​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 1 August 2013

சித்தன் அருள் - 135

இந்தக் காலத்தில் ஒருவருக்கு இருக்கும் வசதி, சொத்து, ஆள் வசதி போன்றவற்றை ஒப்பிட்டுத்தான் அவருக்கு, சமுதாயம் (மனிதர்கள்) மதிப்பு கொடுக்கிறது. அவரிடம் இருக்கும் சொத்தை பரிசோதித்தால், நேர்மையான முறையில் சம்பாதித்ததாக இருப்பது என்பது மிக குறைவாகவே இருக்கும். இப்படி தவறான முறையில் சேர்த்து வைத்த சொத்துக்கள், கூடவே கெட்ட கர்மாவையும் அவர்கள் தலையில் ஏற்றி வைக்கும்.  அப்படிப்பட்ட கர்மா ஒருநாள் தாக்கும் போது, அவர்கள் சந்ததிகளும் அதை அனுபவிக்க வேண்டிவரும்.  தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்கிற படி, ஏமாற்றும் போது ஒருவர் வெற்றி பெறுவதாக உணர்ந்தாலும், அது நிரந்தரமில்லாதது. என்றும், ஏமாற்றியவன் வெற்றி பெற்று நிரந்தரமாக நிம்மதியாக வாழ்ந்ததாக ஒரு போதும் காண முடியாது.  தான் சுகமாக வாழ்ந்தாலும், தன சந்ததிகள் கண் முன்னே ஸ்ரமப்படுவதை காண வேண்டி வரும்.

ஒரு நாள், நாடி படிக்க அமர்ந்த போது ஓரளவுக்கு நல்ல வசதி வெளிப்படையாக தெரிந்த ஒருவர் கீழ்வருமாறு கேட்டார்.

"வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த முக்கியமான பத்திரங்களைக் காணவில்லை. அகத்தியர் தான் கண்டு பிடித்து தரவேண்டும்" என்று கண்கலங்கிய நிலையில் கேட்டார்.

"என்ன பத்திரங்கள் காணாமல் போயிற்று?" என்று நான் கேட்டேன்.

"எட்டு வீட்டு மனைக்குரிய தாய்ப் பத்திரங்கள்.  இவை அனைத்தையும் அடமானம் வைத்து பணம் வாங்கிப் போனார்கள்.  ஆறு வருடமாக என் பீரோவில்லேயே பத்திரமாக இருந்தது.  இப்போ காணோம்".

"காணோம்னு உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"

"அடமானம் வெச்ச ரெண்டு பேரு, வாங்கின பணத்தை அசலும் வட்டியுமா கொடுத்திட்டு பத்திரத்தை திருப்பி கேட்டாங்க. அதை கொடுக்கலாம்னு பீரோவைத் திறந்தா, அந்த எட்டு தாய்ப் பத்திரமும் காணலைங்க".

"வேறு டூப்ளிகேட் பத்திரம் இல்லையா?  இருந்தால் அதை அலுவலக ஆபீசிலே கொடுத்து ஒரிஜினலாக மாத்திக்கலாமே" என்றேன்.

"உங்க யோசனையெல்லாம் சரிபட்டு வராதுங்க.  கொடுத்த ஒரிஜினல் பத்திரத்தை கொடுன்னு ஒத்தைக் கால்ல நிக்கிறாங்க. அகத்தியரை கேட்டுச் சொல்லுங்கய்யா" என்றார், அவர்.

அகத்தியரிடம் நாடி பார்க்க வருகிறவர்கள் தங்கள் முற்பிறவியில் செய்த கர்ம வினை போகவும், இந்தப் பிறவியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறவும், முக்கியமான பிரச்சினைகளில் இருந்து விலகவும்தான் வழி கேட்டு வருவார்கள்.

ஆனால்.......

இப்பொழுதோ அகத்தியரை, குறி சொல்லும் ஜோதிடராக எண்ணியும், காணாமல் போனதைக் கண்டுபிடித்து தர உதவும் போலீஸ் அதிகாரியுமாக மாற்றி விட்டார்களே, என்பதுதான் எனக்கு வருத்தம்.

