​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 29 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 7


வெளியே வந்து, அங்கு நின்றவர்களிடம் "இன்று ஓதியப்பர் பிறந்தநாள் என்று தெரிந்த நீங்கள் யாராவது அவருக்கு "ஹாப்பி பர்த்டே" சொன்னீங்களா?" என்று விசாரித்தேன். ஒரு சிலர் நான் அப்பொழுதே சொல்லிவிட்டேன் என்றனர். மறந்து போன சிலர் ஒன்று சேர்ந்து அப்பொழுது சொன்னார்கள். அதை கேட்க விநோதமாக இருந்தது.

இரவு நெருங்கியது. பூசாரி அனைவரையும் அழைத்து உணவருந்த சொன்னார். அனைவருக்கும் உணவளித்துவிட்டுத் தான் அவர் நடை சார்த்தி மலை விட்டு கீழிறங்க வேண்டும்.

அனைவரும் உணவருந்தினோம். தேவாமிர்தமாக இருந்தது. அவர் பிறந்தநாள் அன்று அவர் பரிமாறுகிற உணவு. அதை ஒரு சிறு பருக்கையெனும் அருந்த ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

பின்னர் சிறிது நேர சத்சங்கம் போல் ஒருவருடன், ஓதியப்பரின் திருவிளையாடல்களை, ஒதிமலையின் மகத்துவத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கடந்த 5 வருடங்களாக ஓதியப்பரின் பிறந்த நாளை இங்கு கொண்டாட அனுமதியளித்த ஓதியப்பருக்கும், அதை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுக்கிற பூசாரிக்கும் நான் எங்கள் சார்பாக நன்றியை தெரிவித்தேன். இன்றைய பூசை மிகச் சிறப்பாக நடந்தது, ஓதியப்பருக்கு அனேகமாக கண் பட்டிருக்கும், அத்தனை அழகு என்றேன். அப்போது தான் ஏதோ யோசனை வந்தது போல், பூசாரி எழுந்து சன்னதிக்குள் சென்றார். 

சரி! வீட்டுக்கு கிளம்பும் முன் உத்தரவு கேட்கப் போகிறார் என்று நினைத்து கவனித்துக் கொண்டிருக்க, உள்ளே பூசை செய்த பூசாரியின் நண்பர்களும், பூசாரியும் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டிருந்தனர். நினைத்தது சரிதான் என்று எண்ணிய பொழுது, நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்த பூசாரி, முருகருக்கு திருஷ்டி சுத்தினார்.

உள்ளே ஓதியப்பருக்கு திருஷ்டி சுத்திப் போட்டவர், அப்படியே வெளியே வந்து, அங்கிருந்த பக்தர்களை ஓதியப்பருக்கு முன் உள்ள மண்டபத்தில் அமரச்செய்து, அனைவருக்கும் திருஷ்டி சுத்தினார். பக்தர்களுக்கும் திருஷ்டி சுத்தி போடுவதா? அதுவும் ஓதியப்பருக்கு சுத்திய அந்த எலுமிச்சை பழம், கற்பூரத்தாலா? அட! அதிசயமாக இருக்கிறதே! கோவில் சன்னதிக்கு வந்து தரிசனம் செய்கிற பக்தர்களுக்கு, திருஷ்டி சுத்திப் போடுகிற முறை இந்த கோவிலில்தான் பார்க்கிறேன். இதை தினமும் செய்வார்கள் என்று பிறகு புரிந்து கொண்டேன். ஒதிமலயில் ஓதியப்பர் அனைவரையும் அவர் குடும்பத்தாராகவே ஏற்றுக் கொள்கிறார் என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்.

சன்னதிக்குள் இருக்கும் விளக்குகளை குளிரவைத்து, ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வைத்துவிட்டு, திரையை போடப் போனார்.  ஒரு நிமிடம் ஓதியப்பறை உற்றுப் பார்த்த எனக்கு, நெஞ்சுக்கூட்டுக்குள் ஏதோ ஒன்று அதிர்ந்தது. கண்கள் குளமாகிவிட்டது. இத்தனை அருகாமையை தந்து, கேட்டவர்கள் அனைவருக்கும் அருளாசி வழங்கிய "ஓதியப்பரை" இனி எப்பொழுது காணப் போகிறோம் என்ற உணர்வுதான் காரணம். ஹ்ம்ம்! நானும் மனிதன் தானே. தகப்பனை காணவில்லை என்று தேடும் குழந்தையின் மன நிலையில் தான் நான் இருந்தேன் அப்பொழுது.

மலைவிட்டு கீழே இறங்க தொடங்கிய பூசாரி, என்னிடம் "நீங்க என்ன பண்ணப் போறீங்க?" என்றார்.

"இன்று இரவு இங்கு தங்கிவிட்டு, நாளை மதியம் மலைவிட்டு இறங்கலாம் என்று இருக்கிறேன்" என்றேன். 

"சரி! நீங்கள் கீழே உள்ள அறையில் தங்கிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை தருகிறேன்" என்று விட்டு வணக்கம் கூறி விடை பெற்றார். அவருடன் உதவிக்கு நின்ற அனைவரும் கிளம்பி சென்றனர்.

அனைவரும் சென்ற பின் எங்கள் குழுவில் நாங்கள் எட்டு பேர் மட்டும் இருந்தோம். சட்டென்று ஒரு நினைப்பு வந்தது. ஓதியப்பரிடம் எங்கள் குழுவில் 18 பேர்கள் மலை ஏறி உன் பிறந்த நாளை கொண்டாடவேண்டும் என்று முதல் நாள் வேண்டிக் கொண்டது நினைவுக்கு வர, வந்தவர்களை மனதில் நினைத்து எண்ணிப்பார்த்தால், சரியாக 18 பேர்கள் வந்திருந்தனர். அட! அதெப்படி என்ற ஆச்சரியம். சின்ன சின்ன வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்று புரிந்தது.

எங்கும் மிகுந்த அமைதி. ஒரு சிறு சப்தமும் இல்லை. காற்று கூட சப்தமின்றி, ஆரவாரம் இன்றி வீசிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அவர் சன்னதி கோபுரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்து விட்டு, பின்பு உறங்கச் சென்றேன்.

ஞாயிற்றுக்கிழமை காலை, அமைதியாக விடிந்தது. இரு நண்பர்களை அழைத்து, ஒரு மூலிகை கீரையை காட்டிக் கொடுத்து "இதை நிறைய பறித்து வாருங்கள்! சிறந்த மூலிகை" காலை உணவுடன் எல்லோரும் அருந்த வேண்டும்" என்றேன். சற்று நேரத்தில் நிறைய பறித்துக் கொண்டு வந்த நண்பர்களை வைத்து "கீரை கூட்டு" ஆக அதை தயார் செய்து, காலை டிபன் "உப்புமா" தயார் செய்து அதனுடன் அருந்தினோம். அந்த வகை மூலிகையை ஒதிமலையில் தான் கண்டிருக்கிறேன். உடலுக்குள் மிகச் சிறப்பாக செயல் பட்டு, சுத்தம் செய்யும். அதை சித்த மார்கத்தில் செல்பவர்கள், தங்கள் உடலை உள்ளிருந்து சுத்தம் செய்ய உபயோகிப்பார்கள். அதை உண்ட நண்பர்கள், பின்னர், மிக ஆனந்தமாக இருந்தது என்றனர்.

நான் குளித்துவிட்டு, ஓதியப்பர் கோவில் முன் மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து த்யானத்தில் ஈடுபட்டேன். என்ன கேட்பது என்று யோசனை.

மனதில் ஒன்று தோன்ற "ஓதியப்பா! ஏதாவது உபதேசம் பண்ணேன்!" என்று கூறிவிட்டு த்யானத்தில் அமர்ந்தேன்.

மனம் சில நொடிகளில் நன்றாக பணிந்தது. ஒரு முனையில் ஓதியப்பர் பாதத்தில் மனதை வைத்து அமர்ந்திருக்க, வலது காதின் பக்கம் "ஓம்" என்கிற மந்திரம் போல் சப்தம் ஒலித்தது, கண் திறந்தால், சப்தம் நின்றுவிடக் கூடும் என்று நினைத்து அப்படியே அமர்ந்திருந்தேன். வலது காதிலிருந்து சப்தம் சுழிமுனை நோக்கி நகர்ந்தது, பின்னர் இடது காதை நோக்கி சென்றது, மறுபடியும் சுழிமுனை, பின்னர் சஹஸ்ராரம். மிகுந்த ஆனந்தத்துடன் கண் திறந்த எனக்கு, சுழுமுனைக்கு வெகு அருகில் ஒரு தேனீ பறந்து நின்றுகொண்டே அந்த சப்தத்தை கொடுப்பதை உணர்ந்தேன். அதை ஒரு தேனீயாக பார்க்கத் தோன்றவில்லை. விண்ணப்பித்தபடி ஓதியப்பர் தான் இந்த பாக்கியத்தை கொடுத்துள்ளார் என்று அந்த தேனியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

சுழுமுனையிலிருந்து இரு கண்களின் பக்கமும் சுழன்ற தேனீ, சஹாஸ்ராரத்தில் (அதாவது, தலையின் உச்சி) சென்று அமர்ந்துவிட்டு பறந்து சென்றது. அது சென்ற பின்னரும், பல மணி நேரங்களுக்கு அந்த சப்தம் என்னுள் புதைந்து இருந்தது. பிரணவத்தில் நின்று த்யானத்தில் அமர்ந்துகொள் என்று "ஓதியப்பர்" கூறுவதாக புரிந்து கொண்டேன். இது போதும், இதற்குத்தான் இத்தனை தூரம் வந்தேன். ஓதியப்பருக்கு நன்றியை கூறிவிட்டு, எல்லோரும் மலை இறங்கி, ஊர் வந்து சேர்ந்தோம்.

இனி அடுத்த தரிசனம் எப்பொழுது கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இதுவரை பொறுமையாக ஒதிமலை அனுபவத்தை வாசித்த அனைத்து அடியவர்களுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறேன்.  இத்துடன் ஒதிமலை பயணம் நிறைவு பெற்றது.

Friday 26 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 6

எண்ணைகாப்பு போடும் பொழுதே ஒரு எண்ணம் உதித்தது. இவருக்கு அபிஷேகம் செய்தபின் அந்த எண்ணையை சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அதுவே எல்லோருக்கும் ஓதியப்பர் கவசமாக மாறும், என்று உள்மனது கூறியது. அவ்வளவுதான்,  நின்று கொண்டிருந்த இருந்த நண்பரிடமிருந்து ஒரு பாட்டிலை வாங்கி, எண்ணைகாப்பு போட்ட துணியினால் அவர் தலை முதல் கால் வரை துடைத்து எடுத்து பிழிந்து கொண்டேன். ரொம்ப கொஞ்சமாகத்தான் கிடைத்தது. ஒரு முறை ஓதியப்பரை நிமிர்ந்து பார்த்து "என்ன ஓதியப்பா! ரொம்ப கொஞ்சமாக திருப்பி தருகிறாய். எல்லோருக்கும் கொடுக்க இது போதாதே!" என்றேன். மேலும் ஒரு பாத்திரம் நிறைய எண்ணையை எடுத்து அவர் சிரசில் அபிஷேகம் செய்து விட்டு திருப்பாதத்தின் அருகில் அது ஒழுகி வந்து சேர காத்திருந்தேன். காத்திருந்ததுதான் மிச்சம். கொஞ்சமாக வந்து சேர்ந்தது. ஒரு லிட்டர் எண்ணை அபிஷேகம் செய்தாலும், 10 கிராம்தான் திருப்பி தருவார் போல. அபிஷேகம் செய்வதெல்லாம் எங்கு போகிறது என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் மூன்று, நான்கு முறை எண்ணை அபிஷேகம் செய்து ஒரு 200 கிராம் சேர்த்து வைத்துக் கொண்டேன்.

