இந்த தொடரை ஆரம்பித்த பின் நிறைய வேலை பார்க்க வேண்டி வந்தது. தகவல்களை திரட்டுவது எத்தனை கடினம் என்பதை நான் புரிந்து கொண்டேன். வலைபூ வாசகரிடமிருந்து நிறையவே கேள்விகள். பல நேரங்களில் அவை என்னை சிந்திக்க வைத்தது என்பது உண்மை. நம் முன்னோர்கள், முனிவர்கள், சித்தர்கள் எத்தனை ஆராய்ந்து பார்த்து, இம்மாந்தர்கள் ஆன்மீகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று கனிவுடன் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிப் போனார்கள் என்று நோக்கும் போது, அவர்கள் செய்த தியாகம் அளவிடமுடியாதது. சின்ன சின்ன விஷயங்களில் எத்தனை கவனம் செலுத்தினால் சிறப்பாக விளங்கலாம் என்று தெளிவுபட கூறியுள்ளனர்.
- உணவு, ஒரு மனிதனுக்கு இன்றி அமையாதது. உடலுள் தங்கும் உயிரை அது தங்க வேண்டிய வரை உடலை பேணி காக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் கூட நாம் எத்தனை கவனமாக இருந்தால், அந்த இருப்பே நம்மை பல நிலைகளை கடக்க உதவி புரியும் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர். சித்தர்களில் அகத்தியர், உணவை மருந்தாக பாவித்து மருத்துவ முறையை நடை முறை படுத்தினார். இனி, உண்ணும் முறையில் நாம் என்னென்ன விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
- அசைவம் அல்லது புலால் என்கிற உணவு முறையை அனைவரும் ஒதுக்க வேண்டும் என்கின்றனர். அசைவம் உண்பவருக்கு தாது சுத்தி உண்டாகாது என்கின்றனர் சித்தர்கள், அதனால் அவர்களால் ஆன்மீகத்திலோ, சித்த முறைகளிலோ மேல் படிக்கு உயரமுடியாது என்று திண்ணமாக கூறுகிறார். யோசிக்கவும்.
- அசைவம் உண்டவர், சமைப்பவர் கையிலிருந்து எதை வாங்கி சாப்பிட்டாலும், அவரிடம் உள்ள தோஷம் உண்பவருக்கும் வரும்.
- எந்த தெய்வமும் ஒரு உயிரை பலி கொடு என்று கேட்பதில்லை. பெரியவர்கள் அறுக்க சொன்னது ஒன்று, நம்மவர் அறுப்பது வேறொன்று. இதற்கும் மேல் ஒருபடி சென்று "கொன்றால் பாபம் தின்றால் தீரும்" என்று ஒரு மொழியை சொல்லி, கொன்றதை தானும், தன்னுடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து உண்பது என்பது, "பிரம்ம ஹத்தி" தோஷத்தை தானும் ஏற்றுக்கொண்டு, பிறரையும் சுமக்க வைப்பது போன்றது.
- உண்ண அமர்ந்த உடன், இறைவனை த்யானித்து "நீயே என்னுள் இருந்து இந்த உணவை உனக்கு சமர்ப்பணம் செய்ததாக ஏற்றுக்கொள். இந்த உணவு நல்ல சக்தியை, நல்ல எண்ணங்களை எனக்குள் தரட்டும். உண்பது இவ்வுடலாயினும் இதன் தாத்பர்யம் உன்னை வந்து அடையட்டும்" என்று வேண்டிக் கொண்டு உண்ணவேண்டும்.
- பேசக்கூடாத மூன்றாவது நேரம் என்பது "உண்ணும் பொழுது". மற்ற இரண்டு நேரங்களும் முன்னரே பார்த்தோம். அவை குளிக்கும் போதும், த்யானம் அல்லது பூசை செய்யும் போதும்.
- உணவை சமைப்பவர், சமைக்கும் போது சுத்தத்துடன், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். அவரது தூய நிலையும், எண்ணமும் அந்த உணவு வழியாக அதை சாப்பிடுபவருக்குள் சென்று அவரது மன நிலையை சமன் செய்யும். இதற்காக, சமைப்பவர் தனக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை, மூல மந்திரங்களை மனதுள் சொல்லிக்கொண்டே சமைக்கலாம். ஒருவரது மன நிலையை உணவு நிறைய அளவுக்கு மாற்றி விடும் என்று உணர்ந்தே, நம் முன்னோர்கள் வீட்டை விட்டு வெளியே சாப்பிடுவதை தவிர்த்து வந்தார்கள். "ஆசாரம்" என்று இதை அழைத்தனர். இறைவனை சார்ந்தது நின்று விலக்க வேண்டியதை விலக்கி நிற்பது என்று பொருள். இது ஒரு வர்ணத்தாருக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் உரியது.
