​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 1 August 2019

சித்தன் அருள் - 818 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் - விட்டுப்போனவை!


வணக்கம், அகத்தியர் அடியவர்களே. சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் நிறைவு பெற்றதும், ஒரு முறை வேகமாக படித்து பார்த்த பொழுது, அடியேன் எடுத்த குறிப்புகளில், ஒன்றிரண்டு விஷயங்களை, கூற விட்டுப்போனேன் என புரிந்தது. அவற்றை தொகுத்து, இங்கே தந்துள்ளேன்.

ஆசாரம் Vs ஆரோக்கியம்:-

உடலை இயக்கத்தை கட்டுப்படுத்துவது தச வாயுக்கள். அதை கண்டுபிடித்த பெரியவர்கள், தின வாழ்க்கையில், பல நல்ல வழிகளை முறை படுத்தி வைத்தார்கள். ஆனால் அந்த வழி முறைகள் என்ன செய்யும், உடலுக்கு எவ்விதம் நலம் தரும் என்று கூறாததினால், பல தலைமுறைக்கு ஒரு செயலின் உள்ளர்த்தம் புரிய வில்லை. உதாரணமாக, பிராணனும், அபானனும் (வாயுக்கள்) ஒன்றுக்கொன்று கைகோர்த்து, ஒருவரை ஒருவர் தன் பக்கம் இழுப்பதால், இதயத்துக்குள், மருத்துவர்கள் சொல்கிற "லப்-டப்" ஓசை உருவாகிறது. எப்பொழுது இந்த வாயுக்கள் ஒருவரை ஒருவர் கைவிட்டு தன் வழியில் செல்கிறதோ, அப்பொழுதே, அந்த  பிராணன் உடலை விட்டு வெளியேறப் போகிறது என்று அர்த்தம்.

இயற்கை உபாதைகளான, உடல் கழிவுகள் உடலைவிட்டு சரியான நேரத்தில் வெளியேற, அபானன் விரிந்து செயலாற்றுகிறது. எந்த வாயுவும், விரிவடைந்தால், உடலுக்குள் மிகுந்த சூட்டை உருவாக்கும். அபானன் விரிவடைந்து கழுத்து முதல், கால் வரை பரவி நிற்கும். அதை உடனேயே குளிரவைக்கவில்லை எனில், வேறு சில பிரச்சினைகளை கிளப்பிவிடும், என்றறிந்த பெரியவர்கள், கழிவறைக்கு சென்று வந்த பின், கால்களில், கைகளில் நீர்விட்டு கழுவி, பலமுறை வாய் கொப்பிளிக்க வேண்டும் என உரைத்தார்கள். அப்படி குளிர்ந்த, சமனான நீர்விட்டு சுத்தம் செய்து கொள்கிற பொழுது, நாம் அறியாமல், அபானனை குளிர்வித்து உடல் இயக்கத்தை காப்பாற்றுகிறோம், என்பதே உண்மை. இதையே, ஒரு சிலர் ஆசாரமாக, பாவித்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை - சித்தர்கள் பார்வையில் ஒரு அதிசயமாக பாவிக்கப் படுகிறதே!

திருவண்ணாமலை, அகத்தியர் கூற்றின்படி, நித்தம் நித்தம், ஒவ்வொரு நொடியும், அதிசயங்கள் நடக்கும் இடம். நிறைய மனிதர்களுக்கு, அவரவர் கர்மாவின்படி, அதிசயத்தில் பங்குபெறுகிற, காண்கிற வாய்ப்பை சித்தர்கள் அளித்துள்ளனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சியே, பலரது வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, என்பதும் உண்மை. ஒவ்வொரு கிரிவலமும், முறையாக, அமைதியாக, சிவநாம ஜெபத்துடன், உள் முனைப்புடன் செய்தால், அந்த ஒருவன்/ஒருவள், வந்த பொழுது வாங்கி வந்த மிகப்பெரிய கர்மா கட்டை, அவிழ்த்து, அண்ணாமலையார், தன் மீது கட்டிக்கொள்வர். இவனுக்கு/இவளுக்கு கர்ம பாரம் குறையும்.

மேலும், சித்த மார்கத்தில் ஒரு வழக்கு சொல் உண்டு.  "வட்டம் என்பது ஒரு நேர்கோடு" என. திருவண்ணாமலை கிரிவலம் அது என்னவென்று புரியவைக்கும்.

வாழ்க்கையில் மனிதன் இயல்பாகவே சேர்த்துக் கொள்கிற கர்மா என்பது, கிரிவலத்தின் பொழுது செய்கிற தானத்தினால், உடனேயே விலகும்.

கர்மா கழிதல்:-

மரணம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு நிலைதான். அது எங்கு, எப்பொழுது, எப்படி என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. உடல் அசந்து போகும்முன் பௌதீகத்தை சேர்த்துவிடவேண்டும் என்று முனைப்புக்காட்டுகிற மனிதன், உயிர் நீத்தபின் கூட வருவது அவனது பாபமும், புண்ணியமும் தவிர சேர்த்துவைத்த எந்த பொருளோ, தனது உறவோ, சுற்றமோ இல்லை என்பதை உணர்வதே இல்லையே. முனைப்பு அனைத்தும், உலகாயாத பொருட்களில், தன் குடும்பத்தாரிடம் மட்டும் வைத்துவிட்டு, தனக்கொரு பிரச்சனை வந்தால் மட்டும் சித்தர்களை நாடியில் தேடி வந்து, அன்றுவரை செய்த கெட்ட கர்மாவை, அவர்கள்  மொத்தமாக கழித்துவிட, வழி கூற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். சாப்பிட்டது ஜீரணமாக, குறைந்தது ஒரு மணி நேரம் உடலுக்கு தேவைப்படுகிறதென்றால், எத்தனை ஜென்ம கர்மாவுக்கு, எவ்வளவு நேரம் வேண்டி வரும்? இதை ஏன் யோசிப்பதில்லை?

சித்த மார்கத்தில் தானம் செய்யும் முறை:-

சித்த வித்யார்த்திகள், தானம் செய்வது, தங்கள், மூச்சை. அது பார்க்கக் கிடைப்பது அரிது. அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதாக வரித்துக் கொண்டு, இரு கையையும் சேர்த்து, இரு கட்டை விரலும் மூக்கின் இரு பக்கமும் வைத்து, இரு ஆள்காட்டி விரலும் ஒன்றாக சேர்த்து, சுழுமுனையில் இருக்க, மற்ற விரல்கள் மூக்கை மறைத்து நிற்க, பிறர் காணா வண்ணம், இடது மூக்கை அழுத்தி மூடி, வலது மூக்கு வழியாக காற்றை உள்ளிழுக்கும் பொழுது "ஓம் நமச்சிவாய" என்று மனதுள் தியானித்து, கும்பமானதும், "சிவாய நமஹ" என தியானித்து, அந்த நேரத்தில், இடது மூக்கின் வழி மூச்சை, மூடிய விரல்களை திறந்து, இறைவன் பாதத்தில் சமர்ப்பிப்பார்கள். 

சித்தன் அருள்.................. தொடரும்!