கையில் இருந்த எண்ணை காப்பு போடுகிற துணியில் ஓரளவுக்கு எண்ணை இருந்ததால், வெளியே வந்து அங்கு குழுமியிருந்த பக்தர்களை கை நீட்டச் சொல்லி, குறைந்தது ஒரு சொட்டு அவர்கள் கையில் பிழிந்து விட்டேன். அனைவருக்கும் ஆச்சரியம், ஆனந்தம். என்னவோ இது நாள் வரை இப்படி ஒரு அருள் கிடைத்ததில்லை போல.

சற்று நேரத்தில் யாகத்தை முடித்துவிட்டு பூசாரி உள்ளே வந்தார். ஓதியப்பர் எண்ணை காப்பில் சந்தோஷமாக இருப்பதை பார்த்து சிரித்துக்கொண்டே அபிஷேகத்தை தொடங்கினார். மறுபடியும் விரிவான அபிஷேகம். ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஓதியப்பர் பூரித்துப்போய் நின்றுகொண்டிருப்பதை உணர முடிந்தது. அடியேனுக்கு, அவர் இடது பாதத்தின் அருகில் இருந்து சுத்தம் பண்ணுகிற வேலை. ரொம்ப அமோகமாக இருந்தது. வந்தவர்கள் அனைவரும் கண் இமைக்காமல் பக்தியுடன் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைத்து அபிஷேகமும் முடிந்த பின், பூசாரி சென்று யாக மேடையில் வைத்திருந்த கலச தீர்த்தத்தை கொண்டு வந்தார். ஓதியப்பர் முன் நின்று மந்திரம் ஜெபித்து, முத்திரைகள் காட்டி, பாதத்தை வணங்கிய பின் அபிஷேகம் செய்தார். சட்டென்று உள்ளுக்குள் ஒரு அமோகமான மணம் பரவியது. வேலையில் கவனமாக இருந்த நான், அதை நிறுத்திவிட்டு, ஓதியப்பரை கவனித்தேன். ஒரு புன்முறுவலுடன், அபிஷேகத்தை ஆனந்தமாக ஏற்றுக் கொள்கிற நிலையில் நின்று கொண்டிருந்தார்.  அபிஷேகம் செய்த நீரை சற்று குடத்தில் பிடித்து, பூசாரி அனைவருக்கும் தெளித்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

திரை இடப்பட்டு, அலங்காரம் தொடங்கியது. நல்ல பட்டு வேஷ்டியை எடுத்து பூசாரி ஓதியப்பருக்கு உடுத்த முயல, நான் இடைமறித்தேன்.

"நான் காவி வேஷ்டி, அங்கவஸ்திரம் வாங்கி வந்துள்ளேன். ஞானத்தின் தலைவனுக்கு அவன் பிறந்தநாள் அன்று முதலில் காவி உடுத்துங்கள். அதன் பின் அதன் மேலேயே பட்டு வேஷ்டியை உடுத்துங்கள். காவி வஸ்த்திரம் அவர் உடலை தழுவவேண்டும். இதுவே அடியேனுடைய வேண்டுதல்" என்றேன்.

சற்று நேரம் கூர்மையாக என்னை பார்த்தவர், சிரித்துக் கொண்டே "சரி! அப்படியே ஆகட்டும்" என்று கூறி ஓதியப்பருக்கு காவி வேஷ்டியை உடுத்தினார். பின்னர் அதன் மேலே பட்டு வேஷ்டியை உடுத்தினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது, இருப்பினும் சிரிப்பு வந்தது. எனக்கு தெரிந்த ஒரு சாது, இரண்டு மூன்று ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்துதான் அமர்ந்திருப்பார். அவரை போல ஓதியப்பரையும் பூசாரி ஆக்கிவிட்டார் என்பதே அந்த சிரிப்புக்கு காரணம்.

பூசாரியின் கை வண்ணத்தில் ஓதியப்பரின் அழகு மேலும் மெருகேற,  கிரீடம் வைத்து, கவசம் வைத்து, பொட்டு வைத்து, மார்பில் அழகான மாலை சூட்டி, வேல், சேவல் கொடி போன்றவை அவர் கை அருகில் சார்த்தி, அழகு பார்த்தார், பூசாரி. ஒரு அன்பர் கொண்டு தந்த ஜவ்வாது, அரகஜா, புனுகு போன்றவை தடவி மணம் கமழ வைத்தார். அவர் நெற்றியில், ஒரு அன்பர் வாங்கி கொண்டு வந்திருந்த கல் பதித்த சுட்டியை பதித்திட, ஓதியப்பர் மிகுந்த அழகுடன் தயாரானார்.

தீபாராதனை நடந்த பொழுது, அப்படி ஜொலித்தார் ஓதியப்பர். அதை காண கண் கோடி வேண்டும். 


தீபாராதனை நிறைவு பெற்றதும், நான் ஓதியப்பரிடம் ஒரு பிராத்தனையை வைத்தேன்.

"உன் குழந்தைகள் எல்லாம் நேற்று, உன்னிடம் உத்தரவு கேட்ட பொழுது, ஒருவருக்கும் நீ பதில் கொடுக்கவில்லை. இன்று உன் பிறந்தநாள். உன் பரிசாக யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு உத்தரவு கொடுத்து ஆசிர்வதிக்க வேண்டும்!" என்றேன்.

பூசாரியிடம் "அய்யா! இன்று உத்தரவு கேட்டுப் பார்ப்போம்." என்றேன்.

அவரும் உடனேயே "சரி தொடங்கிவிடுவோம். யாருக்கேனும் உத்தரவு கேட்க வேண்டி இருக்கிறதா?" என்று கேட்டு ஓதியப்பர் தலையில் ஒரு கொத்து பூவை வைத்து தீபாராதனை காட்டினார்.

ஒரு அன்பர் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு பிரார்த்தனையுடன் அமர்ந்தார். ஒரு நிமிடத்தில் உத்தரவு வந்தது.

அடுத்த ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கும் அதே போல உத்தரவு.

ஒரு 15 நிமிடத்தில் உத்தரவு கேட்ட அனைவருக்கும் "நல்ல உத்தரவை கொடுத்து" மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

"இன்னிக்கு என்ன ஆச்சு ஓதியப்பருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் போல. இப்படி வாரி வழங்குகிறார்!" என்று நினைத்தேன்.

சரி! நாமும்தான் ஏதேனும் கேட்டுப் பார்ப்போமே! என்று நினைத்து, கடைசி ஆளாக நான் சென்று அமர்ந்தேன்.

பொதுவாக எப்பொழுது ஒதிமலைக்கு சென்றாலும், ஓதியப்பரிடம் எனக்கென்று எதுவுமே கேட்பதில்லை. எல்லாம் மற்றவர்களுக்குத்தான். சரி! இந்த முறை என்ன கேட்கலாம், என்று யோசித்து அமர்ந்தவுடன், வேண்டுதல் தானாகவே உள்ளிருந்து வந்தது.

"ஓதியப்பா! எப்பொழுதும் நீ என்னுள் இருந்து வழி நடத்தவேண்டும்!"

கேட்டு  முடிக்கும் முன், பூ விழுந்தது. ஆசிர்வாதம் செய்துவிட்டார், அது போதும் என்ற எண்ணத்துடன், நன்றி கூறிவிட்டு,

"ஓதியப்பா! உனக்கு, அடியேனுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறி எழுந்தேன்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 25 September 2014

சித்தன் அருள் - 194 - சாங்கதேவ சித்தர்!


அகத்தியரின் ஜீவநாடியை வாசிக்க தொடங்கியது முதல், தனிமை என்பது பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி அரிதாக கிடைக்கும் நேரங்களில், என்னுள் எழும் பல கேள்விகளுக்கும் பதில் கொடுப்பார், அகத்தியப் பெருமான். அப்படி அவர் பல கோவில்கள், சித்தர்கள், புண்ணிய ஸ்தலங்களை பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார். இந்த முறை ஒரு சித்தரை பற்றி கூறியதை தொகுத்து தருகிறேன்.

தமிழ்நாட்டில், "திருமூலர்" என்னும் சித்தரை அறியாதவர் யாருமில்லை. இதேபோல வடநாட்டில் "சாங்கதேவர்" என்னும் புகழ் பெற்ற சித்தர் ஒருவர் உண்டு.  கூடுவிட்டு கூடு பாயும்  மந்திரத்த்தை கற்று தேர்ந்தவர்.

இவரை இவரது சிஷ்யர்களே நேரிடையாக பார்த்தது கிடையாது. அசரீரி குரல் மூலம் சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த முதல் சித்தர் இவர்தான்.

தபதி ஆற்றங்கரையில் அருமையான  சூழ்நிலையில் பர்ணசாலை கட்டிக் கொண்டு ஆஸ்ரமம் நடத்தி வந்தார். நூற்றுக்கணக்கான சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்தார்.

அதே சமயம் தனது தவ வல்லமையால் யாருக்கும் தெரியாமல் வான வீதியில் பறந்து சென்று பண்டரிபுரம் வந்து, ஸ்ரீ பண்டரி நாதனை தொழுது பாடிச் செல்வார்.

எத்தனையோ பேருக்கு அசரீரி மூலம் தத்துவப் பாடல்களையும் ஆன்மீக சிந்தனைகளையும் அள்ளிக் கொடுத்த சாங்க தேவருக்கு ஒருநாள் அசரீரி மூலம் ஒரு தகவல் வந்தது.

"வெளியூரில் உன்னைவிட அதிக திறமைசாலியும், புத்தி கூர்மையும், ஆன்மீக விஷயத்தில் கரை கண்ட ஒருவர் இருக்கின்றார். அவருடைய பெயர் ஞானதேவன். மிகப்பெரிய சித்தராக விளங்கிக் கொண்டு வருகிறார். அவரை வரும் பௌர்ணமி அன்று மாலையில் தகுந்த மரியாதையோடு சென்று தரிசனம் செய்க" என்றது அந்த அசரீரி.

இதைக் கேட்டதும், சாங்கதேவருக்கு சற்று மனப்புண் ஏற்பட்டது. அவரை சந்திக்க மறுத்தார். "தான்" என்கிற திமிர் சாங்கதேவரை பிடித்துக் கொண்டது. யார் என்ன சொன்னாலும் கேட்க மறுத்தார். 