இதையெல்லாம் சொன்னால் இவர்கள் கேட்கவும் மாட்டார்கள். அதோடு என் மீது கோபமும் படலாம்.  அகத்தியர் வழிகாட்டினால் கூட இவன் சொல்லமாட்டான் போலிருக்கிறதே என்று என்னைத் திட்டவும் செய்வார்கள்.

எனவே வாய் திறக்காமல் அகத்தியர் நாடியைப் புரட்டினேன்.

"இதுவரை எல்லா நாடிகளையும் பார்த்து விட்டு, இப்பொழுது தானே ஜீவ நாடியில் இருக்கும் என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?  இதுவரை அந்தந்த நாடியில் சொன்ன பிரார்த்தனைகளை பரிகாரங்களை முறைப்படி செய்திருக்கிறாயா?" என்று ஒரு கேள்வி கேட்டார் அகத்தியர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை.  யார் யார் எதைச் செய்யச் சொன்னார்களோ அதை அப்படியே செய்து விட்டேன்.  ஆனால் நாடிகள் சொன்னபடி இதுவரை எதுவும் நடக்கவில்லை?" என்றார் சற்று வேகமாக.

"அகத்தியனை சோதிக்க வேண்டாம்.  இது நெருப்போடு விளையாடுவது போல்.  நாடிகளில் வந்த பிரார்த்தனைகளைச் செய்யாதது மட்டுமின்றி, எல்லா நாடிகளில் சொன்னது எதுவும் பலிக்கவில்லை என்று சொல்கிறாய்?  நாளைக்கு இந்த ஜீவ நாடியையும் பழிக்க மாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?" என்று அகத்தியர் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

"இன்று உனக்கு சந்திராஷ்டமம், நல்ல பதில் ஏதும் வராது. பதினைந்து நாட்கள் கழித்து வா.  பிறகு சொல்கிறேன்" என்று சட்டென்று முடித்துக்கொண்டார்.

இந்த வார்த்தைகள் அவருக்கு மனதை நிச்சயம் புண்படுத்தியிருக்கவேண்டும்.  பேசாமல், சொல்லாமல் அவர் எழுந்து சென்று விட்டார்.

இருபது நாட்கள் கழித்து வேறொருவர் என்னிடம் வந்தார். தன்னிடமிருந்த நில பத்திரங்கள் அனைத்தையும் காணாமல் போனதாகவும், அதை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்றும், முதலில் வந்தாரே, அதே பாணியில் என்னிடம் கேட்டார்.

இந்த நபர் கேட்ட கோரிக்கையும், முதலில் வந்த நபர் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது.  எனக்கு திடீரென்று ஒரு சந்தேகம். எதற்கும் அகத்தியரிடம் இது பற்றி கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன்.

"அன்றைக்கு வந்தவன்தான். அவன் பொருட்டு இவனைத் தூது விட்டிருக்கிறான்.  அகத்தியன் முன்பு நிற்க அவனால் இயலாது. அவனுக்கு குற்ற மனது.  காரணம் பத்திரங்கள் காணாமல் போனது உண்மையில்லை.  அந்த தாய்ப் பத்திரங்கள் எட்டும் அவனிடமே பத்திரமாக இருக்கிறது.  அந்த பத்திரம் துணை கொண்டு, வேறு ஒருவனுக்கு நிலத்தை விற்றுவிட்டான். இதுதான் உண்மை.

அகத்தியன் சொல்லில் பொய் இருக்கும்.  இதை வைத்து அகத்தியன் பெயரைச் சொல்லி ஏமாற்றி விடலாம் என்ற வஞ்சக நெஞ்சத்தோடு, இவனை தூது விட்டிருக்கிறான்" என்று தெய்வ ரகசியம் போல் என்னிடம் தெளிவு படுத்தி விட்டார்.

நான் அமைதியானேன்.  இதை பற்றி மூச்சு விடவே இல்லை.  

"பத்திரங்கள் எப்படி காணாமல் போயிற்று?"

"தெரியலையே. தெரிந்தால் உங்களிடம் நான் ஏன் வருகிறேன்?"

"பத்திரங்கள் அனைத்தும் உங்கள் வீட்டு தோட்டத்தில் புதைக்கப் பட்டிருக்கின்றன என்று அகத்தியர் சொல்கிறாரே!"

