றி விற்றவருக்காக சொல்லப்பட்டதாக எண்ண வேண்டாம்.  பிறரை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அனைவருக்கும் பொருந்தும்" என்று அகத்தியர் நாசூக்காக சொன்னார்.

எத்தனை பேர் இதை ஏற்கப் போகிறார்கள்?  புத்தியுள்ளவர்கள் புரிந்து பிழைத்துக்கொள்ளட்டும்.

சித்தன் அருள் .................... தொடரும்!