இந்த செய்தி ஞானதேவருக்கு போயிற்று. ஒருவேளை சாங்கதேவச் சித்தன் மனம் மாறி தன்னை பார்க்க வந்தாலும் வரலாம் என்ற நம்பிக்கையில் ஒரு சிறு குழந்தையோடு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார், ஞானதேவர்.

ஒரு கட்டத்தில் ஞானதேவரை சந்திப்பது என்று முடிவெடுத்தார், சாங்கதேவர். தன் தவ வலிமையினால் செயற்கை புலி ஒன்றை உருவாக்கினார், ஒரு கருநாகப் பாம்பை சாட்டையாக மாற்றினார். பின்னர் அந்த புலியின் மீது கம்பீரமாக அமர்ந்து கையில் (கருநாகப் பாம்பு) சாட்டையுடன் ஞானதேவரின் இருப்பிடம் நோக்கி படு வேகமாக வந்தார்.

ஞானதேவர் இந்த வேடிக்கையைக் கண்டு, தன் கையை இப்படி, அப்படியுமாக மூன்று முறை அசைத்தார்.

அவ்வளவுதான், சாங்கதேவரிடம் இருந்த சாட்டை, மாலையாக மாறியது, புலி பசுமாடாக உருமாறியது. தவசக்தி இழந்து தனிமரம் ஆனார் சாங்கதேவ சித்தர்.

தன்னை விட, ஆயிரம் மடங்கு தவவலிமை பெற்ற ஞானதேவரிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று உணர்ந்த சாங்கதேவர், ஞானதேவரின் காலில் விழுந்தார். தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். ஞானதேவரும், சாங்கதேவரை மன்னித்தார். தனது சீடனாக சாங்கதேவரை ஏற்று பல்வேறு சித்துக்களை சொல்லித்தந்தார். ஞானப்பாடல்களை  உபதேசித்தார்.

ஞானதேவரை குருவாக ஏற்ற பின்னர், சாங்கதேவர் அடக்கமாய் தனது சித்து வேலைகளை செய்தார். தண்ணீரில் உட்கார்ந்தபடியே இக்கரைக்கும், அக்கரைக்கும் சென்று வந்தார்.

தண்ணீருக்குள் கால் வைத்தால், தண்ணீர் இரண்டு பிரிவாக பிரிந்து, சாங்கதேவ சித்தருக்கு வழிவிட்டது. இறந்தவர்கள் பலரை சிவபெருமான் துணை கொண்டு பிழைக்க வைத்துக் காட்டினார். ஏழைகளுக்கு பசியைப் போக்க அமுதசுரபியை வரவழைத்து கொடுத்தார். கூடு விட்டு கூடு பாயும் வித்தையைத் தவிர மற்ற அனைத்து வித்தைகளையும் தன் ஆச்ரமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த சாங்கதேவ சித்தர், பிற்காலத்தில் மனிதச் சித்தனாக மாறி, தனது உருவத்தை வெளிக் கொணர்ந்தார்.

இன்றைக்கும் சாங்கதேவச் சித்தர் தபதி நதிக்கரையில் இருந்து தன்னை நாடிவரும் அனைவருக்கும் அருளாசி வழங்கி, ஊழ்வினை நோய்களையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

சித்தன் அருள்....................... தொடரும்! 

Sunday 21 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 5

ஆகஸ்ட், 23, 2014  சனிக்கிழமை. ஓதியப்பரின் பிறந்தநாள். அதிகாலை அம்சமாக பிறந்தது.


அதற்கு முன், அன்றைய தினம் அதிகாலை முதல் ஜாமத்தில், நடந்ததை பார்ப்போம்.

போனவருடம் வந்து பெரியவர்கள் ஒரு மரத்தை உலுக்கி எடுத்ததை முன்னரே கூறி இருந்தேனே. அது போல் இம்முறை நடக்காததை கண்டு தான் உறங்கச் சென்றேன். மலை ஏறி, ஓதியப்பருக்கு அபிஷேக பூசை செய்து பின்னர் மாலையில் உணவருந்திவிட்டு இரவு உறங்கச் செல்லும் பொழுது, ரொம்ப அசதியாக இருந்தது. நன்றாக உறங்கிவிட்டேன் காலை ஒரு 7 மணி வரை. எழுந்து உட்கார்ந்து ஓதியப்பரின் திருவடியை முதலில் மனதில் நினைத்துவிட்டு எழுந்து நின்றால், கூட இருந்தவர் ஒருவர் தான் முதலில் கண்டதை சொன்னார். 

​அது அதிகாலை நேரம் ஒரு 2.30 மணி இருக்கும். உறக்கம் கலைந்ததால், வெளியே எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்தவர், கதவை திறக்க, அங்கே நடந்ததை கண்டு அசந்துவிட்டார். நாங்கள் தங்கி இருந்த அறைக்கு அருகில் ஒரு மரம்  உள்ளது. சக்தி வாய்ந்த ஒரு சுழல் காற்று அந்த மரத்தை போட்டு அந்த பாடு படுத்திக் கொண்டிருந்தது. மரத்தை எவ்வளவு தூரம் வளைக்க முடியுமோ அத்தனை வளைத்து, உலுக்கி, இப்பொழுது வேரோடு பிடிங்கிவிடுவேன் என்கிற நிலையில் அசைத்துக் கொண்டிருந்தது. சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர் மேல் ஒரு துளி கூட காற்றின் வீச்சம் பதியவே இல்லை. என்னவோ நடக்கிறது என்று உணர்ந்து, சத்தம் போடாமல் கதவை தாளிட்டுவிட்டு உள்ளே வந்து விட்டார். காலையில் எழுந்து பார்த்தால், அந்த மரத்தின் அடியில் ஒரு இல்லை கூட உதிர்ந்து இருக்கவே இல்லை. என்ன அதிசயம் என்றார். நான்,  எல்லாம் அவர்கள் செயல் என்று கூறிவிட்டு குளிக்க சென்று விட்டேன். இந்த நல்ல நாளில், முருகனை தரிசனம் செய்ய வந்தது, அவர்களுக்கு இடைஞ்சல் ஆகிவிட்டதோ? என்று நினைத்து சென்றேன். முருகன் எங்களுக்கும் தான் சொந்தம், அதெப்படி நீங்கள் இப்படி கோபப்படலாம் என்று மனதுள் நினைத்துக் கொண்டேன்.

குளித்து முடித்து வந்தபின், ஒரு நண்பர் அன்று காலை எடுத்த ஒரு புகைப்படத்தை காட்டினார். அது ஒதிமலையின் நிழல். கிழக்கில் உதிக்கும் சூரியன், மலையின் நிழலை எதிர் மலையில் மடுவில் பதியவைத்து, பின்னர் ஒதிமலை வரை ஓடி வர வைப்பது, காண்பதற்கு கண் கொள்ளாக் காட்சிதான். நிறைய தடவை அதை காண்பதற்கென்றே மலையில் தங்கி, கண்டு வருவதுண்டு நான். அந்த நிழல் கூட ஏதோ ஒரு செய்தியை கூறுவதாக எப்பொழுதும் உணருவேன். பின்னர் விசாரித்த பொழுது தான் தெரிந்தது, முதலில் அந்த நிழல் விழுகிற இடத்தில், எதிர் மலையில், ஒரு பெருமாள் கோவில் உண்டு என்று தெரிய வந்தது.


பின்னர் தனியே நின்று அந்த மலையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு ஏற்றார் போலவே, ஒரு அன்பர் வந்து, "சாமி! வரீங்களா! அந்த மலைக்கு சென்று வருவோம். அங்கு ஒரு பெருமாள் கோவில் உள்ளது. என்றார்.  

இல்லை அய்யா! இந்த முறை ஒதிமலை மட்டும்தான். பின்னர் ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம் என்று மெதுவாக நழுவிவிட்டேன்.

காலை முதல் (எளிய) அபிஷேகம் 8 மணிக்கு தொடங்கியது. முதல் நாள் போலவே, எண்ணைகாப்பு போடுகிற வாய்ப்பு கிடைத்தது. நண்பர் கொண்டுவந்த "வெட்டிவேர்" எண்ணையை போட்டதுதான் தாமதம், மழை தொடங்கியது. பூசாரி, மழை தொடங்கிவிட்டதே, யாகம் எப்படி நடத்தப் போகிறோம் என்று கவலை பட்டுக் கொண்டே அபிஷேகத்தை நடத்தினார். அபிஷேகம் நடந்த பின் எளிய அலங்காரத்தில் ஓதியப்பரை கீழே தருகிறேன்.


கிடுகிடுவென அபிஷேகம் முடித்து அலங்காரம், நிவேதனம் செய்துவிட்டு, அவர் யாக மண்டபத்துக்கு சென்று அமர்ந்தார். சிறிதாக பெய்து கொண்டிருந்த மழை பலமாகியது! உண்மையில் சொல்லப் போனால், யாரோ ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து கொட்டினது போல் இருந்தது. அத்தனை வேகம். பூசாரி போய் கிழக்கு திசையில் முருகரை பர்ர்த்து உட்கார்ந்ததும், மேலும் பலமடைந்த மழை, அவரை உட்கார விடாமல் அந்த பாடு படுத்தியது. நண்பர்களை விட்டு அறையில் இருக்கும் ஒரு பெரிய திரையை கொண்டு வந்து பூசாரிக்கு பின் கட்டினோம். பின்னர் தான் அவர் நனையாமல் அமர்ந்து ஜெபிக்க முடிந்தது.



இனி பிறந்த நாள் அபிஷேகத்துக்குதான் நான் தேவை என்று உணர்ந்து, வெளியே வந்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டேன். யாகம் நடந்து கொண்டிருந்தது. சென்னையிலிருந்து வந்த மூன்று பேர் (திரு.கார்த்திகேயன் (சித்தன் அருள்) அவர்கள் சொல்லி அனுப்பியவர்கள்) வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது மழை விட்டிருப்பதை உணர்ந்து, இது தான் நேரம், இப்பொழுதே போகர் தவம் செய்கிற பாறைக்கு சென்று வருவோம் என்று, ஒருவரையும் தெரிவிக்காமல், அந்த மூன்று பேரை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றேன்.

வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் முதலில் வழி தவறிவிட்டது. கூட வந்த ஒரு அடியவர், என்ன தேடுகிறீங்க என்று கேட்டு, அது அந்த வழி, வாருங்கள் என்று அழைத்துச் சென்றார்.

அட! அந்த பாறையை இன்னும் அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் என்று கண்டு,   ​அழைத்து சென்ற நண்பர்களிடம், என்ன செய்ய வேண்டும் என்று கூறி, ஒருவரை போய் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் த்யானம் செய்யச்சொன்னேன்.
  1. முதலில் சென்றவர் திரும்பி வந்து "அட! பிரமாதம்! நான் ஏதோ ஒரு தாமரை மேல் அமர்ந்து, அந்தரத்தில் இருந்தது போல் உணர்ந்தேன்" என்றார்.
  2. இரண்டாமவர் "ஆச்சரியம்! எங்கு இருந்தேன் என்ற உணர்வு இன்றி இருந்தேன்" என்றார்.
  3. மூன்றாமவர் "மிக அருமையான த்யானம் அமைந்தது" என்றார்.
இதற்குள் ஒரு நண்பர் கூட்டம் நாங்கள் இருப்பதை பார்த்து கீழே இறங்க முயற்ச்சிக்க, அனைவரையும் வர வேண்டாம் என்று கூறினேன். மழை பெய்து செங்குத்தான வழியாக இருந்ததால் எல்லோரையும் தடுத்து நிறுத்தினேன். நிறையவே வழுகியது உண்மை.