"இல்லைங்க! சத்தியமா இல்லைங்க!"

"அப்படி புதைக்கப்படவில்லை என்றால் நிச்சயம் உங்கள் வீட்டில் தான் இருக்கிறது.  நன்றாக தேடிப் பாருங்கள், கண்டிப்பாக கிடைக்கும்" என்றேன்.

"இன்னும் எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?"

"பத்திரங்கள் காணாமல் போயிருந்தால் தானே நாட்களைப் பற்றி சொல்ல முடியும்?"

"என்ன சார் சொல்றீங்க?"

"நீங்களும் உங்க சொந்தக்காரரும் தப்பு செய்து விட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களே" என்றேன்.

வந்தவர் வெல வெலத்துப் போனார்.  அப்படியே மன்னிப்பு கேட்பது போல் கேட்டு விருட்டென்று ஓடிப்போனார்.

மூன்று மாதம் கழிந்திருக்கும்.

பத்திரங்களை காணவில்லை என்று வந்த அந்த இரண்டு பேரும் முகத்தை தொங்கப் போட்டு என் முன் வந்தார்கள்.  எதற்காக என்னைத் தேடி வந்திருக்க வேண்டும்? என்று யோசனையில் ஆழ்ந்தேன்.

"அய்யா! சில ஏழைகளிடம் தாய்ப் பத்திரங்களை வாங்கி கடன் கொடுத்தேன்.  அவங்களால் திரும்ப பணம் கொடுக்க முடியாது என்கிற நம்பிக்கையிலே சில பத்திரங்களை வைத்து கோல்மால் செய்து வேறொருவருக்கு நிலத்தை பினாமி பெயரில் விற்றும் விட்டேன்.

ஆனால்........

இப்போ சரியாக நான் மாட்டிக் கொண்டேன்.  அரசாங்கத்திடம் முறையிட்டு என் மேலே வழக்கு போட்டிருக்காங்க.  யாருக்காக இந்த சொத்தை எல்லாம் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ.... அந்த பையன் - என் மகன் ஒரு விபத்தில் மாட்டி - உயிருக்கு ஊசலாடிகிட்டு இருக்கான்.  நீங்கதான் எங்க குடும்பத்தை காப்பாத்தணும்" என்றார், வந்தவர்.

"உங்களுக்கோ நல்ல பண வசதி இருக்கு.  பேசாமல் அவரவருக்குரிய தாய்ப் பத்திரங்களை திருப்பி கொடுத்திடுங்க. இன்னொருத்தருக்கு சில நிலங்களை பினாமி பெயரில் விற்றதற்கு உரிய பணத்தை வட்டியும், முதலுமாக கொடுத்து நிலத்தை திருப்பி வாங்கி, யாருக்கு சொந்தமோ அவங்க கிட்டேயே திருப்பி கொடுத்திடுங்க.  உங்க முயற்சிக்கு அரசாங்கமும் நிச்சயம் உதவி செய்யும்."

"இதெல்லாம் நடக்குங்களா?"

"கண்டிப்பாக நடக்கும்! அது மட்டுமல்ல உன் பையனும் உயிர் பிழைத்து மிகவும் சவுக்கியமாக இருப்பான்" என்றேன்.

"அகத்தியர் கிட்டே ஒரு வார்த்தை கேட்டு சொல்லுங்க சார்" என்றார்.

இவ்வளவு சொன்ன பிறகும் என் வார்த்தையில் துளிகூட நம்பிக்கை இல்லை.  அகத்தியர் மீது தான் நம்பிக்கை இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்!

நாடியைப் படித்தேன்.

"செய்த தவறுக்கு இவர்கள் இருவருக்குமே தண்டனை உண்டு.  அதிலிருந்து தப்புவது சற்று ஸ்ரமம்.  ஈன்றெடுத்த மகன் விபத்தில் சிக்கினாலும் அதிலிருந்து வெளியே வந்து விடுவான். இருப்பினும் கடைசி வரை காலைச் சாய்த்து, சாய்த்து தான் நடக்க வேண்டியிருக்கும்.  இதற்கு வேறு பரிகாரம் எதுவும் இல்லை" என்று அகத்தியர் முடித்துக் கொண்டார்.