- நல்ல எண்ணங்களுடன், அமைதியாக இருந்து, உண்ணும் உணவில் கவனம் வைத்து உண்ண வேண்டும்.
- உண்ணும் உணவு வெளியே சிதறாமல் கவனமாக உண்ண வேண்டும். சிந்திய உணவை நீரினால் சுத்தம் செய்து பின்னர் உண்ணலாம்.
- இறைத்யானத்துக்குப் பின், உண்ணும் முன் ஒரு பிடி உணவை வலது கையில் வைத்துக்கொண்டு, சித்தர்களையும், மகான்களையும் த்யானித்து "இது உங்களுக்கான அவிர்பாகம். இதை எந்த உயிர் சாப்பிட்டாலும், இதன் தாத்பர்யம் தங்களை வந்து சேரட்டும்" என வேண்டிக்கொண்டு, அருகில் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கொடுத்து வெளியே எங்கேனும் வைத்திட, அதை சாப்பிடுவது அணிலோ,, காகமோ எதுவோ ஆயினும், அந்த உணவின் தாத்பர்யம் என்பது பெரியவர்களை சென்று சேரும். இதுவும் ஒரு வகை குருபூசை.
- உண்ணும் நேரத்தில் நீர் அருந்த வேண்டி வந்தால், இடது கையால் அருந்த வேண்டி வரும். அப்போது வலது கையை சாப்பிடும் தட்டில்/இலையில் வைத்துக் கொண்டு நீர் அருந்தலாம். விதி விலக்கு உண்டு. மற்ற நேரத்தில் வலது கையால் தான் நீர் அருந்தவேண்டும்.
- உணவு அருந்தும் சூழ்நிலை சுத்தமாக, அசுத்தமாகாமல் இருக்க வேண்டும். உணவு அருந்துவதினால், நமக்குள் ஒரு யாகம் நடக்கிறது என்பதை உணரவேண்டும். அதை "கர்ம தகனம் என்பார்கள் பெரியவர்கள். ஆதலால், ஆத்மா அக்னி வேள்விக்கு என்று படைக்கப்பட்ட எதையும் (இலையில்/தட்டில் பரிமாறப்பட்ட) வீணாக்கக்கூடாது. உண்ண விரும்புவதை மட்டும் பரிமாற வேண்டுங்கள்.
- பசுவுக்கு ஒரு பிடி புல்லோ, த்வாதசி திதி அன்று அகத்தி கீரையோ, ஒரு கை உணவோ கொடுப்பதினால், நிறைய தோஷங்களிலிருந்து விமோசனம் பெறலாம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து பசுவின் பசியை ஆற்றினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
- நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தும் "அரிசி"யின் மறுபெயர் "அரிசிவா" என்கின்றனர் சித்தர்கள். அது, நாராயணர், சிவபெருமானின் ரூபம். ஆதலால், அதனை மிகவும் மதிப்பவருக்கு அவர் அருள் சேரும். எந்த நேரத்திலும் அலட்ச்சியம் கூடாது.
- சாப்பிட உட்கார்ந்தபின், உணவை உண்டு முடிக்கும் வரை எந்த காரணம் கொண்டும் எழுந்திருக்கக்கூடாது. அப்படி செய்வது, அன்ன த்வேஷம் என்கிற தோஷத்தை கொண்டு தரும். அன்ன த்வேஷம் ஒருவருக்கு வந்தால், நல்ல காலத்தில் எல்லாம் நிறைவாக இருக்க, ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாமல் போய்விடும்.
- வெளிச்சம் இல்லாத பொது உணவு உண்ணக்கூடாது. சாப்பிடும் போது மின்சாரம் தடைபட்டு வெளிச்சம் போய்விட்டால், விளக்கேற்றி வைத்து அந்த வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.
- பூசை அறையிலோ, வீட்டிலோ விளக்கு எரிந்து கொண்டிருந்தால், யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் விளக்கை நிறுத்தக் கூடாது.
சித்தன் அருள்........... தொடரும்
No comments:
Post a Comment