யாகம் நடந்து கொண்டிருந்தது.


நான் நண்பர்களுடன் அமர்ந்து ஆன்மீக உரையாடலில் இருந்தேன். திடீரென்று "உள்ளே வா!" என்று யாரோ அழைத்தது போல் தோன்றியதால், சன்னதியை நோக்கி ஓடினேன்.

பார்த்தால், வேறு ஒருவர் முருகனுக்கு எண்ணைகாப்பு போட்டுக் கொண்டிருந்தார், அடுத்த அபிஷேகத்துக்கு முன்.

நான் ஓதியப்பரை பார்த்தேன். பிறந்தநாள் எண்ணை காப்பு போடுகிற வேலை எனக்கு வேண்டும் என்று கேட்டிருந்தேனே! அந்த பாக்கியத்தை வேறொருவருக்கு கொடுத்திவிட்டாயா? இனி நான் என்ன செய்ய? என்று மனதுள் கேள்வி கேட்டேன்.

"உனக்கும் உண்டு! நீ கொண்டுவந்ததை எடுத்து வா!" என்றார்.

அவ்வளவு தான்! கையில் இருந்த வெட்டிவேர் எண்ணையுடன் ஓதியப்பர் சன்னதிக்குள் புகுந்து, அங்கு வேறு எண்ணையை காப்பு போட்டுக் கொண்டிருந்தவரிடமிருந்து பாத்திரத்தை வாங்கி, வெட்டிவேர் எண்ணையை ஓதியப்பருக்கு தடவத் தொடங்கினேன். மற்றவர், மலைத்துப் போய் நின்றுவிட்டார்.

Thursday 18 September 2014

சித்தன் அருள் - 193 - அகத்தியர் நமக்கு அருளிய "பஞ்சேஷ்டி"


ஒருநாள், தனித்து இருக்கும் பொழுது, நாடியில் அகத்தியரிடம் "தாங்களுக்கு தொடர்புள்ள ஏதேனும் ஒரு கோவில் பற்றி கூறுங்களேன்" என்றேன். அகமகிழ்ந்து அவர் அந்த கோவிலை பற்றி விவரிக்க, நான் ஒவ்வொன்றாக குறிப்பெடுத்துக் கொண்டேன். அதை இங்கு தொகுத்து தருகிறேன்.

ஒரு சமயம் -----

​அகத்தியப் பெருமான் தவம் புரிந்து கொண்டிருக்கும் பொழுது, அரக்கர் வம்சத்தை சேர்ந்த "சுகேது" என்பவன் - தன் குடும்பத்தாரோடு அவர் காலில் வந்து விழுந்தான்.

அசுரர் குடும்பத்தைச் சேர்ந்த "சுகேது" எதற்காக தன் காலில் விழவேண்டும் என்று அகஸ்த்தியப் பெருமான், தன் ஞானக் கண்ணால் பார்த்த பொழுது, "சுகேது" மிகவும் உத்தமன் என்றும், முன் ஜென்ம கர்மவினையால் அரக்கர் குலத்தில் பிறந்தவன் என்பதையும், அசுரர் குடும்பத்தில் பிறந்தாலும் சதா சர்வ காலமும் சிவபெருமானையே வழிபட்டு வருவதால் மற்ற அசுரர்கள் சுகேதுவையும், அவன் குடும்பத்தையும் துன்புறுத்தி வருவதாக அறிந்தார்.

இந்த சுகேதுவையும், அவன் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தார்.

யாகம் மூலமாகத்தான் சுகேதுவின் தோஷத்தை போக்கி, முக்தி கொடுக்க முடியும் என்பதை உணர்ந்த அகத்தியர், தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுடயாகம் என்ற ஐந்து யாகங்களை செய்ய நினைத்தார். அதே சமயம் இந்த யாகத்தை செய்யவிடாமல் அரக்கர்கள் கூட்டம் வரும். இதை எப்படித் தடுப்பது என்று நினைக்கும் பொழுது, உமையவளே அகத்தியன் முன் தோன்றினாள்!

"அகத்தியரே! உங்களது யாகம் பற்றி நான் முக்கண்ணன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை நேரிடையாகக் கண்டதில்லை, அந்த பாக்கியத்தை அருள வேண்டும்" என்று கருணையோடு வேண்டினாள்.

உமாதேவியே இப்படியொரு வேண்டுகோளை தன்னிடம் வைத்த பொழுது அகஸ்தியர் அகமகிழ்ந்து போனார்.

"தாயே! தேவர்களுக்கும், என்னுடைய மானிட சிஷ்யர்களுக்குமே இதுவரை யாகம் செய்து, அவர்களது தோஷத்தைப் போக்கிய நான், இன்று முதன் முறையாக நல்ல உள்ளம் கொண்டு, அன்றாடம் சிவபெருமானையே வணங்கிவரும் "சுகேது" என்னும் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவனுக்கும், அவனது குடும்பத்தினருக்கும் பஞ்சயாகம் ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். தாங்கள் சம்மதித்தால், தாங்கள் எங்கு செய்யச் சொல்கிறீர்களோ, அந்த இடத்திலே செய்ய விரும்புகிறேன்" என்றார் அகத்தியர்.

"என்ன அகத்தியரே! அரக்கனுக்கு தோஷம் போக யாகமா? அதுவும் உங்கள் கையாலா?, இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி செய்து கொண்டே போனால் எல்லா அரக்கர்களும் உங்கள் காலடியில் வந்து விழுந்து விடுவார்களே" என்றாள் உமையாள்.

"பகைவனுக்கே அருள்கின்ற தாங்களே இப்படிச் சொல்லலாமா? எல்லா அரக்கர்களையும் நல்லவர்களாக ஆக்கிக் காட்டுவோம்" என்றார்.

"இல்லை, அகத்தியா! கெடுதல்கள் நடக்க நடக்கத்தான் இறைபக்தி  வளரும். உன்னால் எல்லா அரக்கர்களும் சொர்க்கம் அடைந்துவிட்டால், தேவலோகம் தாங்காது. கெடுதல் செய்பவர்கள் அப்படியே அவர்களுது தொழிலை தப்பாது செய்யட்டும், கெடுதல் இருந்தால்தானே நன்மைக்கும் நல்லவர்களுக்கும் மரியாதை கிடைக்கும். எனவே அரக்கர்களைக் கெடுத்துவிடாதே!" என்றாள் சூசகமாக.

​"தாயே! தாங்கள் சொல்வதை நானும் அறிந்தவன்தான். என்னிடம் புகலிடம் கேட்டு வந்த இந்த சுகேது, அவனது குடும்பத்தினர்க்கும் சாப விமோசனம் செய்ய தாங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லையே!"

"அகத்தியா! நீ எதை செய்தாலும் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். உன்னை எதிர்த்து பேச முடியுமா? இல்லை உனக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியுமா? இதில் எனக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கிறதா என்ன?" என்ற உமையவள் "இப்போது உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்" என்றாள்.

"தாங்கள் என்னுடைய யாகத்தைப் பார்ப்பதாக விரும்பினீர்கள் அல்லவா? அதனால் இந்த சுகேதுவுக்கு ஐந்துவகை யாகங்களும் செய்யப் போகிறேன். தாங்கள் இந்த யாகம் வெற்றி பெற முக்கண்ணன் துணையோடு உதவ வேண்டும்" என்றார் அகத்தியப் பெருமான்.

எப்படி?

"இந்த யாகம் முடியும் வரை அரக்கர்களால் எந்தவிதத் தொந்தரவும் வரக்கூடாது. தாங்கள் தான் முன்னின்று காத்தருள வேண்டும். அதே சமயம் முக்கண் உருவெடுத்தும் காட்சி தரவேண்டும். ஏனெனில் இந்த பஞ்சயாகம் செய்துவிட்டு, சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை முருகப்பெருமான் துணையோடு செய்யப் போகிறேன்" என்றார்.

"அதென்ன சத்ரு சம்ஹார யாகம்?"

"முதன் முறையாக நானே என் கையால் செய்யப் போகும் யாகம். போட்டி, பொறாமை, எதிர்ப்பு, கொடுமை இது போன்ற தொல்லைகளால் நாள்தோறும் அவதிப்படுபவர்கள், அந்த தொல்லையிலிருந்து அகல, முருகப் பெருமானே எனக்கிட்ட கட்டளை அது. முறையோடு செய்யப் போகிறேன்" என்றார்.

"மிக்க மகிழ்ச்சி அகத்தியரே!, இதை செய்யத் தகுந்து இடம் இனிமேல் "பஞ்சேஷ்டி" என்று அழைக்கப்படும். அங்குதான், சிவபெருமான் சுயம்புவாக காட்சி அளித்திருக்கிறார். காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள இந்த அருமையான இடம், பிற்காலத்தில் பெரும் புண்ணிய ஸ்தலமாக மாறவும் போகிறது" என்றாள் உமையவள், மிகவும் ஆனந்தமாக.

"தாயே, தாங்கள் என் பொருட்டு அருள்பாலிக்க முன் வந்தது மிகவும் மகிழ்ச்சி.  தாங்கள் ஆனந்தமாக இதைச் சொன்னதும், என் யாகத்திற்கு துணை நிற்கப் போவதால், தங்களை இன்று முதல் "ஆனந்தவல்லித் தாயார்" என்று அழைக்க விரும்புகிறேன். தங்களுக்கு சம்மதம் தானே?"என்றார் அகத்தியர்.

"அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதித்தாள், ஆனந்தவல்லித் தாயார்.

மிகச் சிறப்பாக அகஸ்தியர் நடத்திய அந்த யாகத்தை தடைசெய்ய வந்த அரக்கர்களை, ஆனந்தவல்லித் தாயார் தன் இடது காலை முன் வைத்து, தன் முக்கண்ணினால் சம்ஹாரம்  செய்தாள்.  அகஸ்தியர் ஐந்து யாகத்தையும், கடைசியாக சத்ரு சம்ஹார யாகத்தையும் வெற்றிகரமாக முடித்தார். சுகேதுவும் அவனது குடும்பத்தினர்களும், சாப விமோசனம் பெற்றனர். உமையவளும் ஆனந்தவல்லித் தாயாராக அருள் பொங்க, இடது காலை முன்வைத்து மகிழ்ச்சியாக காட்சி தருகிறாள்.