இதைக் கேட்டு மனம் நொந்துதான் போனார்கள்.  என்ன தண்டனை கிடைக்கும் என்ற கவலை அவர்கள் இருவரையும் வாட்டியதைக் கண்டேன்.

நான்கு மாதம் கழிந்தது.

ஏமாற்றி நில பட்டாவை வேறு விதமாக மாற்றி மற்றொருவருக்கு விற்ற கிரிமினல் குற்றத்திற்காக குறைந்த பட்சம் ஆறு மாத காலம் சிறைத்தண்டனை அவர்களுக்கு கிடைத்தது.

நன்னடத்தை இருந்தால் இதற்கு முன்பாகக் கூட அவர்கள் இருவரும் விடுதலை செய்யப் படலாம் என்றும் சொல்லப்பட்டது.

பிறகு அவர்களைப் பற்றி வெகு நாட்களாக தகவலே இல்லை!

ஒருநாள்..

முப்பத்தி ரெண்டு வயது பையன் மோட்டார் சைக்கிளில் வந்தான்.  காலை சாய்த்து சாய்த்துக் கொண்டு நடந்து வந்ததால் எனக்கு அந்த நிலப்பட்டா ஊழல் நபரது ஞாபகம் வந்தது.

வந்த அந்த பையன், நான் நினைத்தது சரி என்பதை உறுதிப் படுத்தினான்.

"அப்பா இப்போ ரொம்பவும் மாறிட்டாங்க! அவர் செய்த தப்புக்கு ஆறு மாதம் ஜெயில்ல இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜெயிலை விட்டு வெளியே வந்ததும் தான் யாரையெல்லாம் ஏமாற்றி சொத்தை வாங்கினாரோ அத்தனையையும் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதற்கிடையில் ஆசுபத்திரியில் இருந்த நானும் நீண்ட நாட்களுக்குப் பின் வீடு திரும்பி விட்டேன்.  ஆனால் என்னால் மற்றவர்களைப் போல் நேராக நிற்க முடியாது.  சாய்த்து சாய்த்து தான் நடக்க வேண்டியிருக்கிறது.  அப்பாவால் வரமுடியவில்லை.  தங்களை பார்த்துவிட்டு வரச் சொன்னார்" என்றான் பவ்யமாக.

நாடியில் வந்தது இதுதான்.

"ஏழையின் வயிற்றை அடித்து கொள்ளை அடித்தவன் எவனும் உருப்பட்டதாக வரலாறு இல்லை!

தன் குடும்பத்திற்காக குறுக்கு வழியில் சொத்தை சேர்த்தால் அந்த சொத்து குடும்பத்திற்கு போய்ச் சேராது.  மாறாக பெரும் பாவமும், தோஷமும் மலை போல் குவியும்.

தவறு செய்பவன் இன்றைக்கு உங்கள் கண்களுக்கு நன்றாக இருப்பவன் போல் தோன்றும்.  ஆனால் அவன் அதள பாதாளத்தில் விழப்போகிறான். எழுந்திருக்கவே முடியாது.  ஆனால் இது நடக்க நாளாகும்.

இது நிலப்பட்டாவை ஏமாற்றி விற்றவருக்காக சொல்லப்பட்டதாக எண்ண வேண்டாம்.  பிறரை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அனைவருக்கும் பொருந்தும்" என்று அகத்தியர் நாசூக்காக சொன்னார்.

எத்தனை பேர் இதை ஏற்கப் போகிறார்கள்?  புத்தியுள்ளவர்கள் புரிந்து பிழைத்துக்கொள்ளட்டும்.

சித்தன் அருள் .................... தொடரும்!

7 comments:

 1. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 2. ஓம் அகத்தீசாய நம!

  ReplyDelete
 3. குருவே சரணம்!
  குருவே சரணம்!
  குருவே சரணம்!

  ReplyDelete
 4. ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...

  ReplyDelete
 5. ஓம் அகத்தீசாய நமக...

  Regards
  Ramesh
  Lagos

  ReplyDelete
 6. ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ|
  ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ|
  ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ|

  ReplyDelete