இந்த கோவில் சென்னையிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் கல்கத்தா நெடுஞ்சாலையில், ரெட்ஹில்ஸ் பக்கத்தில் அமைந்திருக்கிறது.மிக பழமையான கோவில், ராஜகோபுரத்தில் வைணவப் பெருமையை காட்டும் தசாவதார காட்சிகள் அழகுப் பட ஒரு பக்கமும், அதற்கு நேர் எதிரில் சைவப் பெருமையைக் குறிக்கும் தெய்வக் காட்சிகளும் சரிக்கு சரிசமமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

நவக்ரகங்கள் இங்கு நேர் வரிசையாக இருப்பதையும், அதில், சனீச்வரனுக்கு காக்கை வாகனத்திற்குப் பதிலாக கருடவாகனம் இருப்பதையும் காணலாம். இது சற்று வித்யாசமாக இருக்கும்.

கோயிலுக்கு இடதுபுறம் மிகப் பெரிய குளம் இருக்கிறது. இது அகஸ்தியர் உமிழ்நீரால் தோன்றியது என புராணங்கள் கூறுகின்றது. ஆனால் அகத்தியர் ஜீவநாடியில் இது பற்றி கேட்ட பொழுது, யாகம் முடித்த கையை அலம்புவதற்கு அகத்தியர் கமண்டலத்திலிருந்து, கங்கை அவளே நீராக வந்து, அகத்தியர் கையை அலம்ப, உருவெடுத்ததாக வந்திருக்கிறது.

சத்ரு சம்ஹார யாகம் செய்ய, இதைவிட மிகச்சிறந்த கோவில் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இது சென்னை நகரவாசிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து சிவபக்தர்களுக்கும் ஒரு வரப்ரசாதமான புண்ணிய ஸ்தலம். 

"யாருக்கு விதி இருக்கிறதோ, யார் கர்மாவில் அதற்கு அனுமதி இருக்கிறதோ, அவர்கள இங்கு வரட்டும், வந்தெனது அருள் பெறட்டும்" என்றார் அகத்தியர்.

[ஒரு பின்குறிப்பு:- எல்லா மாதமும் "சதயம்" நட்சத்திரத்தன்று, சித்தர் உத்தரவால், சிறப்பு பூசை, வழிபாடு இங்கு நடைபெறுகிறது என்று அறிந்தேன். மேலும், விவரம் தெரிந்தவர்கள், மற்ற அடியவர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று, தெரிந்த தகவலை தர வேண்டுகிறேன்.]

சித்தன் அருள் ................... தொடரும்!

Sunday 14 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 4


ஓம் அகதீசாய நமஹ!

எங்கும் அமைதி நிறைந்து நின்றது. அங்கு கூடியிருந்த பக்தர்களின் பார்வை ஓதியப்பர் மேல்தான் இருந்தது. "உத்தரவு கொடுப்பாரா? என்ன உத்தரவு கொடுப்பார்? எப்பொழுது கொடுப்பார்? என்ற கேள்விகளுடன் எல்லோரும் காத்திருந்தனர்.

மூன்று நிமிடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு பூ கூட கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் தானே தலையில் சூடி நின்று இருந்தார்.

பொறுத்திருந்து பார்த்த பூசாரி, கடைசியில் "எல்லாம் நிறைவா இருக்கு என்று தான் தோன்றுகிறது! அப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறார் போல. சரி அடுத்தவர் வாருங்கள்!" என்று கூறிவிட்டு மறுபடியும் ஒரு கொத்து பூவை அவர் தலையில் வைத்துவிட்டு, தீபாராதனை காட்டிவிட்டு காத்திருந்தார். அடுத்து வந்து அமர்ந்த பக்தர், வேண்டுதலை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார்.

அவருக்கும் அதே கதிதான்! ஹ்ம்ம்ஹும்! உத்தரவு தர மாட்டேன் என்று பிடிவாதமாக நின்று கொண்டிருந்தார் ஓதியப்பர்.

தொடர்ந்து எத்தனை பேர் நமஸ்காரம் செய்துவிட்டு அமர்ந்தாலும், அதே நிலை தான்.

இதை கண்ட நான் உண்மையிலேயே வெறுத்துப் போய்விட்டேன். 

"என்னடா இது! இதற்கு மேல் எப்படி இவரை குளிரவைப்பது? ஏன் ஒருவருக்கும் உத்தரவு கொடுக்க மாட்டேன் என்கிறார்? என்ன தவறு நடந்துள்ளது?" என்று யோசித்தபடி இருந்தேன்.

எத்தனை பேர் வந்தாலும் யாருக்கும் உத்தரவு கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக ஓதியப்பர் நிற்பதை கண்டு, இனிமேல் கேட்டு பிரயோசனம் இல்லை என்று உணர்ந்து, "இனி இன்று யாரும் உத்தரவு கேட்கவேண்டாம்" என்று அறிவித்துவிட்டு, தீபாராதனை காட்டிவிட்டு வெளியே வந்து விட்டார், பூசாரி.

வெளியே வந்த அவரிடம், "என்னங்க! உங்க ஓதியப்பர் ஏன் இன்று இப்படி முரண்டு பிடிக்கிறார்? இன்று வெள்ளிக்கிழமை தானே. உத்தரவு கொடுக்கிற நாள் தானே?" என்றேன்.

"யாருக்குத் தெரியும், அவன் லீலை. அவர் மனசுல என்னத்த வெச்சுண்டு இப்படி பண்ணறான்னு, பல வேளைகளில் புரிவதே இல்லை. இதைவிட ரொம்ப இக்கட்டான சூழ்நிலைல வந்து கேள்வி கேட்கிற பக்தனுக்கு, உத்தரவே குடுக்கமாட்டார். வந்த பக்தரும் டென்ஷன் ஆகி, நம்மளையும் ஒரு வழியாக்கி விட்டுடுவார், அவர்." என்றார் பூசாரி.

ஓதியப்பரின் பூசை முடிந்து, சுத்துவட்ட சாமி சன்னதிகளுக்கு பூசை செய்ய சென்றார் பூசாரி. அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரையும் பூசாரிக்கு உதவி செய்யச் சொல்லி, அனுப்பி வைத்தேன்.

எனக்கு ஓதியப்பரை தனியாக கிடைக்க வேண்டும். ஒரு சில கேள்விகளை கேட்கவேண்டும் என்ற அவா. எல்லோரும் சென்ற பின், ஒரு பக்தர் மட்டும் அமர்ந்திருந்தார். நான் நேராக ஓதியப்பரிடம் சென்று நின்றேன்.மனதுள் இருந்த கேள்வியை கேட்டேன்.

"என்ன அப்பனே! இன்று உனக்கு செய்த அபிஷேகத்தில் திருப்தி இல்லையா? எல்லோரும் உன் பக்தர்கள். உன்னை பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். ஏன் இப்படி சோதிக்கிறாய்? எல்லோருக்கும் அருள்புரியக்கூடாதா!" என்று கூறிவிட்டு அமர்ந்தேன்.

"சற்றே நேரத்தில் "நாளை அறிவாய்!" என்று ஒரு குரல் கேட்டது.  எழுந்து, நமஸ்காரம் செய்துவிட்டு, நன்றி கூறிவிட்டு வெளியே வந்து அமர்ந்தேன்.

சுத்து வட்ட பூசைக்கு போனவர்கள் திரும்பி வந்தவுடன், பூசாரி எல்லோரையும் "ஓதியப்பரின்" நிவேதன பிரசாதத்தை, உணவாக அருந்தி விட்டு செல்ல, வேண்டிக் கொண்டார்.

அனைத்து பக்தர்களும் அமர்ந்து ஓதியப்பர் போட்ட சாப்பாட்டை அருந்துவதை பார்க்க மிக சந்தோஷமாக இருந்தது. எங்களுக்கும் உணவு படைக்கப் பட்டது. மிகுந்த பசியாக இருந்ததினால், எல்லோரும் உணவருந்த உடனேயே அமர்ந்தோம்.

பசியாறிவிட்டு, மெதுவாக பூசாரியிடம் சென்றேன். 

"சுவாமி! நாளை ஓதியப்பரின் பிறந்தநாளை கொண்டாடுவது பற்றி பேசலாமா?" என்றேன்.

"சொல்லுங்கள்! உங்களுக்கு எப்படி நடத்த வேண்டும்?" என்றார்.

"அபிஷேகம், அலங்காரம், நிவேதனம் இவை முக்கியம். வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும், உண்ண உணவும், ஓதியப்பரின் பிரசாதமும் கொடுக்க வேண்டும். ஓதியப்பர் ஒத்துக் கொண்டால், நாளையும் என் கூட வந்திருக்கிற ஒரு சில நண்பர்களுக்கு, உத்தரவு கேட்க வேண்டும். ஓதியப்பருக்கு காவி வேஷ்டி, அங்கவஸ்திரம் வாங்கி வந்திருக்கிறேன். பிறந்த நாள் ஆடையாக அதைத்தான் அவருக்கு சார்த்த வேண்டும். இவைதான் என் வேண்டுதல்கள்" என்றேன்.

சற்று நேரம் யோசித்துவிட்டு பூசாரி கூறினார். "நாளை ஒரு "சத்ரு சம்ஹார ஹோமம்" நடக்க இருக்கிறது. ஒரு விஷயம் செய்வோம். காலையில் முதலில் சாதாரண அபிஷேகம் செய்து, சிம்பிள் ஆக அலங்காரம் செய்து விடுவோம். பின்னர் ஹோமத்தை நடத்தி, அந்த கலச தீர்த்தத்தால் ஒரு அபிஷேகம் கூட செய்துவிடுவோம். இரண்டாவது அபிஷேகத்தை, பிறந்த நாள் அபிஷேகமாக வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

நான் அசந்து போனேன். சின்னதா ஒரு வழி கேட்டா, மனுஷர் பெரிய ஹைவேயே போட்டு குடுத்துடுவார் போல இருக்கே. சத்ரு சம்ஹார ஹோமமா? அட! அதுவும் நல்லது தானே. என்று யோசித்து, "சரி பூசாரி! நீங்க சொல்ற மாதிரி பண்ணிடுவோம்!" என்றேன்.

நான் மிகுந்த சந்தோஷத்தோடு நண்பர்களுடன் சென்று அமர்ந்தேன்.

இரவுப்போர்வை போர்த்தி இருந்தது. எட்டிப் பார்த்தால், எங்கும் வைரத்தை வாரி இறைத்ததுபோல் மலையை சுற்றி மின்சார விளக்குகள், தூரத்தில் கிராமங்களை அழகூட்டியது. காற்று கூட, அமைதியாக நடந்து சென்றது என்று கூறலாம்.

எங்கும் அமைதி. போன வருடம் இருந்த ஆரவாரம், எங்குமே காணவில்லை. விடியற்காலையில்தான் வருவார்களோ, பெரியவர்கள்? என்று யோசித்தபடி, மனதுள் நாளைய அபிஷேக எதிர்பார்ப்புடன், உறங்க சென்றேன்.

பெரியவர்களின் ஆட்டம், கொண்டாட்டம் நடு இரவில், முதல் ஜாமத்தில் தொடங்கியது. உண்மையிலேயே சொல்கிறேன், இருதய நோய் உள்ளவர்கள் அந்த ஆட்டத்தை பார்த்தால், அந்த நிமிடம் இந்த உலகுக்கு வணக்கம் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு ஆட்டம் போட்டார்கள்.

Sunday 7 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 3

ஓம் அகதீசாய நமஹ!

எல்லோரும் மேல் ஏறி சென்றுவிட்டனர். ஒரே ஒரு நண்பர் மட்டும் என்னுடன் இருந்தார். நாங்கள் நின்ற இடத்தில், மண்டபம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், சற்று இளைப்பாறலாம் என்று தீர்மானித்து அமர்ந்தேன்.

மனதுள், "என்ன ஓதியப்பா! இப்படி சோதிக்கிறாய்? உன் வாசல் திறக்கும் பொழுது, அங்கே இருந்து முதல் தரிசனம் "நிர்மால்யமாக" இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டது தவறோ? அதில் என்ன தவறு இருக்கிறது? என்று உணர்த்து. உடனே சக்தியை கொடு, மேல் ஏறி வந்து உன் அருகில் அமரவேண்டும்!" என்று வேண்டிக் கொண்டு கண் மூடி அமர்ந்தேன்.

கண் திறந்த பொழுது, நண்பர் போகாமல் நின்று கொண்டிருந்தார்.

பையில் சாப்பிடும் இனிப்பு பொருள் இருந்தது. அதிலிருந்து சிறிதளவு வாங்கி சாப்பிட்டுவிட்டு அமர்ந்தேன்.

சுமார் 10 நிமிடம் ஆகியிருக்கும். எங்களை காணவில்லை என்று தேடி, மேலே சென்றவர்களில் இருவர் இறங்கி வந்தனர். அதில் ஒருவர் என் கையில் இருந்த பையை வலுகட்டாயமாக வாங்கிக் கொண்டு, மேலே ஏறுவோம் வாருங்கள் என்று அழைத்து நடக்கத் தொடங்கினார். நடந்த பொழுது சற்று ஸ்ரமமாக இருந்தாலும், ஏற முடிந்தது.

ஒரு வழியாக மேலேறி சென்று முருகரை தரிசித்தால், முருகருக்கும், மற்ற தெய்வ விக்கிரகங்களுக்கும் பூசாரி அபிஷேக நிமித்தமாக, எண்ணை காப்பு போட்டுவிட்டார். சரி, நாம் நினைத்து வந்தது ஒன்று, நடக்கப் போவது வேறொன்றோ, என்று மனதுள் ஓடியது.

பூசாரி திரும்பி பார்த்து, "போய் குளித்துவிட்டு வாருங்கள்" என்றார்.

அவ்வளவுதான்! அதை கேட்ட மாத்திரத்திலே, ஓடிப் போய் 5 நிமிடத்தில் குளித்து மடி வஸ்த்திரம் உடுத்தி, ஓதியப்பர் முன் ஆஜர் ஆனேன். குளித்தவுடன், உடல் வலி, அசதி, பசி, தாகம் இவை எல்லாம் எங்குதான் போச்சு என்று தெரியவில்லை.

நண்பரிடமிருந்து "வெட்டி வேர் எண்ணை" தைலத்தை வாங்கிக் கொண்டு முருகர் சன்னதிக்குள் புகுந்து, சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்த பின், "உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?" என்று கேட்டு விட்டு, அந்த எண்ணையை வைத்து அவருக்கு எண்ணை காப்பு போடத்தொடங்கினேன். எண்ணைக் காப்பு தொடங்கிய உடனேயே பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் எப்பொழுது நின்றது என்று தெரியவில்லை. அத்தனைக்கு ஓதியப்பர் குளிர்ந்துவிட்டார் என்று தெரிய வந்தது. (நண்பர்களே! உங்கள் ஊரில் மழை பெய்யவில்லையா! ஓதியப்பரை குளிர வையுங்கள். உடனே மழை பெயவிப்பார். இது என் இரண்டாவது வருட பரீட்ச்சை. இதிலும் வேண்டுதல் நிரூபிக்கப்பட்டுள்ளது). அடுத்த விஷயத்துக்கு செல்லும் முன் ஒரு தகவலையும் கூறிவிடுகிறேன். சென்னைவாசிகளே! ஓதியப்பர் (5 முகம், 8 கையுடன்) உங்கள் ஊரில் குடிவரப் போகிறார். சென்னையில் உள்ள ஒரு அன்பர் அதற்கு ஓதியப்பரிடம் உத்தரவு வாங்கிவிட்டார். கும்பாபிஷேகம் விரைவில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. விரிவான தகவல் கிடைத்ததும், அதைப் பற்றி சொல்கிறேன்.

​சன்னதிக்கு வெளியில் இருக்கும் பிள்ளையாருக்கு அபிஷேக அலங்காரம் முடித்துவிட்டு, பூசாரி "பிரதோஷ கால" அபிஷேகத்துக்கு தயாரானார். ஓதியப்பருக்கு, வெட்டி வேர் எண்ணை அபிஷேகம் செய்த எனக்கு, திடீர் என்று ஒரு அவா தோன்றியது. அபிஷேகமோ பண்ணியாயிற்று. அந்த எண்ணையை ஒரு துணியினால் துடைத்து எடுத்து, வெளியே நிற்கும் ஓதியப்பர் பக்தர்களுக்கு, கையில் ஒரு சொட்டாவது பிழிந்து, "தலையில் தடவிக் கொள்ளுங்கள்" ​என்று கொடுத்தால் என்ன என்று.

அவ்வளவு தான், "ஓதியப்பா! நான் எடுத்துக்கிறேன். உன் அன்பர்களுக்கு கொடுக்க வேண்டும்! கோபப்படாதே! அருள் புரி" என்று விட்டு எண்ணை காப்பு போட்ட துணியினால், வழித்தெடுத்தேன். கொஞ்சம் தான் வந்தது.

"சரி! போதும்! எல்லோருக்கும் ஒரு சொட்டு!" என்று "யாருக்கெல்லாம் வேண்டுமோ, கை நீட்டுங்கள். இது ஓதியப்பருக்கு அபிஷேகம் பண்ணிய எண்ணை" என்று கூறி முடிப்பதற்குள், அனைவரும் கை நீட்டினர். ஒரு முப்பது பேர், ஆனந்தமாக அபிஷேக எண்ணையை பெற்றுக் கொண்டனர். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, திரும்பி சன்னதிக்குள் செல்ல நினைக்கையில், கையை பார்த்தேன். ஒரே எண்ணையாக இருந்தது. நிமிர்ந்து ஓதியப்பரை பார்க்க, ஒரு எண்ணம் தோன்றியது. முதலில் நின்று ஒதியப்பரை தரிசனம் செய்து கொண்டிருந்த அடியவரிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அவர் குழம்பிப் போய் நிற்க, நானே அவர் கையை பிடித்து இழுத்துவிட்டு, வலதுகை தோள் முதல் நுனி விரல் வரை நன்றாக தடவி விட்டு விட்டு, உள்ளே அபிஷேகத்துக்கு உதவி பண்ண சென்று விட்டேன். பின்னர் அந்த அன்பர் கூறியவுடன்தான் தெரிந்தது, ரொம்ப நாட்களாக அவர் அந்த கையை தூக்க முடியாமல் இருந்ததாகவும், எப்பொழுது ஓதியப்பர் எண்ணை தடவப் பட்டதோ, அப்பொழுது முதல் கை வலி போய்விட்டதாகவும், கையை நன்றாக உயர்த்த முடிகிறது எனவும் சொன்னார். எல்லாம் ஓதியப்பர் அருள், அதுவின்றி என்ன?

அபிஷேகம் தொடங்கியது. பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், இளநீர், வெல்லம், வித விதமான பழ வகை சாறு இவை அனைத்தும் முதலில் அபிஷேகம் செய்யப் பட்டது. ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஒவ்வொருவிதமான முக பாவம். அதை அருகில் இருந்து பார்த்ததால் சொல்கிறேன். புளிப்பான விஷயங்கள் நாக்கில் பட்டால் சின்ன குழந்தை முகத்தை சுளிக்குமே, அது போல் ஒரு பாவம் - பழச்சாறு அபிஷேகத்தின் பொது. தயிர் விட்ட போதும், கண்ணை மூடி திறந்தது போல். எல்லாவற்றுக்கும் மேல், சுத்தமான தண்ணீரை விட்ட பொழுது, ஆனந்தம். அடடா! அந்த ஐந்து முகமும் காட்டிய விஷமத்தனங்களை அருகில் இருந்து பார்த்த பொழுது, அவர் மாமன் கிருஷ்ணர் செய்த விஷமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. இதை பூசாரியிடம் கூறிய பொழுது, மந்திரத்தை நிறுத்திவிட்டு "கட கடவென" சிரித்துவிட்டு இவர் எப்படிப்பட்ட ஆளுன எனக்கு தெரியும், நீங்கள் இப்பொழுதுதான் பார்க்கிறீர்கள் என்றார். உண்மை தான். தோளில் கை போட்டு பேசுகிற உரிமை இருக்கிறவருக்கு, நிறைய அனுபவம் இருக்கத்தான் செய்யும் என்று தோன்றியது. இவரிடம் கேட்டு எல்லா விஷயத்தையும் கறந்து விடவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்தேன். பின்னர், 18 வகையான மூலிகைகள், திரவியங்கள், அரிசி மாவு, மஞ்சள் பொடி, என அபிஷேக வகைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தது.

சில அபிஷேகங்களை என் கையால் செய்யச் சொன்னார். அது ஒரு பெரும் பாக்கியம் என்று நினைத்தேன். அற்புதமாக இருந்தது. எல்லாம் அவர் அருள். அவர் அனுமதி இன்றி அந்த மலையில் அடி எடுத்து கூட வைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். என் வேலையோ, ஓதியப்பருக்கு இடது பக்கத்தில் தரையில் அமர்ந்து அவருக்கு அபிஷேகம் செய்து கீழே தவழ்ந்து வருகிற அபிஷேக நீரை கையால் எடுத்துவிட்டு தரையை அவர் சன்னதியை சுத்தமாக வைத்துக் கொள்கிற வேலை. அவர் பாதத்துக்கு அருகில் இடதுபக்கத்தில், ஒரு சிறிய சதுரவடிவ குழியில் இவை நிறையும் பொழுது, கையால் தள்ளி எடுத்து விட வேண்டும். பல நேரங்களில், அபிஷேகம் ஓதியப்பருக்கா, இல்லை இந்த அடியவருக்கா என்கிற நிலை. அத்தனையும் அடியேன் தலையில் விழும். அப்போதெல்லாம், ஓதியப்பரை நிமிர்ந்து பார்த்து, இதெல்லாம் உனக்குத்தான், அடியேன் அருகே அமர்ந்திருப்பதால், தலையில் விழுகிறது. தப்பாக எடுத்துக் கொள்ளாதே. அது உன் அருள், உன் மீது பட்டது, தெறித்து, இதன் மீதும் விழுகிறது என்று நினைத்துக் கொள்வேன். எல்லா அபிஷேகமும் முடிந்து, தீபாராதனை காட்டிவிட்டு, கடைசியில், உச்சியில், மேலும் அவர் பாதத்தில் விபூதியை வைப்பார், பூசாரி. அது ஒரு கண் கொள்ளா காட்சி. ஓதியப்பரும் மிக சந்தோஷத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

அந்த விபூதியை ஓதியப்பர் முதலில் அணிந்த பின், பூசாரி சிறிது எடுத்து பூசிக் கொள்வார். பின்னர் உள்ளே உதவி புரியும் அனைவருக்கும் நெற்றியில் பூசி விடுவார். அதன் பின்னர் பக்தர்களுக்கு கொடுப்பார்.

பூசாரி எடுத்துக் கொண்டதும், அவர் அனுமதியுடன் "ஓதியப்பா! எனக்கு கொஞ்சம் உச்சி விபூதி வேண்டுமே!" என்று கேட்டு கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டேன்.அதுதான் எனக்கு கிடைத்த, இந்த உலகத்தில் எங்கும் கிடைக்காத மிகப் பெரிய பரிசு என்று நினைத்தேன். அது போதும். மற்றவை எல்லாம் தேவை இல்லை.

பின்னர் திரை போட்டு அலங்காரத்தை தொடங்கும் முன், யாரும் பார்க்க முடியாத ஒரு அபிஷேகத்தை பூசாரி செய்வார். அதை உள் இருப்பவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும். அது பச்சை கற்பூர அபிஷேகம். இதை வெளியில் இருப்பவர்கள் பார்க்க முடியாது. எல்லா அபிஷேகத்திலும் "தெரிந்தோ, தெரியாமலோ" இருக்கும் தோஷங்களை போக்க செய்கிற ஒன்று. அந்த தீர்த்தத்தை, சற்று எடுத்து அடியேன் தலையில் தெளித்துக் கொண்டேன்.

அலங்காரம் தொடங்கியது. அப்பா! அந்த பூசாரி அலங்காரம் செய்வதை பார்க்க வேண்டும். ஒரு கை தேர்ந்த சிற்பி போல் சந்தனக் காப்பு போட்டு, புருவம், இதழ், கண்கள் இழுத்துவிட்டு ஒரு நிமிடத்தில் மறுபடியும் ஓதியப்பரை குளித்துவிட்டு விட்ட சின்ன அழகான குழந்தையாக மாற்றினார். அவருக்கு பஞ்ச கச்சம் உடுத்துவதே ஒரு பெரிய விஷயம். எத்தனை இலகுவாக செய்தார்! கிரீடம் வைத்து, நெற்றியில் கல் வைத்து, கவசம் போட்டு, மாலை போட்டு, அருகில் தீபம் போட்டு, சற்றே நிமிடத்தில், ஓதியப்பர் ரெடி ஆகிவிட்டார், அடியவர்களுக்கு காட்சி கொடுத்து, அருள் புரிய.

திரை விலக்கி, மந்திர கோஷத்துடன் தீபாராதனை காட்டி விட்டு, அபிஷேக பூசை, நிவேதனத்துடன் நிறைவு பெற்றது. அங்கு இருந்த அடியவர்களுக்கு எல்லாம் அவர் அருள் கிடைத்தது, அப்படி ஒரு நிறைவு. எங்கும் இதை நான் உணர்ந்ததில்லை. இங்கு என் அப்பன் சன்னதியில் அதை உணர்ந்தேன். எல்லோரையும் ஆசிர்வதித்து, நின்று கொண்டிருந்தார்.


உள்ளே வந்த பூசாரி, அன்று வெள்ளிக்கிழமை ஆனதால், "யாருக்கேனும் உத்தரவு கேட்க வேண்டி உள்ளதா? வாருங்கள்" என்று கூறிவிட்டு, ஒரு கொத்து பூவை அவர் தலையில் வைத்துவிட்டு, தீபாராதனை காட்டிவிட்டு கை கட்டி நின்றார்.

ஒரு பக்தர் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு, கால் மடக்கி அமர்ந்து இருந்தார். மனதுக்குள் பிரார்த்தனை. ஓதியப்பர் பதில் கொடுக்கவேண்டும். எல்லோரும் காத்திருந்தோம்.

Thursday 4 September 2014

சித்தன் அருள் - 192 - அகத்தியர் அருள்வாக்கு - பூக்கள்!


ஒருமுறை, நாடி வாசிக்க யாரும் இல்லாத பொழுது, "பூக்களில் எத்தனையோ விதங்கள் உள்ளது. அவைகளை பற்றிய விஷயங்களை சொல்லித்தர முடியுமா" என்று அகத்தியப் பெருமானிடம் வினவியபொழுது, அவர் மனம் மகிழ்ந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவைகளை உங்கள் கவனத்திற்காக, கீழே தருகிறேன்.

மனிதர்களை படைத்த இறைவன், அவர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுத்தான். அதோடு மனிதர்களாலேயே துன்பங்களையும் தந்தான். பின்னர் மனிதர்களை வென்று நிம்மதியாக வாழ்வதற்கு பலமுறைகளையும், வழிகளையும் காட்டினான்.

இந்த வழிகாட்டுதலில் ஒன்றுதான் பக்தி. இதை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  ஞான பக்தி, ஆசாரிய பக்தி, ஆண்டவனுக்கு அருட்பணி செய்கின்ற பக்தி, கடைசியாக, பிடித்தமான மலர்களால் ஆண்டவனை நினைத்து அர்ச்சனை செய்யும் பக்தி.  இந்த நான்கு வகை பக்திகளும் அவர் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப, நம்பிக்கைக்கு ஏற்ப செய்யப்படுவது.

ஞானபக்தி என்பது மிகப்பெரிய தவத்தினால் பெறப்படுவது.  இது எல்லோராலும் செய்யக்கூடியது அல்ல. அத்தனை வாய்ப்பு ஒரு சிலருக்கே ஏற்படும்.  ஆசாரியபக்தி என்பது ஆண்டவனை வழிபாடு செய்து பெறுவது. இதும் எல்லாவித மனிதர்களால் செய்யக் கூடியது அல்ல.

ஆண்டவனுக்கு நேரடியாக அருட்பணி செய்கிற பக்தி, இது கோவில் கட்டுவது, அன்னதானம் செய்வது, தம் தம் மத வழக்கத்துக்கு ஏற்ப, மனித நேயத்தை போற்றும் வகையில், நான்கு பேர்களுக்கு உதவிடும் வகையில் செய்யக் கூடிய, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யக் கூடிய பக்தி.

இவை எல்லாம் தாண்டி நிற்கும் பக்திதான் மலர்களைக் கொண்டு நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு, அர்ச்சனை செய்து மனதார பிரார்த்தனை செய்வது.  இது ஒன்றுதான் சகலவிதமான மனிதர்களுக்கும் ஏற்ற பக்தி.  நிம்மதியை தரக் கூடிய பக்தி மாத்திரமல்ல, எந்த வித இடையூறும் இல்லாமல் நம் இஷ்டத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை அழைத்து பக்தியினால் காரியங்களை சாதித்துக் கொள்ளக் கூடியது.

இதற்கு மலர்கள் அவசியம். சரி எந்தெந்த மலர்கள் எந்தெந்த கிரகங்களுக்கு, இறைவனுக்கு ஏற்றது என்பதை நமது முன்னோர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏனோ தானோ என்று சொல்லவில்லை.  ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான சூட்சுமத்தை வைத்து சொல்லி, இதை பின்னர் அனுபவ ரீதியாகவும் ஏற்றுக் கொண்ட பின்னர், மற்றவர்களும் பலன் பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஞானிகள் மூலம், ரிஷிகள் மூலம், வேதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

சூரியன்:- உங்கள் ஜாதகத்தில் ராசிக்கோ, லக்னத்திற்கோ 8, 12ம் வீட்டில் இருந்தால், "செந்தாமரைப்" பூவால் சூரியனை, ஞாயிறு தோறும் வழிபாட்டு வந்தால் உத்தியோகம், கண் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளும் விறுவிறு என்று விலகிவிடும். வேறு எந்த மலரைக் கொண்டும் சூரியனை வழிபடக்கூடாது. அப்படி ஒரு வேளை செந்தாமரைப் பூ கிடைக்கவில்லை என்றால் தாமரை தண்டு இதழால் திரியிட்டு விளக்கேற்றி வருவது கூட நல்ல பலனைக் கொடுக்கும்.

சந்திரன்:- ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்த சமயம் அவருக்கு சந்திர தசை அல்லது சந்திர புக்தி அல்லது சந்திர அந்தரம் நடந்து கொண்டிருந்தால் அந்த நபர் சந்திரனுக்கு உரிய வெண்மை நிறத்துடைய "அல்லி மலரை" வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் நீர் சம்பத்தப் பட்ட வியாதிகள் வெளிநாடு செல்ல முடியாமல் ஏற்படும் தடங்கல்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து வெளியே வந்து விடலாம். "வெள்ளல்லி" மலர் கிடைக்காவிட்டால் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்று.

செவ்வாய்:- ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12இல் செவ்வாய் இருந்து செவ்வாய் தசையோ அல்லது புக்தி, அந்தரமோ நடை பெற்று - வியாதியினால், போட்டி, பொறாமையினால் முன்னேற முடியாமல் துன்பப்பட்டுக் கிடந்தால், அதிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரே வழி "சண்பக" மலரால் - செவ்வாய் கிரகத்திற்கோ அல்லது முருகப் பெருமானையோ வழிபட்டால் அத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் சட்டென்று விலகி வெளியே வந்து விடலாம்.

புதன்:- ஒருவரது ஜாதகத்தில் புதன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் தேவை அற்ற பாதிப்புகள் எற்ப்படத்தான் செய்யும். கோர்ட் விவகாரம், தோல் சம்பந்தமான வியாதிகள், மாமன் உறவுமுறை பகை, தொழில் நஷ்டம் ஆகியவை வரலாம். இதிலிருந்து விடுதலை பெற "வெண் காந்தள்" மலரை வைத்து புதன் கிழமை தோறும் பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமானது. சிறந்த பரிகாரமும் கூட.

குரு:- ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 8, 10, 12இல் குரு பகவான் இருந்து அதே சமயம் அவருக்கு குரு மகாதசை, புத்தி, அந்தரம் நடந்து கொண்டிருந்தால், குரு அனுகூலமாக மற்ற பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்வதை விட, குரு பகவானுக்கு பிரியமான "முல்லை" பூவால், வியாழன் தோரும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வந்தால், பயம் இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டு செல்லலாம். தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றலாம்.

சுக்கிரன்:- ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், 12ம் வீட்டில் மறைந்திருந்தாலும், பகை வீடான குரு வீட்டில் தனித்திருந்தாலும், சுக்கிர தோஷம் என்று பெயர்.  இந்த சுக்கிர தோஷம் போக வேண்டுமானால் "வெண் தாமரை" புஷ்பத்தினால், சுக்கிரனுக்கு வெள்ளி தோறும் மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வந்தால், சுக்கிரன் இரண்டு மடங்கு அனுகூலமாக மாறி சகல விதமான சௌபாக்கியங்களையும், கல்யாண சந்தோஷங்களையும் தருவார்.

சனி:- ஒருவரது ஜாதகத்தில் 2,4,7,8,12இல் சனி பகவான் இருந்தால் பல்வேறு பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப் படலாம். இதிலிருந்து ஒதுங்கி வாழ வேண்டுமானால் "கருங்குவளை" மலரால் சனீஸ்வரனுக்கு, அல்லது சனி கிரகத்திற்கு சனிக்கிழமை தோறும் அர்ச்சனை செய்துவரின் சனி பகவானின் அனுக்ரகத்திற்கு பாத்திரமாகலாம்.

ராகு:-  ஒருவரது ஜாதகத்தில் "ராகு" 2,4,5,7,8,12இல் இருந்தால், அவருக்கு ராகுவால் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.  இதனைத் தடுக்க "மந்தாரை" புஷ்பத்தால் முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால், ராகுவினால் எந்தவித தொந்தரவும் கடைசிவரை இருக்காது.

கேது:- ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் 2,4,5,7,8,12இல் தனித்து இருந்தாலும், மற்ற கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும், கேது தோஷம் உண்டு.  இந்த தோஷத்தை நீக்க மிக சுலபமான வழி "செவ்வல்லி" மலரால் கேது கிரகத்திற்கு முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால் போதும். கேது பகவானது பரிபூரண அனுக்ரகம் கிடைத்து விடும்.

இவை எல்லாம் எளிய, ஆனால் பலன் தரும் பரிகாரங்களாகும். மனிதர்கள், இதை நம்பி செய்து வந்து பலனடைய எமது ஆசிகள்.

அகத்தியர் அடியவர்களே, அகத்தியப் பெருமான் ஆசியுடன் இந்த எளிய பரிகாரங்கள் நம் தெளிவுக்கு வந்துள்ளது. இவற்றை செய்து, எல்லோரும் வாழ்க்கையை சுத்தமாக்கி கொள்ளுங்கள். அருள் பெறுங்கள்.

[ஒருவார இடைவேளைக்குப் பின் சந்திக்கிறேன்!]

சித்தன் அருள்.................... தொடரும்! 

Tuesday 2 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 2

ஓம் அகதீசாய நமஹ!

ஒதிமலை பயணம் தொடர்கிறது!

ஒருவழியாக, வெயிலின் உக்ரத்தை தாங்கியபடி, வழியில் இருந்த மண்டபங்களில் அமர்ந்து ஓய்வெடுத்து, பாதி வழியில் இருக்கும் பிள்ளையார் சன்னதியை அடைந்தோம்.

இந்த சன்னதியை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். கதவு கிடையாது. அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பூசை செய்து வழிபடலாம். ஏற்கனவே அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு நான் பூசை செய்து வழிபட்டுவிட்டதால், வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். ஒரு நண்பரை அழைத்து, பூசை செய்யச் சொன்னேன். மிக நன்றாக அமைந்தது அந்த பூசை. எனக்குள் ஒரு வேண்டுதல் தான். "ஓதியப்பரின் பிறந்த நாள் விழாவை நன்றாக நடத்திக் கொடு" என்று வேண்டிக் கொண்டேன். கண் மூடி நிற்க, விநாயகர் வலதுகை உயர்த்தி ஆசிர்வதிப்பதை உணர்ந்தேன்.

"ஆஹா! இது போதும் எங்களுக்கு" என்று நினைத்து நன்றியை உரைத்துவிட்டு அமர கௌளி ஒலித்தது. நல்ல சகுனம் என்று நினைத்துக் கொண்டேன்.

பின்னர் மலை மேல் பூசாரியுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இந்த சன்னதியில் தனக்கு ஏற்ப்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதையும் இங்கு கூறிவிடுகிறேனே.

அது ஒரு பிரதோஷ நாள். எல்லா பிரதோஷத்துக்கும், ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்வார். அன்று அவரால் போக முடியாதபடி மாலை 7 மணிவரை எங்கோ மாட்டிக் கொண்டுவிட்டார். வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது இரவு 9 மணி ஆகிவிட்டது. அபிஷேகம் பண்ணமுடியவில்லையே என்கிற எண்ணம் அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. இரவு 10 மணி ஆனவுடன், என்னவானாலும் சரி, எத்தனை மணி ஆனாலும் மலை ஏறி, ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்துவிடுவது என்று தீர்மானித்து, வண்டியில் அடிவாரம் வந்துவிட்டார். வரும் வழியில் கண்ட மனிதர்களில் யாரேனும் ஒருவரை, துணைக்கு அழைத்துக் கொண்டு மலை ஏறிவிடலாம் என்று கேட்டால், யாரும் வரத் தயாராக இல்லை. "போங்கடா! நீங்க வரலைனா என்ன! நான் தனியாக மலை ஏறப் போகிறேன்" என்று, வீராப்பு கொண்டு, அடிவார விநாயகரிடம் பிரார்த்தனையை கொடுத்துவிட்டு மலை ஏறத்தொடங்கினார். ஒரே இருட்டு. படி கூட சில இடங்களில் தெரியவில்லை. பாதி வழியில் இந்த பிள்ளயார் கோவிலை அடைந்ததும், நிமிர்ந்து பார்த்தால், மிகப் பெரிய உருவத்தில், கரு நிறத்தில், கோவிலை விட உயரமாக, அவர் உட்கார்ந்து கொண்டு, இவர் சென்றதும், கை அசைத்து, கை தூக்கி ஆசிர்வதித்தார். அசந்து போன பூசாரி, கொண்டு வந்த பூசை சாமான்களை, அப்படியே தரையில் வைத்துவிட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, மேலும் மலை ஏறத் தொடங்கினார். அன்றைய தினம், அபிஷேகத்துக்கு, ஓதியப்பரும், பூசாரியும் மட்டும் தான். தனி ஆளாக நின்று, மடப்பள்ளியையும் கவனித்து, ஓதியப்பர் சன்னதியில் அபிஷேக பூசையை முடித்த பொழுது காலை மணி 2.30. மிக அருமையாக, என்றும் இல்லாத அளவுக்கு, நிம்மதியாக அன்று பூசையை முடிக்க முடிந்தது என்று  கூறினார்.

மேலும் தொடருவோம். எப்படிப்பட்ட வெயில் அடித்தாலும், அந்த பிள்ளையார் சன்னதி மிக குளிர்ச்சியுடன் இருக்கும். அதை அனுபவிக்க வேண்டி அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுப்போம், ஒவ்வொரு முறையும். அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில், போகர் குகைக்கு செல்லும் வழி தென்பட்டது. வெளியில் சொல்லாமல் அமைதியாக போகரை மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். சொல்லப் போக, யாருக்கேனும் இப்பொழுது அங்கே செல்ல வேண்டும் என்று ஆசை தோன்றினால், இந்த வெயிலில் எப்படி மறுபடியும் ஏறுவது? என்ற எண்ணம் தான் காரணம்.

பிள்ளையார் கோவிலில் இருந்து பாதை செங்குத்தாக ஏறும். கீழிருந்து வந்த வேகத்தில் ஏறமுடியாது. என்னுடைய ஸ்ரமமான மலை ஏற்றமே அந்த பகுதியாகத்தான் இருக்கும். ஒருவழியாக அகஸ்தியர் லிங்கத்தை அடைந்தோம்.

அகத்தியர்லிங்கம் இருக்கும் இடம் ரொம்ப அமைதியாக இருக்கும். ஒவ்வொருமுறையும் அங்கு அவருக்கு பூசை செய்து, உடலில் சக்தியை ஏற்றிக் கொண்டு, ஒரேடியாக நடந்து மலை மேல் ஏறிவிடுவோம்.

இந்த முறையும் அவருக்கு பூசை ஆரம்பமானது. அபிஷேகம், வஸ்திரம், அலங்காரம், மந்திர ஜபம், நிவேதனம், கர்ப்பூர ஆரத்தி என்று எல்லாம் மிக அருமையாக அமைந்தது. மிகுந்த திருப்தியுடன் நமஸ்காரம் செய்து நிமிர்கையில், "ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. தயாராக இரு" என்று யாரோ சொல்வது போல் தோன்றியது.  யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.


இறங்கி வந்த ஒருவர், இனிமேல்தான் பூசாரி வரவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். நல்லது, கோவில் சன்னதி திறந்ததும், முதலில் இருந்தே நாம் ஓதியப்பருடன் இருந்துவிடலாம் என்று எண்ணம் ஓடியது.

திரும்பி பார்க்க, பூசாரி வந்து கொண்டிருந்தார். அருகில் வந்தவுடன், மிகுந்த மகிழ்ச்சியில் அனைவரும் வணக்கம் சொல்ல, நேராக வந்தவர், அகத்தியர் சன்னதிக்குள் சென்று, நமஸ்காரம் செய்துவிட்டு, அங்கிருந்த விபூதி குங்குமத்தை எடுத்து நெற்றிக்கு இட்டுக் கொண்டிருந்தார்.

"நாங்கள், பூசை செய்துவிட்டோம். உங்களுடைய ஒரு வேலை மிச்சம்" என்றேன்.

"ஹ்ம்ம். நன்றாக செய்துள்ளீர்கள்" என்று கூறிவிட்டு, பிற விஷயங்களை பேசத்தொடங்கினார்.

சற்று நேரத்துக்குப் பின், எல்லோரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம். அவருடன் நடந்து செல்வது என்பது ஒரு அனுபவம். சின்ன சின்ன நிகழ்ச்சிகளை, நம்முடன் பகிர்ந்து கொண்டு நடந்து வருவார். அடிக்கடி மலை ஏறி அனுபவம் உள்ளதால், வேகமாகவும் நடப்பார். என்னால் தான் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

நான் மெதுவாக நடப்பதை கண்டு, "நான் போய் முதலில் சன்னதியை திறந்து வைத்துவிட்டு இருக்கிறேன். நீங்கள் வந்து சேருங்கள்" என்று கூறிவிட்டு நடந்து சென்றார்.

"நல்லது சுவாமி! நீங்கள் போய் வாருங்கள்" என்று கூறி நான் என் இயல்பான நடையை தொடர்ந்தேன்.  தூரத்தில் வளைந்து செல்லும் பாதையில் அவர் சென்று மறைவதை கண்டு நான் சற்று தாமதித்தேன். என்னுடன் வந்த 4 பேர்கள் அவர் வேகத்துக்கு சரிசமமாக நடந்து சென்று விட்டனர். ஒருவர் மட்டும் எனக்கு துணைக்கு கூட நடந்து வந்தார்.

"ஏன் இப்படி? முன்பு போல் ஏற முடியவில்லையே!" என்று நினைத்து முடிப்பதற்குள், என் உடலில் சக்கரையின் அளவு, கிடு கிடுவென இறங்கத் தொடங்கியது. உடல் முழுவதும் உறைந்து போக, ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. நெஞ்சு கூட்டுக்குள், ஏதோ ஒன்று அழுத்துவது தெரிந்தது. தலை உச்சி முதல் பாதம் வரை வியர்வை அப்படியே ஆறாக ஓடியது. இவை நடந்தது ஒரு நொடிக்குள். கூட வந்தவர் இதை கண்டு அசந்து போனார். நான் அப்படியே படியின் ஒருபக்கத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடடா! ஓதியப்பரின் அபிஷேகத்தை பார்க்க முடியாமல் ஆகிவிடுமோ - என்று தோன்றியது.